பின்பற்றுபவர்கள்

கலவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 மே, 2012

கலவை 30/மே/2012 !

சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. சாலைக்கு தள்ளி 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் கோவிலை தொலைவில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன், இரண்டு வாரத்திற்கு முன் நண்பர்கள் இருவரின் விருப்பத்தினால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ண வேலைப்பாடுகளால் இழைத்து வைத்திருக்கிறார்கள் கோவிலை. ஜோகூர் பாரு பகுதியின் அறிவிக்கப்படாத சிறிய சுற்றுலாத் தளம் போல் நிறைய பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், அவர்களில் வெளி நாட்டினருக்கு 10 ரிங்கிட் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. ஒரு மலேசிய இளம் சாமியார் அந்தக் கோவிலை உருவாக்கி அங்கு ஒரு ஆன்மிகக் குழுவை உருவாக்கி அந்த கோவிலில் அவர்களது ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறார். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்திருந்தனர், ஆனால் மருவத்தூர் குரூப் கிடையாது. கோவிலுனுள் ஏசு, புத்தர், சாய்பாபக்கள் உள்ளிட்டோரின் வெள்ளை பலிங்கில் செய்த உருவச் சிலைகள் உள்புறச் சுற்றில் இருந்தன. ஜோகூர் செல்பவர்கள் ஒருமுறை சென்று பார்க்கலாம், அருகே இரயில் தண்டவாளம் கூட உண்டு.








*****

இரண்டு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் இலக்கிய வட்டம் சார்ப்பில் பட்டிமன்றம் நடந்தது, கண்ணகி மாதவி கற்பு பற்றிப் பேசாமல் கர்ணன் - கும்பகர்ணன் இவர்களில் தியாகி யார் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மகாபாரதம் முழுவதும் வந்து போகும் ஒரு பாத்திரத்தையும், இராமயணத்தின் இறுதியில் வரும் ஒரு பாத்திரத்தையும் ஒப்பிடுவதில் இருவருக்குமான ஒப்பிடத் தக்கப் போதிய தகவல் இல்லை என்பதால் கர்ணன் ஆதரவு மற்றும் கும்பகர்ணன் ஆதரவு இருவருமே கர்ணன் பற்றிய ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்களாகச் செய்து கொண்டு இருந்தனர். கடைசியாக தீர்ப்பை கர்ணனுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டனர். கர்ணன் படம் மறு வெளியீடு செய்ததன் பலனோ. தலைப்புகளும் ஒப்பீடும் அபத்தமாக இருந்தாலும் பேச்சுகள் போரடிக்கவில்லை. என்னைக் கேடால் முதல்வர்களில் மோசமானவர் கருணாநிதியா, ஜெ-வா என்று பட்டிமன்றம் வைத்தால் பேச நிறைய தகவல்கள் இருக்கும்.

*****

இதுவும் இரண்டுவாரம் முந்தைய தகவல் தான், 2 வாரம் முன்பு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மோசமான சாலை விபத்து. 1.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி விலை உள்ள பெர்ராரி காரை மிக வேகமாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து விளக்கை மதிக்காமல் ஒரு வாடகைக் காரில் பலமாக மோத, பெராரி சொந்தக்காரர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார், வாடகை கார் ஓட்டுனர் வயது 52 மறுநாள் மருத்துவமனையில் இறந்து போனார், வாடகைக் காரில் பயணம் செய்த தற்காலிகமாக சிங்கப்பூரில் இருந்த ஜப்பானிய இளம் பெண் வயது 20 விபத்து நடந்த அரைமணி நேரத்தில் மாண்டு போனார், அந்த மோசமான விபத்தில் அந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கிய பெண்ணின் முனகளைப் பொருட்படுத்தாமல், அங்கேயே அவளது பொருள்களை ஒரு ஆடவர் திருடிச் சென்றாராம். சிங்கப்பூரில் கடந்தவாரம் முழுவதும் அந்த விபத்து பற்றி தான் எங்கும் பேச்சு. 1.4 மில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புக்கு 5.88 கோடி. ஒரு நொடில் அவ்வளவு பணமும், மூன்று உயிர்களும் பாதிப்புக்கு உள்ளனது, விபத்தை நடத்தியவர் சீனாவில் இருந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த ஒரு பணக்கார இளைஞன் (32 வயது) அவனுக்கு ஒரு 8 மாத கர்ப்பத்துடன் ஒரு மனைவியும், ஒரு 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த விபத்து குடியினால் ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெராரி ஓட்டுனர் குடிந்திருந்தாராம்.


ஒரு நொடி விபத்தில் எப்படியெல்லாம் வாழ்கையே பறிபோகிறது என்பதைக் காட்டும் வீடியோ.

*****
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் பற்றி முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்களில் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன, அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன், பவர் ஸ்டார் போலி கவுரவம் தெரிந்தது தான், நிகழ்ச்சியின் தலைப்பும் பேசு பொருளும் தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு வந்திருந்தார். தான் அவமானப்படுத்தப் படுவோம் என்று கூட அவர் அறிந்திருக்கக் கூடும், கோபிநாத்தின் பேச்சுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. போலி கவுரவம் பற்றி பேசும் கோபிநாத் நடிகர் விஜயையும் அவருடைய அப்பாவையும் சிறப்பு விருந்தினராகக் கூட்டி வந்து அவர்களது கடந்த கால போலி கவுரவங்களையும் 'இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்' பற்றிக் கேள்வி கேட்க முடியுமா ? 100 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தைப் புறக்கணித்த ஜெவின் போலி கவுரவம் பற்றி கோபிநாத்தினால் கேள்வி எழுப்ப முடியுமா ? முற்றிலும் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கோட் சூட் போட்டு நடத்திவரும் கோபிநாத்தின் கவுரவம் எத்தகையது ? அவரது உடைக்காகத்தான் நிகழ்ச்சி பேசப்படுகிறதா ? வேறொரு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் என்பது காலவதியான விவாத முறை என்றெல்லாம் கூட இவர் ஒருமுறை திருவாய் மலர்ந்திருந்தார், இவர் நடத்தும் நிகழ்ச்சி ரசிக்கப்படுகிறது என்பதற்காக பாரம்பரியமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை பற்றி காலவதியானவை, பழமையானவை என்று இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் என்றே தெரியவில்லை, இன்றைக்கும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்திற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது. வளரும் நிலையில் கோபிநாத்தின் தான் தோன்றித்தனமான கருத்துகள் அவரின் வளர்ச்சிக்கு பின்னடைவே. கோபிநாத்தின் அத்தனை அவமானகரமான கேள்விகளுக்கும் கோபப்படாத பவர் ஸ்டார் இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் நுழைந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.

*****

இப்பெல்லாம் எங்க பையன் செங்கதிர் அடம் பிடிப்பதை நிறுத்த ஐபோன் கை கொடுக்கிறது ஆனாலும் அவன் மிகுதியாக அடம்பிடிப்பதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது, ஒரு 20 நிமிடம் கையில் கொடுப்போம். தொடு திரையை நன்றாக கையாளுகிறான், பிடிக்காதவற்றை (பெரும்பாலும் ஐபோன் விளையாட்டுகளை) உடனேயே மூடிவிட்டு வேறொன்றை அழுத்தி எடுத்துக் கொள்கிறான், சிறிய குழந்தைகளும் பயன்படுத்தும் படி ஐபோன் அமைந்திருப்பது தான் அதன் வெற்றி என்றே நினைக்கிறேன், டாக்கிங் கலெக்சன் எனப்படும் பேசும் விலங்குகள், பறவைகள் ஆகிய விளையாட்டுகளை விரும்பி அதனுடன் பேசுகிறான். கண்ணுக்கு பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக கொஞ்ச நேரத்தில் அவன் கையில் இருந்து பறித்து கையை வேகமாகச் சுழற்றி 'காக்காய் தூக்கிப் போய்விட்டது' என்று மறைத்துத்தான் பிடுங்க முடியும், அவ்வாறு செய்வதை கவனித்து வந்து ஐபோனுக்கு பெயர் 'காக்கா' என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான், எப்போதெல்லாம் போன் வேண்டுமோ அப்போது 'அப்பா காக்கா' என்று கேட்கிறான். செம அக்குறும்பாக இருக்கிறது. வேலைக்கு பிறகு மற்றும் வார இறுதிகளில் குழந்தையுடன் நல்ல பொழுது போக்கு.



27 மார்ச், 2012

கலவை 27/மார்ச்/2013 !

கலவையாக எழுதி ரொம்ப நாள் ஆச்சு, இடையில் பூனையார் புகுந்ததால் கலவைக்கு நேரம் ஒதுக்கவில்லை.

