பின்பற்றுபவர்கள்

30 ஜூன், 2008

ஏசுவின் இரத்த வகை என்ன ?

மும்பை: மும்பை, மாஹிம் பகுதியில் உள்ள பிரபல செயின்ட் மைக்கேல்ஸ், சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்திலிருந்து ரத்தம் கசிவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.

ஜோசப் டிசவுசா என்பவர் கூறுகையில், இது நிச்சயம் ஒரு அற்புதமான செயல்தான். கடவுள் நம்மிடம் எதையோ சொல்ல விரும்புவதையே இது உணர்த்துகிறது. இதை மக்கள் உணர வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அற்புதமான செயலாக தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அதுகுறித்து நம்பிக்கையாளர்களான எங்களுக்கு கவலை இல்லை என்றார்.

இந்த சம்பவம் குறித்து மும்பை ஆர்ச்பிஷப் கார்டினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது அற்புதச் செயலா என்பது குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும் என்றார். - மேலும் படிக்க ...

*******

சென்னையில் ஒரு தடவை மாட்டின் கண்களுக்குள் எம்ஜிஆர் தெரிந்தாராம், பிறகு தான் தெரிந்தது மாட்டுக்கு கண்ணில் புறையோடி இருப்பதே.

பிள்ளையார் பால் குடித்த கதையைச் சொல்லிப்பாருங்கள் இந்துத்துவாக்களுக்கு உடனே 'சாமி' வந்துவிடும்

கிறித்துவர்கள், இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் ? 'அல்லா' என்று ஒரு மீன் உடலில் அரபி எழுத்தில் எழுதி இருப்பதாக அரபு நாட்டில் ஒருவர் லட்சக்கணக்கில் விலை கொடுத்து அதை வாங்கினார் என்ற செய்தி வந்தது.

ஆங்காங்கே அடிக்கடி மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதும் கேள்விப்படும் செய்திகளே.

எங்கள் தெருவில் ஒரு வீட்டில் பரங்கிச் கொடியில் ஆத்தா நாக உருவெடுத்து அவதரித்திருக்கிறாள் என்று அந்த குடும்பம் கிளப்பிவிட்டு விட்டது. அன்று மாலையே 300 பேர் வரை அந்த கொடியை பார்த்துவிட்டு, அங்கு வைத்திருந்த குங்குமத்தைப் பூசிக் கொண்டு சாமி ஆடிச் சென்றார்கள். அன்றும், மறுநாளும் 1000 பேருக்கும் மேல் தரிசித்துவிட்டார்கள். நல்ல உண்டியல் வசூல். 'நடத்த கெட்டவ வீட்டுக்கெல்லாம் கூட சாமி வருது' முனுமுனுத்துக் கொண்டே...அந்த பக்தர்களிலும் சிலர் வாயடைத்தனர்.

நானும் சென்று பார்த்தேன். நிழலில் வளர்ந்த பரங்கிக் கொடி, கொஞ்சம் வெயில் பட்ட இடத்தில் நீண்டு வளர்ந்திருந்த அதன் கொடியின் கிளையில் ஒரு அடி நீளத்திற்கு மட்டும் கொஞ்சம் தடிமனான தண்டாக இருந்தது, அந்த கொடியில் இருந்த இலைகளும் சற்று உப்பலாக இருந்தது. பார்பதற்கு கொஞ்சம் தடிமனான பச்சைப் பாம்புக்கு நான்கு தலைகள் இருப்பது போன்று அதாவது மேகங்களை உருவங்களாக கற்பனை செய்யவது போல் செய்ய முடியும். அதுதான் ஆத்தா பரங்கிச் செடியில் அவதரித்த ரகசியம். அதாவது வெயில் பட்ட இடத்தில் கொடி கூடுதலாக வளர்ந்திருந்தது...சிலர் பரங்கி / பூசனி செடியில் உண்டாகும் ஒரு வித நோய் அது என்றும் பூச்சி மருந்து அடித்தால் சரியாகிவிடும் என்றார்கள்

மறுநாள் ஆத்தாவைக் காணும். ஆத்தா தரிசனத்திற்கு வந்தவர்களெல்லாம் ஏமாந்துப் போனார்கள். இரண்டு நாள் சென்றதும் தான் கேள்விப்பட்டேன்... பக்கத்து தெருவில் இருந்த இளைஞர்கள் சிலர், இரவோடு இரவாக அந்த பரங்கிச் செடியில் ஆத்தாவாக இருந்த அந்த குறிப்பிட்ட பகுதியை வெட்டி எரிந்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள்.

*******

இனி எங்காவது சாமி படங்களில் / சிலைகளில் இரத்தம் வழிந்தால் உடனடியாக ஒரு துளியை எடுத்து என்ன வகை (குரூப்)என்று கண்டுபிடித்துவிட்டால். ஆண்டவனைக் காட்ட முடிகிறதோ இல்லையோ. ஆண்டவனின் இரத்த வகையாவது இதுதான் என்று சொல்லிவிட முடியும். பிறகு நாத்திகர்கள் ஏன் பேசப்போகிறார்கள். வாயடைத்துப் போய்விட மாட்டார்களா ?

இங்கே பாருங்கள் யூடியூப் படக் காட்சி அதையும் மும்பையில் வழிந்த இரத்தவகையையும் ஒப்பிட்டு உண்மையைச் சொன்னால் கேட்டுக்கொள்ளப் போகிறார்கள்.
:)

26 ஜூன், 2008

பாமகவுடன் கைகோர்ப்பு ? தினமலரின் 'பத்ம' வியூகம் !

சிறிது காலம் 'கலைஞர்' புகழ் பாடியும் வந்த தினமலர் செய்திகள், வாசகர் கடிதங்கள் தற்போது பாமகவுக்கு ஆதரவாக மாறி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. தினகரனுக்கு மாற்றாக கலைஞர் அரசும் தினமலருக்கு தங்கள் அரசு விளம்பர ஆதரவைத் தெரிவித்தது, எனவே தினமலர் கலைஞர் புகழ்பாடியதற்கு காரணாங்க்கள் வேறு. பாமக ஆரம்பிக்கப்பட்டது முதல் அண்மை வரை பாமக வன்னியர் சாதிக் கட்சி (95% அது உண்மையும் கூட) என்று தொடர்ந்து விமர்சித்தே வந்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்து பாமக அதிரடியாக விளக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே பாமக-வுக்கு நல்லது என 'அட்வைஸ்' செய்யும் அளவுக்கு தினமலரின் பாமக பாசம் புரியாத புதிராக இருக்கிறது ?

ஜெயலலிதா, எடியூரப்பா, நரேந்திர மோடியுடன் ராமதாஸ் மேடை ஏறவேண்டியது தான். இதற்கான காரணங்களை ராமதாஸ் இனி ஆயத்தப்படுத்தலாம். (முழுதாக படிக்க தொடுப்பை சொடுக்குங்கள்)

மேலும் ஒன்று ... அதே பக்கத்தில் ராமதாசின் இயற்கை குணம்!: என்ற கடிதத்தில் அதில் கடைசியில்...

மருத்துவரான ராமதாஸ், ஏழை நோயாளிகளின் மனநிலை, உடல் நிலை அறிந்து வைத்தியம் பார்த்தவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல, பழக்க வழக்கங்கள் இல்லாத அவர், இந்த அளவுக்கு அரசியல்வாதியாக பொறுமை காக்கிறார் என்றால், அது அவரது மைனஸ் பாயின்ட்.தன் ஜாதியை முன் நிறுத்துகிறார், இரண்டாவது தனது மகனுக்கு மந்திரி பதவிப் பெற்றது போன்ற குறைகள் உண்டு. ஆனால், எந்த அரசியல்வாதி தன் மனைவி, மகன், மகளை அரசியலுக்கு இழுக்கவில்லை. மறைமுகமாக, தனது ஜாதியை எந்த அரசியல்வாதி காப்பாற்றவில்லை? சமீபத்தில், அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கூட தனது மனைவி, மைத்துனரை முன்னிலைப்படுத்தவில்லையா?

- என்ற ஒப்புமைகள் கூட பாமக பக்க(மும்) ஞாயங்கள் என தினமலர் மூலம் வருகின்றது.

தினமலரின் விருப்பமாக ...மைய அரசாக பாஜக அமையவேண்டும் என்பதும், அதற்கு பாமகவின் ஆதரவும் வேண்டும் என்ற பத்ம (தாமரைக் கட்சி) வியூகம் அமைக்கும் காரணமின்றி பாமக புகழ்பாட வேறென்ன காரணம் இருக்க முடியும் ?

பாடிகாட் முனிஸ்வரா எல்லாம் உனக்கு(ம்) தான் தெரியும். முனிஸ்வரனின் தீவிர பக்தர்கள் கூட இனி மருத்துவர் ஐயாவின் புகழ்பாடுவார்கள்.

25 ஜூன், 2008

விடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி !

பெரியார் படம் வந்து ஒரு ஆண்டுக் கூட ஆகவில்லை. அதற்குள் மற்றுமொரு நாத்திக நச்சுக் கருத்துப்படம் வந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது. திருவல்லிக்கேனி பெருமாளை தரிசித்துவிட்டு, துளசி தீர்த்தம் குடித்துவிட்டு இந்த படத்தை பார்தத்தும் தான் தெரிந்தது, இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், இந்து நம்பிக்கை எவ்வளவு கேவலமாக கிண்டலடிக்கப்பட்டு இருக்கிறது என்பதே. மேலும் தன்கையை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்ளச் செய்வது போலவே ஆத்திகர்களின் அறியாமையை பயன்படுத்தி நாத்திகம் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 'அந்த' படம், அதற்கு கருணாநிதி, நாத்திகன் வீரமணி போன்றவர்களின் 'ஆசிர்வாதம்' வேறு. படத்தின் பேரைச் சொன்னாலே பதிவர்கள் அடிக்க வருவார்கள், எனவே விசயத்துக்கு நேராகாவே சென்றுவிடுகிறேன். இந்த படத்தை மூக்குக் கண்ணாடியின் இடுக்கு வழியாக உற்றுப்பார்த்த போது, ஆங்காங்கே அதிர்ச்சி அடைந்தேன்.

* இராமாயணம் பொம்பலாட்டக் காட்சியில் இராமர் படங்களை ஆத்திக சிறுவனை வைத்து எரிக்கவைத்து, இராமசாமி நாயகனின் சீடன் என்று காட்டிவிட்டார்

* இராமசாமி பெரியாரின் நினைவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காவே பல'ராம் நாயுடு' என்று 'தெலுங்கு' பேசும் பாத்திரத்தை வைத்தார். அந்த பாத்திரத்தின் மூலம் இந்து தெய்வம் நம்பிக்கைகளை மட்டுமின்றி 'மடம்னா தப்பு நடக்காதா ?' என்று பெரியார் பாணியில் கேலி செய்தார்

* இந்து நம்பிக்கைக்கு எதிராக வயது வந்த பெண்ணை பெருமாள் சிலையை தொட வைத்து பெருமாளை நிந்தித்தார்

* இராம பக்தன் அனுமானை (சோதனை குரங்கு) முதல் காட்சியிலேயே கொன்று இந்துக்கள் மனதை புன்படுத்திவிட்டார்

* கிருஷ்ணபகவான் பருந்தாக வருவது போன்று காட்சி வைத்து அந்த பருந்து உயிருக்கு தப்பி ஓடுவது போன்று காட்சி வைத்து கடவுளுக்கு சக்தியே இல்லை என்று நாத்திக கருத்தை திணித்தார்

* பெருமாள் சிலையை இரயில் பெட்டி கழிவறைக்கு அருகில் எடுத்துச் சென்ற அவமானப்படுத்தினார்

* பெருமாள் சிலையை 'மண்ணுக்குள் புதைத்து' இறை நம்பிக்கைக்கு 'சமாதி' கட்டினார்

* பெருமாள் சிலை சுனாமியால் வெளியே கொண்டு வந்து காட்டியதன் மூலம் இயற்கைதான் சிலையைக் கூட காப்பாற்றுகிறது என்ற நாத்திக கருத்தை கடைசி காட்சியின் மூலம் வலிய திணித்தார்

* இந்துக்கள், கிறித்துவர்களை விட இஸ்லாமியர்கள் சுனாமி ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதாகக் காட்டியதன் மூலம் இராமசாமி நாயகரைப் போலவே அப்பாவிகள் முஸ்லிம் மதம் மாறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்

* பிராமணப் பெண் இராம சாமி நாயகரை 'நாத்திகன்' என்று கிண்டல் செய்வதாகக் காட்டியதன் மூலம் பார்பனர் அல்லாதவர்களுக்கு பார்பன வெறுப்பை ஏற்படுத்த முயன்று பார்பன துவேசம் நீர்த்துப் போகமல் இருக்க முயற்சி செய்திருக்கிறார்

* படத்தில் தென்கலை நாமம் போட்டுக் கொண்டு இராமனுஜம் நம்பி வருவதால், வடகலை ஐயங்கார் என்ற ஒரு பிரிவையே மறக்க வைக்க இரட்டடிப்பு சூழ்ச்சி செய்து இருக்கிறார்

* ஸ்ரீகிருஷ்ணரின் பத்து அவதாரங்களும் பத்து பாத்திரப் படைப்பின் மூலம் கிண்டல் அடிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.... அதற்கு முன் தொலை நோக்கியை எடுத்துக் கொண்டு சென்று படத்தை 2 ஆவது தடவைப் பார்த்து சல்லடைப் போட வேண்டி இருக்கிறது.

மொத்ததில் நான் அறிந்தவகையில் இந்த படம் இந்து நம்பிக்கைகளுக்கு சமாதி கட்டுவதற்கு குழி தோண்டிய முயற்சி.

இந்துக்களே விழுமின் எழுமின் !

பின்குறிப்பு : இட்லிவடையின் பாடிகாட் முனீஸ்வரன் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இல்லை. ஐ மீன் இந்த பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது (அல்ல)

இது நகைச்சுவை நையாண்டி பதிவு என்றால் நம்பனும் !

24 ஜூன், 2008

தமிழ்த் திரையில் சிறந்த நடிகர், படாலாசிரியர், இசையமைப்பாளர் யார் ?

எந்த ஒரு தொழிலிலும் நிபுணத்துவம் என்று ஒன்று உண்டு. அந்த இலக்கை சரியாக அடைபவர்களே போற்றப்படுகிறார்கள். பொழுதுபோக்கு ஊடகங்களில் நடிகராக, இசை அமைப்பாளர்களாக, கவிஞர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் உயர்வை எட்டியவர் வெகுசிலரே.

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...." என மூன்று மணிநேரம் .... ஐந்து நிமிடத்திற்கு ஒரு பாடல் என படங்கள் இருந்த காலத்தில்...கண்களில் நெருப்புப் பறக்க பராசக்தி வசனம் பேசிய ஒருவரின் தனித்திறமை அனைவரின் கவனம் ஈர்க்கப்பட பின்னாளில் அவரது நடிப்புத்திறன் பேசப்பட்டு 'நடிகர் திலகம்' ஆனார். வி.சி. கனேசனுக்கு சிவாஜி கனேசன் என தந்தை பெரியார் சூட்டிய பெயரே அவரது சிம்மக் குரலுக்கு பொருத்தமான பெயராக இருந்ததுமில்லாமல் நடிப்பின் உச்சத்தின் அடையாளாமாக மாறி...கோடம்பாக்கத்திற்கு கனவுடன் நுழைபவர்களுக்கெல்லாம் அவர் ஒரு ரோல் மாடல் ஆகிப் போனார்.

பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் அவற்றில் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கி இருந்தாலே போதும் என்று நிலை இருக்கிறது. அவ்வகைப் படங்கள் அறியப்பட்ட நடிகர்களின் ப்ராண்டட் / மசாலா படமாகவே இருக்கும். அதைத் தவிர்த்து இயக்குனர் பாணி படங்களும் பல வெற்றிப்படங்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் திரைப்படங்கள் என்ற இலக்கணத்தில் மட்டுமே சொல்லாம் அன்றி திரைப்படக் கலை என்று வரையரைக்குள் அவை வராது. அவை பொழுதுபோக்கு அம்சம் கொண்டவை. வியாபார நோக்கம் சார்ந்தவை.

திரைப்படக் கலை என்பது வேறொரு தளத்தில் பயணிப்பது, அவற்றின் நோக்கமும் பொழுதுபோக்கு என்ற நிலை இருந்தாலும்...அவை பார்பவர்களின் எண்ணங்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை. அவ்வகைப்படங்களில் நமக்கு பழக்கப்பட்ட பாத்திரங்களை அல்லது புதிய பாத்திரங்களை உருவாக்கி காட்டுவார்கள். அங்கு நடிகனின் வேலை அந்த பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதுதான்.

நடிகன் என்பவன் தன்னைத் தொலைத்து ஒரு பாத்திரமாக கண்முன் வந்து சென்று அந்த பாத்திரம் அனைவராலும் பேசப்படும் பொழுது அவன் சிறந்த நடிகன் என ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அவ்வாறு வரலாற்று பாத்திரங்களைக் கண் முன் நிறுத்திக் காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கனேசன்.

