பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2007

கை ஒடிஞ்சிடுச்சி ...

தமிழ்மணம் திரட்டியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறினால் ... நம்ம பதிவர் ஒருவர் "தமிழ்மணம் பார்க்காமல் ரொம்பவே கையொடிந்தது மாதிரி இருக்கு " ன்னு சொன்னாங்க ... யாருன்னு படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ! :))

இன்னிக்கு பதிவு போட ஒரு மேட்டர் சிக்குச்சு !!!
:)))))))

30 ஜனவரி, 2007

ஆத்திகம் நாத்திகம் குறித்து ...

இறை நம்பிக்கை 'தோன்றிய' பின் முதன் முதலில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே உள்ள இறைநம்பிக்கைக் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தித்துக் கொண்ட போது 'நம்பிக்கை மறுப்பு' என்ற கோட்பாடுகள் தொடங்கி இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இறைநம்பிக்கை என்பதை மதத்திலிருந்து பிரித்துப் பார்த்தல் கடினம். நாத்திகத்தை மறுப்பதற்காக நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடினாலும் கொள்கை அளவில் பிரிந்தே கிடக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாத்திகத்துக்கு வலு சேர்ப்பதே ஆத்திக பிரிவுகளின் மாறுபட்ட கொள்கைகள் தாம். ஒன்றைத் தாழ்த்த மற்றொன்று செய்யும் சூட்சமங்கள் தான் நாத்திகத்துக்கு வலு சேர்க்கிறது. இஸ்லாம் மதத்தின் குறைபாடுகளை கிறித்துவமும், கிறித்துவ மதங்களின் குறைபாடுகளை இஸ்லாம் மதமும் காட்டிவிடுகின்றன. இன்றளவிலும் மற்ற மதங்களைத் தாக்க மதங்களே நாத்திகர்களை போற்றுகிறது என்பது உண்மை.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் சைவமும் வைணவமும் எதிர் துருவங்கள், ஆத்திகம் ஆக்கப்பட்ட சமணமும் புத்தமும் எதிர் துருவங்கள். ஒட்டு மொத்தமாக இந்து மதத்தின் குறைபாடுகளை ஒரு நாத்திகன் காட்டுவதற்கு வலுவான எதிர்ப்புகளை உட்பிரிவுகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில் இருந்தே எடுத்துக்காட்ட முடியும்.

ஆத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதைவிட மதநம்பிக்கை என்ற கோட்பாடுகளில் கட்டப்பட்டுள்ளதால் வலுவிழந்ததாக தெரிகிறது. இனக் குழுக்களை அடையாளப்படுத்துவதில் முதன்மையாக இருந்த இத்தகைய இறை நம்பிக்கைகள் அல்லது மதங்கள் இடப்பெயற்சியினால் கண்டம் விட்டு கண்டம் சென்றபோது தான் அதிகமாக சோதனைகளை சந்தித்துக் கொண்டன.

இறைநம்பிக்கை என்பது நல்வாழ்க்கைக்கு என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால் நாத்திகத்தின் தோற்றமே இருந்திருக்காது. யாருக்கு சொர்கம், யாருக்கு நரகம் என்று மதங்கள் சொல்ல ஆரம்பித்த போது குழப்பங்கள் ஏற்பட்டு ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நாத்திகத்தின் வழி இவற்றின் ஒவ்வாத கருத்துக்களை உடைத்துப் போடும் அவசியம் ஏற்பட்டதாலேயே இந்தியாவில் சமணமும், அதிலிருந்து மேம்பட்டு பெளத்தமும் தோன்றின.

வாழ்வியல் அறங்களை கடைபிடிப்போருக்கு சொர்க்கம் என்பது போய், மதங்கள் வழிசொல்லப்படுவது குறிப்பாக ஆப்ரகாமிய மதங்களில் வழி சொல்லப்படும் சொர்க்கம் எவருக்கென்றால் அந்த மதத்தின் இறைவனை ஏற்றுக் கொள்பவர்களுக்கு என்று புனித நூல்கள் சொல்வதாக சொல்கிறார்கள். இதெல்லாம் அந்த மதத்தினுள் இருந்து பார்த்தால் சரி என்பது போல் தோன்றும். பொதுப் பார்வைக்கு இத்தகைய நம்பிக்கை கேள்விக் குறியதே. வெறும் மத அடையாளங்களை அணிந்து கொண்டு, குறிப்பிட்ட இறைவனை நம்புகிறேன் என்று சொல்லி சொர்கம் செல்ல முடியுமா ? இவ்வாறு ஒரு மதத்தின் கொள்கைகளை வெளியில் இருந்து கேள்வி கேட்பவர்களை அந்தந்த மதங்களைப் பொறுத்தவரை நாத்திகர்களாகத் தான் நினைப்பார்கள்.

தொடரும் ...

29 ஜனவரி, 2007

திராவிடத்தை விழுங்க தயாராகும் பாமக !

பெரியார் ஊட்டிய திராவிட உண(ர்)வை அரசியல் கட்சியாக மாற்றி நன்கு பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி, எம்ஜிஆர் வரிசையில் புதிதாக தற்போது இணையப் போகிறவர் பாமக தலைவர் மருத்துவர் இராமதாசு. இதற்காக தமிழ் இன மீட்டெடுப்பு இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் அறிவிக்கப்பட்டதாக செய்தி இதழ்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை தமிழ்நாட்டில் பின்னுக்குத் தள்ளி தேசியவாதக் கட்சியை பலமிழக்கச் செய்து மாநில அரசியல் கட்சிகளினால் எதையும் சாதிக்க முடியும் என்று காட்டிய பெருமை பெரியாரையே சாரும். மாநில கட்சிகளின் தயவினால்தான் மத்தியில் கூட்டனி ஆட்சி நடக்கிறது. இல்லையென்றால் பெரும்பாண்மை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துதல், ஒத்திவைப்பு தீர்மாணங்கள் என்றே பாராளுமன்ற செயல்பாடுகள் முடங்கி இருக்கும். மற்ற மாநில கட்சிகளும் மத்தியில் செல்வாக்கு அடைந்ததற்கு தமிழக கட்சிகளே முன்னோடி. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் மத்தியில் கூட்டனி ஆட்சிகளுக்கு பிறகு முடங்கிவிட்டது.

தமிழக அரசியலைப் பொருத்தவரை இரண்டு கட்சிகள் தான் ஒன்று பெரியார் சார்புடைய கட்சிகள், மற்றொன்று மத்திய தேசியவாதக் கட்சிகள். தேசியவாதக் கட்சிகள் (காங்கிரஸ், பாஜக) . பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே மாநிலத்துக்கு என்ற தனியாக எந்த கொள்கையும் இல்லாத கட்சிகள். எனவே மாநிலத்தில் இவற்றின் வளர்சி என்பது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தமிழக பாஜகவை தமிழக காங்கிரசுடன் ஒப்பிடும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிடவில்லை.

