பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஏப்ரல், 2012

* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா ?


சில இஸ்லாமிய தளங்களில் மாற்று மத அன்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா ? கூடாதென்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி, சொல்லக் கூடாது மீறிச் சொன்னால் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றெல்லாம் சொல்கிறார்கள், என்று முன்பு சுட்டிகளோடு எழுதி இருக்கிறேன். இப்ப அதே நிலைமை தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்பட்டிருப்பதை இங்குச் சொல்கிறேன்.

ஆன்றோர் சான்றோர் எது தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள் என்கிற ஆராய்ச்சிக்குப் போகவிரும்பவில்லை, அது பற்றி ஏற்கனவே திரு இராமகி ஐயா மற்றும் கண்ணபிரான் ரவிசங்கர் (கே ஆர் எஸ்) எழுதியுள்ளனர், நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதன் பிறகு சித்திரை திங்கள் ஒன்றாம் தேதியை எப்போதும் வந்து போகும் ஒரு நாளாகத்தான் பார்க்கிறேன், இதற்குக் காரணம் கருணாநிதி தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பதற்கு அல்ல, இந்த தமிழ் புத்தாண்டு நாள் மாற்றம் ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே, கருணாநிதி ஆட்சி ஆளுமைகளில் இருந்ததால் நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்பதாக சென்ற ஆட்சியில் மாற்றினார், ஆனால் இதை அவர் முன்பு எப்போதோ செய்திருக்க வேண்டியது. தனித்தமிழ் ஆர்வலர்கள் என்றால் யாரு ? அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்போர் கே.ஆர்.எஸ் இடுகையைப் படிக்கவும்.
(இதில் யாரும் இறை மறுப்பாளர்கள் இல்லை)

என்னைப் பொருத்த அளவில் 100 ஆண்டு காலக் கோரிக்கைகளுக்குப் பிறகு சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செம்மொழி என்பதை மைய அரசு அறிவித்தது, அவ்வாறு அறிவிக்காத முன்பு தமிழ் சொம்மொழி வரையறைக்குள் வரவில்லை அல்லது தகுதி இல்லாமல் இருந்தது என்கிற கூற்று இருந்தால் அதில் எள்முனை அளவும் அறிவார்ந்த சிந்தனைகள் இல்லை என்பது போல் தான். கருணாநிதி அறிவிக்காத முன்பு சித்திரை 1ல் தான் புத்தாண்டு இருந்தது தைக்கு பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்பும் இல்லை என்பது போன்ற கூற்றும். தமிழுக்கு செம்மொழிக்கான அனைத்து தகுதி இருந்தும் செம்மொழியாக அறிவிக்க மைய அரசைக் கெஞ்சியது போன்று தை 1 க்கு தமிழ் புத்தாண்டை மாற்றக் காரணங்கள் ஏற்கனவே இருந்தது, அதற்காகவே தமிழார்வளர்கள் காத்திருந்ததும் உண்மையே. தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக மாற்றிக் கொண்டால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மதச் சார்பற்று கொண்டாடலாம் என்கிற பரிந்துரைகளும் இருந்தது,  சித்திரை 1ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் தமிழ் இந்து பண்டிகையைப் போன்று வடை பாயசத்தோடு படையல் மற்றும் அன்று மாலை கோவிலுக்குச் செல்வது என்பதுடன் முடிந்துவிடுகிறது. பிற மொழிப் பேசுபவர்கள் தங்கள் புத்தாண்டுகளை பெரிய அளவாக மதச் சார்பற்று கொண்டாடுவதைப் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் தமிழ் புத்தாண்டு என்று சித்திரை 1ல் கொண்டாடுவதில் எந்த ஒரு தனிச் சிறப்பும் கிடையாது. சித்திரை 1 என்பது ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், வைகாசி விசு, ஆடிப் பூரம், மாசி மகம், தைப் பூசம் போல் வந்து போகும் வெகு சாதாரண ஒரு இந்துப் பண்டிகை என்ற அளவிலேயே மொழிச் சார்ந்த தனி அடையாளத்தைச் சிதைத்து சுருக்கி இருக்கிறார்கள்.

