பின்பற்றுபவர்கள்

30 ஜனவரி, 2009

மாமன்னரை போற்றுதும் !

உலகக் காவலன், உலகத்தார் காதலன், கழக கண்ணன், காண்போருக்கெல்லாம் அண்ணன், வயதொரு தடையென்பதால் பெயரைச் சொல்லத் தயங்குகிறேன். அண்ணனுக்காக 5 கோடி செலவில் மதுரை மாநகரெங்கும் கட் அவுட் திருவிழா, திரும்பிய இடமெல்லாம் சிரித்த முகத்துடன் அண்ணன், அங்கங்கே கர்ம வீரன் அட்டாக் பாண்டியனும் சேர்ந்தே சிரிக்கிறார். இன்று ஜெனவரி 30 அண்ணனின் 58 ஆவது பிறந்தநாள், மதுரை சுவாசத்திலும் கூடவே மாநகரெங்கும் உள்நாவில் தங்குதே பிரியாணியின் வாசம் ! இப்படி ஒரு கொண்டாட்டத்தை இதுவரை எவரும் கண்டதில்லை.

அண்ணன் வாழ்கவே ! வாழ்க வாழ்க !

23 ஜனவரி, 2009

சென்னை 600 004 !

வலைப்பதிவுகளில் அறிமுகம் ஆகும் முன்பு, ஊருக்குப் போகும் பேதெல்லாம் சென்னையில் இறங்கியதும் நேராக நாகை, அங்கேயே உறவினர் வீடுகளுக்கு சென்று வருவது, நெடுநாளைய நண்பர்களை சந்திப்பதும் முடிந்தால் அருகில் எங்கேயாவது (பெரும்பாலும் சுற்றி இருக்கிற கோவில்களுக்குத் தான் கூட்டிச் செல்வார்கள்) சென்றுவருவதுதான் நடைமுறை.

வலையில் அறிமுகமான பிறகு தமிழகம் சென்றால் நடவடிக்கையே மாறிவிட்டது, சென்னையில் இருநாட்கள், மற்ற ஊர்களுக்கு சென்று பலமாதங்களாக பழகிய சிலரை நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்ற ஆர்வம் கூடி, அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாக எனது தமிழக பயணம் பதிவர் சந்திப்புகள் பயணமாகவே மாறிவிட்டது. 'வீட்டுல 2 நாள் கூட இருக்காம இவன் எங்கப் போறான்...எப்ப வர்றான் என்றே தெரியல' அம்மாவின் புலம்பல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். அம்மா சமையல் சுவையையும் தாண்டி இதுவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்களை நேரில் சந்திக்கப் போகும் உந்துதல் பேருந்தில் ஏறி உட்கார வைத்துவிடும்.

*****

இந்த சனிக்கிழமை எனக்கு காலைப் பொழுது சிங்கையில் விடிந்தாலும் காலை சாப்பாடு சென்னையில் தான். சென்னை வருவதை நண்பர்கள் சிலரிடம் தெரிவித்தேன். இந்த ஆண்டுக்கான பதிவர் சந்திப்பை இன்னும் போடல, ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூடுவோம் என்றார்கள். நேற்றே தமிழகம் சென்ற பின்னூட்ட புயல் விஜய் ஆனந்தும் சென்னை பதிவர்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறார்.

அதன் பிறகு மற்ற நகரங்களில் வசிக்கும் சில நண்பர்களை சந்திக்க வருவதாகச் சொல்லி இருக்கிறேன். மாறுபட்ட சிந்தனை உடையவர்களான அவர்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு அவர்களைப் பற்றிய சுவையான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன். மதுரை, திருப்பூர், கோவை, பெங்களூர் செல்லும் திட்டம் இருக்கிறது.

இடை இடையே காணாமல் போகும் அஸ்ஸாம் அண்ணன் பதிவர் தொலைபேசியில் அழைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுத்தார். ஜனவரி கடைசியில் தமிழகம் வருகிறேன், கண்டிப்பாக நேரில் பார்ப்போம் என்றும் சொல்லி இருக்கிறார், அவருடன் 2 ஆண்டுகளாக மிக நட்பாக பழகியும் அவரது நிழல்படத்தைக் கூட பார்த்தது இல்லை, அனுப்ப வேண்டாம், நேரில் பார்க்கும் போது சஸ்பென்சாக இருக்கட்டும் என்றே அவரிடம் மின் அஞ்சலில் சொல்லி வைத்திருந்தேன், தொலைபேசியில் கூட பேசிக் கொண்டது கிடையாது, சென்றவாரம் முதன்முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிர்ச்சி கொடுத்தார். முகத்தைவிட எழுத்துக்களும் எண்ணங்களும் தானே முதலில் அறிமுகமாகிறது.

*****

சொந்தம், பந்தம், சாதி, நெடுநாள் நட்பு ? இவை எவற்றிலுமே அடங்காமல் பதிவர்களாக அறிமுகமாகிறவர்களில் பலர் நெருக்கமாகவே ஆகிவிடுகிறார்கள். எழுத்துகளைத் தாண்டி பதிவுலகம் எனக்கு பிடித்து இருப்பதற்கு இதுவே முதன்மை காரணம், ஏனென்றால் நேரில் பார்க்கும் போது எழுத்துகளையும், சர்சைகளையும், பதிவுச் சண்டைகளையும் எவருமே நினைப்பது கிடையாது

வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் சந்திப்போம். அதுபற்றிய இடம், நேரம் தகவல்கள் தம்பி அதிஷாவின் வலைபதிவில் உள்ளது.


இந்திய தொடர்பு எண் : 90477 44151 (சனிக்கிழமை முதல் வைத்திருப்பேன்)

22 ஜனவரி, 2009

கோவையிலிருந்து ஆர்.வைத்தியநாதன் எழுதுகிறார் :)

தமிழ்நாட்டில் தலைவர்களை அவமானப்படுத்தப்படும் போக்கு அதிகரித்தே வருகிறது. இதற்கு காரணம் கட்சி தொண்டர்களும், அவர்களை வழி நடத்தும் அரசியல் தலைவர்களும் தான். இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ் காந்தி சிலையில் விடுதலை சிறுத்தைகள் செருப்பு மாலை போட்டதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்தது (தினமலரில் இது போன்ற பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளி இடுவதில்லை) அந்த செய்தியை படித்ததுமே, ஒரு மாபெரும் தலைவருக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தங்களுக்கு பிடிக்காத தலைவர்களுக்கு செருப்பு மாலை போடுவதை தமிழர்களின் கலாச்சாரம் ஆக்கி வைத்திருக்கின்றனர் திராவிட அரசியல்வாதிகள். பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை ஆதரித்து செய்யும் இந்த செயல்கள் மிகவும் கண்டிக்கக் தக்கது. விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டு இயக்குனர் சீமான் தற்பொழுது சிறையில் களி தின்று கொண்டு இருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேச துரோகிகள், தேச தூரோகிகளின் செயலால் மாபெரும் தேசியக் கட்சியின் முன்னால் தலைவரின் சிலை அவமானப்படுத்தப்பட்டது தமிழர்களுக்கு வெட்க்கக் கேடு. தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விசமிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர்களுக்கு சிறையில் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது.

********

வார்ரே......வா...பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டதும், பெரியார் சிலையை உடைத்து பெரியார் தொண்டர்களை புண்படுத்தியதெல்லாம் பகவான் ஆசிர்வாதத்தால் நடந்தேறியவையா. தேசியவாத பம்மாத்தையையும், முதலைக் கண்ணீரையும் தமிழக எல்லைத் தாண்டி வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரியாது, படித்து சிரிக்கவும் மாட்டார்கள்.

பின்குறிப்பு : தினமலரின் 'இது உங்கள் இடம்' நாளைய கடிதத்தை இன்றே போட்டு இருக்கிறேன். எப்படி கிடைத்தது என்றெல்லாம் கேட்காதீர்கள் :)

21 ஜனவரி, 2009

கூகுளில் கணக்கு பண்ண முடியுமா ?

கூகுள் தேடு பொறி என்றாலும், அதன் மேம்பட்ட திறனால் தேடு பொறிகளில் முன்னனியில் இருக்கிறது, உடனடியாக கணக்கு போட, அளவை மாற்றி (Unit Conversion), பண மாற்றி என உடனடி தேவைகளுக்கு பயன்படுகிறது. இணையத்தில் இருந்து கொண்டே, வேறொரு மென்பொருளை நாடாமல் சிறு சிறு கணக்குகளை செய்துவிட முடியும்

கூகுள் கணக்கு:யாகூவில் அந்த திறன் இல்லை
பணம் மாற்றி:
அளவை மாற்றி:
நகர வரைபடம்:
கோடிட்ட இடங்களை நிரப்ப...:

கூகுளில் வேறு என்ன என்ன கூகுள் தேடலில் மூலம் செய்ய முடியும் ?

இங்கே சொல்கிறார்கள்

20 ஜனவரி, 2009

தமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் ?

