பின்பற்றுபவர்கள்

31 அக்டோபர், 2008

குண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா ? :(

நமக்கு என்று வராதவரை குண்டு வெடிப்பு போன்ற பெரிய பயங்கரவாத நிகழ்வு கூட வெறும் செய்திதான் என்பது போல் மக்கள் பழகிவிட்டனர். :(

அஸ்ஸாமில் பல இடங்களில் குண்டு வெடித்து 68 பேர் வரை மரணம் அடைந்திருக்கிறார்கள், 200 பேர் வரை காயம் அடைந்திருக்கிறார்கள். மும்பையில் குண்டுவெடித்தால் இந்தியாவெங்கும் ஏற்படும் பரபரப்பு அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் ஏன் ஏற்படவில்லை ?

குண்டு வெடிப்புகள் அதனால் உயிர் இழப்புகள், அருகில் உள்ளவர்கள் தவிர்த்து யாரும் அச்சப்படுவதில்லை. வழக்கம் போல் எதாவது ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளும், இந்த முறை இந்தியன் முஜாஜுதின் என்ற பெயரில் இயங்கும் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறது.

****

தீவிரவாதிகளே நீங்கள் என்னதான் குண்டு வெடித்தாலும் அரசாங்கங்கள், உலக நாடுகள் கண்டனத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். செத்துப் போகிறவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான். இந்த செயல் கோழைத்தனமானது, அப்பாவிகளைக் கொன்றும் எதுவும் ஆகப் போவதில்லை. எவன் செத்தா எனக்கென்ன என்று இருக்கும் எல்லோரும் சுரனையற்றவர்கள் என்று தெரிந்தே இப்படி ஒரு செயலைச் செய்ய உங்களுக்கெல்லாம் அலுப்பாகவே இல்லையா ?

அட பக்கத்துத் தெருவுல தானே வெடித்தது, நம்ம வீட்டில் யாரும் சாகவில்லை என்று சென்று கொண்டே இருக்கப் போகிறார்கள். இன்னும் வளர்ச்சி அடைந்து,

போகப் போகப் பாருங்கள், எங்கள் ஊருக்கு அடுத்தவாரம் தீவிரவாதிகள் குண்டுவெடிக்கப் போகிறார்களாம் என்று போஸ்டர் அடித்துக் கொண்டாடவே போகிறார்கள். உங்களுக்கும் உங்கள் குண்டுவெடிப்புக்கும் இது போன்ற (அவ) மரியாதைக் கிடைக்கலாம்.

தீவிரவாதிகளே நீங்கள் சாதித்தவை

1. அரசியல்வாதிகளின் வழக்கமான கடும் கண்டனம்
2. உலக நாடுகளின் வழக்கமான கண்டனம்
3. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்ற அவைக் கூச்சல்
4. மக்கள் தொகையை குறைப்பது
5. மாநில காவல் துறைக்கு / சிபிசிஐடிக்கு ஒருமாதம் தீவிர விசாரணைப் பணி
6. நான்கு அப்பாவிகளைப் பிடித்து விசாரிப்பார்கள்

அடத்தூ.... உங்களுக்கு அலுப்பே இல்லையா ?

மீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து கொள்ளும் சிங்கை பதிவர் சந்திப்பு !

அறிவிப்பு : சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !

திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரும், பதிவர்களின் மனதில் வாழும் பதிவர் அனுராதா அம்மா அவர்களின் அன்புக் கணவருமான எஸ்கே சுப்ரமணியம் ஐயாவும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக உறுதிக் கூறி இருக்கிறார். சந்திப்பின் போது அனுராதா அம்மா அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

மேலும் தமிழ் பதிவர்களால் விக்கி என்று அன்புடன் அழைக்கப்படும் மலேசிய பதிவர், அன்புத் தம்பி விக்னேஷ்வரனின் சிங்கை வருகையை முன்னிட்டும், சிறப்பான பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8


வருகை தரும் பதிவர்களுக்கு வழிகாட்டுபவர் ஜோசப் பால்ராஜ்
வருகை தரும் பதிவர்களை கவனித்துக் (உபசரிப்பு) கொள்பவர் விஜய் ஆனந்த்
வருகை தரும் பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவில் போடுபவ்ர் கோவி.கண்ணன்
வருகை தரும் பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்க இருப்பவர் விக்னேஷ்வரன்
வருகை தரும் பதிவர்களுடன் பேருரை ஆற்ற இருப்பவர்கள் ஜோ மற்றும் முகவை இராம்
வருகை தரும் பதிவர்களை புன்னகையால் வரவேற்பவர் பெங்களூர் இராம்
வருகை தரும் பதிவர்களுக்கு அல்வா கொடுப்பவர் சிங்கை நாதன்

ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் எம் ஆர் டி நிலையத்திற்கு வந்து அங்கே விவோ சிட்டி (VIVO City) யின் மேல் தளத்தில் இருந்து செந்தோசாவிற்குச் செல்லும் இலகு ரயில் (மூன்று வெள்ளி டிக்கெட் செந்தோச நுழைவுக் கட்டணத்துடன்) எடுத்து உள்ளே வந்துவிடலாம். மெர்லயன் எனப்படும் கடல் சிங்க பெரும் சிலைக்கு அருகே இறங்கி, அங்கிருந்து டால்பின் லகூனுக்கு (செந்தோச இலவச உள் சேவை) பேருந்தை எடுத்து வந்துவிடலாம்.
நல்ல அருமையான, அமைதியான, துய காற்று வீசும் இடம். அமர்ந்து பேச வசதியான இடம்.
சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக !

பதிவர் சந்திப்பு முடிந்ததும், சுமார் இரவு 9 மணிக்கு மேல் லிட்டில் இந்தியாவில் இட்லி கடையில் (சகுந்தலா கார்டன்) இரவு உணவிற்கும் தேனீர் பார்டிக்கும் (தேனீர் தான்) செல்வதாகவும் பலர் திட்டம் வைத்திருக்கிறார்கள்.


தொடர்பு கொள்ள :

ஜோசப் பால்ராஜ் : 93372775
விஜய் ஆனந்த் : 97798649
கோவி.கண்ணன் : 98767586

30 அக்டோபர், 2008

விடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழக ஆதரவு நிலை !

ஈழ மண்ணில் அமைதி இன்மை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆரம்பத்தில் உரிமை கோரல் என்ற நிலையில் தொடங்கிய போராட்டம், அதாவது தமிழர்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்பட்டு அரசாங்க கல்வி வேலை வாய்ப்புகளில் பின்னுக்குத் தள்ளி சிங்களர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை கொடுத்ததைத் எதிர்த்து தொடங்கிய போராட்டம், அதை இலங்கை அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதால், ஆயுதம் ஏந்தி தனி நாட்டை அடைவது (பெறுவது அல்ல) என்றதாக வளர்ந்தது. இதில் பல்வேறு தனித் தமிழ் போராட்டக் குழுக்கள் பல்வேறு மனநிலையில் இருந்ததால், ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இது என்று அனைத்துலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒன்றுபட்ட மனநிலை இல்லாமல் இருந்தது துர் அதிர்ஷ்டவசமானது, தமிழர் விடுதலைக் குறித்த நிலைப்பாடுகளை உறுதி செய்து கொள்ளும் பொருட்டும், சிங்கள அரசிற்கான பல்வேறு போராளி குழுக்களின் ஆதரவு / எதிர்ப்பு நிலை என்பதில் இருந்த வேறுபாடுகள், மாறுபட்ட கருத்துக்கள் விடுதலை புலிகள் தரப்புகளுக்கும் மற்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையே சகோதர யுத்தத்திற்கும் வழிவகுத்தது அதில் பல போராளி குழுத்தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் அனைவருமே அறிந்தது தான்.

தமிழர்கள் பெரும்பாண்மையினரான யாழ்பானம் மற்றும் பல பகுதிகள் முற்றிலுமாக விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் தான் உள்ளன, அதில் ஒரு பகுதியின் தலைவராக இருந்த கருணாவை சிங்கள அரசு தன்வசப்படுத்தியதாக பின்னர் அறியப்பட்டது. தமிழர்களின் பகுதிகள் இவை இவை என்றும் அந்த பகுதியில் சிங்கள ராணுவம் நுழைய முடியாதது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளிக்கும் மேலான நிலை. முறையாக உலகிற்கு அறிவிக்கப்படாத தனி நாடாகவே இலங்கையின் தமிழர் பகுதிகள் இருந்துவருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

*******

நண்பர் மணிகண்டன் கேட்டக் கேள்விக்கு வருகிறேன்,

"புலிகளின் இன்றைய மற்றும் நேற்றைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா/எதிர்க்கிறீர்களா என்ற குழப்பம் எனக்கு இன்றும் நீங்கவில்லை. "

புலிகள் யாருக்குப் போராடுகிறார்கள் என்கிற அடிப்படை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அப்பாவித் தமிழர்களை கேடயமாக ஆக்குகிறார்கள் என்கிற செய்திகள் எந்த அளவு உண்மை ? புலிகளும் தமிழர்கள்தானே, அவர்களே தங்கள் மக்களை ஈழ அரசுக்கு எதிராக கேடயாமப் பயன்படுத்தினால் போராட்டத்தின் நோக்கமே கொச்சைப்படுகிறது. சிங்கள அரசின் நோக்கமே இன ஒழிப்புதான், அதைத் எதிர்த்து தான் போராட்டமே நடைபெறுகிறது என்ற நிலையில் அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வது தங்களின் இன அழிப்புக்கு தங்களே உடந்தையாக இருக்கிறார்கள், அதாவது விடுதலை புலிகள் தமிழ் இன அழிப்பிற்காக சிங்கள அரசுக்கு மறைமுகம் உதவுகிறார்கள் என்று சொல்வதைப் போன்றது. அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுபவர்களின் கூற்று இத்தகைய அபத்தமானது தான். நிராகரிக்கக் கூடியது.

விடுதலைப் புலிகள் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களையெல்லாம் கட்டாயப்படுத்தி ஆயுதப் பயிற்ச்சி கொடுத்து கொடுமை படுத்தி இருந்தால் அவர்கள் எல்லோரும் சிங்களர்கள் வசிக்கும் பகுதிக்கோ, வேறு நாடுகளுக்கோ இடம் பெயர்ந்து தமிழர் பகுதியில் விடுதலைப் புலிகள் தவிர்த்து யாருமே இருக்க முடியாது. ஆனால் நிலவரம் அப்படியா ? புலம்பெயர்ந்தவர்கள் தவிர்த்து பிற தமிழர்கள் அங்கு தானே வசிக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் தமிழர்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்வதும் நிராகரிக்கக் கூடியது.

இலங்கை அரசு தமிழர்களின் நலனில் அக்கரைகாட்டுகிறதா ? அண்மையில் இலங்கையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றால் பெரும்பாலும் தமிழர்கள் வசித்தப் பகுதிகள் தான், உலக நாடுகள் அளித்த பல்வேறு பொருள் மற்றும் பண உதவிகளை முறையாக தமிழர்களுக்கு அனுப்பாமல் சிங்கள புத்த பிட்சுகள் தடுத்ததை அனைவருமே அறிவர். மக்களுக்கு பொதுவானவராக இருக்கக் கூடிய புத்த பிட்சுகளுக்கே, அப்படி ஒரு பரிதாபமான சூழலிலும் இவ்வளவு இன வெறி இருக்கும் போது, பதவி அதிகாரத்தில் இருக்கும் மற்ற சிங்களர்களின் இனவெறி பற்றி எதுவும் சொல்லத் தேவை இல்லை. இவர்களுடன் தமிழர்கள் சேர்ந்து வசிக்க முடியும் என்பதும் கூறு (சாத்தியம்) அற்றது. சிங்கள அரசு தங்கள் அரசு நடுநிலையானது என்று காட்ட மட்டை ஆட்டத்தில் பேருக்கு ஒரே ஒரு தமிழரை சேர்த்துக் கொண்டு இருக்கிறது, பாராளுமன்றத்தில் ஒரு சில தமிழர்களைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறது, அதற்கும் உள்ளுக்குள் என்னவெல்லாம் எதிர்ப்பு என்பதை, சேர்ந்து வாழலாம் என்ற ஆசையிலும், பிரிவினையில் நம்பிக்கை இல்லாத தமிழர்களைக் கேட்டால் தான் தெரியும்.

விடுதலைப் புலிகளின் நேற்றைய நடவடிக்கைகள் என்பவை நடந்து முடிந்தவை, அது பற்றிப் பேச ஒன்றும் இல்லை, இராஜிவ் காந்தி படுகொலையை தமிழ்மண்ணில் நிகழ்த்தியது தமிழக தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பும் வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் அழிவை கல் மனதுடன் வேடிக்கைப் பார்க்க வசதியாக 'இராஜிவின் ஆன்மாவை' கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டும், காலத்திற்கும் அதையே காரணாமாகச் சொல்லிக் கொண்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிசாவில் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்த திமுககாரர்கள் பழிவாங்குதல் போல் நினைத்திருந்தால் காங்கிரசுடன் எந்த காலத்திலும் கூட்டு வைத்திருக்கவே மாட்டார்கள். தன்னை ஓராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்தவர் ஜெ என்று கோபம் கொப்பளித்துக் கொண்டே இருந்தால் வைகோ ஜெவுடன் கூட்டணி அமைத்திருக்காமல் திமுக ஜோதியில் கலந்து மறைந்திருப்பார். வெள்ளைக்காரன் இந்தியர்களை அழித்தான் மானமுள்ள இந்தியன் எவனுமே இங்கிலாத்திற்குச் செல்லக் கூடாது வெள்ளையர்களிடம் வேலை பார்க்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால் அது அபத்தம், சொல்லுபவர் மன நிலையை சோதித்து அறிய வேண்டும்.

ஜப்பான் அமெரிக்காவையே எடுத்துக் கொள்வோம், ஹிரோஷிமா, நாகசாகி பற்றி எப்போதும் பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தால் அது தீராப்பகையாகி அமெரிக்கர்களை அழிப்பதிலேயே குறியாக இருந்திருப்பர் ஜப்பானியர்கள். ஆனால் நிலைமை அப்படியா ? இன்றைய தேதியில் மிகவும் வலுவான நட்பு நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் ஜப்பானும் தான்.

உலகெங்கிலுமே பழையதை மறந்து கைகோர்பது என்பது நடைமுறைதான். தன் தந்தையைக் கொன்றவர்கள் என்ற நினைப்பே இருந்திருந்தால் பிரியங்கா நளினியை சந்திக்கச் சென்று இருப்பாரா ?

சிங்கள அரசு தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுக்கு சம உரிமை கொடுக்கவோ கடந்த 30 ஆண்டுகளாகவும் முன்வராத நிலையில், தமிழர்களின் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான், புலிகளின் அடிப்படைப் போராட்டமும் தமிழர்கள் நலன் முன்னிறுத்தியதுதான் என்பதில் தமிழக தமிழர்கள் (பலர்) தெளிவாகவே இருக்கின்றனர்.

100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக் காட்டுவார்கள், தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது. அந்த 10 பேர் காங்கிரசும் அவர்களுடன் கூட்டணி அமைக்க முயல்பவர்களும் தான். உணர்ச்சி வசப்படுபவர்கள் சிந்தித்துப் பாருங்கள். பஞ்சாபிகளின் ஓட்டுக்காக இந்திராகாந்தி படுகொலையை மறந்த காங்கிரஸ், இராஜிவ் காந்தி பற்றி என்றுமே பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை என்பதைத் தவிர்த்து 'பாசத்தால் அவர்கள் இன்னும் இராஜிவை மறக்கவில்லை' என்றெல்லாம் பெருமையாக நினைக்க முடியவில்லை. எல்லாம் லாப நட்ட அரசியல் தான். :(

"மறப்போம் மன்னிப்போம் " அதுதான் மனிதனுக்கு உயர்வு, ஐயன் திருவள்ளுவர் தமிழர்களுக்கென இன்னும் கூட மாற்றியே சொல்லி இருக்கிறார்.

'இன்னா செய்தாரை ஒறுத்தல்...'

பின்குறிப்பு : எனது கட்டுரையில் தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் அது கட்டுரையின் சாரத்தைக் குறைத்துவிடாது என்றே நினைக்கிறேன்

29 அக்டோபர், 2008

ஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...

கும்பகோணம் மாகமகம் 100க் கணக்கானோர் ஒரே நாளில் ஆவிகள் ஆனார்கள், அவர்களுடைய ஆவியெல்லாம் அம்மாவுக்கு ஓட்டுப் போட்டு மீண்டும் 2002ல் முதல்வர் ஆக்கியவர்களை மன்னிக்குமா ?

தர்மபுரி பேருந்து எரிப்பில் கருகிய மூன்று மாணவிகளின் ஆவிகள் ஆனார்கள், அந்த வழக்கை இழுத்தடித்த அம்மாவை மாணவிகளின் ஆவிகள் மன்னிக்குமா ?

இரு பஞ்சாப் தீவிரவாதிகளினால் சுடப்படடு இந்திராகாந்தி இறந்த பிறகு காங்கிரஸ் கட்சி(யின்) வெறியர்களால் ஏதும் அறியா 1000க் கணக்கான பஞ்சாப் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர், அவர்களுடைய ஆவிகளெல்லாம் சேர்ந்து காங்கிரசின் கைக்கூலி என்று வருணிக்கப்படும் மன்மோகன் சிங்கை மன்னிக்குமா ?

பர்வேஷ் முஸ்ரப்பால் இந்தியப் பகுதியை கைப்பெற்ற திட்டமிட்டு நடத்திய மறைமுக கார்கில் தாக்குதலில் 1000க் கணக்கான இந்திய இராணுவத்தினர் பலியானார்கள், அவர்களுடைய ஆவிகளெல்லாம் முஸ்ரபிற்கு சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுத்த வாஜ்பாயை மன்னிக்குமா ?

கோட்சேவை புனிதப் படுத்த முயன்று கொண்டிருக்கும் கூட்டத்தைத் தான் மாகத்மா காந்தியின் ஆவி மன்னிக்குமா ?

சங்கர ராமன் கொலை எப்படி நிகழ்ந்தது என்று அனைவருமே (ஊகித்து) அறிவர், குற்றவாளிகள் தங்களைக் காத்துக் கொள்ள மாநிலத்துக்கு மாநிலம் நீதிமன்றம் தாவுவதையும், அவர்களைக் காப்பாற்ற முயல்பவர்களையும் சங்கர ராமன் ஆவி மன்னிக்குமா ?

