பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2008

சிதம்பரம் கோவிலுக்குள் ஜட்டி அணிந்து செல்லமுடியுமா ?

கோவிலுக்கும் நாத்திகனுக்கும் என்ன சம்பந்தம் ?

எங்களோடு சேர்ந்து மணி அடித்தாயா ? கற்பூரம் காட்டினாயா ? அட்லீஸ்ட் சிதறு தேங்காயாவது உடைத்தாயா ? கோவிலில் என்ன பாடவேண்டும், எந்த மொழியில் பாடவேண்டும் என்று கேட்பதற்கு உனக்கென்ன உரிமை ? நீயோ நாத்திகன் உனக்கு, கோவிலில் கொலை நடந்தால் என்ன ? கொள்ளை நடந்தால் என்ன ? அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியவர் பக்தர்கள் அல்லது நாங்களே 'பொருட்'படுத்திக் கொள்கிறோம்.

வழக்கமாக கோவில் சீர்கேடுகளை முறைப்படுத்த வேண்டும், பக்தர்களின் குரலுக்கு செவிசாய்த்து கோவில் நடவடிக்கைகளில் மாற்றம் நிகழவேண்டும் என நாத்திகர் கேட்டால் மேற்கண்ட பதில் தான் வரும்.

சரி நாத்திகன் கேட்கவில்லை, ஆத்திகன் ஆறுமுக சாமி கேட்கிறாரே அவருக்கு என்ன பதில் ?

ஆறுமுக சாமி ஒரு பொய்யன், வம்பன், வீம்பன் அவன் ஒருவனுக்காக ஆண்டாடுகாலமாக நடைமுறையில் இருப்பதை மாற்ற முடியுமா ? பொறுங்கள் ! இப்பொழுதெல்லாம் கோவிலுக்குள் ஜட்டி கூட அணிந்துவருகிறார்கள் என்று சிதம்பரத்தில் இருந்து ஒரு அப்பா சாமி எழுதுகிறார். அதையும் அவர் தான் எழுதினாரா ? அல்லது எப்போதாவது போடும் நடுநிலை வேசத்துக்காக தினமலர் தன் குரலை மாற்றி ஒலிக்குதா ?

இறங்கி வாருங்கள்!
என்.ராம்குமார், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்:
சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தினருக்குமிடையேயான நடக்கும் வழக்கு தொடர் பாக ஒரு செய்தி... 40 ஆண்டுகளுக்கு முன், சிதம்பரம் கோவில் கோபுரத்திற்கு உட்புறம் உள்ள பிரகாரத்தில், அறிவிப்பு பலகைகளை வைத்திருந்தனர். அந்த அறிவிப்பு பலகையில், "குல்லாய் அணிந்து கொண்டோ, லுங்கி அணிந்து கொண்டோ வருபவர்கள் கோவிலினுள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முக்கியமாக, குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு வாசகம், "அன்னிய மதத்தினர் கோவிலுக்குள்ளே நுழைய அனுமதியில்லை' என்பது. ஆனால், இன்று நடப்பதென்ன... அரைக்கால் சட்டையுடன், ஏன் ஜட்டியுடன் வந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். காரணம், பணம்! அதைப் போல், பிற மதத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்களிடம், காசு வசூலித்து, அவர்களைச் சிற்றம்பல மேடையிலேயே ஏற அனுமதிக் கின்றனர். இதற் கெல்லாம், வைதிகம் அனுமதியளிக்கும் போது, "தமிழ் சிற்றம்பல மேடையில் ஏறக்கூடாது' என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? இக்கோவில் தீட்சிதர்கள் தமிழுக்காகக் கொஞ்சம் இறங்கி வரவேண் டாமா?

என்.இராம் குமார் இந்து, கடவுள் நம்பிக்கை உடையவராகத்தான் இருக்கும், அவர்களுக்கெல்லாம் தீட்சிதர்கள் சார்பு ஆத்திகர்கள் என்ன பதில் சொல்வார்கள் ?

எல்லாம் கடவுள் படைச்சது தான்...?

சென்ற வார இறுதியில் சென்னை நண்பர் ஒருவருடன் சிங்கை பறவைகள் பூங்காவிற்குச் சென்றேன். சிங்கையில் காசு கரைகிற இடங்களில் அதும் ஒண்ணு. 22 வெள்ளி கட்டணம், அந்த அளவுக்கு மதிப்பு பெறாது. சிங்கை போன்ற வளர்ந்த நாடுகளில், குடியுரிமை யுள்ள / பெற்ற உடல் உழைப்பாளர்களுக்கு குறைந்த அளவாக 1000 வெள்ளி ஊதியம் என்பதால் பறவைகள் பூங்கா போன்ற இடங்களில் உள்ள கட்டணங்கள் வாங்குவதற்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் ஊதியமாக கொடுப்பதற்கும், பராமரிப்பு செலவுக்கும் சரியாக இருக்கும், பெரியதாக அரசாங்கத்திற்கு லாபம் ஒன்றும் கிடையாது, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை கவர்வதற்காக சுற்றுலா மையம் தேவை என்பதால் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலா மையங்கள் கட்டணம் மிக்கவை என்பதால் உள்ளூர்வாசிகள் எவரும் செல்வது இல்லை. ( இது சுற்றுலா வாசிகளுக்காக சின்ன குறிப்புதான் பதிவுக்கும் இந்த தகவலுக்கும் தொடர்பு இல்லை)

உள்ளே சென்றவுடனே பென்குயின் பறவைகள் அடைக்கப்பட்ட கண்ணாடி கூண்டைப் பார்த்தோம் மிக அழகாக நின்று கொண்டும், குளிர்நீருக்குள் நீந்திக் கொண்டும் பெண்குயின் பறவைகள் காட்சி தந்தன. நண்பரும் நானும் மிகவும் ரசித்தோம், அதன் பிறகு நாரைகள், வகைவகையான கிளிகள், பலவிதமான பறவைகளைப் பார்த்தோம். ஒவ்வொரு இடங்களில் உள்ள பறவைகளைப் பார்க்கும் போது, 'ஆண்டவன் படைப்பில் என்ன ஒரு அற்புதம்!!!, என்ன ஒரு அழகு!!!' என்று நண்பர் மிகவும் மகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டார்.

கடைசியாக திரும்பி வரும் போது, இருட்டு அறைக்குள் இரவு நேர பறவைகளை வைத்திருக்கும் இடத்திற்கு வந்தோம், அந்த அறையுனுள் உள்ளே வராமால் தயங்கினார். தயக்கத்திற்கான காரணம் புரிந்தாலும், 'கால் வலிக்குதா ? ஏன் என்ன ஆச்சு, எல்லாவற்றையும் பார்த்தோம், இதையும் பார்த்திட வேண்டியதுதானே ?' என்று கேட்டேன்.

'ஆந்தையெல்லாம் யாரு பாப்பாங்கா ?, ஆந்தை முகத்தில் முழித்தாலே பாவம், கெட்ட சகுனம், நான் வரலை' என்றார்

'ஆந்தையை படைச்சது யாராம்?'

அவர் மனம் புண்படும் என்று அவரிடம் கேட்கவில்லை, ஆனால் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்

நான் உள்ளே சென்று பார்த்தேன், இருட்டு அறையில், மெல்லிய சிவப்பு வெளிச்சத்தில் கூரிய பார்வையுடன், மனித முகம் போலவே இருந்த ஆந்தைகள், 'மற்ற பறவைகளைவிட நானே அழகு' என்று சொல்வது போலவே உணர்ந்தேன்.

நாத்திகம் பேசுவது பாவம் !!! நாத்திகனை பேச வைப்பது யார் ? :)

எல்லாம் அவன் செயல் !!! :-)

பின்குறிப்பு : பதிவில் எதும் உள்குத்து இல்லை. தேடவேண்டாம். பின்குறிப்பு மட்டுமே உள்குத்து. :)

29 ஜனவரி, 2008

கூடல் குமரனின் புல்லாகி பூண்டாகி காதை - காலத்தின் கடைக்கண் விமர்சனம்

நான் பொதுவாக பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதப்படும் தற்கால கதைகளை அதிகம் படிப்பதில்லை. காரணம் அவற்றில் பல முழுக்க முழுக்க விளம்பர உத்தியில் எழுதப்பட்டிருக்கும், அதுபோல் நூல்கள் தற்பொழுது மிகக் குறைவுதான். இப்படியெல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு பயந்தே அத்தகைய நூல்கள் அதிகம் வருவதில்லை. கவியரசர் கண்ணதாசன் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அர்த்தமுள்ள இந்துமதம் இன்னும் 50 பாகங்களாவது கிடைத்து இருக்கும். இளைய இந்துக்கள் தப்பித்தார்கள்(?) :). தற்பொழுதும் கூட சாமியார் மகிமைகள் குறித்து பக்தர்கள், அடியார்கள் அவர்களிடம் பயன்பெற்ற அனுபவம் என புல்லரிப்பாக எழுதப்பட்டு கடைவிரிக்கும் கதைகள் ஓரளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. தான் பெற்ற அனுபவம் பிறர் பெற வேண்டுமென்பதற்காகவும், ஒரு பக்தனாக சாமியாருக்கு அதிகம் அடியார்களைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நல்லெண்ண(?) அடிப்படையில் அவை எழுதப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த காக்கையின் கால் சரியாக பனம் பழம் மேல் பட்டு இருக்கிறது என்பதாகத்தான் எனக்கு புரியும். கோ - இன்சிடெண்ட் நடப்பதும் சில சமயம் வியப்புதானே. அதை புரிந்துக்கொள்வதில் பக்தியாளர்கள் உணர்சி வசப்பட்டுவிடுகிறார்கள் என்றே நினைப்பேன்

நம்பிக்கை என்ற பெயரில் நம்புவர்களை கடவுள் கைவிடுவதில்லை என்பது போல் தான் ஏறக்குறைய எல்லா நம்பிக்கை சார் கதைகளுமே இருக்கிறது. இல்லை என்றால் கொஞ்சம் பயமுறுத்தல் அதாவது 100 பிட் நோட்டீஸ் அடித்து பலருக்கும் அனுப்பவில்லை என்றால் உன் வீட்டில் துக்கம் நடக்கும், நடந்தது என்ற ரீதியில் எழுதி இருப்பார்கள். 24 x 7 ஆண்டவனுக்கு இவர்களை கண்காணித்துக் கொண்டே நல்லது செய்வதுதான் தொழில் என்றும், தன்னை தூற்றுபவர்களுக்கு தண்டனைத் தருபவராகவும் தான் இறைவனின் திருவுளம் இருக்கிறது என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். இதுபோல் இறைசக்தியை திரித்து கூறுவது தவறு என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. பக்தியின் பெயரால் எதைச் செய்தாலும் புனிதம் தான். இதனாலேயே பக்திசார் கதைகள், அனுபவங்கள் இதையெல்லாம் செவிமடுப்பதோ, கண்ணிடுவதோ இல்லை.

நண்பர் குமரன் 'புல்லாகி பூண்டாகி' என்ற தொடர் எழுதிவருவதாகவும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முதல் அத்யாயம் முடிந்ததும் மின் அஞ்சல் வழி தகவல்
அனுப்பினார். 'நான் இதுபோன்ற கதைகளை படிப்பதில்லை, அப்படி படித்தாலும் நான் செய்யும் விமர்சனம் உங்களை புண்படுத்துவதாக அமையும்', என்று சொன்னேன். பதிலுக்கு 'பரவாயில்லை. நீங்கள் சொல்வதும் சரிதான் உங்களுக்கு கிண்டுவதற்காக சிலவிசயங்கள் இருக்கும், முடிந்தால் கருத்து கூறுங்கள் வற்புறுத்தவில்லை' என்றார். ஒருவாரம் சென்று என்ன தான் எழுதி இருக்கிறார் என்று முதல் அத்யாயத்தை திறந்து பார்த்தேன். அண்ணாமலையாரின் கோவில் படம், நான் சிறுவயதில் அப்பா அம்மாவுடன் சென்றதாக நினைவு, தொடர்ந்து படித்தேன். மேல் பூச்சு இல்லாமல் இயல்பான எழுத்து நடையில் எழுதி இருந்தார். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேரடியாக அவர்காட்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவது போன்று படிக்கும் போது உணர்வூட்டியது.

அவர் அங்கெல்லாம் சென்ற போது, பின்னாளில் எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தாரா தெரியவில்லை. நேற்று சென்று வந்த இடம் போல் மிகத் தெளிவாக, கோவில் அமைப்பு, அதில் உள்ள தெய்வங்கள், அதற்கான சிறப்புக்கள்,வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலையில் மலை வலம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். சொந்த கற்பனையில் எழுத்துக்கள் மட்டும் இருந்தது அதில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வருபவை என்பதால் இவராக எதையும் இடைச் சொருக வில்லை என்பது புரிந்தது.

வைணவராக இருப்பவர் ஒரு சிவ தலத்தைப் பற்றி சிறப்பாக எழுதுவது பாராட்டத்தக்கது, கூடவே எங்கெல்லாம் கண்ணன் புகழ் பாடமுடியுமோ அதையெல்லாம் சரியாக கையாண்டு இருக்கிறார் :). போகர், நவபாஷன பழனியாண்டவர் சிலை, பழனி மலை, இராமகிருஷ்ணர், தக்ஷிணேஷ்வரம், சாரதா தேவி, காளி மாதா, கருடன் கதை , மகாபாரததில் சில பகுதிகள், அருணகிரி நாதர் என்று சிறு சிறு கதைகளை சேர்ந்திருக்கிறார். இவருடைய தொடரில் பொருத்தமான படங்களை அங்கங்கே சேர்த்திருப்பது தொடருக்கு கூடுதல் சிறப்பு. ஸ்லோகங்களை தேவையான இடத்தில் இட்டு அதற்கான பொருளுரையும் எழுதி இருப்பதால் கதையோடு சேர்த்து படிக்கும் போது, ஸ்லோகங்களும் கவனம் பெறுகிறது.

முதல் முயற்சி என்பதாக தெரியவில்லை, வளமான கற்பனையும், அனுபவத்தை அதில் சேர்த்து எழுதுவது என்பதை சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளி, மறுபிறவி பற்றிய சிந்தனைகள், அதன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விமர்சனம் செய்யவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால இதுபோன்ற மறுபிறவி கற்பனைகள் பலர் கொண்டிருப்பதால் அதை விமர்சனம் செய்வது, விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன். மற்ற விமர்சனங்களை அவருடைய பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால், அதன் தொடர்பில் எழுதும் போது எழு(த்)தும், கருத்தும் இயல்பாக வெளிப்படும். அது இவரது தொடரில் நிறையவே இருக்கிறது. அடுத்த தொடராக 'ஊனாகி உயிராகி' விரைவில் எழுத வாழ்த்துகள். :)

28 ஜனவரி, 2008

ரோபோ - ஆட்டிவைப்பவரா ? என்ன கொடுமை ஐயா !இந்த இடுகைக்கு தரமான நகைச்சுவை பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

27 ஜனவரி, 2008

பார்பனர்களால் தமிழ் ஏன் தாக்கப்படுகிறது ?

