பின்பற்றுபவர்கள்

22 அக்டோபர், 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பற்றி !

பொதுவாக பாலியல் என்றாலே நம் சமுகம் முகம் சுளிப்பதால், உடல் உறுப்புகள் நூறு விழுக்காடு சரியுள்ளவர்களாலும் முழுதாக புரிந்து கொள்ள இயலாதவை பாலியல் தேவை, அவைபற்றி பருவ வயது ஆண்களுக்கு சொல்லித் தரத்தேவையில்லை, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை என்பதே நமது சமூக நிலைப்பாடு, மாற்றுத்திறனாளிகளை மன அளவில் ஏனையோரைப் போல் தான் நடத்தவேண்டும் என்பதையே நாம் கற்றுக் கொண்டு அவர்களுக்காகக்கான தேவைகளை அமைத்துதருவது தான் அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று புரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ ?

ஆனால் மாற்றுத்திறனாளுக்கும் பாலுறவு வேட்கை உண்டு, அவற்றைப்பற்றிய தெளிந்த அறிவு, அவைகளுக்கான வடிகால் ஏற்படுத்தித்தருவது, அதற்கான பயிற்சிவகுப்புகள் (Sexuality for Disabilities) என்று ஐரோப்பியர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள், இன்னும் நாம் 'உன்னால முடியாத ஒன்றிற்கு ஆசைபடுவதே தவறு, விதி, முன்பிறவி வினை' என்றெல்லாம் கூறிக் கொண்டு அதற்கான சிந்தனைகளையே மறுக்கிறோம், நம்மைப் பொறுத்த அளவில் மாற்றுத்திறனாளியை விரும்பி மணம் செய்து கொள்பவர்களை தியாகி என்ற அளவில் உயர்த்தி வைப்பதுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிந்தனையை வளர்க்க விரும்பவே மாட்டோம், எனது கல்லூரிக்கால நண்பர் ஒருவர், இளம்பிள்ளை வாதத்தில் கால்களில் ஒன்றில் திறனும் போதிய வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்தவர், திருமணம் ஆகும் முன் 26 வயதில் அவரிடம் பேசும் போது 'எனக்கெல்லாம் எங்கேருந்து திருமணம் ? யாராவது உறவுக்காரர்கள் மனது வைத்து பெண் கொடுத்தால் உண்டு, அதற்கு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும்...' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார், பின்னர் அவருடைய உறவுக்காரர்கள் பெண் கொடுத்து அவருக்கு நல்ல உடல் நலத்துடன் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்துவருகிறது.

எதற்காக அவரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், யாராவது மனது வைத்தால் என்ற அளவில் தான் உடல்குறையுற்றோரின் குடும்ப வாழ்கையும் பாலியல் தேவைக்கான தீர்வும் கிடைக்கும், அனைவருக்கும் உடலில் இரத்தம் ஓடுவது போன்றே அவர்களுக்கும் பாலியல் தேவைகள், வேட்கைகள் இருக்கும், தயக்கங்கள் காரணமாக பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களுக்கான அமைப்புகள் ஏற்பட்டால், அதன் மூலம் பாலியல் வேட்கையை தனித்துக் கொள்வது (தன்னின்ப வழி) அல்லது கட்டுபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி, உடலை வருத்திக் கொள்ளாமல் எளிய முறையில் எந்த கோணத்தில் (Positions) அவர்களுடைய வாழ்கை துணையுடன் உறவில் ஈடுபடலாம் என்பற்கான விளக்கங்கள் அல்லது செயற்கை பாலியல்கருவிகள் பற்றி அறிதல் , கூச்சத்தை ஒழித்து குறிப்பாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் அவர்களை அதுபோன்ற அமைப்புகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம்  தான் அவர்கள் ஏனையோரைப் போல் மனத்தடை இன்றி வாழமுடியும்.

15 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில யாகூ குழுமங்களில் (Yahoo Groups / Geo cities) Disabilities and Sexuality பற்றி நிறைய தகவல்கள், இணையப்பக்கங்கள் பேசின, ஆனால் அவைபற்றி இன்னமும் கூட நமது சமூகம் பெரிதாக அக்கறை கொண்டது போலவே தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் பெரிய மூட நம்பிக்கைகளில் ஒன்று எதையும் விதி என்று நம்பி அவற்றைப் பற்றி சிந்திக்க மறுப்பது தான், உடல்குறையுற்றோர்களுக்கு கண்டிப்பாக தனியறையும் தனிமையும் ஏனையோரை விடத் தேவையானதே. உடற்குறையுற்றோர் ஆணோ பெண்ணோ  திருமணமே அவர்களுக்கு கிட்டாத போது அல்லது அவர்கள் விரும்பாதபோது செயற்கை பாலியல் கருவிகள் (Sex Toys) அவர்களுக்கு கிடைக்கும் படி கடைகள் உருவாகவேண்டும், தற்காலத்தில் இணையம் வழி வாங்கிக் கொள்ள வசதிகள் வந்துவிட்டன ஆனாலும் இந்தியாவில் அவற்றை வாங்கிப்பயன்படுத்துவதற்கான தயக்கங்கள் நீங்குவதற்கு மாற்றுத்திறானிகள் அல்லாத பிறர் ஊக்கப்படுத்தினால், கூச்சங்களை கடந்து அவர்கள் வாங்கிப்பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்னும் கூட மணமாகாத விதவைகள் என்ற அளவில் மாற்றுத்திறானிகளை வைத்திருப்பதற்கும் நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

