பின்பற்றுபவர்கள்

திரைமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 அக்டோபர், 2010

எந்திரன் சொல்லும் தீர்ப்பு !

வழக்கமாக காது பிளக்க அடிக்கப்படும் விசில்கள் கூட நான் பார்த்த திரையரங்கில் இல்லை. திரையரங்கில் அத்தனை பேருமே 'டீசண்ட் பீப்பிள்ஸ்' தானா என்று வியக்க வைத்தது. படத்தில் இரஜினி எங்கே என்பதற்கு படம் முடிவதற்கு முன் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. வழக்கமாக ரஜினி செய்யும் ஸ்டைல்கள் படத்தில் இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எதிர்ப்பார்பையும் வில்லன் ரோபோவில் சிறப்பாக செய்திருக்கிறார். இவ்வளவு திறமையான நடிகர் ஏன் விசிலடிப்பதற்கு மட்டுமே இதுவரை படங்கள் நடித்தார் ? இரஜினி படங்களில் மாறுபட்ட படம் எந்திரன் என்றால் மிகை அல்ல. வழக்கமான ரஜினியின் அதிரடி கதாநாயகன் எந்திரனில் இல்லை என்பதால் இரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றம் தான். படத்தில் ரோபாக அவரே நடித்திருக்கிறார் என்பதை நம்பும் படி இல்லை அந்த அளவுக்கு இரஜினி ரோபோவாகவே மாறி இருக்கிறார். விஞ்ஞானி ரஜினியும் ரோபோ இரஜினியும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவராக ரஜினி அந்த பாத்திரங்களுக்குள் நுழைந்தே நடித்திருக்கிறார். மற்ற படங்களில் நடித்த போது அவருக்கு கிடைத்த சிறந்த நடிகருக்கான விருது எந்திரனுக்கு கிடைத்தால்/ கொடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இரஜினியின் எந்திரன் அவதாரம் அட்டகாசம். இரஜினிக்குள் இருந்த வில்லன் நடிப்பு அப்படியே தான் இருக்கிறது, இதுவரை அதை வில்லன் பாத்திரங்களுக்கு அறைகூவல் விடும் கதாநாயகனுக்காக மட்டுமே வில்லானாக தெரியும் படி நடித்தார். இந்தப் படத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிருபனம் செய்திருக்கிறார். இவ்வளவு நாட்களாக இவருக்குள் இருந்த வில்லனை தூங்கவைத்தவர்கள் தயாரிப்பாளர்களா இயக்குனர்களா ? அல்லது மாஸ் ஹிரோ என்று இவரே போட்டுக் கொண்ட வேடமா ? தெரியவில்லை. இருந்தாலும் முதல் முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு அறைகூவல் விடும் வில்லன் பாத்திரத்தில் தன்னாலும் செய்ய முடியும் என்று காட்டி இருப்பது திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றபடி இது போன்ற நடிப்பு இரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே. காதல் பாடல்களில் இரஜினி ரசிகர்களுக்கான ஸ்டைல் இருக்கிறது. மற்றபடி சயின்டிஸ்ட் ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளிக் கேரக்டர் என்பதை ரஜினி ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு அட்டகாசம், இன்னும் ஒருமுறை பார்க்கக் கூட எனக்கு தோன்றுகிறது. என் மகளுக்கும் எந்திரன் மிகவும் பிடித்திருந்ததாம்.

ஷங்கர் படம் தான் என்பதற்கு கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்தும், ரிச் சீன்ஸ் எனப்படும் செலவு மிக்கக் காட்சிகளைத் தவிர்த்து படத்தில் ஷங்கர் முத்திரைகள் இல்லை. வழக்கமாக ஊழலை ஒழிக்கிறேன். லஞ்சத்தை எதிர்க்கிறேன் என்று காட்சிப்படுத்துபவர் துவக்கத்தில் ரோபோவை இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கதையை நகர்த்தி அதையும் இடையில் மீட்டுக்கொண்டார். அவருக்கே அவரது தேசியவா(வியா)தி அவதாரம் போரடித்துவிட்டது போலும், அதனால் கதையை மாற்றும் கட்டாயத்தில் ரோபோ ஐஸ்வர்யாவை (சனா) காதலிக்க எடுக்கும் முயற்சியில் கொள்ளையடிப்பது, அதை விஞ்ஞானி ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதாக ஒரு வித காதல்கதை போல் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஒரு சில நையாண்டி வசனங்கள் சுஜாதா எழுதியவை என்பதாக தெரிகிறது. படத்தில் முழுதுமாக சுஜாதா பணியாற்றி இருந்திருந்தால் படம் கலகலப்பாக நகர்ந்திருக்கும். 2 1/2 மணி நேரத்திற்கும் மேலாக படம் ஓடுவது அயர்ச்சியைத் தருகிறது.

