பின்பற்றுபவர்கள்

ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 பிப்ரவரி, 2013

ஏக(ப் பட்ட) இறைவன்கள் !


கடவுள் நம்பிக்கைக் குறித்து நம்பிக்கையுள்ளவர்களிடம் கேள்வி எழுப்பினால் விடை சொல்லத் தடுமாறும் நிலையில் கடைசியாக நமக்கு கிடைக்கும்  பதில் அல்லது மழுப்பல் 'நமக்கு மேல் ஒருவன் இருக்கான்னு நான் நம்புறேன் அவ்வளவு தான்' என்பதாக முடியும், இந்த பதிலில் நம்பிக்கை சார்ந்த தம் சடங்கு, சம்ப்ராதயம், வேதப் புத்தகம், வேள்வி, வழிபாடு முறை, நோன்பு, படையல், நரகம், சொர்கம் இவற்றையெல்லாம் தற்காலிகமாக புறக்கணித்துவிட்டு / தவிர்த்துவிட்டு தான் அதனை முடிவாக சொல்கிறார் என்பதும் அடங்கும்.

இனக்குழுக்கள் தங்களுக்கான அடையாளம் என்ற அளவில் தான் வழிபாட்டு முறைகளையும் அவரவர் கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டனர், எதிரி நாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்கிறதோ, கொள்ளையடிக்கிறதோ அதனால் பாதிப்பு பொருளியல் ரீதியானது மட்டுமே, ஆனால் அவர்கள் அவ்விடத்தில் முடிவாக தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களது வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்களையும் புதிய இடத்தில் திணிப்பர், ஏனெனில் தம்முடைய பண்பாட்டு தொடர்ச்சி பேணப்படவேண்டும், மற்றவர்களுடைய பண்பாடு நம்முடையதல்ல என்று தெளிவாகவே அதைச் செய்வர். படையெடுப்புகள் இல்லாமல் எந்த மதங்களும் பரவியதில்லை. 

தற்காலத்தில் படையெடுப்புகளால் மதம் பரவச் செய்வது எளிதன்று. மக்கள் எல்லோரும் தெளிவாகவே இருக்கிறார்கள், மதம் என்பது நிலம் சார்ந்த பண்பாடுகளை அழிக்கக் கூடியது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் மதவாதிகளின் தற்போதைய உத்தி மனித இனத்தில் ஏற்றத் தாழ்வு, மற்றும் நிற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அங்கு கடைவிரிப்பது தான். 

இனக்குழு கடவுளை பொதுக் கடவுளாக முன்வைக்கப்படும் உத்தி தான் 'ஏக' இறைவன் பற்றிய கருத்துகட்டுமானங்கள், இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏக இறைவன்கள் உண்டு, சமண மதத்தை எடுத்துக் கொண்டால் ஏக இறைவன் 'ஆதி பகவன்' என்ற பெயரில் இருபபர், அவரை அருகன் என்றும் சொல்லுவார்கள், ஒரு சமணருக்கு அருகனைத் தவிர வேறு இறைவன் கிடையாது, அவர்களைப் பொறுத்த அளவில் அருகன் ஏக இறைவன், பிறகு பவுத்த மதம், புத்தர் தன்னை கடவுளாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும் பவுத்தர்களுக்கு ஏக இறைவன் புத்தர் தான், புத்தனைத் தவிர வெற இறைவன் இல்லை என்பார்கள்.

சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான், சிவனுக்கு கட்டுப்பட்டவை, வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள், இஸ்கான் அமைப்பும் முழுக்க முழுக்க கிருஷ்ணன் தான் ஏக இறைவன் என்று பிரச்சாரம் செய்துவருகிறது. சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் முயற்சியில் புதிதாக ஒரு ஏக இறைவன் முன்வைக்கப்பட்டார் அவர் தான் பிள்ளையார், முழு முதற்கடவுள் விநாயகனே என்று ஒருசாரர் கூறுவர், சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.

இது தவிற ஒவ்வொரு இல்லத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு, அவரவர் இல்லத்திற்கு அவரவர் குல தெய்வமே ஏக இறைவன், அதைத் தாண்டிய வழிபாட்டு முறைகள் இரண்டாம் பட்சமே. 

ஆபிரகாமிய மதங்களில் ஏகப் பட்ட ஏக இறைவன் உண்டு, யூதர்கள் பழைய ஏற்பாட்டு ஜெகோவா, அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு. இஸ்லாமியர்களின் அல்லா இவர்களெல்லாம் ஏக இறைவன் பட்டியலில் உள்ள மேற்கத்திய ஏக இறைவன்கள், இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லா யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பொதுவானவர் என்று முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார், தூதர் ஒருவர் இருக்க வேண்டும், அதனால் தான் தூதர் இல்லாத மதங்களை மேற்கத்திய மதத்தினர் மதங்கள் மதமாக நம்புவதில்லை, ஆனால் கிழக்கில் இந்த பார்முலா 'அவதாரம்' என்ற பெயரில் வருகிறது, சங்கராச்சாரியார் முதல் சாயிபாபாவரை எல்லோரையும் அவதாரங்கள் என்றும் சிலர் அவர்கள் தான் மனித உருவில் வந்த ஏக இறைவனின் துளி என்றும் நம்புவார்கள். இந்திய மனங்கள் இறைவனுக்கு தமக்கும் இடையே தூதர் / தரகர் தேவை இல்லை என்று நினைக்கும் அதனால் தான் இந்திய மதங்கள் இறைத்தூதர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை,  பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது  மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்

ஏக இறைவன் கோட்பாடு மேற்கத்திய மதங்களிலும் சரி, கிழக்கு மதங்களில் சரி எந்த ஒரு ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வில்லை, காரணம் இவர்கள் சுட்டிக்காட்டும் ஏக இறைவனின் பண்பு நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, என்ன தான் ஏக இறைவன் என்றாலும் மதப்புத்தகம், அதில் காட்டும் சொர்கம் நரகம் இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் நமது ஏக இறைவன் தவிர ஏகப்பட்ட பிற ஏக இறைவனெல்லாம் ஒன்றல்ல என்று நம்புகிறார்கள்.

கிரேக்க நாகரீக காலத்தில் வாழ்ந்த ஏக இறைவன்கள் நாகரிகம் மாறிய பொழுது மறைந்து போனார்கள்.

நமக்கு மேல ஒரு கடவுள் உண்டு நம்புவதோடு விட்டுவிட்டு அது எந்த மதம் குறிப்பிடும் கடவுள் என்று ஆய்ந்து பார்த்தால், இதுக்கு பதிலாக நாமே ஒரு ஏக இறைவன் ஆகிவிடலாமோ என்று தோன்றலாம், இப்படித்தான் நித்தி, கல்கி போன்ற சாமியார்கள் தன்னை ஏக இறைவனாக ஆக்கிக் கொண்டனர்,  மதங்கள் கட்டமைக்கும் கடவுள் எல்லாம் பித்தலாட்டம் என்று தனிமனிதனாக ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் சார்ந்திருக்கும் மதக்கடவுள் தவிர்த்து அனைத்தும் பித்தலாட்டம் என்றே நம்புவர். இந்தியர்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் என்கிற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் மேற்கு மதங்கள் ஊடுறுவிய பொழுது அவர்கள் அதை வரவேற்காவிட்டாலும் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் அதற்கும் இந்துத்துவவாதிகள் வேட்டு வைத்த பிறகு ஏக இறைவன் கோட்பாடுகள் உலகினர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படி தெளிவாக வரையறுக்கப்படவில்லை, வரையறுக்கவும் முடியாது என்றே சொல்லலாம், ஏனெனில் எந்த ஏக இறைவன் கோட்பாடு என்றாலும் அவை நிலம் சார்ந்த பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் ஆண் பெண் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்,

கூகுள் தேடலில் 'one and only God' என்று தேடினால் பலவேறு படங்கள் தான் வருகின்றன. என்னைக்காவது கூகுள் ஹேக் செய்யப்பட்டு ஒரே படம் வந்தால் ஏக இறைவனின் ஒரே மாதிரியான படம் வரலாம், மற்றபடி எந்த காலத்திலும் ஏக இறைவனுக்கு ஒரே படம் தேடலில் வர வாய்ப்பில்லை.

பணம் இருக்கிறவர்களுக்கு பாதுகாக்க வங்கி தேவைப்படும், அன்றாடம் காய்சிகள் ஏழைபாழைகள் கதவுக்கு பூட்டு இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்,   கடவுள், மதம் இத்யாதிகள், எல்லாம் பணம் காசு உள்ளவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வஸ்து. முக்தி, சொர்கம், நரகம் இதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் ஏழைகளுக்கு உணவே சொர்கம், பசியே நரகம். இதில் ஏழைகளிடம் ஏக இறைவன் பற்றிய அறிவை எங்கனம் ஊட்டுவது ?

நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்

28 செப்டம்பர், 2011

வலைப்பதிவு நண்பர் ஸ்வாமி ஓம்கார் !

வலையுலகையில் நான் கண்ட வரையில் என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து கொண்டோர் தான் என்னிடம் நல்ல நெருக்கம் வைத்துள்ளனர், மதிப்பும் அன்பும் வைத்துள்ளனர். மனித மனம் ஆன்மீகம், மதம், நாத்திகம் இவற்றையெல்லாம் தாண்டி நல்ல மனிதர்களையே நாடுகிறது என்பதை என் நட்புகளால் நான் அறிந்துள்ளேன், எந்த ஒருவரின் தனியான கொள்கைகள், நம்பிக்கைகள் புதிய நட்புகளுக்கு தடைவிதிப்பது இல்லை.ஒரே குடும்பத்தில் பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களுக்குள் சகோதரச் சண்டைகள் வந்துவிடுமா என்ன ?

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தொடர்பு தான் எனக்கும் ஸ்வாமி ஓம்காருக்கும், அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் பிறை வந்துவிடும் அதனால் அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் மறைமுகத் தொடர்பு உண்டு. ரொம்ப மொக்கையா இருக்கா ? ஸ்வாமி ஓம்காரின் பதிவுகள் தற்பொழுது தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை, ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் தொடர்பில் சொந்த 'பிஸ்னஸ்' ஆக எழுதுகிறார் என்ற குற்றச் சாட்டில் அவரது வலைப் பதிவை தமிழ்மணம் தடை செய்திருக்கிறதாம். தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் நிறையப் பதிவர்கள் சுய விளம்பரத்திற்கும், பதிவுகளில் விளம்பரங்களை வெளியிட்டும் பலன் தேடிவரும் போது ஓம்கார் அந்த அளவுக்கெல்லாம் எதுவும் செய்யவில்லை. தமிழ்மணம் கட்டண சேவையில் முகப்பில் அவரது வலைதளத்தை இணைப்பதற்கான விவரம் கேட்டிருந்தாராம், தமிழ்மணம் 'ஆஹா கமர்சியல் வலைத்தளம்' என்று கண்டு கொண்டு முடக்கிவிட்டார்கள். தமிழ்மணம் திரட்டியின் வழியாக நிறைய நண்பர்களைப் பெற்று இருக்கிறேன், எனவே தமிழ்மணத்தின் திடிர் நடவடிக்கை எனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்று கூறினார்.

தான் தேர்ந்தெடுத்துள்ள சாமியார் வாழ்க்கையில் மந்திரம் தந்திரம் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்காமல் 'போஜனத்திற்காக' விரும்புவோருக்கு மட்டும் ஜோதிடம் சொல்லி வருகிறார், ஜோதிட, தியான, யோகா வகுப்புகளை நடத்துகிறார். இதை அவர் செய்யவில்லை என்றால் 'ஸ்வஸ்தப்படுத்தும்' வேலை செய்து பெரும் பொருளீட்டி கார்ப்ரேட் சாமியார் அந்தஸ்தை அடைந்திருப்பார், தன்னைத் தேடிவரும் பினாமி வாய்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு சாமியார் தொழிலின் இலக்கணமே தெரியாமல் சாமியார் ஆகிவிட்டாரே என்கிற பரிதாபம் தான் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. எனக்கும் அவருக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு இல்லை, 'மரம் சீடியை படிக்கும்', 'அஹம் பிரம்மாஸ்மி' போன்ற அவரது கூற்றுகளை நான் ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஒரு சாமியாரிடம் நான் எதிர்பார்காதவைத் தவிர்த்து அவரிடம் தமிழ் பற்றும், அதனைப் பற்றிய திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்டவைகளில் அவரது ஈடுபாடு எனக்கும் அவருக்குமான நட்பிற்கான இணைப்பாக இருந்தது. என்னைப் பொருத்த அளவில் தமிழை முன்னிறுத்தும் ஆன்மிகவாது நாத்திகமாவது இரண்டுமே போற்றத் தக்கவை தான். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அறிஞர் அண்ணாவின் பேச்சுகளில் கட்டுண்டு போவது போலவே சுகி.சிவம் உள்ளிட்டோரின் பேச்சுகளிலும் ஈர்க்கப்பட்டிருப்பேன். இவற்றையெல்லாம் விட மனித நேயம் தெரிந்தவர் எந்த இனம், மொழி, மதம் என்றாலும் கூட நம்மை ஈர்த்துவிடுவர் என்பது தானே உண்மை ? ஸ்வாமி ஓம்கார் அடிப்படையில் மனித நேயம் மிக்கவராகவும் இருந்தார், முதல் முறை சந்தித்த போதே தான் அன்றாடம் அருந்தும் ஆப்பிள் ஜூஸை எனக்கும் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :)

