பின்பற்றுபவர்கள்

சைவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 பிப்ரவரி, 2011

முட்டை சைவமா ?

முதலில் சைவம் / அசைவம் விளக்கம் சொல்லிவிடுகிறேன். வலி உணரக் கூடிய நரம்பு மண்டலங்களை உடைய, உயிருக்கு உலை என்னும் போது எதிர்த்து போராடவோ, விலகி ஓடி தப்பிக்கவோ முயற்சிக்கும் விலங்கினங்களை கொன்று உண்பது அசைவம். இதை சங்ககாலத்தில் புலால் உணவு என்பார்கள். இதற்கு மாற்றாக இடம்பெயராத, வலி உணரக் கூடிய நரம்பு மண்டலம் இல்லாத, எதிர்ப்புக் காட்டாத தாவிரங்களையும் அவற்றின் பகுப்பு பொருள்களை உணவாக உட்கொள்வது சைவம் அல்லது சாத்வீக உணவு எனப்படும். தாவிரங்களை உட்கொள்வது எப்படி சைவம் என்றாகியது ? சைவம் என்பது ஒரு சமயம் அல்லது மதம் தானே ? என்பது பலருக்கு ஐயமாக இருக்கலாம். தன்னைப் போல் அலைந்து திரிந்து, வலி உணரக் கூடிய, வாழும் உரிமையுடைய சக உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவிர்க்க வேண்டியதே என்ற கொள்கையில் புலால் மறுப்பை கொள்கையாகவே வைத்திருந்தன சமணமும், பவுத்தமும். உயிர்களின் மதிப்பைப் போற்றுபவர்கள் என்பதால் புலால் மறுப்பாளர்களுக்கு சமூகத்தில் 'உயிர்களின் மீதான நல விரும்பிகள்' என்ற நற்பெயர் நீடித்தது. அவர்கள் சொல்வதை மக்கள் காது கொடுத்துக் கேட்டனர். தாம் சொல்வதைப் பிறர் கேட்கவேண்டுமென்றால் தாமும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதே சிறந்த அறமாகும் என்கிற முடிவில் சனாதனப் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொள்வதற்குத் துவங்கின.

இந்திய சமயங்களில் புலால் மறுப்பு போற்றப்படுவதற்கு அனைத்துப் பிரிவுகளும் அதனை ஏற்றுக் கொண்டதே காரணம். சிவனடியார்கள் உணவு என்பதாக மரக்கறி உணவுகள் ஆறாம் நூற்றாண்டுகளில் சொல்(வது) வழக்காகி, சிவ உணவாகி, சைவ உணவு என்பதாக மருவி. புலால் மறுப்பு என்பது சைவ உணவு என்று பெயர் பெற்றது. மற்றபடி சைவ உணவிற்கும் சைவ சமயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை. சமணர்கள் தாவிர உணவு வகைகளிலும் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை விலக்கிக் கொண்டனர், இவை ஜைன உணவு எனப்படும். வைணவர்கள் சைவ சமயத்தை மறுத்து உருவாகியவர்கள் என்றாலும் சைவ உணவின் பெயரை அப்படியேத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள். வைணவ உணவு என்று சொல்வதில்லை. சைவம் என்பது சமயமாக அறியப்படுவதைக் காட்டிலும் அது ஒரு உணவு வகை என்ற புரிதலை பொதுமக்கள் வைத்திருக்கட்டுமே என்று விட்டுவைத்தார்களோ ! :). ஆறாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் சனாதனத்தில் இருந்து பிரிந்த சமைய(ல்) வகையல் இன்றைய காலகட்டத்தில் 'இந்து' மதம் என்ற பெயரில் ஐக்கியம் ஆனதால், இன்றைய தேதிக்கு சைவம் என்பது சமயமல்ல அது புலால் மறுத்தல் அல்லது தாவிர வகை உணவின் பெயர் மட்டுமே.

முட்டை சைவமா ?

