பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2009

தொப்பைக்கு பேராபத்து நேரலாம் !

குறும் பயணமாக சென்னைச் செல்ல நேர்ந்தது, சென்றவாரம் சென்னையில் பதிவர் சந்திப்பு என்று படித்திருந்தேன், தேதியைச் சரியாகப் பார்க்காமல் சனிக்கிழமை நடப்பதாகவே நினைத்திருந்தேன், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த, எனக்கு நெருக்கமான பதிவர் வீஎஸ்கேவை தொடர்பு கொண்டு, 'வாங்க இருவரும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுக்கலாம், 4 மணிக்கு சந்திப்பாம் வந்துவிடுங்கள் என்று அன்று(சனிக்கிழமை) காலை அவரை நேரடியாக சந்தித்து சொல்லி இருந்தேன். சரி என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். அப்பறம் துளசி அம்மாவை தொலைபேசியில் அழைத்து 'மாலை பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா' என்று கேட்டேன், அதிர்ச்சியுடன், 'என்ன கண்ணன் நாளை ஞாயிறு தானே சந்திப்பு ?' என்று எதிர்கேள்வி கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வீஎஸ்கேவை தொடர்பு கொள்ள முடியவில்லை. 'ஐயோ அவரை சந்திப்புக்கு வரச் சொல்லிட்டோமே' என்ன செய்வது ?, அதிஷாவை தொலைபேசியில் அழைத்தேன். 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை' என்றது. அப்பறம் எப்எம் அப்துல்லாவிற்கு அழைத்தேன், 'தற்சமயம் ஸ்வ்ட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது' என்று வந்தது. 'தம்பி நல்லா தூங்குடா' ன்னு வாழ்த்திட்டு,

நம்ம லக்கி லுக் யுவ கிருஷ்ணாவை அழைத்தேன். 'சொல்லுங்கண்ணே' என்றார். அப்பறம் பதிவர் சந்திப்பு இன்னிக்கு என்று நினைத்தேன், அவரையும் வரச் சொல்லிட்டேன், அதோடு மட்டுமல்ல, இன்று இரவே இரண்டு பேரும் கிளம்புறோம், நாளை சென்னையில் இருக்க மாட்டோம் என்றேன். நான் ஒரு அறிவிப்பு போடுகிறேன், இன்னிக்கு சந்திக்க முடிந்தவர்களை சந்திப்போம் என்று 'திடீர்' பதிவர் சந்திப்பை அறிவித்திருந்தார்'அறிவிப்பு படி 6 மணிக்கெல்லாம் துளசி அம்மா தம்பதிகளாக நடேசன் பூங்காவிற்கு சென்றதும் அழைத்து உறுதிபடுத்திவிட்டார்கள், அங்கே மங்கள இசை கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பே விஎஸ்கேவை தொடர்பு கொண்ட பொது அவர் செல்பேசியை நண்பரிடம் கொடுத்துவிட்டுச் சென்றவர் எங்கு சென்றார் என்று தகவலைச் சொல்லாமல் சென்றார் என்று தகவல் நான் அவரது செல்பேசியை அழைத்த போது வீஎஸ்கேவின் நண்பர் சொன்னார். 'போச்சுடா சாமி, இவரை நம்பி திடிர் பதிவர் சந்திப்பை அறிவித்து, மானம் போச்சு' என்று நினைத்தபடி, அவர் என்னிடம் ஏற்கனவே கொடுத்திருந்த மற்றொரு எண்ணில் அவரது அக்காவிற்கு தொலைபேசினேன், 'தம்பி இங்கே வரவில்லை' என்றார், 'சரி பரவாயில்லை, அவரு எங்கெல்லாம் போவாரோ அவங்க நம்பரைக் கொடுங்க, நான் முயற்சி செய்கிறேன்', என்று கேட்டு வீஎஸ்கேவின் அண்ணன் நம்பரை வாங்கினேன். 10 முறை அழைத்தும் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் மணி மாலை 6.30 ஆகவே, பூங்காவினுள் நுழைந்தேன், திரும்பவும் முயற்சிகலாம் என்று அவரது அண்ணனை தொடர்பு கொள்ள இந்த முறை மணி அடித்தது, அப்பறம் 'இங்கேயும் வரவில்லை' என்றார், அவரிடம் விவரம் சொல்லி, அவர் அங்கு வந்தாரென்றால் உடனடியாக நடேசன் பார்க்குக்கு துறத்துங்கள், அவருக்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்துவிட்டு காதிருக்கிறோம் என்றேன்.

இதற்கு இடையே பூங்காவினுள் நுழைந்ததும் தம்பி வினோத் தண்ணீர் ஊற்றருகே உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே நாமக்கல் சிபி பதிவு வாசகர் முத்தமிழ் செல்வன் (எ) பெருசுவுடன் வந்தார். பிறகு நால்வரும் எனது நண்பரும் சேர்ந்து சேர்ந்து துளசி அம்மாவையும் அவரது கணவர் திரு கோபாலையும் அழைத்துக் கொண்டு புல் வெளியில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம், யுவ கிருஷ்ணா வந்தார். அவர்களிடம் வீஎஸ்கே எஸ்கேப் ஆன கதையைக் கூறி, 7:30 வரை பார்ப்போம் அப்பறம் கிளம்பிடலாம் என்றேன். துளசி அம்மா & கோபால் தம்பதிகள் 'வீஎஸ்கேவைப் பார்க்கலாம் என்று தான் வந்தோம' என்றார்கள். அதற்குள் வீஎஸ்கேவிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது, 'உடனடியாக சந்திப்பு நடக்கும் இடத்துக்கு வருகிறேன்' என்றார்,


அவர் வரும் அரை மணி நேரத்திற்குள், நாங்களெல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தோம், உங்க விஜயகாந்து புத்தகம் கடையில் பார்த்தேன், நல்லா இருந்தது 75 ரூபாய் மிக அதிகம், அதனால் இவரு வாங்கவில்லை என்று துளசி அம்மா, திரு கோபாலைக் குறிப்பிட்டு லக்கியிடம் சொல்ல கலகலப்பானது. விஜயகாந்து படம் ஓசியில் கூட பார்க்கத் தயங்குவார்கள், வி.காந்து புத்தகத்துக்கு 75 ரூபாய் மிக அதிகம் தான் :) எல்லோரும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே.... பைத்தியக்காரன் பதிவின் அனல்பறக்கும் விவாதம் பற்றி அதிஷா குறிப்பிட்டார். அப்பறம் சிபியைக் கொஞ்சம் கலாய்த்துக் கொண்டிருந்த போது வீஎஸ்கே வந்து சேர்ந்தார்.

வீஎஸ்கேவிடம் 'நீங்க மருத்துவராக இருக்கிங்க, அது பற்றி தொடர் எழுதலாமே என்று கேட்டார் கோபால்'. ஏற்கனவே பாலியல் பற்றி எழுதி இருக்கிறேன். நாராயண ரெட்டிக்கு வரும் கேள்விகள் போல் அடிக்கடி 'சின்ன' 'சின்ன'தைப் பற்றி மாற்றுவது 'குறி'த்து பெரிய கேள்விகள் வருது. ஆனால் வெளி இடவேண்டாம் என்கிறார்கள். என்றார் வீஎஸ்கே. பிறகு கோபால், '30 வயசுக்கு மேல் ஆண்களுக்கு வரும் தொப்பை' குறித்து எழுதலாம். பெண்களுக்கு போட்டியாக முப்பது வயதில் ஆண்கள் சுமப்பது அழகாக இல்லை என்றார். தொப்பை வருவது ஏன் என்பது பற்றி சில தகவல்களைச் செல்லிவிட்டு அது பற்றி பதிவில் எழுதுகிறேன் என்று உறுதி அளித்தார். நாமக்கல் சிபி அப்போதே அடிவயிறு கலங்குவதாகச் சொன்னார். அபிஅப்பா போன்ற தொப்பை பிரியர்கள் வீஎஸ்கே பதிவைத் தவிர்க்கலாம். :)

நேரம் செல்லச் செல்ல அனைவருக்கும் கிளம்பவேண்டிய உந்துதல், போதாக் குறைக்கு அங்கு பூங்காவில் நடைப் பெற்றுக் கொண்டிருந்த கிராமிய தப்பாட்டம், அந்த பக்கமாக அனைவரையும் அழைத்தது.

அப்படியே அங்கு சென்றுவிட்டு, விடைபெற்று களைய ஆயத்தமானோம், மருத்துவர் புரூனோ வந்தார். அவருடன் கைகுலுக்கிவிட்டு, பேசுவதற்கு நேரமில்லை மன்னிக்கவும், வருகைக்கு மகிழ்ச்சி, நான் ஒன்பது மணி அளவில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்று விடைபெற்றேன். எல்லோரும் விடைபெற்றோம்.

காலை 12 மணி வாக்கில் அறிவிப்பு வெளி இட்டு 8 பேர் வரை கூடியது வியப்பாக இருக்கிறது, அன்று சனிக்கிழமை ஆகையால் பலருக்கு வேலை நாள், இல்லை என்றால் மேலும் சிலர் வந்திருக்கக் கூடும். உடனடி பதிவர் சந்திப்பு வெளி இட்ட லக்கி லுக் யுவ கிருஷ்ணாவுக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அதிஷா, லக்கி லுக்(யுவகிருஷ்ணா), வீஎஸ்கே(சங்கர் குமார்), நாமக்கல் சிபி
வீஎஸ்கே, கோவியார்

23 ஜூன், 2009

கண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் !

கண்ணகி(இளங்கோ), பாரதி ஒப்பீடு முன்பே எழுதி இருக்கிறேன். அதாவது 'கண்ணகி தன் கணவன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டான் என்று வீறு கொண்டு மதுரையை எரித்தாள்' என்று சிலப்பதிகார கதைகள் சொல்லுகின்றன. அதைப் படிக்கும் இன்றைய புரட்சியாளர்கள், 'என்னதான் இருந்தாலும் கோவலன் ஒருவனுக்காக மதுரையை எரித்தாள் என்றால் அப்பாவி பொதுமக்களும் சேர்ந்தே அழிக்கப்பட்டு இருப்பார்கள் இல்லையா, கண்ணகிக்கு மனிதாபிமானம் இல்லை, அவள் மதுரையை எரித்ததும் ஞாயம் இல்லை' என்று தங்களுக்கு தெரிந்த விளக்கம் (வியாக்யாணம்) சொல்லுவார்கள்.

அதே ஆட்கள் 'தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்ன பாரதியையும் அந்த வரியையும் சிலாகித்துக் கூறுகிறார்கள். ஒருவருக்கு உணவு இல்லை என்பதற்காக உலகில் உள்ள ஏனையோரையும் சேர்த்து உலகையும் அழிக்க அழைப்பு விடுப்பது தான் புரட்சியா ? கதை புனைவாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும் கண்ணகியின் அறச்சீற்றம் தொடர்புடைய ஊர் என்பதால் மதுரை என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் பாரதி சொல்லும் 'ஜெகம்' அந்த தனிமனிதனுக்கு தொடர்புடைய நாட்டில் எதோ ஒரு புண்ணாக்கு, ஊழல் காரணத்திற்காக உணவு கொடுக்கவில்லை, அல்லது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இதில் தொடர்பே இல்லாத மற்றநாடுகள் உட்பட்ட உலகை(ஜெகம்) அழிப்பது அறிவுடையதா ? பாரதிக்கு 'கஞ்சா' பழக்கம் இருந்தது என்று யாரும் சொல்லிவிட்டாலோ, பாரதியை கடவுளாகப் பார்ப்பவர்கள் அதைச் சொல்லுபவர்களை சொல்லால் சுடுவார்கள். ஆனால் அவர்கள் தான் கண்ணகியை விமர்சனம் செய்கிறார்கள்.

ஈழம் தொடர்பான இந்திய செயல்குறித்து வேதனை அடைந்த கவிஞர் தாமரை 'குழந்தைகள் தவிர அனைத்து இந்தியர்களுக்கும்' சாபம் இட்டிருக்கிறார். அவ்வாறு தாய்நாட்டின் மீதே சாபம் இடுவது தவறு என்று அப்பாவி முரு மற்றும் பலர் குறிப்பிடுகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவர்களின் உணர்சிகளை எழுத்தின் வழியாகத்தான் பதிய வைக்க முடியும். தாமரை சொல்லிவிட்டால் அப்படியே நடந்துவிடப் போவதில்லை. கணவன், குழந்தைகள், பெற்றோர்களை இழந்த ஈழத்துப் பெண்கள்
தாமரையைவிட பல மடங்கு இந்தியாவைத் திட்டி சாபம் விட்டிருப்பார்கள்.

தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.

பாரதியின் வரிகள் புதுமை, புரட்சி என்றால், தாமரையின் வரிகள் உளறலா ? துக்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் இழப்பின் வேதனைத் தெரியும். தாமரையின் வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது சரியாக இருக்கும்.

(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்.

22 ஜூன், 2009

ஆமுக - சில எண்ணங்கள் !

