பின்பற்றுபவர்கள்

30 செப்டம்பர், 2009

ஏழைப் பங்காளன் !

டெல்லி: நான் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு திடீர் திடீரென போவதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே எனது பயணத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் போங்கிரஸ் பொதுச் செயலாளர் போகுல் வாந்தி.

உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக (தொற்று நோய் போல்) போகுல் வாந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், சாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.

இப்படி போகுல் வாந்தியின். திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.

இதுகுறித்து போகுல் வாந்தி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள், அவர்களின் இரவு உணவை என்னிடம் கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாகப் படுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்

என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வியாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.

ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ? பிறகு ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்று நானும் கேட்பதில்லை.



நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. என்னை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் போகுல் வாந்தி.

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது தான் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அரசியல் வியாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கொஞ்சம் போடுவதால் தான் தாங்கள் வாழ்வதாகவும், மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தலித்துகள் தன்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்ததாகச் சொன்னார் போகுல் வாந்தி

பின்துருப்பு : மேற்கண்ட தகவல்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை, படத்துக்கும் பதிவுக்கும் கூட தொடர்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

நாய்களின் எல்லைக் கோடுகள் !

தன் இனத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்புடன் பார்க்கும் குணம் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் தான் இருக்கின்றன. தெரு நாய்களை நன்கு கவனித்தால் அது மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய அனுமதிக்காது.

பக்தி என்றப் பெயரில் பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இத்தகையது தான். வழிபாட்டுத் தளங்கள் பக்தியை வளர்க்கின்றன. அது ஒரு நம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் எல்லைக் கோடுகள் ஆகிப் போனதைத் தான் இன்றைய காலத்தில் பார்க்கிறோம். பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இருக்கும் போது பிற மதத்தினர் அந்த வழியாக தங்கள் மத ஊர்வலங்களை நடத்தும் போது அந்த இடங்கள் கலவர பூமியாகிறது. 100 பேர் வரை காயமடையவும் சிலரின் இறப்புகளுக்கு காரணமாகவும் எதாவது ஒரு பொது இட வழிப்பாட்டுத் தளங்கள் ஆண்டு தோறும் ஒரு கெட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துவிடுகிறது. குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் இதை பார்க்கலாம்.

பொது இடங்களின் வழிபாட்டுத் தளங்களின் விழாக்களின் போது பல்வேறு தரப்பினர் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஒலி அளவு மிகுந்த ஒலிப் பெருக்கிகளை வைப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் முதல் பிறந்த குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது. அதிகாலை வழிபாடு/தொழுகை என்ற பெயரில் ஓலமிடும் ஒலிப்பெருக்கிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இன்றைக்கு பலரும் இரவு வேலை பார்த்துவிட்டு அதிகாலைத் திரும்புவர்களாகவும், விடியற்காலை தூங்கச் செல்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள். அவர்களின் தூக்கத்தை இத்தகைய வழிபாடுகள் கெடுக்கிறது என்பது உண்மை. மேலும் மதவழி வழிபாட்டு நம்பிக்கையை அந்தந்த மதத்தினர் மட்டுமே சகித்துக் கொள்வர் என்பது கண்கூடு.

புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.

வீட்டிற்குள் வழிபாடுகளை யாரும் தடை செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான வழிபாடுத்தளங்களில் 50 விழுக்காடு வரை பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது, புதிதாகக் கட்டுவதற்கான தேவை என்றால் புதியதொரு குடி இருப்புப் பகுதி ஏற்பட்டு அது வழிபாடுத்தளங்களுக்கு தொலைவில் அமைந்திருந்தால் தான் அங்கு தேவைப்படும். மற்றபடி ஏற்கனவே அமைந்த குடி இருப்புப் பகுதிகளில் புதிய வழிபாட்டுத் தளங்களை அதுவும் பலமதத்தினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அமைப்பதால் சமூக அமைதி கெடுகிறது என்பதுடன் மேற்கண்ட பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இவை முற்றிலும் தவிர்க்கப் படவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் வழிபாடுத்தளங்களை அகற்ற அந்தந்த மத நலவிரும்பிகள் முன்வருவதே மத நல்லிணக்கத்திற்கு நல்லது.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் - என்கிற தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் வரவேற்கிறேன்.

"உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால் புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.


அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார் முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத் தலங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்

27 செப்டம்பர், 2009

அந்தக் குருக்கள் - இந்து சமயத்தின் அழுக்கு ?

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் குருக்கள் ஒருவர் கருவறையில் சிவனை சாட்சியாக வைத்துக் கொண்டு கசமுசா செய்த விவரம் ஜூவியில் படத்துடன் வெளி ஆகி இருக்கிறது.

கோவில், பக்தி, நம்பிக்கையுடன் பக்தர்கள் வரும் இடம், புனிதம், நாத்திகர்கள் விரும்பிவராவிட்டாலும் மரியாதைக்கு உரிய இடமாக கருதும் ஒரு தலம், தெய்வீகப் பணியில் இடம் பெரும் ஒருவர் இத்தகைய தகாத செயலைச் செய்யலாமா ? - என்கிற பொதுப் புத்திக் கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் இது வெறும் சாதாரண நிகழ்வு, கட்டற்ற காம வயப்படும் ஒருவன், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத ஒரு காமுகன் பொது இடம் என்றும் பார்க்காமல் நடந்து கொண்ட ஒரு நிகழ்வு. இது போன்ற வக்ரம் பிடித்த மனிதர்கள் சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களில் ஒருவராகக் கூட இருப்பர், உயிரைக் காப்பாற்றும் தொழில் இருக்கும் மருத்துவர்களில் ஒருவராகக் கூட இருப்பர்.

இது போன்ற மனிதர்களை ஒரு குழுவுக்குள் அடக்கி குழுவை நோக்கிய கேள்விகளாக, அந்தக் குழுவின் ஒழுக்கம் குறித்தக் கேலியாக இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பொது புத்தி சார்ந்த ஒரு அறிவீன சிந்தனைத் தாக்கமாகத்தான் தெரிகிறது.

அந்த நிகழ்வைக் குறித்தக் ஜூவிக் கட்டுரையில் நான் படித்த அபத்த பொதுப் புத்திச் கருத்துகள்

* இந்து மதத்தில் நடந்த ஒன்றை வெளிச்சம் போட்டுக்காட்டுவதைப் போல் பிற மதத்தினரின் ஒழுங்கீனங்களையும் ஜூவி வெளி இடுமா ? - நடராஜா.

- இது எவ்வளவு அபத்தமான கேள்வி பாருங்கள், யாருமே யோக்கியமில்லை என்று சொல்வதுடன், அதை ஞாயப்படுத்துவதும் போலவும், ஒரு தனிமனிதனின் தவறுகளை தன் மதத்து தவறு போன்ற ஒப்புதல் வாக்குமூலமும் அந்தக் கேள்வியில் அடங்கி இருக்கிறது

******

மக்களிடம் நேரடியாக சேவை அல்லது பணி ஆற்றக் கூடியவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது வரையறைச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் வழியுறுத்தல்கள் கிடையாது, அப்படிப் பட்ட தொழில்களில் சேவைகளில் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும் போது அந்த சேவையில் தற்காலிகத் தடை ஏற்படுவதுடன், அதே தொழிலைப் பணியைச் செய்பவர்களையும் சந்தேகத்துடன் பார்க்கக் கூடிய சூழலை பொதுச் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது.

