பின்பற்றுபவர்கள்

27 மார்ச், 2012

கலவை 27/மார்ச்/2013 !

கலவையாக எழுதி ரொம்ப நாள் ஆச்சு, இடையில் பூனையார் புகுந்ததால் கலவைக்கு நேரம் ஒதுக்கவில்லை.

செல்வேந்திரன் : சென்ற பிப்ரவரி மாதம் திருப்பூர் பதிவர் செல்வேந்திரன் பணித் தொடர்பில் சிங்கை வந்துச் சென்றார், சிங்கைப் பதிவர்களை சந்திக்க முன்கூட்டியே விருப்பம் தெரிவித்திருந்தார். செல்வேந்திரன் இளம் பத்திரிகையாளர் இந்து நாளிதழில் பணியாற்றுகிறார். ஈராண்டுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். மூன்றாண்டுகளாக அவ்வப்போது தனது வலைப்பதிவில் எழுதிவருகிறார், விஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஒருமுறை இவரை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைத்திருந்தார். சிஙகை வந்திருந்தார், நண்பர் ரோஸ்விக் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அவர் சிங்கை வந்திருந்தபொழுது அவரது அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்ததால் எங்களாலும் உடனேயே சந்திக்க முடியவில்லை, பின்னர் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (26/2/2012) அன்று முஸ்தபா அருகே ஒரு வெளி உணவகத்தில் வட்டமேசையாக சந்தித்தோம். மனிதர் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளை கொண்டிருக்கிறார், எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசினார், சுறுக்கமாகச் சொன்னால் அன்பால் செய்யப்பட்ட உருவங்களில் செல்வேந்திரனும் ஒருவர், சந்தித்துப் பேச மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, நல்ல நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பது மகிழ்வானது தானே, அவருக்கும் அம்மகிழ்ச்சியை நாங்கள் குறைவில்லாமல் கொடுத்திருப்போம் என்றே நினைக்கிறேன். பின்னர் வானூர்தி நிலையத்திற்குச் சென்று வழியனுப்பித் திரும்பினோம்.





ராசி (எ) ராஜ்குமார் சின்னசாமி : கொஞ்சம் பெரிய உருவம், எனக்கு வலைப்பதிவு மூலம் அவ்வளவாக பழக்கம் கிடையாது, இரண்டொரு முறை பின்னூட்டத்தில் கடுமையாக பதிலும் சொல்லி இருக்கிறேன், ஆனால் கூகுள் ப்ளஸ் மூலம் தான் இவர் நன்கு நெருக்கமானார், இவருக்கும் நமக்கும் பொதுவான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை, இவர் முழுக்க முழுக்க அம்மா ஆதாரவாளர், அரசியல், சமூக எண்ணங்கள் தவிர்த்து பார்த்தால் மனுசன் ரொம்பவுமே ஜாலியான ஆளு, சில பேரிடம் பேசும் போது எப்போதும் கிண்டலும் கேலியுமாகத்தான் பேசுவோம், அந்த வகையான ஆளு இவர். எவ்வளவு ஓட்டினாலும் சிரித்துக் கொண்டு பதிலுக்கு ஓட்டுவார், மற்றபடி கோபப்படமாட்டார். இவரும் சென்ற வாரத்திற்கு முன் முன்கூட்டியே சொல்லிவிட்டு சிங்கை வந்து சென்றார், ஜோதிபாரதி விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தார். வலைப்பதிவு நண்பர்கள் வழக்கமாக கூடும் கொடை கடையில் சந்தித்தோம், மறுநாள் பதிவர் கிரி சிங்கையின் மையப் பகுதிக்கு இவரை அழைத்து சென்று வந்தார், விமான நிலையத்திற்கும் சென்று அனுப்பினோம். அன்பால் செய்யப்பட்ட பெரிய உருவங்களில் ராசியும் ஒருவர் (இருவர் என்று சொல்லனுமா ?, அதான் பெரிய உருவம் என்று சொல்லியாச்சே)




இந்த இருவருமே எல்லோரிடமும் தயக்கமின்றி, மகிழ்ச்சியாக ரொம்ப நாள் பழகியவர்கள் போலவே பழகினர், வலைப்பதிவின் பிற நன்மைகள் என்றால் அது நமக்கு நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது. தனிமனித தாக்குதல் இன்றி எழுதினால் எந்தப் பதிவரையும் எப்போதுமே சந்திக்க நமக்கும் தயக்கமே இருக்காது. சிங்கைவரும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் எங்களில் ஒரு ஐந்து பேரையாவது சந்திக்க முடியும், ஆனால் ஒரு சிலர் சிஙகைக்கு வந்து சென்று பிறகு சிங்கைக்கு சென்றதாக எழுதும் பொழுது, நம்மை ஏன் இவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்ற கேள்வி நிற்கிறது. வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் சந்திக்க எங்களுக்கு நேரம் இருக்கும்.

******

இருவாரங்களுக்கு முன் மலேசியாவிற்கு பணித் தொடர்பில் சென்றிருந்தேன், சென்று திரும்பும் போது அலுவலக நண்பர் 'புத்ரா ஜெயா' என்னும் நகருக்கு அழைத்துச் சென்றார், அது மலேசிய தலைநகர் கே எல் விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் இடம் (இது நகரின் மையத்தில் இருந்து 70 கிமி தொலைவில் உள்ளது. புத்ரா ஜெயா' சற்று மலைபாங்கான மற்றும் ஏரிகளுடன் அமைந்த அழகிய நகரம், வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த நகரின் உருவாக்கம் மலேசிய அரசின் தலை நிர்வாகத்திற்காகவே உருவாக்கப்பட்டதாம், பளிச்சிடும் வேலைப்பாடுகளுடன் அகலமான ஓரளவு உயரமான கட்டிடங்களில் அரசு அலுவல்கள் இயங்கிவருகின்றன. அருகே கலை நயத்துடன் கட்டப்பட்ட தொழுகைக்கான மசூதி, ஆக்ரா ஆற்றுக் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகால் போல் ஏரியின் பக்கத்தில் அமைந்துள்ளது அந்த மசூதி முகப்பில் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய நிறுத்துமிடம், அதன் கீழே சுற்றுலா பொருள்கள் விற்கும் கடைகள். அங்கு சென்ற பிறகு மழைத்தூறல் அந்த இயற்கை எழில் சூழ்ந்த நகருக்கு மேலும் மெருகூட்டியது, எனக்கு ஐரோப்பிய நகரங்களை நினைவு படுத்தியது, அங்கு இருந்த பேருந்து நிறுத்தம், தொங்கு பாலங்கள் கூட அனைத்துலக தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.






*****

சென்றவாரத்திற்கு முந்தைய வாரம் சிங்கையில் ஐடி ஷோ எனப்படும் தகவல் தொழில் நுட்ப விற்பனை அங்காடி நடைபெற்றது, கட்டுக்கடங்காத கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை IT Show, PC Show, Comex, இன்னும் ஏதாவது பெயரில் நடந்து கொண்டே இருக்கும், அப்படி என்ன தான் வாங்குவார்களோ, கூட்டத்திற்கு குறைவே இருக்காது. குறிப்பாக சீனத் தயாரிப்புகள் தான் 90 விழுக்காடு விற்பனையாகிறது.


*****

சிம்பு மட்டும் தான் பாடுவாரா ? 'யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தருயாடி..........'



( என் படம் என்று சொல்லி என் பழைய படங்களுக்கு இணைப்புப் கொடுக்கும் மகராசன்களின் அயர்ச்சியைப் போக்கவும், ஜெலுசில் விற்பனையை கூட்டவும் இந்தப் புதியப் படம்)

26 மார்ச், 2012

தோழர் செங்கொடி மற்றும் வினவு !

தோழர் செங்கொடியுடன் எனக்கு நேரடியான பழக்கம் எதுவும் இல்லை, தமிழ்மணத்தில் அவரது இடுகைகளைப் படிப்பேன், காரணம் தெளிவான எழுத்து நடை மற்றும் கைதேர்ந்த விவாதம், தரவுகள், படங்கள் சேர்த்து தெள்ளத் தெளிவாக எதையும் எழுதுவதுடன் அது குறித்துவரும் விவாதங்களுக்கு மிகத் தெளிவாக விடை சொல்லுவார், ஆதாரமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதாமல் பிறகு இவை சர்சையானால் எப்படி பதில் சொல்லுவது உள்ளிட்டவற்றை நன்கு உணர்ந்தே ஊடக பொறுப்புணர்வுடன் எழுதுபவர் என்பதால் அவர் பதிவை மவுனமாக படித்துச் செல்வேன், குறிப்பாக பின்னூட்டங்களையும்.

