பின்பற்றுபவர்கள்

13 அக்டோபர், 2008

மெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் புயலுக்கும் ஆச்சு !

முரளிக் கண்ணன் பதிவில் ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆச்சு, ஏன் ஹிட் ஆகலை என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இருந்தார்.

இசைக்கு நாடு, மொழி இல்லை என்பது ஓரளவு உண்மை இல்லை என்றாலும், காலத்தால் அழியாத பாடல்கள் இருக்கிறது என்பதும் உண்மை என்றாலும் இசை அமைப்பாளர்களுக்கு காலம் இருக்கிறது.

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்......" மெல்லிசை மன்னர் அடித்து தூள் பரப்பிக் கொண்டிருக்கும் போது தான் இளையராஜா வந்தார். 'அன்னக் கிளியே உன்னைத் தேடுதே......" கிராமிய மணம், மக்களை எழுப்பியது மண்ணோடு ஒன்றிய பாடலாக இருந்ததால் 'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' போன்ற நாட்டுப்புற வரிகளைக் கொண்ட பாடல்களையெல்லாம் மறக்க வைத்தது, நாட்டுபுற வரிகளுக்கு நாட்டுப்புற இசையை இராஜாவால் போடப் பட்டபோது இசையும், வரியும், குரலும் இணைந்து முற்றிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று ஆரம்பித்த ராஜா ஏஆர்ரகுமான் வரும் வரை களத்தில் ஆடிக் கொண்டு இருந்தார்.

ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் எனக்கும் ஆழ்ந்த ரசனை உண்டு.

காலத்திற்கு ஏற்றவகையில் இசை அமைக்கப்படும் இசைகளே அப்போது வாழும் இளைஞர்களைக் கவர்ந்து இசை அமைப்பாளர்களுக்கு புகழை ஈட்டுத்தரும், இசை அமைப்பாளர்கள் புகழ்பெறுவது 20 முதல் 35 வயது ரசிகர்களின் ரசனையால் தான், இது எந்த இசையமைப்பாளருக்கும் பொருந்தும், இசை ரசிகர்களின் வயதும் இசையமைப்பாளர்களின் வயதும் ஒன்றாக இருக்கும் போது, பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் 20 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் போது அன்றைய இளைஞர்களின் சிந்தனையும், விருப்பமும், அவர்களது நாடிகளையும் இவர்களும் கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனையுடன் இவர்களுது இசையும் கலந்து வெற்றிகரமாக அமையும். 40 வயதை நெருங்கும் போதே இசை அமைப்பாளர்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பார்கள், காலத்திற்கு ஏற்ற சிந்தனை வராது, இளையராஜா மட்டுமே 50 வயதைத் தாண்டியும் தனியாக ஆடிக் கொண்டு இருந்தார், ஏனெனில் ஏஆர்ரகுமானுக்கு முன்பு வந்த தேவா போன்றோர் புதிய முயற்சியாகவோ, புதிய வடிவ இசையையோ முழுதாகக் கொடுக்க முடியவில்லை, ராஜாவும் 'எப்பவும் நான் ராஜா' என்று மார்த்தட்டிக் கொண்டு இருந்தார்.

தியாகராஜர் பாகவதர் காலத்துப் பாடல்கள் அவரது காலத்தில் ரசிக்கப்பட்டது, அதன் பிறகு விஸ்வநாதன் இராம மூர்த்திப் பாடல்கள் வந்த காலத்தில் 'பாகவதர் பாட்டு மாதிரி இல்லை' என்றார்கள், இளையராஜா காலத்தில் 'மெல்லிசை மன்னர் காலத்து பாடல்கள் போல் இனிமை இல்லை' என்றார்கள், ஏஆர் ரகுமான் காலத்தில் 'இசை ஞானியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது என்றார்கள்' தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) இவையெல்லாம் பழசை அசைப்போட்டு ஒப்பிட்டுப் பார்க்கும் 40 வயது கடந்தவர்களின் கணிப்புதான். ஆனால் இன்றைய இசை என்பது 20 வயதிலிருந்து 35 வயது உள்ள இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு இந்த கால இசையாக தீர்மாணிக்கப்படுவது.

எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் அவர்கள் ஏற்கனவே இசைத்த இசை காலத்தை வென்றதாக இருக்கலாம், ஆனால் அதே இசையமைப்பாளர்கள் இன்று இசைக்கும் இசையின் வெற்றி தோல்வியை நடப்புக் காலமே தீர்மாணிக்கும், அந்த வகையில் இசை முன்னோடிகளுக்கு இருந்த காலத்திற்கேற்ற இசை என்னும் சிந்தனையில் ஏற்படும் தடையே ஏஆர் ரகுமானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.


எனக்கு பிடித்த தலைமுறை இசையமைப்பாளர் வரிசையில் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை, இவர்களின் (அன்றைய) இசையை எப்போதும் ரசிக்கிறேன்.

"பழையன கழிதலும், புதுவன புகுதலும் வழுவல வாழ்க்கை வழியதுதானே" - இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் ! இதில் ஏஆர் ரகுமான் மட்டும் விதிவிலக்கா ?

44 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

A.R Rehman இசை இன்னும் இளமையோடுதான் இருக்கிறது. அவர் select செய்யும் படம் தான் சரி இல்லை.

கிருஷ்ணா சொன்னது…

மெல்லிசை மன்னர் ,இளையராஜா, A.R.R என்ற வரிசையில் நாம் இசை அமைப்பார்களை முன்னிலைப்படுத்துகையில், மற்ற சிறந்ந இசை அமைப்பார்களை பாராட்ட தவறுகிறோம்.

என்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் சிறந்த தரமான Melody பாடல்களை கொடுதது வித்யாசாகர் தான். Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.

தமிழ் விட மலையாளதில் அதிகமாக Melody கொடுத்துள்ளார்.

A.R.R விட அதிகமான அவர் கொடுத்த Melody பாடல்களை வரிசை
படுத்த முடியும்.

முரளிகண்ணன் சொன்னது…

good post sir

புருனோ Bruno சொன்னது…

அருமையாக கூறி விட்டீர்கள்

--

மணிகண்டன் சொன்னது…

You and murali have both left out A.R Rehman's hindi movies ! Raja and MSV didn't go there. So, it is good enough if you only take their tamil film music into perspective. but that is not the case with ARR

புருனோ Bruno சொன்னது…

//தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) //

அவரை முந்த இன்னமும் யாரும் வராததால் :) :)

குப்பன்.யாஹூ சொன்னது…

எ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறார்.
இப்போதும பல்லே லக்கா காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி உம் , டாக்சி டாக்சி, ஐ மிஸ் யூ டா ஹிட் தான்.
15 வருடங்களுக்கு முன்பு இசை அமைத்த சின்ன சின்ன ஆசை, ருக்குமணி ருக்குமணி, சிக்குபுக்கு ரிலே, உசிலம்பட்டி பெண்குட்டி, என்னவளே அடி என்னவளே, குளிச்சா குத்தாலம், கதாலம் காதுவழி, போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசை கொண்டு....

அடுத்து எந்திர மனிதனிலும் பாடல் ஹிட் தான் ஆகும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு..
ஆனால்..ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்..
மக்கள் சற்று மாற்றத்தை விரும்பும் போது வந்தவர் இளையராஜா
இளம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ரஹ்மான்
இவர்கல் நடுவே அந்தந்த கால கட்டங்களில் இருந்த மேதைகளும் உண்டு.
உம்- ராமனாதன்,மஹாதேவன்.சுதர்சனம்,போன்றோர்.
பின் தேவா..இப்போது..வித்யாசாஹர்,பரத்வாஜ்,யுவன் போன்றோர்.
அந்தகாலகட்டத்தில் அவரவர் பிரபலம்.
ரஹ்மான் இப்போது சற்று பின் தங்கியுள்ளது உண்மையே.
ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்

Subbiah Veerappan சொன்னது…

எம்.எஸ்,வி க்கும், இளையராஜாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் தங்கள் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இளவட்டங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக, ஹாரிஸ் ஜெயராஜையும், இமாமையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட முடியாது.

ராஜா ராஜாதான். கோட்டையில்லே கொடியுமில்லே - எப்பவும் அவர் ராஜாதான்.

Subbiah Veerappan சொன்னது…

//////ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்///

'சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேர்த்துக்கடி"
என்று பாட்டெழுதும் கவிராயர்கள் மலிந்துவிடத்துதான் காரணம்.

பட்டுக்கொட்டையார், கவியரசர் கண்ணதாசன் போன்ற அற்புதமான
பாடலாசிரியர்கள் இனி திரையுலகத்திற்குக் கிடைப்பார்களா என்பது
கேள்விக்குறியான விஷயம்தான்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் எனக்கும் ஆழ்ந்த ரசனை உண்டு.//

முழு பத்தியையும் ரசித்தேன்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

படம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.

இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.

ஆனாலும் ரஹ்மான் அதிகமான பணம் யார் தருகிறார்களோ அவர்களுக்கு இசையமைப்பது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. கதையெல்லாம் கேட்க நேரம் இல்லையோ என்னவோ?

suvanappiriyan சொன்னது…

இந்தி சேனல்களில் 'ஆட்டம் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சிகளில் நடனமாடுபவர்கள் அதிகம் எடுப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களைத்தான். ஒரு வட நாட்டவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது 'ஒரு பாடல் ஒலிக்கும் போதே இது ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூன்தான் என்று நான் கண்டுபிடித்து விடுவேன்' என்றார். நம்மவரின் புகழ் வட நாட்டில் இந்த அளவு பரவியிருக்கிறது. பாலசந்தர்,பாரதிராஜா,மணிரத்னம் என்று டைரக்டர் பார்த்து படங்கள் செய்தால் பழைய ரஹ்மானை நாம் காண முடியும்.

வரிசைபடுத்தியதில் கே.வி.மகாதேவனை தவற விட்ட கோவிக் கண்ணனை செல்லமாக கண்டிக்கிறேன்.

குடுகுடுப்பை சொன்னது…

இசைஞானி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தால் அவர் இன்னும் ராஜாதான்.

Vijay சொன்னது…

நிதர்சனமான உண்மை

புருனோ Bruno சொன்னது…

//படம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.

இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.//

1992 முதல் 2001 வரை கூட ரஹ்மான் இசையமைப்பில் வந்த படங்களில் 50 சதம் தான் வெற்றி பெற்றிருக்கின்றன

--

ஏன் 1980 முதல் 1996 வரை வந்த இளையராஜா படங்களில் 10 சதம் கூட வெற்றி பெற வில்லை

--

ஒரு படத்தின் வெற்றி / தோல்வியை வைத்து அந்த படத்தில் இசையமைப்பாளரின் பங்கை / இசையமைப்பாளரின் கலைத்திறனை எடை போடுவது சரியல்ல

--

உதாரணம்

சிறைச்சாலை - வணிக ரீதியாக தோல்வி படமென்றாலும் அதில் பாடல்களாகட்டும், பிண்ணனி இசையாகட்டும் ஒரு குறை கூட சொல்ல முடியாது

--

மேலும் உதாரணங்கள் வேண்டுமென்றால்

ஹே ராம்
பாரதி

என்று நினைத்து பாருங்கள்

புருனோ Bruno சொன்னது…

படத்தின் வியாபார வெற்றிக்கு இசையமைப்பாளரின் பங்கு தேவை என்றாலும் இசையமைப்பாளர் 100 சதம் தன் பணியை செய்தாலும், அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடையலாம்

--

கொஞ்சம் யோசித்து பார்த்தால்

1993 உழவன்
1993 புதியமுகம்
1993 திருடா திருடா
1994 மே மாதம்
1995 பாம்பே
1995 இந்திரா
1997 இருவர்
1997 மின்சார கனவு - தேசிய விருது பெற்ற பாடல்
1998 உயிரே
1999 என் சுவாச காற்றே (இது இவரது சொந்தப்படம்)
1999 சங்கமம் - தேசிய விருது பெற்ற பாடல்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 ரிதம்

என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றபின்னரும், இன்று வரை அந்த பாடல்கள் முழுவதும் நினைவில் நின்றாலும், தோல்வியடைந்த படங்கள் 1993ல் இருந்தே உள்ளது

--

இதை போல் குணா, சிறைச்சாலை, பாரதி, ஹே ராம், என்று இளையராஜாவிற்கும் பெரிய பட்டியலே உள்ளது

புருனோ Bruno சொன்னது…

வணிக ரீதியாக வெற்றிப்படங்கள் என்று பார்ப்பதை விட

இதில் எத்தனை படங்களிலிருந்து அனைத்து பாடல்களும் நினைவில் நிற்கிறது என்று பார்த்தால்

கன்னத்தில் முத்தமிட்டால்,
பாய்ஸ்,
எனக்கு 20 உனக்கு 18,
கண்களால் கைது செய் (நான் இந்த படத்தை பார்த்தது 2004ல்)
ஆயுத எழுத்து,
நியூ

என்று பட்டியல் மிகவும் சிறிதாக இருக்கிறது.