'ஆரிய முன்னேற்றக் கழகம்' வடமொழிப் பெயர் கிடைக்கவில்லையா ? அதெல்லாம் நிறைய இருக்கு. ஆர்ய சமாஜ், ஆர்ய பவன், ஆர்யாஸ், பார்பனர்கள் தங்கள் கட்சிக்கு ஆரிய 'முன்னேற்ற கழகம்' என்று தமிழ் பெயர் வைத்திருப்பதை வரவேற்கலாம். ஆனால் இது தேவையா என்பதை பார்பனர்கள் தெளிவாக முடிவெடுத்தார்களா தெரியவில்லை, எல்லோருக்கும் தெரிந்தே 'இந்து'வை முன்னிறுத்தி இருக்கும் பிஜேபி உட்பட்ட பெரிய தேசிய கட்சிகள் அனைத்திலும் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாண்மையினர் அவர்களே, பிறகு ஏன் தனி அடையாளத்துடன் ஒரு கட்சி ? எனக்கு தெரிந்து தலித் கிறித்துவ அமைப்பு போல் ஆரிய கிறித்துவர் என்ற அமைப்பெல்லாம் கிடையாது.

திரவிடம் என்பதே வெளைக்காரனின் சூழ்ச்சி, இந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது, வடக்கு தெற்கை பிரிக்க இந்திய ஒற்றுமையைக் குழைக்க வெள்ளைக்கார பாதிரிமார்கள் கண்டு பிடித்தது தான் ஆரிய - திராவிட சித்தாந்தம் என்றெல்லாம் பார்பனர்கள் அடிக்கடிச் சொல்லுவார்கள். ஆனால் மறந்தும் கூட நாங்கள் 'ஆரியர்கள்' இல்லை, என்று சொல்வதில்லை, அதற்கு சாட்சியாக 'ஆரிய' அடைமொழி தாங்கிய நிறுவனப் பெயர்கள் இருக்கிறது. இப்போது கட்சியும் தோன்றப் போவதாக செய்திகள் வருகின்றது.

பார்பனர்களின் பலமே பின்னால் இருந்து செயல்படுவது தான், தற்போது வெளிப்படையாக சொல்லும் 'ஆரிய முன்னேற்றக் கழகம்' அவர்கள் மீது வெளிப்படையான வெறுப்பை வளர்க்கும், பார்பனர்களிலும் ஒரு சிலர் தவிர்த்து எந்த ஒரு சாதியும் இணையத்தில் குலப்பெருமை பேசுவதில்லை. 'திராவிடம்' என்றாலே முணுகும் பார்பனர்கள், 'ஆரிய' அடையாளத்தைத் துறக்காததும் விரும்பியே பரப்புவதும் ஏன் ?

சாதியை முன்னிறுத்தி கட்சி தொடங்கிய மருத்துவர் இராமதாஸ் கட்சி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் சாதிக் கட்சி முத்திரையை நீக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்து 'பசுமை தாயகம்', 'பொங்கு தமிழ் மன்றம்' என்றெல்லாம் தலை நுழைத்து, திருமாவுடன் கைகோர்த்து பாமகவை பொதுப்படுத்த முடியுமா என்று முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். அவ்வளவாக அந்த திட்டங்கள் வெற்றிபெறவில்லை என்பது சென்ற தேர்தல் முடிவுகளின் மூலம் கண்கூடு. பார்பனர்கள் அல்லது எந்த சாதியும் கட்சி தொடங்கினால் அவற்றின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது என்பதற்கு பாமகவே சாட்சியாக இருக்கிறது.

பார்பனர்கள் கட்சித் தொடங்கப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்த கருணாநிதி, இதைத் தான் 'மீண்டும் தொடங்கும் ஆரிய - திராவிடப் போர்' என்றாரோ.
:)

சாதிக்கட்சிகளால் அந்த சாதிக்கட்சி தலைவர்களையும் அவர்களது அடுப்பொடிகளையும் தவிர்த்து அந்த சாதி மக்கள் பெரிதாக பயனடைவது இல்லை. பார்பனர்களை ஒன்றாக கட்டி இணைப்பது பூணூல் அதையும் தாண்டி கட்சி அடையாளம் அவர்களுக்கு எதைப் பெற்றுத் தரும் என்று தெரியவில்லை.

இந்த கூத்தில் 'பார்பனர்கள் பிராமணர்களின் அடையாளத்தை பேனவில்லை' என்று குறை கூறும் பார்பனர் அல்லாதோர்களையும் 'எங்கே இருக்கிறான் பிராமணன் ?' என்று அடையாளம் தேடும் சாக்கில் பார்பனக் குலப் பெருமை இதுதான் என்று பொதுப்படுத்திக் காட்டி பழம் பெருமை மீட்க முடியுமா என்று நினைப்போரையும் என்ன சொல்ல ? வருண மரம் பட்டுவிடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பது தவிர்த்து. ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தியாவின் தெரிந்த 3000 ஆண்டு வரலாற்றில் எந்த ஒரு சாதியிலும் அந்த சாதியிலேயே பிறந்த வாரிசுகள் என்று எவரும் இருப்பதாகக் தெரியவில்லை. தோலின் நிறத்தை வைத்து சாதி அடையாளமும் சொல்லிவிட முடியாது, எல்லா சாதிகளிலுமே வெள்ளைத் தோலும், கருப்புத் தோல் உள்ளவர்கள் உண்டு. அந்த காலத்தில் யார் யாருடன் கூடிப் பெற்றுக் கொண்டார்கள் என்று எவருக்கும் தெரியாது, பிறகு எப்படி தன்னை சாதி அடையாளப்படுத்திக் கொள்ள முயன்று, அதையும் பெருமை பேசுகிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. எந்த ஒரு சாதி ஆணுக்கும் ஆண்குறி ஒன்றுதான். சாதி என்பது உண்மை, சமூகத் தேவை, கடவுள் அமைத்தது என்று நம்பினால், தலித் ஆணின் அல்லது பார்பன ஆணின் விந்தை ஏற்று கருத்தரிக்க முடியாதது இந்த சாதியின் கரு முட்டை என்று யாராவது சொன்னால் அந்த சாதி உயர்ந்த சாதி என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

எல்லா சாதிக்காரர்களுமே சங்கம் வைத்திருக்கிறார்கள், ஆனால் அந்தந்த சாதியில் இருக்கும் ஏழைகளின் நிலை அப்படியே தான் இருக்கிறது. இதில் பார்பன ஏழைகளும் ஒன்றுதான், பறைய ஏழைகளும் ஒன்றுதான். 'சாதி' ஏழைகளுக்காக போராடுகிறேன் என்பதெல்லாம் சாதித் தலைமை, தலைவர் என்கிற வர்க்கவழி புகழ்பெற நடைபெறும் ஒருவகையான தனிமனித உத்தி மட்டுமே. அவரவர் உழைப்பில் தானே அவரவர் வயிறு நிறைகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிறர் தமது சாதிய அடையாளம் பேசுவதற்கான தேவை பெரிய அளவில் தற்பொழுது இல்லை. அப்படி இருந்தால் அந்தந்த சாதிகளை வளர்க்கும் பணக்காரர்கள் அந்தந்த சாதி ஏழைகளுக்கு பொருளியலில் உதவலாமே.

பின்குறிப்பு : நான் இங்கே பார்பனர் என்று குறிப்பிடுவது, தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளும் பார்பனர் குறித்து தான், மற்றபடி அப்படி இல்லாதோர் பூணூல் அணிந்திருக்கிற ஒரே காரணத்தால் ஏனைய பார்பனர்களையும் பொதுப்படுத்திப் பேசுவதாக விசனப்பட்டால், அப்படி விசனப்படுபவர்களும் அதே குட்டையில் தான் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. எங்கோ எப்போதோ எவரோ எழுதியது தான் நினைவுக்கு வருகிறது 'திருடனைப் பற்றி குறை கூறினால் திருந்திய முன்னாள் திருடர்களுக்கும் கோவம் வருவது லாஜிக்காக உதைக்கும். அடையாளப் படுத்துவது என்பது வேறு அடையாளப்படுத்திக் கொள்வது என்பது வேறு. அடையாளப்படுத்துவது ஒருவரை பிடித்து குழியில் தள்ளிவிடுவது, அடையாளப்படுத்திக் கொள்வது தனக்குத் தானே குழியில் தள்ளிக் கொள்வது.

பிறப்பின் வழி பெருமை என்றால் அது நல்ல பெற்றோர்களுக்கு குழந்தையாக பிறந்து வளர்ந்து தனக்கும் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது பிறப்பின் வழியான பெருமை, அதையும் தன் இழிவுக்கு, தற்பெருமைக்குப் பயன்படுத்திக் கொண்டால் அந்த பெற்றோர்களுக்கும் இழுக்குதான். தத்தமது செயல்பாட்டில் ஒருவரின் தனிமனித செயல் குறித்தான பிறரின் பாராட்டுதலால் ஏற்படும் பெருமை உண்மையானது. மற்றபடி சாதியால் ஒருவனுக்கு பெருமை இருப்பதாக நான் கருதவில்லை.

21 ஜூன், 2009

பட்ட மரம் !

அந்த தொகுப்பு வீட்டின் சுத்தமின்மையை அறைகளின் சுவர்களும், தரைகளும் அழுக்குகளால் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. எழுபதை கடந்த பெரியவர் பெரியசாமி, வசிப்பறையின் சுவற்றில் காய்ந்த பூவுடன் கூடிய புகைப்படத்தில் தன் மனைவியை பார்த்துக்கொண்டு ஒறுக்களித்து பாயில் படுத்தபடி, பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கண்களும், மூக்கும் சிதறிகிடக்கும் குப்பை கூளங்களையும், அணைத்து எறியப்பட்ட சிகிரெட் துண்டுகளின் நாற்றத்தையும் கண்டுகொள்ளவில்லை. சற்று திறந்திருந்த வெளிக்கதவு வழியாக காற்று, வீட்டின் உள்ளே அடிக்கும் வீச்சத்தை குறைக்க முயன்றுகொண்டிருந்தது.

அந்த வீட்டின் அறைகளில் சில கரப்பான்பூச்சிகள் அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. கரிபடிந்த மற்றும் கழுவாத பாத்திரங்கள், சில நாட்களாக துவைக்காத துணிகள் ஆகியவற்றையெல்லாம் அவரின் முதுமை சட்டை செய்யவில்லை. இவற்றை மாற்றினாலும் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்று நினைத்த அவருடைய வேதனை உணர்வுகள் அவற்றை அலட்சியப்படுத்தின.

அவருடைய இளமையில் ஆறாக ஓடிய வாழ்கைப் பயணம், கடந்த ஐந்தாண்டுகளாக தேங்கி கலங்கிய குட்டையாக ஆகி, எப்பொழுது வற்றுமோ என்ற ஏக்கத்துடன், வற்றவேண்டும் என்ற எதிர்பார்த்துக் கிடக்கும், துக்க எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை மனைவி இருந்தாள். மனைவி இருந்தவரை அவருக்கு குறைகள் என்று எதுவும் பெரியதாக தெரியவில்லை.

பழைய வாழ்கையை நினைத்தே, நிகழ்காலத்தை கடத்த வேண்டிய கட்டாயத்திற் குட்பட்டதை நினைத்து, வயதான காலத்தை வறண்டகாலமாக கழித்தார். சொந்தம் கொண்டாட முடியாதபடி, யாரும் அற்றவர் இல்லை அவர், ஆனால் அவருடைய நிலை ஐந்தாண்டுகளாகஅப்படித்தான் இருந்தது.

பெரியசாமி நன்றாக படித்தவர், நல்ல வேலையில் முன்பு கை நிறைய சம்பாதித்தவர். அவர் இப்பொழுது இருக்கும் மூவறை வீடு அவருக்கு சொந்தமானதுதான், வங்கியிலும் ஓரளவு சேமிப்பு இருக்கிறது. அவைகள் அவர் இருக்கும் வரை போதுமானதும் கூட.

அந்த காலத்து ஆளாக இருப்பதால் இன்னும் கை, கால்கள் வீழ்ந்துவிடவில்லை. தன்னால் முடிந்தவரை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதாலும், காலத்தை ஓட்டவேண்டும் என்பதாலும், அவராக விரும்பி தொழிற்சாலை ஒன்றில் பாதுகாவலாளி வேலை செய்துகொண்டு காலத்தை ஓட்டிவருகின்றார்.

சில ஞாயிற்றுக் கிழமைகளில் முடிந்தவரை வீட்டை சுத்தம் செய்வதும், சில நாட்களில் நூலகத்தில் சென்று தத்துவ புத்தகங்களை படிப்பதும் தான் அவருடைய பொழுதுபோக்கு.

அவருடைய சிந்தனை திருப்பும்படி மெதுவாக கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, மெதுவாக தலையை திருப்பி பார்த்தார்.

அப்படி பார்த்தவர், சுருங்கிய தன் முகத்தை மேலும் சுருக்கி, தலை குனிந்துகொண்டார். வந்தவன் வேறுயாருமில்லை நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவருடைய ஒரே மகன் பரசுராமன்.

உள்ளே நுழைந்தவன், வீட்டின் அவலத்தை நோட்டமிட்டபடி மெதுவாக, அவரை பார்த்து

'அப்பா, எப்படி இருக்கிங்க ... ' அக்கரையாக கேட்பது போல் கேட்டான்

பெரியவர் ஒன்றும் சொல்லாமல், அவனை பார்க்க விரும்பாதது போல மேலும் முகத்தை திருப்பிக்கொண்டார்.

