பின்பற்றுபவர்கள்

பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 பிப்ரவரி, 2015

Onsen - ஜப்பானிய வெந்நீருற்று குளியல் !

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு - 

இந்த குறளுக்கு பொருள் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாத போது அம்மணத்தை மறைக்க உதவும் கை போன்றதே தக்க சமயத்தில் உதவக் கூடியது நட்பும்.  பருவ அகவையை கடந்தவர்களின் உட‌லில் பலர் முன்பு ஆடைய‌ற்ற‌ நிலை என்ப‌து ஒரு இக்க‌ட்டான சூழ‌ல், வெட்க‌த்தையும் கூச்ச‌த்தையும் ஏற்ப‌ட‌த்தும் நிலை, அப்ப‌டியான‌ நிலையை திருவள்ளுவர் மற்றும் ச‌ங்க‌ கால‌த்திலும் யாரும் விரும்பிய‌தில்லை, சபை முன்னிலையில் ஆடை அவிழ்ப‌து ஒருவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தும் முய‌ற்சி என்றெல்லாம் ம‌காபார‌தக் க‌தைக‌ளில் ப‌திய‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள ஆடையின் தேவை குறித்த த‌னிம‌னித‌ த‌ன்மான‌ம் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள்.

ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ வெட்க்க‌ம் கொள்ள‌த் தேவை இல்லை என்ப‌து பொதுவான‌ ப‌ரிந்துரைகள் மற்றும் புரிந்துணர்வு தான், இந்தியாவிலும் த‌மிழ‌க‌த்தில் இவை ஓர‌ள‌வு ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டாலும், ந‌ம‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை ஒரு சில நிமிடங்கள் ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌விர்த்து வேறு எவ‌ருக்கும் காட்டுவ‌து வழக்கம் இல்லை, பெண்க‌ளுக்கு ம‌க‌ப்பேற்றின் போது அந்த சூழலில் உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் முன்னிலை த‌விர்த்து எந்த‌ பெண்ணும் த‌ன‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை தனது துணை தவிர்த்து எவ‌ருக்கும் காட்ட‌ மாட்டார்கள்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக் குளத்தில் குளியல் இருந்தது, இன்னும் கூட கிராமங்களில் படித்துறைகளுடன் சேர்ந்த குளத்தில் குளிக்கிறார்கள், இன்னும் குற்றலாம், மலை அருவிகள், கடற்கரை தவிர்த்து வெறெங்கும் பொதுக் குளியல்களுக்கு வாய்ப்பற்ற நிலை உள்ளது. எனக்கு தெரிந்து ஆசிய நாடுகளில் நான் பயணம் செய்தவரையில் குளியல் என்பது பொழுது போக்கு, அதற்காகவே சீனா, தைவான், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பலவித வசதிகளுடன் கூடிய பொதுக் குளியல் அறைகள் உண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன தலைநகரில் Beijing Bath Houses மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தது, தற்பொழுது அவைகள் மூடப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமாக SPA எனப்படும் பல்வேறு குளியல் வசதிகளுடன், சூட்டு அறை (Sauna) மற்றும் நீராவி அறைகள் (Steam Room) கூடிய பொழுது போக்கு இடங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் Russian Banya மற்றும் Turky Hammam புகழ்பெற்றவை. SPA இதைத் தமிழில் பொருளுடன் 'புத்துணர்வு கூடம்' என்று வேண்டுமானால் சொல்லலாம், 
 (Pic Courtesy : China Daily)
வார இறுதிகளில் நண்பர்களுடன் அல்லது இல்லத்தினருடன் சென்று ஒரு மூன்று மணி நேரம் செலவு செய்துவிட்டு உடலை மனதையும் புத்துணர்வு செய்து திரும்பும் ஒரு பொழுது போக்கிடமாக அவற்றை அமைத்துள்ளனர். முழுவதுமாக உள்ளுக்குள் (Indoor) சுடுநீர் த‌ண்ணீர் குள‌ங்க‌ள், குளிர் நீர் குள‌ங்க‌ள் ம‌ற்றும் சுடுக‌ல் சூட்டு அறை (Sauna) உட‌ல் விய‌ர்க்க‌, நீராவி அறை இவ‌ற்றை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க‌ தொலைகாட்சி அறை, அங்கு அருகே பாண‌ங்க‌ள் சிற்றுண்டிக‌ள், மென்மது (Beer) எல்லாம் கிடைக்க‌க் கூடிய‌ Bar வ‌ச‌தி ம‌ற்றும் விரும்பிய‌வ‌ர்க‌ளுக்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தினால் தசைப்பிடித்துவிடுவ‌து (Massage) ஆகிய‌ வ‌ச‌திக‌ள் இருக்கும். சிங்க‌ப்பூர் ம‌லேசிய‌ நாடுக‌ளில் பெண்க‌ளுக்கான‌ SPA குறைவு, ஆனால் ஆண்க‌ளுக்கு நிறைய‌வே உள்ள‌து. இவ‌ற்றிற்கும் சீனா, தைவான்,கொரியா ம‌ற்றும் ஜ‌ப்பான் SPA க்குளுக்கும் பெரிய‌ வேறுபாடு அங்கு ஆடை தான். சிங்க‌ப்பூர் ம‌லேசிய ஆண்களுக்கான SPA க்க‌ளில் சிறிய‌ வகை நீச்சல் கால்ச‌ட்டைக‌ அணிந்திருப்பார்க‌ள். ம‌ற்ற‌ ஆசிய‌ நாடுக‌ளில் ஏதும‌ற்ற‌ (Nude/Naked) ஏகாந்த‌ ஜென் (ஜைன‌) நிலை தான்.

40ஐ கடந்த எனது அகவை மற்றும் துய்ப்புகளை கருத்தில் கொண்டு கீழ்கண்டவற்றை எழுதுவதற்கு எனக்கு சற்றும் கூச்சம் எதுவுமில்லை.

******

ஏகாந்த நிலையை துய்க்கும் வாய்ப்பு முதன் முதலில் மூன்றாண்டுக்கு (2012) முந்தைய சீனப் பயணத்தில் தான் கிட்டியது, தங்கியிருந்த 4 நட்சத்திர விடுதியில் இருந்தது SPA, அங்குள்ளே எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் சென்றேன், முதலில் உடமைகளை பூட்டி வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு சென்றதும் உடமைகளை வைத்துவிட்டு, உடைகளை களையச் சொன்னார்கள், கழட்டிவிட்டு உள் ஆடையில் நின்றேன், அதையும் கழட்டுமாறு அங்கு உதவி செய்யும் சீனர் சொன்னதும் கண்கள் சுறுக்கி இமைத்து 'திக்' ஒரு கூச்சம், திரும்பிவிடலாமா என்கிற எண்ணம், பிறகு இங்கு தான் நமக்கு தெரிந்தவரோ, இந்தியரோ தமிழரோ இல்லையே என்று தேற்றிக் கொண்டு முற்றிலும் களைந்தவுடன் உள்ளுக்குள் கூட்டிச் சென்றார். மஞ்சள் நிற ஆண் குழந்தைகள் அப்படியே 5 - 6 அடிக்கு வளர்ந்தது போல் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வயது சீன‌ ஆண்கள் ஜென் நிலையில் குளித்துக் கொண்டும், படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தனர், அங்கு கருநிறத்தில் நுழைந்த என்னை ஒரு முறை வியப்பாக பார்த்ததுடன் சரி, பின்னர் பார்வையை மீட்டுக் கொண்டனர், ஒட்டுத் துணி கூட இல்லாத நிலையில், அருகே ஷவரில் நின்று குளித்துவிட்டு விரைவாக சென்று  சுடுநீர் உள் நீச்சல் குளத்தில் (Indoor Hot spring Pool) தண்ணீரில் இறங்கி, தண்ணீரையே ஆடை ஆக்கிய ஒரு சில நிமிடங்கள் நானும் கூச்சம் மறக்க, மனதிற்கு இதமான சுதந்திர உணர்வுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ள, கூட்டில் இருந்து விடுதலை அடைந்த ஒரு பறவையின் மன நிலைக்கு மாறி அதனுள் அங்கும் மிங்கும் நீந்தி மகிழ்ந்தேன். அந்த‌ சூழ‌ல் மறக்க இயலாததாகவும், பின்னர் நினைக்க அது போன்ற வாய்ப்பு இனி எப்போதோ என்ற ஏக்கமாகவும் இருந்தது.


*****

சென்ற‌ வார‌ம் ஜ‌ப்பான் செல்லும் வாய்ப்பு, மூன்று மாத‌ம் முன்பு திட்ட‌மிட்ட‌ ஒன்று தான், அங்கு வேறு சில‌ வேலைக‌ள் இருந்தாலும், ஏற்க‌ன‌வே ஜ‌ப்பான் SPAக்கள் புகழ்பெற்றவை என்று அறிந்திருந்ததால், அங்கு சென்று வரவிரும்பி சிறந்த SPAக்களில் ஒன்றான SPA World அதன் மிகச் சிறந்த வசதிகளுக்காக தேர்ந்தெடுத்து சென்றேன்.

ஒரு நாள் முழுவதுமே அங்கிருக்க கட்டணம் குறைவு தான் இந்திய ரூபாய்க்கு 1200 என்ற அளவில் தான், உள்ளே நுழைந்தது, ஷூவை கழட்டி பூட்டி வைத்துவிட்டால், எண்ணுடன் கூடிய கையில் அணிந்து கொள்ளும் Strap Tag உடன் ஆண்களுக்கான 4 ஆம் தளத்திற்கு செல்ல வேண்டும். பெண்களுக்கு 6 ஆம் தளம் (Asian Zone), ஒவ்வொரு மாதமும் ஆண்கள் தளமும் பெண்கள் தளமும் மாறும், நான் சென்ற பிப்ரவரியின் பொழுது 4 ஆம் தளம் ஐரோப்பிய அமைப்பு (European Zone) ஆண்களுக்கானது,  ஆறுவயதுக்குட்பட்ட ஆண் பெண் குழந்தைகள் எந்த தளத்திற்கும் பெற்றோர் ஒருவருடன் செல்லலாம். ஆண்களுக்கான 4 ஆம் தளத்தில் நுழைவாயிலை தாண்டியதும் அங்கு உடைமாற்றும் பகுதி, அங்கு நுழையும் போதே ஒரு சில அம்மணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர், கிட்டதட்ட 500 பேர் உடமைகளை பூட்டி வைக்கும் வைக்கும் Locker Room அமைந்த பகுதி, அந்த தளமும் மிகப் பெரியது, பல்வேறு குளிப்பு வகை வசதிகளை உள்ளடக்கியது, கீழ்தளத்தில் வழங்கிய‌ த‌னிப்ப‌ட்ட‌ ஆடையை மூன்றாம் தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும். அணிந்து கொண்டு முதலில் மூன்றாம் தளம் செல்ல முடிவெடுத்து சென்றேன்.
Ganban Yoku