தோழர் செங்கொடியின் பதிவுகள் கடந்த பிப்ரவரியில் பொதுப்பார்வையில் இருந்து மூடப்பட்டு இருந்தது, உள்ளே நுழைந்து படிக்க கடவுச் சொல்லெல்லாம் கேட்டது, நான் உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை, காரணம் ஒருவேளை கொள்கை அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறாரோ அப்படிப்பட்டவற்றை படிக்கத் தேவை இல்லை என்று விட்டுவிட்டேன், தமிழ்மணம் தொடுப்பிலும் அவரது இடுகைகளைக் காண முடியவில்லை, இதற்கு இடையே மார்ச் துவக்கத்தில் கூகுள் ப்ளஸ் மூலம் அவரது இடுகைக்கான இணைப்புகள் கொடுக்கபட்டிருந்தது, உள்ளே சென்று படித்த போது அதிர்ச்சியே மிஞ்சியது. மதரீதியிலான விமர்சனங்களை எழுதுபவர்கள் தொடர்ந்து அதனை செய்யமுடியாது, அதற்கான அச்சுறுத்தல்களை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த போது கிட்டதட்ட வியர்த்தே விட்டது.

பொதுவாக மதவாதம் பற்றிய விமர்சனங்களை மதவாதிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தவிடயம் என்றாலும் அதனை எதிர்க்கும் செயல்களில் இவ்வளவு தூரம் கீழ் இறங்குவார்கள் என்பது கொஞ்சம் கற்பனைக்கு எட்டாதவை என்றாலும் மதவாதிகளை விமர்சனம் செய்பவர்கள் பின்விளைவுகளை கொஞ்சம் கூடுதலாகவே நினைத்துக் கொண்டு தான் எழுதவேண்டியுள்ளது, சென்ற ஆண்டில் 'கேரளாவில் கை எடுக்கப்பட்ட பேராசிரியர் ஒருவரை நினைவு கொள்க'. தோழர் செங்கொடிக்கு கை எடுக்கப்படவில்லை என்பது ஆறுதல் ஆனது என்றாலும், அவர் பணிபுரிந்த நாட்டில் இருந்து மிரட்டப்பட்டு தமிழகம் துறத்தப்பட்டிருக்கிறார். ஒரு மதவாத நாட்டில் இருந்து அந்த மதத்திற்கு எதிரான கருத்துகளை எழுதியது அவர் செய்த அவரது கொள்கை அளவில் தவறு என்று சொல்லமுடியாது, ஆனால் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்திருந்து எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டு இருந்ததை அவரது 'முட்டாள்' தனம் என்றே நினைக்கிறேன். கம்யூனிசம் பேசி முதலாளித்துவத்திற்கு எதிராக பேசுபவர்கள் பலர் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணி செய்பவர்களாக இருப்பது முரண் என்பது போல் தான் தோழர் செங்கொடி கம்யூனிசம் பேசுபவர் முதலாளித்துவத்திற்கும். மதவாதத்திற்கும் எதிரானவர், அவற்றிற்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களின் கீழ் வேலைப் பார்ப்பதும், அதை தனிமனித பொருளாதார தோற்றுவாயாக நினைத்திருந்ததும் கொள்கை முரண், கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றவர் அங்கு அடக்கிக் கொண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்தது அவருடைய முட்டாள் தனம் என்றே திரும்பச் சொல்கிறேன், இங்கு நான் 'முட்டாள்' என்று குறிப்பிடுவதற்கு நண்பர் செங்கொடி சினந்தாலும் பரவாயில்லை, அவர் இரண்டு குதிரை மீது சவாரி செய்ய முயன்றிருக்கிறார் என்பதால் இவ்வாறு சொல்கிறேன்.

இங்கே ஏன் தலைப்பில் வினவு இடம் பெற்றுள்ளது ? யாரோ துரப்ஷாவுக்கு கட்டுரைகள் எழுதிய வினவு குழு, தோழர் செங்கொடி வேலைப் பறிபோய் உயிருக்கு பயந்து தமிழகம் திரும்பியது பற்றி வினவு பதிவில் எந்தக் கட்டுரையும் இடம் பெறவில்லை, புனைவு எழுதி சீண்டப்பட்டது போல் தனிப்பட்ட ஒரு பதிவர் பிரச்சனையாகவும் தெரியவில்லை. நடந்தது மதவாத விமர்சனம் தொடர்பாக நடந்த அச்சுறுத்தல் மற்றும் வேலை இழப்பு அதன் மூலம் பணிய வைக்க நடந்த முயற்சி, அதில் மதவாதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவே நேரிடுகிறது, இவற்றை அறிந்தும் வினவு குழுவினர் அதுபற்றிப் எழுதாமல் விட்டது, தோழர் செங்கொடியின் இரட்டை நிலைப்பாடோ என்று எண்ண வைக்கிறது, வினவுக்குழு விளக்கினால் நன்று.


மதவாதம் பற்றி எழுதும் போது சொல்ல வந்ததை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் சினந்து எழுவார்கள் என்பது தெரிந்தவிடயம் தான், எனக்கு அவ்வப்போது 'நீ வேலை செய்யும் நாட்டின் சட்டம் ஒழுங்கு உனக்குத் தெரியுமா ?' என்று மிரட்டல் விடுகின்றனர், இத்தனைக்கும் நான் எந்த மதத்தையும் நேரிடையாக விமர்சனம் செய்வதே கிடையாது, அது எனது கோழைத்தனம் என்றே நான் ஒப்புக் கொண்டாலும், அத்தகைய கோழைத்தனங்களுக்கு மதச் சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதையும் சொல்லிக் கொடுக்காத மதங்களே காரணம் என்பதை ஒப்பு நோக்க எனது கோழைத்தனம் எனக்கு அவமான ஒன்று அல்ல, அவை மதவாதிகளுக்கும், அவர்களின் சகிப்புத்தன்மைகளுக்கும் அவர்களே பிறரிடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமானம்.

இருந்தாலும் மதவாத எதிர்ப்பாக எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியவை இவை என்பது தோழர் செங்கொடிக்கு நேர்ந்த கொடுமைகளில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை,

1. மதவிமர்சனம் செய்பவர்களுக்கு நேரிடையாக, மறைமுகமாக மிரட்டல் ஏற்படலாம்
2, தோழர் செங்கொடிக்கு நேர்ந்தது போல் வேலை இழப்பும் பொருளாதாரா இழப்பும் ஏற்படலாம்
3. கடுமையான மன உலைச்சல் ஏற்படலாம் (இக்பால் செல்வன் என்பவர் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது, என்று கூறி பதிவு எழுதுவதை விட்டு, பதிவுகளை மூடிவிட்டார்)
4. அனுமதியில்லாமல் (பதிவர்) புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி வசைபபடலாம்
5. உயிருக்கு ஆபத்து (?) அந்தளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை என்பது தான் தற்போதைய ஆறுதல்.

*********

நாம் தமிழ் சூழலில் தமிழில் எழுதுகிறோம் என்று தமிழன் என்பதற்காகப் பெருமைபட்டாலும், இதே தமிழ் சூழலில் மதவாதிகளும் அங்கமாக அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது எழுதி மயிரையா புடுங்கப் போகிறோம் ? என்று வெறுப்பாகவும் உள்ளதை நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன், தாய்மொழி, இனம் இவற்றையெல்லாம் வெற்றி கொள்ள மதவாத விசச்செடிகள் ஒரு குறிப்பிட்ட இன சமூகத்தில் ஊன்றப்படும் போது நாளடைவில் அச்சமூகம் தனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு சாகும், இதற்கு தமிழ் பேசுபவனும் விதிவிலக்கு இல்லை.

நான் எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் எதிரி அல்ல, அதே போல் ஒரு குறிப்பிட்ட மதக் குழுதான் அந்த மதத்தின் அடையாளம் என்று சொல்லப்படுவதையும் நான் புறக்கணிக்கிறேன், ஏனெனில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னிடையே நல்லத் தோழமையில் உள்ளனர்.


23 மார்ச், 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !

இலங்கைப் போர் குற்றம் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராகவும் மதவாத நாடுகளே பெரும்பாலும் வாக்களித்துள்ளனர். இதற்கு அடிப்படைக்காரணம் என்று நம்பப்படுபவை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை என்பதைவிட முன்பிருந்த விடுதலை போராளிகளுக்கும் இலங்கைவாழ் மற்றொரு மதத்தினருக்கும் இடையேயான பகைத்தான். ஆனால் பிரச்சனையோ விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கையரசுக்கும் நடந்த போர் பற்றியதல்ல, போரில் கொடுரமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைப் பொருத்தும், அவர்களை இன்றும் முள் வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அவர்களின் உடைமையை பறித்தது பற்றியும் தான் என்பதை மதவாத நாடுகள் சிந்திக்க மறுக்கின்றன. அதாவது முற்றிலும் மனிதாபிமானதிற்கு இழைத்த கொடுமை தொடர்பிலேயே தீர்மானம் உருவாகியும் அதற்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசை பணிய வைக்கவும் தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தாம் மனிதாபிமானத்திற்கு ஆதரனான நாடு என்கிற பிம்பத்தை அமெரிக்க உருவாக்கி அரசியல் செய்தாலும் வீடற்ற, உறவற்ற தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்தால் சரி என்ற அளவில் தான் இதனை நினைக்க வேண்டியுள்ளது.

