பின்பற்றுபவர்கள்

சீசன் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீசன் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 டிசம்பர், 2011

நாகை புயல் பற்றிய அனுபவம் !

1952, 1977 நாகை வாசிகளால் மறக்க முடியாத இரு ஆண்டுகள், ஆம் இந்த இரு ஆண்டுகளில் நாகையை பலத்த சூறைகாற்றுடன் புயல்கள் தாக்கின. இரண்டு முறை தான் புயல் நாகையை தாக்கியுள்ளது என்றாலும் நாகையும் புயலும் தமிழக மக்களால் ஒன்றை ஒன்று நினைவு படுத்துகையில் தொடர்பாக வரும் பெயர்கள், 'நாகை என்றாலே புயல் அடிக்கும் ஊர்' என்ற எண்ணத்தை உறுவாக்கியது. 1952 ஆம் ஆண்டு புயலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்போது பிறந்திருக்கவில்லை. அம்மா அப்பாதான் அதுபற்றிக் கூறி இருக்கிறார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு புயலை நேரில் உணர்ந்திருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் அது என்று நினைக்கிறேன்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், நாகையில் தீபாவளிக்கு பிந்தைய ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்புகள் எப்போதுமே இருக்கும், நாகையை அடுத்து வேதாரண்யம் கோடியக்கரையில் நில அமைப்பும், கடல் கடற்கரை அமைப்புகளும் புவியல் ரீதியாக மாறுவதால் புயல் பெரும்பாலும் கரையைக் கடக்க அந்த இடத்தையே தேர்ந்தெடுக்கிறது, அது போல் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாக அந்தப்பகுதி கடலின் கிழக்கை தேர்ந்தெடுக்கிறது என்று ஊகிக்கிறேன்.

1977 க்கு முன் பெரியவர்கள் புயல் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அதை 1977 ல் நேரடியாக அனுபவிக்கும் போது தான் அவற்றின் தாக்கம் உணர்ந்தேன். பொதுவாகவே இந்திய புயல்கள் மழையோடு தான் வருகின்றன, புயல்வரும் முன்பே அதன் காற்றழுத்த மண்டலங்கள் மேகங்களை கூட்டி இருக்கும், மழை பெய்து கொண்டிருக்கும் போது புயலும் கரை கடந்துவிடும். பலத்த காற்றுடன் கூடிய மழையாகத்தாக பிற இடங்களில் நடக்கும் நிகழ்வு புயல்காற்றுடன் மழையாக புயல் அடிக்கும் இடங்களில் இருக்கும்.

நான் அறிந்த 1977 புயல் சரியாக பின்னிரவில் துவங்கி விடியற்காலை 5.30 மணிக்கு ஓய்ந்தது, அப்போது எங்கள் தெருவில் எங்கள் வீடு தவிர்த்து 10 குடும்பங்கள் உண்டு, அதில் எங்கள் வீடு தான் சிமென்டினால் கட்டப்பட்ட வீடு, நள்ளிரவுக்கு புயல் துவங்கியதுமே சன்னல் கதவுகள் அனைத்தையும் பெற்றோர்கள் சாத்திவிட்டு எங்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்தார்கள், வீடு தலையில் இடிந்துவிழுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தாலும் எங்களிடம் அதையெல்லாம் சொல்லவில்லை, திடிரென்று தெருவிளக்குகள், வீட்டில் உள்ள மின்சாரமும் தடைபட்டது, சிம்னி விளக்கை கொளுத்தி வைத்தால் அதுவும் வெளியே அடிக்கும் காற்று சந்து பொந்துகளில் புறப்பட்டு வந்து விளக்குகளை அனைத்தது. ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் மின்னல் வெளியே பெரும்காற்று வீசுவதில் அசையும் மரங்களை படம்பிடித்துக் காட்டின.

தெருவில் வசித்தவர்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு வீடே சரிய ஒவ்வொரு குடும்பமாக எங்கள் வீட்டை நோக்கி தடுமாறி மிகுந்த போராட்டங்களுடன் காற்றை எதிர்த்து எங்கள் வீட்டுக்குள் வந்தனர், எங்கள் பெற்றோர்கள் அனைவரையும் உள்ளே வரவழைத்தனர், அன்றைக்கு புயலுக்கு ஒதுங்க எங்கள் வீட்டிற்கு வந்தது சுமார் 50 பேர்களாகவது இருக்கும், அவ்வளவு பேரைத் தாங்கும் அளவுக்கு வீடு இல்லாவிட்டாலும், வேற வழியே இல்லை என்ற நிலையில் உட்காரவாவது பாதுகாப்பான இடம் கிடைக்கட்டம் என்று வெளியே சென்று என் அப்பா வாசலுக்கு வருபவர்களை உள்ளே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். வீடு இழந்தவர்கள் எல்லாம் போச்சே என்று அழுது கொண்டிருந்தனர், எங்கள் வீட்டிற்குள் பெரியோர்களையும், சிறுவர்களையும் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர், மொத்தமே 200 மீட்டர் தொலைவிற்குள் இருந்த குடும்பங்கள் தான் என்றாலும் 160 கிமி வேகத்தில் வீசும் காற்று அடுத்த அடி வைக்கவிடாது தள்ளிவிடும் ஆற்றல் பெற்றது கூடவே மழை, கடும் இருட்டு, கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாலே மரங்களில் இருந்து காற்றினால் பிய்த்து எரியப்படும் இலைகள் கண்ணை பழுதாக்கும் அளவுக்கு வந்து விழும், தெருவில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வேறு இடத்தை அடைய முடியும், பக்கத்தில் பள்ளிக்கூடம் இருந்தாலும் பூட்டப்பட்டு இருக்கும் என்பதால் தெருவில் இருந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் நாடினர்.