சிங்கைக்கு ஸ்வாமி ஓம்கார் வருவது இது இரண்டாம் முறை, முதல் முறை பயணத்தின் போது 'தினம் தினம் திருமந்திரம்' என்ற தலைப்பில் சிங்கை வடபத்திர காளியம்மன் கோயிலில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார், போதிய விளம்பரமின்மை, நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் 'ரெகமண்டேசன்' இல்லாத நிலையிலும் கூட குறிப்பிட்ட அளவினர் கலந்து கொண்டனர், அதில் பதிவர்களும் பலர். சிங்கப்பூருக்கு ஸ்வாமி ஓம்கார் அறிமுகம் என்பதைவிட ஸ்வாமி ஓம்காருக்கு சிங்கப்பூர் அறிமுகம் என்ற அளவில் தான் நடந்தது, அதன் பிறகு ஒன்னரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்தார்,




சிங்கப்பூர் இலக்கியம் மட்டும் ஆன்மீக வட்டப் பெரியோர்களான திரு வரதராஜன் மற்றும் திரு கே ஆர் குமார் ஐயா ஏற்பாட்டில் குயின்ஸ்வே ஞான முனீஸ்வரன் கோயிலில் சென்ற 17 செப் 2011 'அன்றாட வாழ்வில் திருமந்திரம்' என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்கார் சொற்பொழிவு நடந்தது, 100க்கும் அதிமானோர் கலந்து கொண்டனர், சிங்கையில் 50 பேருக்கு மேல் வருவதே அரிது, ஏனெனில் வார இறுதியில் தான் தமிழ் நிகழ்ச்சிகளை பலரும் நடத்துவர், ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் நடக்கும், எனவே ஒரே இடத்தில் நகரின் மையப்பகுதியைத் தள்ளி வெளியே நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு 100 பேர் என்பது நிறைவான கூட்டம் என்றே சொல்லலாம். ஏற்பாட்டாளர்களுக்கு இந்தக் கூட்டம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூட்டம் இடையில் எழுந்து செல்லாத அளவுக்கு ஓம்காரின் பேச்சுகளிலும் கோர்வை இருந்தது.


அதன் பின்னர் மலேசியா ஈப்போ சென்று இருவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அந்நிகழ்ச்சிகளை மலேசியாவில் இருக்கும் ஜவஹர் அண்ணன் பார்த்துக் கொண்டார், அங்கும் ஓம்காரின் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்ப்புக் கிடைத்ததாம். பின்னர் சென்ற சனிக்கிழமை சிங்கை தேங்க் சாலை தெண்டாயுதபாணி' கோயிலில் 'திருமந்திரம் என்னும் அருமந்திரம்' என்ற உரை நிகழ்த்தினார். வேறு சில பணிகளால் நான் அதற்குச் செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் அவருக்கும் நல்லோர் பலருக்கும் அறிமுகம் கிடைத்திருக்கிறது

இந்நிகழ்ச்சிகளுக்கு இடையே எங்கள் வீட்டிற்கும் வந்து சென்றார். இன்று சிங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று பின்னர் தொடர் வண்டியில் கோவை செல்கிறார். அவருக்கு அறிமுகமானவர்களிடையே என்னை 'நண்பர்' என்று தான் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். நானும் அவரிடம் ஒரு சாமியாரிடம் பழகுவது போல் பவ்யம் எதுவும் காட்டாமல் இயல்பாகவே பழகிவருகிறேன்.

(உடன் இருப்பவர் பதிவர் வெற்றிக்கதிரவன்)

11 அக்டோபர், 2010

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

கடவுள் பற்றிய விவாதங்களில் பல இடங்களில் அப்துல் கலாம் பெயர் தொடர்புபடுத்தி கட்டுரைகள் வரும், அதாவது கடவுளின் இருப்பை கலாம் வரையறுத்துவிட்டார் என்பதாக அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த உரையாடல் என்ற ஒன்றை எடுத்துப் போடுவர்.

உண்மையில் இப்படியான உரையாடல் கலாமுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்ததா என்று எவரும் கேட்டுத் தெரிந்து கொண்டது போலவோ அல்லது கலாம் அவ்வாறு தன் பேச்சுகளில் எங்கும் குறிப்பிட்டதாகவோ தெரியவில்லை. அண்மையில் ஒரு ஆங்கில இணையப் பக்கத்தை திறந்த போது அதிர்ந்தேன் (நான் அப்படியே ஷாக்காயிட்டேன்). ஏனெனில் கலாம் - ஆசிரியர் உரையாடலின் அப்பட்டமான ஆங்கில மொழிப்பெயர்ப்பில் எழுதப்பட்டு முடிவில் அந்த உரையாடல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் அவருடைய ஆசிரியருக்கும் நடந்திருந்ததாகப் போட்டிருந்தது. அதே போன்ற உரையாடல்கள் இன்னும் பலமொழிகளில் அந்தப் பகுதி அறிஞர்கள் கடவுளை மெய்பித்த கதையாக ஒவ்வொரு நாட்டிலும் வழங்கிவரும் என்று நினைக்கிறேன். இது போன்ற உரையாடல் மலேசிய கிறித்துவ மாணவனுக்கும் அவரது புரொபெசருக்கும் நடந்ததாகவும் எழுதி இருக்கிறார்கள். யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆத்திக மனநிலைக்கு ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருப்பதால், அந்தந்தப் பகுதி இருப்பவர்களை அதில் நுழைத்து எழுதிவிடுகிறார்கள்.

இன்னும் எத்தனை பேரு கிளம்பி இருக்கிறார்களோ.........ஏன் இந்த பொழப்பு.......கடவுள் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே......காப்பிரைட் இல்லாத கதைகளை கண்டபடி திருத்தி எழுதி என்னை நிருபியுங்கள் என்று எங்கும் கடவுள் மன்றாடியதைப் போல் தெரியவில்லை..... இந்த பொழப்புக்கு மாற்று மதத்துக்காரனை மனிதனாக நினைச்சு மனிதனாக வாழலாமே.

The Atheist Professor vs the Christian Student)


http://malaysianatheist.blogspot.com/2006/11/atheist-professor-vs-christian-student_11.html

(மலேசியா வர்சன்)

http://www.patrish.com/atheist.html
(கிறித்துவ வர்சன்)

http://hasnain.wordpress.com/2006/05/31/a-dialogue-between-an-atheist-professor-and-a-student/
(இஸ்லாம் வர்சன்)


http://pudukai.blogspot.com/2009/07/blog-post.html
(கலாம் வர்சன்)

http://www.religioustolerance.org/culeins.htm
(ஐன்ஸ்டன் வர்சன்)

**************



இனிமே இது கலாம் சொன்னது, கண்ணதாசன் சொன்னது கதை எழுதினால் கண்டபடி கண்டனம் செய்து இந்த சுட்டியை அங்கு சேர்ப்பேன்.

என்ன கொடுமை சார் இது.........!

கூகுளில் "The Student & the Atheist Professor", என்று தேடினால் ஒரு வண்டி குப்பைக்கு மேலாகக் கொட்டுது. இதை நான் கடவுள் ஏற்பு மறுப்பு என்கிற நிலையில் நின்று எழுதவில்லை, திருப்பதி கடிதம் பலவடிவங்களில் வருவது போல் இந்த 'கடவுள் நிருபன' கதைகளும் வெளிவருது என்று காட்டவே எழுதினேன்.

15 ஜூலை, 2010

மதப் பித்து !

பொதுவாக சாதி மதம் பிடிக்காதவங்க தான் அது பற்றி மிகுதியாகப் பேசுவதாகக் குற்றச் சாட்டுகள் உண்டு, அது 100 விழுக்காடு உண்மையே. சட்டையில் தெறித்த சந்தனம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, சாக்கடை தெறித்தால் அதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பதாகத்தான் அக்கருத்தைக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது சாதி மதத்தை சமூக ஜவ்வாதாக நினைப்பவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். சாக்கடையாக நினைப்பவர்கள் தூப்புரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

*****

சிங்கத்தின் சொர்கம் என்னவாக இருக்கும் ? கொளுத்த மான்கள் நிறைந்திருக்கும் இருக்கும் ஒரு காடு, பன்றிக்கு ? சொல்லத் தேவை இல்லை. கொசுக்களின் சொர்கம் கூவம் ஆறு. மனிதர்களின் சுவர்க்கக் கனவுகள் கூட இப்படித்தான், நாம் எதை மகிழ்வாக நினைக்கிறோமோ அதைத்தாண்டி நம் சிந்தனைகள் செல்லாது, மதங்கள் காட்டும் சுவர்கங்கள் அனைத்துமே மனித மன சிந்தனை அடிப்படையில் எழுந்தவையே. அவதார் படம் படைப்புத் திறனின் உச்சம், அங்கு புற உலகில் வாழும் மனிதர்கள் துன்பமற்றவர்களாக இருக்கிறார்கள், அங்கும் கொடிய விலங்குகள் உண்டு என்றாலும் ஒன்றை ஒன்று வேட்டையாடுதல் என்பது கிடையாது, ஒன்றை ஒன்று சார்ந்து உதவி வாழ்ந்துவந்ததாகக் காட்டப்பட்டது, மனித சிந்தனைக்கு முரணற்றக் காட்சிகள் அவை, விதவிதமான விலங்குகள் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சி என்ற சூழல் இருப்பதாக நேரடியாகச் சொல்ல முடியாமல் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில்லை, அதாவது அமைதியான சூழலே மகிழ்ச்சியானவை என்பதாக அந்த இயக்குனர் காட்சிகளை அமைத்திருந்தார், அந்த சூழல் நரகம் ஆகுவது மனிதப் படையெடுப்புகளால் என்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், மற்றபடி அந்த நிலத்தில் நரகம் என்று ஒன்று இருப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்த உலகமாகவோ காட்டப்படவில்லை, மாறாக அமைதி நிறைந்த உலகமாகக் காட்டப்பட்டது, அந்தப் படத்தின் கற்பனையில் எனக்கு பிடித்திருந்த காட்சிகளே அங்கிருந்த சூழலை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தி இருந்தவை.

மனித கற்பனையின் சுவர்கங்கள் இப்படிப்பட்டதாக இருந்தால் கூட என்னால் ஏற்க முடியும். ஆனால் மதங்கள் காட்டும் சுவர்கங்கள் இப்படியா ? இந்திரபுரியாகட்டும், ஆப்ரகாமிய மதங்கள் காட்டும் சுவர்கங்கள் ஆகட்டும் அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன. துவக்கம் முதலே ஆணுக்கு இருக்கும் பெண்களின் மீதான அளவிட முடியாத ஆசை ஆண்கள் படைத்த மதங்களின் சுவர்க்க கனவுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு மதத்தையும் பெண்கள் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஒருவேளை பெண்கள் அமைக்கும் மதமாக இருந்திருந்தால் நல்லக் கணவன் அங்கு கிடைப்பன் என்பாதாக சொல்லப்பட்டு இருக்குமோ, ஆசை அல்லது ஏக்கம் ஆகியவை உளவியல் வழியான விருப்பங்கள் ஆண்கள் படைத்த சுவர்கங்களின் பலன்களாகக் காட்டப்படுவது என்பதைத் தவிர்த்து மதக் கற்பனைச் சுவர்கங்களில் வேறொன்றும் இல்லை. அல்லது மதங்களின் சுவர்கம் என்பது அம்மதங்களை ஏற்றுக் கொண்டவர்களின் மாபெரும் கனவுலகம் எனலாம்.

எனக்கு எதாவது ஒரு மதத்தில் நல்ல பிடிப்பு இருந்தால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் வேற்று மதத்தினராக இருக்கும் சூழலில் என் நண்பன் குறித்து நான் நினைப்பது 'இறைவன் நாடினால் (விரும்பினால்) இவனும் ஒரு நாளைக்கு நம் மதத்தை ஏற்றுக் கொள்வான், இவனும் என்னுடன் சுவர்கத்தில் இருப்பான்' இணை பிரியாத நண்பர்கள் எனும் போது இப்படி நினைப்பது வியப்பொன்றும் இல்லை. பிற மதத்தைச் சேர்ந்த நெருக்கமான நண்பர்களை உடைய மதப்பாற்றாளர்கள் எவரேனும் இப்படி நினைக்காமல் இருப்பது உண்டா ? இல்லை என்றே நான் நினைக்கிறேன். அப்படி இருப்பவர் எவரும் உண்மையான நெருக்கம் கொண்ட நண்பராக இருக்கவும் முடியாது. இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால் நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய சூழலும் சேர்ந்தே பயன்(ண)ப்பட வேண்டும் என்று நாம் நினைப்போம், அந்த அளவுக்கு மனித மன மத நம்பிக்கை மனிதனை மாற்றிவிடும். ஆனாலும் இப்படியான மன உணர்வுகள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியானவை அல்லது இது போன்ற மத நம்பிக்கைகள் ஒரு வேளை பொய்யானதாகக் கூட இருக்கலாம் என்பதை மட்டும் ஏற்க மறுப்பர்.

7 டிசம்பர், 2009

புனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் !