வாக்களிப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள மதவாத நாடுகள் உலகிற்கு புரிய வைக்கும் பாடம் இதில் அடங்கியுள்ளதையும் அதன் மூலம் மதவாத சக்திகள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தாம் புரிந்து கொள்ளவேண்டும், தானோ தன்னைச் சார்ந்தவர்களோ பாதித்துள்ளதாக அறிந்தால் மனிதாபிமானம் என்பதெல்லாம் சிந்தனைக்குள் வரத் தேவை இல்லை என்பதை தான் இந்த நாடுகள் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளன, மதங்களும் மதவாதிகளும் காட்டும் மனிதாபிமானம் என்பவை போலித்தனமானது என்று பிறர் கூறும் போது ஆவேசப்படும் மதவாதிகளின் முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களாலேயே அகற்றப்படுவதை பார்த்தும் மூடிக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு மதவாதி இன்னொரு மதவாதியால் தாக்கப்படும் போது அங்கே மனிதாபிமானம் பேசுபவர்களுக்கு வேலை இல்லை, எதையும் மத அரசியல் கண் கொண்டு பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்பதைத் தான் மதவாதிகள் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார்கள், மோடி அரசின், இஸ்ரேல் அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கூட நாம் கண்டு கொள்ளாமல் அதை வெறும் மதவாத அல்லது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும் என்பதை நமக்கு மதவாதிகள் தான் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இனி எங்காவது எங்கள் மதத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று ஓலங்கள் கேட்கும் போது அதை நாம் வெறும் மதவாத ஓலம் என்று கேட்டுக் கொண்டு கடந்து செல்வது தான் நமக்கான நடைமுறைகள் என்பதை மதவாதிகளே நமக்குச் சொல்லித்தருகிறார்கள்,

மதவாதிகள் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ? அவர்களால் ஒரு நாளும் மனிதாபிமானத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை மதம் தாண்டிய சிந்தனையாக கொண்டுவந்துவிடவே முடியாது, மதவாதிகள் பேசும் மனிதாபிமானம் போலியானது, மத சார்புநிலையானது அப்படியும் அவர்களால் மனிதாபிமானம் பற்றிய கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் அவை வெறும் மதம் பரப்புதல் என்ற செய்ல்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி மட்டுமே.

மதவாதிகள் குறிப்பிடும் உலக இறுதி நாளின் முன்பே மதவாதிகளால் மனிதாபிமானம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் பிறகு இந்த உலகம் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன ?

கடவுள் நம்பிக்கைக் குறித்த சிந்தனைகளில் உலகம் மாற்றம் விரும்பி அதனை அழித்திவிட விரும்புக் கடவுள் அதனை செயல்படுத்த இறக்கிவிடுபவை தான் மதமும் மதவாதிகளும் என்றே நினைக்கத் தோன்றுகிறது, உலகில் மதவாதிகளால் நடந்த ஆக்கப்பூர்வமானவை என்று ஏதேனும் இருக்கிறதா ? என்று நினைத்துப் பார்த்தால் நான் கூறி இருப்பது உண்மையே என்று உணரத் தோன்றும்.

மதம் பேசும் மனிதாபிமானம் என்பவை தன் கூட்டதாரை மட்டுமே சார்ந்தது, ஒரு மதவாதியால் 'அண்டை வீட்டுக்காரருக்கு மாறு (கெடுதல்) செய்யாதீர்கள் ' என்கிற கருத்துகள் மனிதாபிமான கருத்துகளாக முன் வைக்கப்பட்டால், இந்த அண்டைவீட்டினர் என்பதை நாம் ஒரே மதத்தைச் சார்ந்த அண்டைவீட்டினர் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.

21 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 4 !

வழக்கம் போல் நேற்று கனவில் வந்த பூனையாருக்கு நான் சுண்டக் காய்ச்சி ஏலக்காய் போட்டப் பாலை எடுத்து வைத்தேன், 'பூனைச் சாமி நான் சைவம் என்கிட்ட மீன்களை எதிர்பார்க்காதே' என்று கூறிவிட்டேன், 'ஆன்றோர் சான்றோர் அன்பர்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், ஆனால் பூண்டு மட்டுமே ஆகாது' என்று குறிபிட்டார். 'பூனையாரே உங்கள் மார்க்கம் உண்மையானது தானா ? என்று பல்வேறு தரப்பினர் எப்போதும் என்னை கேட்டுவருகின்றனர்' என்றேன், 'பொய்களையும் திரித்தலையும் கேட்டுப் பழக்கப் பட்டவர்கள் ஐயுறுவது இயல்பு தானே' என்று சொல்லிவிட்டு, 'என் மார்க்கத்தினரடிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலை உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு கேள்வியும் பதிலுமாக அவரே சொன்னார்.

"பூனையார் உண்மையான கடவுளா ?"

"அதில் எங்களுக்கு ஐயம் என்பதே கிடையா ?"

"பூனை எப்படிக் கடவுளாகும் ?"

"எவ்வளவோ மக்கள் பூனையாரை விட்டுவிட்டு எதை எதையோ, சனிமூலை, தெற்கு வடக்கு , வடமேற்கு என்று திசைகளையெல்லாம் புனிதம் என்று வணங்குவதும், திசை வணங்கியாக இருப்பது எங்களுக்கும் கூட அருவெறுப்பாகத்தான் இருக்கிறது"

"ம் வேலிட் பாயிண்ட், உங்கள் வழிபாடு சாத்தானுக்கு செய்யும் வழிபாடு போன்றதன் வேற பெயரா ?"

"பூனையார் சாத்தான் அல்ல, பூனையார் வழிபாட்டினருக்கு மற்ற கடவுள்களும் சாத்தான் இல்லை, எங்களுக்கு எங்கள் வழி"

"நீங்கள் பூனையார் பெயரில் ஒரு சிலை வணங்கி தானே ?"

"பூனையாரின் உருவத்தை நாங்கள் வணங்குவதில்லை, உருவத்தினுள் இருக்கும் பூனையாரைத் தான் வணங்குகிறோம், ஓவியங்களின் உயிர் அது வரையப்படும் ஊடகத்தின் மீது, வண்ணத்தின் மீது இல்லை, பார்பவரின், வரைபவரின் கண்களில் தான் உள்ளது, பூனையாரின் சிலை எங்களுக்கு ஒரு ஊடகம் போன்றதே, பூனையாரின் கோவிலின் மேல் கூரையைப் பார்த்து தான் நாங்கள் வழிபடுவோம், பூனையார் சிலை இருக்குமிடம் எங்கள் வழிபாட்டிற்காக கூடும் இடம் மட்டுமே, கடவுள் பூனை வடிவானவர் என்பதை நாங்கள் நினைத்துக் கொள்ள அந்த சிலைகள், மற்றபடி பூனையார் வடிவ சிலையை நாங்கள் வணங்குவது கிடையாது, அலங்கரிப்பது மட்டுமே, எங்களைப் பொருத்த அளவில் சிலையை வணங்குவது தவறும் இல்லை, வணக்கம் செலுத்தப்படுவதற்கான நோக்கத்தைவிட மனத் தூய்மை மிக மிக அவசியமானது என்று நினைக்கிறோம், நீங்கள் ஒரு சிலை வணங்கியாக இல்லாமல் இருந்து உங்கள் மனம் குப்பையாக இருந்தால் உங்கள் வழிபாட்டினால் பயன் ஏதும் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் சரிதானே ?"

"உங்கள் பூனையார் மார்கததை நீங்கள் களைத்துவிட்டு அல்லாவையோ, ஏசுவையோ வழிபடுவதுதான் உங்களை சொர்க வாசலில் நுழையச் செய்வதற்கான வழி என்று தெரிந்துள்ளீர்களா ?"

"சுத்த பேத்தல், அவர்களை வழிபட்டவர்கள் சொர்கம் தான் சென்றார்கள், செல்லுவார்கள் என்பதற்கான ஆதரங்கள் இதுவரை எதுவும் இல்லாத போது அதுவும் வெறும் நம்பிக்கை தானே ?, பூனையாரை வழிபட்ட போது தங்கம், வைரம் என்று எகிப்து நகரமே செல்வசெழிப்பாக சொர்கமாகவே காணப்படது, பின்னர் படையெடுப்பளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, ஆராய்ச்சி என்ற பெயரில் எஞ்சி அனைத்தையும் தற்காலத்தில் கூட கொள்ளையடித்தே வருகின்றனர், எங்கள் பூனையார் மார்க்கத்தான் எங்களுக்கு சொர்கம், பூனையாரை வழிபட்டவர்கள் மண்ணுலகில் கூட சொர்கவாசியாகத்தான் இருந்தனர்"

"உங்கள் பூனையார் மார்க்கத்தின் தனித்துவம் என்ன ?"