என்னைக் கேட்டால் அந்தக் குருக்களில் செயல் ஒரு தனிமனித அபிலாசை, அதைப் பொது இடத்தில் செயல்படுத்து படம் பிடித்துக் கொண்டது தனிமனித வக்ரம். இதை இந்து மதத்துடனோ, புனிதத் தன்மையுடனோ பார்பதிலோ, பார்பன சமூகத்துச் செயலாகவோ கட்டமைக்கச் செய்யும் முயற்சியில் ஏற்புடையவன் அல்ல. கோவிலில் பணி புரியும் பார்பனர்களில் 95 விழுக்காட்டிற்கும் மேலானோர், கோவில் தங்களுக்கு வாழ்வியல் ஆதாரம் என்பதால் அதை நேர்த்தியுடனும், மரியாதையுடனும் தான் செய்துவருகிறார்கள். ஒரு சில தனிமனிதர்களின் கீழான நடவடிக்கையை அந்த சமூகத்தின் பொதுக் குற்றம் போல் கட்டமைக்கப்படுவது பார்பன சமூகத்திற்கு எதிரான பொதுபுத்தியின் வன் செயலாகப் பார்க்கிறேன்.

ஒரு ஆசிரியர் தனது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் அது ஆசிரியர்களின் மீதான ஒட்டுமொத்த குற்றம் ஆகாது. ஒரே ஒரு மருத்துவர் பிரகாஷ் பெண்களை வைத்து நீலப்படம் எடுத்தால் மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று பார்பது எப்படி சரியோ, அது போல் தவறு இழைத்த ஒரு குருக்களின் செயலை பார்பன சமூகத்துச் செயல் போல் எழுதப்பட்டால் அதுவும் கண்டிக்கத் தக்கதே.

அந்த குருக்களின் செயல் குற்றமா இல்லையா என்பதைவிட அந்தச் செயல் புனிதத் தன்மை என்கிற கட்டமைப்பின் மீது விழும் எச்சிலாக அந்தப் புனிதத் தன்மை மீது சிறுதும் நம்பிக்கையற்ற ஒருவன் தான் விரும்பியே மீறி அதன் மீது துப்பும் எச்சிலாகத்தான் நான் பார்க்கிறேன்.

*****

திருப்புகழ் எழுதிய அருணகிரி நாதர் பல விலைமகளிருடன் சல்லாபித்ததை திருப்புகழில் எழுதி இருக்கிறார், அருணகிரிநாதரின் திருப்புகழ் சைவத் தமிழ்பாடல்களில் சிறந்ததில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஆனால் அவையாவும் அவர் இறை நம்பிக்கைக் கொள்ளும் முன் நடந்தவை என்பதை அவைப் பாடல்களில் வருவதைப் பக்திப் பெருக்குடன் முருக பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

எல்லையற்ற காமம் யாருக்கும் துன்பம் தரவில்லை என்றால் அதை அடையும் முறை கூட தவறல்ல என்பதை சமூகம் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறது, ஆனால் அதே சமூகம் தங்களால் கட்டமைப்பட்டுள்ள புனிதத் தன்மைமீது எச்சில் விழும் போது தான் கோபம் கொள்கிறது. இந்தக் கோபம் ஞாயமானதா ? என்னைப் பொருத்து அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.

இந்தக் குருக்களை இந்துமதத்தின் அவமான சின்னமாக கருதி இந்து சமயம் இப்படித்தான் என்பது போன்ற மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதையும், அந்த ஒருவனின் செயலை பார்பனச் செயலாகப் பார்ப்பதெல்லாம் பொதுப் புத்திச் சார்ந்த அரைகுறை சமூகப் புரிதலாகப் பார்க்கிறேன்.

26 செப்டம்பர், 2009

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் !

காலங்கார்த்தால இன்னிக்கு குறுஞ்செய்தி வந்தது, கடிதம், மின் அஞ்சல் என்றெல்லாம் உலாவியது இப்போதெல்லாம் குறுஞ்செய்திலும் உலாவுது.

"ஓம் சனிஸ்வராயா நமஹ" - இதை 19 பேர்களுக்கு அனுப்ப நாளைக்கு உங்களுக்கு நல்ல செய்தி வரும், தவறினால் நாளைக்கு பேதியாகிடும் வெளியே போக முடியாது (வெளியே போகலை என்றால் எப்படி பேதியாகும்னு தெரியல, தண்ணீராகப் போவதைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ ! அவ்வ்வ் ) - இது 100 விழுக்காடு உண்மை உண்மை உண்மை

- என்று ஒரு பொய்யான குறுந்தகவலை நண்பர், உறவினர்கள் அனுப்பி வைத்தார்கள்.

நானும் அதையே சொல்கிறேன். இந்தப் பதிவை படிப்பவர்கள், இந்தப் பதிவு படிச்சிட்டு இதே போல் ஒரு பதிவு அல்லது இந்தப் பதிவை பத்து நகல் எடுத்து எதாவது முட்டுச் சந்துக்கு முன்னால் நின்று 10 பேருக்கு கொடுக்க

* உங்கள் பதிவில் பின்னூட்டம் பெருகும்.
* திருமணம் ஆகாத பதிவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும்
* பதிவு எழுத மேட்டர் கிடைக்காதவர்களுக்கு மேட்டர் கிடைக்கும்
* உன்னைப் போல் விமர்சனம் படிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்
* அலுவலக நேரத்தில் பதிவு எழுதும் போது யாரும் பார்த்துவிட மாட்டார்கள்

***

உலக நாடுகளில் எதிலுமே இல்லாத வழக்கமாக இந்த கிரகப் பெயர்சிகள் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை ரொம்பவே ஆட்டுகிறது. மில்லியன் டாலர்கள் சொத்துகள் வைத்திருப்பர்களையெல்லாம் கண்டுகொள்ளாத சனிப் பெயர்ச்சி அன்றாடங்காய்சிகளையும், நடுத்தரவர்கத்தையும் ஆட்டிப் படைத்து அவர்களுடைய வாழ்க்கையை (ஏ)மாற்றுகிறதாம்.

சோசியக்காரர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை அடையாதவரையில் தன்னம்பிக்கை என்று ஒன்றை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளப் போவதில்லை.

"நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாய" வென்ற நாமம் இருக்கையிலே

என்று சொல்வதும் பொய்யா என்று எண்ணிப் பாருங்கள். நல்லதொரு இறை நம்பிக்கை மூலம் எந்த ஒரு கிரகமும் அப்படிப்பட்ட நம்பிக்கைக் கொண்ட ஒருவரை அசைத்துவிட முடியாது.

பித்தலாட்ட சோதிடர்களை தண்டிக்காமல் விடும் சனி பிறரை தண்டித்துவிடுமா ?

சோதிடப் பெயர்சிகளும் பலன்களும், பாதகங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற குழப்பத்தில் இருப்பவர்களுக்கே, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பிழைப்பு வாதிகளுக்கே.

24 செப்டம்பர், 2009

உ.போ.ஒ ஒன்பது ஓட்டைகள் !

1. காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்தி இருந்தாலே அதை மட்டும் சொல்லிவிட்டு மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம், 4 கருப்புப் பைகள் மீச்சம் ஆகி இருக்கும். திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் என்பதைத் தவிர வேறு எங்கும் மீதம் நான்கு இடங்களில் குண்டு வைத்தக் காட்சியைப் பயன்படுத்த வில்லை

2. ட்ரெயினில் குண்டு வைக்கும் போது கமலைப் பார்க்கும் கமாண்டர், பின்னர் கம்யூட்டர் உதவியுடன் வரையப்பட்ட கமல் முகத்தைப் பார்க்காதது போலவே காட்டி இருப்பதும், பார்வையாளர்களை ஏமாற்றிய காட்சி, அந்த படம் வரையப்பட்ட பிறகு அந்த கமாண்டர் மற்றர்வர்கள் பார்த்தைப் போலவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.