(வரலாறு வெற்றி பெற்ற படம் என்றாலும் அதில் பாடல்கள் ஹிட்டா என்று தெரியவில்லை)

புருனோ Bruno சொன்னது…

கசப்பான உண்மை  இளையராஜாவின் சிறைச்சாலை
ரஹ்மானின் நியூ

--

இளையராஜாவிற்காவது ஒரு “காதலுக்கு மரியாதை” கிடைத்தது.
ரஹ்மானுக்கு அது கூட கிடைக்கவில்லை என்பது தான் சோகம்

--
ரஹ்மான் தனது கலையுலக பணித்தடத்தின் இறங்குமுதத்தில் இருக்கிறார்

புருனோ Bruno சொன்னது…

எம்.எஸ்.வி ஓய்ந்த பொழுது சரியாக இளையராஜா வந்தார். அவரிடத்தை பிடித்தார். இளையராஜா ஒய்ந்த பொழுது ரஹ்மான் வந்தார். இளையராஜாவின் ஒலிப்பேழைகளை விட அதிகம் விற்பனையாகும் ஒலிப்பேழைகளை அளித்தார். ஆனால் தமிழ் திரையிசையின் தற்போதைய சோகம் என்ன வென்றால், வித்யாசாகர் (அன்பேசிவம், இயற்கை, சந்திரமுகி படங்களுக்கு பின்), ஹாரிஸ் ஜெயராஜ் (லேசா லேசா, காக்க காக்க படங்களுக்கு பின்), யுவன் சங்கர் ராஜா கூட தங்களின் பணித்தடத்தில் இறங்குமுகத்தில் தான் இருக்கிறார்கள் (declining phase of professional career)

அதனால் தான் ஏ.ஆர்.ரகுமானின் இறங்குமுகம் இது நாள் வரையில் வெளியில் தெரியவில்லை.

ஜியா சொன்னது…

:))) அருமையான பதிப்பு....

ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது...அப்டீனு எந்தப் பாடல்கள் நல்லா இருக்குதோ... அத கேட்டுட்டு அப்படியே போய்க்கிட்டு இருக்க வேண்டியதுதான் :)))

புருனோ Bruno சொன்னது…

//இன்னொன்று தமிழில் ஹிட் படங்களின் எண்ணிக்கையே குறைந்து வருகிறது. பல படங்கள் சுமாரான வெற்றியைத்தான் பெறுகின்றன. 2001ல் இருந்து மொத்த ஹிட் படங்களின் எண்ணிக்கையில் ரஹ்மான் இசையில் எத்தனை என்றுதான் கணிக்கவேண்டும்.//

--
1980களில் இளையராஜாவில் படத்தில் 5 அல்லது 6 பாடல்களுமே வெற்றி பெரும்

1990களில் ரகுமானின் பாடல்களும் அப்படியே
--
இப்பொழுது யாருக்கும் அப்படி எந்த படமும் வரவில்லையே
--
ஒரு பாடல் ஹிட் என்பது சிக்ஸர்
அனைத்து பாடல்களும் ஹிட் என்பது 50
அனைத்து பாடல்களும் ஹிட் + பிண்ணனி இசை அபாரம் என்பது நூறு
--
தமிழ் திரையிசை இசையமைப்பாளர் ஒருவரிடம் இருந்து செஞ்சுரி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது

புருனோ Bruno சொன்னது…

//ரகுமானை மிஞ்ச ராஜாவாலும், ராஜாவை விஞ்ச ரகுமானாலும் முடியவே முடியாது.//

மிகச்சிறந்த கருத்து

G.Ragavan சொன்னது…

அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய பதிவு. மெல்லிசை மன்னருக்கு ஆனதேதான் இளையராஜாவுக்கு ஆச்சு. இசைப்புயலுக்கு அது இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆகத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ரகுமான் சுதாரித்துக் கொண்டால் இன்னும் கொஞ்ச நாள் வண்டி ஓட்டலாம். ஏனென்றால் மெல்லிசை மன்னரின் பாணியிலிருந்து மாறுபட்டு வந்த இசை இளையராஜாவினுடையது. அதிலிருந்து மாறுபட்டு வந்தது ரகுமான். அடுத்து புதிய இசைப்பாணி வரும் வரையில் ரகுமான் விரும்பினால் அடித்து ஆடலாம். யுவன், இமான் போன்ற மற்ற இசையமைப்பாளர்களால் ரகுமானின் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்கர்-கணேஷ் போல. மெல்லிசை மன்னர் இருக்கும் பொழுதே சங்கர்-கணேஷ் வந்தனர். ஆனாலும் மெல்லிசை மன்னரே மன்னர். இளையராஜா வந்துதான் ராஜா ஆனால். அது போலத்தான் யுவன் வகையறாக்களும். படங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று புதுப்பாணி இருக்காது. அந்தப் பாணி வந்தவுடன் இசைப்புயல் கரையைக் கடக்கும். ராஜா ராஜாதான் என்று சொல்வது எவ்வளவு உண்மையோ...அவ்வளவு உண்மை மன்னன் மன்னந்தான். புயல் புயல்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
A.R Rehman இசை இன்னும் இளமையோடுதான் இருக்கிறது. அவர் select செய்யும் படம் தான் சரி இல்லை.
//

கிருஷ்ணா,

நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று பழமொழி சொல்வார்கள்.

புதியவர்களுக்கு வழிவிடுவதே நல்லது. நானும் ஏ ஆர் ரகுமானின் தீவிர விசிறி, இசை ரசிகர்களும் எவருடைய ஆளுமையிலும் சிக்கிவிடக் கூடாது, திறமை உள்ளவர்களை யாராலும் இறக்கிவிட முடியாது. ரகுமான் இன்னும் வியத்தகு வளர்ச்சி பெறவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னை பொருத வரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான அளவில் சிறந்த தரமான Melody பாடல்களை கொடுதது வித்யாசாகர் தான். Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.//


கிருஷ்ணா,

வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
good post sir
//

:) நன்றி,
திரைப்படத் துறை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் உங்கள் பாராட்டு பொருள் நிறைந்தது !

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
அருமையாக கூறி விட்டீர்கள்//

நன்றி புருனோ சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
You and murali have both left out A.R Rehman's hindi movies ! Raja and MSV didn't go there. So, it is good enough if you only take their tamil film music into perspective. but that is not the case with ARR
//

மணிகண்டன் ,
அப்படியெல்லாம் பார்த்தால் தெலுங்கில் இருந்து இங்கு வந்து சில படங்க்களுக்கு இசை அமைத்த மணிசர்மா போன்ற பிற இசையமைப்பாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியில் ஏஆர் ரகுமானுக்கு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே, இந்திக்காரர்களுக்கு மும்பையில் புதிய இசை அமைப்பாளர்கள் கிடைத்தால் நம் ரகுமானை கரிவேப்பிள்ளையாக்கிவிடுவார்கள், தற்பொழுது நல்ல இசை அமைப்பாளர்கள் இல்லை என்பதால் ரகுமானை சுற்றி வருகிறார்கள். தென்னகத்து பாடகிகளை அவர்கள் பாட அனுமதிப்பது இல்லை, எனவே இந்திக்கு இசை அமைப்பது ரகுமானுக்கு பெருமை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) //

அவரை முந்த இன்னமும் யாரும் வராததால் :) :)

3:55 PM, October 13, 2008
//

புருனோ,

நானும் அதனை எழுதும் போது கவனத்தில் வைத்தே எழுதினேன், ஏஆர்ரகுமானுக்கு பிறகு தற்போது என்று எவரையும் சுட்டிக் காட்டவில்லை.

:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குப்பன்_யாஹூ said...
எ ஆர் ரஹ்மான் இப்போதும் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறார்.
இப்போதும பல்லே லக்கா காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி உம் , டாக்சி டாக்சி, ஐ மிஸ் யூ டா ஹிட் தான்.
15 வருடங்களுக்கு முன்பு இசை அமைத்த சின்ன சின்ன ஆசை, ருக்குமணி ருக்குமணி, சிக்குபுக்கு ரிலே, உசிலம்பட்டி பெண்குட்டி, என்னவளே அடி என்னவளே, குளிச்சா குத்தாலம், கதாலம் காதுவழி, போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசை கொண்டு....

அடுத்து எந்திர மனிதனிலும் பாடல் ஹிட் தான் ஆகும்.
//

முன்பெல்லாம் ஏஆர் ரகுமான் பாடல்கள் என்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், தற்பொழுது அது இல்லையே !