அவனாகவே பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்

'அப்பா, உங்களுக்கு வயசாயிடுச்சி, நீங்க ஏன் இன்னும் இங்க தனியா கஷ்டபடுறீங்க ... '

'பேசாம எங்க கூட வந்திடுங்க, உங்க பேரப்புள்ளைங்க கூட சந்தோசமாக இருக்கலாம் ... '

அவர் அசைந்து கொடுக்கவில்லை, விடாமல் அவனும் ரொம்பவும் உரிமையுடன்,

'இந்த வயசில என்னப்பா பிடிவாதம், உங்க நல்லதுக்கு தான் சொல்றேன், பேசாமா வந்துடுங்கப்பா .. '

அதுவரை எதுவும் சொல்லாதிருந்தவர்,

'உங்க நல்லாதுக்கு ' என்று சொன்ன உடன் அவருக்கு பெரும் கோபம் வந்தது,


'நீ மொதல்ல வெளிய போ, நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் சொல்லலே ... '

அவன் திகைத்து போய்விடவில்லை, அவன் அவரிடம் இருந்து இதை எதிர்பார்த்தது தான், அவரின் இந்த எதிர்ப்பு அவனுக்கு கோபம் ஏற்படுத்தவில்லை, மாறாக தலையை குணிய வைத்தது.

'இல்லப்பா, எவ்வளவு நாளைக்குதான் நீங்க தனியா ... ' அவன் என்று முடிப்பதற்குள்

'ஐஞ்சு வருசமா தனியா தாண்டா இருக்கேன்... '

'சாவு வருமான்னு பாத்துக்கிட்டு இருக்கேன் ... '

'சாகறவரைக்கும் தனியா தான் இருப்பேன் ... '

என்று கண்களில் கோபம் கொப்பளிக்க வெடித்தார்.

மறுபடியும் பேச்சற்று தலை கவிழ்ந்தான் பரசுராமன்.

சிறிது நேர மவுனத்திற்கு பிறகு, அவரே தொடர்ந்தார்

'நீ எதுக்கு இங்க வந்திருக்கேன்னு எனக்கு தெரியும்டா ... '

கேள்வியாக பார்த்தான் பரசுராமன்

'எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா ? '

'நீ போன வாரம் தூது அனுப்பினியே, உன் பிரண்டு தங்கராசு, அவன் தான் சொன்னான் '

'முதல்ல, எங்கிட்ட கரிசனமா பேசி, கஷ்டப்படாம மகன் வீட்டோட போயிடுங்கன்-னு சொல்லிட்டு ... '

'நான் பிடிகொடுக்கலன்-னு தெரிஞ்சதும், மெது மெதுவா ... '

'நான் பரிதாபபடுவேன்-னு நெனெச்சு விசயத்தை சொன்னான் ... '

'பரசுக்கு பிசினஸ்ல பெரிய நஷ்டம் ... '

'அவனோட வீடு அடமானம் ஆகி நேட்டாஸ் வந்துடுச்சுன்-னு சொன்னவன் ... ' என்று நிறுத்தியவர், தொடர்ந்து

'இன்னொன்றையும் சொன்னான் ... '

பெரியவர் கோபம் சற்றும் குறையாமல்,

'அதனால, என் வீட்டை வித்துட்டு, உன் கூட வந்துட்டா, உன்னோட கடனை அடச்சிடலாமாம் '

பரசுராமனுக்கு பகீரென்று இருந்தது, அவன் நடந்து கொண்டவிதத்தால், நேரிடையாக அவரிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டதால். அவன் தன் நண்பன் தங்கராசை 'அப்பாவை பார்த்து, கொஞ்சம் பேசி சரிப்படுத்து ' ன்னு சொல்லியிருந்தான். தங்கராசு எல்லாவற்றையும் விபரமாக பேசியது அவனுக்கு தெரியாது. ஆனால் அவர் தங்கராசிடம் கோபமாக பேசி மறுத்துவிட்டார் என்பது மட்டும் தெரியும்.

அவரே தொடர்ந்தார்,

'ஐஞ்சு வருசமா, அப்பன் இருக்கிறானா, செத்துட்டானான்னு கவலைப் படாத நீ, இன்னைக்கு இங்க வந்து நிக்கிறேன்னா... பணம் !... '

'உனக்கு இன்னைக்கு தேவை பணம் ...! '

பரசுராமன் சிலையாக நின்று கொண்டிருந்தான்,

அடுத்து அவர் அவன் முகத்தை பார்த்து வீசிய கேள்விகள், அவனை குறுகி கூசவைத்தது.

'சின்ன, சின்ன பிரச்சனையை பெருசாக்கி, உங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு தனியா போகலாம்னு உன் பொண்டாட்டி சொன்னப்ப ... '

'அவ முந்தானைய புடிச்சிக்கிட்டு, பத்து வருசத்துக்கு முன்பு, எங்கள திரும்பி பாக்காம போனவன் தானே நீ ? '

'அன்னைக்கு கை நிறைய சம்பாதிக்கிற திமிரு உன்னையும், உன் பொண்டாட்டியையும் அப்படி போக வெச்சிச்சு ... ? ' கேள்வியாக நிறுத்தி தொடர்ந்தார்.

'பதினைஞ்சு வருசமா, வராத கரிசனம் இப்ப வந்திடுச்சா ? '

'உன் அம்மா, பக்க வாதத்துனால, காலு முடியாம, படுத்த படுக்கையாக தொடர்ந்து இரண்டு வருசம் கெடந்தாள்... '

'ஒரு தடவையாவது வந்து எட்டிப்பார்த்தியா ? '

'அவ சாவுக்கு வந்துட்டு, விருந்தாளி மாதிரி அன்னைக்கே போன நீ ... '

'ஐஞ்சு வருசம் ஆகி இன்னைக்கு வந்து நிக்கிற ... ? '

'அன்னைக்கே எல்லாம் முடிஞ்சு போச்சு ... '

'உங்க அம்மா என்ன சொல்லிட்டு செத்தாள் தெரியுமா ? '

'நம்பள பார்க்க போகக் கூடாதுன்னு, பேரப் புள்ளைகளை தடுத்த அவன் பொண்டாட்டி முகத்திலயும் ... '

'அவன் முகத்துலையும் நிங்க முழிக்க கூடாது, சீக்கிரமா என் கூட வந்திடுங்கன்னு ... '

'சாகுறத்துக்கு முன்னாடி உன் அம்மா சொல்லிட்டுத்தாண்டா போனாள் '

'நல்லா கேட்டுக்கோ ...! '

'நீ, உன் பொண்டாட்டி சொல்றபடி கேட்டு நடந்துக்கிறப்ப ... உன் அப்பன் நான் ... '

'என் பொண்டாட்டி சொன்ன மாதிரியே வாழ்ந்துட்டுபோறேன் '

'அதனால ... உன் கஷ்டத்தப் பார்த்து பரிதாப படுவேன்னு நினைச்சிடாதே ... '

'பரிதாபப்பட்டு, பரிகாசத்துக்கு ஆளான எத்தனையோ ஜென்மங்களை கண்ணால பாத்திருக்கேன் '

'இப்பவாவது, பொழுதுபோகலைன்னா கோயிலுக்கு உள்ள போய்டுவர்றேன் ... '

'உங்கிட்ட என் சொத்தெல்லாம் கொடுத்துட்டு ... உன் கூட வந்தா ... அப்புறம் நீ வெறட்டி விட்டுடேன்னா ... கோவில் வசாலில் உக்காந்து பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்... '

'அந்த நிலைமைக்கு என்னை தள்ள தயங்காதவன் நீ ... '

'ஒரு அப்பனா, எல்லா கடமைகளையும் ஒனக்கு சரியா செஞ்சிருக்கேன், அந்த திருப்தி எனக்கு இருக்கு '

'நான் ஏற்கனவே பட்டது போதும்... இப்ப பட்ட மரமா நின்னுகிட்டிருக்கேன் ... நானா சாயரத்துக்துள்ள... வெட்டி சாச்சிடாதே ... '

அதிர்ந்து போனான் பரசுராமன். முதியவர் மேலும்,

'அப்படி ஒரு நிலைமையை எனக்கு நானே ஏற்படுத்திக்க விரும்பல, நான் இப்படியே இருந்திடுறேன் ... '

முடிவாகம், உறுதியாகவும் சொன்னார்

'இப்பவே சொல்லிடுறேன் கேட்டுக்க ... நான் செத்த பின்பு ... அடக்கம் செஞ்சிட்டு என் சொத்த எடுத்துக்க ... முடியாதுன்னா இப்பவே சொல்லிடு, ட்ரெஸ்டுக்கு எல்லாத்தையும் எழுதி கொடுத்துட்டு புண்ணியம் தேடிக்கிறேன் '

கைகளை தலைக்குமேல் குவித்துபடி தின்னமாக,

'நீ போகலாம் ' என்றார்.

திருடனுக்கு தேள்கொட்டியமாதிரி சிறிது நேரம் விக்கித்து நின்ற பரசுராமன், அவர்முகத்தை பார்க்க கூசியதால் தலையை குனிந்தபடி சத்தமின்றி வெளியேறினான்.

அறையில் மீண்டும் நிசப்தம் படர, சற்றும் அலட்டிக்கொள்ளாமல் திரும்பிய தலையும், அவருடைய பார்வை மறுபடியும் மனைவியின் புகைப்படத்தில் நிலைத்தது, அப்பொழுது தன் மனைவி தன்னை பெருமிதமாக பார்பதாக உணர்ந்தார்.


2006 பிப்ரவரி 24, திண்ணையில் எழுதியது. தந்தையர் நன்னாளை முன்னிட்டு இங்கு மீண்டும் வெளி இடுகிறேன்

20 ஜூன், 2009

முடிவற்ற தேடல் !

'தேடல்' ஆன்மிகவாதிகளுக்கு நெருக்கமானச் சொல். தேடலில் தொடங்கி அதிலேயே முடிவதைத் தவிர்த்து யாரும் தேடியதைக் கண்டு கொண்டார்களா ? அவர்களுக்கே வெளிச்சம். உலகத்தில் இரண்டு வகை கூட்டங்கள் உண்டு. ஒன்று அனைத்தையும் ஆன்மிகம் தந்துவிடுகிறது அல்லது தந்துவிட்டது என்று திடமாக நம்புவது. அடுத்தக் கூட்டம் அறிவியல் எல்லாவற்றையும் தந்து கொண்டு இருக்கிறது தந்துவிடும் என்கிற திடமான நம்பிக்கை.

இவர்கள் இருவருமே கூட்டுக் களவானியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பார்கள் அதில் சிலர் மட்டும் தனித்து ஆன்மீகம், நாத்திகம் என்பர். முழுப் பெருவெளியிலும் பூவியுலும் கூட அவிழ்க்க முடியாத புதிர்கள் எப்போதுமே உண்டு. அதனால் தான் மனிதனின் தேடல் அது ஆன்மிகமாக இருந்தாலும் சரி அறிவியலாக இருந்தாலும் முற்று பெருவதே இல்லை. ஆன்மீகம் சித்தாந்தங்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் கொள்கைகளை வளர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன. வானத்தில் சாமிகள் இருப்பதாகக் காலம் காலமாக சொல்லப்பட்டுவருவது விண்கலக் காலங்கள்(Satelite) தொடங்கிய காலத்தில் கொஞ்சம், கொஞ்சம் மாக மறைந்து வருகிறது. புராணங்களை நம்பிக் கொண்டு இருந்த ஆன்மிகவாதிகள் அவைகள் புனைவுகளாக இருக்கலாம் என்று நம்பத் தொடங்கி இறைவன் ஒற்றைத் தன்மை உடையவன் அறிவியலுக்கும், புலனுக்கும் அப்பாற்பட்டவன் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள், ஏனெனில் இறைவன் காட்சிக் கொடுத்தாகவும் பார்வதி பால் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஞானசம்பந்தன் காலத்து கதைகளெல்லாம் அண்மைய நூற்றாண்டுகளில் எதுவும் நடக்கவே இல்லை. இந்தியா சொர்க பூமி, இறைவனின் பிறப்பிடம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், முகலாய பேரசிடமும், வெள்ளைக்காரர்களிடமும் அடிமையான பிறகு இந்தியாவில் கடவுள் இருந்திருந்தால், அல்லது கடவுள் பார்வை பட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா ? என்றெல்லாம் நினைத்து உருவ வழிபாட்டுக் கடவுள்களையும் சின்னங்களையும் கோவில்கள் மற்றும் பூசை அறையுடன் நிறுத்திவிட்டு தத்துவங்களை முன்னிறுத்தி பேசத் தொடங்கினார்கள்.