3. கமாண்டர் பார்த்திருந்தால் என் மனைவி பயணம் செய்யும் ரயிலிலும் குண்டு இருக்கிறது அதை நிறுத்தி சோதியுங்கள் என்று திரையில் காட்டி இருந்தால் அந்த லாஜிக் ஓட்டை மேலும் பெரிய ஓட்டையாகி, ரயில் பையில் ஒண்ணும் இல்லை, காவல் நிலையம் ஒரு இடத்தில் மட்டும் தான் குண்டு வைத்திருந்தது உண்மை மற்றவை வெறும் மிரட்டல் என்பது கமிசனருக்கு தெரிய வந்திருக்கும்.

4. பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் புதன் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள், கமல் படத்தில் ஒரு பாஃயாக இருந்தால் தக்காளியுடன் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கி இருக்க வேண்டும், இறைச்சி மாலைவரை தாங்குமா என்பது மற்றொரு கேள்வி

5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது

6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது

7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது

8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்

9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது

மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.

(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)

22 செப்டம்பர், 2009

(அ)தாங்க முடியல !

எத்தனை விமர்சனங்கள் எத்தனை ஆராய்ச்சிகள் ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் பதிவுலகம் அல்லோகலப்படுகிறது.

உன்னைப் போல் ஒருவன் - படத்துல எதும் மேசேஜ் இருக்கிறதா ? என்று பார்த்தால் எனக்கு தெரிந்த மெசேஜ், இந்தியில் வெற்றிபெற்ற முன்னா பாய் எம்பிபிஸ் போல் தமிழ் சூழலில் கமல் நடிக்க வசூல்ராஜா என்ற பெயரில் வெளியான படம் போல் தான் 'வெட்னெஸ்டே' என்ற படம் 'உன்னைப் போல் ஒருவன்' ஆனதும். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைத் துறைச் சார்ந்த வியாபார நோக்கம். வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் கதையை எடுத்து கையை சுட்டுக் கொள்ளாத தமிழ் பதிப்பு.

கமல் ஒரு நடிகர் என்பது போல் அவர் ஒரு தயாரிப்பாளர் வெற்றிபெற்ற படங்களை தமிழில் எடுத்து இருக்கிறார். இதில் யாரும் நட்டப்படவில்லை என்றால் கமல் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல வியாபாரி என்று நினைப்பதே சரி என்பதாக நான் கருதுகிறேன்.

இன்றைய தொழில் நுட்பங்களையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் திரைக்கதைக்குள் கொண்டுவந்து ஒரு திரைப்படமாக ஆக்கி இருக்கிறார்கள், படம் தொய்வின்றி செல்கிறது என்பதைத் தவிர்த்து வேறு கோணங்களில் என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை.

படத்தில் ஏன் மதத்தீவிரவாதிகளைக் மையப்படுத்தனும் ? சிறையில் இருந்த / இருக்கும் மஃபியா கும்பல்களை, கபிலன், ஆசைத் தம்பி, வெள்ளை ரவி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகளை ஏன் அதற்குப் பதிலாகப் பயன்படுத்தி இருக்கக் கூடாது என்றெல்லாம் கூட யோசித்துப் பார்க்கும் போது. அது போன்ற ரவுடிகளை காவல் துறையினரே என் கவுண்டர் செய்துவிடுவதால் அவர்களைப் பயன்படுத்துவது கதைக்குப்பொருந்தாது என்று நினைத்திருக்கலாம், அதனால் இந்தி பதிப்பில் உள்ளதை அப்படியே தான் செய்திருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு வலைப்பதிவுகளில் சிலர் எழுத்துக்களில் விமர்சனமாக வரும் மதவெறுப்பு சாயம் பூசுவது பொருந்திவரவில்லை.

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அது பற்றி பொதுவில் பேசனும், பேசப்படனும். முன்பெல்லாம் படங்களில் 'பாகிஸ்தான்' என்ற சொல் இடம் பெற்றாலே அதைத் தனிக்கை செய்து அந்த நாட்டைப் பற்றிப் பேசுவது தவறு என்பது போல் நல்லெண்ண(ஐ) நடவடிக்கையாக இந்திய அரசு திரைப்படத்திற்கு சில தனிக்கைகள் வைத்திருந்தன. பின்னர் விஜய்காந்து படங்களில் தீவிரமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாடினார் தனிக்கைக் குழுக்களும் கண்டு கொள்ளவில்லை.

இந்தப் படத்தில் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நேரடியாகத் தூண்டிவிடுவதாக பலகாட்சிகளில் சொல்லபடுகிறது. குறிப்பாக பொம்மை முசாரப் (முஷ்) மற்றும் பொம்மை புஷ் இடம்பெறும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. பாகிஸ்தானைப் பற்றி நல்லெண்ணம் தொடர்ந்து ஏற்படுத்துவதால் நாம் அடையப் போவது ஒன்றுமே இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படையாக உணர்ந்து இருப்பதால் திரைப்படங்களில் அது பற்றிய அடிக்கோடுகள் வரும் போது தனிக்கை குழுக்களால் கண்டு கொள்ளமால் விடப்படுகிறது என்பதே உண்மை. முன்பு நல்லெண்ண(ஐ) அடிப்படையில் 'பாகிஸ்தான்' பெயர் வரும் போது தனிக்கை செய்தார்கள் ஆனால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை மாறாக மும்பை ஓட்டல்கள் நம் கண் முன்னே தாக்குதலுக்கு ஆளானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் லஷ்கர் ஈ தொய்பா, அல்லும்மா போன்ற பெயர்களை படத்தில் நேரடியாகப் பயன்படுத்தி இருப்பதால் படத்தயாரிப்பாளரான கமல் தான் இந்தக் குழுக்களால் ஒரு வேளை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணி திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்க வேண்டும், மாறாக உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து மோடி முதல் தீவிரவாதக் குழுக்கள் பெயர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் துணிவுள்ளோர்கள் அனைவரும் பாராட்டலாம். அதைவிடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்திவிட்டார்கள், சங்கர்பரிவாரம், பார்பனக் கமல் இதெல்லாம் டூ........மச்.

இந்திய அளவில் இந்துக்கள் இந்துத்தீவிரவாதிகளைக் கண்டித்து வருவது போலவே ( அவர்களுக்கு ஆதரவென்றால் காங்கிரசு ஆட்சியில் அமர்ந்திருக்காது) இஸ்லாமியர்கள் இஸ்லாம் பெயரில் நடந்துவரும் தீவிரவாதக் கும்பல்களை கண்டிப்பதற்கு முன்வரவேண்டும் (மிகச் சிலரே அவ்வாறு செய்கிறார்கள்). மற்றவர்கள் இஸ்லாம் தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் போது இஸ்லாமியர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது, ஆனால் அந்த வருத்தம் மட்டுமே இஸ்லாம் பெயரில் இருக்கும் தீவிரவாதங்களை அப்புறப்படுத்துவிடாது.

அணு ஆயுத வல்லரசுகள் தங்கள் செயலை மறைக்க உலக அளவில் உருவாகி இருப்பதாகக் காட்டுவது தான் 'இஸ்லாம் தீவிரவாதம்' - இதை இஸ்லாமியர்களும் ஏனையோர்களும் புரிந்து கொண்டு களைய முன்வருவது நல்லது

நானும் இரண்டாவது முறை உ.போ.ஒ எழுதிட்டேன் :)

19 செப்டம்பர், 2009

குடும்பப் படம் !