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
நல்ல பதிவு..
ஆனால்..ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்..
மக்கள் சற்று மாற்றத்தை விரும்பும் போது வந்தவர் இளையராஜா
இளம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் ரஹ்மான்
இவர்கல் நடுவே அந்தந்த கால கட்டங்களில் இருந்த மேதைகளும் உண்டு.
உம்- ராமனாதன்,மஹாதேவன்.சுதர்சனம்,போன்றோர்.
பின் தேவா..இப்போது..வித்யாசாஹர்,பரத்வாஜ்,யுவன் போன்றோர்.
அந்தகாலகட்டத்தில் அவரவர் பிரபலம்.
ரஹ்மான் இப்போது சற்று பின் தங்கியுள்ளது உண்மையே.
ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்
//

ஐயா,
மே மாதம், திருடா திருடா போன்ற படங்கள் தோல்வி அடைந்தும் இசை பெரிதாகப் பேசப்பட்டது, அல்லி அர்ஜுனா படத்திலும் ஏஆர் ரகுமான் இசை தான், உடனே நினைவுக்கு வரும் பாடல் என்று எதுவும் இல்லை. இயக்குனர்களை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
எம்.எஸ்,வி க்கும், இளையராஜாவிற்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்கள் தங்கள் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டுக் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இளவட்டங்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக, ஹாரிஸ் ஜெயராஜையும், இமாமையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட முடியாது.

ராஜா ராஜாதான். கோட்டையில்லே கொடியுமில்லே - எப்பவும் அவர் ராஜாதான்.

7:08 PM, October 13, 2008
//

ஐயா,

நான் ஹாரிஸ், இமாம் பெயரையெல்லாம் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்,

ரசனை வேறு, ரசிகனாக இருப்பதும் வேறு. ஒருவருக்கு ரசிகராக இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களது காலத்தை இந்த காலத்துடன் ஒப்பிடுவது தவறு, ஏனெனில் இது அவர்களின் காலம் அல்ல, அவர்கள் காலம் முடிந்துவிட்டது. மகனுடைய வாழ்நாளும் எனக்கே என்று 80 வயது முதியவர் சொன்னால் அது அபத்தம் தானே.

இளைஞர்களுக்கு உள்ள காலத்தை இளைஞர்களிடமே கொடுங்கள், பழம்பெருமைகள் எல்லாம் பாதுகாப்பாக வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
//////ஒரு சமயம்..நேரம்..சரியான இயக்குநர் படங்கள் கிடைக்காததும் காரணமாயிருக்கலாம்///

'சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேர்த்துக்கடி"
என்று பாட்டெழுதும் கவிராயர்கள் மலிந்துவிடத்துதான் காரணம்.

பட்டுக்கொட்டையார், கவியரசர் கண்ணதாசன் போன்ற அற்புதமான
பாடலாசிரியர்கள் இனி திரையுலகத்திற்குக் கிடைப்பார்களா என்பது
கேள்விக்குறியான விஷயம்தான்.

7:14 PM, October 13, 2008
//

சுப்பையா சார்,

பாரதிக்கு பிறகு கண்ணதாசன் வந்தார்.

பாரதிக்கு பிறகு கவிஞனே பிறக்கவில்லை என்று சொன்னால் அதுவும் அபத்தம் தானே.

கடந்த 30 ஆண்டுகளாக வைரமுத்துவின் ராஜ்யம், தற்பொழுது நா.முத்துக்குமார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
வரிசைபடுத்தியதில் கே.வி.மகாதேவனை தவற விட்ட கோவிக் கண்ணனை செல்லமாக கண்டிக்கிறேன்.
//

சுவனப்பிரியன்,
40++ வயது ஆளுங்களுக்குத்தான் திரை இசைத்திலகம் பற்றி தெரியும் என்பதால் இங்கே விட்டுவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...
படம் ஹிட் ஆகுதா இல்லையா என்பது இசையமைப்பாளரின் வெற்றி இல்லை பாடல் ஹிட் ஆகுதா என்பதுதான். அந்த வகையில் ரஹ்மான் பாடல்கள் ஹிட் ஆகிக்கொண்டேயிருக்கின்றன.//

:) அல்லி அர்ஜுனா படத்தில் இருந்து டக்குனு ஒரு பாட்டு சொல்லுங்க, ரஹ்மான் இசைதான் அதுவும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
இசைஞானி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தால் அவர் இன்னும் ராஜாதான்.