மூன்றாம் தளத்தில் ஆண்கள் பெண்களுக்கு பொதுவான சுடுகல் Stone SPA அதனை Ganban's Yoku என்ற ஜப்பானிய பெயரில் அழைக்கிறார்கள், அதற்கான தனிப்பட்ட ஆடையை அணிந்து அங்கு செல்ல வேண்டும், அதில் பல நாடுகளில் உள்ள  சுடுகல் SPA அமைப்பும் அதற்கான‌ தனித் தனி அறைகளும் அதற்கான வெப்ப நிலைகள் மற்றும் அலங்கார அமைப்புகளுடன் உள்ளது, ஒரு அறையில் 20 பேர் வரை ஓய்வெடுக்கும் அளவில் உள்ளது, மெல்லிய இசையும், இதமான மணமும், படுத்துக் கொள்ள அல்லது அமர்ந்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது, மையப்பகுதியில் படுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும் மிக அற்புதமான வான் கூறையில் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்ட நடுக்கூடமும் இருந்தது, அருகில் உணவு மற்றும் குளிர்பான கடைகள் இருந்தன. அந்த பகுதியில் ஒவ்வொரு அறைக்கும் 5  - 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு ஒரு மணி நேரம் களி(ழி)த்து நான்காம் தளத்தில் இருக்கும் ஆண்களுக்கான Onsen - japan hotspring spa பகுதிக்குள் மீண்டும் வந்தேன். Onsen என்றால் ஜப்பானிய மொழியில் வெந்நீர் ஊற்று அல்லது ஆங்கிலத்தில் Hot Springs எனப்படும்.

அங்கு உடைகளையும் களைந்து அங்கு பூட்டி வைத்து விட்டு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் இருந்து இரண்டு கைக்குட்டையை சேர்த்தால் இருக்கும் நீளத்தில் இருக்கும் ஒரு மஞ்சள் துண்டு அதை எடுத்துக் கொண்டு குளியல் பகுதிக்குச் செல்லவேண்டும், அந்த துண்டு இடுப்பு சுற்றளவுக்குக் கூட வராது, உடுக்கை இழந்தவன் கை அளவுக்கு வேண்டுமென்றால் மறைத்துக் கொள்ளலாம், வெப்ப அறையில் இருக்கும் பொழுது தண்ணீரில் நனைத்து அந்த துண்டை போட்டுக் கொள்ளலாம், தலையில் சூடு ஏறாது. மற்றபடி அந்த துண்டு சுருட்டினால் அம்மண உடலை மறைக்கும் கை அளவு கூட இல்லை,

Onsen - Hotspring பகுதிக்கு செல்லும் முன் உடலும் தலையும் நனைய குளித்துவிட்டு செல்ல வேண்டும், பொதுவாகவே ஆசிய நாடுகளின் நீச்சல் குளத்திற்கு இறங்கும் முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அறிவுறுத்தல், உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை போக்கிவிட்டு பொதுக் குளத்தில் இறங்கினால் அங்கு குளிக்கும் மற்றவர்களுக்கு அருவெறுப்பு வராது என்பதால் இந்த ஏற்பாடு.

முதலில் சென்ற குளம் பழங்கால ரோமா புரி அமைப்பில் அமைக்கப்பட்ட பகுதியின் Hotspring, அங்கு இடுப்பளவு சுடுநீர் அதில் 15 பேர் வரை அமர்ந்திருந்தனர், அதில் சில அப்பாக்களும் அவர்களுடைய மகன்களும் ஆறுவயதிற்கு குட்பட்ட பெண் குழந்தைகளும் அடக்கம், ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடையற்ற பருவ வயதினரின் உடல் எந்த கவர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பதால் ஆசிய நாடுகளின் குளியல் அறைகளில் ஆண்கள் பெண்கள் பகுதிக்கு அவர்களால் கட்டுபாடின்றி சென்றுவர முடியும். ஆசிய நாடுகளில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து குளிப்பது வழக்கம். ஒரு சில விடுமுறை நாட்களில் மகனுடன் சேர்ந்து நானும் குளிப்பது உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் அறியாதவர் மட்டுமின்றி, அவர்கள் வளர்ந்தாலும் பெற்றோரின் நிர்வாண உடல் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, படுத்த படுக்கையாக பெற்றோர் இருக்கும் பொழுது அவர்களுக்கு உடைமாற்றிவிட எந்த கூச்சமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், அருவெறுப்பு இல்லாமல் அன்புடன் செய்ய முடியும், பாலியல் உறுப்பு அனைவருக்கும் இருக்கும் என்று குழந்தை பருவத்திலேயே தெரியவருவதாலும் பார்த்து வருவதாலும் வளர்ந்த பிறகும் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் ஓரின இனக்கவர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை குறைக்கிறது.
SPA World - Onsen European Zone

ஒருமுறை நீரில் மூழ்கிவிட்டு இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டேன், ஆடைகளுக்கு மாற்றாக நீந்தும் செதில் முளைத்த மீனின் புத்துணர்வை உணர்ந்தேன். யாரும் யாரையும் இடுப்புக் கீழ் வெறித்துப் பார்க்கவும் இல்லை, அளவு ஆய்வும் செய்யவில்லை, அம்மணமே என்றாலும் எல்லோரும் வெகு இயல்பாகவே இருந்தனர். இந்தியாவில் ஏன் இது போன்ற இடங்கள் இல்லை, அம்மணம் என்பதே துறவிகளுக்கானது என்று மட்டுமே நம்புகிறார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன், அங்கு பல்வேறு குளங்களில் கிட்டதட்ட 150 ஆண்கள் அதில் குழந்தைகளும் அடக்கம். வெப்பம் 40 Deg, Hotspring குளியல் பரிந்துரைபடி 10 நிமிடம் வரையில் அந்த தண்ணீரில் இருக்கலாம், பின்னர் வெப்ப அறையிலோ, நீராவி அறையிலோ ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு  Hotspring பகுதிக்குச் செல்லலாம். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நாடுகளின் Hotspring குளியல் முறைபடி அமைக்கபட்டிருக்கும் குளங்களும், மிகவும் குளிர்ந்த நீர் (19 Deg) குளங்களும் உண்டு.

Hotspring த‌ண்ணீரில் உட்கார்ந்து ஓய்வெடுப்ப‌து, ப‌டுத்து ஓய்வெடுப்ப‌து, த‌னிப்ப‌ட்ட‌ சிறிய‌ தொட்டியில் அம‌ர்ந்திருப்ப‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அளவும் உயரமும் உள்ள அமைப்புக‌ள் அங்கிருந்த‌ன. ஒவ்வொன்றிலும் உப்புத் த‌ண்ணீர், க‌ந்த‌க‌ த‌ண்ணீர் ம‌ருந்து த‌ண்ணீர் உள்ளிட்ட‌ பல வகை குளங்கள், அவ‌ற்றில் வ‌ழியும் நீராக‌ (Flowing / Over Flow Water) வ‌ந்து கொண்டே இருக்கும், என‌வே யாரும் சிறுநீர் க‌ழித்து இருப்பார்க‌ளா த‌ண்ணீர் கெட்டு இருக்குமோ என்று ஐய‌ப்ப‌ட‌த் தேவை இல்லை. Hotspring க்கு செல்ல‌ உட‌ல் நிலை ப‌ரிந்துரைக‌ள் உண்டு, என‌வே நோயாளிக‌ள் வ‌ந்திருப்பார்க‌ள், தொற்று நோய் ஏற்ப‌டும் என்கிற‌ அச்ச‌மும் தேவை இல்லை.

விருப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு கட்டண உட‌ல் பிடிப்பு சேவைக‌ளும் இருந்த‌ன‌, அனைத்து சேவையாள‌ர்க‌ளும் பெண்க‌ள் அவ‌ர்க‌ள் ஆண்க‌ளின் அம்மண உட‌லுட‌ன் அப்ப‌குதிக்குச் செல்வ‌தை பொருட்ப‌டுத்துவ‌தும் இல்லை, ம‌ருத்துவ‌ சேவை போன்று இதையும் செய்கிறார்க‌ள். உள்ளுக்குள் செய‌ற்கை சுடுநீர் அருவி உண்டு, அங்கு சுற்றிலும் சுவ‌ர் அமைப்பு வான‌த்தைப் பார்க்க‌லாம், வெளியில் இருந்து பார்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ப‌டி சுவ‌ர் அமைப்பு, ஆனால் வெளி உல‌கில் (Open / outdoor)  இருப்ப‌து போன்று ந‌ம‌க்கு உண‌ர்வை ஏற்ப‌டுத்தும். சுடுநீர் கொட்டும் அருவியில் நின்றால் அத‌ன் விழும் வேக‌த்தில் உட‌ல் வ‌லி போய்விடும், அங்கும் 10 நிமிட‌ம் வ‌ரை குளிக்க‌லாம். தளத்தின் நடுவே குளிர்பான‌ங்க‌ள் ம‌ற்றும் பிய‌ர் விற்கும் க‌டை, மேசைக‌ள் போட்டு இருப்பார்க‌ள், மேசைக்குக் கீழே கால் ந‌னையும் அள‌வுக்கு வெது வெதுப்பான‌ த‌ண்ணீர், ந‌னைத்துக் கொண்டே குளிர்பான‌த்தை ர‌சித்து குடித்து ஓய்வெடுக்க‌லாம், எல்லாம் அம்மண நிலையில் தான். உள்ளே எதுவும் வாங்குவதற்கு பணம் தேவை இல்லை, எல்லாம் கையில் அணிந்துள்ள Locker Tag Scan வழியாகத்தான், வெளியேறும் போதனது காட்டும் செலவை கட்டிச் செல்லவேண்டும், தனிமனித உணர்வு (ப்ரைவசி) மதிக்கப்படுவதால் உள்ளுக்குள் படம் எடுக்கவும் அனுமதி கிடையாது

