பின்பற்றுபவர்கள்

சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 பிப்ரவரி, 2012

உலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை !

கிபி 2551 அறிவியல் உலகம் தன் உயரத்தை எட்டி இருந்தது, யாரும் வேலைக்குச் செல்லத் தேவை இல்லாமல், அனைத்தையும் ரோபோக்களே கவனித்துக் கொண்டிருந்தன, விவசாயம் முதல் வாகனங்கள் ஓட்டுவது வரை ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன, அரசு அமைப்புகள் பல்வேறு இனங்களையும் மனிதர்களையும் போதிய அளவு பாதுகாத்தால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ற உற்பத்தையை மட்டும் அனுமதித்து அல்லது செய்து வந்தன, முன்பெல்லாம் அலுவலகம் சென்றுவருவார்கள் என்பதை ஆவணங்கள் பார்த்து மக்கள் தெரிந்து கொண்டனர். உண்ணுவதும், உறங்குவதும் விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதும் தான் பொழுது போக்கு, திரைப்படங்களும் ரோபாக்களால் உருவாக்கப்பட்டு அதில் மனிதர்கள் நடிப்பது போன்றும் பல்வேறு கதைகளாக நகைச்சுவை, சண்டை, பாரம்பரிய படங்கள் எடுக்கப்பட்டன, அனைத்தும் இலவசம் தான்.

ஒரு படத்தைப் பற்றிய முன்னோட்டங்களும், அதனைப் பார்த்தவர்களின் விமர்சனம் வைத்து படம் பார்க்க விரும்புவர்கள் தேர்ந்தெடுக்கலாம், அவற்றை திரையிட்டும் பார்க்கத் தேவையில்லை, படத்தின் சில்லை கண்ணியில் பொருத்தி அதன் முன் அமர்ந்தாலே படத்திற்கு ஏற்றவாறு முப்பரிமானம் மற்றும் நான்கு பரிமாண முறையில் பார்த்துவிட்டதாக மூளைக்குள் உணரவைக்கப்படும், ஒரு படம் பார்க சில வினாடிகளே என்ற வகையில் அசதியாக இல்லை என்றால் ஒருவர் மூளையின் திறனுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஐம்பது படங்களைக் கூட பார்த்துவிடும் திறன் பெற்றிருந்தனர். திரைப்படம் மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள், இசை ஆகியவையும் கூட கணிணிகளால் தானியக்கமாக உருவாக்கப்பட்டு அவை மெய் நிகராக விரும்பியவர்கள் சில விநாடிகளில் நேரிடையாக பார்த்த அனுபவங்கள் கிடைக்கும் படியான அறிவியல் வளர்ச்சிகளில் வாழ்ந்தனர்.

மனித உற்பத்திக்கு திருமணம் தேவை இல்லை என்ற அடிப்படையில் எவரும் திருமணம் செய்தி கொள்ளாமல் பெற்றோர்களே இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவர்களாகவும் தனித்து வாழ்பவர்களாகவும் இருந்தனர், ஓரளவு மன வளர்ச்சி எட்டியவுடன் உருவ இன அமைப்பிற்கேற்ற மொழிகள் அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டு வெளியே அனுப்பட்டு அங்கங்கே வாழ்ந்து வந்தனர், தகவல் பரிமாற்றம் மற்றும் பேசிக் கொள்ள மொழிகளின் இணைப்பு தேவையின்றி ஒருவர் ஒரு மொழியில் தேவையான போது பேச மற்றவர் தாம் அறிந்துள்ள மொழியில் அதனை புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் காதுகளின் பொருத்தி இருந்த கருவிகள் உள்வாங்கி மொழி மாற்றி கேட்கும் படி உதவி செய்தன.

மனித உடலின் அடிப்படை உந்துதலான பாலியல் தேவைக் கூட தேவையின் போது அதை அடைந்துவிட்டதாக மூளையில் உணரவைக்கபப்டும் கைக்கடிகாரங்கள் எல்லோரிடமும் இருந்தது, அழகு ஈர்ப்பு என்ற சொல்களெல்லாம் மறைந்து போக எவரும் எவரையும் சார்ந்து வாழாத நிலைதான்.

ஒருவரின் அன்றாட வேளைகள் என்பது காலை எழுந்து காலைகடன் உள்ளிட்டவைகளை முடித்து உணவு உண்பது மற்றும் முழுக்க முழுக்க பொழுது போக்கு பின்பு உடல் அசந்தால் தூங்குவது என்பது மட்டுமே. இதைத் தவிர்த்து மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பற்கு வேறு வேலைகள் இல்லாமல் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்து வந்தன. மனிதர்களுக்கு நேரங்கள் மிகுதியாகவே கிடைத்தன, ஜீன்கள் சரிசெய்யப்பட்டு எழும்புத் தேய்மானத்தில் உடல் தளர்வுரும் வரை ஆயுள் 120 ஆண்டுகள் என்று வாழ்ந்தனர். அவர்கள் இறந்த பின்னும் கூட அவர்களின் மூளையை செயல்படுத்தி அவர்களின் அறிவுக்கூறுகள், அனுபவங்கள் ஆகியவைகள் ஆவணங்களாக சேமிக்கப்பட்டன

மனித வாழ்க்கை என்பது உண்ணுவது ஊர் சுற்றுவது, ஓய்வெடுப்பது மற்றும் பொழுது போக்குவது என்பதாக மட்டுமே இருந்தது, வெளியே செல்வது என்பது சுற்றிப் பார்க்க மட்டுமே என்ற நிலையில் விரும்பியவர்கள் சென்றுவந்தனர், விரும்பாதவர்கள் மெய்நிகராக அந்தக் காட்சிகளை சில்லுகள் மூலமாக உள்வாங்கிக் கொண்டிருந்தனர், சிலர் விலங்குகளை வளர்த்து பொழுது போக்கினர். மனிதர்களும் எந்திர மனிதர்களுக்கும் மன அளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது, பணம் ஈட்டுவதற்கான தேவை என்பதே அன்று இல்லை. உள்நாட்டு, வெளிநாட்டு போர் மற்றும் அதற்கான தேவை எதுவுமே இல்லை. வேற்றுகிரகவாசிகள் ஊடுறுவினால் அதை அழிப்பதற்கு ஏராளமான கருவிகளின் தாயார் நிலையில் அவைகள் இருந்தன. சூரிய குடும்பக் கோள்கள் அனைத்திற்கும் ரோபக்கள் அனுப்பப்பட்டு கோள்களையும் வேற்று கிரகவாசிகளின் ஊடுறுவல் கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

மாசுக்கட்டுப்பாடு, புவிவெப்பங்கள் கூட கட்டுக்குள் தான் இருந்தன, ஆனாலும் இயற்கைச் சீற்றம், நில அதிர்வு ஆகியவற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை. எதோ ஒரு நாள் தொடர்ச்சியான விண் கற்கள் மற்றும் சூரிய தீப்பிழம்பு பொழிவால் அனைத்து மின்னனு கருவிகளும் செயல் இழக்க, புவி எங்கும் நெருப்புப் பிழம்புகள் அதன் கட்டுக்கடங்காத வெப்பம் மனிதர் உட்பட அனைத்தும் மடிந்தன, அழிந்தன, எரிந்து சாம்பல் ஆகின அடுத்து தொடர்சியாக மழை பொழிந்தது

மீண்டும் கற்காலம் துவங்கியது

********

பாத்திரங்களே இல்லாமல் சிறு கதை எழுதமுடியும் என்று சிலர் முயன்று இருக்கிறார்கள். சுஜாதா கூட அப்படி ஒரு கதை எழுதி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ம(னி)த கற்பனை சொர்கம் கூட அறீவியல் வளர்ச்சியில் உச்சமடைந்த பூமியைப் போன்றது தான், வெர்ரி வெர்ரி ஃபோரிங்......அங்கே ரோபக்களுக்கு பதில் வேலை செய்ய சொர்க வேலையாட்கள் இருப்பார்கள் என்ற அளவில் தான் புரிந்து கொள்ளமுடிகிறது.

21 டிசம்பர், 2010

தங்கமணி இல்லை என்றால்... (சிறுகதை) !

மனைவி ஊருக்குச் சென்றதை அவள் வந்து சேர்ந்ததாக உறுதிபடுத்தியபிறகு தங்கமணி டயலாக்கை சத்தமாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் குமார்

'இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி' எடுத்த எடுப்பில் இராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு இராகவன் வீட்டில் குமார் ஆஜர்

கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது இராகவன் வீடு,

'என்ன இராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே.'

'போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யனுமா.....நாம செய்துவிடக் கூடாதா ?'

இராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர் தான்.

'உன்னைய மாதிரி இல்லை இராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெறுக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல'

'தெரியுமே....படுத்த படுக்கையைக் கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ' - இராகவன்

'அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது' என்கிற குமாரின் லாஜிக் 'சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா ?' என்றான் இராகவன்

'அவனவன் கஷ்டம் அவனவனுக்கு.......'

'போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா ?'

'மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல.....'

'எத வச்சிடா அப்படிச் சொல்றே......'

'நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......'

'பிறகு........?'

'நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க'

'அப்படியா சொல்றே......'

'ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக் கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்'

'அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும் பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா ?'

'மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கனும்னு உணர்த்துவது தான் இது'

'அப்படிங்கிறே.........?'

'தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு....'

'நீ சொல்றதும் சரிதான்ன்னு தோணுது'

'சந்தேமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு'


*****

மறுநாள் இராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.

'குமார், நீ சொன்னது உண்மை தான்....'

'பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது'

'சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி /ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்'

1 ஜூன், 2010

பூக்காரி !

தனத்தால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை, அவள் மகள் லஷ்மி இளம் விதவியாகி வீட்டோடு இருக்கிறாள், மகிழ்ச்சியை தொலைத்த சுவடுகளை முகம் காட்டி இருந்தாலும் அமைதியின் வடிவாக அலுவலகம் சென்றுவருபவள். தனம் மனதுக்குள் நினைத்து வருத்தப்பட்டாள்.

'என்கிட்ட சொன்னால் அவங்க அப்பாவிடம் சொல்லி மாற்று ஏற்பாடு பண்ணலாம்....ஆனால் எதையும் வெளியே சொல்லாமல் இப்படி செய்கிறாளே.....'

அன்னிக்கு கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த போது ல்ஷ்மி முன்னமே வந்து உடை மாற்றிவிட்டு அவளுடைய அறைக்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

'அம்மா நீயே பூவை எடுத்து சாமிக்கு வச்சிடேன்.....நான் இன்னிக்கு.... மூணு நாளைக்கு பூசை அறைக்கு போகமுடியாது.....'

மேசையில் இருந்து எடுத்து வைக்கும் போது தான் தனம் அதைப் பார்த்து பதறினாள், இன்றோடு மூன்றாம் நாள் சாமிக்கு வைக்கும் கட்டிய பூ.....அதில் நீள முடி... ஒருவேளை அவசர அவசரமாக எடுத்து தலையில் வைத்துவிட்டு எடுத்து வைத்திருப்பாளோ....என்றெல்லாம் நினைத்தாள். இந்த காலத்தில் விதவைகள் பொட்டு வைப்பது சகஜம் தான் என்றாலும்...லஷ்மி அந்த அளவுக்கு பக்குவப்படாதவளாகத் தான் இருந்தாள்.

நினைத்துப் பார்த்து மேலும் திடுக்கிட்டாள்.....'ஒரு நாள் என்றால் எதோ காற்றில் முடி பறந்து வந்து விழுந்துட்டு என்று நினைக்கலாம்.....ஆனா எண்ணிப் பார்க்கும் போது கடந்த மூன்று நாளாக பூவில் முடி... இது எதார்த்தமாக நடந்திருக்க வாய்ப்பில்லையே....' என்று நினைத்தவளாக

அவளிடம் கேட்டுவிடலாமா ? என்று தனத்திற்கு பதை பதைப்பாக இருந்தது.

அந்த காலத்தில் விதவைகள் திருமணம் ஆகாமல் வாழ்ந்துட்டாங்க....இப்ப அப்படி இருப்பது பாதுகாப்பும் இல்லை, ஆனால் இவ இப்போதைக்கு எதுவும் இது பற்றி பேச வேண்டாம் என்று சொல்வதுடன்.....மாமனார் மாமியார் வீட்டுக்கு சென்று அவர்களை அவ்வப்போது பார்த்தும் வருகிறாள்.

எல்லாம் சரி....தலையில் பூவைச்சுப் பார்க்கனும் என்று தோணும் போது இன்னொரு திருமணம் பற்றி நினைக்காமலா இருப்பாள்....எதுக்கும் கேட்டுவிட வேண்டியது தான்......இந்த வாரம் சனிக்கிழமை அதாவது நாளைக்கு அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டே அன்றைய வேலைகளை முடித்தாள்.

தனத்துக்கு அனறு இரவுக் கூட சாமிக்கு வாங்கிய பூவில் நீள முடி இருந்த காட்சி வந்து வந்து போனதுடன்.....மகள் மனதில் இருக்கும் ஆசை ஞாயமானது தான் நாமளே கூட அவளை பூ வச்சிக்கச் சொல்லி வற்புறுத்தி வேறொரு கல்யாணத்து சம்மதிக்க வைத்துவிட வேண்டியது தான்...என்று நினைத்தவளாக தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை வழக்கம் போல ஓடியது.......அன்று மாலை வழக்கமாக வரும் பூக்காரி பார்ப்பதற்கு கொஞ்சம் மாறுபாட்டு இருந்தாள் தலையில் துணியைச் சுற்றி மறைத்திருந்தாள்.

'என்ன....தங்கம்மா...தலையில் அடிகிடி பட்டுவிட்டதா.....'

'இல்லிங்கம்மா.... எல்லாருடைய வீட்டிலும் திட்டினாங்க.......தலையில் இருந்து கொட்டும் முடி பூக்கூடையிலும் விழுந்துடுது....பூவுல ஒன்றோ இரண்டோ முடி சேர்ந்துவிடுகிறது... அதான் தலையை துணியால் சுத்தி கட்டி இருக்கேன்'

'.... மக தலையில் வச்சப் பூவை சாமிக்கு போடும் படி ஆகிவிட்டதே... மகளின் பூ ஆசை ......இன்னும் என்ன என்னவோ கற்பனை செய்திருந்ததெல்லாம்......ஒரு நொடியில் முடிவுக்கு வர நிம்மதி பெருமூச்சு விட்டாள் தனம்.

'என்னம்மா கோவமா......இப்படி பெருமூச்சு விடுறிங்களே....'

'அது ஒண்ணும் இல்லை தங்கம்.....வேறென்னவோ நினைச்சேன்......அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு......விடு' என்று பூவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் தனம்.

சந்தன முல்லை பூ .....வாசம் நல்ல கமகம..... மீண்டும் மகளுக்கு பூச்சூடிப் பார்க்கும் ஆசை... அந்த பூக்களை பார்க்கும் போது தனத்துக்கு அந்த பூக்களின் வாசனையைப் போலவே பொறுப்புணர்வும் மனதுக்குள் மிகுதியாகிக் கொண்டு இருந்தது.