நாம விருப்பப்படி வைத்துக் கொள்ள தமிழ் புத்தாண்டின் தேதி என்ன மீசையா ? என்ற கேள்வியை சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் கேட்கிறார்கள், காலத்திற்கும் எவனோ இழித்துச் சொன்ன தீண்டத்தகாதவன் என்கிற இழிச் சொல்லை சுமக்க மறுப்பது இந்த மீசை வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை, இன்றைக்கு அட்சய திருதியை ஒன்றை நுழைத்திருப்பதைப் போன்று என்றோ ஒரு நாள் நுழைக்கப்பட்டதே தமிழ் திங்களின் பெயர்களும் அதன் துவக்கமும், மாற்றிக் கொள்வதால் தமிழ் தனித் தன்மையை மேலும் கூட்டிக் கொள்கிறதே அன்றி அதனால் தமிழுக்கு கெடுதலோ, சிறுமையோ கிடையாது

********

நான் முன்பு பொங்கல் அன்று தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்று கூகுள் + ல் அறிவித்திருந்தேன், நியமாகப் பார்த்தால் நாம கொண்டாடாத ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ் நாளுக்கும் அந்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம், ஆனால் நான் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்றதும் சபிக்காத குறையாக சிலர் விவாதம் என்றப் பெயரில் கருத்துக்களைக் கூறி இருந்தனர், நான் தெளிவாகச் சொன்னேன், 'நீங்கள் தான் கொண்டாடவில்லை, அதை நான் ஏன் என்றும் கேட்கப் போவதில்லை, உங்களுக்கு விளக்கினாலும் வெளங்காது, ஆனால் கொண்டாடும் என்னை நீங்கள் வாழ்துவதற்கு உங்களுக்கு என்ன தடையோ ?'  இதில் புரியாதது என்றும் ஏதும் உண்டா ? 'வீம்புக்கு கொண்டாடுவதற்கெல்லாம் நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்' என்றனர். அப்படிப் பார்த்தால் என்னைப் பொருத்த அளவில் சித்திரை 1 யே அவர்கள் பிடித்துத் தொங்குவதும் எனக்கும் வீம்பாகத்தானே படும். வழக்கத்தை மாற்றுவது தர்மம் இல்லை, ஞாயம் இல்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், தமிழ் நாட்டில் ராம நவமி என்று ஒன்று கொண்டாடப்படுகிறது, திருவரங்கம் தவிர்த்து ஏனையை பெருமாள் கோவிலும் ஒரு திங்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இராம நவமியின் அதே நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் கொண்டாடப்படுவதில்லை, அதற்குக் காரணம் சொல்கின்றனர், மற்ற கோவில்களில் கொண்டாடுவது 'சந்தர மாஸத்தை அடிப்படையாக கொண்டது, ஶ்ரீரங்கத்தில் ஸூர்ய மாஸத்தை அடிப்படையாகக் கொண்டது' இவற்றையெல்லாம் மாற்றி மாற்றிக் கொண்டாட ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருப்பதிலும் அதன் நடை முறைகளிலும் முரணே இல்லையாம், தமிழ் புத்தாண்டின் திங்களை மாற்றுவது தான் முரணானதாம்.

ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.

என்னதான் சங்கு ஊதினாலும் கேட்காத காதில் கேட்காது.

ஆனாலும் நான் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களை வாழ்தத் தயங்கும் அளவுக்கு எனக்கு சிறுமதி இல்லை. 

சித்திரையை தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடும் அனைத்து தமிழ் 'இந்து'க்களுக்கும் நல்வாழ்த்துகள். 

ஹேப்பி டமில் நியூ இயர் டூ யூ !



15 ஏப்ரல், 2008

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

திரு வந்தியத்தேவன் அவர்களின் பின்னூட்டத்திற்கான மறுமொழியாக எழுதியது, நீளம் கருதி தனி இடுகையாக்கி இருக்கிறேன், அவருக்கு மட்டுமல்ல அதுபோன்ற கருத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் எனது கருத்தாக இதை எழுதுகிறேன்

//வந்தியத்தேவன் has left a new comment on your post "வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...":

மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒரு வீம்புக்கு மாற்றுவது கொஞ்சம் பயத்தை அளிக்கிறது. கீழ்கண்டவாறு எல்லாம் அறிவிப்புகள் வெளியானால் எவ்வாறு இருக்கும். சற்று நகைச்சுவை உணர்வுடன் படியுங்கள். (அவற்றில் நகைச்சுவை இருப்பதாக தெரியவில்லை என்றாலும்! :) )//


