வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.
*****
திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,
வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது, அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.
The Badaga Script developed by Anandhan Raju
வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.
கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.
இணைப்புகள் :