*******

பின்குறிப்பு : இந்த சிறுகதை எனது புனைவு அல்ல.......பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ படித்தது.....படிக்கும் போது மனதில் பாதிப்பு ஏற்படுத்தும் சிறுகதை என்னிக்கும் மனதில் நிற்கும் என்பதற்கு இந்த கதை எனக்கே ஒரு நல்ல எடுத்துக்காடு. இங்கே பதிவில் இச்சிறுகதையின் எழுத்துக்கள் என்னுடைய வடிவம் என்றாலும் புனைவின் கரு என்னுடையது அல்ல.

கதை பிடித்து இருந்தால் ஓட்டு குத்துங்க எசமான்.

30 நவம்பர், 2009

கண்ணாமூச்சு (சிறுகதை) !

கிண்டி ரயில்வே பாலத்துக்கு முன்பாக ட்டிட்ரு.........ட்டிட்டிட்ரு ஒலியுடன் ஆட்டோவினுள் பயணித்துக் கொண்டிருந்தேன். வேகம் குறைந்தது ஆட்டோ......முன்பாக எட்டும் தொலைவுக்கு வாகனங்கள் நிறைந்து காணப்பட்டது, சாலையின் மறுபுறம் எதிர்திசையில் வாகனங்கள் விரைவாக பயணித்துக் கொண்டிருந்தன.

'என்ன எழவுடா இது.... இந்த கூட்டத்தில் எப்படி நேரத்துக்கு ப்ளைட்டைப் பிடிக்கப் போறோமோ' என்று நினைத்துக் கொண்டே..."கொஞ்சம் வேகமாகப் போப்..ப்பா"

"இன்னா சாரே...நானா போவமாட்டேன்னு சொல்றேன்....இம்மாம் ட்ராபிக் ஆகிப் போயி கிடக்குது...செத்த இரு" என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் ஆட்டோ ஓட்டுனர்,

இருப்புக் கொள்ளாமல் மணியை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே..நகத்தைக் கடிக்க, சுற்றிலும் ஹாரன் சைரன் ஒலி..... புகை..பெட்ரோல் நாற்றம்.....அனைவர் முகத்திலும் எரிச்சல். திரும்பி வந்த ஆட்டோக்காரர்,

"சார்.....தந்திரன் பட சூட்டிங்காம்......ட்ராபிக் க்ளியர் ஆகாது போலருக்கு.....நான் உன்னை வேளச்சேரி வழியாக இட்னு போறேன்.....கூட ஒரு 200 போட்டுக் கொடுத்துடு"

'இதெல்லாம் கவர்மெண்டுல கேட்கவே மாட்டேங்களா...' தந்திரன் படப்பிடிப்புகாரர்களை சபித்துக் கொண்டே...

"உங்க காட்டுல தான்யா மழை....வேற வழி எப்படியோ சீக்கிரம் கொண்டு போய் விடு" என்றேன்

"இன்னா சார், நான் என்னமோ வேணுகினே ஒன்ணாண்ட துட்டு புடுங்கிற மாதிரி அலட்டிக்கிறே... எனக்கு வோணாம் சார்....எறங்கிப் போ"

'இதப்பாருடா...' என்று நொந்து கொண்டு......"சரி சரி போப்பா" என்றேன்

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து யூ டேர்ன் அடித்தவர் பெரிய சுற்றுக்கு பிறகு விமான நிலையத்தில் விட்டார். என்னைப் போலவே பலரும், பல வழிகளில் நேரம் தாழ்த்தியே வர....முனுகிக் கொண்டே விமான நிலையத்தில் அனுமதித்தார்கள்

*****

அங்கே சூட்டிங் ஸ்பாட்டில், உதவி இயக்குனர் மெதுவாக இயக்குனரிடம்

"டைரக்டர் சார்... ட்ராபிக் ஜாம்....சிஎம் கடுப்படிக்கிறாராம்....."

முகம் கருத்த இயக்குனர்

"யோவ்......இது என் வீட்டு படமாய்யா .... படம் நல்ல வரனுமா ? வேண்டாமா "

"சார் என்ன தான் இருந்தாலும், பொதுமக்கள் அவஸ்தை"

"என்னய்யா பண்ணுறது.....இரண்டு மணி நேரம் பர்மிசன் கேட்டோம்....ஆனால் நடிகை வர லேட் ஆகிவிட்டதேய்யா.....ஹிரோவே கடுப்பாக இருக்கிறார்......அவரிடம் போய் பேசு"

"சார்.....அவரிடமும் சிஎம் சார்ப்பாக பேசி இருக்காங்க போல....உம்முன்னு இருக்கார்"

"சரி சரி....செட்யூல் படி......இன்னும் 3 மணி நேரத்தில முடிஞ்சிடும்....ப்ரொடியூசர் ஆளுங்களிடம் சொல்லி சமாளிக்க சொல்லு"

"சரிங்க.....சார்.....என்னன்னு சொல்றது"

"எல்லாத்தையும் நானே சொல்லனுமாய்யா....நமக்கு காரியம் முடியப் போவுது, இனிமே இன்னொரு படத்துக்கு இங்கே இதே பாலத்தை நான் எந்த படத்திலும் காட்ட மாட்டேன்..."

"புரியுது சார்"

******

மறு நாள் காலை விமான நிலையத்தில் இருந்து திரும்பினேன். அதே பாலம் வழியாக, சீரான போக்குவரத்து, பாலத்தை விட்டு கிழே இறங்கிய ஆட்டோவில் இருந்தே பார்த்தேன்

வலது பக்கச் சுவற்றில்

"பொது இடத்தில் பகலில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்து, மக்கள் குறை போக்கிய மாபெரும் தலைவர் வாழ்க !" என்ற சுவரொட்டி, "இலங்கைத் தமிழர்களுக்கு நாளே நாளில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் வாழ்க !" என்று முன்பு ஒட்டப் பட்டிருந்த அதே இடத்தில் அதே சுவரொட்டி மீது ஓட்டப் பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் வாங்கிய அன்றைய ஆங்கில நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் இருந்த ஆங்கில செய்தி பாலத்தின் பெயரைக் குறிப்பிட்டு....பாலத்தில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை என்னும் அரசு தகவல்களுடன் நேற்றைய போக்குவரத்து நெரிசல் படத்துடன் செய்தியைப் படித்தேன்.

'அட உண்மையிலேயே நடவெடிக்கை எடுத்து இருக்கிறாங்க இல்லே' என்று நினைத்துக் கொண்டேன்.

பின்குறிப்பு : கதையும், நிகழ்வுகளும் 100 விழுக்காடு கற்பனையே !

2 நவம்பர், 2009

சர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) !

நேற்று இரவு 'டிஸ்கோத்தே பார்டியில்' க்ளாசுடன் போட்ட ஆட்டம் செந்தில்வேலனை காலை 9 மணி வரையில் அசதியில் கிடத்திவிட்டது, எழுந்து நேரம் பார்த்தான் 9.05. பதறி அடித்து கிளம்பிக்க் கொண்டே இன்னும் 45 நிமிட நேரத்தில் விமானத்தைப் பிடிக்க வேண்டும், கல்கத்தா செல்லும் காலை விமானம் அது ஒன்று தான். இல்லை என்றான் இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டும், அன்றைக்கு மதியம் கல்கத்தா அலுவலக கான்பிரன்சில் அவன் கலந்து கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான். இங்கிருந்து விமான நிலையம் செல்ல எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். எல்லா உடைமைகளையும் எடுத்துக் கொண்டு ஒரு ஓட்டல் பில் மற்றும் அனைத்தையும் நடைமுறைகளையும் முடித்து நகத்தைக் கடித்துக் கொண்டே பரபரப்புடன் வெளியே நடந்தான்.

*****

விமான நிலையத்தை அடைந்த போது விமான நிலையம் பரபரத்துக் கொண்டிருந்தது, அனைத்து விமானங்களும் காலதாமதமாக புறப்படுவதாக "பயணிகள் கவனிக்கவும்..." அறிவிப்புகள் காட்சி பெட்டிகளில் ஓடிக் கொண்டிருந்தனர். உள்ளே செல்லும் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக செய்தே அனுமதித்தனர். தான் செல்லும் விமானமும் தாமதமாக புறப்படும் என்கிற அறிவிப்பைப் பார்த்ததும் செந்தில் வேலனுக்கு மனம் நிம்மதியாக இருந்தது.

நுழைவாயில் செக்கியூரிட்டியிடம் விமானச் சீட்டைக் காட்டிவிட்டு உள்ளே சென்றான், அடுத்து உள் நுழையும் இடத்தில் போர்டிங் பாஸ் வழங்கும் இடத்தின் நுழைவாயில் அருகில் இருந்த காவலர் செந்தில் வேலனின் பயணச் சீட்டை பார்த்ததும் அதிர்ந்தவராக அவன் கைகளை அழுத்தமாகப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அப்படியே கண்டோர்ல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

"நீ ஏன் லேட்டு......."

ஒருமையில் உரிமை இல்லாக் குரல் அதிர்ந்தான்

"அது வந்து......."

அவர் அவன் குரலை உறுதிப் படுத்திக் கொண்டதும், டேப்பை ஓடவிட்டார்

செந்தில் வேலனின் கைகளை பின்பக்கமாக முறுக்கி பிணைத்துக் கொள்ள

"கல்கத்தா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கு..........."
பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் வேலனுக்கு கேட்டது

'வாயல பேசியதும் இல்லாமல், சிக்குவோம் என்று தெரியாமல்.....இப்படி வசமாக சிக்கி இருக்கக் கூடாது' நினைத்துக் கொண்டே, வேறு வழி இன்றி உண்மையை ஒப்புக் கொண்டவனாக

"விமானம் புறப்படுவதைத் தள்ளிப் போட முயன்று முன்யோசனை இல்லாமல் இப்படிச் செய்துவிட்டேன்.....என்னை மன்னிச்சிடுங்க..."

அவன் முகத்தில் விழுந்த குத்து அதற்கு மேல் அவன் பேசமுடியாமல் சுய நினைவை இழக்க வைத்தது.

18 ஆகஸ்ட், 2009

சரியாக ஒரு கொலை !

"சார்......உங்க உடல் நிலை பலவீனமாக இருக்கு... அதிர்ச்சி தரும் செய்திகள் கேட்பதை முடிந்தவரை தவிருங்கள்" என்று சொன்னார் அமைச்சர் அரு.செல்வராசுவை பரிசோதித்த மருத்துவர்

அமைசர் அரு.செல்வராசு ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர், அமைச்சர் துறையில் மட்டுமின்றி பிற துறைகளின் காண்ட்ரெக்டுகள் கூட அமைச்சரின் கண் அசைவில் அமைச்சர் சொல்லும் நிறுவனங்களுக்குக் கிடைத்துவிடும். முதல்வருக்கு மகன் இல்லை என்றால் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கும் என்று கூட கட்சியினர் பேசிக் கொள்வார்கள்.

"நான் எதிர்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன்....உங்களால் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியைக் கொடுத்துவிட முடியுமா ? எதற்கு ஊழல் செய்ய வேண்டும் ? மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கு.மு.க (குடிமக்கள் முன்னேற்ற கழகம்) தான். எங்கள் கட்சி கறைபடியாத கட்சி, எதிர்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது நடத்திய அரசியல் கொள்ளைக்காக கோர்ட் படி ஏறிவருகிறார்கள், பொது மக்களே.....ஏழைப் பெருமக்களே நான் உங்களைக் கேட்கிறேன்......எங்கள் கட்சி இதுவரை ஏதேனும் ஒரு ஊழல் வழக்கிலாவது தண்டனை பெற்றி இருக்கிறதா ? எங்கள் மூச்சும் பேச்சும்......."

என்று முந்தைய நாள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் மேடையில் மயங்கி விழுந்து, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனையில் முதல் உதவி பெற்று, தற்பொழுது மிகப் பெரிய மருத்துவமனையில், ஓட்டல் அறை போல் இருக்கும் பெரியதொரு குளிர்சாதன அறையில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறார்

***

அன்று மதியம்,

நடசத்திர ஓட்டல் ஒன்றின் அறையில்,

தொழில் அதிபர்கள் அண்ணன் வாசுதேவனும் , தம்பி இராமதேவனும்

"வாசு...நம்ம அமைச்சர் செல்வராசு மருத்துவ மனையில் மாரடைப்பால் சேர்த்திருப்பதாக நேற்றே மொபைல் கால் வந்ததே போய் பார்த்து வருவோமா ?"

"ம் எனக்கும் தெரியும்... அதற்கான ஏற்பாடுகளைத்தான் செய்து வருகிறேன்....."

"அமைச்சருக்கு நாம தான் பினாமி, நாமலே உடனடியாக சந்திக்காவிட்டால் ஒரு மரியாதை இருக்காதே அண்ணே"

"தம்பி......இது தான் சரியான சந்தர்பம்.....இதைப் பயன்படுத்திக் கொண்டால் நாம செட்டில் ஆகிவிடலாம்"

"புரிகிற மாதிரி சொல்லுங்க அண்ணே......"

"அமைச்சரோட டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் அவரோட ..... ஈசிஆர் ரோட்டு பங்களாவில் தான் இருக்கு, பங்களாவும் சொத்துக்களும் நம்ம பேரில் இருக்கு...."

"ஆமா..."

"நம்ம கிட்ட சொத்துக்கள் இருப்பதை அவரு புள்ளைங்க கிட்டக் கூடச் சொல்லவில்லை....ன்னு நாம மேல அவ்வளவு நம்பிக்கை இருப்பதாக பெருமையாக அடிக்கடி சொல்லுவாரு"

"ஆமா..."

"அவரோட சொத்தாக நம்மிடம் இருப்பவை சுமார் 500 கோடிங்கிற விவரம் நமக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும்"

"இப்ப நாம அவருக்கு அதிர்ச்சி கொடுத்தால்......போய் சேர்ந்துவிடுவார் சொத்துக்கள் நமக்குத்தான்"

"எப்படி செய்யப் போறிங்க......"

***

வாசுதேவன் வந்திருப்பதாகச் சொல்ல, உடனே சந்திக்கும் படி அமைச்சர் அனுமதி அளிக்க..
மருத்துவமனையின் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செல்வராசுவை தனிமையில் சந்திக்கிறார்...வாசுதேவன்

"ஐயா.......நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி அடைந்திடாதிங்க......நம்ம பங்களாவைப் பற்றியும் சொத்துக்களைப் பற்றியும் பிரபல வார இதழ் சீனியர்கீரன் புலனாய்வு செய்து எழுதி இருக்கான், இன்னிக்கு இஸ்யூவில் வந்திருக்கு....நம்ம பங்களாவை ரைடு பண்ணப் போறாங்ன்னு மேலிடத்தில் இருந்து ரகசிய மெசேஜ் வந்தது... எதாவது..யாரிடமாவது பேசி தடுக்க முடியுமான்னு பாருங்க...இதோப் பாருங்க போட்டோவோடு செய்தி போட்டு இருக்கிறான் சீனியர்கீரன்"

என்ற செய்தியை முகத்தில் ஈ ஆடாமல் வாசுதேவன் சொல்லச் சொல்ல, கேட்ட செல்வராசு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய.....அறையின் கண்ணாடி வழியாக பார்த்த நர்ஸ் வேகமாக வரத் தொடங்க...கொண்டுவந்திருந்த போலி வார இதழை தன் கோட் பாக்கெட்டுகுள் வாசு வைக்க... செல்வராசுவின் தலைத் தொங்கத் தொடங்கி... விழிகள் மேலே வெறித்துப் பார்த்து பளபளப்பை இழந்து கொண்டிருந்தது.