செல்வேந்திரன் : சென்ற பிப்ரவரி மாதம் திருப்பூர் பதிவர் செல்வேந்திரன் பணித் தொடர்பில் சிங்கை வந்துச் சென்றார், சிங்கைப் பதிவர்களை சந்திக்க முன்கூட்டியே விருப்பம் தெரிவித்திருந்தார். செல்வேந்திரன் இளம் பத்திரிகையாளர் இந்து நாளிதழில் பணியாற்றுகிறார். ஈராண்டுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். மூன்றாண்டுகளாக அவ்வப்போது தனது வலைப்பதிவில் எழுதிவருகிறார், விஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஒருமுறை இவரை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைத்திருந்தார். சிஙகை வந்திருந்தார், நண்பர் ரோஸ்விக் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அவர் சிங்கை வந்திருந்தபொழுது அவரது அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்ததால் எங்களாலும் உடனேயே சந்திக்க முடியவில்லை, பின்னர் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (26/2/2012) அன்று முஸ்தபா அருகே ஒரு வெளி உணவகத்தில் வட்டமேசையாக சந்தித்தோம். மனிதர் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளை கொண்டிருக்கிறார், எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசினார், சுறுக்கமாகச் சொன்னால் அன்பால் செய்யப்பட்ட உருவங்களில் செல்வேந்திரனும் ஒருவர், சந்தித்துப் பேச மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, நல்ல நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பது மகிழ்வானது தானே, அவருக்கும் அம்மகிழ்ச்சியை நாங்கள் குறைவில்லாமல் கொடுத்திருப்போம் என்றே நினைக்கிறேன். பின்னர் வானூர்தி நிலையத்திற்குச் சென்று வழியனுப்பித் திரும்பினோம்.





ராசி (எ) ராஜ்குமார் சின்னசாமி : கொஞ்சம் பெரிய உருவம், எனக்கு வலைப்பதிவு மூலம் அவ்வளவாக பழக்கம் கிடையாது, இரண்டொரு முறை பின்னூட்டத்தில் கடுமையாக பதிலும் சொல்லி இருக்கிறேன், ஆனால் கூகுள் ப்ளஸ் மூலம் தான் இவர் நன்கு நெருக்கமானார், இவருக்கும் நமக்கும் பொதுவான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை, இவர் முழுக்க முழுக்க அம்மா ஆதாரவாளர், அரசியல், சமூக எண்ணங்கள் தவிர்த்து பார்த்தால் மனுசன் ரொம்பவுமே ஜாலியான ஆளு, சில பேரிடம் பேசும் போது எப்போதும் கிண்டலும் கேலியுமாகத்தான் பேசுவோம், அந்த வகையான ஆளு இவர். எவ்வளவு ஓட்டினாலும் சிரித்துக் கொண்டு பதிலுக்கு ஓட்டுவார், மற்றபடி கோபப்படமாட்டார். இவரும் சென்ற வாரத்திற்கு முன் முன்கூட்டியே சொல்லிவிட்டு சிங்கை வந்து சென்றார், ஜோதிபாரதி விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தார். வலைப்பதிவு நண்பர்கள் வழக்கமாக கூடும் கொடை கடையில் சந்தித்தோம், மறுநாள் பதிவர் கிரி சிங்கையின் மையப் பகுதிக்கு இவரை அழைத்து சென்று வந்தார், விமான நிலையத்திற்கும் சென்று அனுப்பினோம். அன்பால் செய்யப்பட்ட பெரிய உருவங்களில் ராசியும் ஒருவர் (இருவர் என்று சொல்லனுமா ?, அதான் பெரிய உருவம் என்று சொல்லியாச்சே)




இந்த இருவருமே எல்லோரிடமும் தயக்கமின்றி, மகிழ்ச்சியாக ரொம்ப நாள் பழகியவர்கள் போலவே பழகினர், வலைப்பதிவின் பிற நன்மைகள் என்றால் அது நமக்கு நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது. தனிமனித தாக்குதல் இன்றி எழுதினால் எந்தப் பதிவரையும் எப்போதுமே சந்திக்க நமக்கும் தயக்கமே இருக்காது. சிங்கைவரும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் எங்களில் ஒரு ஐந்து பேரையாவது சந்திக்க முடியும், ஆனால் ஒரு சிலர் சிஙகைக்கு வந்து சென்று பிறகு சிங்கைக்கு சென்றதாக எழுதும் பொழுது, நம்மை ஏன் இவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்ற கேள்வி நிற்கிறது. வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் சந்திக்க எங்களுக்கு நேரம் இருக்கும்.

******

இருவாரங்களுக்கு முன் மலேசியாவிற்கு பணித் தொடர்பில் சென்றிருந்தேன், சென்று திரும்பும் போது அலுவலக நண்பர் 'புத்ரா ஜெயா' என்னும் நகருக்கு அழைத்துச் சென்றார், அது மலேசிய தலைநகர் கே எல் விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் இடம் (இது நகரின் மையத்தில் இருந்து 70 கிமி தொலைவில் உள்ளது. புத்ரா ஜெயா' சற்று மலைபாங்கான மற்றும் ஏரிகளுடன் அமைந்த அழகிய நகரம், வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த நகரின் உருவாக்கம் மலேசிய அரசின் தலை நிர்வாகத்திற்காகவே உருவாக்கப்பட்டதாம், பளிச்சிடும் வேலைப்பாடுகளுடன் அகலமான ஓரளவு உயரமான கட்டிடங்களில் அரசு அலுவல்கள் இயங்கிவருகின்றன. அருகே கலை நயத்துடன் கட்டப்பட்ட தொழுகைக்கான மசூதி, ஆக்ரா ஆற்றுக் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகால் போல் ஏரியின் பக்கத்தில் அமைந்துள்ளது அந்த மசூதி முகப்பில் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய நிறுத்துமிடம், அதன் கீழே சுற்றுலா பொருள்கள் விற்கும் கடைகள். அங்கு சென்ற பிறகு மழைத்தூறல் அந்த இயற்கை எழில் சூழ்ந்த நகருக்கு மேலும் மெருகூட்டியது, எனக்கு ஐரோப்பிய நகரங்களை நினைவு படுத்தியது, அங்கு இருந்த பேருந்து நிறுத்தம், தொங்கு பாலங்கள் கூட அனைத்துலக தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.






*****

சென்றவாரத்திற்கு முந்தைய வாரம் சிங்கையில் ஐடி ஷோ எனப்படும் தகவல் தொழில் நுட்ப விற்பனை அங்காடி நடைபெற்றது, கட்டுக்கடங்காத கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை IT Show, PC Show, Comex, இன்னும் ஏதாவது பெயரில் நடந்து கொண்டே இருக்கும், அப்படி என்ன தான் வாங்குவார்களோ, கூட்டத்திற்கு குறைவே இருக்காது. குறிப்பாக சீனத் தயாரிப்புகள் தான் 90 விழுக்காடு விற்பனையாகிறது.


*****

சிம்பு மட்டும் தான் பாடுவாரா ? 'யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தருயாடி..........'



( என் படம் என்று சொல்லி என் பழைய படங்களுக்கு இணைப்புப் கொடுக்கும் மகராசன்களின் அயர்ச்சியைப் போக்கவும், ஜெலுசில் விற்பனையை கூட்டவும் இந்தப் புதியப் படம்)

2 நவம்பர், 2011

கலவை 02/நவ/2011 !