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், சங்ககாலத் தமிழன் அனைத்து சமயம் சார்ந்தவன், அவன் பவுத்தனாக இருந்திருக்கிறான், சமணனாக இருந்திருக்கிறான், மதமற்றவனாகக் கூட இருந்திருக்கிறான். அப்பொழுதும் அனைத்து தமிழர்களாலும் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டே வந்தது. தமிழர்களின் நாட்காட்டி முறை திரிக்கப்பட்டவுடன் சித்திரையில் தமிழ் ஆண்டு பிறப்பதாகவும் அதன் கொண்டாடமெல்லாம் இந்து பண்டிகையாகவும் மாற்றப்பட்டது, தற்பொழுது தமிழர்களில் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்களா ? கொண்டாவில்லை என்றால் தமிழர் குடி முழுகிவிடுமா என்று கேட்பீர்களா ? எந்த ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள், உலகம் முழுவது ஆங்கில நாட்காட்டி முறை இருந்தாலும் எதாவது இஸ்லாமிய நாடுகளில் ஜென 1 ஐ புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்களா ? இந்தியாவில் கொண்டாடுகிறோம், அதனையும் இந்துமதவாத சக்திகள் எதிர்கின்றன.

இப்பொழுது சொல்லுங்கள் சித்திரை புத்தாண்டு இந்து பண்டிகைப் போல் உள்ளதா இல்லையா ? ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? சீனர்கள் அவர்களின் புத்தாண்டை மதம் சார்ந்த ஒன்றாக கொண்டாடுவதில்லை, கொண்டாட்டதிலும் மத வாசனை இல்லை.

//வேட்டி தான் தமிழனின் பாரம்பரிய உடை என்று அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வேட்டி கட்டிக் கொண்டு வரச் செய்யலாம், சத்யராஜ் சொன்னது போல தமிழ் கடவுள்களை மட்டும் தமிழன் வழிபட வேண்டும் என்று உத்திரவு இடலாம்.
படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிப்பது போல தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் இலவசம் என்று அறிவிக்கலாம். (ஆனால், தமிழினத் தலைவர் தம் பெயரை அன்புச்செல்வம் என்றும் கூட்டணித் தலைவரின் பெயரை
இராமஅடியான் என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும் முதலில்!)//


கேரளா மாநிலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு தான் அலுவலகம் செல்கின்றனர், அதை அவமானமாக யாரும் நினைப்பதில்லை, நமது முன்னோர்வழி உடை வேட்டியை வேஷ்டி என்று வடமொழியில் எழுதுவது தான் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் தமிழனின் மனநிலை மாறவேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் தமிழ்நாட்டு கோவில்களுக்கு வரும் விழுக்காடு, தமிழன் அங்கெல்லாம் படையெடுத்துச் செல்வதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு, தன்வீட்டை இருட்டாக போட்டுவிட்டு, அடுத்த தெருவுக்கே விளக்குகள் அளிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அவரது செயலை போற்றுவீர்களா ? ஒருவருக்கொருவர் (பரஸ்பரம்) என்ற முறையில் தமிழர்களின் கோவில்களுக்கு பிறமாநிலத்தவர் வந்து சென்றால் நாமும் அவ்வாறு செய்யலாம், எங்கும் இருப்பது கடவுள் என்று நம்பும் தமிழ் பக்தர்கள், பிறமாநிலத்தில் உள்ளவற்றில் சக்தி இருப்பதாகவும், தம்மாநில கடவுள் வெறும் சிலை தான் என்று நினைத்து ஒதுக்கப்படுவதும் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை. குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்கவும் அரசு அறிவித்தால் உண்டு என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இன்று தமிழன் தன்னைத் தாழ்வாக நினைத்திருப்பது மாறவேண்டுமா? வேண்டாமா ?

//கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ் குடி. உணவு, உடை, பழக்க வழக்கம், திருவிழா, மொழி - இவற்றில் எதுவும் கலப்பில்லாமல் வணிகம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பிருந்த மூத்தகுடி தமிழன் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆக அந்த ஆதி தமிழன் பயன்படுத்திய பொருட்களை, வாழ்க்கை முறையை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுணர்ந்து அவ்வாறு வாழ தலைப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம். //

உலகில் எந்த ஒரு வளர்ந்த நாகரீகமும் உணவு, உடை, பழக்கவழக்கம், நாகரீகம், மொழி ஆகியவற்றை மாற்றிக் கொண்டது கிடையாது, இதற்கு சிறந்த உதாரணமாக சீனர்களையும் ஐரோப்பியர்களையும் காட்டலாம். அலுவலக உடை, வெளிப்பழக்கம் இதெல்லாம் வேறு, இது உலக அளவில் எல்லோரும் செய்வது தான், தன்னளவில் அரைக்கால் சட்டை அணியும் ஆண்கள் வெள்ளைக்கார பெண்மணிகளைப் பார்த்து தம்வீட்டு (தமிழ்) பெண்களும் அவ்வாறு மிடி அணியவேண்டும் என்று சொல்லத் தயாராக இருக்கிறார்களா ? எதுவுமே ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், நாகரீக வளர்ச்சி என்பதை மறந்துவிட்டு விதண்டாவாதத்திற்காக ஏன் கோவணம் கட்டிக் கொண்டே தமிழன் இருக்கக் கூடாது என்றும் கேட்கலாம்.