14 ஆகஸ்ட், 2009

தப்பாக ஒரு கொலை !

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான், வீட்டில் எதோ சத்தம் கேட்டு மயங்கி விழுந்திருந்த கல்பனாவை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள்.

சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் தாயராகி அவளை ஸ்டெச்சரில் போட்டு அறுவை சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துச் செல்லப் போகும் அந்த வினாடியில்...

பதட்டத்துடன் ஓடிவந்த கணவன் குமாரை கடைசியாக பார்த்துவிட்டு கண் மூடினாள் கல்பனா

மருத்துவர்கள் கைவிரிக்க உடலை எடுத்துச் செல்லும் முன்... உடல் நிறம் லேசாக கருமை அடைவதை வைத்து...மருத்துவர்....ப்ரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்

"ஐயோ.......என் கல்பனாவை கூறு போட்டுவிடாதீர்கள்.......என்ற கூய்ச்சலில் குமாரின் குரலில் மேலும் பதட்டம் நடுக்கம் தெரிந்தது"

"அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரிந்து கொள்ளுங்கள்......சார்" என்று சொல்லிய டாக்டர், அவன் அனுமதிக்கு காத்திருக்காமல்

"நர்ஸ்......போலிசுக்கு தகவல் சொல்லிவிட்டு....பிரேத பரிசோதனைக்கு பாடியை அனுப்பிவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் டாக்டர்

"குமார் வெடித்து அழுதான்......"

ஐந்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் சாம்ப மூர்த்தி அங்கு வந்தார்

"நீங்க தானே அவங்க ஹஸ்பெண்ட்"

"ஆமா சார்"

"எத்தனை மணிக்கு சம்பவம் நடந்தது"

"தெரியலை சார்...பக்கத்துவீட்டுக்காரங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சொன்னாங்க"

"சரி உங்க வீட்டுக்கு வாங்க ......போவோம்"

****

கல்பனாவின் அறையில்

ஏகப்பட்ட மருந்துகள், டானிக்குகள் அலமாரியில் இருந்தன.....மேசை மீது திறந்து இருந்த சிரப் பாட்டில் காலியாக இருந்தது....பக்கத்தில் செல்போன்.....எடுத்துப் பார்த்தார்.

"மிஸ்டர் குமார் உங்கள் மொபைல் நம்பர் என்ன ?"

சொன்னான்

"உங்களுக்கு உங்க ஒய்ப் கால் பண்ணி இருக்காங்களே......மூன்று மணி 5 நிமிடத்தில் பதிவாகி இருக்கிறதே"

"சார் அந்த நேரத்தில் நான் மீட்டிங்கில் இருந்தேன்.....வாய்ஸ் மெயிலில் போய் இருக்கும்....நான் செக் பண்ணவில்லை"

குறித்துக் கொண்டார்

"உங்களுக்கு யாரேனும் எதிரிகள் நண்பர்கள் ?"

"அப்படி யாரும் இல்லை சார். நாங்க காதலித்து திருமணம் செய்து கொண்டவங்க...பெற்றோர் பெரிதாக எதிர்கல...எங்க வாழ்க்கை நல்லா இருந்தது.....நான் கல்பனாவை உயிருக்கு உயிராக நேசித்தேன்"

"ம்ம்......இங்கே இருக்கும் மருந்துகள் யாருடையது......?"

"கல்பனாவுடையது தான் சார்"

"இந்த டானிக் ?"

"இதுவும் கல்பனாவுடையது தான் சார்.....மதியம் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவாள்..இரண்டு நாளைக்கு முன்பு தீரப் போவதாக சொன்னாள்... இன்னிக்கு மாலை வாங்கி வர இருந்தேன்.......அதுக்குள்ளே"

இடையில் ஒரு அலைபேசி அழைப்பிற்கு.....

"நினைச்சேன்.....வச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு,

மருந்து பெயர்களைப் படித்ததும் முகம் ஓரளவு பிரகாசமானார் இன்ஸ்பெக்டர்

"சொல்லுங்க.....கல்பனாவை ஏன் கொலை பண்ணினிங்க ?"

"சார்..............!"

"மிஸ்டர் தெரியும்......இனிமேல் மழுப்ப முடியாது...."

"சார் நான் ஏன் மனைவியை கொலை பண்ண முயற்சிக்கப் போறேன் ?"

பரிதாபமாக கேட்டான்

அதை நான் சொல்கிறேன்

"அவங்களுக்கு ஆஸ்மா இருந்திருக்கு.........அதை சொல்லாமல் தான் அவங்க உங்களை காதலிச்சிருக்காங்க...."

"திருமணம் ஆன பிறகுதான் அவங்க நோய் உங்களுக்கு தெரியவந்திருக்கு......சதா இருமல் ...மருத்துவம்....உங்களை ரொம்பவே வெறுப்படைய வைச்சிருக்கு....."

"........" குமாருக்கு ராட்டினத்தில் தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது

"கல்பனாவை தீர்த்து கட்டிவிட்டால்.......வேறொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டிங்க....டானிக் தீரும் சமயத்தில் கொஞ்சமாக சயனைடு கலந்து வச்சிட்டிங்க.....அவங்க வழக்கமாக சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு டானிக் சாப்பிடுபவர்... எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்.......என்னவோ செய்யவும் ....உங்களுக்கு போன் பண்ணி இருக்கிறார்.....போனை எதிர்பார்த்த நீங்கள் எடுக்க வில்லை.... இயற்கை மரணம் .....என்று சொல்லிவிடலாம் என்று திட்டம் போட்டிங்க...அக்கம் பக்கத்தவர் பார்க்கவில்லை என்றால்...."

எத்தனை கேஸ்களைப் பார்த்தாரோ.... அவர் ஊகமாக சொல்லச் சொல்ல...'வீடியோ எடுத்த காட்சி போல் சொல்கிறாரே....' என்று அதிர்ந்த குமார்...அதற்கும் மேல் இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் என்பதை கேட்கும் நினைவு எதுவும் இல்லாது மயங்கி விழுந்துவிட்டான்

7 ஆகஸ்ட், 2009

மீன்கொத்தி (சிறுகதை) !

"டாக்டர்.... மேடம்... சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுங்க..." சுகாதரத்துறை இயக்குனரான பெண் மருத்துவரிடம் மிரட்டுவது போன்று சொல்லிக் கொண்டு இருந்தார் அமைச்சரின் பிஏ.

"சார்...நீங்க மிரட்டினாலும்.....எங்களுக்குன்னு சில புரோசீஜர்ஸ் இருக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் நாங்க மருந்து வாங்குறோம்..."

"இருக்கட்டம் மேடம்...இப்ப உங்களுக்கு வந்திருக்கிற டெண்டர் எல்லாமே அமைச்சரின் வெவ்வேறு மருந்து கம்பெணிகளின் கொட்டேசன்கள் தான் என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுல ஒரு கம்பெணிக்கு கொடுத்து இருக்கலாம், வந்திருப்பதில் ஒண்ணே ஒண்ணு புதுசா ஒரு கம்பெணி அனுப்பி இருப்பது, இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும், புதுக்கம்பெணி அமைச்சருக்கு போட்டியாக ஒருவன் ஆரம்பிச்சிருக்கான்.....அவனால அமைச்சருக்கு ஏற்கனவே 20 கோடி நட்டம்....அவனுக்கு கொடுத்தீர்கள் என்றால் அமைச்சர் கடுப்பாகிவிடுவார்"

"சார்.....உங்க கம்பெணிகளைவிட அந்த கம்பெணி குறைவாக கோட் பண்ணி இருக்காங்க...அவங்க மருந்துகளும் தரமானது......"

"மேடம் நீங்க தரத்தை பற்றியெல்லாம் பேசி தேவை இல்லாது ரிஸ்க் எடுக்கிறிங்க.....அமைச்சரை பகைச்சிக்காதிங்க.....அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"சார்....எங்களுக்குத் தேவை நல்ல மருந்து......நான் உங்க கம்பெணிக்கு கொடுத்தால்....விவரம் தெரிந்து அந்தக் கம்பெனிக்காரங்க கோர்டுக்குப் போனாலும் எனக்கு பிரச்சனை தான்......என்னால உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது"

"மேடம் என்ன செய்விங்களோ......எனக்கு தெரியாது....நாளைக்கு டெண்டர் எங்களுக்கு கிடைச்சாகனும்"

"சாரி...மிஸ்டர்.....அடுத்த அடுத்த டெண்டர்களில் பார்க்கலாம்....."

"10 கோடி காண்ட்ரேக்ட்....அமைச்சர் எப்படியாவது அவருக்கு கிடைக்கனும் என்று சொல்லிவிட்டார்"

"திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காதிங்க.......எடத்தைக் காலிப்பண்ணுங்க .....இல்லாட்டி...."

அமைச்சரின் பிஏ.......அந்த மருத்துவ இயக்குனரை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார்

***

மறுநாளுக்கு மறுநாள் அங்கே அமைச்சர் வீட்டில், பி.ஏ அமைச்சரிடம்,

"ஐயா.......நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன்......அவ.... அந்த அம்மா பயப்படுவது போல் தெரியல.... நமக்கு ஆர்டர் கிடைக்கல.....அந்த புதுக்கம்பெணிக்கு கிடைத்துவிட்டது... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது"

"எப்ப்டிய்யய எப்பிடிய்யா.....எம்மேல பயமில்லாமல் போச்சு...இரு அவளுக்கு ஆப்பு வைக்கிறேன்......நீ என்ன பண்ணுகிறே....அடுத்த டெண்டர் பிரிக்கும் போது நம்ம ஆளுங்களிடம் ஒரு 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து......அந்த அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்லு... மற்றதையெல்லாம் நான் விஜிலென்ஸ் ஆபிசர்களிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன்"

"அந்த அம்மா லஞ்சம் வாங்குமான்னு தெரியாது.......பின்னே எப்படி......?"

"அதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ... வாங்கியதாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவாங்க...."

****

மூன்று மாதம் கழித்து,

ஒரு நாள் அந்த பெண் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றதை பற்றிய முந்தைய நாள் தொலைக்காட்சிப் படத்துடன், லஞ்சம் வாங்கிய பெண் டாக்டர் சிக்கினார், மருந்து கொள்முதலில் ஊழல் என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது.

படித்துவிட்டு கட்சிக்கார பெருசு...இன்னொரு பெருசிடம்,

"ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்லே....மக்களை ஏமாத்துறவங்க ... ஊழல் செய்றவங்க இப்படி சிக்கனும்யா.....பொம்பளைன்னா மட்டும் தப்பு செய்யலாமா ?"

என்று தன் சார்ந்த கட்சியின் ஆட்சிப் பெருமையுடன், பத்திரிக்கையின் மற்ற செய்திகளையும் பற்றி தனது கருத்துகளை உதிர்த்துக் கொண்டு இருந்தார்

*****

பின்குறிப்பு: கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது.

9 ஜூலை, 2009

அரைவேக்காட்டு ஆத்திகன் - ஒரு பெரிய கதை !

ஒரு ஊரில் பழுத்த ஆன்மிகவாதி என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த பக்தன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் விஷ்ணு பூஜை செய்த பிறகே உணவு எடுப்பது வழக்கம். ஓரளவு தானம் செய்யும் பழக்கம் உள்ளவன். கிருஷ்ணா இராமா என்று சொல்லிவிட்டு உதவி கேட்டால் உடனே இய்ன்றதை செய்துவிடுவானாம்.

ஒருநாள் 75 வயது மதிக்கத் தக்க கிழவர் நடந்து வந்தவர் இந்த ஆன்மிக வாதியின் வீட்டின் முன் பசி மயக்கத்தால் விழுந்துவிட்டாராம். உடனடியாக பதறிய அந்த ஆன்மிகவாதி, அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து விட்டு,

"பகவானே இந்த முதியவருக்கு உதவி செய்ய எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, பெரியவரே பாருங்கள், கடவுள் இருக்கிறார், இல்லை என்றால் நீங்கள் என்வீட்டு வாசலில் விழுந்து இருக்காமாட்டீர்கள், உடனடியாக உங்களுக்கு உதவியும் கிடைத்திருக்காது" என்றானாம்

இதைக் கேட்டப் பெரியவர் திடுக்கிட்டார், காரணம் அவர் ஒரு நாத்திகர்.

"ஐயா நான் நாத்திகன், நீங்கள் ஒரு மனிதனாக என்னை மதிப்பதாக இருந்தால் நீங்கள் தரும் உணவை ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் கொள்கைக்கு எதிரானவன், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது" என்றாராம்

இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட ஆன்மிகவாதி, மேலே கைக்கூப்பி

"நான் ஒரு நாத்திக மூடனுக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, உன்னை நிந்திப்பவருக்கு உணவு அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்த பெரியவரை நோக்கி,

கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக

"உன்னைப் போன்ற நாத்திக மடையர்களுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்குஉதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்கு பாவம் நீங்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட

பெரியவர் வசைகளால் குறுக்கிப் போய்......மெளனமாக வெளி ஏறிவிட்டாராம்.

இன்னும் கோவம் தீராத, அந்த ஆன்மிகவாதி புலம்ப ஆரம்பித்து

"கடவுளே இது என்ன சோதனை, ஒரு நாத்திகனுக்கு உணவு அளித்து தவறு செய்ய இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் ஒளி வெள்ளம்.

அந்த ஆத்திகனுக்கு முன்னால் பகவான் கிருஷ்ணர் தோன்றி,

"முட்டாளே ! தினமும் என்னை நிந்தித்தாலும் அந்த முதியவனுக்கு 75 வயது வரை எவர் மூலமாவது தொடந்து உணவு அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாக சென்ற போது மயங்கி விழுந்த காரணத்தினால் கிழவனை பட்டினி போட்டுவிட்டாயே, கிழவனுக்கான இன்றைய உணவு உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "

என்றாராம்.

பேச்சே எழாமல் தன் தவறை உணர்ந்த ஆத்திகன் கண் முன்னே நிற்கும் கடவுளைப் பார்க்கக் கூட வெட்க்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்து தலைகுணிந்தானாம்.

குறிப்பு: இந்த கதை ஜக்கிவாசுதேவ் அவர்களின் நூலில் இருந்து படித்தது, பேச்சுரையில் சிறுது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு ஆன்மிக அரும்பெரும் வியாதி, என்கிற நினைப்பில் நாத்திகம் குறித்து தூற்றுவேர்க்கு அர்பணமாக்குகிறேன்.

உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் ஆன்மிகம் பேசலாம். பகவான் புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தான் இந்துவா ?