அதிமுக பெரியாரை எதிர்க்கவும் இல்லை உயர்த்திப் பேசுவதும் இல்லை. திமுக பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தினாலும், பெரியார் கொள்கைகளைவிட வாரிசு அரசியல் என்ற எதிர்ப்பை சமாளித்து அடுத்தக் கட்ட தலைவரை அறிவிக்கும் முனைப்பில் இருக்கிறது. பெரியார் சிலைகள் வைக்க ஆதரவு கொடுத்ததைத் தவிர பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு திமுக பின்வாங்குவதாகவே தெரிகிறது. பெரியார் பெயரைச் சொல்லி கட்சி வளர்க்கும் நிலை இன்று இல்லை என்று திமுக நினைத்திருக்கக் கூடும். தி.க. தேர்தலில் போட்டியிடாத கட்சி பெரியார் கொள்கைகளை பிராச்சாரம் செய்வதுடன் பெரியார் ஆதரவு நிலைப்பாடுகளை தேர்தல் காலத்தில் பெரும் கட்சிகளின் கூட்டனி அமைப்பை பொறுத்து தி.க தன் ஆதரவை தெரிவிக்கிறது.

பாமகவுக்கு அடுத்த கட்ட அரசியலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணியில் சேர்ந்து சீட்டுகளைப் பெற்று அரசின் அங்கமாக இருக்க அவர்கள் விரும்பும் நிலையை மாற்றி பெரிய மாநில கட்சி என்ற உயர்வுக்குச் செல்ல முடிவெடுத்து அதன் காரணியயகவே இந்த மேற்கண்ட அறிவிப்பு வந்திருக்கக் கூடும் என்று
நினனக்கிறேன். அவர்களுடைய அறிவிப்புப் படி பெரியார் கொள்கையை பரப்புவது அதே சமயத்தில் பெரியாரின் கடவுள் எதிர்ப்பை தொடப் போவதில்லை என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சரியான பாதையில் சென்றால் பெரியார் ஆதரவாளர்கள் இவர்கள் பக்கம் திரும்புவார்கள். வருங்காலத்தில் திராவிட அரசியல் கட்சிகளுக்கு பாமக பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாமக திராவிடக் கட்சி போன்ற பாரம்பரிய அரசியல் கட்சி அல்ல. அடுத்தக் கட்ட அரசியல் வளர்ச்சிக்கு மாபெரும் தலைவரை முன்னே வைத்துக் காட்டுவது அவசியம். அதற்கு பெரியாரை முன்னிறுத்தாலாம் என்ற யோசனையில், அந்த வகையில் என்றும் தாக்கம் உள்ள பெரியார் கொள்கைகளை பாமக கையில் எடுத்திருப்பது அரசியல் சாணக்கியத்தனமா என்பது போகப் போகத் தான் தெரியும். இனி பெரியார் கொள்கைகளை சொந்தம் கொண்டாடவும் பங்கு போட்டுக் கொள்ளவும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவிற்கும் கடும் போட்டி இருக்கும்.

எது எப்படியோ பெரியார் கொள்கைகள் தமிழ் மண்ணில் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்வதற்காகவாவது பயன்படும்.

பரிகாரம் ?

மாங்கல்ய தோஷம் இருக்கு, இருதார யோகம் (?) இருக்கு வாழை மரத்துக்கு கல்யாணம் பண்ணி வெட்டிப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சாதகம் பார்த்துப் பலன் சொல்வார்கள்... கேட்பார்கள். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். சோதிடம் என்பது நம்பிக்கை. சோதிடத்தை நம்பி 'மாமனுக்கு ஆகாது' ஆகாது என்று பிறந்த குழந்தையை கொன்று போட்டவர்களைப் பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் படித்திருக்கிறோம். முல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று முதிர்கன்னிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். மக்களிடம் கடவுள் நம்பிக்கையை விட மலிந்து காணப்படுவது சோதிடம், என் கணிதம் சோதிடம் (நியூமரலஜி) இவற்றைப் பற்றிய நம்பிக்கைகள்.

பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் நல்லப் பெயரை எடுக்கலாம் என்பதைவிட செல்வம் பெருகும் என்பதற்காக பெயரை மாற்றி அவப்பெயரை பகுத்தறிவு பாசறை அண்ணன்களும் (முன்னால் பகுத்தறிவு பாசறை அண்ணன் அடைந்திருக்கிறார்கள். திருநாவுக்கர(சு)சர், விஜய டி ராஜேந்திரர் போன்றோர். இவையெல்லாம் பார்க்கும் போது உழைப்பை நம்பாமல் திடீர் அதிர்ஷ்டத்தின் வழி புகழோ, பணமோ அடைய முடியும் அல்லது அவற்றை கட்டிப் போட்டு எங்கும் ஓடாமல் வைத்திருக்க முடியும் என்ற மாய நம்பிக்கைதான் அடிப்படை காரணமாக இருக்கிறது.

வாஸ்து என்ற பெயரில் கழிவறைக்கும் பரிகாரம் செய்யும் நம்மவர்கள். அது இருக்கும் இடத்தை சரியான முறையில் அமைப்பதில்லை. பெரும்பாலான வீடுகளில் கழிவறை மாடிப்படிக்கு கீழ் அல்லது மிச்சம் உள்ள இடத்தில் ஒடுங்கி கட்டப்பட்டு இருக்கும். அன்றாடம் பயன்படுத்தும் இடத்தை சுகாதாரமாக காற்றோட்டத்துடன் அகலாமாக கட்டவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே கழிவறை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. வீட்டிற்குள் பளபள என மின் விளக்கு வெளிச்சம் இருக்கும் ஆனால் கழிவறைக்கு 0 வாட் பல்பு போட்டு சிக்கனமாகவே இருக்கிறோம். பெரும்பாலான கழுவறைகளுக்கு சன்னலே (சாளரம்) இருக்காது. இது போன்று தாராளம் கடைபிடிக்க வேண்டிய வற்றையெல்லாம் கவனம் கொள்ளாமல் சாமி அறை எந்தப்பக்கம் பார்த்திருந்தால் வீட்டுக்கு நல்லது என்பதில் அதிகம் கவனம் எடுத்து செய்திருப்போம். மனக் கழிவையும், உடல் கழிவையும் அகற்ற வேண்டிய இரு இடங்களுமே தூய்மையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

சரி பேச்சு சோதிடம் பரிகாரம் பற்றியது... நான் நினைப்பது சரியோ ? தவறோ ? மற்ற மதங்களில் உள்ள எதிர்கடவுள் (சாத்தான்) கோட்பாடு இந்து மதத்தில் கிரகங்களாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெரியவர் தருமி இதுபற்றி அருமையான பதிவு எழுதி இருந்தார். எனக்கு தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாக நான் எப்போதும் பலரிடம் கேட்பது இது

1. அனைத்தும் இறைவன் செயல் என்று நம்புவர்கள் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா ?
2. நடப்பது இதுதான் என்று சோதிடம் சொல்வது உண்மையெனில் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன லாபம் ?
3. ஒரு வேளை பரிகாரம் செய்து எவற்றையும் மாற்ற முடியுமெனில் சோதிடம் உண்மை என்பது பொய்துப் போகிறதே ? இது சரியான கூற்றா ?
4. இந்து மதத்தில் கடவுள்களையும் கிரகம் பிடித்ததாக கதைகள் இருக்கிறதே ? இங்கே கடவுள்கள் கிரக பலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையா ?
5. கிரகங்களுக்கு கிரகம் பிடிக்குமா ? என்ன ஆகும் ? அதற்கு பரிகாரம் உண்டா ?


