முதல் வகுப்பு : என்னுடைய பிறந்த திங்கள் (டிசம்பர்) படி பள்ளி தொடங்கும் திங்கள் (ஜூன்) ஆறு திங்கள் முன்பு பின்பு இருப்பதால் 4 1/2 அகவையில் சேர்க்காமல் 5 1/2 அகவையில் பள்ளியில் சேர்த்தார்கள். நகராட்சி(முனிசிபல்)தொடக்கப் பள்ளியில் தான் முதல் வகுப்பு செல்ல தொடங்கினேன். வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடை தொலைவு.
இங்கு சேரும் முன் அண்ணன் படித்த மற்றொரு பள்ளிக்கு அடிக்கடி சென்று தூங்கி எழுந்த பழக்கம் இருந்தபடியால் பள்ளிக்குச் செல்வது அச்சம் ஊட்டவில்லை. கூடவே என் அகவை தெரு 'பசங்க' பள்ளிக்கு செல்லத் தொடங்கியதால் உற்சாகமாவே சென்றேன். இன்னும் நினைவு இருக்கிறது முதல் வகுப்பு அரிச்சுவடி, பாட நூல் அட்டையில் மயில், உள்ளே குரங்கும் குல்லா வியாபாரியும், கரடி கதை (கரடி துறத்த இறந்ததாக நடித்து தப்பிக்கும் ஒருகதை). அ, ஆ, இ எழுதும் போது இ - போட முடியாமல் கொஞ்சம் திணறுவேன். இ யை சுழிக்க தொடங்கி எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் இ சுழிப்பில் முடிவை ஒரு மூன்று சுற்றாவது சுற்றுவிடுவேன், சுழிப்பை சரியாக நிறுத்தப் பழக ஒரு திங்கள் பிடித்தது. முதல் வகுப்பிற்கு ஆசிரியைதான். கொஞ்சம் கண்டிப்பானவர், ஐந்தாம் வகுப்பு வரை இருபால் வகுப்பு (கோ-எஜுகேசன் ) தான், ஆசிரியையின் பெயர் கொஞ்சம் ஆழ்ந்து நினைத்தால் வந்துவிடும், தற்போதைக்கு நினைவு இல்லை. ஆனால் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இரண்டாம் வகுப்பு : நேசம்மா டீச்சர், பெந்தகோஸ் கிறித்துவர் மிகவும் அன்பானவர், சனிக்கிழமைகளில் சமய வகுப்புகளுக்கு அழைப்பார், நாங்களும் கூடவே சேர்ந்து 'ஏசு என்னை இரட்சிப்பார்' என்று பாடிவிட்டு கொடுக்கும் திண்பண்டங்களைத் தின்று வருவோம். தவறு எதும் செய்ய வில்லை, பசங்க தவறுதலாக எதோ போட்டுக் கொடுக்க டீச்சர் பிரம்பால் அடிக்க, எனக்கு கடும் சினம், பிரம்பை பிடிங்கி எறிந்தேன். அப்பறம் ? உங்க அம்மாவை கூட்டிவந்தால் தான் பள்ளிக்கு வரமுடியும் என்று டீச்சர் சொல்ல, அதுக்கெல்லாம் அப்ப அச்சமே இல்லை, கூட்டி வந்தேன்.
மூன்றாம் வகுப்பு : ஆசிரியை தான், பெயர் நினைவு இல்லை, அவருடைய மகள் அக்காவுடன் படித்ததால் 'நேவிஸ் அம்மா டீச்சர்' என்று அக்கா சொல்வது நினைவில் இருக்கு. டீச்சரின் கணவர் கொடுமைக்காரர், அவர் டீச்சரை தாறுமாறாக அடித்ததால் டீச்சருக்கு காது சரியாக கேட்காது. பசங்க பேசிக் கொண்டு இருந்தாலும் அமைதியாக இருப்பார், நாங்கள் படித்து முடித்த பிறகு காது சரியாக கேட்காததால் ஒன்றாம் வகுப்புக்கு மற்றிவிட்டு ஒன்றாம் வகுப்பு டீச்சரை மூன்றாம் வகுப்புக்கு மாற்றினார்கள். கூட படித்த செல்வம் என்கிற மாணவனை கண்டிப்பு என்ற பெயரில் அவனுடைய பெற்றோர்கள் சூடு போட்டு அனுப்பி இருந்தார்கள். அப்படியும் பெற்றோர்கள் இருப்பார்களா ? இப்பவும் நினைத்தால் நடு முதுகு சில்லிடுகிறது.