இது இந்தப் பதிவின் கதைக்கு எதிரானது அல்ல

21 ஜூன், 2009

பட்ட மரம் !

அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை பார்த்துக்கொண்டு ஒறுக்களித்து பாயில் படுத்தபடி, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கண்களும், மூக்கும் சிதறிகிடக்கும் குப்பை கூளங்களையும், அணைத்து எறியப்பட்ட சிகிரெட் துண்டுகளின் நாற்றத்தையும் கண்டுகொள்ளவில்லை. சற்று திறந்திருந்த வெளிக்கதவு வழியாக காற்று, வீட்டின் உள்ளே அடிக்கும் வீச்சத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது.

அந்த வீட்டின் அறைகளில் சில கரப்பான்பூச்சிகள் அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. கரிபடிந்த மற்றும் கழுவாத பாத்திரங்கள், சில நாட்களாக துவைக்காத துணிகள் ஆகியவற்றையெல்லாம் அவரின் முதுமை சட்டை செய்யவில்லை. இவற்றை மாற்றினாலும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நினைத்த அவருடைய வேதனை உணர்வுகள் அவற்றை அலட்சியப்படுத்தின.

அவருடைய இளமையில் ஆறாக ஓடிய வாழ்கைப் பயணம், கடந்த ஐந்தாண்டுகளாக தேங்கி கலங்கிய குட்டையாக ஆகி, எப்பொழுது வற்றுமோ என்ற ஏக்கத்துடன், வற்றவேண்டும் என்ற எதிர்பார்த்துக் கிடக்கும், துக்க எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை மனைவி இருந்தாள். மனைவி இருந்தவரை அவருக்கு குறைகள் என்று எதுவும் பெரியதாக தெரியவில்லை.

பழைய வாழ்கையை நினைத்தே, நிகழ்காலத்தை கடத்த வேண்டிய கட்டாயத்திற் குட்பட்டதை நினைத்து, வயதான காலத்தை வறண்டகாலமாக கழித்தார். சொந்தம் கொண்டாட முடியாதபடி, யாரும் அற்றவர் இல்லை அவர், ஆனால் அவருடைய நிலை ஐந்தாண்டுகளாகஅப்படித்தான் இருந்தது.

பெரியசாமி நன்றாக படித்தவர், நல்ல வேலையில் முன்பு கை நிறைய சம்பாதித்தவர். அவர் இப்பொழுது இருக்கும் மூவறை வீடு அவருக்கு சொந்தமானதுதான், வங்கியிலும் ஓரளவு சேமிப்பு இருக்கிறது. அவைகள் அவர் இருக்கும் வரை போதுமானதும் கூட.

அந்த காலத்து ஆளாக இருப்பதால் இன்னும் கை, கால்கள் வீழ்ந்துவிடவில்லை. தன்னால் முடிந்தவரை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதாலும், காலத்தை ஓட்டவேண்டும் என்பதாலும், அவராக விரும்பி தொழிற்சாலை ஒன்றில் பாதுகாவலாளி வேலை செய்துகொண்டு காலத்தை ஓட்டிவருகின்றார்.

சில ஞாயிற்றுக் கிழமைகளில் முடிந்தவரை வீட்டை சுத்தம் செய்வதும், சில நாட்களில் நூலகத்தில் சென்று தத்துவ புத்தகங்களை படிப்பதும் தான் அவருடைய பொழுதுபோக்கு.

அவருடைய சிந்தனை திருப்பும்படி மெதுவாக கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, மெதுவாக தலையை திருப்பி பார்த்தார்.

அப்படி பார்த்தவர், சுருங்கிய தன் முகத்தை மேலும் சுருக்கி, தலை குனிந்துகொண்டார். வந்தவன் வேறுயாருமில்லை நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவருடைய ஒரே மகன் பரசுராமன்.

உள்ளே நுழைந்தவன், வீட்டின் அவலத்தை நோட்டமிட்டபடி மெதுவாக, அவரை பார்த்து

'அப்பா, எப்படி இருக்கிங்க ... ' அக்கரையாக கேட்பது போல் கேட்டான்

பெரியவர் ஒன்றும் சொல்லாமல், அவனை பார்க்க விரும்பாதது போல மேலும் முகத்தை திருப்பிக்கொண்டார்.

அவனாகவே பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்

'அப்பா, உங்களுக்கு வயசாயிடுச்சி, நீங்க ஏன் இன்னும் இங்க தனியா கஷ்டபடுறீங்க ... '

'பேசாம எங்க கூட வந்திடுங்க, உங்க பேரப்புள்ளைங்க கூட சந்தோசமாக இருக்கலாம் ... '

அவர் அசைந்து கொடுக்கவில்லை, விடாமல் அவனும் ரொம்பவும் உரிமையுடன்,

'இந்த வயசில என்னப்பா பிடிவாதம், உங்க நல்லதுக்கு தான் சொல்றேன், பேசாமா வந்துடுங்கப்பா .. '

அதுவரை எதுவும் சொல்லாதிருந்தவர்,

'உங்க நல்லாதுக்கு ' என்று சொன்ன உடன் அவருக்கு பெரும் கோபம் வந்தது,


'நீ மொதல்ல வெளிய போ, நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் சொல்லலே ... '

அவன் திகைத்து போய்விடவில்லை, அவன் அவரிடம் இருந்து இதை எதிர்பார்த்தது தான், அவரின் இந்த எதிர்ப்பு அவனுக்கு கோபம் ஏற்படுத்தவில்லை, மாறாக தலையை குணிய வைத்தது.

'இல்லப்பா, எவ்வளவு நாளைக்குதான் நீங்க தனியா ... ' அவன் என்று முடிப்பதற்குள்

'ஐஞ்சு வருசமா தனியா தாண்டா இருக்கேன்... '

'சாவு வருமான்னு பாத்துக்கிட்டு இருக்கேன் ... '

'சாகறவரைக்கும் தனியா தான் இருப்பேன் ... '

என்று கண்களில் கோபம் கொப்பளிக்க வெடித்தார்.

மறுபடியும் பேச்சற்று தலை கவிழ்ந்தான் பரசுராமன்.

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு, அவரே தொடர்ந்தார்

'நீ எதுக்கு இங்க வந்திருக்கேன்னு எனக்கு தெரியும்டா ... '

கேள்வியாக பார்த்தான் பரசுராமன்

'எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா ? '

'நீ போன வாரம் தூது அனுப்பினியே, உன் பிரண்டு தங்கராசு, அவன் தான் சொன்னான் '

'முதல்ல, எங்கிட்ட கரிசனமா பேசி, கஷ்டப்படாம மகன் வீட்டோட போயிடுங்கன்-னு சொல்லிட்டு ... '

'நான் பிடிகொடுக்கலன்-னு தெரிஞ்சதும், மெது மெதுவா ... '

'நான் பரிதாபபடுவேன்-னு நெனெச்சு விசயத்தை சொன்னான் ... '

'பரசுக்கு பிசினஸ்ல பெரிய நஷ்டம் ... '

'அவனோட வீடு அடமானம் ஆகி நேட்டாஸ் வந்துடுச்சுன்-னு சொன்னவன் ... ' என்று நிறுத்தியவர், தொடர்ந்து

'இன்னொன்றையும் சொன்னான் ... '

பெரியவர் கோபம் சற்றும் குறையாமல்,

'அதனால, என் வீட்டை வித்துட்டு, உன் கூட வந்துட்டா, உன்னோட கடனை அடச்சிடலாமாம் '

பரசுராமனுக்கு பகீரென்று இருந்தது, அவன் நடந்து கொண்டவிதத்தால், நேரிடையாக அவரிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டதால். அவன் தன் நண்பன் தங்கராசை 'அப்பாவை பார்த்து, கொஞ்சம் பேசி சரிப்படுத்து ' ன்னு சொல்லியிருந்தான். தங்கராசு எல்லாவற்றையும் விபரமாக பேசியது அவனுக்கு தெரியாது. ஆனால் அவர் தங்கராசிடம் கோபமாக பேசி மறுத்துவிட்டார் என்பது மட்டும் தெரியும்.

அவரே தொடர்ந்தார்,

'ஐஞ்சு வருசமா, அப்பன் இருக்கிறானா, செத்துட்டானான்னு கவலைப் படாத நீ, இன்னைக்கு இங்க வந்து நிக்கிறேன்னா... பணம் !... '

'உனக்கு இன்னைக்கு தேவை பணம் ...! '

பரசுராமன் சிலையாக நின்று கொண்டிருந்தான்,

அடுத்து அவர் அவன் முகத்தை பார்த்து வீசிய கேள்விகள், அவனை குறுகி கூசவைத்தது.

'சின்ன, சின்ன பிரச்சனையை பெருசாக்கி, உங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு தனியா போகலாம்னு உன் பொண்டாட்டி சொன்னப்ப ... '

'அவ முந்தானைய புடிச்சிக்கிட்டு, பத்து வருசத்துக்கு முன்பு, எங்கள திரும்பி பாக்காம போனவன் தானே நீ ? '

'அன்னைக்கு கை நிறைய சம்பாதிக்கிற திமிரு உன்னையும், உன் பொண்டாட்டியையும் அப்படி போக வெச்சிச்சு ... ? ' கேள்வியாக நிறுத்தி தொடர்ந்தார்.

'பதினைஞ்சு வருசமா, வராத கரிசனம் இப்ப வந்திடுச்சா ? '

'உன் அம்மா, பக்க வாதத்துனால, காலு முடியாம, படுத்த படுக்கையாக தொடர்ந்து இரண்டு வருசம் கெடந்தாள்... '

'ஒரு தடவையாவது வந்து எட்டிப்பார்த்தியா ? '

'அவ சாவுக்கு வந்துட்டு, விருந்தாளி மாதிரி அன்னைக்கே போன நீ ... '

'ஐஞ்சு வருசம் ஆகி இன்னைக்கு வந்து நிக்கிற ... ? '

'அன்னைக்கே எல்லாம் முடிஞ்சு போச்சு ... '

'உங்க அம்மா என்ன சொல்லிட்டு செத்தாள் தெரியுமா ? '

'நம்பள பார்க்க போகக் கூடாதுன்னு, பேரப் புள்ளைகளை தடுத்த அவன் பொண்டாட்டி முகத்திலயும் ... '

'அவன் முகத்துலையும் நிங்க முழிக்க கூடாது, சீக்கிரமா என் கூட வந்திடுங்கன்னு ... '

'சாகுறத்துக்கு முன்னாடி உன் அம்மா சொல்லிட்டுத்தாண்டா போனாள் '

'நல்லா கேட்டுக்கோ ...! '

'நீ, உன் பொண்டாட்டி சொல்றபடி கேட்டு நடந்துக்கிறப்ப ... உன் அப்பன் நான் ... '

'என் பொண்டாட்டி சொன்ன மாதிரியே வாழ்ந்துட்டுபோறேன் '

'அதனால ... உன் கஷ்டத்தப் பார்த்து பரிதாப படுவேன்னு நினைச்சிடாதே ... '

'பரிதாபப்பட்டு, பரிகாசத்துக்கு ஆளான எத்தனையோ ஜென்மங்களை கண்ணால பாத்திருக்கேன் '

'இப்பவாவது, பொழுதுபோகலைன்னா கோயிலுக்கு உள்ள போய்டுவர்றேன் ... '

'உங்கிட்ட என் சொத்தெல்லாம் கொடுத்துட்டு ... உன் கூட வந்தா ... அப்புறம் நீ வெறட்டி விட்டுடேன்னா ... கோவில் வசாலில் உக்காந்து பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்... '

'அந்த நிலைமைக்கு என்னை தள்ள தயங்காதவன் நீ ... '

'ஒரு அப்பனா, எல்லா கடமைகளையும் ஒனக்கு சரியா செஞ்சிருக்கேன், அந்த திருப்தி எனக்கு இருக்கு '

'நான் ஏற்கனவே பட்டது போதும்... இப்ப பட்ட மரமா நின்னுகிட்டிருக்கேன் ... நானா சாயரத்துக்துள்ள... வெட்டி சாச்சிடாதே ... '

அதிர்ந்து போனான் பரசுராமன். முதியவர் மேலும்,

'அப்படி ஒரு நிலைமையை எனக்கு நானே ஏற்படுத்திக்க விரும்பல, நான் இப்படியே இருந்திடுறேன் ... '

முடிவாகம், உறுதியாகவும் சொன்னார்

'இப்பவே சொல்லிடுறேன் கேட்டுக்க ... நான் செத்த பின்பு ... அடக்கம் செஞ்சிட்டு என் சொத்த எடுத்துக்க ... முடியாதுன்னா இப்பவே சொல்லிடு, ட்ரெஸ்டுக்கு எல்லாத்தையும் எழுதி கொடுத்துட்டு புண்ணியம் தேடிக்கிறேன் '

கைகளை தலைக்குமேல் குவித்துபடி தின்னமாக,

'நீ போகலாம் ' என்றார்.

திருடனுக்கு தேள்கொட்டியமாதிரி சிறிது நேரம் விக்கித்து நின்ற பரசுராமன், அவர்முகத்தை பார்க்க கூசியதால் தலையை குனிந்தபடி சத்தமின்றி வெளியேறினான்.

அறையில் மீண்டும் நிசப்தம் படர, சற்றும் அலட்டிக்கொள்ளாமல் திரும்பிய தலையும், அவருடைய பார்வை மறுபடியும் மனைவியின் புகைப்படத்தில் நிலைத்தது, அப்பொழுது தன் மனைவி தன்னை பெருமிதமாக பார்பதாக உணர்ந்தார்.


2006 பிப்ரவரி 24, திண்ணையில் எழுதியது. தந்தையர் நன்னாளை முன்னிட்டு இங்கு மீண்டும் வெளி இடுகிறேன்

4 ஜூன், 2009

செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக)

அலுவலகம் முடிந்து வந்து வீட்டினுள் நுழைந்து உடைமாற்றிவிட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய வாரத்தின் அமுதம் வார இதழைப் புரட்டினேன்.

அமுதம் வார இதழின் வழக்கமான கடிதம் டீபாயில் இருந்தது, உள்ளிருந்து கையில் காப்பியுடன் வந்தவள்,

"வந்ததும் வாராமல் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து......இத்தோடு 99 கதை எழுதியதாகச் சொல்றிங்க, ஒரு கதையும் அமுதம் வார இதழில் வந்தபாடு இல்லை"

இளைத்துக் கிடந்த இரண்டு கொயர் நோட்டையும், அமுதம் கதையை திருப்பி அனுப்பிய தகவல் கடிதத்தையும் ஏளனமாகப் பார்த்தபடி என்னை நக்கல் அடித்துக் கொண்டிருந்தாள் மனைவி

"அமுதம் இல்லாட்டி எதோ ஒண்ணு, என்னிக்காவது ஒரு நாள் வரும்... நீ பார்க்கத் தானே போறே"

"ம் கும்... கதை கிதைன்னு எழுதறத்துக்குப் பதில் சும்மா இருங்கன்னு சொன்னாலும் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டிங்க... அதனால் தான் நான் கண்டுக்காமல் இருக்கேன்" - வெட்கப்பட்டாள்

"என்னோட இலக்கிய ஆர்வத்தை ரொம்பதான் சீண்டுறே..." இடுப்பைக் கிள்ள மேலும் வெட்கப்பட்டு விலகினாள்

"சரி காப்பி ஆறிடப் போறது எடுத்துக் குடிங்க" என்று கூறிவிட்டு அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள்

காப்பியை உறிஞ்சிக் கொண்டே வார இதழைப் புரட்டினேன்.