கும்பகோணம் விபத்தில் துடிதுடித்து இறந்த பிறகும் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் பற்றிய செய்தியை கவனமாகவே தவிர்த்து வந்த 'சோ' கால்டு செய்தி இதழ்களைத்தான் அந்த பிஞ்சுகளின் ஆவிகள் மன்னிக்குமா ?

கோத்ரா ரயில் எரிப்பு, ஒரிசா கன்னிகாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமை...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பழையதை விட்டுவிட்டு பார்த்தாலும் கடந்த நூற்றாண்டு வரலாற்றில் கூட பாவிகள் ஆவிகளின் சாபங்களை மட்டும் தான் பெற்று வந்திருக்கிறார்கள். இதுபற்றிப் பேசினால் கூட ஆவிகள் நம்மை நோக்கியும் சபிக்கும்.

28 அக்டோபர், 2008

ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கடா ... !

சுமார் ஆறு மாதம் முன்பு பிரியங்கா காந்தி நளினியை சிறையில் சந்தித்து வந்தது பற்றி செய்தி வந்திருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள், தொலைக்காட்சியிலும் கூட அதுபற்றி செய்தியில் அறிவித்தார்கள், நாளிதழ்களும், வார இதழ்களும் அந்த செய்திக்கு முதன்மைத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளி இட்டிருந்தார்கள்.

காங்கிரசாரும், காங்கிரஸ் அடிவருடிகளும் அந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசும் போது பிரியங்காவின் பெரும் தன்மை, என்றெல்லாம் பேசியதுடன் ஒரு சில செய்தி இதழ்கள் நளியின் அம்மா பத்மாவிடம் பேட்டி எடுத்து, நளினியின் அம்மா பிரியங்காவை தெய்வத்துக்கும் மேலாகப் புகழ்ந்ததாகவும் எழுதினார்கள்.

அதே செய்தி இதழ்கள் இன்று எழுதுவதோ...

"அமைதிப் பூங்காவான தமிழகத்தில் விடுதலைப் புலிகள் என்னும் தீவிரவாத காற்று வீசத் தொடங்கி விட்டது. இதை தடுத்து நிறுத்துவது மத்திய அரசின் கடமை.ராஜிவ் காந்தியை படுகொலை செய்த பாவம் ராமேஸ்வரம், காசி சென்றாலும் தீராது. ராஜிவ் காந்தியின் ஆன்மா விடுதலைப் புலிகளை ஒருபோதும் மன்னிக்காது."

இதே செய்தி இதழ்களால் பிரியங்கா - நளினி சந்திப்பை, பெரும் தன்மையாக பீற்றிக் கொண்டதை, காங்கரசின் அரசியல் செல்வாக்கு உயர்வுக்கான உள்நோக்கம் கொண்டதாக ஏன் நினைக்க முடியவில்லை.

அதாவது கொலையாளியையே சந்தித்த பெரும்தன்மைப் படைத்தவர் என்று இந்திய மக்கள் மனதில் தன்னைப் பற்றி மாய உயர்வை ஏற்படுத்தி அதன் மூலம் சரிந்து வரும் காங்கிரஸ் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் உள்னோக்கச் செயலாக ஏன் அதை பார்க்கவில்லை ? பிரியங்கா புழல் சிறைக்கு வந்து சென்ற போது பல்வேறு மாநில தேர்த்தலை காங்கிரஸ் எதிர்நோக்கி இருந்த நேரம் என்றே நினைக்கிறேன். குறிப்பாக கர்நாடக மாநில தேர்த்தல் நடக்க இருந்த நேரம்.

நான் சொல்வது அபத்தமாகப்பட்டால், இராஜிவ் - சோனியா காந்திக் குடும்பத்தாரே அதையெல்லாம் மறந்துவிட்டு நளினையை சந்தித்து பெரும்தன்மையைக் காட்டிக் கொண்டார்கள் என்பது உண்மையாகவே இருக்கும் நிலையில், இவர்கள் (காங்கிரஸ் மற்றும் தமிழின எதிர்பாளர்கள்) ஏன் தொடர்ந்து இராஜிவ் காந்தியின் ஆன்மா, ஆவியெல்லாம் இழுத்து அரசியல் செய்கிறார்கள் ?

நான் சொல்வதில் எதாவது ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்

1. இராஜிவ் குடும்பத்தினர் நடந்ததை கெட்ட நிகழ்வாக நினைத்து மறந்தது மன்னித்தது

2. இராஜிவ் குடும்பத்தினர் நளினியை சந்தித்தது பெரும்தன்மையைக் காட்ட நடத்திய நாடகம்

முதலில் சொன்னது உண்மை என்னும் போது, காங்கிரசார் மற்றும் இராஜிவ் காந்தி சாக்கில் தமிழர்களை தூற்றுவோரின் ஆதரவு தமிழீழதிற்கு எப்போதும் தேவையற்றதே

இரண்டாவது சொன்னது உண்மை என்றால் இராஜ்வ் காந்தி குடும்பத்தினரின் பெரும்தான்மை வெறும் அரசியல் ஆதாய நாடகம் தான்.

இவை இரண்டுமே தவறு என்றால் இதற்கு மறுப்பு சொல்லிவிட்டு இராஜிவ் காந்தியின் ஆன்மாவைப் பற்றிப் பேசினால் தான் இராஜிவ் காந்தியின் ஆன்மா, இராஜிவ் காந்தியின் ஆன்மாவை அரசியலுக்கும், உணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவர்களை மன்னிக்கும், இல்லை என்றால் மன்னிக்கவே மன்னிக்காது.

தனது கொலைக்கு உடந்தையாக இருந்த நளினியை சந்தித்துவந்த தன்னுடைய வாரிசை மன்னித்துவிட்ட இராஜிவ் ஆன்மா, விடுதலைப் புலிகளை ஏன் மன்னிக்காது ?

27 அக்டோபர், 2008

சிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் !

இந்த தீபத்திருநாள் எங்கள் வீட்டினருக்கு ஒரு மாறுபட்ட தீபாவளியாக இருந்தது, பதிவர் நண்பர்களின் (அன்புத் தம்பிகள்) வருகை தந்து தீபாவளியை சிறப்பித்தனர். சில பல காரணங்களினால் பல ஆண்டுகளாக களை இல்லாத தீபாவளியாக இருந்த தீபாவளி இந்த ஆண்டு மாறுபட்ட ஒன்றாக அமைந்தது. வெளிநாடுகளில் / தொலைவில் இருப்பவர்களுக்கு நண்பர்களே உறவுகள் என்பதை மெய்ப்பிக்கும் பண்டிகை நாளாகவும் அமைந்தது. எல்லா மக்களும், குறிப்பாக நம் அன்பு ஈழ தமிழ்மக்கள் சாந்தியும் சமாதனம் பெற்று இன்னல் தீர வேண்டும், அவர்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கவேண்டும் என்பதைத் தான் இந்நாள் திரும்ப திரும்ப நினைக்க வைத்தது. தீராத பகையோ, மாறத சினமோ என்றுமே இருக்க முடியாது. விரைவில் விடிவு பிறக்கும் என்பதை உங்களைப் போல் நம்புகிறேன். அன்பு தமிழர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

26 அக்டோபர், 2008

ஏகன் ! தல ஏன் ?

டிஸ்யூம் டிஸ்யூம் சண்டை நடக்கும் காட்சியின் போது தான் திரையரங்கினுள் நுழைந்தேன். வில்லன் சுமனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல இருந்த அப்ரூவர் வில்லன் (பாட்ஷா படத்தில் நக்மா அப்பாவாக நடிப்பவர்) குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சி. அதன் பிறகு அஜித் அறிமுகக் காட்சி, பாபு ஆண்டனியை ஞாபகப் படுத்தும் கெட்டப். வில்லனின் ஹாங்காங் ஏஜெண்டை பட் பட் என்று சுட்டு வீழ்த்துகிறார்.

போலிஸ் உயர் அதிகாரி நாசரின் (வளர்ப்பு மகனான - அதற்கு ஒரு கண்ணீர் சிந்த வைக்க முயலும் ப்ளாஷ் பேக் படத்தின் பின்பகுதியின் வைத்திருக்கிறார்கள், மிஸஸ் மணிரத்னம் வந்து போகிறார் ) வளர்ப்பு மகனான அஜித் அப்ரூவரை கண்டுபிடித்து கைது செய்வதும் வில்லனை போட்டுதள்ளுவதுடன் கதை முடிந்துவிடுகிறது.

அப்ரூவரின் மகளை வில்லன் கும்பல் குறிவைக்கும் என்று அறிந்து, ஊட்டி கல்லூரியில் மாணவனாக பாதுகாப்புக்காக அனுப்பப்படுகிறார் அஜித். அஜித் மாணவனா ? பார்பவர்கள் கிண்டல் செய்யக் கூடும் என்பதை உணர்ந்தே அவர்களே திரைக்கதையில் அதைச் செய்துவிட்டார்கள்.

முக்கிய பாத்திரம் நயன்தாரா, கல்லூரி விரிவுரையாளராக அறிமுகம் ஆக அவரை துறத்தி காதலிக்கும் மாணவனாக அஜித் என இடையே திரைக்கதை நகர்த்தப்படுகிறது. முந்தானை முடிச்சு தீபா கெட்டப்பில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டுடன் கூடுதல் கவர்ச்சியுடன் நயன் தாரா கல்லூரி விரிவுரையாளர் ஆகவருவது, கல்லூரிகளின் தரத்தைக் கேவலப்படுத்தும் செயல், இப்பொழுதெல்லாம் எல்லா கல்லூரிகளிலுமே மாணவ - மாணவிகளுக்கே ட்ரெஸ் கோட் உண்டு.

எனக்கு படத்தில் பிடித்த மற்றொரு பாத்திரம் ஜெயராமன், இவரது குழந்தைத்தனமான நடிப்பு எப்போதும் எனக்கு பிடிக்கும், இந்தப்படத்திலும் நிறைவாகச் செய்திருக்கிறார். அவர்தான் அந்த கல்லூரியின் முதல்வர் அஜித்துக்கு உதவுகிறார், அவருடன் சேர்ந்து சத்தியன் காமடி செய்ய முயன்றிருக்கிறார். ஈஎம்சி ஹனிபா அஜித்தின் உதவியாளராக நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு நன்றாகவே செய்தார். படம் சீரியஸ் கதையாக காட்டப்பட்டு பிறகு முழுநீள நகைச்சுவையாக்க முயன்று தோற்று இருக்கிறார்கள்.

பாடல் இசையில் சத்ததத்தைத் தவிர வேறெதும் காணும், பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் இயக்கம் என்பதால் 5 பாட்டுக்கு குத்துப்பாட்டு டான்ஸ் இருக்கிறது. பாடல்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ராஜு சுந்தரம் கன்னி முயற்சியாக இயக்கம் வசனங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு காட்சியில் திரைகதையில் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவாக அனுபவமின்மையைக் காட்டுகிறது. விஜயை வைத்து பிரபுதேவா போக்கிரியைக் எடுக்க முயன்றது போல் அஜித்தை வைத்து ராஜு சுந்தரம் முயன்று... ஹூகூம் என்றே சொல்ல வைக்கிறது. நாசர் போலிஸ் அதிகாரி அவரது மகன் அதைச் சுற்றி க்ரைம் கதை, இதுபோல் தமிழில் 10 படங்களுக்கும் மேல் வந்துவிட்டது. போக்கிரி கதை போலவே :(

பில்லா வெற்றியை நம்பி அஜித் - நயன் தாராவை ஜோடி சேர்த்து ஒரு சொதப்பலான கதைக்கு பயன்படுத்த முயன்று இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வேறெதும் படம் பார்பவர்கள் உணரப் போவதில்லை. அஜித் சண்டைக்காட்சிகளும் மற்ற படத்தில் வந்தவைப் போன்றே இருந்தது. பில்லா படம் ரீமேக் என்றாலும் படத்தில் ஒரு ரிச்னஸ் இருந்தது, இதில் அதுவும் இல்லை. தல ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது ? ரசிகர்களால் ஓடினால் உண்டு.

ஏகன் ஏமாற்றம் !

பரமசிவன் என் காதில் சொன்னது !

"ஊரோடு ஒத்துப் போ" என்ற வழக்கிற்கு சரியான பொருள் இறை நம்பிக்கைத் தான். தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும், புகழவைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் அறுமருந்து ஆன்மீகம், நான் தீர்த்தயாத்திரை சென்றேன், ஹஜ்ஜுக்கு சென்றேன், வேளாங்கன்னிக்கு பாதயாத்திரை சென்றேன், ஐயப்பனுக்கு மாலை போட்டேன் என்று கூறுபவர்களின் நடவடிக்கைகளை நன்றாக உற்றுப் பாருங்கள். தீர்த்தயாத்திரைக்குச் சென்றபிறகும் அதற்கும் முன்பும் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருப்பார்கள். இவையெல்லாம் வீன்பெருமையாக தன்னைத் தானே போற்றிக் கொள்ளவும், அடுத்தவர் தன்னை நல்ல ஒரு ஆன்மிகவாதியாக நினைப்பார் என்பதற்காகவும் சொல்லப்படுபவை.

அன்மையில் "அனுவைக் கண்டுபிடித்தாலும் கிரகத்தைக் கண்டுபிடித்தாலும் ஆண்டவன் 'அணு'க்'கிரகம்' தேவை" என்று வாசகமும், அதன் தொடர்பில் பிறரை எள்ளி நகையாடும் பின்னூட்ட வாசகங்களும் இட்லிவடையார் பக்கத்தில் எழுதப்பட்டு இருந்தது. ஆண்டவனுக்கு இவர்கள் செய்யும் கைமாறாக எழுதுகிறார்கள் என்று நினைப்பதைவிட பார்த்தாயா எப்படி இருந்தாலும் இறைவன் துணையின்றி எதுவும் நடக்காது என்ற எள்ளுதலே அந்த வாசகத்தில் காணப்படுபவை. சிவன் கழுத்து பாம்பு போலவே...கடவுள், இறைவன் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு போலவும் அவற்றிற்கான பேட்டன் உரிமையை இவர்கள் வைத்திருப்பது போலவும், வேற வழியே இல்லை நீங்கள் வணங்கித்தான் ஆகவேண்டும் என்று வியாபர வாக்கியமாகவே அதனைப் பார்த்தேன்.

இறை நம்பிக்கை என்பது ஒரு உணர்வுதான். அதை உணர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் வெறுமனவே பிறரைப் பழிக்க அதனைப் பயன்படுத்த யாதொரு அருகதையும் இல்லை. இவர்களின் இறைவன் குறித்த போற்றுதலும் ஒன்றாம் தர நடிகரின் நான்காம் தர ரசிகரின் போற்றுதலும் ஒன்றே. இறைவன் என்று ஒருவன் இருந்தால் தன் பெயரை வைத்து இவர்கள் புகழ்பெறவோ, மற்றவரை இகழவோ அனுமதிக்க மாட்டான்.

வெறும்பயல்களெல்லாம் சாதிப் பெருமை பேசி தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதற்கு ஒப்பானது வெறும் வாயில் இறைப்புகழ் பாடுபவர்களின் செயல். இவர்கள் உண்மையிலேயே இறைவன் புகழைப் போற்ற வேண்டுமென்றால் அதனை பிறர் தன்னாலேயே புரிந்து கொள்ளும் வண்ணம், உணர்ந்து கொள்ளும் வண்ணம் நடந்து கொள்வதுதான் வழியே. அப்படிப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். நல்ல நம்பிக்கை உடையவர் எவருமே தனக்கு எல்லாமே தெரியும் என்று பீற்றிக் கொள்ளவோ, தற்புகழ்ச்சிக்காகவோ பேசவோ செய்யமாட்டார்கள்.

வெறுமனே இறை நம்பிக்கையும் அதன் பொருட்டான போற்றுதலும் எந்த பயனும் இல்லை, ஜால்ரா போடுபவர்கள் யார் உண்மையாக தனது பெயரைக் கெடுக்காமல் போற்றுபவர் யார் என்பதெல்லாம் இறை சக்தி அறியாதது அல்ல. மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் என்கிற பெரிய மனசுக்காரர்கள் தங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா ? முதலில் தமக்கு வேண்டுதல் இல்லையா ? என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்வது நல்லது, தானே இறைவன் முன் பிச்சைக்காரானக் இருப்பவர் பிறருக்காவும் இரக்கிறார் என்று சொல்வது பெருந்தன்மையா ? பிறருக்காக பிரார்தனைச் செய்பவர்கள் எவருமே அதனை வெளியே சொல்ல மாட்டார்கள்.வேண்டுதல் கூட வெளியே தெரியாத அளவுக்கு வேண்டிக் கொள்பவர்களே உண்மையான இறை அடியார்கள். 'வேண்டுதலை வெளியே சொல்லக் கூடாது' என்பது பிறர் பொருட்டு வேண்டிக் கொள்வதை வெளியே சொல்லக் கூடாது என்பது பற்றிய கூற்றுதான்.

நாத்திவாதிகள் இறை சக்தியை கேவலப்படுத்துவதை விட, 'உன் கீழான நிலைக்கு, தீராத நோய்க்கும், குறைக்கும் காரணம் இறைவன் உன் தலையில் எழுதிய விதியே' என்று பழிப்பு காட்டும் அரைகுறை ஆன்மிகவாதிகளின் செயல் மிகவும் கேவலமானது, கீழானது. கடவுள் பெயரால் பிறரைக் கேவலப்படுத்தும் செயலை நாத்திகன் கூட செய்ய மாட்டான்.

இந்த தீபாவளியில், ஆன்மிகத்தை விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் மனங்களில் சூழ்ந்துள்ள மாயப்புகழ் என்னும் இருள் நீங்கி உண்மையான ஆன்மீக வெளிச்சம் கிடைக்கட்டும் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

தலைப்பு உபயம் : என்ன சொன்னார் பரமசிவன்? - சுப்பையா வாத்தியார் இந்த பதிவு சுப்பையா ஐயாவுக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல.

கன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ?

செம்மொழிக்கான சிறப்புத் தகுதியான,

"A classical language, is a language with a literature that is "classical"—ie, "it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature."[1] (George L. Hart of UC Berkeley)"

மிகவும் பழையதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும், இலக்கிய வளங்களை உடையதாக இருக்கும் மொழிகளே சொம்மொழிக் கான சிறப்புத் தகுதி வாய்ந்தவை என்றுச் சொல்லப்படுகிறது. தமிழ் செம்மொழி என்று நாம் கண்டுகொள்ளமால் வெளிநாட்டுக்காரர்கள் அறிந்த உண்மைகளின் வழியாகவே அறிந்து பல ஆண்டுகளாகப் போராடி ஞாயமாகக் கிடைக்க வேண்டிய ஒன்றை 'நமது' இந்திய அரசிடம் வேண்டா வெறுப்பாகப் பெற்றோம். அதையும் பழிக்கும் வண்ணமாக செம்மொழி சோறுபோடுமா ? என்று ஒரு கூட்டம் கூறிவருகிறது. செத்துப் போன மொழியே சோறுபோடும் போது செம்மொழி சோறுபோடாதா ? சோறு போட்ட அன்னை உணவுடன் ஊட்டி வளர்த்த மொழி தானே. தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம்.

