பின்பற்றுபவர்கள்

27 ஏப்ரல், 2010

அச்சோ அச்சோ அச்சச்சோ !

இந்த செய்தியை படித்துவிட்டு 'வேண்டுதல்கள் என்றால் என்ன ?' என்று கேள்வி எழுகிறது.

மட்டை ஆட்டத்தில் தன் அணி வெற்றி பெற வேண்டும் அம்பாணி குடும்பத்தார் மூலம் 2 கோடி ரூபாய்களை திருப்பதி உண்டியலில் பெருமாளுக்கு (லஞ்சமாக) போடப்பட்டதாம், மும்பை அணி தோற்றுவிட்டதால் அதை மண்ணைக் கவ்வவைத்துவிட்டார் பெருமாள், பெருமாளே டோனிக்கு தான் ரசிகர் என்று சொல்லிவிடலாமா ? அல்லது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் சென்னை வெற்றி பெற இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் போட்டு இருப்பார்களோ ?

*******

* பக்கத்து வீட்டுக்காரன் பாடையில் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
* என்னை திட்டியவன் நாசமாகப் போகவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?

சிலர் வேண்டுதல் என்பதோடு நிறுத்தாமல் சூனியம் வைக்கவும் கிளம்புவார்கள், சூனியம் பலிக்கும் என்பது பலர் நம்பிக்கை, அப்படி என்றால் ஜெ சார்பில் கருணாநிதி குடும்பத்துக்கு சூனியம் வைக்கலாம். காங்கிரஸ் கோஸ்டிகள் உள்ளுக்குள் கோஷ்டி ஒழிப்பிற்கு சூனியம் வைத்து ஒழித்துவிட்டால் சோனியாவிற்கு தலைவலி மிச்சமாகும். சூனியம் சோதிடத்தின் ஒரு பிரிவு, கிரக நிலைகளை ஒப்பிட்டு ஒருவருக்கு மோசமான நிலை இருக்கும் போது சூனியம் வைத்தால் பலிக்கும் என்பது சூனியக்காரர்களின் சோதிட மற்றும் சூனிய நம்பிக்கை.

கிரிக்கெட் சூதாட்டங்களை தவிர்த்து பார்த்தால் விளையாட்டு என்பது இரு அணியினருக்கிடையேயான போட்டி, இதில் திறமை தான் வெற்றி பெரும், வெற்றி யை உறுதி செய்வோர் தவறிழைக்காமல் கடுமையாக போட்டி கொடுத்தால் வெற்றி பெற முடியும், விளையாட்டின் சித்தாந்தங்கள் அனைத்தும் இது தான். அது தவிர்த்து விளையாட்டில் வெற்றி என்பது எதிரியை ஏமாற்றுவதோ, குதறுக்கு வழியில் பெருவதோ இல்லை. தன் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதல் கூட தவறு இல்லை, ஆனால் அதற்காக முன்பணமாக உண்டியலில் லஞ்சம் போடுவதெல்லாம் இறை நம்பிக்கையை கேலிக் குரியாக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.

போட்டியில் வெற்றி பெருவதைவிட தோல்வியே அடையாமல் இருக்க வேண்டுமென்றால் போட்டி இடாமல் இருப்பது தான் ஒரே (மாற்று) வழி. அதை விடுத்துவிட்டு தோல்விக்கு அஞ்சி கடவுளுக்கு கையூட்டு கொடுப்பவர்கள் வெற்றி என்பதையே வாங்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் பொருள். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுதல்கள் பயனளித்தாலும் கூட போட்டியில் எதிரணியில் இருப்போரை ஏளனம் செய்வது போலாகும்.

திருப்பதி சாமி சென்னை அணிக்கு வேண்டாதவரா ? வெற்றி தோல்விகளில் மூன்றாம் நபர் தலையீடுகள் இல்லை என்றால் அது ஞாயமான முடிவாகும், அதில் ஆண்டவன் என்கிற மூன்றாம் நபர் தலையீடு இருந்தால்
கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது அநீதி தான்.

உண்மையைச் சொல்லப் போனால் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் நமாஸ் செய்தாலோ, சிலுவை குறி போட்டுக் கொண்டாலோ, இந்துக்களைப் போல் வேண்டிக் கொண்டாலோ அதை மாற்று மத சமூகத்தினர் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தரையில் விழுந்து அல்லாவுக்கு நன்றி என்று நமாஸ் செய்வதை ரசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர் யார் ?

விளையாட்டினுள் மதமோ வேண்டுதல்களோ நுழைவதை நேர்மையான விளையாட்டு என்று கொள்ள முடியுமா ? வேண்டிக் கொண்டு காசு போடுகிறவன் போடுகிறான் உனக்கென்ன என்று கேட்டாலும் கூட......'அட இவனுங்க நிஜமாலும் திறமையால் வெற்றி பெறவில்லையா ?' என்று பதில் வருமா வராதா ?

எந்த வித அநீதிகளும், ஞாயம் பற்றிய கேள்விகள் எதுவும் இல்லாத போட்டிகளில் தன்பக்கம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவோர் போட்டியிடாமல் இருப்பதே போட்டிக்கான நன்மதிப்பு. விளையாட்டில் அரசியல், மதரீதியான வேண்டுதலகள் இவையெல்லாம் நுழையும் போது திறமை என்பதே கேள்விக்குரியாகிவிடுகிறது.

26 ஏப்ரல், 2010

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்பனிய வாதிகள் !

நேற்று விஜய் தொலைகாட்சியின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய சூடான வாக்கு வாதங்களை கேட்க நேர்ந்தது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அதில் பலர் பேசத் துணிந்த உள் ஒதுக்கீடு என்னைக் கவர்ந்தது. உள் ஒதுகீடு என்றால் சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாதிகளில் பிறந்த பெண்களுக்கான ஒதுக்கீடுகள். 33 விழுக்காடு கொடுக்கலாமா வேண்டாமா என்பதில் பல்வேறு கருத்துகள் ஒலிக்கின்றன. தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் பார்பனிய சிந்தனைவாதிகளின் ஒட்டு மொத்தக் குரல் பெண்களுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதே.



விஜய் நிகழ்ச்சியில் முற்போக்கு வாதியாக தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் இரு இளைஞர்கள் பெண்களுக்கு அத்தகைய இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதை வழியுறுத்தினர். அது கிட்டதட்ட சோ இராமசாமி உதிர்த்தவற்றை டோண்டு இராகவன் வலைப்பதிவில் (பெண்களுகான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத கூத்து) மறுபதிவு செய்ததைப் போன்றே இருந்தது. பெண்கள் வேலைக்குச் செல்வதை விபச்சரத்துடன் ஒப்பிட்ட பெரியவாள்களின் குரலுக்குள் 'அடக்கமானவர்கள்' இவர்கள். இவர்களால் இப்படித்தான் பெண்களின் இட ஒதுக்கீட்டை 'கூத்து' என கேலி செய்து விமர்சனம் செய்ய முடியும். இவர்களின் வாதம்,

33 விழுக்காடு என்று ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள், இட ஒதுக்கீடே இல்லை என்றால் அவர்களால் 100 விழுக்காட்டில் கூட போட்டி இட முடியும் அல்லவா என்பது தான்.

இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக திணிக்க நினைக்கும் கருத்துகள் 33 விழுக்காட்டிற்கு மேல் பெண்களால் போட்டி இட முடியாது என்பதைத்தான். இட ஒதுக்கீடு என்பது அவ்வாறு 33 விழுக்காட்டிற்குள் பெண்களுக்கான வாய்ப்பைச் சுறுக்கவில்லை, ஆனால் குறைந்த அளவாக 33 விழுக்காடு கண்டிப்பாக உண்டு என்பதை வழியுறுத்துகிறது. இதை யாருமே விவாதத்தில் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

33 விழுக்காடு என்பது அவர்களுக்கு மட்டும் அதற்குமேல் உள்ள 67 விழுக்காடு அனைவருக்குமானது இதை சோ இராமசாமி போன்றோர் பேசுவதில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் பெண்களுக்கு 33 விழுக்காடு கிடைத்து விடக் கூடாது என்பதே. இந்த வாதத்தை மேலும் திரித்தலாகவும், மேலும் ஆணிய கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்த மற்றொரு பார்பனிய சிந்தனைவாத இளைஞர்
"ஒரு பெண்ணுக்கு ஒரு இடத்தை ஒதுக்குகிறோம் என்றால்....அதைவிட தகுதியான ஆண் ஒருவன் இருந்தால்......அவன் புறக்கணிக்கப்படுகிறான், இது சமூக விரோதச் செயல்....எனவே இட ஒதுக்கீடுகள் கூடாது.பெண்கள் போட்டி போட வேண்டுமென்றால் ஆண்களுக்கு நிகரான தகுதிகளை வளர்த்துக் கொண்டு போட்டி இடலாமே....இந்திரா, மார்க்ரட் தார்சர்.......இன்னும் எத்தனையோ பெண்கள் அப்படித்தானே வந்தார்கள் என்றெல்லாம் பொதுப்புத்திப் புரிதலாக பேசினார். எழுத்தாளர் ஞானி அதை உடனடியாக மறுத்தார், நீங்கள் சொல்லும் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஒட்டு மொத்த ஆண் அரசியவாதிகளை ஒப்பிடுகையில் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவர்கள், தனிப்பட்ட ஒரு சிலரின் முயற்சியால் கிடைத்த பலனை ஒட்டுமொத்த பெண்களின் சாதனைக்கான அளவுகோளாக்கி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது தவறு என்று சுட்டினார்.

அந்த இளைஞர்கள் மேலும் உள்ரலாக...'நான் இந்தியா முன்னேற்றத்தைத்தான் நினைக்கிறேன்......எனவே தகுதி உடையவர்களுக்கு கொடுப்பது தான் இந்தியா வளர்ச்சிக்கு பயன்படும்' என்றெல்லாம் கூறினார். இவர்கள் தகுதி என்று கூறுவது என்ன ? தேர்வில் பெற்ற மதிப்பெண்ணா ? அறிவா ?

மக்களாட்சியில் தன்னை யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்குமே உண்டு, படிக்காதவர்கள் நிறைந்த சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களின் நலனுக்காக பாடுபடுபவர் எவரோ அவருக்கு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதி இருக்கிறது, கட்சிகளால் மக்களாட்சி தேர்தல் முறை குட்டிச்சுவர் ஆகி இருந்தாலும் கூட மக்களாட்சி நாட்டின் தேர்தல் முறை இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் முறையே முதல்வர், பிரதமர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் அந்த இளைஞரும், பொது புத்தியாளர்களும் கூறும் தகுதி என்பதற்கான அளவுகோள் வேறு என்ன இருக்கிறது.

தகுதி என்ற சொல்லாடலே ஒரு ஏமாற்று மற்றும் பம்மாத்து, இவர்கள் சொல்லும் தகுதி என்பது மன்னர் ஆட்சி காலத்தில் கூட இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட, நாடு மொகலாய மன்னர்களிடமோ, அதன் பிறகு வெள்ளைக்காரனிடமோ அடிமையாக ஆனது ஏன் ? ஒட்டுமொத்த அறிவாளிகளால் முன்பு ஆளப்பட்ட நாடு அடிமை பட்டது ஏன் ? அவ்வாறு அடிமைப்பட்ட நாட்டை மீட்பதற்கு தகுதியாளர்களாக இவர்கள் கற்பிதம் செய்து கொண்டவர்களால் மட்டும் தான் முடிந்ததா ?