"வயிற்றுக்காக....." என்ற தலைப்பில் சிறுகதை வாசிக்கத் தொடங்கினேன்.

'வாழாவெட்டி' பற்றிய கதை......

'நமக்குத் தோன்றுவது போலவே பலருக்கும் தோன்றுமோ....பாத்திரத்தின் பெயர்களும்,
வட்டாரவழக்கு மொழி நடையும் சேர்ந்து இப்படி எழுத முடியுமா ?.......நம்மால் இப்படியெல்லாம் எழுத முடியாதோ' நினைத்துக் கொண்டேன்

"புகுந்த வீட்டின் கொடுமை....பிறந்த வீட்டின் வறுமை துறத்த தன் இரண்டு குழந்தைகளின் வயிற்றுப் பசிபோக்க வேற்று ஆடவனுடன் இருட்டிற்குள் நுழைந்தாள்" என்று முடிந்திருந்தது சிறுகதை

தீர்வு விபச்சாரம் ? நவீன இலக்கியம், எதார்த்தம் என்ற பெயரில் ......ச்சே என்ன கண்றாவிக் கதை இது ?

பெருமூச்சு விட்டு புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு,

'நம்ம கதையில் "இரண்டுக் குழந்தைகளின் பசிக்காக சித்தாள் வேலையில் சேர்ந்து சும்மாடு சுமந்தாள்" என்றெல்லாவா முடித்தோம், நாமளும் இதே போலத்தான் யோசிக்கொறோம் ஆனால் ஒருவேளை கதையின் முடிவு சாதாரணமாகவே இருக்கக் கூடாதா ?

******

அங்கே அமுதம் அலுவலத்தில்,

ஆசிரியர் உதவியாளரைக் கூப்பிட்டு "இந்தவாரம் வந்திருக்கக் கதைகளில் தேறுவதை 'பைரவனிடம்' கொடுத்து கோவை மாவட்ட வழக்கில் எழுதித்தரச் சொல்லு... புரட்சிப் புதுமைன்னு அவரும் முடிவுகளை நல்லா மாற்றி எழுதுவார்... 'வயிற்றுக்காக' போனவாரக் கதையை மாற்றி எழுதித்தந்த 'கண்ணாயிரம்' கிடைச்ச பாராட்டுக் கடிதங்களைப் பார்த்த பிறகு இன்னும் நிறைய பணம் கேட்டான், கம்பெனிக்கு கட்டுப்படியாகாது ... இந்தவாரம் பைரவன் எழுதட்டும்"



போட்டி இணைப்பு

15 ஜூலை, 2008

'நியூ இந்தியா 2051' - அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக !

கிபி 2051 ஜனவரி 18, இந்திய அறிவியல் துறையின் தலைமையகக் வட்ட மேசை அறையில் பிரதமர் மற்றும் அறிவியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் கூடி இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி அனுமந்தராவ் தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கொண்டு இருந்தார்.

"பிரதமர் மற்றும் அமைச்சர் அவர்களே, முன்னாள் குடியரசு தலைவர் சொல்லியது போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகவில்லை, அதற்கு காரணம் என்று பார்தோமேயானால், இந்தியாவில் புரையோடி இருக்கும் சாதிப்பிரச்சனை தான். அவரவர் தத்தம் சாதி பற்றில் மூழ்கி இருப்பதால், இந்தியன் என்று சொல்லிக் கொண்டாலும், பிரிந்தே கிடக்கிறார்கள், 150 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கி அனைத்து சமூகங்களும் முன்னேறி இருந்தாலும், இடஒதுக்கீட்டை எடுத்துவிட அரசு முடிவெடுத்தால் அது கூடாது என்றே முழங்கி அங்காங்கே கலவரங்களை உண்டு பண்ணுகிறார்கள், உயர்சாதிக்காரர்களும் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் தன்னுடைய சாதிக்காரர்களையே உயர்பதவியில் அமர்த்துகிறார்கள்"

"நாட்டில் கல்விக்கோ, வேலைவாய்ப்புக்கோ குறைவு இல்லை. இருந்தாலும் இதைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கு முயற்சிக்காமல் எப்போதும் எதாவது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, நமது ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி பாகிஸ்தானும், சீனாவும் தங்கள் நில எல்லைகளை விரிவுபடுத்துக் கொண்டு பஞ்சாப் வரை வந்துவிட்டார்கள்..."

"இந்த நிலை நீடித்தால் நம் இந்தியாவையே தொலைத்துவிடும் ஆபத்து வெகுவிரைவில் நெருங்கிவிடும்...இதனைத் தடுக்க அனைவரையும் தாம் இந்தியர் என்று உணரவைக்க வேண்டும். அவரவர் மனதில் குடியேறி இருக்கும், ஜீன்களில் கலந்து இருக்கும் சாதிப்பேயை ஓட்டவேண்டும்....அதை விஞ்ஞான ரீதியாக செய்ய முடியும், இன்று நான் அதைப் பற்றிதான் சொல்லப் போகிறேன்"

"கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே ஜீன்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவியல் துறை சாதித்து இருக்கிறது, அதை மேலும் நான் 30 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டு ஜீன்களை ஆராய்ந்த போது சாதியல் கூறுகளை மனதில் விதைக்கும் ஜீன்களை தனித்து அடையாளம் கண்டேன். அதனை அகற்றிவிட்டால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கூட சாதி உணர்வற்றே பிறப்பார்கள், கலப்பு திருமணம் என்ற சொல் கூட வெளியே தெரியாமல் பல்வேறு சமூகமாக முன்பு இருந்தவர்களிடையே விருப்பத் திருமணங்கள் நடந்தேறும், எதிர்காலத்தில் சாதி என்ற ஒன்றே இருக்காது"

"இந்த சோதனையை நான் மேற்கொள்ள வேறு வேறு இரண்டு ஆண் தெருநாய்களை எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண் நாய்களுமே வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவை, அவற்றிற்கு சாதி மரபுகளை அழிக்கும் எனது 'நியூ இந்தியா 2051' பார்முலா ஊசியைச் செலுத்திய ஒருவாரத்திற்கு பிறகு, முன்பு எப்போதும் ஒன்றை ஒன்று 'உர்... உர்...' என்று பார்த்து உறுமும் நாய்கள், தற்போது ஒன்றை ஒன்று நக்கிக் கொடுக்கின்றன, இரண்டு வேறுபாடுகளை மறந்து நண்பர்கள் ஆகிவிட்டன... இதன் மூலம் எனது சாதி நீக்கும் ஜீன் ஆராய்ச்சி வெற்றி அடைந்திருக்கிறது"

மருந்து கொடுப்பதற்கு முன்பும், அதன் பின்பும் இரு வீடியோக்களைப் போட்டுக் காட்டுகிறார். அக்ரோசமாக கடித்துக் குதறிக் கொண்ட நாய்கள், ஒன்றை ஒன்று பசு கன்றை வருடுவதைப் போல் நக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தன

எல்லோரும் கைத்தட்டி பாராட்ட, பிரதமர் பேச ஆரம்பித்தார்

"முதலில் இந்த சிறப்பான ஆராய்ச்சி மேற்கண்ட விஞ்ஞானி அனுமந்தராவைப் பாராட்டுகிறேன்....'நியூ இந்தியா 2051' பார்முலா நமது நாட்டுக்கு மிக மிகத் தேவையான ஒன்று...ஒரே நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்திய 2051' பார்முலா மருந்தை போலியோ சொட்டு மருந்து போல செலுத்துவதற்கு வரும் பாராளுமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்"

அதற்குகிடையில் இந்த ஆராய்ச்சியைப் பாராட்டி நோபல் குழு அனுமந்தராவுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தது.

அமெரிக்கா போன்று வெள்ளையர், கருப்பர் இருக்கும் நாடுகளில் இந்த மருந்தில் மாற்றம் செய்து இனவேறுபாடுகளை களைவதற்கு உதவவேண்டும் என்றும் அதற்கு இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகவும் கூட்டாக அறிவித்தன

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்தியா 2051' பார்முலா மருந்து கொடுக்கப்படும் என்றும், மறுப்பவர்கள் அரசு உத்தரவை மீறுபவர்கள் என்று கருதி சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கபடும் என்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

********

2051 ஜூலை 31, காலை 9 மணியளவில் அன்றைய இந்திய செய்தி ஊடகங்கள் அனைத்திலும், ப்ரேக்கிங் நியூஸ் என அதிர்ச்சி செய்தியாக...

"இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தற்கொலைப் படைத்தாக்குதலால் முற்றிலும் அழிந்தது என்றும் அங்கு ஆராய்சியில் ஈடுபட்டிருந்த அனுமந்தராவ் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்" என்ற பரபரப்புத் தகவல்கள் எலோக்ட்ரோ மேக்னெட் அலைகள் முலம் பரவ...பரவ... அந்த செய்தி அடுத்த வினாடியே உலகம் முழுவதும் பரவியது.

அன்று மாலையே,

வடநாட்டில் இயங்கிய தடைசெய்யப்பட்ட இந்துவெறி அமைப்பு ஒன்று, செய்தி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிய தகவலில்... "இந்தியா இந்துவிற்கே சொந்தம், இந்து மதத்தின் சிறப்புத் தன்மை சாதி...சாதிகளை ஒழித்துவிட்டால் இந்துமதம் அழிந்துவிடும்....உலகில் தோன்றிய முதல் மதமான இந்துமதம் அழிவை சந்திக்க ஒருகாலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மீது நடந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்" என்று அறிவித்தது.

********

பின்குறிப்பு : இது பதிவர் சிறில் அலெக்ஸ் அறிவித்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

17 ஏப்ரல், 2008

சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

தினமலரின் 'அந்த' விளம்பரம் சன் டீவியில் ஓடியது, "சன்டேன்னா இரண்டு"

"உங்க வெளம்பரம் ஓடுது"

சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தாள் என் மனைவி

"எப்படியோ உனக்கு என்னை ஓட்டனும்"

"சந்தர்பம் கிடைப்பதைத்தானே பயன்படுத்த முடியும்"

"பொல்லாத சந்தர்பம், ஊரு ஒலகத்தில் கல்யாணம் ஆன ஆம்பளைங்க செய்யாததையா நான் செஞ்சிட்டேன்"

"சரி...நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்"

"ம்...சரி சரி...நானும் எல்லாம் இருக்கா என்று பார்க்கிறேன்... இப்பெல்லாம் எப்போ தீறுதுன்னு கணக்கு வச்சிக்க முடியல..."

"எல்லாத்தையும் நானே உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கு..."

"அது...இல்லடி 10 - 12 நாளைக்கு ஆகும் னு தான் வாங்குறோம்...எல்லாத்தையும் அளந்து, அளந்து செஞ்சுகிட்டு இருக்க முடியுமா ?"

"ஐயா சாமி...உசிரை வாங்காதிங்க, போய் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது"

"வளைஞ்சு கொடுத்துதான் ஆகனும்...என்ன பண்ணறது...வெளியில் தான் பெண்ணியம் பேசுகிறேன் என்று வேறு சொல்றாங்க ... உன் விருப்பத்தையும் பார்க்க வேண்டி இருக்கே"

"உங்க இலக்கிய பேச்செல்லாம் வேறு எங்காவது வச்சிகுங்க ... முதலில் போய் ப்ரிட்ஜை திறந்து என்னனென்ன இல்லையோ பார்த்து வாங்கிட்டு வாங்க..."

"சரிடியம்மா...."

அடுத்து சிறுகதையின் தலைப்பை இங்கே தான் சொருகி இருக்கிறேன் கவனமாக பிடித்துக் கொள்ளுங்க :)

"என்ன முனகல்...சன்டேன்னா... காலை டிபன், மதிய சாப்பாடு இரண்டு வேளை சாப்பாடும் நீங்க தானே எப்பவும் செய்றிங்க..."

"ம் பழகுன மாடுதானே ஏன் பம்மனும்னு கேட்கிறியா...? சரி பிரிட்ஜைப் திறந்து பார்த்துட்டு கடைக்கு கிளம்புறேன்"

"அப்பா...நானும் உன் கூட கடைக்கு வர்றேன்"

அடுத்து இரண்டாவது டார்சர் மெல்ல ஆரம்பிக்குது, சன்டேன்னா பொண்டாட்டி, பொண்ணு இரண்டு பேரோட டார்சர் தாங்கல.

*******

இது வவாச போட்டிக்காக எழுதியது ... ஆனால் எந்த பிரிவில் சேர்ப்பது என்று தெரியல, சிறுகதை, நகைச்சுவை, மொக்கை, அனுபவம்.

இந்த சிறுகதை (?) குடும்பத்தை முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்த திருமணம் ஆன ஆண்களுக்கு காணிக்கை.

நினைவு படுத்திய வெட்டிப்பயல் (எ) பாலாஜிக்கு நன்றி ! அங்கேயும் சன்டேன்னா இரண்டா ? :)

14 பிப்ரவரி, 2008

காதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) !

2002 பிப் 14, பெசண்ட் நகர் கடற்கரை :

"நித்யா...எதாவது சொல்லு...நான் பேசிப் பார்த்துட்டேன் ஒன்னும் சரிவருவது போல் தெரியல.."

"என்னத்த சொல்வது...உங்க பெற்றோர்களுக்கு பிடிக்கும் பிடிக்காதெல்லாம் காதலிக்கும் முன்பே உங்களுக்கு தெரியாமல் போச்சா ?"

"பழசை எல்லாம் ஏன் பேசனும், உன்னை கல்யாணம் செய்வதற்கு எனக்கு பூரண சம்மதம் தான், ஆனா அம்மா அப்பா பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக் கொண்டால், வீட்டில் சாவு விழும் என்று சொல்கிறார்கள்..நாம ஆசைக்காக பெற்றோர்களை பலிகொடுக்கனுமா ? அப்படியும் சமாதானம் செய்தாலும் உன்னை காலத்துக்கும் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க"

"சாரி சேகர் இவ்வளவு கோழையாக இருப்பீர்கள் என எதிர்பார்கல...சரி என்னமோ செய்யுங்க என் தலையெழுத்துப்படி நடக்கட்டும்"

பேசிவிட்டு சட்டென்று எழுந்து எதிர்திசையில் நடந்து காணாமல் போனாள் நித்யா,

அவளை தடுத்து நிறுத்துவதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாமல் பிரமை பிடித்தது போல் இரவு 12 மணி வரை அங்கேயே உட்கார்ந்துவிட்டு ஒரு முடிவெடுத்தவனாக் எழுந்துவீட்டுக் சென்றான் சேகர்.