புயல் முடிந்த காலை வெளியே வந்து பார்த்தால் எந்த ஒரு மின் விளக்கு மரமும் நின்ற இடத்தில் இல்லை, ஒன்று படுத்து கிடந்தது, அல்லது வளைந்து பக்கத்தில் எதன் மீதாவது சாய்ந்து கிடந்தது, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே இருந்த மிகப் பெரிய ஆரசமரம் சாய்ந்து கிடந்தது, சிறுவயதில் பொழுது போக்காக அதனடியில் கூடிக் களித்திருந்தோம், மாங்காய் சீசன் வேறு என்பதால்மா மரங்கள் இருந்த இடங்களில் தரையெங்கும் மாங்காய்கள், அவற்றை மூடி சாய்ந்து கிடந்த மாமரங்கள், பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்த தென்னைமரங்களில் பலவற்றை காணமுடியவில்லை, எல்லாம் சாய்ந்துவிட்டது, ஊரில் 60 விழுக்காட்டு மரங்கள் அனைத்துமே சாய்ந்துவிட்டன, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது, பறவைகள், கோழிகள் செத்துக் கிடந்தன, கால்நடைகள் (வயிறு உப்ப) செத்துக் கிடந்தன, சுவர் இடிந்துவிழுந்து, மரம் விழுந்து சிலர் செத்துப் போய் இருந்தார்கள், ஊரே பதட்டத்துடன், பயத்துடன் இருந்தது.



புயல் முடிந்தாலும் அவர்கள் எங்கு செல்வார்கள், ஏற்கனவே வீடுகள் இருந்த களைக்கப்பட்டு குட்டிச் சுவர் போன்று நின்றன, அவர்களுக்கும் உடனடி போக்கிடம் இல்லை, புயல் முடிந்த நாள் முதல் அடுத்த பதினைந்து நாளைக்கு சாப்பாடு, சமையல் எல்லாம் பொதுவாகவே நடந்தது. சிலர் பள்ளுக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்குச் சென்று தங்கினர்

பள்ளிகளெல்லாம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டு இருந்தது, பல்வேறு நல அமைப்புகள் மற்றும் அரசு உதவிகளாக உணவுப் பொருள்கள் துணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தன. இப்போது நினைத்தாலும் புயலுக்கு முன் இருந்த மரங்கள், அருகில் இருந்த (பழைய) கூரை வீடுகள் நிழலாக தெரியத்தான் செய்கிறது. இன்னும் கூட தெருவில் வசித்தவர்களில் மீதம் இருப்போர் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் வந்ததை நினைவு வைத்திருக்கின்றனர், அப்போது சிறியவர்களாக இருந்தவர்களுக்கு தற்போது 35 - 40 வயதாகிவிட்டது, இளைஞர்களாக இருந்தவர்கள் முதுமை அடைந்துவிட்டார்கள், முதியவர்களாக இருந்தவர்கள் ம்ரணித்துவிட்டார்கள்

24 அக்டோபர், 2011

தீவாளி !

தீபாவளி என்று எழுத்துக் குறையாமல் (அக்ஷ்ரம் சுத்தமாக..ம்பா) சொல்லிப் பழகி இருக்கவில்லை, நாங்கள் சிறுவயதில் பெற்றோர்களைப் பார்த்து தீவாளி இன்னும் 40 நாளில் 30 நாளில் 20 நாளில் 10 நாளில் வருது என்று நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருப்போம், காரணம் புத்தாடை, பட்டாசு கொஞ்சம் காசு கிடைக்கும், அப்பா வாங்கிவரும் பட்டாசுகளை வயதுக்கேற்ற வகைகளை பங்குபிரித்து தீவாளிக்கு முதல் நாள் இரவில் துவங்கும் வெடிச்சத்தம் மறுநாள் நடு இரவு வரைத் தொடரும், வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி எடுத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து அவற்றின் மருந்துகளை ஒன்றாகக் கொட்டி பத்தவைத்துவிடுவோம், பல தடவை திடிரென்று பற்றிக் கொண்டு கைகளை ஓரளவுக்கு வேகை வைத்திருக்கிறது என்றாலும் அந்த பயமின்றி அதே வேலை மறு ஆண்டுகளிலும் தொடரும்.

முதல் நாள் பின்னிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, முகம் கழுவச் சொல்லி, பல் விளக்கச் சொல்லி சாமி அறைக்கு அழைத்துச் சென்று நிற்கவைப்பார்கள், அதற்கு முன்பே புத்தாடைகளுக்கு சந்தனமும், குங்கமும் இட்டு வைத்து, நல்லெண்ணை, சீயக்காய் வைத்து கொஞ்சம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிடச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் அப்பாதான் தலையில் எண்ணை வைத்து தேய்த்துவிடுவார், தீவாளி லேசான குளிர்காலம் ஆகையால் வெதுவெதுப்பான வெண்ணீர் சுடவைத்து அண்டாவில் கலக்கி வைத்திருப்பார்கள், எண்ணைப் போக சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்.

அம்மா உள்ளிட்ட அனைவரும் குளித்த பின்பு, புத்தாடைகளை அணிந்து, விடிய விடிய செய்த அன்றைய பலகாரங்களான சுழியம், மசால்வடை, மெதுவடை, இட்லி, தோசை ஆகியவற்றுடன் முன்பே செய்த முறுக்கு, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, அதிரசம், சோமாசா உள்ளிட்டவைகளுடன் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து சாமி அறையில் வைத்து படைத்துவிட்டு சூடம் கொளுத்தியதும் கும்பிட்டுவிட்டு, அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் ஆசியுடன் சேர்ந்தே கிடைக்கும், பிறகு அனைவரையும் வரிசையில் அமரச் செய்து உணவு உண்போம், அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களும் சில்லரைகள் மற்றும் பலகாரங்களைக் கொடுப்பார்கள், எண்ணைப் பலகாரங்களைத் தின்று தின்று மதியம் பசியே எடுக்காது.

