பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2007

கந்தன் காப்பாற்றப்பட்டான் ! (சிறுகதை)

கந்தன் சிறுவயதில் இருந்தே பக்திமான், எதை செய்தாலும் அம்மாவிடம், அப்பாவிடம் சொல்கிறானோ இல்லையோ, மனதிற்குள் கடவுளுக்கும், அந்த சாமியாருக்கும் சொல்லாமல் செய்வதே இல்லை.

"அப்பா, இண்டர்வுயூவுக்கு போகிறேன்"

"எல்லாம் நல்ல படியாக நடக்கும்பா... கோவிலுக்கு வேண்டிக்கோ"

கந்தன் இயல்பாகவே திறமை உள்ளவன் தான், இருந்தாலும் வேண்டுதல் இல்லாமல் எதைச் செய்வதற்கு மனம் அவனுக்கு என்றைக்குமே ஒப்பவதில்லை. சிறுவயது முதலே அப்பா கொடுக்கும் பாக்கெட் மணிகளை சேமித்து வைத்து கோவில் திருவிழாக்களில் விற்கப்படும் கடவுள் சிலைகளை வாங்கி வந்து சாமி அறையில் அலங்கரிப்பது கந்தனுக்கு வழக்கம்.

நினைத்தபடி வேலையும் கிடைத்தது, திருமணம் ஆகியது, இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கந்தனுக்கு வேலை விசயமாக ஒருமுறை மும்பை செல்ல வேண்டிய நிலை, அன்று காலை 9.00 மணி ப்ளைட்டை பிடிக்க வேண்டும், கடைசி நேரத்தில் ஒரு கோப்பை மறந்து வைத்துவிட்டதால், வீட்டிற்கு காரை திருப்பிக் கொண்டு வந்தான், எடுத்து திரும்பவும் ஏர்போர்ட் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல், விமான நிலையத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய முடியவில்லை. விமானம் புறப்பட்டு சென்ற அறிவிப்பை படித்துவிட்டு சோகமாக, இருந்தாலும் அன்று சென்றே ஆகவேண்டிய நிலை, அடுத்த விமானம் 4 மணிநேரம் சென்றதும் தான் கிடைக்கும், வேறு வழியின்றி, அடுத்த விமானத்திற்காக காத்திருந்தான்.

திடிரென்று விமான நிலையத்தை பரபரப்பு தொற்றிக் கொண்டது, விசாரித்ததில் இவன் சென்றிருக்க வேண்டிய விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி தீப்பிடித்ததாகவும், பிஸ்னஸ் கிளாசில் பயணம் செய்தவர்கள், விமானிகள் அனைவரும் கருகி இறந்ததாகவும், மற்ற இருக்கைகளில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் செய்திகள் அறிவிக்கப்பட்டன.

கந்தனுக்கு தூக்கிவாரிப்போட்டது, படக் படக் என்று இதயம் அடிக்கவே, நெஞ்சில் கை வைத்தான், சாமியாரின் உருவ டாலர் தட்டுப்பட்டது, தான் நம்பும் கடவுளும், கழுத்தில் டாலராக தொங்கும் அந்த சாமியாரும் காப்பாற்றிவிட்டதாக நெகிழ்ந்தான். மறுநாள் அதற்கும் மறுநாள் கந்தன் தான் விபத்தில் இருந்து தப்பியதற்கு காரணம் சாமியார் தம்மை விமானத்திற்கு செல்ல விடாமல் தனக்கு ஞாபக மறதி ஏற்படுத்தி கோப்பை வைத்துச் சென்றதால் தான் விமான பயணம் தடை பெற்று தாம் காப்பாற்றப்பட்டதாக நினைத்தான். நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கந்தன் மெய்சிலிர்த்தான். சாமியாரின் புகழ் ஒரே நாளில் கந்தனின் பத்திரிக்கை பேட்டி மூலம் வேகமாக பரவியது, ஆன்மிக இதழ்களும் இதை சிறப்பு கட்டுரையாக்கி வெளியிட்டது.

கடவுள் நம்புவர்களை கைவிட மாட்டார், அந்த சாமியாரை நம்புவர்களுக்கு அவர் அபயம் தரும் ஆண்டவன் என்ற எண்ணம் ஆன்மிக அன்பர்களிடம் அசைக்க முடியாத எண்ணத்தை ஏற்படுத்தியது. சாமியாருக்கு கூடுதலாக பக்தர்கள் கிடைத்தார்கள்.

********

இது நடந்து ஆறுமாதம் சென்று கந்தன் குடும்பத்தினர், அதாவது அவனும், அவன் மனைவியும், அவர்களுடைய இரு குழந்தைகளும் கொடைக்கானல் சுற்றுலா சென்றார்கள், காரின் முகப்பில் சிறு அளவில் கந்தன் வணங்கும் தெய்வங்கள், அந்த சாமியாரின் ஆசி கொடுப்பது போன்ற உருவ படம் எல்லாம் இருந்தது, பஜனை பாடல்கள் காரில் ஒலித்துக் கொண்டு இருந்தது, கொண்டை ஊசி வளைவை சுற்றி சுற்றி கார் ஏறிக் கொண்டிருந்தது, ஒரு வளைவில் திடிரென்று காருக்கு மூச்சு வாங்கியதும், மனைவி குழந்தைகளை காரினுள் இருக்கச் சொல்லிவிட்டு, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி என்ன வென்று பார்கலாம் இறங்கினான், இறங்கியதும் இயற்கை உபாதை அழைக்கவே கொஞ்சம் 10 அடி தள்ளி சென்று சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது காதை பிளக்கும் 'டமார்' ஓசை, திடுக்கிட்டு திரும்பி பார்த்தான், இதயமே நின்றுவிடும் போல் இருந்தது, எதிரே வந்த லாரி கார் மீது மோதியதால், மலைச்சரிவில் கார் உருண்டு கொண்டிருந்தது, இந்த முறையும், கந்தன் மீண்டும் அதே கடவுளால், அதே சாமியாரின் கடைக்கண் பார்வையால் காப்பாற்றப்பட்டான். இருந்தும் கந்தன் திகைத்துப் போய் கற்சிலையாக அசையாது நின்று கொண்டிருந்தான்.

**********************

பின்குறிப்பு : தனக்கும், தன்னை சேர்ந்தவர்க்ளுக்கும் ஆபத்து இல்லை என்றால் கோரவிபத்தில் இறந்தவர்கள் குறித்து சிறிதும் கவலைகொள்ளாமல், தாம் தப்பித்தது கடவுள் தம்மீது பொழிந்த கருணை மழை என்று தான் நினைக்கத் தோன்றும்.

ஆத்திகனோ, நாத்திகனோ, ஒருவன் நல்லவனாக இருந்தாலும் என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறான், நோய், விபத்து, மரணம் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானது, இவற்றில் சிக்குவதும் அதிர்ஷ்டவசமாக மீழ்வதும் எல்லாருக்கும் நடப்பவைதான். மீட்சியை நம்பிக்கையின் காரணிகளாக மிகைப்படுத்திச் சொல்வதை ஏற்கமுடியவில்லை. நம்பிக்கை என்ற அளவில் எதுவும் சரியே, ஆனால் அவை விளம்பரப் படுத்தப்படும் போது கேலிக் குறியதாகவும் ஆகிறது.

இது எந்த கதைக்கான எதிர்வினையும் அல்ல. நம்பிக்கை என்ற அளவில் எழுதப்படுவதால் கந்தபுராணம் மற்றும் பக்திகதைகளை நான் படிப்பது இல்லை. இது முழுக்க முழுக்க என் சொந்த கற்பனை.

மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !

பக்கத்து நாட்டில் தமிழர்கள் பிரச்சனைகள் பற்றிக் கொண்டு எரிகிறது. ஆள் ஆளுக்கு ஆதரவு என்ற பெயரில் ஊதி பெரிதாக்கவே முயலும் அரசியல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. 'மலேசியா இன்னொரு இலங்கையாக ஆகும் அபாயம் இருக்கிறது' என்று விஜயகாந்த் ஆருடம் சொல்கிறார். 'தமிழனுக்கு உரிமை குரல்' என்ற துருப்புச் சீட்டு இல்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று அனைத்து கட்சிகளும் உணர்ந்திருகின்றன. ஈழத்தமிழர்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது கூட ஈழத்தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும் அதே சமயத்தில் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம் என்பார்கள். எல்லாம் பேச்சளவில் தான். ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எந்த வகையில் உதவினார்கள் ? என்று பார்த்தால் வெறும் அரசியல் ஸ்டெண்ட் என்று மட்டுமே தான் நினைக்க முடிகிறது.

மலேசியாவில் தமிழர்களும், சீனர்களும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதை மலேசிய வாழ் சீனர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். சீனர்களுக்கு இருக்கும் ஒற்றுமை தமிழர்களுக்கு கிடையாது. மலேசிய சீனர்களுக்கு பிரச்சனை என்றால் சீனா முதல் சிங்கப்பூர் வரையுள்ள அனைத்து சீனர்களுக்கு கொதித்து எழுகிறார்கள். அவர்களால் முடிகிறது. அவர்களுக்கு முடிகிறது, தமிழர்களுக்கு ஏன் முடிவதில்லை ? என்று ஆழ்ந்து பார்த்தால் தமிழன் பிரிந்து கிடக்கிறான் என்ற அதிர்ச்சி உண்மைதான் தெரிகிறது.

தமிழன் மத அடிப்படையில் பிரிந்து கிடக்கிறான். தமிழர்களுக்குள் மத அரசியலால் அடையவேண்டிய வெற்றி, இலக்குகளின் தொலைவுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. மலேசியாவில் இருப்பது இன பிரச்சனை, மலாய்காரார்கள் (மண்ணின் மைந்தர்கள்), இந்தியர், சீனர், மற்றும் பிறவெளிநாட்டினர். ஆனால் இதை இஸ்லாம் - இந்து விரோத பிரச்சனை ஆக்குவதில் மலேசிய இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் இருந்து தூபம் போடப்படுகிறது. தற்பொழுது நடக்கும் போராட்டத்தில் தமிழர் அல்லது இந்தியன் என்ற அடையாளத்தில் போராடாமல் 'இந்து' என்ற பெயரில் போராடாடுகிறார்கள். பெரிய அளவில் இருப்பது இனப்பிரச்சனையே அன்றி மதப்பிரச்சனை அல்ல. இந்து கோவில்களை இடிக்கிறார்கள் என்ற செய்தி உண்மைதான். ஆனால் அதே போன்ற நிகழ்வுகள் சிங்கப்பூரிலும் நடப்பது உண்டு. பழைய கோவில்களை இடித்துவிட்டு, புதிய இடம் கொடுத்து கட்டிக் கொள்ள அனுமதிப்பார்கள். இவையெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?. ஆனால் மலேசியாவில் கோவில் இடிக்கப்பட்டால் மதுராவில் இருப்பவர்களுக்கு கூட எட்டிவிடும். காரணம் இந்து அரசியல். நாம் கோவில் பழசாக பழசாக புராதான சின்னம், புனிதம் பெற்றது என்கிறோம். அந்த நாட்டினர் 'பழைய கோவில்களில் பாதுகாப்பின்மை' என்றே பார்கிறார்கள். நகரங்கள் விரிவடையும் போது கோவில்களை அகற்றுவதென்பது இந்தியாவிலும் நடப்பதுதான். மலேசியாவில் இடித்த கோவில்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது. அது உண்மைதான் என்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு உரிமை கேட்பது என்ற போராட்டம் சரிதான். ஆனால் அதை 'இந்து' என்ற பெயரில் செய்வதால் இந்து - இஸ்லாம் பிரச்சனை ஆகி பெரிதாகுமேயன்றி சுமூக தீர்வு எட்டுவதற்கான வழி அடைபட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் இந்து என்ற பெயரில் போராடுவதால் மலேசியா வாழ் தமிழ் முஸ்லிம், தமிழ் கிறித்துவர்கள் கூட தமக்கு இது தொடர்பில்லாதா போராட்டமாக பார்க்கிறார்கள். டத்தோ சாமுவேல் அதுபோல் தான் கருத்து தெரிவித்து இருக்கிறார். தமிழர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை இடிப்பதற்கு எதிராக போராடலாம், அதை தமிழன், இந்தியன் என்ற பெயரிலேயே போராடலாம், 'இந்து' என்ற பெயரில் போராடினால் அது வெறும் உணர்ச்சி போராட்டமாக அமையுமே அன்றி வெற்றிக்கான வழி பலவீனமற்றதாக மாறிவிடும். மலேசிய தமிழர்களுக்கு சாதி நோய் முற்றி இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல், சாதி சங்க விழாக்களுக்கு அமைச்சர்களை அழைத்து வந்து கொண்டாடும் அளவுக்கு தமிழர்கள் மதிகெட்டுவிட்டார்கள். ஒற்றுமையில் சீனர்களை பார்த்தாவது திருந்தவேண்டாமா ?

எந்த வெளிநாடுவாழ் தமிழர்களின், எத்தகைய போராட்டமாக இருந்தாலும், அதில் மதமாக, சாதிகளாக தமிழர்கள் பிரிந்து போராடினால் பலவீனமே. போராடுபவர்கள் 'இந்து' என்று போராடினால் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் 'இந்து'க்கள் மட்டுமே அதாரவு அளிப்பவர், மற்றோர் எல்லாம் தமக்கு தொடர்பில்லாது என்றே விலகிச் செல்வர் அல்லது புறக்கணிப்பர். இப்போது நடக்கும் வாழ் உரிமை போராட்டம் கூட 'இந்து' அரசியலாக மாறிச் செல்கிறதே யன்றி தமிழன், இந்தியன் அவனுக்கான வாழ்வுரிமை போராட்டமாக செல்லவில்லை என்பது கவலைக்குறியாதாக உள்ளது.

29 நவம்பர், 2007

ஆண்களின் சபலம் ஒரு அவலம் !

சேரன்மகாதேவி: நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

---

இந்த செய்தியில் தொடர்புள்ளவர்கள் நட்பை கேவலப்படுத்துகிறார்களா ? அல்லது நம்பிக்கையை கேவலப்படுத்துகிறார்களா ? அல்லது உறவுகளின் புனித தன்மையை கேவலப்படுத்துகிறார்களா ? எல்லாவற்றையுமே என்று கசப்பாகவே நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

திருமணம் ஆன பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்க முடிவதில்லை என்று பல நேரம் நினைத்துப் பார்ப்பேன். கட்டுப்பாடு அற்றவர்கள், வயதில் உள்ள ஆணும் பெண்ணும் நெருக்க மாக பழகினால் அது பாலியில் உறவில் முடிந்துவிடும் என்று இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. எத்தனையோ சினிமாக்கள் நட்புக்கும் பாலினத்திற்கும் தொடர்பில்லை என்று காட்டிவிட்டார்கள். நட்பு என்பது அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம், நெருங்க நெருங்க ஒத்த பாலினம் என்றால் இருவருக்கும் ஒரின ஈர்ப்பு மாதிரி ஈர்ப்பு இல்லை என்றால் ஒண்ணும் ஆகாது. ஆனால் எதிர்பாலினம் நட்பு கொள்ளும் போது ஈர்ப்பு இயற்கையிலேயே அமைந்துவிடுவதால் அன்பின் வெளிப்பாட்டில் தன்னையே கொடுக்கலாம், அல்லது உரிமை எடுத்துக் கொண்டு அடையலாம் என்றெல்லாம் சபலமாக ஆகிவிடும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், 'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றுதான் பொருள் என்று, அதாவது சூழ்நிலை அது போல் அமையாமல் போனால் அவன் யோக்கியனாகவே இருப்பான்' என்ற பொருளில் சொன்னான். திகைத்தேன். நினைத்துப் பார்க்கையில் சரிதான் என்று தோன்றுகிறது. வலிய வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர், சினிமா கதா நாயகர்கள், விரக பார்வையுடன் நெருங்கும் பெண்களுக்கு அட்வைஸ் மழை பொழிவது போல் செய்வார்கள் என்று தெரியவில்லை. நடப்பில் விழுக்காட்டு அளவில் ஆண்கள் தான் பெண்களை அதிகம் தூண்டுகிறார்கள்.

பெண்களை குறை சொல்ல முடிந்தால் எதோ ஒரு சபலம் என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். அதற்கு முழுப் பொறுப்பையும் ஆண் வர்க்கம் தான் ஏற்கவேண்டும். ஆண்களில் கேடுகெட்ட குணத்தை வைத்துதான் 'அண்ணன் மனைவியை அம்மா' என்ற பொருள்படவே நினைக்கும் அளவுக்கு நம் சமூகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள், நண்பர் மனைவியை ஏன் தன் சகோதரி என்று கருதமுடியவில்லை ? கட்டுப்பாடு அற்றவர்களுக்கு எந்த உறவும் தடையில்லை போலும்.

உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது. பழக்கத்தை வைத்து தவறாக நடந்தால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள். அடிக்க வேண்டும்.

ஒரு சிலரின் ஈன செயலை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது. ஆனாலும் அந்த ஒரு சிலரில் ஒரு சிலருக்கு தவறுகள் நடப்பதற்கு சூழலே முக்கிய காரணமாக அமைந்துவிடும். மெக சீரியல்களும், சினிமாக்களும் சமூக சீரழிவுகள் பெருகுவதற்கு சொல்லிக் கொடுக்கின்றன. சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு தவறுதான்.

திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். உறவுகள் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.

28 நவம்பர், 2007

அடுத்த முதல்வர்கள் யார் ?

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்த்தல் குறித்து காமடிகள் அரங்கேறி வருகிறது. ஒரு பக்கம் மருத்துவர் ஐயா 2011ல் பா.ம.க தலைமையில் ஆட்சியென்றும், மறுபக்கம் கேப்டன் விஜயகாந்தும் அடுத்த முதல்வர் தாம் தான் என்றும் அறிக்கை விடுகிறார்கள்.