மனித குலத்திற்கு இயல்புக்கு மாறாக கேடுவிளைவிப்பதை தீயது, விலக்கத்தக்கது, ஒதுக்கக் கூடியது என்றும், இயல்புக்கு மாறாக நன்மை விளைவிப்பது என்பதாக சொல்லப்படுபவை அல்லது காட்டப்படுபவை தெய்வீகம், புனிதம், போற்றத்தக்கது என்பதாக கட்டமைக்கப்பட்டு மக்கள் சமூகங்களில் உலவ விடப்படுகிறது, கேடுவிளைவைப்பவை மனித சமூகத்தின் அல்லது தனிப்பட்ட அல்லது குழுக்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட பாதிப்பு, உதாரணம் தனிமனித பேராசை, குழுவினர்களின் இனவெறி. குழுவினர்களின் ஒழுங்கீனம். இவைகளினால் சமூக ஒழுங்குகள் கேள்விக்குறியாகும் போது சமூகத்தின் சமச்சீர் தன்மை நலிவுறும். அங்கே புரட்சியாளன் அல்லது கலகக்காரன் உருவாகுவான். மதங்களின் அல்லது பகுத்தறிவு சிந்தாந்தங்களின் தோற்றப் பின்னனியைப் பார்த்தால் அக்காலத்தில் அவற்றின் தேவை இருந்திருக்கிறது என்பதாக விளங்குகிறது. அதாவது மதத்தீன், பகுத்தறிவாதத்தின் தேவை என்பது சமூகத்தின் சமச்சீர் தன்மை நோக்கிய நகர்வு என்று சொல்லலாம் என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

இப்படி தனிமனிதர்களால் உருவாக்கப்படும் மதங்கள், சமூக ஒழுக்கங்களை கட்டமைக்கும் போது அதனை வலிமையாக வழியுறுத்த, அச்சம் ஏற்படுத்தி பணிய வைக்க கடவுள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. கடவுள் கோட்பாடுகளற்ற மதங்களே கிடையாது. புத்தர் மறைவுக்குப் பிறகு புத்தரை மனிதரில் மேன்மைமிக்கவர் என்பாதாகவே நினைத்து, புத்தரின் கருத்துகளை புத்தரிடமிருந்து நேரடியாகப் பெற்றதைப் பரப்பியவர்களுக்கு
மாற்றாக அவை வெளிநாடுகளில் பரவ வைக்கும் போது புத்தரின் அற்புதங்கள் என்று காட்டத் தேவை இருந்ததாக நினைத்தார்கள், அதனால் புத்த சங்கங்களில் பிளவு ஏற்பட்டு, புத்தரை மனிதராக நினைப்பவர்கள், புத்தரை அவதாரமாக நினைப்பவர்கள் என இரு சமயப் பிரிவுகள் ஏற்பட்டது, இவையே ஹீனயானம் மற்றும் மகாயானம் எனப்படும். மகாயானத்தில் புத்தரை அவதாரமாகக் காட்ட புத்த ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன, புத்தரின் பிறப்பே புனிதம் நிறைந்ததாகக் சொல்ல பல பின்னனி புனைவுகள் புனையப்பட்டன. இவை புனைவுகள் தான் என்பதை உணர புத்தர் ஏழைத்தாயின் வேண்டுகோள் படி அவளுடைய இறந்த மகனை உயிர்பிக்க மறுத்து, மரணம் பற்றிய உண்மையை உணர்த்த அந்த தாயை இறப்பு இல்லாத வீட்டிற்கு சென்று கடுகு பெற்றுவருமாறு பணித்ததைக் கூறலாம். பெரியாரை புனிதப்படுத்தும் முயற்சியாக 'பெரியாரின் தீர்க்க தரிசனம்' என்கிற பெயரில் அவரது கருத்துக்களுக்கு தலைப்பிடுபவர்களின் செயல்கள் கூட பெரியாருக்கு புனிதம் கற்பிக்கும் செயலே.

புத்தர் மட்டும் அல்ல, புத்தரின் சூனிய வாதமான 'ஏதுமற்றது' என்கிற கொள்கைக்கு மாற்றாக அதன் எதிர் (0 அல்லது 1 நன்றி திரு ஸ்வாமி ஓம்கார்) சித்தாந்ததில் ஆதிசங்கரர் எல்லாமும் அது, அனைத்தும் பிரம்மம் என்று கூறி 'நீயே அது' என்கிற அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். புத்தமதத்தின் வைதீக வடிவம் தான் ஆதிசங்கரரின் அத்வைதம் அல்லது அதை வலுப்படுத்த விதமாக வைதிகத்தின் ஒரு பிரிவாகிய சார்வாகம் மற்றும் லோகாயத்தின் புதிய வடிவம் தான் அத்வைதம் என்று மத ஆய்வளர்கள் சொல்லுகிறார்கள். புத்தரைப் புனிதர் ஆகியதைப் போலவே ஆதிசங்கரர் சிவ(னின்) அம்சம் என்றெல்லாம் பின்னாளில் அவரைப் பின்பற்றுபவர்கள் கதை எழுதிக் கொண்டார்கள். ஏசு நாதர் புனிதர் ஆக்கப்பட்டதும் கூட மதப் பரவல் என்கிற செயலுக்கு இணைத்துக் கொண்ட பின்னனிக் கதைகளால் ஆனதும் என்றே மத ஆய்வளர்கள் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாக கிருஷ்ணன் மற்றும் ஏசு நாதர் ஆகிய இருவரும் ஆடுமேய்பது உட்பட பிறப்பு முதல் இறப்பு வரை நடந்ததாகக் கூறப்படும் ஒற்றுமைக் கதைகளைக் காட்டுகிறார்கள். அது பற்றி பிரிதொரு பதிவில் எழுதுகிறேன்.

கிருஷ்ணன், புத்தர், ஏசு, முகமது நபி ஆகியோர் அருள் பெற்றது கதையா ? கட்டுக்கதையா ? என்பதைவிட ஆய்வுக்குரியது மிகைப்படுத்தப்படும் புனிதத் தன்மையே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம் என்பது உணவுக்கு பொருந்துமோ இல்லையோ மதப் புனிதத் தன்மைக்கு இவை பொருத்தமகாவே இருக்கிறது. அண்மையில் கன்னியாஸ்திரி ஒருவர் கிறித்துவர்கள் கட்டமைக்கும் பிரம்மச்சாரியம் என்னும் புனிதத்துவத்தின் மீது கல்வீசினார், தேவனுக்கு அற்பணிப்பு என்கிற பெயரில் காமம் துறந்து கடமை ஆற்றுபவர்களாக பாதிரியார், மதர் என்றெல்லாம் அறிவித்துக் கொண்டவர்களின் பாலியல் நடவடிக்கைகள், முறைகேடுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினார். கேரளாவில் நூலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நூலின் வழியாக பலர் ஞானஸ்தானம் பெற்று தங்களது மகள்களை கன்னிகஸ்திரி வேடம் வேண்டாம் என்று மீட்டுக்கொண்டார்கள் என்று செய்திகள் வெளியானது. இஸ்லாம் என்றால் அன்பு என்று கூறிக் கொள்ளும் இஸ்லாம் சமூகத்தின் மீது கல்வீச்சாக இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகள் நடத்தும் தொடர் கல்வீச்சு, கருவறை புனிதம் நிறைந்தது என்று கூறும் இந்துக்கள் மீதான கல்வீச்சாக காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் படுகொலை மற்றும் மச்சேஸ்வர கோவில் நடந்த பாலியல் ஆபாச கூத்துகள். அமைதி, அன்பு எனும் புத்தமதத்தினர் மீதான கல்வீச்சு அதைப் பின்பற்றுபவர்கள் இலங்கையில் நடத்தும் இனவெறி ஆட்டம்.

இவையெல்லாம் கேள்விப்படும் பொழுது உண்மையான இறை நம்பிக்கையாளர்களை மிகவும் வேதனைக்கு உட்படுத்தும். கடவுள் எங்கே போனார் ? கடவுள் இருக்கிறாரா இல்லையா ? என்று நினைக்க வைக்கும். காரணம் மதங்கள் இறை நம்பிக்கை கட்டுமானத்தில் அடித்தளமாக புனித இடைச் சொருகல்களை மிகுதியாகவே சொருகி வைத்திருக்கிறது, அவையே ஒருவருக்கு குழந்தை முதல் முதுமை வரை மாறி மாறிச் சொல்லிக் கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. அந்த இடைச் சொருகல்கள் ஒவ்வொன்றாக உருவப்படும் போது எந்த ஒரு கட்டுமானமும் ஆட்டம் காணவே செய்யும்.

இறை நம்பிக்கைகளில் நுழைக்கப்படும் புனிதம் என்பவை மேல்பூச்சு தான் என்று புரிந்து கொள்வோர் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இல்லை இல்லை அவை என்றுமே புனிதம் என்போரே சஞ்சலத்திற்கும், அமைதி இன்மைக்கும் ஆளாகுகிறார்கள். பெண்களின் மீதான கற்பு போல் மதங்களில் புனிதம் என்பவை வெறும் கட்டமைப்புகள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

பிற பதிவுகள் :

புனிதக் குற்றங்கள்
புனித (நூற்) போர்

23 நவம்பர், 2009

புனித குற்றங்கள் (Sacred Crime) !

"தவறிழைத்தாலும் அரசன் மன்னிப்பு கேட்பது என்பது அரசனுக்கே இழுக்கு" - இது வெள்ளைக்காரர்களின் பண்பாட்டுக் கூறு. Man in the iron mask என்கிற படம் பார்த்தேன், அதில் இளவரசன் தவறுதலாக ஒரு கண்ணாடி கோப்பையை உடைத்துவிட்டு 'Sorry' சொல்ல, 'A king cannot ask sorry' என்று அவனுக்கு பயிற்சி கொடுப்பவர் அறிவுரை சொல்லுவார். முதலாளிகள், பணக்காரவர்கம், செல்வாக்குப் படைத்தவர்கள் தவறு செய்வது இயல்பு என்பதே அதன் பொருள். அடிமைசாசனத்தின், ஆளுமைகளின் அனைத்து கயவாளித்தனங்களும் அதில் இருந்தே வளர்ச்சி பெருகின்றன. தவறு செய்தவன் தன் னளவில் மன்னனே, மன்னனின் மகனே ஆனாலும் அவனுக்கும் தண்டனை உண்டு என்பதே நமது கோட்பாடு. 'நானே கள்வன்' கண்ணகிக் கதையின் முடிவு கூட இப்படியாகத்தான் அமைந்திருந்தது. நீதி என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும், பிறர் பயன்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இருந்தாலும் பெரிதாக பீற்றிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பது போலவே பார்பனுக்கு ஒரு நீதி.....பறையனுக்கு மறு(!) நீதி என்பதாக சாதிய வருணாசிரம் கோட்பாடுகள் நாக்கை நீட்டி பழிப்பு காட்டுவதையும் நாம் மறந்துவிடலாகாது.

அரசனோ, தலைவனோ குற்றம் செய்வது பற்றிய பெரிய கருத்துகள் விவாதம் சுயநலம், பொதுநலம் என்ற நோக்கில் சொல்லப்படுவது அவரவர் இன வாழ்வியல் முறை என்றாலும், அனைத்தையும் அறிந்தவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லும் இறை பணியாளர்கள், சாமியார்கள் செய்யும் குற்றங்களுக்கும் அவ்வித அளவீடுகள் பொருந்துமா ? காமம் அல்லது பாலியல் மற்றும் உடல்உறவு குறித்து அனைத்து மதங்களுமே கட்டுபாடுகள் கொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். விலை மாந்தர்கள் பற்றிய கருத்துகள் மதவாதிகளினால் மிகவும் தூற்றப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. ஒருவரை புனிதராகக் காட்ட அவர் காமத்தை துறந்தவர் அல்லது காமத்தில் கட்டுபாடு மிக்கவர் என்பதாகச் காட்டுகிறார்கள்.

பொதுவாக மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் வெளியே தெரியாமல் அமுக்கப்படும் அல்லது பிற மதத்தினரால் மிகுதியாகப் பேசப்படும், அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பற்றி விவாதிப்பது குறைவு அல்லது கிடையாது, அவ்வாறு விவாதம் செய்வதும் கூட பிற மதத்தினரால் தூற்றப்படுவோம் என்கிற ஐயம் காரணாமாக விவாதிப்பது இல்லை என்பதைவிட மதப்புனிதம் கெட்டுவிடும் என்பதாகவே அதை மறைத்தே பழகுகிறார்கள். வேதங்களில் பெருமையாகப் பேசப்பட்ட இந்திரன் தற்பொழுது எங்கு சென்றான் என்றே தெரிய்வில்லை, தமிழகத்து முருகனின் மாமனார் என்கிற ஒரு பதவிதவிர்த்து இந்திரன் குறித்து தற்காலத்து இந்து சமயவாதிகளால் பேசப்படுவதில்லை, ஏனெனில் இந்திரன் குறித்துக் கூறப்பட்ட கதைகளில் ஒன்று இந்திரன் காமவயப்பட்டு முனிவர் வேடம் கொண்டு முனிவரின் மனைவியை அடைய முயற்சித்தான், அவளும் அறியாமையால் அதற்கு ஒத்துழைத்ததால் கல்லாக மாறும் படி சாபம் பெற்றாள், இந்திரனும் உடெலெங்கும் பெண் குறிகள் தோன்றக்கடவது என்று சாபம் பெற்றான் என்பதே அந்தக் கதை அந்தக் கதையின் தொடர்ச்சியாக இராமயணத்தில் இராமன் கால்கள் பட்டதும் உயிர்பெற்றாள் என்றும் அவளை இராமன் அன்னையே என்று அழைத்து மகிழ்ந்தான் என்றும் இராமயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அகலிகை (மறு அல்லது மீண்டும்) புனிதம் அடைந்தாளா இல்லையா என்பதைவிட இராமனின் கால் அடிக்கு இருக்கும் புனிதத்துவம் உணர்த்துவதாக அந்தக் கதையின் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணாசை மிக்கவன் என்பதாக கதையில் கூறப்பட்டு கதை பரவலாகப் வழங்கிவருவதால் இந்திரன் வணக்கம் வழிபாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன என்பதாகத்தான் நினைக்கிறேன். மற்றபடி இந்திரன் வணங்கத்தக்கவனா இல்லையா என்கிற புரிதல்களை நான் எழுப்பவில்லை. பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன.