தீபாவளி : ஒருவழியாகத் தீபாவளிப் பேச்சு, ஒரு நான்கு நாள் பயணமாக உறவினர் இல்ல நிகழ்வுக்கு இல்லத்தோடு வந்து அதே விரைவில் தீபாவளிக்கு முன்பே மகள் பள்ளித் தேர்வை முன்னிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது, 400 - 500 வெள்ளிகள் இருந்தால் போதும் வார இறுதியில் கூட வந்து திரும்பலாம் சிங்கை - சென்னை பக்கம் தானே. இருந்தாலும் பயண அலுப்பு ஒருவாரத்திற்கு தொடரத்தான் செய்கிறது. தீபாவளி துணிகளையெல்லாம் சென்னையிலேயே வாங்கியாச்சு, நல்லி சின்னச் சாமி செட்டி(யார்) கடையில் வாங்கிய பட்டுவேட்டி பட்டுச் சட்டைத்தான் என்னோட தீபாவளித் துணி, ஆயிரம் பட்டுப் பூச்சிகளின் ஆத்ம சாந்தியின் மவுனத்தில் பட்டுவேட்டிச் சட்டை நன்றாகவே பளபளத்தது. சொன்னா யார் கேட்கிறாங்க ஆடுமாடு கோழி வளர்ப்புப் போல் பட்டுபுழுவும் மனித அன்றாட வாழ்க்கையின் துணித் தேவையை நிறைவுச் செய்யப் படைக்கப்பட்டதாம், அப்படியே சுடுதண்ணியில் அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம். பட்டு உடைகளில் கிடைக்கும் பீடு(கம்பீரம்) வேறெதிலும் கிடைக்குமா ? பெண்கள் இன்னும் புடவைகளைத் துறக்காமல் இருப்பதற்கு பட்டும் அதன் பகட்டுமே காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சும்மாச் சொல்லக்கூடாது தீபாவளிக் கொண்டாட்டம், அதன் களை இவைகளிலெல்லாம் சென்னையை மிஞ்ச நகர் இல்லை. பட்டாசு விறுவிறுப்பாக விற்கவில்லை மற்றபடி துணிக்கடை, நகைக்கடை விற்பனை படுவேகம். முகப்பில் சின்னதாகத் தெரியும் நல்லி (பழைய கடை) பெரிய குடோன் போல் உள்ளே சென்று கொண்டே இருந்தது. விலை ? மற்ற அஞ்சு மாடிக் கட்டிடத் துணிக்கடைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, அதே போல் பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளிலும். பால் பாட்டிலின் எஞ்சிய பாலைக் கொட்டிக் கழுவ இடம் தேடி படாதபாடு பட்டேன்.

மூன்று நாள் பயணத்திலும் ஒரு நாள் பயணமாக நண்பருடன் கீழத் திருப்பதிவரைச் சென்று திரும்பினேன். கீழத் திருப்பதி நுழைவாயில் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள், அன்றாடம் அவரது சுப்ரபாதம் திருப்பதிக் கோவிலில் ஒலிப்பதன் நன்றிக்கடனோ தெரியவில்லை, குஷ்பு தவிர்த்து தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகை / பாடகிகளுக்கு தமிழ்நாட்டில் சிலை இருப்பது போல் தெரியவில்லை, அண்மையில் நடிகை சாவித்ரிக்கும் ஆந்திராவில் சிலை அமைத்துள்ளார்கள். நம்ம தமிழ்நாட்டில் சிலைகள் வைத்தால் ஒருவேளை சாதி சங்கத்துக்கு அவை சேர்ந்திடுமோ ? சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள்.

(இணையத்தில் எடுத்தப்படம், நேரில் காரில் இருந்தபடி படம் எடுக்க சரியாண கோணம் அமையவில்லை)


திரும்பும் போது 'பீமாஸ் ஹோட்டல்' ரெஸ்டாரண்டில் உண்டு வந்தோம். பீமாஸ் தனியாக இருக்கும் ரெஸ்டாண்டின் உணவுச் சுவை இங்கு இல்லை, ஒருவேளை இது விடுதியுடன் இணைந்துள்ளதால் அவ்வளவு தான் இருக்கும் போல. கோங்ரா சட்னி, பருப்புப் பொடி இருந்தது. கர்நாடகா உணவுகளில் இனிப்புக் கலந்திருக்கும் ஆந்திரா உணவுகளில் காரம், சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையின் நோயாளிகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் மிகுதியாகச் சிகிச்சைப் பெருகின்றனர், காரணம் காரம் தான் என்கின்றனர் சிலர்.

திருப்பதிப் போகும் வழியில் ஒரு இரயில் நிலையம், இந்தியாவிலேயே மிக நீளமானப் பெயர் கொண்ட இரயில் நிலையமாம், நண்பர் கூறினார். 'வெங்கட நரசிம்ம ராஜுவாரிப் பேட்டை' நீங்க கேள்விப்பட்டு இருக்கிங்களா ? திருத்தணி தாண்டி வருகிறது இந்த நிலையம்.

கீழத்திருப்பதியில் பெருமாளைப் பார்க்கவில்லை, ஆனால் பெருமாள் மாடுகள் அதிகம் தென்பட்டன, வெள்ளிக்கிழமைகளில் கடைகடையாக வசூல் செய்கின்றன, வழக்கமான பூம் பூம் உறுமி இல்லை, அதற்கு பதிலாக நாயணம் வாசிக்கிறார் மாட்டுகாரர். மாடும் தலையாட்டுவதில்லை, மாட்டின் தலையில் கட்டியிருக்கும் உண்டியலில் சில்லரைக்காசைப் போடுகிறார், சிலர் மாட்டைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். ரொம்ப ஆண்டுகள் ஆச்சு பூம் பூம் மாடுகளை நான் நேரில் கண்டேன்.

தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு தான் சென்னையில் இருந்து சிங்கைத் திரும்பியதால் அலுப்பு, சோர்வு நீடிக்க இந்த ஆண்டு தீபாவளி காலையில் 8 மணிக்கு எழுந்து கொண்டோம், அதன் பிறகு எல்லாவற்றையும் செய்து முடிக்க பகல் 11 ஆகி இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி ஏன் இவ்வளவு ஃபோராக இருக்கிறது என்று மகள் கூட அலுத்துக் கொண்டாள். செங்கதிருக்கு இது இரண்டாம் தீபாவளி. அக்கா மத்தாப்பு கொளுத்துவதை வெகுவாக ரசித்தான். அதற்கும் முன்பே சென்னையில் பட்டாசு கொளுத்திப் பார்த்தாச்சு, சிங்கையில் பூத்திரி மட்டும் தான் அனுமதி என்பதால் பட்டாசு வெடிக்கும் ஆசையை சென்னையில் தீர்த்துக் கொண்டோம்.



******

நான் சென்னையில் இருந்த நாட்களில் பதிவர் நண்பர் குசும்பனை அழைத்துப் பேசினேன், பெயர் சொல்லாமல் அழைத்து கலாய்க்க அவரும் கடைசிவரை இன்னார் என்று கண்டுபிடிக்கவில்லை, நானும் சொல்லவில்லை அப்படியே துண்டித்தும் விட்டேன். அதே போல் அப்துல்லாவிடமும் ஒரு ஆட்டம், கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பிறகு இன்னார் என்று சொன்னேன், ஓம்காரை அழைக்க அவரும் திணறினார். இன்னொரு நண்பர் டிபிசிடி மட்டும் தான் அழைத்ததும் குரலைக் கண்டுகொண்டார், ஒருவேளை எனது எண்ணை சேமித்து வைத்திருந்திருப்பார் அதன் வழியாகக் கூட கண்டுகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். சென்னை / தமிழகத்தில் இருந்து அழைத்தால் அங்கேயே இருப்பவர்கள் மட்டும் தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறார்கள், நன்றாக குரல் தெரிய பழகியவர்கள் கூட குரலை வைத்து இன்னார் என்று உடனேயே சொல்லமுடிவது இல்லை. இதப்பற்றி பஸ்ஸுல எழுத.....'உங்க குரல் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலா ? உடனே கண்டுகொள்ள...' ஜீவ்ஸ் அடித்த கமெண்ட் ரசித்தேன், சிரித்தேன்.


******

இத எப்படிச் சொல்வது, சொல்லாமல் விட்டால் நாளை வரலாறு பழிக்குமோ ? அட நானும் 'ஏழாம் அறிவு பார்த்துட்டேன்' ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் வந்ததால் விமர்சனம் எழுதவில்லை, படம் ஒருமுறைப் பார்க்கலாம், ஏகப்பட்ட விளம்பரப் பின்னனிகளை காட்சிக்கு காட்சி வைத்து டெண்டுல்கர் கிரிக்கெட் சட்டைப் போல் ஒரே வெளம்பர உத்தியாக இருக்கு, தமிழ் உணர்வுடன் நமக்குத் தெரியாத போதி தர்மர் உள்ளிடவர்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் வெளம்பர நெடி சகிக்க முடியவில்லை, முன்பெல்லாம் திரைப்படம் போடும் முன் விளம்பரப்படங்களைப் போட்டு முடிப்பார்கள், இப்போது திரைப்படங்களின் ஊடாகவே வந்து தொலைக்கின்றன அவைகள், காசு கொடுத்து இந்த கண்றாவிகளையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறோம், போதி தர்மரை வைத்து ஏர்செல்லுக்கு வெளம்பரம் கொடுக்கனுமா ? படம் பட்ஜெட் எகிறினால் நடிகரோ, இயக்குனரோ சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா ? ஏஆர் முருகதாசுக்கு 10 கோடியாம் ஒரு படம் இயக்க, இவ்வளவும் வாங்கிவிட்டு ஏன் வலுக்கட்டாயமாக விளம்பரங்களையும் பார்க்க வைக்கிறார்கள் ?