ஸ்டேட்மெண்ட் விடுக்கும் பாமக இதே போன்று கடந்த முறை பாண்டிச்சேரியில் தாம் ஆட்சியை பிடிக்கப் போவதாக அறிவித்து ஜெவுடன் கூட்டணி சேர்ந்தபோது ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. இத்தனைக்கும் சாதி ஓட்டுகள் கனிசமான அளவுக்கு இருக்கும் பாண்டிச்சேரியிலேயே மண்ணைக் கவ்வியது. 234 தொகுதியிலும் நாங்க தான் வெற்றிபெறுவோம் என்று மார்தட்டிய தேமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி அதுவும் ஸ்டார் வேல்வ்யூ மற்றும் பண பலத்துக்கு கிடைத்தது.

மருத்துவர் ஐயா எப்போதும் ஜெயிக்கிற குதிரை எது என்று பார்த்து பணம் கட்டுவார். அந்த வகையில் திமுக அதிமுக என்ற இரு குதிரைகளிலும் நன்றாக ஜெயித்து இருக்கிறார். 5 சீட்டில் ஆரம்பித்த பாமக வளர்ந்து 25 - 30 சீட்டு வரை வந்து நிற்கிறது, மொத்த தொகுதியில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே. எந்த நம்பிக்கையில் அடுத்த ஆட்சி பாமக தலைமையில் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாஸிபிலிட்டி தான் இருக்கிறது, கர்நாடகாவில் மூன்றாம் இடத்தில் இருந்த கவுடா அண்ட் சன்ஸ் சின் மதச்சார்பற்ற ஜனதாளம் 20 மாதம் தந்திரமாக ஆட்சியை கைப்பற்றியதை நினைத்து தமிழகத்தில் இவ்வாறு ஏன் நடத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அதிமுக, திமுக இளிச்ச வாய் கட்சிகளாக இருக்கும் என்று ஐயா நினைப்பது ஓவர் தான்.

மருத்தவர் ஐயா பரவாயில்லை, அதிமுக, திமுக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக சொல்லும் விஜயகாந்த் எந்த குதிரை மீது பயணம் செய்யப் போகிறார் என்று தெரியலை. அவருக்கு மட்டும் எதாவது மண் குதிரை கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியும். பாமக துணைத்தலைவர் சிஆர்பாஸ்கரன் தேமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் பங்குக்கு 'பாமகவின் பலர் தேமுதிகவில் இணைந்த நிலையில், நான் சிறிது தாமதமாக வந்துள்ளேன் (இரயில்வே அமைச்சராக இருந்தாரா ?) . தொலைநோக்கு பார்வையுடன் 2011ம் ஆண்டில் ஆட்சி அமைப்பேன் என்று ராமதாஸ் கூறி வருவது சாத்தியமல்ல. 2011ல் ஆட்சி அமைக்கப் போவது விஜயகாந்த்தான். அவரால் மட்டுமே அது முடியும் என்றார் பாஸ்கரன்.'

தொலைநோக்கு பார்வை என்றால் என்ன தொலைநோக்கியால் பார்பதா ? அதில் பார்த்தால் 2011 எல்லாம் தெரியுமா ? காமடி பண்ணாதிங்கப்பா :)

பேசுவதற்கு மைக்கும், செய்தி போடுவதற்கு செய்தி தாள்களும் இருப்பதால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நான் தான் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

விஜயகாந்த் ஏற்கனவே ஆண்டாள் - அழகர் கல்லூரிக்கு முதல்வர்தான் :)

பாமக சார்பில் ஒரு கல்லூரி அமைத்தால் மருத்துவர் ஐயா மற்றும் சின்னைய்யா ஆகிய இருமுதல்வர்கள் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைப்பார்கள்.

26 நவம்பர், 2007

பதிவர்களுடன் சென்ற பினாங் (PENANG) சுற்றுலா !

'பதிவர் சந்திப்புகள்' வழக்கமாக நடப்பவை, பதிவர்கள் பதிவு வழியாக அறிமுகம் ஆகுபவர்கள் தானே, மிகுந்தவையாக 'ஹலோ' சொல்லிக் கொள்வது நலம் விசாரிப்பது, ஜிடாக்கில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது, கூட்டம் சேர்ந்தால் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு பதிவர்களை சந்திப்பது இதுதான் நடைமுறை, பெரிய அளவு கூட்டமான சந்திப்பு என்றால் அங்கு வருபவர்கள் அனைவருடனும் உரையாட முடியாத நிலைமை. எதிர் கோஷ்டிகளுடன் முகம் கொடுக்காத நிலைமை, இதுபோன்ற இடற்பாடுகளும் பதிவர் சந்திப்புக்களில் நிகழ்வதுண்டு, பதிவர் சந்திப்பின் நோக்கம் புதுமுகங்களின் அறிமுகம் மற்றும் சில தீர்மாணங்கள், சில விமர்சனங்கள், சில புரிந்துணர்வுகள் என்ற அளவில் இருக்கும்,

பதிவர்களுடன் இணைந்து சுற்றுலா செல்ல முடியுமா ? சிங்கையில் இருக்கும் பாரி.அரசு மற்றும் ஜெகதீசன் ஆகியோருடன் இணைந்து பினாங்கு சென்று அங்கிருக்கும் டிபிசிடியை சந்தித்து ஊர் சுற்றுவதாக முடிவெடுத்தோம், என் குடும்பத்தினர் பள்ளி விடுமுறைக்காக தமிழகம் சென்றதால் தனிக்கட்டையாக இருந்ததால் சுற்றுலா செல்லுவதற்கு தடைகள் எதுவும் இருக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை முன்பதிவு எதுவும் செய்யாமல் கிடைத்த பேருந்து வழியாக மலேசியாவின் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றோம், பினாங் செல்லும் நேரடி பேருந்து என்று சொல்லப்பட்டு தான் ஏறினோம், ஆனால் இறங்கிய பின்பு தான் தெரிந்தது கோலாம்பூரில் இருப்பது ( அது தனிக்கதை - ஏமாந்ததெல்லாம் எழுதினால் அப்பாவின்னு நினைச்சிடுவிங்க) அதன் பிறகு பினாங் செல்ல பேருந்து எடுத்து பிற்பகல் 2 மணிக்கு சென்றோம், பேருந்து குளறுபடி இல்லை என்றால் காலை 6 மணிக்கே சென்றிருப்போம். நாங்கள் புறப்பட்டதிலிருந்தும், எங்கள் வருகை தாமதமானதை தொடர்ந்து 1மணி நேரத்திற்கு ஒரு முறை நண்பர் டிபிசிடி செல்பேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் கேட்டுக் கொண்டார். நாங்கள் காலையிலேயே வந்துவிடுவோம் என்று எதிர்பார்ப்பில் மாற்றம் நிகழ்ந்ததால் அவர் மனைவி செய்திருந்த காலை உணவு வீணாகிவிட்டதாம்.

பிற்பகல் நாங்கள் பினாங்கை அடைந்ததும், டிபிசிடி பேருந்து நிலையத்திற்கு வந்து அவரது வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றார். எங்களுக்கு தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். முதன் முறையாக ஜெகதீசனும் டிபிசிடியும் சந்தித்து கொண்டனர். அதற்கு முன்பு பதிவிலும், ஜிடாக்கிலும் தான் பழக்கம். நாங்கள் சென்றதுமே எங்களுக்கான சுவையான உணவை அவரது இல்லாள் தயாராக செய்து வைத்திருந்தார். வாசலில் நுழைந்ததுமே அவர்களது செல்ல மகளின் வரவேற்பு கிடைத்தது, பிறகு உணவு உண்டுவிட்டு, அவர்கள் மூவர், மற்றும் நாங்கள் மூவர், அவரது காரிலேயே வெளியில் சென்று சுற்றுலா இடங்களைக் காணச் சென்றோம்.

முதலில் பினாங்க் மணல் கடற்கரை (Sandy Beach), தண்ணீர் விளையாட்டுகளுடன் கூடிய அழகான கடற்கரை அது, அதில் ஒரு அரை மணி படகு பயணம், பின்பு அங்கே காஃபி அருந்திவிட்டு, சிறுதி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து குட்டி இந்தியா இருக்க்கும் ஜார்ஜ் டவுனுக்கு சென்றோம், அங்கு செல்லும் போதே இரவு 9 மணியை கடந்துவிட்டது, அங்கு இரவு உணவை முடித்துக் கொண்டு அவரது வீட்டிற்கு வந்துவிட்டோம்.

மறுநாள் காலையில் பாரி.அரசுவுக்கும், ஜெகதீசனுக்கும் அருமையான இட்லி மற்றும் கோழி குருமா, எனக்கு சைவ சட்டினி மற்றும் மிளாகாய்பொடியும் வைத்து தம்பதி சகிதமாக அன்புடன் அனைவரையும் விருந்தின்ர்களை கவனிப்பது போல் பார்த்து பார்த்து பரிமாறினார்கள். மிகவும் நெகிழ்சியாக இருந்தது. காலை உணவு உண்டவுடன் நாங்கள் மூவர் மற்றும் டிபிசிடி ஆகிய நால்வர் மட்டும் ஊர் சுற்றுவது என்று முடிவு. வெடுத்து காரிலேயே சுற்றினோம், முதலில் பினாங்க் மலை (புகிட் பண்டாரா) சென்றோம்,


அங்கு இழுவை ரயில் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் அங்கிருந்து பினாங்க் தீவின் முழு அழகையும் பார்க்க முடியும், நாங்கள் சென்ற நேரத்தில் இழுவை ரயிலுக்கான பயணச்சீட்டூ பிற்பகல் மூன்று அரை மணிக்கு செல்ல முடியும் படித்தான் கிடைத்தது, இடைபட்ட நேரத்தில் அங்கு அருகில் மற்றொரு மலை இடையில் ஒருக்கும் சீனர்கள் அமைத்த புத்தர் கோவிலுக்கு சென்றோம், பிற்பகல் 2 மணிவாக்கில் அருகில் இருந்த இந்தியரின் உணவகத்தில் பகலுணவை முடித்துக் கொண்டு பினாங் மலை சென்றோம்.


அங்கு ஒரு 2 மணி நேரம் பினாங் அழகை பார்த்துவிட்டு, மாலை 6 1/2 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினோம். மறுநாள் சிங்கையில் இருக்க வேண்டும் என்பதால் முன்பதிவு செய்துவிட்டதால் அன்று இரவு 7.30 மணிவாக்கில் டிபிசிடி வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு, அவரது இல்லத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம், அவரும் கூடவே வந்து பேருந்து புறப்படும் வரை நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து நட்பு பாராட்டினார்.

இது போன்ற சுற்றுலா நினைத்து பார்க்க முடியாத ஒன்று, பொதுவாக நாம் எங்கு சுற்றுலா சென்றாலும் இல்ல உறவினர் அல்லது நண்பர்களுடன் தான் செல்வோம், ஆனால் இங்கு பதிவுலகில் இவர்களுடன் நான் பழகிய நாட்கள் 6 மாதத்திற்கும் குறைவே. இருந்தாலும் கல்லூரி காலத்து நண்பர்களுடன் எவ்வளவு மகிழ்வுடன் நெருங்கி இருந்து ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, கிண்டல் செய்து கொண்டு சுற்றுலா சென்றிருக்கிறோமோ அதற்கு சற்றும் குறைவில்லாது மேலும் அதைவிட நன்கு புரிந்து கொண்டுள்ளப்பட்ட சுற்றுலா பயணமாக இதை உணர்ந்தேன். நாங்கள் நால்வரும் வேறு வேறு மாவட்டத்துக் காரர்க்கள், இதில் நானும் டிபிசிடியும் திருமணம் ஆனவர்கள், இருவர் ஆகாதவர், எனக்கு மூவரைக்காட்டிலும் 10 வயது அதிகம். இப்படி நால்வரும், பல பல மாறுபட்ட அமைப்பு கொண்டவர்கள். வலையில் எழுவது பயனளிக்குமா ? அளிக்காதா ? அதை காலம் தான் சொல்ல முடியும். ஆனால் கை மேல் பலன் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிய நினைவுகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது கிடைக்கிறது. உங்கள் அனுபவமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

23 நவம்பர், 2007

ஏழுமலை, சபரிமலைக்கு போட்டியாக திருவண்ணாமலை !

கடவுள் மொழியை கடந்தவர், மலையை கடந்தவர், மாநிலத்தை கடந்தவர், கடலை (நாடுகளை) கடந்தவர், என்று சொல்லுவார்கள். இவையெல்லாம் சொல்லப்படுவது பாமரனுக்கு மட்டும் தான். பாமரர்களைத் தவிர்த்து அதில் ஈடுபாட்டுடன் இருப்பவர் பெரும்பாலும் ஒருபக்கமாகத் தான் இருப்பார்கள், திருப்பதிக்கு செல்லும் வைணவர்கள், சிவதலங்களை புறக்கணிப்பதும் அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.

தமிழகத்திலிருந்து திரண்டு சென்று வரும் பக்தர்களின் கருணை பார்வையால் உண்டியலை நிரப்பிக் கொள்ளும் பாக்கியம் ஆந்திர திருப்பதிக்கும், கேரள சபரிமலைக்கும் தான் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பக்தர்களின் திடீர் கருணை பார்வை தமிழக கோவில்களின் பக்கமும் திரும்பி இருப்பது நலமான செயல்தான். குறிப்பாக திருஅண்ணாமலையார் கோவிலுக்கு செல்வதும், மலையை சுற்றிவருவதும் (கிரி வலம்) நடந்தேறிவருகிறது.
உண்டியல் காசு பார்க்கும் ஆலயம் அடியார்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுப்பது இல்லை என்ற செய்திகளும், மலையைச் சுற்றிவரும் பக்தர்கள் சமூக பகைவர்களின் தாக்குதாலுக்கு உள்ளாவதும், இடிராசாக்களின் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் முழுமதி (பெளர்னமி) தோறும் நடந்தேறுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருநாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவுக்கு குவிந்திருப்பதாக செய்திகள் வருகிறது. காசுள்ள கனவான்களுக்கு எல்லாவித வசதியும் கிடைக்கிறதாம். மற்றவர்கள் எப்போதும் போல் மிதிபட்டு கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி அரசு போதிய பாதுகாப்பு செய்யவில்லை என்ற ரெடிமேட் காரணங்கள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிடும்.

திருவண்ணாமலை திருப்பதி போன்று ஆன்மிக நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் கோவில் நிர்வாகக் குழுக்கள் திருப்பதியில் பக்தர்களுக்கு செய்வது போல் எதையும் செய்வதில்லை.

*****

திருவண்ணாமலை பற்றி மேலும் சில தகவல்கள்,

காஞ்சிபுரத்துக்கு அடுத்து திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஞான சம்பந்தர்காலத்திற்கு பிறகு அங்கிருந்த சமணர்களை துறத்திவிட்டு சைவர்கள் அதை வளைத்தனர். அண்ணா மலையார் என்ற பெயரில் உறைந்த சிவன் அருணாச்சலேஸ்வரர் என்று வைதீக மதம் மாற்றப்பட்டார். சாமிகளுக்கே மதமாற்றம் அதுவும் 6 - 7 ஆம் நூற்றாண்டுகளில். உலகிலேயே கடவுளுக்கும் கூட மதமாற்றம் முதலில் நிகழ்ந்தது தமிழகத்தில் தான் என்பதில் நாமெல்லாம் பெருமை கொள்ளலாம். சமணர்கள் ஆதிக்கம் இருந்த இடங்களிலெல்லாம் பின்னால் சைவம் நிலைபெற்றது ( எ.கா திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை)

திருவண்ணாமலை தீபம் : சமணர்கள் விளக்கு எரிக்க நெய்க்கு மாற்றாக விளக்கெண்ணையை கண்டுபிடித்து கொண்டாடிய போது ஏற்றப்பட்டது தான் திருவண்ணாமலை தீபம், தற்போது இந்து மத திருவிழாவாக வடிவம் பெற்றுவிட்டது. இது பற்றிய குறிப்பை எழுதியவர் அயோத்தி தாசபண்டிதர்.

எது எப்படி மாறினாலும் அவை நடந்தவை அறிந்து கொள்வதில் தவறல்ல, அதே நேரத்தில் தமிழக பக்தர்களின் மனம் தற்போதைய சீசனில் தமிழக கோவில்கள் பக்கம் மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.

அண்ணாமலையாருக்கு அரோகரா !

22 நவம்பர், 2007

பரிசு பொருள்களாக என்ன கொடுப்பது ?

பிறந்தநாள், மணநாள்,திருமணம் போன்ற நிகழ்வுகளில் பரிசளிப்பது என்பது நடைமுறை. சிலருக்கு பரிசு பெற்றுக் கொள்வது பிடிக்காது. வருகையின் போது பரிசுகளை தவிர்க்கவும் என்று அழைப்பிதழில் எழுதி இருப்பார்கள். அன்பு போதும் பொருள் வேண்டாம் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

திருமணத்தின் போது பரிசு கொடுப்பது (மொய் எழுதுவது) என்பது இழிவு போல் ஆகிவிட்டதால் எங்காவது வீன் பணத்தை விரயம் செய்துவிட்டால் அல்லது உடன்பாடில்லாமல் கொடுத்துவிட்டால் 'மொய் எழுதினேன்' என்று சொல்வது வழக்காகிவிட்ட படியால், சிலர் திருமணத்தின் போது பரிசு வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்வது பாராட்டத்தக்கது தான்.