மற்றொரு நடிகர் கமலஹாசன். 16 வயதினிலே படத்தில் சப்பானியை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அதன் பிறகு பேசப்படும் பாத்திரப் படங்களை செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்காததாலோ, அல்லது தன்னை நிலை நிறுத்துக் கொள்ள வேண்டும் மென்பதற்காக சகலாகலவல்லவன், ஜப்பானில் கல்யாண ராமன் போன்ற மசாலா படங்களில் நடித்தார். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் தான் கமலஹாசன் ஒரு சிறந்த நடிகர் என அறியப்பட்டர். தனக்கிருக்கும் திறமையையும் அவர் அப்போதுதான் உணர்ந்து கொண்டிருக்கக் கூடும், அதன் பிறகு ஒவ்வொரு படங்களிலுமே தனிப்பட்ட முத்திரை பதிக்க வேண்டும் என்று சிரத்தை எடுத்து தேவர்மகன், மகாநதி, குணா போன்ற படங்களைக் கொடுத்தார். ஹேராம் போன்ற படங்களில் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை முழுதும் உள்வாங்கி செய்தார். கமல் படம் வெற்றிப்பட்மா தோல்விப்படமா என்று ஆராய்வதைவிட அவர் அந்த பாத்திரத்தை முழுமையாக செய்திருந்தார் என்பதே பேசப்பட்டது. இப்பொழுதும் கூட எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் குறைவைக்காமல் சிறப்பாக செய்யக் கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

சரி விசயத்துக்கு வருவோம். சிறந்த நடிகர் யார் நடிகர் திலகம் ? உலக நாயகன் ?
அவர் காலத்தில் அவர்...இவர் காலத்தில் இவர். சிறந்த நடிகர் என்றால் எல்லாரையும் விட சிறந்த நடிகர் என்று ஒப்பீட்டு அளவில் சொல்வது தவறு என்றே கருத்துகிறேன். நடிப்பின் எல்லையைத் தொட்டவர்கள் இவர்கள். சிறந்த நடிகர் என்பது ஒரு உயரம் / எல்லை...அது எவருக்கும் சொந்தமானது அல்ல... நேற்று நடிகர் திலகம் அதன் மீது ஏறினார்...இன்று உலகநாயகன் ஏறி இருக்கிறார்...நாளை வேறுருவர் ஏறுவார். இன்றைக்கு பல இளைய நடிகர்கள் அதன் பரிசோதனையில் தான் இருக்கிறார்கள்...நாளை அதில் சிலர் அந்த இடத்திற்கு வரக் கூடும். புதிதாக ஏறுபவர்கள் ஏற்கனவே ஏரியவர்களை தள்ளிவிட்டார்கள் என்று பொருள் கொள்ளல் ஆகாது.

இதுபோல் தான் கவிஞர்கள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள்...அந்தந்த காலத்தில் சிலர் ஜொலிக்கிறார்கள். ஆனால் அந்த இடம் ஒருவருக்கே நிலையானது என்று சொல்வது அபத்தம். அபிமானிகள் தவிர்த்து வேறுயாரும் அதுபோன்று அபத்தங்களைச் செய்யமாட்டார்கள்.

நமது காலத்திலேயே பார்த்துவிட்டோம் மெல்லிசை மன்னர் > இசைஞானி > இசைப்புயல் என்றெல்லாம் தமிழ் திரை இசையின் பயணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒப்பீட்டு அளவில் ஒருவரே மற்றவரைவிட சிறந்தவர் என்று சொல்வது அபத்தம்.

சிறந்த கவிஞர் நேற்று கண்ணதாசன்...இன்று வைரமுத்து... வேண்டுமானால் கவியரசர், கவிப்பேரசரர் என்ற அடைமொழிக்குள் அவர்களை அடக்கலாம். ஆனால் அவை வேறுபடுத்திக் காட்டுவதன் பெயரேயன்றி ஒப்பீட்டு அளவில் யார் சிறந்தவர் என்று சொல்வதற்கான அடையாளம் அல்ல.

எளிமையாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் அதற்கு முந்தைய ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களில் சிலர் முதல் பரிசு பெற்று இருப்பார்கள்.

23 ஜூன், 2008

அப்பா அம்மா சம்மதிக்கனும்... (சிறுகதை) !

"வர்ற முகூர்தத்தில் கல்யாணத்தை வச்சிக்குவோம்...ஆனால் எப்படி அப்பாவிடம் விசயத்தைச் சொல்வது என்று தெரியவில்லை"

"சுரேஷ்...அவங்க சம்மதிக்கனுமே"

"இல்லே காஞ்சனா...இந்த வருசம் செஞ்சே ஆகனும்....இரண்டாவது இதை தள்ளிப் போடவும் முடியாது..."

"நாம மூன்று வருடமாக ப்ளான் பண்ணி வச்சிருக்கோம்...பணம் எல்லாம் போதிய அளவு சேமிச்சாச்சு..."

"பிறகு என்ன ? நீயே சாயங்காலம் மொதுவாகப் பேசிப்பாரு..."

"சரி...பேசுவோம்...கல்யாண மண்டபம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு...பத்திரிக்கைக் கூட கொடுத்தாச்சு..."

"ஆமாம்...எல்லோருக்கும் பத்திரிக்கைக் கொடுக்கும் முன்பாவது அவர்களிடம் விசயத்தை சொல்வது சரி"

"அம்மா இருக்காங்களே சரியான வீம்பு புடுச்சவங்க...கடைசி நேரத்தில் எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிடுவாங்க..."

"அப்படிங்கிறியா ?"

"ஆமாம் அப்பாவும் அம்மா சொல்வதைத்தான் கேட்பாரு...எதுக்கும் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பு அவர்கள் காதில் போட்டு வைப்பது நல்லது...அவங்க ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கனும் அதுதான் முக்கியம்"

"சரிடி...நான் அமெரிக்காப் போகிறேன்...அதுக்குள்ளே எல்லாம் சுபமாக முடியனும்... நீயே பேசிப்பாறேன்"

"அப்பாவிடம் பேச எனக்கு இன்னும் பயம் தான்...இருந்தாலும் இந்த விசயத்தில் அஞ்சுவது நமக்கு நஷ்டம் தான்"

"அப்பாடி ஒருவழியாக ஒத்துக் கொண்டியே...அப்படியே சாயங்காலம் பேசி நேராக ஹோட்டலுக்கு வரச்சொல்லு...அங்கே வச்சு மற்ற விபரங்களையெல்லாம் சொல்லலாம்"

*****

அப்பா...உங்களுக்கு அறுபது வயச்சாச்சு....உங்களுக்கும் அம்மாவுக்கும் உங்க பிறந்த நட்சத்திரத்திலேயே மூகூர்த்த நாள் வர்றதால...அன்னிக்கே அறுபதாம் கல்யாணம் பண்ணிப் பார்க்க நானும் அண்ணனும் தீர்மாணிச்சிருக்கோம்...க்யூக் க்யூக் கிளம்புங்க ... ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுக் கொண்டே மற்றதைப் பேசுவோம்"

பெருமகிழ்ச்சியில் அப்பா என்னை பார்க்க....அவருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்த அதே வினாடியில்

இதை அருகில் இருந்து கேட்ட அம்மாவிற்கு வெட்கத்தைப் பார்க்கனுமே.....

ஆக அப்பா சம்பதிச்சுட்டார். இதைவிட அண்ணனுக்கு எனக்கு மகிழ்ச்சி என்னவாக இருக்கும் ?

மனைவிக்கும் துணைவிக்கும் என்ன வேறுபாடு ?

இந்த செய்தியை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க !

"நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மு.க.தமிழரசு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிஸ மருமகள் ஸ்ரீநிதி, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்."இந்த பதிவிற்கு செய்தி எதுவும் இல்லை, எனவே டிஸ்கி போட்டுக் கொள்கிறேன்.
டிஸ்கி : வேறொன்றும் உள்நோக்கம் இல்லை, காலையில் போட்ட முருகன் படத்தைப் போலவே ஐயம் தீர்த்துக் கொள்ள முற்படுகிறேன். அந்த செய்தியைப் படித்ததும் முருகன் ஞாபகம் தான் வருகிறது.

கவனம் ஈர்த்தப் படம் (புகைப்பட போட்டிக்கு அல்ல) !

சென்னை சென்றிருந்த போது இரவு உணவிற்காக அமைந்தகரை - கீழ்பாக்கம் அருகில் இருக்கும் பாலாஜி பவனுக்கு சென்றிருந்தேன். சுவற்றில் இருந்த வள்ளி - முருகன் - தெய்வயானை படம் கவனம் ஈர்த்தது. முருகன் தெய்வயானையை எப்போது மணந்தார் என்பதன் காலம் சரியாக தெரியவில்லை. பக்தியாளர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன். அந்த காலத்திலேயே மடிசார் அணியும் பழக்கம் இருந்திருக்குமா ? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.படம் கவனம் பெற்றதற்கு அதுவே காரணம். படத்தின் மீது அமுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்.

முருகனுக்கு படத்தில் கொடுக்கப்பட்ட நிறம், பூணூல் ஆகியவற்றைக் கூட சகித்துக் கொள்ளலாம் ஏனெனில் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே கலப்பு திருமணத்தை சகித்துக் கொண்ட முதல் மக்கள் என பறைசாற்றும் இந்த (தெய்வச்) சான்றுகளுக்கு முன்பு அவை மிகச்சிறிது (துச்சம்).

22 ஜூன், 2008

மறுபிறவியும் சுப்பையா வாத்தியாரும் !

எரிந்த கட்சி - எரியாத கட்சி போலவே ஆத்திக நம்பிக்கையில் ஒருசாரர் பிறவிகள் இருக்கிறது மற்றவர்கள் இல்லை என சொல்லும் இருசாரர் இருகின்றனர். ஆப்ரகாமிய மதங்களைப் (கிறித்துவ, இஸ்லாமிய) பொருத்து மறுபிறவிகள் இல்லை என்பர். இந்திய சமயதத்துவங்களில் மறுபிறவி உண்டென்பர், இந்திய தத்துவங்கள் பழிபாவத்திற்கு அஞ்சு...மீறி செய்தால் நாய் ஆவாய் நரியாவாய்...எறும்பாவாய் ஈ ஆவாய் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதே போன்று ஆப்ரகாமிய மதங்களில் 'பாவங்களுக்கு அஞ்சு அப்படி இல்லை யென்றால் இம்மையில் அதாவது இறப்பின் பின் மறு உலகில் நிரந்தரமாக தண்டிக்கப்படுவீர்கள்' என்றும் சொல்லி பயமுறுத்தியிமின்றி, எங்கள் வேதபுத்தகமே உண்மையான இறைவன் அருளியது, எங்கள் ஆண்டவனால் சொல்லப்பட்ட / அருளப்பட்ட இந்த வேதங்களை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்காவிட்டால் உங்களுக்கு நிரந்தர நரகம் தான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

முற்பிறவி பொய் என்கிறீர்களே, ஒரு குழந்தை ஊனமாகவே பிறப்பதற்கும், பிறந்து அதே விநாடியில் இறப்பதற்கும் என்ன காரணம் என்று கேட்டால் அவர்களது வேதத்தில் தெளிவான பதில் எதுவுமில்லை. உங்கள் வேதமே எட்டாதா காட்டுவாசிகள் எவரும் மனிதர்களே இல்லையா ? அவர்களுக்கு உங்கள் மதமோ / மார்கமோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அங்கெல்லாம் உங்கள் கொள்கைகள் காடுகளைத் துளைத்து நுழைந்திருக்கிறதா ? அப்படி எதுவும் தெரியவில்லையே. அவர்கள் இறந்தாலும் நிரந்தர நரக நெருப்பில் வாடுவார்களா ? காந்தி கிறித்துவ மதத்தையோ, அன்னை தெரசா இஸ்லாமிய மார்கத்தையோ தழுவவே இல்லை. இவ்விரு மதங்களின் கொள்கைப்படி இவர்கள் அம்மதங்களைப் பற்றி அறிந்திருந்தும் அவற்றைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதததல் பாவிகள் அடையும் நிரந்தர நரகத்தைத்தானே அவர்களும் அடைவார்கள் ? என்று ஒரு சில கிறித்துவ / இஸ்லாமிய அன்பர்களைக் கேட்டபோது தெளிவான பதில் கிடைக்கவே இல்லை.

இந்தியாவில் இந்துமதத்தில் 'பிறப்பின் வழி புனிதம் (பிறந்த வழி பற்றியதல்ல...அதை தூய்மையற்றது என்றே சொல்லி வந்தார்கள்) கற்பிப்பதால் என்னவோ பிறப்பில் கிடைக்கும் நன்மை தீமைக்கெல்லாம் இறைவனின் சித்தமே காரணம் என்று சொல்வார்கள், அந்த பித்தம் பிடித்தவன் ஏன் சில குழந்தைகளைக் கூட அழித்துவிடுகிறான் என்று கேட்டால்...கொஞ்சம் தயங்கி தயங்கி முன் ஜென்ம வினை என்று அவிழ்த்துவிடுவார்கள். மனிதப்பிறவியில் சாதியைச் சொல்லி, இனத்தைச் சொல்லி பலரை நாயைவிட கேவலமாக நடத்தப்படும் போது மனிதன் விலங்காகக் கூட பிறப்பான் என்பது மறுப்பிற்குரியது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மனிதன் பாவம் செய்வதால் விலங்காகப் பிறக்கிறான் என்கிறார்கள்.

எந்த ஒரு விலங்கும் தன் உணவிற்கும், தன்னுடைய பாதுகாப்பிற்க்கும், இனப்பெருக்கத்திற்கும் தன் கவனம் செலுத்துவதைத் தவிர வேறெதிலும் செலுத்துவதில்லை. 'வாழ்க்கை' என்றால் விலங்குகளுக்கு உரியவையே உண்மையிலேயே முழுமையான வாழ்க்கை, அத்தகைய வாழ்கை (சுகங்கள், வசதிகள் என்பது தவிர்த்து) எந்த மனிதனுக்கும் கிடைப்பது இல்லை. பிறகு ஏன் பாவம் செய்த மனிதன் விலங்காகப் பிறக்கப் போகிறான் ? விலங்கு வாழ்கையில் மனிதனைவிட சுகபோகம் அதிகமே. ஒரு நாயைப் போல் உணவின் சுவை அறிந்து ருசித்து ருசித்துத் தின்னும் திறன் எந்த மனிதனுக்கும் கிடையாது. ஒரு காக்கை கூட்டத்தைப் போல் தன்னினத்துடன் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் தன்மை மனித கூட்டத்திற்கு கிடையாது. இரு பாம்புகள் பின்னிக் கொள்வது போல் மணிக்கனக்கில் உடல்சுகத்தில் மயங்கிக் கிடைக்க மனிதனால் முடியவே முடியாது. சிலவகை விலங்குகளுக்கு இறப்பினால் ஏற்படும் துக்கம் / சோகம் உண்டு, குழந்தைகளைப் போலவே பலவற்றிற்கு துக்கம் என்பது இல்லவே இல்லை. பிறகு எப்படி சொல்வது பாவம் செய்த மனிதன் விலங்காகப் பிறக்கிறான் என்று ? ஒரு வேளை புண்ணியம் செய்திருந்தால் விலங்காக பிறக்கும் பாக்கியம் கிடைக்குமோ. விலங்குகெல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்த மனிதர்களா ?

பாவம் செய்த மனிதர்கள் ஊனமாக பிறக்கிறார்கள், ஊமையாகப் பிறக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது தற்போது ஓரளவு நின்று இருக்கிறது. அது கொஞ்சம் முன்னேற்றம் தான். முற்பிறவி இருக்கிறதா இல்லையா ? அதில் நம்பிக்கைக் கொள்ள வேண்டுமா ?

பிறவிகள் உண்டு என்று வைத்துக் கொண்டாலும் தற்போது இந்த பிறவியில் முன் பிறவிகளின் சுவடுகளே தெரியாதபோது அதை நம்புவதால் என்ன பயன் ? பிறவிகள் பாவ புண்ணியத்தின் கணக்கு என்றால், பாவம் செய்தவனும் தண்டனை அனுபவிக்க பிறந்தாகவேண்டும், புண்ணியம் செய்தவனும் அதன் பலன் அனுபவிக்க பிறந்தாகவேண்டும். இதை வெளியில் சொல்லிப் பாருங்கள், பிறவி பயம் இருப்பவர்கள்... தவிச்சவாயிக்குக் கூட தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் பெற்று அடுததபிறவி வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கியே தண்ணீர் கொடுக்காமல் சிலர் ஆவிபோனபின் பாவியாகி மறுபடியும் பிறப்பார்கள் :)

பிறவி பாவம் புண்ணியம் ஆத்மாவில் எழுதப்பட்ட கணக்கு என்றால் ஆண்டவனுக்கு வேலை ஒன்றுமே இல்லை என்றல்லவா ஆகிறது. இதுவும் ஒருவகை நாத்திகம் தான். இந்தியாவில் இந்து மதத்தில் இது போன்ற தத்துவக் குழப்பங்கள் நிறைய உள்ளது, காரணம் இந்து மதம் என்பது உள்வாங்கி வளர்வதாகக் கூறிக் கொண்டு பிச்சைக்காரன் வாந்தியைப் போல் பலவற்றையும் உண்டு செறிக்காமல் வரும் ஒவ்வாமையே. தற்போதைய காலகட்டத்தில் 'மதத்தால்' மனிதனுக்கு தரமான தத்துவ சிந்தனைகளை முன்னிறுத்தவே முடியாது. ஏனென்றால் அவற்றின் கட்டமைப்புகளான அடிப்படை வாதத்தை உடைத்துக் கொண்டு அவற்றால் மீண்டுவிட முடியாது. மதங்கள் 'இறைவன் இருக்கிறான்' என்று சொன்னாலும் இறைவன் குறித்த வரையரையில் முறன்பட்டே நிற்கின்றன. அவை மதங்களாக வகைப்படுத்தி வேறுபட்டதாக அறியப்படுபதற்கும் அதுவே அடிப்படைக் காரணம் கூட.

இறைநம்பிக்கை மாற்றானவர்களும் சொல்வது இதுதான் 'கண் முன் நடப்பதை நம்பு, எவருக்கும் கொடுதல் செய்யாதே' இறைமறுப்பாளர்கள் பாவ புண்ணியத்தை நம்புகிறார்களோ இல்லையோ... கொலை செய்தாலும் பரிகாரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறும் துணிவும் அஞ்சாமையும் ஆளுமையும் உடையவர் நாத்திகராக இருந்தது இல்லை.

பின்குறிப்பு : தலைப்பில் இடம்பெற்றதைத் தவிர்த்து சுப்பையா ஐயாவுக்கு பதிவுக்கும் தொடர்பு இல்லை. எனது அன்புக்குறிய நண்பர் ஆகையால் அவரை இடுகையின் தலைப்பில் சும்மா இழுத்தேன். அம்புட்டுதான்.