"உலகில் தற்பொழுது கோலொச்சும் அனைத்து மதங்களுமே, ஒவ்வொரு வகையில் 'காபி கேட்' மதங்கள், அதாவது அவற்றிக்கு பொதுத் தன்மை உண்டு, தவிர அவை ஒன்றில் இருந்து ஒன்று காபி அடிக்கப்பட்டவையே, ஒரிஜினல் கேட் எங்கள் பூனையார் மார்க்கம் தான் இவற்றிற்கான மூலம் அல்லது துவக்கமே, புதிய மதங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள பூனையார் சிலைகளை அழித்துவிட்டனர், உலகின் முதல் மதம் என்று வரலாற்றில் பதிவு செய்திருப்பவையே எங்களது ஆதி மதம் பூனையார் மார்க்கமே"

"கடைசியாக, பூனைகள் பேசாது என்பது பொது உண்மை, பிறகு எப்படி உங்கள் கடவுள் பேசும் ?"

"உலகில் இன்றைக்கு இருக்கும் மதங்களின் கடவுள்கள் பேசும் என்பது நம்பிக்கை, ஆனால் எத்தனை பேரிடம் அது நேரிடையாகப் பேசியுள்ளது என்கிற பட்டியல் இருக்கிறதா ? இதுவரை யாரிடமும் பேசாத கடவுள் பேசக் கூடியது என்கிற நம்பிக்கை இருக்கும் போது, கேட்க மற்றும் 'மியாவ்' ஒலி எழுப்பும் வல்லமை உள்ள பூனை வடிவ எங்கள் கடவுள் பேசாது என்பது உங்களின் எந்த வகை நம்பிக்கை ?, நாங்கள் வழிபாட்டின் போது பூனையாரிடம் பேசுகிறோம், பூனையார் பேசுவது எங்களுக்கு திரும்பக் கேட்கும் காலம் வரும் என்று காத்திருக்கிறோம், எங்கள் பூனையார் வழிபாட்டை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை"

*****


பூனையாரே கேட்க நன்றாக இருக்கிறது, பூனையார் மார்க்கத்தில் அபயச் சொல், அச்சம் தவிர்க்கும் மந்திரச் சொல்கள் இல்லையா ? என்றேன். ஏன் இல்லை 'மியாவ் மியாவ்......(சற்று இடைவெளி இட்டு) மியாவ் மியாவ்) என்று நான்கு முறைச் சொன்னால் நான்கு திசைகளில் இருந்து வரும் பயம் அனைத்தும் போகும் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக பூதை மொழி ஒன்றைச் சொன்னார்

"நாத்திகர்களுக்கு (நான் ஒன்று) கூறிக் கொள்கிறேன், நீங்கள் (எந்த) தெய்வ வணக்கத்தில் இல்லாத போதும், ஒருவேளை (என்றாவது) உங்களுக்கு கடவுள் நம்பிக்கைத் தேவைப்படும் போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நான் (உங்களின்) நம்பிக்கை நாயகனாக இருப்பேன், நானே அனைவரும் (நாத்திகன் உள்ளிட்டோர்) விரும்பக் கூடிய இறைவன், மறந்தும் நீங்கள் பிற மதங்களை (காபி கேட் மதங்களை) பின்பற்றும் மதவாதி ஆகிவிடாதீர்கள் (பூ.த.மொ 51)

பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !

பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !

பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

பூனையாரின் பூதைகள் இணைப்பு
இணைப்பு : http://catreligion.org/faqs/

14 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 3 !

வாரா வாரம் வரம் போல் என் கனவில் வருவதாக ஒப்புக் கொண்ட பூனையார் நேற்றும் சொன்னபடி வந்தார், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் உருவாக்கிய மதம் எப்படி அழிந்தது என்று புலம்பினார், புலம்பி ஆவது ஒன்றும் இல்லை, கால ஓட்டத்தில் எதுவும் தப்புவதில்லை, 'இன்றைய மதம் நாளைக்கு அழியும் என்பது தானே உண்மை' என்று தேற்றிவிட்டு எருக்களில் இருந்து முளைக்கும் விதைகள் போல் மதங்கள் மறுபிறவி எடுக்கத்தான் செய்கின்றன, பூனையார் மதம் கூட மறுவளர்ச்சி அடையலாம், நானே அதற்கு உதவுகிறேன் என்று கூறினேன். மிகவும் மகிழ்சி அடைந்தார் பூனையார். பூனையார் எப்படி எகிப்திய கடவுள் ஆனார் ? என்பதைக் கேட்டு வைத்தேன், எகிப்தியர்களும் துவக்கத்தில் மத நம்பிக்கையற்ற சமூகமாகத்தான் இருந்தார்களாம், ஊருக்குள் எலிகள் பெருகி சேமித்த உணவுப் பொருள்கள் சேதமடைய, நோய் தொற்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர், அப்போது பூனைகள் தான் எலிகளை கட்டுப்படுத்தி அவர்களை காத்தது, பூனைகள் எகிப்தியர்களைக் காத்த கடவுள்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தம் கடவுள் ஆகிய கதையை சுருக்கமாகத் தெரிவித்தார், பின்னர் இணையத்தில் தேட பூனையார் குறிப்பிட்டவை சரிதான் என்று உறுதியும் படுத்திக் கொண்டேன்.

The Egyptians worshiped cats because they found that they were catching mice and rodents that caused disease and ate their grains. After a while, they domesticated cats to keep them in their home to fend off the rodents. Eventually, the Egyptians worshiped cats such as Mafdet, Bastet, Sekhmet, and the Sphinx (which was more of a demigod or a mythological creature.
http://wiki.answers.com/Q/Why_did_Egyptians_worship_cats

இந்த முறை பூனையாரிடம் அந்த முக்கிய கேள்வியை கேட்டுவிடுவது என்று நினைத்து சற்று தயக்கத்துடனேயே கேட்டேன், 'கடவுள் மனிதனின் சாயல், ஈஸ்வர் மனுஷ்ய ரூப் என்றெல்லாம் கடவுள் வடிவம் குறித்துச் சொல்லும் போது கடவுள் மனித சாயல் என்று சொல்லுகிறார்களே, பூனை வடிவத்தை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் ?' என்று கேட்டேன். 'இவையெல்லாம் கடவுளை கண்டதாகக் கூறியவர்களின் பிதற்றல் தான், யாரும் கடவுளைக் காணாத பொழுது கடவுள் மனுச உருவம் என்று எப்படி ஒப்புக் கொள்கிறோர்களோ ? அனைத்து வல்லமைகளையும் உள்ளக் கடவுள் பூனை வடிவமாக இருந்தால் கடவுள் தன்மை போய்விடுமா ? கடவுளின் தன்மையை உருவம் கட்டுப்படுத்துமா ? வெளிக்காட்ட வெறும் தோற்றம் தானே அது பூனையாகவோ, நாயாகவோ ஏன் ஒரு கடல் நண்டாகவோ இருந்தால் என்ன ? நம்பிக்கை உடையவர்களுக்கு பசுஞ்சாணிக் கூட பிள்ளையார் என்று வணங்குவது போன்றது தான், எனது பல வடிவங்களில் பூனையும் ஒன்று, மனித முகங்களைவிட பூனையின் முகம் எனக்கு பொருத்தமானதே'என்ற நீண்ட பிரசங்கத்தில் என்னை ஒருவாறு தலையாட்ட வைத்தார். கடவுள் உருவம் பூனை என்று நம்பாதவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு எழுப்பப்பட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

என்னது மீண்டும் மீண்டும் பிறப்பது தண்டனையா ? என்று கேட்டேன், பிறவியில் தனக்கு மகிழ்ச்சிக் கிடைத்தால் பிறவி நல்லது என்கிறார்கள், துன்பப்பட்டால் பிறவி இழிவு என்கிறார், பிறவியில் நிலைத்தன்மை கிடையாது என்பதால் அது துன்பமே என்று தனது கருத்தைக் கூறினார் பூனையார். கடவுள் பூனை வடிவமானவர் என்று ஒப்புக் கொள்ளும் வரை மனிதன் பிறப்பெடுப்பான் என்று கூறி தனது மதத்தின் முக்கிய கொள்கையில் ஒன்றை எடுத்துக் கூறினார்.



"நான் (உங்கள் எல்லோருக்கும்) கூறுகிறேன், நீங்கள் கடவுளுக்கு (எந்த வகையான) வடிவமும் இருக்காது என்று நம்புகிறீர்கள். கடவுள் (தனக்கு) பிடித்த வடிவாமாக தேர்ந்தெடுப்பது பூனை வடிவம் தான், அதை (பூனை வடிவத்தை) ஒப்புக் கொள்ளுவோருக்கு சொர்கம், மற்றவர்களுக்கு (ஒப்புக்குக் கூட ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு) பிறவி பெரும்பிணி" - (பூ.த.மொ 50)

பூனையார் ( எந்த மதில்மேல் இருந்தாலும், எந்தப் பக்கம் பாய்வது என்பதை) நன்கு அறிந்தவர்

பூனையார் வாழ்க, பூனையாரின் மதம் வளர்க !