இந்திய மொழிகளில் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் தமிழைப் போலவே தொன்மையானது கன்னட மொழி, கன்னட மொழியில் இருந்து பிரிந்த மொழியே தெலுங்கு, கன்னடத்தின் எழுத்துவடிவம் கிபி 500க்கு பிறகு முழு தனி வடிவம் பெற்றது. அதற்கும் முன்பு தமிழுக்கும் கன்னடத்திற்கும் பொதுவாக தமிழ் எழுத்துக்களே பயன்பட்டது. வடமொழி ஆதிக்கத்தால் முதலில் சிதைந்தது கன்னடம் தான். கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று சொல்வதை விட தமிழின் உடன்பிறந்தவள் (சகோதரி) என்று சொல்வதே சாலப் பொருத்தம் என்று தேவ நேயப்பாவாணர் முதல் பலர் சொல்லி இருக்கிறார்கள். காரணம் தமிழில் இருந்து கன்னடம் பிரிந்தது என்று சொல்வதைவிட இரண்டு மொழிகளும் எப்போதும் இருந்தது. இரண்டிற்கும் பொதுவாக ஆயிரக்காணக்கான சொற்கள் உண்டு. கிபிக்கு பிறகு வடமொழி ஆதிக்கத்தால் வேறு வழி இன்றி புதிய எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கிரந்த எழுத்துக்களில் தமிழில் இல்லாத எழுத்துக்களையும் சேர்ந்து மொத்தம் 51 எழுத்துக்களுடன் புதிய வடிவம் எடுத்தது. கன்னடத்தில் 'ழ' வும், 'ள' வும் இருந்தது வரலாறு. 'ழ' 400 நூற்றாண்டுக்கு முன்பு வழக்கு இழந்தது 1972லிருந்து 'ள' வையும் எடுத்துவிட்டது. கன்னடத்திலிருந்து எழுத்தை உருவாக்கிய தெலுங்கில் 'ள' இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி கொங்கனி மற்றும் துளு ஆகிய மொழிகளை எழுத கன்னட எழுத்துக்களே பயன்படுகின்றன.

கீழே உள்ள பட்டியலைப் பார்த்தால் தெரியும், செம்மொழி எவ்வளவு ஆண்டு பழையதாக இருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் எதுவுமில்லை.

The following languages are generally taken to have a "classical" stage.

Classical Sumerian (literary language of Sumer, ca. 26th to 23rd c. BC)
Middle Egyptian (literary language of Ancient Egypt from ca. the 20th century BC to the 4th century AD)
Old Babylonian (The Akkadian language from ca 20th to 16th c. BC, the imitated standard for later literary works)
Classical Hebrew (the language of the Tanakh, in particular of the prophetic books of ca. the 7th and 6th c. BC)
Classical Chinese (based on the literary language of the Zhou Dynasty from ca. the 5th c. BC)
Classical Greek (Attic dialect of the 5th c. BC)
Classical Sanskrit (defined by Panini's grammar, ca. 4th c. BC) [3]
Classical Tamil (the language of Sangam literature[4], 2nd c. BC to 3rd c. AD)[5]
Classical Latin (literary language of the 1st c. BC)
Classical Mandaic (literary Aramaic of Mandaeism, 1st c. AD)
Classical Syriac (literary Aramaic of the Syriac church, 3rd to 5th c.)
Classical Armenian (oldest attested form of Armenian from the 5th c. and literary language until the 18th c.)
Classical Persian (court language of the Sassanid empire, 3rd to 7th c.)
Classical Maya (the language of the mature Maya civilization, 3rd to 9th c.)
Classical Arabic (based the language of the Qur'an, 7th c.)
Classical Kannada (Used in inscriptions from 5th c. and language of the Rashtrakuta literature, 9th to 10th c.)
Classical Japanese (language of Heian period literature, 10th to 12th c.)
Classical Icelandic (the language of the Icelandic sagas, 13th c.)
Classical Gaelic (language of the 13th to 18th c. Scottish Gaelic literature)
Classical Quechua (lingua franca of the 16th c. Inca Empire)
Classical Nahuatl (lingua franca of 16th c. central Mexico)
Classical Quiché (language of 16th c. Guatemala)
Classical Tupi (language of 16th -18th c. Brazil)
Classical Ottoman Turkish (language of poetry and administration of the Ottoman empire, 16th to 19th c.)

இருந்தாலும் ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் தான் முயற்சிக்க வேண்டும். வடமொழியைத் தவிர்த்து திராவிட மொழிகளின் மீது பாராமுகமாக இருந்த இந்திய அரசு போனால் போகட்டும் என்ற ரீதியில் பழமையான மொழி என்றால் சுமார் 2000 ஆண்டுகள் முந்தையது என்ற விதியை வைத்து தமிழை செம்மொழியாக அறிவித்தது. கன்னட மொழியில் ஏன் பழமையான இலக்கியமே இல்லையா ?

தமிழைப் போலவே கன்னட மொழிக்கும் பழமையான இலக்கியம் வளம் இருந்தது. அன்றைய தமிழி எழுத்துருவில் இருந்ததெல்லாம் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும், அல்லது அவை தொல் தமிழாக அறியப்பட்டு இருக்க வேண்டும். தற்பொழுது கன்னட மொழியும் பழங்கன்னடமும் முற்றிலும் மாறுபட்டது. பழங்கன்னட மொழி நூல்கள் அழிந்திருக்கலாம், அல்லது தமிழாக அறியப்பட்டு இருக்கலாம். 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்ற ஆத்திச் சூடியில் 'ஓதாமல்' என்றால் 'படிக்காமல்' என்று பொருள், தமிழில் படிப்பு, வாசித்தல் என்பதை இன்றும் கன்னடத்தில் 'ஓது' என்று தான் சொல்லுவார்கள். அதே ஓது என்ற சொல்லை மந்திரம் ஓதுதல், பாத்தியா ஓதுதல் என்று வழிபாட்டு வாசிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம். இங்கே ஆத்திச்சூடி கன்னட இலக்கியம் என்று சொல்ல வரவில்லை. எடுத்துக்காட்டு வெறும் எடுத்துக்காட்டு. நாம் 'எச்சரிக்கை' என்ற சொல்லை தமிழில் பயன்படுத்துகிறோம், இந்த 'எச்சரிக்கை' என்ற சொல் கன்னடச் சொல் 'எச்சரிக்கே' என்றதிலிருந்து வந்ததுதான். 'எச்சரிக்கைக்கு' மாற்றான சொல் தமிழில் இல்லை. 'விழிப்புணர்வு' என்று சொல்லலாம் ஆனால் அதில் 'கவனத்துடன் அனுகுங்கள் என்ற பொருளும் சேர்ந்தே வராது. 'கவனம்' என்ற சொல் கூட சரியாக 'எச்சரிக்கை' என்பதன் பொருளை தந்துவிடாது.

தமிழைப் போலவே பல சமய இலங்கியங்கள், அதாவது சமணம், பவுத்தம், ஆசிவகம், வைதீகம், சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் சார்பில் எழுதப்பட்ட நூல்கள் எண்ணற்றவையும் பழமையானவையாகவும் ஏராளம் உண்டு. வடமொழியில் கிறித்துவர்களின் பைபிளோ, இஸ்லாமியர்களின் குரோனோ மொழிப்பெயர்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. மதங்களுக்கு அப்பாற்பட்ட மொழிகள் என்ற தகுதியில் தமிழைப் போலவே கன்னடமும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமல்ல புழக்கத்தில் உள்ள மொழியும் கூட. நான் அறிந்தவகையில் கன்னட மழலைச் சொல் தமிழைவிட இனிமையானது.

தமிழுக்கு செம்மொழி சிறப்புத் தகுதி கிடைத்தது போலவே, மற்றொரு திராவிட மொழியான கன்னடத்திற்கும் செம்மொழி சிறப்புத் தகுதி கொடுக்கப் படவேண்டும், 500 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு உள்ள மொழிகளுக்கு இந்த தகுதியை சில நாடுகள் அவர்களின் மொழிக்குக் கொடுக்கும் போது வரலாற்று அளவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான கன்னட மொழிக்கு கொடுப்பதில் தவறேதும் இல்லை.

தமிழைப் போலவே போற்றப் படவேண்டிய மற்றொரு மொழி கன்னடம், இந்திய அரசு கன்னடர்களின் கோரிக்கையை ஏற்று கன்னடத்திற்கு செம்மொழி சிறப்புத் தகுதி வழங்க உடனடியாக முன்வரவேண்டும்.
கன்னடத்திற்கு செம்மொழி தகுதி கிடைப்பது திராவிட இனத்திற்கும் பெருமையானதும் கூட.

இணைப்பு : கன்னடத்துக்கு செம்மொழி-பிரதமருக்கு எச்சரிக்கை - தட்ஸ்தமிழ்

24 அக்டோபர், 2008

வைகோவின் அடுத்த நூல் !

தமிழ் ஈழ அரசியலால் தனக்கு அடையாளம் தேடிக் கொண்டோர் பலர். அதில் வைகோவும் ஒருவராகத்தான் நினைக்க முடிகிறது. ஓர் ஆண்டுக்கும் மேல் பொடா சிறையில் இருந்தவர் எந்த நோக்கத்திற்காக ஜெ வுடன் இணைந்தார் என்பதே கேள்விக்குறியாகியது போல் அவரது ஈழ ஆதரவும் கேள்விக் குறியாகியது. கலைஞரை எதிர்க்க ஜெவுடன் கூட்டு என்று சென்றிருந்த போதிலும் அதில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஒரு முறை ஜெ வை சந்திக்க பலமாதங்களுக்கு முன்பு அனுமதி வாங்கி, கடைசி நிமிடம் வரை ஜெவின் மூடு மாறாமல் இருந்தால் தான் சந்திக்க முடியும் என்பதுதான் எப்போதுமே வைகோவின் நிலைமை.

ராஜிவின் மரணத்தை ஒட்டி ஏற்பட்ட அரசியல் அனுதாப அலையால் தனது அரசியல் வாழ்வை தக்கவைத்துக் கொண்ட ஜெ உண்மையிலேயே விடுதலைப் புலிகளுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டவர். ஏன் எதிர்க்கிறார் என்று தெரியவில்லை :) எம்ஜிஆருக்கே இல்லாத மரியாதையையா பிறருக்கு கொடுத்துவிடப் போகிறார். அவரது அரசியல், அரசியல் சார்ந்தவையும் அல்ல, நிலையானதும் அல்ல என்பது அனைவருமே அறிந்தது தான். ஆனால் விடுதலைப் புலிகளை கடுமையாக் எதிர்க்கும் ஜே, விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் முழங்கும் ஜே, வைகோவை தொடர்ந்து கூட்டணியில் வைத்திருப்பது முரணான ஒன்று. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது இந்திய அரசு நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கூவும் ஜெ, தன்னால் நடவடிக்கை எடுத்து கூட்டணியில் இருந்து கழட்டி விடக் கூடிய வைகோ பற்றி வாய்த்திறக்காமல் இருப்பது அபத்தம், சந்தர்பவாதம்

ஜெ தொடர்ந்து அவ்வாறு பேசினால் கலைஞரைத் தூண்டி வைகோவை கைது செய்ய வைக்க முடியும் அதன் மூலம் வைகோவை தொடர்ந்து தனது ஆட்சிக்குப் பிறகும் சிறையில் வைத்திருக்க முடியும் என்று நினைத்தாரோ :) வருங்காலத்தில் வைகோவை கைது செய்தது நான் அல்ல கருணாநிதி அரசுதான் என்று சொன்னாலும் சொல்லுவார். மேலும் வைகோவை கைது செய்ய வைப்பதன் மூலம் ஈழ ஆதரவாளர்களின் எதிர்ப்பை கலைஞர் பக்கம் திருப்பிவிட முடியும். இப்போது அதுதான் நடக்கிறது, வைகோ கைதுக்கு பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் ஜெவுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்திருக்கலாம், வைகோ கைதிற்கு முதன்மை காரணமே ஜெ அதுபோல் பேசி வருவதுதான்.

வைகோவிற்கு எதும் நட்டமில்லை, பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களைப் படித்து அதை வைத்து தானும் 'பாசிச ஹிட்லர் ஆட்சியின் 10 ஆம் பாகம்' என்ற நூலை எழுதி, முடிந்திருந்தால் ஜெவின் கையால் வெளி இடுவார். சிறையில் மற்ற நேரங்களில் மீண்டும் கடிதங்கள் எழுதி கின்னஸில் புதிய சாதனைகளை ஏற்படுத்துவார். வெளியே வந்தும் பாராளுமன்ற தேர்த்தல் இருக்கும் கலைஞருடன் கூட்டணி என்று முடிவு செய்து பொக்கேயுடன் கலைஞரை கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பார். இதுக்கும் மேல் வேற என்ன நடக்கும் ?

இணைப்பு : மனித வெடிகுண்டும் மனிதச் சங்கிலியும் - ரத்னேஷ் !

சபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா ?

சபலம் என்ற வடசொல்லுக்கு நேரடிப் பொருள் திடீர் தன் தூண்டுதல் அல்லது திடீர் ஆசை. நாம உணவகத்துக்கு சாப்பிடச் செல்லுவோம், வழக்கமாக இட்லி, தோசை (முடிந்தால் அதில் வகைகள்) எதையாவது ஒன்றை சாப்பிடலாம் என்று முடிவு செய்தே போவோம். அக்கம் பக்கம் பார்க்கும் போது சுடச் சுட கொத்து பரட்டாவை தயிர் பச்சடியில் துவைத்து எடுத்து ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார், நம்ம நாக்கில் எச்சில் ஊறி அதையே நமக்குச் சொல்லிடுவோம். இதுபோல் சுழல்கள் தீர்மாணம் செய்யும் திடீர் தூண்டல்கள் தான் சபலம். இதுல பெருசா ஒண்ணும் தவறு இல்லை, பிச்சை எடுக்காமல் நம்ம காசில் எதை வாங்கித் தின்றால் என்ன ? ஆனால் சூழல்களுக்கு அடிமை ஆகிறோம் என்பது உண்மை. புதிதாக வந்த சாமியார் ஆசி வழங்கினால் பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுமாம் என்று கேள்விபட்டால், வீட்டுக் கூரையை (ஓலை அல்ல) உடைத்துவிட்டு சாமியாரைப் பார்க்கச் செல்லும் கூட்டமும் இருக்கிறது, அந்த கோவிலுக்கு விளக்குப் போட்டு வேண்டிக் கொண்டால் இதெல்லாம் நடக்கும் என்று (விளக்குக் கடை வைத்திருப்பவன்) கிளப்பிவிட்டால் போதும்.

வியாழன் நகை வாங்கப் போகனும் என்று ஞாயிற்றுக் கிழமையே முடிவு செய்து இருந்ததால்,அதன்படி நேற்று முஸ்தபா சென்டருக்கு போனோம். வழக்கத்துக்கு மாறாக மறுபடியும் ஒரு அட்சய திருதியையோ என்று நினைக்கும் அளவுக்கு கும்பல். வந்திருந்தவர்கள் எல்லோருமே பங்களாதேசி ஆண்கள், இஸ்லாமியர்களுக்கு அட்சய திருதியையா ? இருக்காதே ! அப்பறம் தங்கம் விலையைப் பார்த்தால் கிராமுக்கு 5 வெள்ளி வரை ( சுமார் ரூ 150) குறைந்து இருந்தது. அவ்வளவு கூட்டத்திற்கு ஏற்ற கடை பணியாட்களை வைத்திருக்காததால் கூட்ட எண்ணிக்கை மிகுதியாகிக் கொண்டே இருந்தது. சரி இதில போய் எங்கே வாங்குவது ? இரவு உணவை முடித்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த சாகர் உணவகத்துக்குச் சென்றோம். உணவு வகைகளில் காரம் குறைவாக இருப்பதால் என் மகளுக்கு அந்த உணவகம் தான் மிகவும் பிடித்தது. எங்களுக்கு அடிக்கடி அங்கேயே சாப்பிட அலுப்பாக இருக்கும். மகள் அடம்பிடிப்பாள் வேறு வழியில்லாமல் அங்கு சென்ற போது அங்கும் கூட்டம். 10 நிமிட காத்திருப்புக்கு பிறகு உணவு உண்டுவிட்டு, 30 நிமிடத்திற்கு பிறகு முஸ்தபா சென்று பார்த்தால் கூட்டம் குறையவே இல்லை.

தீபாவளிக்குத் தேவையான மற்ற சாமான்களை வாங்கிவிட்டு திரும்பவும் நகைக்கடைக்குச் சென்றால் 80 விழுக்காட்டு கூட்டத்தைக் காணும், எல்லோரும் வாங்கிட்டுப் போய்ட்டாங்களா ? இல்லை, அந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கம் விலை 34.90 லிருந்து 36.10க்கு போய்விட்டது. வாங்க வந்தவர்கள் அதைப் பார்த்து திரும்பி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். கடைப் பணியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள் அவர்களும் பிசியாக இருந்தார்கள். அவர்கள் முகத்தில் ஏகப்பட்ட கடுகடு, திடீரென்று இவ்வளவு வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டும் என்றால் எரிச்சல் வருவது இயல்புதானே. அதுக்கும் மேல் பொறுமை காத்து வாங்க நேரமும் இல்லை, இரவு 12 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பிவிட்டோம்.

நகை வாங்க வந்தவங்க தினக்கூலிகளாக வேலை பார்ப்பவர்கள். அவர்களைக் குறைச் சொல்லவும் முடியாது. விலைவாசிக் குறையும் போது ஆசைப்படுவதை வாங்க அது ஒரு வாய்புதான். அவர்களைத் தவிர்த்து இன்னும் பலர் அவர்களெல்லாம் வசதி படைத்தவர்களே எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் 5 டாலர் குறைந்தது தெரிந்து அவர்களும் வந்தது வியப்பளித்தது. இங்கே வெளிநாடுகளில் டாக்ஸியில் வந்து சென்று உணவையும் முடித்துச் செல்ல நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 - 50 வெள்ளி ஆகும். இந்த 40 வெள்ளியும் நேற்று 8 கிராம் தங்கம் வாங்கி இருந்தால் மிச்சப்படும் பணமாகத்தான் இருக்கும். ஆக வந்துவிட்டு போன செலவு, விலைக் குறைந்த நகை வாங்குவதால் ஈடு செய்யப்படும். மற்றபடி அதனால் எந்த லாபமும் இல்லை. அடுத்த மாதம் 25 வெள்ளிக்கு தங்கம் குறைந்தால், ஐயையோ போன மாதம் 34.90 கொடுத்து வாங்கிவிட்டேனே என்று வயிறு எரிவார்கள்.