ஓரின சேர்கையாளர்களை அங்கீகரிக்காததால் அவர்கள் பேருந்து நிலைய கழிவறையில் அவர்களுகான ஆட்களைப் பிடிப்பது போல் மாற்றுத்திறானிகளின் பாலியல் தேவைபற்றி நாம் நினைக்க மறுத்தால் தவறான நபர்களை அவர்கள் நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

தைவானில் தன்னார்வ குழுவொன்று கைகள் அற்றவர்களுக்கு சுய இன்பம் செய்துவிடுவதை தொண்டாகக் கொண்டுள்ளனராம், நம்மைப் பொறுத்த அளவில் அது முகம் சுளிக்கக் கூடிய செயல், ஆனால் அந்த சேவைகிடைக்கும் மாற்றுத்திறனாளிகளை பொருத்த அளவில் அந்த தொண்டூழியர்களின் கைகள் கடவுளின் கைகள், பாலியல் வேட்கை தீர்வு என்பதைவிட எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பை உணர்கிறார்கள், மனித மலத்தை அள்ள வைப்பதை முகம் சுளிக்காமல் அதுவும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம் இவற்றையெல்லாம்  அருவெறுப்பாக பார்ப்பதே நகைமுரண் தானே ?

வட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பயிற்சி வகுப்புகள், அமைப்புகள் உண்டு, தென்னிந்தியாவில் ஏற்பட்டது போல் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்

இணைப்புகள்:



http://workshop.sexualityanddisability.org/category/workshops/
http://www.sexualityanddisability.org/
https://en.wikipedia.org/wiki/Sexuality_and_disability
http://marius.sucan.ro/propaganda/sex-without-prejudice/

11 செப்டம்பர், 2016

முடவனும் கொம்புத் தேனும்...!

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.

*****

பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.

உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.

கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.

******

நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.

ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?

கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.

வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். 

உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


4 செப்டம்பர், 2016

தெரியாமல் போய் இருக்கலாம்...

முன்பெல்லாம் அலைபேசிகள் இல்லாத காலத்தில் அலுவலகம் வழியாக பழகிய நண்பர்களை அந்த அலவலகத்தின்  தொடர்பு முடியும் போது கிட்டதட்ட முடிந்துவிடும், நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லம் வரையிலான அறிமுகம் கிடைக்கப்பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.  பேச்சிலராக இருந்த காலகட்டத்தில் நம்முடன் பழகிய நண்பர்கள் எத்தனையோ அதில் ஒரு சிலரை என்றாவது பார்ப்போம் என்று நம்பிக்கைகள் மட்டும் இருக்கும், தற்போது போன்று முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் சாராத காலத்தில் தொடர்பறுந்த நட்பை தொடர்வதற்கான வாய்ப்புகள்  மிக அறிது, அப்படியும் பார்க்க நினைக்கும் நண்பர்கள் முகநூல் கணக்கு துவங்கி இருப்பார்களோ என்ற ஊகத்தில் எதிர்ப்பார்ப்பில் அவ்வப்போது ஊர் பெயர், இனிசியல், தந்தை பெயர் மற்றும் நண்பர் பெயர், பள்ளி கல்லூரி, முடித்த ஆண்டு, வேலை பார்த்த இடம் என்ற குறிச் சொற்களாக தேடித் தேடி சிலரை கண்டுபிடித்து 15-20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களைத் தேடிச் சென்று கட்டிப்பிடித்து மகிழ்ந்ததுண்டு.