வெப்ப அறையிலோ (Sauna), நீராவி (Steam) அறையிலோ ஓய்வெடுக்க அமரக்கூடிய நீள‌ ம‌ர‌மேசை அமைத்திருந்தார்க‌ள், அதில் வெள்ளை பூ ட‌வ‌ல் (ட்ர்கி டவல்) போட‌ப்ப‌ட்டிருந்த‌து, அத‌ன் மீது நேர‌டியாக‌ அமராம‌ல் உட்காருவ‌த‌ற்கு மெல்லிய‌ ர‌ப்ப‌ர் சீட்டுக‌ளை (Silicon Seat) ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும், Hygenic அல்ல‌து தூய்மை பேன‌ அத்த‌கைய‌ ஏற்பாடு. தலை
Sauna
முடியும், தலையும் மிகுந்த சூடாகமல் இருக்க கையில் இருக்கும் மஞ்சள் துண்டை நனைத்து தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும், Sauna அறையில் இருக்கும் போது தேமே...என்று ஓய்வெடுக்கும் கை.. 'உடுக்கை இழந்தவன் கை' எடுத்துக்காட்டு இந்த இடத்தில் நட்புக்கு பொருந்தாதே என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த‌  Onsen - Hotspring இர‌ண்டு மூன்று ம‌ணி நேர‌ம் செல‌விட்டாலும் நேர‌ம் செல்வ‌து தெரியாது, இறுதியாக‌ ஜ‌ப்பானிய‌ பாணி குளிய‌ல், அதில் சிறிய‌ ஸ்டூலில் உட்கார்ந்து த‌ண்ணீர் பிடித்து, சோப்பு தேய்த்து குளித்துவிட்டு, சில‌ர் அங்கேயே முக‌ச் ச‌வ‌ர‌ம் செய்து கொள்கிறார்க‌ள், நான் அங்கிருந்த மூன்று மணிநேரம் இந்திய ஆண்கள் எவரையும் காணவில்லை, (ஒசாகா சென்று திரும்பும் வரையில் கூட வெளியேயும் இந்தியர் எவரையும் பார்க்கவில்லை) பின்னர் அப்படியே ஒப்ப‌னை அறைக்கு வ‌ந்து ந‌ன்றாக‌ துவ‌ட்டிவிட்டு, த‌லைவாரிக் கொண்டு, உட‌ல் எடையை பார்த்துவிட்டு, ஆடைக‌ள் இருக்கும் இட‌த்திற்கு சென்று ஆடைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு வெளியே வ‌ந்தேன். அப்பாடா....என்ன புத்துணர்வு...என்ன சுகம். எந்த செயற்கையும் சுற்றாத அம்மண உடல்களும் அழகானது, புனிதமானது தான்.

*****

நாட்டுக்கு நாடு உடலில் ஆடையின்மை குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு, குடிகாரன் விழுந்து கிடக்கும் பொழுதும், தன் நினைவற்று  சுருண்டு கிடக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களிடம் துணி விலகி இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பார்க்கும் மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு, பொதுவாகவே வீட்டுக்குள்ளோ, விடுதியிலோ தனியாக இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்க விரும்பும் ஆண்களின் மனநிலை. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் குறைவே. நீலப்படங்களையும் நிர்வாண உடல்களையும், ஆடையையும் ஊடுறுவி பார்த்து மிகுதியாக ரசிப்பதெல்லாம் உடைக்காட்டுப்பாடு மிக்கதாகவும் கூறிக் கொண்டே, உடை நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசி பேசியும், பண்பாடுகள் பாரம்பரியம் பற்றி பெருமையாக பேசும் நாடுகளில் உள்ளோரே மிகுதி. 

 *******

ஜப்பானிய Hotspring குளியல் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம், . ஒரு சில மணித்துளிகள் அங்கே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து பறந்து செல்லும் மன நிலையில் இருந்தேன், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய ஒன்று, எனக்கு அந்த‌ நல்லூழ் வாய்த்தது.

இணைப்பு : ஸ்பா (தமிழில்) - தமிழ் விக்கிபீடியா

31 ஜூலை, 2014

உலக வலம் (2) !

எந்த பயணம் என்றாலும் முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் தேவையான ஒன்று, திட்டமிடல் இன்றியும் பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து விட்டு செல்லாம், ஆனால் அத்தகைய பயணம் அவ்வளவு மன நிறைவாக அமையாது, நான் கனடா செல்ல முடிவெடித்த பிறகு கண்டிபாக அமெரிக்காவிலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன்.

அமெரிக்காவில் நிறைய பதிவர் நண்பர்கள் இருந்தனர், அதில் எனக்கு நெருக்கமான இரு நண்பர்களிடம் நான் கனடா வருவது குறித்து சொன்ன போது கண்டிபாக அமெரிக்காவிற்கு வந்து அவர்களது இல்லத்தில் தங்கி சுற்றிப் பார்க்கும் படி அழைத்தனர், எனவே கனடாவில் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டு தான் சிங்கை திரும்ப வேண்டும் என்பதை திட்டமிட்டு, சிங்கப்பூருக்கு திரும்பும் பயணச் சீட்டை நார்த் கரோலினா 'ராலே தர்காம் (Raleigh-Durham)' விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் படி போட்டுவிட்டேன். அது போன்று சிங்கையில் இருந்து இந்தியா புறப்பட்டு அங்கிருந்து சென்னை, பிறகு நான்கு நாள்கள் கழித்து திருச்சி - பெங்களூரு வழியாக பெங்களூரில் இருந்து கிளம்பி பிரான்ஸ் வழியாக கனடா மோன்ட்ரியல் அடைவது தான் திட்டம்.

கனடாவில் எதை எதையெல்லாம் பார்ப்பது, கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எப்படி செல்வது என்பதையெல்லாம் திட்டமிடவில்லை, காரணம் நாங்கள் செல்ல முடிவெடுத்திருந்தது கனடாவில் பனிப் பொழிவு துவங்கும் காலம் ஆகையால், முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு பின்னர் பருவ நிலை மாற்றங்களினால் வெளியே செல்வதே அறைகூவலாக அமைந்துவிட்டால், பணம் செலவு செய்தாகிவிட்டதே என்று குழந்தைகளையும் போட்டுபடுத்தி, போன இடத்தில் போக முடியாத இடங்களுக்கு செய்த செலவுகளுக்காக வருந்தி, பயணம் என்பது வெறுப்பை வரவழைத்துவிட்டால் எல்லாம் வீண் என்பதால், முதலில் கனடா போய் சேருவோம், பிறகு கனடாவில் என்னவெல்லாம் பார்க்கலாம், அங்கிருந்து அமெரிக்கா எப்படி செல்லலாம் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

நான் இந்தியா வழியாக ஏற்பாடு செய்ததன் நோக்கமே, சென்ற (2012) மறைந்த தம்பியின் ஓராண்டு நினைவு நிகழ்வில்கலந்து கொள்வதை முன்னிட்டு தான். எனவே மனைவி மகள் மற்றும் மகனை நேரடியாக கனடா செல்வதற்கானஏற்பாடு செய்துவிட்டு, அதன் படி அவர்களுக்கான பயணச் சீட்டு
 
17 நவ 2013 00:55 (ஞாயிறு பின்னிரவு / அதிகாலை 0055 சிங்கையில் இருந்து புறப்பட்டு
17 நவ 2013 0830 (ஞாயிறு) காலை 0830 ஜப்பான் டோக்கியோ நரிட்டா நிலையத்தை அடைந்து
17 நவ 2013 1100 (ஞாயிறு) அங்கிருந்து காலை 1100 புறப்பட்டு வடஅமெரிக்கா காலை 0735க்கு சிக்காகோ வர
17 நவ 2013 0735 (ஞாயிறு) சிக்காகோவில் இருந்து கனடா மோண்ட்ரியல் செல்ல காலை 1023  புறப்பட்டு
17 நவ 2013 1023 (ஞாயிறு) மோண்ட்ரியல் அடையும் நேரம் மாலை 13:25

மொத்தம் 20 மணி நேரத்திற்கும் மேலான பயணம், உலக நேர அமைப்பு படி பின்னிரவு புறப்பட்டு மாலை வரை அதே நாள் தான்.
 
இந்த திட்டத்தில் சென்றால் தான் மறுநாள் திங்கள் 18 நவ 2013  அன்று மனைவி அங்கு அலுவலகம் செல்ல முடியும்,அலுவலகம் செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் 18 நவ 2013 (திங்கள்) காலைக்குள்நான் சென்றாக வேண்டும்,  இல்லை என்றால் குழந்தைகள் விடுதி (ஹோட்டல்)யில் தனியாக இருக்க வேண்டும், அந்தநாட்டில் பாதுகாப்பில்லாமல் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாதாம், எங்களுக்கும் அவ்வாறு விட்டுச் செல்லமனதில்லை, எனவே எப்படி கணக்கு போட்டாலும் 18 நவ 2013 அதி காலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்துபுறப்படும் வழித்தட சேவையில் ஏறினால் தான் குறைந்தது பகல் 12 மணிக்குள்ளாவது மோண்ட்ரியல் அடையமுடியும், நவ 17 ஆம் தேதி தான் தம்பிக்கு நினைவு நாள் என்பதால் அதனை மனதில் வைத்தே எல்லா பயணசீட்டுகளின் புறப்படும் நேரம் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்தோம். இந்தியாவில் பல நகரங்கள் (சென்னை,பெங்களூரு,  மும்பை, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி) வழியாக இணைப்பு வழி சேவையில் செல்ல முடியும்என்றாலும் அந்த வழிதடங்கள் கனடாவை அடையும் நேரம் எதுவும் ஒத்துவரவில்லை.
 
17 ஆம் தேதி தம்பிக்கு செய்ய வேண்டிய நிகழ்வு நாகையில் தான், அதனால் எனது இந்திய பயணம் 15 நவ 2013 வெள்ளி அன்றே அமைத்துக் கொண்டேன், அவை முடிந்து அங்கிருந்து திரும்பவும் சென்னைக்கு வழியாக செல்வதற்கானவானூர்தி  போக்குவரத்து வாய்ப்பு இருந்தாலும் அவை கனடாவை 18 நவ 2013 மதியம் 3 மணிக்கு தான் அடையும்,அதுவரையில் குழந்தைகள் தனியாக விட்டு வைப்பது பெரிய சிக்கல் ஏற்படுத்துவிட்டால் ? வேறு வழியில்லை, வேறுவழியில்லை, 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகையில் தம்பியின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு, அதை முடித்துஅங்கிருந்து சிற்றுந்தில் 2 மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடலாம், அன்றே திருச்சியில் மாலை 5:30 மணிக்குகொச்சி வழியாக பெங்களூர் செல்லும் வானூர்தியில் ஏறினால் மாலை 8 மணிக்கு பெங்களூருவை அடைந்துவிடும்,பிறகு 6 மணி நேரம் ஓய்வு, அங்கிருந்து பிரான்ஸ் ஏர்வேஸ் 18 நவ 2013 அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, பாரிஸைஅன்று காலை  8 மணிக்கு அடைந்து, இரண்டு மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு காலை 10 மணிக்கு புறப்பட்டால்அன்று மதியம் 12:15க்கு மோண்ட்ரியல் அடைந்துவிடலாம், எனவே எனது பயணத் திட்டம்
 
எனது புறப்பாடு
 
15 நவ 2013 0920 சிங்கையில் இருந்து சென்னைக்கு காலை 1100 மணிக்கு போகும், பிறகு ஒருநாள் விட்டு 
17 நவ 2013 1530 திருச்சியில் இருந்து கொச்சி வழியாக பெங்களூரூ மாலை 20:25 போய் சேரும்,
18 நவ 2013 1:45 (அதிகாலை) பெங்களூரில் இருந்து பாரிஸ், 2 மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு
18 நவ 2013 10:45 க்கு பாரிஸிலிந்த்து மோண்ட்ரியல், அங்கு சென்று சேரும் நேரம்
18 நவ 2013 12:15 (நன்பகல்), ஆக மொத்தமாக பெங்களூரில் இருந்து 20 மணி நேரப் பயணம், ஆனால் தேதிபடி வெறும் 11மணி நேரம். பூமி சுழலும் திசைக்கு எதிர் திசை பயணம் என்பதால் 11 மணி நேரம், எதிர்திசையில் சென்றால்கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரமாகி இருக்கும்.
 