இறை தொண்டாற்றுபவர்கள் காம வயப்பட்டார்கள் என்று கூறுவது கூட மதத்திற்கு இழுக்கு என்பதாகவே அனைத்து கதைகளும் கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய இதிகாச உதாரனங்களைவிட அண்மைய ஆறாம் நூற்றாண்டு கதைகளை குறிப்பாக திருவிளையாடல் புராணம் பெருமையாக பேசும், திருமுறைப் பாடல்கள் பாடியவருமான ஞான சம்பந்தன் திருமணம் முடித்தவுடனேயே அங்கு கலந்துகொண்டவர்களுடன் இறை சோதியில் ஐக்கியம் ஆனதாக கதை சொல்கிறார்கள். ஞானசம்பந்தரை இல்லறவாசியாகக் காட்டவேண்டியதற்கு தேவை அவர் வாழ்வில் முழுமை பெற்றார் என்பதற்கும், அவர் அன்றே சோதியில் ஐக்கியமானார் என்பதை தெய்வீகம் புறக்கணிக்கும் காமத்தை தொடாத, துய்காத புனிதர் அவர் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல:) இவ்வாறெல்லாம் மறைத்து மறைத்து காமம் என்பது ஆன்மிகத்திற்கு மிகத் தொலைவு என்றெல்லாம் கட்டமைத்துவிட்டு ஒரு சாமியார் காம லீலைகள் புரிகிறார் என்று சொன்னால் நடக்கக் கூடாத இழுக்கு நடந்ததாக கூனிக்குறுகிக் கொள்கிறார்கள், அல்லது அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறார்கள். ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :)

சாமியார்களின் புனிதம் குறித்து மிகுந்த கட்டுமானம் செய்திருப்பதால் தான் என்னவோ, அவர்கள் தவறு இழைக்கும் போது ஒன்று அதை ஏற்க அடியார்களுக்கு மனம் வருவதில்லை, அல்லது அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்கிற கருத்தும் வருகிறது. அவன் அங்கு அந்த பதவிக்கு தகுதியற்றவனாகிறான் என்பதை அவனுடைய பதவியில் புனிதம் இருப்பதாக நம்புவர்கள் நினைப்பது குறைவு. ஒரு சாமியார் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அவை மறைக்கப்படுகிறது அல்லது மறைமுகமாக ஏற்கப்படுகிறது கையும் களவுமாக மாட்டுபவர்கள் மிக எளிமையாக தப்பித்துவிடுகிறார்கள் சிங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிறித்துவ பாதிரி பணமோசடி செய்தாதாக கைது செய்யப்பட்டு நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கம்பி எண்ணுகிறார், நேற்று ஒரு புத்தமத சாமியார் பணமோசடியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நம் நாட்டு மதத்தலைவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகுதி.

கருவறையில் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பிடிபட்ட கோவில் குருக்கள் தேவநா(த்)தன் 'பகவான் என்னை ஏற்கனவே தண்டிச்சிட்டான்' என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் தான் பகவானுக்கு அர்சனை செய்வதாகச் சொல்லி பெண்களை ஏமாற்றி வந்தவன், இன்று பகவான் தண்டித்துவிட்டதாகச் சொல்கிறான், இவனை பகவான் தண்டிச்சாரா இல்லையா ? இவனுக்கு எப்படி தெரியும் ? இவனுடன் இரவோடு இரவு பேசி நான் உன்னை தண்டித்துவிட்டேன் என்று சொன்னாரா ? அவன் செய்தது சராசரி மனிதத் தவறே என்றாலும் கூட பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைக்கு உலை வைத்தவன், இன்னும் 'பகவான்' பெயரைச் சொல்ல எதுவும் இருக்கிறதா ? இருந்தாலும் தொடர்ந்து சொல்லுவான் ஏனென்றால் அவன் செய்தது புனித அர்சனைத் தொழிலாம், அவனுடைய முறையற்ற பாலியல் நடவெடிக்கை மட்டும் 'தெரியாமல் நடந்த தவறுகலாம், அதை கடவுள் மன்னிப்பாராம்'. இவன் சிக்கியது, இவனைப் பற்றிய செய்திகள் இவற்றிற்கு கொடுக்கப்படும் முதன்மைத்துவம் மற்றவையாவும் இவன் ஒரு பெரிய மடத்தின் தலைவராக இருந்தால் வெளியே தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவை நம்பட மாட்டாது.

சாதரண மக்கள் தவறிழைத்துவிட்டால் அது அவர்கள் இழிபிறப்பு, அவர்கள் தவறு செய்யவே பிறந்தவர்கள், மோசமானவர்கள் என்பதும், அதுவே சாமியார்கள், புனிதர்கள் தவறு செய்துவிட்டால் மழுப்பலாக 'நேரம் சரி இல்லை தப்பு நடந்துவிட்டது, கிரக நிலை சரி இல்லை, சேருவார் தோசம்' என்றெல்லாம் பழியை பிறர் மீது சொல்வதும் வாடிக்கை தான்.

புனித குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதைவிட அவற்றிக்கு தண்டனையே கிடையாது எனெனில் அவைகள் வெளியே தெரியவும் தெரியாது, தெரிந்தாலும், அவை நம்பப்படவே படாது. மனு நீதியாக மறு(த்துவிடும்) நீதியாக இன்னும் புனித குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

17 நவம்பர், 2009

நோவா கப்பல் !

தமிழில் 'நாவாய்' என்ற சொல் மிகப் பழங்காலத்தில் கப்பலைக் குறிப்பதாகும், இதற்கும் ஆங்கிலத்தில் இருக்கும் 'Naval' , Navy போன்ற சொற்களுக்கும் அதன் வேர் தொடர்புடைய பிற மொழிச் சொற்களையும் ஆய்ந்தால், கப்பலும் கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்கள் ஈடுபட்டு வந்திருப்பதையும், அந்த சொல்லின் தொடர்பில் பல்வேறு மொழிகளுக்கான கப்பல் பெயரும் இருப்பதை அறியலாம்

Naval

1602, from L. navalis "pertaining to a ship or ships," from navis "ship," from PIE *nau- "boat" (cf. Skt. nauh, acc. navam "ship, boat;" Arm. nav "ship;" Gk. naus "ship," nautes "sailor;" O.Ir. nau "ship;" Welsh noe "a flat vessel;" O.N. nor "ship").

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள். அந்தச் சொல் தமிழ் சொல்லா பிற மொழிச் சொல்ல என்கிற ஆராய்ச்சியைவிட மிகவும் சுவையார்வமானது நோவா என்கிற விவிலியம் (பைபிள்) காட்டும் கப்பல், நாவாய்க்கும் நோவாவிற்கும் சொல்லளவில், பலுக்குதலில் (உச்சரிப்பு) பெரிய வேறுபாடு இல்லை என்பதால் கப்பலின் பழைய பெயரான 'நோவா' என்கிற பெயரிலேயே பைபிளில் சொல்லப்படு்ம் நோவா கப்பல், கிறித்துவுக்கு முன்பே நடந்ததாகச் சொல்லப்படும் யுக மாற்றம் (பிரளயம்) குறித்த கதையில் வழங்கும் பழைய சொல் என்று கருதுகையில் தமிழின் தொன்மையை ஒப்பீடு அளவில் அறிந்து கொள்ள முடியும்.

*****

இந்த நோவா கதையைப் படி நோவா என்பவர் ஆதாமின் எட்டாம் தலைமுறையாம். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டு எட்டு தலைமுறைக் குள்ளாகவே உலகமெங்கும் பல்கி பெருகிவிட்டனரா ? ஏன் ஆண்டவர் உலகத்தை நீரால் அழிக்க முன்வந்தார் என்ற பகுத்தறிவு கேள்விகளெல்லாம் இருந்தால் அந்தக் கதை உங்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கதை போலவே இருக்கும். நோவா என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்றும் கதையில் சொல்கிறார்கள். தொள்ளாயிரம் ஆண்டுக்குள் பூமியை நிரப்பும் அளவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன ? நம்புவோமாக ? ! சரி நம்புவோம் என்று வைத்துக் கொள்வோம். கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம், அதன் பிறகு தண்ணீர் பெருக்கால் அழிந்ததாம். நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும், நூண்ணுயிரிகளையும் கப்பலில் ஏற்றியதாகக் கதையில் கூறப்படவில்லை. கரடிகளில் பல வகை உண்டு, யானைகளில் ஆப்ரிக்க யானை, ஆசிய யானை இரு பிரிவுகள் உண்டு, இதில் எதை ஏற்றினார்கள் என்றே தெரியவில்லை. டைனசர் பற்றி சொல்லப்படவே இல்லை. பாம்பு வகைகளில், பூச்சி இனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உண்டு. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் அதன் வகைகளும் முழுமையாக இன்றும் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கதையை சிறு வயதில் சனிக்கிழமை கிறித்துவ சிறப்பு பள்ளிகளில் கேட்டு இருக்கிறேன்.

கப்பல், நல்லவர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதாக நீதிக் கதைகள் என்ற அளவில் ஏற்றுக் கொண்டாலும், உலகையே ஆறு நாளில் படைத்த ஆண்டவன் இவை அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வேறொரு நல்லப் படைப்பை செய்ய நினைக்காமல் ஏன் நோவிற்கு கட்டளை இட்டு கப்பல் செய்து கெட்டவர்களை அழித்தார் என்று தெரியவில்லை. திரிசங்கு உயிரோடு சொர்கம் செல்ல முயன்ற கதையை ஒப்பிடுக.

நோவா(noah's ark) கப்பல் கதை மட்டுமே ஒரு முடிவின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. இந்து மதத்திலும் கல்கி அவதாரத்திற்கு பிறகு கண்ணன் ஆல் இலையில் குழந்தையாக வந்து மறு உலகை (சுவர்கத்தை அல்ல) படைப்பானாம். ஆக மதங்கள் காட்டும் கதைகள் எதிலுமே உலகம் முற்றிலும் அழிந்து அதன் பிறகு இல்லாமல் போகும் என்று குறிப்பிட வில்லை. படைப்பும், அழிப்பும், படைப்பும் என மாறி மாறி பூமியில் நிகழ்ந்து (நிகழ்த்திக்) கொண்டிருக்க சுவர்க்கமும், நரகமும் எங்கே இருக்கிறது, அங்கு யார் யாரெல்லாம் செல்வார்கள், அழிவுக்கு பிறகு பூமியில் யார் யாரெல்லாம் பிறப்பார்கள் என்றே தெரியவில்லை.

நோவா கப்பலும் கல்கி அவதாரமும் தொடர்புடைய மதக் கதைகளைப் பார்த்தால் நிரந்தர சொர்கம், நரகம் பற்றிய கட்டுமானங்களில் கூறப்படும் மறு உலகம் என்பது பிரளயத்திற்கு பிறகு மறுபடி திருத்தி அமைக்கப்படும் பூமியா ? என்ற கேள்வியும் எழவே செய்கிறது. மறு உலகம் என்பது வேறோர் உலகம் அல்ல, மறுபடியும் உருவாகும் உலகம் என்று புரிந்து கொள்வதில் பிழையேதும் உள்ளதா ? ஆன்மிகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கே வெளிச்சம். 2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.
:)

ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது, காப்பாற்றப்படும் என்கிற அகலமான கற்பனை இருந்தது, கல்கி அவதாரக் கதையில் நாம கண்ணனை குழந்தையாக்கி ஆல் இலையில் அம்மணத்துடன் மிதக்க விடுவதுடன் உலகத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் :)

மேலும் நோவா கப்பல் படங்களுக்கு கூகுள்.

9 நவம்பர், 2009

ஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !

ஸ்வாமி ஓம்காரின் 'வேத வாழ்க்கை (8)' தொடரில் வரும் 'பசு' புராணம் அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களை மிகவும் சினம் அடைய வைத்தது, சித்தூர் முருகேசன் ஓம்கார் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓம்கார் பின்னூட்டத்தை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து சினந்த சித்தூர் முருகேசன் ஓம்காருக்கு எதிர்வினைப் பதிவு ஒன்றைப் போட்டார்.


இரு இடுகைகளையும் நான் படித்த வரையில்,

* ஸ்வாமி ஓம்கார் பசு கொல்லப்படுவதைச் சுட்டி சுற்றுச் சூழல் கேடு அல்லது சுற்றுச் சூழலுக்கு பசுவின் பங்கு குறித்து எழுதி இருந்தார்.

அதை சித்தூர் முருகேசன் புரிந்து கொண்ட விதம்

* ஸ்வாமி ஓம்கார் பசு புனிதம் என்கிறார், பசுவை கொல்வது பாவம் என்கிறார், என்கிற ரீதியில் தனது எதிர்ப்புகளை எழுதி இருந்தார்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் சித்தூர் முருகேசன் இருவருமே சோதிடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர்கள், சோதிடம் பற்றிய கருத்தில் ஒருவரை ஒருவர் மறுத்தது இல்லை.

