பின்பற்றுபவர்கள்

வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட், 2010

பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !

முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.




*****

ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.

இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.

என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.

பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.

17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.

19 டிசம்பர், 2008

திருமணம் ஆன ஆண்களுக்கு ... !

புதுசா நிறைய பேர் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.

திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்தாலும்...ஒரு வித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்சலும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரியாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.

பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள். பெண்கள் எல்லாவற்றிலும் குறை வரக் கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார்கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நினைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண்கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்றுகூட நினைக்கவே மாட்டார்கள். தன்னுடைய குடும்பம் என்கிற நினைப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன் மீது தன்னைவிட மிகுதியாக அன்புகாட்டுவதை விரும்புவது இல்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும் போது...பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனேயே கணவன் - மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாகச் சென்றால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதியாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனைவியா எது பெரியது என்கிற சீர்தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒதுக்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...குறிப்பாக மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.

கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்கதாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்கு தான் கேட்காமலேயே கணவன் பரிசுகளை வாங்கித்தரவேண்டும் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்தந்தால் அன்றே அம்மாவீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகிழ்வார்கள். பெண்கள் தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தனக்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்றா அல்லது பொறாமை படவேண்டும் என்று சொல்கிறார்களா ? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தின் தன்மையைப் பொருத்தது. சிலரிடம் பெருமையாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமை படுவார்கள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.

எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மன நிலையும் ஒன்று போல் இருப்பதில்லை...அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்களின் பொதுவான மனநிலை...பிறரைவிட கணவன் தன்னிடம் மட்டுமே மிகுதியாக அன்பு செலுத்த வேண்டும், தனது செயல்களை பாரட்டவேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள். ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்