பூனையார் (என்னை கனவில்) தேடினால் தொடரும்...

13 மார்ச், 2012

தேடு பொறிகளின் சுருக்கமான வரலாறு !

இணைய தொழில் நுட்பம் அறிமுகமான பொழுது இருந்த மிகப் பெரிய அறைகூவல், தகவல்களை எங்கிருந்து பெற்றுக் கொள்வது, எப்படி பயனாக்கிக் கொள்வது என்பது தான். இணைய பயன்பாட்டுக்கு முன்மாதிரி விளம்பர தட்டிகள் தான், இணைய தொழில் நுட்பம் முதன் முதலாக கணிணிகளை இணைத்துச் செயல்படும் திட்டமாகத்தான் அறிமுகமானது, அதன் படி அலுவலக கணிணிகளை ஒன்றினைத்து தகவல் சேமிப்புகளையும் பயன்பாடுகளையும் பொதுப் படுத்திக் கொள்ளுதல் என்ற அளவில் துவங்கி பின்னர் தொலைபேசி கம்பி வழியிலான தொடர்புகளை சேர்த்துக் கொண்டு வலைப் பின்னல்களாக உருவாகி தகவல் பரிமாற்றத்திற்கு பயனானது, முதலில் மின் அஞ்சல் பயன்பாட்டிற்கும் பின்னர் வலைத்தள உருவாக்கத்திற்குமாக இணைய தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டது.

நிறுவனம் சார்ந்த உற்பத்தித் தகவல், செய்தித்தகவல், அறிவியல் தகவல், தொழில் நுட்பத் தகவல் என்று இணைய தளங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு குறிப்பிட்டத் தகவலை எப்படி அறிந்து கொள்வது அல்லது தேடிப் பெருவது என்ற கேள்வியின் விடையாக தேடு பொறி தொழில் நுட்பங்கள் உருவாகின. தேடு பொறி தொழில் நுட்பம் உருவாகி வெறும் 20 ஆண்டுகளே ஆகிறது. முதன் முதலாக அமெரிக்காவின் மெகராஹில் மாணவர்களின் 'ARCHIE'. இந்தத் தேடு பொறி இணையப் பக்கங்களின் ஐபி எண்ணையும், இணையப் பக்கத்தின் கோப்புத் தலைப்புகளையும் சேமித்து தேடுவோருக்கு தந்தது, இதன் குறைபாடு ஏற்கனவே தேடியவற்றின் குறிப்புகளை சேமிக்க வசதி செய்யப்படாததால் ஒவ்வொரு முறையும் ஏற்கனவே தேடியதைத் தேடும் பொழுது மிகுதியான நேரங்கள் எடுத்துக் கொண்டது, அண்மைய நுட்பங்களில் இண்டெக்ஸ் எனப்படும் குறிப்புகள் தேடப்படும் தகவல்களுடன் தேடுபொறிகளின் தேடு பட்டியலில் சேமிக்கப்படும், புதிதாக இடம் பெறும் பக்கங்களிலும் அந்தச் சொல் இருந்தால் தானகவே அதே இண்டெக்ஸில் இணைத்துக் கொள்ளும், இதன் வழியாக தகவல்களை தேடும் போது விரைவாக அவை ஏற்கனவே சேமிப்பில் உள்ளவை என்பதால் நமக்கு கிடைக்கிறது, இங்கு தான் விளம்பரத் தொழில் நுட்பத்தையும் புகுத்தி, நாம் தேடுவதில் அவர்களுக்கு விளம்பரமாக அமைந்திருக்கும் பக்கங்களை முதலில் காட்டுவார்கள்.

ARCHIE க்கு பிறகு செப் 2, 1993ல் W3Catalog என்ற தேடுபொறி இணையப் பக்கங்களை வரிவடிவங்களுக்கு மாற்றித் தகவல்களை சேமித்து தேடுவோரை தொடர்புடைய இணையப் பக்கங்களுக்கு வழி காட்டியாது. அதே ஆண்டில் World Wide Web Wanderer எனப்படும் இணைய ரோபோ உருவாகி இரண்டு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது, இதுவும் குறிச் சொற்களை சேமித்து வைத்து தேடும் இணையப் பக்களின் ஐபி எண்களுக்கு திருப்பிவிடடுக் கொண்டு இருந்தது, இதன் பிறகு இணைய தளங்களில் குறிச் சொற்களையும் சேர்த்தே அமைக்கும் HTML பக்கங்கள் உருவானதும் அதனைப் பயன்படுத்தி அதே காலகட்டத்தில் நவம்பர் 1993ல் Aliweb என்கிற இரண்டாவது குறிசொல் தேடல் வகை தேடு பொறி உருவானது.

WebCrawler எனப்படும் தானியங்கி தேடு பொறி 1994ல் பொதுப் பயன்பாட்டிற்கு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது, இதன் சிறப்பு என்னவென்றால் புதிதாக இணையப் பக்கங்களை இணையத்தில் சேர்க்கப்படும் பொழுது இந்த தேடுபொறி அதில் இடம் பெறும் அனைத்துச் சொற்களையும் குறியீடுகளாக எடுத்து சேமித்துக் கொள்ளும், இணையத்தில் இடம் பெறும் அனைத்து இணையப் பக்கங்களையும் இவை தானாகவே குறிப்பெடுத்துக் கொள்ளும், அதன் படி தேடுவோருக்கான தகவல்களைக் காட்டி குறிப்பிட்ட இணைய பக்கத்தை நாம் தேர்வு செய்ய அங்கு திருப்பிவிடும்.

1994க்கு பிறகு தேடுபொறி என்பது வியாபாரம் சார்ந்த ஒன்றாக மறுவடிவம் எடுக்க, அதாவது தேடுவதில் எதைக் கொடுப்பது என்பதை தேடுபொறி முடிவு செய்யும் என்ற நிலையில் அதனை வியாபாரம் சார்ந்த ஒன்றாக மாற்றிக் கொண்டனர். அதாவது நாம் படிப்பு / வாங்கப் போகும் பொருள் சார்ந்த ஒன்றைத் தேடும் போது ஏற்கனவே அதே படிப்புத் தொடர்பில் தங்களது இணையப் பக்கங்களை முதலில் காட்டப்பட வேண்டும் என்கிற வியாபார ஒப்பந்ததில் அவை முதலில் காட்டப்பட்டு அடுத்து அதே படிப்பு / பொருள் தொடர்புடைய பிற இணையத் தளங்களைக் காட்டும் முகமாக தேடுபொறிகள் மாறின.

1994 - 1995ல் துவங்கப்பட்ட Magellan, Excite, Infoseek, Inktomi, Northern Light, and AltaVista போன்றவை விற்பனை நோக்கமாக இயங்கி வந்த தேடுபொறிகள் தான். இவற்றில் AltaVista யாகூ நிறுவனத்தால் பின்னர் வாங்கப்பட்டது. தேடுபொறிகளின் இணையத் தளங்களை தாமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது ? அதை ஏன் உலவில் சார்பாக மாற்றக் கூடாது ? என்கிற போட்டப்போட்டியில் Netscape, IE ஆகியவை போட்டியில் குதித்தன, அதுவரையில் அவை வெறும் உலவி என்ற அடிப்படையில் தான் இணையப் பக்கங்களைக் காட்டி வந்தன, Netscape அப்போது வளர்ந்து வந்த தேடுபொறிகளான Yahoo!, Magellan, Lycos, Infoseek, and Excite ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது உலவியின் அலுவல் ஆளுமைக்கான (Official) தேடுபொறிகளாக அமைத்துக் கொண்டது, இதன் படி Netscape உலவியின் முகவரி கட்டத்தில் தட்டச்சு செய்து தேடினால் அது ஒப்பந்தம் செய்திருக்கும் தேடுபொறியின் வழியாக தேடிய தகவல்களைக் காட்டியது. அதே போன்று IE தனக்குரிய MSN தேடு பொறியை அமைத்துக் கொண்டது.

இவைகளின் ஆட்டம் 2000 ஆம் ஆண்டு வரையில் தான், September 4, 1998ல் துவங்கப்பட்டு வளர்ந்திருந்த கூகுள் உள்ளே நுழைய, அதன் எளிமை அதாவது முகப்பில் எந்த விளம்பரங்களையும் காட்டாமல் விட்டிருந்தது தேடுவோருக்கு பிடித்துப் போகவும், அதன் விரைவான தேடல் மற்றும் உடனடி கிடைக்கும் தகவல் என்று வளர பிற தேடுபொறிகள் ஆட்டம் கண்டு, ஏற்கனவே இருந்த Overture, Alltheweb ஆகியவை போட்டியை சமாளிக்க யாகூ நிறுவனத்தால் வாங்கப்பட்டது. கூகுளின் துவக்கத்தில் யாகூ அதை 2004 ஆம் ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டு இருந்தது, பிறகு யாகூ தனது தேடுபொறியையே பயன்படுத்த கூகுள் தனியாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் மலேசியாவில் இருந்த பிரிந்த சிங்கப்பூர் போல் வேகமாக வளர்ந்தது.

