பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2007

கலாம் முடிவு - ஒரு தேசிய நலன் !

கலாம் என்ற பெயரைக் கேட்டுக்கொண்டே இருக்'கலாம்' என்று இந்தியர் அனைவரும் மனம் மகிழும் ஒரு அற்புதமான பெயர். பொதுவாழ்க்கை ஒன்றை மட்டுமே அறிந்த ஆண் தெரசா அறிவு ஜீவி. வகித்தது அலங்கார பதவி என்றாலும் அவர் அதை வகித்ததில் அந்த பதவி கூட அழகாக இருந்தது.

'நல்லோர் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' - நம் அரசியல் வாதிகள் அதையே சற்று மாற்றி நல்லவர் கலாம் ஒருவரே உள்ளாரே அவர் பெயரைச் முன்மொழிவோருக்கெல்லாம் ஓட்டு கிடைக்கலாம் என்று நினைத்தார்கள் போலும். ஐந்தாண்டு பதவியில் இருக்கும் போது இதுவரை எவருமே மீண்டும் கலாம் தான் அதிபராக வரவேண்டும் என்று சொன்னது போல் தெரியவில்லை. தன்னலமற்ற கலாம் கூட அவ்வாறுதான் நினைத்திருப்பார்.

இழந்த செல்வாக்கை எப்படி தூக்கி நிறுத்த முடியும் என்று கணக்கு போட்ட பாஜாகவும், மூடங்கிய தலைவர்கள் சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது அணிக்கும் அருள்பாலிக்கும் கடவுளாக கலாம் தெரிந்திருப்பார் போலும். தமிழர் நலன், தமிழருக்கு பெருமை, நல்லவர் நீடிக்கலாம் என்ற இனிப்புகளை தூவி தூவி கலாமை வரவேற்பது போல அறிக்கைகளை வெளியிட்டனர். இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று கலாம் கூட நினைத்திருக்கலாம் ஏனென்றால் அவர் அரசியல்வாதிகளை மனிதர்களாக பார்த்திருப்பார் போலும்.

நல்ல உள்ளங்களுக்குத்தான் தெரியுமே, இதன் படி லட்சக்கணக்கான ஈமெயில்கள் அரசியல் வாதிகளின் ஓட்டுப் பொறுக்கும் பேராசையை அம்பலப்படுத்தி கலாமுக்கு செல்ல, சுதாரித்துக் கொண்டு நல்ல முடிவெடுத்துவிட்டார். அதிபர் கலாமின் தீர்கமான முடிவுக்கு வாழ்த்துக்கள். அவர் பதவியில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன அவர் இந்திய நலன் குறித்து தெரிவுக்கும் யோசனைகளை எந்த அரசியல் வாதியும்,புதிய அதிபரும் கூட நிராகரிக்க முடியாது. அவருடைய கவுரவம் இனி எந்த நிலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கருணாநிதி தமிழர் அதிபராக வருவதை தடுத்துவிட்டார் என கலாமின் பெயரைச் சொல்லி ஓட்டுப் பொறுக்கலாம் என்ற பேராசையில் செங்கல்லே விழுந்தவர்கள் அடக்க முடியாத கோபத்தை கருணாநிதி மீது காட்டுகிறார்கள். கருணாநிதியும் அரசியல் தெரிந்தவர்தானே. ஏன் மூத்த அரசியல் வாதியும் கூட.

பேராசைக்காரர்களின் பிணைய கைதியாக வீழ்ந்துவிடாமல் தேசிய நலன் காத்து தமிழன் சுதாரித்துக் கொண்டான்.

ஐயா கலாம் வாழ்க !

19 ஜூன், 2007

தமிழகத்து தாழ்த்தப்பட்ட பெண் தெய்வங்கள் !

உயர்வு தாழ்வு என்பது சாதிய அடிப்படையில் மனிதர்களிடம் மட்டுமா இருக்கிறது ? கடவுள் உருவச் சிலைகளிடம் கூட இந்த வேறுபாடும் தாழ்வு நிலையும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்து மத புராணங்களில் சொல்லப்பட்ட கதைகள்.

வெறும் கதைகளினால் இவற்றை நம்ப வைக்கமுடியுமா ? முடியும் தான். அதாவது முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரை முதல் முறை சந்திக்கிறீர்கள். அவரிடம் பெரிதாக உங்களுக்கு அபிப்ராயம் எதுவும் இருக்காது. அப்படி சந்திக்கும் ஒருவருக்கு பெரிய பாரம்பரியமோ, குடும்பபின்னனியோ முன்பாகவே உங்களுக்கு தெரிந்து இருந்தால் முதல் முறை சந்திக்கும் போதே அவரைப் பற்றி நல்லதொரு அபிப்பிராயம் இருக்கும்.

இதுபோலத்தான் சமூகத்தில் ஒரு சமூகம் உயர்ந்தது என காட்ட அவற்றை புராணகதைகளைக் காட்டி தாங்கள் அந்த வழிவந்ததாக சொல்கிறார்கள். சத்திரியர்கள் கூட தாங்கள் நெருப்பில் இருந்து பிறந்தாகச் சொல்கிறார்கள். தில்லைவாழ் அந்தனர்கள் தேவலோகத்தில் இருந்து தேர் ஏறி வந்ததாக கதைகள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் கேட்டால் ஒரு 'பெரிய'புராணத்தைத்தான் காட்ட முடியும். வேறொன்றும் இல்லை. இது போலத்தான் முகத்தில் இருந்து கால்வரை 4 வருணத்தார் பிறந்தகதைகள் எல்லாம்.

இந்துமதத்தில் உள்ள தெய்வ உருவங்களுக்கெல்லாம் தொப்புள் வரைந்து அல்லது செதுக்கி இருப்பதால் அவை எவையும் 'தான் தோன்றியல்ல (சுயம்பு அல்ல)'. பல்வேறு சாதி / இன குழுக்குகளுக்கு தனித்தனியாக தெய்வங்கள் இருக்கின்றன. சமய நல்லிணக்கம் என்பது பிற தெய்வ உருவங்களை பிற சமயத்தினர் ஏற்றுக் கொள்வதாகும். இவ்வாறு தான் வடக்கு தெற்கு என இருந்த பல கடவுள் சின்னங்கள் இந்தியா முழுதும் இந்துக்களுக்கு பொதுவாக ஆனது.

ஒரு சமூகத்தினர் வணங்கும் தெய்வமும் மற்ற சமூகத்தினர் வணங்கும் தெய்வமும் ஒன்று என்று காட்ட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. எதனால் ? அப்பொழுதுதான் அவர்களுடைய சமய சடங்குகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். உதாரணத்திற்கு மாரியம்மன், காளியம்மன் என்ற கிராம நாட்டார் தெய்வ வழிபாடுகள் வழக்கில் அதிகமாக இருந்தன. அவற்றை புராணம் வழி வந்தது என்று காட்டுவதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியும். அம்மக்களின் சமய, சமூகவாழ்வில் ஆதிக்கம் செலுத்த முடியும் இவ்வாறு செய்வதற்கு கதைகள் தேவைப்பட்டன.

மாரியம்மனை தலைவெட்டி மாரியம்மனாக பார்த்து இருப்பீர்கள். ஏன் தலையை மட்டும் வணங்குகிறார்கள் என்று தெரியுமா ? ஒருமுறை சிவனுக்கு (ஜமதக்னி முனி அவதாரமாம்) பரசுராமன் பிள்ளையாக பிறந்தான். அவன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவன். பார்வதி மீது சந்தேகம் கொண்ட சிவன், பரசுராமனை கூப்பிட்டு பார்வதியின் தலையை சீவச் சொல்கிறார். தந்தை சொல்லை தட்டாது அவனும் அவ்வாறு செய்துவிடுகிறான். சிவன் பின்பு தன் தவறை உணரும் போது பார்வதியின் உடல் கிடைக்கவில்லை. தலைமட்டுமே கிடைக்கிறது. எப்படியாவது பார்வதியை உயிர்பிக்க செய்யவேண்டும் என்று நினைக்கும் போது அந்த வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பெண் செல்கிறார். பறைச்சி என கதைப்படி சொல்கிறார்கள். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி பார்வதிக்கு பொருத்துகிறார்கள். பார்வதி உயிர்தெழுகிறார்.

இந்த கதையை நாட்டார் தெய்வமான மாரியம்மனுக்கு சொல்கிறார்கள். கதை உண்மையா ?பொய்யா ? என்று பார்த்தால். கதை எழுதியவர்கள் அதை உண்மையாக்க மாரியம்மனை தலையுடன் மட்டும் பல்வேறு கோவில்களில் வைத்து இருக்கிறார்கள். அதாவது உடல் தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடல். வணங்குவதற்கு அருகதையற்றது எனவே தலையை மட்டும் சிலையாக வடித்து வைத்திருக்கிறார்கள். இந்த கதையின் மூலம் மாரியம்மன் என்ற நாட்டார் தெய்வம் பார்வதியாக அறியப்பட்டது. அதே சமயத்தில் தலையை மட்டும் வணங்குவதால் எச்சமூகமும் அதை உயர்ந்தோர் வழிவந்த தெய்வமாக கருதி வழிபடும். வழிபாடும் தாழ்ந்துவிடாது என்பதன் நோக்கமாகத்தான் இருக்கும்.

இதுபோன்ற தலைவெட்டி மாரி, காளியம்மன்களை படைவீட்டு அம்மன் கோவில்களிலும் நீங்கள் பார்க்கலாம். குருவாயூரில் கிறித்துவரை விட வேண்டும் என்று போர் கோடி தூக்குகிறோம். ஆனால் பறைச்சியின் உடல் அது சிலையாக இருந்தாலும், சிலையில் இருந்தாலும் தீண்டத்தாகாததே என்று முண்டங்களால் தீர்ப்புகள் கூறப்பட்டு அம்மன் சிலைகள் தலையுடன் தமிழ்நாடெங்கும் ஈனக்கதைகளின் சின்னங்களாக இருந்து கொண்டு அருள்பாலிக்கின்றன. எனது வேண்டுதல்... தமிழக மாரியம்மன், காளியம்மன் சிலைகளுக்கு அவற்றின் உடல் கிடைக்க ஆத்திக அன்பர்கள், பக்தர்களிடமிருந்து வரம் கிடைக்க வேண்டும்.

16 ஜூன், 2007

சிவாஜி : ஷங்கர் பாதி ரஜினி பாதி கலந்து செய்து கலவை

எங்கே பாத்தேன்... எப்டி பாத்தேன்.......நோ டிஸ்கி ... நேராக மேட்டர்...இதோ...

ஷங்கர் படம் என்பதற்கு : ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் வகையறா கதைகளான லஞ்சம், ஊழல், பொறுப்பின்மை, போன்ற சமுக அவலங்களை ஹைலைட் பண்ணி எடுப்பது போன்று இங்கே 'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்' என்று ஆரம்பித்து முடிகிறது கதை. மேற்சொன்ன படங்களில் ப்ளாஷ் பேக் காட்சிகள் இருக்கும். சிவாஜியில் 90 விழுக்காடு பிளாஸ் பேக். அதாவது சிவாஜி எம்ஜிஆராக (மொட்டைதலை) ரஜினியாக மாறும் வரை ப்ளாஸ் பேக்தான்.

வழக்கமான பிராமாண்ட செட்டுகளில் எடுக்கப்பட்ட கலர்புஃல் பாடல்காட்சிகள். அதைத்தவிர ப்ரேம் பை பேரம் ஷங்கரின் கைவண்ணம் என்றுபார்த்தால் ஷங்கர் படம். சமூக அவலம் என்ற சொறி இருக்கும் வரை அரிப்பு இருக்கவே செய்யும். ஷங்கர் நன்றாக தன் படங்கள் மூலம் சொறிந்துவிடுவதை சிவாஜியில் சற்று குறைவாக சொறிந்து இருக்கிறார். அதற்கு காரணம் படத்தில் ரஜினி பார்முலா இடம் பெற வேண்டும் என்பதற்காக என நினைக்கிறேன். கதாநாயகிகளை இளமையாகக் காட்டுவதுடன், இந்த படத்தின் மூலம் ரஜினி ஒரு இளைஞராக காட்டி இருக்கிறார். தலைமுடிகளில் நல்ல கருப்பாக அடர்த்தியாக இருப்பது கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. ஆனால் ரஜினியின் முகத்தில் தெரியவில்லை.

காதல், வெயில் போன்ற தன் சொந்த தயாரிப்பு என்றால் ரொமாண்டிக் ரெமோவாக இருக்கும் ஷங்கர் ... தான் இயக்கும் படங்களில் சமூக அவலத்திற்கு எதிராக ஆயுதம் எடுக்கும் வழக்கமான அந்நியானாக மாறி இருக்கிறார்.

திரைக்கதை + பிரமாண்டம் என்று பார்த்தால் - இது 50 விழுக்காடு ஷங்கர் படம்.

ரஜினி படம் என்பதற்கு : தனது ரசிகர்களுக்கு குறைவைக்காத ஹீரோயிசத்தில் ரஜினி சிவவஜியிலும் குறைவைக்கவில்லை. வழக்கமான அப்பாவித்தனமான காமடி காட்சிகள். குறிப்பாக ஷ்ரேயா ரஜினியின் நிறத்தை வெளுப்பபக மாற்றிக் கொள்ள சொல்ல ... அதற்கு ரஜினி செய்வது நல்ல நகைச்சுவை. மேலும் இது ரஜினி படம் தான் என்பதற்கு ... நிராயுதபாணி ஹீரோ, சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்பவர், வில்லன் துவைத்து எடுக்கும் போது அடியை வாங்கிக்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் காட்சிகள் போன்றவை அண்ணாமலை, அருணாசலம்,முத்து,படையப்பா படங்களை நினைவு படுத்துகிறது. மொட்டைத்தலை எம்ஜிஆராக வரும் போது தலையில் விரலால் படபடவென்று தட்டிக் கொண்டு வசனம் பேசுவது புது ஸ்டைல்...(சந்திரமுகி லக்க லக்க போல ரசிக்க வைக்கிறது) மற்றபடீ ஸ்டைலாக சுவிங்கம் தூக்கிபோட்டு பிடிப்பது சந்திரமுகியில் வந்ததுதான்.

காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு முதலில் காலை காட்டி வணங்க வைத்த காட்சி ஏற்கனவே சந்திரமுகியில் வந்தாலும்...இங்கே காலை காட்டுவார் வேறு சூழல்.

மற்றபடி எனக்கு பிடித்த காட்சிகள் : திருகுறள் (அன்பும் அறமும் உடைத்தாயின்..) சொல்லி தமிழ்முறை திருமணம்...சுஜாதாவில் டைமிங் சென்ஸ் வசனம் ரசிக்கும் படி இருந்தது. மொட்டை தலை ரஜினி...ரஜினி எம்ஜிஆர்..சிவாஜி..கமல் பாணியில் உள்ள பாடல் காட்சி...விவேக் நகைச்சுவை. 'என்னது பஞ்ச் டயலாக் பேசப் போறியா ?...உன்னைப் போல பேசி விடலை பசங்களும் வெரலை தூக்குறானுங்க...' என்று சிம்புவுக்கு அம்பு விட்டு இருப்பார். ஒரு காட்சியில் வந்தாலும் போலிஸ் அதிகாரியாக வரும் லிவிங்ஸ்டனின் 'லக்க லக்க' நல்ல டைமிங் காட்சி... மயில்சாமி...சின்னி ஜெயந்த்...தாமு ஆகியோரின் ரஜினி மிமிக்கிரி நன்றாக இருந்தது.

ஷ்ராயா இதற்கு மேல் மற்ற படங்களில் தனது முழுத்திறமையையும் (?) காட்டமுடியாது அந்த 'அளவுக்கு' நன்றாக செய்து இருக்கிறார்.


மொத்தத்தில் சிவாஜி = ரஜினி பாதி + ஷங்கர் பாதி கலந்து செய்த கலவை !

அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது

1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்

டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........
:))

தமிழக நடிகர்களால் ஒரு போதும் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாது !

மனித மனங்களில் அழுக்கு சேர்ந்துவிட்டாலும், நேர்மையை மனது ரசிக்கவே செய்கிறது, இது எவ்வளவுதான் கெட்டவனாக இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும், ரவுடிகள் கூட தொழில் தர்மம் என்று நேர்மை குறித்து பேசுவார்கள். தமிழன் கலைக்கு முதன்மைத்துவம் கொடுப்பவன். கலைகள் இல்லாமல் தமிழன் வாழ்ந்ததே இல்லை. வில்லுப்பாட்டு, பொம்மலாட்டாம், நாடக வரிசையில் கலைகளின் உச்சத்தை தொட்டு இருக்கிறது திரைப்படங்கள் இன்றைக்கு மற்றவை அழிவதற்கு அதுவே காரணம். சினிமா இல்லை என்றால் பொழுது போக்கே இல்லை என்ற ஒரு மாய பிம்பம் தோற்றுவிக்கப்பட்டு தொலைக்காட்சி ஊடகங்களும் திரையிலேயே முகம் புதைத்திருப்பதற்கு இதுவே காரணம்.

ஒரு படம் வெற்றி அடைந்தால் அந்த நடிகரும், இயக்குனரும் 90 விழுக்காடு தமிழர்களுக்கும் அறிமுகமானவர்கள் ஆகின்றனர். திரைப்படங்களில் பெரும்பாலும் மிகைப்படுத்துதல் இருந்தாலும் பாத்திரபடைப்புகள் மூலம் திரையுலகம் தொடர்ந்து புகழடைந்தே வருகிறது. நிஜவாழ்கையில் ஏமாற்றம், துக்கம்,
மகிழ்ச்சி என தனக்கு நேர்ந்த அனைத்தையும் திரையின் மூலம் தெரியவரும் போது மனிதன் நெகிழ்ந்து போகிறான். பொழுதுபோக்கு என்ற ஒரு ஊடகம் வாழ்வாதாரமாக உருவகப்பட்டு போவதற்கு இதுவே மூல காரணம்.

இங்கு தான் படத்தின் பாத்திரம் பரிணமிக்கிறது. பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும், அல்லது பணக்காரர்களின் திமிரை அடக்கவேண்டும் என்ற ஏழைகளின் ஏக்கத்தை திரைப்படத்தின் கதாநாயக பாத்திரம் தீர்த்து வைக்கும் போது அதில் அந்தபாத்திரத்தின் தாக்கம் அந்த பாத்திரத்தின் புகழாக விஷ்வரூபம் எடுக்கிறது, இதைத்தான் இளம் நடிகர்கள் கூட தனக்கென ஒரு 'இமேஜ்' இருப்பதாக சொல்கிறார்கள். இதுபோன்ற நடுத்தர வர்கத்தின் ஏக்கமான ஊழலற்ற நாடு, நிம்மதியான வாழ்க்கை என்ற ஏக்கத்தையும் ஒரு படம் பிரதிபலிக்கிறது.

இதைத்தவிர நேர்மை, உண்மை என்ற பெயரில் எதார்த்த திரைப்படங்களும் நன்றாக ரசிக்கப்படுகிறது, உதாரணம் சேது, பருத்திவீரன் போன்ற படங்கள்.

பெரும்பாலும் நமது தமிழ்சினிமாவின் ஹீரோக்கள் என்றால் அது நேர்மையாகவும், நீதிக்கு போராடுபவனாகத்தான் காட்டப்படும். நெகடிவ் பாத்திரங்களை வளரும் நடிகர்களும் தேர்ந்தெடுப்பது மிக மிக அரிதே.

திட்டமிடுதல் இல்லாவிட்டாலும் ஒரு 10 வருட தமிழ்சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் நன்கு அறிமுகமான நடிகர் என்றால் அவர் மேலும் வளருவார் என்ற சூழல் எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு மிகவும் குறைவு. அதாவது ரசிகர் வெறியர் ஆகும் அளவிற்கு வளரும் நடிகர்கள் மிக மிக குறைவு. நலல் நடிப்பில், நகைச்சுவையில், வித்தியாசமான பாத்திரங்களில் சத்தியராஜ் போன்றவர்கள் தொடர்ந்து நல்ல நடிகர்களாக இருக்கிறார்கள் அன்றி சூப்பர் அந்தஸ்தெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பது இல்லை. கமல் படங்களில் நடிப்பும் எதார்த்தமும் இருப்பதால் அவருடைய மார்கெட் சரிவை சந்தித்தது இல்லை என்று கூறலாம்.

சினிமாவில் ஒருவர் சூப்பர் ஸ்டார் அந்தெஸ்துக்கு உயரவேண்டுமென்றால் நல்ல நடிப்பு மட்டும் போதுமா ?
நிச்சயமாக பத்தாது. ஏழைகளின், நடுத்தரவர்கத்தினரின் ஏக்கங்கள் தீர்க்கப்பட வேண்டும். அதை எந்த நடிகர் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்களா ? இளைய நடிகர்களாக விஜய், அஜித் போன்றவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒருநடிகர் சூப்பர் ஸ்டாராக உயர்வு பெற முக்கியமாக இருக்க வேண்டியது அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற ஒரு தோற்றம் இருக்கவேண்டும். இந்த தோற்றம் எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தமிழர்களாக பிறக்கவில்லை. தமிழகத்தின் எந்த சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் இவர்களை பொதுவானவராக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் திறமை இல்லை என்று சொல்லமுடியாது. அதுவும் இருக்கிறது. சமுகத்தில் எவை எவையெல்லாம் எதிர்பார்க்கப் படுகிறதோ அவையெல்லாம் இவர்கள் பாத்திரத்தின் மூலம் திரையில் தீர்த்து வைக்கபடுகிறது. தங்களுக்கு ரசிகர் கூட்டம் இருந்தாலும், படம் தங்கள் பெயருக்காக ஓடுவதாக தயாரிப்பாளரிடம் சொனனலும், வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி போட்டு கொள்வதற்கு முக்கிய காரணம், ரசிகன். ரசிகரகளுக்கு கவர்ச்சியில் பஞ்சம் வைக்கக் கூடாது என்று அக்கரையுடனே அவ்வாறு செயல்படுகின்றனர். குறிப்பாக ரஜினியில் கடந்த 10 படத்தில், குஷ்பு,மீனா,ரோஜா,சவுந்தர்யா போன்றவர்களுக்கு இருபடங்களுக்கு மேல் வாய்பு வழங்கப்படவில்லை.

எம்ஜிஆரைவிட ரஜினிக்கு ரசிகர்கள் மிகுந்து இருப்பதற்கு காரணம் வெளிப்படையான நேர்மையாக ரஜினி திரையில் சிகெரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் பார்க்கப்படுகிறது. இவர் எதையும் மறைப்பதில்லை என்ற ஒரு தோற்றமும் உருவாகிவிட்டதால் ரஜினியின் கொடி உயரமாகவே பறக்கிறது.

தமிழக மற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் என்னும் மாய தோற்றத்தை பெற முடியாது. 10 - 15 வருடங்களிலேயே எந்த நடிகரின் சாதியும் பரவலாக தெரிந்துவிடும். சமூகத்தின் சாதிபற்று குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை தாண்டி மற்ற நடிகர்களை வளர்க்க முன்வராது. நல்ல நடிகர் என்று எவராலும் பெயர் எடுக்க முடியும்! ஆனால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு ஒரு நடிகர் உயர தமிழர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். ரஜினியும் எம்ஜிஆரும் தமிழர்களைப் பொருத்தவரை பொதுவானவர்கள். இதைப் புரிந்து கொண்ட ரஜினி 'தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரன், தமிழ்பாலும், தமிழைத்தேனாகவும் குடிப்பதாக' பாட்டுப் பாடி வெற்றிகரமாக வலம் வருகிறார். வயதானாலும் இவர்களை ரசிகர்கள் விரும்புவதற்கு இதுமட்டும் தான் காரணம்.


இன்னும் எழுதலாம் பதிவிம் நீளம் அயற்சியை ஏற்படுத்தும்.


இது தொடர்பில் முன்பு எழுதியது : புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...!

14 ஜூன், 2007

சிங்கையில் சிவாஜி இன்று வெளியாகிறது

பெரும் எதிர்(பார்ப்)பை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி இன்று சிங்கையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

காட்சிகள் விபரம்:

கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 7 : இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 12:45 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 9 : இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 1:10 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 10 : இரவு 9.20 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி

தொலைபேசி 6554 4747


பிளாசா டெக்ஸ்டைல் (200 ஜலான் சுல்தான்): இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6295 6417

டிக்கெட் விலை : S$15/-

திரை அரங்கில் "சிவாஜி" படம் பொறிக்கப்பட்ட பணியன்கள் கையிருப்பு இருக்கும் வரை விற்பனைக்கு உள்ளதாம்.


உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே....சிவாஜி படம் முதலில் பார்த்த தமிழர்கள் என்ற பெருமை சிங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கப் போகிறது !!!
:)))

12 ஜூன், 2007

வாங்க மூனுக்கு போகலாம் !


உலக தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற நாள் !


உலக மக்களை உயர்த்தும் நாள் !

சரித்திரத்தில் சரித்திரம் படைக்கும் நாள் !

நாளைய பிரதமரின் இன்றைய வெளியீடு !

சிங்கத் தமிழன் சினந்து எழுகிறான் !

எவெரெஸ்ட்டு இனி கீழே தான் !

உலகின் தலையெழுத்தை மாற்றும் ஒரே நாள் !

இந்த நாள் போல் இனி ஒரு நாள் இல்லை !

இறைவன் இன்று உலகமக்கள் அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார் !

இன்று ஒரு புதிய உலகம் பிறக்கிறது !

நெப்போலியனுக்கு பிறகு உலகம் பார்க்கப் போகும் ஒரே வீரன்

தலைவனின் தலைமை நாடுவோம், அவன் பாதம் போற்றுவோம்.

சி வா ஜி

:))))))))))))



நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிவாஜி வெளியீட்டு நாள் வாசகத்தை பகிர்ந்து கொண்டு ரஜினி ரசிகர்களுக்கு உதவுங்கள்.

என்னது ... தமிழ்நாட்டு மேல் ஏன் இன்னும் எவனும் குண்டு போடலையா ?

ன்னு கேட்கிறிங்களா ?

ஆளைவிடுங்க சாமி !!!

11 ஜூன், 2007

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?

இந்து மதத்தில் விழுந்த சாக்கடையில் நெழியும் புழுக்களில் சில 'பிற மதத்தினர் கோவிலுக்குள்' வரக்கூடாது என்ற ஆகாத ஆகாமம் மற்றும் அதை ஏற்படுத்தியவர்கள். தோற்றமில்லாத மதம் என்று ஒருபக்கம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் இரட்டை வேடதாறிகளின் எச்சில் வார்த்தைகள் அவை. மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதத்தில் பிறமதத்தைக் குறித்த கட்டுப் பாடுகள் இருக்க முடியும் ?

இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் நன்கொடை கொடுத்தால் தீட்டுக் கழிக்காமல் 'தொட்டு' எடுத்துக்கொள்ளப்படம் காசுகளுக்கு இல்லாதா தடை ஏன் அவர்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் ? இந்துக் கோவில்களின் எக்ஸ்டன்சன்களாக பல வெளிநாடுகளில் கோவில்கள் எழும்பிவிட்டன. அங்கெல்லாம் சென்று இதே ஆகாதவாதிகள் ஆகமம் குறித்துப் பேசினால் கோவில்கள் அங்கு இருக்காது. கிறித்துவ நாடுகளில் இந்துக் கோவில்கள் கட்ட அனுமதிக்கப் படும் போது ஏன் கிறித்துவர்கள் என்பதால் இந்திய இந்து கோவிலில் இன்னும் இந்த இழிவான ஆகமம் இருக்கிறது ?

சர்வேசன் பதிவில் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதாவது தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்ட மதங்கள் என்று பிறமதங்களும் தாழ்த்தப்பட்டவையாக பார்த்து அனுமதி மறுக்கப்பட்டு இருக்கவேண்டும். அல்லது பிறமதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் என்று ஒட்டுமொத்தமாக பிறமதத்தினருக்கு அனுமதி இல்லை என்று எழுதிவைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்குத்தான் மதங்களெல்லாம். அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவன் என்று ஆத்திகர்களால் நம்மபடும் இறைவனுக்கு எங்கே மதம் ? அப்படி ஒருவேளை தீட்டுப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் சக்தி இழந்து போகும் அளவுக்கு பலவீனமானவனா இறைவன் ?ஒருகாலத்தில் சூத்திரன் வரக் கூடாது என்ற கோவில் களெல்லாம் இன்று சூத்திரன் நுழையமுடிகிறதே கோவில் கோபுரங்கள் சரிந்துவிட்டதா ?

சில ஆபாத்பாண்டவர்கள் உளறுகிறார்கள் அதாவது கோவிலுக்குள் பிறமதத்தினரைவிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் ஐயா இந்த ஆகாத ஆகமவிதிகள் பாபர் மசூதிக்கு இடிப்புக்கு முன்பு மட்டுமல்ல பல நூற்றாண்டுகளாவே இருந்துவருகின்றன. மத வழிபபட்டுத் தளங்களைவிட பொது கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம்,மதம்,சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்ததில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது. அதையும் தூய்மைபடுத்தி அங்கு வருவோர் எல்லோரையும் சமமாக பார்த்தும் தோட்டி என்று இழிபெயரால் பலரால் அழைக்கப்டுபவனே கடவுள்.

6 ஜூன், 2007

ஐஏஎஸ் ஐபிஸ் கனவுகள் !