21 ஜூன், 2008

தசவதாரம் - பதிவுலகம் சாராத ஒருவரின் விமர்சனம்

தலைப்பிலேயே டிஸ்கி (disclaimer) போட்டாச்சி, அதனால் தசவதார விமர்சனமா ? ஐயோ கொல்றாங்களே என்று சொல்வதை தவிர்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியும் கொலைவெறி வந்தால், இதற்கும் மேல் கீழே படிக்க வேண்டாம். எனது நெருங்கிய நண்பரின் மாமனார் ஒரு விமர்சனத்தை எழுதி அவருக்கு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதை நண்பர் எனக்கு அனுப்ப...உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பதிவர்கள் அடுத்த சுற்று 'தசவதாரம் எடுக்க' ஐடியா கொடுத்தாச்சு :)

இனி அவர் அனுப்பியதை இங்கே அப்படியே பதிக்கிறேன். அதில் எனது கருத்து எதையும் சேர்க்கவில்லை.

********

தசாவதாரம் -- ஒரு விமர்சனம்
தசாவதாரம் தொடங்கி சில நிமிடங்களிலேயே எனக்குத் தலைவலியின் அறிகுறி தோன்றத் தொடங்கி விட்டது.

கமல் போன்ற வெளிவாசிகளின் (outliers, the milder alternative for geniuses!) எதிர்பார்க்கப்பட்ட பண்புதான் இது! ஒரு நேரம் மிக ஆச்சரியகரமாய் அனைவரையும் கவர்வார்கள்; ஒரு நேரம் பெரும்பான்மையோரைச் சலிப்படைய வைத்துவிடுவார்கள்! ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்ப்ரெஸ், விருமாண்டி என்று மாறி மாறி வரும் கமலின் படைப்புத் தரங்களைப் பார்த்தால் நாம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ராம்கோபால் வர்மா இன்னொரு எடுத்துக்காட்டு (இப்போது அவர் மேலெழுந்து வரும் அறிகுறி குறைவாக இருப்பது வேறு விஷயம்!)

தசாவதாரத்தின் முக்கியமான குறைகள்: பெரிதும் எதிர்பார்ப்புடன், பெரிய செலவு செய்து, நீண்ட காலம், நிறைய முயற்சிகள் செய்து ஒரு படம் எடுக்கும்போது அப்படத்தின் வகையை (genre) முதலில் நிர்ணயிக்க வேண்டியது முதற்கண் தேவை. இது ஒரு பொழுதுபோக்குப் படமா, ஒரு 'புத்திசாலிப்' படமா? பொழுதுபோக்கிலும் ஒரு மகானுபவப் (adventure) படமா, ஒரு உறவுகளின்/சம்பவங்களின் கோர்வையா (drama), ஒரு நகைச்சுவைப் படமா? தசாவதாரம் ஒரே நேரத்தில் இவையனைத்துமாகவும் இன்னும் மற்றபிறவாகவும் (அறிவியல், வரலாறு, உண்மைச்சம்பவங்களின் பின்புலம்) இருக்க முயல்கிறது. இதுவே அதன் முதற்குறை! இக்குறையையும் ஒரு நேரிய திரைக்கதையின் மூலம் நிவர்த்தி செய்திருக்கலாம்; செய்யவில்லை! அது மிகப்பெரிய இரண்டாம் குறை!

இவ்வளவு செலவு செய்து ஒப்பனை செய்து என்ன பயன்? ஓரிரு வேடங்களைத்தவிர மற்ற அனைத்தும் முகபாவங்களைக் காட்டமுடியாத அளவுக்குக் கல்லாகவும் பளபளப்பாகவும் நிற-அமைவு இல்லாமலும் சலிப்பையும் (சிலே நேரங்களில் சிரிப்பையும்) வரவழைப்பதே உண்மை!

ஆழம் தெரிந்து காலை விட்டிருக்க வேண்டும்; அமெரிக்கக் காட்சிகளும் கதை அமைப்பும் (நாசாவில் எங்கும் தமிழர்களா?) பெரிதும் நிரடுகிறது. 'ஹே ராம்' எடுத்தவர் இவர்தானா என்ற வியப்பு தோன்றுகிறது!

என்னைப் பொறுத்தவரை இப்படத்தில் என்னைக் கவர்ந்தது சில பாத்திரங்களின் வசன உச்சரிப்பே! குறிப்பாகத் தெலுங்கு-தமிழ் CBI அதிகாரியும் தலித் போராளியும் இத்துறையில் தேறுகிறார்கள்!

மிச்ச சிறப்புகள் அனைத்தும் மற்ற குறைகளின் அழுத்தத்தில் காணாமலே போகின்றன! மெல்ல மெல்ல வந்த என் தலைவலி சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டு மறுநாள் காலை வரை.

பின்குறிப்பு : இது தசவதாரம் குறித்த எனது எட்டாவது பதிவு. இன்னும் 2 சேர்த்து பத்தாவது பதிவு போடுவதற்கு எதாவது தேறும் என்ற நன்நம்பிக்கையில் இருக்கிறேன். வழக்கம் போல் பேராதரவு கொடுத்து எனது லட்சியத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் :)

தொடர் : ஒலக நாயகனின் தசவதாரம் - திரைக்கதை ( செப் 2006. எழுதியது நகைச்சுவை தொடர்)
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

தசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் !
தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...
தசவதாரம் - ஒரு சோதிட பார்வை !

20 ஜூன், 2008

கூட்டணி ஆட்சி இந்தியாவிற்கு பெரும்பின்னடைவு !

அதிகார மையம் என்ற ஒற்றைப் புள்ளிகள் ( அரசர்கள், சர்வதிகாரிகள்) செய்த கொடுமைகளின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே அதிகார பகிர்வு என்ற மக்கள் ஆட்சிக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் மக்கள் தொண்டாற்றும் எவரும் அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களிடம் மக்கள் நலம் காக்கும் பொறுப்பு ( அதிகாரம் அல்ல) ஒப்படைக்கடும் என்ற நிலையில் தான் உலகெங்கிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டங்களில் மக்கள் ஆட்சிகள் ஏற்பட்டன. முதலாளிகள் நாடாக இருந்தாலும் கம்யூனிச நாடுகளாக இருந்தாலும் இன்றைய காலகட்டங்களில் மக்கள் ஆட்சி தத்துவம் தோற்றுவருகிறது அல்லது குழப்பமான சூழலில் உள்ளது என்று சொல்லலாம்.

ஆரம்பகாலத்தில் தனிபெரும்பான்மையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பெரும் கட்சிகள் தற்பொழுது தள்ளாடி வருகின்றன. மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி இதுவே நிலமை. இதற்கு காரணம் புற்றீசல்களாக தோன்றிய மாநில கட்சிகளா ? அதுவும் ஒரு காரணம் என்றாலும். ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் செய்த அட்டூழியங்கள், ஊழல்கள் அவற்றின் ஓட்டுபலத்தை குறைத்துவிட்டன. இவர்கள் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால் மக்கள் ஏன் இவர்களை தூக்கி அடிக்கப் போகிறார்கள்.

அரசியல் பதவிகள் வெற்றிகரமான தொழில் போல் ஆகிவிட்டதால் பதவியில் அமர்பவர்கள் அதை தங்களுக்கு செல்வம் சேர்க்கவும், வழக்கில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்த ஆரம்பித்ததும் இல்லாமல் அரசாங்க உயர்பதிவியில் உள்ளதற்கும் மேல் வசதிகள் செய்து தரப்படுவதால் அந்த பதவியை அடைவது மக்கள் தொண்டு என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல் பேராசையாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பதவி சுகம், பதவி வெறி அதை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாண்மை கிடைக்காத போது 'கூட்டணி ஆட்சி' என்று உள்ளே நுழைகிறார்கள்.

இந்தியாவில் கூட்டணி ஆட்சி மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி அற்ப வாழ்வு ஆட்சியாகவே இருக்கிறது என்பதற்கு வாஜ்பாயி, சந்திரசேகர், தேவகவுடா, விபிசிங், குமராசாமி ஆகியவர்களின் ஆட்சி பறிபோனதைப் பார்த்திருக்கிறோம்.
தமிழகத்தில் அந்த நிலைவரவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் மிரட்டல், விலக்கல் எல்லாம் நடந்தே வருகிறது.

கூட்டணி ஆட்சி அல்லது ஆதரவில் ஆட்சி எல்லாம் அற்ப ஆயுசுதான். ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்த கட்சிகளின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தே வருகிறது. கூட்டணிக் கட்சிகளின் சொற்படி தான் ஒரு அமைச்சரை வைத்திருக்கவோ, நீக்கவோ முடியும் என்ற எழுதப்படாத சட்டமே இருக்கிறது. கட்சிகள் ஒவ்வொன்றும் ஒருவகையான கொள்கைகள் கொண்டவை. இவைகள் தனித்தனியாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லை, இவர்கள் கூட்டணி என்று இணையும் போது தனித்தனி கொள்கைகள் என்பது முரண்பட்ட கொள்கைகளாக நின்று கொண்டு பல் இளிக்கின்றன. உதாரணத்திற்கு அணுஆயுதம் குறித்த அமெரிக்க ஒப்பந்தம். இதில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எந்த காலத்திலும் ஒத்தக் கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை. பின்பு எப்படி இவர்களால் சேர்ந்து செயல்பட முடியும் ?

அதுபோலவே மாநகர விரிவாக்கம் தொடர்பாக திமுக அரசு தெரிவு செய்த நிலங்களை எதிர்த்து பாமக திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடி. மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான எதிர்ப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இவைகளில் எல்லாம் முரண்பட்டே இணைகிறார்கள். இதுபோன்ற கூட்டணிகளின் நிலைத் தன்மை என்பது தேன் நிலவு தம்பதிகள் போல் ஆரம்பத்தில் இருந்தாலும் ஆண்டு திரும்புவதற்குள் முரண்பட்ட கொள்கைகளால் விவகரத்து செய்து கொண்டு மறுமணத்திற்கும் உடனே இருபக்கமும் தயாராகிவிடுகிறார்கள். இது தற்காலிக விவாகரத்துதான், திரும்பவும் வேறு சூழல்களில் மீண்டும் இணைவார்கள். எதிர்கூட்டணிகளால் தேர்தலுக்கு தேர்த்தல் பச்சையாக அரசியல் விபச்சாரம் என்று தூற்றப்படும் பாமகவை அடுத்த தேர்த்தலில் தூற்றியவர்களே 'கூப்பிடுகிறார்கள்'.

கூட்டணி என்று கூடும் கட்சிகளுக்கு பொதுக் கொள்கையோ, நேர்மையோ சிரிதும் கிடையாது, எப்படியாவது ஆட்சியையும், இடங்களையும் கைப்பற்ற ஒரு மாற்றுவழியாகத்தான் இணைகிறார்கள். இவை தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி கூட்டணி என்ற பெயரில் கூத்துகளாகவே நடந்துவருகிறது. என்ன எழவாவது நடக்கட்டும் ? இவர்கள் அடித்துக் கொண்டு விலகி ஆட்சியே கவிழ்ந்துவிடுவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் வரிப்பணம் தானே. அரசியல் கட்சிகள் தேர்தலை நடத்துவதற்கு என்று எதுவும் செலவு செய்கிறார்களா ?

அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், கூட்டணி ஆட்சி தவறு அல்ல. அதுவும் அதிகார பகிர்வு என்னும் மக்கள் ஆட்சியின் ஒரு அங்கம் தான். ஆனால் இவர்கள் மக்கள் முன் 'கூட்டணி' என்று அறிவித்து ஓட்டு வாங்கி வென்று ஆட்சி அமைத்துவிட்டு, பின்பு அடித்துக் கொண்டு மறுதேர்தல் நடத்தும் சூழல் உருவானால், அந்த தேர்தலுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையுமே கூட்டணிக் கட்சிகள் தொகுதியைப் பங்கிட்டுக் கொள்வதைப் போல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பவர்கள் 50 விழுக்காட்டினர்தான், அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி 26 விழுக்காடு வாங்கி இருக்கும். அதாவது 74 விழுக்ககட்டினர் தேர்ந்தெடுக்கப்படாதவர் வெற்றி பெறுகிறார்.... அதிலும் 25 கட்சிகள் சமபலத்துடன் ஒரே தொகுதியில் நின்றால் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்கு பெற்றவரே வெற்றிபெற்றவராகிறார், அப்படி வெற்றி பெற்றிருந்தாலும் மீதம் 97 பேர்களால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றே பொருள். அல்லது அந்த தொகுதியில் அதிகம் வாக்கு பெற்றவர் வெற்றிபெற்றவர் ஆகிறார். தனித் தனி தொகுதிக்கு இவ்வாறு தேர்வு நடைபெறும் போது, நாட்டின் முதல்வரையோ, பிரதமரையோ தேர்ந்தெடுப்பதில் மட்டும் ஏன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்றெல்லாம் கூத்து அடிக்கிறார்கள். கூட்டணியே இல்லாமல் 10 கட்சிகள் தனித்தனியாக நின்றாலும் எந்த கட்சிக்கு அதிக இடம் கிடைத்திருக்கிறதோ அவர்கள் ஆட்சி செலுத்தலாம். 101 இடங்களில் 10 கட்சிகள் 9 பேருக்கு தலா 10 இடங்களும் ஒரே ஒரு கட்சிக்கு 11 இடம் கிடைத்தால் அவர்களால் ஆட்சி செய்ய மூடியும் என்ற மாற்றம் தேவை. கூட்டணி ஆட்சிகளின் அற்ப ஆயுள்களை கவனத்தில் கொண்டு அதாவது கூட்டணிகளையோ...கூட்டணி ஆட்சியையோ அரசியல் சட்டமே அனுமதிக்கக் கூடாது.


என்னவோ அரசியலையும், அதன் நிலைத்தன்மையையும் நினைத்தால் எரிச்சலே மிஞ்சுகிறது. அரசியலில் நிலைத்தன்மை உடைய நாடுகளே வேகமாக முன்னேறுகின்றன. இந்தியாவில் வரும் காலத்தில் கூட கூட்டணி ஆட்சிகளே அமைய முடியும் என்ற நிலை உள்ளதால் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவதற்கான கூறுகளே இல்லை. ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு, கொள்கைகள் உடன்பாடு இல்லாமல் தேர்தலுக்கு மட்டுமே என்ற நோக்கில் நேர்மையே இல்லாமல் இணைந்து ஒருவாகும் கூட்டணி ஆட்சிகள் என்றுமே இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். ஒன்று முன்பு ஒரே கட்சி அனுபவித்து வந்த பதவி சுகங்களை தற்போது கூட்டணி கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கின்றன. அதாவது சேர்ந்து திருடுவதில் திறமைக்கு ஏற்ற பங்கீடு என்பது போல்... அப்படியும் அது நீண்ட நாள் நிலைப்பது இல்லை :(


******

19 ஜூன், 2008

சந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப்பாத்துங்க...!

ஐயையோ......காப்பாத்துங்க...... ஒரு சின்ன பொண்ணு சந்திரமுகியாக மாறி சிங்கையில் பலரைப் பார்த்து 'லக்க...லக்க' சொல்லுது.

பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.

'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது

"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா""இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'

இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை. டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.

இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது

கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து.

யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.

என்ன கொடுமை சரவணா.......காப்பாத்து !

இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)

பாமகவைக் கூப்பிடும் பாஜக !

நாடாளுமன்ற தேர்த்தலுக்கு முன்பே தமிழக அரசியலில் சூடு கிளம்பியுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் திமுக அரசி(யலி)ன் செயல்பாடுகளை தட்டிக் கேட்கலாம் என்பதை ஆரம்ப காலத்தில் சொல்லி வந்த கலைஞருக்கு தலையில் பலத்த குட்டு விழவே பாமக கழட்டிவிடப்பட்டு இருக்கிறது. கொள்கை அடிப்படையில் இணையாத கூட்டணிக் கட்சிகள் ( அப்படி ஒன்று இல்லவே இல்லை) சூழ்நிலை வசத்த்தால் இணையும் போது எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்லும் / விலக்கப்படும் என்பது தெரிந்ததுதான்.

திமுகவிற்கு இழப்பா ? திமுக கூட்டணி தயவால் ஆட்சிக்கு வரத் துணிந்ததிலிருந்தே...எதிர்காலத்திலும் இப்படித்தான் என்பதால் திமுகவிற்கு இழப்பு போல் தெரியவில்லை. பாமக இல்லாவிட்டால் அந்த இடத்தில் தேமுதிக வரப் போகிறது. தேமுதிகவுக்கு தனியாக நின்றால் வெற்றிபெற முடியாமல் போகும் வாய்ப்புகள் தற்பொழுது சாதகமாக அமையும். நாடாளுமன்ற தேர்த்தலில் நான்கு இடங்கள் பெற்று அதில் இரண்டு வெற்றிபெற்றால் கூட அவர்களுக்கு லாபம் தான். கண்டிப்பாக விஜயகாந்த் கட்சி திமுக பக்கம் சென்றுவிடும் என்றே தெரிகிறது.

அம்மா கட்சியில் சேருவதைத் தவிர பாமகவிற்கு மாற்று இல்லை. பாமகவின் தனித்த பலம் அவர்களுக்கே தெரிந்ததது தான். தனித்து நின்றால் தேறுவதற்கு வழியில்லை. அம்மா கட்சிக் கூட்டணி பாமகவிற்கும் சாதகமாகவே அமையும்.

இதற்கு இடையில் லெட்டர் பேடு கட்சிகளையும், பாமகவையும் சேர்த்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்த்தலை சந்தித்தால் அள்ளிவிடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. கர்நாடகாவில் வெற்றிபெற்றதால் பக்கத்து மாநிலத்திலும் வெற்றிபெறலாம் என்ற நப்பாசைதான் போல் இருக்கிறது. பாஜவின் தமிழக பலம் என்ன என்பதை எல்லாக் கட்சிகளும் அறிந்ததே. அவர்களின் கூட்டணியால் பாஜவிற்கு மட்டுமே லாபம், சேர்த்துக் கொண்டால் மாநிலக் கட்சிகளுக்கு நஷ்டம் தான். அம்மா கட்சி பாஜகவிற்கு சிக்னல் எதுவும் கொடுப்பது போல் தெரியவில்லை. அத்வானி பிரதமர் என்பதை தமிழக மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது அம்மாவிற்கு நன்கு தெரியும், கடைசிவரையில் பாஜகவை அம்மா கட்சி கூட்டணிக்கு அழைக்க மாட்டார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. இதெல்லாம் தெரிந்து தான் தனியாக நின்றால் வழக்கம் போல் டெபாசிட் தேறாது என்பதற்காக பாமகவை அழைத்து தனிக்கூட்டணிக்கு வழி கிடைக்குமா என்று முயல்கிறார் திருநாவுக்கரசர்.

