பின்பற்றுபவர்கள்

பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜனவரி, 2012

பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?

இன்று மதியம் வீட்டின் அருகே ஒரு ஷாப்பிங் மால் (வணிக வளாகம்) சென்றுந்தேன், சீனப்புத்தாண்டு நெருங்குவதால் நாள் தோறும் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றிலும் அதனுள் இருக்கும் பொது மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைக்கு பார்த்த நிகழ்ச்சி கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் வியப்பை அளித்தது. மாலாய் முஸ்லிம்கள் மற்றும் சீனர்கள் இணைந்து சீனப் புத்தாண்டை வரவேற்றுப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தனர். முழுக்க முழுக்க மலாய் பாடல்கள் அவை புரியாவிட்டாலும் ஒவ்வொரு பாடலுக்கு முன் ஆங்கில விளக்கம் கொடுத்தனர். மலாய்காரர்கள் என்றாலே அவர்களின் தாய் மொழி மலாய் மற்றும் அவர்கள் சார்ந்த மதம் இஸ்லாம் என்பது மட்டும் தெரியும். பாபாக்கள் என்ற ஒரு பிரிவினர் உண்டு அவர்கள் மலாய் - சீனக் கலப்பினர், அவர்களில் சிலரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

எனக்கு தெரிந்து 'இஸ்லாமியர்கள் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா ?' அதாவது காஃபிர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு காஃபிர்களை இஸ்லாமியர்கள் வாழ்த்தலாமா ? என்ற சர்சைகள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் ஒருபிரிவிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது, அந்த கேள்வியின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களே பதிலும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் இஸ்லாமிய இறைவனை வழிபடுவது இல்லை, அவர்கள் இணை வைப்பவர்கள் மற்றும் அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லாததால் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ஹாரம் (விலக்கப்பட்டுள்ளது) ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள், இதைப் படித்துவிட்ட நான் 'எனக்கு தமிழ் மற்றும் இந்து பண்டிகை நாள்களில் மதக் கட்டுப்பாடுகளை மீறி வாழ்த்து சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் நன்மதிப்பு மிக்கவர்களாகவும் சமூக நேயம் தெரிந்தவர்களாகவும் தெரிந்தனர். ஏனெனில் கொஞ்சமாக மதத்தைக் கடைபிடிக்கலாம் என்பது போன்ற அனுமதிகள் அங்கு இல்லை, தன்னை இஸ்லாமியர் என்று உணர்ந்தவர் எவரும் இஸ்லாத்திற்கு புறம்பானவற்றை செய்யக் கூடாது என்பதே அம்மதம் வழியுறுத்துவதாகவும், மீறிச் செயல்பட்டால் அதற்கு ஏற்ற குறைவான நிரந்தர சொர்கப் பலன்கள் கிடைக்குமாம். எனவே தனது நிரத்தர சொர்கத்தின் பலன்களை நமக்கு வாழ்த்துச் சொல்வதால் செலவழிக்கிறாரே என்ற நெகிழ்ச்சியே இஸ்லாமிய நண்பர்கள் வாழ்த்து சொல்லும் போது எனக்கு ஏற்படும்.

மேலே சீனப் புத்தாண்டுக்கு வாழ்த்துப்பாடல் பாடும் மலாய்காரர்கள் (இசைக்குழு) பழமைவாதத்தை புறக்கணித்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

*******

தமிழ் கிறித்துவர்களில் கத்தோலிக்கப்பிரிவினர் பொங்கல் கொண்டாடி அவர்கள் மதவழக்கப்படி மாதாவுக்கும் ஏசுவிற்கும் படைத்து உண்ணுகின்றனர். அவர்கள் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுவது போல் தெரியவில்லை, நான் அறிந்தவரையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த சீனர்களுக்குள் சீனப் புத்தாண்டு பொதுவாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனாவில் பல்வேறு மதத்தை சேர்ந்த சீனர்களும், இஸ்லாமிய சீனர்களும் சீனப் பெயர்களைத்தான் இட்டுக் கொள்கின்றனர், அவர்கள் பெயர்களில் அரபு வாசனையோ, ஆங்கில வாசனையோ குறைவு, பவுத்த மற்றும் தாவோ இச சீனர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் சீனர்கள் மற்றுமே பிறர் கூப்பிடுவதற்காக தனக்கு தானே ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர், இது பொதுவாக அவர்கள் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பெயராக வெறும் அலுவலகம் சார்ந்த பெயராகவே அந்த ஆங்கிலப் பெயர்கள் இருக்கும். ***மலேசிய சீனர்கள் இஸ்லாமுக்கு மாறும் போது அவர்கள் பெயரும் அரபி பெயருக்கு மாறும் ஏனெனில் மலேசியா சீனர்கள் பெரும்பான்மை பெற்ற நாடு அல்ல*** ஆனால் சீனப் பெயர்கள் மதம் சார்ந்தவை அல்ல என்பதால் சீன நாட்டின் சீனர்கள் அப்பெயர்கள் அவர்களின் மதங்களுக்கு பொதுவான ஒன்றாகவே கருதி தம் மொழியில் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.

பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ? நான் ஆயுத பூசை அன்று ஆயுதங்களுக்கு பொட்டிட்டு அவல் பொறிகடலையுடன் அல்லாவுக்கு தொழுது கொண்டாடும் இஸ்லாமியரைப் பார்த்திருக்கிறேன் அது போல் செய்பவர்கள் மிகக் குறைவே. தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பண்டிக்கை என்று தான் பொங்கல் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது, அதை தத்தம் மத விதிகளின் படி கொண்டாடத் தடை எதும் இல்லை என்னும் போது, கொண்டாடுவதில் தவறென்ன. அதற்கான முயற்சிகள் இதுவரை மெத்தடிஸ்ட், பெந்தகோஸ் கிருத்துவரும் இஸ்லாமியரும் எடுத்தது போல் தெரியவில்லை.


சிங்கப்பூரைப் போல் சிறந்த ஆட்சியாகவும் தொழில் வளமான நாடாகவும் தமிழ் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கவில்லை, இந்திய அரசியல் சூழலில் மக்கள் நெருக்கம் காரணமாக ஊழல் என்பது தவிரக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது, மேலும் தேசிய நிரோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்று உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்,

ஆனால் தமிழருக்கு பொதுவான நாள், தமிழர் திருநாள் தமிழ்பேசும் அனைத்து மதத்தினரால் பொதுவாகக் கொண்டாடப்படுவது எப்போது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த ஏக்கம் கூட இங்கிருக்கும் சீனர்களைப் பார்த்து வந்தது தான், பல்வேறு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் பேசும் மொழிசார்ந்து அவர்கள் அனைவரும் சீனப்புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

பொங்கல் கொண்டாடினால் தான் தமிழனா ?

நமக்கான பொது அடையாளம் மொழி என்ற அளவில் இருப்பதுடன் சேர்த்து ஒரு பொதுவிழா ஒருமித்து கொண்டாடுவதன் மூலம் நாம் அனைவரும் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் இணைந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டு நம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தும், மேலும் நாம் வேறு வேறு மதத்தை சார்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் கூறுகளையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தகர்க்கும்.


******

இன்றைய நாளை தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடும்
மற்றும்
பொங்கலாகக் (மட்டும்) கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

17 ஜனவரி, 2011

பொங்கல் பொங்கல் !

வழக்கமாக வேலை நாட்களில் வரும் பொங்கல் இந்த ஆண்டு சனிக்கிழமை வந்ததால் கொண்டாட மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது. சிங்கை குட்டி இந்தியாவிலும் இரு ஆண்டுகளாக பொங்கலுக்கு அலங்கார மின் விளக்குகள் ஒளிர்ந்தன. வழக்கமாக பொங்கல் காய்கறிகளுக்கு வரும் பச்சை மொச்சை இந்த ஆண்டு தேடினாலும் கிடைக்கவில்லை. தமிழக தொடர் மழையால் மொச்சைப் பூக்கள் உதிர்ந்தோ அல்லது விளைச்சல் குறைந்தோ இருக்கலாம் என்றே நினைக்கிறேன். மற்றபடி பனங்கிழங்கு, மஞ்சள், இஞ்சி மற்றும் இதர பொங்கல் காய்கறிகள் கிடைத்தன.