என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் பெயர் சவுரி ராஜன்,  1989 வாக்கில் ஒன்றாக வேலை செய்திருந்தோம், சென்னையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்திருக்கிறோம்,  பிறகு 1989 - 97 வரையில் அவர் வேலை செய்த இடத்திற்கு நானோ அல்லது நான் வேலை செய்யும் இடத்திற்கு அவரோ சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம், நான் சிங்கை வந்த பிறகு அவருடன் முற்றிலும் தொடர்பு அறுந்து போனது, அதற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய அன்றைய சூழலில் என்னால் அவரின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, அதற்கும் முன் ஒருமுறை அவர் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது அவர் தங்குமிடம் இருக்கிறேன், அவரே அப்போது அழைத்துச் சென்றதால் எனக்கு முகவரியும் தெரியாது, 97 க்கு பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்துவிட 2013 வாக்கில், பதினைந்து ஆண்டுகள் கழித்து எதற்கும் பழைய அலுவலகம் இணைய தளம் (http://kores.in/) துவங்கி இருந்தால் ஒருவேளை அதில் தொடர்பு எண்கள் எதேனும் இருக்கும், முயற்சித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து அலைத்தால் நண்பர் தற்போதும் அதே நிறுவனத்தில் மதுரையில் பணிபுரிவதாக சொல்லி அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள்,  அலைபேசியில் பேசிவிட்டு, தமிழகம் சென்ற போது அவரைப் பார்க்க வேண்டும் என்றே மதுரைக்குச் சென்றேன், என்னை இரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

15 ஆண்டுகள் ஆகிவிட்டதே நான் இன்னும் பழைய நண்பராகவே நினைக்க, 'சிங்கப்பூர்' பின்புலத்தில் இருந்து வந்ததால் என்னை பழைய படி டா போட்டு அழைத்துப் பேச நண்பர் தயங்கி 'ங்க' போட, நாய செருப்பால் அடி என்று நான் கடிந்து கொண்டு உரிமையில் ஒருமைக்கு மாறி இயல்பாக பேச அன்றைய பொழுது இருவரும் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டோம், நான் மதுரையில் இருக்கேன், குடும்பம் சென்னையில் இருக்கிறது சென்னைக்கு வரும் போது சொல்லு நான் உன்னை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார், பிறகு பிரியா விடைபெற்றோம்,  அதன் பிறகு ஒரு சில முறை நான் சென்னை செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசுவேன், ஒரு முறை சென்னையில் இருந்தார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அன்றைக்கு அடைமழை சாலைகள் போக்குவரத்து இடையூறு என்று அவரது குடும்பத்துடன் எனது சந்திப்பு இயலாமல் போய்விட்டது

பிறகு சென்ற ஆண்டு மே மாதம் மும்பை சென்றிருந்த போது அங்கிருந்தே அவருக்கு அலைபேசினேன், மும்பையில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு இருந்தபடியால் எனக்கு உணவு மற்று சுற்றிப் பார்க்கும் இடம் குறித்து நிறைய தகவல்கள் சொன்னார், இப்ப சென்னைக்கே மாற்றலாகி வந்துவிட்டேன், சென்னை வரும் போது சொல்லுடா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் என்றார்.   

பிறகு ஜூன் மாதம் திரும்பவும் மும்பை சென்றிருந்தேன், அங்கிருந்தே அவரது அலைபேசிக்கு அலைத்தேன், எதிர் முனையில் வயதான பெண்குரல், நீங்க யார் பேசுகிறீர்கள் ? அவரை எப்படித் தெரியும் போன்ற அனைத்துவிவரங்களையும் கேட்டுவிட்டு 'அவர் (சவுரிராஜன்) சென்ற வாரம் மாரடைப்பால் இறந்துவிட்டார்' நான் அவங்க மாமியார் தான் பேசுகிறேன், என் பொண்ணு (நண்பரின் மனைவி) அழுதுகிட்டே இருக்கா ஒருவாரமாக சரியாக சாப்பிடவில்லை... அவர் பையன் +12 படிக்கிறான், சரியாகவே படிக்கமாட்டேன்கிறான், என்ன செய்றது என்றே தெரியவில்லை என்று கலங்கிய குரலில் கூறினார். சென்னை வந்தால் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி  மற்றொரு அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கினேன்

கேட்க கேட்க நாம் ஒருவேளை அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? இ(ப்ப)டியான தகவலைக் கேட்கவா 15 ஆண்டுகள் கழித்து அவரை தேடிக் கண்டுபிடித்தேன், ஒருவேலை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் என் நினைவில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பாரோ ? 

நண்பர் குடும்பத்தை இதுவரை சந்தித்தே இல்லை, அலைபேசி எண்ணை அழைத்து அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் நான் அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை சந்திக்க செல்லவே இல்லை

நான் என்ன செய்திருக்க வேண்டும் ?