தேவைக்கு என்று ஒரு பொருள் வாங்குவது என்பது வேறு, விலைக் குறைந்துவிட்டதே வாங்கி அடுக்குவோம் என்று நினைத்தால் அது ஒருவகையான சபலம் தான். இந்த மனநிலை, அடுத்து இன்னும் குறையும் போது ஏமாந்துவிட்டதாக நினைக்க வைக்கும்.

வீடுகளில் நேற்று என்ன மாதிரி பேச்சு நடந்திருக்கும் ?

"என்னங்க நீங்களாக எப்போ கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுத்து இருக்கிங்க ?"

"நல்ல வேளை நீ போட்டு இருப்பது வாங்கியது என்றாவது தெரிகிறதே?"

"என்னமோ ஒண்ணு, இன்னிக்கு தங்கம் வெல குறைஞ்சிருக்கு... 4 பவுனில் ஒத்த வளையலாக வாங்கனும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை...இப்ப விட்டுவிட்டால் இவ்வளவு குறைவாக கிடைக்காது..."

"பணத்துக்கு எங்கே போறது...? கிரிடிட் கார்ட் கடன் வேற இருக்கே..."

"உங்க அமெரிக்க அண்ணனுக்கு போன் போடுங்க... இப்ப 2000 டாலர் இன்ஸ்டண்ட் டிரான்ஸ்பரில் அனுப்பி வைக்கச் சொல்லுங்க... அப்பறம் கொடுத்துடுவோம்...அதுதான் டாலர் மதிப்பு குறையுதுல்லே... திருப்பிக் கொடுக்கும் போது நம்ம கையை கடிக்காது..."

'எப்போ என் பொண்டாட்டி பொருளாதார நிபுணர் ஆனாள் ? ' மனதுக்குள் நினைத்துக் கொண்ட கணவன்

எப்படியாவது சமாளித்து கூட்டிக் கொண்டு வந்திருப்பான்

----- இது போல் பலவேறு கதைகள் நடந்திருக்கும்.

நகை தொடர்பில் மட்டுமே இதை எழுதவில்லை. ஆண்களும் இப்படித்தான், யாராவது வீடுகட்ட இடமோ, வீடோ வாங்கிவிட்டார்கள் அதுவும் குறைவான விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்று கேள்விபட்டாலே போதும் அப்பறம் விழிபிதுங்கும் அளவுக்கு கடனை வாங்கிவிடுவார்கள்.

23 அக்டோபர், 2008

தேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் !

செப்டம்பர் 2 க்கு பிறகு தேன் கூடு திரட்டி வேலை செய்யவில்லை. திரு சாகரன் மறைவிக்கு பிறகு பலர் எடுத்து நடத்தியதாக காற்று வாக்கு தகவல்கள் வந்ததுடன் சரி. அதன் பிறகு அதில் செயல்பட்டவர்கள் தீவரவாதியாக இயங்குவதாக நினைத்தார்களோ என்னவோ, "நானும் சேர்ந்தே தான் நடத்துகிறேன், தேன் கூடு பற்றி தகவல்கள் வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்" என்று அதனை நிர்வகித்தவர் எவரும் சொல்லாதது வியப்பே அளிக்கிறது. இந்த அளவுக்கு மறைவாக செயல்பட என்ன தேவை என்றே தெரியவில்லை.

தேன்கூடும் ஒரு பெயர் பெற்ற திரட்டிதான், அதனை நிர்வகித்தவர்களுக்கு பதிவர்களுக்கு அதன் செயல்பாடுகள் முடங்கிப் போனதன் காரணம் அறிய தருவதில் என்ன தவறு ? "திரட்டிகளை நம்பலாமா ? எனக்கென்ன என்றபடி திரட்டி நிர்வாகத்தினர் நடந்து கொள்வார்கள்" என்று பிற திரட்டிகளைப் பற்றியும் பதிவர்கள் நினைக்கும் வண்ணம் தேன்கூட்டை கலைத்தவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் குற்றச் சாட்டாகவே சொல்கிறேன்.

திரட்டியால் பதிவர்களுக்கு பயன் என்றாலும் பதிவர்கள் இல்லை என்றால் திரட்டியும் மின்சாரம்ம் இல்லாத தமிழ்நாடாகத்தானே இருக்கும். எந்த நோக்கத்தோடு திரட்டி ஆரம்பிக்கப் பட்டது என்பதைப் பற்றி பதிவர்கள் கேட்காவிட்டாலும், பதிவர்களை விதிமுறைகளுடன் இணைத்துக் கொள்ளும் திரட்டிகளுக்கு, பதிவர்களுக்கு சில தேவையான அறிவிப்புகளைச் செய்வேண்டும் என்பது தான் பதிவர்களின் எதிர்பார்ப்பு. ஓசியில் கொடுத்தாலும் கெட்டுப் போன பொருள்களைக் கொடுத்தால் கை நீட்டி வாங்குபவர்கள் கேள்வி கேட்பார்கள், அதுதான் இயல்பு.

தொடர்ந்து நடத்த முடியாததற்கு பொருள் வசதியோ, நேரமோ இல்லை என்பதால் கைவிட்டு இருந்தாலும், தேன்கூடு தளத்தில் ஒரு அறிவிப்பை வெளி இட்டு நிறுத்தி இருக்கலாம், தளத்தின் ஆண்டு சந்தா புதுப்பிக்கப்படாமல் முடங்கி இருந்தாலும், அதை நிர்வகித்தவர்கள் அவர்களது வலைப்பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளி இட்டு தகவல்கள் தெரிவித்து இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யாதது பொறுப்பற்ற செயலாகவே தெரிகிறது.

இதையெல்லாம் ஏன் கேட்கிறேன் ?

தேன்கூடு திரட்டி இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் தங்களது வலைப்பக்கத்தை இணைத்தவர்கள் பலர், தேன்கூடு திரட்டியின் அறிவுறுத்தல் படி தேன்கூடு திரட்டியில் தானியங்கியாக பதிவர்களின் பதிவை திரட்ட ஒரு Java Script ஐ தேன்கூடு நிர்வாகத்தினர் கொடுத்து இருந்தனர். அதை தங்களது வலைப்பக்த்தில் வைத்துக் கொண்டிருந்தவர்களின் பதிவெல்லாம் தேன்கூடு முடங்கிய பிறகு தொங்குகிறது. அதாவது யார் யார் தேன்கூடு Java Script வைத்திருந்தார்களோ, அவர்கள் பதிவை திறக்கும் போது பின்னூட்டங்களைக் காட்ட சுமார் ஒரு நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறது, காரணம் அந்த Java Script தேன்கூடு திரட்டியை தொடர்பு கொள்ள முயலும் நேரம் எடுப்பது தான், திரட்டி முடங்கிவிட்டதால் திரும்ப திரும்ப முயற்சித்துவிட்டு பிறகு தான் பின்னூட்டங்களைக் காட்ட வழிவிடும்.

தேன்கூடு திரட்டினரிடமிருந்து அறிவிப்பு வந்திருந்தால் பதிவர்கள் தேன்கூட்டின் Java Script ஐ வைத்திருப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். பலருக்கு எதனால் தங்கள் வலைப்பக்கம் தொங்குகிறது என்றே தெரியவில்லை.

*********

தேன்கூடு Script வைத்திருக்கும் பதிவர்களுக்கு,

தேன்கூடு திரட்டி கொடுத்திருந்த Java Script ஐ நீக்குவது எப்படி என்று பார்ப்போம். பலர் தேன்கூடு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார்கள், எனக்கு தெரிந்து கேஆர்எஸ், முரளிகண்ணன் மற்றும் பலர். நீக்குவது எப்படி ?

Log on to Blogger

Click on 'Layout',

Click on 'Edit HTML' ,

then Click on the Square ( Check Box)

Expand Widget Templates

Search for the text 'thenkoodu.com' , then Remove the Scripts as highlighted below.
then Press "Save Template"

********

அடுத்து திரட்டிகள் கொடுக்கும் திரட்டி இணைப்பு படத்தை (Logo) வலைப்பதிவில் சேர்பதில் என்ன தவறு நேர்கிறது என்று பார்ப்போம்.

22 அக்டோபர், 2008

கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் ?

பொருளீட்டலுக்காக வாழ்கையின் பகுதியைத் தொலைத்தவர்கள் என உறவுகளை விட்டு தொலைவில் நீண்ட நாளாக வெளிநாட்டில், தொலைவான நகரங்களில் வசிப்போர்களுக்கு எப்போதாவது ஏற்படும் அனுபவம்.

தற்பொழுது தொலைபேசி, வெப்காம் மூலமாக உடனடியாக நினைத்த நேரத்தில் தொடர்ப்பு கொள்ள முடிகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை உடனடி தொடர்பு ஒருபக்கம் மட்டுமே தகவல் தொடர்பு வசதி இருந்தாலும் மறுபக்கம் இல்லாததால் வாய்ப்பற்றதாகவே இருந்தது. இண்டெர் நெட் உலகம் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. முன்பெல்லாம் கடிதம் எழுதுவது ஒரு தகவல் பரிமாற்றம் என்றாலும் அதற்கான நேரம் செலவு செய்து கைப்பட எழுதி அனுப்பும் போது படிப்பவர்களுக்கு அதில் நல்ல தாக்கமும் உணர்வும் ஏற்படும். இப்பொழுது இமெயில், செல்பேசி அலைப்பு என்றாகிவிட்டதால், நாம் பிறருக்கு செலவு செய்யும் நேரம் குறைந்தது போலவே அவர்களை நினைத்துப் பார்க்கும் நேரமும் குறைந்து உறவுகள் இருக்கிறது என்ற வகையில் தானே அவரவர்களின் வாழ்க்கையும் சென்று கொண்டு இருக்கிறது.

இண்டெர் நெட் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு மிகுந்த 'இ-பிரார்தனா' போன்று வெர்சுவல் (மெய் நிகர்) மின் அஞ்சல் வழி வழிபாடு, மின் அஞ்சல் வழியாக ஆசி பெறுவது, பிரசாதமாக ஸ்கேன் செய்யப்பட்ட படங்களைப் பெறுவது என ஒருபக்கம் கடவுள் வியாபாரம் நடப்பதைப் பார்க்கும் போது, வெறும் சடங்கு என்பதில் கூட எவ்வளவு விடாப்பிடியாக (ப்ளாட் வீட்டு கிரக பிரவேசத்துக்கு மாட்டு பொம்மை செல்லுமாம்) இருக்கிறார்கள், 'ஏஞ்சாமி இம்புட்டு கஷ்டப்படுகிறீர்கள் ?' என்று கடவுளே கேட்டாலும் நிறுத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வெப்காம், இண்டெர் நெட் வசதியை மிகவும் சரியாக பயன்படுத்துவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கும், முன்பெல்லாம் பெரிய தலைவர்களின் இறப்பு முதல் இறுதிச் சடங்குகள் வரை நேரடியாக ஒளிப்பரப்பப் பட்டதைப் போலவே, பெற்றோர் மற்றும் உறவினர்களின் இறுதிச் சடங்குகளை நேரடியாக இணையம் வழியாக காட்டுவதற்கு நிறுவனங்கள் வந்துவிட்டனவாம். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நெருங்கியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் இறுதிச் சடங்கில் வெர்சுவலாக கலந்து கொள்ளும் வசதி ஏற்பட்டு இருக்கிறது.

இது சரியா தவறா என்று சொல்லத் தெரியல, ஆனால்

"எப்போ இருந்தாலும் ஆவறது ஆகப் போவுது... தெரிஞ்சது தானே... புதுசா என்னம்மா சொல்றே..."

"இன்னும் இரண்டு நாள் தான்ன்னு டாக்டர் டைம்...கொடுத்திருக்கிறார்...வந்தவுடன் சொல்லவேண்டாமே என்று தான் நீ காப்பி குடிக்கும் வரை வெயிட் பண்ணினேன்"

"அம்மா......! நான் நாளைக்கு மதியம் ப்ராங்பர்டில் மீட்டிங்கில் இருக்கனும்...அங்கிருந்து மாலை லண்டன்...அப்படியே நியூயார்க்...அதாவது நாளென்னிக்கு அமெரிக்காவில் இருப்பேன்"

"உங்க அப்பாடா...தூக்கி வளர்த்த அப்பாடா "

"ஆமாம் அதுக்கு என்னச் செய்யச் சொல்றே...நான் போன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணச் சொல்லிட்டேன்... அப்பாவுக்கு முடிஞ்சதும் போன் பண்ணி சொல்லிடுங்க அரை மணி நேரத்தில் கேமராவும் கையுமாக வந்துடுவாங்க"

"கடைசியாக கூட இருக்கனும்னு கூடத் தோனலையா ?"

"அம்மா...வெப்காமில் எல்லாத்தையும் பார்த்துகிறேன்... நாளென்னிக்கு இரவு 11:30 மணிக்கு மேலே ப்ரீயா இருப்பேன்...இந்தியாவில் பகல் தான்...அந்த சமயத்தில் அப்பாவின் இறுதி சடங்கை வச்சிக்கிற மாதிரி ஏற்பாடு செய்துடு"

********

"ஏங்க இதுக்கு போய் நம்ம டூரை கேன்சல் பண்ணனுமா ? வயசாகி தானே செத்து இருக்காங்க வெப்காமிலேயே உங்க அம்மாவைப் பார்த்துக்களாங்க...அதான் நம்ம வீட்டில் 52" எல்சிடி டிவி இருக்கே கிட்டே இருப்பது போல் தெளிவாக தெரியுங்க..."

*********

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

21 அக்டோபர், 2008

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ?

தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, கிருஷ்ணனின் மகனான நரகா அசுரனை அவன் மனைவி பூமாதேவி அழித்தாள் என்றும் இறக்கும் தருவாயில் மனம் மாறியவன் கொடியவன் ஒருவன் அழிந்தான் என்று நினைத்து அந்த நாளை மகிழ்வு கொண்ட்டாட்மாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான் என்றும் அதனால் தீபாவளிக் கொண்டாடப்படுவதாக தென் இந்திய சமய நம்பிக்கையில் சொல்லப்படும் ஒரு கதை.

தென் இந்தியாவில் தான் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்த கதை சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் இராவணன் அழிந்த பிறகு தசராவிற்கு பிறகு கொண்டாடப் படுவதாகவும், இரவணன் இறப்பைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. பல்வேறு தேவித் திருக்கதைகளில் ஒவ்வொரு தேவியரும் எந்தந்த அரக்கர்களை அழித்தார்கள் என்று சொல்லி, தசரா பண்டிகை கொண்டாடப்படும் போதும் அசுரர் கதைகள் சொல்லப்படுகிறது.

பசு நெய்க்கு மாற்றாக ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் போதிப் பண்டிகைதான் போகிப் பண்டிகையாக பெயர் மாற்றப்பட்டது என்றும் போகி குறித்து மற்றொரு கதையும் சொல்லுவார்கள்.

சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

*****

மதங்களே இல்லாத கால கட்டங்களில் ஐம் பூதவழிபாடுகள் இந்தியாவெங்கிலும் இருந்திருக்கிறது. ஆரியர்கள் அக்னியை வழிபட்டார்கள் என்றும், திராவிடர்களும் தீயை வழிபட்டு இருக்கிறார்கள் என்பதை 'வேள்வி' என்னும் தூய தமிழ்ச்சொல் சங்ககாலம் முற்பட்டே புழக்கத்தில் இருப்பதை வைத்து அறிய முடிகிறது. (தீ > தீபம் > தீபாவளி - தீப ஆவளி அதாவது தீபங்களின் வரிசை என தமிழ் சொல்லுக்கும் தீபாவளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது) ஆரியர் திராவிட வேறுபாடு இன்றி தீபாவளி என்பது பொதுவாகக் கொண்டாடிய ஒரு பண்டிகையாகத் தான் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். சமண மதம் உருவாகியபோது சமணர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு மகாவீரர் முக்தி நாளை காரணமாக்கிக் கொண்டார்கள், பவுத்தர்கள் ஆமணக்கு எண்ணையை காரணமாக்கிக் கொண்டார்கள். ஆரியர்கள் இராமயணக் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென் இந்தியாவில் நரகாசுரன் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென்னிந்தியாவில் இந்த வலிந்த காரணம் கூட சைவம் வைணவம் பரவத் தொடங்கிய போதுதான் காரணமாக்கப்பட்டு இருக்க வேண்டும், அதற்குமுன் வேறு காரணம் இருந்திருக்க வேண்டும்.

*********

இப்போது மற்றவற்றைப் சற்று பார்ப்போம், இந்திய சமய தத்துவங்கள் அனைத்தும் ஆரியர்களுடையது அதனால் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததாகச் சொல்லப்பட்டக் காலத்தில் அவர்களிடம் உருவ வழிபாடு என்று எதுவும் கிடையாது, இந்திரன் என்னும் அரசன் தவிர்த்து ஆரிய வேதங்களில் உருவ வழிபாட்டைப் போற்றியதாகக் தெரியவில்லை. ப்ரம்ம தத்துவமே, பரப் பிரம்மே உயர்ந்தது என்று கூறும் ஆரிய வேள்வி வழிபாட்டு வழியில் உருவவழிபாடு என்பது மிகவும் கீழான வழிபாடு. இந்திய தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டது என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவை அனைத்தும் ஆரியர்களுடையது என்று கூறும் திராவிட(வரட்டு) வாதம் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.

இன்றைக்கும் ஒரிஜினல் ஆரியர்கள் என்று பார்த்தால் இந்தியாவெங்கும் 5 விழுக்காட்டுக்கும் குறைவே, இவர்கள் திராவிடர்களை அழித்தார்கள், திராவிடர்களைத்தான் அசுரர், அரக்கன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், மேலும் அவர்களால் அழிக்கப்பட்டோம் என்று அறிந்தே நம் அதைக் கொண்டாலாமா ? என்றும் கேட்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ?

