பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2017

பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்

நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.

*****

பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர் சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார்,  உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் 

3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.

நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்

புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் 

அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் 

நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை

அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்

நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்
மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்