யாரையும் பழிக்காமல் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

26 ஜனவரி, 2007

அமிர்தாநந்தமயி புறக்கணிக்கப்பட்டார் ?

2004 டிச 26 சுனாமியை யாரும் மறந்திருக்க முடியாது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் போர்கால அடிப்படையில் உதவிசெய்தது. பொருளாகவும் பணமாகவும் துயர்துடைப்புக்காக நல்ல உள்ளங்கள் அள்ளிக் கொடுத்தன. இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இயன்ற அளவில் நேரடியாக வருகை தந்து உதவினார். பின்னார் அது முன்னால் தமிழக அரசால் அரசியலாக விமர்சிக்கப்பட்டது. இதில் முதன்மையாக அன்றைய நாளில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது ரூ 100 கோடி வீடுகட்ட உதவி அறிவித்து பின்பு மேலும் ரூ 100 கோடி ஆக 200 கோடி உதவி வழங்கிய கேரள அம்மே கட்டிபிடித்து ஆசிர்வதிக்கும் மாதா அமிர்தாநந்தமயி நற்செயல்.

இன்றைக்கு ஸ்ரீ சத்ய சாயிபாபாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டுதல் போல் கேரள அம்மேவுக்கு எதுவும் நடத்தப்படவில்லை. கலைஞர் அரசு அது சென்ற ஆட்சியில் என்று நினைக்காமல் அவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். கலைஞர் - பாபா கூட்டணி செயல் திட்டங்களுக்கு அரசு ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் கிடைத்த விளம்பரம் அளவுக்கு மாதா அமிர்தநந்த மயிக்கு முதன்மைத்துவம் அளிக்கப்படவில்லை.

சென்ற ஆட்சியில் அம்மே அமிர்தநந்தமயி அவர்களுக்கு உரிய பாராட்டுதல்கள் கிடைத்தா என்று அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு நினைவில்லை.

இதுபோன்ற வெளிப்படையான பாராட்டுதலால் தமிழக மக்களுக்கு ஆன்மிக வாதிகளின் கருணையும் பரிவும் கிடைத்து மேலும் உதவிகளை வழங்க முன்வருவர். மக்கள் தொண்டாற்ற எப்போதும் ஆன்மிகவாதிகள் தயராகவே இருப்பார்கள் அதற்கான பணமும் மனமும் அவர்களிடம் இருக்கும். அரசு வேறுபாடு காட்டாது அனைவரையும் வரவேற்று மக்களுக்கான நல் திட்டங்களை செயல்படுத்த நல்வரவேற்பு கொடுத்து மக்கள் நல அரசாக மாற வேண்டும்.

25 ஜனவரி, 2007

பழமை வாதமும் பழம்பெருமையும் !

பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள், முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், காலம் காலமாக பின்பற்றுவதால் இதில் ஒருவேளை நன்மை இருந்தாலும் இருக்கும், எல்லாவற்றிற்கும் எந்த காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் எழுதி இருக்கமாட்டார்கள் என்று கூறிக் கொண்டு பழமை வாதம் பேசுகிறோம்.

இவற்றால் எல்லோருக்கும் பொது நன்மை என்று எதாவது இருக்கிறதா ? என்று ஆராய்வதைக் கூட நம் மனம் ஏற்பதில்லை.

திருக்குறள் போற்றத் தக்கதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பெண்களைப் பற்றி இழிவாக சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை. இதை மாற்றுப் பொருள் சொல்லியும் அந்த கருத்துக்கள் இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு. ஆனால் என்ன எழுதினோம் என்பது திருவள்ளுவருக்கும் அவருடைய எழுத்தாணிக்கும் தான் தெரியும்.
பகவத் கீதையில் இருப்பதால் அது உயர்ந்தது, பகவான் சொல்லியது என்று கூட சிலர் வருண பேதம் குறித்துச் சொல்கிறார்கள். இருக்கலாம் நான்கு வருணங்கள் தொழில் அடிப்படையில் பிறிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பின்னாளில் அது பிறவி அடிப்படை என்றல்லவா இன்றலளவிலும் மாற்றப்பட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. வருண வேறுபாடு என்பது வருண பேதம் என்று மாறிய போது அது ஒரு தோல்வியான கொள்கை அல்லது காலவதியான கொள்கை என்று ஆகிவிட்டது. இது இந்து மதம் மட்டுமல்ல ஏனைய மதங்களிலும் அக்காலத்திற்கு ஏற்பட்ட கருத்துக்கள், ஏற்கப்பட்ட கருத்துகள் என பல நம்பிக்கைகள் உண்டு. வேதம் என்றாலே இறைவன் சொல்லியதென்றும் மற்ற மதங்களிலும், இறைவனும் வேதமும் என்றும் இருப்பது என்று இந்து மதத்தினரும் சொல்லி வருகின்றனர். இறைவனுக்கே காலத்திற்கு, இடத்திற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக வேதம் ஏற்படுத்த அவசியம் ஏற்பட்டு இருப்பதை ஏனோ தெரிந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். என் இறைவனின், என் மதத்தின் வேதமே உயர்ந்தது என்று சக மனதிரிடம் வேதத்தின் பெயரால பேதமை பாராட்ட்டுகின்றனர்.

நல்நோக்கம் என்ற பெயரில் இரசாயண ஆலைகளை கட்டுவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று விளம்பரமும் செய்கிறார்கள். அதன் பாதகங்களை பார்த்தால் 1000 பேருக்கு வேலை என்பதை விட பத்து ஆண்டுகளில் ஏற்படப் போகும் சுற்றுச் சூழல் கேடுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 1000 பேருக்கு வேலை என்ற பயனைவிட பத்துலட்சம் பேருக்கு உடல்நலக் குறை ஏற்படுவதாக அறியப்படும் போது, அல்லது சுற்றியும் உள்ள விளைச்சல் நிலங்கள் சீர்கெடும் என்ற அபாயம் அறியப்படும் போது அதை நல்ல நோக்கம் என்று சொல்ல முடியுமா ? பழமைவாதங்களையும் இப்படித்தான் ஆராய வேண்டி இருக்கிறது சிலருக்கு நன்மையாக இருக்கும் பழமை வாத சிந்தனைகள் பலபேரின் வாழ்வையே கேள்விக் குறி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அத்தகைய பழமை வாதத்தை புறம் தள்ளினால் எல்லோருக்கும் நன்மையே.

சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதாலே எந்த கீழான கருத்துக்களும் மேன்மை பெற்றது போன்று சிலர் வாதம் செய்கிறார்கள். தமிழில் சங்க காலத்தில் எழுதியது என்பதால் அது மிகச் சிறந்தது என்று சொல்ல முடியுமா ? காலத்திற்கு ஏற்றார்போல் கருத்துக்கள் ஏற்படுகின்றன, பின்பு இன்றைய காலத்தில் அதன் நடைமுறையில் சிக்கல் இருந்தால் காலாவதி ஆக்கவேண்டும். மொழியில் என்ன இருக்கிறது? அது ஒரு ஊடகம், ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஊடகம். இருந்தாலும் தாய் மொழிப் பற்று என்பது நாம் உண்ணும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்பட்டது, சிந்தனைகளில் செயலாற்றுகிறது என்பதால் அதன் மீது பற்று வைத்திருக்கிறேம். அவரவர் மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்று தனது மொழிக்குழுவிற்குள் எண்ணுவதில் தவறல்ல. ஆனால் உன்மொழியைவிட என்மொழியே சிறந்தது என்னும் வாதம் ஏற்புடையது அல்ல. உன்னுடைய இறைவனை விட என் இறைவன் உயர்ந்தவன் என்பது ஏற்புடையதல்ல

தேவையற்ற பழமைவாதச் சிந்தனைகள் மற்றும் காழ்புணர்வுகளில் நாம் பழமை வாதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவை கலகம் மூட்டவும் கேடுகள் விளைவிக்கவும் அவ்வப்போது வெளியில் வந்து பின் எவரோ வந்து அடக்க சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, எல்லாம் அடங்கியபின் திரும்பவம் தலை தூக்குகிறது.