உண்ணத்தக்க தாவிரவகைகளை அல்லது அவற்றின் விதை உணவாக்கிக் கொள்வது தான் சைவ உணவு. அந்த வகையில் பார்த்தால் முட்டை என்பது விலங்குகளின் மறு உற்பத்திக்கான விதை தான். முட்டையில் கரு இருந்தாலும் அவற்றில் நரம்பு மண்டலங்களோ, வலி உணரக் கூடிய மூளைப் பகுதியோ இல்லை. ஒரு முட்டை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எதிர்ப்புக் காட்ட அவற்றில் வளர்ந்த நிலையிலான, அசையக் கூடிய உயிர்த்தன்மை இல்லை, அடைகாக்காத முட்டை என்பது முளைக்கக் காத்திருக்கும் விதை போன்றதே. அவற்றை உணவாகக் கொள்வது அசைவ உணவு என்னும் பகுப்பில் வராது என்றே நினைக்கிறேன். மதவாதிகள் கருத்தடைகளையும், தற்காலிக கருத்தடைகளை ஏற்றுக் கொள்ளும் போது வளராத கரு உடைய முட்டையை சைவம் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த பவுத்த சைவர்கள் பிற விலங்கின உணவுகளைத் தவிர்த்தாலும் முட்டையை உணவாக்கிக் கொள்கிறார்கள்

இருப்பினும் சைவ உணவு என்பது வெறும் தாவிர உணவு தொடர்புடையது மட்டுமின்றி மன நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணர்வு சுரப்பிகளை மிகுதியாகத் தூண்டக் கூடிய உணவுகளையும் சேர்த்தே தவிர்த்தனர் ஜைனர்கள். உணவு உணர்வுகளை தூண்டுமா ? என்ன கோவியாரே உளறுகிறீர்களா ? வெறும் பார்லி தண்ணீர் தான் பியர், பியர் பாட்டலில் சைவ முத்திரை கூட குத்தப்பட்டிருக்கும் அதை அளவுக்கு மிகுதியாக குடித்துவிட்டால் உணர்வுத் தூண்டலில் ஆடும் ஆட்டம் வெளிப்படையானது தானே. வெங்காயம், பூண்டு உணவு வகைகளைப் போன்றே முட்டைக்கும் சுரப்பிகளைத் தூண்டும் ஆற்றல் உண்டு. பெற்றோர் பழக்க வழக்கம் என்னும் வெறும் கொள்கைகாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை கூட சைவம் தான், உணவாக ஏற்கலாம் என்பது எனது பரிந்துரை. மற்றபடி சாத்வீகம், அமைதி இவற்றின் நலவிரும்பிகளுக்கு வெங்காயம், பூண்டு இவற்றுடன் முட்டை கூட அசைவமே.

13 பிப்ரவரி, 2009

நாளையை நினைத்த இவரு பாவம்...இந்நாளே நன்னாள் !

சேக்கிழாரின் சைவ நெறியில் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. நந்தனார் வரலாறு நடந்தவையா...திருத்தொண்டர் புராணத்தில் ஒரு கதையா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நந்தனார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி நெறியின் குறியீடு என்பதை கண்டிப்பாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

நந்தனார் வரலாறு பலருக்கும் தெரிந்தவை என்பதால் அதை இங்கே சொல்லப் போவதில்லை. இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள். 200 நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் 'முக்தி'யும் கூட ஐயமாகவே இருப்பதால், சேக்கிழாருக்கு முன்பு வாழ்ந்தவராக சொல்லப்படும் நந்தனார் 'ஜோதி' மயமானது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது.

சேக்கிழார் சிவநெறியைப் போற்றியவர்கள் என்ற வரிசையில் நந்தனாரையும் குறிப்பிட்டு நாயன்மார்கள் வரிசையில் வைத்துள்ளார். நாயன்மார்களில் ஒருவர் என்ற அளவில் நந்தனாருக்கு முதன்மைத்துவம் எதுவும் இல்லை. பிற நாயன்மார்களைவிட நந்தனார் நேரடியாக தில்லைக்கு தொடர்புடையவர் என்பதால், நந்தனார் அங்கே முக்திபெற்றவர் என்று கூறி தனியாக சிலை நிறுவப்பட்டு போற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவனுக்கு தனி மரியாதையா ?' சிலையிலும் தீண்டாமை கொடுமை செய்து நந்தனார் சிலையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் அப்புறப்படுத்தியதாகவும், கண்ணகி சிலைபோல் நந்தனார் சிலையும் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் கணக்கு என்பது மிகச் சரியாக இல்லாவிட்டாலும், பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால், பாரதி காலத்தில் சிலை கோவினுள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.