சரத்குமார், கார்த்திக் கட்சிகளை திமுகவோ, அம்மாவோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனவே அவர்கள் பாஜகவுடன் இணைந்து தேர்த்தலை சந்திப்பார்கள் என்றே கருதுகிறேன்.

ஆக வரப் போகும் பாரளுமன்ற தேர்த்தலில் லாபம் பெறப் போகிற ஒரே கட்சி வி.காந்த் கட்சிதான். ஆனால் கடந்த தேர்த்தல் போல் மொத்த வாக்குகளில் 8 விழுக்காடு வாக்கு பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என வி.காந்த் வருங்காலத்தில் கணக்கு சொல்ல முடியாது காரணம் இருக்கும் 40 இடங்களில் 4 இடங்களுக்கு மேல் திமுக தராது.

பாஜக லெட்டர்பேடு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்த்தலை சந்தித்தால் அது அம்மாகட்சிக்கு சற்று பின்னடைவாக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்த்தல் தமிழகத்தைப் பொறுத்து எந்த அலையும் வீசுவது போல் தெரியவில்லை.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? புதசெவி

18 ஜூன், 2008

வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !

இதைப் படியுங்கள் முதலில்....

தாழ்த்தப்பட்டவன் உயர்வுக்கு இந்து மதம் என்ன செய்திருக்கிறது ? மாற்றுமதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதிக்கீடு வழங்கினால் இந்து மத தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்களாம் - போலிக் கண்ணீர் வடிப்பது பிஜேபி

தாழ்தத்பட்டவர்கள் எந்த மதத்தில் சேரவேண்டும் என்பது அவர்கள் விருப்பம், தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு அவர்கள் பழைய மதத்திற்கு திரும்புவதே சாட்சியாக இருக்கிறது.

அப்படி இருக்கையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மதங்களால் மாற்றியமைக்கப் படுகிறது என்பது தோற்றுப் போன வாதம். இது இவ்வாறு இருக்கையில் அவர்களது சலுகைகளை மதத்தின் பெயரால் பறிப்பது என்ன ஞாயம்.

தலித் கிறித்துவரின் பெற்றோர் இரண்டு தலைமுறைக்கு முன்பு கிறித்துவராக மாறி இருந்தால் அவர் பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் வருகிறார். அவர் 'தாய்' (தாயார் அல்ல, தாய்மதம் என்றால் இந்து மதமாம்) மதம் திரும்பிவிட்டால் தாழ்த்தப்பட்டவராகிறார். அவருக்கு சலுகை கிடைக்குமா ? அதாவது நீ உன்னை இந்துமத வருணப்படி தாழ்த்திக் கொள் அதன் பிறகு இட ஒதிக்கீடு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது.

பிஜேபியின் இந்து தலித் மீதான பாசத்தைப் பாருங்கள்...பிறமதத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை வழங்கினால் 'இந்து' தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களாம். ஆனால் பிற மதத்தில் உள்ள தலித்துக்கள் 'இந்து' மதம் திரும்பினால்...'தாய் மதம்' திரும்பிவிட்டார்கள் என்று பெரிய விழா எடுப்பார்களாம். அப்போது புதிதாக எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கும் 'தாய் மதம் திரும்பும் தாழ்த்தப்பட்டவர்களால் ஏற்கனவே இருக்கும் 'இந்து' தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் குறைந்து பாதிக்கப்பட மாட்டார்களா ? இவர்களின் புதிய / திரும்பிய வருகையின் எண்ணிக்கையைப் பொருத்து அரசாங்க சலுகைகளின் (இட) எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுகிறதா ? சலுகைகளின் எண்ணிக்கையை இந்து மதம் திரும்பும் தாழ்த்தப்பட்டவர்களின் தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்துவோம் என பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எதுவும் தீர்மானம் நிறைவேறி இருக்கிறதா ?

பின்பு எதற்கு இந்து தாழ்த்தப்பட்டவர்களின் மீது பிஜேபியினருக்கு போலியான ஒரு அக்கரை ?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதத்தின் பெயரைச் சொல்லி சலுகைகள் பறிக்கப்படுவதும், திரும்பி வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் வைத்திருப்பது...வருண பேதமும் சூத்திரனும் எப்போதும் இருக்கவேண்டும்...அந்த அமைப்பு கட்டிக்காக்கப் படவேண்டும் என்பதே. அரசாங்கம் மூலம் எதோ அவர்கள் நிலை உயரவேண்டும் என்ற பெரும் தன்மையில் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும் வருணம் பாதுக்காக்கும் ஆயுதமாகவே அரசாங்க சலுகைகள் இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக.......மக்கள் ஆட்சியில்......'நீ இந்து தாழ்த்தப்பட்டவனாக இரு அப்பொழுதுதான் நீ சலுகைகளை அடைய முடியும்...... ' அதன் மூலம் மறைமுகமாக வருண விச விருட்சம் பட்டுப் போகாமல் காப்பதற்கு சட்டம் வைத்திருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது வியப்பே. இதைக் குறிப்பிட்டு எவரும் பொதுநல வழக்கு தொடுப்பார்களா ?

இதே கருத்தை முன்பு சற்று விரிவாக எழுதியதன் சுட்டி

17 ஜூன், 2008

தசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் !

பொழுது போவலையான்னு கேட்காதிங்க... 'காற்றுள்ள போதேன்னு' ஒரு பலே பழமொழி இருக்கு ? அது மட்டுமா ? 'ஊரோடு ஒத்துப்போ....' இன்னும் இன்னும் நிறைய இருக்கு....வேறு எதை எழுதினாலும் இன்னும் ஒருவாரத்துக்கு யாரும் படிக்கப்போவதில்லை. தசவதராத்துக்கு
சரியான போட்டி கொடுத்தது 'ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள் தான். தசவதாரத்திற்கு போட்டியாக ஹிட் ஆனது ஜ்யோவ்ராம் சுந்தரும், சுகுணா திவாகரும் தான். 'இவ்வளவு நாளாக எழுதுகிறேன்...என் பதிவு சூடாக மாட்டேன்குது' அப்படி யாருக்கும் குறை இருந்தால் இந்த வாரத்திற்குள் ஒரு தசவதார பதிவைப் போட்டுவிட்டால் அதன் பிறகு குறை ஒன்றும் இல்லை. - இதுவரைக்கும் குசும்பன் மேட்டர் தான்... தலைப்பத் தொட வேண்டுமே,

"என்ன இருந்தாலும் கமல் பிரம்மஹத்தி தோஷம் என்று மனுஸ்மிருதி பயமுறுத்தல்களையும், அண்டப்புளுகுகளையும் 'நம்பி' பாத்திரத்தில் குலோத்துங்க அரசனுக்கு சாபமாக பேசி இருக்கக் கூடாது..." ஒரு முற்போக்கு ஆத்திக பதிவர் (வீஎஸ்கே அல்ல) அங்கலாய்த்தார்

"சாமி....அது சோழர் காலத்தில் நடந்த கதையாக காட்டுறாங்க...அந்த கால பார்பனர்கள் அதைச் சொல்லித்தானே பயமுறுத்தினார்கள்...(அந்த) காலத்திற்கு பொருத்தமான வசனம் தான்... கமல் தவறு செய்யவில்லை" என்றேன்

"கமல் நாத்திக வேடம் போட்டு ஆத்திகம் வளர்க்கிறாரா ?" - இயற்கை நேசி சந்தேகமாக கேட்டார்

"ஒரு சிறந்த கலைஞன் ஒரு பாத்திரமாக மாறிவிட்டால் அந்த பாத்திரத்தின் தன்மையைத்தான் வெளிப்படுத்த முயற்சிப்பான்...அதில் தனது சொந்த கொள்கைகள்...விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை நுழைக்கமாட்டான்..... ஷன்முகி மாமியாகட்டும், ஹேராம் ஐயராகட்டும்...அதில் அந்த பாத்திரத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் கமல்...அதிலெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்தால் படத்தின் கதையோடு ஒட்டி இருக்கவே இருக்காது......தசவதாரத்தில் பார்பனர்கள் பற்றி காட்டி இருக்கும் காட்சியும்...பார்பனராக நடித்திருப்பதை வைத்தும் கமல் ஆத்திகர் ஆகிவிட்டார் என்று அள்ளிவிடாதிங்க..... சிறந்த கலைஞனை கொச்சப்படுத்தாதிங்கைய்யா" என்றேன்

"பூவராகவன் பாத்திரத்தின் உடல்மொழி வசனம் சரியாக இருந்தாலும்...அந்த பாத்திரத்தில் கமல் நடித்ததால் பாத்திரம் செயற்கையாக இருந்தது......."

"என்னிடம் பதிலில்லை...நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்....."

"பலராம் நாயுடு தெலுங்கு டப்பிங்கில் பலராம் நாடாராமே ?"

"இதெல்லாம் வியாபார உத்திங்கோ......தெலுங்கிலும் நாயுடு என்றால் திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல இருக்காதா ?"

"சோழர்கால வைணவர்கள் வதை காட்சியையும்...கடைசியில் மூழ்கிய நாராயண சிலை வெளியே வந்ததைக் காட்டி என்ன சொல்ல வர்றாங்க ?"

"எனக்கும் புரியலைங்க....வைணவ பிரச்சாரம் மாதிரி இருக்கு....தேவை இல்லாமல் படம் முழுவதும் வைணவ பெயர்கள்..... அமரர் சுஜாதா 'ரங்கராஜன் ஆரம்பத்தில் இதை நுழைத்திருக்கலாம் என்று பேச்சு அடிபடுது...நமக்கு தெரிவது கமலுக்கு தெரியாமல் போய் இருக்குமா ? இருவகை காலங்களை படத்தில் தொடுவதால் மாறுபட்ட முயற்சி என்று நினைத்து இருப்பார் போல"

"கிரிக்கெட்டில் ஜெயிக்கும் பாகிஸ்தான் வீரர்கள் உடனே தரையில் விழுந்து நமாஸ் செய்வதும் ... அதைப் பார்த்து நாம் வெறுப்படைவது போல...நாகேஷை வைத்து.....இஸ்லாமியர்களை சுனாமி தாக்கமல் விட்டதையும் ... அது அல்லாவின் கருணை என்று சொல்லச் சொல்வதும் ....நெருடலாகவே இருக்கு ... செத்துப்போன மற்ற மதத்துக்காரங்க பாவம் செய்தவர்களா ? இஸ்லாமியர்கள் மீது ஏன் வெறுப்பை வரவழைப்பது போல் அப்படி ஒரு காட்சியை வைக்கனும் ?"

"தப்புதேங்........அப்படி செய்திருக்கக் கூடாது......."

"படத்துல கே எஸ் ரவிகுமார் டச்சே இல்லையே ?"

"இங்கிதம் தெரியாம பேசாதிங்க...சிங்கீதம் சீனிவாசராவுக்கு வயசாகிடுச்சு போல இருக்கு...இனி ரவிதான் கமலுக்கு ஆஸ்தான இயக்குனர்"

*********

செலவே இல்லாமல் போஸ்டரில் ஐந்து வேசமே போட்டு இருந்தாலும் கேப்டன் விஜயகாந்துக்கு அவை பொருந்தியது போல் 10 வேசம் போட்ட கமலுக்கு போட்ட வேசம் உண்மையிலேயே பொருத்தமாக இருந்ததா ? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் :)))

16 ஜூன், 2008

அப்பா இன்னும் சாகவில்லை....!

மார்ச் 25 1990...அன்றுதான் அப்பா மறைந்ததாக வீட்டில் உள்ள மற்றவர்கள் சொல்லுகிறார்கள். நான் என் தம்பியுடன் சென்னைக்கு வந்த இரண்டாம் ஆண்டு அது. டிசம்பர் 24 1989ல் நானும் தம்பியும் எப்படி வாழ்கிறோம் (சென்னையில் எப்படி காலம் தள்ளுகிறோம்) என்று பார்க்க வந்திருந்தார். 'கந்த கோட்டம் பார்கனும்டா...இங்கே எங்கேயோ இருக்காம்ல' சொல்லும் போது நண்பர்களும் நானும், 'சென்னை வந்தால் எம்ஜிஆர், அண்ணா சமாதியைத்தான் பார்த்து செல்வாங்க...கந்த கோட்டமா அது எங்கே இருக்கு ?' எல்லோரும் சிரித்து செய்த கிண்டல் அவருக்கு கூச்சமாக இருந்ததிருக்கும்... அதன் பிறகு அதைப்பற்றி கேட்பதை தவிர்த்தார். அவரை ஊருக்கு அனுப்பிவிட பாரிஸ் கார்னருக்குச் செல்ல ...அவருடன் பேருந்தில் பயணம் செய்த போது கை, கால்களில் பளபளப்பு குறைந்து சற்று சுருங்கிய தோல்கள் கண்ணில் பட மனதிற்குள் என்னை அறியாமல் ஏற்பட்ட உணர்வு 'அப்பாவுக்கு...வயது ஆகிக் கொண்டிருக்கிறது...' என்று நினைக்க வைத்தது ...அப்போது அவருக்கு 51 வயதுதான். பாரிஸ் கார்னரில் தான் கந்த கோட்டம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் அங்கேயே அவரை பேருந்து ஏற்றிவிட்டேன்.

அப்பாவுக்குத்தான் எத்தனை பெயர்கள் ? அவரை சிறுவயது முதலே தெரிந்தவர்களில் அவரைவிட சிறியவர்கள்...'ராமண்ணா..' என்றும் பெரியவர்கள்...'ராமா...' என்றும் அன்பாக கூப்பிடுவார்கள்....சபரிமலைக்குத் தொடர்ந்து சென்றதால் அவர் பெயரையே எல்லோரும் மறந்து மற்ற நாட்களிலும் 'சாமி' என்றே அழைத்தனர்....நாங்களும் அம்மாவும் கூட அப்படியே அழைத்தோம். அவரும் 5 வயது சிறுவர்களைக் கூட 'சாமி' என்றே அழைப்பார். டீக்கடைக்காரர்களிடம் 'சாமி வீடு?' எங்கே என்று கேட்டால் கூட ... எந்த சாமி ? எதிர்கேள்வி இல்லாமல் எங்கள் வீட்டுக்கு வழி சொல்லிவிடுவார்கள். அதைத் தவிர அப்பாவுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் கிடைத்து ... அதன் மூலம் ஊரார் சுட்டும் பெயர் 'லட்சாதிபதி'. 'லட்சாதிபதி வீடாமே ?' தபால் காரர்களிடம் கேட்டால் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அப்பாவுக்கு 'கோவிந்தராஜு' என்ற இயற்பெயர் எங்களது இனிசியலாக மட்டுமே இருந்தது. அந்த பெயரை அறிந்தவர்களும் மிகக் குறைவே.

உடன் பிறந்த அறுவரில் அப்பாவுக்கு பிடித்தவர் யார் ? அம்மாவும் தோற்றுப் போனார்...காரணம் அம்மாவுக்கு பிடித்தவர்கள் யார் யார் என்பது வெளிப்படை. அப்பாவுக்கு ? 'அப்பா என்னிடம் தான் அதிகம் பாசம் வைத்துள்ளார்' ஒவ்வொருவரும் அதையே உணர்ந்தோம்.... தனித்தனியான அன்பு...குறைவில்லாத அன்பு...அப்பா வைத்தது போல் அப்படி குறையற்ற அன்பை வைக்க அமமாவால் முடியவில்லை.

******

இரவு சமைத்த சோறு ...தீய்ந்து போனது...மனது சரியில்லை... தூக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கும் போது அதுகுறித்து...'எதோ விபரீதம் நடக்க இருக்கிறது' திக் திக் என இருக்க அப்படியே தூங்கிப் போனேன், மறுநாள் வழக்கமாக அலுவலகம் சென்றேன்

மார்ச் 26 1990... திங்கள் காலை 11 மணிக்கு சென்னையில் அலுவலில் இருந்த போது

"அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ்...உடனே நீயும் தம்பியும் கிளம்பி வந்திடுங்க....." ஊரில் இருந்து யாரோ அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்கள் ... அழுத்தமானது மனது...எனது தம்பிக்கும் தொலைபேசி வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு ...வீட்டில் இருந்து பேருந்து நிலையம் செல்வதாக முடிவு செய்தோம்....

இன்று போல் கைபேசிகளோ...வீட்டில் தொலைபேசி இணைப்போ இல்லாததால் உடனடியாக எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேருந்து ஏறிவிட்டால் தொடர்ந்து 8 மணி நேர பயணம் அந்த நேரத்தில் எவருடனும் தொடர்பு கொள்ளவே முடியாது

ஒருவழியாக மதியம் 2 மணி வாக்கில் பேருந்தை பிடித்து நானும் தம்பியும் நாகப்பட்டினம் செல்ல நேரடி பேருந்து கிடைக்காதாதால் காரைக்கால் பேருந்தில் ஏறிவிட்டோம். பேருந்தின் வேகமோ வழக்கத்தைவிட மிக மிக மெதுவாக சென்றது....சிதம்பரத்திற்கும் முன்பு செல்லும் போது மாலை 6 ஆகி இருந்தது...திடிரென்று பேருந்து நிறுத்தப்பட்டது...'ரோட்டில் லாரிக்காரன் ஒரு அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு போய்விட்டான்' ஊர் காரர்கள் சாலையை மறைக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டார்கள்.

'அப்பாவுக்கு என்ன ஆச்சோ.....' மனது துடித்த துடிப்பு....நான் தம்பியின் முகத்தை பார்க்க...அவனும் பேசமால என்னையை பார்க்க இருக்கமான சூழலில் 1 மணி நேரம் கழித்தே மெதுவாக சாலை மறியல் பேச்சுவார்த்ததயினால் திறக்கப்பட்டது......இருவரும் எதுவும் பேசிக் கொள்ள முடியாமல் காரைக்கால் வரை சென்று விட்டோம்...மணி 9:30 ஆகி இருந்தது.......அங்கிருந்து எங்கள் ஊருக்குச் சென்ற போது 10:00 மணி ஆகி இருந்தது....தெருவில் சத்தமில்லாமல் வெறிச்சோடி இருந்தது...'அப்பா இன்னும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கனும்' வீட்டில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு போவோம்...என்று நினைத்து வீட்டை நெருங்க நெருங்க....விசும்பல் ஒலிகள்....மனதை பிசைய....... காலடியில் மிதிபடும் பூக்கள் உண்மையை உணர்த்த

"டேய்......இன்னும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்திருக்கக் கூடாதா ?........உங்க அப்பா இவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருந்திட்டு போய்டாருடா......" என்றதும்.......