7:00 - 9:00 நல்ல நேரமாம். அன்று சனிக்கிழமை காலை 9:00 - 10:30 இராகு காலம். இந்தக்கணக்குகளெலெல்லாம் இந்தியாவைத் தாண்டி எடுபடுமா ? சிங்கையில் பகல் வெளிச்ச சேமிப்பிற்காக ஒருமணி நேரத்தை கூட்டியே வைத்திருக்கிறார்கள், 6:30 - மணிக்கு மேல் தான் சூரியன் வெளியே தலைகாட்டும், சூரியன் உதிப்பை வைத்து கணக்கிடும் நாள், வின்மீன் கணக்குகள் இப்படி தள்ளப்பட்ட பகல் உடைய நாடுகளில் சூரிய உதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப்பார்பது நம்பிக்கை என்றாலும் எந்த வகையிலும் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இவற்றிலெல்லாம் எனக்கு சிறிதும் நம்பிக்கையும் கிடையாது. பூமி என்றாவது சுழலாமல் போனால் அன்று கெட்ட நாள், மற்றபடி எல்லா நாளும், நேரமும் என்னைப் பொருத்த அளவில் உலகில் உள்ள ஒருவருக்கேனும் நல்ல நாள் தான் நல்ல நேரம் தான்.

சனிக்கிழமை என்பதால் பொருமையாகவே பொங்கலிடுவோம் என்கிற முடிவில் காலை 7 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 7:30 வாக்கில் பொங்கல் வைத்தோம், பானையில் பசும்பாலை ஊற்றி வைத்த பற்ற வைத்த 10 நிமிடத்திற்குள் இரு பானைகளும் பொங்கியது. இருவருக்குப் போதும் என்று சிறிய அளவில் வாங்கிய சில்வர் பானைதான், விளக்கி எடுக்க சில்வர் பானையே சரியாக இருக்கும் என்பதால் சில்வர் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகிறோம், அதுவும் சென்ற ஆண்டு அடிப்பிடிக்க அதை தமிழகம் செல்லும் போது எடுத்து நன்றாக தேய்த்து திரும்பவும் எடுத்து வந்திருந்தோம்.

வெண்பொங்கல், சர்கரை பொங்கல், மரக்கறி எல்லாம் செய்து முடிக்கவே 9:00 மணிக்கு மேல் ஆகி இருந்தது. இடையில் மகள் அரிசிமாவினால் கோலம் போட்டு முடித்திருந்தாள். அதற்குள் செங்கதிரை எழுப்பி பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் சொல்ல வைக்க அவன் கையில் தட்டையும் கரண்டியையும் பிடித்த ஒலி எழுப்பச் செய்ய, கரண்டியை வீசி எரிந்தான், பிறகு புத்தாடை அவனுக்கு அணிவித்து, பொங்கலை வழிபாட்டு அறையில் வைத்து பூசை போட்டு முடிக்க 9:30 மணிக்கு மேல் ஆகி இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்தால் கொண்டாட்டம் தான் அவனுக்கு, தீப ஆரதனைக்குக் முன்பே சாமி கும்பிட போட்டால் நீச்சல் அடிக்கும் (குப்புற கிடக்கும் குஷி மன)நிலையில் அவனுக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. சென்ற ஆண்டு இதே நேரத்தில் வயிற்றினுள் இருந்தான். எங்களுக்கும் அவன் வருகையால் இல்ல எண்ணிக்கை இந்த பொங்கலுக்கு கூடி இருந்தது மேலும் பொங்கல் கொண்ட்டாட்டத்தை உற்சாகம் ஆக்கியது.

அளவான இனிப்புடன் சர்கரைப் பொங்கல் மிகச் சுவையாகவே வந்திருந்தது. பெண்கள் மட்டும் தான் பண்பாட்டு உடைகளை அணிய சமூகம் பணித்திருக்கிறது, நினைக்க வெட்கமாக இருக்க... இன்னிக்காவது வேட்டி அணிவோம் என்றே நான் அணிந்திருந்தேன். அன்று முழுவதுமே வெளியிலும் கூட வேட்டியுடன் சென்று வந்தேன். ராம்ராஜ் வேட்டி சட்டை நல்லா தான் இருக்கு. தூய வெள்ளையில் கட்டியதும் நான் தமிழன் என்கிற ஒரு கர்வத்தைக் கொடுக்கிறது, வேட்டி அணிபவர்கள் கண்டிப்பாக அதை உணர்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சில மனத்தடைகளைத் தவிர்த்து என்னைக் கேட்டால் ஆண்களுக்கு எளிதான, உடுத்த வசதியான (சவுகரியம்) உடை வேட்டி தான்.

வழக்கமாக பொங்கல் அன்றே வரும் பொங்கல் இடுகை, வீட்டில் கணிணியை பதிவெழுதப் பயன்படுத்தக்கூடாது, படிக்க மட்டுமே என்கிற தற்கட்டுப்பாட்டினால் இன்று வந்துள்ளது.