ரே கல்தான்....சிற்பியின் கைவண்ணத்தில் சாமி சிலையாகவும், அடியார் சிலையாகவும் ஆகிறது, அந்த கல்லில் உள்ள வடிவத்தை வைத்து தீண்டாமை பார்பது என்பது வருணாசிரம கொள்கையின் உச்ச கட்ட கொடுமை. சைவம் சைவம் என்று கூவும் சைவ அன்பர்கள் சிலையை மீண்டும் நிறுவவதற்கு முயற்சி எடுத்தார்களா ? அது தில்லை தீட்சிதர்களிடம் செல்லுபடியானதா என்ற தகவலெல்லாம் தெரியவில்லை. தமிழில் பாடுவதற்கே நாத்திகர்களின் போராட்டம் தேவைப்படும் போது, வருணாசிரம கொள்கைகளை இந்து மத, சைவ கொள்கைகளாக நினைக்கும் ஆன்மிகவாதிகளுக்கு நந்தனார் சிலை அகற்றப்பற்றதற்கு ஏதும் கவலைப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே. போகட்டும்.

தீட்சிதர்களின் அடாவடிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கோவிலை கையகப்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆறுமுக ஸ்வாமி போராடித்தான் உள்ளே சென்றிருக்கிறார். இறுதி மூச்சு வரை போராடிய நந்தனார் எப்போது செல்வார் ?

ஆன்மிக அன்பர்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேலாக நினைப்பவர்களும் நந்தனார் சிலையை தில்லையில் மீண்டும் நிறுவ முயற்சி செய்ய வேண்டும், அதற்காக மாதவி பந்தலார் முயற்சியில் வேண்டுகோள் விண்ணப்பம் மின் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது, அதில் உங்கள் கையொப்பம் இடுங்கள் கையொப்ப எண்ணிக்கைக்கு ஏற்ப நந்தனார் கோவிலுக்குள் செல்லும் நாள் முடிவு செய்ப்படும்.

மின் விண்ணப்பம்:


நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்


'நாளைப் போவோம்...நாளைப் போவோம்' என்று காத்திருந்தற்காகவே நந்தனாருக்கு 'திருநாளைப் போவார்' என்ற பெயருண்டு. நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்.


*******


மதுரை மீனாட்சிக் கோவிலினுள் தெற்குவாசல் வழியாக நுழையும் போது இந்த சிலை இருக்கிறது. சிலை(யில்) கண் பளிச்சிடவே கிளிக்கினேன். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' இவர் மீனாட்சிக் கோவில் சொத்தில் அமைந்த வயலில் நாத்து நட்டாரா ? களையெடுத்தாரா ? அம்மனுக்கு மஞ்சள் (சாத்த) அரைத்துக் கொடுத்தாரா, அல்லது நாயனாரா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' திவ்வியமாக பூசை புனஸ்காரங்களுடன் நின்றுகொண்டு இருக்கிறார் காரணம் பெயர் ராசி மற்றும் குலம். நந்தனார் சிலை அகற்றப்பட்டதற்குக் காரணமும் குலம் தான், அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்.

15 டிசம்பர், 2008

யார் திராவிட சிசு ?