தகுதி பற்றிய உளரல்கள் அவ்வப்போது அங்கங்கே ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக பார்பனிய சிந்தனையாளர்களிடமும் அவர்களின் நரித்தனம் அறியாத அடிவருடிகளிடமும் அந்தக் குரல் பலமாகவே ஒலிக்கிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை பெற்று வருபவன் ஊழல் செய்கிறான், லஞ்சம் வாங்குகிறான் என்கிறார்கள் இவர்கள். ஊழல், லஞ்சம் இவையெல்லாம் தனிமனித தவறுகள் இவை நடைபெறாத காலமே இல்லை. முன்பெல்லாம் ஊடகங்களினால் வெளிப்படுத்தப்படாதவை தற்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது அவ்வளவு தான்.

குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவன் இட ஒதுக்கீடு வழியாக மேற்கல்வி கற்றால் அவனால் பிற்காலத்தில் வேலையில் சிறப்பாக இயங்க முடியாது என்றும் உளறுகின்றனர். என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற எத்தனையோ பேர் நிறுவன முதலாளிகளாக நான் பார்த்திருக்கிறேன். படிப்பில் தங்கபதக்கம் பெற்ற மாணவன் தனியார் நிறுவனத்தில் உயர்பதிவியில், அதைவிட சற்று குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மேலாளர் என்ற அளவில் தான் பதவியில் இருக்கின்றனர். அவர்களின் ஒரு சிலர் நிறுவனம் நடத்துகின்றனர். இட ஒதுக்கீடோ, குறைந்த மதிப்பெண்ணோ சமூக பொருளாதாரத்தை குறைத்துவிடும் அல்லது சீரழித்துவிடும் காரணியும் அல்ல. இட ஒதுக்கீடு என்பவை ஏற்றிவிடும் ஏணி என்ற அளவிற்கு தான் பயன்படுகிறதே அன்றி முழுக்க முழுக்க அதை வைத்துக் கொண்டு யாரும் வாழ்நாள் சாதனையாளர்கள் என்கிற உயரத்தின் அளவுகோள் ஆக்கிக் கொள்வது கிடையாது, அவையெல்லாம் தனிப்பட்ட மனிதரின் முயற்சி. பின் தங்கிய கிராமத்தில் பிறந்த கலாம் ஜனாதிபதியாகியது அவரது தனிப்பட்ட உழைப்பின் பயனேயன்றி, அவரைப் போல் எல்லோருமே ஆகமுடியும் அதனால் இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பது வெறும் பொதுப்புத்தி புரிதலே. அப்துல்கலாம் என்பவர் இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் தூண்டுகோல் அன்றி இளைஞர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய அடி ஒற்றி பின்பற்றக் கூடிய அளவுகோல் இல்லை. அத்தனை பேரும் அப்துல்கலாம் ஆகுவதற்கு அத்தனை ஜனாதிபதி பதவிகள் நாட்டில் இல்லை என்பது சிந்திக்கக் கூடிய ஒன்று. எனவே அவரைப் போல் நீயும் மாறு என்று மேடையில் பேசுவது பிரச்சனையை திசை திருப்பும் பம்மாத்து மற்றும் பிரச்சனையின் தீவிரம் தெரியாத உளரல்கள் மட்டுமே.

இட ஒதுக்கீடுகளே இல்லை என்றால் பெண்களுக்கு 100 விழுக்காட்டிலும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பதும் 33 விழுக்காடு பெண்களை சுறுக்குகிறது என்று கூறுவோர் குறுகிய மனம் படைத்த ஆணிய சிந்தனைவாதிகள். 33 விழுக்காடு பெண்களின் போட்டித்தன்மையை சுறுக்கவில்லை, 33 விழுக்காட்டு இடத்தை உறுதிப்படுத்துகிறது, அதற்குமேல் விழுக்காட்டை கூட்டுவது பெண்களின் முன்னெடுப்புகளினால் கண்டிப்பாக ஏற்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். பார்பனிய சிந்தனைவாதிகளின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய கருத்துகள் புறக்கணிக்கக் கூடியது. மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்குள்ளேயான உள் ஒதுக்கீட்டுடன் கிடைக்கும் பொழுது அது அனைத்துப் பெண்கள் சமூகத்திற்கும் பெரும்பயனாக அமையும்.

22 ஏப்ரல், 2010

பொறுமை என்பது இளிச்சவாய்த்தனம் !?

எந்த ஒரு இயல்பான நிகழ்வும் பெரிதாக (பெரிய விசயமாக) மாறுவதற்கு நம் எண்ணங்கள் தான் ஏதுவாக (காரணமாக) அமைகிறது என்பது என் நம்பிக்கை. சின்ன தவறுகளைக் கூட பெரிய கேடுகளாக மாற்றிக் கொள்வது நம் மனம் தான். விட்டுக் கொடுத்தல் என்னும் ஒரு எண்ணம் அந்த நேரத்தில் ஏற்படாதால் நிகழ்வுகள் (சம்பவம்) எதிர்பாரா நிகழ்வுகளாக (அசம்பாவிதமாக) மாறிவிடும். சில வேளைகளில் இவை நன்கு புரிந்தாலும் கூட நம்முடைய உயர்வு மனப்பாண்மை விரைவாக வேலை செய்து எல்லாவற்றையும் கெடுத்துவிடும்.

பேரங்காடி ஒன்றின் பின் ஒன்றாக பணம் செலுத்தி பொருள்கள் பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்ட இடத்தில் (Payment Counters) முன்பு நின்றவர் முதலில் இருக்கும் இடத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு மூட்டைக் கட்டுகிறார் என்பதாக நினைத்து நான் அவரைத் தாண்டி அடுத்த இடத்தில் பணம் செலுத்தப் போனேன். பிறகு தான் தெரிந்தது எனக்கு முன்னால் இருந்தவரும் வரிசையில் இருந்தவர் தான் என்பது. ' மன்னிக்கவும் நீங்கள் பொருள் வாங்கிவிட்டீர்கள் என்பதாக நினைத்து முன்னே வந்துவிட்டேன், நீங்க முன்னால் போங்க' என்றேன், நான் கையில் வைத்திருந்தது ஒரே ஒரு பொருள் தான் என்பதாலோ அல்லது அவரின் இயல்பான குணத்தினாலோ சிரித்தபடி 'பரவாயில்லை......நீங்க வாங்கிட்டு போங்க' என்றார், பதிலுக்கு திரும்பவம் நானும் சிரித்துக் கொண்டே 'தவறு நிகழ்ந்துவிட்டது நீங்க போங்க' என்று சொல்ல அவரும் மறுபடியும் சிரித்து கொண்டு 'பரவாயில்லை' என்றார். நான் வாங்கிவிட்டு வந்துவிட்டேன்.

இந்த நிகழ்வில் நான் செய்தது அறியா பிழை, ஆனால் அதை அவர் நான் வேண்டுமென்றே செய்வதாக நினைத்திருந்தால் என்னை கடுப்படித்திருப்பார். நானும் பதிலுக்கு நீங்க ஏன் ஒழுங்காக வரிசையில் நிற்கவில்லை, நீங்க தான் என்னை குழப்பினீர்கள்... ஒண்ணே ஒண்ணு தானே வாங்கப் போகிறேன்' என்று பதிலுக்கு கடித்திருப்பேன், பேச்சு வார்த்தை வளர்ந்து கடையை விட்டு வெளி ஏறும் போது மன உளைச்சலோடு சென்றிருப்பேன், அவரும் அப்படியே சென்றிருப்பார். மற்றொருவருக்கு நம் செயலில் உடன்பாடு இன்மை என்று வந்துவிட்டாலே, நம் தரப்பு தவறு என்றாலும் கூட ஒப்புக் கொள்வது கடினமாக போய்விடும்.

உலகத்தில் 600+ கோடியினர் இருந்தாலும் அதில் நமக்கு தெரிந்தவர் ஒரு 1000 (0.00000016 %) பேர் என்று வைத்துக் கொண்டாலும் கூட நாம் பழக, பேச இவர்கள் மட்டும், இவர்கள் மட்டுமே தான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அதிலும் கூட நமக்கு நெருக்கமானவர் நூறோ இருநூறோ தான். இந்த 1000 தவிர மற்றவர்களை நாம் சந்திக்க நேரிட்டால் கூட அந்த சந்திப்பு எதிர்பாராவிதமானது மற்றும் ஒரே ஒரு முறைதான், அதன் பிறகு நம் வாழ்க்கையில் அவர்கள் வரப் போவதே இல்லை, ஆனால் அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும் ? அதனால் பயன் ஏதும் இல்லை. நன்கு தெரிந்தவர்களிடையே கூட தவறுக்கான மன்னிப்பு என்பது அவரவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரையில் மட்டுமே. நமக்கு தெரிந்த அந்த 1000 பேர்களில் சிலரிடத்தில் அன்பு செலுத்த முயற்சிக்காமல் கசப்பை தொடர்ந்தால், நாமும் ஒரு மனிதனாக பிறந்ததற்காக உலக மக்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று எண்ணுவது வெறும் எண்ணம் தான் செயலில் ஒன்றும் கிடையாது.

பொறுமை என்பதை இளிச்சவாய்த்தனம் என்பதாக பலர் கற்பிதம் செய்தும் கொள்கிறார்கள். 'நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. எந்த ஒரு நிகழ்விற்கும் நாம் காரணம் ஆகவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நம் எண்ணத்தில் தான் உள்ளது.

21 ஏப்ரல், 2010

ஜெயமோகன் வலை தளத்தில் கணிணி வைரஸ் !