பொங்கல் கொண்டாடிய, தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.


இது சென்ற பொங்கல் :

2009 பொங்கல்

14 ஜனவரி, 2010

பொங்க(ல்) வச்சாச்சு !

வேலை நாளில் பொங்கல் வந்தால் சிங்கையில் பொது விடுப்புக் கிடைக்காது, அதி காலையில் , மாலையில், விடுப்பு எடுத்து மூனு வழியில் பொங்கல் வைக்கலாம். விடுப்பு எடுத்து வைத்தால் தொலைக்காட்சிகளின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்க. காலையில் எழுந்து வைப்பது என்று முடிவு செய்தோம்.

அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 5:15 மணிக்கு செய்ய துவங்கி சேனை, பனங்கிழங்கு, பரங்கிக்காய், பூசனிக் காய், வாழைக்காய், பச்சை மொச்சை, பச்சை துவரை, வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முருங்கை காய் எல்லாம் போட்டு பொங்கல் கறி மற்றும் சர்கரை வெண் பொங்கல் செய்து முடிக்க காலை 6.15 ஆச்சு.




ஒரு மணி நேரத்தில் மிகவிரைவாக எல்லாம் முடித்து 6:30க்கு படையல் போட்டு முடிந்தது. (பொங்ல் வைக்க நாள்காட்டியில் நேரம் இருக்குமாம், நமக்கு நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்லை, எல்லா நாளும், நேரமும் நல்ல நாள் தான்)



எல்லாம் முடித்து சாப்பிட அமர்ந்து சன் தொலைக்காட்சியை ஓடவிட்டால் நமீதா பொங்கல் கிண்டுறாங்க.




பொங்கல் புத்தாண்டு சேர்த்தே கொண்டாடினாலும் புதுத் துணி எடுக்கும் வழக்கம் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த ஆண்டுக்கு புத்தாடைகளுடன் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்பது இந்த ஆண்டு பற்றுறுதி.

சென்ற ஆண்டு, பொங்கல் பதிவு:

பொங்கல் புராணம் !



அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்துகள் !

சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாட இருப்பவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளையும், மற்றவர்களுக்கு (கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லனுமா ? இல்லையா ?) பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

14 ஜனவரி, 2009

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) !

சிங்கையில் இந்திய, தமிழ் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த குறையில்லாமல் கொண்டாடலாம். பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, அகப்பை, கரும்பு அனைத்தும் கிடைக்கும். எங்கள் வீட்டில் மண் பானையில் செய்வது இல்லை, வாங்கினால் பொங்கல் முடிந்ததும் அதை தூக்கிப் போடனும், இல்லை என்றால் கவனமாக உடையாமல் வைத்து பாதுகாத்து அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தனும், இரண்டுமே கடினம் தான். அதனால் இரு சிறிய எவர்சில்வர் பானைகளில் தான் கடந்த 9 ஆண்டுகளாக பொங்கல் வைக்கிறோம். மூவருக்கு அதில் வைப்பதே மீந்து போகும்.

தீபாவளிக்கு கிடைப்பது போல் பொங்கலுக்கு பொதுவிடுமுறை கிடையாது, எப்போதாவது சனி / ஞாயிற்றில் பொங்கல் வந்தால் பொறுமையாக செய்ய முடியும், இந்த ஆண்டு புதன் கிழமை வந்ததால் எல்லாம் விரைவாகவே செய்து முடிக்கவேண்டிய கட்டாயம். மஞ்சள் / இஞ்சி கொத்து போகி அன்று வாங்கினால் கழிபட்டதே கிடைக்கும் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே பச்சரிசியுடன் சேர்த்து வாங்கிவிட்டோம். நேற்று புத்தம் புதிய பொங்கல் காய்கறிகளை வாங்கினேன். பொங்கல் கறியில் மொச்சை, மற்றும் அனைத்து கிழங்குவகைகளையும் போட்டு செய்வது வழக்கம், சக்கரை வள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக மூன்று கடை ஏறி இறங்கி ஒருவழியாக அரைநெல்லிக்காய், சர்கரைவள்ளிக்கிழங்கு, தலைவாழை மற்றொரு கடையில் கிடைத்தது. மற்ற நாட்களை விட பொங்கலுக்கு முதல் நாள் சற்று விலை கூடுதலாக இருக்கும், பண்டிகையில் தானே விற்பனையாளர்களும் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பதை நினைத்துக் கொண்டு வாங்குவேண்டியதுதான். சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா ? அதைக் கொண்டு வந்து விற்பதற்காக சற்று கூடுதலாகக் கொடுத்தால் ஒன்றும் குறைவில்லை என்றே நினைக்கத் தோன்றும்.

