பின்பற்றுபவர்கள்

பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


30 மே, 2012

கலவை 30/மே/2012 !

சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. சாலைக்கு தள்ளி 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் கோவிலை தொலைவில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன், இரண்டு வாரத்திற்கு முன் நண்பர்கள் இருவரின் விருப்பத்தினால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ண வேலைப்பாடுகளால் இழைத்து வைத்திருக்கிறார்கள் கோவிலை. ஜோகூர் பாரு பகுதியின் அறிவிக்கப்படாத சிறிய சுற்றுலாத் தளம் போல் நிறைய பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், அவர்களில் வெளி நாட்டினருக்கு 10 ரிங்கிட் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. ஒரு மலேசிய இளம் சாமியார் அந்தக் கோவிலை உருவாக்கி அங்கு ஒரு ஆன்மிகக் குழுவை உருவாக்கி அந்த கோவிலில் அவர்களது ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறார். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்திருந்தனர், ஆனால் மருவத்தூர் குரூப் கிடையாது. கோவிலுனுள் ஏசு, புத்தர், சாய்பாபக்கள் உள்ளிட்டோரின் வெள்ளை பலிங்கில் செய்த உருவச் சிலைகள் உள்புறச் சுற்றில் இருந்தன. ஜோகூர் செல்பவர்கள் ஒருமுறை சென்று பார்க்கலாம், அருகே இரயில் தண்டவாளம் கூட உண்டு.








*****

இரண்டு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் இலக்கிய வட்டம் சார்ப்பில் பட்டிமன்றம் நடந்தது, கண்ணகி மாதவி கற்பு பற்றிப் பேசாமல் கர்ணன் - கும்பகர்ணன் இவர்களில் தியாகி யார் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மகாபாரதம் முழுவதும் வந்து போகும் ஒரு பாத்திரத்தையும், இராமயணத்தின் இறுதியில் வரும் ஒரு பாத்திரத்தையும் ஒப்பிடுவதில் இருவருக்குமான ஒப்பிடத் தக்கப் போதிய தகவல் இல்லை என்பதால் கர்ணன் ஆதரவு மற்றும் கும்பகர்ணன் ஆதரவு இருவருமே கர்ணன் பற்றிய ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்களாகச் செய்து கொண்டு இருந்தனர். கடைசியாக தீர்ப்பை கர்ணனுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டனர். கர்ணன் படம் மறு வெளியீடு செய்ததன் பலனோ. தலைப்புகளும் ஒப்பீடும் அபத்தமாக இருந்தாலும் பேச்சுகள் போரடிக்கவில்லை. என்னைக் கேடால் முதல்வர்களில் மோசமானவர் கருணாநிதியா, ஜெ-வா என்று பட்டிமன்றம் வைத்தால் பேச நிறைய தகவல்கள் இருக்கும்.

*****

இதுவும் இரண்டுவாரம் முந்தைய தகவல் தான், 2 வாரம் முன்பு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மோசமான சாலை விபத்து. 1.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி விலை உள்ள பெர்ராரி காரை மிக வேகமாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து விளக்கை மதிக்காமல் ஒரு வாடகைக் காரில் பலமாக மோத, பெராரி சொந்தக்காரர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார், வாடகை கார் ஓட்டுனர் வயது 52 மறுநாள் மருத்துவமனையில் இறந்து போனார், வாடகைக் காரில் பயணம் செய்த தற்காலிகமாக சிங்கப்பூரில் இருந்த ஜப்பானிய இளம் பெண் வயது 20 விபத்து நடந்த அரைமணி நேரத்தில் மாண்டு போனார், அந்த மோசமான விபத்தில் அந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கிய பெண்ணின் முனகளைப் பொருட்படுத்தாமல், அங்கேயே அவளது பொருள்களை ஒரு ஆடவர் திருடிச் சென்றாராம். சிங்கப்பூரில் கடந்தவாரம் முழுவதும் அந்த விபத்து பற்றி தான் எங்கும் பேச்சு. 1.4 மில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புக்கு 5.88 கோடி. ஒரு நொடில் அவ்வளவு பணமும், மூன்று உயிர்களும் பாதிப்புக்கு உள்ளனது, விபத்தை நடத்தியவர் சீனாவில் இருந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த ஒரு பணக்கார இளைஞன் (32 வயது) அவனுக்கு ஒரு 8 மாத கர்ப்பத்துடன் ஒரு மனைவியும், ஒரு 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த விபத்து குடியினால் ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெராரி ஓட்டுனர் குடிந்திருந்தாராம்.


ஒரு நொடி விபத்தில் எப்படியெல்லாம் வாழ்கையே பறிபோகிறது என்பதைக் காட்டும் வீடியோ.

*****
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் பற்றி முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்களில் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன, அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன், பவர் ஸ்டார் போலி கவுரவம் தெரிந்தது தான், நிகழ்ச்சியின் தலைப்பும் பேசு பொருளும் தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு வந்திருந்தார். தான் அவமானப்படுத்தப் படுவோம் என்று கூட அவர் அறிந்திருக்கக் கூடும், கோபிநாத்தின் பேச்சுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. போலி கவுரவம் பற்றி பேசும் கோபிநாத் நடிகர் விஜயையும் அவருடைய அப்பாவையும் சிறப்பு விருந்தினராகக் கூட்டி வந்து அவர்களது கடந்த கால போலி கவுரவங்களையும் 'இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்' பற்றிக் கேள்வி கேட்க முடியுமா ? 100 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தைப் புறக்கணித்த ஜெவின் போலி கவுரவம் பற்றி கோபிநாத்தினால் கேள்வி எழுப்ப முடியுமா ? முற்றிலும் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கோட் சூட் போட்டு நடத்திவரும் கோபிநாத்தின் கவுரவம் எத்தகையது ? அவரது உடைக்காகத்தான் நிகழ்ச்சி பேசப்படுகிறதா ? வேறொரு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் என்பது காலவதியான விவாத முறை என்றெல்லாம் கூட இவர் ஒருமுறை திருவாய் மலர்ந்திருந்தார், இவர் நடத்தும் நிகழ்ச்சி ரசிக்கப்படுகிறது என்பதற்காக பாரம்பரியமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை பற்றி காலவதியானவை, பழமையானவை என்று இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் என்றே தெரியவில்லை, இன்றைக்கும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்திற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது. வளரும் நிலையில் கோபிநாத்தின் தான் தோன்றித்தனமான கருத்துகள் அவரின் வளர்ச்சிக்கு பின்னடைவே. கோபிநாத்தின் அத்தனை அவமானகரமான கேள்விகளுக்கும் கோபப்படாத பவர் ஸ்டார் இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் நுழைந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.

*****

இப்பெல்லாம் எங்க பையன் செங்கதிர் அடம் பிடிப்பதை நிறுத்த ஐபோன் கை கொடுக்கிறது ஆனாலும் அவன் மிகுதியாக அடம்பிடிப்பதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது, ஒரு 20 நிமிடம் கையில் கொடுப்போம். தொடு திரையை நன்றாக கையாளுகிறான், பிடிக்காதவற்றை (பெரும்பாலும் ஐபோன் விளையாட்டுகளை) உடனேயே மூடிவிட்டு வேறொன்றை அழுத்தி எடுத்துக் கொள்கிறான், சிறிய குழந்தைகளும் பயன்படுத்தும் படி ஐபோன் அமைந்திருப்பது தான் அதன் வெற்றி என்றே நினைக்கிறேன், டாக்கிங் கலெக்சன் எனப்படும் பேசும் விலங்குகள், பறவைகள் ஆகிய விளையாட்டுகளை விரும்பி அதனுடன் பேசுகிறான். கண்ணுக்கு பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக கொஞ்ச நேரத்தில் அவன் கையில் இருந்து பறித்து கையை வேகமாகச் சுழற்றி 'காக்காய் தூக்கிப் போய்விட்டது' என்று மறைத்துத்தான் பிடுங்க முடியும், அவ்வாறு செய்வதை கவனித்து வந்து ஐபோனுக்கு பெயர் 'காக்கா' என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான், எப்போதெல்லாம் போன் வேண்டுமோ அப்போது 'அப்பா காக்கா' என்று கேட்கிறான். செம அக்குறும்பாக இருக்கிறது. வேலைக்கு பிறகு மற்றும் வார இறுதிகளில் குழந்தையுடன் நல்ல பொழுது போக்கு.



14 மே, 2012

கழிவறைச் சின்னங்கள் !