அறிவியல் பக்கம் உள்ளவர்களில் பலர் அனைத்தும் அறிவியல் பொருள்கள் அனைத்தும் மூலக் கூறுகளால் ஆனவை என்றும் எல்லாவித இயக்கங்களையும் பார்முலாக்களில் அடக்கிவிடமுடியும், கணக்கிட முடியும் என்று நம்புகிறார்கள். பெருவெடிப்பு என்னும் கொள்ளையை உருவாக்கி, உலகமும் பிரபஞ்சத் தோற்றமும் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதுடன் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக பால்வெளித்திரல்கள் விரிவடைவதை காட்டுகிறார்கள். மனிதன் அறிந்துள்ள வரலாறுகள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குக் குறைவே, கடந்த 200 ஆண்டுகளில் பிரபஞ்ச மறைப்புகள் (ரகசியம்) அனைத்தையும் கிட்டதட்ட அறிந்துவிட்டதாகவும், முழுவதும் அறிந்துவிட முடியும் என்று அறிவியலார் நம்புகிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்களே இருந்திருக்க முடியாது என்று நம்புகிறார்கள். இவையெல்லாம் ஆன்மிகம் போன்ற வெறும் நம்பிக்கைதானே. பூமியில் உயிரனம் எத்தனையோ முறை அழிந்திருக்கலாம், ஆனால் ஆதாரம் எதுவும் கிட்டவில்லை என்பதால் நமக்கு தெரிந்த நாகரீகம் பெற்ற பழங்காலத்து மனிதர்கள் என்றால் அது சுமேரியர்கள், பிறகு ஆப்ரிக்கர்கள், அதன் பிறகு சிந்துசமவெளி நாகரீகம். இன்னும் சில நூற்றாண்டுகளில் அல்லது அடுத்த 10 ஆண்டுகளில் பழமையான நாகரீகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இன்று இருப்பதைவிட மிகவும் நாகரீகம் அடைந்தவர்களாக இருப்பது தெரிந்தால் இன்றைய மனிதர்களான நாம் மிகவும் அதிர்ச்சி அடைவோம், ஆனால் அப்படிப் பட்டவர்கள் பூமியில் இருக்க வாய்ப்பில்லை, அதனால் ஒருவேளை வேற்றுக் கிரகத்தில் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூட நம்புகிறார்கள். ஏன் அப்படி ? பூமியில் கூட இருந்திருக்கலாம், நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்கிற காரணத்திற்காக அவற்றை மறுக்கவோ, அதைப் பற்றி ஆய்வு செய்யவோ நினைப்பது இல்லை. ஏனெனில் மின்சாரமும், பெட்ரோலும் முன்பு எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதைத் தாண்டி மனித மனம் சிந்திக்காது எனவே மனித இறுதிகட்ட நாகரீக வளர்ச்சியில், அறிவியலில் தற்போது இருப்பதாக நாம் கருதுகிறோம்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, அறிவியல் சார்ப்புள்ளவர்களுக்கு எந்த ஒரு பொருளுக்கும் அழிவு உண்மை என்பது தெரிந்தும் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆதாரம் தேடி, கிடைத்த வரையில் இருக்கும் ஆதாரத்தை வைத்து நாமே நாகரீக உச்சம் பெற்றவர் என்று நினைக்கிறோம்.

ஆன்மிகத்திலும் அப்படியே எத்தனையோ பேர் முயன்றும், இது இப்படித்தான் என்று என்று பலவகையான அவரவர் வரையறை செய்து, புதியவர்களின் தேடல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தான் நம்புவது வரை தான் இறை அதற்குமேல் இருக்க வாய்ப்பில்லை என்பதாகவே நினைக்கிறார்கள். ஆன்மிகத் தேடல் (ஒவ்வொ)ஒருபிறவியின் தனிப்பட்ட இறை குறிந்த கேள்வி என்றால் அறிவியல் ஒட்டுமொத்த மனிதர்களின் வரலாறு அறிந்த காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கேள்வி. ஆன்மிகவாதிகளின் கேள்வி அந்த பிறவியோடும், அறிவியலாளார்களின் கேள்வி வரலாற்றுடன் (உலகத்தின் ஒவ்வொரு அழிவுடன்) முடிந்துவிடுகிறது. விடைகள் எப்போதும் கிடைக்காது என்பதால் தான், ஆன்மிகமானாலும் அறிவியல் ஆனாலும் அதில் மனிதர்கள் நாட்டம் கொண்டு தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தேடுங்கள் கிடைக்கப்படும் வெறும் நம்பிக்கை சொற்றொடர் !

(என்ன சொல்லவருகிறேன் ? நமக்கு முன்பு கூட பூமியில் தற்காலத்தைவிட மாறுபட்ட அறிவியல் / ஆன்மீக வாழ்க்கை இருந்திருக்கலாம்)


மிர்தாதின் புத்தகம் இதை ஒட்டிய கருத்தை முன்வைக்கிறது, அதில் அறிவியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

19 ஜூன், 2009

ஒண்ணும் ஒண்ணும் இரண்டு !

ஆண் என்கிற ஆணவமோ, வெட்கமோ இன்றி "டீச்சர் ஒண்ணுக்கு..." என்று ஒற்றை விரலைக் காட்டிவிட்டு அவ்வப்போது எழுந்து ஓடும் தொடக்கக் கல்வி அகவையில் நடந்த பள்ளிப் பருவத்து நிகழ்வுகள் பற்றி எழுதும் தொடர் பதிவு. தம்பி "அப்பாவி முரு" அப்பாவியாக புதிய தொடர் தொடங்கி பிள்ளையார் சுழி போட்டு மூன்று கொழுக்கட்டைகளில் ஒன்றை எனக்கு கொடுத்து இருக்கார்.

முதல் வகுப்பு : என்னுடைய பிறந்த திங்கள் (டிசம்பர்) படி பள்ளி தொடங்கும் திங்கள் (ஜூன்) ஆறு திங்கள் முன்பு பின்பு இருப்பதால் 4 1/2 அகவையில் சேர்க்காமல் 5 1/2 அகவையில் பள்ளியில் சேர்த்தார்கள். நகராட்சி(முனிசிபல்)தொடக்கப் பள்ளியில் தான் முதல் வகுப்பு செல்ல தொடங்கினேன். வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடை தொலைவு.

இங்கு சேரும் முன் அண்ணன் படித்த மற்றொரு பள்ளிக்கு அடிக்கடி சென்று தூங்கி எழுந்த பழக்கம் இருந்தபடியால் பள்ளிக்குச் செல்வது அச்சம் ஊட்டவில்லை. கூடவே என் அகவை தெரு 'பசங்க' பள்ளிக்கு செல்லத் தொடங்கியதால் உற்சாகமாவே சென்றேன். இன்னும் நினைவு இருக்கிறது முதல் வகுப்பு அரிச்சுவடி, பாட நூல் அட்டையில் மயில், உள்ளே குரங்கும் குல்லா வியாபாரியும், கரடி கதை (கரடி துறத்த இறந்ததாக நடித்து தப்பிக்கும் ஒருகதை). அ, ஆ, இ எழுதும் போது இ - போட முடியாமல் கொஞ்சம் திணறுவேன். இ யை சுழிக்க தொடங்கி எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் இ சுழிப்பில் முடிவை ஒரு மூன்று சுற்றாவது சுற்றுவிடுவேன், சுழிப்பை சரியாக நிறுத்தப் பழக ஒரு திங்கள் பிடித்தது. முதல் வகுப்பிற்கு ஆசிரியைதான். கொஞ்சம் கண்டிப்பானவர், ஐந்தாம் வகுப்பு வரை இருபால் வகுப்பு (கோ-எஜுகேசன் ) தான், ஆசிரியையின் பெயர் கொஞ்சம் ஆழ்ந்து நினைத்தால் வந்துவிடும், தற்போதைக்கு நினைவு இல்லை. ஆனால் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.

இரண்டாம் வகுப்பு : நேசம்மா டீச்சர், பெந்தகோஸ் கிறித்துவர் மிகவும் அன்பானவர், சனிக்கிழமைகளில் சமய வகுப்புகளுக்கு அழைப்பார், நாங்களும் கூடவே சேர்ந்து 'ஏசு என்னை இரட்சிப்பார்' என்று பாடிவிட்டு கொடுக்கும் திண்பண்டங்களைத் தின்று வருவோம். தவறு எதும் செய்ய வில்லை, பசங்க தவறுதலாக எதோ போட்டுக் கொடுக்க டீச்சர் பிரம்பால் அடிக்க, எனக்கு கடும் சினம், பிரம்பை பிடிங்கி எறிந்தேன். அப்பறம் ? உங்க அம்மாவை கூட்டிவந்தால் தான் பள்ளிக்கு வரமுடியும் என்று டீச்சர் சொல்ல, அதுக்கெல்லாம் அப்ப அச்சமே இல்லை, கூட்டி வந்தேன்.

மூன்றாம் வகுப்பு : ஆசிரியை தான், பெயர் நினைவு இல்லை, அவருடைய மகள் அக்காவுடன் படித்ததால் 'நேவிஸ் அம்மா டீச்சர்' என்று அக்கா சொல்வது நினைவில் இருக்கு. டீச்சரின் கணவர் கொடுமைக்காரர், அவர் டீச்சரை தாறுமாறாக அடித்ததால் டீச்சருக்கு காது சரியாக கேட்காது. பசங்க பேசிக் கொண்டு இருந்தாலும் அமைதியாக இருப்பார், நாங்கள் படித்து முடித்த பிறகு காது சரியாக கேட்காததால் ஒன்றாம் வகுப்புக்கு மற்றிவிட்டு ஒன்றாம் வகுப்பு டீச்சரை மூன்றாம் வகுப்புக்கு மாற்றினார்கள். கூட படித்த செல்வம் என்கிற மாணவனை கண்டிப்பு என்ற பெயரில் அவனுடைய பெற்றோர்கள் சூடு போட்டு அனுப்பி இருந்தார்கள். அப்படியும் பெற்றோர்கள் இருப்பார்களா ? இப்பவும் நினைத்தால் நடு முதுகு சில்லிடுகிறது.

நான்காம் வகுப்பு : ஆசிரியர் ; இப்போது கடைத்தெருவில் பழக்கடை வைத்திருக்கிறார். கண்டிப்பானவர், அப்போது வரும் இந்திப்படங்களில் நாயகர் வைத்திருக்கும் முடி அலங்காரத்தை இவரும் செய்திருப்ப்பார். மாணவர்களைவிட மாணவிகளுக்கு மதிப்பெண் மிகுதியாகப் போடுகிறார் என்கிற கடுப்பு எனக்கு இருக்கும், நான் தான் மதிப்பெண் நிறைய வாங்குவேன். வேண்டுமென்றே இறுதியாக குறைத்துப் போட்டிருப்பார், அடித்து திருத்தியது நன்றாக தெரியும். ஸ்கூட்டரில் தான் வருவார். பேரு 'ஹரி தாஸ்'. பத்து ஆண்டுக்கு முன்பு ஹரி தாஸ் ரிடையரான ஆன பிறகு அவர் தனது விவசாய நிலத்தை விற்க, நாங்க தான் வாங்கினோம். இப்ப கூட அவரது பழக்கடை வழியாகச் சென்றால் பார்த்துப் பேச பயம் தான். மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும், நான்காம் வகுப்பில் பாடமாக படிக்கத் தொடங்கியது, நினைவுக்கு இருக்கிறது. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் முன்பு ஒரு பாடத்தின் தலைப்பை நானாகவே எழுத்துக் கூட்டி 'Vilupuram Junction' என்ற ஆங்கிலச் சொல்லை சரியாக 'விழுப்புரம் ஜெங்சன்' என முதன் முறையாக படித்துக் காட்டி உடன் படிக்கும் மாணவர்களிடம் 'ஹீரோ' ஆனேன்.

ஐந்தாம் வகுப்பு : ஆசிரியர் பேரு சுப்ரமணியம், அவரு ஐயரு என்பது அப்போது தெரியாது. நல்ல மனுசன், எப்போதும் மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதால், அவருக்கு 'மூக்கு நோண்டி சார்' என்பது பட்டப்பெயர். 'சார் உங்களை மூக்கு நோண்டி' என்று சொன்னான் என்று கூடப் படிக்கும் மாணவர்களை மாட்டிவிடுவதும், மாட்டிக் கொண்டு முட்டிப் போட்டதெல்லாம் ஐந்தாம் வகுப்பி நடந்தேறியது. தேர்வெல்லாம் மரத்தடியில் தான், கொய்யாப் பழம், நாவல் பழம் கொண்டுவந்து தருபவர்களுக்கு நான் எழுதியதைக் காட்டுவேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எங்கள் ஊரில் புயல் அடித்தது, ஒரு மாதம் பள்ளிக்கட்டிடத்தில் மேல் கூரை இல்லை, எங்களுக்கு படிப்பும் இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை நான் தான் வகுப்பின் முதல் மாணவன்.

கூடப் படித்த மாணவிகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை ? அவங்களெல்லாம் புள்ளக் குட்டிப் பெத்து இருப்பாங்க, சிலருக்கு பேரன் பேத்தியே பிறந்திருக்கும். நீதிபதி ஒருவரின் மகள் பெயர் ஜெயந்தி, வட்டாச்சியர் ஒருவரின் மகள் பெயர் ஹேமா, துணை கண்காணிப்பாளர் ஒருவரின் மகள் பேரு திலகா..... இதில் திலகா வை தக்காளிப்பழம் என்று கிண்டல் செய்ய, அது அழுது கொண்டு ஆசிரியரிடம் முறையிட அடிக்கடி எங்களுக்கு அடிவிழும். ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அந்த பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. பள்ளி இடைவேளைகளில் திறந்த வெளிக்குச் சென்று பாத்தி கட்டி ஒண்ணுக்கு அடிப்பது போன்ற விளையாட்டுகளும், யாரு ரொம்ப தொலைவில் ஒண்ணுக்கு அடிப்பது போன்ற போட்டிகளும் நடைபெறும். கெட்ட கெட்ட வார்த்தைகளெல்லாம் அப்ப தான் கற்றுக் கொண்டு, வாய்தவறி சொல்லிவிட்டு பெற்றோர்களிடம் முதுகு வீங்க வாங்குவது...இன்னும் எத்தனையோ சாகசங்கள் எழுதி மாளாது.

தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,

Starjan(நிலா அது வானத்து மேல!)
திகிழ்மிளிர் (என்றும் அன்புடன்)
விஷ்ணு (சில நேரம்)

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

18 ஜூன், 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2

முதல் பகுதியின் தொடுப்பு
இறை நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்கள் பற்றிய உளவியல் என்று பார்த்தால், தனக்கு அருளிக் கொண்டிருப்பதாக நம்பப்படும் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் தன்னால் முடிந்த அளவுக்கு உடலை வருத்திக்கொள்ளுதல் தான். காலம் காலமாக பல மதங்களிலும் உடலை வருத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதில் எளிய வருத்திக் கொள்ளுதலான நடைப் பயணமும், அலகு குத்துதல், சிறிய அளவிலான வெட்டுக் கருவிகள் மூலம் உதிரம் சொட்டச் சொட்ட உடலைக் கீறி வருத்திக் கொள்ளுதல், தீ மிதி வரை அனைத்தும் உண்டு. மிகுந்த மனநிலை கெட்டவர்கள் கண்களை பிடிங்கி, விரல்களை வெட்டிக் காணிக்கை செலுத்துவதும், தன்னளவில் எந்த வருத்துதலையும் ஏற்படுத்திக் கொள்ளாதவர் உயிர் பலி இட்டு வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வதும் அனைத்து மதங்களிலும் உள்ள வழக்கம், முறைகள் மட்டுமே வேறுபடுகிறது, மன நிலை கெட்டு உடல் உறுப்பை வெட்டிக் காணிக்கை ஆக்குவது தவிர்த்து மற்றதெல்லாம் கிட்ட தட்ட ஒரே வகைதான் அதில் எது மடத்தனம் என்று வரையறை செய்ய இயலாது.

***

அலகுக் குத்திக் கொள்ள மனம் வருமா ? உளவியலே காரணம், 'என்னால் முடியும், எனக்கு தெய்வம் துணை இருக்கிறது' என்று ஆழமாக நம்புவர்கள் உன்னத செயல் போல் எண்ணி அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வர். எனக்கு வயது 5 ஆக இருக்கும் பொழுதிலிருந்து எனது தந்தை அலகு காவடி எடுப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்கான தேவை என்ன வென்று சரியாகத் தெரியாவிட்டாலும், அவருடைய சிறுவயதில் அவருடைய உறவினர்கள், முதிர்ந்த நண்பர்கள் அதுபோல் அலகு காவடி எடுப்பதையும், அதற்கு இவர் துணையாகவும் இருந்திருக்கிறார் என்பது தெரியும், அவர்களைப் போல் தானும் குறிப்பிட்ட வயதில் அலகு காவடி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். மேலும் அதை கூடவே இருந்து கவணித்து வந்ததால் அச்சம் எதுவுமின்றி அலகுக் காவடி எடுக்க முடிவு செய்து எடுக்கத் தொடங்கி இருக்கலாம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது 30 வயதில் இருந்து தனது 51 ஆவது வயதில் மறைந்த ஆண்டு வரை அவ்வாறு அலகு காவடி எடுத்தார். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அதைத் தொடர எங்களில் யாருக்குமே விருப்பம் இல்லை. கிட்டதட்ட அதே 30 வயதில் இருந்து தற்பொழுது வரை எனது தம்பி அப்பா விட்டுச் சென்ற அலகு காவடியைத் ஆறு ஆண்டுகளாக தொடர்கிறான்.

***

எங்கள் வீட்டு அருகே இருக்கும் ஏழைப் பிள்ளையயார கோவில் இருந்து தான் எங்கள் வீட்டுக் காவடியை கிளப்புவோம்.

காவடி எடுக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு காவடி எடுக்கப் போகும் கோவிலுக்குச் சென்று திருக்காப்பு அணிந்து வரவேண்டும், திருக்காப்பு எனப்படுவது சிறிய கைக்குட்டைப் போன்ற மஞ்சள் துணியில் சுற்றப்பட்ட 50 பைசா நாணயம், அதை கையில் கைகடிகாரம் போல் காவடி முடியும் வரை அணிந்து இருப்பார்கள். காவடி எடுக்கும் அன்று தண்ணீர் தவிர்த்து உண்ணா நோண்பு (விரதம்). மிகவும் களைப்புடன் இருந்தால் வேக வைத்த பச்சைப் பயிறு கஞ்சியில் வெல்லம் போட்டு கொடுப்பார்கள். காவடியின் முதல் நாள் இரவே காவடிக்கு தேவையான பூசைப் பெருள்களை வாங்கி ஆயத்தமாக வைத்திருப்பார்கள். காவடி அன்று பால் காவடி என்றால் அன்று கறந்த பால், மற்றபடி சந்தனம், திருநீறு, பன்னீர் காவடி என்றால் தேவைக்கேற்ப முதல் நாளே வாங்கி வைத்துவிடுவார்கள்.

எங்கள் வீட்டுக் காவடி எப்போதும் பால்காவடிதான், இப்பொழுது உடன்பிறந்தோரின் பிள்ளைகளும் நானும் காவடி எடுக்கிறேன் என்று கிளம்பிவிட்டதால் சந்தனம், திருநீறு, பன்னீர் குடங்களை அவர்களின் தலையில் ஏற்றுகிறோம்.

எனக்கும் என் அண்ணனுக்கும், தம்பி அலகு குத்தும் காவடி எடுப்பதில் விருப்பம் இல்லை, ஆனாலும் அண்ணன் முன்னின்று காவடிக்குத் தேவையான அனைத்து பூசைகளையும் செய்து தருவார்.

காவடி எடுக்கும் அன்று சிறிய குடங்களை வைத்து பூசைப் பொருள்களுடன் தீபம் காட்டி, குடத்தினுள் சாம்பிராணி புகையைக் காட்டி பாலை குடம் நிறைந்து வழியும் வரை ஊற்றப்படும்.

பிறகு காய்ந்த வாழையிலையால் குடத்தை மூடி, சணலால் இறுகக் கட்டிவிட்டு, அந்த குடத்திற்கு திருநீறு சந்தன குங்குமம் சாற்றி, மாலையிட்டு தலையில் தூக்கிய பிறகு எடுக்கும் இடத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு முன்று சுற்று சுற்றி பால் முழுக்கு செய்யப் போகும் கோயிலுக்குச் நடை பயணமாகச் செல்வார்கள்.

தம்பி அலகு காவடி எடுப்பதால் பால் குடங்கள் ஆயத்தம் ஆனவுடன் அலகு குத்துதல் நடைபெறும். தூண்டில் முள் போன்று வளைந்து இருக்கும் ஊசியை இடுப்பைச் சுற்றிய தசையில் சொருகுவார்கள், உதிரம் வந்தால் திருநீற்றை வைத்து அதன் மீது பூசுவார்கள்.

அலகு குத்தும் போது சுற்றி நிற்கும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பார்கள், ஆட்டம் போட வைக்கும் மேளதாள நாதசுவரம் ஒருபக்கம் காதைப் பிளக்கும், அம்மன் பாடல்கள் பாடப்படும், அலகு குத்த குத்த உடலில் வியர்த்துக் கொட்டும், விசிறியை வீசி ஆசுவாசப்படுத்துவார்கள். குத்திக் கொள்ளும் அன்பர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராக இருந்தால் மயக்கமடைந்துவிடுவார் (சாமி வந்துவிட்டது என்று சொல்லுவார்கள்)


அந்த நேரத்தில் அனைத்து அலகுகளையும் குத்திவிட்டுவிடுவார்கள், மயக்கம் வராவிட்டால் தாங்கிக் கொள்வார்கள், கடவுளின் பெயரால் செய்வதால் வலிக்கிறது என்று நினைப்பது தனது பக்தியின் குறைபாடு என்று நினைக்கக் கூடும் என்பதால் வலியைத் தாங்கிக் கொள்வார்கள் அல்லது அந்த நேரத்தில் இறை உணர்வில் இருப்பதால் வலியை பொருட்படுத்துவதில்லை என்பதாக நான் கொள்கிறேன்.

நெற்றியில் சிறிய அளவிலான வேல்கள், இடுப்பைச் சுற்றிய அலகுகள் போடப்பட்டதும், இறுதியாக கன்னத்தைத் துளைத்து மறுகன்னத்தின் வழியாக ஒரு சிறிய வேலைச் சொருகி அந்த வேலில் பிடிப்பில் வாயை மறைக்கும் படியான வெள்ளி அணியை முடுக்கியதும் அலகு குத்துவது முடிந்துவிடும்,


பிறகு பால் குடத்தை தலையில் வைத்து கோயிலைச் சுற்றிவந்ததும் அலங்காரக் காவடியில் அந்த குடத்தை வைத்து கட்டிவிட்டு, காவடியை தோலில் தூக்கி வைத்துக் கொண்டு பிறகு, நீண்ட வேல்களை இடுப்பில் குத்தி இருகும் அலகுடன் இணைத்துவிட காவடியுடன் நடை பயணம் தொடங்கிவிடும்.***

காவடி எடுப்பது மட்டும் போதாது காவடியுடன் எதாவது புத்துணர்வு உந்துதல் தொடர்ந்து இருந்தால் நடைபயணமும், காவடி கூட்டமும் பலரைக் கவரும், பார்வையாளர்கள் நின்று பார்த்துச் செல்வார்கள். அதற்காக காவடியுடன் ஆடுவதற்கு ஆட்டக்காவடி எனப்படும் இரதக் காவடியை ஏற்பாடு செய்து கொள்வதுண்டு, அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் அத்தகைய ஆட்டக்காவடிகளை வைத்திருப்பர்கள், ஒரு காவடியைத் தூக்கி மாற்றி மாற்று 10 பேர் வரை சலங்கை கட்டி ஆடுவார்கள். ஒற்றையடி மேளத்துடன் ஆட்டக்காவடி ஆடும் போது பக்கத்தில் நின்று பார்த்தால் நமது கால்களும் ஆடுவதற்கு ஆயத்தமாகும் உணர்வு இருக்கும்.
எட்டுக்குடி முருகன் கோவிலின் சிறப்பே இந்த ஆட்டக்காவடிகள் தான் ( அது பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்) காவடி எடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் ஆட்டக்காவடியையும் எனது தம்பி ஏற்பாடு செய்து கொள்வான்.
ஆட்டக்காவடியின் எடை 30 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும், பழக்கம் இல்லாதவர்கள் அதைத் தூக்கவோ, சாயாமல் தோலில் வைக்கவோ முடியாது,
ஆனால் அந்த காவடியை எளிதாக தூக்கி அந்த இளைஞர்கள் சுழன்று சுழன்று ஆடுவார்கள். அவர்கள் மட்டுமா ? கூட்டத்தோடு கூட்டமாக நானும் தூக்கி ஆடினேன். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம். 10 நிமிடம் ஆடியதற்கே 3 நாள்கள் வரை தோ(ள்)ல் வலி இருந்தது


கோயில் தொலைவு சுமார் 4 கிலோமீட்டர், அங்கங்கே நின்று நின்று ஆடிவிட்டு செல்லச் செல்ல, அலகுகாவடி, பால்குடம் வைத்திருப்பவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி விழுந்து வணங்குவார்கள், சிலர் தேங்காய் பழங்களுடன் தீப வழிபாடு செய்வதும் உண்டு,

அவர்களுக்கு எனது தம்பி அவர்களுக்கு திருநீறு கொடுப்பான், இப்படியாக நின்று நின்று நடந்து நடந்து கோயிலுக்குச் செல்ல சுமார் 4 மணி நேரமாகும்,

கோயிலின் பெரிய தெருவைச் சுற்றி வந்ததும் கோயிலுக்குள் சென்று மூன்று சுற்று சுற்றிவிட்டு, காவடியில் இருந்து பால் குடத்தை எடுத்துக் கொண்டு சாமி சிலைக்க்கு முழுக்கு செய்யச் செல்வார்கள், கோயிலினுள் நிற்க இடம் இல்லாத படி எங்கும் கூட்டம், சாமியைப் பார்க்க நீண்ட வரிசை. ஆனாலும் அலகு குத்தி இருப்பதால் உடனடியாக உள்ளே அனுமதித்துவிடுவார்கள்,
முழுக்கும் வழிபாடும் முடிந்ததும் குத்திய அலகுகளை ஒவ்வென்றாக கழட்டி விட்டு, முழுக்கில் வழியும் போது பிடித்த பாலை அனைவருக்கும் திருவமுதாக(பிரசாதம்) கொடுக்கப்படும், பிறகு வீட்டுக்குத் திரும்பிவிடுவோம்.