******

இளையராஜா வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வர அவரது மனைவி இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். என்னதான் சொத்து சுகம், வான் புகழ் இருந்தாலும் இணையைப் பிரிவதில் கிடைக்கும் இழப்பை அவை ஈடு செய்யாது, அதைத்தான் 'சம்சாரம் போனால் சகலமும் போச்சு' என்பார்கள். இளையராஜாவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

பிகு: எனது இடுகைகள் அனைத்தும் தட்டச்சு செய்து, திருப்பிப் படிக்க நேரமின்மையால் அப்படியே வெளி இடுகிறேன், எழுத்துப் பிழையை பொருட்படுத்தாதீர்கள்.

3 அக்டோபர், 2011

கலவை 03/அக்டோபர்/2011

உள்ளாட்ச்சித் தேர்தல் : இந்த முறை தேமுதிக தவிற வேறெந்தக் கட்சியும் கூட்டணி இன்றி போட்டி இடுகின்றன. சமச்சீர் கல்வி, கூடங்குளம், பரம குடி கலவரங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் ஆளும் கட்சிக்கு ஜிங்சா அடித்து வந்த விஜயகாந்த், கூட்டணியில் இருந்து கழட்டிவிட்அதிமுக மீது விமர்சனங்கள் வைத்துவருகிறார். 'அண்ணே உங்க நேர்ம ரொம்ப பிடிச்சு இருக்கு. மூன்று மாதங்களாக மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். உள்ளாட்ச்சித் தேர்தல்கள் கட்சி பார்க்காது செயல்படுபவரை ஆதரித்தால் அந்தப்பகுதி மக்கள் பயன்பெறுவர். தமிழகத்தில் காங்கிரசைத் துடைத்தது என்பது தவிர்த்து மக்கள் விரோத ஆட்சியாளர்களே தமிழகத்தின் அதிகாரமட்டத்தில் தொடர்வது தமிழகத்தின் சாபக்கேடு. சன் டிவி ஒருநாளும் இல்லாமல் மக்கள் பிர்ச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதாம், நேற்றைய செய்திகளில் 'அறிவிக்கப்படாத மின் வெட்டு' பற்றி ஐந்து நிமிடம் பொதுமக்களிடம் குறை கேட்டு ஒளிபரப்பினார்கள், முகவின் இருண்ட காலத்தில் இது போல் ஒரு நாளும் சன் டிவி செய்தது இல்லை. அதில் பேட்டி கொடுத்த திருநெல்வேலி முதிய பெண் ஒருவர் நேற்றைய செய்தியில் 'திடிரென்று கரண்டு போகுது எங்களால வேல வெட்டி' எதையும் செய்ய முடியவில்லை என்றார். அதற்கு முந்தைய நாள் அதே அம்மா 'நகப் போட்டுக்கிட்டு வெளியே போக முடியல ஒரே திருட்டு பயமாக இருக்கு' என்று தொடரும் நகை திருட்டுகள் குறித்தும் அதற்கு முந்தைய நாள் செய்தியில் பேசினார்.

*******

நாய் செல்லுமா சொர்க்கம் ? சென்ற சனிக்கிழமை அழகான நாய் படம் போட்டு 'முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி' என்ற தகவல் விளம்பரம் சிங்கைத் தமிழ் முரசில் வந்தது. நாயை வளர்த்தவர்களுக்கு அந்த நாய் எந்த அளவுக்கு நன்றியாகவும் அன்பாகவும் இருந்தது என்பதை அந்த விளம்பரம் உணர்த்தியது. ஆனாலும் நாய்க்கு சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். நல்ல வேளை 'ஆத்ம சாந்தி' வழிபாடு என்று அவர்கள் போடவில்லை. பூனைக்கு கடவுள் இருந்தால் அது ஒரு பெரிய பூனை அந்தப் பூனையால் நினைத்த இடத்தில் பாலோ எலியோ வரவழைக்க முடியும், நாய்க்கு கடவுள் இருந்தால் எழும்புத் துண்டுகள் சதைப்பற்றுடன் வரவழைக்கும், நம்ம மனித கடவுள் கான்செப்ட் கூட அப்படித் தானே, நம்மால் முடியாதவற்றை கடவுள் செய்து கொடுத்துவிடும் என்பது நம்பிக்கைதானே. மனிதப் பண்புகளற்ற கடவுள் எந்த ஒரு மதத்திலும் காட்டப்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

*******

இவர்கள் அந்த நாய்களைப் போல் பணக்கார வீட்டில் பிறந்திருகக் கூடாதோ ? என்று நினைக்கும் படி அவலங்களைப் பார்க்க ஆதங்கம், சினம், ஏரிச்சல் ஏற்பட்டது, இவர்களுக்கு மதம் அளித்த கடவுள்கள் நாளொன்றுக்கு கைப்பிடிச் சோறு கூட கொடுக்கமால் போனதை நினைக்க சினம், இவர்களை அடிமைகளாகக் கூட ஏற்றுக் கொண்டு வாழவிடாமல் சாகடிக்கும் எந்திரங்களை நம்பிய இன்றைய முதலாளிகள் உலகத்தின் மீது எரிச்சல். நரக நெருப்பு இன்னும் என்ன என்ன நரகக் கோட்பாடுகள் இருக்குமோ அவற்றையெல்லாம் சோமாலிய மக்கள் நாள்தோறும் அனுபவித்தே வருகிறார்கள், நாம் வீணடிக்கும் உணவில் கூட இவர்களின் பசி போக்கும் பருக்கைகள் இருக்கலாம். பழங்குடி இனருக்கும் ஆதிவாசிக்கும் மதம் வழங்கும் 'ஆண்டவன் அவர்களில் பலருக்கு உண்ண அரிசியே வைத்திருக்கமாட்டான் பின்னே எங்கே அரிசியின் மீது அவர்களின் பெயர்களை எழுதுவது ?


********

செல்பேசி இணையச் சேவை வந்த பிறகு தொலைகாட்சிகளில் செய்தி தவிர்த்து எதையும் விரும்பிப் பார்ப்பது இல்லை. வெளியே செல்லும் இடங்களில் 10 நிமிடத்திற்கும் மிகுதியான பயண நேரம் இருந்தால் யூடியூப் ஓட விடுவேன், அப்படி ஓடவிட்டதில் 'வென்றிடுவேன்........நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்......எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்....' என்ற அகத்தியர் படத்துப் பாடல். அது போன்று போட்டிப் பாடல்கள் இப்பொழுதெல்லாம் படங்களில் மிகக்குறைவு அல்லது இல்லை. டி எம் எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் கர்ஜனை செய்து பாடி கலக்கி இருப்பார்கள், அதில் இரவணனாக நடிக்கும் ஆர் எஸ் மனோகருக்கு டி எம் எஸ் குரல், இராவணனின் கவுரவம், அகந்தை அனைத்தையும் முகத்தில் அப்பட்டமாகக் காட்டி இராவணின் உயிராகவே உட்கார்ந்திருப்பார். யார் இசைப்பதில் மலை உருகும் என்பதே போட்டி, இராவணனுக்கு அகத்தியருக்கும் போட்டி நடக்கும், ஆக்ரோசமான வாசிப்பில் இராவணனுடைய வீணையின் தந்தி அறுந்துவிடும் தொடர்ந்து வாசிக்கும் அகத்தியர் மலையை உருகச் செய்வார், இராவணன் தோற்றுவிடுவார். இப்ப இந்தப் படம் வந்தால் செல்லாது செல்லாது இரவணனுக்கு வேற வீணையை கொடுத்து வாசிக்கச் சொல்லி போட்டியைத் தொடரச் செய்யுங்கள் என்று சொல்லலாம். கடவுள் வாழ்த்தை கணக்கில் கொண்டு அம்பிகாவதி 99 பாடல் தான் பாடினான் என்று தலையறுத்த சமூகம் இது. வீணை தந்தி அறுகாமல் பாடினால் தான் வெற்றி என்ற கட்டுபாடு எதுவும் இன்றி ஆனால் அதை வைத்தே வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்களாம் :) முழுப்படமும் இங்கே

யூடியூப் இணையச் சேவை வாழ்க வாழ்க. திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களைக் கூட கோடம்பாக்கம் காக்கிறதோ ஆனால் யூடியூப் காக்கும் போல.