பழமைவாதம் வேறு பழம்பெருமை வேறு. பழமை வாதம் என்பது இன்றைய சூழலுக்கு பெரும்பாலோரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்குவது அனைவராலும் மறுக்கப்படுவது. பழம்பெருமை என்பது தொன்றுதொட்டுவரும் சிறப்பு அவற்றிலும் நன்மை தீமை அறிந்து மற்றோரை பழிக்காமல் சிறப்பான பெருமைகளை நினைத்துப் பெருமை கொள்வதில் தவறல்ல.

பின்குறிப்பு : அடுத்தவர் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டாமல் தங்கள் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டும் பழமை வாதம் ஒழிவதற்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

22 ஜனவரி, 2007

மந்திரச் சொற்களும், மந்திர மொழியும் !

"ஸ்ரீராம ஜெயம்" எழுதினால் நல்லா படிப்பு வரும்" என்று படிக்கும் காலத்தில் நண்பர்களும், நண்பிகளும் சொல்வார்கள், எழுதியதை காட்டுவார்கள். நானும் எழுதியதுண்டு உடனடியாக பலன் இருந்தது போல தெரியவில்லை. ஒருவாரம் சென்றதும் 10 ரூபாய் கீழே கிடந்து எடுத்தேன் அதற்கும் ஸ்ரீராம ஜெயம் எழுதியதற்கும் தொடர்பு உண்டா தெரியவில்லை :). அதன் பிறகு திருப்பதி பெருமாளின் அற்புதங்கள் என்ற கடிதம் வீட்டிக்கு வந்திருக்கிறது. எடுத்துப் பார்த்து பயந்ததுண்டு. அந்த கடிதத்தில் நம்பியவர் யார் யரோ லட்சாதிபதி ஆனார்கள், அதே போல நம்பாதவர்கள் நாசமாக போனார்கள் என்ற ரீதியில் எழுதி இருக்கும். கடைசியில் இதனை படித்தவுடன் 15 பேருக்கு இதே போல அனுப்ப வேண்டும் என்று சொல்லி.... தவறினால் ... என்று படிக்கும் போதே பதபதைக்க வைத்திருக்கும்.

இதனால் இரண்டு நன்மைகள் 1. தபால் வியாபரம் நன்றாக போனது. 2. கடிதம் கிடைத்தவருக்கு சொந்தக்காரர்கள், நண்பர்களின் முகவரி வியக்கும் வகையில் உடனே நினைவு வர அக்கரையாக கடிதம் அவர்களுக்கு அனுப்பினார்கள். இன்றும் இது போல் கடிதங்கள் வருகிறது ஊடகமும் கடவுள் பெயரும்தான் மாறி இருக்கிறது.

அதாவது புத்தரின் போதனைகளை எழுதி கீழே தலாய்லாமாவின் ஆசிர்வாதமும் உடனடி சொல்வமும் கிடைக்கும் என்ற தகவல்களுடன் திருப்பதி பெருமாள் பாணி மின் அஞ்சல்கள் கூட சமீபத்தில் எனக்கு வந்திருக்கின்றன. இது போல் நிறைய சொல்லலாம்.

ஒரு ஸ்லோகத்தை லட்சக்கணக்கில் எழுதுவது, அல்லது கடிதங்களை அனுப்பி நம்பிக்கை அல்லது பயத்துடன் அதை செயல் படுத்துதல் மூலம் வாழ்வில் திடீர் மாற்றம் வருமா ? என்றால் நேரிடையாக பதில் சொல்ல ஆத்திகர்களும் தயங்குவர். இது போல மந்திர சொற்கள் இருக்கிறது என்றும் மந்திரத்திற்காக மொழியே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையா ? சொற்களுக்கு மந்திர சக்தி உண்டா ? என்று கேட்டால், ஆம் ! எங்களது நம்பிக்கை என்பார்கள் ...மந்திர சொற்கள் உண்மை என்ற சொல்ல அனுபவம் இருக்க வேண்டும் எனவே மந்திர சொற்கள் குறித்த இத்தகைய தகவல்களை நம்பிக்கை என்று விட்டுவிடலாம்

எனக்கு தெரிந்த வரை மந்திர சொற்கள் இல்லை. ஆனால் எந்த சொல்லும் ஒரு சமயத்தில் மந்திரமாகிறது. அதாவது சொற்கள் உடனடியாக செயலில் முடிகிறது எங்கென்றால் அதிகாரவர்கத்திடம் தான். ஒரு கொலையைப் பார்த்த நாம் "செய்தவன் தண்டனை அடைய வேண்டும்" என்று நினைக்கிறோம். ஆனால் அதையே நீதிபதி நினைத்து தீர்பில் எழுதிவிட்டால் அந்த சொற்கள் உடனடியாக செயல்பட ஆரம்பித்து தண்டனை என்ற அளவுக்கு அந்த தீர்ப்புச் சொற்கள் அமைந்துவிடுகிறது.

'ஏழைக்கு இலவச வீடு கிடைக்க வேண்டும்' நாம் நினைப்பது வெறும் நல்லெண்ணம் தான். ஆனால் அதையே ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் அவை அவர்கள் வாயில் இருந்து வெளிப்படும் மந்திர சொற்கள் ஆகின்றன. சதாம் குறித்த மற்றவர்களின் சொற்கள் வெறும் சொற்கள் தான் ஆனால் அமெரிக்கவின் அதே சொற்கள் ஈராக்கில் மந்திர சொற்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது.

மந்திர சொற்கள், மந்திரமொழி என்றோ தனியாக ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருக்கிறது இது மந்திர மொழி இவற்றை வைத்து மந்திரம் சொன்னால் பலிக்கும் என்று யவரேனும் சொன்னால் அது வெறும் நம்பிக்கைதான். மற்றபடி மந்திர சொற்கள் என்றால் ஆட்சி அதிகாரத்தில் ஆணை (உத்தரவு) களில் இருக்கும் சொற்களே மந்திர சொற்கள்.

அன்பு வழி நடப்பவர் உதிர்க்கும் "நன்றாக இரு" என்ற ஆசிர்வாத மந்திர சொல்லின் செயல்பாட்டைவிட கொலைகாரர்களின் "அவனை வெட்டி சாய்" என்ற மந்திரச் சொல் உடனே செயல்படுகிறது. சக்தியும் அதிகம். இத்தகைய மந்திர சொற்கள் எல்லா மொழிகளும் உண்டு. ஒரு சொல் மந்திரம் ஆவது என்பது எப்போதென்றால் அதைச் செயல்படுத்தக் கூடியவர்களால் சொல்லப்பட்டு அது செயல்பாட்டில் வரும் போதுதான்.