அதே சமயத்தில் திருமணம் என்னும் நிகழ்வில் ஏற்படும் பெரும் பொருட்செலவை சமாளிக்க ஏழை எளியோர் நடுத்தர இல்லங்களுக்கு பரிசாக பணம் கிடைத்தால் அது செலவை ஓரளவு ஈடு செய்யும். பிச்சை என்னும் இழிந்த நிலைக்கு செல்லாமல் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து ஏழ் நிலையை உணர்த்தி மொய் பெரும் காட்சி ஒன்றை 'மொய் விருந்து' என்ற பெயரில் சின்னக் கவுண்டர் படத்தில் மிகவும் உணர்ச்சி முழுமையாக படமாக்கி இருப்பார் இயக்குனர் ஆர்விஉதயகுமார்.

எனக்கு வந்த பரிசு பொருள்கள் எல்லாம் சமையல் தொடர்புள்ளதாகவே இருந்திருக்கிறது, மிக்ஸி, ஜூஸர் அப்புறம் டைனிங் செட் ( ஆறு கோப்பைகளும், தண்ணீர் ஊற்றும் பெரிய ஜார் ஒன்றும் இருக்கும்). எந்த நிகழ்வுக்கும் ஒரு பத்து பேரை அழைத்திருந்தாலும் அதில் மூவர் டைனிங் செட், இருவர் ஜூஸர், ஒருவர் மிக்ஸி மற்றவர்கள் குழந்தைக்கான விளையாட்டு பொம்மைகளை வாங்கி வந்துவிடுவார்கள். அதிலும் பார்தோமேயேனால் பெரும்பாலும் டைனிங் செட்டில் புதிதாக பேப்பர் வாங்கி சுற்றி இருப்பது அப்பட்டமாக தெரியும், அதாவது அவர்களுக்கு வந்ததை அப்படியே புதிய ராப்பிங் பேப்பரை ஒட்டி கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். பிரித்து பார்த்துவிட்டு 'இதுக்கு அவர்கள் கொடுக்காமலே இருந்திருக்கலாம்' என்று மனைவி அலுத்துக் கொண்டு சொல்லும் போது 'பத்திரமாக எடுத்துவை' என்று பொருளுடன் (அர்தத்துடன்) சொல்லி சமாளிப்பேன். பரிசு பெருள்கள் பெயரளவுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம்.

ஒருவரின் அழைப்பை ஏற்று அவருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், பட்ஜெட்டை சொல்லி அவர்களிடமே 'உங்களுக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டு அதை வாங்கிக் கொடுப்பதில் தவறு அல்ல, திருமணம் ஆனவர்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ எதாவது வாங்கிக் கொடுக்க விரும்பினால் 'என்ன வேண்டும் ?' என்று கேட்டு அதன்படி தானே வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றுக் கொள்பவர்களுக்கும் அது மனநிறைவை அளிக்கும். மற்றவர்களுக்கு பரிசு பொருள் கொடுக்கும் போது எதிர்பாராவிதமாக பெறுபவர்களுக்கு வியப்பளிக்கும் வண்ணம் பரிசளிக்க விரும்பினால் அவர்கள் என்ன விரும்புவார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் அறிந்து அதை வாங்கி கொடுத்து அசத்தினால் அதுவும் சிறப்பாக இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு என்னால் நேரில் செல்ல முடியாத நிலைமை, அவரிடம் வெளிப்படையாக சொல்லி என்ன பரிசு வேண்டும் என்று கேட்டேன். அவர் சொல்லவில்லை. திருமண நாளை நோக்கி காத்திருக்கும் அவர் ஓயாமல் ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தார். 'மாலை என்னை வாட்டுது, மண நாளை மனம் தேடுது... நாட்கள் நகராதோ...பொழுதும் போகாதோ'. எதற்காக அதே பாடலை பாடுகிறார் என்று புரிந்தது, நன்றாக ஓட்டினோம். 'இந்த பாடல் டி.ஆரின் இனிமையான பாடல், உங்களிடன் கேசட் இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டேன், இல்லை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை என்றார். அடுத்த நாள் ஊருக்குப் போனபோது அந்த கேசட்டை வாங்கி அவருக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று கடைகடையாக ஏறினேன், அந்த பாடல் இடம் பெற்ற படம் 'பூக்களை பறிக்காதீர்கள்' , கடைசியில் ஒருகடையில் கிடைத்தது. அத்துடன் அந்த படத்தின் வீடியோ கேசட்டையும் வாங்கி, அழகான பேப்பரில் சுற்றி, அவர் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே கொடுத்தேன். மறுநாள் பிரித்து பார்த்துவிட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்.

பரிசு கொடுப்பது தவிர்க்க முடியாது என்று உணர்ந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து கொடுப்பது நலம். எது என்று அறிய முடியாவிட்டால் பணத்தை பரிசு பாக்கெட்டில் போட்டு கொடுத்தால் தேவையான நேரத்தில் அவர்களுக்கு அது நல்ல பயன்பாடாக இருக்கும்.

திரை(மறைவு) ஊடகம் என்னும் மகா நடிகன் !

சிறுபாண்மை பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உடன்படுவதில்லை. ஆனால் சமூகங்கள் அவ்வாறாக வலிய அடையாளப்படுத்தப்படுகின்றன. இனம் அல்லது சாதி, மதம் என பிரித்து அறிய எப்படி அவற்றின் ஒற்றை தன்மையை [எனக்கும் இதுபோன்ற சொற்கள் வருகிறது :) ]. சுட்டி வேறுபாடு காட்டப்படுகிறதோ, அதே போல் பிரித்து அறியப்படும் இனம், மதம் , சாதியும் தம்மை ஒரு குழுவாக 'இனம்' காட்டிக்கொள்ள அதில் உள்ள தனித்தன்மைகள் காரணிகளாக அமைந்திவிடுகின்றன. ( இவை உடல் அரசியலா, மன அரசியலா, வெறும் உளவியல் அரசியலா ? அந்த ஆராய்ச்சியை நண்பர் ஜமாலன் மற்றும் பாரி.அரசுக்கு அவர்களுக்கு விட்டுவிடுகிறேன்)

திரைப்படங்கள் ஆகட்டும், சின்னத்திரை நெடும்தொடர்(மெகா சீரியல்)கள் ஆகட்டும் அவை பெரும்பாண்மை சமூகத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. (சின்னத்திரைகளில் குறிப்பாக டிடி யில் ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதைகள், அவர்கள் குடும்பத்தில் நடப்பவை தான் மிக்கவையாக வந்து எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு வேறு வழியின்றி திருத்திக் கொண்டுள்ளது). ஒருபடத்தின் கதை நாயகன் என்பவனது பெயரும், கதையும் இந்தியாவில் 'இந்து' தன்மை வாய்ந்தாகவே இருக்கிறது. விஜய் என்னும் கிறித்துவ நடிகர் கதை நாயகனாக நடித்தாலும் ஒன்றில் கூட அவர் கிறித்துவ பெயரில் நடிக்க முடியாத நிலைமை. மசாலப்படங்களுக்கும் கதை நாயகர்களின் பெயருக்கும் என்ன தொடர்பு ? இருந்தாலும் 'இந்து' பெயரை வைத்துதான் எடுக்கின்றனர். திரை உலக ஜம்பவான்கள் கூட படம் எடுக்கும் போது இந்து இளைஞன் கிறித்துவ / இஸ்லாம் இளம்பெண் அதனால் வரும் புரட்சிக்காதல் என்ற அளவில் தான் கிறித்துவ / இஸ்லாமிய மதங்கள் இயக்குனரின் புரட்சிச் சிந்தனையை சொல்ல வருகின்றன. ( அதற்கும் மாற்றாக இஸ்லாமிய / கிறித்துவ இளைஞன், 'இந்து' பெண் என்று எடுக்க முன்வரமாட்டார்கள் ). மற்றபடி எந்த இயக்குனரும் இயல்பான காதல் கதையிலோ, வேறு மசாலா கதையிலோ அல்லது கலைப்படங்களிலோ கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் உள்ள பாத்திரங்களை கதை நாயகர்களாக படைப்பது இல்லை. நடப்பு (நிஜ) வாழ்க்கையில் எத்தனையோ உண்மை கதை நாயகர்கள் அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான் போன்று உயரத்தில் இருக்கிறார்கள்.

எல்லா துறைகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கின்றன. திரை துறையில் கூட இயக்குனர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பல மதங்களை சேர்ந்தவராக இருக்கின்றன. அமீர், பாசில் போன்ற இஸ்லாம் சமூகத்து இயக்குனர்கள் உள்ளனர், மம்முட்டி, இராஜ்கிரன் போன்ற இந்துமதம் சாராத நடிகர்கள் உள்ளனர். பொதுவாழ்க்கையில் எந்த மதத்துக்காரராக இருந்தாலும் சமூகத்தில் பொதுவாக எல்லோரும் சந்திப்பவற்றைத்தான் எல்லா மதத்தினரும் சந்திக்கிறார்கள். திரைப்படம் என்ற ஊடகத்தில் காட்டப்படும் பல கதைகளில் மதம் தொடர்புடைய எதுவும் இல்லாவிட்டாலும் அதில் 'இந்து' பெயரை வைத்தே கதை நகர்த்தப்படுகிறது.

ரஜினி காந்த் நடித்த 'பாட்சா' திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அவரது பெயரான மாணிக்கம் என்பதை துறந்து நண்பனின் பெயரான 'பாட்சாவை' வைத்துக் கொள்வார். ஒரு ரவுடியாக காட்டுவதற்கு இஸ்லாமிய பெயரும், சாதுவாக காட்டுவதற்கு மாணிக்கம் என்ற பெயரையும் பயன்படுத்தி இருப்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களிலெல்லாம் ரீனா, ரீட்டா, ரோஸி ஆகிய கிறித்துவ பெண் பெயர்களை ஓட்டலில் நடனமாடுவதாக காட்டப்படும் பாத்திரங்களுக்கு வைத்திருந்தார்கள். தற்பொழுது இப்படியெல்லாம் வருவதில்லை. அதைப் பார்பவர்களுக்கு ஓட்டலில் நடனமாடும் பெண்கள் எல்லாம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கிறித்துவ பெண்கள் ஓட்டலில் நடனமாடுவார்கள் என்ற எண்ணம் தானே வரும். திரைக்கு வெளியே அரபு நாடுகளுக்கு கலைகுழுக்களாக சென்று ஷேக்குகளுக்கு ஸ்பெசல் ஆட்டம் போடுபவர்கள், மகாபலிபுரம் சாலைகளிலும், டிஸ்கோத்தே கிளப்புகளின் ரைடுகளில் சிக்குபவர்களில் கிறித்துவர்கள் மட்டுமே இல்லை என்பது வேறு விசயம் :). குறிப்பாக கடத்தல் காரன், சமூக பகையாளன் போன்ற பாத்திரங்களுக்கு இஸ்லாமிய, கிறித்துவ பெயர்களை வைப்பது இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. :(

மதநல்லிணக்கம், இந்தியன் என்ற ஒருமைப்பாடு எல்லாம் வாய்கிழிய பேசுகிறோம், திரைத்துரையில் உரையாசிரியர்கள் (வசன கர்த்தா) மற்றும் இயக்குனர்களுக்கும், நடிகர்களும் எல்லாவித சமூக அநீதிகளையும் போட்டு கிழிக்கிறார்கள். போட்டு தாக்குகிறார்கள். ஆனால் திரைக்கதைகளில் பெறும்பாண்மை 'இந்து' அரசியல் என்னும் கிழிபடாத கோர முகம் அவர்களின் வயிற்றுப்பாடு என்ற கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வெளியில் தெரியாமல் நடித்துக் கொண்டு இருக்கிறது.

சாம்பார் வடை கேட்ட - பிடித்த திரைப்படங்கள் !

சாம்பார் வடை பிடித்த படங்களை பற்றி எழுதச்சொன்னார், வாழ்நாளில் இதுவரை ஆயிரம் படங்களாவது பார்த்திருப்பேன். ஆனால் மனதில் நிற்பவை மிகச்சில தான். சேமித்து வருங்கால இளையர்களுக்கு காண்பிக்க சிறந்த படமாக நான் கருதுவதில் சிலவற்றை இங்கு தருகிறேன். இந்த படங்கள் என் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது.

தில்லானா மோகனாம்பாள் : நடிகர் திலகமும், நாட்டிய பேரொளியும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்திருப்பார்கள். கதைக்கு பொருந்தமான பாடல்கள், வசனங்கள், பாலைய்யா, நாகேஷ், மனோரமாவின் நடிப்பு அப்பப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ?'பாடல் ஆல் டைம் பேவரிட். சிறந்த திரை காவியம்

திருவிளையாடல் : ஏபிநாகராஜனின் நல்ல தமிழ், அதில் அவர் நக்கீரராகவும் நடித்திருப்பார், கவியரசு கண்ணதாசனின் காலத்தை வென்ற பாடல்கள், சிவாஜியின் சூப்பர் நடிப்பு, இன்றும் யாராவது எதாவது நாடகம் எழுதினால் திருவிளையாடலின் பாதிப்பின்றி எழுத முடியாது என்றே நினைக்கிறேன். சிறந்த பக்தி படம்

ஒளவை சண்முகி : ஜொள்ளு, லொள்ளு ஜெமினியும் கமலும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதிலும் 'ருக்கு ருக்கு' பாட்டுக்கு கமலஹாசன் காலைமடக்கிப் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகுக்கு சுத்திப் போடலாம், 100 % ஐயர் மாமியாகவே கலக்கி இருப்பார். தரமான நகைச்சுவை படம்

முதல்மரியாதை : நடிகர் திலகத்தின் நடிப்பும் இளையராஜாவின் இசையும் பாரதி ராஜாவின் இயக்கமும் ஒன்றை ஒன்று போட்டி போடும். பூங்காற்று திரும்புமா ? என்று கேட்டாலும் தெவிட்டாது. உணர்ச்சி காவியம்

கர்ணன் : புராணக் கதையில் அதிகம் புகழப்படும் கர்ணன் பாத்திரத்தை படைப்பும், படைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பும், படத்தில் உள்ள பாடல்களும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. அதுவும் ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயே போற்றி' - கண்ணுக்கு தெரியும் கடவுள் சூரியனை போற்றும் பாடல் கேட்கும் போது எனக்கு சிலிர்க்கும். சிறந்த இதிகாச படம்

அஞ்சலி : இந்தப்படம் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம், மூளை வளர்ச்சி குறைவுற்றோர்களை அரவணைத்துச் செல்ல குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க இந்த படம் மிகச் சிறப்பான படம், மணி ரத்தினம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படமென்றால் அஞ்சலிதான். பெரியவர்கள், குழந்தைகளுக்கான சிறந்த படம்

இன்னும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது, இதுக்குமேலே எழுதினால் பட்டியல் நீளும் !

நன்றி சாம்பார் வடை அவர்களே.

ஆட்டத்துக்கு அழைக்கனுமா ? என் பேச்சை தட்டாதவர்களைத் தானே அழைக்க முடியும் ?
:)

இவர்கள் தான்
ஆத்திகம் (விஎஸ்கே ஐயா)
சுப்பையா வாத்தியார் ஐயா

கூடல் குமரன்
டிபிசிடி ( அரவிந்த்)
பாரி.அரசு
ஜெகதீசன்
வல்லி அம்மா
சுல்தான் ஐயா

20 நவம்பர், 2007

அமெரிக்க சிட்டுகுருவி லேகியம் - செல்புட்

முன்பெல்லாம் தளர்ந்து போன 'வாலிப - வயோதிக' அன்பர்களுக்கு சிட்டுக் குருவி லேகியத்தை சித்த மருத்துவர்கள் மட்டுமே ரூம் போட்டு தங்கி கொடுத்துவிட்டு செல்வார்கள். இதற்கனவே ஒரே மாதிரியான மாதாந்திர சுற்றுப்பயண விளம்பரங்கள் நக்கீரன், துக்ளக் மற்றும் பல இதழ்களில் பின் முன் அட்டைக்குள் மற்றும் நடு பக்கங்களில் வரும்.

தற்போது இது போன்ற வேறு மருத்துவம் தொடர்புடைய பொருள்களை பொதுமக்கள் தயவினால் வெளியில் விடுகிறார்கள். சர்வரோக நிவாரணி என்று வடமொழியில் சொல்லப்படும் அனைத்து கேடுகளுக்கான மருந்தும் ஒரே ஒரு சொட்டு 'இந்த' ப்ராடெக்ட் பயன்படுத்தினால் தீர்ந்துவிடும் என்று விற்கச் சொல்லி சங்கிலி (ஆண்களுக்கு ஏது தாலி ?) அறுக்கிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சீனர் ஒருவர் வேலையை விட்டு சென்று ஒருவருடம் கழித்து என்னை செல்பேசிக்கு தொடர்பு கொண்டார். அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆங்கில உரையாடல் தான். சிங்கிலீசில் இருக்கும் அதனால் தமிழிலேயே தருகிறேன்.

MR SUM : ஹலோ கண்ணன், எப்படி இருக்கிறீர்கள்

நான் : ஹலோ Mr Sum, நல்லா இருக்கிறேன்.

MR SUM : நான் இந்தவாரம் உங்க அலுவலகம் வழியாகத்தான் போகிறேன், நேரம் இருந்தால் சொல்லுங்க, காபி சாப்பிடுவோம்.

நான் : பரவாயில்லை, நீங்களே நினைவு வைத்து அழைத்து பேசுகிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது அலுவலகம் முடிந்த நேரத்தில் நீங்க எங்கே கூப்பிட்டாலும் வருவேன்.

MR SUM : ஓ அப்படியா ? சரி நாளைக்கு அல்ஜுனைட் போவேன், அது பக்கத்தில் அங்கே பார்ப்போமா ?

எனக்கும் அலுவலகத்தில் இருந்து அவ்விடம் அருகில் என்பதால் சரி என்று சொன்னேன். மறுநாள் தொலைபேசி வருகையை உறுதி படுத்திக் கொண்டார். என்னை இவ்வளவு மதிக்கிறரே என்று நானும் வியந்து போனேன்.

அருகில் இருந்த உணவு அங்காடியில் உட்கார்ந்து பேசினோம்.