ஆரியர்கள் திராவிடர்களை அரக்கர் அசுரன் என்று சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஆரிய பெண்கள் போராடி அசுரர்களை அழித்தார்கள் என்று சொன்னால் அது அபத்ததிலும் அபத்தம் தானே. நரகாசுரன் என்பவன் ஆண், அவனை அழித்தாகச் சொல்லப்படுவது பெண் தெய்வம் பூமாதேவி. எந்த காலத்தில் ஆரிய பெண்கள் போர் படையை நடத்திச் சென்றார்கள் ? அது எந்த வேதத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது ? தசரா பண்டிகையின் போதும் பெண் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனை, அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அசுரன், அரக்கன் என்று சொல்வதையெல்லாம் திராவிடர்களைத் தான் என்று சொல்வதை நிராகரிக்கிறேன். அசுரர்களும், இராமயணத்தில் சொல்லப்பட்ட இராவணனும் திராவிடன், தமிழன் என்று நம்பினீர்கள் என்றால் இலங்கைக்கு நடுவே இன்றும் இராமர் பாலம் இருப்பதாக திரிக்கும் கதைகளைக் கூட நிராகரிக்க முடியாது என்பது ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை ?

தீபாவளிக் கொண்டாட்டத்திற்குச் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதும் ஒரு கதைதான். அதை ஆழமாக ஆராய்ந்தது போல் ஆரிய - திராவிட போர் என்றும் திராவிடர்களை வெற்றிக் கொண்ட நாள் தீபாவளி, அதனால் தீபாவளியைக் கொண்டாடுவதை மானமுள்ள தமிழன் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் மிதமிஞ்சிய உணர்வு பூர்வ உரைகளையெல்லாம் நிராகரிக்கிறேன்.

மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி என்று நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை. தமிழர்களும் இந்தியாவில் ஒரு அங்கம் தானே.
இணைந்து, இசைந்து இந்திய சமயத்தினராக இருப்பவர்கள் தானே. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்னைப் பொருத்து தவறே அல்ல. கதைகள் பிடிக்காதவர்கள் கதைகளை நிராகரிக்கலாம். எல்லாமே பார்பன சூழ்ச்சி என்று சொல்லி இந்திய சமய பண்பாடுகளை அனைத்தையும் நிராகரிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

******

வாழ்வில் இருள் சூழ்ந்துள்ள ஈழத் தமிழ்மக்களுக்கும், மன இருள் சூழ்ந்து உள்ளோர்க்கும் இந்த தீபாவளியில் வெளிச்சம் கிடைக்கட்டும் !

அனைருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

20 அக்டோபர், 2008

வி.காந்தின் ஈழத்தமிழர்கள் பற்று !

ஈழவிடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு தமிழக தமிழர்களிடம் பேராதரவு இருந்த பொழுது, அதைத் தன் புகழுக்காக பயன்படுத்திக் கொண்டதைத் தவிர்த்து வி.காந்த் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் ? கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்தார். தமிழர்களுக்கு பிரபாகரன் மீது இருந்த பற்றினால் வி.காந்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. முன்னாள் இந்திய பிரதமரின் படுகொலைக்குப் பிறகு பலரைப் போலவே இவரும் ஒதுங்கிக் கொண்டார். பலசோதனைகள் வந்தாலும் ஈழ விடுதலை ஆதரவை விலக்கிக் கொள்ளாத பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியவர்கள் போன்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர் அல்ல வி.காந்த்.

தற்போதைய சூழலில் தமிழர் தலைவர்களில் பெரும்பாலோனர் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது வெளிப்படையாக தெரிந்த போது அதை எதிர்த்துவரும் வேளையில், இந்திய அரசின் நிலையை ஆதரித்தவர் தான் வி.காந்த். இந்திய ஆயுதங்களால் கொல்லப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல இராமேஷ்வரம் மீனவர்களும் தான் என்று கூட இவருக்குத் தெரியாதது போல் தொடர்ந்து அதே நிலையில் தான் இருக்கிறார். தற்பொழுது கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து தனது மைய அமைச்சர்களை பதவி விலகச் சொன்னது, வி.காந்துக்கு வேறு மாதிரி தெரிகிறதாம். அதாவது மைய அமைச்சர் ராஜாவின் மீது சொல்லப்பட்டுள்ள ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார்களை மறைப்பதற்க்காக கலைஞர் ஈழத் தமிழர்கள் பக்கம் ஆதரவு காட்டுவதாக சொல்கிறார்.

பற்றி எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பது போல் தனது கட்சி வளர்ச்சிக்காக தமிழன உணர்வோடு செயல்படுபவர்களையெல்லாம் இப்படி கண்டபடி தூற்றித்தான் வி.காந்த் அரசியல் செய்யவேண்டி இருக்கிறது போலும். கருணாநிதிதான் நாடகம் ஆடுகிறார், ஈழத்தமிழரின் நலம் விரும்பியாக தன்னைக் காட்டிக் கொண்டு வளர்ந்த வி.காந்த் இந்த இக்கட்டான வேளையில் அவர்களுக்காக எந்தவிதமான போராட்டம் அல்லது தீர்வைச் சொல்லுகிறார் என்று யாராவது சொல்லுங்களேன். கலைஞர் அரசின் மத்திய அமைச்சர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் அதையெல்லாம் மறைக்கத் தான் அவர்களின் ஈழ ஆதரவு என்று சொல்லும் வி.காந்தின் குற்றச் சாட்டுகள் படுகேவலமானது. இவற்றையெல்லாம் அரசியல் செய்து, தமிழர்கள் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஆதரவுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயலும் இவரிடம் தெளிந்த அரசியல் செய்யக் கூடிய முதிர்ச்சி இருப்பது போலவோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவோ இருப்பதாக தெரியவில்லை.

19 அக்டோபர், 2008

இதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் !

நான் சொல்வது வியப்பாக இருக்கலாம், உண்மையாகக் கூட இருக்கலாம். இவை சரியான அனுமானம் என்றால் ஜோதிடங்கள் சொல்லும் உண்மைகள், மதங்கள் சொல்லும் இறைத் தத்துவங்கள் கூட உண்மையாக இருக்கலாம். ஜோதிடத்தில் எதிர்காலத்தை கணித்துச் சொல்கிறார்கள், அவற்றினால் சொல்லப்படும் எதிர்காலம் குறித்த (சரியான) தகவல்கள் ஜோதிடரின் (ஆழ்ந்த) புலமை பெறுத்தது. பிழைப்புக்காக ஜோதிடம் சொல்பவர்கள் தவிர்த்து அதைக் கலையாக கற்று வைத்திருப்பவர்கள் நம் சுப்பையா வாத்தியார் மற்றும் ஸ்வாமி ஓம்கார் போன்றோர் அளிக்கும் ஜோதிடத் தகவல்கள் நடப்பதற்கு சாத்தியம் உள்ளவைகள், நடக்காது என்று முற்றிலும் நிராகரிக்க முடியாது. அதற்காக ஜோதிடத்தை நம்பித்தான் ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை.

எதிர்காலம் என்பவை இனிவருபவையா ? ஏற்கனவே நடந்தவையா ? காலம் முன்னோக்கி நகர்கிறது என்கிற அறிதலில் எதிர்காலம் என்பவை இனிவருபவை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை ? உதாரணத்திற்கு 24 மணி நேர நாள் பகுப்பில் 15 மணி என்பது 14 ஆவது மணிக்கு பிறகு வருவது என்று எளிதாக சொல்லிவிடுவோம். 15 மணி என்பது 14 ஆம் மணியின் எதிர்காலம். இப்பொழுது 15 ஆம் மணியில் இருந்து பார்த்தால் 14 ஆம் மணி 25 மணி நேர அளவில் முன்னே நிற்கும் எதிர்காலம் ஆகிறது அதாவது 15க்கு பிறகு 14 வருகிறது. இதுவும் முன்னோக்கி நகரும் காலம் தான் ஆனால் 14க்கு முன்னே நிற்பது 15. ஒரு சுற்று முடியும் நேரத்தில் வரிசை மாறிவிடுகிறது 1-24 to 24-1. இந்த சுற்று ஒரு நாளுக்கு இருப்பது போலவே ஒரு ஆண்டு அளவில் உண்டு. ஜனவரிக்கு பிறகு பிப்ரவரி .... ஜனவரி .... பிப்ரவரி. ஒரு ஆரம்பம் என்ற அளவில் ஜனவரி முன்பாகவும் பிப்ரவரி பின்பாகவும் நமக்கு தெரிகிறது, ஆரம்பம் இல்லாமல் முன்னோக்கி நகரும் காலத்தில் ஜனவரி முதலிலா ? பிப்ரவரி முதலிலா ?அல்லது டிசம்பர் தான் கடைசியா என்று சொல்லவே முடியாது. காலம் நிற்காமல் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.

இப்போது பிக்பாங்க் தியரிக்கு வருவோம், பிரபஞ்சம் சுறுங்கி விரிவதாக தற்போதைய விஞ்ஞானிகள் கோட்பாடு வகுத்திருக்கிறார்கள், சுருங்கி விரியும் காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. அவற்றை முற்றிலும் வரையறுக்கும் ஆற்றல் மனித இனத்துக்கு ஏற்படாது என்றே நினைக்கிறேன், ஒளியின் வேகத்தைவிட பயணம் செய்யும் ஆற்றல் எந்த ஒரு திடப்பொருள் மீதும் ஏற்படுத்தி விடமுடியாது இது விஞ்ஞான உண்மையும் கூட, பிரபஞ்சத்தைப் பற்றி முற்றிலும் அறிந்தால் தான் விரிந்து சுறுங்கும் காலத்தை அளக்கவே முடியும். எல்லை அளவிட முடியாத பிரபஞ்சத்தை முற்றிலும் அறிவதற்கான உதவும் கருவிகளை எவ்வளவுதான் முயன்றாலும் உருவாக்கமுடியாது, பிரபஞ்ச ஒடுக்கம் விரிவு கோட்பாட்டை மெய்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டு மாதிரிகளை செய்து வைத்திருக்கிறார்கள். அவை முற்றிலும் வெற்றிகரமாக அமையுமா என்பது சரியாகத் தெரியவில்லை. சூரியன் தோன்றிய காலம் 5000 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள், மனித இன அறிவின் வரலாறு பரிணாம கொள்கை தவிர்த்துப் பார்த்தால் வரலாற்று அளவில் 3 - 5 ஆயிரம் ஆண்டுகள் தான், இந்த 5 ஆயிரம் ஆண்டை 5000 மில்லியனில் கழித்தால் 5000 மில்லியன் ஆண்டுகளே கிடைக்கும், எனெனில் 5000 மில்லியனை 5 ஆண்டுகளில் ஒப்பு நோக்க சொற்பமே, infinity - known integer = infinity.
எனவே மனித அறிவின் வழி பெறப்படும் பிரபஞ்ச தோற்றத்தின் (ஊகம்) ஆண்டு கணக்கு, சூரியன் வெளிப்பட்டதாக சொல்லப்படும் (ஊகம்) ஆண்டுக் கணக்கு எந்த அளவு சரி என்பதையும் பார்க்க வேண்டும்.

******

பிரபஞ்சம் சுறுங்கி விரிதல் என்னும் தத்துவத்தில் விரிதலில் நடக்கும் இயக்கம், சுறுங்குவதற்கு முன்பு நடந்த (முந்தைய) விரிவிலும் ஏற்பட்டு இருக்கலாம். ஒவ்வொரு முறையும் பிரபஞ்ச விரிதலில் நடக்கும் இயக்கமே மீண்டும் நடக்கிறது என்று வைத்துக் கொண்டு பார்த்தால், இயக்கமும் அதில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் முன்பே நடந்தவை. முன்பே நடந்தவையாக தெரிந்தால் மிகச் சரியாக அடுத்து வருவதை சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு பிறகு 2 மணி வருதால், நாளைக்கும் 1 மணிக்கு பிறகே 2 மணி வரும் என்பது சரியான அவதனிப்புதானே. குறுகிய காலகட்டத்தில் நடக்கும் சுழற்சியை அறியும் ஆற்றல் உள்ளவர்களான நாம் அடுத்து வருவது என்ன என்று சொல்லிவிடுகிறோம், பிரபஞ்ச விரிவு ஒடுக்க அளவில் நிகழும் இயக்கங்களை அறிந்தவர் அடுத்த பிரபஞ்ச விரிவிலும் இதே தான் வரும் என்று சொல்வாரா இல்லையா ? ஆனால் அப்படி ஒரு அறிவு உள்ளவர் (நம்மில்) எவரும் இல்லை. ஏற்கனவே நடந்தவைகளைத்தான் ஈஎஸ்பி என்ற உணர்வாக பலரும் உணர்கிறார்கள். பலருக்கும் இந்த உணர்வு உண்டு. முந்தைய பிரபஞ்ச விரிவின் இயக்கத்தின் போது சந்தித்தவற்றையே திரும்பவும் சந்திக்கிறோம். ஒரு சிலருக்கு இந்த இடத்தை முன்பே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வும், அந்த இடம் 10 ஆண்டுக்கு முன்பு உருவான அடுக்கு மாடி குடி இருப்பாகக் கூட இருக்கும், சுமார் 100 - 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த முந்தைய பிறவியில் கூட பார்த்திருக்க சாத்திய மற்றதாகக் கூட இருக்கும், அப்படி இருந்தாலும் அந்த இடத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்றூ உணர்வார். ஏன் ? ஒருவரை புதிதாகப் பார்த்தவுடன் ஏற்கனவே பார்த்தது போலவே சிலர் உணர்வார்கள். பிரபஞ்சம் ஒடுங்கி மீண்டும் விரியும் போது நடந்தவையே மீண்டும் நிகழும், எப்போதும் அதையே உணர்வார்கள்.

இது உண்மை என்றால் மதமாக மனித இனத்தில் முதலில் சநாதனம், சமணம், பெளத்தம், கிறித்துவம், இஸ்லாம் இவை வரிசை மாறாமல் மறுபடியும் ஏற்படும் எல்லா மதங்களிலும் உலகம் ஒருநாள் அழியும் என்று சொல்லி இருப்பதையும் கவனிக்கவும். உலக அழிவும் ஏற்கனவே நிகழ்ந்ததாக இருப்பதால் அவற்றை உறுதியாகவே இம்மதங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது என்றே கருதவேண்டி இருக்கிறது. அந்த அழிவு எப்போது ? காலத்திற்கு (கோவியார் அல்ல) மட்டுமே தெரியும் அது 100 ஆண்டுகளிலோ, அடுத்த ஆண்டிலோ, அடுத்த மாதமாகக் கூட இருக்கலாம். :)

ஒவ்வொரு விரிவின் போது பிறவிகள் மற்றும் சூழல்கள் அச்சு மாறாமல் நிகழும். விமான தாக்குதலால் இரட்டை கோபுரம் தகரும், அதே பெற்றோருக்கு பிறந்து இருப்பீர்கள், உங்கள் (இதே)மனைவியுடன் இருப்பீர்கள், (என்ன கொடுமை என்கிறார்கள் பலர்) . பீர் அருந்துபவர்கள் அருந்துவார்கள், இந்த நிமிடம் நடப்பவையே நடக்கும். தமிழ்மணம் இருக்கும், காலம் பதிவு இருக்கும், இந்த பதிவின் தலைப்பையும், இந்த பதிவை இந்த 2008 ஆண்டுக்கான 300 ஆவது பதிவாகவும் (எழுத்துப் பிழைகளுடன்) கோவியார் எழுதி முடித்திருப்பார். நீங்கள் படித்துக் கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ந்திருந்தாலோ, துக்கப்பட்டு இருந்தாலோ அவை பிரபஞ்ச விரிவு தோறும் நடப்பவையே. இவை சரியாகப் புரிந்து கொண்டால் எல்லாம் மாயை என்று உணர்வீர்கள், எதற்கும் நாம் காரணமல்ல. உலகம் நாடக மேடை நாம் (வந்து போகும்...வந்து போகும்) நடிகர்கள் என்று உணர்வீர்கள்.

எந்த விதியும் (கால) சுழற்சிக்குள் அடக்கம் ! விதிகள் காலத்தால் மாறும் ?

******
பின்குறிப்பு : நான் சொல்லி இருப்பது பிரபஞ்ச ஒடுக்கம் விரிவில் வரும் கோட்பாடுகளை (Cycle of Time) ஒட்டி வருபவை. இவற்றை நம்ப வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. இவை சாத்தியம் என்று என்னளவில் நம்புகிறேன். விவேகநந்தர் ஞானயோகத்தில் இதுகுறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.

18 அக்டோபர், 2008

அவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?

தசவதாரக் கதைகளின் ஒருங்கிணைப்பின் ( கமலஹாசன் கதை அல்ல) காலம் கிபிக்கு பிறகே ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆதிசங்கரர் காலத்திற்கு முற்பட்டவையாக இருக்க முடியாது. பக்தியிலும் மெய்ஞானத்திலும் சிறந்தவர் என்று கருத்தப்பட்ட ஆதிசங்கரின் சரிதையிலும், அவரது கோட்பாடுகளிலும் அவதாரங்கள் பற்றி எதுவும் சிலாகித்தோ, குறிப்பாகவோ கூட கூறப்படவில்லை என்பதால் இவை காலத்திற்கு பிந்தியததாகவும், பல்வேறு கிருஷ்ண கதைகளின் தொகுப்பாக பின்னார் ஏற்பட்டவையே தசவதாரக் கதைகளின் தொகுப்பு. கிட்டதட்ட பெரிய புராணம் ஏற்பட்டு சிவபெருமானை வைத்து நாயன்மார்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அதற்கு இணையாக எழுதப்பட்டு இருக்க வேண்டும். தமிழகம் தவிர்த்து இந்திய சமய நம்பிக்கையில் இராமன், ஆயர்குல கிருஷ்ணன் தவிர்த்து ஏனைய அவதாரங்கள் பற்றியோ, நாயன்மார்கள் கதைகளோ பெரிய அளவில் எவரும் அறிந்திருக்கவில்லை. இதில் இராமன், கிருஷ்ணன், பலராமன், பரசுராமன் தவிர்த்து வேறு எந்த கிருஷ்ணனின் அவதாரமும் பிறந்து வளராமல் குறிப்பிட்ட சமயத்தில் திடீர் என்று தோன்றியதாகவே சொல்லப்படுகிறது.