மந்திரம் என்ற சொல் ஆராய்சி குறித்து வளவு இராமகி ஐயா
ஆகமம் என்ற பதிவில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

19 ஜனவரி, 2007

தேவமொழி எது ?

"கண்ணா ! சாமியை நல்லா கும்பிட்டுக்கோ" ன்னு அம்மா சொல்லுவாங்க

நானும் ,

"சாமி நல்லா படிக்கனும், பரீட்சையில் பாசாகனும்" னு வேண்டிக்கொள்வேன்

கோவிலுக்குப் போகும் போதெல்லாம் பலர் வாய்விட்டும், சிலர் வெளியில் கேட்கும் படி வேண்டிக் கொள்வார்கள்.

அப்பவெல்லாம் நாம் வாய்விட்டு சொன்னால் மட்டுமல்ல... மனசுக்குள் நினைத்தாலே சாமி புரிந்து கொள்ளும் என்று நினைப்பேன்.

திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகிய பக்திப் படங்களில் கடவுள்(கள்) அருமையாக அழகு தமிழில் வசனம் பேசுவார்கள்.

கோவிலுக்குச் செல்லும் போது மறந்துக் கூட ஆங்கிலத்தில் வேண்டிக் கொண்டதில்லை. கடவுளுக்கு வேறு மொழி தெரியும் என்று நான் நினைத்துப் பார்ததே இல்லை.

படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் இப்படித்தான் நிலைமை இருந்தது. எனக்கு ஒருவருடம் பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. ஒரு முறை பொழுது போகாமல் கன்னட சிம்மம் ராஜ்குமார் நடித்த ஹரிசந்திரா படம் பார்கச் சென்றேன். படத்தில் மயானத்தில் ஹரிசந்திரன் எல்லாவற்றையும் இழந்து சந்திரமதியின் தாலியை கண்டு கொண்டு, அதை விற்று வந்து மயானக் கூலியை கொடுக்கச் சொல்லுவார். அப்பொழுதுதான் லோகிதாசனை எரிக்க முடியும் என்று சொல்வார். சந்திரமதி அழுதுகொண்டே என் கனவனைத் தவிர எவருக்கும் தெரியாத என் தாலி பினம் சுடுபவனுக்கு தெரிந்துவிட்டதே இவர்தான் தன் கணவன் என்று கண்டு கொண்டு, ஹரிசந்திரனின் சத்தியத்தை காப்பாற்ற வேறு வழியின்றி தாலியை விற்று வரச் செல்வாள், பின்பு அவள் திருடி என்று அரசாங்கத்தால் பழி சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதே ஹரிசந்திரனால் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டிய சூழல் வந்துவிடும். ஹரிசந்திரன் வெட்டுவதற்கு கையை உயர்த்தி வெட்டும் போது கையில் உள்ள வெட்டருவாள் பூமாலையாக மாறும். உடனே ருத்ரனும் பார்வதியும் காட்சி தருவார்கள்.

இந்த படத்தில் வசனம் முழுவதும் கன்னடத்தில் இருக்கும் பல இடங்களில் தேவாதி தேவர்களும், மும்மூர்த்திகளும் வருவார்கள். அவர்கள் பேசும் வசனம் முழுவதும் கன்னடத்தில் இருக்கும்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்மட்டும் தான் கடவுளுக்குச் தெரியும் என்று நினைத்திருந்தோமே, இங்கு எல்லா சாமிகளும் சரளமாக கன்னடம் பேச்சுகிறதே ? என்று மிகுந்த வியப்பாக இருந்தது. கடவுளுக்கும் மொழிக்கும் தொடர்பு என்பதே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள எனக்கு பலநாட்கள் ஆகியது.

உலகில் உள்ள எந்த மொழியும் தேவ மொழி இல்லை. எல்லாமே மக்கள் பயன்படுத்தும் மொழிகள் தான் என ஒருவாறு புரிந்து கொண்டேன். வேண்டுதல் வழி நாம் தெரிவிப்பது நம் எண்ணங்களைத்தான் சாமி சர்வ வல்லமை உடையது என்று நம்பும் நாம் சாமிக்கு இந்த மொழி மட்டுமே புரியும், அல்லது உகந்தது என்ற கர்பனைக் கூற்றைப் பிடித்துத் தொங்குகிறோம். அதுவும் சாமி மீது உள்ள பயம் காரணமாகத்தான். எனக்கு தெரிந்து எந்த இதிகாச புராணத்திலும் இறைவன் பேசும் மொழி இது என்று வரையறுக்கப்படவில்லை.

ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்று சொல்லும் நாம் நம் புலன்கள் (வாய், காது, மனம்) வழி தொடர்ப்பு கொள்ளும் எந்த ஒரு மொழியும் இறைவனைச் சேர்ந்ததாக இருக்க முடியாது. அல்லது எல்லா மொழிகளும் அது நரிகுறவர்கள் பேசும் மொழியாக இருந்தாலும் நன்றாகவே இறைவனுக்கு நிச்சயம் புரியும்.

நாம் நம் தாய்மொழி மூலம் வழிபாடு நடத்துவது நமக்கும் சிறப்பு, நம்மை படைத்த இறைவனுக்கும் சிறப்பு. ஆத்திக கூற்றுப்படி தோற்றத்திற்கெல்லாம் இறைவன் காரணம் என்றால் தோன்றிய மொழிகளில், இனங்களில் பேதம் இருக்க முடியாது. ஒன்றை உயர்த்திக் காட்ட மற்றொன்ன்றை தாழ்வாக படைத்தான் என்று சொன்னால் இறைவனுக்கென்று தனிச்சிறப்பு என்ன இருக்க முடியும் ?

இதை உணர்ந்து கொண்ட கிறித்துவ மிசினெரிகள் எங்கு கிருத்துவ மதம் போதித்தாலும் அங்குள்ளவர் பேசும் மொழிகளில் திருப்பலி முதல் பைபிள் வரை எல்லாவற்றையும் அவர்கள் மொழிக்கு மாற்றி அமைத்துக் கொடுக்கிறார்கள்.

17 ஜனவரி, 2007

தமிழுக்கு தேவையா ?


தமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்கு புதுமைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது தடையாகாதா ? என்ற கேள்வியை எனக்குள்ளே முன்பு கேட்டு இருக்கிறேன். பலருக்கும் இந்த கேள்வி இருக்கும்.

பல்வேறு காலகட்டங்களில் தமிழும் பல மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகளில் தமிழே முதன்மையும் தொன்மையும் நிறைந்தது என்பதை கால்டு வெல்லுக்கு பிறகுதான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இயல் இசை நாடகம் என்று இருந்த தமிழ் இன்று அறிவியல் தமிழ், மருத்துவ தமிழ், இணையத் தமிழ் (இடுகை, பின்னூட்டம் இன்னபிற) என்று பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. சிலர் இது போதாது தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள். ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது. கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும். கலப்பு அதிகம் ஆக ஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும். இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம்.
ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் கூட a(அ) இருக்கிறது aa (ஆ) இல்லை இது போல் இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் பல எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் இல்லை. ஆங்கிலத்தின் வளர்ச்சி குன்றவில்லையே. பல ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அகராதியைப் பார்த்துதானே தெரிந்து கொள்கிறோம். நீள் ஒலி (நெடில்)எழுத்துக்கள் இல்லாதது ஆங்கிலத்தின் குறை என்று சொல்வதில்லை. ஆங்கிலம் பிறமொழி புதுச்சொற்களை இருபத்து ஆறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு தான் எழுதுகிறது.