***
அலகு குத்தி காவடி எடுப்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் உடன்பாடு இல்லை, ஆனால் அப்படி எடுத்துச் செல்வதைப் பார்க்க வரும் உறவினர்கள், 'உங்கள் அப்பாவை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது' என்று சொல்வதைக் கேட்க மனதுக்கு நிறைவாகவும், நெகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர முடிவதால்... எங்கள் அனைவருக்கும் அப்பாவின் நினைவை ஏற்படுத்தும் இந்த அலகு காவடியை தம்பி தொடர்வதை தடுக்கும் எண்ணம் ஏற்படுவதில்லை.


தொடரும்...

அடுத்த பகுதி எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை திருவிழா

17 ஜூன், 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1

எழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நடப்புகளை எழுதுவதும், அதை மட்டுமே விரும்பிப் படிப்பதும் எனக்கும் பலருக்கும் விரும்பமான ஒன்று என்பதால் பொதுவானவற்றை எழுதுவதற்கு சற்று சுனக்கம் தான். யார் இதெல்லாம் கேட்டது ? இனி இடுகைக்கு போவோம்.

***

மார்கழிப் பனியை விரட்டி அலுப்பு நீங்கி சுறுசுறுப்பாக அதிகாலை எழும் பழக்கம் ஏற்படுத்த தமிழகத்தின் மார்கழிக் அதிகாலைகள் கோயில் பாட்டுக்களால் புலரும், அழகான வண்ணங் கோலங்கள் இட்டு அதன் மையத்தில் சாணத்தில் பரங்கிப் பூக்களை வைத்து, தெருவையே பளப்பளப்பாகவும், மணமாகவும் வைத்திருப்பார்கள். அது போல் சித்திரை கத்திரி வையிலில் இருந்து மீட்டுக் கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் குறிப்பாக சித்திரா பவுர்ணமி எனப்படும் முழுநிலா நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். எங்கள் ஊரிலும், அதைச் சுற்றியுள்ள முருகன் கோவில்கள், அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடப்பது உண்டு. நாகை காயரோகனம் சுவாமி - நீலாயதாட்சி அம்மன் கோவிலில் முன்பு ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும், இப்பொழுதெல்லாம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுவதில்லை நாகப்பட்டினத்தைப் (நாகை) பொறுத்த அளவில் மிகப் பெரிய சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள் இருந்தாலும் நாகை நெல்லுகடை மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை திங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை திருவிழா நடைபெறும். திருவிழாவில் அன்பர்கள் (பக்தர்கள்) வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். வேண்டுதல்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என்றால் வேப்பில்லைக் காவடி, மலர் அலங்கார காவடி எடுத்தல், குழந்தைகளை செடில் என்னும் கழுமரத்தில் ஏறி சுற்றிவருதல், பெண்கள் தனிப்பட்ட வேண்டுதல்களாக மாவிளக்கு ஏற்றுதல் ஆகியவை ஆகும்.

திருவிழாவுக்கு 10 நாட்களுக்கு முன் முறைப்படி கொடி ஏற்றப்படும், திருவிழாவுக்கு முதல் நாள் இரவே கோவில் வெளிச் சுற்றுகள் (பிரகாரம்) கடைகளால் களைகட்டிவிடும், பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டு கோவிலுக்குச் செல்லும் அன்பர்கள் மட்டுமே கோயிலை நோக்கிய சாலைகளில் அனுமதிக்கப் படுவர். திருவிழாவுக்கு முதல் நாள் மாலை விழாவின் தொடக்கச் சிறப்பு நிகழ்வாக (உற்சவம்) சிங்க வாகனத்தில் பணிப்பெண்ணுடன் காளி உருவ மாரியம்மன் புறப்பாடு, நடை பெறும்.

அந்த புறப்பாடு பெரிய தெருக்களை (இராச வீதி) சுற்றி வந்ததும், கைலாச வாகனத்தில் மீண்டும் உலாவரும். கைலாசா வாகனப் புறப்பாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளையும் எங்க அப்பா காலத்தில் இருந்து எங்கள் இல்லத்தினர் செய்து வருவது வழக்கம், அந்த நிகழ்வில் எங்கள் இல்லத்தினர் அனைவரும் கலந்து கொள்வோம்,

மறுநாள் என் தம்பி காவடி எடுக்கும் நிகழ்வு இருப்பதால் கைலாச வாகனம் புறப்படும் முன் காத்தவராயன் பூசை நடைபெறும், காத்தவராயன் காவல் தெய்வ வகையைச் சேர்ந்தவர் என்பதால் சுருட்டு, சாராயம், ரொட்டித் துண்டு இவற்றையெல்லாம் பூசையில் வைப்பது வழக்கம். காத்தவராயன் பூசை ஒரு 10 - 15 நிமிடத்தில் முடிந்துவிடும்,

அதன் பிறகு கைலாச வாகனம் கிளம்ப மணி இரவு 11க்கு மேல் ஆகிவிடும். அப்போதே கோயிலில் அன்பர்கள் கூட்டம் மிகுதியாகி இருக்கும், பகலில் வேண்டுதல்களை நிறைவேற்றுவதைவிட இரவில் வந்து செல்வதால் கூட்டம் குறைவு என்று பலரும் கோயிலுக்கு வரத் தொடங்கி இருப்பார்கள். கையில் வேப்பில்லையுடன் கோயில் உட்சுற்றில் உருளுதல் (அங்கபிரதட்சனம்), மண்டியிட்டு வணங்கி வணங்கிச் செல்லுதல் (கும்பிடு தண்டம் என்பார்கள்) ஆகியவை நடக்கத் தொடங்கிவிடும். வேண்டுதல் நிறைவேற்றும் அன்பர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிந்து, ஆடையுடன் குளித்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

அன்பர்கள் கூட்டம் கூடக் கூட கோயிலின் உற்சுற்று வேப்பில்லைகளுடன் சொத சொதவென்று ஈரம் கூட தொடங்கும், உருளுபவர்களுக்கு பக்கத் துணையாக அவர்களின் உறவினர்கள் திருப்பங்களில் உடலை திருப்பிவிட உதவி செய்வார்கள்.


பாடைக் காவடி எனப்படும் வேண்டுதல்கள் உண்டு. பாடைக் காவடி எடுப்பவர்கள் பச்சை பனை ஓலை மட்டையில் பிணம் போல் வாயைக் கட்டிக் கொண்டு கண்ணை மூடிப் படுத்துக் கொள்ள அவர்களது உறவினர்கள் அந்த ஓலையிடன் சேர்த்து வேண்டுதல் அன்பர்களை கோயில் சுற்றைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி வேண்டுதல்களை முடித்துக் கொள்வார்கள்,

முன்பெல்லாம் தொலைவில் இருந்தே பிணம் எடுத்துவருவது போல் பிண ஊர்த்தி செய்து அதில் வேண்டுதல் அன்பரை வைத்து மேளத்துடன் கோயிலுக்கு வருவதுண்டு. காலப் போக்கில் அவை பிற்போக்கான எண்ணமும் அருவெறுப்பானதால் கோயிலுனுள் சிறிய அளவில் பாடை காவடி எடுப்பதுடன் சரி.

பெண்களின் வேண்டுதல்கள் என மாவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெறும், பச்சை அரிசியை ஊரவைத்து நன்றாக இடித்துவிட்டு, அல்லது கல் இயந்திரத்தில் அரைத்து மாவை ஆயத்தம் செய்து ஒரு சிரிய எவர்சில்வர் சட்டியில் வைத்து வெள்ளை அல்லது மஞ்சள் துணியால் சுற்றி கோவிலுக்கு எடுத்துவருவார்கள்.

அங்கே கோவில் சுற்றில் அமர்ந்து பொடித்த வெல்லம் சேர்த்து தேங்காய் நீர் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கையளவு மூன்று அல்லது ஐந்து அல்லது ஒரே பெரிய உருண்டையாக பிடித்து, மாவு உருண்டையின் மேல் பகுதியில் சிறிய பள்ளம் ஏற்படுத்து அதில் நெய்யை இட்டு, திரி சேர்த்து விளக்கு ஏற்றுவார்கள், பிறகு அதற்கு தேங்காய் உடைத்து, வாழைப்பழத்துடன் கற்பூரம் காட்டி, வணங்கிவிட்டு கோயிலைச் சுற்றி வருவார்கள்.

கோயிலின் கொடி மரத்தருகே பூசாரி இருப்பார், அவர் அனைவருக்கும் திருநீறு கொடுப்பார், அத்துடன் கோயிலுனுள் நுழைந்து அம்மனை வணங்கிவிட்டு வீட்டுக்கு திரும்புவார்கள். மாவிளக்கு மாவு தேங்காய் துண்டங்களுடன் சேர்த்து உண்ண, அதில் நெய் மணம் சேர்ந்திருப்பதாலும் தனிச் சுவையாக இருக்கும், முன்பெல்லாம் ஒரு உருண்டையை முழுதாக உண்ணுவேன், இப்பொழுதெல்லாம் சுவைக்காக சிறுது திண்பதுடன் சரி. அந்த மாவிளக்கு உருண்டை மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கைலாச வாகனம் சுற்றி வந்ததும் கோயில் தேர் புறப்பாடு நடைபெறும், கோயிலின் சுற்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு தெருக்களை சுற்றிவருவதாக இருக்கும்.

தேர் புறப்ட்டதும் வீட்டுக்குச் சென்று மறுநாள் காவடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை ஆயத்தம் செய்துவிட்டு உறங்கப் போக பின்னிரவு மணி இரண்டு ஆகி இருக்கும்.

கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால் தனிப்பட்ட பயணமாக சென்ற மே மாதம் சென்றுவந்தேன். மறுநாள் காவடி ... ஒரே அளப்பரை தான் !

தொடரும்...

(மேலும் பலர் படிக்க...பிடித்து இருந்தால் வாக்களியுங்கள், )

16 ஜூன், 2009

தமிழ்மணம் மகுடம் மற்றும் வாசகர் பரிந்துரை !

வாக்களிப்பது எவ்வளவு கடினமான செயல் என்று நம் தமிழக, இந்திய வாக்காளர்களுக்குத்தான் தெரியும். ஆமாம், ஒவ்வொரு தேர்தலின் போதும் 40 விழுக்காட்டு மக்கள் வாக்கு சாவடிக்கு செல்வதில்லை.

வாசகர் பரிந்துரை - இதுபற்றிய எனது தனிப்பட்ட கருத்து, மிகச் சில கட்டுரைகள் தவிர்த்து பெரும்பாலும் அதில் இடம் பெறுபவை குழுக்களாக இயங்கும் பதிவர்களுக்குள் ஒருவருவருக்கு ஒருவர் பரிந்துரை செய்து கொள்வதால் வாசகர் பரிந்துரை என்ற கட்டத்துக்குள் செல்கிறது என்பதாக நினைக்கிறேன். மற்றபடி சிறந்த ஒரு கட்டுரையை பரிந்துரைக்க வேண்டுமென்றால் 'ஓபன் ஐடி' வாக்களிப்பது கூடுதல் வேலையாக அமைகிறது என்பதால் நல்ல கட்டுரைகளை / இடுகைகளைப் படித்தாலும் பரித்துரைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. பலரும் இதே மன நிலையில் தான் இருப்பார்கள்.

தானாகவே இணைத்துக் கொள்ளும் தமிழ்வெளி தவிர்த்து, தற்பொழுது புதிதாக தமிழிஷ் உட்பட பல திரட்டிகள் இயங்குகின்றன. 'Submit New' என்பதை அழுத்தி ஒவ்வொரு திரட்டியிலும் இடுகையை இணைப்பது கூடுதல் வேலையாக இருப்பதால் தமிழிஷ் போன்ற தளங்களில் எப்போதாவது தான் இணைக்கிறேன். சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது, பரிந்துரைக்காக 1 - 2 நிமிடங்கள் ( ஒரு இடுகைக்காக) செய்வது அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஒரு நாளைக்கு 5 நல்ல இடுகைகளைப் படித்தால் 5 ஐயும் பரிந்துரை செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கும். தற்பொழுது பரிந்துரைகளும் குறைந்துவருகிறது, தமிழ் மண மகுடம் நிலவரம் படி, பரிந்துரைப்பதில் பலருக்கும் விருப்பம் குறைந்து வருவது தெரிகிறது, காரணம் ஓபன் ஐடி வழியாக பரிந்துரையை கட்டுப்படுத்த முயன்றதே என்று நினைக்கிறேன்.

பெறும் மிகுதியான வாக்குகள் தான் ஒரு கட்டுரையின் தரம் காட்டுகிறது என்பதில் உடன்பாடு இல்லை, ஒரு சில கட்டுரைகள் உண்மையிலேயே அப்படி தேர்வாவதும் உண்டு, ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றின் விழுக்காடு குறைவு எனவே அதை கணக்கில் எடுத்துக் கொள்வது சரியாகாது.