ஒரு சில நடுநிலையாளர்கள் தவிர்த்து (அப்படி யாரும் இல்லை என்று தான் சொல்கிறார்கள்) பார்பனர் அல்லோதோர், பார்பனர் என்று கருத்தாக்கங்கள் எழுகின்றன. பார்பனரல்லோதோர் பார்பனர்களின் கருத்துக்களை மறுப்பதற்கு குறிப்பாக சாதி ரீதியிலான குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர். ஆனால் பார்பனர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏன் பார்பனரல்லாத பதிவர்கள் ( ஒட்டுமொத்தமாக அல்ல) எல்லோரும் பார்பனரையே குறை சொல்கிறார்கள், தாக்குகிறார்கள் ?. பார்பனர்களால் சரியான எதிர்கருத்துக்களை வைக்க முடியவில்லையே பார்பனர்கள் கேட்டுக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார்கள். பார்பனர் யாரும் யாரையும் சாதியைச் சொல்லி திட்டவில்லையே என்ற ஞாயமான கேள்வி என்னைப் போன்ற பல பார்பனரல்லாத பதிவர்களுக்கு ( நன்றி வீஎஸ்கே ஐயா) வரக்கூடும். ஞாயமான கேள்விதானே ?

ஏனைய சாதிக்காரர்கள் குற்றமற்றவர்களா ? யோக்கியவான்களா ? நெஞ்சில் கை வைத்துப் பார்ர்த்துக் கொள்ள வேண்டியதுதான். கிராமங்களில் நடக்கும் சாதித் தாக்குதல் இரட்டை குவளை முறைக் கெல்லாம் பார்பனர் காரணமா ? என்று கேட்டால் பார்பனரை எதிர்பவர் 'ஆம்' என்றே பதில் சொல்லி சப்பைக் கட்டாக வருண அடுக்குமுறையை ஏற்படுத்தியது பார்பனர் அதனால் அவ்வாறு நடக்கிறது என்பர். ஆனால் அவ்வாறு சாதிய கொடுமைகளை செய்யும் சாதிகளைப் பற்றி மறந்தும் விமர்சிப்பது இல்லை. இது ஏன் பார்பனரல்லாத சாதியெல்லாம் சாதிவெறி பிடித்தவர்களே இல்லையா ? இருக்கிறார்கள். இல்லை என்று எவரும் மறுக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் நரிக் குறவர்களை தாழ்வாக சொல்வதைப் பார்த்து இருக்கிறேன். குறவர்கள் தன் சாதியைவிட தாழ்ந்த சாதி என்று நினைத்துக் கொண்டவராக இருக்கிறார்கள்.

மற்ற சாதிக்காரார்களின் சாதிவெறிக்கும் பார்பனர்களின் சாதிவெறிக்கும் வேறுபாடு உண்டு. பார்பனரல்லோதோர் எவரும் வலைப்பதிவு போன்ற பொது இடத்தில் தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று தேவை இன்றி அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. பதிவில் பார்பனரல்லாத பதிவர்களின் சாதி இன்னது என்பதை அவர்களே வெளிப்படுத்தியிருந்தால் அன்றி எவருக்கும் தெரியவராது. மற்றவர்கள் சாதியை பெருமைக்குரிய ஒன்றாக கருதுவதில்லை என்றே நினைக்கிறேன். அசுரன் என்ற பதிவர் 'முத்துராமலிங்க தேவரின் சாதிவெறியைப்' பற்றி பதிவு எழுதினார். அதில் தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு தேவருக்கு வக்காலத்து வாங்குபவர் எவரும் இல்லை. அனானியாக எவராவது தேவருக்கு ஆதரவாக கருத்து சொல்லி இருக்கலாம். ஆனால் வெளிப்படையாக சாதியை உயர்த்திப் பிடித்து பார்பனரல்லோதோர் எழுதுவது விரல்விட்டு எண்ணக் கூடியதே.

பார்பனர்கள் மட்டும் ஏன் தன் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் ? இன்னும் உயர்சாதி மனப்பாண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பார்பனரல்லாத பதிவர்கள் நினைக்கக் கூடும். அதுமட்டுமா ? தமிழுக்கு ஆதராவாக எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பார்பனராகவே இருப்பதால் (இயற்கையாகவே அமைந்துவிடுகிறதா ?) பார்பனர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவற்றை பார்பனிய சித்தாந்தமாகவே நினைக்கிறார்கள். பார்பனரில் கருத்துக்கள் ஞாயாமானதாக இருந்தாலும் பார்பனர் லாபம் இல்லாமல் இதனைச் சொல்லமாட்டார்கள் என்றே நினைத்து பார்பனர் மீதான சாதிய குற்றச் சாட்டுகளாக ஆக்குகிறார்கள். பார்பனர்கள் - பார்பனரல்லோதர் என்று பார்பனர்களே பிரித்துக் இன்னும் வழக்கில் bhramin - NonBhramin என்னபதை வெகு சாதரணமாக புழக்கதில் சொல்லிவருவதால் எதிர்ப்பவர்கள் ஓரணியாக (பார்பனரல்லோதோர்) என இணைவது இயற்கையாக அமைந்துவிடுகிறது.

பார்பனரல்லோதோரை பார்பனர்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் என்பது சாதிய ரீதியாக இருக்க முடியாமல் போவதற்கு காரணம், பார்பனரல்லோதோர் பொதுவில் (ஊடகத்தில்) சாதிகளாக பிரித்துக் கொள்ளாமால் இருப்பதே. தேவர்களோ, வன்னியர்களோ, செட்டியார்களோ குழுக்களாக இருந்து கொண்டு பார்பனரை எதிர்த்தால் பார்பனர்களாலும் பதிலடி கொடுக்க முடியும், தூரதிஷ்டவசமாக பார்பனர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பார்பனரல்லாதவர்களை தாக்குவதற்கு பார்பனர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தமிழை தூற்றுவது (நீஷ பாசை, வடமொழியில் பிறந்ததாக பொய் சொல்வது), தமிழர்கள் தலைவர்களாக நினைப்பவர்களை ( பெரியார், அண்ணா கலைஞர் போன்றவர்களைத்) தாக்குவதன் மூலம் தங்கள் பதிலடியைக் கொடுப்பதாக நினைக்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு எதிராக அமைந்துவிடுகிறது. கருணாநிதியை பிடிக்காதவர்கள் பார்பனர்கள் தாக்குகிறார்கள் என்று கருணாநிதிக்கு ஆதரவாக மாறிவிடுவார்கள். தமிழார்வமே இல்லாத தமிழர்களுக்குக் கூட பார்பனர் தமிழைத் தூற்றினால் பொத்துக் கொண்டு வருகிறது. இதே அரசியலில் தான் தாம் தமிழர், தமிழ் பேசுபவர் என்றாலும் தமிழுக்கு எதிராக நடந்து கொள்வதுதான் தங்களது நிலைப்பாடாக பார்பனர்களும் ஆக்கிக் கொள்கிறார்கள்.

பார்பனர்களின் வழக்கமான பேச்சு 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் சோமாலியாவாக மாறிவிட்டதாக சொல்லும் குற்றச்சாட்டு, இதில் உண்மை இல்லை என்றாலும், இவர்கள் திராவிட ஆட்சி என்று கைகாட்டுவது அண்ணா, கருணாநிதி போன்றவர்களைத்தான், மறந்தும் திராவிடக் கட்சியான அதிமுகவின் ஜெ வையோ, எம்ஜிஆரையோ இவர்கள் குற்றம் சொல்லியதே இல்லை. பார்பனர்களைப் பொறுத்து திராவிடர்கள் என்பது பார்பனரல்லோதோர் என்பதை அவர்களே அழுத்தமாக சொல்லி வருவதால் திராவிடர்கள் ஓரணியில் இருப்பதற்கு அவர்களே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

பார்பனர்கள் - பார்பனரல்லோதோர் அரசியல் லாவனிகளுக்கு முடிவே இருக்காதா ? முன்பெல்லாம் பார்பனர்களின் அரசியல் எவருக்கும் தெரியாது, இயல்பான நடப்பாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் தற்போது இல்லை. பார்பனர் பேச்சின் ஒவ்வொன்றிக்கும் எதோ ஒரு காரணம், அரசியல் இருக்கும் என்பதை பார்பனரல்லோதோர் புரிந்து கொண்டுள்ளனர்.

சீனன் நாள் ஒன்றுக்கு நான்கு வேளை சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவான். மலாய்காரன் தொடர்ந்து ஒருமாதம் வேலை செய்தால் செத்துவிடுவான் என்று இந்த பகுதியில் ஒரு வழக்குண்டு. பார்பனர் - பார்பனர் அல்லோதோர் அவரவரால் ஆன அரசியலை அவரவர் செய்கின்றனர். அதைத்தாண்டி அவர்களால் வரயிலாது. நடக்கும் அரசியல் யாவும் தங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான், எப்போதும் பார்பனர்கள் செய்து கொண்டுகின்றனர். தற்பொழுதுதான் பார்பனரல்லோதோர் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். பார்பனரல்லோதோர் எவற்றையெல்லாம் போற்றவேண்டும் என்பதை பார்பனர்கள் தங்கள் எதிர்பின் வழி பதிய வைத்துவிடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டை மாற்றுவதற்கு தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததை, பார்பனர்களுக்கு எதிரான ஒன்றாக தமிழ் பேசும் பார்பனர்கள் தங்களாகவே எதிர்நிலையை எடுத்துக் கொண்டனர். அவர்கள் அதற்கு வைக்கும் வாதங்களில் கருத்து என்று ஒன்று உண்டென்றால் அது வழிவழி வருவதை மாற்றக் கூடாது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. வழிவழிவருவது ஒன்றை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தொடரக்கூடாது, தொடரவும் முடியாது என்பது அவர்களுக்கு புரியவில்லை என்றே நினைக்கிறேன். வறட்டுத்தனமாக தமிழை பார்பனர்கள் ஒதுக்குவதற்கும், தூற்றுவதற்கும் காரணம் ? தங்கள் மீது சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தும் பார்பனரல்லாதவர்களை, தமிழை தாக்குவதன் மூலம் பதிலுக்கு தாக்குவதாக நினைக்கிறார்கள். மொழிக்கு எதிராக தாக்குதல் தெலுங்கு, கன்னட மொழி மீதும் மற்ற மாநிலங்களில் நடந்துவருகிறது. மற்றபடி தாங்களும் பேசும் 'தமிழ்' மொழியின் மீதான வெறுப்பிற்கான காரணம் மிகக் குறைவே. சிலர் வெறுப்பே இல்லாமல் சூழ்நிலையால் எதிரான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்

பின்குறிப்பு : இங்கு பார்பனர் / பார்பனரல்லோதோர் என்று தனிப்பட்ட எவரையும் சுட்டவில்லை. ஒட்டுமொத்தமாகவும் குறிப்பிடவில்லை. அவ்வாறு எவரும் கருதினால் அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக அவரே உணர்வதற்கு நான் பொறுப்பு அல்ல. இது முழுக்க உளவியல் ரீதியிலான கருத்து. எல்லோருக்கும் தெரிந்ததுதான் புதிதாக எந்த கருத்தையும் இங்கே விதைக்கவில்லை. ஏன் ? என்பதையும் அவற்றிக்கான காரணம் எது என்று எல்லோரும் அறிந்ததையே கொஞ்சம் கோர்வையாக சொல்ல முயன்றேன்.

25 ஜனவரி, 2008

நீ முட்டாள் என்று சொல்ல வருபவனே தாழ்ந்தவன் ! தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள் !

தாழ்வு மனப்பான்மை யாருக்கும் பிறவியிலேயே வருவது இல்லை. அதையும் மீறி வருகிறதென்றால் அதற்கு வாழும் சூழலே காரணம். நம்ம குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தால், வளரும் குழந்தை நாமும் அந்த நிலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுக்கும், உயர்ந்த வகுப்பு என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தில் இவை தான் நடக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ? நாமெல்லாம் இப்படித்தான் இருக்கனும் என்பது விதி என்றே குழந்தைக்கு சொல்லி வருவார்கள், அதற்கு மேல் அது சிந்திக்காது, படிப்பில் கவனம் வைக்காது. பெற்றோர்களின் நிலையை மாற்றவேண்டும், தன்னிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுத்திக் கொள்ளாது அப்படியே வளர்ந்துவிடும்.

தன்னை உயர்த்திக் கொள்ளும் உயர்சாதி சமுகம் தன்னை உயர்த்திக் கொள்ள செய்யும் இன்னொரு உத்தி மற்ற சமூகங்களை தாழ்வாக சித்தரிப்பது. எல்லோருமே புலால் உண்ணும் சமூகத்தில் கூட பாருங்கள், 'அவன் செத்த மாட்டை திண்பவன்' என்று தாழ்வாக சொல்வார்கள், புலால் என்றால் அனைத்தும் புலால் தான் இதில் நாய் கறி என்ன ? செத்த மாடு என்ன ? கோழி என்ன ? எல்லாம் ஒன்று தான். ஆனால் ஒருவன் இறந்த மாட்டை திண்பதை இழிவாக சொல்லிவிட்டால் அவன் இழிவானவனாக காட்டமுடியும், அவ்னுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அவனும் தனக்கு கிடைப்பது இதுதான். நான் தாழ்ந்தவன் தான் என்று நம்புகிறான். உனக்கு கருப்பு நிறம் நீ தாழ்ந்தவன் வெள்ளையர்கள் செய்யும் அரசியல். இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும் அறிவியல் பூர்வமாக அவ்வாறு சொல்வது அறிவான செயலே இல்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். அப்படியும் வெள்ளை இனத்தை உயர்த்திக்காட்ட நிற அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சாதி அடுக்கு சமூகம் அமைக்காப்பட்டதன் நோக்கமும் இதுதான். எல்லோரும் ஒரே மன்னரின் கீழ் வேலை செய்பவர்களாக இருக்கும், ஒருவர் அமைச்சாராக இருப்பார், இன்னொருவர் படைத்தளபதி, இன்னொருவர் ஆயுதம் செய்பவர், மற்றொருவர் உடல் உழைப்பாளி, உடல் உழைப்பை மூலதனமாக வைத்திருப்பவன் தாழ்ந்தவனாம் அறிவை மூலதனமாக வைத்திருப்பவன் எல்லோரைவிட உயர்ந்தவனாம், படைத்தளபதி அவனுக்கு அடுத்த நிலையாம். படிக்காதவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கட்டமைப்பு வந்து அதன் பிறகு அது சாதிய அடிப்படையில் மாறி இருக்கிறது. இன்றைக்கு பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவன், படிக்காதவானாக இருந்தாலும் உயர்வகுப்பினராக இருந்தால் வெட்கம் சிறிது கூட இல்லாதே பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் கலெக்டர் முதலிய பதவியில் இருந்து கொண்டு சென்னை போன்ற பெரும் நகரில் வசிக்கும் மக்கள் கூட தாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் பெருத்த அவமானமாகிவிடுமோ என்ற தாழ்வு மனப்பாண்மையிலேயே இருக்கிறார்கள்.