இடைவேளை வரையிலும் கூட ரோபோவை வைத்து ஸ்பைடர் மேன் அவதாரம் போல் எதுவும் பெரிதாக காட்சிகள் வைக்கப் போகிறார்களோ என்பதற்கு ஒரு ட்ரைன் சண்டைக்காட்சியைத் தவிர்த்து எதுவும் இல்லை. பிற்பாதியின் பாதியில் தான் படம் வேகமாக நகர்கிறது. பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார் ஐஸ். விஞ்ஞானி ரஜினியின் ஐஸும் சந்திக்கும் காட்சிகள் ஒருவருக்கொருவர் கோவித்துக் கொள்வதாகவும் அதன் முடிவில் பாடல் என்பதை அமைத்திருக்கிறார்கள், படத்தில் ரஜினிக்கும் ஐஸுக்கும் காதல் எவ்வாறு வந்தது என்பதைக் காட்ட மெனக்கடாமல் அவர்களை காதலர்களாகவே அறிமுகப்படுத்துகிறார் ஷ்ங்கர். பிறகு ரோபோ ரஜினி ஐஸை காதலிக்கக்த் துவங்குவதால் இரண்டுமுறை காதல் உருவாகும் காட்சிகளை அமைப்பது போர் என்று விட்டிருப்பார் போலும். ஐஸுக்கும் ரஜினிக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எதுவும் தெரியவில்லை, காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுவும் ரசிகர்களுக்கு அவர்களின் வயது தெரிந்திருப்பதால், இருவரிடமும் அது போல் பெரிதாக ரொம்பவும் எதிர்பார்க்க முடியவில்லை.

ரஹ்மான் இசைதான் படத்தை முழுதாமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது. அத்தனை பாடல்களும் ஏற்கனவே கேட்டுச் சென்றதால் படத்தில் காட்சிகளுடன் பார்க்க இன்னும் சிறப்பாகவே இருந்தது.

மனிதர்களைப் போல் சிந்திக்கத் தெரியும், உணர்ச்சிவசப்படும் ரோபாக்களால் மனித இனத்துக்கு பலன் எதுவும் இல்லை, மனித இனத்துக்கு போட்டியாகவும் எதிரியாகவும் அமையும், அதை அழித்துவிட வேண்டும் என்பதாக ஷங்கர் நீதிபதிகள் மூலம் தீர்ப்பு எழுதி இருக்கிறார். வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.

ரஜினி, ரஹ்மான் இவர்களின் உழைப்பிற்காகவும், தமிழில் இதுவரை வராத கிராபிக்ஸ் முயற்சிக்காக படம் பார்கலாம்.

13 செப்டம்பர், 2010

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா !

ஒருவார இடைவெளியில் திரையுலக நட்சத்திரங்களான நடிகர் முரளியும், பாடகி ஸ்வர்ணலதாவும் திரையுலகையும் திரை இசை இரசிகர்களையும் விட்டு மறைந்துவிட்டனர்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் மிகவும் இனிமையான பாடல் ஒன்று 'வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா' என்ற பாடல், இந்த பாடல் காட்சி படி கவுசல்யா ஒரு திருமணத்திற்கு வருவார் என்று நண்பர்கள் சொல்ல, அந்த திருமண ஊர்வலத்தில் பாடகராகச் சென்றால் கவுசல்யாவை பார்க்க முடியும் என்பதால் முரளி ஒத்துக் கொண்டு பாடச் செல்லுவார்.

கவுசல்யாவின் குரலை மட்டும் அறிந்தவராக படத்தின் இறுதிவரை காட்சிகளை அமைத்திருப்பார்கள். படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சான். தங்கர்பச்சான் முரளி மீது மிகவும் அன்பு கொண்டவர், முரளியின் இறுதி சடங்குகளின் போது துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தாராம்.

மெற்கண்ட பாடலைப் பாடியவர்கள் ஆண் குரலுக்காக எஸ்பிபியும் பெண் குரலுக்கு ஸ்வர்ணலதாவும் மிக நன்றாகப் பாடி இருப்பார்கள். தேவாவின் இசையில் பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. கிளாரிநெட், ட்ரம்ஸ் என ஊர்வலப் பாடல்களின் இசையில் கேட்க சலிக்காத பாடல், படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட அந்தப் பாடல்களை ஊர்வல இசைகளில் அடிக்கடி கேட்க முடிந்தது.