மங்கோலிய மொழிகளான சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் R எழுத்து பயன்பாட்டில் இல்லை. பெயர் சொல்களில் வரும் R ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, ஜப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆஸ்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.

எல்லா ஒலியையும் ஒலிக்கும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது என்று எந்த ஒரு மொழியும் இல்லவே இல்லை. சீன எழுத்துக்களில் பன்மாத்திரை (நெடில் நீள் ஒலி எழுத்து 'கூகூகூ' என மூன்று மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் ஒற்றை எழுத்துக்கள்)மற்றும் கால் மாத்திரை அளவுள்ள குறும் ஒலி எழுத்துக்கள் பிறன் மொழியில் இல்லை. சீன பெயர் சொற்கள் (ஊர், இடம்) பெயரை பிறமொழிகளில் எழுதும் போது அதே போன்ற உச்சரிப்பில் நிச்சயம் இருக்காது எழுத முடியாது. இதனால் சீன எழுத்துக்களை கடன் வாங்கினால் ஆங்கிலம் மேலும் சிறக்கும் என்று சொல்ல முடியுமா ?

ஒலி அதிர்வு அலையின் வேகம் 4hz - 4000 hz வரை இருக்கிறது இதில் தான் நாம் கேட்கும் அத்தனை ஒலிகளும் அடக்கம். குயில் கூவலை அப்படியே எழுத்தின் ஒலிமூலம் சொற்களில் கொண்டு வரும் தன்மை எந்த ஒரு மொழிக்கும் இல்லை. இரைச்சல், சத்தம் என்று எழுதத்தான் முடியும். இரைச்சல் காதின் கேட்கும் திறனால் கேட்கிறது ஆனால் எழுத்தில் அதே போன்று ஒலியை ஏற்படுத்தி நாவை ஒலிக்கவைக்க எழுத்துக்கள் எந்த மொழியிலும் இல்லை.

பிறமொழி எழுத்துக்கள் என்பது அவர்கள் எவ்வாறு சொற்களை உச்சரிக்கிறார்கள் என்ற அளவில் அந்த மொழிகளில் அமைந்திருக்கிறது. பாம்பே என்று எழுதி BOMBAY என்று ஆங்கில உச்சரிப்பில் பலுக்கினால் தவறு ஒன்றுமில்லை. அப்படித்தான் உச்சரிக்கிறோம் பாம்பில் வரும் 'பா' ஒலியில் உச்சரிப்பதில்லை. அதற்கு வெட்கப் படத்தேவையில்லை. ஆங்கிலத்திலும் CAR என்பதை யாரும் 'கர்' என்றோ BUS என்பதை புஸ் என்றோ படிப்பது இல்லை. தமிழ் இறை இலக்கியத்தில் வடமொழி சொற்கள் அதிகம் கலந்ததால் கடந்த காலத்தில் சில கிரந்த எழுத்துக்கள் தமிழில் நுழைக்கப்பட்டது. அதற்கு புணர்சி விதிகளும் அமைக்கப்பட்டது. சில ஆங்கில சொற்களையும் கூட சில புணர்ச்சி விதிகளின் படி பயன் படுத்துகிறோம் (எடுத்துக்காட்டு பஸ்சினுள், பஸ்சின் மேல்) இன்றளவிலும் பெயர் சொற்களில் (ஊர், பெயர், இடம்) பயன்படுத்தப்படுகிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும். அவை நீங்கி மற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையற்றது. அவற்றை பயன்படுத்துவதால் தமிழில் உள்ள வினைச்சொற்களும் திரிவதற்கு வாய்பு இருக்கிறது. நாம் நம் மொழிப் பற்றுடன் பிறமொழி வினைச் சொற்களை கலந்து பேசுவதை தவிர்க்காதவரை பெயர் சொற்களை அப்படியே எழுதக் கூட புதிய எழுத்துக்கள் வேண்டும் என்பது வீண் வேலை. 'அழகன்' என்ற பெயரை அப்படியே எழுதி ஒலிக்க தங்களிடம் 'ழ' போன்ற ஒலி உடைய எழுத்து இல்லையே என நினைத்து எந்த ஒரு மொழியாவது ஏன் (மலையாளம் தவிர்த்து) இந்திய மொழிகள் வெட்கப்பட்டு இருக்கிறதா அல்லது உச்சரிப்பில் கொண்டுவரவாவது முயல்கிறார்களா ?

எல்லா சொல்வளமும், எழுத்தும் இருப்பதுதான் மொழியின் சிறப்பு, மொழி வளரும் என்று சொல்லவே முடியாது. எல்லா சொல்வளமும், எழுத்தும் இருந்து பேசப்படாமல் மறைக்கவோ, முடக்கியோ வைக்கப்பட்டு பயன்பாடு அற்று இருந்ததால் நம் இந்திய மொழிகள் பல அழிந்து போன வரலாறுகளைக் காண்கிறோம். ஆயிரம் கால்கள் இருக்கிறது என்பதற்காக காலே இல்லாத பாம்பை பூரானோ, மரவட்டையோ முந்தியது இல்லை. அதிகமான எழுத்துக்களை வைத்திருப்பதைவிட அதிகமாக பேசப்படும் மொழியே வளரும் என்பது இணைய ஊடகத்தில் இந்திய மொழிகளில் நம் தமிழே நன்றாக வளர்ந்து கொண்டு இருப்பதை வைத்து அறியமுடிகிறது.

தாய்மொழியை தொலைத்ததால் பண்பாடு கலாச்சாரம் எல்லாமே தொலைந்து போன பிறநாட்டு மக்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர். இனப்பெருமை என்பது தாய் மொழிப்பற்றில் இருக்கிறது அதனை அழியவிடாது காப்பது அதனைப் பேசுபவர்களின் கடமை. பெயர் சொற்களை முடிந்தவரையில் பயன்படுத்தி, முற்றிலும் வினைச்சொற்களை தாய்மொழி தமிழில் மட்டுமே பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும். 'கட்' பண்ணினான் என்பதற்கு பதில் வெட்டினான் என்று பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற 'பண்ணி' பயன்படுத்தப்படும் நிறைய பிறமொழி வினைச்சொற்களைச் களையலாம். பெயர் சொற்களில் ஒருவர் விரும்பாவிட்டால் ஜெயராஜ் என்ற அவரது பெயரை செயராசு என்று அழைத்தோ, எழுதியோ தமிழ்படுத்தத் தேவையில்லை. பெயர் என்பது பெற்றோர் வைப்பது அதனை பிறர் கொச்சைப்படுத்துவதை எவரும் விரும்பமாட்டார்கள். நம் தாய்மொழி தமிழுக்கு எதையாவது பரிந்துரைக்கையில் பொறுப்புணர்ந்து அது நம் மொழி வளர்ச்சிக்கு எந்தவகையில் பயன்படும் என்று முதலில் அறிய வேண்டியது நன்று.

இதன் மூலம் சொல்ல வருவது பிறமொழியில் உள்ள தமிழில் தற்போது இல்லாத (ba, bha,ga, gha,dha ) ஒலியை உடைய எழுத்துக்கள் தேவையில்லை என்பது என்கருத்து.


