குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குவது 5 வயதில் இருந்து தொடங்குகிறது. அதற்குத் தெரிந்து பெற்றோர்கள் பொய் சொன்னால், நாமும் சொல்லலாம் என்பதாக முடிவு செய்து கொள்ளும். முதலில் அடிக்கு பயந்து சொல்லும் பொய்களை பிறகு தவறுகளை மறைக்க சொல்லத் தொடங்கும், 8 வயதில் பொய் சொல்லி தவறுகளை மறைக்க முழுமையாகக் கற்றுக் கொள்ளும். இவை தெரியாமல் 'பொய் பேசுவியா ?' என்று கேட்டு கடுமையாக குழந்தைகளை தாக்கும் பெற்றோர்கள் உண்டு.

"அப்பா என்னை அடிக்கலாம், அப்பாவை நான் அடிக்கக் கூடாதா ?" எதிர்த்துக் கேட்கும் குழந்தைகள் அவ்வாறு அடிக்கும் போது அவமானம் அடைந்ததாக நினைத்து உடனடியாக கை நீட்டிவிடாதீர்கள். பாதிப்பு அடையும் செயலுக்கான எதிர்வினை ஆற்றவேண்டிய அறிவை அவை பெற்றிருப்பதாகவே பொருள். குழந்தைகளின் செயலில் ஏற்பு இல்லை என்றால் பொருமையாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள், எளிமையாக தேவையான தகவல்களை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டால் குழந்தைகள் கற்பூரம் போல் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். வாங்கி வைத்திருக்கும் பொருள் நமக்குத் தான், கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று குழந்தைகள் உறுதியுடன் நம்பினால் அந்த பொருள்களை திருடும் பழக்கம் கூட அவைகளுக்கு ஏற்படாது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. கிடைக்காது என்கிற நிலையும் ஏக்கமும் தான் குழந்தைகள் திருடப் பழகுவதற்குக் காரணமாக அமைகிறது
உங்கள் குழந்தைகள் பொய் சொன்னாலோ, திருப்பி அடித்தாலோ உங்களுக்கு சினம் வருவதற்கு முன், உலகில் எதிர்த்து நின்று வாழ்வதற்கான அடிப்படை அறிவை குழந்தைகள் பெற்றுருக்கிறார்கள், தெரிந்து கொண்டுள்ளார்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள், அதன் பிறகு அப்படி பேசுவது, அடிப்பது ஏன் தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் எப்படியான அறிவு வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதே அவைகளின் நடவடிக்கை மூலம் வெளிப்படுகிறது.