நேற்று எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் இராஜ நடராஜன் மறைவு குறித்து வரூண் குறிப்பிட்டு இருந்தார்,  இராஜ நடராஜன் மறைவு கூட எனக்கு தெரியாமலே போய் இருக்கலாம், என்றாவது சந்திக்க முடியும் என்ற எண்ணிக் கொண்டிருந்த பதிவர்களில் அவரும் ஒருவர், என்னைப் போல் பலருக்கும் பிடித்தவர், காற்றுக் குமிழி போல் வண்ணங்களை காட்டி மறைந்துவிட்டார் :(



2 செப்டம்பர், 2016

உள்ளேன் ஐயா

2012 வரை ஓடிக் கொண்டிருந்த வலைப்பதிவு வண்டி பிறகு சுணக்கம், எனக்கு அதன் பிறகு வேலை மாற்றம், முன்பு போல் பணியிடையில் ஊதியத்துடன் வலைப்பதியும் நல்வாய்ப்பு பிறகு ஏற்படவில்லை, கிட்டதட்ட அதே காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் என்று சமூக ஊடக பதிவர்கள், வாசிப்பவர்கள் பயணத்தை விரிவுபடுத்திக் கொள்ள, வலைப்பதிவில் பதிவுகள் எழுதி திரட்டிகளில் சேர்ப்பது குறைய, திரட்டிகளின் வளர்ச்சிகளும் நின்றுவிட்டதற்கு தமிழ்மணமும், பிற திரட்டிகளுமே சாட்சியாக நிற்கின்றன

என்னுடைய முக நூல் பக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கு துவக்கப்பட்டாலும் 2010க்கு பிறகு அவ்வப்போது பயன்படுத்திவர அதில் நண்பர்களாக இணைந்து / இணைத்து இருப்பவர்கள் 80 விழுக்காடு வலைப்பதிவில் நான் முழுமூச்சாக இயங்கி வந்த காலத்தில் இயங்கியவர்கள் தான். வலைப்பதிவின் வழி எனக்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது, நாட்டு எல்லைகளை கடந்தது.

வலைப்பதிவர் அல்லாத முகநூல் நண்பர்களின் வட்டத்தில் பெரும்பாலும் உடன் வேலை செய்பவர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்ற அளவிலும் விருப்ப அடைப்படையில் சில குழுக்களில் இணைந்து இருப்பவர்களாக உள்ளனர், ஆனால் என்னைப் போன்ற பதிவர்களின் முகநூல் பலதரப்பட்ட நண்பர் வட்டம் கிடைக்கப்பெற்றவர்களால் முக நூலிலும் நல்ல விவாதப் பதிவுகளையும், வாசிப்பு அனுபவம் தரும் கட்டுரைகளை படைக்கின்றனர்.

அறிமுகமில்லாதவர்களை முகநூலில் இணைத்து அவர்களுக்கும் பிடிக்கும் படி எழுதுவது என்பது நடைமுறையில் வாய்ப்பற்றது, முக நூல் பிரபலங்களுக்கு ஏற்ற ஒரு சமூக வலைதளம், முக நூல் திரட்டி போன்ற அமைப்பில் திரட்டித் தரப்படாததால் யாராவது அறிமுகப்படுத்தினால் அல்லது விருப்பக் குறி(லைக்) இட்டிருந்தால் மட்டுமே அது நம்முடைய நேரவரிசை( டைம்லைன்)க்கு வரும், மற்றபடி ஒரு கட்டுரையை எழுதிவிட்டு வலைப்பதிவு போல் எல்லோரையும் அடையும்படி செய்வது இயலாது என்பதால், இன்னமும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை வரவேற்கிறேன்.

வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை,  நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.

என்னைப் பொருத்த அளவில் நான் எழுதுவதை எழுத விரும்பி கோர்வை வராதவர்கள், சொல்லத் தயங்குபவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டுவதுண்டு,  என்னுடைய மதவாத எதிர்ப்பு மூட நம்பிக்கை பதிவுகளை பாராட்டியவர்கள் 99 விழுக்காடு எதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களே, அவர்கள் சொல்லத் தயங்குவதை மென்று விழுங்குவதை, தொண்டையில் நிற்பதை சிலர் எழுதும் போது அவர்கள் அதை பாராட்டவே செய்வார்கள்.

கொஞ்ச நாள் முகநூல் மற்றும் வாட்சப்புகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் ஓவர் டோஸ் அல்லது திகட்டியதும் வலைப்பதிவு போன்ற கட்டுபாடுகளற்ற ஊடகத்தை திரும்பவும் நாடுவார்கள் என்றே நம்புகிறேன்

முடிந்த அளவிற்கு வலைப்பதிவுகளில் நானும் அவ்வப்போது தலைகாட்டலாம் என்றே உள்ளேன். ஆனால் அது 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற அளவுக்கெல்லாம் முழுமூச்சாக இருக்காது :)



Once Again

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்