5:58 AM, October 14, 2008//

இது ஒரு மாதிரி பிடித்த இசை அமைப்பாளர் என்பதால் ஏற்படும் துதிபாடும் மனநிலை, ஆண்டு தோறும் இளவேனில் வருவது போல் புதியவர்கள் வருவார்கள் அவர்களையும் போற்ற வேண்டும் !


Vijay said...
நிதர்சனமான உண்மை

7:06 AM, October 14, 2008

கோவி.கண்ணன் சொன்னது…

//Vijay said...
நிதர்சனமான உண்மை

7:06 AM, October 14, 2008
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

புரோனோ சார்,

பின்னூட்ட மழைக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜிரா,

உங்கள் பின்னூட்ட வரிக்கு வரி உடன்படுகிறேன். மிக்க நன்றி !

G.Ragavan சொன்னது…

//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் //

ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

எங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.

அன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.

இந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

எங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.

அன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.

இந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.//

ஜிரா,

கோலங்கள் என்று ஒரு படம் அதில் ஜெயராமனும் குஷ்புவும் நடித்திருப்பார்கள் 1996 வாக்கில் வந்தது என்று நினைக்கிறேன். பம்பாய் படம் வந்துட்டுப் போன சமயம், கோலங்கள் படத்திற்கு இளையராஜாதான் இசை, மும்பையில் விபச்சார விடுதியில் இருந்து குஷ்புவை மீட்டுவருவார் ஜெயராமன் அங்கே விடுதியின் அருகில் கேட்கும் பாடலாக, ஏஆர் ரகுமானின் இசையான 'அரபிக்கடலோரம்...' பாடல் அங்கு ஒளிப்பதாக ரீரெக்காடிங்க் செய்திருப்பார்.

ஏஆர்ரகுமான் பாடல் கேட்கும் இடம் இதுதான் என்று சொல்லும் விதமாக
இளையராஜாவின் அரசியல் அப்போது எவ்வளவு நுணுக்கமாக இருந்தது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

நான் ஆதாரம் இன்றி சொல்லவில்லை, கோலங்கள் படம் சிடி கிடைத்தால் முகப்புக் காட்சியிலேயே அந்த பகுதி வந்துவிடும் பார்க்கலாம்.

இங்கே கங்கையமரன் தாங்கள் பெருமைப் படுத்தப்பட்டத்தைத் தான் சொல்கிறார், இவர் அண்ணனால் பெருமைபடுத்தப்பட்டவர்கள் பற்றிச் சொல்லவில்லை.

:(

கிருஷ்ணா சொன்னது…

//வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று என்பதாகத் தான் தெரிந்தது, தனி அடையாளம் எதுவும் அவர் வைக்கவில்லை. ஒருமுறை ஒரு பாடலைக் கேட்டு அது இந்த இசையமைப்பாளரது என்று கண்டுகொண்டால் அது அந்த இசையமைப்பாளர் அந்த பாடலுக்கான இசை அமைத்த இசை தோல்விதான், புதுமையில் அவர்களது 'டச்' இருக்க வேண்டும்.//


கோவி ஸார்,

FM Radio விலும் music channels இலும் அடிக்கடி போடும் பாடல்கள் தான் hit யென்று ஒத்துகொள்கிறார்க்கள். Hit song யென்றாலெ Westen touch இறுக்க வேண்டும், வித்யாசமான voice இருக்க வேண்டும் அப்படி இறுந்தால் மட்டுமே அது தரமான பாடல் யென்றும் கொள்ளப்படுகிறது.

என்னை இசை நுணூக்கங்கள் உள்ள எளிமையான பாடல்கள் தான் ஈர்க்கிறது.

அந்த வகயில் அதிகமான் பாடல்களை
வித்யாசாகர் கொடுத்து உள்ளார்.
அப்படி அவர் இசை அமைத்த
Tamil & Malaylam படங்களில் உள்ள 50 தரமான பாடல்களின் List
தரமுடியும்.

Masala படங்களுக்க்கு இசை அமைபதால் பல குப்பை பாடல்களையும் கொடுத்துள்ளார்.

A.R.R style i follow செய்யும் Yuvan & Harris போன்றோரை பாராடும் பலர் வித்யாசாகர் i consider செய்வது இல்லை.

மொழி படதில் வரும் காற்றின் மொழிமொழி பாடல் அவர் இசை திறனுக்கு ஒரு சின்ன
சான்று .

"வித்யாசாகர் தேவாவுக்கு மாற்று "
என்ற வரி உங்கள் இசை ரசனையை சந்தேகப்ட வைக்கிறது.

