திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.
"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"
-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்
அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.
1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.
1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"
அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.
மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.
"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்
*****
தனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனது கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.
பல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் ? பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா ?
*****
பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.
இடுகை தகவல் : "இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா ?" (பக்கம் 171 - 182)
நூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4