பின்பற்றுபவர்கள்

30 டிசம்பர், 2011

நாகை புயல் பற்றிய அனுபவம் !

1952, 1977 நாகை வாசிகளால் மறக்க முடியாத இரு ஆண்டுகள், ஆம் இந்த இரு ஆண்டுகளில் நாகையை பலத்த சூறைகாற்றுடன் புயல்கள் தாக்கின. இரண்டு முறை தான் புயல் நாகையை தாக்கியுள்ளது என்றாலும் நாகையும் புயலும் தமிழக மக்களால் ஒன்றை ஒன்று நினைவு படுத்துகையில் தொடர்பாக வரும் பெயர்கள், 'நாகை என்றாலே புயல் அடிக்கும் ஊர்' என்ற எண்ணத்தை உறுவாக்கியது. 1952 ஆம் ஆண்டு புயலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்போது பிறந்திருக்கவில்லை. அம்மா அப்பாதான் அதுபற்றிக் கூறி இருக்கிறார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு புயலை நேரில் உணர்ந்திருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் அது என்று நினைக்கிறேன்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், நாகையில் தீபாவளிக்கு பிந்தைய ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்புகள் எப்போதுமே இருக்கும், நாகையை அடுத்து வேதாரண்யம் கோடியக்கரையில் நில அமைப்பும், கடல் கடற்கரை அமைப்புகளும் புவியல் ரீதியாக மாறுவதால் புயல் பெரும்பாலும் கரையைக் கடக்க அந்த இடத்தையே தேர்ந்தெடுக்கிறது, அது போல் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாக அந்தப்பகுதி கடலின் கிழக்கை தேர்ந்தெடுக்கிறது என்று ஊகிக்கிறேன்.

1977 க்கு முன் பெரியவர்கள் புயல் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அதை 1977 ல் நேரடியாக அனுபவிக்கும் போது தான் அவற்றின் தாக்கம் உணர்ந்தேன். பொதுவாகவே இந்திய புயல்கள் மழையோடு தான் வருகின்றன, புயல்வரும் முன்பே அதன் காற்றழுத்த மண்டலங்கள் மேகங்களை கூட்டி இருக்கும், மழை பெய்து கொண்டிருக்கும் போது புயலும் கரை கடந்துவிடும். பலத்த காற்றுடன் கூடிய மழையாகத்தாக பிற இடங்களில் நடக்கும் நிகழ்வு புயல்காற்றுடன் மழையாக புயல் அடிக்கும் இடங்களில் இருக்கும்.

நான் அறிந்த 1977 புயல் சரியாக பின்னிரவில் துவங்கி விடியற்காலை 5.30 மணிக்கு ஓய்ந்தது, அப்போது எங்கள் தெருவில் எங்கள் வீடு தவிர்த்து 10 குடும்பங்கள் உண்டு, அதில் எங்கள் வீடு தான் சிமென்டினால் கட்டப்பட்ட வீடு, நள்ளிரவுக்கு புயல் துவங்கியதுமே சன்னல் கதவுகள் அனைத்தையும் பெற்றோர்கள் சாத்திவிட்டு எங்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்தார்கள், வீடு தலையில் இடிந்துவிழுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தாலும் எங்களிடம் அதையெல்லாம் சொல்லவில்லை, திடிரென்று தெருவிளக்குகள், வீட்டில் உள்ள மின்சாரமும் தடைபட்டது, சிம்னி விளக்கை கொளுத்தி வைத்தால் அதுவும் வெளியே அடிக்கும் காற்று சந்து பொந்துகளில் புறப்பட்டு வந்து விளக்குகளை அனைத்தது. ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் மின்னல் வெளியே பெரும்காற்று வீசுவதில் அசையும் மரங்களை படம்பிடித்துக் காட்டின.

தெருவில் வசித்தவர்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு வீடே சரிய ஒவ்வொரு குடும்பமாக எங்கள் வீட்டை நோக்கி தடுமாறி மிகுந்த போராட்டங்களுடன் காற்றை எதிர்த்து எங்கள் வீட்டுக்குள் வந்தனர், எங்கள் பெற்றோர்கள் அனைவரையும் உள்ளே வரவழைத்தனர், அன்றைக்கு புயலுக்கு ஒதுங்க எங்கள் வீட்டிற்கு வந்தது சுமார் 50 பேர்களாகவது இருக்கும், அவ்வளவு பேரைத் தாங்கும் அளவுக்கு வீடு இல்லாவிட்டாலும், வேற வழியே இல்லை என்ற நிலையில் உட்காரவாவது பாதுகாப்பான இடம் கிடைக்கட்டம் என்று வெளியே சென்று என் அப்பா வாசலுக்கு வருபவர்களை உள்ளே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். வீடு இழந்தவர்கள் எல்லாம் போச்சே என்று அழுது கொண்டிருந்தனர், எங்கள் வீட்டிற்குள் பெரியோர்களையும், சிறுவர்களையும் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர், மொத்தமே 200 மீட்டர் தொலைவிற்குள் இருந்த குடும்பங்கள் தான் என்றாலும் 160 கிமி வேகத்தில் வீசும் காற்று அடுத்த அடி வைக்கவிடாது தள்ளிவிடும் ஆற்றல் பெற்றது கூடவே மழை, கடும் இருட்டு, கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாலே மரங்களில் இருந்து காற்றினால் பிய்த்து எரியப்படும் இலைகள் கண்ணை பழுதாக்கும் அளவுக்கு வந்து விழும், தெருவில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வேறு இடத்தை அடைய முடியும், பக்கத்தில் பள்ளிக்கூடம் இருந்தாலும் பூட்டப்பட்டு இருக்கும் என்பதால் தெருவில் இருந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் நாடினர்.

புயல் முடிந்த காலை வெளியே வந்து பார்த்தால் எந்த ஒரு மின் விளக்கு மரமும் நின்ற இடத்தில் இல்லை, ஒன்று படுத்து கிடந்தது, அல்லது வளைந்து பக்கத்தில் எதன் மீதாவது சாய்ந்து கிடந்தது, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே இருந்த மிகப் பெரிய ஆரசமரம் சாய்ந்து கிடந்தது, சிறுவயதில் பொழுது போக்காக அதனடியில் கூடிக் களித்திருந்தோம், மாங்காய் சீசன் வேறு என்பதால்மா மரங்கள் இருந்த இடங்களில் தரையெங்கும் மாங்காய்கள், அவற்றை மூடி சாய்ந்து கிடந்த மாமரங்கள், பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்த தென்னைமரங்களில் பலவற்றை காணமுடியவில்லை, எல்லாம் சாய்ந்துவிட்டது, ஊரில் 60 விழுக்காட்டு மரங்கள் அனைத்துமே சாய்ந்துவிட்டன, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது, பறவைகள், கோழிகள் செத்துக் கிடந்தன, கால்நடைகள் (வயிறு உப்ப) செத்துக் கிடந்தன, சுவர் இடிந்துவிழுந்து, மரம் விழுந்து சிலர் செத்துப் போய் இருந்தார்கள், ஊரே பதட்டத்துடன், பயத்துடன் இருந்தது.புயல் முடிந்தாலும் அவர்கள் எங்கு செல்வார்கள், ஏற்கனவே வீடுகள் இருந்த களைக்கப்பட்டு குட்டிச் சுவர் போன்று நின்றன, அவர்களுக்கும் உடனடி போக்கிடம் இல்லை, புயல் முடிந்த நாள் முதல் அடுத்த பதினைந்து நாளைக்கு சாப்பாடு, சமையல் எல்லாம் பொதுவாகவே நடந்தது. சிலர் பள்ளுக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்குச் சென்று தங்கினர்

பள்ளிகளெல்லாம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டு இருந்தது, பல்வேறு நல அமைப்புகள் மற்றும் அரசு உதவிகளாக உணவுப் பொருள்கள் துணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தன. இப்போது நினைத்தாலும் புயலுக்கு முன் இருந்த மரங்கள், அருகில் இருந்த (பழைய) கூரை வீடுகள் நிழலாக தெரியத்தான் செய்கிறது. இன்னும் கூட தெருவில் வசித்தவர்களில் மீதம் இருப்போர் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் வந்ததை நினைவு வைத்திருக்கின்றனர், அப்போது சிறியவர்களாக இருந்தவர்களுக்கு தற்போது 35 - 40 வயதாகிவிட்டது, இளைஞர்களாக இருந்தவர்கள் முதுமை அடைந்துவிட்டார்கள், முதியவர்களாக இருந்தவர்கள் ம்ரணித்துவிட்டார்கள்

28 டிசம்பர், 2011

சீன மொழியை கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி !

தன்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் இலக்கை எளிதாக அடைய முடியாவிட்டால், அதே கடினம் தான் அதே இலக்கை நோக்கியவர்களுக்கும் இருக்கும் என்று உணர்ந்து தான் அடைந்த இலக்கையே தொழிலாக மாற்றிக் கொள்பவர்கள் அத்தொழிலின் முன்னோடியாக மட்டும் இல்லாமல் அத்தொழிலில் புகழ்பெற்றவர்களாகவும் ஆகின்றனர். சென்னையில் வாடகை வீடு பிடிக்க நாயாக அலைகிறீர்கள் கிட்டதட்ட ஒரு மாத அலைச்சலுக்கு பிறகே உங்களுக்கு பிடித்த வீடு கிடைக்கிறது, இவற்றில் நிறைவு பெற்று அந்த வீட்டில் வாழ்க்கையை துவங்குபவர் சாதாரண மனிதர் ஆகிறார், ஆனால் அதே அலைச்சல் பிறருக்கும் இருக்கலாம், வீடு வாடகைக்கு எடுப்பது குதிரை கொம்பாக இருக்கிறது, வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் தொழிலுக்கு எப்போதும் தேவை இருக்கும், நாம் பார்க்கும் வேலையை விட இதில் கூடுதலான வருமானம் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து புதிய தொழிலுக்கு மாறுகிறவன் தன் வாழ்க்கையைப் பாதையை மாற்றி வென்றவர்கள் வரிசைக்கு வருகிறான், இதை வெறும் உதாரணத்திற்குத் தான் சொல்கிறேன்.