பின்னர் நண்பர்கள் (10 - 15 வயது) புடைசூழ திரையரங்கிற்குச் செல்வோம், மதியம் சென்றால் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைக்கும், மூன்று மணி நேரம் அடுத்தக் காட்சிக்காக நீள் வரிசையில் நின்றால் தான் அதுவும் கிட்டும், படம் பார்க்க வரும் கிட்டதட்ட 90 விழுக்காட்டினர் புத்தாடை அணிந்திருப்பர். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எஞ்சிய வெடிகளில் கொஞ்சம் கார்திகை மாத சொக்கப்பானையுடன் வெடிக்க எடுத்து வைத்துவிட்டு மீதத்தை கொளுத்துவோம், அப்படியாக ஆண்டு ஆண்டுக்கு தீபாவளி செல்லும். சின்ன வயசில உடம்புல அறுவாள் மனையா இருக்கும் ? ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஆடையும் கிழியாமல் இருந்ததில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு சிறியதாகிவிட்டது என்று பயன்படுத்தாமல் விடுப்பதைத் தவிர்த்து எந்த ஆடைகளும் கிழிவதே இல்லை. பள்ளிச் சீருடைத் தவிர்த்து புத்தாடை வாங்கும் பழக்கம் ஏழ்மையான குடும்பங்களுக்கு தீபாவளி அன்று தான் வாய்ப்பே. அப்படித்தான் எங்களுக்கு புத்தாடை கிடைக்கும் என்பதால் தீபாவளி வருகிறதென்றால் மகிழ்ச்சி பொங்கும்.

*****

இன்றும் பழக்க வழக்கங்களாக பண்டிகைகள் தொடரத்தான் செய்கின்றன, இன்றைய தேதிகளில் ஆடை வியாபரங்கள் உள்ளிட்ட தீபாவளி வியாபரங்கள் பெருகி இருக்கும் அளவுக்கு கொண்டாட்டங்கள் பெருகி இருக்கவில்லை என்பதே உண்மை. ஆண்கள் வெள்ளைக்காரன் பேண்டுக்கு மாறிவிட்டு பெண்களை மட்டும் இந்திய ஆடைகளை அணிய பணிக்கிறார்கள், பண்பாடுகளை பெண்கள் மூலம் தான் காக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது, ஆனால் புடவைகள் மற்றும் பஞ்சாபி சல்வார் உடைகளில் இன்றைய வடிவமைப்பு மற்றும் அதன் விலைகளை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் இன்னும் ஆடைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்க ஆண்களின் கட்டுப்பாடு காரணம் அல்ல, அவற்றின் விலைகளும் அவற்றின் பகட்டுமே காரணம் என்று புரிந்தது, 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடைவுக்கு கிடைக்கும் மதிப்பு என்ன தான் நவீன நவநாகரக விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தாலும் கிடைப்பதில்லை என்பதால் தான் பெண்கள் இன்னமும் புடவைக்கும் சல்வாருக்கும் விடைச் சொல்லாமல் இருக்கிறார்கள் என்பது தீபாவளி துணிச்சந்தைகளை வைத்து தெரிந்து கொண்டேன்.

பட்டாசுகளுக்கு மவுசு குறைந்துள்ளதை சென்னையில் என்னால் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது, பெரிய அளவு கூட்டமில்லை, விலைகளும் விண்முட்டும் அளவுக்கு இருந்தது, பட்டாசுகளைப் புறக்கணிப்பது நல்லது தான். 'சின்ன சின்ன பிஞ்சு விரல்களாய் தீப்பெட்டிக்குள் தூங்குகிறது தீக்குச்சிகள்' என்று சிறுவர்களை வேலை வாங்கும் தீப்பெட்டித் தொழில் பற்றிய கவிதையை எப்போதோ படித்திருக்கிறேன்,

குழந்தைகளுக்கு தேவையான உடைமைகளை அவ்வப்போது வாங்குவதால் தீபாவளிக்கு வாங்குவது என்பதில் எந்த தனிச்சிறப்போ அவர்களுக்கு எதிர்பார்ப்போ எதுவும் இல்லை, அது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது அவ்வளவே.

இன்றைய தீபாவளிகள் தீவாளி அல்ல, இன்றைய தீபாவெளிகள் பணப்புழக்கம் ஏற்படுத்த மட்டுமே வழி செய்கிறது, துணி உள்ளிட்ட சந்தைகளின் விற்பனையைப் பெருக்குகிறது. அனால் முந்தைய தீவாளிகளில் கொண்டாட்டங்களும் இருந்தன. பண்டிகைகளை மறந்துவிட்டால் பண்பாட்டை தொலைத்துவிடுவோம் என்கிற அச்சத்தில் தான் தீபாவளிகள் ஒப்பேறி வருகின்றன. சிங்கையில் தீபாவளிக்கு விடுமுறை என்பது இங்குள்ள இந்துக்களுக்கு கிடைத்த வரம் தான். சிங்கையில் குட்டி இந்தியா பகுதிகள் களைகட்டி இருக்கும்.

இராவணனைக் கொன்றது தான் தீபாவளி என்று வட இந்தியாவிலும், நரகாசூரனை கிருஷ்ணன் அழித்தான் என தென்னிந்திய தீபாவளி கதைகளின் நதிமூல ரிஷி மூலங்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளைக் கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்,

1 செப்டம்பர், 2011

இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள் !

முன் எப்போதும் இல்லாத ஒரு காலத்தில் மாண்டுகன் என்ற ராட்ஷதன் வாழ்ந்து வந்தான், அவன் பல பராக்கிரமங்களைப் பெற்று இருந்தான். மிகவும் துஷ்டன், மஹா கிராதகன், அவனுக்கு மூன்று லோகத்தையே ஆளவேண்டும் என்ற பேராசை அவா எழுந்தது, அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா ? மூவுலகையும் கைப்பெற்றும் உபாயம் யாது ? என்று கேட்டு காட்டில் கடும் தவம் செய்த ரிஷிகளையெல்லாம் கட்டித் தூக்கி வந்து கட்டிப் போட்டு, உபாயம் சொல்லாதவர்களின் தலைக்கு தீ வைத்தான், எவருக்கும் மூவுலகை கைப்பற்றும் உபாயம் தெரியவில்லை, முனிவர்கள் கண்கலங்கினார்கள், அந்தக் கொடுமைகளையெல்லாம் ஆகாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாரதர், 'நாராயணா நாராயணா லோகத்தில் கலி முத்திடுச்சு.......நாம தான் இந்த சண்டாளனை ஒழிக்க வழிதேடனும்' என்று புறப்பட்டார்

"நாராயணா மாண்டுகனின் அட்டகாசம் பார்த்தீர்களா ? அஜித் படம் அட்டகாசமே நான் பார்க்கல, மாண்டுகன் வேற சினிமாவெல்லாம் நடிக்கிறானா ? என்று குதர்கமாக கேட்காமல் நாரதா, நானே நரகாசுரனை அழித்த நரக வேதனையாக ரொம்பவும் சோர்வாகி படுத்துருக்கேன், என் மச்சான் சிவபெருமானை வேண்டுமானால் பாரேன் என்று பொறுப்பாக பதில் சொன்னார், பகவானாச்சே.....!