கூகுள் தேடலில் தமிழ் நாட்டின் வரைபடம் பார்பதற்காக tamil என்று அடிக்க தொடங்கினேன். மிகுதியாக தேடிய (குறி) சொற்களின் பட்டியலை கூகுள் உடனேயே காட்டியது, முதலில் காட்டிய சொல்லைப் பார்த்ததும், அதிர்ச்சி ஏற்பட்டதும், கூடவே ஆர்வமும் ஏற்பட்டது, நம்ம தமிழ் ஆளுங்கதான் இப்படியா, வேறு மாநிலகாரர்களும் இப்படியா ? அவர்களது மொழிப் பெயரை கூகுள் தேடலில் கொடுத்த போது காட்டிய அடிக்கடி தேடும் பட்டியலில் தமிழுக்கு வருவது போல் ஒரு சொல் கூட இல்லை. மனதை தேற்றிக் கொண்டு, tamil என்று அடிப்பதற்கு பதிலாக, thami என்று z அடிக்கும் முன்பே பட்டியலைக் காட்டியாது, அதிலும் முதலில் வருவது :( நீங்களே பாருங்கள்.

தமிழர்கள் எப்போதும் அதே நினைப்பில் இருப்பதால் என்னவோ, சுரணை இருக்க வேண்டிய மற்றவற்றில் அற்று இருக்கிறார்கள் போலும் :(

பலவீனமானவர்களுக்கே அதுபற்றிய சிந்தனை இருக்கும், அதை ஆர்வம் என்று சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன், தமிழர்கள் (குறிப்பாக ஆண்கள்) இதில் நாட்டம் கொண்டு இருப்பது பலவீனம் தான். மற்றொரு கோணத்தில் பார்த்தால், இணையத்தை மிகுதியாக பயன்படுத்துபவர்கள் தமிழர்கள், மற்ற மாநிலக்காரர்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களில் அதைத் தேடுபவர்கள் குறைவாக இருக்கலாம் என்றே ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது

இப்ப சொல்லுங்க....தமிழன் என்று 'சொல்'லடா..................

ஒரே ஒரு ஆறுதல்... kerala என்று தேடும் போது kerala girls வருகிறது. எண்ணப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதையும் தமிழாளுங்கதான் தேடி இருப்பார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது :)


19 ஜனவரி, 2009

வில்லு - பதிவர் விமர்சன கடமை :)

குருவி பாட்டை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்து, கேட்டு சிம்பு ரசிகையாக இருந்த என் பொண்ணு விஜய் ரசிகையை மாறிட்டாள். :) வில்லு படத்துக்கு போலாம் என்று அவள் விருப்பத்தின் பெயரிலும், வீட்டுக்கு அருகில் திரை அரங்கு இருப்பதால் படம் தொடங்கி எப்ப வேண்டுமானாலும் எழுந்து போகலாம் என்ற முடிவில் வில்லு படத்துக்கு சென்றோம். இரண்டாவதாக விஜய் - குஷ்பு குத்தாட்டம் இருக்குன்னு கேள்விப் பட்டுதான் படத்துக்கு ஓகே சொன்னேன். ஆர அமர கிளம்பினதால், பாட்டு ஓடிக் கொண்டு இருந்த போது தான் உள்ளே சென்றோம். உறுதிபடுத்தப்பட்ட இருக்கையில் (Reserve Seat) வேறொருவர் சற்று பேரிளம் பெண் அமர்ந்து இருந்தால், அவரை கிளப்பி, அவருக்கு உங்க சீட்டு இது இல்லன்னு, அவருடைய சீட்டுக்கு அவரை அழைத்து சென்று காட்டி, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவிட்டு வந்து அமருவதற்குள் பாட்டே முடிந்துவிட்டது. அந்த காட்சியில் ஒன்ற முடியாமல் போய்விட்டது :(

அப்பன் கெட்டப் பெயரை மகன் துடைக்கும் கிமு காலத்து திரைக்கதை. தாவூத் இப்ராஹிம் ரேஞ்சுக்கு வளர்ந்த இரு தாதாக்களை பலிவாங்கி, தந்தை பெயரை காப்பாற்றும் கடும் பணியை விஜய் மேற்கொள்கிறார். பின்நகர்வு காட்சியில் (ப்ளாஸ் பேக்கில்) அவரே அப்பனாக (சூர்யா, அஜித் செய்வதால்) துணிந்து இவரே நடிக்கிறார். மேஜர் ஜெனரலாம், பார்பதற்கு பாம்ஸ் ஸ்குவார்ட் போல தோற்றமளிக்கிறார்.

வடிவேலு வழக்கமான நகைச்சுவை, சற்று போரடித்தாலும், படத்தில் நகைச்சுவைக்கு இதுவாவது இருக்கிறதே. கூம்பு வடிவ கொண்டை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைத்தது.

பில்லாவில் அஜித்துக்கு முழுத்திறமையையும் வெளிப்படுத்திய வழங்கிய நயன் தாரா, விஜய்க்கும் துரோகம் செய்யவில்லை இன்னும் தாராளமாக வழங்கி இருக்கிறார். இதுக்கு மேல என்ன சொல்வது. பலரும் விமரசனம் எழுதிவிட்டார்கள்.

விஜய் ஆட்டம், ஸ்டெப்ஸ் அருமை, பிரபு தேவாவின் டச் அதில் நன்றாக தெரிகிறது, விஜய்க்கு ப்ளஸ் ஆட்டம் தான். பிரபு தேவா படங்கள் இப்படித் தான் இருக்கும் என்பதை இந்த படம் பளிச்சென்று காட்டுகிறது. பழைய படங்களைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் காட்சிகளை சுட்டு கோர்க்கிறார். இதற்கு பதிலாக எதாவது நல்ல படத்தை ரீமேக் செய்யலாம். படத்தில் பைரவி கீதா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் விஜயின் வளர்ப்பு அம்மா, பெற்ற அம்மாவாக வருகிறார்கள். இரண்டாவது பகுதியை உன்னிப்பாக பார்பவர்கள் செண்டி மெண்டல் ஆவது உறுதி. ப்ரகாஷ் ராஜை சரியாகப் பயன்படுத்தவில்லை, உடைத் தவிர வேறெதுவும் தாதாத் தனத்தைக் காட்டவில்லை. பொசுக்கு பொசுக்குன்னு அல்லக்கைகளை சுட்டு ஹிட்லராக காட்ட முயற்சித்து அவரை உலக பெரும் தாதா என்று சொல்ல முயன்று இருக்கிறார்கள்.

வில்லு குருவியைவிட பரவாயில்லை. இது இந்தியாவின் தலைசிறந்த ஜேம்ஸ் பாண்ட் படம் என்று விளம்பரப்படுத்தப் படுதாம். கொடுமை கொடுமை கொடுமை. விஜய் இப்படி பட்ட படங்களிளை நடித்து கொடுத்து வந்தால் இடைக்கால அஜித்தை தேடியது போல் தேட வேண்டி இருக்கும்.

வில்லு மழுங்கலான பழைய ஆயுதம் !

போர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி !

கலைஞர் : மிஸ்டர் சிங், எங்க கூட்டணிக் கட்சிகளின் போர் நிறுத்த கோரிக்கை என்ன ஆச்சு ?

சிங் : அதைப் பரிசீலித்து தான், இந்திய கிரிக்கெட் அணியை இலங்கை அனுப்புறோம்

கலைஞர் : அவங்க பேச்சு வார்த்தை நடத்தப் போறாங்களா ?

சிங் : கலைஞர் ஜி, அவங்க பேச்சு வார்த்த நடத்த போகலை, விளையாடப் போறங்க, இவங்க அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை இலங்கை இராணுவம் அவ்வப்போது போரை நிறுத்திவிட்டு பார்ப்பாங்க.

கலைஞர் : சோனிய ஜி வாழ்க.


பின்குறிப்பு : இலங்கையில் நடக்கும் தமிழின துடைத்தொழிப்பை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இலங்கையுடன் இந்திய உறவு உறுதிப்பட்டு கிடக்கிறது என்று உலக நாடுகளுக்கு காட்டவே இந்த இலங்கை - இந்திய கிரிக்கெட் ஆட்டம் இந்த வேளையில் நடக்கிறது. சிங்களர்களுக்கு உற்சாகம் தர இந்திய அணியை அனுப்பும் சோனிய காங்கிரஸ் கட்சியும், அவர்தம் தமிழக கூட்டணி கட்சிகளும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

18 ஜனவரி, 2009

திருமா செய்வது சரி இல்லை :(

திருமாவின் சாகும் வரை உண்ணாவிரதம் எனக்கு ஒப்பு இல்லை, தமிழீழ விடுதலை குறித்து பேசினாலே எள்ளி நகையாடும் காங்கிரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதனால் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் பெறலாமேயன்றி, வேறொன்றுகும் பயன் தராது. காங்கிரசை வற்புறுத்த முடிந்த திமுகவும், பாமகவும் இதைச் செய்யாதபோது திருமா செய்வது வீN முயற்சியே. இந்த போராட்டத்தில் திருமா இறந்தாலும் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படப் போவதாகத் தெரியவில்லை. ஒருமுறை பெரிய புஷ்ஷை எதிர்த்ததற்காக சதாமை பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கையே தன்வசப்படுத்திக் கொண்டு, சாதமையும் அழித்த சின்ன புஷ்ஷின் மனநிலையில் தான் காங்கிரசும் அரசும் உள்ளது. விடுதலைப் புலிகளையும், பிராபாகரனையும் அழிக்ககும் நினைக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் ஒட்டுமொத்த ஈழத்ததமிழர்களை அழிந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அதை காங்கிரசில் இருக்கும் தமிழனும் தட்டிக் கேட்கப்போவதில்லை.