*****

நான் சீன மொழியை பயிற்சி வகுப்புக்குச் செல்லாமல் நானே படிக்க முடிவெடுத்து இணையத்தை தோண்டிய போது கண்ணில் பட்டவை பல இணைய தளங்கள், அவற்றில் http://popupchinese.com/

என்ற தளத்தில் தான் முதன் முறை நுழைந்தேன், அதில் இருக்கும் சீனப்பாடங்களை விட பாடம் சொல்லிக் கொடுக்கப் பயன்படும் ஆங்கிலம் வெகுவாகவே ஈர்த்தது. இன்றைய தேதிக்கு Mp3 வடிவில் சீனம் சொல்லிக் கொடுக்க 100க் கணக்கான இணையத் தளங்கள் உள்ளன, நம்புங்கள் அவற்றின் 90 விழுக்காட்டை நடத்துபவர்கள் சீனர் அல்லாத ஐரோப்பியர்கள், ஆம் ஐரோப்பியர்களே பிற மொழி ஆர்வமிக்கவர்களாகவும் அவற்றை தொழிலாக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், இங்கிலாந்தின் கல்வி நிறுவனங்கள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. சீனாவின் பல்வேறு நகரங்களில் அலுவலங்களை அமைத்து அங்கிருந்து இணையம் மற்றும் போட் கேஸ்ட்ஸ் (POD Casts) வழியாக சீனப் பாடங்களை நடத்தும் தொழிலை பல்வேறு ஐரோப்பிய நாட்டினர் செய்துவருகின்றனர். மேலே குறிப்பிட்ட இணையத் தளத்தின் இலவச பாடங்களை தரவிரக்கிக் கேட்டுக் கொண்டு இருந்தேன், ஒரு பாடத்தில் 'எங்கள் பாடத்தில் சில வற்றில் பிழை இருக்கும், அவை தவறான பொருளை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும், எங்கேயாவது அவமானப்படுவீர்கள், பணம் கட்டிப் படிப்பவர்களுக்கே நாங்கள் சரியான பாடங்களை அளிக்கிறோம்' என்ற ஒரு (இலவச) பாடத்தின் துவக்கத்தில் சொன்னார்கள், இது என்னடா வம்பாப் போச்சு, இலவசத்திற்கு வாய்ப்பே இல்லையா ? ஒரு வேளை நான் பணம் கொடுத்து பாடங்களைப் பெற நினைத்தாலும் இவர்களின் சொல்லிக் கொடுக்கும் தரம் ? பற்றி பணத்தைக் கொடுத்துவிட்டு யோசிக்க முடியாது என்ற சிந்தனைகளில் சில மாதங்கள் அந்தப் பக்கமே போகவில்லை.

சென்ற மாதத்தில் ஒரு நாள் ஐபோனை நோண்டிக் கொண்டிருக்கும் போது POD Casts என்ற வசதியும், அவற்றில் இலவசமாக வருபவற்றிற்கு பணம் கொடுக்கத் தேவை இல்லை என்கிற விவரமும் தெரிந்து சீன மொழிக் குறித்த பாடங்களைத் தேடினேன். 'மெல்னிக்ஸ்' என்கிற ஐரிஸ்காரர் 'Mandarin Chinese என்கிற தன்னுடையை melnyks.com - ன் இலவசங்களைக் கொடுத்து இருந்தார். கிட்டதட்ட 10 நிமிட அளவு கொண்ட 100 பாடங்கள்,. கேட்க நன்றாக இருந்தது ஆனால் மனதில் பதியும் வண்ணம் மொழிப் பெயர்ப்பு இல்லை, நேரடி மொழிப் பெயர்ப்பாக இல்லாமல் விளக்கம் என்ற அளவில் தான் ஆங்கிலம் பயன்படுத்தி பாடங்கள் எடுத்து இருந்தார். நமக்கு ஒரு வரியை எடுத்தால் அதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லி அதன் பின் அந்த வரி என்ன சொல்லுகிறது என்றுச் சொன்னால் தான் சொல்லின் பொருள் புரிந்து அடுத்து அந்த சொல் வரும் மற்ற வரிகளின் பொருள்களை நாம் ஊகப்படுத்திக் கொண்டு மொழித்திறனை வளர்த்துக் கொள்ள முடியும், மெல்னிக்ஸின் பாடம் வெறும் மொழிப்பெயர்பாகவே இருந்ததால் அதில் வரும் 50 விழுக்காட்டுச் சொற்களுக்கு மேல் நேரடிப் பொருளை புரிந்து கொள்ளமுடியவில்லை.

இதற்கிடையே மற்றொரு http://chinesepod.com/ தளத்தில் ஐபாட் இலவசங்களை தரவிறக்கிக் கேட்டேன், அவை மாறுபட்டு இருந்தாலும் பாடம் தொடர்பான பேச்சுகளில் ஆங்கிலம் மிகுதியாகவே இருந்தது. கடைசியாக http://www.chineselearnonline.com/ என்ற தளத்தின் இலவசங்களை கேட்கத்துவங்கினேன், தெளிவான ஆண் குரலில் எளிமையான ஆங்கிலம் கூடவே தைவானைச் சேர்ந்தவர்களை வைத்து சீன வாக்கியங்களை பேசச் செய்து கொடுக்கப்படும் விளக்கம், குறிப்பாக சொல்லுக்கு சொல், பின்னர் வரிக்கு நேரடி பொருள், பின்னர் வரி என்னச் சொல்கிறது என்பதற்கான ஆங்கில புரிதல் கேட்கவும் நன்றாகவே மனதில் பதிந்தது, ஒரு நாளைக்கு 10 நிமிடப் பாடங்கள் 10 ஐக் கூடத் தொடர்ச்சியாகக் கேட்க முடியும், காரணம் அடுத்தப்பாடத்தின் தொடர்ச்சி முந்தைய பாடங்களில் கற்றுக் கொண்ட சொற்களுடன் புதிய சொற்களைச் சேர்த்து (Progressive Learning) தொடர் பாடங்களாக இருந்தது.

ஏற்கனவே ஆதம் தன்னைப் பற்றி தாம் கன்னடியன் (கனடா நாட்டைச் சேர்ந்தவன்) என்று அறிமுகம் கொடுத்து இருந்தார் தன்னைப்பற்றி, 'ஐ அம் ஆதம், யு ஆர் லிசனிங்க் டு புரொகிரெசிவ் கோர்ஸ் ஆன் மேண்டரின் ஆன்லைன்' என்று துவங்கும் Host ஆதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த தளத்திற்குச் சென்றேன். பார்க்க கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவராகத் தெரிந்தார், பிறகு வேறு தளங்களில் தேடிப்பார்க்கும் போது தான் அவருடைய உண்மையான பெயர் 'ஆதர்ஷ் மேனன்' தாய் தந்தையர் இடம் பெயர கனடா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்று தெரிந்தது.

ஆதர்ஷ் மேனன்' ஆதம் என்று பெயர் மாற்றிக் கொள்ள சீனர்களுக்கு எளிமையான பெயரே நினைவில் நிற்கும் என்பதால் மற்றும் ஆங்கிலத்தில் வரும் 'Adarsh Menon) என்பதன் சுறுக்கம் என்று நினைக்கிறேன். ஆதம் சீன மொழிச் சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தது எப்படி ?

கிட்டதட்ட 2003 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக தைவானுக்குள் அடியெடுத்து வைத்தாராம், பிறகு ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப ஒரே பாடத்தை எடுப்பது சலிக்கவே சீனமொழியைக் கற்றுக் கொள்ள முனைந்து ஏறத்தாள மூன்று ஆண்டுகள் பல்வேறு சேகரிப்புகளுடன் சீன மொழியை கற்று தேர்ந்து 2006ல் முதன் முறையாக POD Casts வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் தொழிலை செய்யத் துவங்கினாராம். ஒரு பேட்டியின் போது இவற்றை தெளிவாகச் சொல்லி இருக்கிறார், 'நான் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட சிரமங்கள் என்னை இந்தத் தொழிலுக்குள் தள்ளியது, என்னைப் போல் மொழி கற்றுக் கொள்ளவருபவர்களின் சிரமங்கள் உணர்ந்தே எனது சீன பாடங்களை அதற்கேற்றவாறு அமைத்துள்ளேன் அதாவது பிற மொழிக்காரர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்ற தேவை எனக்கு முழுமையாகத் தெரிந்தது'

கிட்டதட்ட ஆறு ஆண்டுகளாக சீன மொழிப்பாடம் எடுத்துவரும் ஆதர்ஷ் மேனனின் ஆங்கிலப் பேச்சில் மலையாள வாடை மருந்துக்கு கூட இல்லை. தற்போது தைவான் பல்கலைகழங்கள் சிலவற்றிற்கு இணையவழி சீனப்பாடங்களை ஆயத்தம் செய்து மொத்தமாக விற்று வருகிறாராம். கூடவே தைவானின் சீன உணவு வகைகள் மற்றும் அவை சிறப்பாக தயாரித்து கிடைக்கும் சுவையான உணவங்கள் பற்றிய பட்டியலுடன் கூடை ஆப்பிள் மென் பொருள் மற்றும் இணைய தளம் (Foodjing.com) ஆகியவற்றால் வருமானம் பார்த்துவருகிறார்.

சீன மொழிக் கற்றுக் கொள்ள இவர் 10 நிமிட அளவில் செய்த 430 பாடங்களை அமைத்துள்ளார், முதல் 40 பாடம் ஆங்கிலத்திலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீன மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டு, 120 பாடங்களுக்கு பிறகானவை சீன மொழிகளினாலேயே சொல்லிக் கொடுக்கப்படுகிறது, அதாவது 120 பாடங்களை நாம் கடக்கும் போது ஓரளவு சீன மொழியை புரிந்து கொண்டும் அதன் பின் வரும் பாட விளக்கங்களுக்கான சீன சொற்களையும் கற்றுக் கொண்டு செல்ல முடியும். நான் 120 பாடங்கள் வரையில் தான் படித்துள்ளேன், முற்றிலும் படிக்கும் போது பெரிதாக விவாதம் என்ற அளவுக்கு பேச முடியாவிட்டாலும், எதிரே இருப்பவர் சீனம் பேசினால் புரிந்து கொள்ளமுடியும் என்றே நினைக்கிறேன்.

******David Siteman Garland என்ற ஒருவர் உழைப்பால் முன்னேறியவர்களை பேட்டி எடுத்து வலையேற்றுவது தான் இவர் வேலை, இதற்காக David Siteman Garland வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார், உழைப்பால் உயரங்களை எட்டியவர்களின் 40 நிமிடங்கள் வீடியோ பேட்டிகளை எடுத்து இவர் தளத்தில் ஏற்றுகிறார். இவ்வாறு செய்வதன் மூலமே இவர் புகழ் அடைந்துள்ளார், இவரது தளத்தின் வழியாக ஒருவர் அறியப்படுவது ஒரு அங்கீகாரம் / பெருமை என்ற அளவில் உள்ளது. David Siteman Garland வலைத்தளத்தில் 'ஆதர்ஷ் மேனனின்' பேட்டி கிழே உள்ளது. ஆங்கிலேயர்கள் 'மேனன்' என்பதை மேனியன் என்று ஒலிக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்த நகைச் சுவை.

