நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.
சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.
இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,
ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.
விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,
இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும்.
வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின் மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.
இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?
தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர். வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்
தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர். வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்
இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?
கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.
ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.
தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.