சீக்கிய இனத்தை கண்ட இடங்களில் வெட்டிக் கொன்று இந்திராகாந்தியின் ஆன்மா சாந்தி அடைய வைத்த காங்கிராசாருக்கு, இன்னும் ஆவியாகவே இருக்கும் இராஜிவ் காந்தி ஆவிக்காக ஈழத்தமிழர்கள். வெறி'பிடித்த' காங்கிரசாரின் கல்மனதைக் கரையவைக்கலாம் என்று எண்ணும் திருமாவின் செயலால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. தமிழகத்தில் முதன் முறையாக அரசியலில் ஒரு தலித் தலைவராக பெரும் வளர்ச்சி பெற்ற திருமா, காங்கிரஸ்காரர்களின் வீம்பை குறைக்க எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த முயற்சியால் திருமா உயிருக்கு எதும் நேர்ந்தால் பாதிப்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள தலித்துகளும் தான். எனவே இந்த சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு ஆர்பாட்டாங்கள் நடத்தலாம், முடிந்தால் விடுதலை சிறுத்தைகளை அனைவரையுமே ஈழவிடுத்தலைக்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி சிறை செல்லச் சொல்லலாம். எத்தனை சிறுத்தைகளைத்தான் ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்க முடியும், சிறை நிரப்பும் போராட்டமாக கொண்டு செல்வதே இப்போதைக்கு சிறந்த வழி. திருமாவின் உடல் நலமும், உயிரும் ஈழத்திற்கும் மட்டுமல்ல தமிழகத்திற்கும் மிக முக்கியமானது.

அடங்கமறு, அத்துமீறு ஆனால் பட்டினியாகக் கிடக்காதே, யாருக்கும் பயனில்லை

16 ஜனவரி, 2009

மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சென்னை: இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும்இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் சென்னையில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் நிலை வரலாம்' என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.


இந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடனும், இந்திய போர்தளவாடங்களானாலும் இலங்கையில் தமிழின ஓழிப்பு நடந்தேறுகிறது என்றே தமிழக கட்சிகள் நடுவன் அரசை குற்றம் சொல்கின்றன. அதை நடுவன் அரசும் அரசின் அறிக்கையாக மறுக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே, இலங்கைக்கு உதவி செய்யவில்லை என்று வாய்ச் சொல்லாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஐயா இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிறார். கட்டுச் சோத்துக்கு பெருச்சாளியை காவல் வைத்தார் போல யார் இலங்கை அரசுக்கு நண்பனாக இருக்கிறார்களோ அவர்களிடமே சென்று முறையிட்டால் எதுவும் நடக்குமா ? வெறும் எதிர்ப்பை பதிய வைப்பதற்காக மட்டுமே அறிக்கை, கோரிக்கை, வேண்டுகோள் நடைமுறைகள் நடந்தேறுகிறது.

நடுவன் அமைச்சர் அன்பு மணியை மீட்டுக் கொள்கிறேன் என்று ஏன் சொல்ல முடியவில்லை ? அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா ? எதற்கு இந்த நாடகமெல்லாம் ?


கலைஞருக்குத்தான் வயதாகிவிட்டது, கட்சியை வாரிசு உரிமையாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் நிதியைத்திரட்டி போர் நிவாரணம் அனுப்பி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டு மங்களம் பாடிவிட்டு, திருமங்கலத்தில் முழுவீச்சாக ஈடுபடுத்திக் கொண்டார், மருத்துவருக்கு என்ன ஆச்சு ? மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் ? இதை செய்வதற்கு மருத்துவருக்கு ஏன் துணிவில்லை ?

சீமானோ, அமீரோ பேசினால் மட்டும் தான் சிறையில் அடைப்பார்களா ? சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா ? தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ? தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா ? அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா ? மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே ? காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன ? இதை திமுகவும் செய்யலாம்.

தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார். இராமதாஸ் ஐயா, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவதால் பிரச்சனை தீராது, இலங்கை அரசுக்கு உதவிசெய்வதையாவது இந்தியா நிறுத்தனும், அதைச் செய்யச் சொல்லி நெருக்குதல் கொடுத்து, செய்யவில்லை என்றால் அன்பு மணியை பதவி விலகச் சொன்னால், ஈழத்தமிழர் குறித்த மருத்துவர் அக்கரையை ஈழமக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் கூட புரிந்து கொள்வார்கள்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை ?

15 ஜனவரி, 2009

மார்கழி திங்கள் மற்றும் ஒரு பாராட்டு !

புறையோடிய புண்ணுக்கு காலை எடுப்பதே நல்வழி, நாத்திகம் குறித்த எனது நிலைப்பாடு, கருத்துகள் இவைதான், கடவுள் பெயரால் மூடநம்பிக்கைகள் சமூகத்தை கேலி குறியாக்கும் போது, கடவுளையே மறுப்பதன் மூலம் அவற்றை அழிக்கமுடியும் என்கிற நம்பிக்கை விதையாக பெரியார்கள் தோன்றுகிறார்கள். பகவத் கீதைவழி சொல்வெதெனில் யுகங்கள் தோறும் மக்கள் மனநிலை கீழாக சென்று உலகே பாழ்பட்டு சீரழியும் போது அதை அழித்துவிட்டு புதிய உலகை படைக்க கண்ணன் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். இன்றைய தேதியில் உலக மக்களை பிரித்துப் போடுவதில் முதன்மை பங்காற்றுவது, இனமோ, சாதியோ இல்லை, மதம் தான். கடவுளின் பெயரால் சாத்தான்களின் ஆசியுடன் நடத்தப்படும் மதவெறிதான்.

மதவெறியை, மதத்தை விடுத்துப் பார்த்தால் ஆன்மிகம், இறை நம்பிக்கை அமைதி இழந்த மனதுக்கு அருமருந்தே. அந்த வகையில் ஆன்மிகம் தனிமனிதனுக்கு ஓரளவுக்கு நன்மையே செய்கிறது. பிறர் மீது வழிய திணிக்கப்படாதவரையில் எந்த ஒரு கொள்கையும் நல்லவையே. இறை நம்பிக்கை உடையவர்கள் தீய வழியில் செல்வதை ஒராளவு அந்த நம்பிக்கை தடுத்தே வைத்திருக்கிறது. அது இல்லாதவர்கள் தன்னம்பிக்கை மூலமாகவே நல்லது, கெட்டது, நன்மை தீமை அறிந்தே தீய வழியில் செல்வதை தடுத்து தற்காத்து கொள்கிறார்கள்

**********

பொதுவாக மார்கழி திங்கள் என்றால் (தமிழகத்தில்) கடுங்குளிர் இருக்கும், அதிகாலையில் எழுவது சோம்பலாக இருக்கும், ஆனால் அந்த திங்களில் தான் விவசாய பயிர்கள் அறுவடையை நெருங்கும் காலம், பாதுகாப்பு மிகத் தேவையான நேரம், தவறினால் விளைச்சல் வீணாகிவிடும். கடும் குளிரை சமாளிக்கவே மார்கழி திங்களை மங்கல திங்களாக்கிக் கொண்டு அதிகாலை எழும் வழக்கம் ஏற்பட்டதாக நினைக்கிறேன். அதற்கு உற்சாகப்படுத்த அதிகாலையில் கோவில்களை திறந்து வைத்து, பூசை தொடங்கி, பெரிய மணி ஓசையை எழுப்பி ஊரையே உறக்கத்தில் இருந்து எழுப்பவே மார்கழி உற்சவங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

மற்ற நாட்களில் காலை 6 மணி வரை உறங்கும் பெண்கள் கூட காலை 4.30 மணிக்கே எழுந்து, வாசல் பெருக்கி, வண்ணக் கோலமிடுவதை சிறுநகரங்களில், கிராமங்களில் இன்றும் கூட நடைமுறையில் இருக்கிறது. மார்கழி முழுவதும் நாள் ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு கோலங்கள் இடுவதைப் பற்றி பெண்கள் பேசிக் கொண்டும், அதற்காக வண்ணப்பொடிகள் வாங்குவது, கோலமிடுமுன்பே எழுத்து பலகையில் வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்வார்கள், காலை 5 மணிக்கு கோவிலில் தொடங்கும் பக்திப் பாடல்கள் 7:30 வரை கேட்டுக் கொண்டு இருக்கும், அதே போன்று மாலைவேளையில் போடப்படும் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற படங்களின் பேச்சுரை ஒலிபரப்பை கேட்டு கேட்டு பலருக்கு திருவிளையாடல் முழு பேச்சுரையும் மனப்பாடமாகவே பதிந்து இருக்கும்.