இந்த இடுகை நான் நேற்று எழுதிய

நான் அறிந்த வகையில் சீன மொழி - யின் தொடர்ச்சி

27 டிசம்பர், 2011

நான் அறிந்த வகையில் சீன மொழி !

சிங்கப்பூரில் பதிமூன்று ஆண்டுகளாக வசிக்கிறேன், இங்கே பெரும்பான்மை சீன இனம் தான், நாட்டின் 70 விழுக்காட்டினர் சீனர்கள், அவர்கள் பேசுவது 'பு-தொங்-க்வா' அல்லது மாண்டரின் எனப்படும் சீன மொழி பொதுவானது என்றாலும் அவர்களுக்குள்ளான வட்டார வழக்குகள் எனப்படும் 'ஹொக்கியன்' மற்றும் 'கான்டனீஸ்' ஆகியவையும் பேசப்படும், ஆனால் அரசு அல்லது பொதுப்பயன்பட்டிற்கும், செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் 'மாண்டரின்' மொழியில் தான் நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் சீனம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை 10 விழுக்காடு கூட இல்லை, இங்கு குறைந்த எளிதான சொற்களுடன் கூடிய வட்டார ஆங்கிலம் பேசப்பட்டு அதுவே அனைவருக்கும் பொது மொழி ஆகிப்போனதால் மேற்கொண்டு சீனம் படிக்க தேவை என்பது சீனர்கள் தொடர்பில் விற்பனைகள் நடத்தினால் மட்டுமே தேவை என்றாகிறது, வியாபார நிறுவனங்களில் விற்பனைப் பிரிவில் இருப்போருக்கு சீனமொழி தெரிந்திருப்பது தேவையான ஒன்று, காரணம் சிங்கப்பூருக்கு சீனச் சுற்றுலாவாசிகளுடனும், சீன நாட்டினருடன் பேச வேண்டிய தேவையும் இருப்பதால் அவற்றைக் கற்றுக் கொண்டவர்களுக்கு அவ்விதத் தொழில்களில் வாய்ப்புக் கிடைக்கும். என் தொழில் சார்ந்தத் தேவையில் சீனமொழி சார்ப்பு இல்லாததால் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் / தூண்டுதல் ஏற்படவில்லை

இந்த ஆண்டு துவக்கத்திலும் நடுவிலும் இருமுறை சீனா சென்ற பொழுது தான், மொழி என்பது ஒரு கண்ணாடித் தடுப்பு அந்தத் தடுப்பை பார்வை ஊடுறுவிச் செல்லும் ஆனால் காது ஊடுறுவாது என்று தெரிந்தது. அதாவது நம்மைச் சுற்றிப் பேசுபவர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்கள் பேசுவது என்ன என்று நமக்கு எதுவும் புரியாது. நமக்கு புரியாத மொழிப் பேசும் ஊரில் நாம் பேச வாய் இருந்தும் ஊமை தான். அடுத்து வேலைத் தொடர்பில் சீனாவுக்கு செல்வேனோ இல்லையோ கண்டிப்பாக இல்லத்தினருடன் சுற்றுலாவுக்குச் செல்ல முடியும் , பக்கத்துவீட்டு சீனப் பாட்டியிடம் பேசமுடியும், புறம் பேசுபவர்கள் என்னப் பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும், சீனத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும் இத்தேவைகளுக்காக சீனமொழிக் கற்றுக் கொண்டால் என்ன ? என்ற கேள்வியில் அம்மொழி மீது பேரார்வம் எழுந்தது. இருக்கின்ற வேலை, இல்லக் கடமைகள் இதற்கிடையே மொழிப்பாடம் படிக்க நேரம் மற்றும் பணம் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. மாற்றுவழி, இணையத்தில் தேட 1000 வெப்தளங்கள் மொழிப்பாடங்கள் எடுத்துவருகின்றன. இருந்தாலும் கணிணி வழியாக எவ்வளவு நேரம் பாடம் படிக்க முடியும் ? ஆப்பிள் ஐபோனில் போட் கேஸ்ட் (PODCasts) MP3 ஒலி வழியாக பாட்டுக் கேட்கப் பயன்படுவது போல் சீன மொழிப் பாடங்களை ஆங்கிலம் வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் இணைய தளங்கள் கண்ணில் பட்டன, அவற்றில் இலவசமாகக் கிடைப்பதையெல்லாம் தரவிரக்கம் செய்தேன். கிட்டதட்ட 50 மணி நேரங்களுக்கு அவற்றை அலுவலகம் வரும் போது போகும் போது கேட்டு கொஞ்சம் மொழி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன்.

மற்ற மொழிகளைப் போல் எழுத்துகளின் அறிமுகத்துடன் சீன மொழிப்படிப்பது மிகக் கடினம், சிறுவயதில் பள்ளியில் சேர்ந்து படித்தால் அவற்றை உள்வாங்கி ஞாபகத்திறனுடன் மொழி அறிவை ஏற்றிக் கொண்டே செல்ல முடியும், ஆனால் நடுத்தரவயதில் சீன மொழிப் படிக்கும் போது சீன எழுத்துகள் மலைப்பை ஏற்படுத்தும் காரணம் சீன எழுத்துகளின் எண்ணிக்கை 80, 000 ஆனால் அவற்றில் தற்காலத்தில் பயன்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் 3,000. இந்த 3,000 எழுத்துகளை மனனம் செய்து படிப்பது என்பது மிகக் கடினம். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் சீன மொழிகளுக்கு சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உண்டு அவற்றை ஹை டோன் (High Tone - High Frequency Tone), ரைஸிங் டோன்(Rising Tone), பாலிங்க் ரைசிங்க் டோன்(Falling Rising Tone), பாலிங்க் டோன் (falling Tone) மற்றும் நியூட்ரல் டோன் (Neutral Tone) என்பர். உதாரணத்திற்கு நம் தமிழில் குறில் நெடில் என்ற இரண்டே உண்டு, ம (குறில்) - மா (நெடில்) ஆங்கிலத்திலும் குறில் நெடில் என்ற வகைகள் இல்லாவிட்டாலும் சொற்களுக்கு ஏற்ற ஒலிப்பை பெற முடியும் என்பது அதன் இலக்கணம், ஆனால் சீன மொழியில் ம்ம, ம்மா, ம்ஆஆஅ, ம (mma, mmaa,maaha, ma) போன்ற நான்கு ஒலிப்புகளுக்கான சொற்களும் அதன் பொருளும் வேறு வேறனாது.

பிற மொழிக்காரர்கள் சீன மொழிப்படிப்பதில் இருக்கும் சிக்கலே அதன் ஒலிப்பு முறைகள் தான், அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரியாக உள்வாங்கி புரிந்து கொள்வது கடினம் தான், இருந்தாலும் சீன மொழி 'Contextual Language' (தொடர்புடைய நிகழ்வுக்கேற்ற பொருள் கொண்ட பேச்சுகள்) என்பதால் நிகழ்வுகளுக்கு ஏற்றச் சொற்கள் என்ற முறையில் துவக்க காலங்களில் படிக்கும் போது அவற்றை ஓரளவும் புரிந்து கொள்ள முடியும். அவன், அவள் என்பதற்கு 'Ta' என்ற ஒரே ஒலிப்பைத்தான் பயன்படுத்துவார்கள், ஆனால் அவற்றை எழுத்தாக எழுதும் போது அவன் மற்றும் அவள் வேறு வேறு எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும். பிற மொழிகளின் இலக்கணத்திற்கும் சீன மொழி இலக்கணத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, குறிப்பாக காலம் காட்டும் வினைச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாற்றாக 'லெ' என்ற ஒலிப்பில் முடிப்பார்கள், அப்படி முடியும் வரிகள் நடந்து முடிந்தது பற்றிப் பேசப்படுகிறது என்று விளங்கிக் கொள்ளப்படும், மேலும் நாள், நேரம், முன், பின் ஆகியவைகள் அவ்வரிகளில் இருப்பதால் பேசப்படும் காலம் அவற்றை வைத்து புரிந்து கொள்ளப்படும், 'வந்தான், வருவான், வருகிறான்' என்று விகுதியை மாற்றி நாம் அதன் நடப்பு வினை காலம் புரிந்து கொள்வது போலின்றி நேற்று அல்லது இன்று காலை வரும் அவன்' என்பதாக அவர்கள் மொழிகளிலில் காலம் சேர்த்தே எழுதப்படும் பேசப்படும்.

சீனமொழியும் பழங்கால மொழிகளில் ஒன்று மேலும் அது செம்மொழி தகுதி பெற்ற ஒன்று, அதாவது வேர் சொற்கள் நிறைந்த மொழி, எந்த ஒரு வேற்று மொழிப் பெயரையும் அவர்களுடைய மொழியில் உள்ள சொற்களைச் சேர்த்து அமைத்து பயன்படுத்திக் கொள்வார்கள், diàn nǎo - இதன் பொருள் மின்சார(ம்) மூளை இது கணிணி என்னும் பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. மின்சாரம் தொடர்புடைய பொருள்களைக் குறிக்கும் வகையில் அவற்றின் முன்பு diàn என்ற ஒலிப்பில் வரும் சீனச் சொல் இருக்கும்.

மொழி மாற்றமே செய்ய வழியில்லாத பொழுது சீனச் சொற்களில் குறிப்பிட்ட ஒலியை கிட்டதட்ட ஒத்துவரும் அளவிற்கான சொற்களை எடுத்து புதிய சொற்களை அமைத்துக் கொள்வார்கள் உதாரணத்திற்கு 'கொ-கொ-கோலா' இவற்றை சீன மொழியில் 'க்லா' என்றும் 'சாக்லேட்' 'சா-க-லே' என்றும் எழுதப்பட்டு சொல்லப்படும்.

பேசுவதற்கு கற்றுக் கொள்வதுடன் படிக்கவும் சீன மொழி எழுத்துகளைக் கற்றுக் கொள்வதில் மற்றொரு சிக்கல், என்னவென்றால் சீன மொழி எழுத்துவடிவத்தில் இரண்டு வகை உண்டு, சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் 'பு-தொங்-வா' எனப்படும் பொதுவடிவமும், தைவான் நாட்டில் பாரம்பரிய எழுத்து முறையான 'ட்ரெடிசனல் மாண்டரின்' எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது, அவற்றினிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு, பொதுவடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகள் உண்டு, பாரம்பரிய வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை வடிவம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டது, என்றாலும் 75 விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானது தான். பொதுவடிவம் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே படிக்க இயலும். சீன மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழ்ந்து படிக்க பாரம்பரிய எழுத்துகளை தெரிந்து கொள்வது மிக மிகத் தேவையான ஒன்று.