மனிதனுக்கு (ஆண் / பெண் இருவருக்கும் தான்) அமைதி படுக்கை அறையில் கிடைக்கிறது என்றால், உடல் அழுத்தக் குறைவதும், புத்துணர்வும் கிடைப்பது கழிவறையில் தான், இதன் பிறகே பூசை அறையின் முக்கியமெல்லாம், ஒருவீட்டில் நல்லப் படுக்கை அறையும், கழிவறையும் இல்லை என்றால் அங்கு குடி இருப்பது மறைவான தெருவோரங்களில் குடியிருப்பதற்கு ஒப்பானது. பூசை அறைகளின் நறுமணங்களின் முக்கியங்களைவிட கழிவறைகளின் தூய்மையும் உலர்வும் மிகவும் இன்றியமையாதது. நாகரீக மேன்மை என்பதைவிட உலகின் பசிப்பிணி அகற்றமே மனித சமூகத்தின் முதல் நோக்கம் என்பது போல் தூய்மையான கழிப்பிடம் மிகவும் இன்றியமையாதது மற்றும் நோக்கமாகவும் இருக்க வேண்டும். 'தனித்திரு, பசித்திரு' - இதில் முதலில் வரும் தனித்திரு பூசை அறையில் யோக நிலையில் அல்லது தொழுகை / வழிபாட்டில் தனித்திருப்பதைக் காட்டிலும் கழிவறையில் தனித்திருத்தல் தான் தனிமனிதனின் உன்னதமான தேவையாக இருக்கிறது. நல்ல சுகாதாரமான, காற்றோட்டமான கழிவறையில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தாலும் அதில் கிடைக்கும் மன அமைதிக்கு ஈடு இணையை எந்த ஒரு வழிபாடும் தந்துவிடமுடியாது என்பதை நான் இங்கு பதிக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உடலின் கழிவேற்றம் உடலுக்கும் மனதிற்கும் சிறு இன்பத்தைத் தான் கொடுக்கும், அந்தக் கழிவு உயிர்நீர், சிறுநீர் மற்றும் உணவுக்கழிவாகக் கூட இருக்கலாம். 


அடக்கமுடியாமல் சிறுநீரை கழிவறைக் கிடைக்கும் வரை அடக்கிக் கொண்டு இருப்போர் கழிவறையில் அதை கழிக்கும் போது கிடைக்கும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு, அது தரும் புத்தணர்வு சுவையான ஐஸ்க்ரீம் உண்பதைக் காட்டிலும் உடலின்பம் தரக் கூடியவை. மலச்சிக்கல், நீர்கடுப்பு என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு முறை கழிவு வெளியேற்றமும் மனிதனுக்கு கொஞ்சமேனும் உடலின்பத்தைத் தூண்டிவிட்டு தான் செல்கிறது. உங்கள் கழிவறை தனிமைகளில் இங்கு படிப்பது நினைவிருந்தால் ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தது பசித்திரு, பசித்திருக்க உணவு செரிமானமும் அதன் பிறகு வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். தனித்திரு, பசித்திரு இந்த இரு சொல்லின் பொருளை முழுமையாக உணரவைப்பது ஆழ்மனத்தேடல்களோ, ஆன்மிகத் தேடல்களோ இல்லை கழிவறைகள் தான். பூசை அறைகளைவிட கழிவறைகளின் பரப்பளவும் உள் அலங்காரமும் நன்றாகவும், தூய்மையாக இருக்க வேண்டும். மனித சமூகத்தில் இலட்சியங்களில் ஒன்றாக தூய்மையான கழிப்பிடத்தின் தேவை எங்கும் உணர்த்தப்படவேண்டும். கழிவறைகளை தூய்மை செய்ய முகம் சுளிக்காதவர்களால் தான் இதனை மேம்படுத்த வேண்டும், என்னைப் பொருத்த அளவில் என் வீட்டு கழிவறைகளை நான் கழுவுவதை விரும்பிய செயல்களுள் ஒன்றாகத்தான் செய்கிறேன். பொதுக் கழிவறைகளை கழுவ அழைத்தாலும் என்னால் தயங்கமல் மனம் உவந்து அதைச் செய்ய முடியும். தொற்று நோய்க் கூடம், நெடி என்பது தவிர்த்துப் பார்த்தால் நம் உடலில் உள்ளவை தானே அங்கும். இங்கு கழிவறை என்று பொதுவாக நான் குறிப்பிட்டு இருந்தாலும் அவை குளியல் அறையையும் சேர்த்தே குறிப்பதாகும், வீடுகளில் அவை சேர்ந்து தான் இருக்கின்றது. உடலே ஒரு கோவில் என்பது போல் உடலே கழிவறைகளினாலும் ஆனது என்றும் சொல்லலாம்.

*******

கழிவறைச் சின்னங்கள் ஒவ்வொரு நாடுகளின் ரசனைக்கேற்று வரைந்துள்ளனர், குறிப்பாக உடைகள் அந்தப் பகுதி கலைகள் உள்ளிட்டவை கூட கழிவறைச் சின்னங்களில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் (30 ஆண்டுகளுக்க்கு முன்பு) தமிழகத்தின் பிரபல கழிவறைச் சின்னங்களாக, ஆண் பெண் கழிவறைகளைக் குறிக்க ரஜினியின் தலையையும், ஶ்ரீ தேவியின் தலையையும் வரைந்தோ அல்லது படத்தில் இருந்து வெட்டி ஒட்டியோ வைத்திருந்தனர், இவை பெரும்பாலும் நகர மற்றும் சிறு நகர திரையரங்க பொதுக்கழிவறைகளின் காட்சியாக இருக்கும். இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளின் படங்களைப் போடுவதில்லை. கரியால் ஆண் / பெண் உருவங்களை வரைந்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தில் கூட கவுண்டமணியையும் படத்தில் அவரின் மனைவியையும் படம் பிடிக்கும் செந்தில் அதை திரையரங்க கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைக் குறிக்கும் சின்னமாக ஆக்கி வைத்திருப்பார், அதைப் பார்த்துவிட்டு கவுண்டமணி செம டென்சன் ஆகிவிடுவார். கழிவறையின் முகப்புகளில் குறிப்பிட்டவரின் அனுமதி இல்லாமல் அவர்களின் படங்களை வைப்பது தமிழகத்தின் நடைமுறையாக இருந்தது, மற்றும் அதில் இடம் பெறும் படத்திற்க்குரியவர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதும் அந்தக் காட்சியில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு இருந்தது. வெள்ளைக்கார சமூகத்தின் அடி ஒற்றிய நாடுகளின் கழிவறை சின்னங்கள் பொதுவானது நீலக் கால் சட்டை அணிந்த ஆண் நிழல் உருவமும், முழுகால் வரை உடை அணிந்த நிழல் பெண் உருவமும் கழிவறைச் சின்னங்களாக இருக்கும்.

சில ரசிக்கத் தக்க நகைச்சுவையான கழிவறைச் சின்னங்கள்.

















மேலும் சில









(வளைகுடா நாடுகளில்?)




கீழே உள்ளதை பார்த்த பிறகு திறந்த ஜிப்போடு வெளியே வருபவர்கள் தான் நினைவுக்கு வந்தது :)


ரொம்ப நகைச்சுவையாக நான் ரசித்தது கீழே



அது அது........


இணைப்புகள் :

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?


16 நவம்பர், 2011

அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !

பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தீவிரவாதி என்கிற சொல்லுக்கு வடிவம் கொடுத்து வைத்திருப்பது ஊடகங்களும், அரசுகளும் தான், தீவிரவாதிகள் என்பவர் யார் ? தீவட்டிக் கொள்ளைக்காரர்களா ? தீவிராவதிகளுக்கு அரசு தண்டனைக் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ட்விட்டர் நண்பர் ஒருவர். பொதுவாக பொதுப் புத்தியில் ஊறிப் போனவர்களுக்கு எதையும் விளக்கினாலும் புரியாது, சிந்தாந்தங்கள் பேசும் அளவுக்கு நான் இசங்களைக் கரைத்துக் குடித்து இருக்காவிட்டாலும், கொஞ்சமேனும் பொதுப் புத்தியை தாண்டி சிந்திக்கும் ஆற்றல் உண்டு, அது வலையுலகினால் வாய்க்கப் பெற்றது என்று கூறுவேன். காரணம் வலைப்பதிவுகள் சொந்த அரசியல் தாண்டியும் பலவற்றை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்பதால் பல்வேறு தரப்பினரின் கருத்தைக் கேட்டு நமது எண்ணத்தை சீர் செய்து கொள்ள முடியும் என்பது என் கருத்து. திரும்ப தீவிரவாதிக்கு வருவோம்.