பயணம் குறித்து இரண்டு திங்கள் முன்பு முடிவு செய்திருந்தாலும், பயணத்தேதி, வழித்தடம் இவற்றை முடிவுசெய்யவே ஒருவார காலம் பிடித்தது, பின்பு குளிர் ஆடைகள், காலணிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டஅனைத்தையும் பயணத்தேதிக்கு ஒரு திங்கள் முன்பாகவே வாங்கி சேகரித்தோம்.
 
எந்த ஒரு நெடுநாள் பயணத்திற்கும் எடுத்துச் செல்லும் பொதுவான பட்டியல் என்னிடம் உண்டு, அதன் படி அனைத்தும்எடுத்து வைத்துள்ளோமா என்பதை பயணத்தின் முதல் நாள் இரவு சரிபார்த்துக் கொள்வேன். உடைகளைப் பொருத்தஅளவில் வெளி ஆடைகளுடன், தூக்கிப் போட வேண்டியது என்று எடுத்து வைத்திருக்கும் காலுறைகள்,உள்ளாடைகளைத் தான் எடுத்துச் செல்வேன், ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பிறகு அவைகளை அங்கேயேகுப்பையில் போட்டுவிட்டு வருவது. இதற்கு காரணம் பொதுவாக நல்ல நிலையில் இருக்கும் துணிகளை அவ்வளவுதூக்கிப் போட மனம் வராது, உள்ளாடைகளை ஓராண்டுக்கு மேலும் துவைத்து துவைத்து பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்ப‌தே.
 
10 நாளைக்கு மேல் வெளிநாட்டுக்கு செல்வ‌தென்றால் க‌ண்டிப்பாக பயணக் காப்பீடு இன்றிய‌மையாத‌து, எதிர்பாராமருத்துவம் தவிர்த்து குறிப்பாக‌ வானூர்த்தி சேவைக‌ள் எதிர்பாராமல் முடங்கும் பொழுது ந‌ம‌க்கு கைகொடுக்கும், எனக்கும் அப்படி ஒரு நிலை வருவது போல் இருந்தது.

சிங்கையில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸில் புறப்பாட்டேன்...


நேரமின்மையால் இரண்டு திங்களுக்கு முன்பு எழுதியதை இப்பொழுது தான் பதிவேற்றுகிறேன்

இனி சிங்கையில் இருந்து புறப்பட்டது முதல் திரும்பு வரையில் பார்த்தவற்றையும், நடந்தவற்றையும் அடுத்து பார்ப்போம். 

13 ஏப்ரல், 2014

உலக வலம் (1) !

எழுத நேரமின்மையால் மற்றொரு நொடுந்தொலைவு பயணம் பற்றி எழுத வேண்டும்... எழுத வேண்டும் என்று நினைத்து ஆறுதிங்கள்கள் கடந்துவிட்டன, எழுதுவது மற்றவர்களுக்கும் திரட்டிக் கொடுக்கும் தகவல் மட்டுமின்றி தத்தம் நினைவிற்கான சேமிப்பு என்ற அளவில் பயணக் கட்டுரைகள் எழுதுவதை பெரும்பாலும் தவிர்த்தது இல்லை. ஊர் சுற்ற பொருள் (பணம்) முதன்மையானது போலவே அதற்கான நேரம் வாய்பதும் இன்றியமையாததே. பணம் இருப்பவர்கள் அனைவரும் ஊர் சுற்றுவது இல்லை, பெரும்பாலும் பொருள் ஈட்டுவதிலேயே தங்களது நேரத்தை செலவிட்டுவிடுவார்கள், ஓய்வு காலத்தில் உடலும் ஓய்ந்துவிடும், சுற்றுச் சூழல் பருவ நிலைகளும் அச்சப்பட வைக்கும், காலும் கையும் நன்றாக இருக்கும் பொழுதே சுற்றும் வரை சுற்றிவிட வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.

இந்த அறிவியல் உலகத்தில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு வானூர்திப் பயணம், எத்தனை முறை வானூர்தியில் பயணம் செய்தாலும் எனக்கு அலுத்ததே இல்லை, இடையே இடையே டர்புலன்ஸ் எனப்படும் காற்றுகுறைந்த வெற்றிடத்தைக் வானூர்திக் கடக்கும் போது குலுங்குவதில் அடிவயிறு கலக்கும், அந்த வேளையில் எனக்கு நீச்சல் தெரியும் என்கிற ஆறுதல் உயிர் அச்சத்தைக் கொஞ்சம் குறைக்கும், மற்ற ஊர்த்திப் பயணங்களைவிட வானூர்திப் பயணம் மிகவும் பாதுகாப்பானதே. வானூர்திப் பயணங்களில் உணவு முடிந்த பிறகு பெரும்பாலும் தூங்கிவிடுவேன்.

ஏற்கனவே ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு அமெரிக்க வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தார், அப்பொழுது அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை காரணங்களினால் எனக்கான வேலை வாய்ப்பு கிட்டவில்லை, அத்துடன் அமெரிக்கா செல்லும் எண்ணங்களை முற்றிலும் மறந்தே போனேன், சுற்றுலாவாக செல்லாம் என்றாலும் இந்திய கடவு சீட்டுக்கு அவ்வளது எளிதாக நுழைவு அனுமதி கிட்டுவதில்லை என்பதால் அமெரிக்காவிற்கு செல்வதற்கு பதில் அமெரிக்கர் காலடி வைத்த நிலவிற்கே சென்றுவிடலாம் என்ற அலுப்பு தான் தோன்றியது,

என்னுடைய தற்போதைய சூழலில் எனக்கு அமெரிக்கா நுழைவு அனுமதி பிரச்சனை இல்லை என்றாலும் பெரிதாக ஆர்வமும் இல்லாமல் இருந்தது, இந்த சூழலில் பணி தொடர்பில் வீட்டு அம்மணி கனடாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவே, சரி எல்லொருமே சென்றுவரலாம் என்று திட்டமிட்டு 2013 நவம்பர் திங்களில் செல்ல முடிவெடுத்து அதற்கு ஏற்பாடாக பயணச் சீட்டு, குளிர் உடைகள் எல்லாவற்றையும் மூன்று திங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்து கொண்டே வந்தோம்.

2013 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து திட்டமிட்டு நிறைய தடங்கல், பள்ளி விடுமுறை, போதிய விடுப்பு இன்மை என்றெல்லாம் தள்ளிப் போய் நிறைவாக நவம்பர் நடுவில் செல்லலாம்  என்று முடிவு செய்திருந்தேன், எனக்கு இந்தியாவில் உறவினர்களை சந்தித்துவரவேண்டி இருந்தது, எனவே மனைவி, மகள் மற்றும் மகனை சிங்கப்பூரில் இருந்து கனடா கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு நான் இந்தியாவில் இருந்து கனடா செல்ல முடிவு செய்திருந்தேன், சிங்கப்பூரில் இருந்து சென்னை, பின்னர் பயண சீட்டு செலவுகளை ஒப்பிட பெங்களூரில் இருந்து புறப்படும் ஏர் பிரான்ஸ் வானூர்தி தான், புறப்படும் நேரம், போய் சேரும் நேரம் உள்ளிட்டு எனக்கு எல்லா வகையிலும் சரியாக இருந்தது, 

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி (மூன்றாம்) நிலையம் 

பயணம் நல்ல துய்ப்பு, அமெரிக்கா கனடாவை பார்த்ததைவிட உலகத்தை வானூர்த்தி வழியாக வலம் வந்து, புறப்பட்ட இடத்தில் இருந்து கடிகார திசையில் மட்டுமே, ஒருவழி பயணமாக புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது... எந்த வழியாக சென்றேன் ? மற்றும் யாரையெல்லாம் சந்தித்தேன், என்ன பார்த்தேன் ஆகியவற்றின் நிழல்படங்கள் இவற்றை பின்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.

20 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 2 !


மனித வாழ்க்கையாக இருந்தாலும் தாவிரங்கள் உள்ளிட்ட ஏனைய உயிர்வகையாகட்டும் விதிவிலக்குகள் எதுவும் கிடையாது, வாழ்கை என்பது போராட்டம் தான் . தன்னை காப்பாற்றிக் கொள்வது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வது தவிர்த்து உயிர்வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்வதற்காக எந்த உயிரும் உருவாகுவதில்லை, இதற்கு மேம்பட்டும் மனித வாழ்க்கையில்  வசதிகளின் தேடல், அதைப் பெருக்கிக் கொள்ளுதல், ஆளுமைகள், இருப்பதை இழக்கக் கூடாது என்பதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள்  இவற்றைச் செயல்படுத்தத் துனியும் தன்னலம் இவை மட்டும் தான் மனித வாழ்கைக்கும் ஏனைய உயிர் வாழ்கைக்குமான வேறுபாடுகள். எதிர்கால சேமிப்புகள் ஆகியவற்றில் எறும்புகள் உள்ளிட்டவை முனைந்து செயல்பட்டாலும் தலைமுறைகள் தாண்டி பயன்படுத்தும் சேமிப்புகளை மனித இனம் தவிர்த்து வேறெந்த விலங்கினமும் செய்வதில்லை. இனம்பெருக்கம் தன்னலம் தாண்டிய மறு உற்பத்தி என்ற அளவில் மனித இனத்திற்கும் ஏனைய உயிரினத்திற்குமான வேறுபாடுகள் வியக்க வைக்கும் அளவில் நடைபெறுகின்றன, ஏனைய உயிரினங்களில் இனப்பெருக்கம் என்பவை சூழல் பாதுகாப்புகள் உள்ளிட்டவையாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனும் அதே சூழலில் அமையப் பெற்றதாகவும் உள்ளன, இனப்பெருக்கம் உற்பத்தி மிக பெரிய அளவில் நடக்கும் உயிரனங்களில் அதன் வாழ்நாள்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் சொற்பமானதே, மாறாக நெடுநாள் வாழக்கூடிய உயிரினப் பெருக்கத்தின் உற்பத்தி திறன் குறைவாகவும், அதன் பாதுகாப்புகள் பலமிக்கதாகவும் இருக்கும், மனித வேட்டையாடலில் மறைந்து போன உயிரனங்கள் தவிர்த்து இந்த அளவுகோளில் ஏனைய உயிரன உற்பத்திகளை இயற்கை சமஅளவில் வைத்திருக்கிறது


*****


விசைப் படகில் எங்களைத் தவிர்த்து மற்ற மூன்று சுற்றுலாவாசிகள் மற்றும் படகு செலுத்துபவர், தீவிற்கும் கரைக்கும் இடைப்பட்ட தொலைவு முக்கால் கிமி  இருக்கும், செம்மண் நிற கலங்களான கடல் தண்ணீர், கரையை ஒட்டிய கடல் பகுதிகளிலும், கடலின் நடுப்பகுதிகளிலும் மீன் வளர்ப்பு தொட்டிகள் 1000க் கணக்கானவை அங்காங்கே அமைந்திருந்தது,  இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன் வகைகளை வளர்த்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள், கடல்நீருக்குள்ளேயே இவ்வாறு மீன் வளர்ப்பது அதன் சூழலில் வளரவிடுவது என்றாலும் அதற்கான இரைகள் போடப்பட்டுதான் வளர்க்கப்படுகின்றன,  மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள், இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கும், உரம் போட்டு வளர்க்கப்படும் பயிரினங்களுக்கும் உற்பத்தியைக் கூட்டுதல் விரைவாக அறுவடை செய்தல் ஆகியவை பொதுவானவை என்பதால் அவற்றின் சத்துகள் கேள்விக்குறிதான், எனினினும் தரையில் தொட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் மீன்களைவிட இவை கூடுதலான சத்துகள், செரிவுகள் கொண்டவகையாக இருக்கக் கூடும்.