MR SUM : ம் இன்னிக்கு என்னோட ட்ரீட் அதனால் நீங்க என்ன வேண்டுமென்று சொல்லுங்க வாங்கி வருகிறேன்.

நான் : ஐ யம் சாரி..நான் உடனே சென்றுவிடலாம் என்பதால் வீட்டில் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லவில்லை, என் மனைவி செய்து வைத்திருப்பார். அதனால் எனக்கு ஒன்றும் வேண்டாம், காபி வேண்டுமானால் ஆர்டர் பண்ணுங்கள்

சீனர்கள் எப்போதும் வெளியில் சாப்பிடுபவர்கள், எனவே அவர் இரவு உணவு சாப்பிடும் நோக்கில் அவருக்கு வேண்டியதை வாங்கி கொண்டு எனக்கு காபி வாங்கி வந்தார்.

MR SUM : மிஸ்டர் கண்ணன், அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களே, அந்த சம்பளம் போதும் என்று நினைக்கிறீர்களா ?

வழக்கம் போல் எவ்வளவு தான் கையில் இருந்தாலும் பஞ்சப்பாட்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் ஒரு திருப்தி கிடைக்குமே அதை நினைத்து.

நான் : ஹூம்... கஷ்டம் தான், சிங்கையில் ஸ்கூல் பீஸ், வீட்டு வாடகை எல்லாம் அதிகம் அதனால் சரியாக இருக்கு

MR SUM : எதாவது சேமிப்பு வைத்திருக்கிறீர்களா ?

நான் : இன்ஸுரன்ஸ் தவிர வேற்றெதிலும் சேமிப்பது இல்லை. வருவதும் போவதும் சரியாக இருக்கும்

MR SUM : திடிரென்று வேலை போனால் என்ன செய்வீர்கள்

நான் : திறமை இருக்கு, ஒரு மாதத்திற்குள் வேறு வேலை தேடிவிடுவேன்

MR SUM : அப்ப நீங்க முன்னெச்சரிக்கையாக இல்லை ?

நான் : இல்லை

MR SUM : நான் கூட அப்படித்தான், முன்பு ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன், திடிரென்று Shut-Down பண்ணிட்டாங்க, வேலை போச்சு

நான் : அச்சச்சோ

MR SUM : பதறாதிங்க... சாமாளிச்சேன்

நான் : சேவிங்க்ஸ் இருந்திருக்கும்

MR SUM : அது இல்லை, நாம அலுவலகம் முடிந்து நேர வீட்டுக்கு போறோம், டிவி பார்கிறோம், அப்பறம் படுத்துவிடுகிறோம்,

நான் : ம்

MR SUM : அதுபோல் அலுவலக நேரம் தவிர்த்து நமக்கு கிடைக்கும் நேரங்களை வீணாக்கிவிடுகிறோம்

நான் : ம்

MR SUM : அந்த நேரத்தை உரிய வழியில் செலவு செய்தால், நம்மால் பணம் சம்பாதிக்க முடியும். நான் அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட மாதம் 5000 வெள்ளிகள் கூடுதலாக சம்பாதிக்கிறேன்

(இப்ப தான் இவர் என்னமோ சொல்லப் போகிறார் என்றே தோன்றியது, அதன் பிறகு கேள்விகளை அவரே கேட்டு அவரே பதிலை சொல்லி வந்தார், கையில் கொண்டு வந்த ப்ராடக்ட் விவரங்களை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார்)

MR SUM : நாம் வயத்துக்கு சாப்பிடுகிறோம், இரத்தத்தில் உள்ள செல்களுக்கு அது சரியான உணவா ? இதபாருங்க அருமையான ப்ராடெக்ட், தண்ணீரில் ஒரே ஒரு சொட்டு போட்டு தினமும் குடித்தீர்கள் என்றால் புத்துணர்ச்சி கிடைக்கும். செல்கள் விரிவடையும், செல்கள் இனப்பெருக்கம் நடக்கும், இளமையாக உணர்வீர்கள். இது செல்லுக்கான உணவு, ஆண்டி பயாடிக் மாதிரி எந்த வியாதியும் அண்டாது, ஆனால் சைடு எபக்ட் இல்லாதது, இது பேரு தான் செல்புட்

என்று சொல்லி ஒரு 75 மிலி பாட்டிலை எடுத்து காட்டி, அதிலிருந்து இரண்டு சொட்டு தண்ணீருக்குள் போட்டு என்னை குடிக்கச் சொன்னார், புளிப்பாக இருந்தது.

MR SUM : இந்த நிறுவனம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது, இந்த பராடெக்ட் மார்கெட்டில் நன்றாக போகுது ஆனால் பொது சந்தையில் இதனை வாங்க முடியாது, அதற்கு நீங்கள் 'இந்த' நிறுவனத்தில் உறுப்பினராக சேரனும்.

நான் : ம்

MR SUM : நான் இதுவரை எனக்கு நெருக்கமானவர்களை, நம்பிக்கையானவர்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன்.

நான் : ம்

MR SUM : இப்ப சொல்லுங்க, நான் கையில் வைத்திருக்கும் இந்த பாட்டில் யாருக்கு ?

மாட்டிவிட்டோம் என்ற அந்த சோகத்திலும் கண்டுபிடித்துவிட்டது போல் பெருமையாக சொன்னேன்

நான் : எனக்கு தான்.

MR SUM : யூ சோ கிளவர். கம் ஐ வில் ப்ரிங் டு த ஆபிஸ்

அருகில் தான் அந்த அலுவலகம் இருக்கிறது என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

என் வாயாலேயே மாட்டியாச்சே

அப்பறம், எதோ அதற்கு நடைமுறை பாரங்களை நிரப்ப சொல்லி 120 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு பாட்டில் செல்புட் திரவத்தை ( 75 ml) கொடுத்து, கூடவே சின்ன தண்ணீர் ஸ்பேரே, அதில் ஒரு சொட்டு செல்புட் திரவத்தை போட்டு சோர்வாக இருக்கும் போது முகத்தில் அடித்துக் கொள்ளச் சொன்னார். அவ்வப்போது தண்ணீர் அருந்தும் போதெல்லாம் செல்புட் ஒரு சொட்டு போட்டு குடிக்கனும், இந்த பாட்டில் 1 மாதத்திற்கு தீராது என்றார்.

MR SUM : இதை அடுத்த முறை வாங்கும் போது உங்களுக்கு 120 வெளிக்கு பதிலாக 75 க்கு கிடைக்கும், அதைத்தவிர்த்து நீங்கள் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு உறுப்பினருக்கு 25 வெள்ளிகளும், அவர்கள் வாங்கும் பொருள்களுக்கான கமிசனில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும்,

நான் : ம்..

MR SUM : எனக்கு இந்த விற்பனை மூலம் 5000 கிடைக்குது என்று சொன்னேன் இல்லையா, அந்த தொகை உறுப்பினர்கள் சேர சேர உயரும். இது என்னோட சொந்த பிசினஸ் போல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்கிறேன்.

நான் : ம்..

MR SUM : உங்க நண்பர்களிடம் இதைப் பற்றி சொல்லுங்க, நாம் இரண்டு பேருமே போய் அவர்களை மீட் பண்ணுவோம். சுறுசுறுப்பாக இருந்தால் வருமானம் கொட்டும்.

அத்தோடு விடை பெற்று வந்தேன். வாங்கி வந்த செல் புட் பாட்டில் மூன்றாண்டுகள் ஆகியும் வீட்டினுள் இன்னும் எதோ ஒரு மூலையில் திறக்கப்படாமல் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் 120 வெள்ளியை முழுங்கிய பூதம் உள்ளிருப்பதாக நினைப்பேன்.

*******

அடுத்து மல்டி மார்கெட்டிங் பிடுங்கல் அனுபவத்தில் ... ஆன் த வே... ஆம் வே !

பின்குறிப்பு : இந்த நிறுவனங்கள் எல்லாமே எந்த நாட்டிலும் அந்தநாட்டு அரசாங்க அனுமதி பெற்றெ நடத்துகின்றன. எனவே குறிப்பிட்டு குற்றம் போல் சொல்ல முடியாது. எச்சரிக்கைகாக அனுபவத்தை எழுதுகிறேன். இது போன்ற தொழில்களில் வாய் உள்ளவர்கள் பிழைப்பார்கள். அவர்கள் தான் நடத்துகிறார்கள்.

செய்வினை செயப்பாட்டு வினை ! இடையூறப்பாவின் கண்ணீர் காவியம் ஆரம்பம் !

கர்நாடக அரசியலில் உச்ச கட்ட காமடி நடந்து கொண்டு இருக்கிறது. காவேரி அரசியலையெல்லாம் தோற்கடித்துவிடும் கல்குவாரி அரசியல் நடக்கிறது. கல்குவாரியின் பிசினஸ் குறித்து அச்சப்பட்டே 21 அம்ச கோரிக்கையை தேவ கவுடா கவுன்டவுன் வைத்து கால்வாரி அரசியல் நடத்துவதாக அரசியல் புழுதி கிளம்புகிறது.

எப்படியாவது முதல்வராகவேண்டும் என்று திருவண்ணாமலையைக் கூட சுற்றிவந்தார் இடையூறப்பா, 'பெரும்'பாண்மையை டெல்லியில் அணிவகுப்பு நடத்தி வரலாறு படைத்தது கர்நாடக பிஜேபி. எல்லாம் முடிந்து இடையூறப்பா அரியணையும் ஏறிவிட்டார். பாஜக தொண்டர்களில், அபிமானிகளில் சிலர் 'கர்நாடகாவில் மலர்ந்த கமலம்' என்று அகமும் முகமும் மலர்ந்தார்கள். கடைசியில் ஆ...'காய' தாமரையாகி ஆகி (கோட்டை) விட்டது தான் மீதம். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்கள் மேல் கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் உள்ள நம்பிக்கையையும் சேர்த்தே அடமானம் வைத்து முடிவுவிட்டனர் கவுடா அண்ட சன்ஸ்.

இதைவிட பெரும் கூத்து இடையூறப்பா கவுடாவின் மேல் சொல்லும் புகார் தான். சூனியம் வைத்துவிட்டாராம். அழுகாச்சிகளும், கண்ணீர் காவியங்களும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இனி ஒவ்வொன்றாக அரங்கேறும்.

மிச்சத்தை இங்கே படிங்க : தட்ஸ்தமிழில் இருந்து சுட்டவை தான்.

கெளடா செய்வினை செய்துவிட்டதாக எதியூரப்பா புகார்

பெங்களூர்: தேவெ கெளடா தனக்கு செய்வினை செய்து விட்டதாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தாலோ அல்லது தான் திடீரென இறந்தாலே அதற்கு கெளடாவின் குடும்பம் தான் பொறுப்பு என 7 நாள் முதல்வர் பொறுப்பை வகித்த பாஜக தலைவர் எதியூரப்பா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் மூலம் கர்நாடக அரசியல் மேலும் கீழ்த்தரமான நிலையை எட்டியுள்ளது.

எதியூரப்பா முதல்வராக தொடர கெளடா 12 நிபந்தனைகளை விதித்து அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி எதியூரப்பாவை அதில் கையெழுத்திட உத்தரவிட்டார். அதில் கையெழுத்து போட எதியூரப்பா தயார் தான் என்றாலும் பாஜக தலைமை அதை ஏற்கவில்லை.

இந் நிலையில் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டியவரான பாஜக எம்எல்ஏ ஸ்ரீ ராமுலுவை அமைச்சரவையில் சேர்க்க பாஜக முடிவு செய்தது. இதில் தான் பிரச்சனை வெடித்தது.

பெல்லாரி பகுதியில் ஏராளமான குவாரிகளை வைத்து நடத்தி வரும் ஸ்ரீராமுவுவுக்கும் அங்கு புதிதாக குவாரிகள் தொடங்கிய குமாரசாமி குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து குமாரசாமி மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார் ஸ்ரீராமுலு.

தன்னை ஆள் வைத்து கொலை செய்ய காண்ட்ராக்ட் கொலையாளிகளை....

மேலும் இந்த அசிங்கத்தை படிக்க
இங்கே செல்லவும்

தட்ஸ்தமிழுக்கு நன்றி !

19 நவம்பர், 2007

ஆண்டிகள் கூடி மடம் கட்டினால்...

தென்னிந்தியாவின் குஜராத்தாக மாற இருந்த கர்நாடகத்தில் மீண்டும் குழப்பம், கவுடாவின் 20அம்ச கோரிக்கையை பிஜேபி ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து பிஜேபிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு கவுடா குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த தேர்த்தலில் பிஜேபிக்கு, காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருந்தது தான் மதச்சார்பற்ற ஜனதா தளம்.

மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் கொட்டம் அடங்கனும் என்ற பிஜேபியின் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக, குரங்கு அப்பம் பிட்ட கதையாக தந்திரமாக பிஜேபியின் தயவால் 20 மாதங்கள் ஆட்சி நடத்தியது மசாஜெத. பதவியில் இருந்த ஆசை கவுடா குடும்பத்தை விடவில்லை. இன்னொரு குஜராத் உருவாக்கும் ஆசை பிஜேபியை விடவில்லை. முடிவில் தற்பொழுது பதிவி ஏற்ற இரண்டொரு நாளில் கவிழ இருக்கிறது பிஜேபி.

20 அம்ச கோரிக்கைகள் மூலம் பிஜேபியை பொம்ம்மை அரசாங்கமாக ஆக்கி ஆட்டிப்படைக்க நினைத்தார் கவுடா. கடிவாளத்தை கொடுத்துவிட்டு முதுகில் சவாரி செய்ய விடும் குதிரை ஏற்றம் வேண்டாம் என்று பிஜேபி தலைமையும் முடிவு செய்துவிட்டு, இடையூறப்பாவை ( எழுத்துப்பிழை இல்லை) பதவி விலக சொல்லி இருக்கிறது.

கர்நாடக மக்கள் வரும் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளின் கேலிக் கூத்தைப் பார்த்து ஓரம் கட்டுவார்களா தெரியலை. ஏனென்றால் சாதி அரசியல் மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே கர்நாடகாவில் நடக்கிறது. கவுடர் சாதி கர்நாடகாவில் பின் தங்கிய வகுப்பில் பெரும்பாண்மை சமூகம். தேவ கவுடாவைத்தான் ஆதரிப்பார்கள்.

ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் அது கனவில் தான் என்பதற்கு சாட்சியாக கர்நாடகவின் கூட்டணி ஆட்சி தத்துவம். ஒட்டுண்ணி அரசியல் எத்தனை நாளைக்கு எடுபடும் ? கர்நாடக பிஜேபியின் தற்போதைய நிலைமை 'சொத்து கால் பணம் அதன் சுமைக்கூலி முக்கால் பணம்'.

சிவன் - பார்வதிக்கு என்ன வயது ?

14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எந்த கடவுளுக்கும் வயது ஏறவில்லை. புரிய வில்லையா ? ஐயப்பன் அவதாரம் செய்தபிறகு சிவன் - மோகினி (கிருஷ்ணன்) தம்பதிகளுக்கோ, அல்லது சிவன் - பார்வதி தம்பதிகளுக்கு முருகன் தவிர்த்து வாரிசுகள் இல்லை. கிடைத்ததெல்லாம் ஆண் வாரிசு என்பது வேறொருவிசயம். கொடுப்பினை உள்ளவர்களுக்குத் தானே ஆண் வாரிசு கிடைக்கும். கடவுள்கள் கொடுப்பவர்கள் அவர்களுக்கே கொடுப்பினை இல்லாமல் போகுமா ? அதனால் தான் சிவன் பெற்ற நல்மக்களெல்லாம் ஆண் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். கிருஷ்ணன் - ராதை தம்பதிகள் பெற்றுக் கொள்ளாததைவிட இது எவ்வளவோ பரவாயில்லை.

சன் டிவியில் அடிக்கடிவரும் வேலன், இராஜ இராஜேஷ்வரி தவிர்த்து புராண கதைகள் எதுவும் பரிணாமம் பெறவில்லை என்பது வருத்தமான விசயமாக இருக்கிறது. மணக்கோலம் பூண்டு இரு மனைவிகளை உடைய முருகனுக்கோ தாம் என்றும் இளமையாக இருக்க வேண்ட்டும் என்று நினைத்தானோ தெரியவில்லை. மேல் நாட்டு வழக்கப்படி வாரிசு இல்லா குடும்பங்களாக மாறவிட்டாரா ? சிவன் தாத்தாவாகும் கொடுப்பினை இல்லாமல் இருக்கிறார். சிவன் - பார்வதி தம்பதிகள் கொஞ்சி விளையாட பேரன் ( பேத்தி எப்படியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை) இன்றி தவக்கோலத்தில் இருக்கிறார்கள்

முருகனுக்கு 16 வயது என்றால், அந்த காலத்தில் 16 வயதில் மணமுடிப்பார்கள், என்றும் 16 ஆகவே இருக்கிறார். எனவே சிவனுக்கு 32 - 33 வயது இருக்கும். பார்வதிக்கு அதைவிட குறைவாக 30க்குள் இருக்கும்.

**********

இது ஒரு சிந்தனைக்காகத்தான் எழுதினேன். விசயம் அதுவல்ல.

சபரிமலையில் 18 படிகளை தொட முயன்ற பெண் கைது
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007
சபரிமலை: சபரி மலை ஐயப்பன் சன்னிதானத்தில் 18 படிகளை தொட முயன்ற புதுச்சேரியை‌ சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

****
ஐயப்பன் கதைப்படி ஐயப்பன் சபரிமலையில் அமர்ந்த போது வயது 12, 12 வயது பாலகனுக்கு பெண் விலக்கப்பட்டவளாக இருக்கிறாள் என்று சொல்வது மாபெரும் இழிவு கற்பனை. அதைவிட கொடுமை அந்த பெண் 18 ஆம் படியை தீண்டினால் கூட கைது செய்யப்படும் நிலைமை. பார்வதியின் வயதை அதாவது தன் சின்னம்மாவின் ( ஐயப்பனை பெற்றெடுத்த மோகினி கிருஷ்ணனுக்கு பார்வதி தங்கை) வயதை ஒத்த ஒரு பக்தை தன்னை தரிசிக்க வருவதை ஐயப்பன் நிராகரிக்கிறானா ? அல்லது நம்பூதிரிகள் நிராகரிக்கிறார்களா ?

'கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போன அங்க ஒரு பேய் பூசாரியாக நின்னுச்சாம்' என்று பழமொழி சொல்வார்கள்.

எல்லா இடத்திலும் பெண்ணுரிமைக்கு போராடும் பெண்கள் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.


நம்பிக்கை இழிவுபடுகிறதா ? அல்லது இழிவே நம்பிக்கையா ?

18 நவம்பர், 2007

ஸெங்கோ எனும் அதிசய தீர்த்தம்.

ஒர் இருமுறை அறிமுகமானவர்கள், நீண்ட நாட்களாக தொடர்பு விட்டுப் போனவர்கள் ஆனால் நெருக்கமானவர்கள் அல்ல, திடிரென்று ஒரு நாள் செல்பேசியில் அழைப்பார்கள். ஆகா இவர் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறேரே என்ற மனமகிழ்ச்சியில் 'அப்பறம் சொல்லுங்க சார்' எப்படி இருக்கிங்க என்று கேட்டவுடன் பொறுப்புடன் நம்மைப் பற்றி எல்லாம் விசாரிப்பார்.

"உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்"

"ஓ தாரளமாக, பார்த்து நீண்ட நாள் ஆயிற்று"

"உங்களுக்கு எப்போ நேரம் இருக்கும்"

"நீங்களே சொல்லுங்க"

"எனக்கு ஒன்னும் சிரமில்லை, வீட்டு முகவரியை சொல்லுங்கள் வருகிறேன்"

சொன்னபடி வருவார். லேப்டாப் சகிதமாக வருவார்,

"என்ன சார், அலுவலகத்தில் இருந்தே வந்துட்டுங்களா ?"

"ம் கொஞ்சம் பிசிதான், கஷ்டப்பட்டு உழைக்கலைன்னா, சமாளிக்க முடியாது சார்"

காபி உபசரிப்புக்குபின்பு,

"சார், ஒரு பிசினஸ்"

"ம் சொல்லுங்க"

"இதை நீங்க வீட்டில் இருந்தே செய்யலாம், அருமையான ப்ராடெக்ட்"

கூடவே வைத்திருக்கும், லேப்டாப் பைகளில் இருந்து ப்ராக்டட் பற்றிய விவரங்களை காண்பிப்பார்,

நாமும் வெட்டப் போகிற ஆடு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மனைவியின் முகத்தைப் பார்க்க, அவளும் நமட்டுச் சிரிப்புடன் நம்மை நக்கலாக பார்ப்பது, 'இந்த தடவையும் இளிச்ச வாய் மாதிரி ஏமாந்திடாதிங்க' என்ற எச்சரிக்கை போல் இருக்கும்.

வந்தவர் அதன் பிறகு பவர் பாயிண்ட் ப்ரசன்டேசன் ஒன்றை காட்டுவார்'

"இந்த ப்ராடெக்ட் பாருங்க, இந்த படத்தில் இருப்பவரை பாருங்க, டாக்டர் கைவிரித்த கேஸ், இந்த மருந்தை சாப்பிட்ட 3 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிட்டாங்க"

"...........ம்"

"இதப் பாருங்க சார், இவர்தான் இந்த கம்பெணியை தொடங்கியவர், அமெரிக்காவில் ஆரம்பிகக்ப்பட்டது'

".........ம்"

"இதுல சேர்ந்து 3 மாதத்தில் எனக்கு தெரிந்த பத்மநாபன் என்பவர் கார் வாங்கிட்டார்"

".......ம்"

"வேலை வேலைன்னு நாம் அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் மட்டும் இருந்தால், நாம் என்னைக்கு வசதி வாய்பை பெருக்கிக் கொள்வது ?"

"........ம்"

"நீங்க ஒன்னும் செய்யத் தேவையில்லை, 2 பேரை அறிமுகப்படுத்தினால் போதும்"

"......ம்"

"அப்பறம் அவுங்க ஆளுக்கு 2 பேரை அறிமுகப்படுத்துவாங்க, இது சங்கிலி தொடர்போல, எவ்வளவு ஆட்கள் சேருகிறார்களோ, அதுக்கு ஏற்றார் போல் உங்கள் அக்வண்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்"

"........ம்"

*********

இது போன்று பல மல்டி மார்கெட்டிங் எனப்படும் சங்கிலி(பறிப்பு ?) தொடர் பிசினெஸ் நிறைய பார்த்திருக்கிறேன். பேச்சு திறமை இல்லை என்பதைவிட தெரிந்தவர்களின் மனதை முறிக்கக் கூடாது என்று அதில் மெம்பராக சேர்ந்துவிட்டு 100 - 200 வெள்ளியை ஒரே முறையில் இழந்து அத்துடன் அதை மறந்திருக்கிறேன். அவர்களும் அதன் பிறகு வரமாட்டார்கள். அந்த பணத்திற்கு அவர்கள் கொடுக்கும் பொருள்களையும், மற்ற விவரங்களையும் அதன் பிறகு இடது கையாலும் தீண்டுவதில்லை.

நேற்று மலேசியா சென்ற போது அங்கு இருக்கும் தமிழ் வார இதழ் ஒன்றை வாங்கினேன். அதில் அது போன்ற ஒரு பிசினெஸ் பற்றி எழுதி இருந்தார்கள். விளம்பரம் போன்று எழுதி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதை ஒரு முக்கியதுவம் வாய்ந்த செய்தி கட்டுரை போன்று எழுதி இருந்தனர். சிறுபகுதியை மட்டும் தருகிறேன். அதில் ஒருவர் தனது மருத்துவ தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்ட ஸெங்கோவில் ஈடுபட்டவர், தந்த தகவல்கள்

இதழின் நிருபர் : ஸெங்கோ என்றால் என்ன ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ என்பது மூலிகை திர்த்தம், சகல வியாதிகளையும் தீர்க்க வல்ல புனித தீர்த்தம். இதை எடுத்துக் கொண்ட எனது நோயளிகள் குணமடைந்தார்கள், அதனால் வேலையை விட்டுவிட்டு ஸெங்கோ வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.

நிருபர் : ஸெங்கோ வியாபாரம் எங்கே தொடங்கப்பட்டது ? எதனால் செய்யப்பட்டது ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ தீர்த்தம் மங்குஸ்தான் பழத் தோலில் இருந்து செய்யப்பட்டது, அமெரிக்காவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, மூன்றே ஆண்டுகளில், உலகில் அனைத்து கம்பெணி தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.

நிருபர் : புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவணம் என்கிறீர்கள், இங்கு 1500 பேருக்கும் மேல் கூடி இருக்கிறார்களே ? இவர்கள் பார்வையாளர்களா ?

ஸெங்கோ பார்டி : இவர்கள் பார்வையாளர்கள் அல்ல, விற்பனையாளர்கள், இந்த தீர்த்ததின் மகிமை இவ்வளவு பேரை இந்த விற்பனையில் ஈடுபடுத்தி இருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் இதன் விற்பனை திறனை தெரிந்து கொள்ளலாம்.

நிருபர் : உங்களுடைய மாதவருமானம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ?

ஸெங்கோ பார்டி : இந்த வியாபாரத்தில் வந்த பிறகு மமதம் 20 ஆயிரம் வெள்ளிக்கு மேல். இன்னும் இது உயரும்.

***********

இவர்கள் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது பலர் கோடிஸ்வரன் ஆகிவிடுவது போல் சொல்கிறார்கள். இதில் சிலர் சம்பாதிக்கிறார்கள். பலர் ? ஒரே முறை அழுதுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் பொருள்கள் தரமிக்கவையா ? என்பது மருத்துவர்கள் தான் உறுதிசொல்ல முடியும். இதுபோன்ற மல்டி லெவல் மார்கெட்டிங் ந(ண்)பர்களை சந்திக்கும் போது கவனம் தேவை.

அடுத்து செல்புட் என்ற நிறுவனத்தினத்தை ஒருவர் எனக்கு அறிமுகமான கதை.

சாலைக்கும் ஒரு வாசமுண்டு கண்டதுண்டா ? நிழற்பட போட்டிக்காக !

நிழல்பட போட்டிக்கு இதுவரை எனது கைவண்ணங்கள் (?) எதுவும் அனுப்பியதில்லை. இந்த நிழல் படங்கள் செல்பேசியின் வண்ணத்தில் எடுக்கப்பட்டவைகள். நிழற்படக் கலைகள் எதுவும் தெரியாது, நுணுக்கம் தெரியாது. என்னால் ஆனவை கீழே:
மலேசியா ஜோகூரில் எடுக்கப்பட்டது, படத்தில் சாலையின் முடிவில் தெரியும் படி ஒன்றாக இருக்கும் மூன்று உயர் கட்டிடங்கள் அவை சிங்கையைச் சேர்ந்த குடியிருப்பு கட்டிடங்கள். இந்த சாலையில் இருந்து பார்த்தால் இருநாடுகள் ஒரே நேரத்தில் தெரிகிறது.சாலைக்கு வாசமா ? வெறென்ன புகை கக்கும் ஊர்திகளால் (வாகனங்களால்) இலவசமாக கிடைக்கும் பெட்ரோல் வாசனைதான்.மழை பெய்து கொண்டிருக்கும் போது, மழையில் ஆட்டம் போடுவது பலருக்கும் பிடிக்கும், செல்பேசிக்கும் பிடித்துவிட்டது. மழையில் நனைந்தால் செல்லுக்கு சளிபிடித்துவிடும், அதற்குள் சுடுவேண்டும் என்று சுட்டது இது. சிங்கையில் குடியிருப்புபகுதியில் இருக்கும் நிழற்சாலைகள் (அவன்யூ) இதுபோன்ற சாலைகள்தான். மழைவாசத்துடன் !

இதுவும் மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்பேசி நனையாமல் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு எடுத்தது.


பின்குறிப்பு : புகைப்படம் என்பது தற்காலத்தில் பொருள் பிழை. புகைப்படச் சுருள் தற்காலத்தில் மிக்கவையாக புழக்கத்தில் இல்லை. நிழற்படம் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

15 நவம்பர், 2007

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

//இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர். - நா.கண்ணன்//


நா.கண்ணன் ஐயா அவர்களே,

இந்தி வேண்டும்...... இந்தி வேண்டும் ..... தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும், மீண்டும் இந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், இதுபோன்ற குரல்கள் மென்மையாகவும், கோபமாகவும், 'நல்லெண்ண அடிப்படையிலும்' போன்ற பலவழிகளில் அவ்வப்போது வெளிப்படுகிறது. இதற்கு பலரும் பலவழிகளில் பதில் சொல்லியாயிற்று அப்படியும், இதுபோல் எப்போதாவது ஒன்றை யாராவது விதைத்துவிட்டு செல்வார்கள். இவர்கள் வைத்திருக்கும் இந்தி சார்ந்த நம்பிக்கை அல்லது இவர்களுக்கு நம்ம வைக்கப்படது, என்ன வென்றால்

1. இந்தி இந்தியாவின் தேசிய மொழி
2. இந்தி தெரியாதவன் இந்தியன் அல்ல
3. இந்தி பிடிக்காதவன் தேச துரோகி

நா.கண்ணன் ஐயா இதில், நீங்கள் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தி தேசிய மொழி கிடையாது, இந்தி சில மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு இந்திய மொழி. வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களுக்கு ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும், எனவே அவர்களிடம் உரையாடுவதற்கு ஆங்கிலத்தை விட இந்தி இயல்பானது என்பதை கண்ணன் ஐயா, எப்படி நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் விட வழக்கமாக சிலர் 'இந்தி படிக்கவிடாமல் பெரியாரும், அண்ணாவும் என் தலையில் மண்ணைப் போட்டுவிட்டார்கள்' என்பதை' வேறு மாதிரி 'நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்' சொல்லி இருக்கிறீர்கள்,

நா. கண்ணன் ஐயா அவர்களே, எந்த விதத்தில் பாழாய் போனோம் ? என்று சொல்லி இருந்தால் எம்போன்ற முட்டாள்களும் தெரிந்து கொண்டு உங்களுடன் சேர்ந்து இந்திக்கு கொடி பிடிப்போம். பொத்தாம் பொதுவாக நாங்கள் 'வீணாப் போனாம், காணாப் போனோம்' என்று சொல்வது எளிது, புழுதி வாரி தூற்றுபவர்கள் இதை செய்வார்கள், நீங்கள் அவ்வாறு செய்பவர் இல்லை என்பதால் விளக்கம் அளித்தீர்கள் என்றால் நன்று. எனக்கும் இந்தி தெரியாது, பல வடநாட்டினர்களை சந்தித்திருக்கிறேன், நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுகிறேன், இந்தி படிக்காததால் 'பாழாய் போனதாக நினைத்தது' இல்லை. இப்போது கூட நீங்கள் 'ZEE' டிவி அல்லது எதோ ஒரு இந்தி சானல் தொலைக்காட்சிகளை 3-6 மாதம் பார்த்தீர்கள் என்றால் அப்பறம் அமிதாப்பச்சனுக்கே நீங்கள் இந்தி டூயூசன் எடுக்க முடியும். எனவே அடிப்படை கல்வி வழியாக இலவசமாக கிடைக்க இருந்த இந்தியை படிக்க விடாமால் தடுக்கப்பட்டதால் 'பாழாய் போனோம்' என்பது தவறான வாதமாக படுகிறாது, முமபைக்கு வேலைக்கு செல்லும் பெயிண்டர், கொத்தனார்,
3 மாதத்தில் இந்தி பேச ஆரம்பித்து விடுகிறார்கள், மலாய் என்ற மொழியைப் பற்றி கேள்விப்பட்டிருக்காத தமிழர்கள் மலேசியாவில் வேலைக்குச் சென்றால் 6 மாதம் தான் பேசவும், படிக்கவும். மேலும் அதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இல்லாது கற்றுகொள்வர்.

தேவையின் காரணமாக எவர் வேண்டுமானாலும் எந்த மொழியையும் படிக்க முடியும், அல்லது விரும்புவர்கள் முன்கூட்டியே படித்துவிட முடியும். அதற்கு தடையில்லை, ஆனால் உங்கள் கருத்து 'இந்தி படிப்பது என்பது பொதுத் தேவை, தேவை மிக்கது, தவிர்த்தால் எங்களைப் போன்று சிரமப்படுவீர்கள்' என்பது போல் ஒலிக்கிறது. என்றோ ஒரு நாள் ஒரு இந்தி காரனை சந்தித்து 'ஆப்கா நாம் ஹை?' என்று கேட்பதற்கு இந்தி தெரியவில்லை என்றால் சிரமப்படுவீர்கள் என்று சொல்வது மிகைப்படுத்தல்.

வெளிநாட்டை விடுங்கள், இந்தியாவில் மும்பையில் வழக்கறிஞர் பிரபு இராஜதுரை அவர்கள் 6 ஆண்டுகள் இருந்தாராம், ஹிந்தி தெரியததால் இயல்பு வாழ்க்கை பாழாகி விடவில்லை என்று சொன்னார். காமராஜருக்கு இந்தி தெரியவில்லை. ஆனாலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரெல்லாம் பாதிக்கப்படாத போது நீங்கள் 'பாழாய் போனது எப்படி ?' என்று சொன்னால் பலரும் திருந்த வாய்ப்பு உள்ளது

சிங்கைக்கு வேலைக்கு வரும் உடல் உழைப்பு ஊழியர் எவருக்கும் இந்தி தெரியாது, அவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவர்கள் இந்தி அறிந்து வந்து என்ன செய்யப் போகிறார்கள் ? எனக்கு தெரிந்து மற்ற மொழிக்காரர்களை விட தமிழர்களே வெளிநாட்டில் அதிகம் வசிக்கின்றனர், எனவே வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் தமிழ் படிப்பது அவசியம் என்று ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி வடமாநிலத்தில் அதை ஒரு கருத்தாக உங்களால் விதைக்க முடியுமா ?

தமிழ்நாட்டில் இந்தி நுழைந்திருந்தால் நடக்கும் நன்மைகள்,

இந்தி தெரிந்தே பாம்பே மிட்டாய் விற்கிறவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், 'நிக்கிறான், 'உட்கார்ரான்' என்று தட்டு தடுமாறி தமிழ் பேசுகிற சவுக்கார் பேட்டை சேட்டுகளுக்கும் இருக்கிறார்கள் அவர்கள் தமிழ்பேசி சிரமப் பட வேண்டி இருக்காது,

சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி புழகாங்கிதம் அடைய வேண்டி இருக்காது.

தமிழ் திரைப்படமோ, தமிழ் தொலைகாட்சிகளோ இந்த அளவுக்கு வளர்ந்து தொல்லைக் கொடுக்காத அளவுக்கு அவற்றை இந்தி தாம் கட்டுக்குள் வைத்திருக்கும்.