தீவிரவாதம் என்பது பலவகை உண்டு மதத்தீவிரவாதம், மொழித் தீவிரவாதம், இனத் தீவிரவாதம் மற்றும் பிற உரிமை மீட்புக்கான தீவிரவாதம், ஆனாலும் அரசுக்கு எதிரானக் கருத்துக் கொண்டவை, பொது மக்களுக்கு ஊறு விளைக்கத் தக்கவை என்று அறியப்படும் போது இவ் அமைப்புகளுக்கு தீவிரவாத என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது, அதற்கு குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் காரணமாகக் கூட இருக்கலாம், ஆனாலும் ஒரு நாட்டில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களில் 99 விழுக்காட்டினர் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது, எனவே தீவிரவாதிகள் என்பவர்கள் பிற நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து பயமுறுத்துபவர்களோ, வானத்தில் இருந்து குதித்த ஏலியன்களோ இல்லை, தங்களின் குறிக்கோள் என்று எதோ ஒன்றை வைத்துக் கொண்டு அது நிறைவேற வாய்ப்பில்லாத போது அரசுகளைப் பணிய வைக்க பொது மக்களின் வாழ்க்கை சிதரடித்துப் பார்ப்பவர்கள் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளை ஒப்பிட இவர்களால் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பு மிகுதி :)

தீவிரவாதம், சரி தவறு என்று நான் கூற வரவில்லை, இன்னும் சொல்லப் போனால் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யும் உரிமை எவருக்குமே கிடையாது என்ற கொள்கை கொண்டவன். தீவிரவாதி என்பவன் யார் ? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தண்டனைக் கொடுப்பவர்கள், தங்கள் ஆளுமைக்கு பணிய வைப்பவர்கள், மிரட்டிப் பார்ப்பவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். இவர்கள் தானே ?

அப்படிப் பார்த்தால் இந்தியன் படத்தில் வரும் இந்தியன் தாத்தாவும், அந்நியன் படத்தின் அம்பியும் கூட தீவிரவாதிதான். ஆனாலும் தீவிரவாதி என்றால் தாடி வைத்து பார்க்க நடுக்கம் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவனின் தோற்றத்தை மனதில் நிறுத்தி இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்களா ?

ஒரு அரசை அகற்ற அதற்கு எதிராக வாக்களிக்கும் போது பொதுமக்கள் கூட அப்போதைய அரசுக்கு எதிரானவர்கள் தான், என்ன அவர்கள் கையில் ஆயுதம் இருக்காது என்பதால் பொதுமக்கள் திவிரவாதிகளாக அறியப்படுவதில்லை :)

ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்களால் தீவிரவாதி அடையாளப்படுத்தப்பட்ட நாடு கடந்த சுபாஸ் சந்திர போஸ் ஒரு தீவிரவாதி என்பதை நம்ப மறுக்கும் மனம் தீவிரவாதம் பற்றிய பொது புத்திகளை மட்டும் அகற்றிக் கொள்ளாமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முழக்கம் இடுவது ஏன் ?

*******

பொதுவாகவே மரண தண்டனைப் பற்றிய எனது தனிப்பட்டக் கருத்து கூடாது என்பதே, இது வரை நாம் கண்ட மரண தண்டனைகளெல்லாம் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரடி அல்லது மறைமுக தொடர்ப்பில்லாததால் தான் வழங்கப்பட்டு இருக்கிறது, நாம் அன்றாடம் படிக்கிறோமே குடும்ப உறவுக்குள் வெட்டுக் குத்து கொலை பாலியல் வண்புணர்வு, கள்ளக் காதல் அதன் தொடர்பில் கொலை, இவற்றிற்கெல்லாம் பாதிக்கப்பட்ட உறவினர்களால் மரண தண்டனை வழங்கும் படி கேட்கப்பட்டுள்ளதா ? அண்மையில் ஒரு தந்தை தன் மகளை 200 பேர்களுக்கும் மேலானவர்களிடம் பாலியல் தொழில் ஈடுபடுத்தி இருக்கிறார், அந்த பெண் உயிரோடு இருக்கிறாள் மேலும் குற்றத்துக்கு தூண்டியவன் அவளுடைய தந்தை தான் என்பதால் அவனை மன்னித்து விட்டு விட முடியுமா ? அவள் மைனாராக இல்லாமல் இருந்து தன் தந்தை மீது கொடுத்த புகாரை திரும்மப் பெற்றால் அவனுக்கு தண்டனைக் கிடைக்காது, அவ்வாறு நடந்திருந்தால் நீதி நிலை நாட்டப்பட்டதாகக் கூறுவீர்களா ? இது பாலியல் வழக்கு தான், ஆனாலும் குடும்பத்தினுள் நடக்கும் கொலைகள் அதற்கான தண்டனைகள் என்னும் போது வெறும் ஆயுள் தண்டனையுடன் முடிந்து விடுகிறது.

உறவுக்குள் குற்றம் செய்தவர்களை தூக்கில் போட உறவினர்கள் கூட வேண்டுகோள் வைப்பது இல்லை, குற்றம் அதற்குக் கடுமையான தண்டனை எல்லாம் குற்றம் செய்த நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே யான உறவு அல்லது உறவின்மையைப் பொருத்தே அமைகிறது. எந்த ஒரு தூக்குத் தண்டனையும் நேர்மையாக குற்றம் தொடர்ப்பில் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை, அப்சல் போன்ற தீவிரவாதிகளுக்கான மரண தண்டனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கும் போது நான் மேலே முதல் பத்தியில் இருந்தவற்றைத் தான் கூறினேன். அப்சல் தன் தீவிரவாதக் குழுவினருக்குள் ஒரு 10 பேரைக் கொன்று இருந்தால் அவனுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டு இருக்குமா ? தீவிரவாதிகளைக் கூட இருந்தே அழித்தான் என்று மெடல் குத்தப்பட்டு இருக்கலாம்.

சட்டத்தைக் கையில் எடுக்கும் அந்நியன்களுக்கும், இந்தியன் தாத்தாக்களுக்கும் தூக்கு மேடைகள் கூடாது என்போர் தீவிரவாதிகளுக்கான தண்டனைகள் மட்டும் ஞாயம் என்பதும் அவை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் என்ன நியாயம் ?

அந்நியனுக்கும் அப்சல்குருவுக்கும் என்ன வேறுபாடு அந்நியன் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறான், அப்சல்குரு அரசை எதிர்ப்பதாக நினைத்து குண்டு வைக்கிறான். ஒருத்தனுக்கு கைத்தட்டாம் மற்றவனுக்கு கெடா வெட்டாம்.

பொது புத்தியின் ஊறிய மனங்கள் தங்களை நீதிபதிகளாக நினைத்துக்கொள்ளும் போது இவைபற்றியெல்லாம் சிந்திக்க மறுக்கின்றன

8 செப்டம்பர், 2011

தங்க ஏ(மா)ற்றம்.....!

அமெரிக்க நாணயம் மதிப்பு இழந்துவருவதால் தங்கத்தில் முதலீடே பாதுகாப்பானது என்கிற நடைமுறைக்கு உலக மக்கள் மாறியுள்ளனர், இதன் காரணமாக தங்கம் விலையும் தாறுமாறாக உயரத் துவங்கிச் சென்று கொண்டு இருக்கிறது. 2000 ம் ஆண்டும் 16 வெள்ளிக்கு (அப்போது 1 வெள்ளி - 26 ரூபாய்) விற்ற கிராம் தங்கம் இன்றைய நிலையில் கிராம் ஒன்றுக்கு 70 - 72 வெள்ளி (தற்போது ஒரு சிங்கப்பூர் வெள்ளி 38 ரூபாய்). கிட்டதட்ட கிராமுக்கு ரூ 2500க்கும் மிகுதி. இது 916 எனப்படும் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலை, தூயத்தங்கம் இன்னும் விலை மிகுதி.

சிலவாரங்களாகவே செய்திகளில் நகைக்கடைகள் கொள்ளைப் போவது வாடிக்கையாகக் காட்டுகிறார்கள், நகைக்கடைகள் மட்டுமல்லாது நகையை அடகு வைக்கும் அடகுக் கடைகள் கூட கொள்ளைப் போகிறதாம்.