தீவுப்பகுதியின் கரைப்பகுதி அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது, அங்கே நாரைகள் பல அமர்ந்திருந்தன, சதுப்பு நிலக்காடுகள் அமைந்தப் பகுதிகளில் நாரைகளுக்கு உணவுக்கு கிடைக்கும் மீன்களுக்கு குறைவு இருக்காது என்பதை உணர்த்தும் படி ஏகப்பட்ட நாரைகள், அதன் கரகர கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது, படகு தீவின் முகப்படை அடைந்ததும் இறங்கினோம், திரும்பி வரும் பொழுது அலைபேசியில் அழைத்தால் வந்து அழைத்துச் செல்வதாக படகோட்டி   அங்கு ஒட்டப்பட்டு இருந்த எண்களைக் காட்டினார், தீவு முகப்பில் நுழைவுக் கட்டிடம், 'ஜோகூர் மாநிலத்தின் தேசிய பூங்கா என்ற பொருளில் அறிவுப்புடன் நுழைவாயில், உள்ளே சென்றால் தீவிற்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பின்னர் செல்ல வேண்டும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு 25 ரிங்கிட்டும், உள்நாட்டினருக்கு 5 ரிங்கிட்டும் கட்டணம் வாங்குகிறார்கள், நண்பர் மலேசியவாசி என்பதால் 10 ரிங்கிட்டுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்று வந்தார், அந்த தீவின் முகப்பு கட்டிடமே கடல் தண்ணீரினுள் தான் அமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா வளர்ச்சிகாக பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தந்திருப்பதாக நண்பர் குறிப்பிட்டு இருந்தார், 

கட்டிடத்தை பின்வாசல் வழியாகக் கடக்க, தீவின் நுழைவாயி, ல் அதன் பிறகு வழியாக மரப்பாலங்கள் தான் தென்பட்டன, 1 1/2 மீட்டர் குறுக்களவில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதைகள் தான் போடப்பட்டிருந்தன, நேராக ஒரு வழி தொடர்ந்து செல்ல அதன் இடையே 200 மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரக் கோபுரம்,. அதன் உச்சியில் இருந்து அங்கே ஓடும் சதுப்பு நில ஆற்றைக் கடந்து அடுத்துப் பகுதிக்குச் செல்லும் தொங்கு பாலம், டவரில் கழிவறை வசதிகள் இருந்தன,  தொங்கு பாலத்தில் மூவருக்கு மேல் நடந்து செல்லக் கூடாது, அவர்கள் கடந்த பின்பு தான் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தன, தொங்கு பாலத்தில் ஏறினேன்,  நம் எடைக்கும் காற்றுக்கும் ஏற்றபடி கொஞ்சம் ஆட்டம் தான், புகைப்படம் எடுக்கும் பொழுது செல்பேசி தவறி விழலாம் என்பது தவிர்த்து அந்த ஆட்டம் ஒன்றும் பயமுறுத்தவில்லை. அடுத்தப் பகுதி கோபுரத்தை அடைந்து கீழே இறங்க இன்னொரு மரப் பாலப் பாதை சற்று வளைந்து சென்றது.

அந்தப் பகுதிகள் முழுக்க முழுக்க சதுப்பு நிலக் காட்டு மரவகைகள் இருந்தன, அவற்றின் வேர்கள், வேர்கள் கிளைத்த மரங்கள், கடல் நீர் ஏற்ற இரக்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கும் என்பதன் அளவுகோலாக இருந்தன,  சதுப்பு நிலத்தில் வாழும் தவளை இனம் போனறு கால்கள் உடைய  மீன்வகைகள், நண்டுகள், இவைகள் பெரும்பாலும் தண்ணீரிலும் ஈரத்தரையிலும் வாழக்க் கூடியவை, அடந்த நிழல்களும், சேற்று நீரின் குளுமையும் மிகவும் இனிமையாக இருந்தது, ஒரு 200 மீட்டர் நடந்த பிறகு ஒரு மரப் பாலம் வழியாக முன்பு துவங்கிய வழியை குறுக்காக அடையும்  இடம் இருக்கிறது, அங்கே துடுப்பு ஓடங்கள் இருந்தன, வெள்ளம் பெருகும் நாள்களில் அந்த காட்டினுள் சுற்றுலா படகு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளாக அவைகள் இருந்தன, நாங்கள் சென்றது செவ்வாய் கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து ஐவர்  மட்டுமே தீவுக்குள் இருந்தோம், எங்களுடன் வந்த மற்ற மூவர் எங்களைப் பின் தொடரவும் இல்லை, தீவின் நடுப்பகுதிக்குச் செல்லும் மரப்பாதைக்கு வந்தோம், குரங்குகள் பல இருந்தன, எல்லாம் கொஞ்சம் பயந்தது போல் நம்மைப் பார்த்து விலகியே சென்றன, பாலி  தீவு குரங்குகள் போல் எதையும் தட்டிப் பறிக்க முயற்சிக்கவில்லை.


கொஞ்சம் தூரம் நடந்த பிறகு இயற்கை ஆர்வலர்கள் அவ்வப்போது அங்கு வந்து மரங்களை நட்டுப் பாதுகாக்கும் இடங்கள் பல இருந்ததைப் பார்க்க முடிந்தது, இங்கே எதற்கு வந்து நட வேண்டும், இயற்கையாகவே அவை வளருகின்றன அல்லவா ? சதுப்பு நில மரவகைகள் 100க் கணக்கானவை உண்டு, அவற்றின் இனப்பெருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான், மரத்தில் முருங்கைகாய் போன்று நீளமாக ஆனால் பட்டை பட்டையாக இல்லாமல்  10 செமி விட்டத்தில் ஒரு சற்று கூறிய முனையுடன் அடிக் குச்சி  தண்டு காயாகவும்  அதன் மேல் முனை மொட்டுப் பகுதிகள் மரத்தில் தொங்கி வளர்ந்து வருகின்றன, அவை நீளமாக இருந்தாலும் உறுதியானவை கிடையாது, உடைத்தால் எளிதில் உடையும், குரங்குகள் பறித்து அந்த காய்களை கடித்து உண்ணுகின்றன,  மரம் சுமார் 20 அடி உயரும் பொழுது காய்க்கத் துவங்குகின்றன, மரங்கள் 100 அடி வரை வளர்க்கின்றன, குரங்குகள் தவிர்த்து வேறு எதுவும் அந்த காய்களை உண்ணுவதாக தெரியவில்லை, காய்கள் முற்றிய நிலையில் காம்புகள் நைந்து போக காற்றடிக்கும் பொழுது அவை செங்குத்தாக கீழே விழுந்து சேற்றில் சொருகினால் அவை கீழ் பகுதி வேராகவும், மேல் பகுதி இலையாகவும் வளரும் வாய்ப்புகள் உள்ளன,  அவ்வாறில்லாமல் காய்ந்த சேற்றிலோ, வேரிலோ விழுந்தால் உடைந்துவிடும், செங்குத்தாக விழ போதிய எடை மற்றும் ஈரப்பதம் இருந்தாலும்  காற்றடிக்கும் பொழுது விழுவதால் செங்குத்தாக விழும் வாய்ப்புகள் மிகவும் அரிது,  எனவே இவ்வகை மரம் காய்க்கும் காய்களில் இருந்து இனப் பெருக்க வாய்ப்பு வெறும் 10 விழுக்காட்டு காய்களுக்குத் தான் கிடைக்கின்றனவாம், அவற்றிலும் அடந்த கருநிழலைத் தாண்டி வளர்ந்து வருபவை மிகக் குறைவு.  அந்த மரங்களின் அடர்வில் மீதம் 90 விழுகாட்டு விதைகள் முளைத்தாலும் வளர வாய்ப்பில்லை, வெறும் இரண்டு விழுக்காட்டு மறு உற்பத்திகள் தான் காய்கின்ற விதைகளில் இருந்து நடக்கின்றன,  அடர்வு குறைந்த பகுதியை சீர் செய்ய அந்த விதைகளை செயற்கையாகவே நட்டு வளர்த்து வேறு இடத்தில் வைக்கிறார்கள்.