//எனக்கு புத்தாண்டு எப்பொழுது கொண்டாடினாலும் என்ன? வருத்தம் என்னவென்றால் முன்பு பொங்கலுக்கு ஒருநாள் , தமிழ் வருடப் பிறப்பிற்கு ஒருநாள் என இரண்டு விடுமுறைகள் வரும். நல்ல விருந்து உணவு கிடைக்கும். புது படங்கள் வெளியாகும். இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டால்! எதாவது புது பண்டிகைகள் உருவாக்கலாம். இன்று சோழர் காலத்தில் குடவோலை முறை துவக்கிய நாள். பாண்டிய மன்னன் சங்கம் வைத்த தினம், பல்லவன் புலிகேசியை வென்ற தினம். இப்படி.... இதை விட்டு விட்டு...!! :( நான் சொல்வது சரியா இல்லையா, நீங்களே சொல்லுங்கள் கோவியாரே! //

விடுமுறையெல்லாம் குறைக்க மாட்டார்கள், சித்திரை திருநாள் என்ற பெயரில் விடுமுறை விடுவார்கள், நீங்கள் சொல்பவை அனைத்தும் அதில் இருக்கும் என்றே நினைக்கிறேன். பிறமொழிக்காரர்களின் பண்பாடு, பழக்கவழக்கம், இதையெல்லாம் நமது முதுகில் சேர்த்து கட்டப்பட்டு இருப்பதை தூக்கி எறிவோம், மிகவும் கூனாகிப் போனதால் தமிழர்களின் பார்வை கூட மங்கிவிட்டது. எல்லாவற்றையும் தமிழுக்குள், தமிழர்களுக்குள் நுழைத்தவர்கள், தமிழர் தம் தெய்வங்களுக்கெல்லாம் (மதுரை வீரன் உட்பட) பூணூல் அணிவித்தவர்கள், தமிழர்கள் பூணூல் அணிய வேண்டும், ஆண்டு தோறும் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வழக்கத்தை மட்டும் ஏன் நுழைக்கவில்லை?

முதலில் தமிழன் தான் யார் என்று உணரட்டும், இது போன்ற நடவடிக்கைகளினால் தான், தனக்கென தனிப்பண்பாடு இருந்தது, தாம் பழம்பெருமை மிக்கவர்கள் என்று தமிழன் உணர்வான். ஆபாசத்தை அடித்தளமாக வைத்துள்ள சித்திரை ஆண்டுப்பிறப்பின் கதைகள் நமக்கு எதற்கு ? இந்த கண்டறாவிக் கதை தமிழர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை என்றாவது உங்களுக்குத்த் தெரியுமா ? சற்று மனம் திறந்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தைக்கு பொங்கலோ பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே சொல்வீர்கள்.

வெளிநாட்டு அருட்தந்தை கால்டுவெல் ஐயர் திராவிட மொழிகளை ஆராய்ந்து தமிழ் தனித்தன்மை வாய்ந்தது, அது ஒரு சொம்மொழி என்று கண்டு சொல்லி இருக்காவிடில், வடமொழியில் இருந்து பிறந்ததே தமிழ் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருப்போம், இன்னும் சிலர் இதே உளறலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிலிகளின் அறியாக் கூற்றுப்படி வடமொழி தேவபாசையாம், அதிலிருந்து பிறந்த தமிழ் சூத்திர பாசையாம்.

நீங்கள் சொன்னது நகைச்சுவையாக தெரியவில்லை, பலருக்கு இருக்கும் அதே ஐயப்பாடுதான், இதுபற்றி தமிழ் மொழி ஆர்வளர்களும், தமிழ் பற்றாளர்கள் சொல்வதையும் கேட்டால், இது மதசார்பற்று ஒட்டுமொத்த தமிழனுக்கு நன்மை அளிப்பதை புரிந்து கொள்வீர்கள். தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம் குறித்து இஸ்லாமிய, கிறித்துவ சமூகம் வரவேற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ்புத்தாண்டு மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட நடைமுறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை, பலதரப்பினரிடம் இதுபற்றி கலந்துமுடிவை எட்டி இருக்கலாம்.