ஸ்வாமி ஓம்கார் பசுவை மட்டுமல்ல, மரங்கள் வெட்டப்படுவது பற்றியும் எழுதி இருந்தார். இருந்தாலும் அந்த தொடரில் மற்றொரு பகுதியில் மரம் குறுந்தகடை (சிடி) படிக்கும் என்று எழுதி இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு எந்த ஒரு சான்றையும் ஸ்வாமி ஓம்கார் தரமுடியாது. சிடியில் டேட்டா பதிவு என்பது பல்வேறு டிகோடிங் முறைகளை அடக்கியது, அதை என்கோட் செய்து படிக்கும் முறைகளும் கணிணியால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று, பச்சை மரத்திற்கு அருகில் சிடியைக் கொண்டு சென்றால் அதில் அடங்கி இருக்கும் தகவலுக்கேற்ற (எம்எஸ்எஸ், இளைய ராஜா, ஏஆர் ரஹ்மான் இசை ?) மரம் உணர்ச்சி வசப்படும் என்பது ஓம்காரின் கூற்றாக இருக்கிறது. இது நம்புவதற்கோ, அறிவியல் மூலம் நிருபணம் செய்யவோ கூறு அற்றதும், ஒட்டுமொத்தமாக அந்த கருத்தே நிராகரிக்கக் கூடியது ஆகும். மரம் உணர்ச்சி வசப்பட இயற்கைச் சூழல் மாறி மாறி அமைந்தால் தான் உண்டு மற்றபடி குயில் என்னதான் இனிமையாக மரத்தின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாலும் மரம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதே எனது கருத்து, தொடு உணர்ச்சி என்பது தவிர்த்து மரம் கேட்கும் திறனற்றது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் அந்த கருத்தில் அழுத்தமாக இருந்தால் அவ்வாறு சொன்னதற்கு வேறெதும் காரணங்கள் இருக்கிறதா என்பதை விளக்கினால் நன்று. ஸ்வாமி ஓம்கார் பசு பற்றிய எழுதிய கட்டுரைகளில் பசுவை புனிதப் படுத்தவில்லை ஆனால் பசு பற்றிய நல்ல கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்

அண்ணன் சித்தூர் முருகேசன் எழுதிய கருத்தில் ஒன்று மனதில் பதிந்தது, "அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான்"

அதாவது,

"பசு புனிதம் என்று சொல்லுபவர்கள், பசு கிழவியானதும் அதாவது கன்று ஈனுவதற்கான வாய்ப்பும், பால் கொடுக்க முடியாத சூழலில் அதை ஏன் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்கள் ? விற்பவனை விட்டுவிட்டு கொல்பவனை மட்டும் குறை சொல்வது ஏன் ?" என்று கேட்டிருந்தார்.

என்னைப் பொருத்த அளவில் இது சிந்தனையைத் தூண்டும் கேள்வி தான். பசுவை தெய்வம், தாய் என்றெல்லாம் ஒப்பிடும் இந்துக்கள், பசுவதை மீளாப் பாவம் என்றெல்லாம் பயமுறுத்தும் இந்துக்கள், இறந்த பசுவை தோல் உறித்துவிட்டு தின்றார்கள் என்று தலித்துகளை சிலர் அடித்து கொன்றதையும் ஞாயம் பேசும் இந்துக்கள் எந்தப் பசுவும் இயற்கை மரணம் அடைந்ததைப் பார்த்திருக்கிறார்களா ? அல்லது இயற்கையாக வயதானதும் வயதின் காரணமாக இந்தியாவில் இறக்கும் பசுக்களின் அதாவது கிழப்பசுக்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு ? ஒருவிழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.

* பால் கரக்கும் வரையில் தான் பசு புனிதமாக பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அடிமாட்டுக்காரணிடம் கிடைத்த விலைக்கு விற்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு வாங்குபவர் அந்த கிழட்டு பசுமாட்டிற்கு வைக்கோலும், புல்லும் போட்டு சாகும் வரை பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்களா ?

* பாலைக் கரந்து... கரந்து குடித்துவிட்டு பசு கிழடு ஆனதும் விற்பது என்பது அந்த மாட்டைக் கொல்வதைவிட பாவம் இல்லையா ?

* பசுவதைப் பற்றிப் பேசுவோர் எத்தனை பேர் தோல் செருப்புகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் ?

**********

ஆட்டுக்குட்டி, ஒட்டகம், பசு இவையெல்லாம் மதங்களில் காட்டப்படும் விலங்குகள் என்பதைத் தவிர்த்து எனக்கு அவற்றின் மீது பெரிய கருத்துகள் இல்லை. வலி உணர்வு கொண்ட எந்த ஒரு உயிரனத்தையும் கொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விலங்குகள் குறித்து புனிதம், அசுத்தம் பேசுப்வர்களின் கொல்லாமை மற்றும் கொள்கை பேசுவோரின் 'விலங்குகள்' பற்றிய கருத்துகளும் ஏற்புடையது அல்ல. தின்பது என்றாகிவிட்டால் நாய்கறி சாப்பிடுவது கூட இழிவானது கிடையாது.

விலங்குகளுக்கு பேசும் திறன் இருந்தால் அதுவும் வாழ்வுரிமைப் பற்றிப் பேசும் அல்லது அப்படி பேசுவதற்கு அதற்கு உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம்.

உயிர்கொலை அல்லது கொல்வதற்கான உணவு சுழற்சி பற்றிய விளக்கங்கள், மனிதனும் ஏதோ ஒரு விலங்குக்கு தன்னை உணவாக்கினால் ஏற்றுக் கொள்வதற்கு நன்றாக இருக்கும். இல்லையா ?

:)


மூப்பு அடிமாடுகள் விற்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பது குறித்து வாய் பேசாமல், அந்த அடிமாடு வெட்டப்படுவதைப் பற்றி பெருமூச்சு விடுவது ஞாயமற்றதும் பக்க சார்பனதும் ஆகும்.

6 நவம்பர், 2009

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் !

உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்ததவன் இறைவன் என்பதாக அவ்வப்போது ஆன்மிகவாதிகளால் சொல்லப்படுகிறது, இதே கருத்து மதவாதிகளிடமும் பலமாகவே உள்ளது. மதவாதிகள் மதத்தை மார்கெட் செய்யும் உத்தியில் தங்களை முழுமனதாக ஊக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு 'தங்கள் இறைவனும், தங்கள் வேதபுத்தகமுமே' முழுக்க முழுக்க உண்மையானது மற்றவையெல்லாம் மனிதர்களே படைத்துக் கொண்டார்கள், போலியானவை என்று விளம்பரம் செய்வார்கள் அல்லது பிற மதங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களிடம் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு, அவை நீங்கள் பின்பற்றும் மதத்தின் காரணாமாக அமைந்தது என தூற்றுவார்கள்.

அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன ? விட்டுத்தள்ளுவோம், அவை என்றுமே பதில் பெற முடியாத கேள்விகள். வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது

தன்மதம் மனிதர்களிடையே ஒற்றுமை போற்றும் என்பதாகவும், பிற மதங்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக அம்மதங்களிலேயே சொல்லப்பட்டுள்ள உண்மை என்றெல்லாம் வியாக்யானங்கள் வருவது உண்டு.

இந்துக்களின் வேதம் எனச் சொல்லப்படும் பகவத் கீதை பற்றிய சர்சைகள் ஒருபுறம் இருந்தாலும் (இதை பொதுவான இந்து வேதம் என்று சொல்லமுடியாது, பிற மதங்களுக்கு வேதப்புத்தகங்கள் இருக்கிறது, அவை நீதிமன்றங்களில் சத்தியவாக்குப் பெற பயன்படுத்தப்படுகிறது என்பதால் வைணவ தத்துவ நூல்களில் ஒன்றான பகவத்கீதை பாலகெங்காதாரா திலகர் போன்றோரால் முன்மொழியப்பட்டது, இந்திய சமயங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதால், பகவத் கீதை பொதுவானது என்று சொல்லப்படுவது நிராகரிக்கக் கூடியதும் ஆகும், குறிப்பாக சிவனை வழிபடுபவர்களுக்கு பகவத் கீதை சிவ நெறிகளைவிட உயர்ந்தது கிடையாது) , பகவத் கீதையின் கீழ்கண்ட செய்யுள் எப்போதும் பெரிதும் சர்சை செய்யப்படுகிறது, குறிப்பாக பகவத் கீதையின் தத்துவங்கள் சார்ந்த பிற செய்யுள்களை அறிந்திடாத பகுத்தறிவாளர்களும், பிறமதத்தினரும் தெரிந்துவைத்திருக்கும் ஒரே செய்யுள்,

"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"
- பகவத் கீதை

இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

அண்மையில் இஸ்லாம் தொடர்புடைய சில நூல்களைப் படிக்கும் போது கீழ்கண்ட குரான் வசனம் ஒன்றையும் அதன் பொருளையும் படிக்க நேர்ந்தது

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

மேற்கண்ட குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்களை ('உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்') இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் கொள்ள முடிகிறது. நான்கு வருண அமைப்புகள் அரேபியாவில் இருந்திருந்தாலும், இன அடிப்படை அமைப்புகள் இந்தியாவில் இருந்திருந்தால் பகவத்கீதை மற்றும் குரான் வசனங்களில் இடம் பெரும் சொற்கள் அதற்கேற்றவாறு மாறி இருந்திருக்கும் என்பதைத் தவிர்த்து வேறெதும் வேறுபாடு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நடப்பில் இருந்ததைத்தான் இரண்டுமே சொல்கின்றன.

வருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் இரு வேதங்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருணம் வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.

என்னைக் கேட்டால், இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.

4 நவம்பர், 2009

வேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் !

மனிதன் உட்பட விலங்குகள் அனைத்தின் இனப்பெருக்க உறுப்புகளைவிட மிகவும் பாதுகாப்பான அமைப்பில் இருப்பது கடினமான ஓட்டினுள் அமைந்த மூளையும், மார்ப்புக் கூடுகளினுள் அமைந்த இதயமும் தான். அதே போன்று பிற உயிர்தோற்றதிற்கான விதைகள், முட்டைகள் பாதுகாப்பான மேலோடுகளோடு அமைந்திருகின்றன. திடீர்தாக்குதல், விபத்து, கடுமையான நோய் என்பதைத்தவிர்த்து இவ்வுறுப்புகள் நேரிடையாக நலிவுறாது. கருவளர்ச்சியுறும் போது முதல் நிலை செல்களில் இருந்து முதலில் தோற்றுவிக்கப்படுவது இதயம், பிறகு மூளை, இவ்விரண்டு உறுப்புகள் செயல்பாட்டில் தான் ஏனைய உறுப்புகளும் இயங்குகின்றன. உலக வியப்புகள் (பிரம்பிப்பு, அதிசயம், ஆச்சரியம்) என்று பட்டியல் இட்டிருப்பவைகளைப் பார்த்து மனிதர்கள் வியப்படைவதைவிட வியப்பானவை உயிரினங்கள் ஒவ்வொன்றின் உடல் அமைப்புகள் மற்றும் அவற்றின் இயக்கம்.

உயிரினங்கள் ஒவ்வொன்றின் தோற்றம்(Shape) மற்றும் அதன் செயல்பாடுகள்(Activities), இயக்கம் மற்றும் அதன் தொடர்சிக்காக இனப்பெருக்கச் சுழற்சி அமைப்புகளில் உள்ள நுண்ணறிவுடன் ஒப்பிடுகையில் கணிணி, செயற்கைக்கோள், செவ்வாய் ஆய்வு வரை நீண்டுவிட்ட நம் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் மிகச் சாதாரணமானவை ஏனெனில் மிகவும் நுட்பமான மனித மூளையே கூட இயற்கையில் அமைந்த ஒன்று அதனை பயன்படுத்துவதைத் தான் மனிதர்களான நாம் செய்துவருகிறோம். அறிவியலாளார் ஐன்ஸ்டீன் கூட முழுமையாக மூளையின் செயல்பாடுகளைப் பயனபடுத்தியவர் அல்ல ஆனால் மூளையின் செயல்பாடுகளை மற்றவர்களைவிட மிகுதியாகப் பயன்படுத்தியவர் என்று (IQ படி) சொல்கிறார்கள்.

இப்படி பெரும் வியப்புக்குள்ளான பெருவெளி(பிரபஞ்சம்), வெளித்திரள்கள் (கேலக்ஸி) சூரியன், கோள்கள், உயிரினம், அவற்றின் இயக்கம் இவற்றை ஏற்படுத்தியது யார் என்ற மனித மனக் கேள்வியின் ஒற்றை விடையாக இறை நம்பிக்கையாளர்களின் ஒரே மற்றும் இறுதிக் கூற்றான 'இறைவனின் படைப்பு' என்று சொல்லப்படுவதும் கூட என்னைப் பொறுத்தளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதே சமயத்தில் இவை பெருவெடிப்பு மற்று பரிணாம வளர்ச்சியின் கூறுகள் என்பதும் சரியானக் கூற்று என்பதை அறிவியல் இன்னும் எட்டவில்லை, அவை ஒரு கோட்பாடு, அறிவுக்கு மற்றும் சிந்திக்க ஏற்றவை என்ற அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறதே அன்றி முடிவாக பரிணாமம் தான் காரணம் என்பதாக அறிவியல் உலகம் எந்த வரையறையையும் செய்யவில்லையே, அதன் தொடர்பாக பெருவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் மட்டுமே இருக்கின்றன.