தொடர்ச்சியாக இயங்கும் பதிவர்கள் ஒரு 400 பேராவது இருக்கும், அவர்களில் வாரத்துக்கு 7 பேரை நல்ல இடுகைகளை பரிந்துரை செய்ய ('இந்த வார பரிந்துரையாளர்கள்' என்று அறிவித்து தமிழ்மணமே) அழைக்கலாம். அதிலும் ஒற்றைத் தன்மை இருக்கும் ஆனால் அந்த 7 பேருமே ( 7 - ஒரு எண்ணிக்கை மட்டுமே) ஒரே குழுவில் இருக்க வாய்ப்புகள் குறைவுதான். எனவே அனைவரும் தனக்கு பிடித்த பதிவர்களின் பதிவை மட்டும் பரிந்துரைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வாரம் ஒரு இடுகை என்ற கணக்கில் 1000 பதிவர்கள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள், ஒவ்வொருவருக்கும் நட்சத்திர பதிவர் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர்கள் எழுதுவார்களா என்பது ஐயமே, பதிவராக இயங்கும் காலத்தில் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்மணம் (மற்றும் பிற திரட்டிகள்) இது போல் எதாவது செய்யலாம்.

தமிழ்மணத்தின் தனிச்சிறப்பு சூடான இடுகை, அதை ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. போட்டித் தன்மையுடன் வளர்ந்துவரும் பதிவு திரட்டிகளின் எண்ணிக்கைக்கள் கூடும் இன்னேரத்தில் தமிழ்மணம் சூடான இடுகையைத் தூக்கியது தமிழ்மணத்துக்கு பின்னடைவு ஏனென்றால் சூடான இடுகை இல்லை என்றால் அனைவரும் ரீடரில் இடுகைகளைப் படித்துக் கொள்வார்கள், தமிழ்மணத்திற்கு செல்வது குறைந்துவிடும் - இது என் தனிப்பட்ட கருத்து.

எந்த ஒரு திரட்டியும் பதிவர்களின் இடுகைத்தவிர்த்து, திரட்டி செயல்பாட்டில் பதிவர்களின் பங்களிப்பும் இருந்தால் பதிவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள், இருபக்கமும் பயனாக பலனாக இருக்கும்.

15 ஜூன், 2009

பகை, நோய் !

பகைவன் மற்றும் எதிரி இரண்டு சொற்களுக்கும் போதிய இடைவெளியில் பொருள் வேறுபாடு உண்டு, பகைவன் என்பவன் முன்பு நண்பனாக இருந்தவன், எதோ ஒரு பிணக்கின் காரணமாக எதிரியாக மாறி விடுபவன், பகைவன் என்றால் அதுதான் சரியான பொருள் என்றே நினைக்கிறேன். அதாவது முன்னாள் நண்பர்களை பகைவர்கள் என்று சொல்லலாம், நண்பர்களுக்கு முன்னால் முன்னாள் போட்டால் இன்னாளில் முன்னாள் நண்பர் நண்பராக இல்லை என்று தானே பொருள், பகைவர் என்ற மிக உயரிய இடத்துக்கு உயர்த்தாமல் முன்னாள் நண்பர் என்று சொல்வதன் மூலம் இருவருக்கும் கொடுக்கல் வாங்களோ, கெடுத்தல் வீழ்த்துதல் கிடையாது, அதாவது தொடர் பேதும் கிடையாது என்று சொல்வதாகப் பொருள். ஆனால் எதிரிகள் அப்படி அல்ல, நமக்கு முன் பின் அறிமுகம் ஆகாதவர்கள் கூட நமக்கு எதிரிகள் ஆகும் வாய்ப்புகள் உண்டு, எடுத்துக் காட்டிற்கு நாம் செய்யும் தொழில் அதே தொழிலில் நமக்கு முன்பே இறங்கியவர், சமகாலத்தில் இறங்கியவர், பின்பு இறங்கியவர் போட்டித் தன்மை காரணமாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம்மை வீழ்த்த உத்திகள் வகுக்கலாம், அதனை கண்டுபிடித்த பிறகு முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நபர் நமக்கு எதிரியாக (அறிமுகம் இல்லாத மறைமுக எதிரியாக) இருப்பார்.

எதிரிகளை நட்பு ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, விட்டுக் கொடுத்தலும், சில இழப்புகளும் கூறுகள் என்றால் எதிரிகள் நண்பர்களாவது கூறுகள் (சாத்தியம்) ஆகும். ஆனால் பகைவர்களை நட்பாக்கிக் கொள்வது எளிது. முன்பு பழகியதன் நினைவுகள், ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது. அதையும் தாண்டி பகை நட்பாகமல் இருந்தால் அங்கே உயர்வு மனப்பான்மை எனச் சொல்லப்படும் ஈகோவே காரணமாக இருக்கும். என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்த ஒரு நண்பனும் நானும் சண்டையிட்டு பேசிக் கொள்ளமல் தொடர ஆண்டுகள் கடந்தும் எதிரெதிரே பார்க்கும் போது பேசாமல் செல்வதையோ வழக்கமாக்கிக் கொண்டிருப்பதும் இன்றும் கூட தொடரத்தான் செய்கிறது. ஆனால் இருவருக்கும் பொதுவானவர்களிடம் இருவரைப் பற்றியும் கேட்டுக் கொள்வது எங்கள் இருவருக்கும் தெரியும். பேசாமல் இருப்பதற்கு மனத்தடை, ஈகோ என்பதை எல்லாம் தாண்டி இப்படியே இருப்பதும் கூட சிறப்பு என்று கருதுகிறோமா என்று கூடத் தெரியவில்லை. நான் எப்போதாவது ஊருக்குச் செல்வதும், அதிலும் எப்போதாவது தான் எதிரெதிரே சந்திக்கும் வாய்ப்பு, ஆனால் இதே நிலமை அந்த நண்பருக்கும் அவருடைய எதிர்வீட்டில் வசிக்கும் எனது மற்றொரு நண்பருக்கும் கூட உண்டு, இருவரும் பல ஆண்டுகளாக ஆகியும் பேசிக் கொள்வதே இல்லை. இத்தனைக்கும் நாங்கள் மூவரும் முதல் பெஞ்சில் ஒன்றாக நான் நடுவில் அமர்ந்திருந்தும் பேசிக் கொள்ளாமல் பத்தாம் வகுப்பு முழுவதும் முடித்தோம். பலசமயங்கள் நினைத்துப் பார்த்தால் விந்தையாகத்தான் இருக்கிறது.

தீர்க்க முடியாத சிக்கல்கள் பிண்ணி இருந்தால் பகையை நட்பாக்கிக் கொள்வது பெரும் சிக்கல், மற்றபடி பகையை நட்பாக்கிக் கொள்வது மிக எளிது தான். நம்முடைய ஈகோவை நாம் சிதறடித்தால் பகை நட்பாகிவிடும். குறிப்பாக நெருங்கிய உறவினர்களிடம் ஆண்டுகணக்காக முகத்தில் விழிக்காமல் இருப்பது, நெருங்கிய நண்பர்களிடம் ஏற்பட்ட பிணக்கை நினைவில் வைத்திருப்பது இவை எல்லாம் ஒரு தனிமனிதனுக்கு நட்டம் தான். தன்னுடைய மகிழ்ச்சியையும், வருத்தங்களையும் யார் யார் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களை பகையாளியாகவே வைத்திருப்பது, நமக்குத்தான் நட்டம். மற்றபடி முகம் தெரியாதவர்கள், மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லாதவர்களிடம் ஏற்பட்ட பகை நாமாக நினைத்தாலும் வளரவே வளராது, தொடரவும் தொடராது. அதை அப்படியே விட்டுவிடலாம்.

ஒருவரின் நட்பு மற்றும் உறவுகளில் ஏற்பட்ட பகையும், ஒருவர் உடலில் ஏற்படும் நோயும் சரிசெய்யாமல் வளரவிட்டால் தனிமனிதனுக்கு பெரும் இழப்பு. (தலைப்பைத் தொட்டு எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்)

தொடர்புடைய குறள்கள்:

குறள்: 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

(மு.வ விளக்கம் - பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.)

குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

(மு.வ விளக்கம் - பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.)

குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

(மு.வ விளக்கம் - செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.)

12 ஜூன், 2009

தமிழ் பேசுகிறவர்கள் தமிழனா ?

எந்த ஒரு நல்ல முயற்சிக்கும் எதிர்பாளர்கள், எதிரிகள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். தமிழ், தமிழர்கள் மேன்பாட்டில் இது நிறையவே உண்டு. தமிழை அழிப்பதற்கு முனைபவர்களும் தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்வது தான் வேடிக்கை. உயிர் கொலை அல்லது கொல்லுதல் பாவம் என்றாலும் கோவிலுக்காக அதைச் செய்வது புனிதம், நன்மை எனப்படுவது போல், இழிசெயல்களுக்கும் புனிதம் கற்பித்துவிட்டால் எந்த இழிசெயலையும் கூச்சமில்லாமல் செய்யலாம். எனக்கு வடமொழி மீது எந்த வெறுப்பும் கிடையாது ஆனால் அவை வலிந்து திணிக்கப்படும் போது எரிச்சலை ஏற்படுவதை மறுக்க மாட்டேன்.


மிக மிக பொதுவான உண்மை எல்லா மொழியும் முதலில் வெறும் தகவல் பரிமாற்ற கருவி மட்டுமே. அந்த அளவில் அதற்கென்று சிறப்புகள் எதுவும் கிடையாது. ஆனால் எந்த ஒரு மொழியும் அந்த மொழி பேசுபவர்களுக்கு உயிர் போன்றது, சிந்தனை, செயல், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவரவர்களின் தாய்மொழியே ஊட்டி வளர்க்கிறது. பிறமொழிகளைக் கற்றுக் கொள்ளும் போது அறிவுத் திறன் மேலும் வளர்ச்சி அடைகிறது. தேவ மொழி, தேவ பாடை என்று கூறிக் கொண்டு வடமொழி தாங்கிகள் செய்யும் கிறுக்குத் தனத்துக்கு அளவே இல்லை.

பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு நடந்த 'அக்ஷ்ரபியாசம்' நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்: இடம் கொளத்தூர், சென்னை - என்ற படத்தை தினமலர் வெளி இட்டிருந்து.'அக்ஷ்ரபியாசம்' - இது என்ன ? சிறுவர்களுக்கு பள்ளியில் பூணூல் போட்டுவிடுகிறார்களா ? அல்லது பாலியல் விழிப்புணர்வு கல்வி கற்றுக் கொடுக்கிறார்களா ? என்று படிப்பவர்கள் திணறா வண்ணம் படம் போட்டு இருப்பதால் ஓரளவு என்னவாக இருக்க முடியும் என்று ஊகிக்க முடிகிறது.அக்ஷ்ர - என்றால் எழுத்து


அப்யாச - என்றால் பயிற்சி'எழுத்துப் பயிற்சி' என்பதைத் தான் 'அக்ஷ்ரபியாசம்' வடமொழியில் சொல்லுகிறார்கள். பசங்கப் படிக்கப் போறது தமிழ், அதைத் தமிழிலேயே 'குழந்தைகளுக்கான எழுத்துப் பயிற்சி' என்று சொல்வதால் என்ன தாழ்ந்துவிடப் போகிறது ? தமிழைப் புறக்கணித்து வடமொழியைத் திணித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் ? பிஞ்சுவயதில் நஞ்சைக் கலந்தால் பிறகு தமிழ்சிறுவர்களுக்கு தமிழ் பற்று எப்படி ஏற்படும்.நான் தினமலரைக் குறைச் சொல்லவில்லை, வடமொழியின் புனிதம் பறைசாற்றுவதைத் மூச்சாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது தான். அதையும் தமிழர்களிடயே காசுக்கு விற்கிறார்கள், உண்மையிலேயே திறமைசாலிகள், அறிவாலிகள் தான். ஒருவரை தூற்றிக் கொண்டே அவரிடம் விற்பனை செய்தால் விற்பனையாளர் அறிவாளிதானே ?'திலகாஷ்ட மகிஷ பந்தனம்' (காய்ந்த எள்ளுச் செடியும், எருமை கட்டும் கயிறும்) என்ற வெறும் வடமொழித் தொடரை வைத்து பண்டிதர் ஒருவரிடம் தன்னை ஒரு பெரும் அறிவாளியாக வாய்ச்சொல் காட்டி அவரைத் துறத்திய தெனாலி இராமன் கதைகள் போல் தமிழர்களை ஏமாற்றுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
(கதை தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் கேளுங்கள்)


குழந்தைகளின் பள்ளி ஆசிரியராக இருப்பவர்கள் இது போன்ற வடமொழித் திணிப்பிலும், தமிழ் புறக்கணிப்பிலும் முனைந்து செயல்படுவதை தடுப்பது யார் ? அறிவை மஞ்சள் துண்டிற்கு அடகுவைத்தவர்களிடம் இதையெல்லாம் முறையிட்டாலும் சரியாகுமா ? தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரி தமிழர்களிடையேயும், தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். யார் சொன்னது, தமிழ் பேசுகிறவனெல்லாம் தமிழன் என்று ?

10 ஜூன், 2009

ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !

புதுடில்லி: ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது சொல்லுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற சொல்.

ஆங்கில சொற்களை ஏற்றுக் கொண்டு, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் நூல்கள், பாடல்கள், கவிதைகள், இணையம், வலைப்பதிவுகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது சொற்களை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து ஏற்றுக்கொள்வர்.