***************

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு, அதனால் தான் இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாக பிரித்திருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தால் இந்தி சுதந்திர போராட்ட காலத்திற்கு முன்பே பல மாநிலங்களில் பரவியது, இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்னரே, 'இந்தி' என்ற ஒரு மொழி உருது,இந்துஸ்தானி,மற்றும் சமஸ்கிரதம் ஆகியவற்றின் கலவையால் பிற்காலத்தில் எற்பட்ட கலவை மொழி, எழுத்து வடிவமாக சமஸ்கிரத கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளது, பாபர் காலத்துக்கு முன்பு 'இந்தி என்ற ஒரு மொழி இருந்தது இல்லை. பாகிஸ்தானில் பேசும் உருதும், இந்தியும் ஒன்று தெரிந்தவர்கள் மற்றதை பேசும் போது புரிந்து கொள்வார்கள். உருதின் எழுத்து வடிவம் அரபு எழுத்துக்கள், இந்தி 'தேசியவாதிகளின்' மொழி ஆதலால் சமஸ்கிரத எழுத்தை கொண்டிருக்கிறது. சிலர் சமஸ்கிரதத்தை இந்தியை வாழவைத்தால் மீட்டுவிடலாம் என்று நம்பிக் கொண்டுள்ளனர். :) அது தவறான நம்பிக்கை. பேசுவதும் வழக்கில் இல்லாததாலும், புதிய ஆக்கங்கள் எதுவும் ஏற்படாததால் சமஸ்கிரத எழுத்தை மட்டுமே காக்க முடியும், மொழியை அல்ல.


தொடர்புடைய மற்ற எனது கட்டுரைகள் :

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !
இந்தி யா ?

14 நவம்பர், 2007

பெருகிவரும் மணமுறிவுகள் குறித்து...2

மணமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது, குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான். என்று முடித்திருந்தேன்.

அதாவது இன்றைய இந்திய தமிழக சூழலில் திருமணமான ஆண் மணவிலக்கு பெற்று இருக்கிறார் என்று தெரிந்தால், அவரைப் பற்றி கேள்விபடுபவர்களின் ஊகம் பெரும்பாலும் அந்த ஆண்,

1. ஒழுக்கமற்றவனாக இருக்கலாம்
2. ஆண்மையற்றவனாக இருக்கலாம்

என்பது போல் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்ற அச்சமும், அதைத் தவிர்த்து ஒரு குடும்பத்தை வடிவமைத்து, அனுசரித்து நடத்துவதற்கு தகுதியற்றவன், ஒரு பெண்ணை நான்கு அறை விட்டு தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் நினைப்பார்கள். எவ்வளவு தான் தன்னளவில் தப்பே செய்யாதவனாக இருந்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தவர்கள் மேற்கூறிய சில சமுதாய பார்வை காரணமாக தேவையற்ற குற்ற உணர்ச்சியில் வதைபடுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். தன்னுடன் இல்லறம் நடத்திய பெண் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கும் போது நிராகரிப்பின் வலி என்பது அவனை மன அளவில் முறித்து போட்டுவிடும். குடும்ப நல வழக்காக வரதட்சனை கொடுமை தவிர்த்து நீதிமன்றம் செல்லும் மண முறிவு விண்ணப்ப வழக்குகள் விழுக்காட்டு அளவில் மிக்கவையாக பெண்களாலேயே முன்மொழியப்படுகிறது என்று நினைக்கிறேன்.

முன்பெல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் பிணக்குகள் வரும் போது மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்குத் தான் செல்வாள், அதன் பிறகு இதற்கு மேல் தாய்வீட்டில் இருந்தால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடுத்தனம் நடத்த ஆரம்பித்துவிடுவார் என்று அச்சப்பட்டு திரும்பி வந்துவிடுவாள். அல்லது ஒரு மூன்று மாதம் முதல் அதிகமாக ஆறுமாதம் அங்கு இருப்பாள். அதற்கு மேல் அங்கே வைத்துக் கொள்ள முடியாது, 'வாழாவெட்டி' என்று சொல்வார்கள் என அவளே நினைக்க ஆரம்பித்து அல்லது தாய்வீட்டு சொந்தங்கள் இருப்பக்கமும் பேசி சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைப்பர். தற்பொழுது கோபித்துக் கொள்ளும் பெண்கள் நேராக கோர்டுக்குத்தான் போகிறார்கள். இதற்கு பெற்றோர் தூண்டுதலும் முதன்மை காரணம். நான் எல்லா பெண்களும் அவ்வாறு செய்கிறார்கள் குறிப்பிடவில்லை. அதே சமயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவில்லை. கோபத்தை தற்காலிகமாக தவிர்க்க முடியாமல் ஆதரவுக்கு தாய்வீட்டுக்கு செல்லும் / கொண்டுவிடப்படும் பெண்களை அசடுகள், அறிவிலிகள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு திருமணம் ஆன பெண்கள் அடிமைகளாக இருந்தாலும் இல்லறம் என்ற கட்டமைப்பு உடைவதற்கு அவர்கள் காரணமாக இருந்ததில்லை.

சமூகம் என்ற கட்டமைப்பு தோன்றிய காலம் முதல் அதையும், குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் ஆண். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தாத்தாக்களுக்கு குடும்ப பொறுப்பு என்றால் பணம் ஈட்டுவது மட்டுமே, ஒன்றுக்குமேற்பட்ட மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர், பலமனைவிகள் என்பது அதன் பிறகு அப்பாக்கள் காலத்தில், சில அப்பாக்களுக்கு சின்ன வீடு என்று சுறுங்கியது, அம்மாக்கள் கதவுக்கு பின்னின்று சத்தம் வெளிவராமல் தலையை மட்டும் வெளியே நீட்டி பயந்தே இல்லறம் நடத்தினர், பெருவாரியான குடும்பங்களில் இல்லற பொறுப்பு அனைத்தையும் பெண்களே சுமந்துவந்தனர். ஆண்கள் சுகவாசியாகவே இருந்தனர். ஆண்களுக்கு திருமணம் தவிர்த்து எந்த சடங்குகளும் இருந்ததில்லை. ஆனால் பெண்களுக்கு வயது வந்ததற்கு விழா, வளைகாப்பு, பட்டாடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை எல்லா விழாக்காலங்களிலும் தந்து பெண்களை போற்றவும் செய்தனர். அதுவும் ஒரு பெண் தாயாகிவிட்டால், அவள் பெரிய அளவில் போற்றப்பட்டிருக்கிறாள், தாய்மைக்கு நம்நாட்டில் கொடுக்கும் மதிப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை.

ஆனால் படிப்பு விசயத்தில்,
எனது அம்மா சிறுவயதில் பள்ளிக்கு படிக்க சென்ற போது தாத்தாவினால் தடுக்கப்பட்டு, 'எப்படியும் சட்டிப்பானைதான் கழுவப் போறே, படித்து என்ன ஆகப்போகிறது ?' என்ற கேள்வியுடன் அடி உதையுட்டன் 3ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டாராம். அன்றைய சமுதாய கட்டமைப்பில் பெண்கள் வீட்டின் பொறுப்புகளை சுமப்பவர்கள் அதை ஒழுங்காக செய்யும் படி சமையல் வேலை, குழந்தை வளர்ப்பு போன்றவை தெரிந்தால் போதும் என்ற மனநிலைதான் இருந்தது.

பெண்களுக்கு சம உரிமை, பெண் கல்வி பெற வேண்டும் என்ற சிந்தனையில் பெண்கள் படித்து வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் சமூகத்தைப் பொறுத்து நல்ல முன்னேற்றம். அதனால் முன்பு போல் பெண்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை என்று எதுவுமில்லை. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் போது விலாகதும் இருக்கும், இது இல்லற அமைப்புக்கும் பொருந்தும்.

பிணக்கு என்று வரும் போது, இன்னும் பழைய நினைப்பில் 'படித்து வேலைக்கு சென்று விட்டாலும், நீ பொம்பள தானே ?' என்று ஆண்கள் கேட்கும் போது பெண்கள், 'தாம் எந்த விதத்தில் உனக்கு குறைந்துவிட்டேன் ?' என்று கேட்க ஆரம்பித்து, இருவரும் ஒரு முடிவை எட்டுகிறார்கள். இவை தனிப்பட்ட இருவரது ஈகோவினால் வருவது. இதைத் தவிர்த்து கோர்ட் பாடியேறும் மணமுறிவு வழக்குகள் இருப்பக்க சொந்தங்களின் தூண்டுதலால் தான் மிக்கவையாக நிகழ்கின்றன.

ஒழுக்கக் கேடுகளுக்காக இருபக்கமும் நாடும் மண முறிவு குறித்து எனக்கு கருத்து எதுவுமில்லை. அவை சமுகத்தின் தேவையும் கூட. நான் பகிர்ந்து கொள்ள நினைப்பது குடும்ப சூழல் மற்றும் உளவியல் அடிப்படையிலான மண முறிவுகள் குறித்ததே.

அபத்த முடிவாக பார்க்கப்படும் மண முறிவுகள், உண்மையில் அபத்தமா ? இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் இந்த முடிவைப்பற்றி பெரிதும் கவலைப்படுகிறார்கள். அது குறித்தும் பார்த்தோமானால் இன்னும் தெளிவான கருத்து பரிமாற்றம் நிகழும், அடுத்த பகுதியில் பார்கலாம்.

13 நவம்பர், 2007

பெருகிவரும் மனமுறிவுகள் குறித்து...

இன்று காலை சிங்கை வானொலி கேட்டபோது மணமுறிவு (விவாகரத்து) பற்றிய கருத்துக்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன ஆயிரம் தம்பதிகளில் 3 மூவர் என்ற அளவில் மனமுறிவு பெற்றுக் கொண்டது தற்பொழுது 7 என உயர்ந்திருக்கிறதாம். மேலை நாடுகளை ஒப்பு நோக்க ஆசியாவில் இந்த வளர்ச்சி குறைவுதான்.

முன்பு போல் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துவதில்லை. இருவரும் இல்ல பொறுப்புகளில் சமபங்கெடுத்தே எல்லாவற்றையும் செய்கிறார்கள். இருந்தும் ஏன் என்று பார்க்கையில் பலர் பலவிதமாக கருத்து சொல்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் தலையீடு செய்வதை யாரும் விரும்புவதில்லையாம்.

விட்டுக் கொடுத்தல் என்பது குறைந்து போய்விட்டதாம்.

சிங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர், தமிழர் ஆகியோர் காதல் திருமணங்களைத்தான் மிக்கவையாக செய்து கொள்கின்றனர். கண்டதும் காதல் என்றாலும் மூன்றாண்டுகளுக்கு மேலாக காதலித்து, அதன் பிறகும் தள்ளிப் போடக் கூடாது என்று நினைத்தோ அல்லது எதோ ஒரு நெருக்கடியில் திருமணத்திற்கு செல்கிறார்கள்.

எனக்கு திருமணம் ஆகும் முன்பு ஒரு வீட்டில் குடியிருந்தேன். சிங்கையில் வீட்டுக்குள் ஒரு அறை அல்லது இரு அறைகளை வாடகைக்கு விடுவது நடப்பில் உள்ளவை. அதன் மூலம் கணிசமான வருமானம் வருகிறது எனவே ப்ரைவசி காராணங்களை விட பல தேவைகளுக்கு பணம் தேவை என்பது பெரிதாக நினைக்கப்படுகிறது, மேலும் வீடு வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பகுதி வீட்டை வாடகைக்கு விடுவார்கள். அது போல் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளராக ஒரு தம்பதி இருந்தனர். மாஸ்டர் பெட் ரூம் எனப்படும் பெரிய படுக்கை அறையில் அவர்கள் இருந்து கொண்டு, மற்ற இரு அறைகளை பேச்சிலராக இருந்தவர்களுக்கு விட்டார்கள். அறைக்கு இருவர் வீதம் நான்கு பேர் வாடகைக்கு இருந்தோம். மூன்று மாதம் சென்று தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்ற செய்தி, அவர்களாகவே 'எங்கள் இருவருக்கும் அடுத்தவராம் திருமணம்' என்று சொன்னபோது அதிர்ச்சியுடன் தெரிந்து கொண்டேன். திருமணம் முடிந்தது பழையபடி அதே அறையில் தான் வசித்தார்கள்.

இதுபோல் பெரும்பாலன காதல் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வசிப்பது வழக்கம், அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களில் எத்தனைபேர் மனமுறிவுக்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. குறைவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இருவருடைய வாழ்கையிலும் திருமணத்திற்கு முன் / பின் என்ற எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. இருவரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள். இவர்களுடைய திருமணத்திற்கு முன்பே அந்த வீட்டிற்கு அவர்களுடைய அவர்களுடைய பெற்றோர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள்.

ஒருவரை ஏமாற்றுதல் என்ற எண்ணத்தில் இல்லாது இருப்பதை புரிந்து கொண்டுள்ளதால் அடுத்த கட்டமாக சேர்ந்து வசிப்பதற்கு முடிவு செய்து கொள்வார்கள் என நினைக்கிறேன். நம் இந்திய சூழலில் இதுபோன்ற குடும்ப அமைப்பு ஏற்படுவத்ற்கு இன்னும் பல காலம் பிடிக்கும், இன்னும் காதல் திருமணங்களை கவுரவ இடறாக நினைக்கும் பெற்றோர்கள் தான் மிக்கவர்களாக உள்ளனர்.

காதலர்களாக இருந்தாலும் சேர்ந்து வாழும் முடிவு முறையாக திருமணத்திற்கு பிறகு என்று முடிவெடுத்து திருமணம் செய்பவர்கள் நிலையோ மாறுபட்டு இருக்கிறது. நெருங்கி வாழும் போதுதான் ஒருவருக்கொருவரின் உண்மையான முகம் என்னவென்று அறிந்து ஏற்றுக் கொள்ளாத நிலையில் பிரிகிறார்கள்.

மனமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான்

தொடரும்....

12 நவம்பர், 2007

சத்தியமூர்த்தி பவனில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா ?

கோஷ்டி தகராறுக்கு பெயர் பெற்ற சத்திய மூர்த்தி பவனில் வெட்டு குத்தாம். இப்பொழுதுதான் வெளியாட்களால் குத்தப்பட்டு தலைவர் கிருஷ்ணசாமி அப்பல்லோவில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜருக்கு பின் ஆட்சியிலும் இல்லை, பின்பு ஏன் இவர்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸில் இருக்கும் கோஸ்டிகள், வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, திண்டிவனம் இராம மூர்த்தியின் மேல் அனுதாப கோஷ்ட், குமரி அனந்தன் கோஷ்டி, முன்னால் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடியின் அனுதாப கோஷ்டி, ஜெயந்தி நடராஜன் கோஷ்டி, பீட்டர் அல்போன்ஸ் கோஷ்டி, கட்சியில் முதன்மை பொறுப்பு வகிப்பர்கள் ஓவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு கோஷ்டிகளை வைத்திருக்கிறார்கள். எனக்கென்னமோ மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகள் செல்(வ)வாக்கு மிக்கவையாக இருப்பதால் இது போல் நடப்பதாக தெரிகிறது.

இனி செய்தி,

இளைஞர் காங். தலைவர் மீது தாக்குதல்: வாசன் கண்டனம்


சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை மயூரா ஜெயக்குமாரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோஷ்டி மோதல் காரணமாகவே ஜெயக்குமார் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.

ஜெயக்குமார் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் வாசன் உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.

இந்த தாக்குதலின் பின்னணியில் கட்சியின் ஒரு பிரிவினரே காரணம் என்று தெரிய வந்துள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது வன்மையாக கண்டித்தக்கத்தக்கதாகும்.

இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சத்தியமூர்த்தி பவனில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. இது மிகவும் அநாகரீகமானது, கோழைத்தனமானது.

போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

நன்றி :
தட்ஸ் தமிழ்

11 நவம்பர், 2007

'இதற்காவது' இராம சேது காப்பாற்றப்பட வேண்டும் !

இலங்கை அரசன் இராவணன், ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் வீணை மீட்டுவதில் வல்லவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவனுடய சிவபக்தியின் பயனாக சிவபெருமான் அவனுக்கு ஆத்மலிங்கத்தை அளித்து, இதனை இடையில் எங்கு வைத்தாலும் அதன் பிறகு அதை அசைக்க முடியாது நிலைபெற்றுவிடும் என்று கூறினாராம். அதனை இலங்கைக்கு கொண்டு சென்று நிறுவ நினைத்தான் இராவணன். அந்த சிவலிங்கம் இலங்கையில் நிறுவப்பட்டால் அதன் பிறகு எவரும் அவனை எளிதில் வெல்ல முடியாதாம். இதனை கேள்வியுற்ற தேவர்களுக்கு கிலி பிடித்ததாம். உடனே ரகசிய சதித்திட்டம் தீட்டி, அதன் படி இந்திரனின் மறு உருவான வருணனிடம் முறையிட்டனர். வருணனும் 'இதுதான பிரச்சனையா? ப்பூ ஊதிவிடலாம்... ஆத்ம லிங்கம் இலங்கைக்கு செல்லவிடாமல் தடுப்பது என் பொறுப்பு' என்றான்.

அதன்படி (எப்படி என்று கேட்காதீர்கள், அதற்கு ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமென்றால்) தந்திரமாக எப்படியோ இராவணனின் வயிற்றில் ஏழுகடல் நீரை புகத்திவிட்டான். கடல் இருந்த இடம் பெரும் தூர்வாராத பெரிய குளமாக நீரின்றி ஆகி இருக்கும் ? சாதாரணமாகவே இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே நமக்கு இயற்கை உபாதை இருக்கையில் அமரமுடியாது இருகைகளும் இருக மூடிக் கொள்ளும், ஏழு கடல் நீர் இராவணின் வயிற்றுக்குள் புகுந்ததும், சிறுநீரை அடக்க முடியாமல் விழிக்க ஆரம்பித்தான். தலையில் ஆத்மலிங்கம் வேறு இருக்கிறது, இறக்கி வைத்தால் அங்கேயே தங்கிவிடும் என்பதால் கையை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான்.