தமிழகத்திலோ, இந்தியாவிலோ வாங்கிய தங்கங்கள் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை, தற்காலிகமாக அடகு வைத்து கடன் பெற்று பின்னர் மீட்கிறார்கள். ஆனால் ஜப்பான் (டோக்கியோ), தாய்லாந்து (பேங்காக்) போன்ற நகரங்களில் தங்கத்தின் விலை உயர்வு உச்சமாக கருதப்பட்டு தன்னிடம் இருக்கும் பொட்டு நகைகளைக் கூட விற்க வருகிறார்களாம் பொது மக்கள், தங்கத் துகள்களை அரித்து எடுக்கும் வேலைக்கும் பலர் செல்கிறார்களாம். அதானால் நாள் ஒன்றுக்கு 100 டாலர் முதல் 1000 டாலர் வரை அவர்களால் ஈட்ட முடிகிறதாம்.

இன்னொரு புள்ளீவிவரமாக சொல்லுகிறார்கள் மறுவிற்பனை தங்கம் சென்ற ஆண்டின் 30 விழுக்காட்டை ஒப்பிட இந்த ஆண்டு வெறும் 5 விழுக்காடு தானாம், இதற்குக்காரணம் இன்னும் கூட விலை உயரலாம் என்று காத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகுதியாம்.

தங்கம் தொடர்பான வழிப்பறிகள், கொள்ளைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன, துபாய், மொரோக்கோ, தென்னிந்தியா நகரங்களில் தங்கம் கொள்ளைப் போவது நாள் தோறும் தொடர்கிறதாம். தங்கச் சங்கிலி பறிப்பு அமெரிக்கா, சீனா , இங்கிலாந்து, இந்திய நாடுகளில் நடக்காத நாளே இல்லை. வடக்கு வியட்நாமில் தங்க நகைக்கடைக்காரர் குடும்பத்தையே கொலை செய்திருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த முதல் ஆறுமாதத்தில் மட்டுமே 183 முறை ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் கொள்ளை நடந்துள்ளது. தங்கம் முதலீட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பானதோ அந்த அளவுக்கு கொள்ளைக்காரர்களுக்கு அது சொர்க்கவாசலின் கதவு போன்றது என்கிறார்கள்,



ஒரு சின்னக் கணக்கு: என் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியின் (24 கேரட்) சின்ன தங்க டாலர் 2.5 கிராம் பழையதாகிப் போனதால் கொக்கி அறுந்து விட்டது, அதை நான் பத்தாண்டுக்கு முன்பு வாங்கும் போது 45 வெள்ளிகள், சரி அதே எடைக்கு புதிதாக மாற்றலாம் என்று வாங்கினால் எனது பழைய டாலரை 150 வெள்ளிக்கு எடுத்துக் கொண்டு புதியதை 225 வெள்ளிக்கு கொடுத்தார்கள், அதாவது நான் கையில் இருந்து 75 வெள்ளிகள் கொடுத்தேன்.

இப்ப திரும்பவும் விற்றால் எனக்கு 150 வெள்ளிகள் தான் கிடைக்கும், இந்த 150 தில் ஏற்கனவே கையில் இருந்து கொடுத்த 75 கழித்தால் எனக்கு மீதம் கிடைப்பது 75 தான், அத்துடன் பழைய விலை 45 ஐ கழிக்க நான் பத்தாண்டு இந்த டாலரை வைத்திருந்ததால் கிடைப்பது வெறும் 30 வெள்ளிகள் தான். ஆனால் இன்றைய விலை 225 என்பது பழைய விலை 45 ஐ விட 5 மடங்கு அதிகம். எனக்கு கிடைப்பது 3.3 மடங்கு அதுவும் மாற்றி வாங்காமல் இருந்தால் மட்டுமே. மாற்றி வாங்கினால் சொற்ப லாபமே. நகை விலை உயர்வினால் விற்பவர்களை விட, அதனை வாங்கும் கடைக்காரர்களுக்குத் தான் கொள்ளை லாபம்.

இணைப்பு : AsiaOne

26 அக்டோபர், 2010

வலையுலக நோய் !

40 இடுகைகளும் 40 பிந்தொடர்வோர்கள் கிடைத்துவிட்டால் எதாவது பிரச்சனையை காரணம் காட்டி நான் வலைப்பதிவில் இருந்து விலகுகிறேன் என்று படம் காட்டுவது வலைப்பதிவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. ஒருவேளை வலைபதிவில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்து காட்சிப் படுத்தும் மனநிலையில் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறியப்பட்ட எழுத்தாளர்கள் சாரு, ஜெமோ மற்றும் ஞானி இவர்கள்தான் இவ்வாறு வார இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்து சிறு பிரச்சனையைக் காரணம் காட்டி நான் இனிமேல் இங்கு எழுதமாட்டேன் என்று ஸ்டண்ட் அடிப்பார்கள். வலைப்பதிவு வார இதழ் கிடையாது, எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம் என்றாலும் 'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி விலகுவது எழுத்தில் தாங்கள் வைத்திருந்த ஆர்வத்தை தாங்களே குழி தோண்டி புதைப்பதாகும். ஒரு சிலரை காரணம் காட்டி விலகுவது என்பது அந்த ஒருசிலருக்காகத்தான் இவர்கள் எழுதி வந்ததாக பலர் நினைக்கும் படி செய்துவிடுவதை இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை ?

என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே,

1. இணைய வசதி (தொடர்பில்) இல்லாதது
2. வலைப்பதிவில் மூழ்கி மற்றபணிகளில் கவனிமின்றி அன்றாட செயல்பாடுகள் முடக்கம்
3. வலைபதிவில் இல்லாத பிற நண்பர்களிடம் முற்றிலுமாக தொடர்பு அற்றுப் போகுதல்
4. இல்லத்தினரிடம் நேரம் செலவு செய்ய இயலாமை
5. பிற பணிகளுக்கிடையே நேரமின்மை
6. சரக்கு இன்மை

இது தவிர்த்து யாரோ எவருக்கோ பிடிக்கவில்லை அல்லது குற்றம் சுமத்துகிறார்கள் என்று எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறுவதெல்லாம் 'நான் வளர்ந்துவிட்டேன்......என்னைய தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள்..... இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. நாம் எழுதுவதா வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல. வலைப்பதிவில் இருந்து எத்தனையோ பேர் பல காரணங்களுக்காக எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்கள்அதை ஒட்டு மொத்த வலையுலகமும் அவர்கள் ஏன் எழுதுவதை நிறுத்தினார்கள் என்று நினைவு வைத்துக் கொள்வதும் இல்லை.

"நான் எழுதுவதை நாலு பேர் படிக்கிறார்கள் என்றாலும் படிக்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளை சேர்த்துவைக்கும் ஒரு நாட்குறிப்பு என்பதாகத்தான் நான் எழுதிவருகிறேன். இவற்றை நானே திரும்பி படிக்கிறேனோ இல்லையோ எனது வாரிசுகள் இவற்றில் ஒரு சிலவற்றைப் படித்து அதிலிருக்கும் நல்லவற்றை தெரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று நினைப்போர் எவர் பொருட்டும் எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை.

40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.

30 ஜூன், 2010

ஆத்திக நாத்திகருக்கான பொதுக்கடவுள் !

நம்பிக்கை என்பது தவிர்த்து எந்த ஒரு தரவும் இல்லாத ஒன்று கடவுள் நம்பிக்கை என்று சொன்னால் அதை மறுக்க எவரும் கிடையாது அல்லது நம்பிக்கை என்பது தவிர்த்து கடவுள் இருப்பிற்கான நிருபனம் எதுவுமே இல்லை என்பது பொதுவான ஆத்திக கூற்று. நம்பிக்கைகள் நிருபனம் ஆகாது அல்லது நம்பிக்கைகளுக்கு நிருபனம் தேவை இல்லை என்கிற முரணான கூற்றுகள் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிருபனத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆத்திகர்கள் மட்டுமே என்பது தவறான கூற்று ஆகும், நாத்திகர்களுக்கும் நம்பிக்கைகள் உண்டு, ஆனால் அவை நம்பிக்கைகள் என்பதாக கருதப்படாததால் அதுபற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை.