21 ஆம் நூற்றாண்டு, உலகமயம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்னும் கூட சில உயர்வகுப்பினர் தங்களை மற்றவர்களைவிட அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ளும் உத்தியும் மற்றவர்களை தாழ்வுபடுத்துவது தான். இது பயத்தினால் அவர்களுக்கு ஏற்படும் மனநிலை, மனதில் பயம் உள்ளவன் அலறுவான், ஆனால் அந்த அலறல் தன் பயத்தை வெளியே காட்டிவிடப் போகிறது என்பதற்காக வீரன் போல உறக்க பேசுவான். தன் பயத்தை மறைக்கும் உத்திகளில் ஒன்று அதிகமாகவே குரல் எழுப்புவது. சென்னை போன்ற நகரங்களில் அதிகமாக சத்தம் போட்டு சண்டை போடுவார்கள். வெட்டு குத்து இரத்தம் என்றால் ஒருவரும் அருகில் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் பயமில்லாமல் நடிக்கும் உத்திகள்.

நம்மை தாக்கவரும் ஆயுதம் எதுவோ அதை சரியாக பிடித்தால் எதிரியை நோக்கி தாக்கலாம். நம்மை ஒருவன் தாழ்ந்தவன் என்றால் உன்னைவிட தாழ்ந்தவன் இல்லை என்று திரும்ப சொல்லவேண்டும். நான் உழைத்துவாழ்கிறேன் இதில் தாழ்வு எங்கே இருக்கிறது ? உழைக்காமல் வாழும், சாதிபெருமை பேசும் நீயே தாழ்ந்தவன் என்று சொல்ல பழகிக் கொண்டால் ஒரு தாழ்வுணர்ச்சியும் நம்மை அண்டாது.

சாதிய ரீதியில் ஆன இட ஒதுக்கீட்டிற்கும் முட்டாள் தனமான வாதம் வைக்கப்படும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே சாதியின் பெயரால் இடஒதுக்கீடு அபத்தமாக இல்லை ? என்று முட்டாள்கள் தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொண்டு பேசுவார்கள். எந்த பெயரில் ஒடுக்கி வைத்திருக்கிறோமோ அதே பெயரில் தான் எழுச்சி பெற முடியும் என்பது உலக சித்தாந்தாக ஆகிவிட்டது, இனபுரட்சி வெடிப்பதற்கும் இதுவே காரணம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று பேசும் புத்தமதத்தில் தமிழர்களை தனியாக பிரித்து சலுகை பறிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் இலங்கையில் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். எதைவைத்து ஒடுக்கப்படுகிறோமோ, அதையே ஆயுதமாக வைத்துக் கொள்வது இயற்கையாகவே அமைந்துவிடும். இது நடைமுறைக்கு வரும் போது உண்மையில் எதிரிகள் ஆடித்தான் போய்விடுவார்கள்.

தமிழர்கள், தமிழ் ஒடுக்கப்பட்டால் அதன் பெயரால் தான் எழமுடியும், தாழ்த்தப்பட்டவன் என்றால் ஆமாம் நான் தாழ்த்தப்பட்டவனாக வைக்கப்பட்டிருந்தேன் முன்னேற விரும்புகிறேன் வழியை விடு இல்லையேல் தள்ளிவிடுவேன் என்று சொல்வதுதான் சரியான பதிலடி.

நம்மை ஒருபோதும் எவரும் முட்டாள், தாழ்வானவன் என்று சொன்னால் அரண்டுவிடாதீர்கள், திரும்ப திரும்ப சொல்லிப் பார்ப்பார்கள், அப்படி திரும்ப திரும்ப சொல்லும் போது எதாவது ஒரு சந்தர்பத்திலாவது நம்மை நாமே முட்டாளாக உணர்ந்துவிடுவோம் என்ற தப்பான நப்பாசையே காரணம். உஞ்சவிருந்தி செய்பவனுக்கும் பிச்சை எடுத்து சாப்பிடுவனுக்கும் அதிக வேறுபாடு இல்லை. வெறும் மொழிவேறுபாடுதான். தமிழில் சொல்லும் போது அருவெறுப்பாக இருக்கிறது தாழ்வு மனப்பாண்மை வேண்டாம் என்று பிச்சை எடுப்பதையே வடமொழியில் மாற்றிக் கொண்டு சொல்லும் போது உழைத்து வாழ்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தேவையா ?

இறந்த மாட்டை தின்பதால் தாழ்வு என்கிறானா ? மாட்டின் உடலில் ஓடிய இரத்ததை பாலாக (இறந்த இரத்தம் ?) நீ குடிக்கும் போது இறந்த மாட்டை திண்பதும் கேவலமில்லை. கேள்விக்கு பதில் மவுனமாக இருந்தால் தாழ்வு மனப்பான்மைதான். கேள்விக்கு எதிர்கேள்வி தொடுத்தால் அதன் பிறகு பதிலே தேவையில்லை. வேறு கேள்வியும் பிறகு வரவேவராது.

நம்மை உயர்த்திக் கொள்ள அடுத்தவரை தாழ்த்தத் தேவை இல்லை, நாம் குறையற்றவர் என்று உணர்ந்தாலே போதும், நம்மை நோக்கிவரும் சுடுசொற்களை திருப்பிவிட்டாலே போதும், தாழ்வு மனப்பாண்மை காணாமல் போய்விடும்.

வெட்கமே இல்லாமல் பொய்யை பரப்புவர்கள், அடுத்தவன் உழைப்பை சுரண்டிவருபவர்கள், கைநீட்டி காசுவாங்குபவர்கள், வரலாற்றை திரிப்பவர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மை இல்லாது அதை மறைத்துக் கொண்டு சாதி பெருமை பேசிவரும் போது, நேர்மையாக உழைத்து வாழ்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏன் ?

தாழ்வு மனப்பான்மையா ? அப்படி என்றால் என்ன ?

பின்குறிப்பு : எங்கு படித்தேன் என்பது நினைவில் இல்லை. நினைவில் இருந்து எழுதினேன்.

24 ஜனவரி, 2008

காளியாத்தாவுக்கு என் மீது கோபம்... !!!

சென்ற வாரம் ஊரில் இருந்து எனது தம்பி, பள்ளி விடுமுறைக்காக தமிழகம் சென்ற எனது ஏழுவயது மகளை கொண்டுவந்து சிங்கையில் சேர்த்தான். அவனுக்கு ஊரெல்லாம் சுத்தி காண்பித்தாகிவிட்டது, புறப்படும் முன் ஊரில் சிவில் என்ஜினியராக வேலை பார்க்கும் எனது சிறுவயது நண்பர் ஒருவர் தமிழகத்தில் இருந்து தொலைபேசி வழி , 'பில்டிங் புகைப்படம் எடுக்க வேண்டி இருக்கு ஒரு நல்ல கேமரா செல் போன் ஒண்ணு வாங்கி கொடுத்து அனுப்பு' என்றான். சரி தம்பி இந்தவாரம் ஊருக்கு திரும்புகிறான் வாங்கி கொடுத்து அனுப்புகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன்.

சிங்கையில் இருக்கும் மற்றொரு தம்பியையும் அழைத்துக் கொண்டு, ஊரில் இருந்துவந்தவன் ஊருக்கு செல்லும் முதல் நாள் அவனுடைய இரு பசங்களுக்கு சாக்லேட்ஸ் வாங்கிவிட்டு, நண்பருக்கு கொடுத்தனுப்ப நிரஞ்சன் கடை என்ற அனைவரும் அறிந்த எலெக்டானிக் கடையில் கேமரா வைத்த செல்போன் w810i என்ற செல்லை வாங்கினேன், விலை 247 வெள்ளி, நான் அதே வடிவமைப்பை (மாடல்)வைத்திருக்கிறேன் நன்றாக இருக்கிறது எனவே அதையே வாங்கிக் கொடுக்க முடிவு செய்து வாங்கினேன்.

அதன் பிறகு நானும் என் தம்பிகள் இருவரும் செராங்கூன் சாலைக்கு சென்று ஒரு சிறிய சூட்கேஸ் வாங்கலாம் என்று சென்றோம். போகும் வழியில் வீரமாகாளியம்மன் கோவிலைப் பார்த்துவிட்டு சாமி கும்பிடப் போவதாக இருவரும் சொன்னார்கள், நான் அரை டிராயர் அணிந்திருந்ததால் கோவிலுக்குள் செல்வதற்கு தயக்கம், அதைத்தவிர கோவிலுக்குள் எனக்கென சுண்டல் புளியோதரைத் தவிர்த்து வெறெதுவும் எதுவும் கிடையாது என்பதால் அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு வெளியே நின்றேன்.

ஐந்து நிமிடம் சென்று இருவரும் புளியோதரை சுண்டலுடன் வெளியே வந்து என்னையும் உள்ளே அழைத்தார்கள், சிறிது தயக்கத்திற்கு பிறகு புளியோதரை மற்றும் சுண்டல் போட்ட தூண்டிலால் செருப்பை வெளியே விட்டுவிட்டு அவர்களுடன் கோவில் சுற்றில் (பிரகாரம்) சென்று புளியோதரை மற்றும் சுண்டலை கட்டுகட்டிவிட்டு, வெளியே வந்து வேறொரு கடையில் சூட்கேஸ் வாங்கிவிட்டு வீடு இரவு 9.30 மணிக்கு திரும்பினோம்.

வீட்டுக்கு வந்தவுடன் எனது தம்பி சாக்லேட் மற்றும் செல்போன் வைத்திருந்த பை எங்கே என்று கேட்டான்.

திடுக்கிட்டு 'அடப்பாவி உன்னிடம் தானே கொடுத்தேன்', என்று சொல்ல எங்கு தொல்லைத்தோம் என்றே எவருக்குமே தெரியவில்லை. சாக்லேட் மற்றும் புது செல்போன் திறக்கப்படாமலேயே ஒரு பையுடன் காணாமல் போய்விட்டது. 'நீ சாமியை பழிச்சே... அதனால் தான் போச்சு ' என்று என் தம்பி வேறு என்னை சீண்டினான். போன் வாங்கிவரச் சொன்ன நண்பரின் குணம் தெரியும் என்பதால் 'ம்கும் எல்லாம் ஒன்னுதான்...போனை வாங்கிக் கொடுத்தும் நண்பரிடம் காசு வருமான்னு தெரியாது...உண்டியலில் போடுவது போன்றதுதான்'...என்றேன்.

நண்பருக்கு வேறொன்று வாங்கிக் கொடுத்து அனுப்ப போதிய நேரமும் இல்லை. ஏனென்றால் காலையில் 6 மணிக்கு அவன் சென்னை செல்வதற்கு விமான நிலையம் செல்ல வேண்டி இருந்தது. பொருட்களை தொலைத்தற்காக இருவரையும் மாறி மாறி
திட்டி தீர்த்துவிட்டு மறுநாள் சென்ற இடமெல்லாம் சென்று விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன், நாங்கள் செல்போன் வாங்கிவிட்டு சென்றது கோவில் மற்றும் சூட்கேஸ் கடை மட்டும் தான், தம்பியை மறுநாள் காலையில் ஊருக்கு அனுப்பிவிட்டு, விசாரிக்கப் போனேன்.

எங்கு காணாமல் போய் இருக்கும் ? புளியோதரை சாப்பிடும் போது கீழே வைத்துவிட்டு மறந்து விட்டு வந்திருக்க வேண்டும், அல்லது சூட்கேஸ் கடையில் விட்டு வந்திருக்க வேண்டும்,

எதற்கும் முதலில் கோவிலில் சென்று கேட்கலாம் என்று சென்று கேட்டேன்,

முகப்பில் அபிஷேக டிக்கெட் விற்பவரிடம் "சார்...நேற்று இரவு 9 மணிக்கு கோவிலில் ஒரு பையை விட்டுச் சென்றுவிட்டேன், அதனுள் புது செல்போன் பாக்ஸ் மற்றும் சாக்லெட்ஸ் இருக்கும்..."

மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு,

"ஆபிசரைப் பாருங்க..." என்று அழுத்தாமாக சொன்னார்

அங்கு இருப்பது மனதுக்கு உறுதியானது,

"உங்கள் பை தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?" கேட்டார்

"அதனுள் இருந்த பொருள்களைக் குறிப்பிட்டு சொன்னேன்"

அதன் பிறகு முகவரி, தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு

"இங்கு அதை எடுத்து கொடுத்தவரே....யாரும் கவனித்துவிட்டார்கள் என்று கருதி வேறொருவரை அனுப்பி வாங்கிவர முயற்சிக்கலாம். உள்ளே என்ன இருந்தது பொருளின் மதிப்பு என்ன என்று கேட்டார்."

வெவரமானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எண்ணி,

உள்ளே செல்போன் பாக்ஸுக்குள் விலை ரசீது 247 வெள்ளி என்றிருக்கும் பாருங்கள் என்றேன். பாக்ஸை பிரித்து பார்த்து....சரி என்று செல்லி கையில் அந்த பையை கொடுத்துவிட்டார்.

அப்பறம் மனசு கேட்கல...

பாக்கெட்டில் இருந்து 20 வெள்ளியை எடுத்து கோவில் நன்கொடைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தேன். ரசீதுகொடுத்தார்.

"உங்களுக்கு நல்ல நேரம்...உங்க காசு நல்ல காசாக இருப்பதால் திரும்ப கிடைக்குது....இங்கே தொலைத்தேன் என்று வருபவர்கள் அனைவருக்குமே தொலைந்து போனவை கிடைப்பது இல்லை"

கோவில் அலுவலரிடம் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

"ஆத்தாவுக்கு 20 வெள்ளி கூலி செலுத்தியாச்சு......எனக்கு யாரும் சும்மா உதவி செய்ய வேண்டாம்...நன்றி கடன் வேண்டாம்" - இது என் தம்பியிடம் போன் செய்து தொலைந்தது கிடைத்ததாக நான் சொன்ன போது சொல்லியது.

தொலைந்து போனது கிடைக்கும், கிடைக்காமல் போகும், பொருள் திரும்ப கிடைப்பதற்கும் வேண்டுதலுக்கும் தொடர்பே இல்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் கோவில் தொடர்பு இருந்தால், இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

23 ஜனவரி, 2008

புத்தாண்டாக மாறிய பொங்கல் நாள் !

தமிழனின் தனித்தன்மையை காத்துவருவதில் பொங்கல் பண்டிகை முதன்மையானது, விவசாயம் செய்து 'உழைப்பில்' வாழ்பவர்கள் என்பதை உலகிற்கு அறிவிக்கவும், ஐம்பூதங்களுக்கு நன்றி சொல்வதற்க்காகவும், தனக்காக உழைக்கும் கால்நடைகளை போற்றவும் பொங்கல் பண்டிகையை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கொண்டாடி வருகின்றன. இந்த பொங்கலில் இருந்து கூடுதல் சிறப்பாக தமிழறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று கலைஞர் அரசு பொங்கல் நாளை தமிழ் ஆண்டுபிறப்பின் முதல் நாள் அதாவது தமிழ் புத்தாண்டு தை திங்கள் 1 ஆம் நாள் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

செம்மொழி அறிவிப்பிற்கு பிறகு தமிழ்மொழியையும் மக்களையும் பொறுத்து இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது, சீனர்கள் அவர்களது புத்தாண்டை கோலகலமாக கொண்டாடுவர், இது வரை சித்திரையில் பிறந்த தமிழ் புத்தாண்டுகள் கோகுலாஷ்டமி போன்ற இந்து பண்டிகையாகவே கொண்டாடப்பட்டது, தனிப்பட்ட சிறப்பு எதுவுமே இருக்கவில்லை. பண்டிகையை கொண்டாடும் விதமும் ஆரிய / வடமொழி வழிபாட்டை ஒட்டியே அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ் புத்தாண்டிலும் கோவிலுக்குச் செல்வோருக்கு வடமொழி அருச்சனையே செய்து கொடுக்கப்பட்டது.

பொங்கலை தமிழ்புத்தாண்டாக அறிவித்ததன் மூலம், இனிவரும் தமிழ் புத்தாண்டை மதச் சார்பற்று அனைத்து தமிழர்களுமே கொண்டாடுவதற்கு வழிவகுக்கும், சீனர்களில் பல்வேறு மதத்தினர் அவர்களது புத்தாண்டை சேர்ந்தே கொண்டாடுவர். முதன் முறையாக அனைத்து தமிழ்மக்களும் கொண்டாடும் வகையில் பொங்கல் புத்தாண்டாக மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் தங்கள் வழியில் தமிழ்புத்தாண்டை கொண்டாட முன்வருவது மட்டுமே, தமிழர்களுக்கான ஒரே பண்டிகை என்று சொல்வதற்க்கு ஏதுவாக இருக்கும்.

வேற்றுமொழி குறிப்பாக வடமொழி அழுக்குகளை தாங்கிக் கொண்டு இதுதான் தமிழன் பண்பாடு, இவை(மட்டும்)தான் தமிழ் என்ற கட்டமைப்புகளையும் தூளாக்கிவிட்டு தமிழ்தாய் புதுப்பொலிவுடன் இருப்பாள், அதற்கு இது ஒரு முதன்மையான நிகழ்வு. தமிழ்பற்றாளன் என்பதால் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்கிறேன். இந்த நாள் இனிய நாள்.

வழக்கம் போல் 'கூடவே கூடாது......வழிவழி வருவது மாற்றக்கூடாது' என்று வரும் வறட்டு தவக்களைக்களை அவர்கள் அணிந்திருக்கும் மேல் (நாட்டு) ஆடைகளை களைந்துவிட்டு பஞ்சகச்சத்துடன் வந்து கருத்துச் சொல்லச் சொல்லுவோமாக. :)

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

ஜெயலலிதாவின் கனவுக்கு புத்துயிர் ! - மோடி எபெக்ட்

பரஸ்பரம் சொறிந்து கொள்ள ... அறிந்து கொள்ள மோடி மற்றும் ஜெ வின் சந்திப்பு நடந்தாலும், 42 வகை உணவுகளுடன் ராஜ விருந்து சாப்பிட்டுக் கொண்டே தமிழகத்தில் இந்துத்துவத்தை மேம்படுத்தும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் போல் இருக்கிறது. மோடி வந்து சென்ற ஒரே வாரத்தில் இராமேஸ்வரத்தில் பசுமாடுகள் இறந்ததை பிரச்சனை ஆக்கி கருணாநிதி பதவி விலகவேண்டும் என்று அறிவித்தார் ஜெ.

அதனைத் தொடர்ந்து, நேற்று "சேது சமுத்திர திட்டத்தை இராமர் பாலத்தை இடிக்காமல் செயல்படுத்த அறிவிக்கவேண்டும்' ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதாம் பாலம் என்றதை கர்பனையாக இராமர் பாலம் என்ற பெயரில் புளுகிவருவதை நன்கு அறிய(பிரபல) படுத்தும் நோக்கில் தொடர்ந்து இராமர் பாலாமாகவே சித்தரிக்கப்படுகிறது, வால்மிகி இராமயணப்படியே இராமர் பாலம் இராமன் இலங்கையில் இருந்து திரும்பியதும் அமிழ்த்தி அழிக்கப்பட்டதாக கதைகள் இருப்பதை சமய ஆர்வலர்கள் காட்டி மணல் திட்டு இராமர் பாலம் என்று சொல்வதை மறுத்து வருகின்றனர்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப செய்யும் மேசடிகள் இவை, 'இராமர் பாலம்' இருப்பதாக சொல்லி தடை வாங்குவதன் மூலம் பாமரர் நம்பிக்கையை அப்படியே கட்டிக் காத்து, இந்து மூட நம்பிக்கைகள் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கும் அதன் மூலம் ஆதிக்க சக்திகள் தங்கள் பலத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கும் செய்யப்படும் மாற்று ஏற்பாடுகள் இவை. இதெற்கெல்லாம் ஏன் ஜெ துணை போக வேண்டும் ?

ஜெவின் இந்துத்துவ அரசியல் உயர்சாதி மனப்பான்மையால் வந்தது என்று சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் இந்துராம் முதல் இந்திய பிரதமராக இருந்தவர்களின் தலையீட்டையும் காதில் வாங்காமல் பெரியவாளையும் சின்னவாளையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியவர். அதன் பிறகு இன்றுவரை ஜெவுக்கும் - காஞ்சி நிறுவனத்துக்கும் அதுகுறித்தான சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஜெ-வைப் பொறுத்தவரை லாபம் இல்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டார். ஜெ-வுக்கு உயர்சாதி பாசம் / வெறி இருந்திருந்தால் அன்று 13 மாதத்தில் வாஜ்பாய் ஆட்சிக்கு செக் வைத்து மத்திய அரசை கவிழ்க்கும் நிலைக்கு சென்றிருக்க மாட்டார். ஜெ மாநில கட்சிக்கு தலைவி முதலமைச்சாராக இருந்தவர் என்ற போதிலும் தேசிய அரசியலில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாகவேண்டும், பிரதமர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அதற்கு அவர் எடுத்த முன்றாவது அணி முயற்சியில் இவரது தன்னிச்சையான செயல்பாடு மற்ற மாநிலதலைவர்களுக்கு பிடிக்காததால், அதில் இருந்து சத்தமில்லாம் வேலைக்கு ஆகாது என்று விலகிக் கொண்டார்.

தற்போது அவரின் தேசிய அரசியல் மற்றும் பிரதமர் கனவுக்கு கைகொடுக்கும் கட்சியாக தெரிவது பிஜேபிதான். பிஜேபியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்குக்கு ஈடாக வளர்ந்துவிட்டால் பிரதமர் நாற்காலியை கைப்பற்ற முடியும் என்று ஜெ நினைக்கக் கூடும். அதற்கு அடி எடுத்துவைப்பதற்காகத்தான் இந்துத்துவ அரசியலை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆரின் அதிமுகவிற்கு தலைமை ஏற்பதால் தமிழகத்தில் ஜெவின் அரசியலுக்கு கவலை இல்லை. தேசிய அரசியலில் இறங்க காங்கிரஸ் அல்லது பிஜேபி கைகோடுக்க வேண்டும். காங்கிரசாருக்கு ஜெவின் போக்கு தெரியும் அதனால் அவர்கள் முன்வரமாட்டார்கள். பிஜேபி ? ஏற்கனவே சூடுபட்டாலும் உயர்சாதி பாசம் மற்றும் செலக்டீவ் அம்னீசியாவால் தமிழகத்தில் ஜெ வின் துணை இல்லாமல் வளரமுடியாது என்பதால் வலியவே ஜெவின் தயவை எதிர்ப்பார்ப்பார்கள். இது ஜெவை பொறுத்தவரை லாபமே.

எம்ஜிஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் வளர்ந்தது போலவே, இந்துத்துவ அரசியல் ஆதரவு நிலையால் தேசிய அளவில் வளரமுடியும், பிரதமராக முடியும் என்ற தன் நம்பிக்கை (கனவு) மோடியின் வெ(ற்)றிக்கு பின் ஜெ. உறுதி செய்து கொண்டுள்ளார். மோடியின் வருகை ஜெ-வின் தேசிய அரசியல் ஆசைக்கு தீணி போட்டு இருக்கிறது.

22 ஜனவரி, 2008

50லும் ஆசை வரும் ...

50லும் பலருக்கு ஆசை மட்டுமல்ல அதில் ஒரு சிலருக்கு பேராசையும் வரும் என்பதை கீழ்கண்ட செய்தியை படித்தவுடன் தான் தெரிந்தது.

******

மோசடி இ மெயிலால் பல ஆயிரம் பண மோசடி
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 22, 2008

நாகை: நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மோசடி இ- மெயிலை நம்பி பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவர் மஸ்கட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ 80 ஆயிரம்) அனுப்பினால் ரூ 8 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்படிருந்தது.

8 கோடி வருகிறதே என்று ஆசைப்பட்ட பாலசுப்பிரமணியன் அந்த இ -மெயிலில் குறிப்பிட்ட படி ரூ 80 ஆயிரத்தை வங்கி மூலம் நைஜீரியாவில் உள்ள ஆப்ரிக்கன் டெவலப்மெண்ட் வங்கிக்கு செலுத்தினார்.

இதையடுத்து உங்களுக்குரிய ரூ 8 கோடி பணம், மயிலாடுதுறையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள உங்களது கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பதில் வந்தது.

இதனால் குஷியானார் பாலசுப்ரமணியன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகியும் குறிப்பிட்டபடி ரூ 8 கோடி பணம் வரவில்லை. அதனால் மீண்டும் இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை.

இதனால் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து யாரிடம் புகார் கொடுப்பது. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் பாலசுப்பிரமணி பெரும் குழப்பமடைந்துள்ளார்.

- தட்ஸ்தமிழ்

*********

சோமாலியா, கென்யா, நைஜீரியா என எல்லா "யா" க்களும் பசி, பட்டினி பஞ்சம் என்று ஆப்பிரிக்காவின் வறுமை பெருமைகளை பறைசாற்றும் தேசமாக இருக்கும் போது...இதெல்லாம் ஓரளவு தெரிந்தே அங்குள்ள நைஜீரியாவில் இருந்து கோடிக்கனக்கான பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் இலவசமாக கிடைப்பதாக எதிர்ப்பார்த்து செயல்பட்டவர் எவ்வளவு பேராசைக்காரராக இருப்பார் ?
:)))

அவர் ஏமாந்ததற்கு ஐயோ பாவம் என்று சொல்ல முடியுமா ? பேராசை பெருநஷ்டம் சொல்ல முடியுமா ? அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களின் பேராசையே ஏமாற்றுபவர்களின் மூலதனாமாகிவிடுகிறது.

கோமாதாவின் ஆசிபெற ஜெ முயற்சி !

மாட்டை புனிதம் என்பீர்,
மனிதனை ஈனன் என்பீர்.

மாட்டின் சிறுநீர், சாணி எல்லாம் புனிதம், அதை அகற்றுபவன் தீண்டத்தகாதவன்.

இராமேஸ்வரம் கோவிலில் பசுமாடு பட்டினியால் செத்துவிட்டதாம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகவேண்டுமாம். ஜெயலலிதா அம்மையார் தான் இவ்வாறு சொல்கிறார்.

இந்த அம்மையார் ஆட்சியில் இவர் கும்பகோணத்தில் புனித நீராட சென்ற போது, இவர் சென்ற ஒரே காரணத்திற்காக நெரிசலில் சிக்கி இறந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று இவர் பதவி விலகினாரா ? இந்த அம்மையார் ஆட்சியில் வெள்ள நிவாரணம் வழங்குகிறேன் என்று அறிவித்துவிட்டு அதை முறைப்படி செய்யாமல் நெரிசலில் சிக்குண்டு இறந்த பெண்களுக்கும், அவர்களின் குடும்பங்கள் சிந்திய கண்ணீருக்கு பொறுப்பேற்று இவர் பதவி விலகினாரா ?

ஜெ மேலும் சொல்கிறார் "வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது."

வாயுள்ள ஜீவன்கள் வறுமையில் வாடி, பட்டினிச்சாவை சந்தித்து செத்துவிழுந்த போது பொதுமக்களே பொறுக்க முடியாமல் கஞ்சி தொட்டி திறந்த நிகழ்வு இவரது ஆட்சியில் தான் நடந்தது, பட்டினியில் இறந்த வாய் உள்ள ஜீவன்கள் குறித்து கவலைப்பட்டு தனது ஆட்சியில் இழிநிலையா என்று எண்ணி பதவி விலகினாரா ?

இராமேஸ்வரம் கோவிலில் இருக்கும் அர்சகர் அடிக்கும் கொள்ளைகள் உலக பிரசித்தம், அவர்களிடம் உள்ள பணத்தில் ஆஸ்திரேலேயாவில் உள்ள மாடுகள் அனைத்திற்கும் தீனி போட்டு மேலும் கொழுக்க வைக்க முடியும், இராமேஸ்வர கோவில் மாடுகளுக்கு தீனி போடுவதா சிரமம் ? இறந்த மாடுகளை காரணம் காட்டி, கருணாநிதியை குறைச் சொல்லி அரசியல் நடத்தும் அளவுக்கு ஜெயலலிதாவின் நிலை இறங்கிவிட்டதா ? அல்லது 'புனித பசு' இந்துத்துவ கருத்தை வெளிப்படுத்துகிறாரா ? இரண்டும் தான்.

"இராமேஸ்வரத்தில் ஏற்கனவே அடிக்கிற கொள்ளை போதாது என்று எங்கள் இரத்தத்தையும் பாலாக உறிஞ்சுகிறார்களே...!" என்று பசுமாடுகள் தானாகவே பட்டினி கிடந்து இறந்திருந்தாலும் வியப்பு இல்லை. ஏனென்றால் அவை கோவில் மாடுகள், அவற்றிக்கு தெய்வீகத்தன்மை உண்டு. :)))))))

மாடு செத்துவிட்டால் பதவி விலகனும், பன்றி பேருந்தில் அடிபட்டு இறந்தால் தேசிய விடுமுறை அறிவிக்கனும், ஜெ அரசியல் செய்யவதற்கான சரக்கு தீர்ந்துவிட்டது போல் இருக்கிறது.

21 ஜனவரி, 2008

புள்ளையில்லாதவன் சொத்துக்கு தெருவில் போகிறவனெல்லாம் வாரிசு !

தமிழக அரசியலில் எம்ஜிஆர் வாரிசுரிமைப் போர் பகிரெங்கமாக வெடிக்கிறது. இராமவரம் தோட்டத்தில் ஜெ, "நான் தான் உண்மையான வாரிசு மற்றவர்களெல்லாம் புற்றீசல்கள்" என்றார்.