சுமார் 600 மீட்டர் வரை உள்ளே மரப் பாதை செல்கிறது, அதன் முடிவில் 5 மாடி அளவுக்கு உயர்ந்த கோபுரம், சுற்றிலும் பார்வை இட அமைத்திருக்கிறார்கள், மரப் பாதைத் தவிர்த்து வேறு வழி இல்லாத இந்த இடத்தில் அந்த கோபுரமே அங்கு ஓடும் சதுப்பு நில ஓடை வழியாக படகுகள் மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு வந்து கட்டி இருக்க வேண்டும் என்பது தவிர்த்து வேறு வாய்ப்பில்லை, கோபுரத்தின் மீது ஏறினோம், உலகில் இருக்கும் பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இந்த குக்குப் தீவும் ஒன்றாம், குக்குப் என்றால் தடுப்பு, அதாவது நில அரிப்பை தடுக்கும், மற்றும் சுனாமி அலைகள் உள்ளிற்றவற்றை இந்த தீவைக் கடந்து செல்லாது நிலப்பகுதியைக் காக்கும் தீவாம், உச்சியில் நின்று பார்க்க சுற்றிலும் மரங்களின் தலைகள், பச்சை தளைகள். நடுக்கடலில் நின்று பார்க்க சுற்றிலும் கடல் நீர் சூழப்பட்டது போல் இருப்பது போன்றே சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய வரை பசுமை பசுமை. அனை அனுபவிக்க ஏதுவாக குளிர்ந்த காற்று. அப்படியே அங்கேயே ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம், 






அங்கே எங்களுடன் படகில் வந்த மூவரும் வந்து சேர அவர்கள் சேர்ந்து நிற்கும் நிழல்படம் எடுக்க உதவினோம், அவர்களும் எங்களுக்கு அவ்வாறே உதவினார்கள், பசி களைகட்டி திரும்பிச் செல்ல நச்சரிக்க கையில் கொண்டு சென்ற தண்ணீரில் கொஞ்சம் குடித்துவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கினோம், திரும்பிச் செல்ல நடந்து கொண்டிருக்கும் பொழுது சட சடவென்று மழைக் கொட்டத் துவங்கியது, திரும்பவும் கோபுரத்தின் அடிக்கு வந்து மழை நிற்க காத்திருக்க, ஐந்து நிமிடத்தில் தூறல்களாக மாறியது, திரும்பவும் ஒரு 100 மீட்டர் நடந்ததும் பழையபடி இன்னும் பலத்த மழை, ஓட்டம் ஓட்டம் வேற வழியில்லை, ஒதுங்க இடமில்லை, 600 மீட்டர் ஓடினால் முகப்பு கட்டிடத்தை அடைய முடியும்,  முன்னே நண்பர் ஓட, பின்னே செல்பேசி நனைத்துவிடாமல் பாக்கெட்டில் போட்டு கையில் பிடித்துக் கொண்டு நானும் பின் தொடர்ந்து ஓடினேன். கொஞ்சம் உணவு பொருளோ அல்லது குடையோ எடுத்து வந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுவே ஒரு மரப்பாலத்தின் அருகே அமைந்த ஓய்வு குடிலில் சற்று நேரம் இளைப்பார மழை நிற்கவும், படகுத்துறைக்குச் செல்ல படகும் காத்திருந்தது ஏறி வந்து சேர்ந்தோம்,


பசிப் போக்க அதே சீனர் கடைக்குச் சென்றோம், அவர் சொன்னது போலவே வெஜிடேரியன் ப்ரைடு ரைஸ் எனக்கும், நண்பருக்கு நண்டு மற்றும் நூடுல்ஸ் உணவு, நான் நினைத்த அளவிற்கெல்லம கவுச்சி வாடை எதுவுமே அடிக்கவில்லை, மிகவும் தூய்மையாக, சுவையாக வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் இருந்தது, அங்கே அந்த உணவு கிடைப்பது கொடுப்பினை தான், நண்பருக்கு நண்டை உடைக்க பாக்கு வெட்டி போன்ற ஒன்றையும் கொடுத்திருந்தனர், பொறுமையாக உடைத்து சாப்பிட்டார். அவர் சொன்னது போல் ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கிறோம், எதற்கு அவசரம் ? அதற்கான தேவையும் இருக்கவில்லை, 



பின்னர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று கடைபாட்டியிடம் மற்றொரு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு கார் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம், ஏற்கனவே வழியில் பார்த்த ப்ழக் கடையில் சில பழங்களை வாங்கிவிட்டு ஜோகூர் வந்து சேர்ந்தோம்.

*****

குக்குப் தீவுக்குச் சென்று வர ஜோகூரில் இருந்து பேருந்துகள் உண்டு, நாள் ஒன்றுக்கு 2 - 4 பேருந்துகள் வரை இருக்கலாம், கட்டணம் தொலை அடிப்படையில் பார்க்க 10 ரிங்கிட்டுகள் வரை இருக்கும், கடற்கரை கிராமம், கடலில் படகு பயணம், இயற்கை வளமாக அமைந்த சதுப்பு நிலக் காடுகள், புகைப்படம் எடுப்பது இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்,  கடலுணவு விருப்பர்கள், சென்றுவரலாம் ஒரு நாள் போதுமானதாகும். விடுதிகள் கூட அங்குண்டு.

18 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 1 !

சீனர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, இதுவரை நீண்ட நாள் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன், அதில் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் வெகுசிலரே, மற்றவர்கள் அலுவலகம் விட்டுச் சென்றதும் மறந்துவிடுவார்கள், சீனர்கள் நட்புலகம் அலுலகம் தாண்டியதாக இருப்பதும் குறைவே, சனி-ஞாயிறு இல்லத்தினருடன் செலவிடும் நாள் என்பதில் தெளிவாக இருப்பார்கள், மற்றபடி அலுவலகம் தாண்டிய தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைத்தால் வருவார்கள், நெருங்கிப் பழகுதல் என்பது என்னைப் பொருத்த அளவில் அலுவலகம் தாண்டியும் சேர்ந்து ஊர் சுற்றுவது, ரொம்பவும் எதிர்ப்பார்ப்புகள்: வைக்கமல் பழகக் கூடியவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலையில் அவர்களில் ஒரு சிலரை நட்புகளாகத் தொடர்வதும் மிக அரிதே, அந்த வகையில் ஓரிரு சீன நண்பர்கள் எனக்கு உண்டு, இல்லத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்கள், அப்படி கிடைத்த என் வயதை ஒத்த நண்பர் ஒருவருடன் பலமுறை ஜோகூருக்குச் சென்றுள்ளேன், பெரும்பாலும் அவரது பைக்கில் தான் பயணம், நண்பர் ஜோகூரில் கார் வைத்திருப்பவர் என்றாலும், அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதால் மலேசிய பதிவு எண் காரை சிங்கப்பூருக்குள் எடுத்துவர இயலாது, அனுமதியும் இல்லை. எனவே எங்களது பயணம் பெரும்பாலும் அவரது சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட அவரது பைக்கில் தான் இருக்கும், அவரும் காரை மாற்றி புதுகார் வாங்கியது முதலாக என்னை என்றாவது ஒரு நாள் அதில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சென்றவாரம், தனது மேலாளர் வெளிநாடு செல்லும் பொழுது மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு என்னை காரில் கூட்டிக் கொண்டு ஒரு தீவுக்குச் சென்றுவரலாம் வாக்களித்திருந்தார்,  சொன்னபடியே நானும் திங்கள் காலை 10 மணிக்கு ஜோகூர் சோதனை சாவடிகளை கடந்து காத்திருக்க வந்து அழைத்துச் சென்றார்.


அவர் சொன்ன தீவின் பெயர் குக்குப் தீவு இதை ரோமன் எழுத்தில் KuKup Island என்றே எழுதியுள்ளனர், மலாய் அகராதிகளைப் பார்க்க தடுப்பு தீவு என்ற பொருளில் உள்ளது, ஜோகூர் நகரத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்தினுள்ளேயே சிங்கப்பூர் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் 80 கி.மீ தள்ளி அமைந்துள்ளதாம்,. நாம இன்னிக்கு ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கோம், எனவே காரை விரைவாக ஓட்டமாட்டேன் பொறுமையாகவே போவோம் என்று காரை பொதுவான வேகத்தில் ஓட்டினார், தென்படும் ஊர்கள் பற்றி தமக்கு தெரிந்த தகவல்களை சொல்லி வந்தார் இடை இடையே அலைபேசி அழைப்புகள் வர ஓரமாக நிறுத்திப் பேசிவிட்டு சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து தீவின் பகுதி அமைந்த கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம், விரைவுச் சாலை வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடிந்தாலும் எந்த தேவையும் இல்லாததால் ஊருக்குள் செல்லும் சாலை வழியாகத்தான் சென்றோம், போய் சேர பகல் 12 மணி ஆகி இருந்தது, , பேருந்து நிலையம் ஒட்டி கார்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு கடைக்கு முன்பு காரை நிறுத்தி பூட்டிவிட்டு, பூட்டு என்றதும் மலேசியாவில் காருக்கு இரண்டு பூட்டு போடுவார்கள், ஒன்று கார் சாவியை முடுக்கிவிடுவது, இரண்டாவது ஸ்டியரிங்கில் ஒரு குடை கைப்பிடி கொக்கி போன்று ஒன்றை மாட்டி இன்னொரு பூட்டும் போடுவார்கள் இல்லை என்றால் கார் நிறுத்திய இடத்தில் இருக்காதாம், அது தவிர காருக்குள் மடிக்கணிணி, அலைபேசி உள்ளிட்ட எந்த பொருளையும் வைத்திருக்கமாட்டார்கள், அப்படி வைத்துவிட்டு வந்து பார்த்தால் காருக்கு கண்ணாடியும் இருக்காது, வைத்தப் பொருளும் இருக்காது, நாங்கள் எடுத்துச் சென்ற கைப் பைகளையும், என்னுடைய கடவுச் சீட்டு உள்ளிட்ட வற்றையும் காரினுள் பின்பகுதி பொருள் வைக்குமிடத்து (டிக்கி) ரகசிய அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கே கடையில் தண்ணீர் வாங்கிக் கொண்டு காரைப் பார்த்துக் கொள்ளச் சொன்னோம், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் ஒப்பிட்டு சிரம் மேற்கொண்டு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதாக கடைக்கார சீனப்பாட்டி சொல்ல,  கார் நிறுத்தும் கட்டணம் எதுவும் இல்லாமல் பாதுகாப்பிற்கும் இலவசமாகவே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்கிற நிம்மதியில் கடற்கரையின் முகப்பில் அமைந்த படகு வழி சோதனைச் சாவடிகளை நோக்கிச் சென்றோம், செல்லும் வழியில் இருபக்கமும் கடைகளும் வீடுகளும் இருந்தன, மேம்பட்டு வளர்ந்துவரும் ஒரு கிராமம், எனக்கென்னவோ வேளாங்கண்ணி நகர் அமைப்பை நினைவுபடுத்தியது, 

பேருந்து நிலையத்தை அடுத்து அமைந்த பகுதிகள் பெரும்பாலும் கடல் மீது கட்டப்பட்ட வீடுகளாகவே அமைந்திருந்தன, அவற்றின் நடுவே சாலைகளுக்காக மண் கொட்டி மேடுபடுத்தி சாலைகள் இட்டிருக்க வேண்டும், ஏனெனில் வீடுகள் அனைத்தும் மிதவை வீடுகள் போன்று தூண்கள் மீது தரைத்தளம் அமைத்து அதன் மீது கட்டியிருந்தனர், அடியில் தண்ணீர், சாலையின் இருபுறமும் உணவு விடுதிகள் பல்பொருள் கடைகள் இருந்தன, படகுத்துறை சோதனை சாவடி அருகே இடது பக்கம் அமைந்துள்ள கடலுணவு கடையில் காபி குடுத்துவிட்டு சாப்பாடு பற்றி விசாரித்தது, கொஞ்சம் வயதானவர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளராகவே இருந்தவர் 'தூய சைவ சாப்பாடு செய்துதருவேன், எங்க அண்ணன் அடிக்கடி இங்கே வந்து சாப்பிடுவார், அவரும் சைவம் தான்' என்று கூறி பாலை வார்த்தார், சுற்றிப்பார்த்துவிட்டு வந்து சாப்பிடுவதாக வாக்களித்துவிட்டு கடையை ஒட்டி அடுத்து அமைந்த குறுகிய மரச் பாதை  நடக்க அந்த பகுதி முழுக்க முழுக்க கடல் மீது கட்டப்பட்ட வீடுகள்.