நான் நெருப்பு நரி இணைய உலாவி பயன்படுத்துகிறேன். நேற்று ஜெயமோகன் வலைத்தளத்திற்கு சென்ற போது மால்வேர் எனப்படும் இணைய தளம் வழியாக பரவும் மென்பொருள் கிருமியின் பக்கம் தானாகவே திறந்து 'உன் கணிணியில் வைரஸ் இருக்கு.....சரி பார்க்கவா ?' என்று கேட்டது. உடனேயே எச்சரிக்கையுடன் நெருப்பு நரியின் கழுத்தை பிடித்து நெறித்துவிட்டேன். (Task Manager > Processes > Firebox > End Task) . ஒருவேளை வேறு இணையத்தளத்தில் இருந்து வந்திருக்காலம் என்கிற முடிவில் விட்டுவிட்டேன். இன்று மறுபடியும் ஜெயமோகன் வலைப்பதிவுக்குச் சென்றால் அதே மென்பொருள் கிருமி (packupdate_build30_2045.exe)அதே வேலையைக் காட்டி உன் கணிணியில் நிறுவட்டுமா ? என்று கேட்டது. அது உலவியில் காட்டும் படம் நம் கணிணியில் வைரஸ் இருப்பது போன்று வெறும் தோற்றம் தான். ஆனால் அதை நம்பி நாம் அதை (packupdate_build30_2045.exe) க்ளிக் செய்துவிட்டால் அப்பறம் கணிணியில் கிருமி சம்மணம் போட்டு அமர்ந்துவிடும்.
(படத்தின் மீது அழுத்தி பெரிதாகப் பார்க்கவும், அது வெறும் ப்ளாஸ் இமேஜ் தான்... உண்மையில் உங்கள் கணிணியில் பிரச்சனை எதுவுமே இருந்திருக்காது, இது காட்டும் ஐபியும் தவறான ஐபி)

கிருமி எதிர்ப்பு மென்பொருளை (Anti-Virus) கணிணியில் நிறுவாதவர்கள், ஜெயமோகன் வலைத்தளத்திற்கு தற்காலிகமாக செல்வதைத் தவிர்க்கவும், விரைவில் வலைத்தள நிர்வகிக்கும் பொறுப்பாளர்களிடம் சொல்லி அதை ஜெயமோகன் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

கணிணியில் அந்த மென்கிருமி நுழைந்தால், கணிணி நினைவகம் பாதிப்புக்கு உள்ளாகும், ஸ்பேம் சர்வராக மாறி அந்த கணிணியில் இருந்து நிமிடத்திற்கு 1000 ஸ்பேம் (வியாபார, விளம்பர) மின் அஞ்சல்களை இணையம் வழியாக அனுப்பத் துவங்கும், அதற்கே ப்ராசரின் முழு பலமும் தேவைப்படும் என்பதால் கணிணியின் மற்ற வேலைகள் மிக மிக மெதுவாக நடைபெறும். நீக்குவதற்கு Anti-Virus மென் பொருளை நாட வேண்டி இருக்கும், இல்லை என்றால் முழு இயங்கியையுமே ( Operating System) நீக்கிவிட்டு (Format), திரும்பவும் நிறுவ (Install) நேரிடலாம்.

ஜெயமோகன் வலைத்தளத்தில் கிருமி என்று அவரது வாசகர்கள் அவருக்கு தகவலைக் கொண்டு சேர்த்து அதனைச் சரி செய்யச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசு சின்னம் மாறுகிறுது (!?)

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மா(ற்)றுவதாக ஜூவியில் கிசு கிசுத்துள்ளதாக தமிழ் ஹிந்து என்கிற இணைய தளம் கட்டுரை வெளியிட்டு தனது (எதிர்) கருத்தை தெரிவித்திருந்தது. தமிழ் ஹிந்து இணையத்தளம் வருணாசிரம ஹிந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்ட இணையத்தளம் என்பது பரவலாக பலரும் அறிந்தவையே. ஹிந்து நலன் என்கிற அடிப்படையில் மக்களை பழமைவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் பல்வேறு மதக்கூட்டங்களில் இவர்களும் ஒருவர் என்பது தவிர்த்து இவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட காண்டு எதுவும் என்று கிடையாது. 'ஹிந்து' தமிழர்களின் தாய் மதம் என்று கட்டமைக்கிறார்கள். கிறித்துவம் இஸ்லாம் எல்லாம் மகன் மதம், மகள் மதம் என்று சொல்லலாமா ? தமிழகத்தின் முன்பிருந்த சமணமும் பவுத்தமும் பாட்டன் முப்பாட்டன், தந்தை மதம் என்று சொல்லலாமா ? தாய் மொழி என்று மொழிக்குச் சேர்க்கும் ஒரு சிறப்பு தாய மதம் என்று சொல்வதன் மூலம் ஒரு மதத்திற்கு சிறப்பு சேர்த்துவிட முடியாது. தாய்மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்குமே கிடையாது, அதுவாக அமைவது, ஆனால் மதம் அப்படி கிடையாது ஒருவர் விரும்பினால் தாயின் மதத்தைக் கூட மாற்றிவிடும் நிலை தான் மதமாற்றம் குறித்த மன(த் தடு)மாற்றம். எனவே தாய் மதம் நாய் மதம் இவை எல்லாம் உதவாத கதைகள்.

கருணாநிதியின் தமிழக அரசு அமைத்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை சரியான அமைப்பில் இல்லையாம், தமிழகத்தில் சுனாமி வந்ததற்கு அதுவும் காரணம் என்று நல்லவேளை எதுவும் கொளுத்திப் போடவில்லை. வள்ளுவர் சிலை எதோ ஒரு சங்கிலி பூதம் போல் இருப்பதாக இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். திருவள்ளுவர் சிலை மீது பூணூல் இருந்திருந்தால் இது போல் விமர்சனம் வந்திருக்குமா அறியேன். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவர் கொண்டை மற்றும் தாடியுடன் இருப்பாரா என்று கேட்கிறார்கள். ஆதிசங்கரர் போலவோ, இராமனுஜர் போலவோ முன் மொட்டை பின் குடுமியுடன் பூணூல் இல்லாமல் இருந்தால் கூட ஏற்றுக் கொள்வார்கள் போலும். திருவள்ளுவரை ஒரு பார்பனராக காட்ட முயற்சித்து அது எடுபடாமல் போகவே திருவள்ளுவர் உருவத்தையே புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று தான் நான் அவர்களின் விமர்சனம் குறித்த உளவியலாகக் கொள்கிறேன். பார்பன புறக்கணிப்பு என்பது பார்பனர்களால் பார்பனர்களுக்கே நடந்தவை தான் அதற்கு இந்த நூற்றாண்டு சாட்சியாக பாரதியாரே உள்ளார். பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியாரை பார்பனர்கள் எவரும் கொண்டாடவில்லை, தற்போது பாரதியை பார்பனர் சின்னமாக பார்பனர்களே மாற்றி இருக்கிறார்கள். பாரதி தற்போது பார்பனர்களால் பார்பனராக அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட பாரதியை பார்பனர் என்பதற்காக புறக்கணிப்பவர்கள் மிக மிகச் சிலரே. எனவே திருவள்ளுவரை ஒருவர் போற்றுவதற்கு அவர் பார்பனராகவோ, பார்பனர் அல்லாதவராகவோ இருக்க வேண்டிய தேவை எதுவுமில்லை. வள்ளுவர் சிலை பார்பன அடையாளத்தில் இல்லை என்கிற பார்பனர்களின் கவலை தேவை அற்றது, ஒருவேளை அப்படி செய்தால் திருவள்ளுவரை போற்றுபவர்களைவிட அதற்காகவே தூற்றுவர்கள் மிகுதியாகும் வாய்ப்பு உண்டு. திருவள்ளுவரை சாதி ரீதியில் அடையாளப்படுத்த முயற்சிப்பது தேவையற்ற செயல்.

தமிழக அரசு சின்னமாக வைக்க திருவள்ளுவர் உருவத்திற்கு முழுத்தகுதியும் உண்டு, ஏனெனில் திருவள்ளுவர் கிறித்துவர் என்றும் கிறித்துவர்களில் சிலர நம்பத் தொடங்குகிறார்கள், திருவள்ளுவர் கிறித்துவர் என்பதால் அவர் முகமதுவுக்கு முன் இருந்த இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதாக இஸ்லாமியர்களுக்கும் பிரச்சனை இருக்காது. (இஸ்லாமைப் பொருத்த அளவில் கிறித்துவம் என்பது முகமதுவை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு இஸ்லாம், இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்), ஏற்கனவே திருவள்ளுவருக்கு சமணர், பவுத்தர், வைதீகர், சைவர், வைணவர் என்று பல்வேறு அடையாள முயற்சி நடை பெற்றிருக்கிறது என்பதால் மேலும் அவர் ஒரு கிறித்துவர், இஸ்லாமியர் என்பது பெரிய விசயமே இல்லை.

இருந்தாலும் தற்போது இருக்கும் கோபுர சின்னம் சமய சார்பாக பார்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒரு பழமையான தமிழக அடையாளத்தின் சின்னம், இஸ்லாமும் கிறித்துவமும் தமிழகத்தில் நுழையும் முன்னே தமிழகத்தில் கோபுரங்கள் எழுந்துவிட்டன. தமிழகத்தின் அடையாளமே கோபுரங்கள் தான், வேறெந்த இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கும், உயரத்திற்கும் கோபுரங்கள் தமிழகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன.கூகுளில் ஆங்கிலத்தில் தமிழ் நாடு என்று தேடினாலும் எதோ ஒரு கோபுர படம் காணக் கிடைக்கிறது. இதுவரை இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ தமிழக அரசின் சின்னங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லாத போது பகுத்தறிவாதம் என்கிற பெயரில் சில சமயம் தவறாகவும் சிந்தனை செய்யும் ஒரு சிலரின் சிறுமூளையில் கோபுர சின்னம் மத அடையாளமாக தெரிந்திருக்கும் என்பதும் அவர்களின் பரிந்துரையினால் தான் சின்னம் மாற்ற மடைய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். தமிழர்களின் அடையாளம் வேட்டி, புடவை கூட இந்து மத அடையாளம் என்றால் நாம கோவணத்தைத்தான் தமிழக அடையாளம் மதச் சார்பற்றது என்று சொல்ல முடியும்.

மதச்சார்பற்ற நிலை என்பதை மதவெறுப்பு என்பதாக பலர் புரிந்து கொண்டு நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நிலை என்பது மதச் சகிப்பு தன்மை என்கிற நிலைப்பாட்டில் தான் முழுமையாக உள்ளது. கோபுரம் மதச் சார்பு என்றாலும் கூட ஒரு பெரும்பான்மை இஸ்லாமியர், கிறித்துவர் வசிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ நாடுகளில் 10 விழுக்காடு பிறமதத்தினர் வசிக்க நேரிட்டால் எங்களுக்காக நீங்கள் மதச்சார்பற்றவராக மாறுங்கள் அரசு சின்னங்களை மாற்றுங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. தமிழக அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் வலிந்தோ பலவந்தமாகவோ நுழைக்கப்பட்டதாக வரலாறு இல்லாத போது அதை மாற்றுவது தேவை அற்றது என்பது என் கருத்து.

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மாறுவாதால் மதச்சார்பின்மை காக்கப்படும் என்பது ஒரு தவறான புரிதல். உலகில் இஸ்லாமியர் மிகுதியாக வசிக்கும் இந்தோனிசியாவில் அரசு சின்னம் கிருஷ்ண பருந்து தான். அதை இந்து அடையாளமாக அவர்கள் பார்க்கவில்லை, அந்த பகுதியின் பண்பாட்டு விழுமியங்களில் புழங்கிய பழமையான இலக்கிய வடிவத்தில் இருக்கும் ஒரு பாத்திரத்தின் சின்னமாகத்தான் அதை தற்போது வரை பார்க்கிறார்கள். அங்கும் வகாபி இசம் இறுகினால் நிலை மாறலாம். திருவள்ளுவரை புதிய சின்னமாக மாற்றுவது தவறு அல்ல, ஆனால் ஏற்கனவே இருக்கும் கோபுர சின்னத்தை மாற்றுவதற்கு கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது. தமிழர் பண்பாடுகளில் எதையெலலம் காக்கவேண்டும், எதை அழிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவற்ற நிலையை கொண்ட் சிலரின் பரிந்துரையின் பேரில் இவ்வாறெல்லாம் நடைபெறுவதால் மதச் சார்பின்மை என்று எதுவும் ஏற்படப் போவதில்லை.

20 ஏப்ரல், 2010

இந்தியா சத்திரமல்ல. ...!