இராவணன் அந்த சிறுவனை அனுகி, சிறுநீர் கழிக்க சென்று வருவதாகவும், ஆத்ம லிங்கத்தை சிறிது நேரம் தலையில் வைத்திருக்கச் சொல்லி வேண்டினான். சிறுவனும் சரியென்று சொல்லி ஒரு நிபந்தனை விதித்தான், தான் மூன்று முறை அழைக்கும் முன்பு வராவிட்டால் ஆத்ம லிங்கத்தை இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவதாக சொன்னான். அடிவயிற்றில் அவஸ்தை அதிகமாக அதிகமாக இராவணனும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு சிறுவனின் தலையில் லிங்கத்தை வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டான்.

சிறுவன் முதல் முறை அழைத்தான், ஏழுகடல் நீராயிற்றே இறங்க வேண்டாமா ? இரண்டாவது முறை அழைத்தும் இராவணனின் வயிற்றில் இருந்த கடல் நீர் தீர்ந்தபாடில்லை. சிறுநீர் தாரையாக கடல் மெல்ல உருப்பெற்றுக் கொண்டு மீண்டுக் கொண்டிருந்தது. சொன்னபடி சிறுவன் மூன்றாவது முறை அழைத்துப் பார்த்துவிட்டு அந்த லிங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான். சிறுநீர் எல்லாம் இறங்கி, கடல்கள் பழையபடி ஆர்பரிக்க ஆரம்பித்ததும் 'உஸ்ஸ்...அப்பாடா' என்று பெருமூச்சி விட்டுவிட்டு இராவணன் திரும்பி வந்து பார்த்த போது சிறுவனை அங்கு காணவில்லை. பெரும் அதிர்ச்சி அடைந்தான். சிவலிங்கம் அங்கேயே பதிந்துவிட்டது (ப்ரதிஷ்டம்) தெரிந்தது, இருபுறமும் கைகளால் பிடித்து தூக்கிப் பார்த்தான் அசைக்க முடியவில்லை. சிவபெருமான் 'வழியில் எங்கும் வைத்தால் அங்கேயே பதிந்துவிடும்' என்று சொன்னது பலித்துவிட்டது என்று முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

சிறுவனாக வந்தது வேறு யாரும் அல்ல, சிறுவயதிலேயே அதாவது பிஞ்சிலேயே 'பழுத்த மாம்பழத்தை' தந்திரமாக பெற்றுக் கொண்ட விநாயக பெருமானே சிறுவனாக வந்து சிவலிங்கம் இலங்கை செல்லாமல் தடுத்து தேவர்களுக்கு உதவி இருக்கிறார். இராவணன் அந்த லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயன்றதன் அடையாளமாக பசுவின் காது போன்ற அமைப்பு சிவலிங்கத்தின் இருபுறமும் அடையாளமாக இருக்கிறது. 'கோ' என்றால் பசு, 'கர்ணம்' என்றால் காது, சிவலிங்கம் பசுவின் காதுடன் காட்சியளிக்கும் சிவ திருத்தலமே திருக்கோகர்ணம் என்று பெயர் பெற்றது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஒரே துளுவ நாட்டு திருத்தலம் கோகர்ணமாகும், இங்கு சிவன் மகாபலேசுவரர் என்ற பெயரிலும் பார்வதி கோகர்ண நாயகியாகவும் அழைக்கப் படுகின்றனர். ஹூப்ளியில் இருந்து நூறு கல் தொலைவில் இருக்கிறது கோகர்ணம் என்ற புராண புகழ்பெற்ற இந்த தலம்.

தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
இராமன் பாலம் அமைக்கும் முன்பே, கடல் நீர் இராவணனின் சிறுநீர் என்று அறிந்தே நிரந்தர பாலமாக அமைக்காமல் மிதக்கும் தற்காலிக பாலம் அமைத்தான். போர் முடிந்து இராவணனை அழித்ததும், பாலம் இனி தேவை இல்லை என்று மூழ்க செய்துவிட்டான். அப்படியும் அழிந்துவிடாமல் இராமன் கைப்பட்டதால் என்னவோ, இன்னும் அழியாமல் இருக்கும் அந்த புனித பாலத்தை நாச உதவியுடன் நாம் அறிந்து கொண்டுள்ளோம். (ச)மூத்திரத்தில் மூழ்கி இருக்கும் ராம சேதுவை மீட்டு, பாம்பன் பாலம் போல் தூக்கி நிறுத்திவிட்டால், டி ஆர் பாலு இடையூறு செய்யாமல் இராம சேதுவுக்கு அடியில் கப்பல்களை விட்டுக் கொள்வார். இராம பக்தர்கள், கரசேவர்கள் அனைவருக்கும் சமுத்திரத்தின் தூய்மை இன்மையை, அதாவது அது இராவணனின் பெருக்கடுத்த சிறுநீர் என்று தெரிந்து கொள்ள திருகோகர்ணம் கோவிலின் புனித கதையை கூறி புரியவைத்து, அவர்களின் தெய்விக தொண்டுள்ளத்தை பயன்படுத்திக் கொண்டு இராம சேதுவை மீட்க வேண்டும்.
இன்றைய இலங்கை பரப்பளவு என்பது ஏழுகடல் நீரை வயிற்றில் வைத்திருந்த இராவணனில் கால் சிறுவிரல் அளவுக்கு சுறுங்கிப் போய் இருக்கிறது, அதனால் மீட்டு எடுக்க வேண்டிய இராமர் சேதுவின் அளவும் சிறியதே.

மேலும் திருகோகர்ணம் தலபுராணத்தை படித்தவுடன் தான், 'கடல் நீர் எப்படி உப்பானது?' என்ற உவர்பான உண்மை தெரியவந்ததும், அது ஆன்மிக உண்மையாக இருப்பதால், பொய்சொல்லவில்லை அதைப்படித்தவுடன் மொய் சிலிர்த்தேன், இராவணன் சிவபக்தன் என்றாலும், கெட்டவன் தான் இருந்தாலும் உணவுக்கு உப்பிட்ட இராவணனை நிந்திப்பதை உடனடியாக நிறுத்து அவனை போற்ற வேண்டும் பக்தர்கள் இராவணனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறபிக்க வேண்டும்.

கோகர்ணம் கதை உண்மையா ? இராமாயண கதைபோல், கோகர்ணம் பற்றிய கதை இருப்பதும் உண்மை.

8 நவம்பர், 2007

அழகிய தமிழ்மகன் விமர்சனம் !

வழக்கமான ரீமேக் கதைகளில் வருவது போல் ஒரு துடிப்பான இளைஞன் நான்கு வில்லன்கள் என்ற கதைகளில் இருந்து விஜய் வெளியே வரமுயன்றிருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளில் நான்காக, பத்தாக வருவது பத்தாது என்று இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு கரு, உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP சக்தி இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.

ஓட்டப்பந்தைய வீரராக இருக்கும் விஜய், ஷகிலா வீட்டில் வாடகைக்கு சந்தானம், சத்தியன் ஆகியோர்களுடன் குரு என்ற பெயருடன் இருக்கிறார். அறிமுகக் காட்சியே சண்டை காட்சியாக தொடங்குகிறது. சிரேயாவின் தோழியின் அண்ணன் கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் அவரின் இறுதி முயற்சி என்று அறிந்து விஜய் அவருக்காக விட்டுக் கொடுத்துவிடுகிறார். இதை தெரிந்த பணக்காரரான ஆசிஸ் வித்தியார்த்தி மகளான சிரேயா அவரை காதலிக்க தொடங்குகிறார். தனது காதலை அழகாக கடிதத்தில், குரு என்ற பெயரில் உள்ளவை எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று ஒரு பட்டியலில் பிடித்த ரஜினி படம் குரு சிஷ்யன், பிடித்த பறவை 'குரு'வி இது போல் பலவற்றை எழுதி கொடுக்க அதைப் படித்து பார்த்து விஜய் சிரேயா மேல் காதல் கொள்கிறார். இதை இரு பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்க செய்த உத்திகள் கலகலப்பானவை.

ESP சக்தியின் மூலம் சிரேயாவிற்கு உயிருக்கு இவரால் ஆபத்து என்று தெரிய வந்த போது, அதைத் தவிர்பதற்காக சிரேயாவிடம் சொல்லிக் கொள்ளாமல் மும்பைக்குச் செல்கிறார். அங்கு தான் மற்றொரு விஜயை (பிரகாஷ்) பார்க்கிறார். அவர் சென்டரல் பேங்கில் மேனஜராக இருந்து கொண்டே என்ஆர்ஐ பணத்தை வெளியில் விட்டு சம்பாதிக்கும் பணத்தாசை பிடித்தவராக காட்டுகிறார்கள். அவர் நகைக் கடை அதிபர் சாயாஜி சின்டேவிடம் முன்பு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க ரயிலில் சென்னை வருகிறார். சென்னை செல்லும் இரயில் பயணத்தில் சந்திக்கும் நமீதாவிடம் கசமுசா நடந்துவிடுகிறது. எல்லாம் முடிந்ததும் எஸ்கேப் ஆகிறார். ஒரிஜினல் விஜய்க்கு விபத்து ஏற்படவே அவர் மும்பையில் இருக்க, சென்னை வந்த மற்றொரு விஜயை ஒரிஜினல் என்று நினைத்து சிரேயா தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பணத்தாசை பிடித்தவரான இந்த விஜய் சாதமாக பயன்படுத்திக் கொண்டு சிரேயாவை திருமணம் செய்யும் அளவுக்கு செல்கிறார். இதை அறிந்து ஒரிஜினல் விஜய் சென்னை திரும்புகிறார்.

தன் சத்தியின் மூலம் அறிந்தது போல் சிரேயாவுக்கு அவராலேயே ஆபத்து ஏற்படுகிறதா ? மற்றொரு விஜயை எப்படி வெல்கிறார். ஒரிஜினல் விஜயும் சிரேயாவும் சேர்ந்தார்களா ? வெள்ளித்திரையில் காண்க. பிரகாஷ் என்ற பெயரில் வரும் விஜய் ஒவ்வொரு முறையும் குருவாக நடிக்கும் போது வரும் சோதனைகளை சமாளித்து 'எவ்வளவோ செய்துட்டோம், இதையும் செய்துட மாட்டோமா ?' என்று வசனம் பேசுகிறார்.

இந்த படத்தில் குருவாக வரும் விஜய் தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. குரு அறிந்திருப்பதையெல்லாம் பிரகாஷ் அறிந்திருந்து அவரைப் போல் நடித்து சமாளிக்க அவர் குருவின் டைரியை படித்து தெரிந்து கொள்வதாக காட்டுகிறார்கள். கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் சிரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. கதைப்படி அப்படியும் இல்லை. இடைவேளைக்கு முன்பு வரை விறுவிறுப்பாக இருந்தது, சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டையில். சண்டை பயிற்சி பெப்சி விஜயன். பெரிய பட்ஜெட் படம் என்பதால், கையை கடித்து நமிதா நடிக்கும் பாடல் காட்சிகளில் துண்டு விழுந்திருக்கிறது. சிவாஜியை விட இதில் சிரேயா பாடல் காட்சிகளில் ரொம்பவே இறங்கி அசத்தி இருக்கிறார்.

இயக்குனர் பரதன் என்று டைட்டிலில் இருந்தது இவர் சூரியன் படம் எடுத்த பழைய பரதானா என்று தெரியவில்லை. நகைச்சுவை காட்சியில் கோவில் குருக்களை (ஐயரை) பார்த்து, சாமி..... நாத்திகம் பேசுகிறவர்களை நாத்திகவாதி என்கிறேம். அரசியல் பேசுகிறவர்களை அரசியல்வாதி என்கிறோம், கோவிலில் மந்திரம் சொல்கிறவர்களை ஏன் மந்திரவாதி என்று சொல்வதில்லை ?' என்று நக்கல் வசனம் வருகிறது, அதைக் கேட்ட ஐயர் அடிக்க வருகிறார். அனேகமாக பரதன் சேது இயக்குனர் பாலாவின் சிஷ்யராக இருப்பார் போல. படத்தில் எனக்கு பிடிக்காத காட்சி, விஜய் முன்கூட்டியே அறிந்து கொண்டபடி 'ஒரு 10 வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும், அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான். அந்த குழந்தையின் அம்மா இந்த காட்சிக்கு எடுப்பதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.

ஏஆர்ரகுமான் முதன் முறையாக விஜய் படத்துக்கு இசை. சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை, மோசம் என்றும் சொல்ல முடியாது. குத்துப்பாட்டு வகையில் 3 பாடல்கள், ஒரு ரீமிக்ஸ் பாடல் பின்னனி இசை நன்றாக இருக்கிறது.

மன்மத ராசாவாக தனுசும், மன்மதனாக சிம்புவும் பெயர் பெற்றுவிட்டார்கள் என்ற ஆசை அடிப்படையில் 'மன்மதன்' என்பதை தமிழ் படுத்தி படத்திற்கான தலைப்பாக 'அழகிய தமிழ்மகன்' என்று வைத்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

இந்த படத்தை உலகெங்கும் வெளி இட்டு இருக்கும் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தினருக்கு நன்கு தெரிந்தே வாங்கி இருக்கிறார்கள் அதாவது ' விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?'
விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் நிச்சயம் ஓடும்.

இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோள் !

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெறும் இனமோதல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அங்கு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ் விடுதலை அமைப்பினருக்கு இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருக்கின்றனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்த திமுகவில் கலைஞரும், வைகோவும், பழ.நெடுமாறன் மற்றும் விடுதலை ஆசிரியர் வீரமணி ஆகியோர் வெறும் பெயரளவில் ஆதரவு கொடுக்காமல் உணர்வு பூர்வமாக இலங்கை தமிழ் போராட்டத்திற்கும், தமிழ் போராளிகளுக்கும் ஆதரவாக மேடையெங்கும் முழங்கி இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எல்லோரும் ஒரே தமிழர்கள் தான் என்ற உணர்வை ஏற்படுத்தி தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்படுத்தினர்.

இதெல்லாம் இராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்புதான். அந்த சம்பவம் தமிழக தமிழர்களுக்கு இந்திய அளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்த அக்கரையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது எல்லாம் ஏற்கனவே பலருக்கும் தெரிந்தவை தான். அந்த நிகழ்வுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களின் அக்கறைக்கு பத்திரிக்கைக்கள் மூலம் மூக்கு சிந்துவது சோ, இந்துராம், சு.சாமி மற்றும் ஜெ போன்றவர்களும் அவர்கள் தான் இந்திய மண்ணை உய்விக்க வந்த உத்தமர்கள் என்று சொல்லிக் கொண்டு முதுகு சொறிந்து கொள்பவர்களும் தான். மற்றவர்களெல்லாம் ஊமையாகி பேச மறுத்தனர்.

ஆம்...இவர்கள் இலங்கை தமிழர்களுக்காக நாளொரு
பொழுதாக கண்ணீர் விட்டு விட்டு இந்துமகா சமுத்திரத்தின் நீர் மட்டம் 30 அடி உயர்ந்திருக்கிறது. இவர்களைப் போல் கருணாநிதியோ,வீரமணியோ,வைகோவோ, ஏன் இராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் மரணதண்டனைக் குறித்து கருத்து சொன்ன அன்னை சோனியாவோ இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கரைக் கொள்ளவில்லை.

********
இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியாவிலும் தமிழகத்திலும் பாராமுகம் காட்டப்பட்டபிறகு, இலங்கைத்தமிழர்கள் தங்களுக்கு தாங்களே தான் உதவி செய்து கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு போராட அங்குள்ள விடுதலை அமைப்பை தவிர வேறு எந்த அமைப்பும் இல்லை. இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஜெயலலிதாவுகோ மேலே கூறப்பட்ட சோ வகையறாவினருக்கோ, இந்தியாவைச் சேர்ந்த இராமேஸ்வர தமிழர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை இராணுவத்தால் சுடப்படும் சம்பவங்களைக் கூட கண்டித்தால் இலங்கை - இந்திய உறவு பாலத்தில் விரிசல் விழுந்துவிடுமோ என்று தேசிய நலனில் அக்கரை கொண்டு இந்திய தேசியத்தின் சகோதரத்தன்மையை கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தனர்.

இராமேஸ்வர மீனவர்கள் சுடப்படும் போதெல்லாம் இலங்கை அரசை எதிர்த்து கண்டனம் தெரிவிப்பது அதனுடன் நட்பாக இருக்கும் இந்தியாவிற்கு செய்யும் தேசதுரோகம் என்பது கூட தெரியாமல் கருணாநிதியும், நெடுமாறனும், வைகோவும் வரட்டு தவளைபோல் கத்தி வந்தனர். இதுமட்டுமா ? இலங்கை தமிழர்களை இலங்கை அரசு கொன்று கொக்கரித்த போதெல்லாம் நட்பு நாடான இலங்கைக்கு எதிராக கோஷமிட்டு அரசியல் சாசன சட்டப்படி பதிவியேற்ற கருணாநிதி தெரிந்தே தேச துரோகம் செய்தார். இப்பொழுது உச்சகட்டமாக என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள் என்று இந்திய அரசுக்கு மறைமுகமாக சவால் விடும் நோக்கில் அரசு சார்பில் தமிழ் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

**************

வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனை இந்தியா கைவிட்ட பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் போராடம் தவிர்த்துப் பார்த்தால், இலங்கையில் இலங்கை தமிழர்களின் விடியலுக்கு, மறுவாழ்வுக்கு வாய்ப்பு இல்லை. எந்த ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் ரத்தம், நம்பிக்கை துரோகம், பலிவாங்குதல், தியாகம் இது போன்ற பல்வேறு தளங்களில் போராட்டம் அமையாமல் இருந்ததே இல்லை. ஆங்கிலேயனுக்கு தீவிரவாதியாக தெரிந்த நேதாஜி இந்தியருக்கு மாவீரன். ஒரே ஒரு விரும்பத் தகாத சம்பவத்தை வைத்து இலங்கைத்தமிழர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து பெயரளவில் அவர்கள் நலன் குறித்து கண்ணீர் சிந்துவதனால் மட்டுமே விடிவுகாலம் ஏற்படப்போவதில்லை.