ஆறுநாளில் உலகம் படைக்கப்பட்டது, இரத்தக்கட்டியில் / களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம், பிரம்மா விழித்தான் உலகம் உண்டாகிற்று போன்ற மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் சூரியன் உலகைச் சுற்றிவந்ததாக நம்பப் பட்டக் காலத்தில் ஏற்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு இவை அந்த காலத்தில் மனித மனம் கண்டுபிடிக்க முடியாதவற்றிற்கான சொல்லப்பட்ட விடை என்பதைவிட அவை என்னாளும் அன்னாளும், அதற்கு முந்தேயும் மனித மனக் கேள்வியாக இருந்திருக்கின்றன என்பதையும் காட்டும் குறிப்புகள் என்பதாகத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

மதங்கள் என்னதான் இறுதி, உறுதி என்று உயிரினங்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் 'படைப்பு' , 'இறைச்சித்தம்' என்று முடிவுரை எழுதி இருந்தாலும் அவற்றிற்கான விடைகள் இன்றும் தேடலாகத்தான் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மதமும் அவற்றிற்கான விடையை தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்ப வரையறை செய்திருப்பதுடன் அவை ஒவ்வொன்றும் மாறுபட்டு இருப்பதால் மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கையில் யாதொரு உண்மையும் இருப்பது போலோ அல்லது பொதுவான ஒன்றாகவோ ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்றே நினைக்க முடிகிறது.

இயற்கையின் வியப்புகளை, அமைப்புகளை கடவுள் செயலாக நினைத்துப் பார்ப்பதில் இருக்கும் அபத்தம் போல் வேறெதும் அபத்தம் எதுவுமில்லை, ஏனெனில் இந்த அபத்தம் மூளையின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கக் கூடியது அல்லது சிந்தனையைத் தடுப்பது ஆகும், மனித முயற்சியினால் ஆவது எதுவுமில்லை என்று மனிதன் நினைத்திருந்தால் இயற்கையை கட்டுப்படுத்துகிறோமோ அல்லது அதற்கு முயற்சிக்கிறோமா என்பதைவிட விமானப் பயணம் முதல் வின்வெளிப்பயணம் வரை இயற்கை அதன் தன்மையைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட இயற்கையின் மீதானப் பயணம் கூறு இல்லாத ஒன்றாக ஆகி இருக்கும். இது கடவுளால் அமைந்த ஒன்று என்று எந்த ஒரு பொருளையும் உறுதியாகக் காட்டமுடியாத போது ஒட்டுமொத்த பருப்பொருள்களையும் கடவுள் படைப்பாகப் பார்ப்பதில் நினைப்பதும் அபத்தம் தானே. இது கடவுள் செயல் என்று உணர்ச்சி வசப்படுவதாலோ அல்லது அல்ல என்று சொல்வதாலோ இயற்கையும் அதன் தன்மையும் செயல்பாடுகளும் ஒரு நாளும் மாறப் போவதுமில்லை.

வேதப்புத்தகங்களும், குறிபிட்ட சில முதிர்ந்த சாமியார்களும் உலகைப் பற்றிய முழு அறிவு(ஞானம்) அளிப்பதாகக் கூறுவதெல்லாம் எந்த ஒரு காலத்திலும் முழுமையான உண்மையாக இருந்திருந்தால் இன்றும் உலகம், இயற்கைப் பற்றிய அறிவுத் தேடல் என்பற்கான தேவைகளே இல்லாது போய் இருக்கும். எந்த ஒரு கடவுள், மத, அறிவியல் நம்பிக்கைகளும் முழுமையானதொரு பிரஞ்ச இயக்க அறிவைக் கொண்டு கொடுத்துவிடும் என்பது எப்போதும் நடந்ததே இல்லை. இந்த சாமியார், இந்த மதம், இந்த நம்பிக்கை முழுமையான ஒரு அறிவை, ஞானத்தைத் தருகிறது என்று எவரும் நம்பினால் அவை வெறும் நம்பிக்கை மட்டுமே.

இயற்கை என்னும் மாபெரும் பரவெளியையும் அடக்கிய இயக்கத் தொகுப்பு அல்லது பரவெளியுடன் இயங்கும் பேரறிவு அதன் சொந்தக்காரர், உரிமையாளர், படைப்பாளி என்பது போன்ற இறைக்கட்டுமானங்கள் அதன் மீது இல்லாத காலத்திலும் இயற்கை அதன் போக்கிலேயே தொடர்ந்து இயங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது என்கிற உண்மை வேதப்புத்தகங்கள் எதிலும் எழுதப்படவில்லை.

15 அக்டோபர், 2009

தன்னிலை மறத்தல் !

விழிப்பு தூக்கம் இவை மாறி மாறி வருவதில் தூக்கம் என்பது ஓய்வுக்கென்றாலும் நல்லதொரு சூழலில் தூங்கும் மகிழ்வே தனிதான். தூக்கம் என்பது தற்காலிகம் என்பதால் தூக்கத்தை விரும்பாதவர் எவரும் இல்லை, விழிப்போமா இல்லையா என்கிற எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாவிடிலும் தூங்குவதிலும் தூங்கச் சொல்வதிலும் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். எந்த ஒரு சலனமும் இல்லாத அமைதியை மனம் விரும்புகிறது என்பதே தூக்கம் வராவிட்டாலும் கூட நாம் தூங்க விரும்புவதைக் குறிக்கிறது. விழிப்பு வாழ்க்கையில் அன்று எதோ ஒரு சாதனை நிகழ்த்தியவர்கள் கூட இந்த மகிழ்ச்சியை கொண்டாட, அந்த உணர்விலேயே இருக்க நாம் தூங்கமலேயே இருப்போம் என்றெல்லாம் நினைப்பதே இல்லை, அதற்கு மாறாக மகிழ்வுடன் உறங்கிப் போவார்கள். சாதனைகள் கொடுக்கும் மன மகிழ்ச்சியைவிட மனம் விரும்புவது நல்லதொரு அமைதியையே என்பதே நாம் உணராமல் தான் இருக்கிறோம். சோம்பல்களினால், அசதிகளினால் வரும் தூக்கங்களைத் தவித்துப் பார்த்தால் சாதனைகள், பிற மகிழ்வுகள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதை நம் உள்ளுணர்வு உணர்ந்துள்ளதால் அதிலெல்லாம் கிடைக்காத ஒரு மனமகிழ்வு தூக்கத்தில் தான் கிடைக்கிறது என்பதால் நாம் தூக்கத்தை பெரிதும் விரும்புகிறோம்.

மனித மனம் விரும்புவது தெளிந்த நீரோடை போன்ற மன அமைதியே, கூடவே மிதப்பது பறப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தால் அதை பெரிதும் விரும்பும். அதுபோன்ற தேடலில் சிலர் ஆன்மிகத்தை நாடுகிறார்கள், பலர் மதுவை, பிற போதைகளை நாடுகிறார்கள். தன்னிலை மறப்பதற்கான தீர்வு அல்லது மன உந்துதல் ஆகியவற்றை முன்னிட்ட தேடலாக இறைத்தேடல் அதன் தொடர்பில் ஆன்மிகம், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை இவையெல்லாம் ஏற்பட்டு இருந்தாலும் அதில் மனதை நிறுத்துவது இயலாத ஒன்று அல்லது உடனடியாக பலன் கிடைக்காது அல்லது பொறுமை அற்றவர்கள் தன்னிலையை மறக்க நாடுவது மதுவகைகள். கடவுள் நம்பிக்கை ஆன்மிக நம்பிக்கையற்றவர்களின் உள்ளுணர்வுகளின் தோடல் கூட தன்னிலை மறப்பதைப் பற்றியதாக இருப்பதால் அதன் தீர்வுக்காக மதுவை நாடுபவர்களும் உள்ளனர். வயது வந்தவர்களின் காமவேட்கையும் கூட உடலின்பம் சார்ந்தது என்றாலும் அதைத்தாண்டிய தன்னிலை மறப்பு அதில் கிடைக்கிறது என்பதால் அதை விரும்பாதவர்க்கள் குறைவு. மதுவோ, தூக்கமோ, காமமோ இவை தன்னிலை மறப்பதற்குக் கிடைக்கும் தற்காலிகத் தேவைகளே, ஆகையால் தான் அவைகள் 'சிற்றின்பமாகச்' சொல்லப்படுகிறது.

என்றைக்காவது விழிப்போம் என்கிற நம்பிக்கை இருந்தால் இறப்புக் கூட பெரும் தூக்கம் என்பதாகவே எடுத்துக் கொண்டு அது பற்றிய பயம் குறைந்து அதை வரவேற்கும் மனது ஏற்பட்டிருக்கும், ஆனால் இறப்பு என்பது விழிக்காத தூக்கம் என்பதால் அதைத் தவிர்த்து புற மகிழ்ச்சியாக நாம் நினைத்திருந்தது எதுவுமே நமக்கு திரும்பக் கிடைக்காது என்பதால் தான் மரணம் மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் மரணம் என்பது உடலை துறக்கும் பயம் என்பதைவிட உறவுகளை, உடமைகளை இழக்கிறோம் என்பதால் தான் ஏற்படுகிறது.

மரணம் மீண்டும் விழிப்பு நிலை தராது என்கிற அறிவு இல்லாத விலங்குகள் எதற்குமே மரணபயம் கிடையாது, அவைகள் தன்னை தற்காத்துக் கொள்ளத் துடிக்கும் பயம் என்பது அவை ஏற்படுத்தும் உடல் சார்ந்த வலிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மட்டுமே.

தன்னிலை மறப்பதும், அது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு மனித மனத்தின் விருப்பமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஒருவரை வைத்திருந்து நீங்கள் விழித்துக் கொண்டு தான் இனி இருக்கப் போகிறீர்கள் என்று வரம் கொடுத்தால் அதை அவர் சாபமாகத்தான் கொள்வர். ஏனெனில் மனம் தற்காலிக விழிப்பு நிலையை விரும்புவது போலவே தற்காலிக தன்னிலை மறப்பதையும் விரும்புகிறது.

பிறரை துன்புறுத்தாத காமம், குடி, போதைப் பொருள் போன்ற சிற்றின்பமாக தேடிக் கொள்பவை உடலின்பம் என்றாலும் அதை நாடுபவர்களின் உள்ளுணர்வு தற்காலிக தன்னிலை மறப்பை நாடுகிறது என்றும் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். அவற்றில் கிடைக்கும் இன்ப நுகர்ச்சியின் மன அமைதியின் காலம் போதுமானவையாக இல்லை என்பதாலும், அவை கிடைக்கும் வழிகள் பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதாலும் அதை சிற்றின்பமாக, கேடுவிளைவிப்பதாகச் சொல்லி, காலம் நீட்டித்துக் கிடைக்கக் கூடிய பேரின்ப வழிகளாக ஒரு சில ஆன்மிகக் கோட்பாடுகள், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை என வேறுவழியில் கொஞ்சம் நீட்டித்து கிடைக்கக் கூடியதை தேடுபவர்கள் ஆன்மிகவாதிகளாகவும் அவை பேரின்ப வழிகள் எனச் சொல்லப்படுகின்றன. எது எப்படியோ மனித மனம் என்றும் விரும்புவது தன்னிலைமறக்கக் செய்யக் கூடிய ஒரு நல்ல உணர்வைத்தான்.

*****

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். மீண்டும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்

14 அக்டோபர், 2009

கருத்து, பொருள் வாதங்கள் !

பொதுவாக ஆத்திகம் நாத்திகம் என்கிற சொற்கள் இறை ஏற்பு மறுப்பு எனும் இரு கொள்கைகள் பற்றிய சுறுக்கமான இன்றைய புரிதல்கள்களாக இருக்கின்றன. ஆத்திகம் நாத்திகம் என்பதற்கான இந்து சமய விளக்கம் (மனுதர்ம விளக்கம்) என்பது நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்கிறவன் ஆத்திகன் அதை மறுப்பவன், தவிர்பவன் நாத்திகன், அதைத்தான் அஸ்தி நஸ்தி என்ற வடசொற்களின் சுருக்கத்தின் விளக்கமாக ஆத்திகம் நாத்திகம் என்று சொல்லாக மாறி இருக்கிறது. பிறமதங்களின் இறை மறுப்புகளும் கூட இப்படிப் பட்ட அவரவர் வேத சார்பில் இறை ஏற்பு மறுப்புகள் குறிக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள், இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார். இதுபோன்றே திரித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கல் கிறித்துவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) ஏற்காதவர்கள் இறை மறுப்பாளராகக் கருத்தப்படுகிறார்கள். ஆக இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம். வேண்டுமானால் மதம் என்பதை பொதுவில் சாடும் பொழுது அவர்களெல்லாம் வேறு வழியில்லாமல் கூடிக் கொண்டு அங்கு 'இறை நம்பிக்கை' பொதுவானது என்றுக் கூறிக் கொண்டு தாம் 'இறை மறுப்பாளர்கள் அல்ல' என்று சொல்ல வருவார்கள்.