இதைக்கேட்டு விஜயகாந்த் உடனடியாக மறுப்பு தெரிவிக்காவிட்டாலும் சரத் முந்திக்கொண்டு, எம்ஜிஆர் எப்போது ஜெ வை தன் வாரிசு என்று அழைத்தார் ? என்று கேள்விகேட்டார். அதைத் தொடாந்து விஜயகாந்த்,

"எம்.ஜி.ஆர் யாரையாவது வாரிசு என்று சொன்னாரா. தொண்டர்கள், ரசிகர்கள் தான் என்னுடைய வாரிசு என்று தான் எம்.ஜி.ஆர் சொன்னார்.

மகாத்மா காந்தி, எனது அரசியல் வாரிசு நேரு, ஆன்மீக வாரிசு வினோபா என்று சொன்னார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் தனக்கு வாரிசு என யாரையும் சொல்லவில்லை.

நாட்டு மக்கள் ஏமாறக்கூடாது என்பதால் தான் அவர்கள் வாரிசு என்று யாரையும் சொல்லவில்லை.

தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லும் அவர் (ஜெயலலிதா), 1987ம் ஆண்டுக்கு பின்னர் எப்போதாவது ராமாவரம் தோட்டத்துக்கு சென்றாரா. குளத்தின் தாமரையின் வாசனை தவளைக்கு தெரியாது. ஆனால் எங்கிருந்தோ வரும் வண்டுக்குத்தான் தெரியும். இதுபோல எம்.ஜி.ஆர் என்ற தாமரை, வண்டாகிய விஜயகாந்துக்கு தான் தெரியும்.

நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று எப்போதுமே சொன்னதில்லை. ஆனால் என்னிடம் உள்ள தாராள குணத்தை பார்த்து எம்.ஜி.ஆரின் வாரிசாக மக்கள் என்னை நினைக்கிறார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக என்னை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்" என்றார். - உட்டாலக்கடி எப்படி இருக்கு, கேப்டனுக்கு அரசியல் பக்காவாக வருது !
:)))

ஜெயலலிதா எம்ஜிஆரின் ஜோடியாக நடித்தார், விஜயகாந்த் ?

பாமகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. திமுகவிற்கு வாரிசு பிரச்சனை இல்லை. பிரச்சனையே வாரிசுகள் தான்:)). இந்திய, தமிழக கட்சித் தலைவர்கள் பெனாசீரை பின்பற்றி "தனக்கு பின் கட்சியின் வாரிசு இவர்" என்று அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கு குழப்பம் வராது. கட்சியை லிமிடெட் கம்பெணி ஆக்கி பதிவு செய்துவிட்டால், தானாகவே வாரிசுகளுக்கு போய்ச் சேரும், உயில் கூட தேவை இல்லை. அடுத்து பங்கு சந்தையில் கூட விடலாம்

:)

18 ஜனவரி, 2008

ராமவரம் தோட்டத்தில் சீதையின் காலடி ! மற்றும் சில கேள்விகள் !

தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக, 12 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் காலடி ராமவரம் தோட்டத்தில் பட்டு இருக்கிறதாம். அதனால் ராமவரம் தோட்டத்தில் உள்ள கட்டிடங்களெல்லாம் புதுப் பொழிவு பெற்றதாக செய்திகள் அறிவிக்கின்றன.

எம்ஜிஆர் இறந்த பிறகு மறக்காமல் தேர்தல் கூட்டத்துக்கு கூட்டம் எம்ஜிஆருக்கு நாமம் போட்டவர் ( வாழ்க புரட்சித்தலைவர் நாமம் !) , எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்திற்கு கொடுத்த மதிப்பு அளவுக்கு கூட எம்ஜிஆர் மீதோ, எம்ஜிஆர் கொள்ளைகள் மீதோ எந்த பற்றுதலும் வைக்கவில்லை என்றும், அமைச்சர்கள் 'எம்ஜிஆர்' பெயரைச் சொல்வதைக் கூட ஜெ விரும்பவில்லை என்றும் பத்திரிக்கை செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதெல்லாம் பொய், பித்தலாட்டாம் என்று காட்ட எம்ஜிஆர் மீது பாசம் மழை பொழிந்து நான் தான் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு, மற்றவை எல்லாம் புற்றீசல் என்று, போயாஸ் தோட்டம் சென்று முழங்கி இருக்கிறார் ஜெ.

எம்ஜிஆர் பேரைச் சொன்னால் பாமரர் ஓட்டு நிச்சயம் என்று உணர்ந்த விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றும், எம்ஜிஆர் தேர்தலுக்கு பயன்படுத்திய வேனை வாங்கி தானும் பயன்படுத்தி எம்ஜிஆரின் திடீர் வாரிசாக தன்னை முன்னிறுத்த முயன்றார். அதில் கனிசமான அளவு ஓட்டுக்களைப் பெற்றார். அதை மதுரை இடைத்தேர்தல் ஓரளவுக்கு காட்டியது. இதே பாணியில் சரத்குமாரும் எம்ஜிஆர் வாரிசு ஆகிவிட, உடனே ஜெ வை டென்சன் ஆகிவிட, "என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா ?" என்று கேட்டு நம்ப முடியாமல் ஒருவாரம் ஒப்பாறி வைக்கும் எம்ஜிஆர் ரசிகர்களின் ஓட்டு எங்கே திசைமாறிவிடப் போகிறது என்ற கவலையில் தான் ஜெ ராமவரம் தோட்டத்துக்கு வரம் கொடுத்திருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

அறிஞர் அண்ணா ஆண்டதோ இரண்டு ஆண்டுக்கும் குறைவே, கலைஞர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு இருக்கிறார். இன்னும் 'என்னுடைய (கலைஞரின்) பொற்கால ஆட்சி மீண்டும் வர வாக்களியுங்கள்' :) என்று அவரால் சொல்ல முடியாமல் தேர்தலுக்கு தேர்த்தல் ஏன் அண்ணாவை, பெரியாரை முன்னிறுத்த வேண்டும் ? தன்னடக்கமா ? துணிவின்மையா ?

எம்ஜிஆரை ஜெயலலிதா புறக்கணித்தாலும் அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க நினைத்தார் என்ற வகையில் பார்க்கும் போது ஜெ செய்தது ஓரளவு சரிதான் என நினைக்கிறேன். எம்ஜிஆர் புறக்கணிப்பு - ஜெவின் துணிவா ? அல்லது ஆணவமா ?

ஜெ-வை சீதையுடன் ஒப்பிடலாமா - அவருக்கு திருமணமே ஆகவில்லை என்று யாரும் வம்புக்கு வரவேண்டாம். :) தலைப்பு ராமவரம் - சீதை காலடி என்றது '12 ஆண்டுகள் கழித்த' நிகழ்வாக இருப்பதால் இலக்கிய சுவைக்காக மட்டுமே.

17 ஜனவரி, 2008

தமிழ்நாட்டில் 'சோ' மட்டும் தான் அறிவாளி !

பாஜக-அதிமுக-தேமுதிக கூட்டு சேர்ந்தால் '40க்கு 40' கிட்டைக்குமாம். சொன்னவர் மூத்த பத்திரிக்கையாளர் சோ.

பாஜக தமிழகத்தில் ஒரு 0, சட்டமன்ற தேர்தலில் ஒரு இடம் பெற்ற தேமுதிக பார்லிமெண்ட் தேர்தலைப் பொருத்து மற்றொரு 0, அதிமுகவுக்கு 4 எம்பி சீட் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், சோ கணக்கு பட்டி 4 + 0 + 0 = 400 சீட் கொழிக்கனுமே. கணக்கை தவறாக சொல்கிறாரோ ? :)

குரங்கு அப்பம் பிடும் கதை மாதிரி இருக்கிறதா, இதெல்லாம் சாணக்கியத்தனம். செல்வாக்கு இல்லாத பாஜக மற்றும் பார்லிமெண்ட் தேர்தலை சந்திக்காத தேமுதிகவுக்கு ஜெவின் செல்வாக்கை பிரித்து கொடுக்கும் முயற்சியாக சொல்கிறார். அறிவாளி தானே ?

சென்னை: பாஜகவுடன் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருமான சோ கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் சோ பேசுகையில்,

தமிழக அரசுக்கு பாமக அளிக்கும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நிதி நிர்வாகம் படுமோசமடைந்துள்ளது. திமுகவில் யாருக்கு எந்த பதவி கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனிமொழிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கூட இது தெரியாது.


லக்கி லுக் ஐயா, திமுக அரசு இவ்வளவு சிரமப்படுகிறது என்று இந்த அளவுக்கு கவலைப்பட்டு இருக்கிறீரா ?

தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும்.

ஆனால் இதற்கு ஜெயலலிதா முன்வருவாரா என்று தெரியாது. விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் அவரது கட்சி திமுக, அதிமுக ஓட்டுகளை பிரித்து 3வது இடத்துக்கு மட்டுமே வர முடியும்.


போயாஸ் தோட்டத்து கதவு திறந்தபிறகு தான் பாஜக மூச்சுவிட முயற்சிக்கிறது என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்கிறார். 'சோ' அறிவாளி தானே ? இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும். 4+0+0 = 40 ? :), தமிழகம் என்ன பாண்டியில் கூட கூட்டணி வைக்கலாம்.

இந்தியாவில் இருப்பது போல கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ராஜீவ்காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிரூட்டினால் தீர்வு ஏற்படும்.

நார்வே தூதுக்குழுவால் சாதிக்க முடியாத ஒன்றை, நாலே வரியில் சாதிக்க தீர்வு கூறும் 'சோ' அறிவாளி என்றால் நம்பித்தான் ஆகனும்.

பாரத ரத்னா விருது பெற வாஜ்பாய் தகுதியானவர்தான். ஆனால் அதை அத்வானி பிரதமரிடம் மட்டும் கூறி இருக்க வேண்டும். இப்படி வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டியதில்லை.


பாஜக தன்னிடம் இது குறித்து ஆலோசிக்க வில்லை என்ற வருத்தத்தைக் கூட 'ஏன் இவ்வாறு செய்யவில்லை ?' என ஆழ்ந்து யோசிக்கும் படி சொல்லி இருக்கிறார் சோ என்கிற சொக்க தங்கம்.

பிரதீபா பட்டீலை விட அப்துல்கலாம் கையால் விருது வாங்கியிருந்தால் அது கெளரவமாக இருந்திருக்கும்.

போயும் போயும் காங்கிரஸ் தேர்ந்தெடுத்த ஒரு பொம்பள கையாள முன்னால் பிரதமர் விருதுவாங்குவதா ?அப்துல் கலாம் என்றால் பேச்சிலருக்கு பேச்சிலர் பார்டி கொடுத்த கெளரவாமாக மாதிரி இருந்திருக்கும். ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும் என்பதைக் கூட பெரும்தன்மையோட கெளரவத்துடன் தொடர்பு படுத்தி சொல்ல ஒரு பயலுக்கும் திறமை இருக்கிறதா ? 'சோ' என்றால் சோ தான்

கடந்த அக்டோபர் மாதமே துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைத்திருந்தேன். குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கும் இந்த விழாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் மோடிதான் முதல்வர் என்பது எனக்கு முன்னமே தெரியும் என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். சோ தீர்க்கதரிசி என்று காட்டுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கிறதா ?

காமராஜர் அரங்கில் விழா நடத்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் மூலம் விழாவுக்கு இலவசமாக விளம்பரம் தேடித்தந்த பல்வேறு அமைப்புகள், கட்சிகளுக்கு நன்றி.

துக்ளக் மூலம் நான் கூட கருணாநிதிக்கு விளம்பரம் தான் செய்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு கூலாக தனது நிலையை மறைமுகமாக சொல்லும் ஜீனியஸ் இருக்கிறார்களா ?

சோ - ஒன்லி ஒன் அறிவாளி இன் டமில் நாட் !

16 ஜனவரி, 2008

புத்தாண்டுத் தீர்மானம்.

வழக்கமாக ஆங்கில புத்தாண்டுக்குத்தான் தீர்மானம் போடுவோம். சரியாக இரவு 12:00 மணி தாண்டியதில் இருந்து பழக்கத்தையெல்லாம் மாற்றிக் கொள்ளனும். சரியாக 12:00 மணி ஆவதற்குள் சிலர் BAR ல் இருந்து வெளி ஆகிவிடுவார்கள். :) புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் இந்த ஆண்டாவது இந்த சனியனை விடனும் என்று தீர்மானிப்பார்கள். தீர்மானம் போடுபவர்கள் பலர் இருந்தாலும் தீர்மானம் தீர்மானமாக சிலருக்குத்தான் கட்டுப்படும்.

1. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வலையில் எழுதுவதை குறைக்க வேண்டும். (எப்போதாவது இது போன்ற விபரீத எண்ணங்கள் ஏற்படுவது உண்டு)

2. சின்னப்புள்ளத்தனமாக மொக்கை பின்னூட்டங்களை எவருக்கும் போடக் கூடாது. (இந்த எண்ணம் அடிக்கடி தோன்றினாலும் கட்டுப்பாடு இல்லை)

3. கருத்து செறிவுடன் எழுதப்பட்ட கட்டுரைகளை படித்து அதனை பலருக்கும் தெரியபடுத்த வேண்டும் (மேற்கண்ட இரு காரணங்களால் நேரம் கிடைக்கவில்லை)

4. நாம எழுதுவதால் எதும் மாறிடப் போறதில்லே அரசியல் பற்றி எழுதக்கூடாது. (தட்ஸ்தமிழ் படிப்பதை நிறுத்தினால் குறைக்க முடியும்)

5. திரைவிமர்சனம் எழுதக்கூடாது ( சிங்கையில் வெளியாகும் படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் இருக்கனுமே )

6. ஜிடாக்கில் பேசுவதை தவிர்க்க வேண்டும் ( அலுவலகத்தில் யார் ஜிமெயிலை ப்ளாக் பண்ணிவிடுவாங்க ?, நான் தான் சிஸ்டம் அட்மின், செய்தால் நான் தான் செய்யனும், செய்துவிடுவேனா ?)

7.அலுவலகத்தில் அலுவலக வேலைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் ( நான் மட்டும் தான் அப்படி என்று நினைப்பை ஏற்படுத்த எதாவது வழி இருக்கா ?)

8. வீட்டுக் சென்றால் கணனியை திறக்கக் கூடாது அப்படியும் தேவையின் காரணமாக திறந்தால் மறந்தும் www.thamizmanam.com பக்கம் சென்று விடக் கூடாது ( தமிழ்மணத்தில் போட்ட பதிவு கீழே போய்விட்டதா என்று தெரிந்து கொள்வதில் என்ன தப்பு ?)