பொங்கலுக்கு தேவையான சாமான்கள் ஆயத்தம் ஆச்சு. பொங்கல் எத்தனை மணிக்கு வைப்பது? சிங்கையில் ஞாயிற்றெழுச்சி காலை 7 மணிக்கு மேல் தான். விடுமுறை நாள் இல்லையே, நான் நாள் தோறும் காலை 6.15 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் இடத்தை அடைய 8.15 ஆகும், அதனால் பொங்கல் வைப்பதை அதிகாலை (பிரம்ம நல்வேளை - பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) சான்றோரை (மனைவிதான்) கலந்து ஆலோசித்து, 4.30 மணிக்கு தொடங்க,

10 நிமிடத்தில் பொங்கியது. அந்நேரத்துக்கு மகளை எழுப்பி 'பொங்கலோ...பொங்கல்' சொல்லும்மா....என்றால், 'இன்னிக்கு நம்ம வீட்டில் என்ன ?' என்று எழுந்திருந்தாலும் தூக்க கலக்கத்தில் கேட்டாள், இத்தனைக்கும் நேற்று இரவே 'நாளை பொங்கல்' என்று சொல்லி வைத்தோம். பொங்கல்களை நான் பார்த்துக் கொள்ள, பொங்கல் காய்கறி சமையலை மனைவி முடித்தார்.



(எங்கள் வீட்டில் எப்போதும் பூசைப் போடும் பணி என்னுடையதாம்)

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, பூசையெல்லாம் போட்டு, ஆதவன் இருக்கும் இடத்தை நோக்கி கற்பூரம் காட்டிவிட்டு, சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தால் 6.45 ஆகிவிட்டது. பொங்கலை சிறிது உண்டுவிட்டு (சர்கரை பொங்கலில் முந்திரி மிகுதியாக போட்டுவிட்டிங்க, திகட்டுது என்று அம்மணியின் புலம்பல்), நண்பகல் உணவிற்காக பொட்டலம் கட்டிவிட்டு, 7 மணிக்கு மகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் வந்து சேர காலை 9.00 மணி ஆகிவிட்டது. இன்று 45 நிமிடம் அலுவலகம் நேரத்தை பொங்கலுடன் சேர்த்து விழுங்கியாச்சு.

பொதுவிடுமுறை நாளாக இல்லாததால், சன் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைகாட்சியிலும் நடிகர்/நடிகைகளின் பொங்கல் வாழ்த்துகளை கேட்கபெறமுடியாத துர்பாக்கிய சாலி ஆகிவிட்டதில் பெரிய வருத்தம் தான்




(ஹைய்யா......புது சட்டை ! )

அனைவருக்கும் தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

12 ஜனவரி, 2009

இங்கெல்லாம் இவ்வளவு விரைவாக ?



லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் 2009


இராதா காதல் வராதா பாடலுக்கு ஒரு கிருஷ்ணனும் நான்கு கோபியர்களும் நடனம்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பொங்கல் பற்றிய விளக்கம்




இது ஒட்டி (ஸ்டிகர்) இல்லை, உண்மையான பசுதான்


மாட்டுக்கார வேலா என் மாட்டைக் கொஞ்சம் கூப்பிடுடா...


பொங்கல் வரைக்கும் தான் மாடுகளை இங்கே பார்க்கலாம், அப்பறம் பார்க்கனும் என்றால் விலங்கியல் பூங்காவுக்குத்தான் போகனும்


இந்த ஆண்டு குர்பானியில் சிக்காத மகிழ்ச்சியை அசைப்போட்டபடி ஆடுகள் :)


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து கரும்பு வாங்கலையோ......


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து நான் வாங்கிட்டேன் (பின்னால) பையில தான் இருக்கு...



பொங்கலுக்கும் பிள்ளையாருக்கும் என்ன தொடர்ப்பு, கரும்புக்கு பிள்ளையார் தான் துதிக்கையால் தண்ணீர் பாய்ச்சுறாரோ ?

பின்குறிப்பு : பொங்கல் ஏற்பாட்டாளர் தமிழ் பற்றாளர் போலும், மறக்காமல் மருந்துக்குக் கூட தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்