இறை நம்பிக்கைக் குறித்தக் கொள்கைகள் அனைத்துமே பொதுவானது தான். படைப்பு, காத்தல், அழித்தல் என்கிற பொது சித்தாந்தம் அனைத்து இறை நம்பிக்கைகளுக்குமே உண்டு. இதன் படி உலகில், பரவெளியில் (பிரபஞ்சம்) இருப்பது அனைத்துமே படைக்கப்பட்டது என்பதே இறை நம்பிக்கையாளர்களின் கொள்கைகள், இதனை அனைத்து வேத புத்தகங்களும் வலியுறுத்துகின்றன. அதாவது என்றோ ஒருநாள் இல்லாத இருந்தவை இறைசித்த்தால் ஏற்பட்டு நம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதாக எண்ணுவது நம்புவதே இறை நம்பிக்கையாகும். மூலப் பொருள் இல்லாது ஒன்றைப் படைக்க முடியாது என்கிற அறிவியல் (பெளதீக) விதிகளுக்கு மாற்றாக இவை என்றோ ஒரு நாள் கடவுள் சித்தத்தால் "தோன்றியவை" அல்லது "படைக்கபட்டவை" என்பதே "கருத்து" முதல்வாதமாகும் (Idealism). இந்த நம்பிக்கைக் கொண்டோர்கள் அனைவருமே கருத்து முதல்வாதிகள் என்பது உலக சிந்தாந்ததங்களில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர் ஆகும். கருத்து முதல் வாதப்படி கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா என்பதற்கான விடை என்றுமே கிடையாது. அதற்கான விடை "கோழிகள்" (சேவல் மற்றும் பெட்டை) இறைவனால் படைக்கப்பட்டது என்பதே ஆகும்.

மூலப் பொருள் இன்றி இன்னொரு பொருள் தோன்றி இருக்க முடியாது என்று சொல்வதே "பொருள் முதல்வாதம்" (materialism)ஆகும். இதிலும் கோழி முதலா ? முட்டை முதலா என்ற கேள்விக்கு தெளிவான எந்த ஒரு விடையும் காண்பது இயலாத ஒன்று என்பதாலேயே பண்டைய கால பொருள் முதல் வாதிகள், கோழியும் முட்டையும் என்றுமே இருப்பதாகும் (Allways Exists) என்பாதாக சொல்லுவார்கள், இவற்றிற்கான தோற்றம் முடிவு என்பது என்றுமே இருந்தது கிடையாது என்பதே அவர்களின் விளக்கமாகும், ஆனால் அதனை அறிவு ரீதியாக ஒப்புக் கொள்ள முடியாத புதிய(நவீன) சிந்தனையாளர்கள் பொருள் முதல்வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக "பரிணாம" கொள்கையைக் கொண்டு வந்தார்கள். டார்வின் பொருள் முதல்வாத நம்பிக்கையாளர். எந்த ஒரு பொருளுக்கும் மூலம் என்பது கிடையாது, ஆனால் மாற்றம் உண்டு என்பதே பரிணாமக் கொள்கையில் அடிப்படையாகும். இதன் படி இன்றைய மனிதன் என்பவன் குரங்கிலிருந்து மாற்றம் பெற்றவனாக கோட்பாடு வகுத்தார்கள் ( இதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது).

கருத்து முதல்வாதம் என்பது புதிய சிந்தனைகளை தோற்றுவிப்பதில் எந்த ஒரு முனைப்பையும் காட்டியதே இல்லை, அவை தோற்றுவித்ததெல்லாம் பல்வேறு மதங்களையே. பொருள் முதல்வாதச் சிந்தனையாளர்கள் ஏன் எதற்கு எப்படி என்று அனைத்து இயக்கங்களை ஆய்ந்ததன் விளைவாக அதன் செயல்பாடுகள், அதில் ஒன்றை மாற்றி அமைக்கும் போது அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் செயல் ஆகியவற்றை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டதன் விளைவாகவே அறிவியல், வானவியல், மருத்துவ இயல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உருவாகின. கருத்து முதல்வாதிகள் எந்த ஒரு காலத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது அதனை கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

அறிவியலும் அறிவியல் கொள்கைகளும் பின்பற்றப்பட்டதும் அதனை கருத்து முதல்வாதிகளான மதவாதிகள் அது ஏற்கனவே மதநூல்களில் மறைமுக மாகச் சொல்லப்பட்டு ஒன்று தான் புதிதல்ல என்றும் சொல்லுவார்கள். உலகெங்கிலும் கருத்து முதல்வாதமே வலுப்பெற்றிருந்தால், வலியுறுத்தப்பட்டால் கண்டுபிடிப்புகள் என்று எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போய் இருக்கும், ஏனெனில் ஆண்டவன் படைப்பில் அனைத்தும் சரியானதாகவும், தேவையான அளவிற்கு இருப்பதாகவே எல்லாகாலத்திலும் கருத்து முதல்வாதிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

பொருள்முதல்வாதம் மேலோங்கும் பொழுது அதனை உள்வாங்கிக் கொள்ளும் உத்தியாக கருத்து முதல்வாதிகள் அதனை வளைத்துவிடுவதுண்டு. பொருள் முதல்வாதியான புத்தர் துன்பங்களுக்குக் காரணம் பேராசை என்றார். இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ஆராய்சிகளை விட்டுவிட்டு தன்னிலையை உணர்ந்து மரணத்திற்கு முன் மனிதனின் வெவ்வேறு நிலையான மூப்பு, பினி யாவும் உண்மை, உலகமும் வாழ்க்கையும் நிலையல்ல என்று சொன்ன போது சடங்குகளில் மூழ்கிக் கொண்டிருந்தவர்கள் ஓரளவுக்கு விழிப்பு அடைந்தனர். பின்னர் பொருள் முதல்வாதம் ஆதிசங்கராரால் உள்வாங்கப்பட்டு வாழ்வே மாயம், உலகம் நிலையற்றது, அனைத்தும் எங்கும் நிறைந்திருந்திருப்பது பிரம்மம் என கடவுள் கொள்கைபோன்று கருத்து முதல்வாதமாக மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் வந்த புத்த பிக்குகள் புத்தரை புனிதராக்கி கடவுளாக்கி பொருள் முதல்வாதக் கொள்கைகளை கருத்து முதல்வாதாமாக மாற்றிக் கொண்ட மகாயானக் கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு உருவ வழிபாடுகள், புறச்சடங்குகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

பொருள் சார்ந்த தேவைகளும், அறிவியல் ரீதியான வளர்ச்சிகளும் சமூகத்திற்கு தேவை எனும் போது பொருள் முதல்வாதம் வளர்ச்சி பெரும், கம்யூனிச, கடவுள் மறுப்பு சித்தாந்தங்கள் முதல்வாதத்தை ஒட்டி ஏற்பட்டவை. பொருள்வாதம் மேலோங்கி வளர்ந்த பிறகு கருத்து முதல்வாதம் விழித்துக் கொண்டு அவற்றை உள்வாங்கி வளரும். இன்றைய தேதிகளில் மக்களிடையே இருப்பது கருத்து முதல்வாதமா ? பொருள் முதல்வாதமா ? என்று பார்த்தால் பிழைப்பு வாதம் (வாழ்க்கை) என்பதை வழியுறுத்தல் இரண்டிலுமே இருக்கிறது. ஆனால் பிழைப்புவாதம் பொருள் முதல்வாதத்தின் ஒரு நோக்கமே. இன்றைக்கு கருத்து முதல்வாதங்கள் என எஞ்சியிருப்பது மதவாதமே. மதவாதங்களின் கொள்கைகள் பிழைப்பு வாதம் தான். கருத்துவாதம் முழுக்க முழுக்க பலமிழந்து அறிவியல் துணை தேடும் முயற்சியில் வளர்ச்சி இன்றிப் போய் இருக்கிறது. கருத்து முதல்வாதமான ஆன்மா, தேடல், இறைவன், படைப்பு சொர்க்கம் இதனை முன்னிறுத்தும் வருங்கால புதிய கருத்துவாதம் ஏற்படுவதும் வளர்ச்சி பெறுவதும் நடைபெறுவதும் கடினம். உலக அளவில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஏதும் நிகழ்ச்சி / அழிவு ஏதும் நடந்தால் கருத்து முதல்வாதம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

தொடர்புடைய இணைப்புகள் :
Idealism
Materialism
கடவுளைத் தேடி...
காரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது
Can Consciousness be Created in Software? - Martine Rothblatt

30 செப்டம்பர், 2009

நாய்களின் எல்லைக் கோடுகள் !

தன் இனத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்புடன் பார்க்கும் குணம் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் தான் இருக்கின்றன. தெரு நாய்களை நன்கு கவனித்தால் அது மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய அனுமதிக்காது.

பக்தி என்றப் பெயரில் பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இத்தகையது தான். வழிபாட்டுத் தளங்கள் பக்தியை வளர்க்கின்றன. அது ஒரு நம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் எல்லைக் கோடுகள் ஆகிப் போனதைத் தான் இன்றைய காலத்தில் பார்க்கிறோம். பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இருக்கும் போது பிற மதத்தினர் அந்த வழியாக தங்கள் மத ஊர்வலங்களை நடத்தும் போது அந்த இடங்கள் கலவர பூமியாகிறது. 100 பேர் வரை காயமடையவும் சிலரின் இறப்புகளுக்கு காரணமாகவும் எதாவது ஒரு பொது இட வழிப்பாட்டுத் தளங்கள் ஆண்டு தோறும் ஒரு கெட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துவிடுகிறது. குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் இதை பார்க்கலாம்.

பொது இடங்களின் வழிபாட்டுத் தளங்களின் விழாக்களின் போது பல்வேறு தரப்பினர் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஒலி அளவு மிகுந்த ஒலிப் பெருக்கிகளை வைப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் முதல் பிறந்த குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது. அதிகாலை வழிபாடு/தொழுகை என்ற பெயரில் ஓலமிடும் ஒலிப்பெருக்கிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இன்றைக்கு பலரும் இரவு வேலை பார்த்துவிட்டு அதிகாலைத் திரும்புவர்களாகவும், விடியற்காலை தூங்கச் செல்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள். அவர்களின் தூக்கத்தை இத்தகைய வழிபாடுகள் கெடுக்கிறது என்பது உண்மை. மேலும் மதவழி வழிபாட்டு நம்பிக்கையை அந்தந்த மதத்தினர் மட்டுமே சகித்துக் கொள்வர் என்பது கண்கூடு.

புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.

வீட்டிற்குள் வழிபாடுகளை யாரும் தடை செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான வழிபாடுத்தளங்களில் 50 விழுக்காடு வரை பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது, புதிதாகக் கட்டுவதற்கான தேவை என்றால் புதியதொரு குடி இருப்புப் பகுதி ஏற்பட்டு அது வழிபாடுத்தளங்களுக்கு தொலைவில் அமைந்திருந்தால் தான் அங்கு தேவைப்படும். மற்றபடி ஏற்கனவே அமைந்த குடி இருப்புப் பகுதிகளில் புதிய வழிபாட்டுத் தளங்களை அதுவும் பலமதத்தினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அமைப்பதால் சமூக அமைதி கெடுகிறது என்பதுடன் மேற்கண்ட பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இவை முற்றிலும் தவிர்க்கப் படவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் வழிபாடுத்தளங்களை அகற்ற அந்தந்த மத நலவிரும்பிகள் முன்வருவதே மத நல்லிணக்கத்திற்கு நல்லது.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் - என்கிற தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் வரவேற்கிறேன்.

"உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால் புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.


அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார் முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத் தலங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்

26 செப்டம்பர், 2009

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் !

காலங்கார்த்தால இன்னிக்கு குறுஞ்செய்தி வந்தது, கடிதம், மின் அஞ்சல் என்றெல்லாம் உலாவியது இப்போதெல்லாம் குறுஞ்செய்திலும் உலாவுது.

"ஓம் சனிஸ்வராயா நமஹ" - இதை 19 பேர்களுக்கு அனுப்ப நாளைக்கு உங்களுக்கு நல்ல செய்தி வரும், தவறினால் நாளைக்கு பேதியாகிடும் வெளியே போக முடியாது (வெளியே போகலை என்றால் எப்படி பேதியாகும்னு தெரியல, தண்ணீராகப் போவதைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ ! அவ்வ்வ் ) - இது 100 விழுக்காடு உண்மை உண்மை உண்மை

- என்று ஒரு பொய்யான குறுந்தகவலை நண்பர், உறவினர்கள் அனுப்பி வைத்தார்கள்.

நானும் அதையே சொல்கிறேன். இந்தப் பதிவை படிப்பவர்கள், இந்தப் பதிவு படிச்சிட்டு இதே போல் ஒரு பதிவு அல்லது இந்தப் பதிவை பத்து நகல் எடுத்து எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க

* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்

***

உலக நாடுகளில் எதிலுமே இல்லாத வழக்கமாக இந்த கிரகப் பெயர்சிகள் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை ரொம்பவே ஆட்டுகிறது. மில்லியன் டாலர்கள் சொத்துகள் வைத்திருப்பர்களையெல்லாம் கண்டுகொள்ளாத சனிப் பெயர்ச்சி அன்றாடங்காய்சிகளையும், நடுத்தரவர்கத்தையும் ஆட்டிப் படைத்து அவர்களுடைய வாழ்க்கையை (ஏ)மாற்றுகிறதாம்.

சோசியக்காரர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை அடையாதவரையில் தன்னம்பிக்கை என்று ஒன்றை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளப் போவதில்லை.