இப்படியெல்லாம் வெளியில் சொல்லாமல் மனதுக்குள் சென்ற ஆண்டு புத்தாண்டின் போது தீர்மானம் செய்தேன் ஆனால் ஒன்றுமே நடக்கல. அப்பறம் இந்த ஆண்டுக்கு மட்டும் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா ? இருந்தும் மனசு கேட்கல, இந்த ஆண்டு யாருக்காவது உதவி செய்யனும் என்று நினைத்தேன். ஒரு சின்னப்பையன் உதவி என்று கேட்டார், 'நீங்கள் கேட்பதை உதவுவதில் நான் கர்ண பிரபுத்தான் மறக்காமல் செய்துவிடுகிறேன்' என்று வாக்கு கொடுத்தாகிவிட்டது. என்ன உதவி என்று வெளியில் சொல்லி சொல்லிக் காட்டினால் நன்றாக இருக்கும் ? அப்படியும் தெரிந்து கொள்ள விரும்பினால் , நீங்கள் நாலுபேருக்கு நல்லது செய்ய நினைக்கிறவர் என்றால் கண்டிப்பா பாருங்க.

இன்னும் ஒரு உதவி மீதம் இருக்கிறது, எழுதியதில் பிடித்ததை எழுதனுமாம். எழுதியதால் பல நல்ல நண்பர்களை பிடித்தேன். அதுமட்டும் உண்மை,எழுதியதில் பிடித்தைத் தேடித்தான் பிடிக்கவேண்டும் எதுவும் மனதில் நிற்கவில்லை. அடுத்த இடுகையில் பார்ப்போம்.

15 ஜனவரி, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !

திருவள்ளுவர் ஆண்டாக மாற்றப்பட்ட தமிழர் நாட்காட்டி முறையின் படி 'தை' முதல் நாளே தமிழ் நாட்காட்டியின் முதல் நாள் அதாவது ஆண்டு பிறப்பு என்று தமிழறிஞர்களை கலந்தாய்ந்து அறிவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவிக்க இருப்பதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்கது.

தமிழர்களுக்கு கரும்பைப் போன்று இனிப்பான செய்தி தான் இது, அறிவிப்பை வெளியிட புரோகிதர்களிடம் நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்கச் சொல்லவோ, கலந்தாலோசிக்கவோ தேவியில்லை. தமிழக அரசு இதனை அரசாணையாக உடனடியாக வெளி இடவேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும். தமிழர் புத்தாண்டு எது என்பதை முடிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே உண்டு இதில் தமிழறிஞர்களின் அறிவுரையும் வழிநடத்துதலுமே போதுமானது. மொழி பண்பாடு நாள்காட்டி முறை அனைத்திலும் தமிழன் தனித்தன்மையுடன் இருந்தால் நம் மீது ஏறி மிதிக்க தயங்குவர். தமிழர்களுக்கென்று தனி அடையாளம் இல்லை என்றால் அடிமையாக்கிவிடுவார்கள். உலகமயம் என்றெல்லாம் பேசுகிறோமே தனி அடையாளம் தேவையா ?என்று கேட்கலாம். உலகமயத்திலும் தாராளமயமாக்களிலும் தமிழனின் பங்கு ஏற்கப்படும் போது அவை சிந்திக்க கூடியவை தற்பொழுது அல்ல. சாதிய அடையாளம் ஒடுக்கி வைப்பதற்காக இருக்கும் வரை அதிலிருந்து மீள அதே அடையாளம் எவ்வளவு தேவையோ, அது போன்றதே தமிழன அடையாளமும் மொத்த தமிழனத்தின் விடுதலைக்கு தேவையான ஒன்று. இன்னும் தமிழன் முதுகில் ஏறி மிதிப்பவர்கள் இருக்கும் வரை அடையாளம் தேவை இல்லை என்றால் ஒட்டு மொத்த தமிழனமும் விடுதலை அடையமுடியாது.

தமிழன் என்றொரு இனமுன்று நாம் பாடினால் போதாது மற்றவர்களுக்கு அதை புரிய வைக்க வேண்டும். மொழிவெறியோ, இனவெறியோ தேவை இல்லை. மொழிப்பற்றும், இனப்பற்றும் போதுமானது. மொழிவெறியும் இனவெறியும் மாற்றான் மொழியை தூற்றுவதற்கும், மாற்றான் இனத்தை கீழறுப்பதற்குமே பயன்படும். மொழிப்பற்றும் இனப்பற்றும் தன்மொழியை தன் சமூகத்தை மேலே கொண்டுவர பயன்படும்.

இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிருஷ்ணன்) பிறந்த தமிழ் 60 ஆண்டுகளின் ஆபாச கதைகளையும், அவை தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் என்று சொல்வதையும் தமிழ் நாட்காட்டியில் இருந்து அகற்ற வேண்டும். தை திங்களை தமிழன் ஆண்டு பிறப்பாக அறிவிப்பதை எதிர்த்து வழக்கம் போல், 'வழி வழி வருவதை மாற்றத் தேவை இல்லை' என்று தவளைகள் சத்தமிடும், எப்போதும் நாம் சொல்வது அவைகளுக்கு கேட்காது என்பது போலவே அவறின் ஓலங்களை நாமும் பொருட்படுத்ததேவை இல்லை.

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

14 ஜனவரி, 2008

ஆப்பாக வந்த புத்தாண்டு வாழ்த்தும், பொங்கல் வாழ்த்தும் !

புத்தாண்டு தொடக்கத்தில் 150 மின் அஞ்சல்கள் தொடர் மின் அஞ்சல்களாக வந்தது. நாள் தோறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர் பதில் மின் அஞ்சல் அனுப்ப அனுப்ப அன்பு தொல்லைகள். ஸ்பேம் தொல்லையை விட இந்த தொல்லைக்கு யாரை நொந்து கொள்வது ? இதுவல்ல பிரச்சனை

பல வலையுலக நண்பர்கள் தங்களிடம் நட்புடன் பழகுபவர்களிடம் வேண்டுகோள் காரணமாக மின் அஞ்சல் பரிமாரிக் கொள்வார்கள். நானும் அப்படித்தான் என் மின் அஞ்சலை விரும்பி கேட்டவர்களிடம் மட்டுமே மின் அஞ்சலை பகிர்ந்து கொண்டேன். அந்த வகையில் 50+ பதிவர்களின் மின் அஞ்சல் முகவரிகள் என்னிடம் இருக்கிறது. அதே போல் நானும் சில நண்பர்களின் எழுத்தால் கவரப்பட்டு அவர்களின் மின் அஞ்சல் முகவரியை பெற்று அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறேன். நன்றாக தெரிந்தவர் என்றால் மட்டுமே அவர் கேட்டுக் கொண்டால் நண்பர்களின் விருப்பத்தைப் பெற்று அவர்களின் மின் அஞ்சல் முகவரியை கேட்பவர்களுக்கு கொடுப்பது வழக்கம். ஒரு சில மின் அஞ்சல் முகவரிகளை நண்பர்களின் அனுமதி இல்லாமல் சில நண்பர்களுக்கு அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து இருக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் வாழ்த்து என்ற பெயரில் நமது மின் அஞ்சல் முகவரிகளை (CC) ஒரே மின் அஞ்சலில் இணைத்து அனுப்புவதை ஏற்கமுடியவில்லை. மின் அஞ்சல் முகவரிகள் நட்பின் காரணமாக நாமே விரும்பி அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே கொடுத்து இருக்கிறோம். அதை பொதுப்படுத்துவதால் என்ன குடிமுழுகி போய்விட்டது என்று கேட்கலாம். அங்குதான் பிரச்சனையே இருக்கிறது. இங்கு வலையுலகில் மாற்றுக் கருத்து எழுதினால் கூட முகம் சுளிப்பது போன்ற ஆபச அர்சனை செய்பவர்கள் உள்ளனர். எனக்கும் பல ஆபாச பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. அது போன்றவர்களுக்கு எனது மின் அஞ்சல் சென்றால் நாள் தோறும் ஆபாச மின் அஞ்சல் அனுப்புவதை ஒரு பிழைப்பாகவே செய்வார்கள். ஜங் மெயிலுக்கு திருப்பிவிட்டுவிட முடியும் ஆனால் இது தேவையற்ற வேலை தானே.

நாமே விரும்பிக் கொடுக்காமல் பொதுவில் மின் அஞ்சலை இணைத்து பலருக்கும் அனுப்புவதில் எனக்கும் பலருக்கும் உடன்பாடு இல்லை. ஒரு குழுவாக இருந்தால் அந்த குழுக்களுக்குள் பரிமாரி கொள்வதில் தவறே இல்லை. நமது மின் அஞ்சல் முகவரிகள் தெரிந்தால் நமது மின் அஞ்சல் போலவே போலியாக தயார் செய்து நண்பர்களுக்கு அனுப்பு தகவல் திரட்ட முயல்வார்கள். நாம் இங்கே தீவிரவாதம் எதுவும் செய்யவில்லை. ஆனால் வேலையற்றோருக்கு அதெல்லாம் தான் பிழைப்பே. எல்லோருமே எல்லோர் மீது நல்லண்ண நட்பு கொண்டிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். சிலருக்கு பலரின் முகவரிகள் தெரிந்திருக்கலாம். அதற்காக அவர்கள் அதையெல்லாம் இணைத்து மின் அஞ்சலை அனுப்பினால் தர்மசங்கடம் தான்.

நண்பர்களே அன்பர்களே, பொது மின் அஞ்சல் அனுப்பினால் தயவு செய்து எனது மின் அஞ்சல் முகவரியை அதில் இணைக்காதீர்கள். பலருக்கும் இதே போன்ற சங்கட நிலைமைதான் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் சொல்ல பதிவுகள் இருக்கிறது. பிடித்தவர்களின் பட்டியலில் இருந்தால் பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லிவிடப் போகிறார்கள். மின் அஞ்சல் முகவரியை பொதுவில் ஒருவரின் அனுமதியின்று இணைப்பது ஏற்புடையது அல்ல.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாம் யாரும் தீவிரவாதிகள் அல்ல. இருந்தும் நம் முகவரிக்கு ஆபாச மின் அஞ்சல் வருவதை தவிர்க்க நினைப்பதில் தவறு இல்லை. எனது மின் அஞ்சல் முகவரி பலருக்கும் நானே கொடுக்காமல் சென்றுவிட்டதால் எனது மின் அஞ்சல் முகவரியை மாற்றும் நிலையில் உள்ளேன்.

:(

மோடியை கண்டு பயப்படுவது ஏன் ?

மோடியை கண்டு பயந்து வயிறு எரிகிறார்கள் - இல.கணேசன் ஐயா தெரிவித்து இருக்கிறார்.

மோடியின் மதவெறி உலக பிரசித்தம். ருத்திராட்ச பூனைக் குட்டியை மடியில் கட்ட விரும்பம் இன்றி அமெரிக்கா மோடியின் விசாவை நிராகரித்து. இத்தனைக்கும் அமெரிக்கா 'தீவிரவாதிகளை தம் வீட்டு நாய்குட்டிகள் போல ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்தவர்கள்' என்ற பேச்சு இருக்கிறது. மோடியை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆள் ஆவோம் என்று நினைத்தும், மதச்சார்புடையவர் என்பதால் நிராகரித்தார்கள். அத்தகைய உலக பிரசித்தி பெற்ற மோடியை,

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், "நரேந்திர மோடியின் அமோக வெற்றியை பொறுக்க முடியாமல் வயிறு எரிபவர்கள், பாஜகவின் செல்வாக்கை நினைத்து பயந்து போன ஒரு சிலர்தான் அவரை எதிர்த்து போராட போவதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் வேலை செய்த காரணத்துக்காக முஸ்லீம் அமைப்புகள் மீது மென்மையான போக்கை அரசு கடை பிடிக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது. வன்முறை மற்றும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்

குஜராத்திகள் "பெரும்பாண்மை" என்ற பேச்சில் மயங்கி, இந்துநாடு, இந்தியா என்ற சொல்லாடலில் மயங்கி தன் தலையில் தானே தீ வைத்துக் கொண்டால் அதை தமிழகமும் பாராட்ட வேண்டுமா ? தமிழகத்தில் கோத்ரா ரயில் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்று நினைப்பதில் என்ன தவறு ? தமிழகத்தில் இந்து முஸ்லிம் கிறித்துவர் அனைவரும் சிறு சிறு பூசல் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் வேலை செய்த முஸ்லிம் அமைப்புகள் மீது மென்மையான போக்கை அரசு கடைபிடிக்கிறதாம். தேர்தல் நேரத்தில் தமுமுகவில் ஒரு பிரிவு ஜெ வின் பக்கம் தான் நின்றார்கள். அவர்களும், கம்யூனிஸ்டுகளும், மகஇக ஆகியோர்கள் மோடியின் வருகையை பலமாக எதிர்கிறார்கள். இல.கனேசன் பேச்சில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் அனைத்துமே தீவிரவாத போக்கு உள்ளது போலவும், அதற்கு திமுக அரசு ஆதரவு கொடுப்பதும் போலவும், அதையும் தனது குயுக்தியால் "மக்களிடம் எண்ணம்" ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்.

மக்களுக்கு தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருப்பதாகவே, மோடி என்பவர் தமிழகத்தில் ஜெ வீட்டில் விருந்து சாப்பிட வருகிறார் என்றோ தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளும் தமிழக மக்கள் இல்லை. எதிர்பவர்கள் அனைவரும் கட்சிக்காரர்களே அடுத்ததாக வன்முறை மற்றும் தேசவிரோத நடவடிக்கைப் பற்றி இவர் கூறும் போது "தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் "

குஜராத்தில் நடந்த சம்பவங்கள் சுதந்திர போராட்ட மகாத்மா காந்தி தலைமை ஏற்ற அமைதி பேரணி போலவும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போகிபண்டிகைக்கு டயர் கொளுத்துவது போலவும் நினைக்கிறார் போலும். மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்திருந்து அங்கு ஒரு ஆண்டுக்காவது கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி இருந்தால் குஜராத் மக்கள் தாம் மதவெறியில் சென்று கொண்டிருப்பது தவறு என்று புரிந்திருக்கும், அதற்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் தேர்த்தலை நடத்ததால் மோடியின் நடவடிக்கையை மத்திய அரசு ஆசிர்வதித்து போலவும், மற்றவர்கள் எல்லோரும் தேசவிரோதிகள் போலவும் இல.கனேசன் சொல்கிறார்.

இல.கனேசன் போன்ற இந்துத்துவாக்கள், தீவிரவாதிகள் - என்ற அடைமொழியை மற்ற மதத்தினருக்கு வழங்கும் போது பட்டம் வழங்குவது போல் நினைக்கிறார்கள். இந்து மதம் காவி தீவிரவாதிகளின் கையில் விழும் நாள் தொலைவில் இல்லை. அதன் பிறகு இந்துமதம் ஒரு சாத்வீக மதம் என்றோ,உலக மக்களை உய்விக்க வந்த மதம் என்றோ, எல்லா மதமும் இந்து மதத்தில் இருந்து வந்தது என்ற பம்மாத்து எல்லாம் செய்ய முடியாது. இந்து தீவிரவாதம் வளர வளர வெளிநாடு வாழும் இந்துக்கள், இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது, அவை ஏற்கனவே மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தேறிவருகிறது, இந்துக்கள் மோடியை கண்டு பயப்படுவதற்கும், பதுங்குவதற்கும் இதுவே காரணம்.