கூகுள் தற்பொழுது தேடுபொறிகளின் வெல்லமுடியாத அரசனாக நிற்கிறது, கூகுள் எர்த், கூகுள் மேப், கூகுள் ராங்கிங்க், சமூக வலைதளங்கள், படம் தேடல், விடியோ தேடல், க்ரோம் உலவி, ஆண்ட்ராய்ட் செல்பேசி மென்பொருள் என இணையத்தளங்களின் அத்தனை பரிணாம வளர்ச்சியாக நின்று கொண்டு இருப்பதால் முந்தைய தேடுபொறிகள் அனைத்தும் காணாமல் போயின, யாகூவும், மைக்ரோ சாப்பிடின் தற்போதையை Bing ஆகியவை தேடுபொறி என்ற பெயருக்கே இயங்கிவருகின்றன.

நான் 2005 வரையில் பயன்படுத்திய

goto.com, alltheweb.com, overture.com. looksmart.com, excite.com, infoseek.com, lycos.com ஆகியவை முற்றிலுமாக மறைந்து போய்விட்டன.

செல்பேசி விற்பனையில் ஆப்பிள் நுழையும் வரையில் நோக்கியா சக்கைப் போடு போட்டது போல் கூகுளின் ஆட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம், இருந்தாலும் கூகுளின் தற்போதைய கட்டுமானம் அவ்வளவு எளிதாக சரிந்துவிடாது என்றே நம்புகிறேன்.

ஒரு பக்கவாட்டு தகவல், கூகுளின் ப்ரெட் வேகாமல் போனது சீனாவில் மட்டும் தான், சீனா கூகுளை புறக்கணித்து தங்களுடைய நாட்டைச் சார்தவர்களால் சீன மொழியில் உள்ள தேடுபொறியையே பயன்படுத்துகிறது, அதன் பெயர் Baidu.com, சீனாவின் நெ 1 பணக்காரர்களில் Baidu நிறுவனரும் ஒருவர், அவருக்கு பல பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு. சீனா கண்டு கொள்ளாமல் இருந்தால் அவ்வளவு பணமும் கூகுளிடம் சென்றிருக்கும், விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள் என்பதை சீனாவின் கூகுள் தடையால் புரிந்து கொள்ளலாம்.



இணைப்பு : http://en.wikipedia.org/wiki/Web_search_engine

பின்குறிப்பு : பதிவு எழுத ஒன்றுமே இல்லை என்று நினைப்போர், தங்களது ஆங்கிலப் புலமையை வைத்து விக்கிப் பீடியாவில் இருந்து நல்ல தகவல்களில் தேவையான அளவு எடுத்து மொழிப்பெயர்பாக தமிழில் பதிவாக்கலாம், நமக்கும் இணையத்தில் கூடுதலாக ஒரு தமிழ் பக்கம் கிடைக்கும், வலைப்பதிவும், மொழிப் பெயர்ப்புத் திறனும் வளரும்.

8 மார்ச், 2012

'தல' ஜாக்கிசேகர் !

இன்னிக்கு தமிழ்மணத்தை ஐபோனில் திறந்துவிட்டு அதிர்ந்தேன், அந்த காட்சிக் கோலத்தை நீங்களும் பாருங்க. நம்ம ஜாக்கி தான் தமிழ்மணத்தை பணம் கொடுத்து வாங்கிட்டாரோ என்று நினைத்தேன்.






தமிழ்மணமெங்கும் ஜாக்கியின் தலை.

ஜெய் ஜாக்கி !

அப்பறம் தான் தெரிந்தது அது ஐபோன் சாபாரி உலவியின் குறைப்பாடு. சரியாக தமிழ் மணம் தளத்தை வடிவாக்குதல் (Rendering) செய்யவில்லை

7 மார்ச், 2012

தர்ஹா ஏ ஆர் ரஹ்மான் வஹாபிகள் !

இயக்குனர் ஷங்கர் மகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த ஏ ஆர் ரஹ்மான் ஷங்கர் குடும்பத்தினரை மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு வரவழைத்து பாத்திஹா ஓதினாராம், சிறுவனும் குணமாகிவிட்டான், என்னுடைய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு மகன் குணமானதற்கு ரஹமான் உதவி இருக்கிறார், அவரது பிசி ஷெட்யூலுக்கு நடுவே தனிப்பட்டு நேரம் செலவளித்தது எங்கள் மகனுக்காக உதவியது எனக்கு மிக்க நெகிழ்ச்சியாக உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் ஆனந்தவிகடனில் தெரிவித்திருந்தார். ஆவி ஆன் லைன் வெளி வெளியீட்டில் இதைப் படித்தேன், ஆன் லைன் வெளியீட்டில் கருத்துரைகளுக்கு (பின்னூட்டம்) இடமளிக்கிறது ஆவி.

"எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.

நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!'" - Director Shakar


வழக்கம் போல் பின்னூட்டமாக வகாபி இஸ்லாமியர்களில் ஒருவர் 'ஏ ஆர் ரஹ்மான் மனம் திருந்தவேண்டும், படைத்தவனை வணங்க வேண்டும் படைப்பை அல்ல' என்று உதிர்த்துவிட்டு சென்றிருந்தார், இன்னும் அது போன்று நிறைய பின்னூட்டங்கள், சூஃபி இச அடைப்படையில் இந்தியாவில் இஸ்லாம் கால் ஊன்ற பரவ ஊன்று கோல் கொடுத்து இருந்தது நன்கு தெரிந்தும் சூஃபி இசத்தை அழித்துவிட தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது வளைகுடாவின் ஆதரவுடன் தமிழகத்தில் பரவி வரும் வஹாபி இசம். அவர்களது முயற்சியில் வளைகுடாவில் பணி செய்யும் தமிழகத்து முஸ்லிம் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வெளிப்படையான சூஃபிகளின் மீதான வன்மங்களை இணையங்களிலும் பார்க்க முடிகிறது, சூஃபி இஸ்லாமிய பதிவர்கள் ஓரளவு பதிலும் கொடுத்துவருகிறார்கள், வஹாபிகள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். சூஃபி இசத்தின் முக்கிய நிகழ்வான ஏர்வாடி, நாகூர் சந்தனக் கூடுகளின் விழாக் கோலம், உற்சாகம் அனைத்தும் களை இழந்து காணப்படுகிறது, முன்பு 10 நாள் திருவிழாவாக நடக்கும் சந்தனக் கூடு உற்சவம் தற்பொழுது எப்பொழுது வருகிறது போகிறது என்றே அறிய முடியவில்லை.

குறிப்பாக தர்கா திருவிழா, சந்தனக் கூடு உற்சவம் இந்துக்கள் - இஸ்லாமியர் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது, விழாக்களின் உற்சாகம் குறைய, இந்துத்துவாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பரப்புரை, வஹாபிகளின் மிரட்டல் மற்றும் ஏக இறைவன் பிரச்சாரம் என்பதாக கடந்த 20 ஆண்டுகளில் சந்தனக் கூடு உற்சவங்கள் பெயரளவுக்கே நடக்கிறது. நாகூர் - நாகப்பட்டினம் சாலைகள் முன்பெல்லாம் 10 நாட்கள் களைகட்டி இருக்கும், பெரிய கப்பல் சாலையில் ஓடுவது போல் கப்பல்களை சர்கரங்களில் இழுத்துச் செல்வர், சிறுவர்களும் அவர்கள் பங்கிற்கு சிறிய வடிவ கப்பல்களை இழுத்துச் செல்வர், சந்தனக் கூட்டிற்கு இந்து - இஸ்லாமியர் பேதமின்றி மாலைகளை வாங்கி அதன் மீது வீசுவர், சந்தனக் கூட்டில் அமர்ந்திருப்பவர்கள் இருபக்கத்திலும் கூடி இருக்கும் மக்களுக்கு நல்லாசிகள் செய்து கொண்டே செல்வர். பின்னால் வரும் சாம்ப்ராணி வாகனம் நகரெங்கிலும் நறுமனம் பரப்பிச் செல்லும்.