சூரியன் படத்தில் சரத்குமாரை கைது செய்வார்கள், அந்த நேரத்தில் சரத்குமாரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்ட மனோரமாவின் பிணம் அந்த பக்கமாக ஊர்வலமாக செல்லும் ஒரு காட்சி, அப்போது கவுண்டமணி, 'ஐயா இவன் திருடனோ, கொள்ளைக்காரனோ எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களைப் பொருத்த அளவில் இந்த தாய்க்கு மகன், அந்த அம்மாவுக்கு கொள்ளி போட விடுங்கய்யா' என்று காவலாளிகளிடம் கொஞ்சுவார், கண்டு கொள்ளாமல் சரத்குமாரை இழுத்துச் சென்றுவிடுவார்கள்.

குற்றவாளியின் உறவினர்களும் தண்டிக்கபடவேண்டுமென்றால் நாட்டில் அனைவருமே சிறையில் தான் இருக்க வேண்டும், நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு குற்ற பின்னனி தான் முதல் தகுதியே. நீதி, நேர்மை அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளையும் ஊழல் வழக்கு ஏதோ ஒன்றில் தொடர்புடையவர்கள், குற்றம் நிருபனம் செய்யப்படாததால் வெளியே இருக்கிறார்கள். கட்டுச் சோற்றுக்கு பெருச்சாளி காவல் என்பது போல் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கத்தில் சட்டம் என்பவை எப்படி வேண்டுமானாலும் வளைக்க கூடிய அவர்களுக்கான பாதுகாப்பு வளையம்.

நாங்கள் குற்றவாளிகளுக்கு எதிரிகள் அல்ல, என்பது போல் நளினியை சிறையில் சென்று சந்தித்ததை விளம்பரப்படுத்திக் கொண்டார் சோனியாவின் புதல்வி பிரியங்கா வதோரா. மற்றபடி நளினி சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என்கிற அவர் குடும்பத்தின் எண்ணத்தில் மாற்றமில்லை என்பது போல் காட்சிகள் நடந்துவருகின்றன. போஃபர்ஸ் வழக்கு....அதில் தொடர்புடையவர்கள் பற்றியெல்லாம் அரசியல் தலையீடு அற்ற விசாரணை நடந்து இருந்தால் காங்கிரசு குடும்பத்தில் எல்லோருமே சிறையில் தான் கழிக்க வேண்டி இருக்கும், காரணம் இங்கே குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதே அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தானவை என்பதாக பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியத்தில் இருந்து புரியவைக்கப்படுகிறது.

நான் முதல்வர் என்பதையே தினகரனை படித்து தான் தெரிந்து கொண்டேன், எதற்கும் நான் முதல்வரா என்று மறு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, தலைமை கேட்டுக் கொண்டால் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்பது போல் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டத்தை நாளிதழ் பார்த்து தெரிந்து கொண்டாராம் முதல்வர். விமான நிலையத்திற்கு சென்றவர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல, வைகோவும், நெடுமாறனும் சென்றிருக்கிறார்கள், அவர்கள் நினைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்ட முடியும், அவர்களின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கும் உளவுத்துறை கூட அவர்கள் விமான நிலையம் சென்றது ஏன் என்பதை முதல்வருக்கு தெரிவித்திருக்கமாட்டார்கள், உளவுத்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்று சொல்லவருகிறாரா முதல்வர் ? நாட்டு நடப்பே தெரியாத ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை, அதிலும் எங்கள் கட்சிக்கே பெருமை என்று திமுகவினர் மார்த்தட்டினாலும் வியப்பு இல்லை.

திருமாவளவன் தலித்துகளுக்கு எதோ செய்ய கட்சி தொடங்கினார், தமிழர் நலன் மீது ஆர்வம் கொண்டவர் என்கிற பிம்பம் இருந்தது, இவர் கட்சி நடத்துவதற்கு பதிலாக கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிட்டால், இவர் சொல்வது பேசுவது காமடியாகவே தெரியாது, நானும் அரசியல் நடத்துகிறேன் பாருங்கள் என்கிற ரீதியில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு ஜெ காரணம் என்கிறார். இந்த பொழப்புக்கு பச்சோந்தி வேசம் கட்டி நாடகம் நடத்தினால் கூட அது நடிப்பு நல்லா இருக்கிறது என்று பாராட்டலாம்.

ஆண் பேய், பெண் பேய் என பேய்கள் கட்சி தலைமை ஏற்றால் காட்சிகள் சுடுகாடு ஆகும். என்பது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்ட நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.

அதிமுக மகளிர் அணியிடம் 'தரிசனம்' பெற்ற சு.சாமி....'இந்தியா சத்திரமல்ல....கண்டவர்களும் வந்து செல்ல' என்கிறார். இந்தியாவில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சோனியா காந்தி போன்று கட்சி தலை ஏற்கலாம், ராஜிவ் காந்தி படுகொலையில் தொடர்புடையவன் மற்றும் சிஐஏ ஏஜெண்டாக இருந்தவன் என பல்வேறு தரப்பினரால் சந்தேகிப்படுபவன் அரசியல் வாதியாக உலாத்தலாம், காந்தியை கொன்ற கோட்சேவை ஞாயப்படுத்த....'நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்' என்று 'நாடகம்' போடலாம், கோடிக்கணக்கான இதயங்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு தலைவனின் தாயான 80 வயது மூதாட்டி குற்றமற்றவராக இருந்தாலும் வரக்கூடாது. வழக்கம் போல் 'வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ஒருவனுக்கு அதைச் சொல்ல தகுதிகள் உண்டா ?' என்று யாரும் கேட்டுவிட மாட்டார்கள் என்ற சு.சாமியின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

14 ஏப்ரல், 2010

அண்ணல் அம்பேத்கார் !

இந்திய அரசியல் தலைவர் ஒருவரை சாதியினால் புறக்கணிக்கும் கொடுமை இன்றும் அம்பேத்காருக்கே நடந்துவருகிறது. புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.

அம்பேத்கார் சொன்னவைகளில் மிக முக்கியமானது என்று இந்துத்துவ வாதிகள் எடுத்துச் சொல்வது 'பார்பனர்கள் வந்தேறிகள் இல்லை' என்று அம்பேத்கார் தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டார் என்பதைத்தான். இதை வைத்து அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்றும் மறைமுகமாக வருணாசிரமத்தை ஆதரித்தார் என்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். 'நான் ஒரு இந்துவாக சாகவிரும்பவில்லை' என்பதில் உறுதியாக இருந்து புத்தமதத்திற்கு மாறியவர் அம்பேத்கார். அம்பேத்கார் ஒரு ஆன்மிகவாதி பல்வேறு மதங்களை ஆராய்ந்தே பின்னர் அவர் அம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும், பெண்களின் நிலை, குல ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு சமூகவியல் காரணங்களை ஆராய்ந்து இறுதியில் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். பார்பனர்களில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் உண்டு, ஆனால் பார்பனர்கள் அனைவருமே வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதை நானும் நம்புகிறேன். பல்வேறு உடல் நிறங்கள் தவிர்த்து இந்தியர்கள் அனைவருக்குமே பொதுவான தோற்றம் உண்டு, அந்த வகையில் பார்பனர்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பதை அம்பேத்காரும் நம்பினார். ஆனால் அவரது இந்து மதம் குறித்த பார்வையில் பார்பனர்களின் மேலாதிக்கத்தையும், அதற்கு ஆதரவு நல்கும் இந்து மதத்தையும் கடுமையாக எதிர்த்தார் என்பதே உண்மை.

அம்பேத்கார் வாழ்கை வரலாறுகளை பதிவு செய்த அம்பேத்கார் படம் சரியாக ஓடவில்லையாம். இது இயல்பான ஒன்று தான். அவதார புருஷர்கள் சாய்பாபா, ராகவேந்திரா, அண்ணமாச்சாரியா என்று படம் எடுத்தால் ஓடும், ஏனெனில் அவர்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் என்கிற பசைகளுடன் வருவதால் ஆன்மிக வியாபாரமாக படங்கள் ஓடிவிடுகின்றன. மற்றபடி தனி நபர் குறித்த வரலாறுகள் நடந்தவை என்பதால் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. பெரியார் படம் ஓரளவுக்கு ஓடியது. மற்றபடி தலைவர்களின் படங்கள் ஒரு ஆவணம் என்ற வகையில் தொகுப்பட்டிருப்பது வருங்காலத்தில் சுறுக்கமாக அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் அவ்வளவு தான் அதன் பயன்பாடு, மேலும் தலைவர்களை நினைவு கூறத்தகுந்த காரணங்கள் இன்றைய சமூகத்தில் அவ்வளவாக இல்லை, அவர்கள் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கலாம், அல்லது அது இன்றைய தேவையாக இல்லாமலும் போய் இருக்கலாம். இன்றைய காலத்தில் விதவை மறுமணம் என்பது பொதுவான நிகழ்வுகள் ஆகிவிட்டபடியால், விதவை மறுமணத்திற்கு போராடுகிறவர் என்கிற லேபிளை அணிந்து கொண்டு ஒரு தலைவர் உருவாகி விட முடியாது. அதே போல் உடன்கட்டை மற்றும் இத்யாதிகள். சமூகமாற்றத்திற்கான தேவைகள் தற்போது எதுவும் இல்லாத சூழலில் ஏற்கனவே அம்மாற்றம் குறித்து போராடியவர்கள் நினைவு கூறப்படுவர் மற்றபடி எப்போதும் மக்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இவை அண்மையில் மறைந்த காமராசர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் பொருந்தும். எனவே அம்பேத்கார் படம் ஓடவில்லை என்கிற கவலையும், தூற்றலும் கூட தேவையற்ற சிந்தனையும், குழப்பம் ஏற்படுத்துவதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

தமிழக தென்மாவட்டங்களில் அதிகமாக உடைபடுவது அம்பேத்கார் சிலைகளே. தலித்துகளுக்காக போராடிய ஒருவரை பிறப்பு வழி சாதிய அடிப்படையில் ஒரு தலித்தாகவே பார்த்து சிலையை உடைப்பதும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை தொடர்வதையே ஆவணப்படுத்துகிறது. ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? பகவானுக்கே அபச்சாரம் திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு என்பதாக மதாச்சாரியார்களால் தீட்சிதர் ஒருவரால் சிலையிலும் தீண்டாமை முன்மொழியப்பட்டதையெல்லாம் நினைக்கும் போது வருணாசிரம சாதிய அடுக்கை ஒப்புக் கொண்டு அதன் படி நாம அதில் ஒரு சாதி என்றும் நமக்கும் கீழே வேறொருவன் இருப்பதால் எனது சாதி உயர்ந்தது தான் என்று நினைக்கும் சுய நினைவு அற்றவர்களின் செயலை நாம் எப்படி விமர்சனம் செய்ய முடியும் ?

இன்றைக்கும் சரி என்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு போராட அவர்களுக்குள்ளேயே தான் ஒருவர் வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. வேறு யாராவது போராடினால் அவரது தனிமனித செயலை அவருடைய சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனது சாதிக்கான பெருமையாக மாற்றிக் கொள்ளும் இழிசெயல் இன்றும் நடப்பதால் ஒடுக்கப்பட்டவர்கள் பிறர் போராடுகிறோம் என்று முன்வருவதை ஏற்கிறார்களோ இல்லையோ நம்புவதில்லை. தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன. மற்றபடி தலித்துகளுக்காக பெரிதாக எதையும் கட்சிகள் செய்வது கிடையாது. இதனை எதிர்த்து தான் தலித் கட்சிகளை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.