******
ஒன்றரை வருடம் கழித்து.

துக்க விசயம் கேள்விப்பட்டு சேகரை சந்திக்கச் சென்றேன்

உடைந்து போய் இருந்த சேகர் கட்டிக் கொண்டு அழுதான்.

"தம்பி, பாருங்க தம்பி என் பையன் வாழ்க்கை இப்படி பாழாப் போச்சே...பொட்ட புள்ளையை பெத்துப் போட்ட உடனேயே போய் சேர்ந்துட்டாள் புன்னியவதி...நீங்கெல்லாம் பார்த்து அவனுக்கு எதாவது பார்த்து செய்யுங்க" - சேகர் அம்மாவின் கதறல்.

என்ன சமாதானம் செய்வதன்றே தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டவுடன் திகைப்பும், நண்பனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவும், அந்த பெற்றோர்கள் மீது எரிச்சலும் வந்தது.

தாய் இறந்தது கூடத் தெரியாமல் தூளியில் ரோஜாப்பு வண்ணத்தில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை

ஒரு சில நாள் கழித்து அவனை தேற்றுவதற்கு,

"வேற வழி இல்லேடா சேகர், எதுக்கும் பேசிபார்ப்போம்...."

******


"நி......நித்யா...நான் சேகர் பேசுறேன்...."

"ம் குரல் தெரியுது...ஒன்னும் சொல்ல வேண்டாம் ....எல்லாம் கேள்விப்பட்டேன்..."

"எனக்கு இப்ப ஒன்னை விட்டால் யாரும் இல்லை"

"நான் என்ன செய்யனும் ?"

"நான் எப்படியாவது பழைய வாழ்க்கைக்கு திரும்பனும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், இப்போ எந்த எதிர்ப்பும் இருக்காது"

"ஆகட்டும்...நானும் யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் இறந்தால், அதன் பிறகு நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்..."

"....."

நித்யா அவ்வாறு அவனை மறுத்து சொன்னாலும், பெண்களுக்கே உரிய இளகிய மனநிலை கரைந்துவிட்டது. அதன் பிறகு சில தூதுகள்.

நித்யா - சேகரின் காதல், சேகரின் இரண்டாவது திருமணமாக இனிதே முடிந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, தற்போது இரு குழந்தைகள் அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

மகனுக்கு மீண்டும் வாழ்கை அமைந்த திருப்தியில் பெற்றோர்கள் இருந்தாலும் அவர்கள் முன்பு செய்த தவறு அவர்களுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.

********
பெற்றோர்களின் வீண் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு பிரிவும், சோகமும் அவன் வாழ்க்கையில் வந்திருக்காது. இவர்கள் இருவரும் சேர்வதற்காகவே இடையில் ஒரு பெண் வந்து சென்றாளா ? அவளது பெற்றோர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ? இதற்கெல்லாம் எந்த சமாதனமும் ஈடு ஆகாது.

நடந்ததெல்லாம் விதி என்றே நினைத்து, நடந்தவைகளில் எது எது யாருடைய தவறு என்றெல்லாம் யாரும் குத்திக் காட்டிக் கொள்வதில்லை.

இது நடந்த கதைதான். நண்பரின் மீது நல் மதிப்பு இருப்பதால், பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறேன்.

21 டிசம்பர், 2007

நஒக : அச்சில் வார்த்த பதுமை !

தாமோதரன் ஐம்பது வயதை கடந்தவர், ஈஸிசேரில் சாய்ந்தபடி, யோசனை செய்து கொண்டிருந்தார். அவர் மனதில், அவளைப் பற்றிய நினைவுகளால், கவலைகள் அழுத்திக் கொண்டிருந்தது. மூன்றாண்டுக்குமுன் முடிந்து போன உறவுவை நினைத்து, பல நாட்கள் தூக்கத்திலிருந்து விடியற்காலை வரை வெறித்துப் பார்த்தபடி முழித்துக் கொண்டிருப்பார். அவருடைய மனைவி கமலாவிற்கும் தெரிந்தது தான். அவள் இருக்கும் நிலையில் கணவருக்கு ஆறுதல் சொல்வது என்பது அவர் மனதை தூண்டிவிடுவது மாதிரி ஆகிவிட்டால் ? என்று பேசாமல் அமைதியாகி விடுவாள்.

எத்தனை நாளைக்குத் தான் இப்படி மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது, ஒரு கடைத்தெருவில் எப்போதோ கண்ணில் பட்டவளாக ... கடைசியாய் பார்த்து கிட்டத்தட்ட மாதக்கணக்கில் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது , அவளுக்கு ஒரு வயதுள்ள குழந்தை என்று யாரோ ஒரு நண்பர் சொன்னதை கேள்விபட்டதிலிருந்து ஒரே தவிப்பாக இருக்கிறது.

"என்னப்பா... தாமோதரா, யாரு சொல்லனும்னு எதிர்பார்கிற, ஆனது ஆகிப் போச்சு...உன்னோட வாரிசை நீ போய் பாக்கறத்துக்கு எதுக்கு, யாருக்காக தயங்குற, அது உன்னை மாதிரியே அச்சு அசலாக இருக்காமே" என்று அவருடைய நண்பர் தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவர் சொல்வதில் ஞாயம் இல்லாமல் இல்லை, அவருக்கும் பார்க்க வேண்டுமென்று ஆசைதான், அவளை ஒரேடியாக உன் உறவே வேண்டாமென்று தலைமுழுகியதையும் மறக்க முடியவில்லை. தாமோதரன் ரொம்ப பிடிவாதம் கொண்டவர். அவர் தீர்மானித்தால் உடனே செயல்படுத்திவிடுவார், எப்படியோ அவரின் இந்த முடிவுக்கு, அவர் மனைவி கமலாவும் அதிகம் பாதிக்கப்பட்டவள் என்பதால் அவளை நினைக்கும் போதெல்லாம், 'துரோகி' என்றே நினைத்து அமைதியாக இருந்தாள். ஆனால் அவளுக்கும் இந்த வாரிசு விசயம் தெரியவந்ததும், தன் கனவரின் மனநிலை குறித்து கவலை அதிகமானது.

இன்று எப்படியும் ஒரு முடிவு எடுத்துவிடுவது என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டார். நாளெல்லாம் புதுவாரிசின் நினைவிலேயே
கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனைவியை எப்படியும் சமாளித்து விடலாம், நியாயமாக எடுத்து சொன்னால் புரிந்துகொள்வாள், ஒரு வாராக தன்னை தேற்றிக்கொண்டு 'இப்போ அவ எங்கே இருக்கிறா ?' என்று நண்பரிடம் இடம் விசாரித்துவிட்டு...அவளின் வீடு தேடிசென்றாள்.

மெதுவாக அக்கம், பக்கம் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். கதவு சாத்தி இருந்தது...அச்சத்துடன் அதன் மேல் கைவைக்க ... தாள்பாள் போடாமல் இருந்ததால் திறந்து கொண்டது...உள்ளே சென்றார்... வீட்டின் கூடத்தில் யாரும் இல்லை, குளியல் அறையில் குளிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தூளியில் குழுந்தை தூங்கிக் கொண்டிருந்தது, மெதுவாக தூளியை விளக்கி எட்டிப் பார்த்தார். அப்படியே தாமோதரரை உரித்துவைத்து அச்சில் வார்த்த பதுமை மாதிரி அழகாக இருந்தது. அந்த நிமிடம் அவருடைய அனைத்து உணர்வுகளும் எழுந்தது, பாசமுடன் குழந்தையின் தலையில் மெல்லமாக வருடிவிட்டு, பூப்போன்று தூக்கி உச்சியில் முத்தமிட்டுவிட்டு...மீண்டும் படுக்க வைத்துவிட்டு... சத்தமில்லாமல் வெளியேறினார்.

அன்று இரவு இந்த விசயத்தை எப்படி மனைவியிடம் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பியிருந்தாலும், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் மெதுவாக படுக்கையை விட்டு வெளியே வந்து ஈஸிச்சேரில் அமர்ந்தார். மெதுவாக கேட்ட காலடி சத்தம் நெருங்க திரும்பிபார்த்தார்.

"என்னங்க, நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன், சரியான்னு சொல்லுங்க, மனசை புடுங்குது" என்றாள் அவர் மனைவி

"என்ன விசயம் கேள்விபட்டம்மா?"

"நீங்க அவவீட்டுப் பக்கம் போனத பாத்ததா எதிர்வீட்டுக்காரங்க சொன்னாங்க..."

சற்று அதிர்ச்சியுடன், மெதுவாக ஆரம்பித்தார்,

"கமலா, நான் போனது உண்மை தான்" என்றார் தாமோதரன். கணவரை ஆச்சர்யமுடன் பார்த்தாள் கமலா, தாமோதரன் தொடர்ந்து,

"இவ்வளவு நாள், வைராக்கியமா இருந்தது உண்மை தான், ஆனால் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்கமுடியும், எனக்கும் வயச்சாயிடுச்சி"

மேலும் தொடர்ந்தார்.

"பாரு கமலா, நம்ப மகள், காதல்னு, அவளா தன்னுடைய வாழ்கையை அமைத்துகிட்டத நாம ஏத்துக்காம அவளை அவமானப் படுத்தியதும்,
நாம அவளை விலக்கி வைத்து, எங்கமேல் நம்பிக்கை இல்லாமல் எங்களுக்கு ஒரு துரோகத்தை பண்ணிட்டியே ...எங்க மூஞ்சில இனி முழிக்காதே என்று நம்மகிட்ட ஆசி வாங்க வந்த அவளையும், அவள் கணவனையும் துரத்தியதை நினைத்து நினைத்தே... ஊர்வாயிக்கு பயந்து இவ்வளவு நாள் மெளனமாக, புழுங்கி வாழ்ந்தது போதும்..."

******* இன்னும் வேண்டுமானால் தொடர்ந்து படிக்கலாம் ********

"அவளை நாம தண்டிக்கல, நாமதான் நமக்கு தண்டனை கொடுத்துகிட்டு இருக்கோம், மூன்று வருடமாக அவள் செத்தாளா, இருக்காளான்னு தெரியாமல் வைராக்கியமாக இருந்துவிட்டோம், நமக்கு பேரன் பொறந்து இருக்கிறான், அவனுக்கு வயசு ஒண்ணாகுதுன்னு கேள்வி பட்டதிலிருந்து என்னால அவனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஊர்வாயிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனா நம்ப பேரன் நாளைக்கு வளர்ந்து கேள்விகேட்டால், நம்பளால பதில் சொல்லமுடியாது, அதுதான் என்னோட வைராக்கியமெல்லாம் ஒடைஞ்சி போயிடுச்சு, போயி பார்த்தேன், அப்படியே அவனை அள்ளிக்கனும் போல இருந்தது"

"நாளைக்கு காலையில முதல் வேளையா, நாம ரெண்டுபேரும், போயி நம்ப மகளையும், மருமகனையும் பார்த்துவிட்டு, நம்ப பேரனை நம்ப வீட்டுக்கு அழைத்து கொண்டுவரனும்" என்று சொல்லி கண் கலங்கினார்

"எனக்கும் இந்த விசயமெல்லாம் தெரியுங்க, ஒவ்வொரு நாளும், நீங்கள்படும் அவஸ்தையை பார்த்துகிட்டுதான் இருக்கேன், என்னைக்காவது நீங்க, பிடிவாதத்தை தளர்த்தி, மனம் மாரமாட்டிங்களான்னு காத்துக்கிட்டு இருந்தேன், என் வயித்தில பால வார்த்திட்டிங்க" என்று உணர்ச்சி வசப்ப்பட்டாள் கமலா.

இரண்டு வருடங்களுக்கு பிறகு, மன நிறைவுடன், நாளைய விடியலை எதிர்ப்பார்த்து தூங்கப்போனார்கள் தாமோதரன் தம்பதிகள்.

பின்குறிப்பு : குமுதம் டைப் பழைய கதை படிப்பவர்களுக்கு அர்பணம், இதை எழுதியும் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கதையில் வரும் கதை வசனம், பெயர்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால் இது போன்று நடப்பவைகள் நிஜமானால் நல்லதுதான். இந்த கதை போட்டிக்கு அல்ல.

18 டிசம்பர், 2007

நஒக: ஆண்கள் மட்டும் தானா ?

'இன்னும் அரைமணி நேரத்திற்குள் எப்படியும் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்துவிட முடியும் ... காரணம் அன்று ஞாயிற்றுக் கிழமைதான். சீரான போக்குவரத்து இருக்கிறது ... இன்னும் பலவாறு எண்ணங்களுடன்...சென்னை நந்தனம் பகுதியை நெருங்கியதும்... போக்குவரத்து விளக்கில் சிகப்பு நிறம் வர காரை நிறுத்த வேண்டியதாகிவிட்டது திவ்யாவிற்கு. காரின் பின் இருக்கைப் பக்கம் பார்த்தாள்,

தூக்கக் கலக்கத்தில் எழுப்பியதால் பின் சீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் மூன்று வயது மகன் .

வலது பக்க கண்ணாடி வழியாக பார்த்தாள்... பக்கத்துக் காரில் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாள். அவன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான் பக்கத்தில் நான்கு வயது பெண் குழந்தை...அவனது குடும்பமாகத்தான் இருக்கும்... அவன் வேறு யாருமல்ல...

*******

ஐந்து ஆண்டுகளுக்கு முன்

'டிஜிட்டல் ட்ரீம்ஸ்' என்ற விசுவல் கம்யூனிகேசன் நிறுவனத்தில் விற்பனை பணியின் உதவியாளராக (சேல்ஸ் அசிஸ்டெண்ட்) திவ்யா வேலைக்குச் சேர்ந்தாள்.

அலுவலகத்தில் விற்பனைப் பிரிவின் மேலாளாரான 'நரேன்' அவளை நேர்முகம் செய்து அந்த வேலைக்கு எடுத்திருந்தான். பார்ப்பதற்கு அவ்வளவு பர்சனாலிட்டி இல்லாவிட்டாலும், உடை மற்றும் நடவடிக்கையில் ஒழுங்கை கடைபிடிப்பவனாகவே இருந்தான்.

"மிஸ் திவ்யா...உங்களுக்கான வேலை தொடர்புடைய எல்லா டீடெய்ல்ஸ் இதுல இருக்கு...எதாவது புரியவில்லை என்றால் உடனே கேளுங்க..."

"ம் சரி சார்..."

"என்னது சாரா ? ...எனக்கு அதெல்லாம் பிடிக்காது...நரேன் என்று பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க...பேரண்ட்ஸ் பெயர் வைத்திருப்பதே கூப்பிடுவதற்குத்தானே..."

"ம் சரி சார்..."

"மறுபடியும் சாரா ... சரி அடுத்த முறை கூப்பிடும் போது பெயரைச் சொல்லியே கூப்பிட்டு பழகுங்கள்..."