அதற்குள் அந்த மாண்டுகன் பிரம்மரிஷி என்னும் ஜடாமாமுனியிடம் உபாயம் கேட்டு, சிவபெருமானை நோக்கி 300 ஆண்டுகள் தவம் முடித்து இருந்தான், அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான், பக்தா என்ன வரம் வேண்டும் கேள், எனக் கேட்க மாண்டுகனும் தந்திரமாக 'விலங்குகளாலும் மனிதர்களாலும் எனக்கு மரணமே நடக்காமல் இருக்க வேண்டும்' எனக் கேட்க, அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு உச்சிக்காலப் பூசைக்குச் சென்றுவிட்டார்.

வரம் பெற்ற மாண்டுகன் விடுவானா ? உடனே இந்திர லோகம் சென்று இந்திரனை துவைத்து எடுத்தான், தேவக் கன்னிகைகள் ரம்பை ஊர்வசி மேனகையை அந்தப்புரத்திற்கு தூக்கிவந்தான், இந்திர லோகம் பிடிப்பட்டது....விண்ணுலகு இந்திரலோகம் மண்ணுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கு நானே அதிபதி என்று கொக்கரித்தான், தேவர்களுக்கு கிலி பிடித்தது, இதனை பாதிவழியில் வந்து கொண்டிருந்த நாரதர் பார்க்க, இறங்கி வந்து அவர்களைத் தேற்றினார்.

அங்கிருந்து புறப்பட்ட நாரதர் கையாலம் வந்து, 'நாராயணா நாராயணா......பெரபோ......சிவபெருமானே நீங்கள் தான் மாண்டுகனிடம் இருந்து மூன்று லோகங்களையும் மீட்டுத் தந்து தேவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினார்.

'வரம் கொடுத்த நான் இனி ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கேன்' என்று கையைப் பிசைய. அவரது கையை இழுத்துக் கிள்ளி, நான் பார்த்துக் கொள்வதாகக் கூறினாள் அன்னைப் பார்வதி.

'அதாகப் பட்டது எனது சக்தியை ஒன்று திரட்டி உங்கள் சக்தியை பூசி மொழுகி, நான் விநாயகரை உருவாக்கப் போகிறேன், அவன் அந்த மாண்டுகனை அழிப்பான் என்று கூறினாள். பகவான் பகவதி எண்ணமாச்சே.... பலிக்காமல் போய்டுமா ? அன்னிக்கு நிறைஞ்ச அம்மாவாசைக் கழிஞ்ச நாலாம் நாள், சதுர்த்தி. மனுசாள் உடம்பு, கஜ முகத்தோடு விநாயகர் பொறந்துட்டார், மனுசனும் இல்லை மிருகமும் இல்லை, மாண்டுகனை அழித்தார், துஷ்டன் ஒழிந்தான் என்று கூறி தேவர்கள் அன்றிருலிருந்து விநாயகரைக் கொண்டாடினார்கள், அதே காரணத்திற்காக பகவானை சேவிக்கிற நாமெல்லாம் இன்னிக்கு விநாயகரைக் கொண்டாடுகிறோம்.



கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

பிகு: இது விஜய் டிவியில் காலையில் பக்தி பார்த்துவருவதன் எஃபெக்ட், விஜய் டிவில யாரோ ஸ்திரி பிராம்ணாள் , நன்னா ஸ்பஷ்டமாக படிச்சுக் கொடுக்கிறா, நன்னா இருக்கு. இந்த பிள்ளையார் கதையை ஏதேனும் புருட புராணத்தில் சேர்த்தால் காஃபி ரைட் பிரச்சனை எதுவும் வராது என்று நான் உறுதி அளிக்கிறேன். ஏன்னா இந்த மேற்கண்ட (மொக்கை) கதையை நான் தான் எழுதினேன்.

14 ஆகஸ்ட், 2009

கனவு காணலாம் வாருங்கள் !

1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு என்று சொல்வதைவிட ஆளும் வர்கத்திற்கு, மதவெறியர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் என்றே சொல்ல வேண்டும், மதவெறியர்கள் சுதந்திரமாக காந்தியைச் சுட்டுக் கொள்வதற்கும், பாகிஸ்தான் பிரிவினைக்கும் வழிவிடப்பட்ட ஆண்டே 1947. உறுதிமொழி என்ற பெயரில் மாணவர்களுக்கு சொல்லப்படும் நாட்டுப் பற்று, நாட்டை வழி நடத்துவதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளால் சந்தி சிரிக்கிறது, ஆம் சுவிஸ் போன்ற வெளி நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள அரசியல்வாதிகளின், பினாமிகளின், முதலாளி வர்கங்களின் பணத்தொகை இந்தியாவைத்திருக்கும் வெளி நாட்டுக் கடனைவிட மிகுதி. இவை அனைத்துமே இந்தியாவை சுதந்திரமாக சுரண்டிய பணம் தானே ?

கையால் தைக்கப்பட்ட பிச்சைக்காரனின் உடை போல ஒட்டுப் போட்ட நாடாக பல்வேறு மொழி பேசும் மானிலங்களை ஒன்றிணைத்து இந்தியா எனப்படுகிறது, ஆனால் வாழ்வாதரமான தண்ணீர் தேவைகள் இந்தியா ஒரே நாடு அல்ல அவை ஒரு தோற்றமே என்பதாக அவ்வப்போது உணர்த்துகின்றன. மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிக் கொண்டாலும் இந்துப் பெரும்பாண்மை, இந்து வெறி தூண்டப்பட்ட மாநிலங்களில் பிற மதத்தினர் அச்சத்துடன் வாழ்வது சுதந்திரமா ?

வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைப் பெற்றதாக நினைக்கும் நம் நாட்டில் வெள்ளையர்களின் முதலீடுகள் என்ற பெயரில் இந்தியர்கள் (வளம், உழைப்பு என) தொடர்ந்து சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள், மதவாதமும், முதாலித்துவம் (பண்ணையார்கள்) போற்றும் இரு பெரும் தேசியக் கட்சிகளைத் தவிர்த்து வேறொரு நல்ல ஒரு அரசியல் தலைமை இந்தியாவிற்குக் கிடைக்காமல் போனதற்கு மாநில அரசியல்வாதிகளின் சுயநலம் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும் ? தேசிய, மாநில அரசுகளை எதிர்த்துக் கிளம்பும் போராட்டக்காரர்களை தேசவிரோத குழுக்களாக அடையாள படுத்திவைக்க இன்றைய அரசியல் சட்ட அமைப்பு சுதந்திரம் அளித்திருக்கிறது.

அனைவருக்கும் ஒரே மொழி என்ற பெயரில் வடமாநிலத்தவர் பேசும் இந்தி தமிழகம் தவிர்த்து எங்கும் திணிக்கப்பட்டு அம்மாநிலங்களின் மொழிகளை விழுங்கி வருகின்றன. இதன் காரணமாக தென் மாநிலங்களில் பல துவக்க நிலை பள்ளிகளிலும் மாநில மொழிகளைப் பயில்வதற்கு யாரும் இல்லாமல் மாநில மொழிப் பாடத்திட்டங்கள் கைவிடப் படுவதாக செய்திகள் வருகின்றன. தமிழுக்கும் அதே நிலை என்றாலும் அவ்வளவு சீர்கெட்ட நிலை ஏற்படாதது இந்தி எதிர்பால் நமக்கு கிடைத்த நன்மை. இன்றும் கூட இந்தி அபிமானிகள் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு தமிழகத்தின் இந்தி எதிர்ப்பே காரணம் இல்லை என்றால் வடமாநிலத்தின் வளங்களை நாங்கள் வலைபோட்டு தமிழகத்துக்கு அள்ளி வந்திருப்போம் என்று பேசுகிறார்கள் என்பது விந்தைதானே ?

பெயரளவில் திராவிடம் வைத்துக் கொண்டு குடும்ப அரசியல் நிறுவனங்களாக தமிழக அரசியல் கட்சிகள் வளர்ந்து நிற்பதும் சுதந்திர இந்தியாவின் பரிணாமம், பிற மாநிலங்களிலும் இதே நிலைமை என்பதால் தமிழன் தனித்துவிடப் படவில்லை என்று ஆறுதல் அடையலாம். வெள்ளையர் ஆட்சியில் முன்பு கொத்தடிமைகளாக இருந்தவர்கள் இன்று இலவச அடிமைகளாக அடிமை வாழ்கையைத் தொடர்கின்றனர்.

படித்தவன் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறான் நாட்டை முன்னேற்றுவது எப்படி ? என்கிற ஞாயமான கேள்வி கேட்பதாக நினைப்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவும். வேறெந்த காலகட்டங்களிலும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் மிகுதி. நாள் ஊதிய வேலை முதல் நாசா விஞ்ஞானிகள் ஆகும் அளவுக்கு மக்கள் வளமும், கல்வி அறிவும் பெற்ற ஒரு நாட்டில் அவர்கள் அனைவருக்குமே இந்தியாவில் நல்லொதொரு வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு யார் காரணம் ? சுதந்திரம் பெருவதற்கு முன்பு கூட வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவர்கள் கூட திரும்பி இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் நிலை இருந்தது, சுதந்திரம் பெற்ற பிறகு படித்தவர்களும், படிக்காதவர்களும் வெளிநாடுகளைத் தேடி ஓடும் நிலைதான் உள்ளது. படித்தவன் வாய்ப்புக் கிடைத்தால் ஓடிவிடுகிறான் என்றே ஒத்துக் கொண்டாலும், அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளில் நாள் கூலிக்கு செல்பவர்கள் அங்கே கொத்தடிமைகளாகத் தொடர்வதும், அவர்கள் முறையான வேலை அனுமதியின்றி ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு சிறைகளில் அடைபடுவதும், அப்படியே எல்லாமும் பெற்றுச் செல்பவர்கள் அந்நாட்டில் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, சித்திரவதை பட்டு எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறை தண்டனைப் பெறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 1000க் கணக்கில் கூடிக் கொண்டே செல்கிறது, இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ் மக்களுக்கும் இதே நிலைதான்.

சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவை விட்டு வெளியேறினால், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. நமக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று "கனவு காணலாம் வாருங்கள்" என்று ஊக்கப்படுத்த கலாம்கள் இருக்கிறார்கள், அந்தப் பெருமையில் இன்னொரு சுதந்திர நாள் வந்து போகப் போகிறது.

சென்ற ஆண்டு எழுதியது இங்கே...

11 டிசம்பர், 2008

இறைவன், ஒளி, பகுத்தறிவு பகலவன், கார்த்திகை தீபம் !

தீபம் என்ற வடசொல் தீ என்கிற தமிழெழுத்தில் இருந்து 'படைத்துக்' கொண்ட ஒரு சொல். தீபம் என்பதற்கு சரியான தமிழ் சொல் 'சுடர்'. இரவின் ஒளிவெள்ளமான முழுநிலா நாளை பல சமயங்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர். பவுத்த சமயத்தில் 'புத்த பூர்ணிமா' என்கிற பண்டிகை முழுநிலா நாளை ஒட்டிக் கொண்டாடப்படுபவை. இந்திய சமயங்களில் முழுநிலா நாள் இறை நம்பிக்கையை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. முழுநிலாவில் முழுமையான ஒளி கிடைப்பதால் ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளில் சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப் பூரம், தைப்பூசம், வைகாசி விசாகம் (புத்த பூர்ணிமா) போன்றவை சிறப்பான முழுநிலா நாட்களாக கருதப்பட்டு கொண்டாப்படுகிறது. தைப்பூசம் மற்றும் சித்திரா பவுர்ணமி ஆகியவை முருகனுக்கு உகந்த நாளாக கருத்தப்பட்டு அந்நாளில் காவடி எடுப்பது வழக்கம். தைபூசம் வள்ளலார் மன்றத்தினரால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வளர்ச்சி என்னும் பாசிடிவ் சித்தாந்ததில் வளர்பிறை நாளில் எதையும் தொடங்கினால் எதுவும் வளர்ச்சி அடையும் என்பது இந்திய சமய நம்பிக்கை. இஸ்லாமிய சமயத்தினரும் வளர்பிறையை ஒட்டி அவர்களது பண்டிகைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மரணம் என்பது கெட்ட நிகழ்வென்பதால் முற்றிலும் நிலா கருமையான நாளான அமாவாசை (கருநிலா) நாளில் திதி போன்ற மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்கிறார்கள்.

