குழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு சென்று மூன்று வயதிற்குள் அடிக்க வேண்டுமாம். எனக்கு இந்த சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தல், சென்டிமென்ட்ஸ் மற்றும் இதர வகைகளினால் ஒருவயதிற்குள் மொட்டையடிப்பது என்று முடிவாகியது. மேலும் குழந்தையாக இருக்கும் போது முதல் மொட்டை போட முடி கரு கருவென்று வளர்வதற்கு வழிசெய்யும். சிலருக்கு இளம் வழுக்கையை மறைத்து இளமையாக்க மொட்டை பயன்படுகிறது. மகளுக்கு பள்ளி விடுமுறை அடுத்து டிசம்பரில் தான் என்பதாலும் அதற்குள் ஒரு வயது ஓடிவிடும் என்பதால் சிங்கப்பூர் - மலேசியாவில் ஏதோ ஒரு கோவிலில் மொட்டையடிக்கலாம் என்று முடிவாகி, சின்ன சுற்றுலாவாக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள பத்து மலையில் மொட்டையடிக்கலாம் என்று உறுதி செய்து பயண ஏற்பாடுகளை செய்தேன். பயண ஏற்பாடுகளுக்கான முன்பதிவுகளை செய்து கொடுத்ததும் கூடவே பயணம் முழுவதும் எங்களுடன் இருந்தார், பதிவர் நண்பர் வெற்றிக்கதிரவன் (எ) விஜயபாஸ்கர். ஒரு நாள் விடுப்பு வெள்ளி அதன் தொடர்ச்சியாக வார இறுதி சனி ஞாயிறு என மூன்று நாள் பயணமாக மலேசியாவிற்குக் கிளம்பினோம்.
சிங்கையிலிருந்து கிளம்பி, அதனை அடுத்துள்ள மலேசியா ஜோகூரில் இருந்து இரவு நேர படுக்கை வசதியுள்ள ரயிலில் தான் பயணம், வியாழன் நள்ளிரவில் கிளம்பிய ரயில் வெள்ளி விடிய காலை 6:30 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் சென்று அடைந்தது. அங்கிருந்து மகிழுந்துவில் பயணத்து ஓட்டல் அறையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு கிட்டதட்ட 11 மணி வாக்கில் மற்றொரு மகிழுந்தில் பயணித்து பத்துமலை சென்றோம். கிட்டதட்ட 20 நிமிட பயணம் தான். மலை அடிவாரத்தை நெருங்கும் முன் தொலைவிலேயே பத்து மலை முருகனின் மிகப் பெரிய சிலை வியக்க வைத்தது, இதற்கு முன்பு அங்கு சென்றிருக்கிறேன் என்றாலும் சிலை அமையப் பெற்ற பிறகு சென்றது முதல் முறை என்பதால் அந்த இடமே மாறுபட்டத் தோற்றத்தில் இருந்தது. உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.
சிறுது நேரம் சிலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு நிழல்படங்களை எடுத்துக் கொண்டு முடி இறக்கும் இடத்திற்கு வந்தோம், கோவில்களில் இருப்பது போன்று முடி இறக்க தனியாக இடம் இல்லை என்பதை நண்பர் முன்பே தெரிவித்திருந்தார், ஆனால் அங்கு அடிவாரத்தில் இருக்கும் முடித்திருத்தகத்திலேயே 'முடி இறக்கும் இடம்' என்ற அறிவுப்பு பலகை இருந்தது,
அங்கு சென்று 10 ரிங்கிட் (மலேசிய நாணயம்) சீட்டு வாங்கி, குழந்தைக்கு மொட்டை ஏற்பாடு செய்தோம், குழந்தையை வெற்றிக்கதிரவன் மடியில் இருத்திக் கொண்டார்,
சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை அழத் துவங்கினான், பிறகு அவன் அம்மாவிடம் கொடுத்து புட்டிப்பால் புகட்டிக் கொண்டே மொட்டை மொட்டை அடிக்கப்பட்டது, பாதியிலேயே வீரிட்டுக் கத்தத் துவங்கினான்.
மொட்டை அடிக்கும் வேலை 3 நிமிடங்கள் தான் என்பதால் அழுகையை கண்டு கொள்ளாமல் அழுத்திப் பிடித்து கொண்டு மொட்டையை நிறைவு செய்தாகிவிட்டது, கீறல் விழாமல் மொட்டையடித்தைப் பாராட்ட கூடுதலாக 10 ரிங்கிட்டுகள் கொடுத்தோம். குழந்தைகளை குளிப்பாட்ட மின்சார சாதன வெந்நீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், குளித்து முடித்து, புத்தாடை அணிவித்து தலையில் சந்தனத்தைத் தடவி கோவில் படிக்கட்டுகளை நெருங்கினோம் அதுவரை அழுது கொண்டிருந்தான் பிறகு அங்கிருக்கும் புறாக்களைப் பார்த்து அமைதியானான். நம்மை எதோ செய்கிறார்கள் என்கிற பயம் இருக்கும் போல் குழந்தைகளுக்கு, அங்கு பிறந்த ஒரே மாதம் ஆனக் குழந்தைகளைக் கூட மொட்டை அடிக்க அழைத்துவருகிறார்கள், உச்சிக் குழி மூடாமல் மொட்டையடிப்பதை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது, சீனர்களும் கூட அவர்கள் வழக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பதாக முன்பு என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.