ஒரே சமயத்தில் பலராமனும், கிருஷ்ணனும் அண்ணன் தம்பியாகவே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரே என்றால் கிருஷ்ணனின் சிறப்பைப் போற்றும் அளவுக்கு பலராமன் பற்றிய புகழ்ந்துரைகளோ, காலிங்க நர்தனம், வெண்ணைத் திருடியது, பெண்களின் மனம் கவர்ந்தது போன்ற குழந்தை விளையாட்டுக்களை வைத்து கிருஷ்னைப் பாடியது போல் பலராமனைக் குறித்த புகழ் உரைகளோ இல்லை, கண்ணன் என்ற கதையாடலில் இருந்த பலராமன் என்கிற ஒரு பாத்திரத்தை பத்து அவதாரத்திற்கு கணக்கு காட்ட பற்றக் குறையினால் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த தசவதாரக் கதைகள் புத்தரின் சாதக மற்றும் அவதாரக் கதைக்கு மாற்றாக அல்லது போட்டியாக பின்னர் ஏற்பட்டு இருக்க வேண்டும். வைணவ அன்பர்கள் தசவதாரக் கதைகளின் காலம் பற்றி விளக்கினால் அறிந்து கொள்வேன்.

இந்த கட்டுரையைக் கூட கண்ணன் மீது இருக்கும் வெறுப்போ, காழ்புணர்வோ ஏற்பட்டு அதனால் எழுதி இருக்கிறேன் என்றெல்லாம் கருத வேண்டாம். வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை. கண்ணன் குறித்த வழிபாடு இந்திய சமய வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சிவ லிங்க வழிபாடுகள் இருந்த காலத்திலிருந்தே கிருஷ்ணனை வழிபடுவதும் இருந்தே வந்திருக்கிறது. அரியும் சிவனும் ஒன்று என்ற ஒரு சொல்லாடலை உருவாக்கி பாமரனுக்கு அதைக் கூறியதைத் தவிர்த்து இவ்விருவர்களையும் மன அளவில் கூட இணைத்தும் பார்க்கும் முயற்ச்சி ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் இருந்ததோ, நடந்ததோ இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

******

ஞானசம்பந்தருக்கு பார்வதி பால் கொடுத்தாள் என்று கூறப்பட்ட கதையும், நாயன்மார்களை சிவபெருமான் ஆட்கொண்டார் என்ற கதைகளையும் தவிர்த்து இறைவன் நேரடியாக தோன்றினான் என்றும் அவதாரம் எடுத்துவந்தான் என்றும் தமிழ் இலக்கிய வரலாறுகளின் பிற்பகுதியில் எதுவுமே கூறப்படவில்லை. அதாவது ஞானசம்பந்தர் காலத்திற்கு பிறகு இறைவன் காட்சி கொடுத்தான் என்று கூட எந்த இலக்கியத்திலும் எழுதப்படவில்லை. இதுபோன்ற சைவ கதைகளைப் போலவே வைணவ சார்பில் ஆழ்வார்கள் குறித்த கதைகளும் அவர்களுக்கு பெருமாள் காட்சிக் கொடுத்தார், ஆட்கொண்டார் என்ற கதைகளும் உண்டு. இவையெல்லாம் சமகாலத்தில் தோன்றியவை அல்லது கொஞ்சம் முன்பே அல்லது பின்பு இருக்கலாம். அதன் பிறகு இராமனுஜர், சங்கரர் போன்ற சமயத் தலைவர்களையே இறைக்கு ஒப்பாக போற்ற ஆரம்பித்தனர் அல்லது அவர்களையும் இறைவனின் அவதாரங்களாக எழுதப்படாமல் மன அளவில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சங்கரமடத்தில் சங்கரருக்கு பிறகு வந்த சங்கராச்சாரியர்கள் எவருமே சங்கரர் அளவுக்கோ, அல்லது சிறு அளவில் அவர்களின் பெயர் தெரியும் அளவுக்குக் கூட புகழடையவில்லை. அவை குறை அல்ல, இயல்பு. மதங்களும் கொள்கைகளும் காலப் போகில் நீர்த்துப் போகும் அல்லது அவற்றின் பயன்பாடு இல்லாது போய் இருக்கும் என்ற உண்மையால் நிகழ்ந்த மாற்றங்கள் என்று கொள்ளலாம்.

வள்ளலார் கடவுளைக் கண்டாரா ? இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் சச்சிதானந்தம் அதாவது ஜோதி சொருபம் என்ற முடிவுக்கு வந்தவராக ஒளியைக் கடவுளாகக் கருதி அனைவருக்கும் அதையே பரிந்துரைத்தார். அதன் பிறகு இராமகிருஷ்ணர் பரமஹம்சர் தனக்குமுன் காளிதேவி தோன்றியதாகவும் சொன்னார், பிறகு யோக நிலையில் அப்படி காட்சி கிடைப்பது யோக நிலையின் ஒரு படி அல்லது தோற்றம் என்றும் சொல்லிய படியால் அவரது சீடரான விவேகநந்தர், அதுபோன்று இறைக் காட்சிக்கெல்லாம் ஆசைப்படாமல் அத்வைத சித்தாந்தம் வழியில் சென்றுவிட்டார்.

கிபிக்கு பிறகு இந்திய சமய வரலாறு தோறும் எங்கும் அவதாரம் நிகழ்ந்தாகவே தெரியவில்லை. எல்லாம் ஆன்மிக அனுபவம் மட்டுமே. ஆனால் தற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் ? வாந்தியெடுத்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையால் விபூதி வரவழைப்பதும் அவதாரங்கள் செய்யக் கூடியவையா ? இராமன் அவதாரம் என்று சொல்லப் பட்ட இராமயணக் கதைகயிலும் கூட அவன் இதுபோன்ற சித்துக்கள் எதையுமே செய்யவில்லையே. இந்த போலி சாமியார்கள் ஒரிஜினல் கிருஷ்ண அவதாரங்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள் ? 22 கேரட் கோல்டில் பத்தர்களால் மட்டுமே செய்யக் கூடிய மோதிரங்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது ? இவர்களால் வேறு வேறு சீரியல் எண்களுடன் கூடிய 1000 ரூபாய் நோட்டுகளை உருவாக்கித் தரமுடியுமா ? கண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா ?

17 அக்டோபர், 2008

சினிமா சினிமா ...

கலைகள் என்று சொல்லப்பட்ட இயல் இசை நாடகம் அனைத்தும் திரை ஊடகமாக சுறுங்கிவிட்ட பிறகு பொழுது போக்கிற்கு அதைத்தவிர வேறு வழி இல்லை என்றாகி விட்டபடியால், சினிமா இன்றி அமையாது தமிழுலகு மற்றும் உலகு. 'நான் சின்ன வயசில்... என்று எழுத வாய்ப்புக் கொடுத்த பதிவர் இளைய பல்லவனுக்கு நன்றி. பொதுவாக தொடர் பதிவில் அவ்வளவு ஆர்வம் காட்டாவிட்டாலும், என்ன எழுதுவது என்று சற்று திணறுபவர்களும், பதிவு எழுதி நிறுத்தியவர்களுக்கு மறு தூண்டுதலாக இருப்பதால் தொடர்பதிவு தவறல்ல. அலுப்பாக இருந்தாலும் எழுத வைக்கிறது.

1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஒரு நான்கு வயது இருக்கும் போது விஜயலட்சுமி திரையரங்க்கில் தேவரின் 'தெய்வம்' படம் தான் முதன் முதலில் பார்த்தப் படம், படத்தில் தீப ஆரதனை காட்சி வந்த பொழுது கையை நீட்டி தொட முயன்றேன். அதை இன்றும் கூட பெற்றோர்களும் உடன் பிறந்த மூத்தவர்களும் நினைவு வைத்திருக்கிறார்கள், முதல் படத்திலேயே பரவசத்தை உணர்ந்துவிட்டேன் :). 2 ஆம் வகுப்பு படித்த போது விஜயலட்சுமி திரையரங்க்கில் அக்காவுடனும் பாட்டியுடனும் பார்த்த 'நான் அவனில்லை படம்'... இன்னும் கூட 'மந்தார மலையோடு வந்தாடும் தென்றலில் தாழாட்டும் புல்லாங்குழல்' என்ற எஸ்பிபியின் ஆரம்பகாலப் பாடலாக திரையில் பார்த்த, ஜெமினியின் கருப்பு வெள்ளைக் காட்சியை நினைக்க முடிகிறது. அதன் பிறகு ஒளவையார், மணாளனே மங்கையின் பாக்கியம், தங்கமலை ரகசியம் வகைப் படங்களைத்தான் பெற்றோர்கள் அழைத்துச் சென்றார்கள்.

2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அமர்ந்து பார்த்தது தான் மிகக் கொடுமையானது என்பதை படத்தின் பெயரைச் சொன்னால் தெரிந்து கொள்வீர்களா ? கடைசியாக பி.வாசு இயக்கத்தில் வந்த படம் தான்

3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சிங்கை தொலைக்காட்சி வசந்தம் சென்ட்ரலில் போட்ட பீமா, இந்த படம் மட்டும் ஓடி இருந்தால் இன்னும் பல மொக்கை படங்கள் வந்திருக்கும், அது கெட்டுப் போச்சே ! இயக்குனரைத்தான் பாராட்டனும், லிங்குசாமியும் மொக்கையாக படம் எடுப்பார் என்று தெரிந்தது

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?நிறைய சொல்லலாம், கர்ணன், ஆயிரம் ஜென்மங்கள், முதல்மரியாதை, பசும் பொன், சிப்பிக்குள் முத்து....இதுல முதல் மரியாதையும் ஓரளவுக்கு தாக்கினாலும், பசும்பொன் படத்தின் பிரபு பாத்திரம் அப்பாவையும், ராதிகா பாத்திரம் அப்பாவின் அம்மாவை (பாட்டியை)யும் நினைவு படுத்தும், காட்சிகளும், சூழலும் கிட்டதட்ட அதே தான்.

5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?காதல் படம், அதில் ஒரு சினிமா கதையாசிரியர் மேன்சனில் தங்கி இருப்பதைப் போல் சிலரை பார்த்து இருப்பேன், அவர்கள் உலகமே சினிமாவாக இருக்கும், அப்படி ஒருவரிடம் அவர் பெயர் AK Balan இவ்வளவு முயற்சி பண்ணுகிறீர்களே அலுப்பாக இல்லையா என்று கேட்டேன். 'தம்பி உனக்கு ஒரு வேலை அது போதும், அதாவது ஆற்றில் நீச்சல் அடித்து மறுகரையை அடைபவன் நீ, நான் கடலில் நீந்துகிறேன், காலம் எடுத்தாலும் அது சாதனை' என்றார். அப்பறம் நான் ஏன் பேசப் போகிறேன். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததா என்று தெரியவில்லை. இது நடந்தது 1989ல்.

5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அந்த கால ஜெகன் மோகினி, மாயஜால காட்சிகள், அதை இப்போது எப்படி செய்திருப்பார்கள், ஜெயமாலினிக்கு சரியாக போட்டியாக நமிதா செய்திருப்பாரா என்று பார்க்க ஆவல் தான்.

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

10 ஆம் வகுப்பு படித்ததிலிருந்து தினமலர் துணுக்கு மூட்டை முன்பெல்லாம் விரும்பி படிப்பதுண்டு. நடிகை நடிகர்களை தினமலர் கிண்டல் செய்து பெயர் வைப்பது மிகவும் பிரசித்தம் (இராம ராஜன் - பசுநேசன், தனுஸ் - ஒல்லிபிச்சான், திரிசா - சாமி மாமி) இப்போதெல்லாம் விரும்பி படிப்பதில்லை, நக்கீரன் வாங்கினால் கொக்கரக்கோ ஒரு பக்க செய்தியை படிப்பேன். வலையில் சினிமா நிருபர் மற்றும் முரளி.கண்ணன் எழுதுவதை படிக்கிறேன்.

7) தமிழ்ச்சினிமா இசை?

அவ்வப்போது ஹிட் ஆகும் இசை அமைப்பாளர்களின் இசையே எனக்கு(ம்) பிடித்தவை. அனைவரையுமே பிடிக்கும்.

8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹாரிபாட்டர், ஸ்பைடர்மேன், லார்ட் ஆப் த ரிங், நார்னியா, அனகோன்டா டைப் படங்களை கிராபிக்ஸ் காட்சிகளுக்காக திரையரங்கிற்கு சென்று விரும்பி பார்ப்பேன்.

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?

நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழகத்தில் இந்தி நுழையாதவரை தமிழ் சினிமா துறை வாழும்.


10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

வருங்கால முதல்வர்கள் பற்றிய நகைச்சுவை இல்லையே என்று வருத்தப்படுவேன். மெகசீரியல் எடுக்கும் திட்டம் எதும் வைத்து கேள்வி கேட்கிறீர்களா ? அதுக்கு தமிழ் சினிமாவே பரவாயில்லை.

இதே கேள்விக்கு பதில் அளிக்க, அடுத்து யாரையாவது அழைக்கனுமாம் ? இருவரை மட்டும் அழைக்கிறேன்

1. ஸ்வாமி ஓம்கார் ( சின்ன வயசில் கண்டிப்பாக திரைப்படம் பார்த்து இருப்பார்... இதிலிருந்தெல்லாம் ஒதுங்கிவிட்டேன் ... இதுபற்றி பதிவிட விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை. மக்களுடன் தொடர்பு உள்ள ஒரு பெரிய ஊடகம் என்பதால் தெரிந்தவரையில் எழுதினாலும் தவறு இல்லை)

2. டி.வி ராதாகிருஷ்ணன் ஐயா (யாரும் ஏற்கனவே கூப்பிட்டு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்)

இறைவன் இருந்தால் நல்லா இருக்கும் !

'இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்' கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண மனிதனாக மாற்றிக் கொண்டு கீழே வருகிறார். அருகில் இருக்கும் ஆலயத்தின் மணி ஓசைக் கேட்க, தன்னை அழைப்பதை உணர்கிறார். உள்ளே நுழைகிறார், பக்தர்களுடன் வரிசையில் நிற்கிறார், அர்சகர் இவருடைய அருகில் செல்லும் போது

இறைவன் : நான் பகவான் வந்திருக்கேன்

அர்சகர் : நட்சத்திரம் சொல்லுங்கோ

இறைவன் : நட்சத்திரமா ? எனக்கு பிறப்பே இல்லை

அர்சகர் : லோகத்துல பிறப்பு இல்லாதவர் இருப்பாரா ? அநாதையா ? பரவாயில்லை...பகவான் பேருக்கு அர்சனைப் பண்ணிடுறேன்... அப்பறம் ஷேமமாக இருப்பேள். போய் அர்சனை தட்டும் சீட்டும் வாங்கி வாங்கோ

*******

இறைவன் வந்த வழியாக திரும்பி நடக்கிறார், அருகே வாசலில் செருப்பு பாதுகாப்பாளரிடம் செல்கிறார்

பாதுகாப்பாளர் : சாமி இன்னா வோணும்,

இறைவன் : நான் தான் சாமி

பாதுகாப்பாளர் : உன் பேரு சாமியா, ரொம்ப களைச்சு போய் இருக்கே...தண்ணி குடிக்கிறியா ?

இறைவன் : அதெல்லாம் வேண்டாம்

பாதுகாப்பாளர் : வேற இன்னா வோணும் ? வீட்டாண்ட போன பையனைக் காணும், சித்த இப்பிடி குந்திகினு இரு யாராவது செருப்புப் போட்டால் வாங்கி வையி, வயித்த கலக்குது போய்டு வந்துடுறேன் என்று சொல்லி கள்ளாவைப் பூட்ட சாவியைத் தேடுகிறார்

இறைவன் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்

பாதுகாப்பளர் : ஐயே...இது பூட்ட கேசு

*******

அங்கே அருகில் இருந்த க்ளினிக்கைப் பார்க்கிறார், டாக்டர் பத்மனாபன் என்று போட்டிருந்தது,

மூடப் போகிற நேரம் யாரும் பேசண்ட் இல்லை, இறைவன் டாக்டரைப் பார்க்கனும் என்றதும் ஒரு அம்மா உள்ளே போகச் சொல்லுது. டாக்டர் பக்தி பழமாக இருந்ததுடன், அன்று பிஸ்னஸ் முடியும் நேரம் என்பதால் சாமி படத்திற்கு கற்பூரம் காட்ட ஆயத்தமாகும் வேளையில், இறைவனைப் பார்த்துவிடுகிறார்

டாக்டர் : உட்காருங்க... உங்க பேரு

இறைவன் : நான் தான் இறைவன்

டாக்டர் ; நல்ல பெயர், இறையன்பு, இறையடியான் போல உங்க பேரு இறைவனா ?

இறைவன் : ஆமாம்

டாக்டர் : உங்களுக்கு என்ன செய்து

இறைவன் : எனக்கு ஒண்ணும் செய்யல, நான் தான் எல்லோருக்கும் இறைவன்

டாக்டர் இறைவனின் கையை நீட்டச் சொல்லி நாடியைப் பார்க்கிறார், மனதுக்குள் 'எல்லாம் சரியாகத் தானே இருக்கு...பின்னே... யோசித்தவாறு'

டாக்டர் : நீங்க தப்பான டாக்டரிடம் வந்திருக்கிங்க, பக்கத்து தெருவுல பரந்தாமன் என்று ஒருவர் இருக்கிறார், எனக்கு நண்பர் தான் போன் போட்டுச் சொல்கிறேன், மன நல சிகிச்சை யெல்லாம் அவர் தான் கொடுப்பார்

*******

இறைவன் ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்ப.....அருகில் "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர சுவாமிஜி சரணாகதி ஆஸ்ரமம்" என்ற பெயர் முகப்பில் தாங்கி இருந்த ஒரு ஆசிரமம் போன்ற இடம், பஜனைப் பாடல்கள் ஒலிக்க பத்தி மணம் கமழந்தது....அந்த வீட்டிற்குள் நுழைகிறார்..."

எல்லோரும் பக்தி பெருக்குடன் மெய் மறந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பாடிக் கொண்டு இருக்கின்றனர்

ஆஸ்ரம ஸ்வாமிஜி , எல்லோரையும் சகஜ நிலைக்குத் திரும்பச் சொல்கிறார். வாசலில் நிற்கும் இறைவனை சைகையால் அங்கே ஓரமாக அமரச் சொல்லிவிட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்.....'காமமே கடவுள்....காமத்தை முறையாக பெறுபவனும்...தருபவனும் இறைவனை தரிசிக்கிறான்...இல்லை இல்லை...இறைவனே அவன் தான்...இறைவனாகவே ஆகுகிறான்' ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது,

அருகில் இருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார் இறைவன்

பக்தர் : புதுசா வந்திருக்கிங்களா ?