பெரியாரை நாயக்கர் என்றும் பலிஜா நாயிடு உட்பிரிவு வரை குறிப்பிடும் சாதிவெறியர்கள் அம்பேத்காரின் சாதியைக் குறிப்பிட்டு எழுதாதது அவர்களுக்கு அம்பேத்காரின் மீதான மரியாதை என்பதாக இல்லை மாறாக வன்கொடுமை வழக்கு வரும் என்பது தான்.

13 ஏப்ரல், 2010

கலவை 13/ஏப்/2010 !

விடாகண்டன் : சென்ற மாதத்தில் ஒரு நாள் கோகோ கோலா வெண்டிங் பெட்டியில் காசுகளைப் போட்டுவிட்டு கோகோ கோலா வரும் என்று பார்த்தால் வரவே இல்லை. வெயில் நேரம் எரிச்சலானதே மிச்சம். இரண்டு மூன்று முறை தட்டிப் பார்த்தேன், காசுகளும் திரும்ப வரவில்லை. பெட்டி கோளாறு இல்லை என்பதற்கு சாட்சியாக விளக்குகள் எரிந்ததை வைத்துத் தான் காசுகளைப் போட்டு குளிர்பானம் எடுக்க முயன்றேன். என்ன செய்வது இதை இப்படியே விட்டு விட்டுச் செல்வதா ? என்று நினைத்து பின்வாங்கும் முன் அந்த குளிர்சாதன் பெட்டியில் பழுது அடைந்தால் தொடர்பு கொள்ள 'எண்' இருந்தது, அழைத்து விவரம் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள், உங்கள் காசுகளை (ஒருவெள்ளி 20 பைசா) உங்களுக்கு காசோலை அனுப்பி வைக்கிறேன் என்றார்கள். சரி என்று விவரங்கள் கொடுத்தேன், மறு நாள் அலைபேசியில் அழைத்து, காசோலைக்கு பதிலாக உங்களுக்கு பரிசு கூப்பன் தருகிறேன், அதைக் கொண்டு போய் நீங்கள் பெர்கர் கிங்கில் குளிர்பானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர், எப்படியோ போட்ட காசு எந்த வடிவத்தில் கிடைத்தால் என்ன ? சரி என்றேன். சொன்னபடியே இரண்டு குளிர்பானங்களுக்கான பரிசு கூப்பனை அனுப்பினார்கள், அதை குளிர்பானமாக மாற்றிக் குடித்தும் விட்டேன். வெண்டிங் பெட்டி வாடிக்கையாளர்கள் ஒரு வெள்ளி தானே என்று சிறிய தொகைக்கு மதிப்புக் கொடுக்காவிட்டால், பெட்டிகளை உடனே சரி செய்யவும் மாட்டர்கள், மேலும் பலர் நட்டம் அடைவார்கள். நமக்கும் நட்டமே. அடுத்த முறை வெண்டிங் பெட்டியில் போட்ட காசு சிக்கிக் கொண்டால் போனைப் போடுங்க. சிங்கையில் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும், சென்னையில் என்றால் கஸ்மாலம், சாவு கிராக்கி 40 ரூபாய்க்கு கணக்கு பார்க்கிறது பாரேன் என்று திட்டிவிட்டு போனை வைத்துவிடுவார்கள். ஆதங்கத்தை தினமணிக்கு கடிதமாக எழுதி தீர்த்துக் கொள்ள முடியும்.

பழைய நண்பன் : தொடர்பு விட்டுப் போன என்னுடைய கல்லூரி கால நண்பர் ஒருவர் 'தி ஹிந்துவில்' வேலை பார்க்கிறார் என்ற தகவல் கிடைக்க, அங்கு வேலை செய்த மங்களூர் சிவாவை தொடர்பு கொண்டேன். அண்ணே எந்த டிவிசன் என்று சொல்லுங்க என்று கேட்டார், அப்போது முழுவிவரம் தெரியவில்லை. இது நடந்து 2 ஆண்டுகள் ஆச்சு, மீண்டும் ஊருக்கு சென்ற போது நண்பர் திருச்சி ஹிந்துவில் பணி புரிகிறார் என்கிற விவரம் மட்டும் கிடைத்தது, சென்றவாரம் மறுபடியும் நண்பரின் அலைபேசி எண்ணைப் பெற்றுத் தர செல்வேந்திரனையும் மங்களூர் சிவாவையும் தொடர்பு கொண்டு கேட்க, மறு நாள் பெற்றுத்தருவதாக செல்வேந்திரன் கூறினார். மறுநாள் சிவாவே நண்பரின் அலைபேசி எண்ணைப் பெற்றுத் தந்தார். அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தேன், 'நண்பருக்கு என் குரல் அடையாளம் தெரியவில்லை, ஒருவழியாக பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு நான் தாண்டா..' என்றே பிறகு பேசினார். அன்னிக்கு என்று பார்த்து அவருக்கு கடுமையான காய்ச்சல், மருத்துவ விடுப்பில் இருந்தாராம். எப்படியோ வலையுலக நண்பர்களால் ஏற்படும் பல பயன்களில் அறுந்த தொடர்பை மீட்டுக் கொள்ளவும் முடிகிறது.

சானியாவுக்கு திருமணம் ஆச்சு : இந்த ஊடகங்கள் சானியா திருமணத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்று தெரியவில்லை. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்பிள்ளை என்பார்கள், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு அதெல்லாம் கிடையாது, பொண்டாட்டி உயிரோடு இருக்கும் போதே சர்சை எழுப்பினால் தலாக், இல்லாட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சிலரால் நடத்திக் கொள்ளப் படுகிறது. முகமது நபி காலத்தில் கட்டற்ற திருமணங்களின் கட்டுப்பாட்டிற்காக உயர் எல்லையாக நான்கு மனைவிகள் வரை மட்டுமே ஒருவர் திருமணம் செய்ய சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது, சிலர் அதை நான்கு வரையிலும் அனுமதி கொடுத்திருப்பதாக இன்றும் புரிந்து கொள்கிறார்கள் என்பது ஆணாதிக்க மன நிலைதான். பல தார மண சமூகத்தில் முகமது காலத்தில் நான்கு வரை என்பது கட்டுபாடு, அதை சட்டத் தளர்ச்சியாக இஸ்லாமியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள், இஸ்லாம் நல்ல மதம், பின்பற்றுபவர்கள் தான் மோசமானவர்கள் என்று பெர்னாட்ஷா சொன்னாராம், உண்மை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அபகரித்திருக்கிறார் சானியா என்பதையெல்லாம் சானியாவோ, சோயாப் மாலிக்கோ கண்டு கொள்ளவில்லை. சானியாவுக்கு வாழ்த்து சொல்லி வழியனுப்புவோம். "நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லை, விவாகரத்து செய்துவிட்டு ஒராண்டுக்கும் மேலாக வாய்தா வாங்க்கிக் கொண்டு அலைகிறேன், கேஸ் இழுத்தடிக்குது இன்னும் முடிந்தபாடில்லை, இனிமே நான் என்னத்த இன்னொரு கல்யாணம் செய்து...." பல இந்து நண்ப/நண்பிகளின் புலம்பல் இது. எனது சீன நண்பரான மலேசியர், என் மகள் எந்த இன வாலிபனை காதலித்தாலும் அனுமதிப்பேன் மலாய்காரனைத் தவிர, என்றார். ஏன் என்று கேட்டேன். நாளைக்கே அவன் இன்னொரு திருமணம் செய்து எம் மகளை கைவிட்டான் என்றால் என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. பரவலாக நடக்கிறது என்றார். கஷ்டம் தாங்க. மணமான பெண்ணுக்கு விவாகரத்து செய்யும் உரிமை மட்டுமே உண்டு, அவளால் வேறு என்ன செய்தாலும் தலாக் நிகழ்வை தடுக்க முடியாது. தமிழ் முஸ்லிம்கள் பலதார மணத்தை விரும்புவதில்லை என்பது ஆறுதலானது, இதற்கு காரணம் மதம் இல்லை தமிழ் பண்பாடு.

தமிழ்வெளி - என்ன ஆச்சு ?

தமிழ்வெளி திரட்டி வேலை செய்யலையே... என்ன ஆச்சு ? தொடர்பு கொண்டு கேட்டேன். மூன்றாம் ஆண்டு நிறைவிற்காக புதுப் பொலிவுடன் அணியம் (ஆயத்தம்) ஆகிறதாம். தமிழ்வெளி நிறுவனர் தெரிவித்தார்.

***********

சிஷ்யர் : சாமியை இப்ப பாக்க முடியாது, நித்ய பூஜையில், சமாதி நிலையில் இருக்கார்
ஒரு பெண் : சாமி கூடவே சமாதி நிலையில் இருக்கும் சிஷ்யயின் அம்மா வந்திருக்கேன் என்று சொல்லுங்க, அவளை சீக்கிரமாக வரச் சொல்லுங்க, நான் பார்த்துட்டு கிளம்பனும்.

(இவனால் பிரம்மச்சாரியம், சமாதி எல்லாத்துக்கும் பொருள் மாறிப் போச்சு)

8 ஏப்ரல், 2010

அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?

ஒரு காலத்தில் சென்னையில் ஓட்டல்களாக இருந்தாலும் பெரிய துணிக்கடைகளாக இருந்தாலும் செட்டியார்களாலும், பார்பனர்களாலும் பெருவாரியாக நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக நாடார் சமூகம் என்று அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கை ஓங்கி இருக்கிறது. அங்காடித்தெரு படத்த்தில் காட்டியது போல் அண்ணாச்சிக் கடைகளில் பணிக்கு இருப்பவர்கள் அதே சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றாலும் அண்ணாச்சிகள் அந்த சமூகத்து இளைஞர்களை தங்களின் லாபத்திற்கான உற்பத்திப் பொருளாகத்தான் பார்க்கிறார்களேயன்றி அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. தங்கள் தொழில் நொடித்துவிடக் கூடாது என்பதற்காக நாடார் சங்கங்களுக்கு மிகுதியான நிதிவுதவி செய்துவருகின்றனர். நாடர்களைப் பொருத்த அளவில் ஒரு நாடார் இந்து நாடார் கிறித்துவ நாடார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, தங்கக் கடற்கரை முதலாளி கிறித்துவராக இருந்தாலும் சரி, முருகனைப் போன்று (பார்பன மற்றும் பார்பன அல்லாத பெண்) வல்லி மற்றும் கார்திகா என இரு தாரமும் அதற்கு மேலும் ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய ஜீவஜோதி புகழ் அண்ணாச்சியாக இருந்தாலும் சரி அவர்களைப் பொருத்த அளவில் நாடார்கள் என்பது அவர்களது தனிச் சமூகம்.