பாடல் காட்சியின் போது பாடகியாக நடிப்பவர் இடையில் தாகத்திற்காக சோடக் குடிப்பதாகவும் உடனேயே பெண் குரலில் தொடரவேண்டிய நிலையில் முரளியே குரலை மாற்றிப் பெண் குரலில் பாடுவதாக அமைந்தப் பாடல். சொர்ணலாதாவின் உருவத்தை ஒத்த ஒரு துணை நடிகை படத்தில் பாடலை பாடிவருவார். முரளி பெண் குரலில் பாடுவதாக அமைந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். பாடியது ஸ்வர்ணலதாவாக இருந்தாலும் முரளியின் அந்த நொடி நடிப்பு அவரே அதைப் பாடுவதாக ரசிகர்களை உணரவைத்தது.

'ஆட்டமா தேரோட்டமா ?' சொர்ணலாதாவை அடையாளப்படுத்தியதைப் போன்றே ரம்யா கிருஷ்ணனின் இடைகால மீள் வரவையும் அந்தப் பாடல் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சித்ராவின் பாடல்கள் வெளிவந்த காலங்களில் சொர்ணலதாவின் குரல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களும் இனிமையாக அமைய எல்லா முன்னனி இசை அமைப்பாளர்களிடம் ஸ்வர்ணலதா பாடி வந்தார்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போன்ற சோகப்பாடல் மட்டுமில்லாது மிகவும் விரைவான 'மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாயா' போன்ற பாடல்களிலும் தனி முத்திரையை பதித்தார்.

பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்று இனம் காண முடியாதது போலவே பாடகியில் இவர் இனிமையான குரலுக்கு சொந்தமானவர் என்பதாக நான் பாடல்களை ரசிப்பதில்லை, என்பதால் எல்லாப் பாடகிகளைப் போலவே ஸ்வர்ணலதாவும் இனிமையான குரலுக்குச் சொந்தகாரராகவே எனக்கு பட்டார். எந்த ஒரு தென்னிந்திய பாடகியும் தமிழில் பாடுவதன் மூலமே பெரும் புகழடைகிறார்கள் என்பதை ஸ்வர்ணலதாவும் நிருபணம் செய்துவிட்டார். மலையாளி என்றாலும் கூட ஒரு தமிழ் பாடகியாக தமிழ் மண்ணில் சென்னையில் இறுதி மூச்சை விட்டு தமிழ் பாடகியாக மறைந்திருக்கிறார் என்பதால் தமிழ் திரை இசை இருக்கும் காலம் வரை ஸ்வர்ணலாதாவும் போற்றப் பட வேண்டிய ஒருவர்.

ஸ்வர்ணலாதவின் குரலில் இனி புதிய பாடல்கள் கிடைக்காது என்று நினைக்கையில் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரை இசை நுகர்வாளன் என்ற முறையில் ஸ்வர்ணலாதாவின் மறைவில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.

முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.

9 செப்டம்பர், 2010

காலத்தை வென்ற முரளி !

ஒரு நடிகர் / நடிகை மக்கள் மனதில் நிற்பவரா இல்லையா என்பதை அவருடைய இழப்பு நிருபனம் செய்துவிடும் என்பது முரளி மறைவால் உண்மையாகி இருக்கிறது. சிலுக்கு ஸ்மிதா மறைந்த போது தான் அவருடைய ரசிகர்கள் அவருடைய கவர்சியை மட்டுமே ரசிக்கவில்லை என்பது உண்மையானது. நேற்று நக்கீரன் இணைய பக்கத்தின் தலைப்பில் முரளிப் படத்தைப் போட்டு நடிகர் முரளி மாரடைப்பால் மரணம் என்று வெளி இட்டு இருந்த செய்தியைப் படித்தவுடன் அந்த ஒரு சில நொடிகள் அதிர்ச்சி கொடுத்தன. நடிகர் என்பதால் அவருடைய இழப்பு நம் கவனம் ஈர்க்கிறதா ? என்று பார்த்தாலும் அதையும் தாண்டி நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் இடம்பிடித்த நடிப்புக்குச் உடைமையானவர் என்பதை தொடர்ச்சியான அவர் நடித்தப் படங்களின் காட்சிகள் மனக்கண்ணுக்குள் ஓடி உண்மையாக்கியது. முரளி நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்காவிட்டாலும் அவருடைய வெற்றிப் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் குறிப்பிடத்தகுந்தது புதுவசந்தம் மற்றும் இதயம். நடிகன் என்றாலும் கூட நம்மைச் சுற்றிலும் இருக்கும் கருப்புநிற மனிதர்களில் ஒன்றாக வரும் பாத்திரங்களை படைத்தவர் என்பதால் முரளி நம்மை அறியாமலேயே நமக்குள் சென்றிருக்கிறார்.