அந்த குறுகிய மரப்பாதைகள் கிளைகளாக பிரிந்து செல்ல செல்ல அங்கங்கே வீடுகள் பல  காங்க்ரீட் தூண்கள் மீதும் சில மரத் தூண்கள் மீதும் கட்டப்பட்டு இருந்தன, நண்பர் சொன்னார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்த பொழுது பெரும்பாலும் மரவீடுகள் தான் இருந்தனவாம், உள்ளே ஒரு அரை கிமி நடந்தோம், மூன்றடுக்கு சீன ஆஞ்சநேய கோவில் ஒன்று உள்ளே இருப்பதாகவும், அதன் மாடியில் ஏறிப்பார்க்க அந்தப்பகுதி முழுவதும் தெரியும் என்றார், அவர் சொன்ன கோவிலை அடைந்தோம், அதுவும் தூண்கள் மீது கட்டப்பட்டு இருந்தது. கழிவறை வசதிகளும் இருந்தன, முன்பெல்லாம் அங்குள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கடலுக்குள் நேரடியாக சங்கமிக்க உடல் நலச் சீர்கெடு, நோய், கெட்ட வாடை ஆகியவற்றைக் கருத்தில்  அனைத்துவீடுகளின் கழிவுகளையும் குழாய் இணைப்புகளின் வழியாக கடலுக்கு வெளியே எடுத்துச் செல்கிறார்களாம், பின்னர் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்படுமா ? அல்லது கடலில் பிறபகுதிகளில் கொண்டு சென்றுவிடுவார்களா தெரியவில்லை, சீனக் கோவிலின் மூன்றாம் மாடியில் நின்று பார்க்க சுற்றிலும் கடலில் மிதப்பது போன்று வீடுகள், அதைத் தாண்டி கடல், அதன் பிறகு ஒரு தீவு. அந்த தீவு தான் குக்குப் தீவு என்று நண்பர் சொன்னார், அங்கே நாம் போகலாம், விசைப் படகில் போகவேண்டும் என்று சொன்னார், அந்தப்பகுதி கடற்கரைப் பகுதிகளுக்கே உரிய லேசான கவுச்சி வாடையுடன் இருந்தது, சுமார் 1000 வீடுகள் அமைந்திருந்தது, வீடுகளின் முடிவில் கடல் பகுதியில் பல்வேறு வகைப்படகுகள் நின்று கொண்டு இருந்தன.

இந்த ஊருக்கு வரும் வழியெங்கும்  வெற்றான நிலங்கள் பல இருக்க, இவர்கள் ஏன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள இந்த இடத்தில் அதுவும் கடல்மீது வீடுகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் ? காரணம் ஒன்றே ஒன்று அவர்கள் அனைவரும் கடல் சார்ந்த பல்வேறு தொழில் செய்பவர்களாக உள்ளனர், பெரும்பாலும் சிறு குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத்தான் பார்க்க முடிந்தது, மற்றவர்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கிருக்கும் மர வழிகளில் கைப்பிடி அல்லது பாதுகாப்பு தடுப்புகள் கிடையாது, ரொம்பவும் அநாயசமாக சைக்கிளிலும் பைக்கிலும் உள்ளே வசிப்பவர்கள் சென்றுவருகிறார்கள், உள்ளே கார்களோ அல்லது கை வண்டிகளோ செல்ல வாய்ப்பே இல்லை, உள்ளே அங்கங்கே கடைகளும், சிறிய அளவிலான உணவு கடைகளும் உண்டு, அவை வசிப்பவர்களுக்கானது சுற்றுலா பயணிகளும் வாங்கலாம். பூட்டப்படாத வீடுகள்கள் பல இருந்தன, அங்கே வசிப்பவர்கள் தவிர்த்து வெளியாட்கள் வந்து திருடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பொருள் பாதுகாப்புகளுக்கு அவர்களுக்கு பெரிய அறைகூவல் இல்லை, தரையில் இருக்கும் வீடுகள் போன்றே அனைத்து வசதிகளுடன் வசதிக்கேற்ப கட்டியுள்ளனர், சிலர் வீடுகளுக்கு முன்பே மலர் தொட்டிகளை வைத்துள்ளனர். நண்பர் சொன்னார், இந்த வீடுகள் எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை, அவர்கள் உரிமை கொண்டாடமுடியாது, ஆனால் அவர்களுகான மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இணைத்து கொடுத்திருக்கிறது அரசு. கடல்மட்டம் கூடினால் இந்த வீடுகள் அனைத்தும் வசிக்க வாய்பில்லாதவீடுகள் ஆகிவிடும்.

பின்னர் சென்ற வழியை ஒரு சுற்று சுற்றி அடைந்தோம் திரும்பவும் துவங்கிய இடத்திற்கு வந்து சேர படகு துறை சோதனைச் சாவடி இருநதது, முன்பெல்லாம் சிங்கப்பூருக்கு இங்கே நேரடி படகுச் சேவை இருந்ததாம், தற்போது அந்த சேவையை நிறுத்திவிட்டார்கள், ஆனாலும் இந்தோனேசிய சுமத்திரா பகுதிகளுக்கு படகு சேவைகள் நடைபெறுகின்றனவாம், நாங்கள் அதன் வழியாக குக்குப் தீவுக்குப் போகத் தேவையில்லை, 


படகுதுறை சோதனையகம் வெளிநாட்டுப் பயணத்திற்கானது, பின்னர் குக்குப் தீவிற்கு எப்படிச் செல்வது ? சோதனைச் சாவடியின் இடதுபுறம் அமைந்த தனியார் படகுதுறை வழியாக தீவிற்கு கூட்டிச் செல்கிறார்கள், பயணம் ஒரு ஐந்து நிமிடம் தான், படகு கட்டணம் ? கூட்டத்திற்கேற்றாற்ப் போல, 10 சவாரி கிடைத்தால் ஆளுக்கு மூன்று ரிங்கிட், ஆனால் நாங்கள் படகுக்குச் செல்லும் போது யாரும் சுற்றுலாவிற்கு வரவில்லை, எனவே எங்களிடம் இரண்டு பேருக்கும் சேர்த்து மொத்தமாக 25 ரிங்கிட் கொடுத்தால் கொண்டு சென்று திரும்பவும் அழைத்துவருதாக உறுதி கூறினார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு ஏறி அமர்ந்தோம், பின்னர் மேலும் 3 பயணிகள் வந்து சேர்ந்தனர், அவர்களிடம் படகுக்காரர் எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை. படகு ஓடத்துவங்கியதும், படகு வந்தவழியில் திரும்பிப் பார்க்க  படகுத்துறை சோதனைச் சாவடி சிறிதாகிக் கொண்டு இருந்தது.


அந்த தீவில் என்ன தான் இருக்கும் ? பதிவு நீளம் கருதி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

14 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 3 !


விடுதியில் முதல்நாள் காலைப் பொழுதிற்கும், அடுத்த நாள் காலைப் பொழுதிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, வழக்கம் போல் எழுந்து நான் மட்டும் விடுதியை விட்டு வெளியே கடற்கரைக் பகுதிக்கு வந்தேன், முதல் நாள் போன்றே கடல் உள்வாங்கி இருந்தது. அப்படியே கடற்கரை ஓரமாக நடக்க பறவைகள் வைத்திருந்த இடம் நோக்கிய நடைச் சாலை, அது பிரியும் இடத்தில் நேராக நடந்து சென்று பார்ப்போம், அங்கும் எதோ விடுதிகள் போன்று தெரிகிறதே என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது அந்த இடம் நேற்றே விடுதி இலவசப் பேருந்தில் ஏறி அங்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் அது தான் படகு மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான இடம் என்று தெரிந்தது, எல்லாம் ஒரே வளாகம் அருகருகே இருப்பது தான் பேருந்தில் வரும் போது சற்று சுற்றி வருவதால் அது வேறு இடம் போன்று தோற்றம் அளித்திருந்தது, கடற்கரைக்கு அருகே பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளை நடத்தி தருபவர்களுக்கான சிறிய குடில், குளியல் அறைகள் இருந்தன, ஒரு பணியாளரிடம் இந்த சுற்றுலாத் தளம் ஏன் இவ்வளவு ' எக்ஸ்பென்சீவ் ?', பாலி கூட இவ்வளவு எக்ஸ்பென்சீவ் இல்லையே ? என்று கேட்டு வைத்தேன், அவரும் எத்தனை நாள் இங்கு தங்குகிறீர்கள் என்றெல்லாம் அக்கரையாக விசாரித்துவிட்டுச் சொன்னார், 'இந்த சுற்றுலாத் தளம் இந்தோனேசியா அரசும் சிங்கப்பூர் முதலாளிகளின் முதல்களாலும் நடத்தப்படுகிறது, இங்கு தங்குபவர்கள் அனைவருமே சிங்கப்பூர் வழியாக வருபவர்கள், எனவே தான் இங்கு சிங்கப்பூர் வெள்ளி தான் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது, பாதுகாப்புக் கருதி வெளி ஆட்கள் யாரையும் எதற்கும் அனுமதிக்காததால் மலிவானப் பொருள்களை இங்கு நீங்கள் வாங்க முடியாது, பாலி சென்று வந்ததால் உங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது, மற்றவர்கள் விலை ஏற்றம் பற்றி கவலைப்படுகிறார்களா என்று தெரியாது என்றார். 