குறிப்பாக காலம் அல்லது நேரம் இவை. காலம் அல்லது நேரம் இவை உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எதுவும் அறுதி இட்டு சொல்ல முடியாது. நமது நேரம் மற்றும் கால கணக்கிடின் அடிப்படை முதலில் புவியின் இயக்கம் அதாவது பகல் இரவு, அதில் காலை, நண்பகல், மாலை, இரவு என்னும் பகுப்பாக அறியப்பட்டு, பின்னர் அந்தப் பகுப்பின் சுழற்சியை மணித்துளிகள், நொடித்துளிகள் என்பதாக மாற்றி நேரக்கணக்கிடுகளின் அடிப்படையும், திங்கள் வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதாக திங்கள் (மாதக்) கணக்கும், பிறகு பருவ காலங்களின் அடிப்படையில் ஆண்டு அடிப்படைகளும், பிறகு புவியின் சுழற்சியை துள்ளியமாக அறிந்த பிறகு லீப் ஆண்டு கணக்குகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த பரவெளி, பால்வெளி இயக்கத்தின் கணக்குகளும் தற்பொழுது புவி சுழற்சியின் அடிப்படையிலான மணித் துளிகள், ஆண்டுகள், (தொலைவுகள் ) ஒளி ஆண்டுகள் என்பதாக கணக்கிடப்படுகிறது.

நாம் இருப்பதாக நம்பும் கால நேரங்கள் உண்மையிலேயே எப்போதும் இருந்ததே இல்லை அல்லது எப்போதுமே இருக்கிறது. இவை பற்றிய பகுப்புகள் வரலாறுகள் அடிப்படையில் நம்மால் நம் வசதிக்கேற்ப முன்னோர்கள் அமைத்துக் கொண்ட ஒன்றே. சமூகம் என்பதை மனிதன் ஏற்படுத்திக் கொண்டது போலவே, தனக்கான கால நேரங்களை ஒரு ஒழுங்கு முறைக் கணக்குக்குள் மனிதன் அமைத்துக் கொண்டான். காலம் இருக்கிறது என்பது தற்போது ஆத்திகர் நாத்திகர் அல்லாது பொதுவாக மனித குல நம்பிக்கை ஆகிவிட்டிருக்கிறது. நாம் பகுத்து அறிந்து கொண்ட காலங்கள் எதுவும் பிற உயிரினங்களுக்கு தாவிர வகைக்களுக்கு நம்பிக்கை என்ற அளவில் கூட கிடையாது. நாம் தற்போது நடைமுறையில் வைத்திருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் என்பது கூட முன்பு இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60 நாழிகைகள் என்பதாக கணக்குகளாக இருந்தன. 24 மணி நேரம், 365 நாட்கள் இப்படியாக நாம் அமைத்துக் கொண்டவற்றிலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையே. இந்த கற்பனைகள் இல்லாவிட்டாலும் கூட நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.

நம்பிக்கைகள் கடவுள் என்றால், நாத்திகரும் நம்பும் கடவுள் நேரம் (Time), ஆனால் அவை இருக்கிறது என்றும் இல்லை என்றும் நினைப்பது யாவும் நம் நம்பிக்கையே. பரவெளி இயக்கம் என்னும் பேரியக்கச் செயலை நம் அறிவின் நுகர்சியால் உணரக்கூடிய, மிக குறுகிய கால எல்லைக்குட்பட்ட,பகல் இரவு புவி இயக்கத்தின் ஊடாக அளக்க முயற்சிக்கிறோம். அதை முற்றிலும் அளக்க முடியாத சூழலில் பரவெளி இயங்குகிறது என்பதாக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பெருவெடிப்பு நிகழ்ந்தகாக பில்லியன், ட்ரில்லியன் (அதற்குமேல் எண்ணியலை மனிதனால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை) களில் ஆண்டுகணக்கைச் சொல்லுகிறார்கள். பெருங்கடலை அளவிட இன்னும் பீப்பாய்கள் தவிர்த்து பெரிய களன் அளவைகள் கிடையாது. வேண்டுமானால் பெருங்கடளின் கொள்ளளவு பல கடல்களை உள்ளடக்கியது என்று மட்டுமே தோராயமாகச் சொல்ல முடியும். குழப்ப(ம்) ஒன்றும் இல்லை :), நம்மால் கற்பனை செய்ய முடியாதவற்றின் அளவுகளை நம் கற்பனைக்குள் உள்ள அளவிடுகளை வைத்து அளக்க முயற்சிக்கிறோம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

கற்பனைக்கு அப்பாற்பட்டவற்றை கற்பனைக் கட்டுக்குள் கொண்டுவர எளிதான வழி நம்பிக்கை. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கால நம்பிக்கை. இரண்டிம் கற்பனைகளுக்கு ஒழுங்குவடிவம் கொடுத்திருந்தாலும், ஓரளவுக்கு ஒழுங்கான வடிவமாக இருப்பது காலம் தான். அதுவும் புவி தன் வட்டப்பாதையை மாற்றிக் கொள்ளாதவரை, சுழற்சியில் சோர்ந்து போகதவரை மட்டுமே.

பயன் கருதி அமைத்துக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது காலம், பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. காலம் அல்லது நேரம் ஆத்திக நாத்திகருக்கான பொது நம்பிக்கை என்றாலும் காலத்தை அனைவருமே வணங்குவதில்லை. காலக் கற்பனையின் எல்லைக்குட்பட்ட உருவ(க)ம் மணியாரம்(கடிகாரம்).

நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)

5 டிசம்பர், 2008

ஊடகங்கள் என்னும் மதங்கள் !

மதம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை, எண்ணங்களை தீர்மாணிப்பது என்று சொன்னால் எவரும் மறுப்பார்களா ? எந்த ஒரு மதமும் அதைச் சார்ந்தவர்களின் குண நலன்களை உருவாக்குவதுடன், உணவு உடை மற்றும் கட்டுப்பாட்டுக்களை விதித்து ஒருவரை தன் இச்சையாக செயல்படவிடாலம் அவர் மீது ஆளுமை செலுத்தினால் அதுதான் மதம். நேரடியாக ஒருவர் மீது தாக்கத்தை ஏற்படுவதால் அதன் பண்புகளில் ஏற்படும் மிகக் கூடுதலான அளவே மதவெறி எனப்படும். சரியா ?

ஊடகங்கள் எனப்பது மக்களாட்சியின் நான்காவது தூண்கள் கிட்டதட்ட மதம் போல் ஆகிவிட்டன. மதம் என்பதே சார்பு நிலைதானே. எந்த ஒரு ஊடகமும் அது செய்தி இதழாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி மக்கள் முன் காட்சிபடுத்துதல் ( பின்நவினத்துவ சொல்லாம்) என்பதில் சார்பு நிலையில் தான் இயங்குகின்றன. சன் டிவி, ஜெ டிவி பார்க்கும் சிறுவர்கள் கூட இதை உணர்வார்கள். இவற்றைக் குறிப்பிடுவது எளிமையான உதாரணம் கருதியே.

ஊடகம் என்பது தொழில் என்பதாக வளர்ந்த பின் போட்டித் தன்மை என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முதலில் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்லும் ஊடகங்கள் பிறகு மக்களின் விருப்பத்தை தீர்மாணிக்கின்றன.

விபச்சாரம் நடப்பதும் அதன் மீது சட்ட நடவெடிக்கையும் இயல்பாக அன்றாடம் நடப்பவைதான். அன்று போடுவதற்கு செய்தி பஞ்சமோ, பெரிய Deal இல்லாத போது, காவல் துறையின் விபச்சார நடவடிக்கை செய்தியை எடுத்து
படத்துடன் "விபச்சார அழகிகள் உல்லாச விடுதியில் கைது" என்று போடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை அழகிகளாகக் காட்டுவதுடன், விடுதிகள் என்றால் அவை உல்லாசமாக இருப்பதற்கு உரிய இடம் என்பது இவர்கள் முன்பே பலமுறை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளதால், அந்த செய்தியை பலர் ஆர்வமுடன் படிப்பார்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபலங்களின் செய்திகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதை அண்மைய மும்பை தாக்குதலில் இரயில் நிலையத்தைவிட நட்சத்திர ஓட்டல்களின் காட்சிகளே தொலைக்காட்சியில் இடம் பெற்றதை பலரும் குறிப்பிட்டு காட்டி கண்டனம் செய்தார்கள். வாசகர்கள் காதில் புனிதம் தடவி "ஊடகம் என்பது ஜெனநாயகத் தூண்" என்பது எப்போதோ அடிப்பட்டுப் போய்விட்டது.