********

சிறு கவிதை : சிங்கையில் இந்த வார இலக்கிய விழாவில் கவிமாலைக் கவிதைகள் அடங்கிய நுல்களை வெளியிட்டு இருந்தனர். பொதுவாக கவிமாலைக் கவிதைகள் தலைப்பு கொடுக்கப்பட்டு பின்னர் அவற்றை கவிஞர்கள் தங்கள் சிந்தனையில் எழுதிவந்து கவிமாலை நிகழ்ச்சிகளில் வாசிப்பார்கள், அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வழங்குவர், வாசிக்க வந்த கவிதைகள் சிலவற்றை ஆண்டுவிழாவில் கவிதைத் தொகுப்பு நூல்களில் சேர்த்து வெளி இடுவார், ஏணியும் தோணியும் என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாத கவிமாலையில் சேர்க்கப்பட்ட எனது கவிதையும் தொகுப்பு நூலில் வந்திருந்தது, நேரமின்மையால் நான் விழாவிற்குச் செல்லவில்லை

ஏணியும் தோணியும் !

ஏணி ஏறிய பின் எட்டி உதைக்கும் கால்களே !
உங்கள் கால்களின் தன்னம்பிக்கை வலி(மை)யை
உணர்ந்து கொண்ட பெருமையில்
மீண்டும் மீண்டும் பிறருக்காகவும் சாயவே விரும்புகிறேன் !

வறண்ட ஆற்றங்கரையில் ஓய்ந்திருக்கும்
தோணி சொல்லிற்று,
கண்ணீர் பெருக்கில் வீழ்ந்தோரை கரைசேர்க்க
முயல்கிறேன், எடுத்துச் செல்வீர்களா ? இலங்கைக்கு !

31 ஆகஸ்ட், 2011

கலவை 31/ஆகஸ்ட்/2011 !

ஊகங்களுக்கு அப்பாற்பட்டு தூக்குதண்டனையை நீக்கக் கோரி முதல்வர் ஜெ கொண்டுவந்த தீர்மானம் வரவேற்பு பெற்றிருக்கிறது, விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பொடோ சிறையில் ஒராண்டுகாலம் கழித்த வைகோ 'ஜெயலிதா வரலாற்றுப் புகழ் பெற்றுள்ளார்' என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார், என்று என்பதைப் படித்தப்பிறகு இவை வெறும் சட்டமன்ற வழக்கம் இல்லை என்று உணரமுடிகிறது. விடுதலைப்புலிகள், ஈழம், தமிழர் நலம் என்பதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் வைகோ தவிர்த்து ஏனையோர்கள் சொல்லி இருந்தால் இவை வெறும் புகழ்ச்சி என்றே எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனினெல் வைகோ வாழ்நாளில் ஈழத்தமிழர்களின் நலனுக்காக் சிறைவாசம் உள்ளிட்ட பல அற்பணிப்புகளைச் செய்திருக்கிறார், அந்த நிலைப்பாட்டை தமிழக அரசியல் நிலைப்பாட்டில் கலக்காமல் அவர் ஜெவுடன் கூட்டணி அமைத்த பொழுது எள்ளி நகையாடியவர்களில் நானும் ஒருவர் என்பதை இப்போது நினைக்க வைகோவிடமும் வைகோ தொண்டர்களிடமும் மன்னிப்புக் கேட்கத் தோன்றுகிறது.

******

கருணாநிதியின் லாவனி

2000-ம் ஆண்டில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் ஒருசில ஆண்டுகளே தண்டனையை அனுபவித்திருந்தனர். அப்போதுதான் ராஜீவ் காந்தியின் மறைவுக்குக் காரணமாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டியபோது, தி.மு.க. அமைச்சரவையில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவினைக்கூட நான் ஜெயலலிதாவைப்போல தன்னிச்சையாக எடுத்துவிடவில்லை. அமைச்சரவையில் வைத்து விவாதத்துக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது. அப்போதுகூட தூக்கு தண்டனைக்கு ஆளான நான்கு பேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று நான் தெரிவித்த கருத்தினை ஏற்றுத்தான், அவருக்கு அப்போது கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. - கருணாநிதி

அதாவது மூன்று பேர் குறித்த, ஜெ மரணதண்டனைக் குறைப்புக் குறித்தத் தீர்மானம் தன்னிச்சையானதாம். டமிழின தலிவர் (அப்)பட்டம் முற்றிலுமாக உருவப்பட்டதால் ஏற்பட்ட ஆற்றமையோ ? தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்கள் தானே தலைவர் ஆகும் தகுதி பெறுகிறார்கள்.......?

*****

செங்கொடியை யாரோ தீயில் தள்ளியதைப் போன்று சிலர் பேசுகிறார்கள், தரம் கெட்டத் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள் இருக்கும் நாட்டில் இவை நகைப்புக்கும் கேள்விக்கும் இடமாவது வியப்பளிக்கவில்லை, தன் உயிருனும் மேலாக நினைப்பவர்களின் உயிருக்காக தியாகம் செய்வோர் ஒருசிலர் உண்டு, அவர்களின் தியாகம் வரவேற்கத் தக்கதல்ல ஆனால் போற்றுதலுக்குள்ளானவை, இந்த வேறுபாடு தெரிந்தவர்கள் செங்கொடியைப் போற்றுகிறார்கள், மற்றவர்கள் தூற்றுகிறார்கள். ஒரு நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கும் போது ஒவ்வொரு இராணுவ விரனும் கூட செங்கொடியாகத்தான் போரில் கலந்து கொள்கிறார்கள், தன் நேசத்துகுரியவர்களை காக்க இன்னுயிர் தரும் தற்காப்பு வீரனை கோழை என்று எவரும் சொல்வதில்லை, சொங்கொடி தவறான முன் உதாரணம் என்றாலும் அவரின் தன்னலமற்ற பேரன்பு ? சினிமா ஹீரோக்களுக்கு தீக்குளிக்கும் நாட்டில் செங்கொடிகளை அபத்தம் என்று சொல்வதே அபத்தம். உற்றாரும் உடன்பிறந்தோறும் செங்கொடி செய்தது தியாகம் என்று சொல்லும் போது எதிலும் பாதிக்கப்படாத நாம் தூற்றுவதற்கு முதல் ஆளாக நிற்கிறோமே ஏன் ? ஒரு தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், பலாத்காரம் செய்வோரை தாக்க முற்படாமல் பார்த்துக் கொண்டு இருந்து காவல் நிலையத்தில் முறையிடு, உன் நடவடிக்கை சட்டப்படியானது என்று சொல்கிறேன் என்கிறது உலகம்.

*****

போபால் விசவாயு கொலையாளி கவுரமாக வெளியேற்றப்பட்டான், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸுக்கு டெல்லியில் சிவப்புக்கம்பளம் வரவேற்புக் கொடுக்கப்பட்டது, இதனை எதிர்த்து மரணதண்டனைக்கு ஆதரவான எந்த நாயும் குரல் கொடுக்கவில்லை, சங்கராமன் கொலை வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இன்றும் நடக்கிறது, இதற்கெல்லாம் ஞாயஸ்தன்கள் அவற்றை விரைந்து நடத்த குரல் கொடுக்கக் காணும் சோ இராமசாமியும், சு சாமியும் நீதிக்கு தண்டனையான மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாம், வெட்கமாக இல்லையா ?

*****

தமிழகத்தின் அன்னா ஹசாரே இவர்கள் தான் என்று சென்ற கலவையில் ஊகமாக எழுதி இருந்தேன், மறுநாள் சுவரொட்டிகளே வந்துள்ளன. ஒபாமாவையும் சேகுவாரவையும் ஓரம் கட்டிட்டு அன்னா ஹசாரே அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளார், இதே திமுக ஆட்சி என்றால் அஞ்சா நெஞ்சன் ஒரு ஆள் தவிர்த்து 'தமிழகத்தின் அன்னா ஹசாரே' என்று போட்டுக் கொல்லும் தகுதி பிறருக்கு வாய்திருக்காது :)



26 ஆகஸ்ட், 2011

கலவை 26/ஆகஸ்ட்/2011 !

புதிய(பழைய) தலைமைச் செயலகம் பற்றி என்னன்னெவோ பரிந்துரைகளெல்லாம் செய்கிறார்கள். பு.த (புரட்சி தலைவி) அம்மா, மருத்துவ மனையாக மாற்றப் போகிறேன் என்று சொல்கிறார், வீம்பு எண்ணத்தை மாற்றிக் கொள்ள இவ்வளவு சிரமப்படனுமா ? கருணாநிதிக்கும், ஜெ தாவுக்கும் வருங்கால வரலாறு முறையெஎ தன்னிச்சையாளர், பிடிவாதக்காரர் என்ற பட்டங்களைத்தான் கொடுக்கும். தமிழனுக்கு நல்ல தலைமை கிடைக்கமால் போனதற்கு ஒற்றுமைகள் இல்லாததும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாததும் ஆகும். நல்லதொரு தலைவர்கள் உருவாக நாட்டில் பொது மக்கள் வாழ்வு உரிமையே கேள்விக்கு உட்படுத்தப்பட்டதாக இருந்தால் தான் உருவாகுவார்களோ என்னவோ. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைமைகள் தேவைப்படாததால் பொம்மைகளும், அறிவித்துக் கொள்ளாத சர்வாதிகாரிகளும் ஆளுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது, நாட்டுமக்கள் ஒற்றுமையாகவும் போராட்ட குணத்துடன் இருக்க அந்நிய படையெடுப்புகள் தேவை தான் என்றே நினைக்கிறேன், சரியா ?