சீன மொழிக்கு சீன மொழியில் மொழிப்பெயர் 'சுங் வென்(中文)'. அதாவது 'Zhong Qo' (சுங் கோ') என்றால் மைய அல்லது நடு(சுங்) நாடு(கோ) என்ற பொருளில் சீனர்கள் தங்கள் சீன நாட்டிற்கு சுங்-கோ (நடு நாடு) என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அந்த 'சுங்' மற்றும் மொழி எனப்பொருள் படும் 'Wen' (வென்) சேர்த்து 'சுங் வென்' என்றால் சீன மொழி. பிற நாடுகளில் பு-தொங்-க்வா அதாவது பொதுப் பயன்பாட்டிற்கானது என்ற பொருளில் வரும். 'இந்தியா' என்று அப்படியே எழுத சீனச் சொற்கள் இல்லையாதலால் 'யின்- து (Yin-dhu) என்றே இந்தியாவின் தொடர்புள்ளவற்றில் யின்- து சேர்த்துச் சொல்வார்கள், உதாரணத்திற்கு 'யி-ந்து ரென்' என்றால் இந்தியர் என்று பொருள். அது போலவே பிற நாடுகளையும் அந்நாட்டினரையும் குறிக்கும் சொற்கள் இருக்கும். முற்றிலும் அதன் ஆங்கில ஒலிப்புடன் கூட தொடர்பில்லாத வகையில் கூட சில நாடுகளின் பெயர்கள் உண்டு, அவற்றை சீனர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். நாம தென் ஆப்பிரிக்கா என்று எழுதினால் அதன்பொருள் சவுத் ஆப்ரிக்கா தானே, அதே போல் அமீரகம் என்று நாம் வழங்குவது பிறமொழிக்காரகளுக்கு புரியாது, தென் அமெரிக்காவில் இருக்கும், ஆப்ரிக்கா பொதுவான பேசும் போது புரியும் ஆனால் அதன் முன்பு உள்ள 'தென்' ஒலி என்னவென்று நமக்குத் தெரியும் பிற மொழிக்காரர்களுக்குத் தெரியாது அல்லவா, அது போன்று தான் நாடுகளின் பெயர்கள், ஊர்கள் பெயர்கள் ஆகியவற்றை சீனர்கள் தங்கள் மொழிக்கு ஏற்ற அளவில் மாற்றித்தான் பொருள் கொள்கிறார்கள்.

இதுவரை நான் கற்ற அளவில் 50 எழுத்துக்களின் வடிவம் மனனம் ஆகி இருக்கிறது, 300 சொற்களின் ஒலிகளைப் புரிந்து கொள்ள முடியும், அதை வைத்து என்னைப்பற்றிய அறிமுகம் கொடுத்து அடிப்படையான தகவல்களான 'பேருந்து எங்கே செல்கிறது, இப்ப என்ன மணி ?, இந்த சாலையில் பெயர்' போன்ற எளிமையான கேள்விகளையோ பதில்களையோ கேட்டு பெற முடியும், குறிப்பாக யாராவது சீனர் தவறான எண்ணைச் சுழற்றி அழைத்தால் அவருக்கு சீன மொழியிலேயே 'நீங்கள் தவறான் எண்ணைச் சுழற்றியிருக்கிறீர்கள் என்று கூற முடியும்', சுற்றுலா செல்லத் தேவையான அளவுக்கு தகவல்களை சீன மொழியில் கேட்டுப் பெற முடியும். வெட்டிப் பொழுதுகளை குறைத்துக் கொண்டால் சீன மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்

நான் அறிந்த அளவில் சீன மொழிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல் 'நீ' அதாவது நீங்கள் என்பதன் ஒருமை, அவர்களின் நீஈ என்று ஏற்ற இறக்கமாக இருக்கும், மற்றொரு சொல் மல்லி (பூ வகை) அவர்கள் சற்று திரிந்தது போல் ம-லி என்பார்கள், இன்னும் ஏராளமான சொற்கள் பொதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆழ்ந்து செல்கையில் அவற்றை அடையாளம் கானமுடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஆறுமாத காலங்களுக்குள் படிக்கவும் கற்றுக் கொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு தெரிந்து நேரடியாக சீன - தமிழ் அகராதி இதுவரை யாரும் எழுதியதில்லை, மலாய் மொழி - தமிழ் மொழிக்கு எழுதி இருக்கிறார்கள். ஏன் சீன மொழிக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாக நான் நினைப்பது, தமிழ் ஆர்வம் மற்றும் பிற மொழி ஆர்வம் கொண்டவர்கள் சீன மொழி கற்றுக் கொண்டிருந்தாலும் அவற்றை பொருத்தி அகராதி நூலாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.

எனக்கு பிற மொழிகளில் ஆங்கிலம், கன்னடம், பேசவும், தெலுங்கு மலையாளம் ஹிந்தியை புரிந்து கொள்ளமுடியும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள உண்மையான ஆர்வம் இருந்தால் கற்றுக்கொள்ளும் காலம் என்பது மூன்று மாதத்திற்கும் குறைவே. சீனமொழிக்கு குறைந்தது ஓர் ஆண்டாவது ஆகலாம் ஏனெனில் சீன மொழி இந்திய மொழிகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற மொழி மேலும் அவர்களின் ஒலிப்பை நாம் அடையாளம் கண்டு பொருள் உணர்ந்து கொள்வது மனம் ஒன்றிய நல்ல பயிற்சியினால் மட்டுமே முடியும்.

****

சீன மொழியை சீனர்கள் மற்றும் பிற மொழிப் பேசுபவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி பற்றி அடுத்து எழுதுகிறேன். என்னை வியப்படைய வைத்தவர்களில் அம்மலையாளியும் ஒருவர்

26 டிசம்பர், 2011

இராஜ பாட்டை !

இந்தவார மூன்று மணி நேரத்தையும் கூடவே 10 ரிங்கிட் பணத்தையும் இந்தப்படம் விழுங்கியதால் நாள் குறிப்பாக இதை எழுதுகிறேன், இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவேண்டாம், விமர்சனமே செய்யமுடியாத மரண மொக்கை இந்தப் படம்.

பெரிய அளவில் விளம்பரங்கள் செய்த சுசி.கனேசன் விக்ரம் கூட்டணியின் 'கந்தசாமி' மெகா சொதப்பல் என்று தெரிந்தும் சுசீந்ந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் அப்படியெல்லாம் இருக்காது என்று நினைத்து இந்தப்படத்திற்கு போனது தவறு தான். படத்தில் பெரியவர் கே.விஸ்வனாத்தைப் பயன்படுத்தியது தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, தம்பி இராமையாவை சும்மா கிச்சு கிச்சுக்கு பயன்படுத்தி வீணடித்திருக்கிறார்கள், நாயகி தீக்ஷா சேத்' படத்தில் நாயகி வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்துக்கு வந்து இரண்டு பாடல்களுக்கு ஆடிப் போகிறார், நான் ரொம்பவும் எதிர்பார்த்த ரீமா சென் அவருடன் ஷேரேயா குத்தாட்டம் கடைசியில் வணக்கம் போட வருகிறது, அட அவர்களை முன்பே எங்காவது ஆடவிட்டு இருக்கலாம்.

விக்ரம் ஜீன்ஸ் பேண்ட் கை வைக்காத பணியன் போட்டு சூர்யா கெட்டப்பை போட்டு படுத்துகிறார், வயதுக்கு ஏற்ற வேடம் இல்லை என்பது அவரது முகமே காட்டுகிறது, இதில் காதல் ரெமொன்ஸ் என்று காட்சிகளை வைத்து இயக்குனர் கடுப்படித்துள்ளார். நாளைந்து சண்டை காட்சிகள் இருக்கு, எதோ புது டெக்னிக் காட்டி கடத்தப்பட்ட காதலியை கண்டுபிடிப்பதாக காட்டுகிறார்கள், காதலி அடைப்பட்ட வீட்டில் இருந்து ஒரே ஒரு 'தெரு விளக்கு' தான் தெரிகிறது என்று சொல்ல ஏரியா ஏரியாவாக மின்சாரத்தை துண்டித்து கடைசியாக தெருத்தெருவாக துண்டித்து, பின்னர் அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு லைட்டு மரமாக கண்டுபிடித்து காதலியை மீட்கிறார், ஸப்பா முடியல.

படத்தோட கதை என்னன்னு கேட்டால்,

'பெண் அரசியல் வாதியால் அபகரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகத்தை சினிமா ஸ்டண்ட் நடிகரான விக்ரம் மீட்டு காப்பாற்றுகிறார்'

இசை யுவன் சங்கர் இராஜா பாட்டுகள் நினைவில் நிற்கவில்லை, சண்டைகாட்சிகளில் பின்னனி பரவாயில்லை.

யாரோ முப்பது கோடியை முப்பது நாளில் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் எடுத்தப் படம் போல இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


விக்ரம் ஏற்கனவே மார்க்கெட் சரிந்த நிலையில் இது போன்ற படங்களை ஒப்புக் கொள்வதன் மூலம் சேதுவிற்கு முந்தைய நிலைக்கு தள்ளப்படலாம், வயதிற்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் விக்ரமின் திரையுலக எதிர்காலத்திற்கு நல்லது.


அக்கா அக்கா என்று சொல்லப்படும் பெண் அரசியல்வாதியைக் காட்டிய துவக்கங்களில் 'ஆகா'' என்று நிமிர்ந்து உட்கார்ந்திருந்தேன் ஆனா பெருசா ஒண்ணும் இல்லை.இராஜபாட்டை பார்க்கப் போகிறவர்களுக்கு மொட்டையோடு போடப்படும் பட்டை.

22 டிசம்பர், 2011

சிங்கையில் செல்பேசி கட்டண அதிர்ச்சி !

ஊடக வாசிப்பாளர்களிடையே நேற்றைய பரபரப்பு செல்பேசி வாடிக்கையாளரின் ஒருவரின் மாத சந்தா (Monthly Mobile Phone Bill) பற்றியது, சிங்கப்பூரில் இருந்து தைவான் சென்று திரும்பியவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி செல்பேசி கட்டண வடிவில். அவர் பயன்படுத்திய 'டேட்டா ரோமிங்' கணக்குகளைக் கூட்டி '$349,243' சிங்கப்பூர் வெள்ளிக்கு செல்பேசி நிறுவனம் கட்டண ஓலை அனுப்பி இருந்ததாம். $349,243 இந்தத் தொகைக்கு சிங்கப்பூரில் 4 அறைவீடு ஒன்றையோ Luxury Car ஒன்றையோ வாங்க முடியும்.

