பின்பற்றுபவர்கள்

பாலபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 நவம்பர், 2008

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்

திருநங்கைகள் பற்றி பல செய்தி கட்டுரைகள், கதைகள் படித்து இருந்தாலும் பதிவர் நண்பரின் பார்வையில் எழுதப்பட்ட அவன் - அது = அவள் எப்படி இருக்கும் ஆவல் பொங்கும் நீண்ட நாள் விருப்பாக இருந்தது, அன்மையில் தம்பி ஜெகதீசன் சென்னை சென்று திரும்பியதால் நிறைவேறியது, மற்றொரு தம்பி பால்ராஜின் ஏற்பாட்டில் ஜெகதீசன் நண்பர் எஸ்.பாலபாரதியிடம் இருந்து 20 நூல்களை சிங்கைப் பதிவர்களுக்காக பெற்று வந்தார்.

புதினமாக எழுதப்பட்ட திருநங்கைகள் பற்றிய தொகுப்பே அந்த நாவல். 3 மணி நேர தொடர் வண்டி பயணத்தின் போதே படித்து முடித்துவிட்டேன். திருநங்கைகளின் தோற்றமும் வாழ்க்கை முறைகளை பற்றியும், கோபி என்ற கோமதி(ஆகிய) என்கிற திருநங்கையை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார். திருநங்கைகள் பற்றி, இந்தியா தழுவிய ஒரு நாவல் எழுதவேண்டுமென்றால் தமிழ் தவிர்த்து பிற மொழியும் அறிந்திருப்பதன் தேவை கதையின் ஓட்டத்தில் உணரப்படுகிறது. திருநங்கைகள் அனைவருமே ஹிந்தி கலந்து பேசுவதால், அவர்கள் பேசுவது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஹிந்தி வசனங்கள் வந்திருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆண் குழந்தையாக வளர்க்கப்படும் ஒரு குழந்தை பருவ வயதில் எப்படி திருநங்கையாக மாறுகிறது என்பதையும், அதனால் அவர்கள் அந்த வயதில் இல்லத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகுவதும், அதிலிருந்து தப்பித்து ஒரு பெண்ணாக வாழவிரும்பி வீட்டில் இருந்து வெளியேறி...அவர்கள் தங்களைப் போன்ற திருநங்கைகளை சேர்க்கிறார்கள், அதன் பிறகு ஆண் உறுப்பை அகற்றிக் கொண்டு முழுப்பெண்ணாக தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார். திருநங்கைகளுக்கு இடையே புழங்கும் சொற்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கதை ஓட்டத்துடன் அழகாக சேர்த்து இருக்கிறார்.


திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.

கூவாகத்தில் ஆரம்பிக்கும் கதை என்றாலும் கூவாக நிகழ்வுகளை பலரும் எழுதிவிட்டதால் அதை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறார். மற்றபடி எல்லா திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பொய்யா மெய்யா என்பது தெரியாது, திக்கற்ற திருநங்கையாக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவர்களைப் போல் உள்ளவர்களே ஆறுதலாகவும், உறவாகவும் இருக்கிறார்கள் என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார். கதையில் வரும் அனைத்து திருநங்கைகளும் ஒருவரை ஒருவர் பெண் பால் உறவு முறையில் அழைத்துக் கொள்வதும், பெண்ணாகவே உணர்ந்து அவர்களுக்குள் 'டி' போட்டு பேசுவதை பிசிறில்லாமல் எழுதி இருக்கிறார். ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து வேளைகளில் முதலில் உதவுபவர்களாக திருநங்கைகளைச் சொல்லி இருப்பது அவர்களை பெருமை படுத்தும் எழுத்து. அதற்காக (மும்பையில்) தொடர் வெடிகுண்டு விபத்துகளை செல்லி அதனை பதிய வைத்திருக்கிறார்.

திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வாழ்க்கை எத்தகையது என்பது கதையின் முடிவில் உணரப்படுகிறது.