அவளைவிட ஐந்து வயதாக அதிகம் இருக்கும் என்று நினைத்தாள்...இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் பிறகு தெரிந்தது

பத்து நாள் சென்று,

"மிஸ்டர் நரேன்....நான் அனுப்பிய கொட்டேசனில் ஒரு மிஸ்டேக்...க்வாண்டிட்டி தப்பாக எண்டர் பண்ணிட்டேன்...வெர்ரி சாரி"

"கொஞ்சம் கவனாமாக இருங்க...நான் பார்த்து சரி பண்ணி அனுப்பி இருக்கிறேன்...பரவாயில்லை...அடுத்து அடுத்து இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...போஸ்ட் வெரிபிகேசன் மிக முக்கியம்...தப்பாக இருந்தால் ஆர்டர் கைக்கு வராது..."

"கவனம் எடுத்துக் கொள்கிறேன் மிஸ்டர் நரேன்..."

"மிஸ்டர் கூட வேண்டாம் ... நரேன் என்று சொன்னால் போதும்...நமெல்லாம் ஒரே நிறுவனத்தில் ஒரு குடும்பமாக இருக்கிறோம்"

"ஓகே நரேன்..." சிரித்துக் கொண்டே சொன்னாள்

அவனது அணுகு முறை அவளுக்கு பிடித்திருந்தது..முன்பு வேலை பார்த்த இடத்தில் கொட்டேசனில் ஒரு சின்ன தவறு செய்திருந்தாள் கூட இவளது மேலாளர் இவளை அழவைத்துப் பார்த்ததையும் ... நரேன் நடந்து கொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் மகிழ்வாக இருந்தது. ஒரு மேலாளரைப் போன்று இல்லாமல் நட்புடன் அவன் நடந்து கொள்ளும் விதம்...உணவு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என செல்லச் செல்ல அவளுக்குள் அவன் நிறைந்துவிட்டான்.

'ஒரு ஆண் தான் சொல்லனும்... என்று எதிர்பார்க்கனுமா...என்னை அவருக்கு பிடித்து இருக்கு...எனக்கு அவரை...' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவன் விடுப்பு எடுத்தால் கூட சோர்ந்து போகும் நிலைக்கு அவனை நினைக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை அவன் விடுப்பு எடுத்த அன்று தெரிந்து கொண்டாள்.

மறுநாள் காலையில்,

இன்னிக்கு எப்படியும் அவரிடம் தன் விருப்பத்தை முந்திக் கொண்டு வெளிப்படையாக சொல்லிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தாள்.

வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் படபடப்பாக இருந்தது...அவன் அன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

30 நிமிடங்கள் கடந்ததும் இண்டர்காமில் அழைத்தான்.

நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்தாள்

"திவ்யா...யாரிகிட்டேயும் இதுவரை சொல்லவில்லை"

'.....' உள்ளுக்குள் நடுக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்

"உங்களிடம் தான் முதலில்... சொல்கிறேன்..."

"பலர் என்னுடன் வேலை பார்த்திருக்கிறார்கள்..."

"........"

"... கொஞ்சம் சகஜமாக பேசினால் கூட ... அவர்களிடம் வழிவதாகவும்... தப்பாக நினைச்சிடுறாங்க... நீங்க கிரேட்..."

'......'

'இந்தாங்க இன்விட்டேசன்...அடுத்த மாதம் திருமணம்...அப்பா அம்மா மற்றும் குடும்பத்தை கூட்டிவந்துவிடுங்கள்...முடிந்தால் உங்க வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்கிறேன்...'

உள்ளுக்குள் பிரளயம் நடந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளமால்

'கங்கிராட்ஸ் நரேன்.......' அவனுக்கு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தாள்.'

அந்த உணர்வில் இருந்து விடுபட நினைத்தவளாக... அதன்பிற்கு அவளுக்கு அங்கு வேலை செய்யவிருப்பம் இல்லை ... எதோ காரணங்களைச் சொல்லி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

*********
கார் ஹாரன்ங்கள் பலமாக அடிக்க நினைவில் இருந்து மீண்டவள் மீண்டும் வலப்பக்கம் பார்த்தாள். அவனது கார் அங்கு இல்லை.

பின் சீட்டில் இருந்து குரல்...

"அம்மா...அம்மா....அப்பா இன்னேரம் ப்ளைட்டில் இருந்து இறங்கி நமக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரா ?"

கண்விழித்து மழலைக் குரலில் கேட்டான் நரேன்.

பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.

16 டிசம்பர், 2007

நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)

மாலை 6.30 மணி மகாபலிபுரம் கடற்கரை மணலில் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள் சிவாவும், சித்ராவும்.

3 வருடமாக காதலிக்கிறார்கள், சித்ரா நெருப்பு மாதிரி இதுவரை அவனை நெருங்க விட்டதே இல்லை. அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்தான் சிவா... சித்ரா ரொம்ப ஓவர் ... முத்தத்துக்காக அவ்வப்போது அவளுடன் சினுங்குவதைக் கூட அனுமதிக்கமாட்டாள்.

'ஒரு முத்தம் தானே கொடுத்துடலாம்னு நினைப்பேன்...' - சித்ரா

'அப்பறம்....ஏன் விலகி விலகி ஓடினாய்?' - சிவா

'அது இல்லேடா...அப்பறம் ஒண்ணு ஒண்ணாக ..தவறில்லைன்னு நினைக்க ஆரம்பிச்சு எல்லை மீறிடுவோம்...'

கோபமாக சிவா 'அப்படியே மீறினால் தான் என்ன ? ... ஏய் என்னை சந்தேகப்படுறியா...எல்லாம் முடிஞ்சு உன்னை விட்டுடு...'

அவன் வாயை தன் கையால் பொத்தினாள்

'நம்ம கல்சருக்கு சரிவராது சிவா...இதெல்லாம் தெரிஞ்சா என் பேரண்ட்ஸ் வெட்டி போட்டுடுவாங்க...எனக்கும் விருப்பம் இல்லை'

எப்போதாவது சிவா உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் இதுபோன்று எதாவது பேசி சமாளித்துவிடுவாள்

*****

மூன்றுமாதமாக ப்ளான் பண்ணி இன்னிக்கு மகாபலிபுரம் கூட்டி வந்திருக்கிறான். மேலே சொன்னது போல் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவள் தோள் மீது சாய முற்பட்டான்

'சிவா...பப்ளிக் ப்ளேஸ்...அங்க பாரு நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்' கண்களால் காட்டினாள்

'பார்த்தால் பார்கட்டும்..நாம...'

'நீ ஆண் உனக்கு கூச்சம் இருக்காது...எனக்கு உடல் கூசுகிறது...வா...நாம் போய்டலாம்...'

'ம்...சரி..ஹோட்டல் ரூமுக்கே போய்டலாம்' என்று கண்ணடித்து எழுந்து அவளுக்கு கைகொடுக்க இருவரும் எழுந்தார்கள்

'சீ...போடா' என்று வெட்கத்துடன் சொன்னாள் ஆனால் அவளால் தட்ட முடியவில்லை.அவனது கைகளைப் பற்றிக் கொண்டு அவன் பின்னே பழகிய நாய் குட்டிப் போன்று சென்றாள்

ஹோட்டல் அறைக்கு சென்று

இருவரும் குளித்துவிட்டு...கட்டிலில் அமர்ந்தார்கள்...

டிவியை ஓடவிட்டு...

அவளது மடிமீது தலைவைத்தான் அவன்...சிவா...இனிமேல் அவளால் செய்வதற்கென்று எதுவும் இல்லை என்று நினைத்தவளாகவும்...விருப்பத்துடனும்

ஆதரவாக அவன் தலையை கோதிவிட்டாள்

இருவரும் மெல்ல மெல்ல நெருங்கி....

அதன் பிறகு அவளால் எதையும் பேசவோ...தட்டவோ முடியவில்லை...

'டேய் லைட்டையாவது ஆப் பண்ணேண்டா...ஒரே வெட்கமாக இருக்கிறது'

'இன்னும் உனக்கு வெட்கமா ?'

அவர்கள் இருந்த மன நிலையினை கெடுப்பது போல் அவளது செல்போன் ரிங்கானது

'உன் போனா ... இந்த நேரத்தில்...?' அலுப்பாக அவன் சொல்லி முடிக்கும் போது

அருகில் வைத்திருந்த்த செல்போனை ஒரு கையை நீட்டி எடுத்தாள்,

'ஹலோ'


'ம் சரி...புரியுது...சீக்ரம் வந்திடுறேன்...ம் சரிப்பா'

'சித்ரா போனில் யாரு..?'

ஒரு கையால் போனை பொத்திக் கொண்டு

'அப்பா...தான் உங்க கிட்ட பேசினுமாம்'

அந்த நேரத்து படபடப்பிலும் வாங்கி பேசினான்

'சரிங்க மாமா...' தொடர்ந்தான்

'கல்யாண பத்திரிக்கை எடுத்து வந்திருக்கிறோம்...அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை ஆகாது... காலையில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துடுறோம்...நானே ட்ரைவ் பண்ணி வந்துடுறேன் யாரையும் அனுப்ப வேண்டாம்'

பேசி முடித்ததும்...போன்களையும்...லைட்டையும் ஆப் பண்ணிவிட...அறையில் மிதமான இருட்டும் மனதில் புத்துணர்வும் இருவருக்கும் பிறக்க...

ஹோட்டல் நிர்வாகத்தால் நன்கு அலங்கரிகப்பட்ட கட்டிலில் இருவரும்...(போதும் வேண்டாம்...ச்சீ)

அவர்களுக்கு இன்று காலை தான் திருமணம் நடந்தது. இன்னிக்கு அவங்களுக்கு...முதல் பகல் முடிஞ்சு 3 மணிநேரம் ஆச்சு

14 டிசம்பர், 2007

நஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...

"இந்த ஆட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்...இந்த தொழிற்சாலை இங்கு தேவையா ? அடுத்த மாநிலத்தால் கைவிடப்பட்ட மோசமான திட்டம். இந்த திட்டத்தினால் மக்களுக்கு பயனா ? ஒரு மண்ணாங்கட்டியின் பயன்கூட இல்லை..., இந்த திட்டத்தினால் மாசு ஏற்படும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும், நாடு சுடுகாடு ஆகிவிடும், இறுதியாக எச்சரிக்கிறேன்...இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், நான் தீக்குளிக்கவும் தயார்..."

பலத்த கைத்தட்டல் வானைப் பிளக்க, தனது உரையை முடித்துக் கொண்டார்... எதிர்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சங்கரபாண்டி (அரசியல் வாதிகளுக்கெல்லாம் டிவி சீரியல் மற்றும் திரைப்படத்தில் இந்த பெயரைத்தான் வைக்கிறார்கள்)

இரண்டு நாள் சென்று சங்கரபாண்டியின் கட்சி அலுவலகத்தில் உதவியாளர் எழப்புளி ஏகாம்பரம் (இழைப்புளியால எதிர்கட்சித் தலைவன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது மண்டையில் அடிச்சு இரத்தம் ஒழுக வைத்ததால் அந்த சிறப்பு பெயராம்) ஒரு கையால் வாய்பொத்தி பவ்யமாக குனிந்து.. சன்னமான குரலில்...

"அண்ணே உங்களை தாஜ் ஹோட்டலில் சந்திக்கனுமாம் அமைச்சர் கலிவரதன் சீக்ரட்டாக சொல்லி அனுப்பி இருக்கிறார்' என்று கிசுகிசுத்தார்

சங்கரபாண்டிக்கு உற்சாகம் பொங்க...

"எழப்புளி....ஒருமாதம் ஆச்சு அவரைப் நேரில் பார்த்து ...சரி அந்த அமீதா நடிகைக்கு ஏற்பாடு பண்ணி இரவு 10 மணிக்கு தாஜ்ஜில் ரூம் புக்பண்ணிட்டு ... கலிவரதன் அண்ணனை அங்கே வரச் சொல்லி சொல்லிவிடு"

********
ஹோட்டல் தாஜ் இரவு 9.00 மணிக்கு,

சிக்கன் மட்டன் இன்னும் பலவகை ஊர்வன அயிட்டங்கள் பொன்னிறமாக வறுபட்டு டேபிளை நிறைக்க, பொன்னிற திரவ கோப்பைகளில் ஐஸ்கட்டிகள் மிதக்க...சிக்கனைக் கடித்துக் கொண்டே குளறலான குரலில்

".... சங்கரபாண்டி...நீ எதிர்கட்சி ஆளுதான்...ஆனா எப்போதும் நம்ம ஆளு...என் ஆளு..."

" ....ம்...ம் கலியண்ணே...நாம பார்காத அரசியலா...எங்க கட்சி தலைவனுக்கே நான் தாண்ணே தலைவன்...என்கிட்டதான் அம்புட்டு சீக்ரெட்டும் இருக்கு..."

"சரிதான் சங்கரபாண்டி...எப்படி எப்படி...தீக்குளிக்கப் போறியா...?" வெடிச்சிரிப்பாக சிரித்தார் கலிவரதன்

"நீயே சத்தம் போட்டு காட்டிடாதே கலியண்ணே...நம்ம டீலு அது....மறந்துடாதே கமிசன்..."

"இங்க ஒரு பயலும் இல்ல...எப்படி...? திட்டத்த எதிர்கட்சி எதுர்க்கலைன்னா...சமூக ஆர்வலர்கள் போராடுவாங்க...முடங்கிடும்... நானே எதிர்கிறேன்...பத்து பர்சண்ட் கமிசனை வெட்டு...கண் துடைப்பாக எதிர்கிறேன்னு...சொன்னமாதிரியே நல்லாதான்யா நடிச்சே...சினிமாகாரன் தோத்தான் போய்யா..." மறுபடியும் வெடிச்சிரிப்பாக சிரித்தார்

"அண்ணே நீங்க தான்ணே தெறமசாளி ...சாராயக்கடையில் ஊறுகா வித்துட்டு இன்னிக்கு தொழில் துறை அமைச்சராக...."

"ஹஹ்ஹஹ் ஹா.....இதெல்லாம் படிப்படியான வளர்ச்சி தானே சங்கரபாண்டி...நாம ஒண்ணுகுள்ள ஒண்ணு... நாம ஒரே ஊரு... ஒரே சாதி...நம்பிக்கை பாசம் தானே ...நான் உன் சொந்தக்காரன் பேரிலும்...நீ என் சொந்தக்காரன் பெயரிலும் ஏகப்பட்டதை சுருட்டி வச்சிருக்கோம்..."

"சீக்கரம் முடிங்கண்ணே...அமீதா நமக்காக வெயிட்டிங்...அவ சினிமாவில் சிக்குனு ஆடும் போது பார்க்கிறதைவிட இன்னிக்கு ஆட்டத்தை நேரில பாருங்க..."

உட்கார்ந்தபடியே இடுப்பை குலுக்கிக் காட்டினார் சங்கரபாண்டி

"ஆட்டத்தை மட்டும் தனா ?" கலிவரதன் சொல்லி முடிக்கும் போது

இந்த முறை சங்கரபாண்டி இடிமுழக்கமாக சிரித்தார்...சிரிப்பு அடங்கும் முன்னே

நெஞ்சைப்பிடித்துக் கொண்டு...