செல்பேசி நிறுவனம் தவறு நேர்ந்துள்ளதாக எதுவும் கூறவில்லை, மாறாக அவர் பயன்படுத்திய அலைபேசி வசதிகளுக்கு அந்தக்கட்டணம் சரியானதே என்றே கூறுகிறதாம். வாடிக்கையாளர் பேரதிர்ச்சியுடன் உள்ளார்.

பொதுவாகவே செல்பேசி நிறுவனங்கள் மாத வாடிக்கையாளர்களுக்கு வசதி என்ற பெயரில் 'ஆட்டோ ரோமிங்' சேவையை அலைபேசி எண்ணுடன் இணைத்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அது பற்றிய போதிய தெளிவு இல்லை என்றால் நாடு திரும்பியதும் இது போன்ற அதிர்ச்சி தான் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் போது உள்நாட்டு அலைபேசியையும் எடுத்துச் சென்று அந்த அலைபேசியில் பேசுவதைவிட (Voice Roaming) அதன் வழியாக இணையத்தை (Data Roaming) பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் மிக மிக அதிகம்.

$349,243 - ரூபாயில் 1,39,69,720 /- இந்த அளவு கட்டணம் கட்ட வேண்டி இருக்கும் என்று நினைக்க மயக்கம் வருமா வராதா ?

நான் பக்கத்தில் உள்ள மலேசியா ஜோகூருக்குச் சென்றாலே சிங்கப்பூர் குடிநுழைவைத் கடக்கும் முன்பே 'Air Plane Mode' அமைத்துவிட்டுச் செல்வேன், அதன் பிறகு எந்த அழைப்பும் வராது, தமிழகத்திற்கு வந்தால் அங்குள்ள அலைபேசிச் சேவையைத் தான் பயன்படுத்துவேன். அவசரத்திக்கு தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் ? குடும்ப உறுப்பினர் தவிர்த்து வேறு யாருக்கும் மிக மிக அவசரம் என்று தொடர்பு கொள்ள ஒன்றும் இல்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு நான் எங்கு இருப்பேன் எப்போது திரும்புவேன் என்பது தெரியும், அதிகமாக ஒரு அரைநாள் தொடர்பு இல்லாமல் போகும், நாம் சென்ற இடத்தில் இருந்து உடனே திரும்ப அரைநாள் / இரண்டு மணி நேரம் ஆகும் என்ற நிலையில் அரை நாள் தொடர்பில்லாமல் இருப்பதால் ஒன்றும் கெட்டுவிடாது என்றே நினைக்கிறேன். அப்படியும் தொடர்பில்லாமல் இருக்க விருப்பம் இல்லை என்றால் அங்குள்ள கட்டண சேவையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடும்பத்தினரை தொடர்பு கொள்ளலாம், இதைவிட எளிய / பாதுகாப்பான வழி குடும்பத்தினரை மட்டுமே தொடர்பு கொள்ள தனி அழைப்பு எண் வைத்துக் கொள்ளுதல், அது 'ரோமிங் கட்டணத்திற்கு உட்பட்டது' என்றாலும் வரும் அழைப்புகளுக்கு மட்டும் தான் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

வெளிநாடுகளுக்கு அலைபேசியுடன் செல்லும் முன் டேட்டா ரோமிங்க் வசதியை பூட்டிவிட்டு அல்லது அணைத்துவிட்டு செல்லுங்கள். அப்படியும் இண்டர்நெட் வசதி தேவை என்னும் போது உங்கள் அலைபேசியில் 'Wi-Fi' வசதி இருந்தால் எங்கு அவை இலவச இண்டர்நெட்'Wi-Fi' வழியாகக் கிடைக்கிறதோ அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐபோன், ஆண்டராய்ட் வகை ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இண்டர்நெட் பயன்படுத்தாலும் அந்த வகை போன்கள் நாம் அதில் வைத்திருக்கும் அப்ளிகேசன் ப்ரோகிராம் வசதிகளுக்கான இண்டர்நெட் தொடர்புகளை எப்போதுமே இணைத்துக் கொண்டு இருக்கும், உதாரணத்திற்கு 'இருக்கும் இடம் (லொகெசன்)' மற்றும் 'வானிலை' ஆகியவை எப்போதும் இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும், இவை ரோமிங்கில் இருந்தாலும் பயன்பாட்டில் தான் இருக்கும், அவற்றை தடுக்க 'டேட்டா ரோமிங்' வசதியை முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் அம்பேல் தான்.

அவர் வெளிநாட்டில் இருக்கும் போது பயன்படுத்தி டேட்டா அளவு 1.4 GB, உள்நாட்டில் 12 GB வரை பயன்படுத்த தனிக்கட்டனம் இல்லை, அது மாதச் சந்தாவுடன் இணைந்து கொடுக்கப்படும்.
1.4 GB ரோமிங்க் பயன்படுத்தியற்குத்தான் $349,243 , செல்பேசி நிறுவனம் அது எங்களுக்கு சேரவேண்டிய கட்டணம் என்றாலும் அவற்றை நாங்கள் வெளிநாட்டில் இவர் பயன்படுத்திய போது அங்குள்ள நிறுவனங்களில் சேவையைத்தான் நாங்கள் இவருக்கு திருப்பிவிடுகிறோம், அந்த நிறுவனங்களின் கட்டணம் அந்த அளவுக்கானது எங்களுக்கு வேறு வழியில்லை என்று கைவிரித்துவிடும்

மேலே $349,243 கட்டணத்தை வாடிக்கையாளர் கட்டவில்லை என்றால் என்ன ஆகும் ? அலைபேசி நிறுவனத்திடம் இருந்து வழக்கறிஞரின் ஓலை வரும், நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள், வாடிக்கையாளர் சொந்த வீடு வைத்திருந்தால் விற்று கட்டணத்தைக் கட்டும்படி அறிவுறுத்தப்படுவார். செல்பேசி நிறுவனம் மனது வைத்தால் கட்டணத்தில் விழுக்காடுகளைக் குறைக்கலாம், மற்றபடி 100 - 500 வெள்ளிகளை மட்டுமே செலுத்தி அவரால் அதிலிருந்து மீண்டுவர முடியாது.இந்த வாடிக்கையாளர் ஒரு தன்னிலை மறந்த மடையனாக இருக்க வேண்டும், இவர் 1.4GB க்கு டேட்டா ரோமிங்க் பயன்படுத்தியதன் காரணம் ஆன்லைன் மூவி, ஆபாசத் தளங்கள் மற்றும் ஆன் லைன் விளையாட்டு எதோ ஒன்றில் மூழ்கி இருக்க வேண்டும், வேலை விசயமாகவோ சுற்றுலாவிற்கோ சென்றிருந்தால் கூட உட்கார்ந்து போனை நோண்டிப் புண்ணாக்கிக் கொண்டதற்கு நம்மால் ஐயோ பாவம் என்று மட்டுமே சொல்லமுடியும்

*****

செல்பேசித் துறையில் முன் அனுபவம் எதுவுமே இல்லாத ராசாவிற்கு வேண்டப்பட்ட நிறுவனங்களோ ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு 2ஜியை ஏலம் எடுத்தது ? அவற்றை வாங்கி பெருத்த லாபத்திற்கு விற்கலாம், அவற்றை நல்ல விலைக்கு வாங்குபவர்க்கள் வாடிக்கையாளரை மொட்டை அடிக்க முடியும் என்று நன்கு தெரிந்ததால் தான், 50 பைசாவுக்கு அழைப்புக் கிடைக்கிறது என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் இது போன்று சொல்லப்படாத, சொல்லமுடியாத ஆயிரம் கதைகள் இருக்கலாம்

இணைப்பு: சுட்டி

21 டிசம்பர், 2011

சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?

ஜெ-சசி நட்புறவு முக்கிய காலகட்டத்தை கடந்துள்ளது, இதற்கு முன்பு ஜெ-சசி பிரிவிற்கும் தற்போதைய பிரிவிற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, முன்பு ஜெ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு சசி வகையறாக்களின் சொத்துக்குவிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள் என்ற காரணம் முன்வைக்கப்பட ஜெவும் வேண்டா வெறுப்பாக சசியை பிரிந்ததாக அறிவித்தார், ஒரு சில நாட்களிலேயே ஒன்று சேர்ந்தார்கள், மறுபடியும் ஜெ இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த போது சசி கூடவே தான் இருந்தார், அதன் பிறகு ஜெ தோற்கடிக்கப்பட்டதற்கு சசியை யாரும் காரணம் காட்டவில்லை, பிறகு ஜெ மூன்றாம் முறையாக முதல்வரான போதும் சசியின் செல்வாக்கினால் வென்றார் என்று யாரும் நினைக்கவில்லை. எனவே ஜெ-வின் வெற்றித் தோல்விக்கு சசியை முன்னிலைப்படுத்த ஒன்றுமே இல்லை.ஆனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி உறுதியாக இருக்க சசியின் முக்குலத்தோர் ஆதரவு இருந்தது வெளிப்படையான உண்மை. அதிமுக கட்சி முக்குலத்தோர் கட்சி என்று தான் அண்மையில் பரமகுடி சம்பவங்களை ஒப்பிட்டுக் கூடப் பேசப்பட்டது, சசி ஜெவுடன் நட்பாக இருந்தது அதிமுகவின் பலத்திற்கு நன்மையாக இருந்ததே அன்றி ஆட்சிக்கு நன்மை / தீமை செய்வதாக இருந்தது என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஜெ-சசி உறவு உடைந்ததால் அதிமுகவிற்கு நன்மை போலும், ஜெ இனி தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதுகிறார்கள். ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சசிதான் காரணம் என்றாலும் கூட அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது, இடைப்பட்ட காலத்தில் சசிதான் இதற்கெல்லாம் காரணம் என்று ஜெ உணர இதுவரை வாய்க்காத வேளைகள் இப்போது தான் கிடைத்தது போல் நினைக்கிறார்கள். ஜெவின் நட்பால் சசி வகையறா பெருத்த லாபம் ஈட்டி இருந்தாலும் ஜெ-வின் அரசியல் எதிரிகளால் ஜெ-விற்கு தனிப்பட்ட ஆபத்துகள் ஏற்படா வண்ணம் தன் உறவுக்காரர்களால் அரண் அமைத்துப் பார்த்துக் கொண்டவர் சசி.