ஒரு ஆட்சியை மாற்றி அமைப்பதில் ஊடகம் முன்னிலை வகிக்கிறது. விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் என்றால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களை பற்றி ஒருவரி கூடச் சொல்லாமல், அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்குகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்ட பிற செய்திகள் தங்கள் வாசகர்களின் கண்களில் படாமல் கவனத்துடன் தவிர்ப்பர். செய்திகளாக இவர்கள் தருவது இவர்களுக்கு பிடித்தவை மட்டுமே.

இஸ்லாம் பற்றிய மேற்கத்திய (கிறித்துவ சார்பு, முதலாளித்துவ சார்பு) ஊடகங்களின் தாக்குதலும் இப்படித்தான், பின்லேடனையும் அல்கொய்தா என்ற இரண்டே விசயங்களை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு 'இஸ்லாம் என்றால் தீவிரவாதம்' என்கிற செய்தியை பதியவைக்க முயன்று வெற்றிபெற்றன. ஆனால் அதே ஊடகங்களுக்கு ஈராக்கில் எந்தவிதமான ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று தெரிந்தாலும், தெரிந்தே புஷ் அரசின் செயல்பாடுகளையும், அபுகிரைப் கொடுமைகளையும் அதிக அளவில் வெளியே பரப்பாமலும் ஓரளவுக்கு தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட சிறு சிறு செய்திகள் அளவுக்கு அதனை வெளியிட்டன.

மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பு பற்றி பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் தற்பொழுது மும்பைத் தாக்குதலில் கவனம் செலுத்தி அன்றாட தகவல் ஆக்கிவிட்டன. இந்த செய்திகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தார்போல் செய்திகளை வெளி இடுவார்கள், 'இறந்து போனவர்களில் எவரும் இஸ்லாமியர் இல்லை' என்று சொல்வது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கமாக கொண்டுள்ள செய்தி இதழ் அதனை வெளியிட்டது, அதுமட்டுமில்லாது அந்த செய்தி மக்கள் மனதில் மறையவே கூடாது என்பதற்காக இறந்து போனவர்களின் அத்தனை பேரின் வீடுகளுக்குச் சென்று அன்றாடத் தகவல்களாக அதனை வெளி இடுவார்கள். இவை சிறு இதழ்களில் செய்யப்பட்டால் பெரிய தாக்கம் ஏற்படாது, சிறிய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கும், அவர்களின் கவனம் வேறு இதழ்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதனை தொடர்ந்து செய்வார்கள், ஆனால் இந்திய அளவில் செயல்படும் செய்தி இதழ்கள் மறைமுகமாக செய்யும் போது வாசகர் மனதில் அந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

நான் 25 ஆண்டுகளாக ஆனந்தவிகடன் படிக்கிறேன், 15 ஆண்டுகளாக நக்கீரன் படிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் முன் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், 'அந்த இதழ்களெல்லாம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை, அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மாறி இருக்கிறீர்கள், அவர்கள் தரும் செய்தியே உங்கள் எண்ணங்களையும் சிந்தனையாகவும் மாறி இருக்கிறது, அதாவது உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தீர்மாணிப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது வாசகனுக்கு பெருமையான ஒன்றா ?

ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.

ஆனால் 90 விழுகாடு வாசகர்களின் மன நிலை எதோ ஒரு சார்பில் எதோ ஒரு செய்தி ஊடகத்தை சிறப்பாக கருதும் மனநிலையில் தான் இருக்கிறது, அதில் வரும் செய்திகளே உண்மையானவவ என்று நம்புவார்கள், மற்ற இதழ்கள் திரிப்பதாகவே சொல்வார்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது துக்ளக் மட்டுமே படித்த எனது முன்னாள் பாஸிடம் நான் நக்கீரன் செய்தி பற்றி பேசினால், 'நக்கீரனெல்லாம் ஒரு புத்தகமா, அவன் பொய் பொய்யா எழுதுவானே ?' என்று சொல்லுவார். அவரைப் பொருத்து நக்கீரனின் வரும் செய்திகள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும், ஏனெனில் நக்கீரன் எவரையும் துணிவுடன் எதிர்த்து எழுதும், ஆனால் அவ்வளவு துணிவு வாய்பே இல்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால் நக்கீரன் பழிசொல்லி எழுதுவதாகவே அவர் கருதுவார். இங்கே நக்கீரன் துணிச்சலான செய்தி இதழ் என்று சொல்லவரவில்லை. நக்கீரனின் அன்மைய திமுக ஆதரவு செய்திகள் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆதரவு நிலை என்பதற்காக எப்போதும் திமுகாவின் ஊழல் தகவல்களை, முறைகேடுகளை மறைப்பதில்லை என்பதில் ஓரளவுக்கு நக்கீரன் கோபால் பரவாயில்லை என்பேன்.

வாசகர் வட்டம் என்ற வட்டத்திற்குள் நீங்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களில் ஆளுமை செலுத்துவதில் ஒரு ஊடகம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே பொருள், அந்த ஊடகத்தை துதிப்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகிவிடுவீர்கள். உண்மையிலேயே ஊடகம் என்பது தொழில் தான், துணிச்சலான புலனாய்வுக்கு ஊடகங்களைப் பாராட்டலாம், ஆனால் ஊடகம் தரும் செய்திகளே உண்மை என்று நம்புவோர்க்கு ஊடகங்கள் மதங்கள் போல் அவர்களின் மீது ஆளுமை செய்கிறது என்பது பேருண்மை. ஏற்றிவிடுவதும் வாசகர்களே, பிறகு மாட்டிக் கொண்டு மீளாமல் இருப்பவர்களும் வாசகர்களே !

இந்த பலரால் விரும்பிப் படிக்கப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும் :).

இதுபற்றி பலசெய்திகளை ஒப்பிட்டு விரிவாக எழுதமுடியும், பிரிதொரு இடுகையில் எழுதுவேன்.

1 செப்டம்பர், 2008

எதாவது செய்யனும் பாஸ்...

பிறக்கும் அந்த நொடிவரை இரத்தமும் சதையுமாக இருந்த ஒரு குழந்தை தன் பெற்றோர்களாலேயே புறக்கணிக்கப்படும் கொடுமையே வெறெந்த கொடுமையிலும் முதன்மையாகத் தெரிகிறது. எந்த ஒரு உயிரினமும் தம் குழந்தைக்கு பாதுகாப்பான இடம் தேடிவிட்டு, பெற்றுக் கொண்டு அதன் பிறகு அவற்றை வளர்த்து எடுத்து பருவம் அடைந்தவுடன் பிரித்து அனுப்புகிறது. அடைகாக்கும் கோழியும் அதன் சொல்லிக் கொடுக்கும், கிடைத்த உணவை பகிரும் பொறுப்பும், பின்பு வளர்ந்த குஞ்சுகளை கொத்தி விரட்டிவிட்டு அது தன் வழியாக செல்லக் கூடிய உறுதியைக் கொடுக்கும்.

வேண்டாத கர்பம் என்று வெறுக்கப்பட்டு அது குழந்தை ஆவது மனித இனத்தின் சாபக் கேடுகள், இதற்குக் காரணம் பொறுப்பற்ற ஆண் / பெண் இருவருமே தான். எதோ இரு குப்பைகள் சேர்ந்து குப்பைத் தொட்டிக்காக குழந்தை பெற்று வீசி எரியும் போது அந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்றே என்னத் தோன்றுகிறது.

"அனாதைகளாக யாரும் பிறப்பது இல்லை, பிறந்த பின்னரே அனாதையாக்கப்படுகின்றனர்" என்று யாரோ சொன்னது மிகச் சரிதான். இந்த உலகில் பிறந்தவர்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டியது பெற்றோர்களின் அன்புதான். பெற்றோர் யார் என்பதே தெரியாமல் ஒரு குழந்தை வளர்ந்து அதுபற்றிய ஏக்கமே இல்லாதிருக்க வேண்டுமென்றால் அவை மனிதர்களுக்கு இடையே வளராது இருந்தால் தான் முடியும். ஆனால் இங்கே பெற்றோர் புறக்கணிப்பால் வளரும் குழந்தைகள், சமுகத்தில் பிற குழந்தைகள் தம் பெற்றொர்களுடன் செல்வதைப் பார்க்கும் போது, ஏற்படும் அவர்களின் பெற்றோர் குறித்த ஏக்கத்தை கடவுளாலும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி கடவுளால் புரிந்து கொள்ளப்படுமெனில் அப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கவே பிறந்திருக்காது.