வெளிச்சம், அல்லது ஒளி என்பது அறிவு என்றும் கருமை என்பது அறியாமையையும் குறிக்கும் ஒரு குறியீடாக பயன்படுத்துக்கிறது. இறைவன் பேரரறிவு உடையவன் என்பதற்காக இறைவன் ஒளிமயமானவன், பேரொளி என்பதே அனைத்து சமயங்களின் அடிப்படை நம்பிக்கை, அதற்கு பிறகு தான் மதம், வழிபாடு, உருவமுள்ள வழிபாடு உருவமற்ற வழிபாடு, ஓரிறைக் கொள்கை, பரப்பிரமம் எல்லாம். அறிவொளி / ஆன்மிக ஒளி என்பதன் குறியீடாகவே ஆன்மிக பெரியோர்கள், மற்றும் உருவ வழிபாட்டுச் சின்னங்களில் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் வரைகிறார்கள்.

விளக்கேற்றுவது என்பது வெளிச்சம் பெறுவதற்கான நிகழ்வு. எனவே தான் விளக்கேற்றும் பழக்கம் வந்தது. அனைத்து சமய சமூகத்திலும் அது நெய்விளக்காக இருந்தாலும் சரி, விலங்கு கொழுப்பில் செய்யப்பட்ட மொழுகுவர்த்தியாக இருந்தாலூம் சரி விளக்கேற்றி வழிபடுவது என்பது இருள் எண்ணும் அறியாமையைப் போற்றிக் கொண்டு அறிவு என்னும் வெளிச்சம் பெருகிறோம் என்பதற்கான குறியீட்டு நிகழ்வு.

பகுத்தறிவு பகலவன் என்று பெரியாரைச் சொன்னாலும், புத்தரைச் சொன்னாலும் பகலவன் என்பதில் இருக்கும் ஒளியை பெரியாரின் / புத்தரின் அறிவுத் திறனுடன் ஒப்பிடுவதாகப் பொருள், அறிவென்பது வெளிச்சம் அல்லது ஒளியாகவே ஆத்திகமாக இருந்தாலும் சரி நாத்திகமாக இருந்தாலும் ஒரே பொருள் தான் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவானது இறைவனைப் போலவே ஒளிவடிவமானது என்ற பொருளில், இறந்தவர்களின் நினைவாக சிறிது காலம் அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீபம் ஏற்றிவைப்பார்கள்.

கார்திகை நாளில் தீபம் ஏற்றுவது இந்திய சமயத்தினரின் வழக்கமாகவும், திருவண்ணாமலையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. (அது சமண சமயச் சடங்கின் தொடர்ச்சி என்று ஒருசாரர் சொல்கின்றனர்), தீபத்திருநாளுக்கும், கார்த்திகை தீபங்களுக்கும் சமயக் கதைகளைத் தள்ளிப் பார்த்தால் ஒரே ஒரு வேறுபாடுதான் தீபத்திருநாள் அமாவாசையில் வருகிறது, இருள் அகற்ற ஏற்றும் ஒளி, கார்த்திகை தீபம் பவுர்ணமி நாளில் இறைவனின் நினைவுறுவதாக ஏற்றப்படுகிறது.

இறைவன் ஆன்மாவினால் (உள்ளார்ந்த அனுபவம்/தூய்ப்பு) கண்டுணரும் (வெப்பமற்ற) பேரொளி வடிவானவன் என்பதாகவே அனைத்து மதங்களின் நம்பிக்கை.

"சுடர்மிகும் ஜோதியிலே.... சுந்தரன் உ(ன்)னைக் கண்டேன்...." என்று இறைவனைஇ நினைத்து நெய்யாக உருகுபவர்களா நீங்கள் ? உங்கள்,

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் !




"நாய் கடிக்கிறது என்பதற்காக திருப்பி நீங்க கடிக்கனுமா ?" - பதிவுலக தம்பி.
"நல்ல கேள்வி...அப்படி நினைக்கிறதும் கூட தப்புதான்பா" - என்றேன்.

8 டிசம்பர், 2008

நடுநிலையைக் காப்பாற்ற ஒரு பதிவு !

அன்பு தம்பி ஒருவர், "அண்ணே...பக்ரீத்துக்கு ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு உங்க நடுநிலைமையை மெய்ப்பிங்கன்னு" சொன்னாரு,

தன்மானச் சீண்டல்.... சரி போடுகிறேன் என்றேன்.

*****

இந்தப் படத்தில் சிந்தும் இரத்தம் அனைத்தும், மதவெறிகளாலோ, பிறர் தாக்கியதாலோ வந்தது அல்ல.







தியாகமாம் !

தீமிதி, அலகு குத்திக் கொள்ளுதல் (இந்து மதம்), சிலுவையில் அறைந்து கொள்ளுதல்(பிலிப்பைன்ஸ் கிறித்துவர்கள்), தன்னைத்தானே எரித்துக் காட்டுதல் (புத்த பிட்ச்சுகள்), இவர்களைப் போல் இறைவனுக்காக இரத்தம் சிந்தும் வழக்கம் இஸ்லாம் சமயத்திலும் இருக்கிறது. சிறுவர்கள் கூட ஆயுதங்களால் கிழித்துக் கொண்டு இரத்தம் சிந்தி முகமது நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கின்றனராம். இந்தியாவில், சென்னையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இரத்தம் சிந்தும் ஊர்வலம் நடக்கும், நேரடியாக பார்த்திருக்கிறேன். எனக்காக இரத்தம் சிந்துங்கள் என்று எந்த கடவுளும் சொன்னது கிடையாது. ஒரு பகுத்தறிவாளனாக பார்த்தால் கண்டிப்பாக இவை அறிவற்ற செயல், இரத்தம் தேவைப்பட்டு கிடைக்காமல் எவ்வளவோ நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து தியாகம் செய்யலாம்.