கால்டுவெல் என்னும் மிசெனெரி பாதிரியாரின் விசவிதைதான் "ஆரியர், திராவிடர்" என்னும் பகுப்பு அதற்கு முன் இந்தியாவில் அப்படி ஒரு பிரிவே இல்லை என்றும், இன்று
"ஆரியர்" என்று சொல்வதற்கு அலறி துடிக்கும் இவர்கள் தான், ஒருகாலத்தில் "ஆரியர்" என்பது தனி இனம் என்றும் பெருமைக் குறிய இனம் என்றனர், ஆரியர்களே பிரம்மன் முகத்தில் பிறந்த பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் பார்பனர்கள். இப்போதும் பிராமணர்கள் என்றே பார்பனர்கள் தங்களுக்குள் அழைத்துக் கொள்கின்றனர். பார்பனர்கள் அனைவருமே ஆரியர் அல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. பிரம்ம முகத்தில் பிறந்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள பார்பனர்களாக தங்களை மாற்றிக் கொண்ட முன்னாள் திராவிடர்கள் கூட தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். இதற்கெல்லாம் ஆதாரம் ? இராமனுஜரின் வைணவ சேவையை படித்திருந்தாலே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சொல்லிக் கொண்ட முன்னாள் திராவிடர்களான (அப்படித்தான் தேவநேய பாவாணர் குறிப்பிடுவார்) இன்னாள் பார்பனர்கள், ஆரியர் - திராவிட இனமெல்லாம் கால்டுவெல் என்னும் கிறித்துவ வெறியனின் சூழ்ச்சி என்று ஏன் அலறவேண்டும் ? காரணம் உண்டு. ஏனென்றால் ஆரியர்களின் நான்கு வேதங்களில் புழங்கி இருந்த வடசொற்களின் பொருளும், ஒலியும் கிரேக்கம், இலத்தீனை ஒட்டி இருப்பதால், ஆரியர் என்போர் இந்தியாவிற்கு வெளியில் இருந்துவந்தவர்கள் என்று சொல்லி, அதற்கான ஆராய்ச்சிகளில் கைபர் போலன் கனவாய் பெயரெல்லாம் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆரியர் என்றாலே கணவாய் ஞாபகம் வந்துவிடுவதால் ஆரியர் - திராவிடர் என்பது மிசெனறிகளின் சூழ்ச்சி என்கின்றனர்.

தமிழ்சைவ சமய குரவர்கள் மூவர் (அப்பர்-சுந்தரர்-ஞான சமபந்தர்) இந்தில் ஞான சம்பந்தர் மட்டுமே 16 ஆயிரம் பாடல்கள் வரையில் தமிழில் பாடி இருக்கிறார். சிவ வழிபாடு, சிவ சமயம், ஐந்தெழுத்து மந்திரம் இவையே இம்மூவர்களின் மூச்சு, இதற்காக இவர்களால் பலி/பகை வாங்கப்பட்டது சமண / பவுத்த சமயங்கள் என்பது நாம் அறிந்தவையே. ஞான சம்பந்தரும் பார்பனர் தான் 16 வயது வரை வாழ்ந்தார்.

ஆதிசங்கரின் காலம் கிமு என்று பலர் கூறுவதுண்டு, ஆனால் ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று குறிப்பிட்டது ஞான சம்பந்தரைத்தான் என்றும் சொல்கின்றனர், ஞான சம்பந்தர் என்று பொதுவாக குறிப்பிடுவது திருஞான சம்பந்தரை என்றாலும் இன்னும் இரு ஞான சம்பந்தர்கள் இருந்ததாக சைவ அடியார்கள் சொல்லுகின்றனர். ஞான சம்பந்தர் தனது அனைத்து பதிகங்களையும் தமிழில் பாடியதால் அவரை சாடுவதற்காக 'திராவிட சிசு' என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டதாகச் சொல்கின்றனர். ஏனென்றால் மலையாள தேசம் என்று பிரித்து அறியப்படாத நாட்களில் ,தென்னகத்தில் இருக்கும் காலாடியில் (தற்போதைய கேரளா) பிறந்தவராக நம்பப்படும் ஆதிசங்கரர் தனது பாடல்களில் தமிழை மருந்துக்குக் கூட சுட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். தமிழ் சூத்திர பாசை, தமிழ் பேசுபவர்கள் திராவிடர் என்று இவர்காலத்தில் வலியுறுத்தல் இருந்திருந்ததோ அல்லது இவரே அப்படி வலி யுறுத்தினாரா என்றும் தெரியவில்லை.