"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாய" வென்ற நாமம் இருக்கையிலே

என்று சொல்வதும் பொய்யா என்று எண்ணிப் பாருங்கள். நல்லதொரு இறை நம்பிக்கை மூலம் எந்த ஒரு கிரகமும் அப்படிப்பட்ட நம்பிக்கைக் கொண்ட ஒருவரை அசைத்துவிட முடியாது.

பித்தலாட்ட சோதிடர்களை தண்டிக்காமல் விடும் சனி பிறரை தண்டித்துவிடுமா ?

சோதிடப் பெயர்சிகளும் பலன்களும், பாதகங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற குழப்பத்தில் இருப்பவர்களுக்கே, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பிழைப்பு வாதிகளுக்கே.

15 செப்டம்பர், 2009

மதங்கள் கிழக்கும் மேற்கும் !

கிறித்துவம், பவுத்தம், இஸ்லாம் ஆகிய பெரிய மதங்கள் அனைத்தும் ஆசிய நிலப்பரப்பில் (ஒரே நிலப்பரப்பில்) தோன்றியவை என்றாலும், இன்றைய பண்பாட்டு கூறுகளில் அவற்றை கிழக்கு மதம் மேற்கு மதம் என்று பிரித்து சொல்வது பொருத்தமானவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேற்குலகில் அறியப்படும் மதங்கள் என்றால் அது கிறித்துவம், இஸ்லாம், தெற்காசிய, தென்கிழக்கு மதங்களான புத்தம், மற்றும் இந்து மதம் ஆகும், இந்து மதமும் புத்தமதமும் பழக்க வழக்க நம்பிக்கைளில் (சொர்கம், நரகம், நிர்வாணம்) ஒற்றுமை நிலவுவதால் அவற்றை இந்தியச் மதம் அல்லது இந்து மதம் என்ற பிரிவுக்குள் அடக்கிவிடுவர். ஆசிய நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் மதம் மாறுபவர்கள் கிறித்துவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கோ, இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கோ தான் மாறுவார்கள். அவர்களைப் பொருத்து மதம் என்றால் இறைத் தூதரால் ஏற்படுத்தப்பட்டதே மதம் என்பதாகவே நினைக்கின்றனர். காரணம் கத்தோலிக்க கிறித்துவம் ஏசு கிறிஸ்து மற்றும் இஸ்லாம் மதம் முகமது நபியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே வரலாறு.

ஆன்மிகம் என்பதே மத அடிப்படையிலானது என்பதே மேற்கத்திய புரிதல். உள்ளுணர்வு, தேடல், ஆன்மா என்பதெல்லாம் மேற்கத்திய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடையாது. மதம் என்பது வாழ்க்கை முறை அதை மாற்றி அமைத்துக் கொள்ளும் வழிவகைகளில் மதங்கள் வரையறை செய்து உதவுவதாகவும் கூடவே பலனாக அம்மதத்து சொர்க்கம் கிடைப்பதாகவே மேற்கத்திய நம்பிக்கை.

சீன புத்தர்
இந்திய புத்தர்இந்திய மதங்களை மேற்குலகத்தினர் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் 'உருவ' வழிபாடே, இந்திய கடவுளர்கள் அனைவர் முகமும் இந்தியர்களின் முகங்களைப் போல் இருப்பதால் இந்திய சமயத்திற்கு மாறும் போது இந்தியனை கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டி வருமோ என்கிற ஒவ்வா எண்ணமே இந்திய சமயங்கள் பிற நாடுகளில் பரவாமல் போனதற்குக் காரணம், புத்தரை ஆசியர்கள் ஏற்றுக் கொண்டாலும், புத்தர் சிலைகளில் புத்தரின் முகம் அந்தந்த நாட்டினர் சாயலிலேயே அமைக்கப்படுகிறது. ஏசு கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொள்வதிலும் இதே நிலை என்றாலும் இந்திய மக்களைப் பொருத்த அளவில் கடவுள் உருவங்கள் அது சாணியில் பிடிக்கப்பட்ட பிள்ளையாராக இருந்தாலும் அதை பெரிதாக ஆராய்சி செய்வதில்லை என்பதால் இந்திய கிறித்துவர்களுக்கு ஐரோப்பிய யூத கிறித்துவின் முகமோ, மேரி மாதாவைன் முகமோ உவர்பானது அல்ல.

யூத ஏசுஒரு அரேபியர் ஏசு கிறித்துவையோ, கிறித்துவத்தையோ பின்பற்றாமல் இருப்பதற்கு அவர்கள் இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு யூதரை கடவுளாக நினைத்துப் பின்பற்றுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, இதே நிலைதான் ரோமானியர் மற்றும் யூதர்களுக்கும் முகமது நபி என்கிற அரபியால் முன்மொழியப்படும் இஸ்லாம் மதத்தை வெகு சிலர் தவிர்த்து பெருவாரியனவர்கள் மதம் என்று அங்கீகரித்தாலும் அவற்றின் கொள்கைகளைப் போற்றி மதம் மாற நினைப்பது கிடையாது.

ஆப்ரிக்க ஏசுஎகிப்து நாகரீகத்திற்கு பிறகு ஆப்ரிக்க கருப்பர்களைப் பொருத்து அவர்கள் இனத்தில் இறைத் தூதர்கள் யாரும் தோன்றாததால் அவர்கள் அறிந்த கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என்கிற இரு வாய்ப்புகளே அவர்களுக்கு இருக்கிறது. கருப்பர் வடிவ ஏசுஆப்ரிக்க கருப்பர்களே இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கும், கிறித்துவத்திலிருந்து இஸ்லாமுக்கும் மதம் மாறுபவர்களாக இருக்கிறார்கள். ஆப்ரிக்க நாடுகளில் பல இஸ்லாம் மதம் தழுவியதற்குக் காரணம் அவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை என்பதைத் தவிர வெள்ளை ஐரோப்பிய இனத்தின் கட்டுப்பாட்டில்,அன்னை மேரியும், குழந்தை ஏசுவும்ஆளுமைக்காக இருக்கும் கிறித்துவ மதத்தில் இணைய விருப்பம் இல்லாமல் போனதே காரணம். வெள்ளை இனவெறி என்றால் என்ன என்பதை ஆசியர்களைவிட ஆப்ரிக்கர்கள் நன்கு உணர்ந்திருந்ததால் அவர்களுக்கு கிடைத்த மாற்று வாய்ப்பாக இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.

ஆசிய நாடுகளில் புத்த மதம் தவிர்த்து சமணம் ஏன் பரவவில்லை ? சமணம் இந்திய சமயங்களைப் போல் சாதியைப் பின்பற்றி இருந்ததும், ஜெயின் அல்லது மார்வாடி சாதியினரின் ஆளுமையில் இருந்ததால் அவர்கள் இந்தியாவைத் தாண்டி சமண மதத்தை எடுத்துச் செல்ல முனையவில்லை. புத்த மதத்தில் சாதிகளும் பழமை வாதங்களுக்கும் இடம் கொடுக்க வில்லை என்பதால் தத்துவங்களை சார்ந்து இருந்தாதால் ஆசியர்களை வெகுவாக கவர்ந்து ஆசிய நாடுகளில் வளர்ந்தது. மத மாற்றம் என்றால் இன்று போல் ஒவ்வொருவராக மாறுவது என்பது ஆசிய நாடுகளின் வழக்கில் இருந்தது கிடையாது, ஒரு மன்னன் மதம் மாறினால் அவனது குடிகளும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்படுவர். இப்படியாகத்தான் ஆசிய நாடுகளில் பரவியதில் புத்த மதம் முதன்மையாகவும், அதன் பிறகு இந்தோனேசிய, மலேசிய, புருனே போன்ற நாடுகளில் இஸ்லாம் மதமும் பரவியது.

சாதிக் கட்டமைப்புகளையும், உருவ வழிபாடுகளை முதன்மையாக கொண்டிருந்தாதல் இந்திய சமயங்கள் வைதீகம், சைவம், வைணவம், சமணம் போன்றவை இந்தியாவைத் தாண்டி வளர வாய்ப்பில்லாமல் போனது. இந்திய சமயங்களில் புத்த, சமணம் தவிர்த்து பிற சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் என்று யாரும் கிடையாது, எனவே இவைகள் இறைத் தூதர்கள் அற்ற மதமாக மேற்குலகால் நினைக்கப்படுவதுடன், இவற்றை ஒரு மதமாகவே அவர்கள் அங்கீகரிக்காததும்தான் அவர்கள் இம்மதங்களுக்கு தங்கள் மாறுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. மேற்குலனரைப் பொருத்த வரை மதம் என்றால் அது இறைத் தூதர்களால் இறைவனின் ஆணைப்படி ஏற்படுத்தப் பட்டது ஆகும், மற்றவை காட்டுவாசிகளின் மதம் என்பது போல் அவர்கள் நினைக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் மதம் மாறும் போது அவர்களுக்கு கிறித்துவம் அல்லது இஸ்லாம் என்கிற இருவாய்ப்புகளே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் ஏன் புத்த மதத்திற்கு மாறவில்லை ? புத்த மதம் புத்தரால் தோன்றியதென்றாலும் அவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்தவர் அல்லர். கருப்பர் அல்லது வெள்ளையர் என மேற்குலகினரைப் பொருத்து இறைத் தூதர் இல்லாத மதம் மதமே அல்ல. கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை தோற்றத்திலும் கொள்கையிலும் தொடர்சியானவை, தொடர்புடையவை என்பதால் மேற்குலகைப் பொருத்த அளவில் ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது என்பதை நம்புவார்கள். சுய தேடல், அண்டம், பிண்டம் ஆன்மிகத் தத்துவம் இவைகள் அவர்களது சிந்தையிலும் வராது. மத அடைப்படைப் பற்றித் தெரியாதவர்களே மதங்கள் பொதுவானவை எல்லோருக்கும் ஏற்றவை, என்று அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தை உயர்வாகச் சொல்லுவார்கள். ஆனால் மதங்கள் அனைத்துமே இன அரசியலை முன்னிருத்துபவை என்பதை வெகு சிலரே உணர்ந்து இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் இறை நம்பிக்கைகளை உணர்வு பூர்வமாக அணுகுவதால், ஊட்டுவதால் அதில் இருக்கும் மத, இன அடைப்படை வாதம் வெளிப்படையாக தெரியாததும் ஒரு காரணம்.

11 ஜூன், 2007

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?

இந்து மதத்தில் விழுந்த சாக்கடையில் நெழியும் புழுக்களில் சில 'பிற மதத்தினர் கோவிலுக்குள்' வரக்கூடாது என்ற ஆகாத ஆகாமம் மற்றும் அதை ஏற்படுத்தியவர்கள். தோற்றமில்லாத மதம் என்று ஒருபக்கம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் இரட்டை வேடதாறிகளின் எச்சில் வார்த்தைகள் அவை. மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதத்தில் பிறமதத்தைக் குறித்த கட்டுப் பாடுகள் இருக்க முடியும் ?

இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் நன்கொடை கொடுத்தால் தீட்டுக் கழிக்காமல் 'தொட்டு' எடுத்துக்கொள்ளப்படம் காசுகளுக்கு இல்லாதா தடை ஏன் அவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் ? இந்துக் கோவில்களின் எக்ஸ்டன்சன்களாக பல வெளிநாடுகளில் கோவில்கள் எழும்பிவிட்டன. அங்கெல்லாம் சென்று இதே ஆகாதவாதிகள் ஆகமம் குறித்துப் பேசினால் கோவில்கள் அங்கு இருக்காது. கிறித்துவ நாடுகளில் இந்துக் கோவில்கள் கட்ட அனுமதிக்கப் படும் போது ஏன் கிறித்துவர்கள் என்பதால் இந்திய இந்து கோவிலில் இன்னும் இந்த இழிவான ஆகமம் இருக்கிறது ?

சர்வேசன் பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதாவது தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்ட மதங்கள் என்று பிறமதங்களும் தாழ்த்தப்பட்டவையாக பார்த்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கவேண்டும். அல்லது பிறமதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் என்று ஒட்டுமொத்தமாக பிறமதத்தினருக்கு அனுமதி இல்லை என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்குத்தான் மதங்களெல்லாம். அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவன் என்று ஆத்திகர்களால் நம்மபடும் இறைவனுக்கு எங்கே மதம் ? அப்படி ஒருவேளை தீட்டுப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் சக்தி இழந்து போகும் அளவுக்கு பலவீனமானவனா இறைவன் ?ஒருகாலத்தில் சூத்திரன் வரக் கூடாது என்ற கோவில் களெல்லாம் இன்று சூத்திரன் நுழையமுடிகிறதே கோவில் கோபுரங்கள் சரிந்துவிட்டதா ?

சில ஆபாத்பாண்டவர்கள் உளறுகிறார்கள் அதாவது கோவிலுக்குள் பிறமதத்தினரைவிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் ஐயா இந்த ஆகாத ஆகமவிதிகள் பாபர் மசூதிக்கு இடிப்புக்கு முன்பு மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாவே இருந்துவருகின்றன. மத வழிபபட்டுத் தளங்களைவிட பொது கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம்,மதம்,சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்ததில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது. அதையும் தூய்மைபடுத்தி அங்கு வருவோர் எல்லோரையும் சமமாக பார்த்தும் தோட்டி என்று இழிபெயரால் பலரால் அழைக்கப்டுபவனே கடவுள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்