1000 கோடிகளை விழுங்கிவிட்டு மாநகராட்சி குப்பைத் தொட்டி போன்று கவனிப்பாரின்றி கிடக்கிறது, கருணாநிதி புலம்புகிறார். தொட்டுத் தொட்டு பார்த்து கட்டியதாம், இராணி மேரிக் கல்லூரியில் கட்ட முயற்சித்த போது திமுக அதனை தடுத்ததால் தான் திமுக கட்டிய தலைமைச் செயலகத்தை ஜெ புறக்கணிக்கிறாராம், இவர்களுக்கு பொது மக்களின் வரிப்பணம் எவ்வளவு தன்மான விளையாட்டுகளாகப் போய்விட்டது பாருங்கள், 1000 கோடிக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெ ஆணை இடாதவரை உபிகள் பெருமூச்சு விடலாம். அந்தக் கட்டிடத்தை எது எதற்கோ பயன்படுத்துவதைவிட மாவட்டந்தோறும் இருக்கும் கலைப் பொக்கிசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து கண்காட்சியாகவும், கலைக் கூடமாக, ஓவியக் கூடமாகவும், தொல்பொருள் காட்சிக் கூடமாகவும் ஆக்கி, 200 ரூபாய் நுழைவுக்கட்டணம் வைத்தால், சுற்றுலா வருமானமாவது கிடைக்கும்.

***

எங்கள் ஊரில் அதிபர் தேர்தல் நடக்கிறது, இந்தியாவில் ஜனாதிபதி என்று இந்தியில் சொல்லப்படும் பதவி தான் சிங்கையில் அதிபர் பதவி, போட்டிக்கு நான்கு சீனத் தலைகள் போட்டி இடுகிறார்கள், ஒருவர் துணைப்பிரதமராக இருந்து பின்னர் 2006ல் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தவர், மற்றவர்கள் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், நான்கு பேர்களின் இல்லப் பெயர்களும் 'டான்' தான். சிங்கையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடக்கிறது, தற்போதைய அதிபர் மேதகு எஸ் ஆர் நாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாகத் தொடர்கிறார், பதவிக்காலம் அடுத்த திங்கள் நிறைவுறுகிறது. புதிய அதிபராகப் போட்டி இடுபவர்கள் அனைவருமே அதிபர் பதவியை அதிகாரப் பதவியாக மாற்ற முயற்சிப்பதாக சொல்லிவருகின்றனர். சிங்கப்பூர் பல இன சமூகம், அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமையில் மாற்றம் இல்லை, என்பதால் இந்திய சமூக முன்மொழிவுக்கு அரசியல் ரீதியில் தனியாகத் தலைவர்கள் தேவைப்படுவதில்லை, இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களில் கனிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர். பார்க்க எளியவராகவும், பொலிவான தோற்றம் கொண்டவராகவும் இருக்கும் எஸ் ஆர் நாதன் இந்தியர்கள் பெருமைப்படும்படியும் சிங்கப்பூர் முன்னேற்றங்களில் முனைந்து செயல்படுவராகவும் இருந்துவருகிறார் என்பது பெருமைக்குரிய, பாராட்டத்தக்க ஒன்று. அடுத்து இந்தியர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட ஆண்டுகள் பல ஆகலாம்.
இப்போதைக்கு வருங்கால அதிபர் பெயர் மிஸ்டர் டான், ஆனால் அது எந்த டான் என்பது இந்த சனிக்கிழமைக்குப் பிறகு தெரியும்.

***

அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நான் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை, இந்தியாவிற்கு தேவைப்படும் புனிதச் சின்னத்திற்கான அத்தனை தகுதிகளையும் பெற்று இருக்கிறார் ஹசாரே, காந்தியை விட கூடுதல் நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு அவருக்கு கடவுளின் ஆசி இருக்கிறது, காந்தி பெயரைக் கேட்டாலே வாந்தி எடுக்கும் இந்துத்துவா கும்பல்கள் அன்னா ஹசாரேவை ஆதரிப்பது காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றவைக்க முடியும் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். இன்னொரு தேசத் தந்தையாக புனிதப்படுத்தி உட்கார வைக்க ஆள் கிடைத்துவிட்டார். எவ்வளவு நாளைக்குத்தான் காந்தியையே அகிம்சையும் உதாரணாமக் கூறிக் கொண்டிருக்க முடியும், வரலாற்றுக்குத் தேவை புதிய தேசத் தந்தைகள், அன்னா ஹசாரே சரியான பாதையில் அவ்விலக்கு நோக்கி ஊடகங்களால் தள்ளப்பட்டு இருக்கிறார். காந்திப் பேரைச் சொல்லி ஆட்சி நடத்தும் காங்கிரசை விமர்சனம் செய்து போராடும் காந்தியவாதி அன்னா ஹசாரே...உம் போராட்டம் வெற்றி பெருக, ஆனால் அதே சமயத்தில் இராஜிவ் கொலை வழக்குத் தொடர்பில் தூக்கு தண்டனையை எதிர்நோக்குபவர்களுக்கான ஆதரவுக் குரல்கள் இவ் அவசர வேளைகளில் அன்னா ஹசரேவின் ஆதரவாளர்களின் ஆதரவுக் கூச்சல்களால் அமிழ்த்தப்படுகிறது என்பது வருத்தம் தான். அன்னாஹசாரேவுக்கு ஆதரவு என்று வெளியே சொல்லாதவர்கள் தேசத் துரோகிகளாகவும் தூற்றப்படுகிறார்கள். உங்களில் யார் யார் தேசத் துரோகி ?

***

காஞ்சி மட சாமியார் ஜெயந்திரர் (எ) சுப்ரமணியன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சர்சைக் குறித்து செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று எல்லோரையும் விட ஜெயந்திரர் தான் ரொம்பவும் பயந்தார் என்றது நக்கீரன் உள்ளிட்ட செய்தி இதழ்கள். ஜெவிடம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்படாத உடன்பாடு இப்போது ஏற்படுமா ? சங்கரராமன் படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா ? இது சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே தீர்புகள் வழங்கப்பட்டாலும் அதன் பிறகு உச்ச நீதிமன்ற மேல்முறையீடு என பெரியவா ஆயுசுக்கும் வழக்கு நடக்கும் என்றே நினைக்கிறேன். தெய்வம் உட்கார்ந்தும் கொல்லாது நின்றும் கொல்லாது.....தண்டனைகள் அதிகாரமட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டவை அல்ல.

***

"ஆட்சி மாறினாலும் அண்ணன் செல்வாக்கு அசைச்சிக்க முடியாது........"

"எதை வச்சுச் சொல்றே....."

"அங்கப் பாரு, 'தமிழ் நாட்டின் அன்னா ஹசாரேவேன் போட்டு அண்ணன் படத்தை அன்னா ஹசாரேவாக மார்பிங்க் செய்து ஒட்டி இருக்காங்க...."

"தலை நகரில் இளையத் தளபதிக்கும், கேப்டனுக்கும் கூட ஒட்டி இருக்காங்களாமே"

****
அடுத்தவன் புகழ் நிழலில் புகழ் தேடும் அசிங்கம்........அடங்கவே மாட்டா(னு)ங்களோ...........!

****

சிங்கைப்பதிவர்கள் நடத்தும் மணற்கேணி 2010 ன் நிறைவாக வெற்றியாளர்கள் சிங்கப்பூர் அழைப்பட்டுள்ளார்கள், அவர்களுடன் ஆன நிகழ்ச்சிகள் குறித்த விவரம் இங்கே.

16 ஆகஸ்ட், 2011

சென்றவார அறுசுவை உணர்வுகள் !

இனிப்பு : எங்க ஊரு நாகைக்குச் சென்று சென்ற வியாழன் அப்படியே (பாலையூர் - எ - பாலூர்) கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றிருந்தேன், கிழக்கு கடற்கரைச் சாலை அந்தப் பகுதியில் புதிதாகச் செல்வதால் இருசக்கர வாகனத்தில் சாலையில் கீழே இறங்கி ஒரு கி.மீ குறுகிய பாதையில் வண்டியை ஓட்டினால் போதும் அடைந்துவிடலாம், கிட்டதட்ட ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகிற்று அப்படிப்பட்ட பச்சைகளைப் பார்க்க. பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் காலம் மழைக்காலம் அல்லது அறுவடை முடிந்த பிறகு என்பதால் வயல்வெளிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் விவசாயம் துவங்கி அறுவடை வரை ஊருக்குள் மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார்கள், இப்போதெல்லாம் அவ்வாறு பார்க்க முடியவில்லை, வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்.