பதில் பேச...முடியாமல் அருகில் இருந்த சைக்கிளை எடுத்து கொண்டு...எப்படி மிதித்தேன்......எப்படி அங்கு சென்றேன் என்றே தெரியவில்லை........ 3 கிலோ மீட்டர் தொலைவு

சுடுகாட்டை நானும் தம்பியும் அடைந்த போது 'அப்பா......சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தார்'

'அப்பாவை கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்கலையே......'

'அப்பா...........ஆ' சுடுகாடே எதிரொலிக்க போட்ட அளரலுடன்

அங்கேயே சாம்பலில் உருண்டு பிரண்டு உணர்ச்சியற்ற நிலையில் இருந்த என்னை கூடவே வந்தவர்கள் மீட்டுக் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டார்களாம்...'எரியும் நெருப்பில் விழப்போனேன்' என்றும் சொன்னார்கள். என்ன நடந்ததென்றே எனக்கு தெரியாது.....என்னைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக என் தம்பி அவனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்த்தான்.

முதல் நாள் (25 மார்ச் 1990)ல் மாலை அப்பாவுக்கு மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்று பிறகு சொன்னார்கள். வேலையில் இருந்த போது நெஞ்சு வலி என்றதால் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்....மருத்துவமனையில் 3 மாதமே ஆன அக்காவின் மகனையும் அங்கே முதல் நாள் சேர்த்திருந்ததால் ... அக்கா மட்டுமே அப்பா இறக்கும் நேரத்தில் எதிர்பாராவிதமாக கேள்விப்பட்டு அங்கு சென்று அருகில் இருந்திருக்கிறாள். அப்பா கடைசியாக ஒரே ஒரு பார்வை பார்த்து எதுவும் பேச முடியாமல் உயிர்விட்டாரம்... நாங்கள் சென்னையில் அதற்கு முதல் வாரம்தான் வேறு வீடு மாறி இருந்ததை தெரிவிக்காமல் விட்டு இருந்ததால் கொடுத்த தந்தி பழைய வீட்டை அடைந்திருக்கிறது...நாங்கள் வருவோம் வருவோம் என்று காலை வரை எதிர்பார்த்து இருந்து...வராமல் போகவே மறுநாள் காலை (திங்கள்) எப்படியும் அலுவலகம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்து தொலைபேசி வழியாகத்தான் சொல்ல முடிந்ததாகவும்...எங்களிடம் விசயத்தை சொன்னால் பயந்துவிடுவோம் என்பதற்க்காக 'சீரியஸ்' என்று மட்டுமே தொலைபேசியில் சொல்லி வரச் சொன்னதாக சொன்னார்கள்.

அப்பாவின் பிணத்தை பார்க்கவே இல்லை என்பதால்....'அப்பா இறந்துவிட்டார்' என்று இன்னும் கூட என்னாலும் தம்பியாலும் நம்பவே முடியவில்லை.

அதன் பிறகு எவ்வளவோ கனவுகள் ......அப்பா கனவில் வரும் போதெல்லாம் அவரை கட்டியணைத்து மகிழ்கிறேன்....கனவில் வந்தாலும் கூட கண்ணீரால் தலையணையே நனைந்துவிடுவது...நானும் தந்தையான பின்பு இன்றும் எப்போதாவது நடக்கிறது.

**********
நீங்கள் உங்கள் தந்தையை மிகவும் நேசிப்பவர் என்றால் ஈகோ பார்க்காது.....அவரை கட்டியணைத்து .... முத்தம் கொடுத்து ... மகிழுங்கள்... அவருக்கு நெகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாரெல்லாம் செய்துவிட்டால் பெற்றோர்களின் மறைவின் போது ஏக்கம் துரத்தவே துரத்தாது...அந்த இனிமையான நினைவும் உங்கள் எண்ணத்தை விட்டு என்று அகலாது. உயிரோடு இருக்கும் போது தான் வெளிப்படுத்தும் அன்பு சென்று சேரும்...அது எதையுமே செய்யாது பின்பு பொட்டு வைத்த படத்துக்கு முன்பு பிடித்ததை வாங்கி வைப்பதால் பயனில்லை

தந்தையராகி இருக்கும் அனைவருக்கும் தந்தையர் நாள் நல்வாழ்த்துகள் !

15 ஜூன், 2008

தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...

'இந்த குழந்தை பிறந்த நேரம் உலகத்துக்கே ஆபத்து' வழக்கமான மாரியாத்தா கதைக்கு மாற்றாக அமெரிக்கத் தனமான அறிவியல் பயமுறுத்தல் கதை. 'உயிர்கொல்லி கெமிக்கல் எதிரிகளின் கைகளுக்கு சிக்கிவிட்டாலோ, அல்லது திறந்து கொண்டாலோ ஏற்படும் விளைவுகள் சுனாமியால் தடுக்கப்படுகிறது' பெரிய எழுத்தில் சிறிய சிலேட்டில் எழுதிவிடக் கூடிய கதை. நைட் சியாமளனின் ஹேபனிங்க் கூட உலக மக்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் ஒரு கிருமி பற்றியது.

அதற்கு விதவிதமான மேக்கப் போட்டு சோழர்காலம் முதல் சென்ற சுனாமி வரை உள்ள காலத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். சைவ வைணவ சண்டைகளுக்கு காரணம் குலோத்துங்கச் சோழன் 'தான்' என்று கதையில் சொல்லிவிட்டதால் இராமகோபாலன்களுக்கு நிம்மதி ஏற்பட்டு இருக்கும், சோழர்காலக் கதையில் காட்டி இருக்கும் ஒரு வைணவருக்கே முதுகில் கொக்கி மாட்டி தொங்கவிடப்பட்டு சிலையுடன் கடலில் மூழ்கடிக்கப்படும் இத்தகைய கொடூர தண்டனை என்றால் சைவ சமயம் தழைக்க கழுவேற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் அந்த காட்சியின் போது என்னுள் வந்து சென்றார்கள். :(

துரோகிகள் எப்போதும் கூடவே தான் இருப்பார்கள் என்று சொல்லுவிதமாக அமெரிக்க விஞ்ஞானியாக இருக்கும் கமலின் நண்பர்களின் பாத்திரங்கள். அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் அருமை. இடையில் காட்டப்படும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் படத்தின் இறுதிக் காட்சிகளில் மட்டுமே ஒட்டுகிறார். பாத்திரத்தின் முழுமைக்காக கமல் மிகவும் பாடுபட்டு இருப்பதால் என்னவோ அங்கு கமல் என்ற அடையாளமே மறைந்து இருக்க இல்லாமல் வேறுருவரைக் கூட அதற்கு போட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. முற்றிலும் மாறுபட்ட பாத்திரம் என்பதை தனது சுவடில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது பல்ராம் நாயுடு பாத்திரம் தான். பெங்களூரில் இருந்த போது பார்த்திருக்கிறேன் தெலுங்கர்கள் (பாஸ்) தட்டுத்தடுமாறி பேசும் தமிழை அப்படியே நகைச்சுவையுடன் கலந்து தந்திருப்பதை ரசித்தேன். அது போன்ற பாத்திரங்களை பலர் பார்த்திருக்கக் கூடும். கமல் சிறப்பாகவே செய்திருக்கிறார். அட்டகாசம் பல்ராம் நாயுடுவை மீண்டும் ரசிக்க மறுமுறை படம் பார்ப்பேன். :)

உயர்ந்த மனிதன், மற்றும் ஜார்ஜ் புஷ் உருவங்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. பூவராகவன் பாத்திரம் பேசும் வசனங்களுக்காகவும் உருவ அசைவுகளுக்காகவும் மனதில் ஒட்டியது. சிங் வேடத்தில் புற்றுநோயால் இரத்த வாந்தி எடுக்கும் காட்சியைப் பார்க்கும் போது...இதைத்தான் ஏற்கனவே வாழ்வே மாயம், சலங்கை ஒலி படத்திலியே பார்த்துட்டோம்ல என்று நினைக்க வைத்தது. சிங் பாடும் பாடல் எழுந்தாட வைக்கும் என்று நினைத்தேன் ஏமாற்றம் தான். பஞ்சாப் பங்க்ரா நடனம் பார்த்தவர்களுக்கு அது சலிப்பையே தரும்.

சுனாமி சோகத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறிக் கொண்டு ஓடுவதாகக் காட்டிக் கொண்டே நடுவே கமல் - அசின் பேசும் ரொமான்ஸ் வசனங்கள் அந்த சூழலிலும் அப்படி பேசிக் கொள்ள முடியுமா ? எதார்த்தமாக இல்லையே என நினைக்க வைத்தது. அடுத்தபடமெல்லாம் இவ்வளவு செலவு செய்யாமல் கே எஸ் இரவி குமார் எடுப்பாரான்னு எதிர்ப்பார்பை உண்டாக்கிவிட்டது. படத்தில் பார்க்க வேண்டும் என்று பாடல்கள் எதையும் இதுவரை கேட்காமல் சென்றதான் 'முகுந்தா...முகுந்தா' பாடல் தவிர எதுவும் ஒட்டவில்லை.

கடைசியில் கமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சி...சிஐஏ ஏஜெண்ட் அமெரிக்கராக நடித்தவரும் அவர் தான் என்று. அதன் பிரமிப்பு அகல நீண்ட நேரம் ஆயிற்று. காரணம் இந்த அமெரிக்கர் நன்றாக செய்கிறாரே அடுத்த அடுதத தமிழ் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார் என்று படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தேன். மல்லிகா செராவத் 'தாராள' நடிப்பு...ஏற்ற பாத்திரம் சிறப்பாக செய்து இருந்தார். ஜெயபிரதா - எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்ல முடியாதா அளவுக்கு ஓரளவு நன்றாகவே இருக்கிறார். அசின் லொட லொட பேச்சு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியது (ஓவர் ஆக்சன்) மற்றபடி கமல் படத்தில் வரும் நாகேஷ், சந்தான பாரதி வருகிறார்கள். ரேகவும் பி.வாசுவும் தலையை காட்டுகிறார்கள். சுனாமி காட்டுவத்ற்கு முன்பு வரும் காட்சிகள் மைக்கேல் மதன காமராசனை நினைவு படுத்துகிறது.

சிவாஜியா ? தசவதாரமா ? - தமிழ்மண பதிவுகளைப் பொருத்தும்... சூடான இடுகைகளையும் மட்டுமே ஒப்பிட்டால் தசவதாரம் சிவாஜியை பின்னுக்கு தள்ளிவிட்டதென்றே சொல்லலாம். :) படத்தைப் பற்றி பலர் எழுதியதை படிக்கவில்லை. இருந்தாலும் சுனாமி போன்று தசவதார பதிவுகளாக வந்து எதிர்பார்க்க வைத்தது...ஓரளவுக்கு எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை என்றாலும் ஏன் இவ்வளவு பில்டெப் என்றும் நினைக்க வைக்கிறது. கிறித்துவ, இஸ்லாமியர், தெலுங்கர் மற்றும் பார்பனர் ஆகிய பலதரப்பையும் கவரும் வண்ணம் பாத்திரங்களை படைத்து இருப்பது வியாபார தந்திரம் தான். வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !

நான் எனது வாடகைக் காரில் கிழக்கு கடற்கரையினுள் நுழையும் சாலையை அடைந்த போது மாலை 5.20 ஆகி இருந்தது. அதற்குள் நான்கு சிங்கங்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தி இருந்தனர்.


மொத்தம் பதிவர் சந்திப்புக்கு 8 சிங்கங்கள் வந்திருந்தன. ஒரு சில சிங்கங்கள் வருவதாக சொல்லி இருந்தது, வேறு சில வேலைகளின் நீட்சியால் சந்திப்புக்கு வர இயலவில்லை என்றன.

சிங்கம் 1 : சிங்கை நாதன் (செந்தில்) நீண்டகாலமாக பதிவுலகையே வாசித்துவரும் சிங்கம். பலநூறு பதிவர் சந்திப்புகளை கண்ட சிங்கம் இதுதான்.

எனக்கு முன்பாக அங்கே வந்துவிட்டது. சிங்கத்துடன் ஒரு 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அடுத்து இரு சிங்கங்கள் வந்தன.

சிங்கம் 2 : ஜெகதீசன், இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். :) இந்த சிங்கம் வரும் போதே...புதிய சிங்கத்தையும் அழைத்து வந்தது.

சிங்கம் 3 : கிரி, இந்த சிங்கம் மூன்று மாதத்திற்கும் முன் எழுத ஆரம்பித்து 100 பதிவுகள் வரை கண்டு இருக்கிறது.

பரவலாக பலர் இந்த சிங்கத்துக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருப்பதால், முகத்தை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள். இளம் சிங்கம் தான், நெடிய ஒல்லிய சிங்கம். அடுத்ததாக வந்தது...

சிங்கம் 4: என்பெயர் சிவராம் முருகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டது. தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.

பதிவை தொடங்கி அப்படியே வைத்திருக்கிறேன் என்று சொன்னது...அடுத்து வந்தது ஒரு அதிரடி சிங்கம்...

சிங்கம் 5 : பாரி.அரசு... கொஞ்ச நாளாகவே அருள் வந்த சாமியார் மாதிரி அவ்வப்போது அதிரடியாக எழுதிவரும் சிங்கம். சந்திப்பில் நிறைய பேசியது இந்த சிங்கம் தான்.

அடுத்து ஒரு சிங்கம்...தசவதாரம் படத்தில் வரும் நெடிய கமலைவிட ஒரு அடி குறைவான உயரம்... அது தான்

சிங்கம் 6 : வடுவூர் குமார்... ரொம்ப குஷி மூடில் இருந்ததால் என்னவோ...சந்திப்பில் அனைவருக்கும் இரவு உணவை உற்சாகமாக வாங்கித்தந்தது. இன்னொரு சிங்கம்...கடைசியாக வந்த சிங்கம் இதுதான்...சரியாக மாலை 6.15 மணிக்கு வந்தது

சிங்கம் 7 : முகவை மைந்தன் (இராம்) பரவலாக பலரது பதிவுகளை படித்துவரும் சிங்கம்... சிங்கைக்கு வேலைக்கு வந்து குறிப்பிட்ட வேலை அலுவலகத்தாரால் இன்னும் முடிவு செய்யமல் இருப்பதால் வலைப்பூவை வைத்து பொழுதை ஓட்டிவருவதாகச் சொன்னது. 8 ஆவது சிங்கம்

சிங்கம் 8 : தற்பெருமை எழுதினால் சிங்கம் அசிங்கமாகிடும் :))

*********சந்திபிற்கு முதலில் வந்த சிங்கை நாதன் செந்தில் வீட்டில் இருந்து அல்வா மற்றும் கேள்வரகு (ராகி) முறுக்கு செய்து எடுத்துவந்தார். வலைப் பதிவாளர்களின் மீது தனிப்பட்டு வைத்திருக்கும் அன்பு அதன் மூலம் எனக்கு தெரிந்தது. 'நீங்களெல்லாம் கஷ்டப்பட்டு எழுதுறிங்க...அதைப்பாராட்ட வழி தெரியல...என்னால் இப்படித்தான் பாராட்ட முடிகிறது...'என்றார். நெகிழ்ச்சியாக இருந்தது. சந்திப்பின் போது 'பதிவு எதையும் எழுதுவதில்லை...பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்' என்றார். பதிவு எதும் வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். 'எதும் இருக்கிறதா ?' கேட்டேன்....'முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சவால் விட்டார். இவருக்கு வலைப்பதிவு இருக்கிறதா ? தெரிந்தால் சொல்லுங்களேன். வாதம் - முடிவுக்கு வராத விவாதம் ஆகியவற்றால் பயனில்லை...வலைப்பதிவுகள் பயனுள்ள வகையில் எடுத்துச் சொல்லப்பட ...செல்லப்படவேண்டும். எழுதினோம்...சண்டைப்போட்டோம்...பொழுது போனது என்று இல்லாமல் அடுத்தக் கட்டத்திற்கு செல்லவேண்டும் என்று தனது ஆதங்கத்தையும் குறிப்பிட்டார்.

சிவராம் முருகன் பேசும் போது...'சில பதிவுகளைப் படிக்கும் போது பயங்கர வெறி வரும்...வக்காளி இதுபோல நாமும் எழுதனும்டான்னு ஆரம்பிச்சி எழுதுவேன்...எழுதிட்டு பதிக்க மாட்டேன்...அப்பறம் நாலு நாள் சென்று அதை அழித்துவிடுவேன்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

முகவை மைந்தன் பேசும் போது... என்னமோ 'சுதந்திரம்... கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?' என்று பாரி.அரசுவிடம் கேள்வி எழுப்பினார்...அப்பதான் தெரிந்தது இவர் கொஞ்ச கொஞ்சமாக பைத்தியக்காரனாக ( ஐ மீன் பின்னவினத்துவ பதிவர் நம்ம பைத்தியக்காரனைப் போல்) மாறிவருகிறார் என்று தெரிந்தது. இவரும் பாரி.அரசுவும் சூடான விவாதங்களைப் பேசினார்கள். ஜெகதீசன் அப்பாவியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

பாரி.அரசு தமிழ்99 பயன்பாடுகள் பற்றி அருமையாக விளக்கினார். ஒரே முறையில் தமிழ் உள்ளிடுதல் இருந்தால் தமிழில் மென்பொருள் தயாரிப்பதை எளிதாக்கவும், அதை பயன்படுத்துவதும் எளிதாகிவிடும்...இல்லை என்றால் ஒவ்வொரு உள்ளிடுதல் முறைக்கும் மென்பொருள் தயாரித்து அதை ஒருங்குறிக்கு மாற்றி பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. அதாவது நாம் இன்று பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு உள்ளிடு முறைகளை ஒரே முறைக்கு மாற்றினால் கணனி தமிழை வணிகம் சார்ந்த பயன்பாட்டிற்கு சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்றார்

வடுவூர் குமார் லினக்ஸ் பயன்படுத்தும் அனுபவங்களையும்...மற்றும் பதிவு சாராத பலசெய்திகளை பகிர்ந்து கொண்டார். முகவை மைந்தன் திருக்குறளுக்கு விளக்க உரை எழுதிய தனது சிலிர்ப்பு அனுபவத்தை விவரித்தார். நேரம் ஆகிவிட்டது கிளம்புகிறேன் என்று எவருமே சொல்லாததால் இரவு 9.15 ஆனதும்...சரி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டுவோம் என்று நினைவு படுத்தினேன். 9.30 மணி வாக்கில் அங்கேயே கோமளா உணவகத்தில் வடுவூர் குமாரின் உபயத்தால் உணவு உண்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு விடைபெற்று கிளம்பும் போது இரவு மணி 9.50 ஆகி இருந்தது. பதிவுலகம் தாண்டிய பல்வேறு நடப்புகளையும் பொதுவானவற்றையும் மட்டுமே மிகுந்து பேசினோம்.