திரைப் படம் பார்த்தால் கட்டாயம் கருத்துரை எழுதியாகவே வேண்டும் என்கிற பதிவர் கடமை இருக்கிற படியால், உன்னைப் போல் ஒருவன் படம் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும்.

* 'தமிழகத்தில் பொதுவில் புகைப்பிடிக்கும் இளம் பெண்கள் இருக்கிறார்கள்' என்கிற மறைமுக இயல்பு கருத்தும் படத்தில் இருக்கிறது.

* படங்களில் இரு அதிரடிப் படை வீரர்கள் தவிர எவருக்கும் உடை மாற்றம் நடைபெறவில்லை.

* வேகமான காட்சி அமைப்பு என்றாலும் இரண்டாம் முறை பார்க்கும் போதும் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தசவதாரம் இரண்டாம் முறை பார்க்கும் போது விறுவிறுப்புக் குறையாமல் இருந்தது

* மோகன்லால் நடித்ததில் தமிழில் முதல் வெற்றிப்படமாக இது அமைந்திருக்கும், அவரது பிற தமிழ்படங்கள் (இருவர் மற்றும் சிறைச்சாலை) தோல்வியில் முடிந்ததால் நொந்து போய் தமிழ் படத்தில் இனி நடிப்பதில்லை என்கிற முடிவில் இருந்தவராம். இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை அள்ளி வழங்கினார்

* கமல் இடம் பெறும் காட்சிகள் குசேலனில் ரஜினி இடம் பெறுவதைவிடக் குறைவே. ஆனாலும் படத்தில் அது அப்பட்டமாக தெரியவில்லை. கதைப்படி பெரும்பாலும் கமல் காட்சிகள் முகக் கோணக் (க்ளோசோப்) காட்சியாக இருந்தது.

* படத்தில் சோழவரத்தில் தீவிரவாதிகளைக் கொண்டு வரவேண்டும், அங்கிருந்து நாங்கள் தப்பிக்கப் போகிறோம் என்று வெடிகுண்டுகளை எடுக்க நிபந்தனை விதிக்கும் போது கமலின் நோக்கம் திரைக் கதையின் முடிவும் தெரிந்தது. (முன்னனி ஹீரோவை வில்லனாகக் காட்ட முடியாதே)

* கமாண்டராக ஒரு புதுமுகம் (பேரு என்ன ?) நன்றாக செய்து இருந்தார்.

* கமல் படத்தில் கட்டாயம் இடம் பெறும் சந்தானபாரதி கைது செய்ப்பட்ட தீவிரவாதிகளில் இந்து தீவிரவாதியாக இதில் வருகிறார். வழக்கமாக கமல் படத்தில் வரும் நடிகர் நாகேஸ் முன்பே மறைந்ததால் அவர் படத்தில் இல்லை

* இசை ஸ்ருதிஹாசனின் முதல் படம் போல் காட்டிக் கொடுக்கவில்லை

* மிகக் குறைந்த பாத்திரங்களால் படம் ஆக்கப்பட்டு இருகிறது

* படத்தில் கமலின் ஊதியம் தவிர்த்து பெரிய செலவுகள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

* ஒரே ஒரு பின்னனி பாடல் தவிர்த்து படத்தில் பாடல் இல்லை

* மோகன்லால் மற்றும் லட்சுமியுடன் தொலைபேசியில் முதலமைச்சராக பேசும் காட்சிகளில் கருணாநிதி போன்ற ஒரு குரலை இணைத்திருந்தார்கள், அது நல்ல நகைச்சுவையாக இருந்தது

* கொஞ்சம் நீளமான உரையாடல்களாக இருந்தாலும் அலுப்பை ஏற்படுத்தவில்லை

* படத்தில் இருக்கும் ஒரே ஒரு துரத்தல் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தது




மொத்தத்தில் ஆபாசக் காட்சிகள் எதுவுமே இல்லாத குடும்பப் படம். நான் குடும்பப் படம் என்று சொல்வதற்குக் காரணம், இந்தப் படத்தைக் காண நான்கு குடும்பங்களாகச் சென்றோம். விஜய் ஆனந்த் தம்பதிகள், நிஜமா நல்லவன் தம்பதிகள், ஜோதிபாரதி தம்பதிகள், கோவியார் தம்பதிகள் மற்றும் நிஜமா நல்லவரின் நண்பர் குடும்பத்தினர் என மொத்தம் 14 நுழைவு சீட்டுகள் மூலம் இந்தப் படத்தைக் கண்டு களித்தோம், ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சென்று பார்த்த இது குடும்பப் படம் தானே.
:)

18 செப்டம்பர், 2009

அவதூறு ஆறுமுகத்தின் தொடர்சியான அவதூறுகள்.



நான்காவது பின்னூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் மேலே எழுதியவை நீக்கப்பட்டுள்ளது

பின்குறிப்பு : அவதூறு ஆறுமுகம் என்னைப் பற்றி எழுதிய எந்தப் பதிவையும் நான் எடுக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தது இல்லை. அவதூறு ஆறுமுகம் கேட்டுக் கொண்டால் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நான் இந்தப் பதிவை நீக்குவேன். அவதுறு ஆறுமுகம் பதிவை சரியாகப் படிக்கவில்லை என்று ஒரு பின்னூட்டம் மூலம் அறிந்ததால் மீண்டும் நீக்கப்பட்டதைச் சேர்க்கிறேன்.

17 செப்டம்பர், 2009

கலவை 17 Sep 2009 !

அறிஞர் அண்ணா நூற்றாண்டு முடிந்துவிட்டு இருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி தமிழகத்தின் பண்ணையார் முறை மத்திய அரசின் கைப்பாவை காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட இயக்க ஆட்சியைத் தொடங்கி வைத்தவர். அண்ணா இல்லாதிருந்தால் காங்கிரசே இன்றும் தமிழகத்தை பீடித்து வந்திருக்கும். திரைப்படம், இலக்கியம், அரசியல் என்று மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் கருணாநிதி திறமையாக சவாரி செய்கிறார் என்றால் அவருக்கு முன் அதை செய்து காட்டியவர் என்ற பெருமை மிக்கவர் அறிஞர் அண்ணா. பெரியாரின் பகுத்தறிவு கொள்கைக்களுக்கு தேவையான உரமாக பழைய புராணக் குப்பைகளை கிளறி எடுத்துக் கொடுத்தவர் அண்ணா. அண்ணா ஆழ்ந்து படிக்காத புராணா இதிகாசங்கள் தமிழில் எதுவுமே கிடையாது. சைவ சமய பெரிய புராணங்களின் புனிதத் தன்மைகளையும் அவதார மகிமைகளையும் கேள்விக்கு உட்படுத்தி சமய வாதிகளிடம் பீதியை ஏற்படுத்தினார். பெரிய புராணத் தகவல்களை இலக்கியங்களாகப் படித்ததைவிட அண்ணாவின் நூல்கள் வழியாக நான் அறிந்ததே மிகுதி. அறிஞர் அண்ணா என்றொரு நல்ல தொண்டர் இருந்ததால் பெரியாரின் கொள்கைகள் மிக எளிதாக படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் சென்று சேர்ந்தது. அண்ணா எழுதியவற்றில் ஆரிய மாயை மற்றும் மாஜிக் கடவுள்கள் எல்லோரும் படித்து அறிய வேண்டிய நூல்.