மார்கழி பனியை அறைகூவலாக எடுத்துக் கொண்டு அந்த திங்களிலும் அன்றாட வாழ்க்கைய மேலும் சுறுசுறுப்பாக்கிக் கொள்ள, அந்த திங்கள் தொடர்புடைய ஆன்மீக விழாக்கள் முதன்மை பங்காற்றின.
தமிழகத்தில் மார்கழி திங்கள் வேறெந்த திங்களைவிட சிறப்பு வாய்ந்தாக இருப்பதற்கு வேறொரு காரணம் இருப்பதாக தெரியவில்லை.

*******

அமெரிக்காவுக்கும் மார்கழிக்கும் என்ன தொடர்ர்பு ? தமிழகத்தில் இருக்கும் மார்கழி அதிகாலைக்கும் நியூஜெர்சிக்கும் எதும் தொடர்பு இருக்கிறதா ? தமிழக அதிகாலை நியூஜெர்சியில் மயக்கும் மாலை.
அந்த நேரத்தில் மார்கழி திங்கள் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு என்ற கணக்கில் தவறாது, மார்கழி திங்களுக்காக சிறப்பு பதிவுகள் இட்டு வருகிறார் நம்ம ஆன்மிக சூப்பர் ஸ்டார் கே.ஆர்.எஸ் என்று அழைக்கப்படும் மாதவி பந்தல் கண்ணபிரான் இரவிசங்கர்.

மார்கழி-01: கீதை Bestஆ? கோதை Bestஆ? என்று மார்கழி 1ல் தொடங்கிய மார்கழி தொடர்(புடைய) பதிவுகளை

தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்! - தை முதல் நாள் அன்று நிறைவு செய்து இருக்கிறார்ர்.

மார்கழி தொடர்பில் மொத்தம் 31 பதிவுகள். தொடர்பதிவுகள் எழுதுவதே சிக்கல் தான், அதுவும் ஆன்மிகம் தொடர்பில் எழுதும் போது எழுதுபவர்களுக்கே வாசகர் வட்டம் குறித்த எண்ணத்தில் அது பெறும் அரைகூவலாக அமையும், வெறுமென பாசுரமும் பொருளும் எழுதினால் படிப்பவர்களுக்கு பிடிக்காது, அவர்களை நாள்தோறும் தேடிவரும் படி செய்வதற்கு நகைச்சுவையுடனும் சொல்லவந்த கருத்தை நன்றாக பதிய வைக்கும் படி எழுதவேண்டியது மிக மிக சிக்கலான வேலை, மற்றவற்றைவிட நகைச்சுவைக்குத்தான் மிகுந்து யோசிக்க வேண்டி இருக்கும், ஏனெனில் மற்றவை இயல்பான எழுத்தில் வந்துவிழும்.

கேஆர்எஸ் எழுதிய 31 பதிவுகளிலுமே நகைச்சுவை, எள்ளலுக்கு குறைவில்லை, அதே போன்று, ஆன்மிக அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பாசுர விளக்கத்துடன் சேர்த்தே பதிவாக கோர்த்து இருக்கிறார். 31 இடுகையும் மிக நன்றாக இருந்தது.

இந்த மார்கழி இடுகை தொகுப்பை மென்னூலாகவோ, புத்தமாகவோ ஆக்கலாம். பதிவர்கள் எழுதிய பலநூல்கள் வெளிவந்துவிட்டன, ஆன்மிக அன்பர்களுக்காக சிறிய அளவில் இந்த தொகுப்பை கேஆர்எஸ் ஒரு நூலாக்கலாம்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு தனது பொன்னான நேரத்தை மிகவும் பிறகுக்கும் பயன் தரும் வகையில் மாற்றிக் கொண்ட அன்பு நண்பர் கேஆர் எஸை மிகவும் பாராட்டுகிறேன்.

14 ஜனவரி, 2009

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) !

சிங்கையில் இந்திய, தமிழ் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த குறையில்லாமல் கொண்டாடலாம். பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, அகப்பை, கரும்பு அனைத்தும் கிடைக்கும். எங்கள் வீட்டில் மண் பானையில் செய்வது இல்லை, வாங்கினால் பொங்கல் முடிந்ததும் அதை தூக்கிப் போடனும், இல்லை என்றால் கவனமாக உடையாமல் வைத்து பாதுகாத்து அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தனும், இரண்டுமே கடினம் தான். அதனால் இரு சிறிய எவர்சில்வர் பானைகளில் தான் கடந்த 9 ஆண்டுகளாக பொங்கல் வைக்கிறோம். மூவருக்கு அதில் வைப்பதே மீந்து போகும்.

தீபாவளிக்கு கிடைப்பது போல் பொங்கலுக்கு பொதுவிடுமுறை கிடையாது, எப்போதாவது சனி / ஞாயிற்றில் பொங்கல் வந்தால் பொறுமையாக செய்ய முடியும், இந்த ஆண்டு புதன் கிழமை வந்ததால் எல்லாம் விரைவாகவே செய்து முடிக்கவேண்டிய கட்டாயம். மஞ்சள் / இஞ்சி கொத்து போகி அன்று வாங்கினால் கழிபட்டதே கிடைக்கும் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே பச்சரிசியுடன் சேர்த்து வாங்கிவிட்டோம். நேற்று புத்தம் புதிய பொங்கல் காய்கறிகளை வாங்கினேன். பொங்கல் கறியில் மொச்சை, மற்றும் அனைத்து கிழங்குவகைகளையும் போட்டு செய்வது வழக்கம், சக்கரை வள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக மூன்று கடை ஏறி இறங்கி ஒருவழியாக அரைநெல்லிக்காய், சர்கரைவள்ளிக்கிழங்கு, தலைவாழை மற்றொரு கடையில் கிடைத்தது. மற்ற நாட்களை விட பொங்கலுக்கு முதல் நாள் சற்று விலை கூடுதலாக இருக்கும், பண்டிகையில் தானே விற்பனையாளர்களும் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பதை நினைத்துக் கொண்டு வாங்குவேண்டியதுதான். சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா ? அதைக் கொண்டு வந்து விற்பதற்காக சற்று கூடுதலாகக் கொடுத்தால் ஒன்றும் குறைவில்லை என்றே நினைக்கத் தோன்றும்.

பொங்கலுக்கு தேவையான சாமான்கள் ஆயத்தம் ஆச்சு. பொங்கல் எத்தனை மணிக்கு வைப்பது? சிங்கையில் ஞாயிற்றெழுச்சி காலை 7 மணிக்கு மேல் தான். விடுமுறை நாள் இல்லையே, நான் நாள் தோறும் காலை 6.15 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் இடத்தை அடைய 8.15 ஆகும், அதனால் பொங்கல் வைப்பதை அதிகாலை (பிரம்ம நல்வேளை - பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) சான்றோரை (மனைவிதான்) கலந்து ஆலோசித்து, 4.30 மணிக்கு தொடங்க,

10 நிமிடத்தில் பொங்கியது. அந்நேரத்துக்கு மகளை எழுப்பி 'பொங்கலோ...பொங்கல்' சொல்லும்மா....என்றால், 'இன்னிக்கு நம்ம வீட்டில் என்ன ?' என்று எழுந்திருந்தாலும் தூக்க கலக்கத்தில் கேட்டாள், இத்தனைக்கும் நேற்று இரவே 'நாளை பொங்கல்' என்று சொல்லி வைத்தோம். பொங்கல்களை நான் பார்த்துக் கொள்ள, பொங்கல் காய்கறி சமையலை மனைவி முடித்தார்.(எங்கள் வீட்டில் எப்போதும் பூசைப் போடும் பணி என்னுடையதாம்)

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, பூசையெல்லாம் போட்டு, ஆதவன் இருக்கும் இடத்தை நோக்கி கற்பூரம் காட்டிவிட்டு, சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தால் 6.45 ஆகிவிட்டது. பொங்கலை சிறிது உண்டுவிட்டு (சர்கரை பொங்கலில் முந்திரி மிகுதியாக போட்டுவிட்டிங்க, திகட்டுது என்று அம்மணியின் புலம்பல்), நண்பகல் உணவிற்காக பொட்டலம் கட்டிவிட்டு, 7 மணிக்கு மகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் வந்து சேர காலை 9.00 மணி ஆகிவிட்டது. இன்று 45 நிமிடம் அலுவலகம் நேரத்தை பொங்கலுடன் சேர்த்து விழுங்கியாச்சு.