வெறெந்த தானங்களைக் காட்டிலும், இழப்புகளைக் காட்டிலும் பெற்றோர்களை இழந்து 'அனாதை' என்ற பெயரில் வாடும் குழந்தைகளின் துயரே மிகப் பெரியது. இதுபோன்ற குழந்தைகள் இருக்கும் இடத்திற்குச் மாதம் ஒருமுறை சென்று நமது அன்பை அவர்களுக்குத் தெரிவித்தால், உலகத்தில் பெற்றோர்கள் மட்டுமே அன்பைத் தருபவர்கள் அல்ல என்பதை அந்த குழந்தைகள் விளங்கிக் கொள்ளும். பெற்றோர்களுடன் இருப்பதுதான் குடும்பம் / வாழ்க்கை என்ற எண்ணமெல்லாம் கொஞ்சம் குறைந்து தங்களை அறிந்தவர் அனைவருமே நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நம்மீது அன்பு செலுத்துபவர்கள் தான் என்ற எண்ணம் ஏற்படும், தாழ்வுணர்ச்சி நீங்கி, நம்மில் ஒருவராகவே அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்கையை அமைத்துக் கொள்ள வழிவகுக்கும்.

பசி / பட்டினி / பஞ்சம் இவையெல்லாம் இயற்கையினால் ஏற்படும் இடர்கள். ஆதரவற்றோராக பிறப்பது இயற்கையின் செயலா ? வெறெந்த கொடுமையைவிட ஆதரவற்ற சிறுவர் / சிறுமிகளுக்கு பொருளுதவி செய்ய நமக்கு வசதி இல்லாவிட்டாலும், அவர்களுடன் பழகி, அவர்களுள் ஒருவராக நம்மை இணைத்துக் கொண்டு வாழ்வதில் கிடைக்கும் மன நிம்மதியையும், மகிழ்வையும், கருணை உணர்வையும் எந்த ஒரு இறைவழிபாடும் நமக்கு தந்துவிடாது.

பிறக்கும் முன்பும், இறந்த பிறகும் நாம் கூட ஆதரவற்றோர்களே !

*************

செயல் வடிவம் பெரும் முன், எண்ணங்களை எழுதத் தூண்டிய பதிவர் narsim அவர்களுக்கு நன்றி !

13 ஆகஸ்ட், 2008

ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !


ரோஜாக்களுக்கு வண்ணமயமான வரலாறு இருக்கிறது. நெடுங்காலமாக அன்பென்னும் சொல்லுக்கான சின்னம் என்று சொல்கிறார்கள். மகிழ்விலும் துக்கத்திலும் மற்றப் பூக்களை விட ரோஜாவின் பங்கு அளப் பெரியது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருக்கிறதாம். உலகெங்கிலும் 150 வகைகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றதாம். முதன் முதலில் சீனாவில் தான் ரோஜாவை மலர் தோட்டப்பயிராக விளைவித்தார்களாம். அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்து இருக்கிறது. ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு ரோஜாவின் பயன்பாடு எண்ணிக்கை அந்த காலத்திய ரசனைக்கேற்ப ஏற்ற இரக்கமாக மாறி மாறி வந்திருக்கிறது.


15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வெள்ளை மற்றும் சிகப்பு ரோஜாக்களின் பெயரில் இரு அரசு மாளிகைகள் இருந்ததாகவும் இரண்டிற்கும் இடையே யான போர்கள் 'வார் ஆப் ரோஸஸ்' என்று அழைக்கப்பட்டதாம்.

17 ஆம் நூற்றாண்டில் ரோஜாவுக்கு கடும் தட்டுப்பாடு எற்பட்டு இருக்கிறது. ரோஜா, ரோஜா திரவம் ஆகியவை பண்டமாற்றுக்கு பயன்பட்டு இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் பாரிசின் மன்னர் நெப்போலியன் மனைவி ஜோஸ்பின் என்பவர் Château de Malmaison என்ற இடத்தில் தோட்டம் அமைத்து அரிய வகை ரோஜாக்களை வளர்த்து அழகு படுத்தினாராம்.



ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !

இந்த சொற்றொடர் புகழ்வாய்ந்தது உண்மையும் கூட. இது பற்றிய புரிதல் இருந்துவிட்டால் உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஈஸ்வரனும் அல்லாவும் ஒரே இறைவனின் வேறு பெயர்கள் என்று சொன்னதற்காக சுட்டுக்கொள்ளப் பட்ட மகாத்மா காந்தி நினைவுக்கு வருகிறார். பல்வேறு பெயர்களில் ரோஜாவை எல்லோருமே ஏற்றுக் கொள்ளும் பொழுது பல்வேறு பெயர்களால் (ஈஸ்வரன், அல்லா, ஜீசஸ் என) அழைக்கப்படும் தகுதி பரம்பொருளுக்கு இல்லையா ? அனைத்து மதவாதிகளும், அவர்கள் காட்டும் ஆன்மீகமும் சறுக்குவது இங்கே தான். மதநம்பிக்கையாளர்கள் வைத்திருக்கும் இறை நம்பிக்கை (வெறும்) 'பெயரளவோ' இருக்கிறது அல்லவா. இது உண்மை எனும் போது மதப்பற்றாளர்களை போலி ஆன்மிகவாதிகள் என்று ஏன் சொல்லக் கூடாது ?

பலவண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கிறது, இந்த மதத்திற்கு சொந்தமானவை என்று எந்த ஒரு தனிப்பட்ட நிறத்திலோ, அல்லது அந்த மதத்திற்கு மட்டுமே, அல்லது பகுத்தறிவாளர்களுக்காகவோ பூப்பது இல்லை.
உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் ரோஜாவின் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் ரோஜா ஒன்றுதான். அது எந்த மதத்திற்கும், கொள்கைக்கும் தொடர்பானது அல்ல.

ரோஜா ROSE, ரோசா எந்த பெயரில் இருந்தாலும் ரோஜா ரோஜாதான்.

இறை என்று உண்டு என்று நம்புவர்களாக இருந்தாலும்,

இந்த பெயரில் இருக்கும் இறைவனே என் நம்பிக்கைக்குரியவன் என்பது என்ன வகையான இறைநம்பிக்கை ?

இந்து மத தெய்வங்கள் - பேய் / பிசாசு எனச் சொல்லும் கிறித்துவர்கள்
அல்லா - முகமது நபியின் கற்பனை என்று சொல்லும் 'ஹிந்து'க்கள்
பிதா சுதன் பரிசுத்தஆவி - கிறித்துவ மிசினெறிகளின் பிதற்றல் என்று சொல்லும் ஹிந்து மற்றும் பிற மதங்கள்.

மத நம்பிக்கையாளர்கள் காட்டும் எந்த இறைவனுக்கும் இல்லாத ஒரு தகுதியாக, எந்த பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது. மேலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது

7 ஆகஸ்ட், 2008

ரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு !

மதில்மேல் பூனை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் குதித்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். அதாவது சந்தர்ப்பவாதம். பூனை சந்தர்பவாதத்தை வைத்து பெரிதாக என்னத்த சாதித்துவிடப் போகிறது, அது தன்னைக் காத்துக்கொள்ள அதை ஒரு உத்தியாக வைத்திருக்கும். அவ்வளவுதான். ஒரு உதாரணத்துக்காக பல்டி அடிக்கும் அரசியல்வாதிகளை, இரட்டை நிலை கொண்டோரைக் குறிக்க குறிப்பிட மதில்மேல் பூனையைக் குறிப்பிடுவார்கள். இந்த பக்கமா ? அந்த பக்கமா ? என்பதில் மதில்மேல் பூனை ஆட்கள் எப்போதும் தனக்கு சாதகமான முடிவைத்தான் எடுப்பார்கள்.

******

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையோ வேறுமாதிரி, இரண்டு பக்கமும் மண்டைக் குடைச்சலாகவே இருக்கும். இருதலையை அதுவே கேட்டுப் பெறாவிட்டாலும் அதன் நிலை என்றுமே சங்கடத்திலேயே தான் இருக்கும், எந்த முடிவெடித்தாலும் எதிர்தரப்பின் விமர்சனம் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு என்றுமே பதிலடியாகவே இருக்கும். உண்மையில் இருதலைக் கொள்ளி எறும்புக்கு அது போன்ற துன்பம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மனிதர்களில் பலருக்கு அதுபோன்ற நிலைதான். இருமாறுபட்ட, வேறுபட்ட பிரிவினர்களை சேர்ந்த / சார்ந்த ஒருவருக்கு, இதுபோன்ற நிலையே. பெரும்பாலும் கணவர்களுக்கு இந்நிலைதான். மனைவி சொல்வதைக் கேட்பதா, தன்னுடைய பெற்றோர்களின் மனம் குளிர நடந்து கொள்வதா ஆண்கள் பலரின் வாழ்கையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான் இருக்கும்.