செங்குத்தான படி, 15 - 20 படிக்களுக்கு இடையே கொஞ்சம் அகலமான படிக்கட்டுகளுடன் 300க்கு மேலான படிக்கட்டுகளுடன் படிகள் அமைக்கப்பட்டுள்ளன, முக்கால் பங்கு தொலைவு மேலே ஏறியதும் தான் முருகன் சிலையின் தலை உயரம் வருகிறது, உயரமும், அதன் பின் இருக்கும் மாலை அலங்காரமும் மொத்த சிலையும் கலை அமைப்புடன் 'விசுவ ரூப' தோற்றம் என்று வடமொழியில் கடவுள் குறித்தான கதையாடலில் சொல்ல்படுவதன் சாட்சியாகக் காணப்படுகிறது. அமைப்பாளர்களைப் பாராட்டலாம்.
படிகளின் கைப்பிடிச் சுவர்களில் அங்கங்கே குரங்குகள் விளையாடுகின்றன, சுற்றுலாவாசிகள் படமெடுக்கிறார்கள், மேலே சென்றால் பெரிய குகை, மலைகள் உருகி கூம்புகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன
அவற்றில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருந்தன, நல்ல குளுமை, மழைத் துளிபோல் குகையின் திறந்த பகுதிகளில் மேலிருந்து தண்ணீர் துளிகள் எப்போதும் விழுந்து கொண்டிருக்கின்றன. குகையின் நடுவே தனியாக இருக்கும் முருகன் கோவிலும்,
அதைக் கடந்த படிக்கட்டுகளில் மேலே ஏற அதனை அடுத்து வள்ளி தெய்வானையுடன் நிற்கும் முருகன் கோவிலும் உள்ளது, குகையின் சுவர்களில் சுற்றுலாவாசிகள் பெயர்களை எழுதி இருக்கிறார்கள், அதனைத் தடுக்க 'சுவர்களில் எழுதாதீர்கள்' என்ற அறிவிப்பும் அங்கங்கே இருக்கிறது, குகைச் சுவர்களில் அங்கங்கே பல்வேறு சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடமே இயற்கைச் சூழலுடன் அமைதியாகவும் காணப்படுகிறது.
அங்குள்ள பூசாரிகளிடம் (இங்கு பார்பனர்கள் அர்சகர்களாக இல்லை, முழுக்க முழுக்க தமிழ் வழிபாடு தான்) திருநீறு குங்குமம் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு திரும்பினோம், ஏராளமான ஐரோப்பியர்கள் அங்கு வந்து செல்கிறார்கள், தன் மதம் பற்றிய தெளிவுகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அல்லது புறம் தள்ளிவிட்டு அங்கு கோவிலில் இருக்கும் பூசாரியிடம் மணிக்கட்டில் மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள். இந்தக் காட்சியை பிறமதவாதிகள் பார்த்தால் 'இந்தப் பூசாரி சைலண்டாக பிற மதத்தினரை மதம் மாற்றுகிறார் பார்...' என்றும் இந்துமதவாதிகள் பார்த்தால் 'இந்து ஞானமரபினைப் போற்றி இந்து கோவிலுக்கு ஆர்வமாக வரும் கிறித்துவர்கள்' என்றும் சொல்லுவார்கள் நண்பரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன், கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.
நடக்க இயலாதவர்கள் படிக்கட்டு வழியாக மேலே வர வாய்ப்பில்லை, பிற ஏற்பாடுகள் எதுவும் இல்லை, அவர்கள் கிழிறிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான், இழுவை ரயில்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, எதிர்காலத்தில் அவை வரலாம். முன்கூட்டியே வேட்டி எடுத்துவந்த்தால் மடித்துக் கட்டிக்கொண்டு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாகத்தான் இருந்தது, சுற்றுலாவாசிகள் காலணிகளுடன் ஏறுகிறார்கள், அவை தடைசெய்யப்படவில்லை, இந்துக்கள் காலணிகளை கீழேயே விட்டுவிட்டு ஏறுகிறார்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஒருவிதத்தில் பத்து மலை மலேசியாவின் ஆகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு தமிழர் பண்பாட்டு சின்னங்களை அமைத்திருப்பது அடுத்து செல்லும் நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, அவர்களின் உழைப்பும், ஈடுபாடும் போற்றுதலுக்குரியது. பிற நாடுகளில் வாழும் சீனர்களுக்கு அடுத்து தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதில் தமிழர்கள் முனைப்புடன் தான் இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும் என்பதை நினைத்துக் கொண்டே திரும்பினேன்.
பின்குறிப்பு : குழந்தைப் படங்களை பதிவுகளில் போடுவதற்கு நிறைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து தனிப்பட்ட முறையில் நன்கு சொல்லி இருக்கிறார்கள், இதில் ஏன் போடுகிறேன் என்றால், எனக்கு இருக்கும் பதிவர் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியான பொழுதுகளை பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ந்து பிறகு இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவணமாகத் தான் போடுகிறேன்.