சைவ சமயங்களில் வேதசார்ப்புகள் இருந்தாலும், சிவன் தென்னாட்டைச் சேர்ந்தவனாக (தென்னாடுடைய சிவனே போற்றி) வழியுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தமிழ் சைவர்கள் காசிக்கு சென்றது போல் குறிப்புகள் எதுவுமே இல்லை. ஆனால் நாயன்மார்களில் பலர் கைலாயம் சென்றதாக கதைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது, அதுவும் பாதயாத்திரையாக சென்றது போல் சொல்லப்படாமல், பறக்கும் குதிரையிலும், ஐராவதம் என்னும் பறக்கும் வெள்ளையானையின் மீது அமர்ந்து சென்றதாக (சுந்தரர்) சென்றதாக கதை இருக்கிறது. வடக்கின் எல்லையில் இருக்கும் பனிமலை எப்போது முதல் கைலாயம் என்று சொல்லப்படுகின்றது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.

தமிழ் சைவர்கள் ஏன் வடவேதங்களை தமிழ் சைவ வேதத்தில் கலக்க வேண்டும் ? காரணம் உண்டு. கிமு 12 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஒழிப்பிற்கு பிறகு கல்வி கற்றுக் கொடுப்பவர்கள், இருமொழி வித்தர்களாக இருந்தவர்களில் பெரும்பகுதியினர் பார்பனர்களே. அவர்களின் மாணாக்கர்களுக்கு பெரும்பாலும் இருமொழிகளுடன் வடவேதங்களையும் போதித்தனர். அன்றைய காலத்தில் வேதத்தில் இருக்கும் சங்கரன் என்கிற நெருப்புக் கடவுளும் சைவ சமயத்தின் சிவனும் ஒன்றே என்பதாக சொல்லிக் கொடுத்தனர். சிவனுக்கு படங்களில் காட்டப்படுவது போல் பார்வதி என்கிற மனையாட்டியும், முருகன், பிள்ளையார் போன்ற பிள்ளைகளோ கிடையாது, இவை வடபுலத்து கதைகளை இணைத்த கந்த புராணத்து இடைச் சொருகல்கள் மட்டுமே. சிவனை உருவாகக் காட்டியதால் திருவிளையாடல் புராணங்கள் புணைந்து 'அற்புதங்கள்' நடத்தியதாக நம்பவைக்க வேண்டிய நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர் சைவ மூவர்கள்.

அப்போதும் தமிழ் - வடமொழி எது உயர்வு ? என்கிற போட்டி நடை பெற்றுக் கொண்டி இருக்கிறது, தமிழ் பக்தி இயக்கமே வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததால், அதில் ஆர்வம் காட்டியதால் அதாவது தமிழ் மீட்புக்கு ஆர்வம் காட்டியதால் ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று அழைத்தார் என்கிறார்கள். ஆதிசங்கரரின் காலம் கிமுவில் இல்லை ஞானசம்பந்தரை அவர் குறிப்பிட்டு இருப்பதால், ஆதிசங்கரரின் காலம் சம்பந்தர் வாழ்ந்த அதே 7 ஆம் நூற்றாண்டை (களப்பிரர் ஆட்சிக்கு பிந்தைய காலம்) சார்ந்ததே என்று இதன் வழியாகச் சொல்கின்றனர்.

"திராவிட" என்ற சொல்லை கிறித்துவ மிசெனறிகள் முதன் முதலாக பயன்படுத்தவே இல்லை. அதற்கு முன்பே ஆதிசங்கர் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் "ஆரிய - திராவிட பிரிவு இந்தியாவில் இருந்தது இல்லை, அவை மிசனெறிகளின் சூழ்ச்சி" என்று இன்றைய பார்பனர்களும், இந்துத்துவாக்களும் மெசனிறிகளின் (கால்டுவெல் ஐயர், ஐயுபோப் ஐயர்) மீது அவதூறு சொல்லுகின்றனர். ஆதிசங்கர் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்று சொல்லிவிட்டு, ஆரியர் - திராவிடர் என்பது மிசெனெறிகளின் சூழ்ச்சி என்றால் ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம்.

மேலும் திராவிட சிசு பற்றிய குறிச்சொற்கள்: கூகுள் தேடலில்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்