புலிவேசம் படம் செட்டியார்களை அவமானப்படுத்துகிறது என்று போர்கொடித் தூக்கிய செட்டியார் சமூகம், இங்கு ஒட்டுமொத்தமாக கோவணம் உருவப்படுவதை கண்டு கொண்டார்களாத் தெரியவில்லை, படத்தில் வரும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை வைத்து தொழில் செய்யும் புக்கியாக செட்டியார் வருகிறார், படமும் அவர் அரசை ஏமாற்றி சூதாட்டப்பணத்தை பிரித்துக் கொடுப்பவராகத்தான் காட்டுகிறார்கள், பெரும்பாலும் சமூகவிரோதிகள், அரசை ஏமாற்றுபவர்கள், தீவிரவாதிகள் என்பதற்கு ரெடிமேடாகவே முஸ்லிம் பாத்திரம் ஒன்றை கதைகளில் வைத்திருக்கும் திரை உலகம், இதில் ஒரு முஸ்லிம் இளைஞரை செட்டியாரின் அடியாளாகக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 15ல் பிறந்ததற்காக தேசப் பக்தி படங்களாக நடித்துத் தள்ளிய அர்ஜுன் போலிஸ் அதிகாரியாக வந்து கொள்ளைப் பணத்தில் பங்கு பிரிக்கும் அஜித்தின் நண்பர் என்பதை இறுதிக்காட்சியில் சொல்கிறார்கள், அர்ஜுனின் தேசபக்தி கோவணம் முற்றிலுமாக அவிழ்ந்து தொங்குகிறது, பணத்திற்காக நண்பர்கள் அடித்துக் கொள்வதாகவும் துரோகம் செய்வதாகவும், காதலியை ஏமாற்றுவதாகவும் காட்டிய படத்தில் அர்ஜுன் மற்றும் அஜித் நல்ல நண்பர்கள் என்று சொல்லி அவர்களின் திட்டபடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ஸ்விஸ் வங்கியில் பாதுகாப்பு உகந்ததல்ல அதனால் லண்டன் பேங்குகளில் பணம் போடப்பட்டதாக அர்ஜுன் அஜித்திடம் சொல்லுகிறார். அர்ஜுன் வரும் காட்சிகளெல்லாம் அர்ஜுனின் வேறு படத்தில் இருந்து இந்தப்படத்திற்கு ஊடுறுவி வந்து செல்வது போன்று இருந்தது. பாலியல் வண்புணர்ச்சி காட்சிக்கு மணிரத்னம் முதலியோர் பிரியாமணியை நாடுவது போல் படுக்கை அறையில் கண்ணீர் விடும் காட்சிக்கு அஞ்சலி நல்ல தேர்வு. மற்றப்படி படத்தில் அவருக்கு வேலை இல்லை. ஹாலிவுட் படங்களில் வரும் நாயகிகள் போல் ஆண்டிரியாவும், லட்சுமிராயும் வந்து போகிறார்கள். போக்குவரத்து விளக்குகளை ஹேக் செய்வது உள்ளிட்ட ஹைட்டெக் காட்சி அமைப்பதாக எடுக்கப்பட்ட காட்சிகள் சரியான சொதப்பல்கள்.
மாமனார் - மருமகள் உறவு பற்றிய சொல்லி சிந்துசமவெளி , செல்லவராகவனின் துள்ளுவதோ இளமை ஆகியவை ஒரு சிலரின் எதார்த்தங்களை படமாக்கியது போல் இந்த படமும் தாவூத் இப்ராஹிம் போன்ற பணத்தை குறியாக வைத்து செயல்படும் ஒருவரைப் பற்றிய ஒருவரிக் கதையாக நகர்ந்து முடிகிறது, அழுகாச்சி, செண்டிமென்ட் ஆகியவற்றைப் புறந்தள்ளும் கதைகள் தமிழில் வரத் துவங்கி இருகின்றது. பொழுது போக்குகளில் சமூகம் நலம் என்ற கோட்பாடுகளில் திரப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது போன்ற படங்கள் உவர்பாகத்தான் இருக்கும். பொழுது போக்கு திரைப்படம் என்ற அளவில் ஓகே. கெட்டவனை கெட்டவனாகவே காட்டி முடிப்பது பின் நவீனத்துவா இல்லையா ? இலக்கிய ஆர்வலர்களின் ஆராய்ச்சிக்கு உரியது.
நான் பார்த்த அளவில் இந்தப்படம் நாயகனின் குணம், கதை முடிவு வரை சினிமா மரபுகளை உடைத்துள்ளது. பணத்தீன் மீது வெறி கொண்டு அலைபவர்களின் இலட்சனம் இது தான் என்று காட்ட முயன்று இருக்கிறார்களா ? தெரியவில்லை. நீலப்படங்களில் எதாவது மெஜேஜ் இருக்கும் என்று நம்பினால் இந்தப்படத்திலும் அது போன்று எதாவது இருக்கலாம். அஜித் - அர்ஜுன் இந்தப் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு. துப்பாக்கிச் சத்தங்களும், சிகிரெட் புகைகளும், மதுக்கூடமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மங்காத்தா ஆடுபவர்களுக்கு பணம் ஒன்று தானே குறிக்கோள், அது தான் படத்தின் கதையும், தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் நோக்கமும், அஜித் பில்லாவுக்கு பிறகான தொடர் தோல்விகளால் துணிச்சலாகவே இப்படத்திற்கு மங்காத்தா ஆடி வெற்றி பெற்றுள்ளார். மரண தண்டனைக்கு எதிராக 'விருமாண்டி' படத்தில் கூவிய கமலஹாசன், மரண தண்டனையை ஞாயப்படுத்தி உன்னைப் போல் ஒருவன் செய்யவில்லௌயா ? எல்லாம் பணத்தை நோக்கிய மங்காத்தாவே. படத்தில் பஞ்சு வசனத்திற்கு அடிமையாகும் ரசிகர்கள் தான் புரிந்து கொள்வதில்லை,.

நான் எவ்ளவு நாளைக்குத்தான் நல்லவனாக இருப்பது திமுகவினரால் நெருக்கடிக்குள்ளான அஜித் தயாநிதி அழகிரி தயாரிப்பிலேயே அதை நொந்து வெளிப்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள். தலை தறுதலையாகவே நடித்திருக்கிறார்.
சரோஜா படத்தைப் போலவே ப்ளாஸ் பேக்கில் படம் முழுவதையும் மாற்றிச் சொல்வது வெங்கட் பிரபுக்கு இது இரண்டாவது படம், இனி தொடர்ந்தால் பல்பாகத் தான் அமையும்.