***

தென்கச்சி கோ சுவாமி நாதன், 'இன்று ஒரு தகவல் மூலம்' இவர் குரலை மட்டும் கேட்டு வந்திருந்த போது அவரது குரலுக்கு பொருத்தமான உருவமாக நடிகர் தங்கவேலு அவர்களைப் போல் இருப்பாரோ என்று நினைத்ததுண்டு. குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் அன்றாடம் வானொலியிலும், தொலைகாட்சியிலும் பேசும் அவரது குரலைக் கேட்டிராத தமிழர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். வானொலியில் பேசும் போது எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆனால் ஆண்டு 2003 வாக்கில் சிங்கையில் சிகரங்கள் என்கிற நிகழ்ச்சியில் பேசுவதற்கு அவர் வந்த போது முதன் முறையாக நேரில் அவரது நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'வானொலியில் நான் மட்டும் தான் பேசிக் கொண்டு இருபேன், என்னைச் சுற்றி யாரும் இருக்கமாட்டார்கள், இங்கேயும் நான் மட்டும் தான் பேசிக் கொண்டு இருப்பேன், என்ன ஒருவேறுபாடு சுற்றிலும் நீங்கள் இருக்கிங்க' என்று நகைச்சுவையாக தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அவரிடம் இருக்கும் சிறப்பே, முழுக்க முழுக்க எதையும் நகைச்சுவையாகச் சொல்வது தான். அதிலும் என்ன சிறப்பு என்றால் அவர் பேசும் போது அவர் மெலிதாகக் கூட புன்னகைக்க மாட்டார். அவர் பேசுவதைக் கேட்பவர்கள் வெடித்து சிரித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியிலும் முத்தாய்பாக ஒரு நகைச்சுவை துணுக்கைச் சொல்லி முடிப்பார். அது அவரது நல்ல உத்தி, முடிவில் ஒரு நகைச்சுவை உண்டு என்கிற ஒரு எதிர்பார்ப்பை எப்போதும் அவர் தருவதால், கேட்பவர்கள் உரையைக் கடைசி வரைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். பிறரிடம் யோசனைக் கேட்பது பற்றிய ஒரு தகவல் முடிவில் அவர் சொன்னது 'என்கிட்ட தோட்ட பராமரிப்பு பற்றி ஒருவர் யோசனை கேட்டார், செடி வாடாமல் இருக்க வேர் காயமல் இருக்கனும்னு சொன்னேன், அப்பறம் ஒரு மாதம் சென்று அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தால் செடி எல்லாம் வதங்கி இருக்கு, என்னங்க இப்படி இருக்கேன்னு கேட்டேன், நீங்க தானே வேரு காயமல் இருக்கான்னு பார்துக்கச் சொன்னிங்க...அதான் தினமும் பிடிங்கிப் பார்க்கிறேன்' ன்னு சொன்னாரு.





சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''

இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன் நேற்று இறுதித் தகவல் ஆகிப் போனார். அண்ணாரின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழப்பு தான்.

***

இது போன்று நடப்புத் தகவல்களைப் பற்றிப் பெரிதாக எழுதினால் தனித்தனிப் பதிவாக மாறிவிடும், படிக்கிறவர்களுக்கும் சலிப்பு ஏற்படுத்திவிடும், தெரிந்த அறிந்தவற்றை எழுத இரண்டு மூன்று நாள்கள் ஆகிவிடும், அதற்குள் நடப்பு பழயதாகிவிடும், ஒரே பதிவில் பல தகவல்களை, செய்திகள் எழுதிவிட்டால் எளிதாக முடிந்துவிடும், நண்பர் பால பாரதி தொடங்கி வைத்த 'விடுபட்டவை' பாணியிலான இந்த வகைக் கலவைத் தகவல் துணுக்குப் பதிவுகளைப் பலரும் பல தலைப்புகளில் எழுதுகிறார்கள்.


ஒரு ஜோக் :

விமானப் பயணங்களில் உயர்வகுப்புக்கில் செல்வதைத் தவிர்க்குமாறு சிக்கன நடவடிக்கையை அமைச்சர்களுக்கு வழியுறுத்திய மத்திய அரசு ஒரு அமைச்சர் ரயிலில் போனதற்கு ரொம்ப வருத்தம் கொள்கிறது

என்னவாம் ?

நம்ம அமைச்சர் ரயிலிலேயேப் போகிறேன் என்று சொல்லி வட்டம் பரிவாரம் எல்லாத்துக்க்கும் சேர்த்து முழு ரயிலையே ஆகிரமிப்பு பண்ணிட்டாராம்

சிங்கை செந்தில் நாதன் பற்றி...

இதய கோளாறு காரணமாக மாற்று இதய சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு தற்காலிகமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்ட சிங்கை செந்தில் நாதனை கடந்த சனிக்கிழமை நான், ஜோசப் பால்ராஜ் மற்றும் முகவை இராம் குமார் சந்தித்தோம். உற்சாகமாகக் பேசினார். பதிவுலகினரின் நல்வாழ்த்தும் வேண்டுதல்களும் தன்னை விழிக்க வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி கூறச் சொன்னார்.
செந்தில் நாதனுடன் ஜோசப் பால்ராஜ்
அவருடைய மன தைரியம் வியப்படைய வைத்தது, இதயத் துடிப்பெல்லாம் சீராக இருக்கிறதா ? கேட்டேன். "இப்ப எனக்கு உள்ளுகுள்ளே உள்ளதை (இதயம்) எடுத்துட்டாங்க, இந்த மெசின் வழியாக இரண்டு சிறிய குழாய்கள் உடலில் ஓட்டைப் போட்டு இதய இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு இருக்கிறது, அதன் மூலம் இரத்தம் பம்ப் ஆகுது, செயற்கை இதயம் துடிப்பதை அளவிடுவது கடினம், மணிக்கட்டைத் தொட்டு பார்த்து தெரிந்து கொள்ள முடியாது" என்று விளக்கினார். நேர்மின்சாரத்தில் செயல்படும் செயற்கை இதயம் அவருக்கு அருகில் அவருடன் அருகில் இருக்கிறது. செயற்கை இதயத்துடன் (VAD)

செயற்கை இதயம் (VAD)

வெளியில் சென்றுவரலாம் 4 மணி நேரம் வரை, செயற்கை இதயம் மின்கலத்தால் செயல்படும், நீட்டிக்க வேண்டுமானால் கூடுதலான மின்கலங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொன்னார். மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்துடன் இருப்பார். தற்போதைக்கு குளிக்க முடியாது, ஈரத்துணியால் உடலை அழுந்த துடைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.

ஐந்து ஆண்டுக்கு முன் வைரஸ் காய்சலால் இதயம் வீங்கியதைத் தொடர்ந்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலைக்குச் சென்றதாகவும், பேஸ்மேக்கர் 10 ஆண்டுகள் வரை செயல்படக் கூடியதென்றாலும் எதிர்பாராவிதமாக அடிக்கடி மயங்கி விழுந்துவிட மாற்று இதயம் தான் ஒரே வழி என்று மருத்துவர்களின் பரிந்துரையால் தற்போதைய நிலை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

மாற்று இதய சிகிச்சைக்கும் செயற்கை இதய சிகிச்சைக்கும் செலவுகள் கிட்டதட்ட ஒன்று தான். மாற்று இதயம் உடனடியாக கிடைக்காத சூழலில், ஒரிரு ஆண்டுகளில் மாற்று இதயம் பொருத்தியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் செயற்கை இதயம் பொருத்தப்படுவது தற்காலிக தீர்வு.