13 ஏப்ரல், 2008

வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் நாள் வாழ்த்துகள் !

"பழையன கழிதலும் புதியன புகு(த்)தலும்
வழுவல கால வகையி னானே"


இது நன்னூலில் தமிழ் இலக்கண மாறுதல் விதியாக சொல்லப்பட்டு இருப்பது என்று எடுத்துக் கொண்டாலும், இவை மக்கள், மொழி, பண்பாடு எல்லாவற்றிக்கும் பொருந்தும், காலம் மாறும் போது, மேற்கத்திய தாக்கம் போல் இயல்பாக புதியன புகும், சில வேளைகளில் புகுத்தப்படும், புகுவது இயல்பானது, புகுத்தப்படுவது ? புகுத்தப்பட்டது என்று அறியாமல் கலந்துவிட காலம் எடுக்கும்.

தமிழர்கள் எப்பொழுது தீபாவளி கொண்டாட தொடங்கினார்கள் என்பது சரியாக தெரியவில்லை, கண்டிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொண்டாடி இருக்க மாட்டார்கள், அது போலவே சித்திரையையும் அறுபது வடமொழி பெயர்களில் புத்தாண்டாக பிறக்கிறது என்ற வழக்கமும் என்று தொடங்கியது என்று தெரியவில்லை. கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் சித்திரை ஆண்டு பிறப்பாக கொண்டாடப் பட்டதற்கான குறிப்பு இல்லை.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியை அகற்றியதும் சைவம், வைணவம் என்ற பெயர்களில் தமிழ் கடவுள்கள் வடமொழியார் கடவுளுடன் இணைக்கப்பட்டன, தமிழர் தம் சுடலைமாடன் சிவனென்றும், முருகன் அவன் மகனென்றும், கொற்றவை முதலிய பெண் தெய்வங்கள் அம்பாள் (அம்பேல் அல்ல) ஆகியது, மாயோன் விஷ்னுவானான். பக்தி இயக்கம் என்ற பெயரில் கிறுக்கியது, மொழியாக்கம் செய்யப் பட்டதெல்லாம் புகுத்தப்பட்டன. சித்திரையும் அதை ஒட்டி நாரதர் விஷ்ணுவுடன் கூடி பெற்றுக் கொண்டதாக அருவெறுப்பு கதை சொல்லப்பட்டு, அந்தக்கதைகள் காலத்துக்கும் அழியாவண்ணம் புத்தாண்டுக்குள் புத்தாண்டின் பெயராகவும் (பிரபவ முதல் - குரோதன வரை, இவற்றை தமிழ் பெயர்கள் என்றே நானும் சிறுவயதில் அறுபது ஆண்டுகளின் பெயரையும், நட்சத்திர, ராசி பெயர்களையெல்லாம் மனப்பாடம் செய்திருக்கிறேன், இன்றும் அவற்றை வரியாக சொல்ல முடியும்), திங்கள் (மாத) பெயர்கள் புகுத்தப்பட்டது போல் தமிழுடன், தமிழர்களுடன் ஒன்றிணைந்தன (ஐக்கியமாயின).

இன்றைக்கும் பல கிராமங்களில் பழைய பழக்கத்தின் காரணமாக பொங்கலே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, தீபாவளி கொண்டாடாத கிரமங்கள் தமிழகத்தில் உண்டு, ஏனென்றால் தீபாவளிக்கான கதைகளோ, தீபாவளி கொண்டாடத்தக்கது என்றோ அவர்களுக்குத் தெரியாது.

மன மென்மை, மேன்மைகளை செம்மைப்படுத்துவதாக கருத்தப்படும் (நம்பிக்கையாளர்களின் கூற்றுப்படி) 'இறை நம்பிக்கை' உடையவர் தமிழர்கள் என்பதால், பக்தியின் பெயரால் எதைப் புகுத்தினாலும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க முடியும், இன்றைய காலகட்டங்களில் எண்கணிதம், வாஸ்து என்ற புதிய மிளகாய் அரைப்பு எந்திரங்களெல்லாம் வீட்டு கழிவரையின் வாயில் எந்த திசை நோக்கி இருக்கவேண்டும், அதை பயன்படுத்தும் போது எந்த திசை நோக்கி உட்கார்ந்து 'இருக்க' வேண்டுமென்றெல்லாம் சொல்லிவிட்டு (எல்லா திசையிலும் ஒவ்வொரு சாமி இருக்கிறது, சனி மூலையில் சனீஸ்வரன் இருக்கிறான், அவர்களை நோக்கி அமரக் கூடாதாம், வடமேற்கு, தென்மேற்கு பரவாயில்லை) முன்பு இருந்தவை சரியில்லை அதற்கு ஈடுசெய்ய (பரிகாரமாம்) இன்னின்ன செய்ய வேண்டுமென்றால்லாம் சொல்லி பணத்தை கறந்து கொண்டிருக்கின்றனர். அட்சய திருதியை 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேள்வி பட்டதேயில்லை. இவையெல்லாம் புகுந்ததா ? புகுத்தப்பட்டதா ?