நகரங்களுக்கு பலர் பெயர்ந்துவிட்டார்கள், சிறுவிவசாயிகளே தங்கள் நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டு பிற விவசாயிகளுக்கும் செய்து தருகிறார்கள், வேலைக்கு ஆள் கிடைக்காத சூழலில், விவசாயம் பார்க்க முடியாததால் பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. கதிர் அறுக்க, நாற்று நட எந்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை இயக்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது, கிராமங்களில் மாட்டுவண்டிகளையோ, மாடுகளையோ பார்க்க முடியவில்லை, நெல் அறுத்து குவித்து வைத்த வைக்கோல் போர் விலை போகாமல், யாரும் வாங்காமல் அப்படியே தான் கிடக்கிறது. அம்மா காலம் வரையிலும் எங்க வயலில் தட்டுத்தடுமாறி விவசாயம் நடக்கும், அதன் பிறகு என்ன ஆகும் என்று இப்போது தெரியவில்லை, இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வயலில் இறங்கி நடந்தேன், முன்கூட்டியே அம்மா அங்கு சென்றுவிட்டதால் எதிர்கொண்டார்கள். வயல் வெளி என்ன ஒரு பசுமை, கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கண் கொள்ளாக் காட்சி. வாய்க்காலுக்கு முதல் மடை என்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போது தண்ணீர் பாய்ச்ச வசதியான வயல்வெளி தான். சிறுவயதில் படிக்கிற காலத்தில் அங்கு செல்ல விருப்பம் இருக்காது, ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி வேலை செய்யச் சொல்லுவார்கள். பயிர் சுனை பட்டால் கை காலெல்லாம் அரிக்கும், இப்ப பார்க்க குளிர்ச்சியாக இருக்கு, அதுவும் மாலை 5 மணிக்கு மேல் மஞ்சள் வெயிலில் சுற்றிலில் பச்சை வெளிகள்.

அம்மா





களையெடுக்கும் பெண்மணி


புளிப்பு : சென்னையில் நண்பர் வசிக்கும் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன், அது ஒரு 7ஜி ரயின்போ காலனி போல் குடியிருப்பு பகுதிகளுக்கு ச-ரி-க-ம-ப-த-நி- என்று ஏழு ஆங்கில எழுத்தில் பெயர் வைத்திருந்தார்கள், அன்றைய நாள் ஞாயிறு குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து 'நம் குடும்பம்' என்ற பெயரில் இணைந்து கொண்டாடினார்கள், கோலப் போட்டிகளெல்லாம் நடைபெற்றது, கோலங்களில் மயில் கோலம் முதல் பரிசாகவும், கதகளி முகம் இரண்டாம் பரிசாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, கோலங்களில் பல மயில் கோலங்கள் இருந்தன.

பல மாநில மக்கள் அந்த குடியிருப்பில் வசித்தாலும் தமிழ் கோலத்திற்கு முதல் பரிசு. தமிழக மக்கள் இன்னும் கலை உணர்வோடு தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இருப்பிடங்களின் சூழல்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள இது போன்ற தனிப்பட்ட விழாக்கள் தேவை, அங்கு வசித்த அனைத்து சிறுவர் சிறுமியர்களையும் மேடை ஏற்றி எதோ அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வைத்து, ஒருவரையும் ஏமாற்றாமல் அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்தனர். நல்லா தமிழும் ஆங்கிலமும் தெரிந்த எந்த இருவரும் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது, அங்கே வசித்த இந்திக்காரர்கள் அவர்களுக்குள் இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தற்போது பேசாமல் விட்ட 'சார் சார்' தமிழகத்தில் வியாதியாகவே பரவி இருக்கிறது.



முதல் பரிசு பெற்றது



இரண்டாம் பரிசு பெற்றது




உப்பு : கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்தேன், இதுவரை பலமுறை அந்த வழியில் சென்றிருந்தாலும் பகலில் சென்றதில்லை, சோழிங்க நல்லூர் தாண்டி 'இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரைச் சாலை உங்களை இனிதே வரவேற்கிறது' என்ற வரவேற்பு பலகை இருந்தது. இயற்கை எழில் ஒன்றும் அவ்வளவாக ஈர்க்க வில்லை, உப்பளங்கள் இருக்கின்றன, வீட்டுமனைகள் வருவதற்கான கற்கள் நடப்பட்டு இருக்கின்றன, சாலைகளும் நேரானதாகவோ அகலமாகவே இல்லை, சாலை நடுவே தடுப்புகள் இல்லை, அந்த சாலையில் மணிக்கு 60 கிமி மேல் செல்வது பாதுகாப்பற்றது, நாள் தோறும் நடக்கும் விபத்துகளே கண்கூடு. இரவில் எந்த ஒரு போக்குவரத்து விளக்கும் கிடையாது. ஈசிஆர் சாலை எமன் குடியிருக்கும் சாலை தான்.

நான் கண்ட ஒரே இயற்கை எழில் லேசான மழை பெய்ததும் ஏற்பட்ட அழகான வானவில் தான். அதைத் தாண்டி பாண்டிச்சேரி சென்றேன் பாண்டி முதல்வர் இரங்கசாமிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளாம், 'அழகிரி டைப்' மிதமிஞ்சிய புகழ்ச்சி சுவரொட்டிகள் பாண்டி எங்கும் இரங்கசாமியின் பல்வேறு 'போஸ்களில்' சுவரொட்டிகள் முகம் சுளிக்க வைத்தது, அதில் ஒன்று தெய்வத்திருமகன் போஸ்டரின் நடுவே இரங்கசாமியின் படம் இருப்பது போன்றும் அடிக்கப்பட்டு இருந்தது, மனநலம் குன்றிய நாயகனாகக் காட்டப்பட்ட படத்தில் ரங்கசாமி முகம் ஒட்டுதல், வாழ்த்தா, வதையா ? ஒட்டியவர்களுக்கே வெளிச்சம். டிவிஎஸ் பிப்டியில் வரும் முதல்வருக்கு இவ்வளவு ஆடம்பர போஸ்டர்களா ? அடுப்பொடிகள் வேலைகள் தான், பாவம் வாழ்த்துவதற்கு பதில் வசைபாடி, முகம் சுளிப்போர் மிகுதி, எதுக்கு இத்தனை ஆடம்பரம், தேவையா அட போங்க சார். தமிழகம் - பாண்டியின் போஸ்டர் பண்பாடு ரசிக்க முடியவில்லை. இரங்கசாமிக்கு அடுப்பொடிகளே ஆப்பு வைத்துவிடுவார்கள் போல. பாண்டியைச் சேர்ந்த காரைக்காலில் சுவரொட்டிகள் கண்ணில் படவில்லை.






துவர்ப்பு : சென்ற வெள்ளிக்கிழமை சென்னை மெரினா சாலை வழியாக பயணித்தேன், கண்ணகி சிலை மிடுக்காக நின்று கொண்டிருந்தது, இன்னும் அம்மா விசுவாசிகள் கண்ணில் படவில்லையோ, இல்லை அதற்காகவே அந்தப்பகுதி சிலைகள் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்படுமோ யார் கண்டது. பொதுச் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது சென்னையில் கவர்ந்ததில் ஒன்று, அம்மாவுக்கு பிறந்த நாள் வரும் வரையில் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் சென்னையில் மாற்றமே இல்லாத பகுதி பாரிஸ் கார்னர் தான். அங்கே இருக்கும் மொத்த விற்பனைக்கடைகளை சேட்டுகளும் மலையாளிகளும். கொஞ்சம் தெலுங்கர்களும் ஆக்கிரமித்துள்ளனர், அவர்களிடமிருந்து சில்லரை விற்பனைக்காக தமிழர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மின்னனு சாதனங்களின் வாயிலாகவே அந்த இடங்கள் இருக்கின்றன, உலக நாடுகள் சீனப் பொருள்களைத் தவிர்த்தாலும் அவர்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் 'சிவப்பு' கம்பளம் விரித்து வைத்துக் கொண்டுள்ளது.