குரலில் இருக்கும் தெம்பும் உற்சாகமும் உடலில் இல்லை, வீரியமான மருந்துகள், இரத்த விரயம், அறுவை சிகிச்சை என உடல் மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது. எழுந்து மிதமாக நடமாடுவதுடன், உடல் இயக்கத்தை சீர்படுத்த பிசியோ தெரபி என்னும் சிகிச்சை எடுத்துவருகிறார். மிகுதியாக கண்காணிக்கப்படும் படுக்கை அறையில் இருந்து, பொது படுக்கை அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

விருப்பப்பட்டால் இன்னும் 15 - 20 நாட்களில் அறுவை சிகிச்சை காயங்கள் ஆறியதும், வீட்டுக்குச் செல்லமுடியுமாம். ஆனால் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தற்போதைக்கு மனைவி மற்றும் மகள், மருத்துவ தாதிகள் தவிர்த்து வேறொருவர் முகங்களைக் காணாமல் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்துவருகிறார். சிங்கை பதிவர் நண்பர்கள், வருகையாளர்களின் அனுமதிக்கப்பட்ட நேரமான மாலை 6 - 8 மணி அளவில் நேரம் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் நாதனுடன் (அவரை மிகுதியாக உரையாடவிடாமல்) உரையாடிவிட்டு வரலாம். ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை மருத்துவமனை பார்வையாளர்களாக அனுமதிக்கிறது.

இயன்றவரை பொருளதவி தந்தும், பிறரிடம் தகவல் சொல்லி பொருளதவி பெற்றுத் தந்த நல்லுள்ளங்கள், மற்றும் பிரார்தனை செய்தவர்கள், குணமடையவேண்டும் என்று மனதார எண்ணியவர்கள் அனைவரும் செந்தில் நாதன் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அனைவருக்கும் செந்தில் நாதன் பற்றி அறியத்தருவதற்காக இந்த தகவல்களை எழுதி இருக்கிறேன்.

செந்தில் நாதன் விரைவில் மாற்று இதயம் கிடைக்கப்பெற்று, உற்சாகமாக புதிய வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்று உங்களைப் போல் நானும் வாழ்த்துகிறேன்

அனைவருக்கும் மிக்க நன்றி !

16 செப்டம்பர், 2009

தொடர் (இடர்) விளையாட்டு !

என்னப் பதிவு எழுதுவது என்று யோசனையில் இருப்பவர்களுக்கு பொதுவாக இந்த தொடர் பதிவு விளையாட்டுகள் கைக் கொடுக்கும் என்பதால் வரவேற்கிறேன்.


நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியனும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !



1. A – Available/Single? Not Available & Not Single (இதெல்லாம் 10 ஆண்டுக்கு முன்னால கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் Not இல்லாமல் சொல்லி இருப்பேன்.

2. B – Best friend? : இன்னும் கிடைக்கல (எதை வைத்து தீர்மானம் செய்வது ?)

3. C – Cake or Pie?: முட்டை இல்லாத கேக். ( இல்லை என்றால் ஆப்பிள் Pie)

4. D – Drink of choice? : சூடான காய்கறிச் சாறு (Soup)

5. E – Essential item you use every day? : MP3.

6. F – Favorite color? : வானவில் நிறங்கள் அனைத்தும். (நிற பேதம் பார்பது இல்லை)

7. G – Gummy Bears Or Worms?: இதுவா ? இதுவா ? மாட்டுக் கொழுப்பு சேர்த்திருக்கும், அதனால் சுவைத்துப் பார்த்தது இல்லை

8. H – Hometown? - கத்தும் கடல்கரை சார்(ந்த) நற்திரு நாகை (நாகப்பட்டினம்)

9. I – Indulgence? - பயணம் செய்வது.

10. J – January or February? February ( 28 நாளுக்கு ஊதியம் கொடுத்துவிடுவார்கள்)

11. K – Kids & their names? ஒண்ணே ஒண்ணு....பெண்ணே பெண்ணு..... கொஞ்சம் நீளமாக... 'இசை'வான பெயர்

12. L – Life is incomplete without? - Wife மற்றும் நெருங்கிய சுற்றம், வட்டம் (நட்புகள், உறவுகள்)

13. M – Marriage date? 16 செப் 1999. (இன்னிக்குத் தான்)

14. N – Number of siblings? 6 - ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள் (குறையில்லாம எல்லாவற்றிலும் குறைந்தது ஒண்ணு ஒண்ணு இப்படி எனக்கும் எங்க அம்மாவுக்கும், என்னோட முதல் தம்பிக்கும் தான் கிடைத்து)

15. O – Oranges or Apples? நாக்கில் வைத்தால் சுர்....சிட்ரிக் ஆசிட் மிகுதியாக உள்ள ஆரஞ்சு.

16. P – Phobias/Fears? Phobias இல்லை, உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்தால் கொஞ்சம் அச்சமாக இருக்கும். தரை நழுவது போல் இருக்கும், என்நேரமும் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கும். கைப்பிடிகளை இறுக்கி பிடித்துக் கொள்வேன். (அதற்காக விமான பயணத்தின் சாளர இருக்கை கிடைத்தால் உட்காரமாட்டேன் என்பது அல்ல, அதற்கெல்லாம் அச்சப்பட மாட்டேன்)

17. Q – Quote for today? : "எந்த ஒரு திட்டமிடும் செயலின் துவக்கம் என்பது அச்செயலை நோக்கிய முதல் படி, அப்'படி' அடி எடுத்து வைக்கவில்லை என்றால் அந்த செயல் வடிவம் பெறாதா பகல் கனவு"

18. R – Reason to smile? : நாம யாருக்கேனும் செய்த நல்லதை நினைத்து தனிமையில் மனமகிழலாம்

19. S – Season? இலைத்துளிர் காலம்

20. T – Tag 4 People? டிவி.இராதகிருஷ்ணன், வெ.இராதகிருஷ்ணன், கிருஷ்ண மூர்த்தி, சீனா (பெரியோரைப் போற்றுதும்)

21. U – Unknown fact about me? யாருமே பகைவர்கள் அல்ல என்று நினைப்பது ( நமக்கு தெரிந்தவர்கள் நமக்கு எதிர்யாக இருக்க முடியாது, நமக்கு தெரியாதவங்க நம் எதிரியும் அல்ல)

22. V – Vegetable you don't like? பச்சைப் பாகற்காய் (சமைத்தால் சாப்பிடுவேன்)

23. W – Worst habit? என்னை யாரும் தவறாக நினைக்கக் கூடாது என்கிற உயர்வு மனப்பான்மை

24. X – X-rays you've had? 5 ஆண்டுக்கு முன் பொதுப் பரிசோதனைக்காக மார்பு X-rays

25. Y – Your favorite food? பாசுமதி அரி சோறு அதை பிசைந்து உண்ண உருளை கிழங்கு, பட்டானி மற்றும் சோயா பைட் சேர்த்த கூடுதல் காரத்துடன் குருமா

26. Z – Zodiac sign? ஜெமினி...ஜெமினி

அன்புக்குரியவர்கள்: குலுக்க வரும், இணைந்து கொள்ளும் கைகள்

ஆசைக்குரியவர்: மொறுகலாக தோசை சுட்டுத் தருபவர்கள்

இலவசமாய் கிடைப்பது: சுவாசக் காற்று

ஈதலில் சிறந்தது: வலது கை அறியாத கொடை

உலகத்தில் பயப்படுவது: கடைசி காடுகளின் அமைதி

ஊமை கண்ட கனவு: பேசுபவர்களின் மோசமான பகல் கனவு

எப்போதும் உடனிருப்பது: கொஞ்சம் இனிப்பு

ஏன் இந்த பதிவு: தம்பி ஸ்டார்ஜன் கூப்பிட்டாக மற்றும் நம் பதிவு உறவினர்களெல்லாம் கூப்பிட்டாக

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிறருக்குத் தரக் கூடிய அறிவு

ஒரு ரகசியம்: தண்ணி அடிக்காதவங்க மட்டும் தனியாக வந்து கேளுங்க

ஓசையில் பிடித்தது: தொலைவின் இடிமுழக்கம்

ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது: சின்ன வயசில் சுறுக்கு போட்டு ஓணான் பிடிச்சிருக்கேன் :)

15 செப்டம்பர், 2009

மதங்கள் கிழக்கும் மேற்கும் !