எந்த ஒரு நம்பிக்கையையும் எவரும் அறியா வண்ணம் சீர்குலைக்கலாம், மாற்றலாம், ஏற்படுத்தலாம் அதெற்கெல்லாம் கேள்வியே எழாது. ஆனால் பலரும் தெரியும் படி, பலரும் அறியும் வண்ணம் மாற்றினால் 'வழிவழி வந்ததை மாற்றாதே, உணர்வு, நம்பிக்கை கெடுகிறது' என்ற ஓலம் பெரிதாகவே எழுகிறது.

***********

கலைஞர் தமிழ்புத்தாண்டின் திங்களை மாற்றியதைத் தொடர்ந்து சின்னத்திரை ஊடகங்கள் தமிழ்புத்தாண்டு என்று சொல்லாமல் சித்திரை நாள் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை படைத்துவருகின்றன. அரசு அறிவிப்புக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு ஏற்றவண்ணம் மாற்றிக் கொண்டார்கள், பல ஜூனியர், சீனியர் பத்திரிக்கைகள் ( தமிழில் செய்தி இதழகள்) இன்னும் புத்தாண்டு சிறப்பு மலர் என்று அறிவிப்பை வெளி இடுகின்றன. இவை தமிழ்பற்றுக்கான அளவு கோலாக நான் பார்க்கவில்லை. தமிழக அரசின் அறிவிப்பு மதிக்கப்பட வில்லை என்ற அளவில் மட்டுமே கொள்கிறேன்.

கலைஞர் செய்தது பாராட்டும் வண்ணம் இருந்தாலும், இவற்றிற்கான அறிவிப்பை ஓராண்டுக்கு முன்னரே செய்திருந்தால் பலதரப்பு குழப்பம் வராமல் இருக்கும், அது மட்டுமல்ல, தமிழின தலைவர் என்று (திமுக) சொல்லுவதாலும், தமிழக முதல்வராக இருப்பதாலும் அவரால் இந்த அறிவிப்பை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் இது போன்ற அறிவிப்புகளில் மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களின், ஈழத்தமிழர்களின், புலம் பெயர்ந்து அங்கேயே தங்கிவிட்ட மலேசிய, சிங்கை தமிழர்களின் முன்னிலையாளர்கள் (பிரதிநிதிகளை) கலந்து பேசி முடிவு செய்திருக்க வேண்டும். அவர்களும் தமிழர்கள் தானே, மாற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் தான், தமிழ்வளர்ச்சியில் ஆர்வம் காட்டுபவர்கள், தமிழக முதல்வராக இருந்து அறிவிப்பு வெளி இட்டால் அது தமிழகம் சார்ந்தவையாக இருந்தால் எவருக்கும் கேள்வி வராது, தமிழ் தமிழகத்துக்குள் முடங்கிவிடவில்லை.

தமிழர்கள் தமிழ் பேசுகிறார்கள், இவை தமிழ்சார்ந்த அறிவிப்பு என்றாலும் அனைத்துத் தமிழர்களின் ஆதரவைப் பெற்று அறிவித்து இருக்க வேண்டிய ஒன்றை கலைஞர் தன்னிச்சையாக அறிவித்ததால், சிங்கை மலேசிய தமிழர்களுக்கு தமிழ்புத்தாண்டின் தேதி / திங்கள் மாற்றம் குறித்த விழிப்புணர்வு எட்டப்படவில்லை. ஓராண்டுக்கு முன்பே அறிவித்து ஒப்புதால் வேண்டும் என்று நற்காரணங்களைச் சொல்லி இருந்தால் பலதரப்பட்ட தமிழர்களின் புரிந்துணர்வோடு புத்தாண்டு மாற்றம் இயல்பாகவே புகுந்தது ஆகி இருக்கும். அப்படி செய்யாததால், இன்னும் சில ஆண்டுகளுக்கு, 'வரலாற்றில் தன் பெயரை இடம் பெறச் செய்ய கருணாநிதி 'பேர்'ஆசையால் இதைச் செய்துவிட்டார்' என்று நான்கு பேர் உறுப்பினராகக் கொண்டு பாரதியின் பெயரில் சங்கம் வைத்து பாரதியின் பெயரையும், தமிழையும் கெடுத்துக் கொண்டு இருப்பவர்கள் இடறிக் கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியின் பெயர்... தமிழர், தமிழ் வரலாற்றில் அவர் முதல் முறை முதல்வரான போது கூட அல்ல, பராசக்தி வசனம் எழுதிய போதே பொறிக்கப்பட்டு விட்டது.