சசியை வெளியேற்றதால் ஜெ-வுக்கு கிடைத்திருக்கும் மபெரும் ஆதரவு திமுக கூடாரத்தை மிகவும் அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்க முடிகிறது

நடப்பதைப் பார்க்கும் போது ஜெ-சசி பிரிவுகள் பழைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என்று நினைக்க முடியவில்லை, ஜெ-வுக்கு பிறகான அரசியல் என்ற நிலையில் சசி தன் உறவுக்காரர்களை உள்ளே நுழைத்து செயல்பட அவை ஜெ-வை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஜெ -வைப் போல் வாரிசுகள் அற்ற சசி தன்னைச் சார்ந்தவர்கள் நன்மை அடையட்டம் என்று நினைத்திருக்கிறார் அன்றி மீண்டும் சொத்துக் குவிப்புகளில் ஆர்வம் காட்டியதாக நினைக்க முடியவில்லை.

இவை ஜெ-சசி இருவருக்குமான தனிப்பட்ட கசப்புணர்வுகளின் வெளிப்பாடே அன்றி சசி இல்லாவிட்டால் அம்மா நல்லாட்சித்தருவார் போன்ற பிம்பங்களை பார்பன ஊடகங்கள் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, ஒருவேளை சசிதான் காரணம் என்றால் ஜெவினால் மேலும் இருமுறை தமிழக முதல்வராக வரும் வாய்ப்பே இருந்திருக்காது.

ஜெ-சசி நட்பு கெட்டுப் போனதால் முக்குலத்தோருக்கும் அதிமுகவிற்கும் இழப்பே அன்றி மற்றவர்களுக்கும், ஆட்சிக்கும் நன்மை என்று சொல்ல ஒன்றும் இல்லை, சசியின் இடத்தைப் பிடிக்க சோ உள்ளிட்ட பார்பனர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன, போயாஸ் தோட்டத்தின் பொறுப்புகளை சோ வின் மகன் ஏற்றுக் கொண்டுள்ளாராம், சனிப் பெயர்ச்சியை சசியுடன் தொடர்ப்பு படுத்தி எஸ்வி சேகர் கிண்டல் அடித்ததை நினைவு கூறுங்கள். சசியினால் தமிழகத்திற்கு கெடுதல் இருந்ததா இல்லையா என்பதைவிட ஜெ-வுக்கு கிடைக்கும் பார்பன ஆலோசனைகள் மிகவும் ஆபத்தானது. முன்பு போல் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளிலும் பிற்படத்தப்பட்டோர் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும் ஜெ பார்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது.

பொருளியல் ரீதியாக சசி வகையறா தமிழகத்தைச் சுரண்டின என்பது உண்மை என்றாலும் நிலம் சார்ந்த அரசியல், கருத்தியல் ரீதியான ஜெ-வின் நடவடிக்கைகளில் அவர்கள் குறுக்கே வரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜெ-வின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்த சசியை ஜெ - கழட்டிவிட முடிவெடுக்கும் முன் ஜெவுக்கு அதை எதிர்கொள்ளும் பெரிய ஆதரவுக்கரங்கள் கிடைத்திருக்கக் கூடும் அப்படி எதுவும் இல்லை என்றால் இவை வெறும் நாடகமே.

நாடகமும் இல்லை என்றால் 'கள்ளர்கள் இடத்தில் குள்ளர்கள்' (அதாவது வாமன அவதாரங்கள்) டோண்டு சாருக்கு பிடித்தபடி சொல்லவேண்டுமென்றால் 'தேவரியம் இருந்த இடத்தில் பார்பனியம்'

19 டிசம்பர், 2011

ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?

மொழிகள் பேசப்படாமல் அழிவதிலும், அல்லது பிற மொழியினரால் அழிக்கப்படுவதிலும் அது பிறரிடம் திணிக்கப்படுவதிலும் உடன்பாடு அற்றவன், காமம் என்பது இனிமையான உணர்வு என்றாலும் ஒப்புதலுடன் கூடுதல் மற்றும் வன்புணர்வாக தீர்த்துக் கொள்ளப்படுதல் என்பதன் மிகப் பெரிய வேறுபாடுகளைப் போன்றது பிற மொழியை தனிப்பட்ட ஒருவர் விரும்பிக் கற்பது மற்றும் அதன் மீது தொடர்ந்து செய்யும் புறக்கணிப்பு.

எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான், அவை வெறும் அடிப்படைப் புரிதல். மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும். இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான், இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.

மொழி என்பது மனிதனின் வாழும் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகிறது அல்லது உருப்பெறுகிறது என்பது தான் மொழியாளர்களின் மொழிக் குறித்த அடிப்படை பாடம், மொழியின் தோற்றம் என்பவை ஒரு மனிதன் வாழும் சூழலில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி கதைப்பதற்கு உருவாக்கப்பட்ட சுட்டுச் சொற்களாக இருந்து பின்னர் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் தொகுப்பு ஒலிகள் என்ற அளவில் வளர்ந்து தத்தம் சந்ததியினரிடையே வரலாற்று ஒலிகோப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும்.

மனித ஒலிகள் அத்தனையும் ஒலி அலைவரிசையினுள் அடக்கம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மொழிக் குறித்த சரியான ஒலிப்பு (உச்சரிப்பு) ஒன்றை பிற மொழியினரால் அப்படியே உள்வாங்க முடியாது, இதற்கு அடிப்படைக்காரணம் மொழிச் சொற்களின் அல்லது குரல் ஒலிகளின் தோற்றம் அல்லது உருவாக்கம் என்பவை மனித தொண்டை அமைப்பு, முக்குத் துளை, மூக்கு வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மிக்க குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்போரின் மூக்கு அமைப்புகளும் புறத்தோற்றம் மற்றும் நிறம் கூட பிற இடங்களில் வசிப்பவரை ஒப்பிட மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும், வாயை நன்கு திறந்து பேசினால் குளிரையும் உள்ளிழுக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க அவர்களின் சொற்கள் மற்றும் சொற்களின் ஒலி அமைப்பு உதடுகளை அதிகம் விரிக்காமல் அல்லது வாயைத் திறந்து (உதடு ஒட்டும் ஒட்டாது என்பது போல்) பேசப்படும் சொற்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்ததாகவே இருக்கும், மாறாக வெப்ப நாடுகளில் வசிப்போருக்கு மூச்சுவிடுதல் ஒரு பெரிய இடற்பாடு இல்லை என்பதால் அவர்களின் மொழிகளில் இயல்பாகவே பல்வேறு ஒலிகளை கொண்ட சொற்கள் இருக்கும். மனிதன் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் சூழலுக்கு ஏற்ப முந்தைய மொழிகளின் திரிபுகளும் கண்டு கொண்ட புதிய நில அமைப்புகள் அவற்றின் தன்மை, பயனுக்கான, பொருளுக்கான புதிய சொற்களின் உருவாக்கங்களும் சேர கிளை மொழிகள் உருவாகின்றன. இது மொழிகள் உருவாக்கம் மற்றும் கிளைத்தல் பற்றிய மொழியாளர்களின் அடிப்படைப் புரிதல்.

மொழிகள் பண்பாட்டுக் கூறுகள் என்கிறார்கள், அதாவது ஒரு மொழிப் பேசுபவர்களின் கலைத் திறன் மற்றும் பண்பாடு அவற்றின் பழக்க வழக்கங்கள் அவர்கள் பேசும் மொழியின் வாயிலாகவே அவர்களிடையே தொடர்சிகளை காக்கிறது. குழுக்களுக்குள் மனிதப் (புலம்) பரவல் இல்லாத காலங்களில் எழுத்துகளின் தேவை என்பதற்காக இன்றியமையாத பிற காரணங்கள் எதுவும் இல்லை, நாகரீக வளர்ச்சி அல்லது அறிவின் சேமிப்பு, குரல்களை எடுத்துச் செல்ல இன்றியமையாமை என்ற தேவை ஏற்பட்ட போது (பொதுவாக மன்னர் ஆட்சி, நாகரீக சமூகம் என்று வளர்ந்த நிலையில்) எழுத்திற்கான தேவை ஏற்பட நாகரீகம் வளர்ந்த நிலையில் இருந்த மொழி இனங்கள் தங்களுக்கான எழுத்துளை அமைத்துக் கொண்டன. எழுத்துகள் இல்லாத மொழிக்குழுக்கள் பேசுவதன் மூலம் மட்டுமே தத்தம் சந்திகளிடைய முன்பு தாம் சேகரித்த தகவல் மற்றும் தொழில் குறித்த அறிவுகளை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு மொழி அழிந்தால் என்ன ஆகும் ? மொழிகள் அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன, தற்காலத்தில் பொருள் ஈட்டப் பயன்படாத மொழி என்ற அளவில் தாய்மொழிகள் ( தொல் பொருள் காப்பகங்களில்) தள்ளிவிடப்படுகின்றன. தொடர்ச்சியான புலம் பெயர்வு மற்றும் பிறமொழியினரின் படையெடுப்புகள், திணிப்புகள், புறக்கணிப்புகள் என்ற அளவீடுகள் மொழி அழிவதற்கான முதல் காரணிகளாக உள்ளன, அவைத்தவிர்த்து குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் பொறுப்பின்மை. ஒரு மொழிப் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டால் அவற்றில் புதைந்துள்ள அறிவு சார்ந்தவைகளும் சேர்ந்தே அழிந்து போகும், உதாரணத்திற்கு குறிப்பிட்ட மூலிகைக் குறித்த பயன்பாடுகள் அவற்றை வளர்ப்பது மருந்தாக்குவது ஆகியவை மொழிக் குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் போது அம்மொழியே அழிந்த பிறகு அம்மூலிகையின் பயன்பாடு குறித்த பயன்பாடுகளும் அழிந்தே போகும், தமிழில் பழைய மருத்துவ நூல்கள் யாவிலும் சித்தமருத்துவ முறைகள் பாடல்களாக மறைமுகப் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பொருள் புரிந்து அம்மூலிகையை மருந்தாகப் பயன்படுத்த நல்ல தமிழ் மொழி அறிவும், அச்செய்யுள்களின் மறை பொருள்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே முடியும்.