9 ஜனவரி, 2008

வாரிசு அரசியலும், திமுகவும்

அரசியலில் அவ்வப்போது பேசுவதற்கு சர்சை எதுவும் இல்லை என்றால் ஆளும் கட்சி மீது 'வாரிசு அரசியல்' என்ற குற்றச்சாற்றை கொண்டுவருவது உண்டு. பெரும்பாலும் இந்த குற்றச்சாற்றைக் கொண்டு வருபவர்களில் புதுக் கட்சி ஆரம்பிப்பவர்களே அதிகம். மருத்துவர் ஐயா கட்சி ஆரம்பித்த போது திமுகவின் மீது 'வாரிசு அரசியல்' குற்றத்தை கடுமையாக வைத்தார். 'என் குடும்பத்தினர் எவராவது பாமக அரசியலில் நுழைந்தால் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் என்னை அடிக்கலாம்' என்று வீரவசனம் எல்லாம் பேசினார். கட்சி வளர்ந்ததும் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதால் அவருடைய அன்பு மகன், மருத்துவர் அன்பு மணியை சின்ன ஐயாவாக பின்வாசல் வழியாக கட்சிக்கு வாரிசாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

இதே போன்று காங்கிரசில் உள்ள பலதலைவர்களும் திமுகவை 'வாரிசு அரசியல்' என்று குற்றம் சுமத்தினார்கள். மூப்பனார் இருக்கும் வரை இல்லாத வாசன், அவர் மறைந்ததும் உள்ளே வந்த போது காங்கிரஸ் இரத்தன கம்பளம் விரித்து, தமிழக காங்கிரஸ் தலைவர், மத்திய அமைச்சர் பதவிவரை காங்கிரசார் கொடுத்தார்கள். அதன் பிறகு கேப் கிடைக்கமாலேயே மாயாஜால வித்தை செய்து கார்த்திக் சிதம்பரம் உள்ளே நுழைந்து தனக்கென தனி கோஷ்டியே உருவாக்கிக் கொண்டார். இப்பொழுதெல்லாம் தமிழக காங்கிரசில் வாரிசு அரசியல் பற்றி எவரும் மூச்சு விடுவதில்லை. 60 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்திடம் சாசனம் செய்து கொடுத்துவிட்டதால் 'வாரிசு அரசியல்' பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதையே இல்லை.


கட்சி ஆரம்பித்து ஓர் ஆண்டுக்குள்ளேயே தேமுதிக விஜயகாந்தின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் கட்சி ஆரம்பித்த போது திமுக மீது சொல்லிய 'வாரிசு அரசியல்' குற்றச் சாட்டை தற்போது விஜயகாந்த் தூக்கத்தில் கூட சொல்வதில்லை.

அதிமுக ? வாரிசு அரசியல் இல்லை என்பது போல் தோன்றும். எம்ஜிஆர் இறந்ததும், அதுவரை அரசியல் நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளாத எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி எம்ஜிஆர் அம்மா, அதிமுகவிற்கும் எம்ஜிஆருக்கும் திடீர் வாரிசு ஆனார். எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா தான் என்று எம்ஜிஆர் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டபடியால் நிஜத்தை விட நிழலே உண்மை என்று அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும் வாரிசு ஆக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஜெயலலிதா எம்ஜிஆர் இறந்தவுடன் அரசியலில் குதிக்கவில்லை தான். ஆனால் எம்ஜிஆருக்கு நேரடி வாரிசுகள் இருந்து, அவர்கள் அரசியல் களத்தில் இருந்திருந்தால் ஜெயலலிதா அரசியலில் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும். எம்ஜிஆர் இல்லை என்றால் ஜெயலலிதாவிற்கு அரசியலுக்கும் தொடர்பே இருந்திருக்காது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா அறிவிக்கப்படாத எம்ஜிஆரின் வாரிசு. மற்றபடி அதிமுகவில் ஜெவின் பங்கு எம்ஜிஆர் இருக்கும் வரை மற்ற மூத்த அதிமுக தலைவர்களை விட அனுபவ அளவில் குறைந்ததே. ஜெவுக்கு பிறகு வேண்டுமானால் நிலமை மாறலாம். ஆனால் ஜெ வரையிலும் அதிமுகவில் ஒருவகையில் நடப்பதும் வாரிசு அரசியலே.

திமுகவை ஆரம்பித்த அறிஞர் அண்ணாவுக்கு வாரிசு இருந்திருந்தால் கலைஞர் திமுக தலைவர் ஆகி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. தேசிய கட்சிகளிலும் இதே நிலமைதான். வாஜ்பாய்க்கு வாரிசு இருந்திருந்தால் அத்வானி அமைச்சர், கட்சித் தலைவர் என்ற அளவிற்குத்தான் வந்திருக்க முடியும். ஆனால் இன்று பிரதமர் வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்கிறார் என்றால் வாஜ்பாய் பேச்சிலராக இருந்ததால் முடிகிறது. பக்கத்து மாநிலத்தில் தேவ கவுட மகன்களின் அரசியலையும் பார்த்தாகிவிட்டது. மும்பையில் சிவசேனா தாக்ரேயின் மகன் மற்றும் மருமகன் சண்டைகளால் கட்சியே உடைந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் தெலுங்கு தேசம் என் டி ஆரின் மருமகன் வசம் உள்ளது. லாலு பேமிலி பற்றி எல்லோருக்கும் தெரியும். மற்ற மாநில அரசியலிலும் பழைய கட்சிகளில் நிலமை இதே போன்று தான் இருக்கும்.

சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் முன்னால் பிரதமரின் மகன். மற்ற சில நாடுகளில் மன்னர்கள் இன்னும் இருப்பதால் பிரதமர் வேட்பாளர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. கம்யூனிச நாடுகளிலும், சர்வாதிகார நாடுகளிலும் திடீர் அரசியல் வாதிகள் தோன்றுவார்கள். மற்றபடி பாரம்பரை அரசியல் கட்சிகள் எல்லாமும் வாரிசுகளிடம் தான் சொத்து போல விடப்படுகிறது. இந்தியாவில், திமுகவில் கலைஞர் குடும்பம் மட்டும் வாரிசு அரசியல் நடத்துவதாக சொல்வது நகைப்புக்கு இடமானது. நிராகரிக்க கூடியது.

கட்சிக்குள் வாரிசு அரசியலை மீறி பெரிய பொறுப்பு, பதவிகள் அடைய முடியாது என்பதாலேயே பல கட்சிகள் உடைகிறது, பெரிய பதவி, கட்சித் தலைவராக வளரவேண்டும் என்ற அவர்களுடைய (பேரா ?)ஆசையால் சிலர் புதிய தலைவர்களாக உருவாகிறார்கள்.

நான் வாரிசு அரசியலை போற்றவில்லை. ஆனால் அதைச் சொல்ல எந்த கட்சிக்கும், கட்சி சார்புடையவர்களுக்கும் தகுதி இல்லை என்கிறேன். திமுகவின் மீது சொல்லப்படும், வாரிசு அரசியல் ஓரளவுக்கு உண்மை என்றாலும் அவை விபரம் தெரியாமலும் அல்லது காழ்புணர்வாலும் அல்லது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சியாக சொல்லப்படுபவையே. வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறு என்று ஒரேடியாக தவறாகவும் சொல்ல முடியாது. மற்றவர்களைப் போல அவர்களுக்கும் அடிப்படை உரிமை உள்ளது, கூடுதலாக வாய்ப்பும் இருப்பதால் வாரிசுகள் உண்மையிலேயே திறமையானவராக இருந்து மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களை அசைக்க முடியாது.

வாரிசு அரசியலுக்கு தலைவர்களின் பேராசை ஒரு காரணம் என்றாலும் உளவியல் ரீதியாக நாமும் காரணமாக அமைந்துவிடுகிறோம். அதைப்பற்றி இங்கே

மொக்கை TAG - ராசி கற்கள் !

இந்திய - இந்துமத மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து... 'உழைக்காமல் முன்னேறுவதற்கு முன்னூறுவழிகள்' என்று ஒரு புத்தம் எழுத முதலில் ராசி 'கற்களால் வாழ்கையில் பெரும் மாற்றம்'...என்று முதல் அத்யாயத்தை தொடங்கலாம். புத்தகம் நன்றாக விலை போகும், எதாவது நகைக்கடை பக்கம் அந்த புத்தகத்தை விற்றால் கடைக்காரனும் கமிசனை தருவான்.

அண்மையில் நானும் பதிவுலகம் சாராத நண்பர் ஒருவரும் ஜாய் டூராக தாய்லாந்து சென்ற போது, பேங்காகில் உள்ள புத்தர் கோவில்களை சுற்றிப் பார்க்க டாக்சி தேடினோம், ஒரு ஆட்டோகாரர், அவராகவே முன் வந்து அழைத்துச் செல்வதாக கூறினார், ஆட்டோ கட்டணம் எப்படி மீட்டரா ? என்று கேட்க, அதெல்லாம் வேண்டம் வெறு 20 பாட் கொடுங்க போதும் என்றார். 20 பாட் இந்திய ரூபாய் மதிப்புக்கும் 20 ரூபாய்தான். 'வெரீ சீப்' என்று அகமகிழ்ந்து ஏறி அமர்ந்தோம். நிற்கும் புத்தர், படுத்திருக்கும் புத்தர், எமரால்ட் புத்தர், பலிங்கு புத்தர் என விதவிதமான புத்தர் கோவில்களுக்கு கூட்டிச் செல்வதாக சொன்னார். சொன்னபடி முதலில் பலிங்கு புத்தர் கோவிலுக்கு கூட்டிச் சென்றார். பெரிய விகார் அதனுள்ளே ஒரு அடி உருவ வெள்ளை பலிங்கில் செய்யப்பட்ட புத்தர். கோவில் மூடி இருந்ததால் ஜன்னல் வழி தரிசனம் தான் கிடைத்தது. அங்கு வந்த வெள்ளைக்காரனிடம் இந்திய பெருமைகளை பேசிவிட்டு ஆட்டோவுக்கு திரும்பினோம்.

ஆட்டோகாரன் அடுத்து 'நிற்கும் புத்தரை' காட்டப் போகிறேன் என்று ஆட்டோவை செலுத்தினார். போகும் வழியில், 'இன்னிக்கு நகை எக்சிபிசன் போட்டு இருக்காங்க...நான் உங்களை அந்த ஜுவல்ல்ரி கடைக்கு கூட்டிச் செல்கிறேன், பிடித்தால் வாங்குங்கள்' என்றார். '20 பாட் - க்கு வருகிறேன் என்றாரே' என்று நாங்கள் பாட்டுக்கு தலையாட்டிவிட்டோம், ஜுவல்லரி கடையில் நிறுத்திவிட்டு காத்திருந்தார். உள்ளே பலமான வரவேற்பு, விதவிதமான ராசிக்கற்களை வெள்ளி, வெள்ளை தங்கம் மற்றும் தங்கதில் பதித்து மோதிரம் மற்றும் பல அணிகளில் சேர்த்து விற்கிறார்கள், பலவகையான கற்கள் இருந்தது. உடனடியாக பிறந்த மாதம் கேட்டுவிட்டு 'இந்த கற்கள் உங்களுக்கு ராசியானது' என்று சொன்னார்கள். கடலை பருப்பு அளவுக்கு சின்ன சின்ன கற்கள் கூட 2000 பாட் வரை சொன்னார்கள், அதிலும் உயர்ந்த வகை கற்கள் 10,000 - 50,000 பாட்-க்கு மேல் இருந்தது. மெதுவாக நண்பர் ஆரம்பித்தார், பேங்காக வந்த ஞாபகத்துக்கு தங்கமணிகளுக்கு எதாவது வாங்கலாம் என்று சொல்ல, தலையாட்டிவிட்டு ஆளுக்கு 3000 பாட்-க்கு ராசி கற்கள் பதித்த வெள்ளி மோதிரத்தை வாங்கிவிட்டு ஆட்டோவுக்கு திரும்பினோம்.

அடுத்து 'நிற்கும் புத்தரை' பார்க்கப் போவதாக சொன்னார் ஆட்டோகாரார். ஆட்டோகாரரிடம் அந்த ஜூவல்லரி கடையில் உங்களுக்கு கமிசனா ? என்று கேட்டேன், ஒப்புக் கொண்டார். ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போதே...'இதைவிட பெரிய கடை ஒன்று இருக்கிறது, அதில் வெளிநாட்டினருக்கு ஸ்பெசல் ப்ரோமசனில் கற்கள் விற்கிறார்கள்' என்று சொன்னார். 'ஐயோ சாமி ஆளை விடுங்க' என்று சொல்லியும் கெஞ்சாத குறையாக, 'நான் அங்கு சென்றால் எனக்கு இலவச பெட்ரோல் என்றார். சரி பொழைச்சு போகட்டும் என்று அங்கும் சென்றோம். அங்கு ஒரு சிறிய கல்லை 300 பாட்-க்கு வாங்கிவிட்டு திரும்பினோம், இந்த முறை 'நிற்கும் புத்தர் கோவிலுக்குச்' சென்றார். அங்கேயே அவரிடம் 20 பாட் கொடுத்துவிட்டு, வேறொரு டாக்சி பிடித்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அதுக்கு மேல் கற்களுக்கு கொடுக்க மனசோ, பாட்- டோ இல்லை. :)

வாங்கி வந்த கற்கள் இப்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. வாங்கி கடாசியதோடு சரி.

*****

பெயர் ராசி, ராசி கற்கள், ஜோசியம் பார்த்து பரிகாரம் செய்வது இவையெல்லாம் வாழ்கையை மாற்றுதாம். நம்புறாங்க. அப்பறம் ஏன் சாமி.....'சாமி நம்பிக்கை எல்லாம் வைக்கிறீங்க ?' கேட்கத்தான் ஆசை. சாமிகளை விட கற்கள் சக்தி படைத்ததா ? ம் கல்லும் சாமியும் ஒன்னுதான்னு கல்லில் சிலை வடித்திருக்கிறார்கள் போலும்.

ராசி கற்கள் அணிவதிலும் தவறான கற்களை அணிந்துவிட்டால் அதிர்ஷ்டம் ரிவர்சில் காணாமல் போய்...பெரும் துன்பம் நேர்ந்துவிடுமாம். அப்படியும் அடம்பிடித்து ராசி கற்களை அணிய விரும்பினால், கீழே இருக்கு கற்களின் பட்டியல், உங்க பிறந்த தேதிக்கு எந்த கல்லு நல்ல கல்லுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்.


சொடுக்கிப்பார்த்தால் விவரம் பெரியதாக தெரியும்.

*****

பேங்காக் செல்பவர்கள் குறைந்தவிலையில் நிறைந்த சவாரி செய்ய ஆட்டோ வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.