*******

சரி விசயத்துக்கு வருவோம், தான் பேசியதை 'கன்னடர்களை உதைக்க வேண்டாமா ?' தெளிவாக பேசாததால் ஏற்பட்ட குழப்பமே தனக்கு பெரும் அவப்பெயரைத் தந்துவிட்டது என்று கருதிய ரஜினிகாந்த் அதற்கு வருத்தம் தெரிவித்ததாக செய்தி ஊடகங்களில் வெளியானது. தனிப்பட்ட தமிழர் ஒருவருக்காக தனிப்பட்ட கன்னடர் எவரும் போராட்டத்தில் குதிக்கவில்லை. ஒட்டுமொத்த கர்நாடகத்தின் எதிர்ப்பாகவே தான் அந்த பிரச்சனை இருந்தது. வன்முறையாளர்கள் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டனர்.

இதற்கு தமிழர் சார்பில் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றால்,ஞாயமாக எடுத்துச் சொல்லி பொதுவாக கண்டனம் தெரிவித்திருக்கலாம். அன்று திரையுலகினர் குறிப்பாக சத்தியராஜ் அவர்களின் ஆவேசப் பேச்சின் போது ரஜினிகாந்தின் ரியாக்சன் என்ன என்பதையே கேமராக்கள் கூர்ந்து பதிவு செய்தன. இதில் உணர்ச்சிவசப்பட்டவராக ரஜினி தன்பங்குக்கோ, தானும் தமிழன் என்று காட்டுவதற்கோ உணர்ச்சிவசப்பட்டே 'கன்னடர்களை' உதைக்க வேண்டுமா ?' என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பலமாக நடந்த பெங்களூர் ஆர்பட்டத்தில் உடனடியாக தன் சொன்னவற்றை அவர் மீட்டுக் கொள்ளவில்லை. மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி 'பர்வதம் அம்மாள், நான் பேசியது ஞாயத்துக்கு புறம்பானது என்று சொன்னால் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று அறிக்கை விடுத்தார். பர்வதம்மாள் தரப்பில் இருந்து எந்த பதிலும் பொதுவில் வைக்கப்படவில்லை. ராஜ்குமாரின் குடும்பம் சொல்வதை உன்னிப்பாக கவனித்துவரும் கன்னடர்கள் இதுவிசயத்தில் பர்வதம்மாளுக்கு நெருக்கடி கொடுத்தது போல் தெரியவில்லை. குசேலன் படம் வெளியீடு வரையில் இதுவிசயத்தில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், கிட்டதட்ட மறந்துவிட்ட நிலையில் இதையே தொழிலாக செய்து கொண்டிருக்கும் வாட்டாள் நாகராஜ் குரூப் இதை மீண்டும் கிளறிவிடவே, தன்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம், தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று ஆழ்ந்து சிந்தித்தே ரஜினி இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். வெறும் இரண்டு கோடி பணத்துக்காக என்றால் அவரிடம் இல்லாத பணமா ? என்றே சிந்திக்க வேண்டி இருக்கிறது, அப்படியே 2 கோடி தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தாலும் அது அவரால் தரக்கூடிய ஒன்றே. முன்பு பாபா நஷ்டத்தின் போது பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் என்ற செய்திகள் வந்தது. பணத்துக்காக தன்மானத்தை அடகுவைத்தார் என்று சொல்வது டூ மச் என்றே நினைக்கிறேன். பெங்களூரூவில் குசேலன் படமே வெளியிடவேண்டாம், நான் பணத்தைத் தருகிறேன் என்று சொல்லி இருந்தால், அடுத்த மற்ற தமிழ்படங்களையும் ஓடவிடாமல் செய்திருப்பார்கள், இது குசேலன் படத்துடன் முடிவடைகிற ஒன்றே அல்ல என்று கருதி இருப்பார் என்றே நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் 2 கோடி ரூபாய்க்கு ரஜினிகாந்த் இந்த முடிவெடுத்துவிட்டாரோ என்று நானும் தவறாகவே நினைத்தேன். ரஜினிகாந்த் ஹிட்டான ஒரு நடிகர், அவரது படம் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. அவரை ஒட்டுமொத்த தமிழரின் பிரதிநிதியாக நான் நினைக்கவில்லை. அவர் மன்னிப்புக் கேட்டது தமிழன் ஒவ்வொருவருக்கும் அவமானம் என்றெல்லாம் நான் கருதவில்லை. அவர் அரசியல்வாதியோ, பொதுமக்களால் முன்மொழியப்படுபவரோ அல்ல. தீவிர ரசிகர்களும், செய்தித்தாள்களும் தாங்கிப்பிடிக்கின்றன அவ்வளவு தான். பின்பு ஏன் அவருடைய தனிப்பட்ட முடிவை தமிழர்களின் மானப்பிரச்சனையாக்க வேண்டும் ? தமிழனின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைப்பவர்களைப் பார்த்து உண்மையில் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றே பரிதாபப்படவேண்டி இருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இதுவிசயத்தில் வாய்திறக்கமல் இருப்பதற்கு அது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தெளிவாக அறிந்து இருக்கிறார்கள். அன்று அவர் 'கன்னடர்களை உதைக்க வேண்டாமா ?' என்று கூறியதும் அவரது தனிப்பட்ட உணர்வே, சென்ற நாளில் 'வருத்தம் தெரிவித்ததும்' அவரது தனிப்பட்ட முடிவே.

பொதுவாக ஆணிய சமூக மனப்பான்மையால், ஒரு பெண் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்கு வந்துவிட்டால், அவளுடைய பெற்றோருக்கு ஆதரவாக எதுவும் பேசிவிடக் கூடாது என்பது போலவே தான், கர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்த் தமிழ்நாட்டுமக்களால் போற்றப்படுவதால் கன்னடர்கள் மீது அன்பு வைக்கக் கூடாது என்று சொல்வதும். தமிழர்களான நாம் மட்டும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் என்ற உணர்வை மறந்துவிடக் கூடாது என்று வாய்கிழிய பேசுகிறோம். அதே உணர்வு மற்றவர்களுக்கும் இருக்கும் அல்லவா, அதுதானே இயல்பு. ரஜினி தான் ஒரு கன்னடர் என்ற முறையில் கன்னடமக்களிடம் வருத்தம் தெரிவித்ததில் என்ன தப்பு இருக்கிறது ? நான் வன்முறையாளர்களுக்கு எதிராகத்தான் பேசினேன், என்று விளக்கிவிட்டாரே, அவர்களிடமும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லையே.

தமிழன் தமிழனாகவே வாழவேண்டும், சாகவேண்டும் என்று நினைப்பது போலவே அந்தந்த மொழியை தாய்மொழியாக உடையவர்கள் நினைப்பார்கள், அப்படி நினைப்பதால் வாழும் நாட்டை அவமதிக்கிறோம் என்று பொருளல்ல, பழசை மறக்காத நற்பண்பு ஈரமாக ஒரு ஓரத்தில் இருக்கிறது என்றே பொருள். இதில் நமக்கொரு ஞாயம், ரஜினிக்கு ஒரு ஞாயமா ? கிரியின் தலைப்பு :)

நல்லவிசயம் குறித்து நாம என்னிக்கும் தெளிவான முடிவு எடுக்கனும், பலர் எதிர்த்தாலும் அதில் உறுதியோடு நிற்கனும்னு நினைப்பது தன்னம்பிக்கை, பலரால் எதிர்க்கப்படும் தவறான ஒன்றை, சொல்லிவிட்டோம் என்று மாற்றிக் கொள்ளாமல் நாம் உறுதியாக இருந்தால் அதன் பெயர் பிடிவாதம். இரண்டையும் பலர் ஒன்றாகவே நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள்.

வாழும் நாட்டைப் எப்போதும் போற்றுங்க... வாழ்ந்த நாட்டை ஒருபோதும் மறந்திடாதிங்க ! - இதை ரஜினி சொல்லவில்லை. நான் சொல்றேன் ! :))))))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்