மூலிகை மட்டும் அல்ல, விவசாயம், வேட்டை ஆடுதல், கட்டுமானம், பிற தொழில் மற்றும் அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றின் கருவூலமாக மொழி இருந்து வந்திருக்கிறது, குறிப்பிட்ட சில வகை ஆக்கங்களை பிறர் அறிந்து கொண்டால் பேராபத்து அல்லது தம் தொழிலைச் செய்ய முடியாது என்ற அளவில் சங்கேதமாகவே எந்த ஒரு மொழியில் பல கூறுகள் அமைந்துள்ளன, இன்றைக்கு இராணுவ இரகசியங்களைக் கோட் செய்வது போன்றவை அவை, குறிப்பிட்ட கோட் முறைப்பற்றிய விளக்கங்கள் அழிந்து போகும் போது காத்த இராணுவ ரகசியகங்கள் எவருக்குமே புலப்படாமல் அழிந்து போவது போன்றவை அவை. இராணுவ ரகசியங்கள் மறைந்து போவது இராணுவத்திற்கு இழப்பு அன்று, ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுகே இழப்பு, மொழியாளர்களின் கூற்று மிகத் தெளிவாக

ஒரு மொழியின் அழிவு என்பவை தனிப்பட்ட அம்மொழிப் பேசுபவர்களுக்கான இழப்பு அல்ல மாறாக அவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கான ஈடு செய்ய இயலாத இழப்பு தான் என்பதை நம்புங்கள் என்கிறார்கள். ஒரு மொழி அழியும் போது அம்மொழிப் பேசியவர்களின் அம்மொழி வழியாக அறிந்திருந்த தனிப்பட்ட அறிவுத் திறன்களையும் சேர்த்தே உலகம் இழக்கிறதாம்.

ஒரு மொழி அழியும் போதும் மேலும் என்ன ஆகும் ? பிரிதொரு பகுதியில் பார்ப்போம்.

Ref :
When Languages Die: The Extinction of the World's Languages and the Erosion of Human Knowledge

18 டிசம்பர், 2011

மம்பட்டியான் !


அப்பன் நடித்த ஒரு படத்தை மகன் நடித்து அதை அப்பனே இயக்கிய படமாக பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கிய மம்பட்டியான் படம் பார்க்க இந்த வாரத் தனிமை தூண்டியது. திரையரங்கிற்குச் சென்றேன் மொத்தமே 40 பேருக்கும் குறைவாக அதுவும் 35 - 45 வயதினராக இருந்தனர். அறிவிக்கப்பட்ட படி (செடியூல்) சிங்கையில் ஒற்றை ஆளுக்கு கூட படம் ஓட்டுவார்கள்.

வெற்றி அடைந்த பழையப் படங்களை தூசித் தட்டி இன்றைய வடிவங்களுடன் எடுத்தப் படங்கள் வெற்றியடைந்துள்ளன, குறிப்பாக பில்லா, பில்லா படத்தின் கதையை திரும்ப எடுக்கும் போது அடிப்படைக் கதைகள் கடத்தல் அதில் ஆள் மாறாட்டம், அவை இன்றும் நடப்பவை என்பதால் கதை ஓட்டத்தில் இன்றைய உத்திகளை நுழைத்து (பழைய படத்தில் நாள்குறிப்பேடு, இன்றைய பென் ட்ரைவ்) வெற்றிகரமாக எடுத்திருந்தனர், கூடவே இன்றைய நடிகைகளின் கவர்ச்சியும் அதன் ஏற்ற இரக்கம் அந்தப்படத்தின் வெற்றியை மேலும் கூட்டி இருந்தது.

மம்பட்டியான் அன்றைக்கு எடுத்தாலும் இன்றைக்கு எடுத்தாலும் அவை நடைபெற்ற காலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய உத்திகள் என்று எதையும் காட்டிவிட முடியாது என்பது இந்த மறு உருவாக்கப்படத்தின் பின்னடைவு, நடிகர்களும் கதைக் கள படப்பிடிப்பு இடங்களும் மாறி இருக்கிறதன்றி புதிதாக பார்த்து ரசிக்க ஒன்றும் இல்லை.

பழைய பதிப்பான மலையூர் மம்பட்டியான் படத்தில் தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, ஜெயமாலினி, செந்தில் மற்றும் சங்கிலி முருகன் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.

******

நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன், உடலை ஏற்றி இருக்கிறார், படம் முழுவதும் முண்டா பணியனில் உடல் ஏற்றத்தைக் காட்டுகிறார், திமிரும் சண்டைக்காட்சிகள் ஏசு நாதர் போன்று வளர்த்த முடி மற்றும் தாடி படத்தின் பாத்திரத்திற்கேற்ற இறுக்கத்தைக் கொண்டுவரவில்லை., இரவு பத்துமணிக்கு மேலான காட்சியாக அமைப்பட்டதில் கூட மீரா ஜாஸ்மின் புதிய பூவைப் போல் முழு ஒப்பனையுடன் இருந்தார், கிராமத்து அப்பாவி மற்றும் சீற வேண்டிய நேரத்தில் சீறும் பெண்ணாக பழைய படத்தில் சரிதா மிகச் சிறப்பாக செய்திருப்பார், அதில் சரிதா பேசிய அதே வசனங்கள் மீரா ஜாஸ்மினுக்கும் அப்படியே வைத்திருக்கிறார்கள், ஆட்டக்காரியாக வரும் முமைத்கான் ஜெயமாலினியைத் தாண்டி கவர்ச்சி காட்டியுள்ளார், பழையப் படத்தில் ஜெயமாலினி பாத்திரம் கவர்ச்சியைத் தாண்டி மனதைவிட்டு அகலாத ஒன்றாக அவரது நடிப்பு இருக்கும், முமைத்கான் வேகாத இரைச்சிக் கோழித்துண்டைப் போல் (உடையில் மட்டும்) அரைகுறையாக இருந்தது.

வடிவேலு கவுண்டமனி செய்த மைனர் பாத்திரத்தை செய்திருக்கிறார், எத்தனை திறமையான ஒரு நகைச்சுவை நடிகரை அரசியல் பேராசைக்காரர்கள் தன்னலத்தினால் பயன்படுத்தியும் புறக்கணித்தும் முடக்கிப் போட்டுள்ளனர் என்று நினைக்க வைத்திருந்தார், 40 பேர் படம் பார்த்தாலும் 25 பேர் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில் விசில் அடித்தனர், பிரகாஷ்ராஜ் இன்ஸ்பெக்டர் வேடம், தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற அளைவில் தான் வந்து போகிறார். போலி மம்பட்டியானாக பழைய படத்தில் நடித்த சங்கிலி முருகனுக்கு மாற்றாக இதில் ரியாஸ்கான், உடல் தோற்றம் தவிர்த்து சங்கில் பாத்திரத்தின் பயமுறுத்தலை இவரும் ஒழுங்காகக் கொண்டுவரவில்லை பொருத்தமாகவும் இல்லை.

'கருப்பண்ண சாமி வரான்' பாட்டை இன்னும் கொஞ்சம் துள்ளல் இசையாக்கி இருக்கலாம் புது இசையமைப்பாளர் (தமன்) சரியாகச் செய்யவில்லை, இளையராஜவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கேட்கும் படி இருந்தது ஆறுதல் குறிப்பாக சின்னப் பொண்ணு சேலை (இளையராஜா. சார்........என்ன டியூன்யா அது .சே மனுசன் கொண்ணுட்டார்)

மலை கிராமம் மற்றும் அதன் சூழல், மலைக்காடுகள் குளிர்ச்சியான அழகான படப்பிடிப்பு, கடைசி கட்ட துரத்தல் சண்டைக்காட்சிகள் அசத்தல்.

******

நல்ல கதை அம்சங்களுடன் வரும் புதிய இயக்குனர்கள் வெற்றியடை ஏற்கனவே அறிமுகமாகமான திறமையான முகங்கள் நடிகராக போட்டால் எளிதான வெற்றியை அடைந்துவிட முடியும் விக்ரமன் லிங்குசாமி ஆகியோர் அப்படித்தான் வெற்றிகரமான இயக்குனர்களாக உருவானார்கள், பிரசாந்த் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளலாம். மணிரத்தினம் ஷங்கர் படத்தில் நடித்திருந்தாலும் கூட மினிமம் கேரண்டி நடிகர் என்னும் சிறப்பைப் பெற இவரால் முடியவில்லை, ஒருவேளை தனிப்பட்ட (மண) வாழ்க்கையின் தோல்விகூட அதற்கான அவரது முயற்சியை தடை செய்திருக்கலாம். நல்ல உடல் தோற்றம், சண்டை, நடனம் அனைத்தும் தெரிந்து நல்ல நடிகர் ஒருவரை விட்டுவிட்டு 10 கோடி 20 கோடி என்று சில நடிகர்களுக்கு கட்டிவிட்டு கால்சீட்டுகளுக்கு காத்திருப்போர் பிரசாந்த் போன்றவர்களை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவின் தோல்விகளின் எண்ணிக்கை குறையலாம், ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் கிடைக்கலாம்.

15 டிசம்பர், 2011

கூகுள் பஸ்(Google Buzz) போயே போச்சு.....!

கடந்த ஒராண்டுக்கு மேல் பழைய பதிவர்களின் பதிவுகள் குறைந்ததற்கு கூகுள் பஸ் தான் முதற்காரணம் அதில் நானும் விலக்கு இல்லை. பொதுவாக பதிவுகளில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இடுகை இடுவேன், இந்தாண்டு இதுவரை 100க் கும் குறைவான இடுகைகளே எழுதியுள்ளேன், இது சென்ற ஆண்டுகளை ஒப்பிட 50 விழுக்காட்டிற்கும் குறைவு. பிறகு அதற்கான விவாதம், அவற்றையெல்லாம் கூகுள் பஸ்ஸில் செய்துவிட்டதால் திரும்பவும் அதே தகவல் அடிப்படையில் இடுகை எழுதுவது அலுப்பான ஒன்று. இன்று (15/12./2011) காலை 10 மணியுடன் பஸ்ஸை மூடி இருகிறது கூகுள்,கூகுள் பஸ்ஸை பிற இனத்தினர் / மொழியினர் பயன்படுத்தினார்களா என்று சரியாகத் தெரியவில்லை, வலைப்பதிவர்களுக்கு அது ஒரு நல்ல விவாதக்களமாக இருந்தது. டிவிட்டரில் இருந்து எழுத்து எண்ணிக்கை கட்டுப்பாடுகள் அவற்றில் இல்லை என்பதால் என் போன்றோர் ப்ஸ்ஸில் விரும்பி பயணம் செய்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே மொபைல் சாதனங்களில் பஸ்சேவை நின்றது. பஸ்ஸை சேமித்து வைக்க கூகுள் வசதி செய்துள்ளது. கூகுள் பஸ்ஸின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுக்கும் சற்று குறைவே.

கடைசியாக கூகுள் பஸ்ஸில் மறு பகிர்வு (வேறொருவர் பஸ்ஸில் இருந்து ரீசேர்) செய்த தகவல்,

"ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு நல்ல தலைவர் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார ்,,,,,,தவறு செய்பவர் தனது கட்சியை சேர்ந்தவரேயாயின ும் அவரை அப்ப்தவியில் இருந்து தூக்கி எறியும் தைரியம் இவருக்கு மட்டுமே உண்டு,,,,,,,,கோ டிக் கோடியாய், அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கொள்ளையடித்தப் பொழுது, ஒரு கிழ முண்டம், என்ன செய்துக் கொண்டு இருந்தது என்பதை இந்த நாடே அறியும்,,,,,,,, ,,,,

சவுக்கு தளத்தில் ஒருவரின் பின்னூட்டத்திலிருந்து......."