***வித்யாசாகரும் அதிக பாடல்களை அடித்து உள்ளார்***

Unknown சொன்னது…

நல்ல பதிவு ."ஆழ் துளை" கண்ணோட்டம். ராஜா பேசக் கூடாது .

ஒரு முக்கியமான விஷயம் .விட்டுவிட்டிர்கள்
.ராஜா வந்த போது "இசையின் அடர்த்தி" பாடல்களின் வரியை அமுக்குகிறது " என்ற குற்றசாட்டு இருந்தது . அது உண்மைதான். அந்த பழக்கத்தை அவர்தான் ஆரம்பித்து வைத்தார் இப்போது அது பழகி விட்டது.. ஆனால் இப்போது இன்னும் அமுங்கி போய, இட்லி மாவு போல் பிதுங்கி வழிகிறது. இப்போது கவலை பட தேவை இல்லை. வரிகளும் சொல்லிகொள்ளும்படிய இல்லை

தயவு செய்து இசையை (எந்த விஷயமுமே) மேலோட்டமாக கேட்டு விட்டு விமர்சனம் செய்யாதிர்கள்.கொஞ்சம் ரசனை /ஆழம் கொண்டு கேட்டால் பல இசை அமைப்பாளர்களின் இனிமையின் அளவு தெரிந்துவிடும். பலம், பலவீனம் தெரியும். சாயம் வெளுக்கும். back to back xerox ய கண்டுபிடிக்கலாம்.

ராஜாவே 95in இறுதிகளில் கூர்ந்து கவனித்தால் அவரோட "பழயதை" மைக்ரோ அவனில் வைத்து சூடு பண்ணி கொடுப்பதை கண்டுபிடிக்கலாம்.

AR , MSVயை பாலிஷ் செய்து போடுவதை கண்டுபிடிக்கலாம்.

தேவாவிற்கு கஷ்டபட வேண்டாம். வித்யா சாகர் AR +IR mix செய்வார்.

"மலரே மௌனமா " (Karna)இரண்டு பேர் ஜாடையும் தெர்யும்..

வித்யா சாகர் திறமையா இசை அமைக்கக் கூடியவர். இனிமை ரகு மானைவிட கூடுதல்.

GKV / VB/ VK/எம்.எஸ்.வியின் ஜாடை அடிக்கும்.

//ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர் விஸ்வநாதன்...//

டியூன் பிடிக்க ஓகே.. அதுவே பலவீனம் ஆகி விட்டது... அவர் அற்புதமான மெல்லிசை டியூன் பிடித்துவிடுகிறார்.
டியூன் போட்டுவிட்டு பாட்டின் பின்னணி இசையை வித்தியாசமாக இசைக்க யோசிப்பதில்லை . யோசிக்க யோசிக்க கற்பனை ஜாஸ்தியாகும் . பாட்டும் அழகாகும்

உதாரணம் : "காற்றுக்கு என்ன வேலி" சுதந்திரமான ஒரு பெண்ணின் மன நிலையை எடுத்து காட்டும் பாட்டு "அவர்கள்" படத்தில் பாலச்சந்தர் சண்டை போட்டு வாங்கிய டியூன் என்று கேள்வி.

."ஆடலுடன் பாடலை கேட்டு "(குடியிருந்த கோவில் ) பெரிய பாட்டு. ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும் .நன்றாக இருந்தது அப்போது...

ஆனால் "இன்பமே எந்தன் பேர் " (இதய கனி ) "கடவுள் அமைத்து வைத்த மேடை "(அரங்கேற்றம்). கூர்ந்து கவனித்தால் ஒரே பின்னணி இசை எல்லா சரணங்களிலும் ரிபிட் ஆகும். பலவீனம் தெரியும். நெறைய உதாரணம் சொல்லலாம். இது மாதிரி போட்டு அலுக்க வைத்துவிட்டார்

கடைசி பத்து வருடம் சோடை போய்விட்டது . தலை முறை மாறும்போது "உஷார" ஆக இருக்க வேண்டும். சாதரண வலை பதிவு எழுதுபவரே மண்டையை உடைத்துக்கொண்டு பல விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது. இசைக்கு .............?

இங்கு ஒன்று சொல்ல தோன்றுகிறது .நமது வேலைக்கு ஓய்வு இருப்பது போல் இவர்களும் தானாகவே ஓய்யலாம்.


நன்றி

கே.ரவிஷங்கர்
Raviaditya.blogspot.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்