இறைவன் : ஆமாம்

பக்தர் : யார் தேடினாலும் கிடைக்காத இறைவனின் அவதாரம் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர ஸ்வாமிகள்... இன்று இவர் இங்கே ரகசியமாகத்தான் வந்திருக்கிறார்...சொல்லிவிட்டு வந்தால் பக்தர் கூட்டம் கட்டுப்படுத்த முடியாது...குறிப்பாக பெண்களின் கூட்டம்....பகவான் அல்லவா ?

இறைவன் : நான் கூட இறைவன் தான்

பக்தர் : எங்க வந்து என்ன சொல்றிங்க..,பாபம் பண்ணிடாதிங்க...நாமெல்லாம் மனிதர்கள்...அவர் ஒருவர் தான் பகவான்... அவர் தேஜஸ் மின்னுவதைப் பாருங்கள்

இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது

சாமியாரின் அருளுரையை கேட்டு பரவசமடைந்தவர்கள்

"சர்வேஸ்வர பகவானே....நாங்கள் ஜென்மம் தொலைத்தோம்...புண்ணியம் பெற்றோம்" என்கிறார்கள்

நல்ல வேளை ஒரு 'பெண்' வேடம் எடுத்து நான் வரவில்லை...தப்பினேன் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார்.... இறைவன்

*******

அருகில் இருந்த இறைமறுப்பாளர்களின் தலைவரின் பெரிய பங்களா போன்ற இல்லத்துக்குள் அனுமதி கேட்டு காத்திருந்து உள்ளே செல்கிறார்

இறைமறுப்பாளர் : என்ன விசயமாக வந்திருக்கிங்க

இறைவன் : இறைவன் உண்டு, நான் தான் இறைவன்

இறைமறுப்பாளர் : முதலில் நீங்கள் சொல்வது பொய், அப்படி ஒன்று இல்லவே இல்லை

இறைவன் : நான் தான் உங்கள் எதிரில் இருக்கிறேனே, நான் உண்மை

இறைமறுப்பாளர் : அப்படியென்றால் ஒன்று கேட்கிறேன்..... ஒருபக்கம் பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஏழைகள் இருக்கிறார்கள் ஏற்றத் தாழ்வு ஏன் ? ஏழைகள் வஞ்சிக்கப்பாடுவது ஏன் ?

இறைவன் : உங்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு 500 கோடி...நீங்கள் நினைத்தால் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறீர்கள், இன்றைய தேதியில் எதிர்காலத்தில் உங்கள் பேரனுக்கு வாரிசு இருக்குமா இல்லையா என்றே உங்களுக்கு தெரியாது...உங்கள் சொத்துக்களெல்லாம் 4 ஆவது தலைமுறையால் தின்றே அழிக்கப்படுமா என்று கூட உங்களுக்கு தெரியாது, இருந்தாலும் பேராசையால் சொத்துக்களை குவித்தே வருகிறீர்கள், நீங்கள் மனது வைத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்....பணக்காரர்களின் சுரண்டலால் தானே ஏழை பரம ஏழை ஆகிறான்

இறைமறுப்பாளர் : இன்கெம்டாக்ஸ் ஆலுவலத்திலிருந்து வந்திருக்கிங்களா ? சொத்துவிபரமெல்லாம் சரியாகச் சொல்றிங்க...நாளைக்கு ஆடிட்டரிடம் பேசுங்க...இப்ப கிளம்புங்க

*******

அங்கிருந்து கிளம்புகிறார்... அருகே ரயில் தண்டவாளம்

ஒருவர் பரபரப்புடன் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்... ரயில் நெருங்கவும் தண்டாவளத்தில் பாய முயன்றவரை இழுத்துவிட்டு.... தனது சக்தியால் அவரை சாந்தமடைய வைத்துவிட்டு

இறைவன் : நான் இறைவன் சொல்லுங்க உங்களுக்கு என்ன கஷ்டம்...

தற்கொலை ஆசாமி : நகை பணமெல்லாம் சூதாட்டத்தில் போய்விட்டது கடன் தொல்லை அதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன்...நீங்கள் இறைவன் என்றால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுங்கள்...இல்லை என்றால் என்னை சாகவிடுங்கள்.

இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்... அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ?

தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்...இல்லை என்றால் போய்விடுங்கள்... எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை... என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்

*******

அங்கிருந்து கிளம்ப

தூயத் தமிழில் ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து செல்ல அவரின் அருகில் சென்று இறைவன்

இறைவன் : நானே இறைவன் அனைத்தையும் ரட்சிப்பவன்

செந்தமிழர் : ரட்சிப்பவன் என்பது வடசொல், காப்பவன் என்று சொல்லி இருக்க வேண்டும், செந்தமிழ் பேசாத நீங்கள் இறைவனாக இருக்க முடியாது.

திடுக்கிட்ட கடவுள்... சொல்லிக் கொள்ளமால்

*******

அங்கே, அருகில் ஒரு ஜோதிடரின் வீட்டை அடைகிறார்

இறைவன் : நான் இறைவன் வந்திருக்கிறேன், உண்மையான இறைவன்

ஜோதிடர் : எனக்கு சனி திசையின் ஆரம்ப நாட்கள் நடக்கிறது, இப்போது இறைவன் எனக்கு முன்பு வரும் கிரக அமைப்பு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியகாரனுக்கு நான் ஜோதிடம் பார்ப்பது இல்லை...கிளம்புங்க

கிளம்பினார்,

*********

வழியில்,

ஒரு தாயின் இடுப்பில் இருந்த குழந்தை இறைவனைப் பார்த்து முகம் மலர... மிக்க மகிழ்ச்சியுடன் டாட்டா சொல்லியது

"சும்மா இரு.... உங்க அப்பாவுக்கு காட்டச் சொன்னால் காட்ட மாட்டே.....கண்டவங்களுக்கும் டாட்டா காட்டனுமா ?" அந்த தாய் அதனை அதட்டினாள்....இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்

குழந்தையின் முகத்தில் இருந்த புன்னகையில் கிடைத்த திருப்தியுடன் இறைவன் மறைந்துவிட்டார்.

**********

இறைவனைத் தேடுகிறவர்கள் அனைவருமே....ஓவியத்திலும் கல்லிலும் வடித்திருப்பது போன்று இறைவன் இருப்பான் என்றே நினைக்கிறார்கள்.
சாதரண மனிதனாக வெறும் கையோடு வந்தால் எவரும் உணரக்கூடிய நிலையில் கூட இல்லை. அப்படியே முருகனாகவோ வேறு எதோ ஒரு கடவுளாக முன் தோன்றினாலும் போட்டிருக்கும் நகையெல்லாம் ஒரிஜினலா என்று அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவர், இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.

இறைவன் இல்லை என்போரும்....தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை...இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்... நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்

இணைப்பு : நான் கடவுள் - ஸ்வாமி ஓம்கார்

16 அக்டோபர், 2008

காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்படி ?

பங்கு சந்தை சூறாவளியில் காணாமல் போன நிறுவனங்களில் முதன்மையானவையாக கடன் வழங்கும் வங்கிகளும், காப்பிடு வழங்கும் வங்கிகளுமே ஆகும். லட்சக்கணக்கானோர் சிறுக சிறுக சேமிப்பு + காப்பீடாகப் போட்டவையெல்லாம் வளர்ந்து வாங்கப் போகும் நிலையில் திவாலாகி அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது. தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையானவை என்பது நூற்றாண்டு கால படிப்பினையாக அமையும் என்று எதிர்பார்த்தாலும், மக்கள் எதையுமே அன்றோடு மறந்துவிடுவார்கள் என்கிற லாஜிக் தெரிந்த பொது / தனியார் நிறுவனங்கள் புதுவழியில் மக்களை எப்படியேனும் அனுகிவிடுவர்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மேக்சிமா, ரமேஷ் கார் மற்றும் அனுபவ் நிறுவனங்கள் மூலம் நல்ல 24 விழுக்காடு வட்டி வழங்கப்படுவதை நம்பி அடிவாங்கியவர்கள் என்பதால் தமிழக மக்கள் தற்போதைய பங்கு சந்தை பாதிப்பில் பங்கு பெறாதவர்களாகவும், அப்படியே பெற்று பாதித்திருந்தாலும் ஏற்கனவே நடந்தவையே என்றும் தேற்றிக் கொள்வார்கள்.

பலூன் ஊத ஊத பெரிதாகவும் வியப்பாகவும் இருக்கும், காற்று சேர சேர அழுத்தம் மிக பலூனின் பரப்புகள் மெல்லியதாகவும் மாற, அடுத்து காற்று சேர்ந்து கொண்டிருக்கும் போது எந்நேரமும் வெடிக்கலாம் என்ற விதிபோல் தான் பங்கு சந்தையின் வீழ்ச்சிகள் காட்டுகின்றன. வெறும் பணம், அதை பத்திரமாக (Form) மாற்றி பணம் பண்ணிக் கொண்டே இருக்கலாம் என்கிற நினைப்பில் வெண்ணீரைக் கொட்டியதாகவும், பெரும் கோடிஸ்வரனாக உலா வந்தவர்கள் 'பணம் என்பது மாயை' தான் என்று அருளுரை ஆற்றும் அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது. பணமும் அதன் மூலம் கிடைக்கும் புகழும் (குறுகிய) காலம் தொடர்புடையது என்னும் ஆன்றோர் உண்மையை உணர்ந்து கொள்ள கொடுக்கும் பணம் மிகவும் பெரியதுதான். எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்குவது போலவே பணத்தின் மீது இருக்கும் மோகத்தை உணர்ந்து தெளிந்து கொள்ள இப்பணம் கொடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொண்டால் ஓரளவு அழுத்தத்திலிருந்து மீளலாம். அப்படியும் ஆறுதல் கிடைக்கவில்லை என்றால்,

'எதைக் கொண்டுவந்தாய், எதனை இழக்கிறாய் ?'

'நீ எதைக் கொண்டு வந்தாயோ...அதை,
நீ பங்கு சந்தையிலிருந்தே கொண்டு வந்தாய்'

'இன்று உன்னுடையதாக இருப்பது... பங்கு பரிவர்த்தனை முடிந்த பிறகு
ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்'

என்பதாக கீதாச்சாரத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டு ஆறுதல் அடையலாம்

**********

இங்கே சிங்கையில் தபால் அலுவலகம், வங்கி ஆகியவற்றிற்கும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கும் சென்றால் எதாவது ஒரு காப்பிட்டு முகவர் / கடன் அட்டை முகவர் நம்மை நெருங்கி சிரித்தபடியே ஒரு 20 அடிக்கு கூடவே வருவார். பெரும்பாலும் 'நோ தாங்கஸ்..', இல்லாவிடில் 'எனக்கு வேறொரு நிறுவனத்தில் காப்பீடு இருக்கிறது / கடன் அட்டை இருக்கிறது' என்று சொல்லி சமாளித்து எட்டி வந்துவிடுவார்கள். நான் 2004 வாக்கில் ஒரு தபால் அலுவலகத்திற்குச் சென்ற போது (AI* நிறுவனத்தைச் சேர்ந்த) ஒரு பெண் முகவரிடம் மீளமுடியாமல் சிக்கிவிட்டேன். 'உடனடியாக காப்பீடு எடுக்க முடியாது, வேண்டுமானால் கைபேசி எண்களைத் தருகிறேன், பிறகு பேசுங்களேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தேன். தப்பிவந்ததாக நினைத்தேன் ஆனால் சரியாக ஒருவாரத்தில் அழைத்தாள். சும்மா சொல்லி வைப்போமே என்பதற்காக 'இப்ப நிதி நிலமை சரியில்லை, இன்னும் மூன்று மாதம் கழித்து பேசுங்கள்' என்றேன். சரியாக மூன்று மாதம் சென்று அழைத்தாள், அப்போதும் அதே காரணத்தைச் சொல்லி இன்னும் ஒரு ஆறுமதத்திற்கு தள்ளிப் போட்டேன். விடுவாளா ? அடுத்த ஆறுமாதத்தில் அழைத்தாள், அவள் தான் அழைக்கிறாள் என்று சொல்வதற்காக அவளே, 'Kanna Do you remember me, that day angmokyo post office ?", நானும் "yes, yes madam" என்று சொல்வதே வாடிக்கையாக இருக்கும்.

அதன் பிறகு மற்ற சூழல்களையெல்லாம் சொல்லி, அதாவது ஏற்கனவே வெறொரு நிறுவனத்தில் இருக்கும் காப்பீடு அடுத்த ஆண்டு முடிந்துவிடும் அதன் பிறகு பேசு' என்றேன், சரியாக ஒரு ஆண்டில் மீண்டும் அழைத்தாள், கிட்டதட்ட இரு ஆண்டுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். இந்த முறை அவளை எப்படி தவிர்பது என்று நினைத்து யோசித்தேன். "Madam, I am going back to india permanently, I am sorry, I cannot signup for any policy" கொஞ்சம் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிந்தது, தொழில் தானே, அதன் பிறகு அவள் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை, மீறி தொடர்பு கொண்டாலும், "I came from India only on last week, I will stay here only for another 2 months" என்று சொல்லலாம் என்றே நினைத்திருக்கிறேன். இதுவரை அவளும் அழைக்கவில்லை. ஒருவேளை எனது கைபேசி எண்ணை அவளது பட்டியலில் இருந்து நீக்கி இருக்கலாம். இதுபோன்ற முகவர்களிடம் பட்டென்று முகத்தில் அடித்தது போல் சொல்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை, ஆனால் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை.

நல்லவேளை நான் தப்பித்தேன், அவள் முன்மொழியும் வங்கியும் தற்பொழுது திவாலாகி இருக்கிறது, சென்ற ஆண்டு வேறொரு முகவரிடம் வீட்டு பாதுகாப்புக்காக (ஏற்கனவே வேறொரு நிறுவனத்தின் வீட்டு பாதுகாப்பு பத்திரம் House Protection Scheme (HPS) ஒன்று இருக்கிறது) உபரியாக அதே நிறுவனத்தில் 180 டாலர் வரை ஆண்டுத் வைப்புத் தொகையாக கட்டியது ஸ்வாகாதான், பெரிய நட்டமில்லை. 100,000 டாலர் வரை காப்புறுதி வாங்கி இருந்த பல முதியவர்கள் மனம் ஒடிந்து இருக்கிறார்கள். கிணற்று தண்ணீரை ஆற்றுவெள்ளம் அடித்து போகுமா என்று பேச்சு வழக்கு உண்டு சிறுக சிறுக சேமிக்கும் பலரது சேமிப்பை நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி என்னும் சுனாமி அப்படியே விழுங்கிவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்டக் கதையாக அரசு சார்ந்த நிறுவனங்களில் காப்பீடு செய்யாமால் நிறைய சலுகைகள் என்ற ஆசையில் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

சிறுக சிறுக சேமித்து இப்படி ஒரே தடவையில் மாயமாகப் போவதற்கு பதில் 'இருக்கிற வரை Enjoy பண்ணுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் சென்று, வரும் காலத்தில் சேமிக்கும் பழக்கம் ஒழிந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை :(

பிறக்காத குழந்தையின் ஜாதகம் !

சிங்கையில் மிகவும் வியப்படையும் வாழ்க்கை முறையில் கர்பிணி பெண்கள் குழந்தை பெறும் முந்தைய நாள் வரையில் வேலைக்குச் செல்வது தான். காரணம் அவ்வளவு சிறப்பானது இல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், கற்பகாலத்தின் முதிர்ந்த நாள்களில் வீட்டில் இருந்தாலும் ஒத்தாசைக்கு யாரும் இருக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக பலர் பார்வையில் அலுவலகத்திற்குச் சென்று வந்தால், ஓரளவு மன துணிவுடன் இருப்பார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிலும் பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் மிகக் குறைவு காரணம் பெற்றோர்களின் வயது முதல் பல சூழல்கள். எனவே மகப்பேற்றிற்கு மனைவியை இந்தியாவிற்கு அனுப்பாதவர்கள் தவிர்த்து அனைவரின் நிலையும் பரிதாபமானது தான். இவ்வளவு துயரமும் நல்லவற்றையும் தருகிறது, கணவன் செய்யும் ஒத்தாசைகள், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை இருவரும் புரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைத்திருக்கும்.

வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்பதை விருப்பம் இருந்தால் அறிந்து கொள்ளலாம். அது சட்ட எதிரானதும் அல்ல. அப்படி தெரிந்து கொள்ளும் போது குழந்தைக்கு பெயர் வைப்பது முதல், முதல் குழந்தையாக இருந்தால் அதனை வளர்க்கும் முறைகளெல்லாம் கற்பக் காலத்தில் அறிந்து கொள்வார்கள். ஆண் / பெண் பாகுபாடு இல்லாததால் என்ன குழந்தைகள் தெரிந்து கொண்டு எவரும் மனம் உடைந்து போவதும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தை பிறக்கும் வரை மற்றவர்களுடன் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குழந்தையைக் கொடுப்பது கடவுள் என்ற நம்பிக்கையில் இருக்கும் நம் தேசத்தவர்கள் தான் பெண்குழந்தை என்று அறிந்து கொண்டால், அதை கருவிலேயே அழிக்கவும் அல்லது பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றவோ, குப்பைத் தொட்டியில் போடவும் துணிவு உள்ளவர்கள். நம் நாட்டிற்கு பிறக்கும் முன் ஆண் / பெண் பால் அறிந்து கொள்வதை தண்டனைச் சட்டமாக வைத்திருப்பது மிகச் சரியே.