என் நண்பன் ஒருவன், கட்டுனா என் சாதிக் காரப் பொண்ணைத்தான் கட்டுவேன், அது கிறித்துவ மதமாக இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை, எங்களை விட கிறித்துவர்கள் பணக்காரர்களாகத்தான் இருக்காங்க, மதமா சோறுபோடுது என்பது போல் பேசி சாதிக்கு சாமரம் வீசினார். எல்லோரும் தான் சாதியில் திருமணம் செய்கிறார்கள் இருந்தாலும் சாதிக்கு மதம் ஒரு தடையாக இல்லாதிருப்பது நாடார்களிலும் தலித்துக்களிலும் கூடுதலாக நடைபெறுகிறது. இவ்வாறு மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களில் மதம் தொடர்புடைய பெரிய குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.

எதுக்காக இதைச் சொல்கிறேன் என்றால் மதம் மாறுவது சாதியை அழித்துவிட வில்லை. குருடன் நடக்கிறான், செவிடன் பார்க்கிறான் என்பது போன்றும் பாவிகளான உங்களுக்கு பரலோக ராஜ்ஜியம் அதுக்கு நாங்க கேரண்டி என்று கூறியவர்களும் மதம் மாறி வந்த அந்தந்த சாதியினரை அப்படியே தான் (விட்டு) வைத்திருக்கிறார்கள். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை, மேலும் தலித்துகளுக்கு அரசாங்க சலுகை இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்து பெரும்பாண்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது. ஒருவர் மதம் மாறினால் அவரின் பொருளாதாரத்திற்கும் கல்வி அறிவிற்கும் நாங்க கேரண்டி என்று எந்த ஒரு மத அழைப்பாளர்களும் இதுவரை சொல்லாத போது மதம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை (எது எதற்கோ பொது நல வழக்கு தொடுப்பவர்கள் இதற்கு ஏன் தொடுப்பதில்லை என்று தெரியவில்லை, அப்படித் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்கள் தலைகுனிய நேரிடும் என்பதால் அவர்களும் பாதிப்பட்ட தலித்துகள் குறித்து அக்கரை காட்டுவதில்லை)

திரும்பவும் தலைப்பு......நாடார்கள் நிறுவனங்கள் நடத்தி பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள், முதலாளிகளாக இருக்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் உயர்சாதிக்காரர்கள் பட்டியலில் சேர்த்துவிட உயர்சாதி சமூகம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதி சமூகங்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா ? பனமரம் ஏறியவனெல்லாம் இன்னிக்கு முதலாளி ஆகிவிட்டான் என்று தூற்றவே செய்வார்கள்.

பொருளாதார மற்றும் தொழில் வள அடிப்படையிலும் உயர்சாதின்னு ஒரு இழவும் கிடையாது, தனது சாதியை முன்னிலைப் படுத்த எத்த(னிப்பவ)ர்கள் அவ்வாறுக் கூறிக் கொண்டார்கள். பார்பனீயம் என்பதற்கு மாற்று சொல்லாக நான் ஏன் உயர்சாதியம் என்று பயனபடுத்துவதில்லை என்றால் எந்த ஒரு சாதி சாக்கடையையும் நான் உயர்சாதி என்று உயர்த்திக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு கோடுகள் தத்துவம் தான், ஒரு பிரிவினரை உயர்சாதி என்று குறிப்பிடும் போதே அதில் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதி என்கிற பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று, மேல் சொன்னது போல் ஒரு நாடார், முதலியார், வன்னியர், தலித் ஆகியோர்கள் கிறித்துவராக இருந்தாலும் ஒருநாளும் அவர்களது சாதி அழிவதற்கு இந்திய சூழலில் வாய்ப்பே இல்லை. இவை வருணாசிரம கருமாந்திரத்தால் பீடித்த நோய், இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது. சாதியைப் பெரிய விசயமாக கருதாதவர்கள் இதைப் புறந்தள்ளலாம்.

6 ஏப்ரல், 2010

அபித குஜலாம்பாள் !

பொதுவாக பெயர்களை கொச்சைப் படுத்துவது எனக்கு பிடிக்காது, எந்த ஒரு நபரின் பெயரும், குறிப்பிட்ட சிலர்கள் தவிர்த்து அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது கிடையாது. பெற்றோர்கள் வைக்கும் பெயரே அவரவர் பெயராக நிலைத்துவிடுகிறது என்பது உண்மை.

******

இப்போதெல்லாம் ஷ் ஸ் தஸ்ஸு புஸ்ஸுன்னு முடியும் வடமொழிப் பெயர்களை சூட்டுவதற்கு பலரும் விரும்புகிறார்கள் என்னும் தகவல்கள் பலர் சொல்லக் கேள்விப்படுகிறோம், இதற்கெல்லாம் எண் கனிதம் ஜோதிடம் என்னும் ஒரு இத்துப் போன ஜோதிடம் காரணம் என்றாலும் அடிப்படை மற்றும் உளவியல், மொழியியல் காரணங்கள் வேறு. கூப்பிட எது எளிமையாகவும் புதுமையாகவும் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர். எந்த வகையில் பெயர் மாற்றங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்பவர்கள் கிராமத்தினர் தான். எம்சிஆர், சிவாசி, கார்திக், பாக்கியராசு என்ற பெயர்கள் அது போல் பெண்கள் பெயர்களில் நடிகைகளின் பெயர்களுக்கு உடனடியாக மாறிவிடுவார்கள், நடிக,நடிகர்களின் பெயர்கள் பொதுவாக நான்கு எழுத்துக்குள் இருப்பதும் அறியப்பட்டதாக இருப்பதும் அதை கிராமத்தினர் விரும்புவதற்குக் காரணம்.

இது ஒருபுறம் மற்றபடி படித்த நடுத்தர வர்கத்தினர்கள் சூட்டும் பெயர்களில் வடமொழிப் பெயர்களே மிகுதியாக இருக்கின்றன. அதுவும் சுறுக்கப்பட்ட ரமேஷ், சுரேஷ், ஸ்ரீனிவாஸ், சுப்ரமணி போன்ற பெயர்கள் மிகுதியானவை, தமிழ்நாட்டு தொலைபேசி பட்டியலில் மிகுதியாக இடம் பெற்றிருக்கும் பெயர்களில் எனக்கு தெரிந்து சுப்பரமணி(யன்) ஸ்ரீனிவாஸ்/சன் குறைந்தது 5 பக்கங்களுக்கான பட்டியலாக இருக்கும்.
நடுத்தரவர்கத்தின் பெயர் சூட்டும் உளவியல் பெயர் சுறுக்கமாகவும் எளிதாகவும், புதுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். அதிலும் ஒரு சிலர் எண்கனிதம் பார்த்து கொஞ்சம் திருத்தி அமைத்துக் கொள்வர். என் நண்பர் ஒருவர் அவரது முதல் மகனுக்கு எண் கனிதம் பார்த்து பெயர் வைத்தார். சிதார்த்....என்னடா இது பதார்த்தம் என்பது போல் சிதார்த் என்று கேட்டேன். குறிப்பிட்ட எழுத்து எண்ணிக்கைக்குள் வந்தால் அவன் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று ஜோதிடர் பரிந்துரைந்ததைத்தான் வைத்தேன் என்றான் அப்படியே பதிவும் செய்யப்பட்டு, கூப்பிடப்பட்டும் வருகிறது.

இப்ப அபித குஜலாம்பாளுக்கு வருவோம், ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண் பெயர்களில் எதோ ஒரு அம்பாள் என்று முடிவதாக பார்பன பெண்களின் பெயர்களும் நடுத்தரவர்கத்தினர் பெயரும் இருக்கும், என் அத்தை ஒருவர் தன் உண்மையான (மு/மினியம்மா) பெயர் கிராமத்து பெயர் போல் இருப்பதாக அவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்த பிறகு மீனாம்பாள் என்று மாற்றிக் கொண்டார். மீனாட்சி என்னும் சித்தியின் பெயர் மீனா என்று சுறுங்கியது, அதெல்லாம் அவர்கள் விரும்பியே மாற்றிக் கொண்டவை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெயர் (கோவிந்தராஜுவுக்கு - பெருமாளுக்கு தங்கை முறை வரும் பெயர்) ஒத்துவராது என்று அம்மா பெயரை லஷ்மியுடன் தொடர்புடைய ஒரு பெயராக மாற்றிக் கொண்டாலும் அந்த பெயரில் அப்பா தவிர்த்து யாரும் கூப்பிடவில்லை. அம்மாவுக்கு அவருடைய அப்பா வைத்த பெயரே இன்றுவரை நிலைத்திருக்கிறது.

அபித குஜலாம்பாள், குஞ்சிதபாதம், ஆதிமூலம் ஆகியவை வடமொழிப் பெயர்களே என்றாலும் அவை பழைய பெயர்கள் என்று இன்றைக்கு பார்பனர்கள் உட்பட யாரும் விரும்பி வைப்பது இல்லை. அதே போன்று நல்ல தமிழ் பெயர்கள் சுறுக்கமாக இருந்தால் நிறைய பேர் தற்பொழுது தமிழ் பெயர் சூட்டுவதற்கும் தயங்குவதில்லை, அன்பு, அறிவு, பரிதி, வெற்றி, தேன்மொழி, கயல்விழி, பொன்னி, இனியா, அரசி, செல்வி போன்ற பெயர்களையும் சூட்டுவதற்கு பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

பெயருக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, தாத்தா பாட்டி பெயர்களையே பேரக் குழந்தைகளுக்கு சூட்டுவது தான் நம் வழக்கம், இடையில் சாதிப் பெயர்களை பின்னூட்டுகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் வந்ததால் மூதாதையர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் வழக்கம் குறைந்து போய் இருந்தது. தன் பெயரை உடையவன் பெயரன், பெயர்த்தி என்பதுவே பேரன் பேத்தி என்ற உறவுப் பெயராக இருப்பது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கம். பெற்றோர்களை நினைவு கூறும் கடமையாக பிள்ளைகளுக்கு அவர்கள் பெயரைச் சூட்டிப் பார்ப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்தது.

மீண்டும் பெயரைக் கொச்சைப் படுத்துவதற்கு வருவோம், ஒருவர் என்ன பெயர் வைத்திருந்தாலும் பெயரை வைத்து பழிப்பது இயலாமையின் வெளிப்பாடே, அதைத் தவிர்க்கலாம். அது மட்டுமே இல்லை ஒரு பெயரை வைத்து குறிப்பாக பெண் பெயரை வைத்து ஒரு சொல்லாடல், கருத்தாக்கம் உருவாகிவிட்டால் அந்த பெயரை உடைய பெண்களுக்கெல்லாம் சங்கடமாகவே அமையும். சரோஜாதேவி ன்னு பெயர் உள்ள பெண்கள் படும் சங்கடம் இருக்கிறதே... அந்த பெயருக்கான பொருள் அவர்கள் புரிந்துகொண்டிருந்தால் மிகவும் நொந்து போவார்கள்.

முடிவாக சொல்ல வந்தது..... பெயர் சூட்டுவதற்கு வடமொழிப் பெயர்களைத்தான் சூட்டுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் குறைவு, ஆனால் ஜோதிடன் சொல்லும் எழுத்தில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் மிகுதி, அந்த எழுத்துக்களில் எளிமையான தமிழ் பெயர்களை பரிந்துரைத்தால் பலர் வைப்பதற்கே விரும்புகிறார்கள்.

நீங்கள் பிசியா ?