பொதுவிடுமுறை நாளாக இல்லாததால், சன் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைகாட்சியிலும் நடிகர்/நடிகைகளின் பொங்கல் வாழ்த்துகளை கேட்கபெறமுடியாத துர்பாக்கிய சாலி ஆகிவிட்டதில் பெரிய வருத்தம் தான்
(ஹைய்யா......புது சட்டை ! )

அனைவருக்கும் தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

12 ஜனவரி, 2009

திமுக தி.மங்கலம் "முக்கிய" வெற்றி - பற்றி தலைவர்கள் அறிக்கை !

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகளே வெற்றிபெருவது புதியதல்ல. ஏனென்றால் தங்கள் ஆட்சி சிறப்பானது என்று மக்கள் எண்ணி இருக்கிறார்கள் என்பதை வாக்கு எண்ணிக்கையாக காட்டவேண்டிய தன்மான(!) சிக்கலில் ஆளும் கட்சிகள் இருக்கும். முழு அளவிலானா அரசு மற்றும் அரசியல் இயந்திரங்கள் கட்டவிழ்த்து விடப்படும். தெரிந்தது தான் ! திமுக புபி கட்சி அல்ல, அதுவும் மாறன் தமையன்களால் சன் டிவி செய்திவழியாக குற்றச் சாட்டப்பட்ட "ரவுடி" அழகிரி தலைமையிலான திமுக தேர்தல் மேற்பார்வை என்பதால் வேறெதுவும் சொல்லத் தேவை இல்லை. வாழ்க அழகிரி அண்ணன்.

*********

திமுக வெற்றியைப் பற்றி பல்வேறு தலைவர்களின் (கற்பனையான) அறிவிப்பு

அம்மா : மைனாரிட்டி அரசு நடத்தும் கருணாநிதி தனது மகன்களை வைத்து கலவரம், சதி செய்து திருமங்கலத்தை கைப்பற்றியுள்ளார், இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே சட்டமன்ற தேர்தல் வரும், அப்போது தமிழக மக்கள் கருணாநிதிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

கேப்டன் : திமுக வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியையே தழுவி இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் "புள்ளி" விபரப்படி தேமுதிக அதிகப்படியான வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது, எனவே நாங்கள் தான் வெற்றி பெற்றதாக உணர்கிறோம், இதை வெற்றியாக தேமுதிக மாவட்டம் தோறும் கொண்டாடும், அடுத்த தேர்தலில் தேமுதிக ஆட்சியை கைபற்றும் என்பது இந்த தேர்தல் வழியாக உறுதியாகிவிட்டது

சுப்ரீம் ஸ்டார் : எங்களது பலத்தை தெரிந்து கொள்ளவே நாங்கள் இந்த தேர்தலில் நின்றோம், இந்த தேர்தல் வழி எங்கள் கட்சி (? சமத்துவ கட்சி) வெற்றி / தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுள்ளோம். எங்கள் கொள்கைகளுடன் உடன்பாடு உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாங்கள் இன்னும் பத்தே ஆண்டுகளில் ஆட்சி அமைப்போம்

வைகோ : தமிழகத்தை பீகாராக்கி இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது, இது ஒரு பாசிச போக்கு, வன்மையாக கண்டிக்கத் தக்கது, இதனை எதிர்த்து காஷ்மீர் முதல் டெல்லிவரை பாதயாத்திரை செய்து மத்திய அரசுக்கு திமுகவின் அராஜகங்களை விளக்குவோம்

சு.சுவாமி : இந்த தேர்தல் செல்லாது, அதற்கான வீடியோ ஆதாரத்தை அமெரிக்காவில் இருந்து நான் வரவழைத்துள்ளேன். கருணாநிதியை கோர்டுக்கு இழுப்பேன்.

கலைஞர் கருணாநிதி : இது மக்களின் ஆட்சி என்பதை மக்களே இப்படி ஒரு மாபெரும் வெற்றியை தந்து மீண்டும் மெய்பித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் வெற்றி கழக உடன்பிறப்புகளின் உடம்பில் புது இரத்தம் பாய்ச்சி இருக்கிறது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெரும் என்பதை இந்த தேர்தல் உணர்த்திவிட்டது

துக்ளக் சோ : கருணாநிதி புலிகளை ஆதரிக்காததால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் நாட்டில் புலிகளுக்கு புகலிடம் இல்லை என்பது வெளிச்சம் ஆகிவிட்டது.

******

போதும் இதுக்கும் மேல் அரசியல் உளறுவாயன்கள் என்ன உளறுவார்கள் என்று நினைக்கவே அருவெறுப்பாகுகிறது. மொத்தில் இந்த தேர்தலில் திமுக முக்கி(யே)ய வெற்றி பெற்றுள்ளது

இங்கெல்லாம் இவ்வளவு விரைவாக ?லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் 2009


இராதா காதல் வராதா பாடலுக்கு ஒரு கிருஷ்ணனும் நான்கு கோபியர்களும் நடனம்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்பொங்கல் பற்றிய விளக்கம்
இது ஒட்டி (ஸ்டிகர்) இல்லை, உண்மையான பசுதான்


மாட்டுக்கார வேலா என் மாட்டைக் கொஞ்சம் கூப்பிடுடா...


பொங்கல் வரைக்கும் தான் மாடுகளை இங்கே பார்க்கலாம், அப்பறம் பார்க்கனும் என்றால் விலங்கியல் பூங்காவுக்குத்தான் போகனும்


இந்த ஆண்டு குர்பானியில் சிக்காத மகிழ்ச்சியை அசைப்போட்டபடி ஆடுகள் :)


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து கரும்பு வாங்கலையோ......


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து நான் வாங்கிட்டேன் (பின்னால) பையில தான் இருக்கு...பொங்கலுக்கும் பிள்ளையாருக்கும் என்ன தொடர்ப்பு, கரும்புக்கு பிள்ளையார் தான் துதிக்கையால் தண்ணீர் பாய்ச்சுறாரோ ?

பின்குறிப்பு : பொங்கல் ஏற்பாட்டாளர் தமிழ் பற்றாளர் போலும், மறக்காமல் மருந்துக்குக் கூட தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை.

10 ஜனவரி, 2009

நான் இராமதாசை ஆதரிக்கவில்லை !

பொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்

இது ஒரு எதிர்வினைப்பதிவு கவனமாக படிக்கவும் :)

மக்கள் ஆட்சி கொள்கை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரைக் கொண்டு பிரதமர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுக்கும் முறை, எதிர்பாராவிதமாக கட்சியினாரால் முன்மொழியப் படுபவரே வேட்பாளராக இருப்பதால் மக்கள் ஆட்சி என்பது வெறும் பெயரளவிலே. காரணம் தலைவன்(வி) மற்றும் தலைவன்(வி) வழி நடத்தும் கட்சி மீது இருக்கும் கண்மூடித்தனமான, மூடத்தனமான ஈர்பினால், தொகுதியில் நல்லவர் ஒருவர் நின்றாலும் அவரை புறக்கணித்துவிட்டு தலைவன்(வி) 8 ஆவது தலைமுறை செழிக்க வேண்டும் என்றே வாக்கு அ(ளி)ழிக்கின்றனர்,
இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் தான் நாட்டில் மக்கள் ஆட்சியின் (அலங்)கோலம் நடந்தேறிவருகிறது.

மானமுள்ள சிலதொகுதி மக்கள் தான் கட்சிகளை விட தனிமனிதரின் செயல் கருதி அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கின்றனர். அதையும் விட்டுவைக்காமல் அந்த பெரும் புள்ளிகளை கட்சியின் பெயரால் வளைத்து போட்டு வெற்றிபெருகின்றனர், ஒரு கட்சியில் சேர்ந்தால் பெரிய அளவில் அறியப்படுவோம் என்ற ஆசையில் நல்லவர்கள் கூட கட்சிகளுக்குள் தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் நன்றாக நடத்துவதாக சொல்லும் கட்சிகள் வெற்றி பெற்ற பிறகு காலில் விழவேண்டும் என்று எதிர்பார்பதால் ( அம்மாவும்,வாண்டையாருக்கும் இப்படி ஒரு பிரச்சனை ஆச்சு ) விரைவிலேயே உறவுகள் புட்டுக் கொள்ளும், அது போன்ற வேளைகளில் பதவியை விலகச் சொல்லி கட்சிகள் வற்புறுத்தும், அப்பொழுது அவர் வகித்து கொண்டிருக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர் பதவியை விலகிவிடுவார், பிறகு தேர்தல் நடத்தாமல் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க மேற்கண்ட முறையை பரிந்துறைத்தால் தொகுதி மக்களுக்குத்தான் ஏமாற்றம்.