*****

கூகுள் பஸ்ஸில் பட்டதும் கெட்டதும்

வலை எழுதுவதை விட அதிக நேரங்களை விழுங்கியது
2000க் கும் அதிகமான பஸ் தகவல்களை வெளியிட்டது
10,000 பின்னூட்டங்களை 500 பஸ்ஸர்களுக்கும் அதிகமானோருக்கு இட்டது
வலைப்பதிவர்கள் பலருடன் நேரடி விவாதங்களில் பங்கு பெற்றது

திமுக உபி பதிவர்கள் நட்பு வட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர் அல்லது நானும் அவர்களிடம் இருந்து விலகினேன், ஒருவேளை அவர்களிடம் இருந்த ஒட்டுதல் எனது முன்னாள் திமுக சார்பினால் ஏற்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம், அது காணமல் போனதும் அவர்களும் இல்லை. பார்பனப் பதிவர்களுடன் நான் காரசாரமான விவாதம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் தொடர்புகள் பாதிப்புக்கு உள்ளாவதில்லை, ஏனெனில் கொள்ளை அளவில் அவர்களுடன் நான் 99 விழுக்காடு ஒத்துப் போகததால் புதிதாக மாறுபட்ட கருத்து என்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை.

இவற்றில் இருந்து ஒன்று புரிந்தது ஒருவரிடம் ஏற்படும் நட்பிற்கான காரணம் ஒத்த சிந்தனைகள் என்றால் அந்த நட்பின் ஆயுட்காலம் நம் சிந்தனை செயல் மாறும் போது முடிவுக்கு வந்துவிடும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலவசமாகக் கிடைப்பதில் வலை நட்புக்கு ஈடான ஒன்று இல்லை, அவை வரும் போகும், தொங்கிக் கொண்டிருக்க, துரோகிப் பட்டம் கொடுக்க, உருகி வழிய, நினைத்து வேதனைப்பட ஒன்றும் இல்லை.

கொள்கை / எண்ணம் இவற்றின் அடிப்படையிலான நட்புகள் உறுதியானவை அல்ல அல்ல என்ற புரிந்துணர்வை அளித்தது கூகுள் விவாதங்களே.******

கூகுள் + ல் இனி தொடரச் செய்திருக்கிறது கூகுள், இவற்றின் வசதி நாம் விரும்புவோருடன் மட்டும் விவாதிக்கலாம், பகிரலாம், தேவை இல்லை எனில் கழட்டிக் கொள்ளலாம்.

உடன் பயணித்த பஸ் பயணிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

7 டிசம்பர், 2011

ஆ ராசாவின் 50 பைசா சாதனை !

குப்பனுக்கும் சுப்பனுக்கும் (இவிங்க தான் இழிச்ச வாய், படிக்காத பாமரன் என்று சொல்ல இவர்களைக் கேட்காமலேயே இவங்க பேரைப் பயன்படுத்தலாம்) 50 பைசா செலவில் அழைத்துப் பேசுவும், ஏழைகளுக்கு அலைபேசியை எட்டும்படி செய்ததுடன் நல்ல விலைக்கு விற்று ஏழை நாடான இந்தியாவை வளர்ந்த நாடாக்கியுள்ளார் ராசா என்ற பரபரப்புரை செய்யப்படுகிறது, இந்த கூத்துக்கு இடையே 'நான் வாய்த் திருந்தால் பலர் ஜெயிலுக்கு போகனும்' என்று ராசா திருவாய் மலர்ந்து சவடால் விட்டு எவனும் உத்தமன் கிடையாது என்று ஒப்புதல் கொடுத்தது வேற அது இந்த மாசம்.

நண்பர் திரு அப்துல்லா இப்படி எழுதுகிறார்,

"குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது" - திரு அப்துல்லா

அவர் சார்ந்துள்ள இயக்கத்தைத் தாங்கிப் பிடிப்பது அவர் விருப்பம் அதில் ஒன்றும் தவறு இல்லை, ஆனால் உண்மைகளை திரித்தும், தவறான தகவல்களைத் தருவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது, 'ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை காசு கொடுத்து வாங்கப்படாத இயற்கைக் கொடை, அதை எவ்வளவுக்கு விற்கிறோமோ அதை லாபம் என்றே கருத வேண்டும்' என்கிறார்

அமெரிக்காவில் 2008ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த தொகை $19.592 billion (ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன் = 100 கோடி) = 1900 கோடிகள், இந்திய ரூபாயில் = 76,000 கோடி

2010 கணக்கெடுப்பின் படி அமெரிக்க மக்கள் தொகை 30 கோடி அதில் மொபைல் வைத்திருப்பவர்கள் 30 கோடி பேர் = 30 கோடி இணைப்பு, கிட்டதட்ட எல்லோரிடமும் அலைபேசி உண்டு. அதாவது ஒரு இணைப்பின் 2533 ரூபாய் = 60 அமெரிக்க டாலர் அரசுக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த உரிமத்தின் காலக்கெடு 20 ஆண்டுகள், ஒரு இணைப்பை 60 டாலருக்கு வாங்கும் அலைபேசி சேவை நிறுவனம் அதை 20 ஆண்டுகள் பயன்படுத்த முடியும். இந்தியாவில் செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்கவைக் காட்டிலும் இருமடங்கிற்கும் சற்று கூடுதல் அதாவது 2011 கணக்கின் படி 86.5 கோடி பேர், 2008ல் 75 கோடி பேர் என்றாலும் அரசிற்கு கிடைத்திருக்க வேண்டியது அமெரிக்காவைப் போன்று இரண்டரை மடங்கு 1,75,000 கோடி. இவை உத்தேசக் கணக்கு தான், இவற்றின் அரசு மதிப்பீடு இன்னும் கூடுதலாகவே இருக்கும்.இராசா ஏலத்தில் விற்றது 10,772 கோடி., ராசா குறைந்த விலைக்கு விற்றதால் தான் 50 பைசாவிற்கு அலைபேச முடிகிறதாம். இதில் 14 விழுக்காட்டை (1537 கோடிக்கு) ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் அதை 670 விழுக்காடு லாபத்தில் கிட்டதட்ட 10400 கோடிக்கு விற்றுள்ளது, 14 விழுக்காட்டிற்கே ஏலம் எடுத்த நிறுவனத்திற்கே 6.7 பங்குக்கு வருமானம் கிடைத்தால் மீதம் உள்ள 84 விழுக்காட்டிற்கு கிடைக்கும் லாபம் (10773 - 1537) கிட்டதட்ட 61,881 கோடிகள், அதாவது 10 ஆயிரம் கோடிக்கு அரசு விற்பனை செய்தவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் விற்றது அல்லது லாபமாக நினைத்தது 70 ஆயிரம் கோடி. ஏலம் எடுத்தவர்களிடம் வாங்கியவர்களுக்கு இது கிட்டதட்ட அவர்கள் மறுவிற்பனையில் வாங்கும் போது அதன் பலன் அதைவிட இரண்டரை மடங்கு என்று தெரிகிறது, அதாவது ஸ்வான் டெலிகாமிடம் ஸ்பெக்டரம் வாங்கிய எடிசலாட்டிக்கு அதன் மதிப்பு இரண்டரை முதல் மூன்று பங்குவரையிலானது. இதைத்தான் மொத்தமாக மறுவிற்பனையில் கிடைக்கும் ஒருலட்சத்து 75 ஆயிரம் கோடி நட்டம் என்கிறார்கள்.

அமெரிக்காவில் 2008 நடந்த 2ஜி ஏலத்தின் மதிப்புகள் ஏற்கனவே தெரிந்தவை தான், இவற்றைப்பற்றி ஒரு மத்திய அமைச்சர் அறிந்திருக்காமல் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டார் என்பதும் முந்தைய வழிகாட்டுதலைப் பின்பற்றினார் என்பதும் மாட்டிக் கொண்ட சமாளிப்பு வாதம் தான். உண்மையில் குறைந்த விலைக்கு விற்று அதைப் பயன்படுத்தும் விதிமுறைகளுடன் கொடுத்திருந்தால் ஒரு அழைப்புக்கு 50 பைசா என்ற நிலை 5 பைசா என்ற அளவிற்குக் கூடக் கிடைத்திருக்கலாம்.

இன்னும் சொத்தை வாதமாக 10 ஆண்டுக்கு முந்திய பழைய லேண்ட் லைன் கட்டணங்களை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் 10 ஆண்டுக்கு முன்பு பேசும் கட்டணங்கள் இன்றைய கட்டணங்களை விட 10 மடங்கு வரையில் இருந்தன. முன்பு அழைப்பு ஒன்றுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருவெள்ளி செலவு பிடித்தது, தற்போது அழைப்பு அட்டைகள் மூலம் அதே ஒரு வெள்ளிக்கட்டணத்திற்கு 30 - 50 நிமிடங்கள் வரை பேசலாம், அதே போன்ற சில சலுகைக்கட்டணங்களும் கூட முன்பைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது, இதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப உத்தியே அன்றி ராசா செய்த சாதனை என்று எதுவும் இல்லை, மற்ற நாடுகளிலெல்லாம் ராசா தான் கட்டணம் குறைக்க சாதனை செய்தாரா ?

20 ஆண்டுக்கு முன்பு 75 ஆயிரம் கொடுத்து வாங்கிய கணிணிகள் அதைவிட பலமடங்கு வசதி வேகத்துடன் 20 ஆயிரத்திற்கே இன்றைக்கு கிடைக்கிறது, இதெல்லாம் ஐடி அமைச்சாராக இருந்ததால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நற்பலன் என்று சொன்னால் கேட்டுக் கொள்ள நாம் என்ன ஆடுகளா ?.

அண்ணன் அப்துல்லோ போன்றோர் பொறுப்பற்று ராசா மிகப் பெரிய சாதனையாளர், போற்றுங்கள் என்று எழுதுவது அவர் மீதான மதிப்பைக் குறைக்க வில்லை என்றாலும் நேர்மையை ஐயம் கொள்ளச் செய்கிறது.

முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைத்தாலும்.....எத்தனை நாளைக்கு ? பூசனிக்காயே அழுகி வெடித்து நாறிக் காட்டிவிடும், ராசாவின் சாதனைகள் என்று சொல்லப்படுபவை அப்படித்தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்