போனவாரம் இன்னேரம் என்ன செய்தோம் ? மாதக் கூலிக்கு வேலைப் பார்க்கும் நமக்கெல்லாம் இன்னேரம் அலுவலகத்தில் பொட்டி தட்டிக் கொண்டிருப்போம் இல்லை யாருடனாவது உரையாடியில் மொக்கைப் போட்டு இருப்போம் என்று உறுதியற்ற பதில் கண்டிப்பாக கைவசம் இருக்கும். சென்றவார இறுதி சனி / ஞாயிறு என்ன செய்தோம் என்று அதே நாளில் அடுத்தவாரம் நினைத்தால் என்ன செய்தோம் என்றே நினைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நம்ம நேரம் என்பது நினைவிற்கே வர இயலாத அளவிற்கு பயனற்று போனதாக இருக்கிறது என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. நினைத்துக் கொள்வேன். நாம செலவிட்ட நேரம் எதற்காக என்று ஒருவாரத்திற்குள் நடந்த நிகழ்வில் கூட நினைத்துப் பார்க்க இயலவில்லை என்றால் நாம எவ்வளவு வெட்டியாக இருந்திருக்கிறோம் என்பதன் குறிப்பே அவை. அதற்காக நினைவு கூற தக்க அளவில் நம் மணித்துளிகள் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை என்றாலும், ஒருவர் சமூகத்திற்கோ, தம்மை சார்ந்தவர்களுக்கோ எந்த அளவு முதன்மையானவர் என்பதை அவர் செலவிடும் நேரங்கள் தான் முடிவு செய்கிறது. வேலை தவிர்த்து, குடும்பம் தவிர்த்து சனி / ஞாயிறில் ஒருவருக்கு நேரம் போதவில்லை என்றால் அவர் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தம்மை இணைத்துக் கொள்ளும் ஒருவராக இருக்கும்.

பொழுதுகளை முழுக்க முழுக்க வேலைசெய்வதற்கும் ஓய்விற்கும் பயன்படுத்துபவர்கள் ஒன்று தொழில் அதிபர்கள் மற்றவர்கள் எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் தொழிலாளிகள். வேலை, உணவு, உறக்கம் இதைத் தவிர்த்து அவர்களுக்கான நேரம் என்பது அவர்களுக்கு இருக்கவே இருக்காது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நேரம் சில சமயம் எப்படி போக்குவது என்றே தெரியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கும்.
போனவாரம் இல்லை பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருதீர்கள் என்று உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் மிக பிசியான ஒருவராகவும் சமூகத்தால் நன்கு அறியப்பட்ட ஒருவராக (இருந்து) இருக்க வேண்டும், உங்கள் ஒவ்வொரு நாளும் செயலாளர் உதவியிடன் நாட்குறிப்பின் திட்டமிடலாக கழிந்து போன ஒன்றாக இருந்திருக்கும், அதிலிருந்து பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அறிவது கடினமே இல்லை. உதாரணத்திற்கு பில்கேட்ஸ் பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் தெரிந்து கொள்ள கடினமான ஒன்று அல்ல, ஆனா நமக்கு ?

கடந்த வாழ்க்கை, கழிந்த வாழ்க்கை, அனுபவம் என்பதைத் தவிர்த்து நாம் செலவிட்ட நேரங்கள் நினைவு கூறத்தக்கதாக இல்லை என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்பதில்லை என்பது உண்மை தான்.

தனக்கான நேரத்தை தனக்கு மட்டும் பயன்படுத்துவர்கள் தன்நலர்கள்
தனக்கான நேரத்தை பிறருக்காக செலவு செய்பவர்கள் சமூக ஆர்வலர்கள்
தனக்கான நேரத்துடன் பிறருக்கான நேரத்தையும் தனக்காகப் பயன்படுத்துபர்கள் தொழில் அதிபர்கள் (மார்கிசிய சிந்தாத்ததில் சொல்ல வேண்டுமென்றால் பிறர் உழைப்பை சுரண்டுபவர்கள், முதலாளிகள்)
தனக்கான நேரத்தையும் பிறருக்கான நேரத்தையும் வீனடிப்பவர்கள் வெட்டிப் பேச்சாளர்கள்

முதல் மூன்று நேரங்களின் பக்க விளைவுகளாக பலன்கள் உண்டு கடைசியில் செலவிடும் நேரம் பயனற்றவை.

நம் நேரங்கள் நிகழ்வுகளாகப் பதியப்பட்டு நினைவுக்கூறத்தக்க வகையில் சென்று கொண்டிருந்தால் அப்போது நாம் ரொம்ப பிசி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நான் பிசி இல்லை.

3 ஏப்ரல், 2010

நானும் பார்பனியமும் !

பார்பனியம் என்பதன் என் புரிதல் பூணூலோ, பார்பனர்களாக பிறந்த அனைவருமே இல்லை, உயர்சாதி மனப்பான்மையில் மேட்டிமையாக நடந்து கொள்பவர்கள் அனைவரும் பார்பனர்களே. உயர்சாதியம் என்று எழுதுங்களேன் என்று சில பார்பனர்களும் பார்பன ஆதரவாளர்களும் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை, உயர்சாதியம் என்று உயர்வு படுத்தி எந்த சாதியையும் நான் குறிப்பிட விரும்புவதில்லை ஏனெனில் எல்லா சாதியிலும் பணக்காரர்களும் உண்டு ஏழைகளும் உண்டு, ஏழைகள் என்றுமே தாழ்ந்தவர்களாகவே சமூகம் பார்க்கிறது, பொருளாதார ரீதியாகக் கூட எந்த ஒரு சாதியையும் உயர்சாதி என்று சொல்லிவிட முடியாது. முகத்திலிருந்து பிறந்தவனே எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்கிற ஒட்டுமொத்தமாக தங்களை மனித குலத்தின் உயர்ந்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் பார்பனர்களே என்பதால் பார்பனியம் என்ற சொல்லைப் உயர்சாதியத்திற்கு ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரி என்றே பலரும் நினைப்பதால் நானும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்து பயன்படுத்திவருகிறேன். இது குறித்து என்னிடம் வாதிடுபவர்களுக்கும் எனது பதில் இது தான்.

பார்பனியத்திற்கு பூணூல் அடையாளம் என்று நான் கருதுவதில்லை. பூணூல் என்பது சடங்கு என்ற அளவில் இந்துக்களின் இறப்பு சடங்கின் போதும் பல்வேறு இந்து சாதியினரால் பயன்படுத்தப்படுவதால் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதை சாதியம் என்று பார்க்காமல் பண்பாடு, பழக்கவழக்கம், சடங்கு சம்பிரதாயம், பெற்றோர்களின் விருப்பம் இந்த எதோ ஒன்றின் காரணமாகக் கூட ஒருவர் பூணூல் தொடர்ந்து அணிகிறார் என்கிற புரிதல் எனக்கு உண்டு, அதனால் ஒருவர் பூணூல் அணிந்திருக்கிற ஒரே காரணத்தினால் அவர் உயர்சாதி மேட்டுமையுடன் நடந்து கொள்வார் என்பதை நான் ஏற்பது இல்லை. ஆனால் பூணூலை உயரிய சாதி அடையாளமாக அணிந்து கொண்டு தாங்கள் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் பார்பனர்களை நான் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இப்படியான உயர்சாதி மேட்டிமைத் தன பார்பனர்களை சாதிக்காக சாதிக்க முயற்சிக்கும் சாதி அபிமானிகள் அல்லது சாதி வெறியர்கள் என்று அவர்களின் தீவிரத்திற்கு ஏற்ப அவர்களின் அடையாளாமாகுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பார்பனர்கள் தாம்ராஸ் எனப்படும் பார்பன சாதி சங்கத்தில் சிலைகளோ, புகைப்படமோ வைப்பது ஏற்பாடு கூட ஆகியிருக்கும் அதனால் அவர்கள் சாதிப் பெருமையை சாதி வெறியுடன் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ந்த ஒரு சாதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடாத ஒருவரை இவன் பார்ப்பான் என்று கூறும் தனிமனித தாக்குதல் என்னைப் பொருத்த அளவில் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதற்காக தூற்றுவது கண்டிக்கத்தக்கதே. முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்பனர்கள் என்று கூறிய சர்சைக்குரிய பதிவுக்கு என் பின்னூட்டம் அவர் அதை மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசினார் என்பதற்கு மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. முன் வரிசையில் யார் யார் அமர்ந்திருந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு உண்மையைச் சொல்லப்போனால் பார்பனர்களாக அடையாளப்படுத்தப்படும் (அவ்வாறு தங்களைக் கூறிக் கொள்ளாதவர்களை) பல பதிவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள், அவர்களிடம் ஒரு சக பதிவர் என்பதையும் தாண்டி உள்ளார்ந்த நெருக்கத்துடன் உறவு முறைப் பெயர்களிலேயே அவர்களை அழைத்தும் வருகிறேன்.
என்னைப் பொருத்த அளவில் ஒருவரின் அடையாளம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் அது அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாடுகளள சமூகக் கெடுதல்களைக் கொண்டிருக்கும் கருத்து ஆதரிக்காவிடில் அவர்கள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் நான் பார்ப்பது இல்லை. என்னைப் பொருத்த அளவில் அவர்கள் எனக்கு நெருக்கமான உறவினர் போன்ற நண்பர்கள்.

பார்பனர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள் எனக்கு நண்பர்களாக இருப்பதாலேயே நான் பார்பனக் கருத்துகளை ஆதரிக்கவேண்டும், அல்லது பார்பனீயம் பற்றி எழுதக் கூடாது என்று எந்த ஒரு அடையாளப்படுத்தப்பட்ட பார்பன நண்பரும் என்னை கடிந்து கொண்டது கிடையாது.

பார்பனீயத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பூணுல் வெளியே தெரிகிறவர்களையெல்லாம் வம்பிலுப்பது என்னைப் பொருத்த அளவில் கண்டிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அப்படியும் கூட விடாமல் பூணூல் போடாத பார்பனர்களையும் சிலர் பார்பனியவாதிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் ஞானி போன்றவர்கள் தாங்கள் பார்பனிய கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக எழுதினாலும் அவர் சில அரசியல் கருத்துகளைக் கூறும் போது பார்பனிய புத்தி என்றும் பூணூல் நெளிகிறது என்றும் விமர்சனம் செய்கிறார்கள். இது போன்ற வம்படி அரசியல்களை நான் அதரிப்பது இல்லை. பார்பனரின் அடையாளம் பூணூல் என்போர், அந்த பூணூலை கழட்டிய பார்பனர்களையும் பார்பனியவாதிகளாகவேப் பார்த்தால், பார்பனியத்தை அழிப்பது என்பது பார்பனர்கள் அனைவரையும் அழிப்பதா ? அல்லது அடிமை ஆக்குவதா ? என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியாகப் பதில் சொல்லுவது போல் தெரியவில்லை.