நான்காம் வகுப்பு : ஆசிரியர் ; இப்போது கடைத்தெருவில் பழக்கடை வைத்திருக்கிறார். கண்டிப்பானவர், அப்போது வரும் இந்திப்படங்களில் நாயகர் வைத்திருக்கும் முடி அலங்காரத்தை இவரும் செய்திருப்ப்பார். மாணவர்களைவிட மாணவிகளுக்கு மதிப்பெண் மிகுதியாகப் போடுகிறார் என்கிற கடுப்பு எனக்கு இருக்கும், நான் தான் மதிப்பெண் நிறைய வாங்குவேன். வேண்டுமென்றே இறுதியாக குறைத்துப் போட்டிருப்பார், அடித்து திருத்தியது நன்றாக தெரியும். ஸ்கூட்டரில் தான் வருவார். பேரு 'ஹரி தாஸ்'. பத்து ஆண்டுக்கு முன்பு ஹரி தாஸ் ரிடையரான ஆன பிறகு அவர் தனது விவசாய நிலத்தை விற்க, நாங்க தான் வாங்கினோம். இப்ப கூட அவரது பழக்கடை வழியாகச் சென்றால் பார்த்துப் பேச பயம் தான். மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும், நான்காம் வகுப்பில் பாடமாக படிக்கத் தொடங்கியது, நினைவுக்கு இருக்கிறது. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் முன்பு ஒரு பாடத்தின் தலைப்பை நானாகவே எழுத்துக் கூட்டி 'Vilupuram Junction' என்ற ஆங்கிலச் சொல்லை சரியாக 'விழுப்புரம் ஜெங்சன்' என முதன் முறையாக படித்துக் காட்டி உடன் படிக்கும் மாணவர்களிடம் 'ஹீரோ' ஆனேன்.
ஐந்தாம் வகுப்பு : ஆசிரியர் பேரு சுப்ரமணியம், அவரு ஐயரு என்பது அப்போது தெரியாது. நல்ல மனுசன், எப்போதும் மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதால், அவருக்கு 'மூக்கு நோண்டி சார்' என்பது பட்டப்பெயர். 'சார் உங்களை மூக்கு நோண்டி' என்று சொன்னான் என்று கூடப் படிக்கும் மாணவர்களை மாட்டிவிடுவதும், மாட்டிக் கொண்டு முட்டிப் போட்டதெல்லாம் ஐந்தாம் வகுப்பி நடந்தேறியது. தேர்வெல்லாம் மரத்தடியில் தான், கொய்யாப் பழம், நாவல் பழம் கொண்டுவந்து தருபவர்களுக்கு நான் எழுதியதைக் காட்டுவேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எங்கள் ஊரில் புயல் அடித்தது, ஒரு மாதம் பள்ளிக்கட்டிடத்தில் மேல் கூரை இல்லை, எங்களுக்கு படிப்பும் இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை நான் தான் வகுப்பின் முதல் மாணவன்.
கூடப் படித்த மாணவிகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை ? அவங்களெல்லாம் புள்ளக் குட்டிப் பெத்து இருப்பாங்க, சிலருக்கு பேரன் பேத்தியே பிறந்திருக்கும். நீதிபதி ஒருவரின் மகள் பெயர் ஜெயந்தி, வட்டாச்சியர் ஒருவரின் மகள் பெயர் ஹேமா, துணை கண்காணிப்பாளர் ஒருவரின் மகள் பேரு திலகா..... இதில் திலகா வை தக்காளிப்பழம் என்று கிண்டல் செய்ய, அது அழுது கொண்டு ஆசிரியரிடம் முறையிட அடிக்கடி எங்களுக்கு அடிவிழும். ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அந்த பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. பள்ளி இடைவேளைகளில் திறந்த வெளிக்குச் சென்று பாத்தி கட்டி ஒண்ணுக்கு அடிப்பது போன்ற விளையாட்டுகளும், யாரு ரொம்ப தொலைவில் ஒண்ணுக்கு அடிப்பது போன்ற போட்டிகளும் நடைபெறும்.
கெட்ட கெட்ட வார்த்தைகளெல்லாம் அப்ப தான் கற்றுக் கொண்டு, வாய்தவறி சொல்லிவிட்டு பெற்றோர்களிடம் முதுகு வீங்க வாங்குவது...இன்னும் எத்தனையோ சாகசங்கள் எழுதி மாளாது.தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,
Starjan(நிலா அது வானத்து மேல!)
திகிழ்மிளிர் (என்றும் அன்புடன்)
விஷ்ணு (சில நேரம்)
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !