பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2011

திராவிட புத்திரி சூத்திரர் ஆனக் கதை !

இன்னிக்கு ஒரு முக்கியமான செய்தி, 'கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்காக காளகஸ்தி கோவிலில் 'ராகு - கேது' சர்ப தோஷ வழிபாடு செய்தாராம். இதில் என்ன கருணாநிதி தம்மை நாத்திகனாகக் கூறிக் கொண்டால் அவரது வாரிசுகள் கோவிலுக்குப் போகக் கூடாதா ? அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாதா ? என்பது தானே கேள்வி.

கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை, அவ்வாறு இருப்பதும் இல்லாததும் அவரவரின் விருப்பம். ஆனால் 'ராகு - கேது' சோஷியம் பரிகாரம் இன்னும் பிற இழவுகளும் இந்துமத அடிப்படைகளின் ஒன்று, இதைமட்டுமே இந்துமதம் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, பிறப்பினால் ஏற்றத் தாழ்வுடன் பிராமணன் - சூத்திரன் வரை பிரிவுகளை வைத்திருந்து வேதக் கல்வி கற்றிருந்தாலும் பிறப்பின் வழியாக பார்பனர் அல்லாதோர் ஆகமக் கோவிலும் பூசை செய்ய ஆகமம் இடம் தரவில்லை என்று தடையாணையுடன் நிற்கிறது. இந்த இராகும் கேதுவும் யார் ? அசுரரும் - தேவரும் அமிர்தம் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தில் அசுரர்களுக்கு பங்கில்லை என்று கைவிரித்து அவர்களை புறக்கணித்த போது அந்த அசுரரில் ஒருவர் தேவராக உருமாறி இடையில் நிற்க அமிர்தம் கிடைக்கப் பெற்று உண்டதும், அவர் தேவர் இல்லை என்பதால் உடல் வெட்டப்பட்டு, உண்ட அமிர்தத்தின் காரணமாக உயிர் போகமல் இருக்க இராகுவாகும் கேதுவாகவும் சபிக்கப்பட்டதாக இந்து மத இழிபுராணம் ஒன்று கூறுகிறது. இதை எதற்கு இழி புராணம் என்று கூறுகிறேன் என்றால் உடல் உழைப்பிற்கு அதாதவது அமிர்தம் கடைய உறுதுணையாக இருந்த அசுரர்கள் நிராகரிக்கப்பட்டதற்கு அவர்கள் தேவர்கள் அல்ல என்னும் அற்பக் காரணமே. இத்தகைய புராணங்கள் இழிபுராணம் அன்றி வேறென்ன ? இதே வழியில் தான் வேதம் படித்த பார்பனர் ஒன்று கூடி வேதம் படித்த பார்பனர் அல்லாதோர் பூசை செய்யும் தகுதி படைத்தவர் அல்லர் என்று வாதிட்டு தடை ஆணையும் பெற்றுள்ளனர்.


இந்து மதமும் அதன் புராணங்களும் குறிப்பாக இராகுவும் கேதுவும் இந்து மத ஏற்றத்தாழ்வுகளின் அவமானச் சின்னமாகவே தொடர்கின்றனர், உழைப்பாளிகளின் உழைப்பு மட்டுமே சுரண்டப்பட்டு அவர்களுக்கான பலன் மறுக்கப்பட்டதன் உவமானம் தான் ஒரு அசுரன் இராகு கேதுவாக சபிக்கப்பட்ட கதை. இது தான் ஆகமவழி கோவில்களின் அவலட்சணம். பிறப்பின் வழி ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கிறேன் என்று தோன்றிய இயக்கதின் தலைமை பதவியில் பலன்களை தொண்டர்களின் ஆதரவால் பெற்ற ஒருவரின் பெற்ற மகள் இத்தகைய ஏற்றத் தாழ்வை போற்றும் இந்துமதம் பற்றியும் ஆகமக் கோவில் பார்பனர்களின் ஆளுமையையும் அறிந்திருக்கமாட்டாரா ? அவ்வாறு அறிந்திருக்கமாட்டார் என்றால் பெற்ற மகளுக்கே இத்தகைய அறிவை ஊட்டதாவர் பிறருக்கு செய்ததெல்லாம் ஊருக்கு உபதேச வகையில் தானா ?

தாம் திராவிடன் அல்லது திராவிடர் என்று நம்பும் ஒருவர் ஆகமக் கோவிலின் ஐயர்மார்கள் செய்து தரும் பரிகார பூசையை நம்பும் போது, இந்து மத ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதாகத் தான் பொருள். அது மட்டுமல்லாது அவர்கள் பார்பனர்கள் அல்லாதோர் என்றால் இந்துமதக் கோட்பாட்டின் படி தம்மை சூத்திரர்களாக பார்பனர் உள்ளிட்ட பலர் அழைப்பதை தாழ்வுடன் ஏற்றுக் கொள்பவரும் ஆகிறார்கள்.

கருணாநிதிக்கு நாகதோசமா ? ஒருவேளை பெரியார் சொன்னதில் பாதியைப் புரிந்து கொண்டு விட வேண்டிய பாம்புகளை அடித்துக் கொன்றாரோ ?

மு.க செல்வி காளகஸ்தி கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்து தம்மை சூத்திரர் ஆக்கிக் கொண்டுள்ளார், வாழ்க திரா'விடம்'

13 ஜூன், 2011

படைப்புக் கொள்கை - 4

மதவாதிகளின் படைப்புக் கொள்கை பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆளுக்கு ஒரு நாள் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள், அவர்கள் கூறுவதிலிருந்து உச்ச அளவாக ஒரு பத்து நாளில் படைப்பு நடந்ததாகக் ஏற்றுக் கொண்டாலும் 'எல்லாம் வல்லக் கடவுள்' நினைத்த மாத்திரத்தில் ஏதும் நிகழாதா ? அதுக்கு ஏன் இத்தனை நாள் ? என்கிற என்போன்றோரின் கேள்விகளுக்கு பதில் எதுவும் வருவதில்லை. கடவுள் கற்பனைக்கெட்டாதவர் என்று கற்பனை செய்து கொள் உனக்குள் சந்தேகங்களே வராது என்பது போல் பதிலளிக்க முனைகிறார்கள், அதாவது கடவுள் அல்லது கடவுளின் ஆற்றல் என்பது நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டதாம். உலகம் இருட்டு என்பதை உணர நீ கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகிவிடும் என்பது போன்ற பாடங்களைத்தான் கடவுளின் ஆற்றல் பற்றி கேட்போர்களுக்கு பதிலாக வருகிறது. ஆனால் இவ்வாறு கடவுள் பற்றி நினைத்த மாதிரி கேள்வி எழுப்புவது எவ்வளவு தவறோ அது போலவே கடவுள் பற்றி அளவுக்கு மிகுதியாக அளந்துவிடுவதும் பலமடங்கு தவறு என்பதை இவர்கள் உணரமாட்டார்கள், ஏனெனில் கடவுள் பற்றிய மிகுதியான புகழ்ச்சியின் வழியாக கடவுளின் கருணை இவர்களுக்கு கிட்டும் என்றெல்லாம் நம்புகிறாகள்.

தீவிர இறை நம்பிக்கையாளர்களிடம் 'கடவுளை நிருப்பிக்க முடியாமா ?' என்றால் யாதொரு பதிலும் இல்லாதது போலவே, எந்த ஒரு உயிர் அல்லது பொருளின் மூலம் அல்லது தோற்றம் குறித்து கடவுளை நம்பாதவர்களிடம் கேள்வி எழுப்பும் போது அவர்கள் பரிணாமத்தை விடையாகச் சொல்வார்கள். இந்திய சமயங்களிலும் பரிணாம வளர்ச்சி பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் அறிவியலை புறக்கணிப்பது மதவளர்ச்சிக்கு பேராபத்து என்றே உணர்ந்து 'பரிணாமம்' இந்து மதம் ஏற்கிறது என்று இந்துமதவாதிகள் கூறுவது மட்டுமின்றி 'புல்லாகி பூண்டாகி' பாடல்களெல்லாம் பரிணாமம் பேசுவதாகவும். கிருஷ்ணனின் 10 அவதாரமும் கூட பரிணாமத்தை மெய்பிக்கும் கூறுகளாகும் என்பர். புல்லாகி பூண்டாகிப் பாடல்களும், தசவதாரம் இவையெல்லாம் மறுபிறவி நம்பிக்கைகளின் கூறுகளேயன்றி அவற்றிற்கும் அறிவியல் பரிணாமக் கொள்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக ஆபிரகாமிய மதவாதிகள் பரிணாமம் என்பதே அறிவியலாளர்களின் அறிவீனக் கூற்று என்றும் இறைவன் படைக்காது 'எயிட்ஸ் கிரிமிகள்' கூட தோன்றி இருக்காது என்பர் :)

அடக்கொடுமையே அதுவும் உண்மை என்றால் இந்தந்த விலங்குளை படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும், இன்னின்ன விலங்குகளெல்லாம் உண்ணத்தக்கவை அல்ல என்று கட்டுப்பாடு விதித்திருப்பது ஏன் ? அவ்வாறு கட்டுப்பாடுவிதித்து மீறுகிறார்களா இல்லையா என்று கண்காணிப்பதற்கு பதிலாக அவற்றை படைத்திருக்காமலேயே விட்டிருக்கலாமே ? பதில் வராது ஏனெனில் இவற்றை படைத்தாக நம்பப்படும் கடவுள் இவர்களிடம் இது பற்றி (அதாவது பயனற்ற படைப்புகள்) குறித்து குறிப்பு எதையும் வைக்கவில்லை.

மதவாதிகளிடம் தொடர்ந்து கேட்கும் கேள்வியே இது தான். 'கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றால் படைப்பிற்கான நோக்கம் என்ன ? இதற்கான விடைகளை எவரும் இதுவரை கூறியதே இல்லை. இப்போது நான் ஒரு கடவுள் ஆக இருக்கிறேன் அல்லது ஷங்கர் படம் போல் ஒரு நாள் கடவுளாகிறேன், உலகம், பிரபஞ்சம் எதுவுமே இல்லை, எனக்கு போர் அடிக்கிறது, எதையாவது செய்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன், 'எறும்புகள் உண்டாகட்டம்' என்கிறேன் எறும்புகள் உருவாகிறது, பிறகு அவற்றிற்கு கட்டுபாடு விதிக்கிறேன், அவை சொன்னபடி கேட்கவில்லை, அவற்றை மூட்டிய நெருப்பினுள் போட்டு பொசுக்குகிறேன், சில எறும்புகள் அழுகையிலும் ஆற்றமையிலும், கோபத்துடனும் 'உனக்கு வேலை இல்லை என்று எங்களை உருவாக்கி சீண்டிப்பார்க்கிறாய், நீ கொடியவன் தானே ?' இல்லை இல்லை என் பேச்சை கேட்ட எறும்புளுக்காக அரிசி மலை கட்டி வைத்திருக்கிறேன், அவை ஆனந்தமாக உண்டு வருகின்றன நான் ரொம்ப........ப நல்லவன் என்று நான் பதிலுரைத்தால் கொல்லப்படும் எறும்புகள் கொல்லப்படும் முன் இந்த தீர்ப்பை ஏற்குமா ? பொழுது போகாத பொம்முவாக பொம்மைகளை படைத்து அதை தீயில் போடுவதும்,அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைகளை ஊஞ்சல் ஆட்டுவதுமாக இருந்தால் அதை ஒரு இறைச்செயலாக ஏற்றுக் கொள்ள முடியுமா ? கடவுள் குறித்தான படைப்புவாதக் கொள்ளைகள் அனைத்தும் படைப்பு கடவுளால் தோன்றியது என்கிறன ஒழிய அவற்றிற்கான காரணம் இன்னது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த ஒரு மதப்புத்தகமும் எடுத்து இயம்பவில்லை.

சமணம் தழைத்தோங்கிய காலத்தில் நீலி எனப்படும் சமணத் துறவிக்கும், வைதிக மதவாதிக்கும் இடையில் நடந்த வாக்குவாத உரையாடலின் முடிவில்

'நட்ட நடுத்தெருவில் எவருக்கும் தெரியாமல் கிடைக்கும் மலம் தானாக தோன்றியது என்று கூறிவிடமுடியாது' என்றே முடியும்.

எக்ஸிடன்ஸ் அல்லது பொருளின் இருப்பு குறித்து அறிவியலின் கருத்து எந்த ஒரு பொருளும் தானாக உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பதே, அவை பிரிதொரு பொருளின் மறுவடிவம் அல்லது தொடர்ச்சி என்பதே. அதாவது எந்த ஒரு பொருளையும் யாராலும் உருவாக்கிவிட முடியாது, மலைகள் சிதையும் போது மண், அவை வேறுறொரு வெப்பநிலையில் இறுகும் போது மலை.

*********

மொத்த பிரபஞ்சங்களின் தூசியும் கோள்களும், அவற்றின் ஒலி ஒளி மின் காந்த ஆற்றல்கள், சுற்றுவிசை ஆகியவை கோள்களை, பூமிகளை, நட்சத்திரங்களை, சூரியன்களை உறுவாக்கிக் கொண்டு உயிரினங்களை தோன்றவைத்து அழித்துக் கொண்டு இருக்கும், அறிவியல் கோட்பாட்டின் படி ஆற்றல்கள் அழிக்கப்படும் போது அது வேறொரு ஆற்றலாக மாறுகிறது. அவை முற்றிலும் சிதைவதோ மறைவதோ இல்லை. மனிதனின் ஒட்டுமொத்த நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் புலன் எல்லைகள் அவற்றின் கால எல்லையை அல்லது முழுப்பிரபஞ்சம் பற்றிய அறிவை வரையறுத்துவிட முடியாது, அந்த ஆற்றாமையால் தான் இவையெல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லி திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் படைப்பு என்பது எப்போதும் இல்லை ஆனால் பிரபஞ்ச பெளதீகப் பொருள்கள் அனைத்தும் என்றுமே இருப்பவையே அவற்றின் மாறுபட்ட தோற்றங்களும், அவற்றின் சிலவற்றின் உயிர்த்தன்மையும், சிந்திக்கும் ஆற்றலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள முனைவதும், இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலும் அவற்றின் கூறுகளே ஆகும். ஆங்கிலத்தில் எளிமையாகச் சொல்லப்போனால் Everything is exists.

நிருபனம் இல்லாத கொலைகள் கண்டிப்பாக தற்கொலை தான் என்பது போன்றே எதையும் நிருபனம் செய்யமுடியாத மதவாதிகள் பார்த்து வியப்பது மட்டுமின்றி தாம் வெறுப்பது என அனைத்தும் கடவுளின் படைப்பு என்கிறார்கள்.

பிரிதொரு பதிவில் தொடருவோம்....

முந்தைய பாகங்கள்..

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

எப்போதும் இடும் பின்குறிப்பு : நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

8 ஜூன், 2011

கனிமொழி தின்ற உப்பு !

மக்களாட்சி அரசியலும், அரசு பதவிகளும் குடும்பச் சொத்தாக மாற்றி கையகப்படுத்தும் முயற்சியின் குறுக்கு வழிகள் எவ்வளவு பேராபத்தானவை என்பதை இந்தியாவிற்கு பாடமாக வைக்கும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் பற்றி இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. திராவிட அரசியலில் வெற்றிகரமாக 5 முறை முதல்வர் பதவியையும், பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளை தன் கட்சியினருக்குப் பெற்றுத் தந்த கருணாநிதி இன்று வேதனையில் இருக்கிறார், இந்த சூழலில் அவரது நாக்கும், எழுத்து இலக்கிய நடையின் சுவை மாறாது அந்த வேதனையை 'திகார் சிறையின் கடும் வெப்பம் பறித்து வைக்கும் அன்றைய மலர்களைக் கூட 10 நிமிடத்தில் கறுக்கி விடும்' என்று பேச முடிகிறது.

கருணாநிதி நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட (இரண்டாம்) துணைவி திருமதி ராசாத்தி அம்மாளும் அவரது மகளும் அரசியல் சார்ந்த பதவிகளுக்கு உரிமை கோர கருணாநிதி அனுமதித்து இருக்கவில்லை அல்லது அவர்களே ஆசைப்படவில்லை. கருணாநிதியின் வயோதிகம் மற்றும் தனக்கன எதிர்காலப் பாதுகாப்பு என்ற வகையில் கருணாநிதியின் அரசியல் (சொத்துக்களின்) வாரிசுகளில் ஒருவராக தன்னையோ தன் மகளையோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக ராசாத்தி அம்மாளின் தூண்டுதல் மூலமாகவோ கனிமொழி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. 'என்னால் தானே இத்தனையும் ?' என்று கனிமொழியிடம் சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்த போது இராசாத்தி அம்மாள் வேதனையுடன் அழுது கொண்டே கூறினாராம் (ஜூவி) இது கற்பனையென்றாலும் கூட மெய்பிக்கும் வண்ணம் தேர்தலுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் இராசாத்தி அம்மாளின் கட் அவுட்டுகள் இருந்ததை மறுப்பதற்கில்லை.

கருணாநிதியின் வழிகளில் ஒன்றாக இலக்கியம், கவிதை என்ற ரீதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இலக்கிய வட்டத்தில் வளர்ந்த கனிமொழி, கருணாநிதியின் அரசியல் வாரிசாக மாற்றிக் கொண்டு வளர்ந்தவிதம் முழுக்க முழுக்க இராசாத்தி அம்மாளின் நச்சரிப்பினால் தான் நடந்திருக்க வேண்டும். தயாளு அம்மாவின் ஆண் வாரிசுகள் (ஸ்டாலின், அழகிரி) அரசியலில் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கும் போது இராசாத்தி அம்மாள் தான் பெற்ற ஒரே ஒரு வாரிசு அவ்வாறு உச்சத்தை அடைய நினைத்தது அவரது எண்ணப்படி தவறு இல்லை, ஆனால் கனிமொழி மீதான அவரது அரசியல் திணிப்பு அவரை நீராராடியாவின் நெருக்கம் அளவிற்கு செல்ல வைத்து, குறுக்கு வழியில்ர ( அன்பு மணி / இராமதாஸ் ஆசைப்படும்) மேலவை உறுப்பினர் ஆக்கி, ஊழலில் முகாந்திரம் இருந்து விசாரணைக்கு சிறையில் அடைக்கும் அளவுக்கு ஆக்கியுள்ளது.

என்ன தான் மாட மாளிகை தங்கத்தில் இழைத்த வீடு என்றாலும் ஒருவர் அதில் தனியாக இருப்பது கொடுமையான ஒன்று தான், அதே நிலையை சற்று எதிராக திகார் சிறை பற்றி நினைத்துப்பாருங்கள், பத்து - பத்து சதுர அடியில் ஒற்றை கழிவரை, இவ்வளவு நாள் குடும்பம், கட்சியினர், மகன் என்று தன்னைச் சுற்றிலும் யாராவது இருந்து கொண்டே இருந்த ஒருவர் சிறையில், எப்போதும் எதிர்கால அரசியல் வளர்ச்சி பற்றி சிந்தனையில் இருந்த ஒருவர் இரவுப் பொழுதை தனிச்சிறையில் கழிப்பதென்பது எவ்வளவு கொடுமையான ஒன்று.

இதை எழுதும் போது எனக்கு கருணாநிதியின் ஈழம் குறித்த செயல்பாடுகள் கூட நினைவுக்கு வரவில்லை, நான் இதை திமுக எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலையில் இருந்து கூட எழுதவில்லை. இன்று கனிமொழிக்கும், கலைஞர் தொலைகாட்சி இயக்குனர் சரத் குமாருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாம். இதன்படி மீண்டும் திகாருக்குச் செல்கிறார்கள், இனி எப்போது கனிமொழி வழக்கில் இருந்து மீண்டுவருவாரா அல்லது தண்டனையின் தொடர்ச்சியாக தொடர்வாரா என்பது கேள்விக்குறி ? கனிமொழியின் இன்றைய நிலைக்கு திருமதி ராசாத்தி அம்மாளின் பேராசையும், அதற்கு தடை போட வக்கிலாமல் இன்றும் இலக்கிய சுவை மாறாது பேசும் கருணாநிதியும் தான் காரணம். கனிமொழியும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார் காரணம், அரசியல் அதிகாரம் தன் தந்தையின் கட்டுப்பாட்டை மீறிவிடாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

தாயார் இராசாத்தி அம்மாள் காய்ச்சியை உப்பை, தந்தை கருணாநிதியிடம் கொடுத்து ஊட்டிவிடச் சொல்ல கனிமொழியும் ஆசை ஆசையாக தின்றுவிட்டார்.

கூடா நட்பு ? அது காங்கிரசா ? அல்லது இராசாத்தி அம்மாளுடன் மத்திய அமைச்சர் பேரத்திற்காக பேசிய நீரா ராடியாவா ? சொன்ன கருணாநிதிக்கே வெளிச்சம்.

6 ஜூன், 2011

இக்பால் செல்வனும் முகமது நபி படமும் !

பதிவர் இக்பால் செல்வன் முந்தைய நாள் பதிவொன்றில் குரானில் குறிப்பிட்டிருக்கும் ஏசு (இஸ்லாமியர்களுக்கு ஈஸா அலை) மற்றும் முகமது பற்றிய குறிப்புகளை சுரா (செய்யுள் எண்) எண் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு ஒப்பிடுகளை எழுதி இருந்தார், அதாவது குரானில் முகமதுவை ஒரு கொள்ளைக்காரர் ரேஞ்சுக்கு தான் குறிப்புள்ளது ஆனால் ஏசு பற்றி உயர்வாகவே குரான் பேசுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஏசு திருமணம் ஆகாதவர், பெற்றோர் உடலுறவாள் பிறக்காதவர், ஏசுவின் தாயார் ஆசிர்வதிகப்பட்டவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது, ஆனால் அத்தகைய சிறப்புகள் ஒன்றும் முகமதுவுக்கு குரானில் இல்லையே என்று சுட்டிக்காட்டி இருந்தார், எனக்கு தெரிந்தவகையில் இக்பால் செல்வன் குறிப்பிட்டுருந்தவை அனைத்தும் குரானைத் தொட்டே இருந்தன. இஸ்லாமிய பதிவர்களும் (சுவன பிரியன் மற்றும் ஆசிக்) அவை குறித்த ஆழமான மறுப்புகள் எதையும் எழுதவும் இல்லை. ஆனால் முகமதுவை ஒப்பிடுகையில் ஏசு ஒன்றும் புனிதமானவர் இல்லை என்பதை சொல்வதற்கு முனைந்திருந்தனர். இந்த ஒப்பீடு இடுகையில் இக்பால் செல்வன் ஏசு மற்றும் முகமது பற்றீய படங்களை இணைத்திருந்தார்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் அவரது இடுகையின் சாரம் பற்றி எதுவும் பேசாது, 'அவர் முகமதுவின் படத்தை வெளியிட்டுவிட்டார், எனவே பதிவுலக தினமலமாக செயல்படுகிறார்' என்று திரு ஆசிக், திரு இக்பால் செல்வன் மீது எழுத்து வன்முறையை காட்டி இருக்கிறார்.

* முகமது மற்றும் ஏசு (ஈஸா அலை) ஆகியோர் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள், முகமது பற்றி எழுதிவிட்டால் பொங்குவது ஏன் ஏசுவிற்கு பொங்குவதில்லை, ஏசுவின் படத்தை எவர் வேண்டுமானாலும் போடலாமா ? ஒரு இஸ்லாமியருக்கு முகமது மேல் எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஏசுவின் மீதும் இருக்க வேண்டும் அல்லவா ? அதையெல்லாம் விட அல்லா தன்னைத் தவிர வேறு எவர் மீதும் இறைக்கு சமமான மதிப்பு வைத்திருக்கக் கூடாது என்று குரானில் சொல்லுகிறார், ஒரு இஸ்லாமியருக்கு அல்லாவைத் தவிர்த்து அனைவரும் மனிதர்களே, பிறகு ஏன் முகமது பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் கொடுக்காது, கேட்டவர்களின் குடும்ப நலம் விசாரிக்க வேண்டும் ?

* அல்லாவைத் தவிர்த்து யாரையும் குறியீடாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே முகமது தன்னைப்பற்றிய படங்கள் கூட கூடாதென்றார். ஆனால் சவுதி அரேபியாவில் அவர் பயன்படுத்திய செருப்பு மற்றும் வாள் ஆகியவை பாதுக்காப்பாக பலர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட அடையாளம் என்பது வெறும் அவருடைய முகம் மட்டும் தானா ? ஒருவரைப்பற்றி நினைக்க அவர் பயன்படுத்திய பொருள்கள் பயன்படாது என்பது உண்மை என்றால் அவர் பயன்படுத்தியவற்றை பாதுகாப்பது எதற்காக ?

* முகமது பற்றி நிறைய டாக்குமெண்ட்ரிகள் எனப்படும் குறும்படங்கள், கார்டூன் படங்கள் பலமுறை வெளிஆகி இருக்கிறது, முகமது படத்தை வணங்கக் கூடாது, கேலி செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இஸ்லாமிய கட்டுப்பாடு அன்றி முகமது படத்தை வரைந்தவர்கள் கையை வெட்ட வேண்டும் என்று எங்கும் சொன்னது போல் தெரியவில்லை, மேலும் டென்மார்க் நாளிதழ் ஒன்றில் முகமதுவை கொச்சைப்படுத்துவதாக வரைந்திருந்த கார்டூனுக்குத்தான் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர், அதை மறுவெளியிடு செய்த தினமலர் தமிழக இஸ்லாமிய பெருமக்களின் வேண்டுதலால் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது, ஆனால் முகமது பற்றிய டாக்குமெண்ட்ரிகள் அரபு நாடுகளில் இதுவரை தடைசெய்யப்பட்டதாக தெரியவில்லை. டாக்குமெண்ட்ரிகளில் முகமது பற்றிய படங்கள் இல்லாது எடுத்துவிடமுடியுமா ? நான் பார்த்த டாகுமெண்டிரிகளில் முகமது காணப்படுகிறார். பிறகு ஏன் அவற்றை அரபு நாடுகள் தடைசெய்யவில்லை ?

பதிவர் இக்பால் செல்வன் வெளி இட்டிருந்த முகமது குறித்தப்படத்தில் எந்த ஒரு கேலியும் இல்லை. இதே போன்ற படங்களை இஸ்லாமியர்கள் துணையுடன் வரையப்பட்டு குறும்படங்கள், பிரச்சாரப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன, பதிவர் இக்பால் செல்வன் கேலிச்சித்திரம் வரைந்திருந்தாலோ, முகமது பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதி இருந்தாலோ நான் கண்டனம் தெரிவித்திருப்பேன், எம் போன்றவர்கள் தினமலர் டென்மார்க்கின் கார்டூனை வெளி இட்ட உடனேயே கண்டனம் தெரிவித்திருந்தோம் அன்று மாலையே இணையப்பதிப்பில் இருந்து அதனை நீக்கிவிட்டார்கள்,

முகமது பற்றி இஸ்லாமியர்கள் எடுத்த குறும்படம் :

http://en.wikipedia.org/wiki/Muhammad:_Legacy_of_a_Prophet
http://video.google.com/videoplay?docid=-5588678537059723932#

மற்றொரு டாக்குமெண்ட்ரி
http://www.sodahead.com/united-states/have-anyone-seen-a-movie-of-muhammed/question-748903/?link=ibaf&imgurl=http://www.iranian.com/main/files/blogimages/message.jpg&q=Muhammad:_Legacy_of_a_Prophet
http://www.iranian.com/main/files/blogimages/message.jpg
http://en.wikipedia.org/wiki/Mohammad,_Messenger_of_God

முகமதுவின் படைத்தைப் போட்டதாலேயே இஸ்லாத்தை கொச்சைபடுத்திவிட்டார் இக்பால் செல்வன் என்கிற கூப்பாடும் அவர் மீதான தூற்றலும் நிராகரிக்கத்தக்கதாகும்.

தொடர்புடைய சுட்டிகள் :

2 ஜூன், 2011

சோ இராமசாமியும் சுவனப்பிரியனும் !

பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரியன். இவரது புனைப்பெயரிலேயே இவர் எவ்வளவு சுவனத்தின் மீது ஆசை கொண்டிருக்கிறார் என்பது தெளிவு, நண்பருக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் தேவைக்கு மிஞ்சியே கிடைக்க வாழ்த்துகிறேன். சுவனத்தின் நித்திய கன்னிகைகளை நாம் மறந்தாலும் இவரது புனைப்பெயரே இவர் பதிவிடும் பொழுதெல்லாம் அதை நினைவுபடுத்திவிடுகிறது. பிரச்சனை அதுவல்ல.

*****

பெண்கள் கார் ஓட்டுவதை சவுதி அரசு தடைசெய்வதற்கு காரணம் பெண்களின் பாதுகாப்புக் குறித்ததாம். அதாவது தனியாக கார் ஓட்டிச் சென்று ஏங்கேயாவது காமுகர்களிடம் சிக்கிக் கொண்டால் அந்த பெண்களின் கதி என்ன ஆகும் என்று சவுதி அரசு கவலைப்பட்டே இந்த சட்டத்தை சவுதி அரசு இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதாக இவரே ஊகமாக சொல்லி இருக்கிறார், சவுதி அரசு பெண்கள் கார் ஓட்ட தடை குறித்த காரணங்களை சுவனப்பிரியன் சொல்வது போல் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு அடைப்படைக்காரணம் பெண்(கள்) அல்லது மனைவி(கள்) தனியாக கணவர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்கிற குரான் அறிவுறுத்தல் மட்டும் தான். மேலும் குரான் உருவான காலத்தில் கார் என்று ஒரு வாகனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குரான்படி பார்த்தாலும் பெண்கள் கார் ஒட்டுவதற்கு அவர் கணவர் கூடவே செல்லும் போது தடை ஏதும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம், சவுதி அரசு குரானைக் காரணம் காட்டி பெண்கள் கார் ஓட்டுவதை தடை செய்திருப்பது முற்றிலும் ஆணாதிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலையே. இதை எந்த ஒரு சப்பைக்கட்டாலும் சரி என்று சொல்லிவிடமுடியாது. சவுதி தவிர்த்து ஏனைய மலேசியா, இந்தோனேசியா, துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இருப்பதை ஒப்பு நோக்குகையில் குரானை சாக்கிட்டு சவுதி தடை விதித்திருப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.

பெண்கள் கார் ஓட்டுவதை தடுப்பதற்கு சவுதி அரசு மாற்று வழிகளை அனுமதித்திருப்பதில் மிகவும் தரக்குறைவான ஒன்று, பெண்களுக்கு ஓட்டுனர்களாக இருப்பவர்கள் உறவுக்காரர்களாக இருந்தால் தடை ஒன்றும் இல்லை, அப்படி உறவுக்காரர்களாக இல்லாதவர்கள் ஓட்டுனர்களாக அமைத்துக்கொள்ள குறிப்பிட்ட பெண்கள் ஓட்டுனராக ஆக இருப்பவருக்கு முலைப்பால் கொடுக்க வேண்டுமாம். ஒருமுறை முலைப்பால் குடித்துவிட்டால் பிறகு ஓட்டுனர் இரத்த உறவுக்குள் வந்துவிடும் அந்நியர் அல்லாதவர் ஆகிவிடுகிறாராம். கார் ஓட்ட அனுமதிப்பதை தடைசெய்ய இது போன்ற இழிசெயல்களை நடைமுறையில் வைத்திருப்பது எவ்வளவு கீழான செயல் என்பதை சுவனப்பிரியன் தெரிந்தும் அதைக் கட்டுரையில் குறிப்பிடவே இல்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் ஓட்ட அனுமதியில்லை என்றால் நகருக்குள் பேருந்து ஓட்ட அனுமதித்து பெண்கள் ஓட்டுனர் ஆவதற்கு எந்த தடையுமில்லை என்று சவுதி முன்மாதிரியாக இருந்திருக்கலாமே. இவரின் சப்பைக்கட்டின்படி வெளியே தனியே செல்லும் பெண்களுக்கு என்ன என்ன பாதுகாப்புக் குறைபாடு காரணங்கள் இருக்கிறதோ அதே காரணம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் இருக்கும் என்பதை இவர் சிந்திக்கவே இல்லை.

மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.

"என்னதான் நாம் சமத்துவம் பேசினாலும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒரே அளவு கோலை பல இடங்களில் நாம் கடை பிடிப்பதில்லை. மேலாடை இல்லாமல் ஆண்களாகிய நாம் சுதந்திரமாக வர முடியும். அதே அளவு கோளோடு பெண்களும் வெளியில் வர முடியுமா? நாம் அனுமதிக்க மாட்டோம். மூட்டை தூக்குதல், பாரங்களை இழுத்தல் போன்ற உடல் சார்ந்த வேலைகளை நாம் பெண்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் உடல் மென்மையானது. ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். "

இதில் " ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். " என்பது தவிர்த்து இவை 100க்கு 100 சோ இராமசாமியின் பொன்மொழிகள் ஆகும்.

ரெஸ்லிங்மட்டுமல்ல, பலுத்தூக்கும் பெண்களுக்கும் உடல் கட்டுக்கட்டாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயங்கள், மாரத்தான் பெண்களுக்கும் கூட உடல் தசைகள் இறுக்கமாகத்தான் இருக்கும். இவர் கூற்றுப்படி விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெண்மையின் மென்மை இல்லாமல் ஆண்களைப் போன்று ஆனவர்களாம், இவர்களைப் பார்த்து ஈர்ப்பு வராதாம். அப்படி என்றால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களெல்லாம் ஆண்களே இல்லை என்று இவர் சொல்லுகிறார் போல. கட்டுமஸ்தான உடல் உடைய ஆண்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம் என்று பெண்கள் கூறினால் 99 விழுக்காடு ஆண்களுக்கு திருமணமே ஆகாது. அல்லது ரெஸ்லிங் ஆண்களின் உடல்கட்டைப் பார்த்து பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்று ரெஸ்லிங்க் ஆண்ககளின் உடல்பயிற்சியை தடைச் செய்யச் சொல்லுவாரா ?

சவுதி கார் ஓட்டுவதை தடை செய்திருப்பதற்கு ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக கருத்தொன்றை உதிர்த்திருக்கிறார், இவர் ஒன்றும் இஸ்லாமுக்கு முன் மாதிரியோ பின்மாதிரியோ கிடையாது என்பதால் நான் இவரின் கருத்தை இஸ்லாமிய கருத்தாகப்பார்க்காமல் இஸ்லாமிய அடிப்படை வாதியின் கருத்தாகவே பார்த்து எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம். குரான் கட்டுப்பாட்டின் படி ரெஸ்லிங் பெண்கள் சுவனம் புகமுடியாது என்பதால் இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

இன்சா அல்லா...........!

பலவித சமூக பழமை வாதக்கருத்துகளில் பார்பனிய அடிப்படை வாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் வேறுபாடே இல்லை. குறிப்பாக ஓரிறைக் கொள்கையை வழியுறுத்த சுவனப்பிரியன் போன்றோர் இந்துவேதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதில் இருந்து கூட இதனை தெரிந்து கொள்ளலாம். ஹுசைனம்மா உள்ளிட்டோர் கூட இவரது கருத்துகளில் சிலவற்றை ஆதரிப்பது இவருக்கு டானிக் கொடுத்தது போல் இருப்பதால் இவர் கண்டபடி கருத்துகளை திணித்துவருகிறார் என்பது கவலை அளிக்கிறது, இவரது கருத்துகளினால் இஸ்லாம் ஒரு அடிப்படைவாத மதம் என்றே மீண்டும் மீண்டும் பிறமதத்தினரை எண்ண வைத்துவிடுகிறது என்பதை இஸ்லாமிய பதிவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுவனப்பிரியனின் ஆணாதிக்க கருத்துகளை பின்னூட்டத்தில் பொடி(புடை)த்த பதிவர் இக்பால் செல்வனுக்கு பாராட்டுகள்.

பின்குறிப்பு : திரு சுவனப்பிரியன் உங்கள் மீது எனக்கு எந்த காழ்புணர்வும் இல்லை, விமர்சனங்களெல்லாம் உங்களின் கீழான கருத்துகளின் மீது தான். பார்பனிய அடிப்படை வாதிகளுக்கும் இதைத்தான் நான் செய்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்