ஏனென்றால் கட்சிகள் காட்டும் உறுப்பினர் தொகுதி மக்களுக்கு விருப்பமானவர் இல்லை. பல ஊர்களில் வெளியூர் காரர்களை நிறுத்தினால் அவ்வூர் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், மேற்கண்ட சூழலில் வெளியூர் காரரை அதாவது அம்மக்களை அறியாதவர்களைக் கூட பணம் செல்வாக்கு காரணமாக கட்சிகள் தொகுதியை தன்வயப்படுத்திவிடும். இது மக்கள் ஆட்சியை அவமதிக்கும் செயல். இப்படி பட்ட சட்டம் நடை முறையில் இருந்தால் பெயருக்கு மக்களுக்கு அறிமுகமானவரை நிறுத்திவிட்டு பிறகு அவரை விலகச் சொல்லிவிட்டு கட்சிக்கு அடிமையான, செல்வாக்கு உள்ள ஒருவரை, விருப்பமானவரை அங்கே நிறுத்துவார்கள். நாகையில் ஒருமுறை தொகுதிக்காரரை நிறுத்தாமல் திருவாரூர்காரர் (தென்னவன்) நிறுத்தியதற்கு பொதுமக்கள் பாடம் கொடுத்தனர், அதுபோல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் செல்வாக்கு மிக்க சுயேட்சையைத் தான் தேர்ந்தெடுத்தார்கள்.

தொகுதியின் உறுப்பினர் அகால மரணம் அடைந்தாலோ, பதவி விலகினாலோ அவருக்கு அடுத்து மிகுந்த வாக்குகள் பெற்றவருக்கு அந்த பதவியைக் கொடுத்தால் வீனான தேர்தல் செலவுகள் குறையும், ஏனென்றால் சில வாக்குகள் வேறுபாட்டினால் தான் இரண்டாம் இடத்தில் இருந்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் அவர் ஏற்கனவே தொகுதிமக்கள் பலரால் வாக்களிக்கப்பட்டவரே. அதைவிடுத்து அந்த கட்சியினருக்கே அந்த தொகுதித்தலைவராக்கும் உரிமையைக் கொடுத்தால், தொகுதியையே கட்சிக்கு எழுதி வைத்தது போல் ஆகிவிடும். இரண்டாவது வந்து வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கே அவர் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் கொடுக்கலாம், இம்முறை மாநகராட்சி தேர்தலில் நடைமுறையில் இருப்பவை தான். ஸ்டாலினுக்கு பதிலாக கராத்தே தியாகராஜன் சென்னை மேயராக ஆனது இம்முறையில் தான். மறு தேர்த்தல் அங்கே தவிர்க்கப்பட்டது. இதிலும் கூட சிக்கல் உண்டு, இரண்டாவது வந்தவர் பதிவிக்கு ஆசைப்பட்டு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவரை தடயம் வைக்காமல் போட்டுத் தள்ளாமல் இருக்க வேண்டும். எல்லோருமே அப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் என்றே நினைப்போம்.

மக்கள் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே மக்கள் அவை மற்றும் சட்ட அவை உறுப்பினராக உரிமை இருக்கிறதே அன்றி, கட்சி கைகாட்டுபவர் அல்ல. அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது மக்கள் ஆட்சிக்கு எதிரானவை. ஏனென்றால் கட்சிகள் அனைத்துமே குறுநில மன்னர்களைப் போல் தான் நடந்து கொள்கிறார்கள், கட்சிகள் குடும்பச் சொத்தாகவே அறியப்படுகிறது.

முதல் பத்தியில் இருப்பது இராத கிருஷ்ணன் ஐயாவின் பதிவில் இருந்தவை, அவற்றை மருத்துவர், தமிழ் குடிதாங்கி (தமிழ்காவலராக சொல்லிக் கொள்ளும்) இராமதாஸ் ஐயா சொல்லி இருந்தால் நான் அதனை எதிர்க்கிறேன். இலங்கையில் அதே நடைமுறை இருப்பதாக சொல்கிறார்கள், எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. ஒரு தொகுதிக்கு யார் யாரெல்லாம் தலைவராக இருக்க முடியும் என்ற முடிவை மேற்கொள்ளும் உரிமை மக்களுக்கே, கட்சிகளுக்கு அல்ல.

8 ஜனவரி, 2009

சொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் !

சொர்கம் நரகம் என்பதே கட்டுக்கதைகள். இவ்வுலகைவிட கொடிய நரகம் ஒன்று இருக்க முடியுமா ? கொத்தடிமைகள் வாழ்நாள் முழுவதும் ஒருவேலை சாப்பாட்டிற்காக சிறைபட்டுக் கிடக்கும் அவலெமெல்லாம் வேறெந்த நரகத்திலும் இல்லாத கொடுமை, 90 விழுக்காடு பெண்களுக்கு இந்த ஆண்கள் ஆளுமை உலகில் வாழ்க்கையே நரகம் தான். பச்சிளங்குழந்தை கூட பாலியல் துன்பறுத்தலில் கொடுமையை அனுபவிப்பதென்பது இந்த உலகில் தான். இதைவிட கொடுமையான நரகம் இருக்கவும் முடியுமா ? அதே போல் சுவர்க்கம் ? பிறரை அரவணைத்து அன்புடன் வாழும் அனைவருக்குமே இவ்வலகம் சுவர்கம் தான், கலப்படமற்ற தாயன்பு, நட்பு, நல்வாழ்க்கை துணை இவற்றை அடைந்தவர்களுக்கு அந்த சூழலில் கிடைக்கும் மகிழ்வையும் இன்பத்தையும் வேறெந்த உலகமும் கொண்டு வந்து தந்துவிட முடியாது. அதையும் ஒருவர் மகிழ்வோடு நினைக்காதபடி, இந்த உலகம் நிரந்தரமல்ல, மாயை என்றெல்லாம் சொல்லிவைத்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள, அல்லது மகிழ்ச்சிக்கு தடைபோட ஆன்மிகம் என்ற பெயரில் முயல்வர்.

சொர்க்கம் நரகம் பற்றி பல்வேறு மதங்களும் பேசுகின்றன. நல்லவர்களுக்கு சொர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் என்கிற கோட்பாடுகள் வைத்திருக்கின்றன. ஒரு சில மதங்கள் அதிலும் புரட்சியாக... மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். அதுவும் நிரந்தர சொர்க்கமாம். அப்படியென்றால் இறக்கும் தருவாயில் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் அந்த மதத்தை ஒப்புக் கொண்டுவிட்டால் அவனுக்கு சுவர்க்கம் கேரண்டி. அப்படித்தான் ஆட்டோ சங்கர் கூட கிறித்துவத்தை தழுவி சுவர்க்கம் சென்றிருக்கிறான்.

இந்துமதத்தில் வைணவம், சைவம் என இருபிரிவுகள் இருக்கிறது. இதில் சிவனை வழிபடுவோர் இறந்தால் அவர்களுடைய ஈமக்கிரியை அழைப்பிதழில் 'சிவ லோக' பதவி அடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும். அதே போன்று பெருமாளை வழிபடும் ஐயங்கார், நாயுடு, யாதவர், காட்டு நாயகர், ரெட்டியார் சமூகத்தினர் இறந்தால் வைகுண்ட பதவி பெற்றதாகச் சொல்லுவார்கள். சிவலோகத்தில், வைகுண்டத்தில் எல்லோருக்கும் பதவிதான் யாரும் சாதாரண பிரஜைகள் கிடையாது :)

இந்த மூடத்தனங்களை வலியுறுத்தவும் நம்ப வைக்கவும் ஆண்டு தோறும் வைகுண்டத்தில் ஒரு சுவர்க்கம் இருப்பதை நினைவு படுத்தும் வண்ணம் சுவர்க்க வாசல் திறப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் சுவர்க்க வாசல் எனச் சொல்லப்படுவது பெருமாள் கோவில்களில் நந்தவனத்தின் கதவுகள் தான். அதைத்தான் அன்று திறந்துவிடுவார்கள். சில பெருமாள் கோவில்களில் நந்தவனம் இல்லை என்றால் பின் வாசலை திறந்துவிடுவார்கள். நாகையில் கூட இரண்டு பெருமாள் கோவில்கள் உண்டு அதில் பெரிதாக இருப்பது சவுந்தராஜ பெருமாள் கோவில், அங்கு நந்தவனம் வழியாக சென்று வருவதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும், மற்றொரு சிறிய வரதராஜ பெருமாள் கோவிலில் இடதுபக்க சுற்றுவல (பிரகார) கதவை திறந்துவிடுவார்கள். அதில் நுழைந்து சென்றால் திறந்த் சாக்கடை தெருவரும், அன்றுமட்டும் முனிசிபல்காரர்களில் தயவால் குளோரின் பவுடர் தூவப்பட்டு இருக்கும். அந்த இடம் தான் சுவர்க்கம் :)

சுவர்க்கம் / நகரம் என்பது முழுக்க முழுக்க மத நம்பிக்கைதான், இந்தியா என்றால் அதில் வாழும் மக்கள் என இந்தியர்கள் தவிர்த்து எவரையும் நினைத்துப் பார்க்க முடியாதோ அது போல் தான் மதங்களால் காட்டப்படும் சுவர்க்கமும், வைணவ சொர்க்கத்தில் பட்டை அணிந்தவர், கிறித்துவர், இஸ்லாமிய, பவுத்தர் இருக்க மாட்டார், அதுபோலவே பிறரது சுவர்கத்திலும் அந்தந்த மதத்துக்காரர்களே இருப்பாதாகவே நம்புகிறார்கள். ஒரு உலகத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைக்களுக்கு இத்தனைவிதமான வான் சுவர்க்கமா ? இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கூட இதை தீவிரமாக நம்புபவர்களை என்னவென்று சொல்வது.

மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தும் சோம்பேறிகளின் சொர்க்கமாகவே இருக்கிறது. சோம்பேறிகள் தான் உழைப்பின்றி என்னோரமும் ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள். மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தின் மகிழ்ச்சியும் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. உழைப்பில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி அதுவும் நிரந்தரமாக ? அதற்கான வழியைத்தான் மதங்கள் கட்டுகின்றன (எழுத்துப்பிழையல்ல)

இன்னும் எழுதிக் கொண்டே செல்லலாம்... வேறொருபதிவில் பார்ப்போம்.

(தேவருலகம் என்றும் சொல்லப்படுகின்ற சுவர்க்கத்தில் பாலியல் நாட்டத்தில் இருக்கும் பூலோக கட்டுப்பாடுக்கள் எதுவும் செல்லாதாம் - இன்றைய டோண்டு இராகவன் கேள்வி பதிலில் இருந்தது, விருப்பமுள்ளவர்கள் யாரும் யாரோடும் சேரலாம்......ச்சேசேசேசேசேசேசேசேசேசேசேசே)

முகம் சுளிப்பாக இருந்தால் இந்த கட்டுரையை பரிந்துரைக்கிறேன் (இது பரிகாரம் இல்லை பரிதாபம்).

7 ஜனவரி, 2009

அபி அப்பாவை வெறுப்பேற்றுவது எப்படி ?

என் அண்ணன் அபி அப்பா

படத்தை பெரிதாக்கி கிளிக்கி பார்க்கவும் :)

5 ஜனவரி, 2009

நன்றி தமிழ்மணம், மற்றும் பல(ர்) , ஒரு மொக்கை, ஒரு சீரியஸ் !

எனது இப்பதிவில் இட்ட வேண்டுகோள் படி, தமிழ்மணத்தில் இருந்த தவறிய இணைப்பை, இரண்டே நாட்களில் சரி செய்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி. அப்பதிவில் சொல்லிய படி,

"வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்."

தமிழ்மணம் இரண்டு நாள் தாமதமாக சரிசெய்ததால், நானும் இரண்டு நாள் தாமதமாகவே பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு முதல் மொக்கை பதிவு...வழமை போல் ஆதரவு நல்கவேண்டும்.

*****
அடுத்து ஒரு சீரியஸ்,

தமிலீஷ் ஓனர் யாரு?

வால்பையன் எழுதிய இடுகையைப் படித்தவுடன்,

திரட்டிகள் எல்லாம் ஏன் வெளிப்படையாக செயல்படக் கூடாது ? அதில் என்ன தவறு ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

உதாரணம் தமிழ்மணம் நிர்வாகம் யாரால் நடத்தப்படுகிறது என்கிற விவரங்களை தமிழ்மணம் அறிவித்து இருக்கிறது, மற்ற திரட்டிகளும் தங்களைப் பற்றியும், அதை நடத்துபவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாமே.

வெறும் புரொபைல் மட்டுமே வைத்திருக்கும் அனானிகள் போலவே விவரங்கள் எதுவும் இல்லாமல் திரட்டும் திரட்டிகளை அனானி திரட்டிகள் என்று சொல்லலாமா ?

*****

* இது மட்டும் இல்லிங்க, தேன் கூடு சாகரன் மறையும் வரை அவர்தான் தேன் கூடு திரட்டியின் உரிமையாளர் என்றே பலருக்கும் தெரியாது, இதுபோல் திடிரென்று தெரியவரும் போது, 'ஐயையோ.....தெரியாமல் போச்சே...முன்பே சொல்லித் தொலைத்திருந்தால் என்ன ?' என்றே நினைக்க வைக்கும்,

* யார் கண்டது....மரணம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றதே... இவர் 'தமி....' திரட்டியின் உரிமையாளராக இருந்தவர்....... என்று பின்னால் ஒருவர் மறைந்த பிறகு புகழ்பாடுவதைவிட யார் யார் எதை நடத்துகிறார்கள் என்று முன்பே தெரிவது நல்லது. 'திரட்டியின் உரிமையாளர் இவர் என்று முதன்முதலும் கடைசியாகவும் திரட்டி நடத்துபவர் பற்றி மரண அறிவித்தலால் அறிமுகவாவது, திரட்டி நிர்வாகிகளுக்கு கிடைக்கும் நல் அங்கீகாரம், அறிமுகம் அல்ல. :( .

இறந்த பின்பு 'இவர் இந்த திரட்டியின் நிர்வாகியாக இருந்தவர்' என எப்படியும் விசயம் கசிந்துவிடும் என்பதை நினைவில் கொண்டால், கண்ணா மூச்சு ஆட்டம் ஆடுவதை தவிர்க்கலாம்.

* மேலும் திரட்டிகள் தீவிரவாதிகளின் தளம் அல்ல, வெளிப்படையாக யார் அதன் உரிமையாளர்கள், நோக்கம் என்ன என்பதை அறிவிக்கலாம்

* தமிழிஷ் தளத்தில் பார்பனர்களை விமர்சனம் செய்து எழுதினால் பதிவுகள் காணாமல் போய்விடுகிறதாம் (ஒரு பதிவில் படித்தேன்). அதற்கு தமிழிஷ் தளத்தில் இருந்து எதும் சிறப்பான விளக்கம் எதுவும் வரவில்லை. இதுபோன்ற குற்றச் சாட்டுகளை திரட்டிகள் எதிர்நோக்கும் போது இயல்பாகவே திராவிட திரட்டி, ஆரிய திரட்டி என்கிற தேவையற்ற முத்திரைகள் விழும். இதனைத் தவிர்க்க திரட்டி நிர்வாகம் வெளிப்படையாக நடப்பது நல்லது.

முன்பு இது போல் தான் தேன்கூடு பார்பன திரட்டி என்பதாகவும், தமிழ்மணம் திராவிட திரட்டி என்பதாகவும் வதந்திகள் வர.... இரு திரட்டிகளுமே அதனை மறுத்தன.

* தமிழ்மணத்தில் இன்னொரு நல்ல விசயமாக நான் கவனித்தது, பிற திரட்டிகளின் இணைப்பையும் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்கள், பிற திரட்டிகள் இவ்வாறு பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்.

* பதிவர்கள் திரட்டிகளால் புகழ்பெறுகிறார்கள் என்பது போலவே, பதிவர்கள் இல்லை என்றால் திரட்டிகள் காற்றுவாங்கும், பதிவர்களால் தான் திரட்டிகளும் புகழ்பெறுகின்றன. இணைந்து வெளிப்படையாக செயல்படுவது நன்று

* இந்த திரட்டிக்கு அந்த திரட்டி போட்டிங்கிற செய்திகளெல்லாம் கேட்கவே எரிச்சலாக இருக்கிறது, ஊடகத்துறையில் தான் இது போல் போட்டிகள் இருக்கும்

* திரட்டிகள் வெளிப்படையாக இருந்தால் தான் அதன் மீதான நம்பகத்தன்மையில் உறுதி ஏற்பட்டு, பலரால் அறியப்பட்டு புகழ்பெறும்

* திரட்டிகளின் பெருக்கம் தமிழ் பதிவுகள் சூழலில் நலமானதே என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பின்னூட்டத்தில் இது குறித்தான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

4 ஜனவரி, 2009

ஈழமண்ணில் காங்கிரஸ் நடத்தும் போர் - வீரப்பமொய்லி ஒப்புதல் !

பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: காங்.ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2009, 11:26 [IST]
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

****

ஈழவிடுதலைக்கு விடுதலைப் புலிகளையே நாங்கள் நம்புகிறோம் என்கிற ஈழத்தமிழ் மக்களின் பெருமித்த குரல் நன்கு தெரிந்தே, தமிழின இன ஒழிப்பை விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் நடத்தும் இலங்கை அரசுக்கு காங்கிரஸின் முழு ஆதரவு கொடுத்து இருப்பதாக காங்கிரசின் வீரப்ப மொய்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

காங்கிரசின் தமிழர் ஆதரவு நிலை(?) தெரிந்தது தான், நடைபெறும் போரில் கொல்லப்படுபவர்களும், அகதி ஆக்கப்படுபவர்களும் அப்பாவித் தமிழர்களே. இலங்கையில் தமிழன் ஒழிப்பிற்கு ஆதரவு கரம் கொடுப்பது காங்கிரஸ்.

போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்துவோம் என்று வாய்ச்சொல் பேசிய திமுக, பாமக கட்சியினர் (இறந்தவர்களை எண்ணி ?) மெளனம் மேற்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு முறையே தமிழின தலைவர், தமிழின காவலர் என்று பெயராம்.

ஈழத் தமிழர்களையெல்லாம் அழித்து இலங்கையில் (மயான) அமைதி ஏற்பட முயற்சிக்கும் காங்கிரஸுக்கும், அதற்கு ஆதரவான திமுக, பாமக கட்சிகளுக்கும் தான் உண்மையில் உலக சமாதான விரும்பிகள், தமிழர் நலன் விரும்பிகள்.

வாழ்க நிரந்தர தமிழின காதலர்கள் மற்றும் அவர்கள் தம் காங்கிரஸ் உறவும் !

3 ஜனவரி, 2009

சக்கர வியூகம் !

வன்னியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவை முன்பே ஒரு முறை கைப்பற்றப்பட்ட பகுதி தான் என்பதை தமிழ் சசி தெளிவாக எழுதி இருக்கிறார். எனவே பட்டாசுக்கு காசைக் கரியாக்கி, வீனாக்குபவர்களின் தற்காலிக மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை. இந்த சக்கரவியூகம் தலைப்பு வன்னி தொடர்புடையது அல்ல.

******

உலகெங்கிலும் இலக்கிய ஆர்வலர்கள் என்றால் அது மொழி ஆர்வலர்களாகவும், மொழி சார்ந்த துறையில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள், அதற்கு முற்றிலும் விதிவிலக்கு தமிழர்கள், தமிழர்களில் எந்த துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் இலக்கிய ஆர்வம் என்பது அவர்களது இரண்டாவது திறமையாக பலருக்கு இருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்கும் பொதுதான். தமிழர்கள் தவிர்த்து ஏனையோர் எழுதும் எழுத்துக்கள் அவர்கள் துறை சார்ந்ததாகவே இருக்கும், மிகச் சிலரே விதிவிலக்காக இருப்பர். ஆனால் தமிழர்களைப் பொருத்து இலக்கிய துறைக்கு பணியாற்றியவர்களில் பலர் குறித்துப் பார்த்தால் அவர்கள் அன்றாட வாழ்வில் வேறு ஒரு தொழிலில் கோலொச்சிக் கொண்டு இருப்பவர்களாகவே இருப்பர்.

மொழிப் பற்று, மொழி ஆர்வம் தமிழர்களை இலக்கியத்துக்குள்ளும் இழுத்து வந்திருக்கும். நம் வலைப்பதிவுகளிலேயே அதனைப் பார்க்கலாம். வெறும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கற்றோர்கள் பலர் தற்பொழுது மிகச் சிறந்த கட்டுரைகளை தமிழில் எழுதுகிறார்கள். எழுத்து தமிழே அறியாதவர்கள் கூட தன்முயற்சியால் கற்றுக் கொண்டு சிற்சில பிழை இருந்தாலும் சிறப்பாக எழுதுகின்றனர்.


இளைய பல்லவன் என்கிற புதிய பதிவர் 'காஞ்சித் தலைவன்' என்ற வலைப்பதிவு மூலம் ஆகஸ்டு 2008ல் இருந்து பதிகிறார். தனிப்பட்ட வகையில் எனக்கும் அவருக்கும் பழக்கம் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்திருக்கிறேன். அவரது பதிவு விபரப்படி (ப்ரொபைல்) அவர் பட்டயக் கணக்கராக (சார்டட் அக்வண்ட்) பணிபுரிகிறார். பூச்சு இல்லா எழுத்தில் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர் என்பது இவரது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்த்தின, நடப்பு மற்றும் சிறுகதைகளை எழுதுபவர் என்று அறிந்து கொண்டு இருந்தேன். அதன் பிறகு சக்கர வியூகம் என்னும் வரலாற்று தொடர் எழுதினார். வலைப்பதிவில் எழுதுபவர்கள் வரலாற்றுத் தொடரெல்லாம் எழுத முடியுமா ? அதற்கான உழைப்பை நினைத்தால் இதெல்லாம் கூறற்றது (சாத்தியமற்றது) என்றே நினைக்க வைத்தது. வரலாற்றுத் தொடர் என்ற பெயரில் 'இம்சை அரசன்' போன்று நகைச்சுவை எதாவது எழுதி இருப்பார் தொடர் கொஞ்ச நாள் தொடரட்டும் பிறகு படிக்கலாம் என்று இருந்தேன். ஏறத்தாழ 12 தொடர் பகுதிகள் முடிந்த நிலையில் நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வியப்பு... வியப்பு !

சக்கர வியூகம் - 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் முகலாயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கான சூழலைச் சொல்லி (மாலிக் கபூர் வருகை பற்றிய தகவல்) அதைத் தமிழக அரசர்கள் தடுக்க முனைவதாக கதை சென்று கொண்டு இருக்கிறது. வரலாற்றுக் கதைகளுக்கே உரித்தான தகவல்கள், வருணனை, காதல், வீரம், இராஜ தந்திரம், தேவையான புனைவு இவையெல்லாம் அழகுற அத்தியாயங்களில் அழகாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று கதையாசியர்களின் நூல்களில் இருக்கும் தெளிவான நடை இவரது கதையில் இருக்கிறது, அதுவும் இவரது முதல் வரலாற்றத் தொடர் இது என்னும் போது, சாண்டில்யன் போன்றோரை ஒப்பீடு செய்வது தவறென்றாலும் ஓப்பீடுகள் தான் இவரது எழுத்தின் தன்மையையே உணரவைக்கிறது என்ற வகையில், இவர் தொடக்க நிலை வரலாற்று கதையாசிரியர் என்றாலும் அவர்களைப் போல் புகழ் பெரும் தகுதியை இவரால் கண்டிப்பாக வளத்துக் கொள்ள முடியும்.

இவரது கதையின் ஒரு அத்யாயத்தில்

"அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன."

மதமும் அரசியலும் பின்னிப் பிணைந்து ஒன்றை ஒன்று தற்காத்துக் கொள்கின்றன, அல்லது அவற்றின் அழிவுக்கு அதுவே காரணம் என்பதை இவ்வளவு சுறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா ? என்று நினைத்து வியந்தேன்

மற்றொரு பகுதியில்,

"இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'

காலம் தாழ்த்துகள் மற்றும் எச்சரிக்கை உணர்வு இவற்றைத் தொடர்ப்பு படுத்தி மிக அழகாக எதையும் குறித்த நேரத்தில் செய்வதில் தான் வெற்றியின் முதல் அத்யாயம் எழுதப்படுவதாக உணர்த்தி இருக்கிறார்

சில குறைகளும் உள்ளன, தொடரில் பேச்சுரையில் (வசனம்) பல இடங்களில் வடமொழி தாக்கம் இருந்தாலும் அது இயல்பு என்று நினைக்கலாம். ஆனால் இந்தி ஆளுமையே இல்லாத காலங்களில் நடக்கும் கதையில் எழுதப்பட்ட பேச்சுரையில் 'ஜாக்கிரதை, அதிகம்' போன்ற இந்தி சொற்களை தவிர்த்திருக்கலாம்.

///அவரிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். //அதிக//

கதையில் ஒட்டவில்லை. ஜாக்கிரதை, அதிகம் இவற்றிற்கு மாற்றான சொல் எச்சரிக்கை மற்றும் மிகுதி ஆகிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம்

தமிழில் தற்பொழுது புழக்கத்தில் இல்லாத 'போந்த' என்ற சொல் பயன்படுத்தி இருக்கிறார்.

//இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர். //

வெளிப்போந்தனர் என்றார் வெளியேறினர், வெளியே வந்தனர் என்றே பொருள், போந்தனர் என்ற சொல் வருவது என்ற பொருளில் மறைமலையடிகளார் காலத்தில் கூட பயன்பட்டு வந்தது. அந்தச் சொல்லை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

தொடர் இன்னும் முடியவில்லை 12 பகுதிகள் வரை எழுதி இருக்கிறார். முழுவதுமாக முடித்து நூலாக வெளியிடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அப்படி நூலாகவெளி வரும் போது வலைப்பதிவாளர் ஒருவர் எழுதிய முதல் வரலாற்று நாவலாக அது அமையும்.

இளைய பல்லவன் மென்மேலும் பல இலக்கியங்கள் படைத்துப் பலரால் பாராட்டப் படவேண்டும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வலைப் பூங்காவில் பல தரமான விதைகள் ஊன்றப்பட்டு, செழித்து வளர நல்லச் சூழலுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன. அத்தகைய விதைகளாக ஊன்றப்பட்டு துளிர்விடுபவர்களில் ஒருவராக இளைய பல்லவன் இருக்கின்றார்.

இந்த ஆண்டின் முதல் பதிவு சக பதிவர் ஒருவரை பாராட்டித் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்