நான் கலெக்டர், ஐஜி, டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் கடும் முயற்சிக்குப் பின் அதனை சாதிக்கிறார்கள். இந்த சாதனையின் பலனாக அவர்களுக்கு கிடைத்த உயர்ந்தபதவிகளில் அமர்ந்து மக்கள் வரிப்பணத்தால் கிடைகும் ஐந்து இலக்க ஊதியத்தையும், அரசாங்க ஆடம்பர பங்களா, ஏவலாட்கள், காவலாட்கள் என்று அவர்களுக்கு அனைத்து வசதிகளுக்கும் கிடைக்கிறது. அமைச்சர்களுடன் உலக நாடுகளுக்கு உல்லாசப் பயணம், சைரன் வைத்த உயர்ரக கார் என சொகுசான வாழ்கையை ஓய்வு பெரும்வரை அனுபவிக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் இந்தியாவின் ஏழ்மையின் புள்ளிவிபரங்கள் அனைத்தும் தெரியும். சாதிப் பிரச்சனைகள் தெரியும் மற்றும் வாழ்வாதரமான அனைத்துப் பிரச்சனைகளும் தெரியும். இவற்றில் சிலவற்றை நேரிடையாகவே பார்த்து உணர்ந்தவர்கள். ஐந்தாண்டு இருக்கும் மக்கள் பிரதிநிதியைவிட மக்கள் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர்கள் அதிகாரிகள்தான். இவர்களில் பலர் தங்கள் பதவிகாலத்திலேயெ அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு சாதமானவற்றை சாதிப்பவர்களாகவும், வேண்டியவர்களுக்கும், லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை மலைப்போல் சேர்ப்பவர்களாகவுமே உள்ளனர்.

பதிவிகாலத்தில் தான் இவ்வாறு செய்கிறார்களா ? பதவி முடிந்தாலும் உயர் அதிகாரிகளாக இருந்த புகழ் இருகிறதே சாகும் முன் சாதிப்போம் என்று எதோ ஒரு கட்சியில் இணைந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய அதிகாரிகள் இணைவது எதாவது ஒரு ஜாதிக் கட்சியாகவே இருக்கிறது. இப்பொழுது புதிதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த், சரத்குமார் கூட தங்கள் கட்சியில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கனிசமான அளவு இருப்பதாக பெருமையாகவே சொல்கிறார்கள். சாதி சங்களுக்கு தூண்டுதலாக இருந்து இயக்குபவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், நீதிபதிகள், கலைக்டர்கள் மற்றும் தேர்தல் (தேர்வாணைய) இயக்குனர் போன்றவர்களே.

எல்லோரும் படித்துவிட்டால் இந்தியா எங்கேயோ போகும் என்று பொதுவாக சொல்லுவதை நினைத்துக் கொண்டு இவர்களைப் பார்க்கும் போது நமக்கு நகைப்பாகவே இருக்கிறது. பதவிகாலத்திலேயே ஊழல் வழக்குகளில் சிக்கி 'நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கும் படித்தவர் பாரீர்' என்று துப்ப வேண்டி இருக்கிறது. உயர்ந்த கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் இவர்களின் குறுகிய எண்ணங்களினால் சமத்துவம் காணும் முயற்சியில் இந்தியா பின்னடைவில் முன்னனியில் இருக்கிறது.

உங்களுக்கு தெரிந்த உயர்அதிகாரி கூட ஒருநாள் சாதிக் கட்சிக்குள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வார் பாருங்கள். இவையே அவர்களின் சாதி(க்கும்) கனவு.

1 ஜூன், 2007

மே மாத அக்னியில் - 9632 பேர் பாதிப்பு


மே 1, 2007 முதல் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக, வரலாறு காணாதவகையில் (காலங்களில்) வீசிய வெப்பத்தின் தாக்கத்தில் 9632 தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் பிறந்துவிட்டதால் இனி வெயில் தனிவதற்கு வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
:)

May (26)
நீயே அள்ளு !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..
சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?
வாஜ்பேயி மற்றும் அடுத்த ஜனாதிபதி பற்றி...
குமரன் முருகனும் பெரியார் இராமசாமியும் - ஒப்பீடு
தீட்டு கழிக்கும் வைபவம் !
பரண் 2004 - மேல் மாடி காலி
பிறப்பின் அடிப்படையில் ?
மதமாற்றம் என்றால் என்ன ?
காலில் விழுவதன் பெருமை மற்றும் மாயாவதி !
இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !
தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !
பார'தீய' ஜெகதால கட்சி !
திராவிட அரசியல் எதிர்ப்பு ஏன் ?
வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?
சன் டிவிக்கு பொன்னான வாய்ப்பு !
சொர்கமா ? நரகமா ? எதுவாக இருந்தாலும் ... !
'ஆ' ன்னா 'உ' ன்னா ஆட்சியைக் கலைக்கனும் !
மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சன் டிவியின் கழுத்து அறுப்பு :
தாத்தா சொத்து பேரனுக்கா ?
நான் 'கண்ட' பெரியார் !
தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !
சிரிக்கலாம் வாங்க (1) !
மொழி, கடவுள், அடிமைத்தனம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்