இஸ்லாமியர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள் !

5 நவம்பர், 2008

தாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி !

வாக்களித்தவர்களிடம் உடனடியாக நடத்திய கருத்துக் கணிப்பின் படி பெண்களின் வாக்குகளைப் பெற்று ஒபாமா வெற்றி பெற்றிருப்பதாகத் தெரிகிறது. ஆண் வாக்காளர்களைவிட சுமார் 7 விழுக்காடு கூடுதலாக பெண் வாக்களர்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

மற்றவகையில்,



65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 45 விழுக்காட்டினர் ஒபாமாவுக்கு ஆதரவாகவும் 55 விழுக்காட்டினர் மெக்கைனுக்கு ஆதரவாகவும் ( பழம் பெருச்சாளிகள் என்பது இவர்கள் தானோ ?) வாக்களித்துள்ளனர்

45 முதல் 64 வரை என நடுத்தர வயதைக் கடந்தவர்கள் இருபக்கமும் சமமாக வாக்களித்துள்ளனர்

30 - 44 வயது வரை நடுத்தர வயதினர் 52 விழுக்காட்டு ஆதரவை ஒபாமாவுக்கு வழங்கியுள்ளனர்

18 - 29 வயது வரை இளம் வயதினர் 66 விழுக்காட்டு ஆதரவை ஒபாமாவுக்கு வழங்கியுள்ளனர்.

- இதன் மூலம் பெண்களும் இளைஞர்களும் ஒபாமாவை ஆதரித்தார்கள், கருப்பினத்தார் ஒருவரை அதிபராக்க விருப்பம் கொண்டிருத்தனர், அவர்களின் வாக்குகளே ஒபாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறது என்று தெரியவருகிறதூ

நான் முந்தைய பதிவு ஒன்றில், நாடா ? இனமா ? அமெரிக்கர்கள் முடிவெடுக்கும் அரைகூவல் என்ற கேள்விக்கு விடையாக... நாட்டு நலனை பெருவாரியான மக்கள் நினைத்திருந்தனர் என்றே தெரிகிறது.

வாழ்க ஜனநாயகம் !

பின்குறிப்பு : ஆஞ்சநேயரால் ஓபாமா வெற்றிபெற்றதாக சொல்லிக் கொள்ளும் பதிவுகள் இன்னும் வராமல் இருப்பது வியப்பளிக்கிறது, :) :) ஒபாமா வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சு.சாமி அனைத்துலக நீதிமன்றம் செல்லப் போகிறாராம் ? :) :)

15 ஆகஸ்ட், 2008

இந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் ! (என்னுடைய 2 காசு)

'கண்ணீரையும் செந்நீரையும் கொட்டி பெற்ற சுதந்திரம்...!' என்று வீரவசனமெல்லாம் எழுதப் போவதில்லை. பயப்படாமல் படிங்க :)

ஆளும்வர்கம் ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு மீண்டும் அடித்தட்டு மக்களை அடிமையாக்கிக் கொண்ட நாளே சுதந்திர தினம் என்கிறார்கள். சுதந்திர நாளை பெரியார் புறக்கணித்ததற்கு அடிப்படைக் காரணமும் இதுவேதான். வெள்ளைக்காரன் வந்திருக்காவிட்டால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு மாநிலங்களின் இணைப்பு நிகழ்ந்திருக்காது. அதற்காக வெள்ளைக்காரர்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே 90 வயதைத் தாண்டிய முதியவர் மகாத்மாகாந்தி கொடுரமாக கொலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் நினைத்திருந்தால் அவரை கொலை செய்வது கடினமான வேலையாக இருந்திருக்காது. அவர்கள் கூட காந்தியின் உயிருக்கு பாதுகாப்பு அளித்து அவரது போராட்டத்தை ஏற்கமுடியாவிட்டாலும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவே இருந்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் ஆண்டிலேயே காந்தியின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட்டது. மதவாதம் எவ்வளவு கொடியது என்று அந்நிகழ்வு புரியவைத்ததால் இன்னும் இந்தியாவில் மதவாதத்தை எதிர்க்கும் நல்லோர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் காந்தியைக் கொன்ற கொடியவனை இந்திய மக்களுக்கு நல்லவனாக்கிக் காட்ட முடியுமா என்ற நாடகங்களும் சுதந்திரமாகவே நடந்தேறிவருகிறது.

அண்மையில் தீண்டாமை சுவரை இடித்தற்காக எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலிசெய்து மலையேறிய பிள்ளைமார்களும், தலித் கிறித்துவர்கள் நுழையக் கூடாது என்ற கோஷமிட்டு 'தாய்' மதம் திரும்பப் போவதாக அறிவித்த வன்னிய கிறித்துவர்களும் தீண்டாமை அரக்கனை முதுகில் ஏற்வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழிக்கப்படாத தீண்டாமை கொடுமை சுதந்திர இந்தியாவைப் பார்த்து பல் இளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதையெல்லாம் விட சுதந்திர நாளில் கூட பாதுகாப்பு என்ற பெயரில் எவரையும் சந்தேகித்து ஆடை அவிழ்த்துப் பார்த்து அவர்களின் சுதந்திரத்தைக் கேள்விக் குறியாக்கும் அரசுகளை அவ்வாறு தூண்டுவதற்கு காரணமான தீவிரவாதிகள் ஆகியவை இருந்தாலும் ஆண்டு தோறும் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் போல் சுதந்திர நாள் வீர உரையாற்ற பலத்த பாதுகாப்போடு பிரதமர் உரையாற்றுவது சுதந்திர நாளின் நகை முரண் என்றாலும் பிரதமரின் உயிர் சுதந்திரமாக பறிக்கப்பட விடக் கூடாது என்பதால் அத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