கோமளாவில் போண்டா கிடைக்கவில்லை. அதனால் ஜெகதீசனுக்கு சந்திப்பு தித்திப்பாக இல்லையாம் ரொம்பவே வருத்தப்பட்டார்.

*********

மேலும் அவரவர் பார்வையில் பதிவர் சந்திப்பு குறித்து முதன் முதலில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட கிரி...முகவை மைந்தன்...மற்றும் சிவராம் முருகன் எழுதுவார்கள்

13 ஜூன், 2008

தசவதாரம் - ஒரு சோதிட பார்வை !

இந்த வாரமும், அடுத்தவாரமும் இதுதான் ஹிட்டுன்னு தெரிஞ்சு போச்சு... ஊகமாக இதெல்லாம் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்க. 10 நாளைக்காவது பதிவுலகின் மந்திரச் சொல்லாக 'தசவதாரம்' இருக்கும், கருத்து செறிவுள்ள பதிவுகளை இந்த வாரம் வலையேற்றலாம் என்பவர்கள் ஒத்திப் போடுங்கள், ஏனென்றால் கவனம் பெறாது.

தசவதாரத்தினால் என்னவெல்லாம் நடக்கலாம்,

அக்கம் பக்கம் :

1* பெட்ரோல் விலை உயர்வை ஒருவாரத்திற்காவது மறக்க வைக்கும்
2* சிவாஜியா ? தசவதாரமா ? எது சிறந்த படம் என்ற அபத்த விவாதங்கள் நடக்கும். (ஒப்பிடமுடியாதவற்றைக் கூட ஒப்பிட்டு பேசுவதில் நம்மவர்கள் வல்லவர்கள்)
3* ஒருவாரம் வெளி வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைக்கும் பதிவர்களுக்கு நல்ல வாய்ப்பு, ஒருவாரம் முழுவதும் தசவாதாரம் தான் சூடாகப் போகிறது, வேறு பதிவுகள் எதுவும் கவனம் பெறாது. எனவே தற்காலிக ஓய்வெடுக்கலாம் என்று மூடுக்கு பலர் வரக்கூடும்.
4* தசவதாரம் பற்றி ஒரு இடுகையோ, ஒரு பின்னூட்டமோ போடவில்லை நீயெல்லாம் ஒரு பதிவரா ? பதிவுலகினரால் கேலிக்கு ஆளாகி, சில பதிவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வார்கள்
5* சோகம் : தசவதாரம் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, வாலிபர் விசம் அருந்தினார் - தட்ஸ் தமிழ் செய்தி


வரப்போகும் கட்டுரைகள் :

6* தசவதாரம் - கமலஹாசனின் உடல் அரசியலும், ஊடகங்களும் - ஜமாலன் ( கீற்றுக் கட்டுரை மீள் பதிப்பு)
7* தசவதாரமும் உருவப்படும் பத்து கோமணங்களும் - அசுரன்
8* தசவதாரமும் மிதிக்கப்படும் பெண்ணியமும் - சுகுணாதிவாகர் (பின்னவினத்துவ அலசல்)
9* தசவாதாரம் - திரையுலகின் ஒரு சாகா வரம் - உண்மைத்தமிழனின் மின் நூல்வெளியீடு (பதிவு நீளம் என்பதால் இப்போதெல்லாம் அதை மின்னூலாக்கி எல்லோருக்கும் மின் அஞ்சல் அனுப்புகிறாராம்)
10* அடுத்தவார வெள்ளிக்கிழமை டோண்டு ராகவனின் கேள்வி பகுதியில் , 'சமீபத்தில்' வெளியான சிவாஜி கனேசனின் தசவதாரமும், தற்போது வெளியான கமலஹாசனின் தசவதாரமும் - ஒப்பிடமுடியுமா ?

**************
இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

* சிங்கைப் பதிவர்களே நாளைக்கு பதிவர் சந்திப்புக்கு மறக்காமல் வந்துவிடுங்கள்
* நம்ம இளஞ்சிங்கம், புதிய சுனாமி மோகன் கந்தசாமியின் வெள்ளிவிழா பதிவை நேரம் கிடைக்கும் போது படிச்சுப்பாருங்க, அவரது பதிவு பின்னூட்டத்தில் திரட்டப்படவில்லை)
* கோவியாருக்கு சூடான பதில்கள்! டோண்டு சாருக்கு நாக்கை புடுங்கும் கேள்விகள்!! - வலைப்பூ சுனாமி திரு லக்கி லுக்

பிகு : தசவதாரம் படத்தை இன்னும் பார்க்கலைங்க, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை, மலேசியா - ஜோகூர் ( சிங்கப்பூர் அருகில் இருக்கும் இடம்) சென்று பார்ப்பேன். அதுபற்றி பதிவெழுத வேண்டாம் என்று சொன்னால் பரிசீலிப்பேன் :)))

12 ஜூன், 2008

லக்கி லுக் அவர்களுக்கு "நறுக்கென்று 4 கேள்விகள்" !

சுடர் விளையாட்டு என்னும் தொடர் விளையாட்டு தேன் கூடு சார்பில் முன்பு நடந்தது. சுடர் பலர் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கும் போதே சுடர் அணைந்துவிட்டது (திரு சாகரனின் மறைவு). சுடர் விளையாட்டில் தனக்கு (தானே அல்ல) கேள்வி கேட்க விருப்பமுள்ள பதிவர்களிடம் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர்கள் பதிலாக ஒரு இடுகையை எழுதுவதும், இடுகையின் முடிவில் பதில் சொல்லுபவர் வேறொருவருக்கு கேள்விகளை வைப்பார்... இது (ஒற்றை) சங்கிலியாக தொடர்ந்து செல்லும். தற்பொழுது வலைப்பதிவுகளில் கேள்வி - பதில் பற்றி சீசன் கிளம்பி இருப்பதாக பதிவர் நண்பர் 'சற்றுமுன்' சிறில் அலெக்ஸ் பதிவிட்டு இருந்தார். அவருக்கு அங்கேயே நறுக்கென்று கேள்விகளை கேட்டு வந்திருக்கிறேன். பதில் சொல்லத் திணறுவார் என்றே நினைக்கிறேன். :)

இங்கு நான் கேள்வி கேட்க விரும்பும் பதிவர், வலைப்பூ சுனாமி லக்கி லுக், அவரிடம் நான் கேட்க விரும்பும் எனது 'நறுக்' கேள்விகள்

1. நீங்கள் முதன் முதலில் பார்த்த ஷகீலா படம் பற்றிய சிறுகுறிப்புடன், எந்த வயதில், எந்த திரையிரங்கில் பார்த்தீர்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா ?

2. நீங்கள் (சமீபத்தில்) திமுகவின் தீவிர ஆதரவாளன் ஆனபோது உங்கள் வயது என்ன ?

3. உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்கீறார்களே... அது உண்மையா ? வதந்தியா ?

4. வளர்மதி, ஜ்யாவ்ராம் சுந்தர், சுகுணாதிவாகர், பைத்தியக்காரன் மற்றும் உண்மை தமிழன் ஆகிய ஐவரில் யாரைப் பார்த்ததும் உடனே எழுந்து ஓடுவீர்கள் ?

அப்படியே நீங்கள் கேள்விக் கேட்கும் நபரை குறிப்பிட்டு நச்சின்னு நாலு கேள்வி கேளுங்க.

பதில் அளித்த லக்கி லுக் அவர்களுக்கு நன்றி !

11 ஜூன், 2008

இந்தியாவின் பேங்காக் !

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.

கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு தீவுகளுக்கு படகில் அழைத்துச் செல்கிறார்கள், தனிப்பட்ட படகென்றால் 400 ரூபாய் வரை நான்கு மணி நேரப்பயணத்திற்கு வாங்குகிறார்கள். இதைத் தவிர்த்து பல்வேறு தீவுகளுக்கு அரசு போக்கு வரத்து (KRTC) படகுகளும் விடப்பட்டுள்ளன, சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு பெரும் படகும் 150 பேர்வரை ஏற்றிக் கொண்டு அக்கரை செல்கிறது. பேருந்த்தில் சென்றால் 1 மணி நேரம் வரை சுற்றிக் கொண்டு செல்லக் கூடிய தீவுகளை படகு பயணம் அரை மணி நேரத்திலேயே அடைந்துவிடுகிறது. படகு சவாரி கட்டணமும் 3 - 5 ரூபாய் என மிகவும் குறைந்த கட்டணம் தான்.


பால்காட்டி தீவு

பால்காட்டி அரண்மனை வளாகம்

எர்ணாகுளம் படகுதுறையில் இருந்து பால்காட்டி என்னும் தீவுபகுதிக்குச் சென்றோம். 3 ரூபாயில், 5 நிமிட படகு பயணம் தான் அது ஒரு சுற்றுலா தளம், அரண்மனையை ஓட்டல் அறைகளாக மாற்றி சுற்றுப்புரத்தை அழகுற பராமறித்துவருகிறார்கள்.

அதைத் தவிர்த்து யூதர்கள் வந்து இறங்கி ஆதிக்கம் செலுத்திய ஒரு தீவுக்குச் சென்றோம், அங்கு 500 ஆண்டுகளுக்கும் பழமையான யூத தேவலயம் ஒன்று இருந்தது.

தேவலயம் உள் அமைப்பு

பீங்கான் ஓடுகளால் ( டைல்ஸ்) பொருத்தப்பட்ட தரைகள் கவனம் பெற்றன. காரணம் ஒவ்வொரு சதுர ஓடுகளில் வரையப்பட்ட படங்கள் ஒன்று போல் இருந்தாலும் அங்கு பதித்திருக்கும் 2000க்கும் மேற்பட்ட ஓடுகள் ஒவ்வொன்றின் படமும் சிறிய அளவாவது ஒன்றோடு ஒன்று மாறுபட்டது (unique design)

கேரள மக்கள் மற்ற மாநிலங்களில் தேனீர் கடை வைத்திருப்பது போலவே கொச்சியில் பல சாலை ஓர தள்ளுவண்டி கடைகளில் தமிழர்கள் வடை, போண்டா, பஜ்ஜி செய்து விற்கிறார்கள். கேரளாவில் மக்கள் ஓரளவு சாதிவேற்றுமையின்றியே பழகுகிறார்கள்.


மேலும் ஒரு சுற்றுலா தளமாக கொச்சின் அரண்மனையை பார்த்தேன். சிறிய மலைபோன்ற உயர இடத்தில் கொச்சியை ஆண்ட மன்னர்களின் நினைவுப் பொருள்களையும், அக்கால சின்னங்கள், வடிவங்கள், பொருள்கள் என அதை ஒரு அரும்காட்சியகமாக மாற்றி வைத்திருந்தார்கள்,

(கிழேயிருந்து மேலே)

(மேலிருந்து கீழே)

சுற்றிலும் பூங்காக்களில் பெங்களூரு லால்பாக் போன்று மறைவிடங்களாக தேடிச் சென்று அமர்ந்து கொண்டிருக்கும் காதலர்களின் நிழல்கள் தெரிந்தன. சென்னையை ஆங்கிலேயர்கள் கையாண்டது போலவே கொச்சின் (சமஸ்தானம்) டச்சுக்காரர்களின் கைவசம் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன.

ஜூராசிக் பார்க்

மான் கண்டேன்...மான் கண்டேன்

தென்னிந்தியாவில் மற்றொரு சிறந்த சுற்றுலா தளமாக கொச்சின் இருக்கிறது என்றால் மிகை அல்ல. நமது மாநிலங்கள் ஒன்றுபட்ட இந்தியா என்ற அமைப்பில் இருப்பதால் தான் என்னவோ சிறப்பாக விளம்பரப்படுத்தவோ, அழகுபடுத்தவோ ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. அந்ததந்த மாநில வளர்சிக்காக சுற்றுலா தளங்கள் சிறப்பாக பராமறிக்கப்பட்டால் உலக சுற்றுலா தளங்களுடன் போட்டியிட முடியும். என்ன செய்வது எந்த மாநிலத்தில் இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் சுற்றுலாத்தளம் இதற்கு மேல் இருக்க முடியாது என்றே பெருமூச்சுவிட வைக்கிறது. இந்தியாவிலேயே மாநில தனிக்கொடி கொண்டுள்ள கர்நாடக மாநிலம் மட்டுமே சற்று விழித்துக் கொண்டு தங்கள் சுற்றுலாத் தளங்களை மிகவும் சிறந்த முறையில் பலரை கவரும் வண்ணம் மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்கள் இந்தியாவில் அங்க(ஹீன)மாகவே பரமாறிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா துறையை மேம்படுத்தினாலே, இந்தியா வல்லரசு கனவை விட முதன்மையான பொருளாதார தன்னிரவு அடைந்துவிட முடியும். மெத்தனத்தால் இன்னும் பல இடங்கள்...பராமரிப்பின்றி பாரா மரிப்பில் இருக்கின்றன.

10 ஜூன், 2008

வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க !

அந்த காலம் எப்போது வரும் என்று தெரியாதவரை கோஷத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பித்து இருக்கிறாராம். தயாரிப்பாளர்களின் முதல் இல்லாமல் நெடும்தொடரில் சொந்தப் பெயரில் இயல்பாக நடிக்க வாய்ப்பாக நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

வழக்கம் போல் தனது கட்சி சாதிக்கட்சி அல்ல சாதிக்கும் கட்சி என்கிறார் கார்த்திக். அவரிடம் கேட்டபோது,

அவரது குரலில் கற்பனை உரையாடல்.

"அது.....வந்து....நான்.... ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு...எ.... என் ரசிகர்கள் கே.....கேட்டாங்க....நான் நான் நானே சிந்திச்சேன்...நாம நாம ஏன் ஏன் கட்சி ஆராம்பிக்கக் கூடாதுன்னு... நேற்று வ....வந்தவனெல்லாம் கட்சி ஆரம்பிச்சிட்டாங்க...தலைவா....நீ நீ....ஏன் கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு அவங்க கே.......கேட்பது ஞாயம் தானே. இப்ப பாருங்க....நான் நான் மதுரை பக்கம் போ....போனாலே கூட்டம் அ....அலைமோதுது....நீ......நீங்கதான் ...நம்ம மக்களுக்கு எ......எதாவது செய்யனும்னு கே...கேட்கிறாங்க"

முன்னும் அரசியலில் தானே இருந்திங்க அப்ப எதாவது செய்து இருக்கலாமா ?

"எ......ஏன் இப்படி கேட்குறிங்க....நான் நான் வந்து கட்சி த....தலைவராக இருந்தாலும்...என்னை க....க....கட்டுப்படுத்தியே வச்சிருந்தது பார்வேர்ட்..ப்ளாக்....சரி....அங்கே இருந்தா மக்களுக்கு எ......எதும் செய்ய முடியாதுன்னு தான் புதுசா க.....கட்சி ஆரம்பிச்சி எ....எதாவது செய்யலாம்னு இருக்கேன்

விஜயகாந்த், சரத் குமாரெல்லாம் உங்களுக்கு முன்மாதிரியா ?

"ஐயோ........எ....ஏன் இப்படி கே....கேட்க மனசு வந்துச்சு உங்களுக்கு....நான் நான் அது வ....வந்து.....அ...அவங்களுக்கு முன்னமே அரசியலுக்கு வந்துட்டேன்.....அ...அவங்கெல்லாம் எ....என்னைப்பார்த்துதான் க.......கட்சியே ஆரம்பிச்சாங்க

படப்பிடிப்புக்கே ஒழுங்காக செல்லாத நீங்கள் கட்சியை நடத்த முடியுமா ?

"இ.இதெல்லாம் அபாண்டம்....நான் நான் நடிக்கறத்துக்கு சரியான சீன் வைக்கமாட்டேன்கிறார்....டைரக்டர்...அ...அதனால கடுப்பாகி ஓடியாந்துட்டேன்....இ....இப்பவும் சொல்லுங்க....எ என் நடிப்பு தீணி போடும் டைரக்டர்ஸ் யா......யாரும் இருக்காங்களா ?"

******

நாமக வாழ்க ....நமக இல்லிங்க.... அவரின் கட்சிப்பெயர் 'நாடாளும் மக்கள் கட்சி'

அந்தக்காலம் போல் குறுநிலம் இருந்தால் எல்லாக் கட்சித்தலைவர்களும் நாடாளுவார்கள். :)

மூத்த / மூத்திர பதிவர்கள்... !

சூடான இடுகையில் இடம் பெற கொலைவெறி தலைப்பு வைக்க வேண்டும், நேற்றைய தட்ஸ் தமிழ் செய்திகள் கூட தலைப்பு சூடாக இருந்து இன்று அதை பதிவேற்றினால் சூடாகிவிடும். அப்படி நிறைய பதிவுகளை தமிழ்மணம் சூடான இடுகைகளில் பார்த்து இருக்கிறேன்.

ஐயையோ சொல்ல வந்ததே வேற...