குறிப்பிட்ட மருத்துவ மனையில், குறிப்பிட்ட மகப்பேறு மருத்துவரிடம் தான் மாதப் பரிசோதனை முதல் மகப்பேறு வரை செல்வதே எந்த நாடாக இருந்தாலும் நடைமுறை. நாங்களும் அவ்வாறு இந்திய மருத்தவ பெண்மணியிடம் ஆலோசனைக்குச் சென்றுவந்திருக்கிறோம், சரியாக குழந்தை பிறக்குப் போகும் 3 வாரத்திற்கு முன்பு சென்று அவரை அலோசனைக்காக சந்தித்த போது, 'நான் பதினைந்து நாளில் வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்குச் செல்கிறேன், அடுத்த வாரம் டெலிவரி செய்துடலாமா ?' என்று கேட்டார். மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் வியப்புடன் அச்சத்துடன் மாறி மாறி பார்க்க, 'இருவாரங்களில் செயற்கைத் தூண்டலின் வழி குழந்தை பிறக்க செய்ய முடியும்... நான் உங்களை அவசரப்படுத்தவில்லை, உங்களுக்கு இயற்கைகையாக வலி எடுத்து பிறக்கும் நாளில் குழந்தை பிறக்க உதவியாக வேறொரு மருத்துவரை வேண்டுமானால் பரிந்துரைக்கிறேன்...நீங்கள் யோசித்து சொல்லுங்கள்... எனக்கு உங்களின் மருத்துவ ஹிஸ்டரி முழுவதும் தெரிவதால் முன்கூட்டியே நானே மகப்பேறுக்கு உதவி செய்கிறேன்..." என்றார். நாங்கள் இருவரும் வெளியே வந்து யோசித்துப் பார்த்தோம்., கடைசி நேரத்தில் வேறு மருத்துவரை நாடவும் ஒப்புதல் இல்லை. இரண்டாவதாக சரியான நேரத்திற்கு குழந்தை பிறக்கும் முன் வலி எடுக்கும் போது மருத்துவ மனைக்கு அழைத்து வரவதற்கு ஆள் இல்லை என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது, முடிவு செய்து...செயற்கை தூண்டுதல் வழியாக மருத்துவர் சொல்வது போல் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மருத்துவரிடம் சரி சொல்லிவிட்டோம். அந்த வாரத்திலேயே என் அம்மாவும் சிங்கை வர. மருத்துவர் சொன்ன அந்த நாளில் மருத்துவமனையில் மகப்பேற்றிற்காக மனைவியைச் சேர்த்தேன். குழந்தை சரியாக திரும்பி இருந்தாலும் குழந்தை பிறக்கும் கடைசி நிமிடம் வரை வழக்கமான பிறப்பா, அறுவை சிகிச்சை வழியாக பிறப்பா என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலையில் செயற்கை தூண்டுதலுக்காக கொடுத்த மருந்துகள் மாலை 4 மணிக்குத்தான் வேலை செய்ய ஆரம்பித்து வலி எடுக்க ஆரம்பித்து நல்லிரவு தாண்டியே பிறந்தது.

வெளிநாட்டில் இருக்கும் ஆண்களுக்கு மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும், நானும் அவ்வாறு எனது மகள் பிறக்கும் போது அருகில் இருந்திருக்கிறேன். பிரசவ வேதனை என்று சொல்வதை ஆண்கள் உணர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பு. வலி தெரியாமல் இருக்க உடலை வளைத்து முதுகு தண்டுவடத்தில் ஊசி ஏற்றி.....அதையும் மீறி எடுக்கும் வலியில் பெருகும் கண்ணீரும், வேதனையான கூப்பாடும் அருகில் இருக்கும் கணவன் அறிந்து கொள்ளும் போது அடுத்த ஓர் ஆண்டுக்குள் இன்னொரு குழந்தைக்கு எந்த கணவனும் ஆசைப்பட்டு மனைவியை தொல்லை படுத்த மாட்டான். அதுமட்டுமல்ல... குழந்தை வெளியே வரும்போது வழி குறுகலாக இருந்தால் நேரம் மிகுந்து எடுக்கும், குழந்தைக்கு எதும் நேர்ந்துவிடலாம் என்று அதைத் தவிர்க்க பிறப்பு உறுப்பின் கீழ் பகுதியை ஒரு அங்குலம் அளவிற்கு கத்திரிக்கோளால் வெட்டிவிடுவார்கள், பீறிட்டு அடித்து குளமாக தேங்கும் இரத்ததையோ, வெட்டியதையோ அறியமுடியாத அளவுக்கு, பெண்கள் அதைவிட பெரிய வலியை தாங்க முயன்று கொண்டி இருப்பார்கள். வெட்டிய கீழ் பகுதியை குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே மருத்துவர் தைத்துவிடுவார். அது குணமாக ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எல்லா நாட்டிலும் 50 விழுக்காட்டிற்கு பெண்களுக்கு மகப்பேறின் போது பிறப்புறுப்பில் கத்தரிவெட்டு விழுவது நடைமுறைதான். அப்படி நடப்பதை பெண்கள் ஆண்களிடம் சொல்வது கிடையாது, மிகவும் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் விழுக்காட்டு அளவில் 20 விழுக்காடு கூட இருக்காது.


********

தலைப்புக்கு வருவோம்,

கொடுப்பினை (அதிர்ஷ்டம்) என்பதே எதிர்பாராமல் நிகழ்வதுதானே, பிறந்த நேரத்தை வைத்துத்தான் ஜாதகங்கள் எழுதப்படுகிறது. அதிர்ஷ்டத்தை தனது வாரிசுகளுக்கு ஆக்கிக் கொள்ள இப்பொழுதெல்லாம் பெற்றோர்களே குழந்தை பிறக்கும் நேரத்தையும் தீர்மாணிக்கிறார்கள், இந்த கூத்தெல்லாம் இந்தியாவில் தான் நடக்கிறது, இதற்கு மருத்துவர்களும் முழு ஆதரவு என்பதை நினைக்கும் பொழுது மருத்துவத் தொழிலின் புனிதம் கூட கேள்விக் குறியாகிறது. சரத்குமார் - ராதிகா தம்பதிகள், தங்கள் பெற்ற குழந்தைக்கு நாடாளும் ஜாதக நேரத்தை ஜோதிடர்களுடன் ஆலோசித்து, சரியான நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்களாம். தமிழ்நாட்டில் முதன் முறையாக(?) அடுத்த காமராஜர் ஆட்சி சரத்குமாரின் மகன் தான் தலைமையில் ஏற்படுமோ ?

குழந்தை பிறக்கும் நேரத்தையும், நாளையும் மனிதர்கள் தீர்மாணிக்கும் அளவுக்கு சென்று விட்ட காலத்தில், ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் ஜாதகம் எந்த அளவுக்கு சரி ? பிறந்த பிறகுதான் ஒருவரின் ஜாதகமே பலனுக்கு வருகிறது என்று சொல்லப்படுவதால், பிறக்காத குழந்தைக்கு பிறக்கும் நேரத்தை மனிதர்களே முடிவு செய்து கொள்வதால், 'இந்த நேரத்தில் தான் இந்த குழந்தை பிறக்கும்' என்பது யாருடைய ஜாதகத்தில் எழுதப்பட்டு இருக்கும் ?

14 அக்டோபர், 2008

ரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூபித்துவிட்டார் !

//ரஜினி சொல்கிறார் : அண்டை மாநிலங்களில் சக நடிகர்கள் சிலர் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்களுக்கும் அம்மாதிரி ஆசைகள் எழுவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது அரசியலில் ஈடுபடும் ஆசையுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுங்கள்.

அதை விடுத்து, என் பெயரில் கட்சி ஆரம்பிப்பதோ, என் உருவப் படத்தை அதில் பயன்படுத்துவதோ தவறு. இதை மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
//

ரஜினி நினைத்தால் விரலசைவில் ரசிகர்களை வைத்தே கோட்டையை பிடிக்க முடியும், செய்தாரா ரஜினி ? அவர் தான் ரஜினி. தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை இதைவிட எளிதாக யாராலும் சொல்ல முடியுமா ? நேற்று நடிக்க ஆரம்பித்த பிஸ்கோத்து பசங்களெல்லாம் நான் தான் நாளைய முதல்வர் என்கிறார்கள், கடந்த 30 ஆண்டுகளாக திரையுலகை ஆண்டுவரும் மன்னன் ரஜினி, தான் வருங்கால முதல்வர் என்று ஒரு படத்திலாவது சொல்லி இருக்கிறாரா ?

பக்கத்து மாநிலத்தைப் பார்த்து ரசிகர்கள் கட்சி ஆரம்பிக்க நினைப்பதன் உணர்வுகளைப் புரிந்து கொண்டே, ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம், மறைமுகமாக 'பதவிகள் இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும்' என்பதையே இப்போதும் புரிய வைக்க முயல்கிறார்.

தன்னுடைய ரசிகர்களின் அரசியல் ஆசையை நிராகரிக்கவில்லை, விருப்பமுள்ளவர்கள் விருப்பமான கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஆசிர்வதிக்கிறார், இதைப் போல் வேரறெந்த நடிகனும் தங்கள் ரசிகர்களின் விருப்பத்தை மதித்துப் பேசுபவர்கள் இருக்கிறார்களா ? தன்னை வைத்து கட்சி ஆரம்பித்தால் சட்டபடி நடவடிக்கை என்று சொல்வது கூட அன்பினால் தான். மென்மையாகச் சொன்னால் தன்மீது உள்ள அன்பினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதற்காகத் தான் சொல்கிறார் என்பதை நேற்று தான் ரஜினி ரசிகரான சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் உண்மையான ரசிகனாக இருந்தால் உடனே புரிந்து கொள்வான்.

முத்தாய்ப்பாக தனது பலம் தனக்குத் தெரியும், என்னைக் கட்டுப்படுத்த எவரும் பிறக்கவில்லை என்பதை எவ்வளவு தெளிவாகச் சொல்கிறார். அதே சமயம் தான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாகவே சொல்கிறார்கள். இது தான் ரஜினி. ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் தாண்டி, அவர் ஒரு சிறந்த ஆன்மிக வாதி என்பதையும் காட்டும் வரிகள். இது போன்ற தலைமையைத்தான் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் ரஜினியிடம் எதிர்ப்பார்க்கிறான். இப்பொழுது சொல்லுங்கள் ரஜினி பதவி ஆசைபிடித்தவரா ? ரஜினி ரசிகர்கள் கண்மூடித்தனமாக இருப்பவர்களா ?

பின்குறிப்பு : ரஜினியின் அறிக்கை அவரது ரசிகர்களால் (டிக்ஸ்னரி போட்டு) எப்படி புரிந்து கொள்ளப்படும் என்று கற்பனையாக நினைத்துப் பார்த்தேன், வெறொன்றும் இல்லை. சின்ன ரஜினி கிரி சிங்கை திரும்பியதைத் தொடர்ந்து இந்த பதிவை அவருக்கு அன்பாக அளிக்கிறேன்.

"மந்திரமாவது நீறு" - எனது பொருள் விளக்கம் !

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச் சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. - தமிழ்விக்கிப் பீடியாவில் ஞானவெட்டியான் ஐயா சைவ மேற்கோள் காட்டி சிறப்பான விளக்கம் எழுதி இருந்தார்

திருநீறு செய்வதற்கு மாட்டு சாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ? என்பது வேறொரு சிறப்புக் காரணமாக அந்நாளில் கால்நடை செல்வங்கள் மிகுதியாக இருந்திருக்கிறது, அதுவும் உழவுத் தொழில் முதல், அன்றாடம் அருந்தும் பால்வரை 'ஆ' க்களின் துணையின்றி அமைந்தது இல்லை. காளையைவிட பசுவின் சாணமே தெய்வீகமாகப் போற்றப்பட்டதற்குக் காராணமாக பால் கொடுக்கும் தாய்மை உடையது பசு என்ற காரணமாக இருக்கலாம்.

சைவம் வளர்வதற்கு முன்பு அதாவது களப்பிரர் ஆட்சிக்காலத்திற்க்கு முன்பு 'திருநீறு' அணியும் வழக்கம் பரவலாக இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. விக்கிப்பீடியாவில் திருநீற்றின் காலம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனினும் சைவம் தழைத்தப் பிறகே இவை பரவலாக வழக்கத்திற்கு வந்திருக்கிறது, இந்து சமய வடநாட்டினர் திருநீறு அணியும் பழக்கம் தற்காலத்திலும் கூட உடையவர் அல்லர், அவர்கள் சந்தனம், குங்குமம் போன்றவற்றைத் தான் பயன்படுத்துகிறார்கள்

இந்திய சமயங்கள் அனைத்திலுமே 'ஆன்மா' என்ற நம்பிக்கையும் அது நெற்றியில் புருவ மத்தியில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் உண்டு, இதன் காரணாமாகவே நெற்றியில் சமய நம்பிக்கைச் சின்னமாக திலகம் இட்டுக் கொள்ளுதல், திருநீற்றுப் பட்டைகள், நாமக் கோடு, அதன் நீட்சியாக U,V என பரிணமித்து இருக்கிறது.

அனைத்தும் கடவுள் என்ற நம்பிக்கையில் சந்தனம் இருக்க வேண்டிய நெற்றியில் சாணியை (எரித்து) பூசுகிறார்கள். விபூதியில் விஞ்ஞானம் இருக்கிறது, அதற்காக பரிந்துறைக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லுகிறார்கள், அது உண்மையாக இருந்தாலும், இன்றைய தலைவலி தையலங்கள் கொடுக்கும் உடனடியான பலனுக்கு இணையான பலன் அதில் இருக்குமா என்பதில் எனக்கு ஐயமே. அதை பக்திப் பெருக்குடன் அணிந்து கொண்டவர்கள் மாட்டு சாணத்திற்கு கொடுத்த மரியாதையை சக மனிதனுக்குக் கொடுத்தார்களா என்றும் பார்பது நலம், அணிந்து கொள்பவர்களுக்கு மன அளவில் கூட எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத திருநீற்றின் மகிமை என்ன வென்று அடியேனுக்கு புரிவதே இல்லை.

திருநீறு அணிவதால் வரும் என சொல்லப்பட்ட பலன்கள்: தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்து பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். (இந்த பத்தியை நான் எழுதவில்லை)

இன்றைய பலன்கள் : அணிந்து கொண்டால் பக்திமான் என்ற தோற்றம் கிடைக்கும், இவன் திருடனா, கொள்ளைக்காரனா, கொலைகாரனா, மற்ற பாதகங்களைச் செய்யக் கூடியவனா என்று உடனே அறிந்து கொள்ள முடியாது. குற்றங்களில் இருந்து மறைத்துக் கொள்ள சிறு உதவியேனும் செய்கிறது. பழனி போன்ற சைவத் திருக் கோவில்களில் பெரும அளவில் விற்கக் கூடிய, லாபம் ஈட்டும் நல்ல விற்பனைப் பொருள். நுணுக்கமான துகள்களாக மாற்றி விரலிடுக்கில் ஒளித்து வைத்துக் கொள்ள வசதியாக இருப்பதன் மூலம், காற்றிலிருந்து விபூதி வரவழைக்கும் மேஜிக் செய்து அற்புதம் நிகழ்த்த எளிதாக இருப்பதால் இக்காலத்திற்கும் ஏற்றவாறு 'மந்திரமாவது திருநீறு' என்ற சமயக்கருத்தின் பொருள் மிகச் சரியாக பொருந்தி வருகிறது.

13 அக்டோபர், 2008

வீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' ?

தலைப்பைத் தொட்டுத்தான் இந்த பதிவு, திருமணம் ஆகி அடுத்த மாதத்தில் மருமக(ள்) வாந்தி எடுக்கவில்லை என்றால் இப்பொழுதெல்லாம் உடனே மலடி பட்டம் கட்டுவதில்லை என்றாலும், 2 - 3 மாதம் சென்று 'என்ன ஆச்சு ...?' என்று கேட்பது நடப்பில் தான் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது கடமை என்று நச்சரித்து திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் (பயலும் வேண்டாம்... வேண்டாம் என்று ஒப்புக்குச் சொல்வதும் உண்டு) அதன் பிறகு, எத்தினி நாளைக்குத்தான் சுவற்றை வெறித்துப் பார்பது, எங்களுக்கும் பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுக்கக் கூடாதா ? என்று கேட்க ஆரம்பித்து அனத்த ஆரம்பிப்பார்கள், முக்கால் வாசி பெற்றோர்கள் 'பேரனை'ப் பெற்றுக் கொடு என்றே கேட்பார்கள். [எனக்கு விளங்காதது ஒன்றே ஒன்று தான், மகன் / பேரன் வேண்டும் என்று விரும்புவர்களுக்கெல்லாம் அவனுக்கு மனைவியாக ஒரு பெண்ணைத்தானே தேர்ந்தெடுப்பார்கள், எவனாவது இளிச்ச வாயன் நிச்சயம் மகனுக்கான பெண்ணை பெற்றுக் கொள்வான் என்று நினைக்கிறார்களோ? :) ..... ]

இப்போதெல்லாம் திருமண வயது, பெண்களுக்கு 25க்கு மேல், ஆண்களுக்கு 30க்கும் மேல் என்றாகிவிட்டது. திருமணத்தின் போது மணமகன்களில் பலர் எல்லாவற்றையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். சூழல்காரணமாக திருமணம் செய்துகொள்ளும் இந்த வயதினர் கூட தங்களுக்குள் புரிந்துணர்வையும், இல்லத்தைநடத்தும் பக்குவத்தையும் பெற ஓர் ஆண்டாவது ஆகும். பெரும்பாலும் இந்தவயதினர் வயதின் காரணமாக உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதுண்டு. இதில் குறை சொல்லவோ, நிறை சொல்லவோ ஒன்றும் இல்லை, முழு இல்லவாழ்க்கை என்பது குழந்தை(கள்) இன்றியமையா(த)து.

ஆனால் ஓரளவு இளம் வயதில் மணம் முடிக்கும் 21 - 29 வயதுக் காரர்களை யெல்லாம் உடனேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது அவ்வளவு சரியான செயலே இல்லை, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவது தான் நல்லது. முதலில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவேண்டும், அவர்கள் இருவருக்குமான மகிழ்ச்சியையும், நெருக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இரு ஆண்டுகளாவது வாழ்ந்தால் தான் அது அவர்கள் இருவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையாகவும் அது இருக்கும், குழந்தை பிறந்துவிட்டாலே நமது இந்தியர்கள் தியாகிகள் ஆவது இயல்புதான் அது தவறாகவும் தெரியவில்லை [இப்பெல்லாம் நிறைய டிஸ்கி போடாமல் எழுதவே முடியல :)], ஆனால் அதற்கு முன்பு இருவருக்குமான வாழ்க்கையை கொஞ்சகாலமாவது வாழ்ந்து இன்புற்று இருக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கான தனிமை, அவர்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் முடித்த பிறகுதான் கிடைக்கும்.

என்னைப் பொறுத்த அளவில் 30 வயதைக் கடந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள்ளும், அதற்கும் கீழே உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களின் முழுவிருப்பத்துடன் யாருடைய வற்புறுத்தலுமின்றி குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் பெற்றோர்களுடன் சேர்ந்து நண்பர்களும், வீட்டில விஷேசம் 'உண்டா ?' என்று டார்சர் செய்கிறார்கள், என்று அண்மையில் மணம் முடித்த ஒரு நண்பர் புலம்பினார்.

நண்பரின் புலம்பல் ஞாயமானதா ? இளம் வயது இணையர்கள் (தம்பதிகள்) குழந்தை பெற்றுக் கொள்வதில் விரைவு(அவசரம்) காட்டச் சொல்லி பெற்றோர்களோ, நண்பர்களோ தலையிடுவது ஞாயமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்