மேலும் இது தொடர்பான இராமகி ஐயாவின் விவாவதம் இங்கே

16 ஜனவரி, 2007

இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா ?

விமர்சனம் 1 *^* விமர்சனம் 2 *^* விமர்சனம் 3 *^* கதை 1 *^* கதை 2 *^* கதை 3 *^* கதை 4 *^* ஒரிஜினல் கதை

எதோ என் பங்குக்கு ...! ஜோதியில் கலப்போம் ! :)
***************************************************


''அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது'' என்றவர்

க்ரிஷின் அப்பா அடுத்த இரண்டாம் நாள் மாரடைப்பில் இறக்க...10 நாள் காரியம் முடிந்ததும் க்ரிஷின் காதல் மனைவி கலைச்செல்வி தன் அம்மாவையும் அப்பாவையும் பஸ் ஸ்டாண்டில் விட்டு வர ஆட்டோவில் ஏறி சென்றாள்.

அதன் பிறகு சொந்த பந்தங்களை அருகில் வைத்துக் கொண்டு...

க்ரிஷின் அம்மா,

"க்ரிஷ் ... நா அப்பவே நெனச்சேன் ... நம்மாத்துல என்னன்னவோ நடக்கப் போறதோன்னு ... இப்பதாண்டா தோன்றது... இவ பொறந்த நேரம் என்னவோ ... இவ உன்னை கட்டிண்ட நேரம் ... நம்மாத்துல உன் தோப்பனார் அடிப்பட்டு ... படுக்கையில் விழுந்து ... எழவெல்லாம் நடந்து போய்டு"

க்ரிஷ் "என்னம்மா சொல்றே ... நீயும் என் கூட அமெரிக்கா வந்துடேன்"


"என்னால அவ கூட வரமுடியாது...இங்கேயே விஷ்ராந்தியில சேர்த்துவிடு ... பகவான் பேரை சொல்லிண்டு என் காலத்தை ஓட்டிடுறேன்"

"என்னம்மா சொல்றே எப்படிம்மா தனியா இருப்பே?"

'நா என்னத்தடா சொல்றது...கல்லுமாதிரி இருந்தவர் .. இவ காலடி நம்மாத்துல பட்டதில எல்லாமே பாழாப் போச்சு... பட்டுன்னு போய்ட்டார்'

"நீ இந்த காலத்து மனுசியாக்குன்னு நெனச்சிண்டு இருந்தேனே"

"ஆமாண்டா ... அவா அவாளுக்கு வந்தா தான் தெரியும்... பெரியவாளெல்லாம் சும்மாவா சொல்றா ... குலம் கோத்ரம் எல்லாம் பாத்து கல்யாணம் செய்யனும் ... ஆயிரங்காலத்து பயிரரில்லையோ இது''


"அம்மா ..." அதிர்ந்து பேசினான் கிரீஷ்

சுற்றும் முற்றும் பார்த்தாள்

"உன் தோப்பனாருக்கு தர்பணம் பண்ணிட்டே... இப்ப நேக்கும் பண்ணிடாதே"

"இப்ப நான் என்னதான் பண்ணனும் ?"

"அவள டைவர்ஸ் பண்ணிட்டு ... நம்மவா அதான் கிச்சு ஐயர் வந்து அவ பொண்ணுக்கு கேட்டாரில்லையான்னோ அவ பேரு கூட என்னமோ பவித்ரா... அவளுக்குக்கூட கல்யாணம் ஆச்சே'

"!! "


"அவளேதான்... அவளுக்கு ஒரு தங்கை இருக்காள் பேரு மைதிலி ... பாக்க நன்னா செவப்பா அக்கா மாதிரியே இருப்பாள் ... அக்காவை பார்த்தா தங்கையை பார்க்க வேண்டியதில்லை ... ஒரே அச்சா இருப்பாள்"

"..."

"அவளை கேட்க்கலாம் ... இதெல்லாம் சகஜம் ... எல்லாம் தப்பா நெனச்சிக்க மாட்டார் ... அடுத்தப் பொண்ணு இருக்காள் எதாவது நல்ல தகவல் இருந்தா சொல்லி அனுப்புங்கன்னு பக்கத்தாத்து பத்மனாபன் மாமாகிட்ட பேசிண்டு இருந்தாராம்"

அருகில் இருந்த பத்மனாபன் மாமா உடனே,

"ஆமாண்ட கிரீஷ், நாம என்னதான் முடிவெடுத்தாலும் பகவான் எடுக்கிற முடிவு தான் பலிக்கிறது பார்த்தாயா ?"

"மாமா என்ன சொல்றேள், பகவான் முடிவெடுத்துட்டாரா ?"

"அம்பி ... ஆச்சாரா அனுஷ்டானமா இருக்கிறவா ஆத்துல ... அவா அவாளே முடிவெடுத்து... பிரத்தியார ஆத்துக்கு கூண்டிண்டு வந்துட்டா ... அப்பறம் ஆண்டவன்னு எதுக்கு இருக்கார் ... அதான் கோபத்தை காட்டிட்டார்"

"நன்னா சொல்லுங்கோ மாமா... இஷ்டத்துக்கு நடந்துட்டதுக்கு தோப்பனாரை முழுங்கிட்டு இன்னும் பேசுறான் பாருங்கோ" விசும்புகிறாள்

"க்ரிஸ் ... பட்டுன்னு சொல்லிடுறேன்... டைவர்சுக்கு பைல் பண்ணிட்டு அமெரிக்கா போய்டு... ஒருவருசம் ஓடிடும் ... திரும்பி வந்தோன ...கிச்சு ஐயர் கடைசி பெண்ணு மைதிலிய முடிச்சிடலாம்" பத்மனாபன் மாமா சொன்னார்

அப்போது உள்ளே நுழைந்த கலைச்செல்விக்கு சன்னமாக இந்த பேச்சு காதில் விழுந்தாலும் அவளுடைய மாமனார் போய் சேர்ந்ததிலிருந்து எல்லோரும் ஜாடை காட்டி பேசியது இப்போதுதான் புரிந்து

"க்ரிஷ் என் கூட இங்கே வாயென்..." ரூமுக்குள் அழைத்துச் சென்றாள்

"நன்னா பாருங்கோ ஆத்துகாரன்னு மரியாதை தெரியறதா அவளுக்கு" மாமா தன் பங்குக்கு ஏற்றிவிட்டார்

முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அவனை அழைத்துச் சென்றாள்


"க்ரிஷ் எல்லா எதிர்ப்புகளையும் சமாளிப்பேன்னு தானே என்னை கட்டிக்கிட்டே...?"

"கலை அம்மா சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு... இப்போ கோவத்தில இருக்காங்க ... நடந்த தெல்லாம் தான் உனக்கு தெரியுமே"

"க்ரிஷ் என்ன சொல்ற நீ ? ... உன் சம்மதத்தோடத் தான் இதெல்லாம் ..ச்சேய்"

"எங்க அப்பா தான் எனக்கு எல்லாமுமே ... இப்போ போய்ட்டார் ஆதங்கம் இருக்காதா பின்னே ?"
"மாமா போனதுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் ? ...நல்லா இருக்கே ... ஒன்னு பண்ணு ... உங்க அம்மா சொல்றதை கேளு" கோபமானாள்

அவனுக்கு பதிலுக்கு கோபம் வந்தது

"எல்லாம் எனக்கு தெரியும் ..." எதோ சொல்ல வந்தான்

"ஏதோ தன்னால் நடந்ததுக்கு என் தலையை போட்டு உருட்டினால் ... பொருத்துக் கொண்டு இருக்க முடியாது... நான் வர்ரேன் ... நாம சேர்ந்து வாழறது இங்கே யாருக்கும் பிடிக்கலை" கண்களில் நீர் கசிந்தது.