முத்த பதிவர்கள் என்று ஒரு மேட்டரை பதிவர் மோகன் கந்தசாமி கிளப்பிவிட்டு இருக்கிறார். முதலில் மூத்தப்பதிவர்கள் யார் ? பதிவெழுதி பெயர் வாங்கியவர்களா ? நீண்ட நாட்களாக எழுதி வருபவர்களா ? வலைப்பதிவு ஒரு கட்டற்ற, எல்லையற்ற ஊடகம், இதில் எதனையும் வரையறுத்துக் கொண்டு செல்லமுடியாது. படிப்பதற்கு ஏதுவானவற்றை பிறர் முகம் சுழிக்காவண்ணம் எழுதுவோம் என்ற தத்தம் உறுதி மொழித்தவிர்த்து எந்த கட்டுப்பாடும் இல்லை. மொக்கையில் பெயர்போனவர்களும் சிறந்த பதிவர்களே, முன்பு பாலச்சந்தர் கனேசன் என்ற பதிவர் வெறும் 4 வரிகளில் நாள்தோறும் எழுதிவந்தார். அவரும் அன்றைய காலகட்டத்தில் (2 ஆண்டுகளுக்கு முன்பு) எல்லோராலும் அறியப்பட்டார். மாதத்திற்கு ஒருமுறை பதிவெழுதினாலும் பதிவர் ஜெகத் ஒரு சிறந்த பதிவர். இதுபோல் அவரவர் பாணியில் தங்கள் எழுத்துக்களால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

நீண்ட நாள்களாக எழுதுபவர்களுக்கு பின்னுட்டத்திற்கு மறுமொழி அளிப்பதற்கு சோம்பல் இருக்கும், தன்னைப்பற்றி பேசப்படவேண்டும் என்பதற்காக பரபரப்பாக எழுதி வந்தாலும் மறுமொழி இடுவதற்கு சோம்பல் வந்துவிடும். அதற்காக அவர்கள் நீண்ட நாள் எழுதி பிரபலமாகிவிட்டதால் (பிரபலம் - இதெல்லாம் யாராவது கிளப்பிவிடுவதுதான்) பின்னூட்டத்தை மதித்து மறுமொழி இடவில்லை என்றெல்லாம் தவறாக நினைக்கத்தேவையில்லை. நீண்ட நாட்களாக எழுதினாலும் இலவசக் கொத்தனார், பினாத்தல் சுரோஷ், டோண்டு இராகவன் ஆகியோர்கள் பின்னூட்டமிடுபவர்களுக்கு மறுமொழி எழுதுவதில் பதிவை விட மிகுந்ததாகவே எழுதுவார்கள். பதிவைவிட பின்னூட்டத்தில் அடித்து ஆடுவதுதான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து புதிய பதிவர்கள் என்றால் மறக்காமல் அங்கெல்லாம் போய் துளசி கோபால் அம்மா (டீச்சர்) தனக்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

நீண்ட நாட்கள் எழுதுபவர்களுக்கு மறுமொழி இடுவதில் அலுப்பாக இருக்குமேயின்றி தயக்கம் எதுவும் இருக்காது. மற்ற படி மூத்தபதிவர் என்பதால் பதிவு / தமிழ்மண தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்வதெல்லாம் வெறும் ஊகம் தான். அப்படி யாரும் தாம் மூத்தப்பதிவர், பிரபலம் என்று சொல்லிக் கொண்டால் அவர் பரிதாபத்துக்கு உரியவரே....எந்த ஒரு பதிவரும் தொடர்ந்து 6 மாதம் எழுதவில்லை என்றால் அவர்களின் அடையாளம் பதிவுலகில் இருந்தே மறைந்த்து போகிறது ? பிறகு எங்கே சீனியர் ? ஜூனியர் என்ற நாமகரணமெல்லாம்.

பல்வேறு வயது வகையில் நீண்ட நாள் எழுதிவருபவர்கள் உண்டு.

மூத்தப்பதிவர்கள் என்ற வரையறையில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து மூத்திர பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பால் குடி மறக்காமல் இன்னும் படுக்கையில் ஒன்னுக்குப் போகும் குட்டீஸ் கார்னர் பதிவர்கள் தான் அவர்கள். :)

9 ஜூன், 2008

7 ½ பக்க நாளேடு :)

19 செப் 2008 : கலைஞர் ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்த திமுக கழகத்தின் தலைமையகம், முதல்வர் பதவிக்கு திரு ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுத்தாக அறிவித்திருக்கிறது...... இது தொடர்பாக திமுகவின் வலைப்பூ பிரிவு தலைவர் திரு லக்கி லுக்கை தொடர்பு கொண்ட நம் நிருபர்

நிருபர் : கலைஞர் முதல்வர் ஆகவேண்டுமென்பதற்காக வாக்களித்த கட்சித் தொண்டர்களிடையேயும், இரண்டாம் மட்ட நிர்வாகிகளிடமும் ஸ்டாலினின் திடீர் தலைமை குறித்து அதிருப்தி நிலவுகிறதே இது பற்றி தங்கள் கருத்து என்ன ?

லக்கி லுக் : திமுக தொண்டர்கள் என்றுமே கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் (எம்ஜிஆர், வைGO கட்சியை பிரித்துக் கொண்டு போனது தனிக்கதை). தலைமையின் முடிவை ஏற்கத் தயாங்காதவர்கள். யாரோ விசமிகள் திமுக கழகத்தில் கலகம் செய்வதற்காக பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது பொய் என்பதற்க்கு தளபதி ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் கூடிய மக்கள் கூட்டமும் தொண்டர் பட்டாளமுமே சாட்சி.

20 செப் 2008 : திமுக ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது... இந்த கூட்டணியில் நீடித்தால் அடுத்த தேர்த்தலில் எங்களுக்கு ஓட்டுவிழுமா அல்லது உதைவிழுமா என்பதே இப்பொழுது எங்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி - மருத்துவர் இராமதாஸ் ஐயா

இதுபற்றி ஞாயர் காஃபி கிளப்பில் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் காது கொடுத்த போது
"இனிமே மருத்துவர் ஐயா அடிக்கும் பல்டிகளைப் பாருங்கள், விஜயகாந்தும் அம்மா கட்சி கூட்டணிக்குள் இருக்கிறார்...இவரும் கூட்டணிக்குள்ளே போகப்போகிறார்...ரஜினி என்கிற பேயை ஓட்ட தம்பி விஜயாகாந்த்தான் சரியான நபர் என்று பேட்டியெல்லாம் கொடுப்பார்.


21 செப் 2008 : "உங்களை கூட்டணியில் இருந்து அறிவிப்பு இன்றி நீக்கிவிட்டதாக நமது எம்ஜிஆரில் செய்தி வந்து இருக்கிறதே", இதுபற்றி 'உண்மையான' மதிமுக பொதுச்செயளர் திரு வைகோ செல்பேசியில் தொடர்பு கொண்ட நமது நிருபரிடம், வைகோ

"சென்ற சட்டமன்ற தேர்தலில் நான் சிறையில் இருந்ததை பேசி அனுதாப ஓட்டில் 60 சீட்டுகள் வரை வென்றது அதிமுக. அது ஒரு ஆணவம் பிடித்த பாசிச தலைவியின் கட்சி. இந்த முறை டெபாசிட் கூட வாங்காமல் மண்ணைக் கவ்வப்போவது நிஜம். இதற்காக நாங்கள் இமயம் முதல் குமரிவரை பாதயாத்திரை தொடங்கிவிட்டோம். பாசிச செயலலிதாவின் கொட்டம் அடக்குவோம்

இன்னிக்கு இது போதும்.......

லக்கி பாணி ஏழரைபக்க நாளேடு அவ்வப்போது தொடரும்....

மரங்கள் ! (சிறுகதை)

"இவன் இல்லாட்டி எனக்கு வாழ்கையே இல்லிங்க..."

"அப்படியா ?" ஆர்வமுடன் கேட்டார் பக்கத்தில் இருந்தவர்

"இவன் தான் இதைப்படிடா நல்லா வருவே ன்னு சொல்லி பொருளுதவியும், தங்குமிடம் வசதியும் செய்தான்."

எதிர்பார்ப்பில் எதுவும் செய்யாவிட்டாலும் நட்பு என்ற பெயரில் செய்ததை பலருக்கு முன்பு மகிழ்வாக அவன் சொல்லும் போது கேட்க கூச்சமாக இருந்தாலும் '...பய எவ்வளவு நன்றியோட நினைத்துப் பார்க்கிறான்'. நெகிழ்ச்சியாகவே இருந்தது

ஏற்றிவிடுகிற ஏணி எப்பவும் அதன் கடமையை செய்து கொண்டு அப்படியே தான் இருக்கும், ஏறுபவர்கள் தான் இது இருந்தால் ஒருவேளை எப்போதாவது கீழே இறங்க நேரிட்டால் .... என்ற நினைப்பில் எட்டி உதைத்துவிடுவார்கள். ஏணிக்கு என்ன ? வேறுருவர் ஏற நினைத்து நிமிர்த்தி வைக்கும் போது வழி அமைத்துக் கொடுக்கும்.

அவனே அன்றொரு நாள் தொலைபேசினான்

"அடடே...எப்படிப்பா இருக்கே..."

"எங்கே ஒரே பிசி....எல்லாம் டைட்டாக போயிட்டு இருக்கு"

"பரவாயில்லையே...பிசியிலும் என்னை நினைச்சுப் பார்க்க முடியுதா ?"

"அது இல்லடா...ஒரு பெரிய ப்ராஜட் எடுத்து இருக்கேன்..."

"இருக்கட்டும் நல்லா இரு...."

ச்சே இவனுக்கு தன் பெருமையை பேச வேண்டுமென்றால் மட்டும் நான் நினைவுக்கு வருகிறேன் போல

"என்னடா இப்படி சொல்றே...உன் கிட்டதான் இதைச் சொல்றேன்....என் மனைவியிடம் கூடச் சொன்னது இல்லை..."

"என்கிட்ட சொன்னாலும் எதும் ஆகப் போறதில்லே...உன் மனைவியிடம் நீ சொல்லாவிட்டாலும் நீ சம்பாதிப்பது உன் குடும்பத்துக்குத்தான்....இதுல என்கிட்ட சொல்வது என்னமோ எனக்கு பெருமை செய்வதாக நினைக்கிறியா ?"

"......."

"சரி எனக்கு வேலை இருக்கு அப்பறம் பார்க்கலாம்...."

******

அவனுக்கும் தெரிவிக்க வேண்டுமே என்பதற்காக

"டேய்......நான் ஊருக்கு வருகிறேன்...."

"ஓ அப்படியா .....?"

"ஆமாண்டா...."

என்கூடவே சுற்றிக் கொண்டு இருந்தவன்.....

"நான் பிசிடா...வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லை.....வேண்டுமானால் சாப்பாட்டு நேரத்தில் அலுவலகத்தில் வந்து பாரேன்.....அங்கே தான் இருப்பேன்...வர்றத்துக்கு முன்னால போன் பண்ணிடு அப்பாய்ண் மெண்ட் இல்லேன்னா.... பிரச்சனையே இல்லை"

நான் முன்பு மாதிரி இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்ல இவனுக்கு நன்றாக வருகிறது.

"அப்படியா சாமி...நீ பிசி உன் நேரத்தை நான் வீணாக்க விரும்பல....அப்பறம் எப்போதாவது பார்ப்போம்...."

இவன் முன்பு நான் ஊருக்குச் சென்று திரும்பும் வரம் வரை தினமும் என்னுடனே இருந்தவன்

இப்ப மறுபடியும் யாருடனாவது பார்த்தால் பழைய டயலாக்,

"இவன் இல்லாட்டி எனக்கு வாழ்கையே இல்லிங்க..."

என்று சொல்வதை மறந்து இருப்பான் என்று தான் நினைக்கிறேன்.

********

சென்றவாரம்...பின்னிரவில் வந்த தொலைபேசியில் பெயரைச் சொல்லி ஒருவன் அறிமுகப்படுத்திக் கொண்டான், சற்று குழம்பினாலும்

"நீயா...சொல்லு சொல்லு..."


"டேய் நண்பா... பார்த்து பத்துவருடம் ஆச்சிங்கிறதால என்னை தெரியவில்லைன்னு சொல்லிட்டே...பரவாயில்லை....நான் வேலைத் தேடி அங்கு வருகிறேன்...நீ தான் எல்லா உதவியும் செய்யனும்...."

(இவனுங்களுக்கெல்லாம் இப்ப மட்டும் என் ஞாபகம் எப்படி வருதுன்னு தெரியல)

"அதுக்கென்ன வாடா....வீட்டில் ஒரு ரூம் காலியாகத்தான் இருக்கு...நான் பார்த்துக் கொள்கிறேன்....."

********

மரங்கள் லாப நட்டம் பார்த்து பலன் தருவதில்லை. பறித்துச் சென்றவர் நன்றியோடு இல்லை என்பதற்காக பசி கொண்டவர்க்கு அது மறுப்பதும் இல்லை.

8 ஜூன், 2008

சிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு !

சிங்கையில் 20 பதிவர்களுக்கும் மேல் இருக்கிறார்கள். புதிதாக கிரி மற்றும் பலர் எழுதுகிறார்கள். எனது சென்னை சந்திப்புப் பற்றி எழுதிய போது சிங்கையில் பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்து பதிவர் கிரி ஆர்வமாக பின்னூட்டி இருந்தார். பொட்டீக்கடை சத்தியா வருகைக்குப் பிறகு சிங்கையில் பெரிதாக எதுவும் சந்திப்பு நடக்கவில்லை.

சிங்கையில் பிரபலமாக எழுதிவரும் பதிவர்கள் பாரி.அரசு மற்றும் ஜெகதீசன். ஜெகதீசன் பிரபலமாக எழுதவில்லை, என்போன்ற (ஹிஹி கண்டுக்காதிங்க) பிரபலங்களுக்கு பின்னூட்டமிடுவார். நண்பர் வடுவூர் குமார் பணி மாற்றம் காரணமாக விரைவில் தற்காலிகமாக சிங்கையை காலி செய்ய இருக்கிறார். அவரும் கலந்து கொள்கிறார்.

இடம் : ECP BEACH ( Behind Marine COVE), NEAR KOMALAS ( போண்டாவுக்காக)

நாள் : சனிக்கிழமை, 14 ஜூன் 2008

நேரம் : மாலை 5:30 மணி முதல்.... உடனே போகனும் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பும் வரை

பேருந்து எண் : Service number 401 - From Bedok MRT (EW5)

சந்திப்பில் பேசு பொருள் : கருத்து உரிமையுடன் யாரையும் காயப்படுத்தாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம் மற்றும் மொக்கை.

கலந்து கொள்ளும் அன்பர்கள் பின்னூட்டமிடவும், மேலும் சந்திப்பு குறித்து ஆலோசனை வழங்க
தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்

+65 9876 7586 (கோவி.கண்ணன்)
+65 9002 6527 (ஜெகதீசன்)

இந்த அறிவிப்பின் மூலம் சிங்கை பதிவர்கள், வலைபதிவு வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர, ஒன்றாக

அன்புடன் அழைப்பது.

கோவி.கண்ணன்
வடுவூர் குமார்
பாரி.அரசு
ஜெகதீசன்

அனைவரும் வாருங்கள் ! அனுமதி இலவசம் மற்றும் போண்டா இலவசம்.... :)))

பின்குறிப்பு : சிங்கையில் எங்கே எப்போது மழை பெய்யும் என்று தெரியாது...வரும் போது மறக்கமல் குடையை எடுத்துவரவும். அதுமட்டுமல்ல.... சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கும் துர்காவின் வீணை இசைமழையில் நனையாமலும் இருக்க வேண்டுமே

5 ஜூன், 2008

அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !

முகச்சவரத்திற்கு சென்று ரூபாய் 1000/- கொடுத்ததையும், மேலும் டிப்ஸ் கொடுத்ததைப் பற்றியும் ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதற்கு எதிர்வினை போல பதிவர் டோண்டு இராகவன் ஒரு பதிவிட்டு இருந்தார். டிப்ஸ் கொடுப்பது பிச்சைக்காரர்கள் ஆக்குகிறதாம்.. அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், எனது கேள்வியாக 'கோவிலுக்கு உள்ளே கெஞ்சாத குறையாக வாங்கப்படும் தட்டுகளில் பெறப்படும் டிப்ஸ் பற்றி என்ன நினனக்கிறீர்கள் ?' என்றேன். அதற்கு மழுப்பலான பதிலே வந்திருக்கிறது. அர்சகர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கிறார்களாம். அரசு பிச்சைக்காரனாக ஆகிவிட்டதாம், புள்ளி விபரமெல்லாம் சொல்லி இருக்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த அர்சகரும் குடிசையில் வசிக்கவில்லை. மொபட்டில்லாத அர்சகரே சென்னையில் இல்லை. சிறு நகரங்களில் தான் சைக்கிளில் வந்து போகும் அர்சகர்களை பார்த்து இருக்கிறேன். மேலே முகச் சவரம் சென்று வந்த தகவலுடன் கூடுதலாக ஒரு தகவல், முகச்சவரம் செய்துவிட்டு அதே அண்ணா நகரில் பைக்கில் வந்த போது என் நண்பர் ஒரு ப்ளாட் வீட்டைக்காட்டினான், 'இதோ பார்...இந்த வீட்டில் தான் எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், சொந்த வீடாம்.. ஒரு விசிட்டுக்கு 2000 முதல் 5 ஆயிரம் வாங்குவார்...அடுத்த இடத்தில் அப்பாய்ன்மெண்ட் இருக்குன்னு சட்டுன்னு கிளம்புவார்...மாசத்துக்கு எப்படியும் 20 வீட்டிலாவது அவரை கூப்பிடுவார்கள், எதோ ஒரு கோவிலில் வேறு அர்சகராக இருக்கிறாராம்', எனக்கு சட்டென்று 'பேசமல் இதுநம்மாளு படத்தில் வருவது போல் ஒரு பூணூல் தயார் செய்து தொழிலை மாற்றிக் கொள்ளலாமா ?' என்று சலனம் கூட ஏற்பட்டது.

அதில் எனதருமை வீஎஸ்கே ஐயா, போட்டிருக்கும் பின்னூட்டம் உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கிறது,

*************
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.

இது ஒரு திசை திருப்பும் முயற்சி.

இந்த அழகில் ஆதரவு ஓட்டு வேறு.

அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?"

*************

- என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஐயா, அர்சகரும் நாவிதரும் ஒன்று இல்லை என்று தானே காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்,

எடுப்பது பிச்சை என்றாலும், பெருமாள் கோவில் எடுத்தால் அதற்கு பெயர் ஈகையா ?