*****

இந்த கதையில் சில சொதப்பல்களும் இருக்கிறது, பத்திரிக்கை செய்தியாளராக வரும் அன்பு என்பவர் கதையின் நாயகியான கோமதியை விரும்பும் முன் ஒரு முற்போக்காளராகச் அவரை கதைக்குள் கொண்டு வரும் போது சொல்லி இருப்பார், அன்பு தனது உதவியாளரிடம் திருநங்கை பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவார், அதே அன்பு கோமதியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் தொடங்குவார், தனக்கு ஓரினசேர்க்கை பழக்கம்
இருப்பதையெல்லாம் கோமதியிடம் சொல்லிவிட்டு தான் அவளை காதலிப்பார், ஆனால் முதல் உறவுக்காக இருவரும் கூடும் போது, கோமதி நிர்வாணம் செய்யாமல் (ஆண்குறி அகற்றிக் கொள்ளாமல்) இருப்பதை அறிந்து அதையே, காரணமாகச் சொல்லி, விலகி அவளுடன் அப்போது கூடவில்லை என்பதாக சொல்லி இருவரும் தற்காலிகமாக பிரிவது பொருத்தமாக இல்லை, அந்த ஒரே காரணத்துக்காக கோமதி நிர்வாணத்துக்கு தயாராகுவது போல் சொல்லப்படுகிறது. ஓரின புணர்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.

ஆரம்பம் முதலே கோமதி வளர்ந்த குடும்ப சூழலை வைத்து அவள் கடை கேட்கவே (பிச்சை எடுக்க) தயங்குவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் படிப்பறிவு இல்லாத ஒரு சாராசரி திருநங்கை, தன்னை விரும்பும் ஒரு ஆணை சேர்த்துக் கொண்டு திருப்தி அடைவது போலவே கோமதியும் செய்துவிடுகிறாள். ஆரம்பத்தில் அழகில் மயங்கி, பெண்ணாகவே ஏற்றுக் கொண்ட முற்போக்கு சிந்தனையுடைய அன்பு என்பவன், அவளை சேர்ந்த ஆறுமாதத்தில், அவளை மீண்டும் கடை கேட்க அனுப்புவதாக சொல்வது பொருத்தமாக இல்லை. அவன் திருநங்கையுடன் வெறும் உடல் இன்பத்தைத்தான் நாடுகிறான், குடிகாரனாக முடிவில் புரியவைக்கப் போவதாக இருந்தால் அவனை ஏன் திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாக அறிமுக காட்சிகளில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் தெரியவில்லை. படிப்பு ஆர்வமும், நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவ்வப்போது பேசும் கோமதி கடைசில் பிற திருநங்கைகள் போலவே ஒருவனுக்கு மனைவியாக அடி உதைகளை வாங்கிக் கொண்டு வாழ்வதாகவும், கொடுமை மிகுதியாகும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொல்லி கதையை முடித்து இருப்பது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு அதனை லட்சியமாகக் கொண்டு முன்னேறிய பல திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படி சொல்லிவிட்டால் 'வாடமல்லி' கதை சாயல் வந்துவிடும் என்று நினைத்திருப்பாரோ ?

கதையைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக திருநங்கைகளைப் பற்றிய நல்ல எண்ணம் வரும். ஆனால் ஒரு திருநங்கை அந்த கதையைப் படித்தால் நம் தலையெழுத்து இப்படித்தானோ என்று நினைக்க வைத்துவிடும், அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க லிவிங் ஸ்மைல், ரோஸ் மற்றும் நர்தகி நடராஜ் போன்ற பாத்திரம் ஒன்றை கதையின் இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாம். இவைகளே எனக்கு கதையின் குறையாக தெரிகிறது.


இவைகளைத் தவிர்த்து கதையின் ஓட்டத்திலும், காட்சிகளை கண் முன் விரிப்பதற்கான விவரிப்புகளும் படிக்கும் போது ஒரு கதையாசிரியரின் முதல் நாவல் போன்று சிறிதும் தெரியவில்லை. அந்தவகையில் எஸ்.பா சிறந்த எழுத்தாளராக வியப்பூட்டுகிறார். இந்த கட்டுரை இந்த நூலின் மீதான என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே, இதனை பொதுக்கருத்தாக கொள்ளவேண்டாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்