கிறித்துவம், பவுத்தம், இஸ்லாம் ஆகிய பெரிய மதங்கள் அனைத்தும் ஆசிய நிலப்பரப்பில் (ஒரே நிலப்பரப்பில்) தோன்றியவை என்றாலும், இன்றைய பண்பாட்டு கூறுகளில் அவற்றை கிழக்கு மதம் மேற்கு மதம் என்று பிரித்து சொல்வது பொருத்தமானவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேற்குலகில் அறியப்படும் மதங்கள் என்றால் அது கிறித்துவம், இஸ்லாம், தெற்காசிய, தென்கிழக்கு மதங்களான புத்தம், மற்றும் இந்து மதம் ஆகும், இந்து மதமும் புத்தமதமும் பழக்க வழக்க நம்பிக்கைளில் (சொர்கம், நரகம், நிர்வாணம்) ஒற்றுமை நிலவுவதால் அவற்றை இந்தியச் மதம் அல்லது இந்து மதம் என்ற பிரிவுக்குள் அடக்கிவிடுவர். ஆசிய நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் மதம் மாறுபவர்கள் கிறித்துவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கோ, இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கோ தான் மாறுவார்கள். அவர்களைப் பொருத்து மதம் என்றால் இறைத் தூதரால் ஏற்படுத்தப்பட்டதே மதம் என்பதாகவே நினைக்கின்றனர். காரணம் கத்தோலிக்க கிறித்துவம் ஏசு கிறிஸ்து மற்றும் இஸ்லாம் மதம் முகமது நபியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதே வரலாறு.

ஆன்மிகம் என்பதே மத அடிப்படையிலானது என்பதே மேற்கத்திய புரிதல். உள்ளுணர்வு, தேடல், ஆன்மா என்பதெல்லாம் மேற்கத்திய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடையாது. மதம் என்பது வாழ்க்கை முறை அதை மாற்றி அமைத்துக் கொள்ளும் வழிவகைகளில் மதங்கள் வரையறை செய்து உதவுவதாகவும் கூடவே பலனாக அம்மதத்து சொர்க்கம் கிடைப்பதாகவே மேற்கத்திய நம்பிக்கை.

சீன புத்தர்
இந்திய புத்தர்இந்திய மதங்களை மேற்குலகத்தினர் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் 'உருவ' வழிபாடே, இந்திய கடவுளர்கள் அனைவர் முகமும் இந்தியர்களின் முகங்களைப் போல் இருப்பதால் இந்திய சமயத்திற்கு மாறும் போது இந்தியனை கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டி வருமோ என்கிற ஒவ்வா எண்ணமே இந்திய சமயங்கள் பிற நாடுகளில் பரவாமல் போனதற்குக் காரணம், புத்தரை ஆசியர்கள் ஏற்றுக் கொண்டாலும், புத்தர் சிலைகளில் புத்தரின் முகம் அந்தந்த நாட்டினர் சாயலிலேயே அமைக்கப்படுகிறது. ஏசு கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொள்வதிலும் இதே நிலை என்றாலும் இந்திய மக்களைப் பொருத்த அளவில் கடவுள் உருவங்கள் அது சாணியில் பிடிக்கப்பட்ட பிள்ளையாராக இருந்தாலும் அதை பெரிதாக ஆராய்சி செய்வதில்லை என்பதால் இந்திய கிறித்துவர்களுக்கு ஐரோப்பிய யூத கிறித்துவின் முகமோ, மேரி மாதாவைன் முகமோ உவர்பானது அல்ல.

யூத ஏசுஒரு அரேபியர் ஏசு கிறித்துவையோ, கிறித்துவத்தையோ பின்பற்றாமல் இருப்பதற்கு அவர்கள் இஸ்லாம் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு யூதரை கடவுளாக நினைத்துப் பின்பற்றுவது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, இதே நிலைதான் ரோமானியர் மற்றும் யூதர்களுக்கும் முகமது நபி என்கிற அரபியால் முன்மொழியப்படும் இஸ்லாம் மதத்தை வெகு சிலர் தவிர்த்து பெருவாரியனவர்கள் மதம் என்று அங்கீகரித்தாலும் அவற்றின் கொள்கைகளைப் போற்றி மதம் மாற நினைப்பது கிடையாது.

ஆப்ரிக்க ஏசுஎகிப்து நாகரீகத்திற்கு பிறகு ஆப்ரிக்க கருப்பர்களைப் பொருத்து அவர்கள் இனத்தில் இறைத் தூதர்கள் யாரும் தோன்றாததால் அவர்கள் அறிந்த கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என்கிற இரு வாய்ப்புகளே அவர்களுக்கு இருக்கிறது. கருப்பர் வடிவ ஏசுஆப்ரிக்க கருப்பர்களே இஸ்லாமிலிருந்து கிறித்துவத்திற்கும், கிறித்துவத்திலிருந்து இஸ்லாமுக்கும் மதம் மாறுபவர்களாக இருக்கிறார்கள். ஆப்ரிக்க நாடுகளில் பல இஸ்லாம் மதம் தழுவியதற்குக் காரணம் அவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை என்பதைத் தவிர வெள்ளை ஐரோப்பிய இனத்தின் கட்டுப்பாட்டில்,அன்னை மேரியும், குழந்தை ஏசுவும்ஆளுமைக்காக இருக்கும் கிறித்துவ மதத்தில் இணைய விருப்பம் இல்லாமல் போனதே காரணம். வெள்ளை இனவெறி என்றால் என்ன என்பதை ஆசியர்களைவிட ஆப்ரிக்கர்கள் நன்கு உணர்ந்திருந்ததால் அவர்களுக்கு கிடைத்த மாற்று வாய்ப்பாக இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.

ஆசிய நாடுகளில் புத்த மதம் தவிர்த்து சமணம் ஏன் பரவவில்லை ? சமணம் இந்திய சமயங்களைப் போல் சாதியைப் பின்பற்றி இருந்ததும், ஜெயின் அல்லது மார்வாடி சாதியினரின் ஆளுமையில் இருந்ததால் அவர்கள் இந்தியாவைத் தாண்டி சமண மதத்தை எடுத்துச் செல்ல முனையவில்லை. புத்த மதத்தில் சாதிகளும் பழமை வாதங்களுக்கும் இடம் கொடுக்க வில்லை என்பதால் தத்துவங்களை சார்ந்து இருந்தாதால் ஆசியர்களை வெகுவாக கவர்ந்து ஆசிய நாடுகளில் வளர்ந்தது. மத மாற்றம் என்றால் இன்று போல் ஒவ்வொருவராக மாறுவது என்பது ஆசிய நாடுகளின் வழக்கில் இருந்தது கிடையாது, ஒரு மன்னன் மதம் மாறினால் அவனது குடிகளும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களாக அறிவிக்கப்படுவர். இப்படியாகத்தான் ஆசிய நாடுகளில் பரவியதில் புத்த மதம் முதன்மையாகவும், அதன் பிறகு இந்தோனேசிய, மலேசிய, புருனே போன்ற நாடுகளில் இஸ்லாம் மதமும் பரவியது.