'இலங்கை தமிழர்' என்ற சொல்லை பத்திரிக்கை வியாபாரத்திற்காகவும், நடுநிலையாளர் என்ற வேசத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர்த்து சோ, இந்துராம், சு.சாமி மற்றும் ஜெ வகையறாக்கள் அவர்கள் வாழ்வுரிமைக்காக எந்த விதப் போராட்டமோ, 'நாங்கள் இருக் கின்றோம் கவலை கொள்ளாதீர்கள்' என்ற ஆறுதல்களை, இலங்கை தமிழர்களுக்கு அறிக்கை அளவுக்கு, பெயரளவுக்குக் கூட தந்ததே இல்லை. அப்படி எதாவது அதிசயம் இராஜிவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்திருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
இவர்கள் மட்டுமல்ல இந்த வகையறாக்களை ஆதரிப்பவர்களும், அவர்களை ஆபத்பாந்தவனாக நினைப்பவர்களும், போராளிகளை ஆதரிக்க வேண்டாம், ஆனால்

சாத்வீக வழியில்,
இலங்கை தமிழர்களுக்கு விடுதலையை பகவான் கிருஷ்ணனோ, இராமனோ
வந்து மீட்டுத்தருவார்கள் என்று நினைக்கிறார்களா ? எனக்கு தெரியவில்லல சொல்லுங்கள்.
இல்லை இராமனையோ, கிருஷ்ணனையோ வரவழைக்க யாகம் நடத்தினார்களா ?

இலங்கைத்
தமிழர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு சிங்களருடன் சேர்ந்து வாழவேண்டும் என்று
விரும்புகிறார்களா ? தெரியவில்லை, வெளிப்படையாக சொல்லச் சொல்லுங்கள்

அப்படி
நல்லண்ணம் கொண்டிருந்தால் இலங்கை தமிழர்கள் அக்கரை குறித்து இலங்கை அரசுடன் எத்தனை
முறை பேச்சு நடத்தி இருக்கிறார்கள், அல்லது கண்டனமோ, வர்புறுத்தலோ
செய்திருக்கிறார்கள் ?

அல்லது இலங்கை அரசுடன் இந்தியாவை இலங்கை தமிழர்களின்
நலன் குறித்து பேச வற்புறுத்தி இருக்கிறார்கள் ? தெரிந்து கொள்கிறேன். இருந்தால்
சொல்லுங்கள்.

இதில் எதையுமே செய்திருக்காவிட்டால் இலங்கை தமிழர்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிப்பதையும், அக்கறை கொள்வதாக காட்டிக் கொள்ள நீலிக்கண்ணீர் விடுவதையும், முதலை கண்ணீர் வடிப்பததையும் முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் போன்றவர்களின் ஆதரவை கேட்பதையே இழுக்காக நினைக்கும் நிலைக்கு இலங்கைத் தமிழர்களும், பேராட்டக் குழுக்களும் முடிவு செய்துவிட்டன. ஏனென்றால் அவர்கள் போராட்டம் வெற்றிபெற்றவுடன் அந்த வீர வரலாற்றின் காவிய வரிகளில் உங்கள் முதலைக்கண்ணீர் துளிகளும் சேர்ந்து திரிந்து களங்கப்பட்டுவிடும் என்பதால்.

கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார் ? என்று எவரும் கேட்டால், இதுபோன்று ஜெ, சோ, சு.சாமி வகையறாக்களைத் தவிர்த்து வேறு எவரும் கேட்க மாட்டார்கள், அப்படி கேட்டால், ஜெ, சோ வகையறாக்கள் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் ? முதலைக் கண்ணீரை வெளியில் விட்டு கண்ணை சுத்தப்படுத்திக் கொண்டைதைத் தவிர ? என்று திருப்பிக் கேளுங்கள்.

கருணாநிதியை கொச்சைப்படுத்துவதற்கும், ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும் தங்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கரை இருப்பதாக சொல்வதற்காக 'இலங்கைத் தமிழர்கள் நலன்' என்று சொல்வதை நிறுத்துங்கள்,

நெல்லை பாசையில் சொல்லனும் என்றால்

போங்கடே... நீங்களும் .... இலங்கை தமிழர் குறித்த உங்க அக்கறையும் .... நிறுத்துங்கடே !

7 நவம்பர், 2007

சிங்கப்பூர் தீபாவளி சந்தையில் ரஜினி - 'ச்சும்மா அதிருதில்லே'
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், அவர்தம் இல்லத்தினருக்கும், குழந்தைகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கோவி.கண்ணன்

ஜெ-வின் இரட்டை நிலைபாடு : தமிழ்செல்வன் - கலைஞருக்கு விடுதலைபுலி, வைகோவுக்கு இலங்கை தமிழர்

ஜெவுக்கு கருணாநிதி ஆட்சியின் கண் உறுத்தல் தெரிந்ததே. 'மைனாரிடி கவர்மெண்ட்' என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லிப் பார்த்தார், காங்கிரசுடன் கைகோர்க முடியுமா ? பாமகவை இழுக்க முடியுமா ? என்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. விரக்தியின் உச்சத்திற்கே சென்று கலைஞர் கருணாநிதியின் இரங்கல் பாட்டை ஏளனம் செய்து தேச தூரோக முத்திரை குத்தினார், இதே ஜெ.வின் அதிமுக கூட்டணியில் அ(ப)ங்கம் வகிக்கும் திருவாளர் வைக்கோ நேரடியாகவே ஸ்டேர்மெண்ட் விடுத்திருக்கிறார்

***************

'லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள்'-வைகோ"


சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது,

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர்.

ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன்.

இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தவணை முறையில் மிரட்டும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏன் சுட்டிக் காட்டவில்லை. பக்கத்து வீடு தானே எரிகிறது என நினைக்காதீர்கள். உங்களுக்கும் இந்த நிலை ஏற்படும்.

அதிமுக கூட்டணியை விட்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் மதிமுக விலகத் தயாரா என திமுகவினர் கேட்கின்றனர்.
அங்குள்ள தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ரகசிய ஆயுத சப்ளை செய்கிறது. இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுக அரசை விலகச் சொல்வார்களா. விடுதலைக்குப் போராடிய தமிழ்ச்செல்வனை பரிதாபமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன. லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என்றார் வைகோ.

செய்தி :
தட்ஸ்தமிழ்
*****************

- மறைந்த தமிழ்செல்வன் குறித்து புகழ்ந்து பேசும் தேச துரோக வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசிடமோ, நீதிமன்றத்திற்கோ செல்ல வேண்டியதில்லை. இதனை தற்போது தேசதுரோகி வைகோவின் கூட்டாளியாக இருக்கும் ஜெ-வெ முடிவெடுக்க முடியும். செய்வாரா ?

ஜெவின் திமுகவின் மீதான ஆட்சிகலைப்பு கோரிக்கை தமிழ்செல்வன் தொடர்புடையதா ? கருணாநிதி அரசின் மீதுள்ள காழ்புணர்வில் தொடர்புடையதா ?

இதில் வைகோ பாடும் சந்தில் சிந்து பாருங்கள், அண்ணன் வைகோ கலைஞரை இலங்கை அரசுடன் தொடர்புபடுத்துகிறார். ஜெ கலைஞரை விடுதலை புலிகளுடன் தொடர்பு படுத்த்துகிறார்.

6 நவம்பர், 2007

பாகிஸ்தான் நிலைமையும் அலறும் புஷ்சும்

தனது பொம்மை அரசாங்கத்தை அங்காங்கே நிறுவும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ்சுக்கு தற்போதைய பாகிஸ்தான் நிலைமை கவலை அளித்துள்ளதாக தெரிகிறது. இல்லை என்றால் அவர் ஏன் முஷ்ராப்க்கு (மிரட்டல் விடும் தொனியில் ?) கோரிக்கை வைக்க வேண்டும் ? பாகிஸ்தான் பிரிந்ததில் இருந்தே தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனமாகவே இருந்துவருகிறது. பல்வேறு நாட்டில் இருந்து தீவிரவாதிகள் பயிற்ச்சி எடுக்கும் பல்கலைகழகமாகவே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் இராணுவ ஆட்சியும், அடக்கு முறையும் எழுத்தப்படாத அரசியல் சாசனமாகவே இருந்துவருகிறது. பின்லேடன் முதல் மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் வரை அங்கு கோலோச்சாத தீவிரவாதிகளே இருக்க முடியாது.

இந்திய காஷ்மிர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விட்டுக் கொண்டே, ஆக்கிரமிப்பு காஷ்மிரில் முகாம் அமைத்து பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளை அனுப்பி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. உச்சகட்டமாக ஆப்கான் போருக்கு முன்பு ஆப்கான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் முகாம் இட்டுக் கொண்டு போரின் போது தொலைக்காட்சி பேட்டியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமான தடாலடி ஆட்சிகவிழ்பு, சிறைபிடிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் பிரதமர் நவாஸை தூக்கிவிட்டு தன்னை இராணுவ அதிபராக அறிவித்து கொண்டு இராணுவ ஆட்சி நடத்தி வந்தார் ஜனரல் முஸ்சாரப். தீவிரவாதிகளை ஆதரித்தால் அமெரிக்கா ஆப்கானில் தலிபான்களை கவனித்தது போல் தன்னையும் கவனித்துவிடுமோ என்று அமெரிக்காவிற்கு அடிபணிந்தார். அதன் மூலம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளையும் பெற்று வந்தார். பின்லேடனை தேடும் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய இடமாக இருந்ததால் அமெரிக்க நடமாட்டம் அங்கு அதிகரித்துவிட்டது. ஈராக் அதிபர் சதாம் உசேனின் மரண தண்டனைக்கு பின்பு அமெரிக்காவின் பாகிஸ்தான் தலையீடுகளை பாகிஸ்தான் பொதுமக்கள் ரசிக்கவில்லை. மேலும் புஷ் ஆதரவு நிலை எடுத்த முஸ்ராப்பை தீவிரவாதிகள் குறிவைக்க ஆரம்பித்துவிட்டனர். மசூதிகளில் தற்கொலை தாக்குதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவெடிப்புகள் பல நிகழ்ந்துவிட்டது. இதையெல்லாம் இந்திய சதி என்று வழக்கமாக் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொல்வதை பாகிஸ்தான் பொதுமக்கள் நம்புவதற்கு தயயராக இல்லை.

மேலும் 8 வருடத்துக்கும் மேல் இராணுவ அதிகாரத்தில் பல்வேறு உரிமைகளை இழந்ததுவும், அடிக்கடி முஸ்ராப் அரசுக்கு எதிரான தீவிரவாதிகளின் வன்செயல் தற்கொலை தாக்குதல் ஆகியவை அரசு அலுவலர்களையும், பொதுமக்களையும் அச்சத்துக்கு ஆட்படுத்தி, முஸ்ரப்புக்கு எதிரான மனநிலைக்கு சென்று நீதிமன்றம் மூலம் ஜனநாயக ஆட்சிக்கு செல்ல முடியுமா ? என்று நினைத்து செயல்பட்டனர். இதனால் சற்று மனம் மாறிய முஸ்ரப் பொதுத்தேர்தலை நடத்தி முற்றுபுள்ளி வைக்க முயன்று ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு பொதுமன்னிப்பு எதிர்நோக்கும் முன்னால் பிரதமர் பெனாசீர் பாகிஸ்தானுக்குள் நுழைந்தும் நடவடிக்கை எதுவுமின்றி பார்த்துக் கொண்டார். இதன் மூலம் பெனாசீர் பிரதமரானாலும் அதிபராக தொடர்வது என்ற மூடில் இருந்தார். ஆனால் நிலைமை மோசமாகி தற்கொலை தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

முஸ்ரப் பதவி விலகுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் தற்போது வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்களின் வலுவான உள்நாட்டு கிளர்ச்சி நடை பெறுகிறது. முஸ்ரப் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. பாகிஸ்தானில் வன்செயல் மிகுந்து நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விட்டது. இது நீடித்தால் பாகிஸ்தானில் உள்ள அனுகுண்டை தீவிரவாதிகள் கைப்பற்றி அமெரிக்காவை தாக்ககுவார்கள் என்று அதிபர் புஷ் எச்சரிக்கை அடைந்துவிட்டார், முஸ்ரப் பதவி விலகினால் தான் பொதுமக்கள் சமாதானம் அடைவார்கள். இல்லை என்றால் கலவரமும், குழப்பமும் நீடித்து அமெரிக்காவிற்கு பாதகமான நிலைமை ஏற்படும். இதனால் அதிபர் புஷ் தற்போது முஸ்ரப்பை உடனடியாக பதவிவிலகும் படி வழக்கமான் 'அன்போடு' கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அதிபர் முஸ்'ரப்' பதவி விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார். பாகிஸ்தானில் மக்கள் ஆட்சி அமையுமா ? அல்லது மறுபடியும் ஒரு பொம்மை அரசாங்கமாக அமையப் போகிறாதா ? தெரியவில்லை.

வரும் 2008 ஆம் ஆண்டிலாது பாகிஸ்தான் பொதுமக்களுக்கு விடிவுகாலம் பிறந்தால் நல்லது.

தேசதுரோக பல்லவி - ஜெவின் செலக்டீவ் அம்னீசியா !

மறைந்த தமிழ்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் பாட்டு பாடியதால் கருணாநிதி தேச துரோகம் செய்துவிட்டார் எனவே ஆட்சியை கலைக்கனும் என்று ஜெயலலிதா அம்மையார் கூப்பாடு போடுகிறார். அவருடைய அரசியல் நிலைப்பாடும், அவ்வப்போது அபாய சங்கு ஊதுவதும் அம்மையாருக்கு வழக்கமான ஒன்று தான், சென்ற முறை (1996) கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கிற்கு நீதிமன்றம், ஜெயலலிதாவை நேரடியாக ஆஜர்படுத்த சொல்லும் போதெல்லாம் மருத்துவ மனையில் திடீர் நெஞ்சுவலியால் சிகிச்சைப் பெற்று கொள்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் இது போன்ற திடீர் அறிக்கைகளை ஜெயலலிதாவால் கொடுக்க முடியவில்லை.

இந்த முறை கலைஞர் போன தடவை செய்த அதே தவற்றை செய்து அம்மையாருக்கு அனுதாபம் தேடிக் கொடுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருக்கிறாரா ? தெரியாது. ஆனால் எப்படியாவது கலைஞருக்கு நெருக்கடி கொடுத்து தம்மை கைது செய்ய தூண்ட வேண்டும், பழைய படி 'பெண் என்றும் பாராமல் என்னை சிறையில் அடைத்துவிட்டார்கள்' என்று முகாரி பாடி அதன் மூலம் அனுதாபம் தேடமுடியும் என்று அம்மையார் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்படி இல்லை என்றால் புலிஆதரவாளர் என்பதால் 1 1/2 ஆண்டுகாலமாக இவரே சிறையில் அடைத்து வைத்திருந்த வைகோவை அருகில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா ஒரு இரங்கல் கவிதைக்கு எதிர்வசனம் எழுதி இருப்பாரா ? காங்கிரசால் பொடா சட்டம் ரத்து செய்யப்படாவிட்டால் வைகோ இன்னமும் சிறையில் தான் இருந்திருப்பாரோ என்னவோ, வைகோ எங்காவது தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை விட்டுவிட்டேன் என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரா ? பின்பு ஏன் ஜெயலலிதா புலி ஆதரவு வைகோவுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ? வைகோ புலி ஆதரவாளர் இல்லை, எலி ஆதரவாளர் என்று இந்த அம்மா வெளிப்படையாக சொல்லி தனது தேச அபிமானத்தை காக்கலாமே ? கலைஞர் - ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடித்தது தேசதுரோகம் என்றால் வைக்கோவுடன் கூட்டணி தொடர்பு வைத்திருக்கும் ஜெயலலிதாவும் தேச துரோகிதானே ?

இராஜிவ் காந்தி படுகொலை நடக்காவிட்டால் இந்த அம்மா முதல்வர் பதவி வகிப்பதற்கான வாய்ப்பே கிடைத்திருக்காது. இராஜிவ் காந்தி மரணத்தை தொடர்ந்து பதவி ஏற்பு கொண்டாடியது ஜெயலலிதா தான், தமிழர் மண்ணில் நடந்த படுகொலைக்கு தமிழர்கள் பொறுப்பேற்று கொண்டு கலைஞரை புறக்கணித்து இராஜிவ் காந்தி படுகொலைக்கு வலுவான எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிற்கு வாய்பை கொடுத்தனர்.
அந்த குறிப்பிட்ட தேர்தல் 2 கட்டமாக நடந்தது, முதல் கட்டத்தில் காங்கிரஸ் படுதோல்வியில் இருந்ததையும் இரண்டாம் கட்ட தேர்த்தலில் பெருவாரியாகவும் வெற்றி பெற்று இருந்ததையும் அந்த நிகழ்வுக்கு பின்பு வாக்கு எண்ணப்பட்ட போது தெரிந்தது. அந்த அனுதாபத்திற்கு பிறகு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் இராஜிவின் பெயரைச் சொல்லி ஜெ - வெற்றி தேடிக் கொண்டார்.

ஜெயலலிதா தன்னை பரப்பரப்பான அரசியல் வாதி என்று காட்டிக் கொள்ள அவ்வப்போது போடும் இரட்டை நிலைப்பாடு போன்றது தான் தற்போது கலைஞர் மீதான விமர்சனம்.

ஜெயலலிதா பார்வையில் புலி ஆதரவாளர்களும், இறப்பிற்கு இரங்கல் தெரிவிப்பவரும் தேச துரோகி என்றால், தன் பக்கத்தில் வைக்கோவை வைத்துக் கொண்டு சொல்ல ஜெயலலிதாவிற்கு என்ன அருகதை இருக்கிறது ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்