ஆண்டு தோறும் 20 ஆண்டுகளுக்கு முன்பான காட்சிகள் இவை தான், நாகை - நாகூர் இஸ்லாமிய இளைஞர்கள் வளைகுடாவிற்கு வேலைக்குச் சென்று வரத் துவங்கிய பொழுது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, இஸ்லாமிய இளைஞர்களிடையே வழக்கத்திற்கு மாறான அடர்த்தியான தாடி, நெற்றியில் தெரியும் தொழுகை தடம் என மாறிப் போய் இருக்க சிறுவயதில் என்னுடன் பம்பரம் விளையாடிவர்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட எதிரே பார்க்கும் போது வெறும் புன்னகையுடன் கடந்து சென்றனர். அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே, தர்ஹாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறித் தொடங்கினர், ஜமாத்துகளிலும் பிளவுகள் தர்ஹா கொண்டாட்டங்கள் முற்றிலுமாக களை இழந்துவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் தர்ஹா எனப்படும் அடக்கத் தளங்கள் நாளடைவில் பராமரிப்பின்று அழியும், அப்படியும் மீறி தர்காவிற்குச் செல்பவர்கள் மிரட்டப்படுவார்கள், தர்ஹாக்களை அகற்ற இந்துத்துவாக்கள் தனியாக சதி செய்யத் தேவை இன்றி அனைத்து 100 ஆண்டுகள் புகழ்வாய்ந்த தர்ஹாக்களும் அழிக்கப்பட்டுவிடும்.

******

மேற்சொன்னது போல் இந்தியாவில் இஸ்லாம் காலூன்ற சூஃபி இசமே அடிப்படை, இந்திய சமயங்களின் வழிபாட்டு முறைகளுடன் இஸ்லாமிய ஞானிகள் சூஃபி இசத்தை தாழ்தப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்தனர், இன்றைய வஹாபி இச வழிமுறைகளுடன்(தென்) இந்தியாவில் இஸ்லாம் பரப்ப முயற்சி செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேர் மதம் மாறி இருப்பார்கள் ? குப்பனும் சுப்பனும் ஒரே நாளில் தங்களது அனைத்து பழக்கவழங்கங்களையும் விட்டுவிட்டு ஓரிறைவனை நினையுங்கள் இது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா ?

தீண்டாமைக்கு எதிராக மதம் மாறியது என்பதை தவிர்த்துப் பார்த்தாலும் ஏழை எளியவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது நோய் தீர்க்கும் மருந்து அளவுக்குத்தான், காய்சல், பூச்சிக்கடி, வயிற்றுவலி அனைத்திற்கும் பச்சிலை வைத்தியம் பார்ப்பார்கள், சூஃபிகள் இறை நம்பிக்கையோடு அதனை ஓதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் பெயரில் இறைவனிடம் கேட்டுக் கொள்ளும்படி இறையடியார்களாக அடக்கமானவர்களிடம் தெரிவிப்பார்கள் இது தான் பாத்தியா ஓதுதல் என்பது. நம்பிக்கை உடையவர்களுக்கு எதுவும் விரைவில் சரியாகும் என்பது போல் தான் நோய்களும், கடவுளிடம் வேண்டியாகிவிட்டது இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மன பலம் உடல் பலம் சேர நோய்கள் குணமாகும். சூஃபிகள் தன்னை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து மன நிலையை சரி செய்ய வழிபாடு செய்வார்கள், இந்த முறையில் தான் 'திலிப்' பாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சூஃபி இசத்தில் உள்ளவர் உதவியுடன் தன் குடும்பத்தில் யாரோ செய்த 'ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை) குடும்பத்தைப் பாடாய் படுத்த அதிலிருந்து மீண்டதால், பிறகு தன்னை இஸ்லாமிய மார்க்கத்தவராக மாற்றிக் கொண்டார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானே ஆனந்தவிகடனிலோ, குமுதத்திலோ தெரிவித்தது தான்.

'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.

"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.

ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?

******

வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது

இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)


உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)

இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.

இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான்.
ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.

வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்

எனக்கு தெரிந்து எந்த சூஃபியும் இறைவனுக்கு இணைவைப்பவர்கள் இல்லை, இறையடியார்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்கள் மட்டுமே. மனைவியையும் நேசிப்பது என்பது பெற்றோர்களை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்

எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.

"அல்லா......! வஹாபிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்று
குரானை அவர்களே ஓதிக் கொள்வார்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது

இன்ஷா அல்லா !

6 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 2 !

அது என்ன 'பூதை' ? போதை என்பதைத்தான் எழுத்துப் பிழையாக தட்டச்சுவிட்டேனோ ? என்று நீங்கள் நினைக்கக் கூடும், பூனையாரின் பாதை என்பதைச் சுருக்கமாக 'பூதை' என்று (முன்பும்) எழுதியுள்ளேன், அதை நீங்கள் 'கீதை' போன்றோரு பாதை என்றும் கொள்ளலாம், பூனையாருக்கு ஒன்றும் நட்டமில்லை. நேற்று கனவில் வந்த பூனையார் மனிதரின் பழக்க வழக்கங்கள் குறித்து மிகவும் கவலைப்பட்டார். இப்போதெல்லாம் 'கழுவ' தண்ணீரையும் அல்லது துடைக்க பேப்பரையும் பயண்படுத்துகிறார்கள் அது எவ்வளவு சுற்றுச் சூழலுக்கு கெடுதல் தெரியுமா ? என்று கேட்டார் பூனையார். வேற என்ன தான் செய்வது ? தூய்மை முக்கியமில்லையா ? என்று கேட்டேன், பூமியில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எதிர்காலம் குறித்து பேசிய பூனையார், தண்ணீரை அளவாகப் பயன்படுத்தலாம், பக்கெட் பக்கெட்டாக கழுவ பயன்படுத்துவது, ஆற்று குளத்து நீரை அசிங்கப்படுத்துவதெல்லாம் தண்ணீர் கேடுகள் தானே, என்றவர், தாளைப் பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுகிறது, இயற்கைச் சூழலுக்கும் மழை வற்றுவதற்கும் இது தான் காரணம் என்று கூறியவர் போகட்டம், ஆனால் கழுவுவதைவிட கழிவை அகற்றுவதில் இக்கால மக்கள் கவலைப்படுவதே இல்லை, தண்ணீரைத் திறந்துவிட்டு மொத்தமாக அப்படியே கூவம் போன்ற ஆற்றிலோ, கடலிலோ கலக்கச் செய்துவிட்டு ஒட்டு மொத்த நீர் ஆதரத்தையும் கெடுத்துவிடுகிறார்களே என்று கவலை தெரிவித்தார். பிறகு என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள் பூனையாரே என்று கேட்டேன்.

பூனையார் சொன்னார், நீர் பூனைகள் கழிப்பதைப் பார்த்திருக்கிறீரா ? மணலை நோண்டி குழிபறித்துவிட்டு கழித்துவிட்டு பின்னர் குழியை மூடிவிடும், இதனால் கழிவு நாற்றம், ஈ மொய்தல் அதிலிருந்து நோய் தொற்றல் மற்றும் பிற சுகாதாரக் கேட்டுத் தொல்லைகள் இன்றி, கழிவு மக்கி அடி உரம் ஆகிவிடுகிறது, கழிவு மறுபயனீட்டு உரமாக ஆக்கப்படுகிறது, இதை ஏன் மனிதர்கள் பின்பற்றக் கூடாது, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூனையாரைப் பின்பற்றுபவர்கள் கழிப்பின் பிறகு மண்ணைத் தான் பயன்படுத்துகிறார்கள், கழிவை கையாளுவதில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுப்புற நன்மைகளை இன்றைய அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்று கூறி திடுக்கிட வைத்து சிந்தனையைத் தூண்டினார் பூனையார், இருந்தாலும் ஒண்டு குடித்தனாமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் குழி தோண்டி 'இருக்க' மண் எங்கே கிடைக்கும் ? என்று கேட்டேன், அது உங்கள் வாழ்க்கை முறை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றிவிட்டதால் உங்களால் மண்ணைப் பயன்படுத்த முடியவில்லை, மற்றபடி பூனையார் கழிவு இருத்தல் மூடுதல் செயல்முறைகள் எக்காலத்திற்கும் ஏற்றதே. இன்றும் கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது, உங்கள் வாழ்க்கை முறையின் மனிதத் தவறுகள் எப்படி பூனையாரின் கொள்கைத் தவறாகும் என்று கேட்டு மடக்கினார். சரி தானே என்று நினைத்தேன். 5000 ஆண்டு காலப் பழமையான தன் பூதைத் தத்துவத்தில் ஒன்றை பூனையார் குறிப்பிட்டார்.



" உங்களுக்கு பூனையார் அறிவுறுத்துகிறேன், நீங்கள் திறந்த வெளியில் (மலம்) கழிக்காதீர்கள், சுகாதார கேடுகளை (தண்ணீர் வீணாகுதல் , மற்றும் நோய் பரவல்) கருத்தில் கொண்டு மண் குழிகளை பயன்படுத்துங்கள், நீங்கள் எத்தனை (முறை) குழிப் பறித்தீர்கள் என்பதை பூனையார் அறிவார், ஏனெனில் பூனையார் அறிவானவர், அன்பானவர் (மதில்) மேலானவர் " (பூ.த.மொ 99)

அடுத்ததாக பூனையார் "சந்திரன் பூமியை ஏன் சுற்றுகிறது என்று தெரியுமா ?" என்று கேட்டு என் பதிலுக்காக என்னை நோக்கினார்.