இந்த புத்தாண்டு செய்தியுடன் தொடர்புடையவர்கள் நான்குவகையினர்,

1. மாற்றம் குறித்து மகிழ்பவர்கள், அதை நடை முறைபடுத்தியவர்கள்

2. மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடை முறைபடுத்தினாலும், பழைய சித்திரை புத்தாண்டை சித்திரை நன்னாள் என்று மாற்றிக் கொண்டவர்கள்.

3. மாற்றம் பற்றி அறியாதவர்கள் (புலம்பெயர்ந்தவர்கள், வெளிநாட்டு குடிமக்களாக மாறிய தமிழர்கள்) இவர்கள் இன்றும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்

4. மாற்றம் தெரிந்தாலும் அதை மறுத்து ஏளனம் செய்வதற்காகவே வேண்டுமென்றே, சித்திரை 1 ஆம் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டாடுபவர்கள்

இவர்களுக்கு முறையே வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும், முட்டாள் நாள் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

23 ஜனவரி, 2008

புத்தாண்டாக மாறிய பொங்கல் நாள் !

தமிழனின் தனித்தன்மையை காத்துவருவதில் பொங்கல் பண்டிகை முதன்மையானது, விவசாயம் செய்து 'உழைப்பில்' வாழ்பவர்கள் என்பதை உலகிற்கு அறிவிக்கவும், ஐம்பூதங்களுக்கு நன்றி சொல்வதற்க்காகவும், தனக்காக உழைக்கும் கால்நடைகளை போற்றவும் பொங்கல் பண்டிகையை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கொண்டாடி வருகின்றன. இந்த பொங்கலில் இருந்து கூடுதல் சிறப்பாக தமிழறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று கலைஞர் அரசு பொங்கல் நாளை தமிழ் ஆண்டுபிறப்பின் முதல் நாள் அதாவது தமிழ் புத்தாண்டு தை திங்கள் 1 ஆம் நாள் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

செம்மொழி அறிவிப்பிற்கு பிறகு தமிழ்மொழியையும் மக்களையும் பொறுத்து இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது, சீனர்கள் அவர்களது புத்தாண்டை கோலகலமாக கொண்டாடுவர், இது வரை சித்திரையில் பிறந்த தமிழ் புத்தாண்டுகள் கோகுலாஷ்டமி போன்ற இந்து பண்டிகையாகவே கொண்டாடப்பட்டது, தனிப்பட்ட சிறப்பு எதுவுமே இருக்கவில்லை. பண்டிகையை கொண்டாடும் விதமும் ஆரிய / வடமொழி வழிபாட்டை ஒட்டியே அமைக்கப்பட்டு இருந்தது. தமிழ் புத்தாண்டிலும் கோவிலுக்குச் செல்வோருக்கு வடமொழி அருச்சனையே செய்து கொடுக்கப்பட்டது.

பொங்கலை தமிழ்புத்தாண்டாக அறிவித்ததன் மூலம், இனிவரும் தமிழ் புத்தாண்டை மதச் சார்பற்று அனைத்து தமிழர்களுமே கொண்டாடுவதற்கு வழிவகுக்கும், சீனர்களில் பல்வேறு மதத்தினர் அவர்களது புத்தாண்டை சேர்ந்தே கொண்டாடுவர். முதன் முறையாக அனைத்து தமிழ்மக்களும் கொண்டாடும் வகையில் பொங்கல் புத்தாண்டாக மாறி இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் தங்கள் வழியில் தமிழ்புத்தாண்டை கொண்டாட முன்வருவது மட்டுமே, தமிழர்களுக்கான ஒரே பண்டிகை என்று சொல்வதற்க்கு ஏதுவாக இருக்கும்.