சுதந்திரநாள் பழிப்புக்குறியதல்ல, ஆனால் சுதந்திரம் என்பதன் உண்மையான உணர்வை யாரும் அனுபவிக்கவில்லை என்பது உண்மைதானே ? வெறும் சடங்காகக் கொண்டாடப்படும் சுதந்திர நாள், உண்மையிலேயே அந்த நிலையை முற்றிலும் அடைந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நான் சுதந்திரமானவன் என்று நினைக்கும் படியும், ஒவ்வொருவரும் மதிக்கப்படும் நாள், வரும் ஆண்டுகளின் கொண்டாடப்படும் எதோ ஒரு சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கிடைக்கும், என்ற எதிர்கால நம்பிக்கையை இன்று கொண்டாடப்படும் சுதந்திர நாளும் ஏற்படுத்தும், என்ற இன்றைய நம்பிக்கையில் இருக்கும் உங்களைப் போல், நானும் மகிழ்வோடு இருக்கிறேன்.

தாய் திருநாடு இந்தியாவின் புகழும் வெற்றியும் என்று நிலைக்கட்டம் !

அனைவருக்கும் இனிய இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள் !

11 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் சுனக்கம் ?

100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே ஒரு தங்கம், அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. நமது நாட்டில் வீரர்களே இல்லையா ? பிறகு ஏன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி தகுதிச் சுற்றில் கூட தோல்வியைத் தழுவியது ?

இந்திய விளையாட்டு இது என கட்டமைப்பைச் செய்ததில் பண்ணாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது. வீட்டுக்குள்ளேயே சின்னத்திரை மூலமாக காட்டப்படும் அனைத்து விளம்பரங்களிலும் மட்டையாட்டமே (கிரிக்கெட்) முன்னிலையில் இருக்கிறது, பெயரளவுக்குக் கூட மற்ற விளையாட்டுக்களைக் காட்டாததால் மாணவர்களிடையே மட்டையாட்டத்தில் இருக்கும் ஆர்வம் வேறெதிலும் இல்லாமல் போனது.

உண்மையில் படகு செலுத்துதல், கால்பந்து, மல்யுத்தம், கபடி, வாலிபால் ஆகியவற்றிற்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் நாமும் உலக அளவில் வெற்றிபெற முடியும். இந்த விளையாட்டுக்கெல்லாம் அடிப்படையில் உடலில் உறுதி இருக்க வேண்டும். (ஜமாலன் கட்டுரை) உடலில் உறுதி உள்ளவர்களாலேயே இந்த போட்டியிலெல்லாம் பங்கெடுக்க முடியும், எல்லாவற்றிலும் சாதி அரசியல் இருப்பதால், இது போன்ற விளையாட்டுக்களுக்கெல்லாம் ஊக்கமும் கிடைப்பது இல்லை, உண்ணும் உணவு அடிப்படையில் கிடைக்கின்ற அதற்குத் தேவையான உடல் தகுதியுடன் விளையாடும் வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிலேயே இருக்கின்றன இவர்கள் கலந்து கொண்டால் கண்டிப்பாக போட்டிகளில் வெல்ல முடியும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தானே. மட்டையாட்டத்தில் வீரர்களுக்கு கொட்டும் பணம் ஒலிம்பிக் போட்டிகளில் கொட்டிவிடாது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் தவிர்த்து நல்ல உடல் தகுதி உள்ள மற்ற இளைஞர்களுக்கு மட்டையாட்டம் தவிர்த்த விளையாட்டுக்களில் ஆர்வம் வராமல் போனதற்கு காரணம் அதனால் பெரிய அளவில் பணமோ புகழோ கிடைக்காது, (ஜமாலன் மற்றொரு கட்டுரையைப் பார்க்க). ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் மாநில அரசு விளையாட்டு ஆசிரியர் வேலையும், ஒரு வீடும் கொடுக்கும், மத்திய அரசு எதோ பணமுடிப்பு கொடுப்பார்கள். பத்மஸ்ரீ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று அந்த போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்றால் தான் இவையெல்லாம். பெறாவிட்டால் நாய் கூட திரும்பிப் பார்க்காது, கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு ஆண்டுகணக்கில் ரிஸ்க் எடுத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாது வாழ்வை வீணாக்கிக் கொள்ளவேண்டுமா என்று தான் இளைஞர்களும் நினைப்பார்கள். இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நடப்பு நன்றாக தெரிவதால் பையன் படித்து நாலு காசு சொந்தமாக சம்பாதித்து நம்ம கையை எதிர்பார்க்கமல் இருந்தாலே போதும், என்று சொல்லி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தடை செய்துவிடுவார்கள்.

பள்ளிகளில் சாம்பியனாக வரும் மாணவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்ததும் முற்றிலும் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒலிம்பிக்கில் மிகுந்த தங்கம் பெற வேண்டும் என்ற 100 கோடி இந்தியர்களின் கனவு, விளையாட 10 பேரை அனுப்பி வைத்துவிட்டு எப்படி நிறைவேற்றுவது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாணவர்களை மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்க வேண்டும். விளையாட்டுக்கென்றே மாநிலம் தோறும் தனிக் கல்லூரிகள் அமைத்து பட்டப்படிப்பாகவும், பல்வேறு மாநில போட்டிகளை பல்வேறு விளையாட்டுக்களின் வழி நடத்தினால், படிப்பில் ஆர்வம் இல்லாத விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்கள் பயன்பெறுவர், அவர்களால் நாடும் பயன்பெறும்.

வெறும் மட்டையாட்டமே போதும் என்று இந்தியா நினைத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர விளையாட்டாக மாறி வீட்டுக்குள் இளைஞர்ர்களை முடக்கிப் போட்டு, இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் எந்த ஆர்வமும் இல்லாது செய்துவிடும்.

வெறும் 10 பேரே கலந்து கொள்ளச் செல்ல அனுப்பிவிட்டு 10 பேரும் தங்கம் பெற்று திரும்பவேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் ஞாயம். இவர்களுக்காவது கலந்து கொள்ளத் தகுதி இருக்கிறதே என்ற பெருமூச்சே வருகிறது.

ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்