இந்த வகையில், ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொட ஆயத்தம் விட்டது. இன்று பத்து லட்சமாவது சொல்லை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது சொல்லாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 சொற்கள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த சொற்கள் அனுப்பப் பட்டுள்ளன. இதில், இந்தியாவில் இருந்தும் சில சொற்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த சொல்லும் தேர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த சொல்லையும், பத்து லட்சமாவது சொல் ஆக்கும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில சொல் அறிவிக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் வரவேற்பு பெற்றது.. "ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல செய்தி இதழ்கள், நூல்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே வரவேற்பு பெற்ற ஒரு சொல்லை, வழக்கமாக சிறப்பிப்பதுண்டு; ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில சொல்லாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு தொடர்பே இல்லாத சொல்லாக இருந்தாலும், வேற்று மொழி சொற்கள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி சொற்களும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது சொல்லாகும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

தகவல் : தினமலர்
(தினமலர் திணித்திருந்த வேற்று மொழிச் சொற்களை மொழி மாற்றி போட்டு இருக்கிறேன்)அதில்,
அறிவு சீவி ஒருவரின் கேள்வி :
Posted on ஜூன் 10,2009,09:49 IST
It is good to see the English language is increasing its word strength, Similarly Tamil Language should accept such new words from other well spoken languages all over the world, Will our tamil language '' arvalargal'' consider and accept If the word falls within Tamil ''Ilakkanam''?
by R Ganesh,India

எனது பதில்,

மொழி அறிவு அற்றோர், அல்லது அரைகுறைகள், அல்லது அறிவுரை என்ற பெயரில், அல்லது உண்மையிலேயே ஆர்வம் காரணமாக, நல்லது என்று நினைத்தோ இவ்வாறு கேள்வி எழுப்புவதுண்டு.

தொழில் அல்லது விற்பனைத் தொடர்பில் பயன்படும் இணைப்பு மொழிகளில் பிறமொழிகள் சேர்க்கப்படுவதும், நுழைவதும் அதைப் பயன்படுத்துவதும் உலகவழக்கு. ஆங்கிலம் இயற்கை மொழிகிடையாது, உருவாக்கப்பட்ட மொழி, இன்னும் முழுமையடையாத மொழி எனவே அது பிறமொழிச் சொற்களை கடன்வாங்குவது, ஏற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் "தாய் மொழிகளின்" தேவை இனக்குழுக்குள் உரையாடவும் அடிப்படை கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது, அதற்குமேல் பயன்படுத்தத் தேவையோ அதற்காக சொற்களை கடன்வாங்க வேண்டும் என்கிற நெருக்குதலோ "தாய் மொழி"களுக்கு ஏற்படுவதே கிடையாது. எனவே ஆங்கிலத்தை ஒப்பிட்டு எந்த ஒரு மொழியும் சொற்களை ஏற்றுக் கொள்ளுமானால் அது மற்றொரு ஆங்கிலமாக மாறிவிடும், அதனுடைய இயற்கைத் தன்மையில் இருக்காது. ஒரு மொழியில் புழங்கும் சொற்களில் 50 விழுக்காட்டு சொற்கள் பிறமொழி என்றால் அந்த மொழி புதுப் பெயரை எடுத்துக் கொள்ளும், திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றமும் தன்மையும் அது தான்.

மொழிகளை அந்தந்த இனக்குழுக்கள் சரிவர பராமரிக்காவிடில் மொழிகள் திரிந்து கிளைக்கும் அல்லது அழிந்து போகும் வாய்ப்புள்ளது. வட இந்திய மொழிகளாக வடமொழி பலமொழிகளாக திரிந்தும் மூல மொழியான வடமொழி எந்த ஒரு சிறுநகரத்திலும் பேசப்படும் மொழியாகவோ, புதிய இலக்கியங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மொழியாகவோ தற்போதைக்கு இல்லை. அதில் உள்ள பழைய நூல்களுக்காகவும், இறைவழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் அதனை தேவைக்கு என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளர்ச்சி இன்றி நின்றுபோன மொழிகள் என்ற வகையில் தான் வடமொழியும் இருக்கும், சிலர் வெளிப்படையாகவே இறந்த மொழி என்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வடமொழிகளுக்கும், சில திராவிட மொழிகளுக்குமான புதிய சொற்களின் வேர்சொற்களுக்காக வடமொழியின் தேவை என்றும் உண்டு, அதனால் வடமொழி தொடர்புள்ள மொழிகள் வடமொழியை வாழவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்மொழி பிறமொழி சொற்களை ஏற்றுக் கொண்டால் ஆங்கிலம் போல் தழைக்கும் என்பது மொழி அறிவற்றோரின் கற்பனை வாதம். ஏனெனில் இனமொழியாக அடையாளப்படுத்தப்படும் எந்த ஒரு மொழியும் பொது மொழியாவது கடினம். தமிழ் இனமொழி, தமிழர்களுக்கு தாய்மொழி என்ற அளவில் தான் என்றும் இருக்கும், அதனை இனம் தாண்டி பேச வைக்கமுடியும் என்பதற்க்கான தேவை இருந்ததில்லை. தமிழர்கள் உலகம் முழுவதையும் ஆளுகைக்கு கொண்டுவந்தால் தமிழ்மொழி பிற இனத்தாலும் பேசப்படும், ஏற்கப்படும் அல்லது திணிக்கப்படும் என்ற வகைக்குள் வரும், ஆனால் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழன் உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் நடக்கின்ற செயலா ? நாம் உலகை ஆளவோ, உலகத்தினரை தமிழ் பேசவைக்கவோ முயலவேண்டாம். எனவே வேற்று மொழிச் சொற்களின் ஏற்பு தமிழுக்கு சிறப்பையோ, வள்ர்ச்சியையோ ஏற்படுத்தாது. முடிந்த அளவில் பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிமாற்றிப் பயன்படுத்தும் அளவுக்கு நம்மிடையே வேர்சொற்கள் (Word Root / Orgin or the Word) நம்மொழியில் உண்டு. வேர் சொல் இல்லாத மொழிகள் தான் பிறமொழிச் சொற்களை கடன் வாங்கும், நமக்கு அதன் தேவை இல்லை. இணையம், வலைப்பக்கம், வலைப்பதிவு என ஆயிரம் ஆயிரம் சொற்களை நம்மால் அமைக்க முடிந்திருக்கிறது, அதை பயன்படுத்து வழக்கில் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.

கலவை !

சென்ற திங்கள் (8/வெள்ளி/2009) பதிவானந்தமயி துளசி அம்மா சிங்கைக்கு திடீர் விஜயம் புரிந்தார். தம்பதி சகிதமாக கோவியார் குடும்பத்துக்கு மட்டும் தனிப்பட்ட காட்சி தந்தார்.

அதுவும் பெருமாள் கோவிலில் துளசி என்ன பொருத்தமான இடம் !!! அங்கே சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன வீணை இசை, கருநாடக இசையில் வைணவ தமிழ்பாடல்கள், சதிராட்டம் (பரதம்) நடந்தது. 5 - 6 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கைப் பெருமாள் கோவிலுக்கு துளசி அம்மாவின் அழைப்பின் பேரில் சென்றுவந்தேன்.
துளசி அம்மா ஜிகேவை இழந்து உடைந்து போய் இருக்கிறார். சும்மா நாமெல்லாம் ஒரு விலங்கு (பூனை) மீது இவ்வளவு பாசமாக இருக்க முடியுமான்னு நினைக்கிறோம். ஒரு உயிருடன் பாசத்துடன் பழகிவிட்டால் அந்த உயிர் மனுசனாலும், விலங்கானலும் ஒண்ணுதான். உடல் அமைப்பு தானே வேறுபடுகிறது. துளசி அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆனால் சோகங்கள் பகிர்ந்து கொண்டால் பாதியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. போகும் இடங்களுக்கு இப்போதும் ஜிகேவுடன் தான் செல்கிறார். ஆமாம் 'கிரிமேசன் செய்து அஸ்தி வாங்கி என்னுடனே எடுத்துச் செல்கிறேன்' என்றார். :((விடைபெறும் முன் கோவில் எதிரே ஒரு ஆந்திரா சைவ உணவகத்தில் துளசி அம்மாவின் கருணையால் உண்டு வந்தோம், அங்கே சுவற்றில் இருந்த சித்தி புத்தி விநாயகரின் திருமணக் கோலம். 'இதப் பாருங்க பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகி இருக்கு' என்று காட்டினார். அன்று இரவு சமையல் வேலையில் இருந்து மனைவி தப்பினார். துளசி அம்மாவின் அடுத்த விஜயம் சென்னை. துளசி அம்மா இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதால், பக்தர்கள் ஏமாந்துவிடக் கூடாதே என்பதற்காக, அறிவதற்கரிய மந்திரத்தை அறிந்துவந்த இராமானுஜர் கோபுரம் ஏறி பொதுமக்களுக்கு அறிவித்தது போல் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தகவல், எனவே ரகசியம் காக்க வேண்டுகிறேன். :)

*****

எச்1என்1 பன்றிக்காய்சல் வைரஸ் வெகு விரைவாக பரவி வருகிறது "ராகெட்டை தேடிக்கிட்டு மூக்குக்கு அடியில் வந்துட்டான்" விக்ரம் படத்தில் சுகிர்தராஜ சத்தியராஜ் பேசும் சுஜாதாவின் பேச்சுரை. அதுபோல் எச்1என்1 சிங்கை வரை வந்துவிட்டது. வெகுவிரைவாக பரவும் இந்த தொற்று நோய் குறித்து உலக நல நிலையம் (WHO) பெரிய அளவில் கவலை தெரிவித்து வருகிறது. சிங்கையில் நலிவடைந்தோர், தொற்றியோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. உலக அளவில் 25 ஆயிரத்திற்கும் மிகுதியானோருக்கு பரவி இருக்கிறது. 150க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். நோய்க்கு தடுப்பு கண்டுபிடிக்காவிடில் அணு ஆயுதத்தின் தேவை இல்லாமலேயே எல்லோரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவுதான்.


*****

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் 'பசங்க' மிகவும் நன்றாக இருந்தது, அஞ்சலிக் கதையில் அஞ்சலி மற்றும் மேல்தட்டு சிறுவர்கள், காதல் ஜோடி என கமர்சியல் இருந்தது. இது அஞ்சலி இல்லாமல் முழுக்க முழுக்க கிராமத்து சிறுவர்களின் பள்ளிக் குறும்புகள் நிறைந்த படம். வில்லச் சிறுவன் நடிப்பு அட்டகாசம். சிறுவர்களின் குறும்புத்தனங்களில் முகம் சுளிக்காதவற்றை படமாக்கி இருக்கிறார்கள். யதார்த்தம் என்றப் பெயரில் பள்ளிப்பசங்க சிகெரெட் குடிப்பதையெல்லாம் காட்டுகிறேன் என்று காட்டி இருந்தால் ரசிக்க முடியாமல் போய் இருக்கும். பசங்க இயக்குனருக்கும், பசங்களுக்கும், அவங்க பெற்றோர்களாக நடித்தவர்களுக்கும், அந்த காதல் ஜோடிகளுக்கும் பாராட்டுகள்.

*****

ஈழத்தமிழர் இன்னல் குறித்து எங்கோ யாருடைய பதிவிலோ படித்த பொன் மொழி ஒன்று

'கண்ணெதிரே நடக்கும் கொடுரங்களை கண்டும் காணோதர் மன நிலை பிறழ்ந்தோர். அவர்கள் ஒன்று மனநோயாளியாக இருக்க வேண்டும் அல்லது தன் நலம் ஓங்கியவராக இருக்க வேண்டும். சிந்திக்க தெரியாதவர்கள் மனநோயாளி என்றால் மறுப்பவர்களும் மனநோயாளிதானே ?'

*****

ஒருவர் : அந்த சாமியாருக்கு செல்வாக்கு எப்படி ?

மற்றொருவர் : அதான் பாக்குறிங்களே, கையில செல்போன் வச்சிருக்கிறார், அவரு பேரே 'செல்வாக்கு சாமியார்' தான். செல்போன் வழியாகத்தான் வாக்கு சொல்லுவாராம்.

- இது ஸ்வாமி ஓம்கார் குறித்த ஜோக் அல்ல :)

9 ஜூன், 2009

பதிவர் லக்கி லுக்கின் இணைய சாதனை !

அலெக்சா மதிப்பீட்டில் லக்கிலுக் என்கிற யுவ கிருஷ்ணாவின் http://luckylookonline.com என்கிற அவருடைய இணைய தளம், அலெக்சா.காம் பட்டியல் படி உலகம் முழுவதில் இயங்கும் பலரால் படிக்கப்படும் முதல் ஒரு லட்சம் இணைய தளங்கள் என்ற எல்லைக்குள் ஒன்றாக வந்திருக்கிறது.

இணைய இதழ்கள், செய்தித்தாள்கள் என வாசிக்கப்படும் பொதுச் சேவை இணைய ஊடகங்களில், ஒரு பதிவர் தனது பதிவை, அதுவும் தமிழில் எழுதி, தமிழ் வலைப்பதிவு ஒன்றை முதல் ஒருலட்சத்திற்குள் கொண்டு வரும் படி எழுத்தில் சாதனை செய்தது பாராட்டத்தக்கது.பதிவர் மற்றும் நண்பர் என்கிற முறையில் லக்கி லுக்கை பாராட்டி மகிழ்கிறேன்.யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்