வேற்றுமொழி குறிப்பாக வடமொழி அழுக்குகளை தாங்கிக் கொண்டு இதுதான் தமிழன் பண்பாடு, இவை(மட்டும்)தான் தமிழ் என்ற கட்டமைப்புகளையும் தூளாக்கிவிட்டு தமிழ்தாய் புதுப்பொலிவுடன் இருப்பாள், அதற்கு இது ஒரு முதன்மையான நிகழ்வு. தமிழ்பற்றாளன் என்பதால் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்கிறேன். இந்த நாள் இனிய நாள்.

வழக்கம் போல் 'கூடவே கூடாது......வழிவழி வருவது மாற்றக்கூடாது' என்று வரும் வறட்டு தவக்களைக்களை அவர்கள் அணிந்திருக்கும் மேல் (நாட்டு) ஆடைகளை களைந்துவிட்டு பஞ்சகச்சத்துடன் வந்து கருத்துச் சொல்லச் சொல்லுவோமாக. :)

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

15 ஜனவரி, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !

திருவள்ளுவர் ஆண்டாக மாற்றப்பட்ட தமிழர் நாட்காட்டி முறையின் படி 'தை' முதல் நாளே தமிழ் நாட்காட்டியின் முதல் நாள் அதாவது ஆண்டு பிறப்பு என்று தமிழறிஞர்களை கலந்தாய்ந்து அறிவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவிக்க இருப்பதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்கது.

தமிழர்களுக்கு கரும்பைப் போன்று இனிப்பான செய்தி தான் இது, அறிவிப்பை வெளியிட புரோகிதர்களிடம் நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்கச் சொல்லவோ, கலந்தாலோசிக்கவோ தேவியில்லை. தமிழக அரசு இதனை அரசாணையாக உடனடியாக வெளி இடவேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும். தமிழர் புத்தாண்டு எது என்பதை முடிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே உண்டு இதில் தமிழறிஞர்களின் அறிவுரையும் வழிநடத்துதலுமே போதுமானது. மொழி பண்பாடு நாள்காட்டி முறை அனைத்திலும் தமிழன் தனித்தன்மையுடன் இருந்தால் நம் மீது ஏறி மிதிக்க தயங்குவர். தமிழர்களுக்கென்று தனி அடையாளம் இல்லை என்றால் அடிமையாக்கிவிடுவார்கள். உலகமயம் என்றெல்லாம் பேசுகிறோமே தனி அடையாளம் தேவையா ?என்று கேட்கலாம். உலகமயத்திலும் தாராளமயமாக்களிலும் தமிழனின் பங்கு ஏற்கப்படும் போது அவை சிந்திக்க கூடியவை தற்பொழுது அல்ல. சாதிய அடையாளம் ஒடுக்கி வைப்பதற்காக இருக்கும் வரை அதிலிருந்து மீள அதே அடையாளம் எவ்வளவு தேவையோ, அது போன்றதே தமிழன அடையாளமும் மொத்த தமிழனத்தின் விடுதலைக்கு தேவையான ஒன்று. இன்னும் தமிழன் முதுகில் ஏறி மிதிப்பவர்கள் இருக்கும் வரை அடையாளம் தேவை இல்லை என்றால் ஒட்டு மொத்த தமிழனமும் விடுதலை அடையமுடியாது.

தமிழன் என்றொரு இனமுன்று நாம் பாடினால் போதாது மற்றவர்களுக்கு அதை புரிய வைக்க வேண்டும். மொழிவெறியோ, இனவெறியோ தேவை இல்லை. மொழிப்பற்றும், இனப்பற்றும் போதுமானது. மொழிவெறியும் இனவெறியும் மாற்றான் மொழியை தூற்றுவதற்கும், மாற்றான் இனத்தை கீழறுப்பதற்குமே பயன்படும். மொழிப்பற்றும் இனப்பற்றும் தன்மொழியை தன் சமூகத்தை மேலே கொண்டுவர பயன்படும்.

இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிருஷ்ணன்) பிறந்த தமிழ் 60 ஆண்டுகளின் ஆபாச கதைகளையும், அவை தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் என்று சொல்வதையும் தமிழ் நாட்காட்டியில் இருந்து அகற்ற வேண்டும். தை திங்களை தமிழன் ஆண்டு பிறப்பாக அறிவிப்பதை எதிர்த்து வழக்கம் போல், 'வழி வழி வருவதை மாற்றத் தேவை இல்லை' என்று தவளைகள் சத்தமிடும், எப்போதும் நாம் சொல்வது அவைகளுக்கு கேட்காது என்பது போலவே அவறின் ஓலங்களை நாமும் பொருட்படுத்ததேவை இல்லை.

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்