"கலிவரதண்ணே....ஆ.... ஆ" அவ்வளவுதான் வாயைப் பிளந்து அப்படியே சாய்ந்துவிட, விழிகள் மேலே பார்க்க, சிக்கன் மசாலா உதட்டின் ஓரங்களில் காய ஆரம்பித்து

முதல் அட்டாக் வந்தது முன்பே அறிந்தவர் என்றாலும்...இன்று திணறிய மூச்சை சீராக்க பினாமி இதயம் ஒன்றைக் கூட அவர் இதுவரை வளைத்துப் போட வில்லை என்பதால் அவரின் ஒரிஜினல் இதயம் ஏக்கத்துடன் கடைசி துடிப்பை நிறுத்திக் கொண்டது

11 டிசம்பர், 2007

நஒக : மோகம் முப்பது நாள் ! (adults only)

"என்ன வளர்த்திருக்காங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை..."

கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல கணவன் தினேஷ் இப்படி கேட்பான்னு வித்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சி கலந்த வியப்புடன்

"என்னங்க என்ன சொல்றிங்க..."

"வீட்டை கழுவுறேன்னு வீடு முழுவதும் தண்ணியா நிற்குது...அம்மா வழுக்கி விழுந்தாங்கன்னா ?" கேள்வியாக பார்த்தான்

"அவள ஏண்டா திட்டுறே...நான் தான் கொஞ்ச நேரம் ஊறவைத்து திரும்ப தேய்த்து கழுவி விட்டால் தரை பளிச்சென இருக்கும்னு சொன்னேன்..."

"அம்மா...உங்களுக்கு ஒன்னும் தெரியாதும்மா....கவனக் குறைவாக விழுந்துட்டிங்கன்னா ... என்ன செய்றது...அதெல்லாம் வேண்டாம் அத்தை நானே சோப் வாட்டர்... டெட்டால் லிக்விட் போட்டு தேய்த்து கழுவுகிறேன் என்று இவ சொல்லி இருக்கனும்...இன்னேரம் தரையெல்லாம் காய்ஞ்சிருக்கும்"

அடுத்த இரு நாள் சென்றதும், காலையில்

"வித்யா...இது என்ன ?"

பயந்து கொண்டே கேள்வியாக பார்த்தாள்

"இது என்ன சட்னி வாயில வைக்க சகிக்கலை...காரம் கம்மியாக இருக்கு...உப்பு குறைவாக இருக்கு...?"

நிஜமாகவே உப்பும் காரமும் குறைவாகவே இருந்திருக்கிறது

"என்னங்க நேற்று உப்பு ஜாஸ்தின்னு சொன்னிங்க..இன்னிக்கு கம்மின்னு சொல்றிங்க..."

"அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா...நீயே நாக்குல தொட்டுவச்சு பாரு.."

"டேய் அவளை ஏண்டா எப்போ பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கே...நான் வயுறு கடுப்பாக இருக்கு காரம் கம்மியாக வையுன்னு சொன்னேன்..காரம் கம்மியாக இருக்கிறதால உப்பு கம்மியாக இருப்பதாக தெரியும்..."

"மருமகளுக்கு சப்போர்டா...என்னம்மோ போங்கம்மா"

********

இரவு 10:30 மணிக்கு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் பார்க்காதுபோல் வந்து முதுகுபக்கத்தைக் காட்டியபடி படுத்துக் கொண்டாள்

மெல்ல நெருங்கிய தினேஷ், அவள் முதுகை அசைத்து

"ஏய் வித்யா எம்மேல கோபமா ?"

சோகமாக அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு

"உங்களுக்கு இராத்திரி ஆனாதான் நான் ஒருத்தி இருப்பதே ஞாபகம் வரும்....கல்யாணம் ஆன 10 நாளைக்குள்ள உங்களுக்கு நான் கசந்துட்டேனா ?"

"இல்லே வித்யா..."

"பொய் சொல்லாதிங்க...எதைச் செஞ்சாலும் எதாவது ஒரு குறை சொல்லிக் கிட்டே இருக்கிங்க..." வருவதற்கு தயாரான அழுகையுடன் கோபம் காட்டினாள்

பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி..அறையின் வெளிச்சத்தைக் குறைக்க...இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு....மெதுவாக பேசு என்று அவளது வாயைப் பொத்திவிட்டு...மிக குறைவான குரலில்.. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே

"வித்யா...எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு முந்தி நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம் அது உனக்கும் எல்லோருக்குமே தெரியும்...அக்கம்பக்கத்து அம்மாவோட செட் பெண்கள் எல்லாம்...ஒரு மருமக வந்துட்டா அப்பறம் மூலையில் தான் உட்காரனும் .. உன் மகன் உன்னை கண்டுக்க மாட்டான் னு சொல்லி சொல்லி வச்சிருந்தாங்க...அதை அம்மா ஒண்ணும் பெருசா எடுத்துக்கல...

"........" அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்

"...இருந்தாலும் திடிரென்று அவங்க மேல இருக்கிற கவனம் குறைஞ்சு போச்சுன்னு அவங்க நினைக்க ஆரம்பிக்கலாம்..காரணம் கல்யாண தம்பதிகள் எல்லோருக்குமே அவங்க உலகம் மட்டும் தான் அவங்களுக்கு தெரியும்...பெரியவங்களுக்கு இதெல்ல்லாம் புரியாது..என்ன எதுக்குன்னே தெரியாமல் உள்ளே உண்டாகும் அந்த வெறுமையை கோபமாக மருமக பக்கம் திருப்புவாங்க...அதுக்கு இடம் கொடுத்தா அப்பறம் மாமியார் மருமகள் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்துடும்..."

"...ம்..." அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்

"... அப்பறம் தனிக்குடித்தனம் போ என்று வீம்புக்கு சொல்லுவாங்க..அவங்களால தனியா இருக்கிறது கஷ்டம் ... தனிமை இன்னும் வெறுப்பை வரவழைச்சிடும்... அதுக்குதான் நான் உன் மேல் பிடிப்பு இல்லாதது போல் அவங்க காதில, பார்வையில விழறமாதிரி நடந்து கொண்டேன்... அப்பெல்லாம் அவங்க உனக்கு எவ்வளவு சப்போர்டாக விட்டுக் கொடுக்காமல் இருக்காங்க ...புரிஞ்சிக்க ப்ளீஸ்"

அவன் பேச பேச உணர்வலைகள் மாறி மாறி வந்து அவனுடைய பெரும்தன்மையும், பொறுப்புணர்வையும் நினைத்து ....அவன் உள்ளங்கையில் தன் விரலால் கோலமிட்டுக் கொண்டே...

"சாரிங்க...இது எனக்கு புரியலைங்க.."

"நான் உங்கிட்ட சொல்லிட்டே அதுபோல் நடந்திருப்பேன்..நடத்துறது நாடகம் என்று தெரிந்த நீ 'களுக்' என்று சிரித்து காட்டிவிட்டால்... அப்பறம் அவர்களை ஏமாத்துவதாக தவறாக நினைத்துடுவாங்க...ஒரு இரண்டு மாசம் ஆனால் அப்பறம் இதெல்லாம் தேவைப்படாது...நம்ம இருவர் நடவடிக்கையின் மேல் உள்ள கவனம் குறைந்துவிடும்... ஒருவருசத்துல ...பேத்தியோ...பேரனோ பிறந்தால் அது கூடவே பொழுதை ஓட்டிடுவாங்க ..."

வித்யா வெட்கப்பட...

அதற்கு மேல் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது போர்வைக்கே கேட்டு இருக்காது... நமக்கு ஏன் அவ்வளவு அந்தரங்கமெல்லாம் ?

*****************

அடுத்த நாள் காலையில் குளியல் அறையில் இருந்து அவன் குரல்

"ஒரு வெந்நீர் கலக்கி கூட வைக்கத் தெரியலையே... உங்க வீட்டில் நிஜமாகவே மகாராணியாகத்தான் இருந்தியோ...?"

"என்னடா காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா அவளை கரிச்சு கொட்ட..." -ஹாலில் இருந்து அம்மா

சமையல் அறையில் இருந்த வித்யா சுற்றிலும் முற்றிலும் பார்த்து 'களுக்' என்று சிரித்துக் கொண்டு குளியலைறைக்குள் சென்றாள். எங்கு கிள்ளினாள் என்று தெரியவில்லை.

"ஆ...அம்மாடி...." என்று கத்தினேன்

"தினேஷ்...என்னடா ஆச்சு...?" பதட்டத்துடன் அம்மாவின் குரல்

"ஒண்ணும் இல்லைம்மா....வெந்நீர் பதமாக இருக்கான்னு பார்த்தேன் ...ரொம்ப சூடு கையை சுட்டுக்கிட்டேன்... நீங்க பதறாதிங்க..."

நஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...

"லொக்...லொக்" சிகரெட் புகை நாற்றத்தைத் தொடர்ந்து பலமான இருமல் சத்தம்

"வீட்டுக்கு வெளியே போய் அந்த கர்மத்தை வச்சிக் கூடாதா ?, லொக் லொக்...போட்டுக் கொண்டே... இந்த கண்டராவியை விட்டுத் தொலைஞ்சா தான் என்ன குடி முழுகிடவா போவுது ?"

ஐம்பத்து நான்கு வயதை நெருங்கும் ராமசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... அவர் மனைவி கமலம்

ஆழமாக சிகெரெட்டை இழுத்துவிட்டுக் கொண்டே

"ஏண்டி நீ தாளிக்கும் போது வர்ற பொகையை விடவா, இது மோசம் ?"

"நான் ஒருவார்த்தை அதைப் பற்றிக் கேட்டால் ... உடனே என்னைய கொற சொல்லனும், அப்படியும் இல்லாட்டி என் குடும்பத்தை இழுக்கனும் அதைத்தானே பண்ணுவிங்க ?"

சத்தமில்லாமல் இருந்தார். 'வர வர ஞாபக மறதி அதிகம் ஆச்சு' வழக்கமாக எட்டு ஸ்டிக் சிகெரெட்தான் பிடிப்போம், நேற்று இரண்டு கூட ஆகி இருக்கு, குறைக்கனும்' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் எண்ணி எண்ணிதான் பிடித்தார், அப்படியும் எண்ணிக்கையில் இரண்டு குறைந்து போனது ஆச்சரியமாகிவிட்டது. 'அவனாக இருக்குமோ, எதுக்கும் மனைவியிடம் கேட்டுவிட வேண்டியதுதான்.

"கமலா, கதிரு புதுசா சிகரெட் பிடிக்க பழகி இருக்கானா ?"

அதிர்ச்சியும் கோபமாக அவரைப்பார்த்து

"அந்த வேலையெல்லாம் என் பையன் செய்ய மாட்டான்...."

"இல்லடி, இரண்டு சிகெரெட்டை காணும்.....அதான்"

"எடுத்து பற்றவைக்காமல் மறந்துட்டு எங்கேயாவது வச்சிருப்பிங்க ... தேடி பாருங்க..."

"எதுக்கும் அந்த பய சட்டையை துவைக்கும் போது பாக்கெட்டில் சிகரெட் தூள் எதுவும் இருக்குதான்னு பாரேன்"

"பெத்த புள்ளையை கூட நம்ப மாட்டிங்களே..."

நாளுக்கு நாள் சிகரெட் காணாமல் போவது ஒருவாரம் தொடர்ந்தது, தாமே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்

அன்று இரவு பத்து மணிக்கு மேல் கட்டிலில் அரை தூக்கத்தில் படுத்து இருந்தார்.

மனைவி கமலா சமையல் அறையில் அன்றைய வேலைகளை முடிப்பதற்கு பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள்

யாரோ வருவது போன்று இருந்தது, அவன் தான் ... மகன் கதிர் ...அவர் தூங்கும் படுக்கை அறைக்குள் மெல்லமாக அடியெடுத்து வைத்து வருகிறான். ' நினைச்சேன்... நினைச்சேன்' என்று நினைத்தவர் தூங்குவது போல் இருந்து கொண்டே கவனிக்கிறார்.

சிகரெட் பாக்கெட்டை திறந்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வெளி ஏறினான்.

திடுக்கிட்டவர்....வேகமாக எழுந்து அவன் பின்னால் சென்று கைகளை பிடித்துக் கொண்டார்

"அப்பா ... அது வந்துப்பா....." அகப்பட்டுக் கொண்டோம் என்று விழுங்கினான்

"எனக்கு தெரியும்டா...இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள தம்மு கேட்குதா ?"

இவர் போட்ட சத்தத்தில் மனைவி கமலாவும் வெளியே வந்து, நடந்ததை புரிந்து கொண்டு பேச முடியாமல் நின்றாள்

"அப்பா...சாரிப்பா...நான்..."

"என்னடா சொல்லப் போறே...எல்லா வயசு பசங்களும் செய்றது தானேன்னு தானே, நானெல்லாம் எங்க அப்பா காசுல சல்லிக் காசைக் கூட என் பழக்கத்துக்கு பயன்படுத்தியது இல்லை...என் சம்பாத்தியத்தில தான் இதெல்லாம் செய்ய தொடங்கினேன்..."

"அதுல்லப்பா...."

"நான் உன்னை தடுக்கல...நீ சம்பாதிக்கும் போது உன் விருப்பபடி செய்...இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கலடா......சிகரெட்டைக் காணும் நமக்குத்தான் ஞாபக மறதின்னு நினச்சேன்"

"அப்பா....அப்பா..."

"....என்ன சொல்லப் போறே....இனிமேல் செய்ய மாட்டேன்னு தானே...கையும் களவுமாக மாட்டிக் கொண்டால் எல்லா பசங்களும் இப்படித்தானே செய்வானுங்க"

கண்ணை சுறுக்கி மூடிக் கொண்டு அதற்கும் மேல் பொறுமை இழந்தவனாக. கண்ணைத் திறந்து நேராக அவர் கண்களைப் பார்த்து

"என்னை மன்னிச்சிடுங்கப்பா....சிகரெட் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியலை... அதிகமாகவே இறுமுறிங்க...இந்த வயசு காரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றத்துக்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம் என்று டாக்டர் சொல்றாங்க.... நான் சொன்னால் கேட்பிங்களா... எங்கே நானும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று உங்களுக்கு தெரிந்தால் ... ஒரு வேளை நிறுத்திடுவிங்க என்று நினைத்துதான் ... உங்க சிகரெட்டெல்லாம் அவ்வப்போது எடுத்தேன்... இங்கே பாருங்க எல்லாம் அப்படியே இருக்கு"

மேசை கீழ் டிராயரின் அடிப்பகுதியில் அத்தனை சிகரெட்டுகளும் இருந்தன.

பேச்சற்று ... கண்களில் கண்ணீர் முட்ட ... மகனை அப்படியே தழுவிக் கொண்டார். கமலம் மகனின் செயலை நினைக்க புடவை தலைப்பும் ஈரமானது.

*************

(தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்..
- குறள்

தம்முடைய மக்கள் தமக்குச் செல்வம். என்றாலும், செல்வத்தைப்போல மக்களும் பல நண்மைகளுக்கு உதவக்கூடிய நற்குண் நற்செயல்கள் அமைந்தவர்களாகப் பிறப்பது மக்களைப் பெற்றவர்களுடைய வினைப்பயனைப் பொருத்துத்தான்.)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்