தொடர்ந்து நாயகனாக நடித்தாலும் விஜயகாந்த், சரத்குமார், மம்முட்டி போன்ற பெரும் நடிகர்களின் தம்பியாக, துணைப்பாத்திரமாக நடிக்க தயங்கமால அந்தப் பாத்திரங்களை நிறைவாக செய்தவர். கேஎஸ்ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சமுத்திரம் படத்தில் சரத்துக்கு தம்பியாகவும் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு அண்ணனாகவும் , ரம்பாவுக்கு கணவனாகவும் சிறப்பாக நடித்திருப்பார், அந்தப் படத்தில் சரத்குமாரைவிட சிறப்பாக செய்தவர் முரளி தான். அதே போன்று லிங்குசாமியின் ஆனந்தம் படத்தில் 'வான்மதி சோப்' விளம்பர பணியனைப் போட்டுக் கொண்டு மம்முட்டிக்கு தம்பியாக அண்ணன் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவராகவே நடிப்பில் பின்னி இருப்பார். சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான என் ஆசை மச்சான் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக என இவர் தம்பியாக நடித்தப் படங்களில் தம்பி பாத்திரத்திற்கு நல்லதொரு இலக்கணம் என்று சொல்லக் கூடிய நடிப்பை வழங்கி இருப்பார்.

புதுவசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க, இதயம் ஆகிய படங்களில் மேடையில் மைக் பிடித்து பாடிய இவரது பாட்டுக்கள் என்றும் இனிமையாகக் கேட்கக் கூடியவை. பெரும்பாலும் குறைவான செலவில் படமெடுக்கவும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன முகம் என்பதால் புதிய இயக்குனர்கள் எப்போதும் நாடிய நடிகர் முரளி. கஸ்தூரி ராஜாவின் என் ஆசை ராசாவே படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு மகனாகவும் நடனக் கலைஞராகவும் நடித்தார். 90களின் முன்னனி நடிகைகள் ரோஜா, மீனா உட்பட நேற்றைய முன்னனி நாயகி சிம்ரன் வரை பல முன்னனி நடிகைகளுடன் 90க்கும் மிகுதியான படங்களில் நடித்துள்ளார்

முரளியின் படங்களையும் சிறப்பான பாத்திரங்களையும் பதிவர் முரளி கண்ணன் தொகுத்து வெளி இடுவார் என்று நினைக்கிறேன்.

நடிகனுக்காக / நடிகைக்காக வருந்துவதா என்று கேட்டால் மறைமுகமாக அந்த நடிகனின் நடிப்பு நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நடிகர்கள் பிழைப்புக்காக புகழுக்காக நடிக்கிறார்கள் என்றாலும் அதைத்தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற அவர்களின் நடிப்பின் ஈடுபாடு நம்மை எப்படியும் அடைந்துவிடுகிறது, அப்படியானவர்களுக்கு உருகுவதில் தவறு இல்லை. நடிகர்கள் மட்டும் இல்லை, எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது நலவாதிகள் இவர்கள் தம்முடைய பிழைப்பு வாதம் என்பதைத் தவிர்த்து அவர்களின் உழைப்பு, ஈடுபாடு, அர்பணிப்பு ஆகியவற்றினால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் போது அவர்களுக்காக உருகுவதில் தவறே இல்லை. அது தான் நாம் அவர்களின் பொது நலத்தை, அர்பணிப்பை அங்கீகரித்ததாக நாம் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் ஆகும்.

முரளியின் மறைவு பலராலும் பேசப்படுவதில் இருந்து அவர் அதிரடி நாயகனாக இல்லாவிட்டாலும் தமிழ் திரை ரசிகர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்த நடிகர் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. முரளியின் மறைவால் அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

என்றும் மாறாத் தோற்றத்தில் இருக்கும் முரளி தன் திடிர் மறைவின் வழி தன் தோற்றத்தை காலத்தாலும் மாற்ற முடியாமல் செய்துவிட்டார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்