அவர் சொல்வது சரிதான், பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சொந்த செலவில் தங்குபவர்களுக்கு இங்கு பணம் செலவு செய்வதற்கு 'அழமாட்டார்கள்' ஆனால் சராசரி சிங்கப்பூர்காரர்கள் ? ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள், பின்டனுக்கு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் மிகக் குறைவு, நிறுவன விழா அல்லது தேனிலவு என்று அவர்கள் வந்தால் உண்டு, பள்ளி விடுமுறைகளில் ஒரு சிலர் குழந்தைகளுடன் வருகிறார்கள், மற்றபடி பின்டன் வருபவர்களில் பெரும்பாலோனோர் சிங்கப்பூர் வழியாக வரும் வெளி நாட்டு பயணிகள் தான், சிங்கப்பூரர்களிடையே பின்டன் அவ்வளவாக புகழ்பெறவில்லை, காரணம் கூடுதல் செலவு என்றாலும் சிங்கப்பூர்களுக்கு பிடித்த அடுத்த நாடு மலேசியா, பின்னர் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் கடைசியாக ஜப்பான். தொலை தூரம் சென்றுவருவதைத்தான் சுற்றுலா என்று நினைப்பதால் பின்டன் வரும் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு தான். சிங்கப்பூர் வாசிகள் மலேசியாவின் விடுமுறைத் தளங்களுக்குச் செல்வது கட்டுபடியான செலவு என்று நினைப்பதால் அவர்களை பின்டன் தங்குமிடத் தளங்கள் (ரிசார்ட்) பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக சாப்பாடு அவர்களுக்கு பிரச்சனை இங்கே, விருப்பப்படி 10 வகை உணவுகளுடன் இரவு உணவு சாப்பிடுபவர்களுக்கு இங்கு ப்ரைட் ரைஸ் 12 வெள்ளி என்னும் போது பின்டன் அவர்களுக்கு கட்டுப்படியாகாது, குறிப்பாக சிங்கப்பூர் சீனர்களைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூர் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப பாலியில்(Bali) உணவு வகைகள் கிடைப்பதால் அருகே இருக்கும் பின்டனைவிட பாலிக்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் மிகுதி.

******

விடுதி அறைக்குச் சென்று குளித்துவிட்டு நாங்கள் அனைவரும் காலை உணவிற்காக விடுதி உணவகத்திற்கு வந்தோம், நேற்றைக்கும் இன்றைக்கும் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் இல்லை, அவற்றின் இடங்களை மாற்றி வைத்திருந்தனர், நேற்று சாப்பிட்ட அரிசு மாவு கூழ் நன்றாக இருந்தது, அரிசி மாவை நன்றாக வேக வைத்து அதில் பனைவெல்லம் தேங்காய்பால் சேர்த்து கலந்து வைத்திருந்தார்கள், இனிப்பு கூடுதல் தான், நன்றாகத்தான் இருந்தது, இன்றைய உணவில் அதற்கு மாற்றாக ப்ரெட் புட்டிங், ப்ரெட்டை புட்டு மாதிரி செய்து வைத்திருந்தனர், சுவைக்க இனிப்புடன் நன்றாகத்தான் இருந்தது, மற்றபடி பழங்கள், காப்பி, கெலாக்ஸ் கலவை மற்றும் ஒரு கோப்பை பச்சரிசி கஞ்சி காலை உணவு முடிந்தது. பின்னர் குழந்தைகளைக் கூட்டி கடற்கரைக்கு சென்றோம் மணி காலை 10 ஆகி இருந்தது, 12 மணிக்குள் விடுதி அறையை ஒப்படைக்க ஏற்கனவே நினைவுபடுத்தி இருந்தனர், இன்னும் 2 மணி நேரம் இருக்கே ? கடற்கரை வழியாக நடந்தோம், நேற்று பார்த்த படகு விளையாட்டு இடம் அருகில் தான் இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றேன், துடுப்புபடகில் இலவசமாக ஒரு மணி நேரம் துடுப்புப் போட அனுமதி கூப்பான் இருந்தது, ஆனால் அதை எடுத்துவர மறந்துவிட்டோம். அங்கிருந்து 5 நிமிடத் தொலைவில் விடுதி அறை இருப்பதால் விடுதிக்கு திரும்பி அறையையும் ஒப்படைத்துவிட்டு வந்துவிடலாம் என்று அறைக்கு திரும்பிவிட்டோம். 

ஒருவழியாக கூப்பானை தேடி எடுத்து, பயணப் பெட்டிகளை புறப்பட எடுத்து வைத்து, அதை விடுதி வரவேற்பில் வந்து ஒப்படைத்துவிட்டு பணம் கட்டிவிட்டு, திரும்ப படகு செலுத்தும் கடற்கரைக்கு சென்று சேரவும் பையன் கண் அசரவும் சரியாக இருந்தது, அம்மாவும் பெண்ணும் துட்டுப்படகுக்கு அனுப்பிவிட்டு பையனின் தூக்கத்திற்கு நான் காவல் இருந்தேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் மனைவிக்கு தெரியாது, பாதுகாப்பு சட்டைகள் போட்டுத்தான் படகில் ஏறினார்கள், இரண்டு பேர் அமர்ந்து துடுப்புப் போடும் கயாக்கிங்க் வகை படகு, ஒரு 10 அடி செல்வதற்குள் படகு கவிழ அணிந்திருந்த ஆடைகள் நனைந்துவிட்டது, அதன் பிறகு இன்னும் 10 அடி தொலைவுக்குச் சென்று ஒரு ஐந்து நிமிடத்தில் மனைவி 'பயமாக' இருக்கு என்று திரும்பிவிட்டாள், அதன் பிறகு நானும் என் மகளும் படகை செலுத்தினோம், படகுனுள் ஈரம் எனது உடைகளை நனைத்தது,

கரையில் இருந்து படகைக் கிளப்ப கொஞ்சம் முயற்சி மற்றும் சக்தி தேவையாக இருந்தது அதன் பிறகு துடுப்புப் போடவும் திருப்பவும் எளிதாக இருந்தது, 200 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் சென்றேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் பயந்து தான் உட்கார்ந்திருந்தாள், அதற்குள் அந்த பக்கமாக வந்த பாதுகாப்பாளர்கள் அவ்வளவு தொலைவெல்லாம் செல்லாதீர்கள் இங்கு நீரோட்டம் மிகுதி (High Current), அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லும் என்றார், அவர் சொன்னதை கவனிக்காமல் இருந்த மகள் என்ன சொன்னாங்க ? என்று என்னிடம் கேட்க, இங்கே ஆழம் வரக்கூடாது என்று சொன்னார்கள் என்றேன், இழுத்துச் செல்லும் என்று சொல்லி இருந்தால் பயந்து இருப்பாள், மீண்டும் கரைக்கு திரும்பி, திரும்பவும் அதே போல் கடலுக்குள் ஒரு வட்டம் அடித்து வர அரை மணி நேரத்திற்கும் கூடுதலாக ஆகி இருந்தது, பின்னர் விடுதிக்குச் சென்று எடுத்து வைத்த துணிகளை பெட்டிகளைக் கேட்டு வாங்கி மாற்றுடைகளை அணிந்து கொண்டு சிங்கப்பூருக்கு திரும்ப, படகுத்துறைக்கு அழைத்துச் செல்லும் பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதற்கு மேல் சுற்றிப்பார்க்க அங்கே எதுவும் இல்லை, உடலில் பலமும் இல்லை. வீட்டுக்கு போய் எப்படா சோற்றைக் கண்ணால் பார்ப்போம் என்றாகிவிட்டது.

பேருந்து அழைத்துச் சென்று படகு முனையத்தில் விட்டது, அங்கும் ஒரு மணி நேர காத்திருத்தல், பின்னர் படகில் அனுமதிக்க சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம், புறப்படும் போது 3 மணி பயணம் ஒரு மணி நேரம், சிங்கை வரும் போது 5 மணி, நேர வேறுபாடுகளால் ஒரு மணி நேரம் இழப்பு, செல்லும் போது கிடைத்த ஒரு மணி நேரத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டது, இந்தப் பகுதியில் கடல் மாசு மிகுதி, படகில் வரும் வழியெங்கும், குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை அங்காங்கே மிதப்பதை காண முடிந்தது. 

*****

ஏன் 'திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம்' என்றேன் ?

1. இரண்டு நாளுக்கு தங்குவதற்கு படகு கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு செய்த செலவு 800 வெள்ளிகள், இதில் 75 விழுக்காடு செலவுக்கு மலேசியா கேமரான் குளுகுளு மலையில் / லங்காவியில் தங்கிவிட முடியும், அங்கு பகல் முழுவதும் ஊர்சுற்ற, நம் விருப்பம் போல் சென்று வர இடங்கள் உண்டு, இங்கு பின்டன் ரிசார்டுகள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே, அதில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில் எந்த ஒரு மகிழ்வும் இல்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருப்பதுடன் பக்கத்தில் இருக்கும் கடற்கரை பூங்காவிற்குச் சென்றுவருவதும் ஒன்றே, பைசா செலவே இல்லாமல் முடிந்துவிடும்

2, ஹோட்டல் செக் இன் டைம் என்ற பெயரில் மாலை மூன்று மணிக்கு மேல் அறை தரும் விடுதி நிர்வாகம், 12 மணிக்குள் செக் அவட் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், 3 மணிக்கு முன்னால் முன்கூட்டிய செக்கின் செய்யும் போது மணிக்கு, நபருக்கு  20 வெள்ளி என்ற அளவில் கூடுதல் கட்டணம் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு மேல் தங்காவிட்டால் விடுதியில் தங்கும் நேரம் 24 மணி நேரம் கிடையாது 21 மணி நேரம் மட்டுமே. 

3. கடற்கரையில் அமைந்த ஒரு விடுதி என்பது தவிர்த்து பெரிய சிறப்புகள் எதுவும் இல்லை. இது போன்று நிறைய கடற்கரை விடுதிகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உண்டு, இதைவிட கட்டணங்களும் குறைவு

4. உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்து அன்றாடப் பொருள்களும் சிங்கப்பூரைக் காட்டிலும் விலைக் கூடுதல்.

5. குழந்தைகளை ஈர்க்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும், இடங்களும் இங்கு இல்லை

6. வெளிநாடு சென்று வந்தோம் என்ற திருப்தி எதுவும் கிடைக்கவில்லை, காரணம் பின்டன் ரிசாட்டை விட்டு வெளியே செல்லும் வாய்ப்புக் குறைவு. அந்த நாடு எப்படி இருக்கும் என்பதை பின்டன் ரிசாட்டைவைத்து முடிவு செய்ய முடியவில்லை. பொதுமக்களை காணவோ, அங்கு வசிப்பிடச் சூழல், கடைகள் எதையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

*******



மற்றபடி நல்ல பாதுகாப்புச் சூழல் உள்ளது, மாற்றத்திற்காகவும் மன அமைதிக்காகவும் செல்ல விரும்புவர்கள் செல்லலாம், முதல் உதவி என்ற வகையில் மருத்துவ அறை ஒன்றையும் மருத்துவர் ஒரிருவரை வைத்திருக்கிறார்கள் ,மற்றபடி உயிர்காக்கும் அவசரசிகிச்சை உடனடி மருத்துவம் என அந்த ரிசார்டை விட்டு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணிக்க வேண்டி இருக்கும்.

பாலித் தீவு சென்று வந்ததை 10 இடுகைகளாக எழுதினேன், இங்கும் செலவிட்டது அதே 3 நாள் 2 இரவு என்றாலும் 'பின்டன்' பற்றி எழுத இதற்கு மேல் நான் அறிந்த வகையில் எதுவும் இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்