"இருக்கிற பிரச்சனையில் ... இது வேற பிரச்சனையா !" கடுகடுத்தான்

"நான் இருக்கிறதே பிரச்சனைன்னு நீயும் சேர்ந்து சொன்னதுக்கப்பறம் எனக்கு இங்கே என்ன வேலை"

பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்

"நான் தான் முக்கியம்னு நெனைச்சா வா ... நான் காத்துக்கிட்டு இருப்பேன்... உங்க சொந்த காரங்க ...உங்க அம்மா ... என்னை கேவலப்படுத்துவது இதோடு முடியும்னு தோணலை ... நான் படிச்சிருக்கேன் .. சம்பாதிக்கிறேன்... இந்த ஏச்செல்லாம் வாங்கிட்டு என்னால உன் கூட வாழ முடியுது"


"போ ... திரும்பி வராதே ... !"

வேகமாக சென்றவள் மறைந்தே விட்டாள்

தலையில் கைவைத்துக் கொண்ட்டு உட்கார்ந்தான் க்ரீஷ்

அந்த அம்மா ஊகித்திருப்பாள் போலும்


"பீடை ஒழிந்தது...நடக்கிறதுதான் நடக்கும் ... ஆண்டவன் பாத்துண்டு ...இருக்காரில்லையோ ... நான் சொல்லலே! இதெல்லாம் ஒட்டவே ஒட்டாது" க்ரிஷை கரைத்துக் கொண்டிருந்தாள்

பத்மநாபன் மாமா மெல்லமாக கேட்டார்


"அப்போ நான் லாயர் கோதண்டம் ஐயங்காரைப் பார்த்துப் பேசிடுறேன் ... மைதிலி தோப்பனாரையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகச் சொல்றேன்"


க்ரிஷின் குழப்பம் அதிகம் ஆக ... தனிமையை நாடி ரூமுக்குள் சென்றான்

பின்குறிப்பு : எதோ இரண்டு பேர் காதலித்து ... சாதியை மறந்து ... கல்யாணம் கட்டிக்கிட்டது பிடிக்கலையா ? சுஜாதா பொடி வைத்தால் ... பதிலுக்கு இரண்டு பக்கமும் வெடி வைக்கிறிங்களே ... ஆளாளுக்கு பிச்சி எடுத்திட்டிங்க ...இப்ப பாருங்க க்ரிஷ் - கலைச்செல்வி ஜோடி பிரிந்துவிட்டது. :)))

15 ஜனவரி, 2007

காளையை அடக்குகிறார் கைப்பு !

கைப்பு : எலே அம்புட்டு பேரும் இங்க வாங்கடா
அல்லக்கைகள் : என்னாணே ?
கைப்பு : பேசுறப்ப இப்படி குறுக்கப்பேசப்படாது
அல்லக்கைகள் : ???
கைப்பு : அது ! என்ன அம்புட்டுப் பயலும் ஆப்புவச்ச மாதிரி அடங்கிட்டானுங்க
அல்லக்கைகள் : அண்ணே நீங்க தானே அம்புட்டு பேரும் குறுக்கப் பேசப்படாதுன்னிங்க !
கைப்பு :அடேய் ... ! இன்னிக்கு அண்ணன் என்ன செய்யப் போறார் தெரியுமா ?
அல்லக்கைகள் : அண்ணே சொல்லுங்கண்ணே !
கைப்பு : ஜல்லிக் கட்டு காள மாட்ட அடக்கப் போறேன்டா ..... அடக்கப் போறேன் !
அல்லக்கை : அண்ணே வேணாம்னே குத்தி போட்டுறும்...!
கைப்பு : டேய் சிங்கம் சீறி பார்ததில்லேன்னு சொன்னீல்ல நீய்யீ ...!
அல்லக்கை : ஆமாம் ணே
கைப்பு : இன்னிக்கு பாரு
எல்லோரும் மாடுபிடிக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்
கைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி, மாடுகளுக்கு மூக்கணை போட்டு இருப்பாங்கன்னு நெனச்சி வாய வுட்டுடேனே. ஈட்டி மாதிரி கொம்பை சீவி வச்சிருக்கானுங்களே ம் விதியாரை வுட்டுச்சி'
அல்லக்கை : அண்ணே அதோ வருதுபாருங்கண்ணே அந்த மாட்டை பிடிங்கண்ணே
என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்
கைப்பு : அடேய் ... டேய்...
சரி சமாளிப்போம் என்று நினைத்து
கைப்பு : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி..
என்று பாடிக் கொண்டே வேகமாக திரும்பி ஓடுகிறார்... சீறிப் பாய்ந்த காளை பின்னால் குத்தி தூக்கி எறிகிறது
கைப்பு : அய்...
அல்லக்கைகள் : வலிக்கிதாண்ணே ?
கைப்பு : டேய் வா இங்கே ... வலிக்குதுண்ணு நான் உன்கிட்ட சொன்னேனா ?
அல்லக்கை : அண்ணே அண்ணே திரும்பவும் காளை உங்களைப் பார்த்து ஓடிவருது
கைப்பு மனசுக்குள் 'அடி ஆத்தி அம்புட்டு பயலுகளும் பாத்துக்கிட்டே நிக்கிறானுங்களே... அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு' என்று நினைத்துக் கொண்டு
கைப்பு : டேய் டேய் இப்ப பாரு அண்ணனை ...
என்று காளையை முறைத்தபடி நிற்கிறார். திரும்பவும் முட்டி தூர எறிகிறது
மனதுக்குள் முனுகினாலும்
கைப்பு : பார்த்தியாடா... அண்ணன் எப்பிடி அசராமல் நிக்கிறேன்னு ...
சொல்லி முடிப்பதற்குள் பின்னால் மறுமடியும் முட்டி கொம்பால் தூக்குகிறது
கைப்பு : வேணாம் உட்டுடு ... அடங்கனும்
ஹூம் ஹூம் ...மாடு தலையாட்டுது
கைப்பு : வேணாம் அப்பறம் ... செல்லிட்டேன் வேணாம் ...இந்த பக்கமே வரமாட்டேன் உட்டுடு...

மாடு தூக்கி எறிந்துவிட்டு காலால் மண்னைத் தள்ளி கைப்புவின் முகத்தில் அடித்துவிட்டு செல்கிறது.
கைப்பு : அது ... அந்த பயம் இருக்கனும் ...அடங்கனும்...!
காளை திரும்பிப் பார்த்து முறைக்க..
கைப்பு : தம்பி பேச்சி முத்து அண்ணன் ஒன்னிய சொல்லலப்பா... என்னிய சொல்லிக்கிட்டேன்
என்று மண்ணைத் தட்டிவிட்டு விட்டு தடுமாறி எழ முயற்சிக்கிறார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்