இந்த இடுக்கை பாச மலர் மொக்கை TAG க்காக எழுத அழைப்பு விடுத்தைத் ஏற்றுக் கொண்டு எழுதியது. இடுகை மொக்கையாக இல்லை என்று வருத்தப்பட்டால், பின்னூட்டத்தை மொக்கையாக போடுங்க. அட்ஜிஸ்டு பண்ணிக்கிடுவோம்.

நான் யாரை மொக்கை TAG க்கு கூப்பிடுவது ?

ஏற்கனவே பலர் மொக்கைதான் போடுகிறார்கள் ( அடிக்கவர்றாதிங்க என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) அப்பறம் தனியாகவேற மொக்கை பதிவா ?

பாவம் விட்டுடுவோம். பதிவர் பாவம் பொல்லாதது !!!
:)))

பின்குறிப்பு : முதல் புகைப்படத்தில் ஆட்டோவினுள் இருப்பது நான் அல்ல. எனது நண்பர் ஜெ.கண்ணன்.

7 ஜனவரி, 2008

ஷங்கரின் ரோபோ கதை !

வழக்கம் போன்ற ஷங்கர் கதைதான் என்றாலும் இந்த முறை(யும்) தயாரிப்பாளரின் ஏகோபித்த பேராதரவுடன் மாபெரும் பொருட் செலவுடன் தயாரிக்கப்படுகிறது ரோபோ. சிவாஜியில் ரஜினிக்கு பரிபூரண திருப்தி இருந்தாதால் ரஜினி ரோபோவுக்கும் ஷங்கரிடம் ஓகே சொன்னதாக தட்ஸ்தமிழ் செய்தி அறிவித்து இருக்கிறது. ஷங்கரின் ஒன்லைன் ஸ்டோரி, கோடம்பாக்கம் நண்பர் மூலம் காத்து வாக்கில் எனக்கு கிடைத்தது உங்களுக்குச் சொல்லாவிட்டால் எப்படி?

தண்ணீர் பிரச்சனைத்தான் படத்திற்கு கரு. இலவசமாக மழை நீராக வரும் தண்ணீரை வில்லன் கும்பல் மினரல் வாட்டராக மாற்றி பணம் பண்ணுகிறது, ஏழைகள் ஒருகுடம், ஒரு தம்ளர் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போகிறார்கள். இதை கேள்விபட்ட கபாலீஸ்வரர் கோவிலின் குருக்கள் இரவோடு இரவாக விதவிதாமான ரோபோவை உருவாக்கி அதன் மீது அமர்ந்து வில்லன் கும்பலை தீர்த்துக்கட்டுகிறார்.

இதை திரைகதையாக மாற்றி ரஜினியை வைத்து செய்வதில் சில சிக்கல் இருக்கிறதாம், சாதுவான குருக்கள் வேடம் ரஜினிக்கு முதலில் பொருந்துமா என்று நினைத்து ஆழ்ந்து யோசித்தாராம். அதன் பிறகு ஹாலிவுட் மேக்கப்காரர்களின் தயவால் அச்சு அசலாக முதிர்ந்த இராகவேந்திரா போன்ற மேக்கப் ரஜினிக்கு செட் ஆகவே ஷங்கர் குஷி மூடில் இருக்கிறாராம்.

கதைப்படி கபாலீஸ்வரர் கோவிலில் ரஜினி தலைமை குருக்கள், ஒரு நாள் கபாலீஸ்வரர் கோவிலில் அபிசேகம் முடித்துவிட்டு வெளிப் பிராகாரத்திற்கு வந்த போது, அங்கே அபிசேகத்தண்ணீர் சாக்கடையில் கலக்கும் இடத்தில் ஒரு சிறுவன் அதை குடத்தில் பிடிக்கிறான். ஆண்டவனின் அபிசேக நீரை பக்தியுடன் பிடிகிறான் என்று ஆச்சரியமாக பார்த்தபோது, அந்த சிறுவன் தண்ணீரே கிடைக்காமல் வேறு வழியின்றி தீர்த்த நீரைபிடிப்பதை அவன் வாயால் சொல்லக் கேட்டு உணர்ச்சி வசபடுகிறார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து பல்வேறு 'ஏன் ... ஏன்' என்று கேள்வி எழுப்பிக் கொண்டே பகவானை எண்ணி சேவிக்கிறார், அப்போது பரண் மீது குறுக்கே ஓடிய எலி ஒன்று பழைய பேப்பரை கீழே தள்ள அதிலிருந்த செய்தி அவருக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் மூட்டுகிறது, "பாலாற்றில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது", மேலும் மேலிருந்து ஒவ்வொரு பேப்பராக எடுத்துப்பார்க்கிறார். "வரட்சியில் வாடும் இராமநாதபுரம்","மரக் கொள்ளையர்களால் காடுகள் அழிப்பு, தமிழகத்தில் மழைவரத்து குறைகிறது", "குடிநீர் பதுக்கல் - மினரல் வாட்டர் விலை எகிரியது", என்பதாக பல பல தண்ணீர் செய்திகள்

மறுநாள் குருக்கள் கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு வாகனத்தைப் பார்க்கும் போது, அவை பேசுவது போலவும் அவற்றிற்கு உயிர் வந்தது போல் உணர்கிறார். மந்திர, மற்றும் அறிவியல் சக்தியுடன் எலக்டாரானிக் தொழில் நுட்ப உதவியுடன் வாகன ரோபோக்கள் உருவாக்கப்பட்டு குருக்கள் ரஜினி அதன்மீது ஏறி அமர்ந்து மணல் கொள்ளைக்காரர்களை வதம் செய்கிறார். முதலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் செல்கிறார். பாலாற்று மணல் திருடனை அழிக்க பாலாறு போன்ற செட் போடப் படுகிறது, மணல் பால் போன்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக சைனாவில் இருந்து இரண்டு கப்பலில் மணல் வருகிறது. அடுத்ததாக சிங்க வாகனத்தில் ஏறிச் சென்று மரக் கொள்ளையர்களை அழிக்கிறார். கடைசியாக மினரல் வாட்டர் கம்பெணி காரனை கருடவாகனத்தில் சென்று நடுக்கடலுக்குள் உப்பு நீரில் அமிழ்த்தி அழிக்கிறார்.

வாகன ரோபாக்களை உருவாக்குவதற்காக அவருக்கு உதவும் வெளிநாட்டில் படித்த தமிழ்பெண்ணாக கதாநாயகி ஐஸ்வர்யா பச்சன் நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு பெயர் 'எழிலரசி' தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று ரஜினி விருப்பம் தெரிவித்ததராம். படத்தின் முடிவில் காவேரியும் கங்கையும் இணைந்து தமிழகம் பசுமை ஆனதாகவும், கூவத்தில் பொழுதுபோக்கு படகுகள் செல்வதாகவும் காட்டுவார்கள். ஐயர் கதையாக இருப்பதால் அனேகமாக ஜென்டில்மேன், ஜீன்ஸ் படத்திற்கு வசனம் எழுதிய பாலகுமரான் இதற்கும் கதைவசனம் எழுதுவார் என்று தெரிகிறது.

முழுக்கதையும் எழுதிவிட்டால் அப்பறம் ஷங்கர் கதையை மாற்ற திண்டாடுவார். பாவம் விட்டுடுவோம்.

பின்குறிப்பு : பாத்திரங்கள், தட்டுமுட்டு சமான் எல்லாம் கற்பனையே !

தினமலர் மகிழ்ச்சி ?இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை ! செய்தியின் தலைப்பே ("அடுத்த அடி") நிறைய புரிய வைக்கிறது. :(

4 ஜனவரி, 2008

மூன்று மாணவிகளை எரித்த கோழைகள் !

தருமபுரி பேருந்து வழக்கில் மூன்று மாணவிகள் எரிந்ததும் அதற்கு மூன்று பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதும் தெரிந்ததே. அந்த வழக்கில் இன்று

"தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது"

இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து பல கருத்துக்கள் மரண தண்டனைக்கு எதிராக இருக்கின்றன. எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. ஆனால் குற்றவாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் மரண தண்டனையை குறைக்கச் சொல்ல எந்த ஒரு யோக்கிதையும் இல்லை.

குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்த பிறகுதான் தனக்கும் ஒரு குடும்பம் என்று இருக்கிறது, வாழவேண்டும் என்று நினைத்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாமல் கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கும் இவர்களால் என்ன பதில் சொல்ல முடியும். இவர்கள் இவர்களால் நடந்த கொடுமைக்கு உண்மையில் மனம் வருந்தினால், "நாங்கள் செய்த படுபாதக செயலுக்காக மனம் வருந்துகிறோம், அதற்கான மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்" என்று சொல்லி கிடைத்த மரண தண்டனையை நியாமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இவர்கள் மீது கருணை அடிப்படையில் இரக்கம் கொள்ளலாம். வாழும் ஆசை இந்த கோழைகளுக்கு மட்டும் தான் இருக்கிறதா ?

இவர்களுக்கு தண்டனை வேண்டுமா ? வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம், மனித உரிமை அமைப்பு. அதில் கருணை காட்டச் சொல்ல இதில் ஈடுபட்ட கோழைகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கும் கருணை அடிப்படையில் வேண்டுமானால் வாதாடலாம். இவர்களைப் போன்றவர்கள் தங்களுக்கு பொதுமன்னிப்பு வேண்டும் என்று அவர்களே கேட்டுப் பெருவது கோழைத்தனம். இவர்களுக்காக இவர்கள் குடும்பத்தினர் வேண்டுமானால் கருணை கோரலாம். இதுபோன்ற குற்றவாளிகள் தங்களுக்கு இரக்கம் காட்டச் சொல்வதற்கு எந்த தகுதியும் கிடையாது.

கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்ததற்கான வழக்கும் விரைவில் முடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

3 ஜனவரி, 2008

புனித பயணமா ? இறுதி பயணமா ?

சீசன் கோவில்களுக்கும், மெக்காவிற்கும் புனித பயணம் செல்பவர்களின் சாவு எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இந்தாண்டு 227 இந்திய இஸ்லாமியர்கள் மெக்காவில் இறந்ததாக செய்தி வந்திருக்கிறது. ஐயப்பன் கோவிலில் 100க் கணக்கானோர் மாரடைப்பால், மூச்சு திணறலால் இறந்திருக்கிறார்கள்

முன்பெல்லாம் ஏன் இவ்வாறு நடப்பதில்லை ? ஆண்டவனுக்கே கோபம் வந்து அடியார்களை தண்டித்துவிட்டாரா ? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லிங்க. நெருப்பில் கை வைத்தால் சுடும், இது பொது விதி, நெருப்புக்கு தன்னை தொடவருவது குழந்தையின் விரல் என்றெல்லாம் தெரியாது, சுட்டு பொசுக்கிவிடும். இது இயற்பியல் நியதி. அவதாரசாமியார்களுக்கும் இதெல்லாம் பொருந்தும், எந்த சாமியாரையாவது நெருப்புக் குளிக்கச்ச் சொல்லுங்கள். செய்ய மாட்டார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு மக்கள் நெருக்கம் அதிகம் என்பது ஒருபுறம் இருந்தாலும், சென்று பார்த்துதான் வருவோமே என்ற ஆவல் புதியவர்களுக்கு ஏற்படுவதே இத்தகைய கட்டுக்கு அடங்காத கூட்டத்திற்கான காரணம். மக்கள் கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தக் கூடியது. ஆனால் மக்கள் வெள்ளம் ? அதில் சிக்கினால் அருகில் இருக்கும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

மெக்காவிற்கு செல்வது இஸ்லாமியரின் வாழ்நாள் கடமை என்கிறார்கள். அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. புனித பயணம் அதை ஹஜ் சீசனில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா ? மற்ற நாட்களில் சென்றால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன். மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இஸ்லாமியர்கள் நண்பர்கள் தெளிவு படுத்துங்கள். ஆனால் நம் ஊர் ஐயப்பன் கோவிலை சில நாட்கள் தவிர்த்து ஆண்டு முழுவதும் திறந்து வைத்துள்ளார்கள், வைகாசி மாதத்திலும் பக்தர்கள் இருமுடி எடுத்துச் சென்று வருவது உண்டு, அப்போதெல்லாம் நெருக்கத்தினால் மூச்சு திணறி பக்தர்கள் இறக்கிறார்கள் என்ற செய்திகள் வருவதில்லை.

கூட்டத்தோடு கூட்டமாக போனால் தான் பக்தியா ? வீட்டுக்குள் சாமிகள் இருக்கிறது அதையும் தாண்டி கோவிலுக்குச் செல்வதில் தான் நிம்மதி என்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும், அப்பறம் குறிப்பிட்ட நாட்களில் சென்றால் தான் விசேசம் என்கிறார்கள். மற்ற நாட்களில் அந்த சாமிக்கு சக்தி இருப்பதில்லையா ?எல்லோரும் ஒரே நாளில் போய் குவிந்தால் தான் கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?

கும்பகோணம் மகா மக விபத்து, திருநள்ளாறு நெரிசல் என்று ஆண்டுக்கு ஆண்டு எதாவது விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான பழியை யார் மீது போடுவது ? பக்தியாளர்களால் நிச்சயம் கடவுள் மேல் போட முடியாது. அதற்கு யார் தான் பொறுப்பு ? தனக்கு ஒரு குடும்பம் இருப்பதையும், அதில் தன் பொறுப்பு இருப்பதையும் உணராமல் சமாளித்துவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் செல்லும் பக்தர்கள் தான் பொறுப்பு. இது போன்ற கூட்ட நெரிசல்களுக்கு பெண்களையும், குழந்தைகளையும், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அனுமதிக்கவே கூடாது. வெளியேற திணறி, ஆக்சிஜன் பற்றாக் குறையால் மூச்சு திணறி, கூட்ட நெரிசலில் அதிகம் மிதிபட்டு இறப்பவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகவே இருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்கள் புனித பயணம் சென்றால் அவர்களிடம் கூட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள். புனித பயணத்தில் இறப்பது பெருமை அல்ல. வெளியில் வேண்டுமானல் 'நல்ல சாவு' என்று ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு சொல்வதால் ஒரு பயணும் இல்லை. அதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பெரும் துன்பம். இதற்கு காரணம் ஆண்டவனோ, ஆள்பவனோ இல்லை. கட்டுக்கு அடங்காத நெரிசல் அதனால் பிதுங்கி மிதிபடுதல் என்னும் இயற்பியல் விதியே காரணம். விசேச நாட்களில் புனித பயணம் மேற்கொண்டு புறப்படும் ஒருவர் தான் செல்லும் புனித பயணம் தனக்கு இறுதி பயணம் என்று செல்லும் போது அவருக்கு தெரியாது. விஷேச நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் புனித தலங்களுக்குச் சென்றால் புனித பயணம் செய்து வீடு வந்து சேரமுடியும். அப்படியும் செல்ல வேண்டுமென்றால் காப்பீடு செய்துவிட்டுச் செல்லலாம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்