என்னது 'பூதை அறிவியலா ? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம், தவிர அவுங்க அளவுக்கு உன்னால் அறிவியலை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொடுக்கும் திறமை இருக்கிறதா ? என்று தெரியவில்லை, என்றேன். ஒரு முறை முறைத்துவிட்டு கனவில் இருந்து காணாமல் போனார், இன்னொரு நாளைக்கு கனவில் வரும் போது பால் வைத்து, மன்றாடித் தான் பூனையாரின் பூதைகளைப் பெற வேண்டும் போல

பூதையார் பூனையார் வாழ்க !

பின்குறிப்பு 1 : பூனையாரின் பூதை மார்கத்தில் சேர்ந்து கொண்டால் உங்கள் முன் ஜென்மப் பாவங்களில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும், முன்பிறவி நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்பிறவியின் பாவங்களை 90 விழுக்காடு பூனையார் எடுத்துக் கொண்டு நற்கதிக் கொடுக்கத் தயாராக உள்ளார், உடனே முந்துங்கள் (நன்றி பூனையார் பூதை மார்க்கத்து தலைமை பூசாரி திரு தருமி ஐயா)

பின்குறிப்பு 2 : இந்த இடுகையை 2 - 3 ஆண்டோ அதற்கு பிறகோ படிப்பவர்கள், கோவியாருக்கு இடைப்பட்ட (இந்த காலத்தில்) என்ன ஆயிற்று, பூனையார் பூதையார் என்றெல்லாம் எழுதியுள்ளாரே என்று நினைக்கக் கூடும், குறிப்பிட்ட (இந்த காலத்தில்) பதிவுலகில் மதப் பிரச்சார நெடிகள் மூக்கைத் துளைத்ததால், மதச் சுதந்திரம் மற்றும் மதப் பிரச்சார சுதந்திரம் என்ற அடிப்படையில் கோவியார் மற்றும் பூனையாரின் பூதை மார்கத்தினரால் 'கடவுள் பூனையார் ' அதில் இறக்கிவிடப்பட்டுள்ளார் என்பதை தகவலாகப் பெற்றுக் கொள்ளவும்.

இணைப்புகள் :
பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் (எளிய அறிமுகம்)
முக நூல் : Cat Worship

5 மார்ச், 2012

தி.க தோழர்கள் படித்த திருவாசகம் !

நேற்று சிங்கை இலக்கிய வட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரியவர் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ சுந்தரம் அவர்களின் 'கம்பனுக் கை கொடுத்தவர்கள்' என்ற தலைப்பில் நிகழ்த்திய 2 மணி நேர உரையைக் கேட்க நேர்ந்தது. சுமார் இரண்டு மணி நேரம் அருவியாக மேடைப் பேச்சு இலக்கியம் இடையே நகைச்சுவை, கிளைக் கதைகள் என கம்பராமாயண சிறப்பைப் பற்றியும் அதைப் புகழ்ந்தவர்கள் மற்றும் அவர்களது சிறப்புகளையும் பேசினார். கேட்கக் கேட்க அது போன்று அடுத்தத் தலைமுறைகளுக்கு பேச்சாளர்கள் கிடைப்பார்களா என்ற எண்ணமே எனக்கு தனியாக ஓடியது, ஆம் ! பொருளியல் மற்றும் வசதியான வாழ்க்கைத் தேடலின் ஓட்டங்களின் இடையே இளைப்பாறும் பொழுது போக்குகளாக மேற்கத்திய இசையும், திரைபடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன, பாரம்பரிய இசை மற்றும் தமிழர் இலக்கியமெல்லாம் வெறும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டு பாதுகாப்பாக திறந்து பார்க்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே அதுவும் ஐம்பது அகவையைக் கடந்தவர்களாக இன்றைய இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை உள்ளது. அவர்களும் இன்னும் 20 - 30 ஆண்டுகளில் மறைந்து போக ஒருவேளை தமிழன் தன் இலக்கிய பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளும் போது டைனசர்களின் படிவங்களைத் தேடிக் காட்சிக்கு வைத்து டைனசர் இப்படி இருந்தது, இவ்வளவு வலிவு மிக்கது என்று காட்டுவது போல் தமிழ் இலக்கியம் மற்றும் அதன் சுவைகளைத் தேட வேண்டி இருக்கும்.

******

பெரியவர் சொ.சொ.மீ.சுந்தரம் கம்பனைப் போற்றியவர்கள் என்று பேச்சுகளின்டையே கம்பனைப் போற்றிய திரு வி கலியாண சுந்தரம் என்கிற திருவிக பற்றியும் குறிப்பிட்டார். ஒரு முறை திருவிக திருச்சிக்கு கம்பராமயண சொற்பொழிவிற்காக இரயிலில் வந்தார், அவரை வரவேற்க ஏராளமான அன்பர்கள் (பக்தர்கள்) மற்றும் ஏற்பாட்டாளர்கள் இரயில் நிலையத்தில் குழுமி இருந்தனர், வேறொரு நிகழ்ச்சிகாக பெரியாரும் அதே இரயில் நிலையத்தில் இறங்கி திருவிகவும் அன்று திருச்சி வருவாத அறிந்த பின்னர் திருவிகவைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்து காத்திருந்தாராம்.

திருவிக வந்து இறங்கிய பின்னர் அவரை வரவேற்க வந்தவர்கள் அழைக்க, பெரியாரைக் கண்ட திருவிக தாம் தற்போது பெரியாருடன் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பாட்டாளர்களில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவதாகவும் கூறி பெரியாருடன் சென்றுவிட்டாரம், ஏற்பாட்டாளர்களுக்கு திருவிக 'நாத்திகன் இராமசாமி நாயகனுடன்' சென்றுவிட்டாரே என்ற வருதத்துடன், திருவிகவை பெரியாருடன் செல்லவேண்டாம் என்று வற்புறுத்தவும் முடியாமல் சென்றுவிட்டனராம்.

அதன் பிறகு திருவிக மற்றும் பெரியார் திருச்சி முக்கொம்பு காவேரிக் கரைக்குச் சென்று பேசிக் கொண்டு இருந்துவிட்டு திருவிக நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் தீர்த்த குளியல் (ஸ்னானம்) முடித்துவிட்டு ஆற்றில் இறங்கிக் குளிக்க, குளித்து முடித்து வந்ததும் திருவிகவின் பையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொள்ளக் கொடுத்தாராம் பெரியார். அதன் பிறகு அன்றைக்கு தாம் பேசம் போகும் கம்பராமயணப் பகுதிகளைப் பற்றி பெரியாரிடம் கூறிக் கொண்டு வந்தவர் இடையே திருவாசகம் பற்றிக் குறிப்பிட்டு நெகிழ்ந்தவராக திருவிக சொன்னாராம், தாம் இறந்தால் இறுதிச் சடங்கின் போது திருவாசகம் படிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். பெரியாரும் அதை அமைதியாக கேட்டுக் கொண்டுவந்தாரம், பிறகு திருவிக தன் சொற்பொழிவுக்குப் போக, பெரியாரும் அவரது நிகழ்சிக்கு செல்ல விடை பெற்றுக் கொண்டார்கள்.

பாரதி தாசன், அண்ணா போன்று திருவிகவும் பெரியாருக்கு முன்பே மறைந்துவிட்டார், பெரியாருக்கு தம் அருமை நண்பர் திருவிக சொன்னது நினைவுக்கு வந்தது, திருவிகவின் இறுதிச் சடங்கிற்குச் சென்றவர். தம் தொண்டர்களை அழைத்து திருவிகவின் இறுதிச் சடங்கு ஆசையான திருவாசகத்தை திருவிகவின் உடல் அருகே நின்று படிக்க சொல்லி பணித்தாரம். திருவிகவின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

*****

பெரியார் தூற்றிகள் இவற்றை அறிந்திருந்தாலும் இது பற்றி எழுதினால் பெரியாரை புகழ்ந்தது போல் ஆகிவிடும் என்று மறைத்துவிடுவர். பெரியார் பிழைப்புவாதிகளான தற்கால திக குழுவினர் இது பற்றி எழுதினால் 'பெரியார் திருவாசகம் படிக்கச் சொன்னார் என்பது நாத்திகத்திற்கு இழுக்கு' என்று அடக்கிக் கொள்வர். பெரியாரை வெறும் பார்பன எதிர்பாளராகவும் நாத்திகராகவும் காட்டுவதற்கான முயற்சியில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள், மனித நேயம் தெரிந்த மாமனிதன், மனித இழிவுகளை அகற்ற பெரியாருக்கு நூற்றாண்டு வாழ்க்கைத் தேவை என்பதால் தான் இயற்கையும் பெரியரை 90 அகவைக்கும் மேல் விட்டு வைத்திருந்தது, இன்னும் 200 நூற்றாண்டுகளுக்கு சாதி மதப் பேய்கள் ஒழியும் வரை பெரியார் எம்போன்றவர்களால் எடுத்துச் சொல்லப்படுவார்.

இணைப்பு:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்