ழிக்கப் படவேண்டியது சாதிகள் மட்டும் தான் தனி மனிதர்கள் இல்லை. ஒரு சாதியில் பிறந்த ஒரு காரணத்திற்காக தலித்துகள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும், பார்பனர்களாகப் பிறந்து சாதியே வேண்டாம் என்றும், சாதி எந்த உயர்வையும் தரவில்லை என நினைக்கும், நம்பும் பார்பனருக்கும் நடக்க வேண்டுமா ? பள்ள நாயே என்று திட்டுவதற்கும் பார்பன நாயே என்று திட்டுவதற்கும் வேறுபாடுகள் கிடையாது, அதையும் ஒருவர் பார்பனராக பிறந்தார் என்பதற்காக எந்த ஒரு சாதி அடையாளமும் போற்றாதவர்களையும் 'பார்பான்.......பார்பான்.... பார்பான் புத்தி ' என்று கூவுவது அருவெறுப்பையே தருகிறது.

பார்பனீயம் என்கிற அரசியல் நிலைப்பாட்டை உயர்சாதி அடையாளமாகச் சொல்வதை ஏற்கும் என்னால் பார்பனர்கள் அனைவருமே பார்பனீயவாதிகள் என்று கூற்றை ஏற்க இயலாது. ஒருவர் தன்னை பார்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விழையாதபோது அவர்களுக்கு 'பார்பனர்கள், பார்பனியவாதிகள்' என்று சாதிச் சாயம் பூசுவதும் கூட குறிப்பிட்ட சாதி இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஆளுமை மனப்பான்மையாகும் அதற்கு நான் ஆதரவு கொடுப்பது இல்லை. குறிப்பிட்ட மதத்தினர் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்வது எவ்வளவு மடத்தனமோ, மதவெறியோ.....அப்படித்தான் பார்பனர்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக அதைப் பற்றி பேசாதவர்களையும் பார்பனர்களாகவே அடையாளப்படுத்திப் பார்ப்பதும் மடத்தனமே.

நான் பார்பன ஆதரவாளன், பார்பன எதிரி என்று கட்டமைப்பவர்களுக்கு இது தான் என் நிலைப்பாடு என்று கூறிக் கொள்கிறேன்.

2 ஏப்ரல், 2010

பை(ன்)யா !

படத்தின் நாயகன் முரட்டு பையன், முன் கோபக்காரன், நக்கலாக பேச்சும் பெண்கள் மீது ஜொள்ளு சிவக்குமாரின் சின்னப் பையனை அந்த கேரக்டரில் போடுங்க என்று நினைக்கும் படி கார்த்தியின் மூன்றாவது படமும் அவருக்கு அப்படி ஒரு தோற்றம் கிடைக்கும் படி வந்திருக்கு. இருந்தாலும் இந்தப் படத்தில் கார் ஓட்டும் கார்த்திக், ஜீன்ஸ் பேண்ட், கைமடித்த டெனிம் ஸ்டைலிஸ் சட்டைகள் என்று சற்று மாறுபட்டு இருக்கிறார். எந்த ஒரு கோணத்திலும் அப்பா சிவக்குமாரையோ, அவரது அண்ணன் சூர்யாவையையோ கொண்டு வரும் முகத் தோற்றம். கதையில் கார்த்தி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

நான்கு நண்பர்கள், அவர்களுடன் ஒரு நண்பி என ஐவர் கூட்டணியான கார்த்தியின் நண்பர்கள் கார்திக்குக்கு பெங்களூரில் வேலைக்கு முயற்சிக்க......எதிர்பாராவிதமாக ஒரு ஷாப்பிங் காம்பெளெக்சில் தமன்னாவைப் பார்த்தத்தில் கார்த்தி அவரின் மீது பைத்தியமாக ஆகிறார். இடையில் இவர்களுக்கு கார் கொடுத்த நண்பரை அழைத்துவரச் செல்லும் போது தம்மானாவை வில்லன் உறவினர் சென்னைக்கு கடத்த முயற்சிக்க வாடகைக் கார் தேடும் போது கார்த்தி ஜொள்ளுவிட்டபடி முன்வருகிறார். உறவினரை ஏமாற்றி மும்பைக்கு தமன்னா தப்பிக்க முயற்சிக்க இருவரும் காரில் பயணிக்கிறார்கள். இதற்கிடையே ஏற்கனவே வேறுரொரு வில்லன் கும்பலுடன் கார்த்தி மோதி இருக்க, தமன்னாவின் உறவினர் வில்லன் பட்டாளம் இரு எதிரிகள் இவர்களை துறத்துகிறார்கள்.

நகைச்சுவைக்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் இயக்குனர் லிங்கு சாமி கார்த்தியை வைத்தே சரி செய்திருக்கிறார். இடைவேளைக்கு சற்று முன்பும் இடைவேளைக்கு பிறகு கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் சண்டைக் கோழி ரகம். கார்த்தியின் அசத்தலான சண்டைக் காட்சிகளில் தேறி இருக்கிறார்....அசத்தல்.



அவருடன் ஒட்டிக் கொண்ட வெடவெட கோழிக்குஞ்சு போல தமன்னா வசனம் குறைவாகப் பேசினாலும் இரண்டு ஜோடிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக பொருந்தி இருக்கு.

யுவன் இசையில் மூன்று பாடல்கள் இனிமை, பின்னனி இசையும் இளைய ராஜாவின் இளைய ராஜா சிறப்பாக செய்திருக்கிறார்.

நெடுஞ்சாலைகள் படம் முழுக்க வருகிறது. நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். ரன், சண்டைக் கோழி வகையில் லிங்கு சாமி செய்திருக்கும் மற்றொரு படம். 2:45 மணி நேரம் ஓடுகிறது.

கார்த்தி படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்தி படம். இயக்குனர் லிங்குசாமி என்று எழுத்து போடும் போது திரையரங்கில் கைத்தட்டல், இயக்குனருக்காகவும் படம் பார்க்கவந்தவர்கள் மிகுதி. படவெளியிடு கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரி

நாயகன் நாயகிக்கு பெற்றொர்கள் பாத்திரம் எதுவும் திரையில் காட்டப்படவில்லை. நான்கு நண்பர்கள், 10 - 10 இரு எதிரி குழுக்கள், கடைசியில் ஒரு உறவினர் கூட்டம், மும்பை நண்பனாக அயனில் நடித்த நண்டு நொரண்டு நடிக்கிறார். ஒரு சில காட்சிகள் என்றாலும் கலகல.

வேகமான திரைக்கதையும், சண்டை காட்சிகள் பிடித்தவர்களுக்கு லிங்குசாமியின் பைய.....fine fine. மற்றவர்களுக்கு சாலை இரைச்சல், கார் சத்தங்கள், சண்டைகள் அனைத்தும் சத்தமாக இருக்கும்.......பையா fine

பையா.......பைன் எனக்கு பிடித்து இருக்கு. சிவக்குமாரின் சின்னப் பையன் பாஸ் பாஸ்.

ஆனால் தொடர்ந்து இதே போன்றே பாத்திரப் படைப்பில் நடித்தால் போரடித்துவிடும்

1 ஏப்ரல், 2010

ருத்ரன் பதிவுலகை விட்டு ஓடுவாரா ?

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை என்பது எனது நம்பிக்கை. ஆனால் தனக்கான விளம்பரத்திற்கு என்று எதையும் வேண்டுமென்றே தூண்டாமல் இருக்கும் ஒருவருக்கெதிரான வன்மம், விஷமத்தனம் ஆபாச அர்சனைகளை விமர்சனமாக பாக்கும் பக்குவம் எனக்கு இல்லை.

*****

மருத்துவர் ருத்ரன் செய்த தவறு ?

வினவு குழுவுடன் தொடர்பு வைத்துள்ளார், அவர்களின் கருத்துகளை ஆதரிக்கிறார். பார்பனர்களின் நிலைப்பாட்டு அரசியலை எதிர்க்கிறார், எம்எப்ஹுசைனுக்கு ஆதரவு கொடுத்து இந்துத்துவாக்களை கண்டித்தார்.

இவ்வளவு தவறுகள் செய்த்த மருத்துவரை மன ரீதியில் டார்சர் கொடுத்து பதிவுலகை விட்டு துறத்துவது எப்படி ?

Anonymous said...

ஐயா,
தயவு செய்து பார்ப்பனர் மீதான தனிமனித தாக்குதல் வேண்டாமே.
உமா மேடம்,மனிதம் வளர்ப்போம்.நாளையே உங்களுக்கோ அல்லது ருத்ரன் சாருக்கோ பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி பெரிய ரத்த இழப்பு,அரிய வகை ரத்தம் எங்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒரு பார்ப்பனர் ரத்தம் கொடுத்தால் வேண்டாம் என்பீர்களா ?


பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!

- இதை ஒரு முதிர்ச்சியற்ற முதியவர் (அப்படி என்றால் 65 வயது இளைஞன்...நம்புங்க !!!) மற்றும் சாதி பிரியரின் பதிவில் படித்தேன். மேலும் பல தனிமனித தாக்குதல் , தனிமனித தாக்குதலுடன் கூடிய பெரும்பாண்மையான அனானி கமாண்டுகளை அந்த முதிர்ச்சியற்ற முதியவர் தனக்கு தானே போட்டு மகிழ்ந்து கொள்வார் என்பதை பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதிர்ச்சி சிறிதும் அற்ற அந்த முதியவர் குஷ்பு மேட்டரை மறுப்பதிவு செய்து இன்னொரு போலி டோண்டு உருவாக்கத்திற்கு முயற்சி செய்தார்... எல்லோரும் புரிந்து கொண்டு அந்த பக்கமே போகவில்லை. இப்படியெல்லாம் அந்த முதிர்சியற்ற முதியவரைப் பற்றிச் சொல்கிறேன் என்றால் அவர் எனக்கு எதிரி என்று பொருள் இல்லை.

தன்னை மதிக்காத அந்த முதிர்ச்சி அற்ற முதியவரின் பதிவில் தெரியாத்தனமாக பின்னூட்டம் போட்டு சிக்கியவர் மருத்துவர் ருத்ரன்.

*****

மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டம் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற பதிவர்கள் அதை (வரமாக) நினைத்து பெருமைபட்டார்கள். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட மருத்துவர்களில் மருத்துவர் ருத்ரன் முகத்துடன் உடனே நினைக்கப்படுபவர் அந்த அளவுக்கு தொழிலிலும், மீடியாக்களிலும் அறியப்பட்டவர்.

நம்ம வியந்து பார்ப்பவர்கள் நம்முன் அடிக்கடிவந்தால் அவரும் சாதரண மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். பின்னூட்ட பினாமிகளால் அர்சிக்கப்படும் ருத்ரன் பாவம் !!! என்று சொன்னால் மருத்துவர் ருத்ரன் சிரிக்கக் கூடும். இருந்தாலும் ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்.

ருத்ரனின் மீதான வெறுப்பு அவருடைய பார்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்பதைத் தாண்டி, அவர் மீதான தாக்குதல்களுக்கான உளவியல்,

ஒட்டுமொத்தமாக தாடியுடன் பார்த்தால் ருத்ரன் ஒரு 'பெரியார் பிம்பம்'
பெரியார் மீது வெறுப்பு உள்ளவர்களின் இலக்கு, மருத்துவர் ருத்ரனாகவும் இருக்கிறார்,

அவர் மற்றும் அவரது மனைவியை விமர்சனம் செய்தால் அவர் நிச்சயம் ஓடிவிடுவார் என பதிவுலகை விட்டு ருத்தரனை துறத்த முயற்சிக்கும் கூட்டம் வெற்றி பெரும் என்றெல்லாம் நான் நம்பவில்லை :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்