காரம் : அந்தப் பகுதியில் அமைந்த சரவண பவனுக்குச் சென்றிருந்தேன், குளிர்சாதன அறையில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் சனி / ஞாயிற்றில் தான் உட்கார இடம் கிடைகாது, தற்போதெல்லாம் வெளியே சாப்பிடுவர்கள் மிகுந்துவிட்டார்கள், அல்லது வீட்டுச் சமையல்கள் குறைந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சரவணா ஸ்பெசல் மீல்சாம். என்ன வென்று வாங்கினேன். 'அடப்பாவிகளா .........இவ்வளவு சாப்பிட்டுவிட்டு எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் ?' என்று நினைக்கத் தோன்றியது. அதில் அஜினமோட்டோ இல்லாத வகைகளே இல்லை, யாரு கேட்கிறார்கள். சுவை சுவை சுவையோ சுவை என்றே அனைத்து உணவு கடைகளிலும் அஜி(ர்)னமோடோ சேர்கப்படுகிறது.

உணவில் உப்பு அளவு, கொழுப்பு அளவு பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'என்னன்னு தெரியலை சார், நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார், இன்னிக்கு டக்குன்னு போய் சேர்ந்துட்டார்' யாரேனும் சொன்னால் விசாரித்து பாருங்கள், நேற்று அவர் ஏதேனும் புல்மீல்ஸ் கட்டி இருக்கக் கூடும். சென்னையில் அசைவ உணவுக்கடைகள் சைவ உணவு கடைகள் அளவுக்கு பெருகிவிட்டது, முன்பெல்லாம் 'சுத்தமின்மை' (அதாவது அசைவம் நன்றாக தூய்மை செய்து சமைக்கமாட்டார்கள் என்பதாக) காரணமாக வெளியே அசைவம் சாப்பிட மக்கள் தயங்குவார்கள், இப்ப பழகிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வரும் போது ஏசி பேருந்து பயணம் மிகக் குறைந்த பயணிகள், ஒரு அரைக்கிறுக்கன் செருப்பணியாத தன் காலை யாருமற்ற இருக்கை மீது வைத்திருந்தான். நடத்தினர் சொன்னதும் எடுத்துக் கொண்டான். அவன் அரைக்கிறுக்கன் என்பது அவன் செருப்பே அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் உறுதிபடுத்திக் கொண்டேன். ஏசி பேருந்தில் செல்பவர்கள் சாதாரணப் பேருந்தில் செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார்களாமே, அவர்கள் அந்த அரைக்கிறுக்கன் கால் வைத்த இடத்தில் கூட உட்கார நேரிடலாம்.


(இந்தப்படத்திற்கு என்ன செய்தியா ? மேலே இருக்கும் படத்தைப் போன்று தான், எந்த மரியாதையும் கிடைப்பதாகத் தெரியவில்லை, 1000 கோடிகளை விழுங்கிவிட்டு மதிப்பற்று கிடக்கிறது)

அன்று மாலை தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க்ஸ் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூன்றாம் மாடியில் தான் கழிவறையா ? மக்கள் வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கு ரண்டுக்கு போகவே மாட்டாங்களா ? ஏனிப்படி ? ஐஞ்சு மாடிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ?. உள்ளே அவசரத்துக்குச் சென்றால் 'வெஸ்டர்ன் டாய்லெட்' ஒண்ணே ஒண்ணு தான், அதிலும் சீட் கிடையாது, அதில உட்கார முடியுமா ? ஒருவழியாக முடித்து வந்தேன். ஏன் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் வைத்திருக்கும் குறியின் கவனம் சிறிதேனும் வருபவர்களுக்கு நல்ல கழிவறை ஏற்படுத்தித் தர வைக்க முடியவில்லை. அரசுகளின் கவனமின்மையும் காரணம், வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகள் இல்லை என்றால் அனுமதிகளை நீக்கலாமே. அப்போது அலறி அடித்து வசதி செய்வார்களோ.




சென்னையில் ஆட்டோக்கள் குறைந்து அந்த இடத்தை மாருதி வேன் போன்ற கூட்டுப் பயண வாகனங்கள் நிறைய ஓடுகின்றன, 8 பேர் வரை பயணம் செய்ய ஏற்ற வகையிலும், 5 கிமிதொலைவு வரை 10 ரூபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை ஓரளவு போக்கு வரத்து நெருக்கத்தை குறைத்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சாலை குண்டு குழிகள், தண்ணீர் இன்மை, மின்சார துண்டிப்பு, கொசுக்கடி இவற்றில் எதையும் பற்றி கவலைப்படாமல் ஆடி வெள்ளி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சென்னையில் அங்காங்கே சென்னையின் காலம்காலமாக வாழ்பவர்கள் நடத்திவருகிறார்கள், 'ஆத்தாள கும்புட்டு துண்ணூறு இட்டுனு போ....பாசாயிடுவ' எந்திரன் வசனம் நினைவுக்கு வந்தது.

கசப்பு : ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:15 விமானம், எல்லாம் முடித்து விமானத்திற்கு செல்லும் முன் காத்திருக்கும் அறைக்குச் சென்றேன், அந்த கூடத்தில் நடுப்பகுதிக்கு சற்று தள்ளி 'ஸ்மோக்கிங் அறைக்கு' எதிரே ஒரு நடுத்தரம் கடந்த பெண் மணி கிடத்தப்பட்டு இருந்தார், அவர் இறந்து விட்டார் என்பது அவரது அசைவற்ற உடலே சொன்னது. அவரது உடலில் இருந்த நகைகளை கழட்டி பாதுக்காப்பிற்காக கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர் ஒரு கடைநிலை ஊழிய பெண் மணி மூலமாக காவலர்கள், அங்கு நடப்பதைப் பார்த்தால் சென்ற அரைமணிக்குள் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றே தோன்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்தவராம், திரும்பப் போகும் முன் இதய வலியால் உயிர் துறந்திருக்கிறார், அவர் தமிழர் , 55 வயது என்று காவலர்களின் உரையாடலில் இருந்து தெர்ந்தது, பெயர் ஊரைக் கூட யாருக்கு அலைபேசி வழியாக தெரிவித்து ஆணை யிட்டுக் கொண்டிருந்தனர், எனக்கு பெயரும் ஊரும் நினைவுக்கு வர இயலவில்லை.

கிட்டதட்ட 1.30 மணி நேரம் அவ்வாரே கிடத்தப்பட்டு இருந்தார், காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோர் அருகில் நின்று கொண்டிருந்தனர், அங்கு வந்த பயணிகள் ஒருவருக்கும் அந்தப் பகுதியை தாண்டி செல்ல மனம் செல்லவில்லை. இறந்தவர் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றே தவிர்த்தனர், வழக்கமாக 'புகைப்பிடிக்கும் அறைக்கு' செல்லும் ஒருசிலர் கூட பயத்தின் காரணமாக அங்கு செல்லவில்லை. நான் தொலைவில் இருந்து கூட உடலை படம் எடுக்க விரும்பவில்லை. எதிர்பாராவிதமாக மரண மடைந்த ஒருவரை காவல் துறை முறைப்படியான நடவடிக்கை ('புரோசிஜர்') என்ற பெயரில் அங்கேயே கிடத்தி இருந்தது முகம் சுளிக்க வைக்காவிட்டாலும் வருத்தம் ஏற்படச் செய்யதது, உறவினர்கள் யாரும் அற்ற ஒருவராக அவர் கிடத்தி இருந்தது ஏற்கத்தக்கதே அல்ல, அவர் உடலுக்கு கொஞ்சமேனும் மரியாதைக் கொடுத்து, புரொசிஜர் படி உடனே அவரை அப்புறப்படுத்தாவிட்டாலும் சுற்றிலும் தற்காலிக திரையாவது அமைத்திருக்கலாம்.

அவருக்கும் மரியதை கொடுக்காவிட்டாலும் கூட விமானத்தில் ஏறக்காத்திருந்தவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது ஏனெனில் அவர்களில் பலர் வயதான பெற்றோர்களை பிரிந்து வந்திருக்கக் கூடும், அவர்களை நினைத்தாவது உடலை மறைத்திருக்கலாம். மற்றும் வயதானவர்களே கூட இருக்கக் கூடும். வழக்கமாக விமானத்திற்கு காத்திருக்கும் போது பயணத்தின் போது அசைப்போட்டபடியும், சில நண்பர்களுக்கு அலைபேசிக் கொண்டு இருப்பேன், ஆனால் இந்த முறை 'பாவம் அந்த பெண்மணி, அவரது உயிருக்கு தெரிந்திருக்கிறது நாடுகள் என்பது பெயர்களால் பிரிக்கப்பட்ட ஒரே மண், எங்கு பிரிந்தால் என்ன ?' ஆனால் அருகில் உறவினர்கள் இல்லையே' என்பது தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்