தட்டில் காசு போடாவிட்டாலும் விபூதி கொடுப்பார்கள், 1000 ரூபாய் நோட்டைப் போடுங்கள், கருவரைக்கே அழைத்துச் சென்று மாலை போட்டு, பரிவட்டம் கட்டி அனுப்புவார்கள். காசுக்கு தகுந்த வேலை என்று நாவிதர்களும் அதே போன்று தரமான சேவை செய்கிறார்கள். இதில் அர்சகர் என்ன ? நாவிதன் என்ன ?

சென்னை மாநகரில் ப்ளாட்பாரம் பக்கத்தில், பாலத்திற்கு அடியில், கூவம் நதிக்கரையில் வசிக்கும் ஏழை அர்சகர் எவரும் இருந்தால் காட்டுங்கள் அன்றாடம் 'காய்ச்சும்' அர்சகரை தெரிந்து கொள்கிறேன். அன்றாடம் காய்ச்சும் அர்சகர்கள் எனக்கு தெரிந்து மடப்பள்ளியில் புளியோதரைக்கு புளிக்காய்ச்சுபவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி வேறு எதைக் காய்ச்சுகிறார்கள் என்று தெரியவில்லை. அர்சகர்வீட்டில் கஞ்சு காய்ச்சுக் குடித்ததாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.

ஒரு பழமொழி உண்டு....

'பறையர்களில் பரம்பரை பணக்காரர்கள் இல்லை...பார்பனர்களில் பரம ஏழைகள் இல்லை'

கொஞ்சம் கொஞ்சம் தவறினாலும் பழமொழியில் 90 விழுக்காடு சரிதான்

அர்சகருக்கு கொடுப்பது காணிக்கையாம்...நாவிதருக்கு கொடுப்பது டிப்ஸாம்...பிச்சையாம்.. கேட்பதற்கு ஆண்டவன் இல்லை என்ற நாத்திக அவ நம்பிக்கைதான் போலும் !
:)

அதே முகச்சவரம் மற்றும் உடம்பு பிடி ... லேசாக தலைமுடி வெட்டல் ... முகத்துக்கு பவுடர் எல்லாம் போட்டு வெறும் 13 ரூபாய் தான் எங்கள் ஊர் சலூனில் வாங்கினார்கள். நானே விரும்பி கூடுதலாகவே அங்கும் கொடுத்தேன்.

சென்னை விமான நிலையத்தால் மகளுமானவன் !

இந்த முறை சென்னைப் பயணத்தில் எதிர்பார்க்காதெல்லாம் நடந்தது...எதிர்பார்த்தது சில நடக்கவில்லை. குறிப்பாக இந்த முறை அண்ணன் ரத்னேஷை சந்திக்கலாம் என்றிருந்தேன். முன்கூட்டியே வரும் தேதியெல்லாம் 2 மாதத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். நாகப்பட்டினத்திற்கே வந்து சந்திப்பதாக சொல்லி இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவருடன் தொடர்பு அறுந்து போனது. வேலையில் மூழ்கி கிடக்கிறாரா தெரியவில்லை. அவருடைய பதிவுகளும் 2 மாதங்களுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் பலரின் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. அவருடைய தொலைபேசி எண் வாங்கிவைக்கவில்லை என்பதால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மீண்டும் விரைவில் பதிவு எழுதுவார் என்று நம்புகிறேன். அவரை சந்திப்பது எனது நோக்கமாகவே இருந்தது, முடியாமல் போனது வருத்தம், ஏமாற்றம் தான். அவ(ரவ)ருக்கு இருக்கும் அலுவலக வேலைகள், மற்ற மற்ற சொந்த வேலைகள் அவ(ரவ)ர் அறிந்து மட்டுமே. அடுத்தமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறதா பார்ப்போம்.

இன்னுமொரு எதிர்பாராதது......

நமது இந்திய விமானப் பயணங்களில் மட்டும் தான், திரும்பும் முன் பயணச்சீட்டுகளை மறு உறுதிப்படுத்தச் (ரி கன்பர்மேசன்) சொல்கிறார்கள். மற்ற விமானங்களில் பயணச் சீட்டுவாங்கும் போதே திரும்பும் தேதியை உறுதி செய்துவிட்டால் அந்த தேதியில் பயணம் மேற்கொள்ளலாம். எனது மகளுக்கு பள்ளி விடுமுறை முடிய இன்னும் 3 வாரங்கள் இருப்பதால் அவளையும், மனைவியையும் தமிழகத்திலேயே விட்டுவிட்டு, எனது விடுப்பு முடிந்ததால் நான் குறிப்பிட்ட தேதியில் மறு உறுதி படுத்திவிட்டு, மகளின் பயணத்தேதியை மட்டும் தள்ளிப் போட்டு மறு உறுதி படுத்தினேன். மனைவியின் பயணச்சீட்டு தனியாக வாங்கி இருந்ததால் அதில் மாற்றம் செய்யவில்லை. எனது பயணத்தேதியை மாற்றாமல் குறிப்பிட்ட நாளிலேயே கிளம்பினேன். எலக்டாரானிக் பயணச்சீட்டுதான் (e_ticket). விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டு (போர்டிங் பாஸ்) கொடுக்கும் பெண் அலுவலர் குளறுபடி செய்துவிட, எனது பயணச்சீட்டிற்கு பதில் எனது மகள் பெயரிலான பயணச்சீட்டை வைத்து உள்நுழைவு சீட்டு கொடுத்துவிட்டார். நான் அதை கவனிக்காது விமானம் ஏறி சிங்கை வந்துவிட்டேன். 7 வயது மகள் பெயரில் நான் பயணம் செய்திருப்பதை சிங்கை வந்துதான் கவனித்தேன்.

அதை கவனித்ததுமே ... எதோ குளறுபடியாகப் போகுது என்று தெரிந்தது. பார்கலாம் என்று...மகளுக்கு பயணச்சீட்டை மீண்டும் மறு உறுதிப்படுத்த எனது நண்பர் சென்னையில் முயன்றபோது, பயணி ஏற்கனவே பயணித்து விட்டதாக சொன்னார்களாம். நிலவரப்படி எனது பயணச்சீட்டு தேதி குறிப்பிடாமல் (ஓபன்) இருப்பதாகவும், அதை இனி பயன்படுத்த முடியாது, பயண நிறுவனத்தை (ட்ராவல் ஏஜென்சி) அனுகி பாதி பணம் கிடைக்கிறதா என்று முயற்ச்சி செய்யுங்கள் என்றார்களாம். மகளுக்கு புதிதாக பயணச்சீட்டு எடுக்க வேண்டுமாம். அதுவும் நிறைந்துவிட்டதாக (Full) அவர்கள் சொல்ல காத்திருப்பு பட்டியலில் ஒரு பயணச்சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன்.

பொதுவாக பயணச்சீட்டு வாங்கும் போதுதான் பெயரை சரிபார்ப்பது வழக்கம். விமானநிலையத்தில் உள்நுழைவு சீட்டில் (Boarding pass) பெயர் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. இருக்கை எண்னையும், நுழைவாயில் எண்னையும் தான் கவனிப்பேன், கவனக்குறைவாக இருந்தது என் தவறு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன்.

இதுபோன்ற விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டுக் கொடுப்பவர், மெத்தனமாக, சரிபார்காமல் தவறு செய்தால்...அது ஆள்மாறாட்டம் செய்து தப்பிப்பவர்களுக்கு மிக மிக எளிதானதே. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கே இந்த குளறுபடிகளைச் செய்கிறார்கள். உள்நாட்டில் வேறு பெயர்களில் விமானப்பயணம் மேற்கொள்வது இன்னும் எளிதென்றே நினைக்க வைக்கிறது.

போர்டிங்க் பாஸ் எனப்படும் உள்நுழைவு சீட்டையும், கடவுச் சீட்டையும் (பாஸ் போர்ட் - அது என்னுடையது தான்) காட்டித்தான், குடிநுழைவு சோதனை, பாதுகாப்பு சோதனை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். ஒருவரும் உள்நுழைவு சீட்டில் பெண் பெயர், பெண் பாலினம் இருப்பதை கவனிக்கவில்லை.

விமான நிலைய அலுவலரின் கவனக்குறைவால்....என் மகள் பெயரில் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆள்மாறட்ட உள்நோக்கம் இல்லாதவர்களையே ஆள் மாற்றிவிடுகிறார்கள். அதே நோக்கத்தில் விமான வழித்தடம் மூலம் தப்பிப்பவர்களுக்கு மிக எளிதென்றே நினைக்க வைக்கிறது.

4 ஜூன், 2008

சென்னை ஷேவிங் ரூ 1000/-

ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தங்கி பின்பு தாயகம் திரும்புபவர்களுக்கும் நாட்டில் ஏறி இருக்கும் விலைவாசி அதிர்ச்சி அளிக்கும். அவர்கள் புலம்பும் புலம்பலில் 'எங்க காலத்தில்...' என்று ஆரம்பிக்கும் பெருசுகளையே வீழ்த்திவிடுவார்கள். தொடர்ந்து இணையம் வழி தமிழக, இந்திய நடப்புகளை படித்துவருவதால் இந்திய விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிக்கவில்லை. இந்தியாவில் ஒரு சிறப்பு பொருள்களின் மீது MRP என்னும் விற்பனை விலை குறித்து இருப்பதுதான். மற்ற நாடுகளில் பொருள்களின் விலை இடம், கடைகளுக்கு ஏற்றவாறு இருக்கும், குறிப்பாக சுற்றுலா இடங்களில் விலை இருமடங்காக இருக்கும், இந்தியாவில் ஹோட்டல்கள், மோட்டல்கள், திரையரங்குகள் தவிர்த்து மற்ற இடங்களில் விலைவாசியை உயர்த்தி விற்க முடியாது.

முஸ்தீபு முடிந்தது அடுத்து...

சிங்கையில் இருந்து சென்னைக்கு கொஞ்சம் வேலை பளுவில் கிளம்பியதால் முகச்சவரம் பண்ணுவதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. எளிய முறை சேவிங் ப்ளேடுகள் கைவசம் இருந்தாலும் கொஞ்சம் அலுப்பு... பதிவர் சந்திப்பு அன்று நண்பரிடம் 'இங்கு எதாவது சலூன் கடைக்குச் சென்று வரலாம்...கடும் வெயிலாக இருப்பதால் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடையாக இருந்தால் நல்லது' என்றேன். 'சரி வா' என்று அண்ணா நகரில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள் நுழைந்ததும் ஒருவரின் தலையை நன்றாக தட்டிக் கொண்டு இருந்தார்கள்.

"சார்...வாங்க...கட்டிங் ? ஷேவிங் ?"

என்று கேட்டார்கள், நான் "ஷேவிங் மட்டும் தான்" என்று சொன்னேன். இருக்கையில் அமர வைத்தார்கள்.

"சார்...லைட்டாக கொஞ்சம் தலை முடி வெட்டுகிறேன்...வெயிலுக்கு நல்லது"

"சரி" என்றேன்

தலையில் தண்ணீரை பீய்ச்சு அடித்துவிட்டு....கையால் தலை முடியில் ஈரத்தை பரப்பிப் கொண்டே...அதிர்ச்சி அடைந்தவர் போல

"என்ன சார்...தலை இப்படி கொதிக்குது ?"

எனக்கும் வியப்பாகவே இருந்தது. 'ஒருவேலை வெயிலில் பைக்கில் வந்ததால் தலைச்சூடு இன்னும் அடங்கவில்லை போலும்' என்று நினைத்துக் கொண்டேன்.

அவரே, பக்கத்தில் முடிவெட்டி விட்டுக் கொண்டு இருக்கும் மற்றவரிடம்....

"அண்ணே....இவருக்கு சூடு அதிகமாக இருக்கு கையை வைக்கவே முடியல இந்த கொதி கொதிக்குது ....என்ன செய்யலாம்... சூட்டை குறைக்கனும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே?"

அருகில் இருந்தவர்

"முடியை வெட்டிவிட்டு...நவரத்னா ஆயில் போட்டு...தலை மசாஜ் செய்து...வாஷ் பண்ணிவிடு" என்றார்

சட்டைப் பாக்கெட்டில் கையை வைத்து போதிய பணம் இருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொண்டேன்

'ஷேவிங் மட்டுமே செய்ப்பா போதும்' என்று சொல்ல மனது வந்தாலும்....'சரி என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம்' என்றவாறு அமைதியாக இருந்தேன்

ஷேவிங் செய்து முடித்ததும் கொஞ்சம் தலை முடியை வெட்டிவிட்டு,

புதிய நவரத்னா ஆயில் பாட்டிலை எடுத்துவந்து திறந்து தலையில் தேய்த்து தேய்த்து....5 நிமிடம் ஊறவைத்தார், அதன் பிறகு

"வெயிலில் முகமெல்லாம் கருத்து போச்சு....லைட்டாக பேஷியல் பண்ணிக் கொள்ளுங்க.....சரி பண்ணிடலாம்"

நான் நண்பரை திரும்பி பார்த்து ... 'ஷேவிங் பண்ண வந்த எனக்கு இதெல்லாம் ?' வெளியில் சொல்லாமல் முறைத்தேன்.

அவன் புரிந்து கொள்ளாமல்

'பண்ணிக்கடா ...நான் வெளியில் போய்டு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டான்

முடிவெட்டுபவர்

'சார்...முகத்துக்கு கெமிக்கல் க்ரீம் போடலாமா....இல்லாட்டி ஆயுர்வேதிக் க்ரீம் போடவா ?" என்று கேட்டார்

நான் பதில் சொல்லும் முன், அவரது சகா

'சார் என்னாத்துக்கு கெமிக்கல் க்ரீம்... முகத்துக்கு நல்லது இல்லை...ஆயுர்வேதிக் க்ரீம் போட்டுக் கொள்ளுங்க' என்றார்

'அப்ப ஏண்டா கெமிக்கல் க்ரீமும் வச்சிருக்கிங்க ? ஏன் பயமுறுத்தனும் ?'' என்று கேட்க நினைத்து கேட்காமல், நான் மெதுவாக....

'எவ்வளவு ஆகும் ?'

'750 ரூபாய் ஆகும்...சாப்ட்வேர்லே வேலையா சார்' என்றார்

'சரி என்ன தான் செய்வாங்க' என்று தெரிந்து கொள்ள, பதில் எதும் சொல்லாமல் இருக்க, அங்கிருக்கும் கையாள் சிறுவனை அழைத்து, எதோ பெயரைச் சொல்லி 'டேய்... அந்த கிரீமை எடுத்துவா' என்றார்

வந்ததும், சுண்ணாம்பு குழைப்பதுபோல் குழைத்து முகத்தில் பூசிவிட்டு

'சார்..20 நிமிசம் அப்படியே சாஞ்சி அமர்ந்து கொள்ளுங்கள் க்ரீம் காயனும்' என்று சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் சென்று திரும்ப வந்து, அந்த சின்னப்பையனிடம்

'டேய் உனக்கு எல்லாம் சொல்லனுமா ?...சாருக்கு காலில் புது சாக்ஸை போட்டுவிட்டு...லெக் மசாஜ் செய்துவிடேன்' என்றார்.

'என் காலை சின்னப்பையனை பிடித்துவிடப் போகிறேன் போல...வேண்டாம்.... வேண்டாம்' ' என்று அச்சப்பட்டு சொல்வதற்குள், அந்த பையன் நல்ல வேலை OSIM லெக் மசாஜ் மெசினை தள்ளிக் கொண்டு வந்து கால் அருகில் வைத்துவிட்டு ஒரு செட் புதிய காலுறைகளைக் கொடுத்தான்.

'20 நிமிடம் மசாஜுக்கு மெசினை செட் பண்ணு' என்று முடிவெட்டுபவர் அவனுக்கு கட்டளை இட்டார்

நானும் கால்களை அதில் வைத்துக் கொண்டேன்... மெசின் கால் பாதங்களை அழுத்திவிடுவது இதமாகத்தான் இருந்தது

அதன் பிறகு முகத்தில் இருந்த க்ரீம் காய்ந்துவிட, அதை எடுத்துவிட்டு வேறொரு க்ரீம் பூசினார்
அது ஒரு 10 நிமிடம் காய்ந்தது... அதனை நீக்கிவிட்டு, தலையை கழுவி, முகத்தை துடைத்து.... விட்டு எதோ பவுடரெல்லாம் போட்டுவிட்டார்... கழுத்தைச் சுற்றி, தோள் பகுதியில் பிடித்துவிட்டார்.

அதற்குள் நண்பர் திரும்பிவந்துவிட்டார்.... நானும் போதும் என்று சொல்லிவிட்டேன்

நண்பர் முடிவெட்டுபவரிடம் கேட்டார்...

"எவ்வளவு ஆச்சு சொல்லுப்பா.."

என்னமோ நெற்றியை சுருக்கி..கையின் ஒற்றை விரலை ஆட்டி ஆட்டி... மனக்கணக்கு எல்லாம் போட்டு

'ரூ 1350/- ஆச்சு..... டிஸ்கவுண்ட் 200 போக 1150 '

அதிர்ச்சி அடைந்த நண்பர் என் முகத்தைப் பார்த்து அவரிடம் பேரம் பேசி

'சரி...1000 வாங்கிக்கிங்க.......'

'சரி சார்....அந்த 150ம் தள்ளுபடி பண்ணிடுறோம்.....ஆயுர்வேதிக் க்ரீம் போட்டோம் அதுதான் .... அடுத்த முறை வரனும்லே...நாங்க தள்ளுபடி செய்றோம் சார்'

என்று ரூ 1000/- பெற்றுக் கொண்டார்.

அந்த சிறுவனுக்கு (18 வயதுன்னு சொன்னான்) 50 ரூபாய் கொடுத்துவிட்டு

வெளியில் வந்து நண்பரிடம்

'ஷேவிங் கடைக்கு கூட்டிட்டு போகச் சொன்னால் இப்படி மொட்டை அடிக்கும் இடத்துக் கூட்டிட்டு வந்துட்டியே' என்றேன்

***********

நான் அதிகம் கொடுத்ததாக... ஏமாந்ததாக நினைக்கவில்லை.... சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்