சாதிக் கட்டமைப்புகளையும், உருவ வழிபாடுகளை முதன்மையாக கொண்டிருந்தாதல் இந்திய சமயங்கள் வைதீகம், சைவம், வைணவம், சமணம் போன்றவை இந்தியாவைத் தாண்டி வளர வாய்ப்பில்லாமல் போனது. இந்திய சமயங்களில் புத்த, சமணம் தவிர்த்து பிற சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் என்று யாரும் கிடையாது, எனவே இவைகள் இறைத் தூதர்கள் அற்ற மதமாக மேற்குலகால் நினைக்கப்படுவதுடன், இவற்றை ஒரு மதமாகவே அவர்கள் அங்கீகரிக்காததும்தான் அவர்கள் இம்மதங்களுக்கு தங்கள் மாறுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. மேற்குலனரைப் பொருத்த வரை மதம் என்றால் அது இறைத் தூதர்களால் இறைவனின் ஆணைப்படி ஏற்படுத்தப் பட்டது ஆகும், மற்றவை காட்டுவாசிகளின் மதம் என்பது போல் அவர்கள் நினைக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் மதம் மாறும் போது அவர்களுக்கு கிறித்துவம் அல்லது இஸ்லாம் என்கிற இருவாய்ப்புகளே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் ஏன் புத்த மதத்திற்கு மாறவில்லை ? புத்த மதம் புத்தரால் தோன்றியதென்றாலும் அவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்தவர் அல்லர். கருப்பர் அல்லது வெள்ளையர் என மேற்குலகினரைப் பொருத்து இறைத் தூதர் இல்லாத மதம் மதமே அல்ல. கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை தோற்றத்திலும் கொள்கையிலும் தொடர்சியானவை, தொடர்புடையவை என்பதால் மேற்குலகைப் பொருத்த அளவில் ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது என்பதை நம்புவார்கள். சுய தேடல், அண்டம், பிண்டம் ஆன்மிகத் தத்துவம் இவைகள் அவர்களது சிந்தையிலும் வராது. மத அடைப்படைப் பற்றித் தெரியாதவர்களே மதங்கள் பொதுவானவை எல்லோருக்கும் ஏற்றவை, என்று அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தை உயர்வாகச் சொல்லுவார்கள். ஆனால் மதங்கள் அனைத்துமே இன அரசியலை முன்னிருத்துபவை என்பதை வெகு சிலரே உணர்ந்து இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் இறை நம்பிக்கைகளை உணர்வு பூர்வமாக அணுகுவதால், ஊட்டுவதால் அதில் இருக்கும் மத, இன அடைப்படை வாதம் வெளிப்படையாக தெரியாததும் ஒரு காரணம்.

14 செப்டம்பர், 2009

ஜெமோவின் ஏழாம் உலகம் !

அண்மையில் நூலகத்தின் வழியாக ஜெயமோகனின் ஏழாம் உலகம் வாசிக்க கிடைத்தது, ஒரு எழுத்தாளனின் பண்முகத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளப்படுத்தும் ஒரு ஆக்கம் அதுவென்றால் அது மிகையல்ல. 'நான் கடவுள் படம்' ஏழாம் உலகத்தின் தழுவல் என்றாலும். ஏழாம் உலகம் சுழலும் தளம் நான் கடவுள் படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

பிச்சைக்குத் தள்ளப்படும் உடல்குறையுற்றோரின் துயரங்களை அவர்களோடு கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து, படுத்து, அவர்கள் உழலும், சாக்கடைகளிலும், அவர்களின் மலக் கழிவுகளிலும் பயணித்தது போன்று மிக நேர்த்தியாக வட்டார வழக்கு சொல்லாடல், காட்சி அனைத்தையும் வாசகனின் மனதிற்குள் காட்சியாக விரிய வைக்கப்பட்டு இருக்கிறது, ஒரு எழுத்தாளனுக்கு பலமொழிப் புலமை எந்த அளவுக்கு அவசியம், அதன் தேவையால் ஒரு இயல்பான ஒரு இலக்கிய நடையைத் தரமுடியும் என்பதை அந்த கதையில் வரும் மலையாளப் பாத்திரங்களின் மூலம் உணர்த்தப்படுகிறது. உடற்குறையுற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தி அவர்களின் பிச்சையைத் தன் தொழிலாக வைத்திருக்கும் 'பண்டாரம்' பாத்திரம் கதையின் மையம் என்றாலும், கதையில் இடம் பெறும் ஒவ்வொரு பாத்திர படைப்பும் தனித்தனியாக ஒளிர வைத்திருக்கிறார்.

ஆபாசம், அசூசை, வெட்கம், சொரணை இவை எல்லாம் பிழைப்பு வாதத்திற்கு முன் அற்பமே என்பதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைவார்கள். உதாரணத்திற்கு பழனி கோவிலுனுள் சிலைக்கு அருகே பண்டிதர்கள் வெற்றிலை எச்சிலைத் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். உண்மைகள் புனித பேச்சுக்கும், போர்வைக்கும் முன்பு காவிப் பற்கள் இளிப்பதைப் பார்க்கும் போது, அது புனிதப் பேச்சிலும், புனித போர்வையிலும் மயங்கிக் கிடக்கும் உலகத்தின் மீது அசுத்தங்களை அபிசேகமாக்குகிறது, ஏற்க கடினமாக இருந்தாலும் அவை இயல்பாக நடக்கும் உண்மைகள் என்னும் போது பொதுச் சமூகத்தின் மீதும் அதன் கட்டமைப்புகள் மீது வெறுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

'யார் வேண்டுமானாலும், நம்மை விற்கலாம், வாங்கலாம்' என்று மனம் வெதும்பும் உடற்குறையுற்ற பிச்சைக்காரர்களின் இயலாமை விளிம்பு நிலை மாந்தர்களின் மெல்லிய முனுகலாக பதியவைக்கப்பட்டு இருக்கிறது. கதையில் ஒழுகும் எச்சிலும், வீசும் மலத்தின் நாற்றமும் நாம் வாழும் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட கழிவுகளாகவும், நாம் நாற்றத்தை மறைக்க வாசனையைப் பூசிக் கொண்டு நடமாடுவதை இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கதையெங்கும் உணர்த்தி இருக்கிறார்.

பிச்சைக்காரர்களை கொடுமைப் படுத்தி அவர்களை 'உருப்படி' என்று அழைத்துவரும் பண்டாரம் 'நான் என்ன பாவம், செய்தேன், கெடுதல் செய்தேன், யாருக்கு துரோகம் செய்தேன்' என்றெல்லாம் முருகன் சன்னதியில் வேண்டிக் கொள்வது, உடற்குறையுற்றோர்களை பண்டாரம் போன்றவர்கள் ஒரு மனித இனமாகவே மதிக்கவில்லை, அவர்களை ஒரு பொருளியலுக்கு மூலதனமாகப் பயன்படும் விலங்கைப் போன்றே நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு உணர்த்தி இருக்கிறார்.

சுயநல உலகின் மீது ஒவ்வொரு பக்கத்திலும் செருப்புகளை வீசி காரி உமிழும் ஜெமோவின் 'ஏழாம் உலக நாவல்' தமிழ் சூழலில் மிகவும் போற்றப் படவேண்டிய, பலருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நாவல். ஜெமோவின் உழைப்பும், தகவல் சேகரிப்பும் எண்ணும் போதெல்லாம் வியப்பாக இருக்கிறது.

ஜெமோ முன்னுரையில் தன்னடக்கமாக குறிப்பிட்ட வரிகள் ' நான் எழுதியதிலேயே இந்த நாவல் தான் ஜெயகாந்தனின் எழுத்துக்கு அருகே நிற்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்' என்கிற வரியில் அவரது இலக்கிய வேட்கை எந்த அளவுக்கு தாகம் கொண்டதாக இருந்து இப்படி ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் இலக்கிய வாசகன் என்ற முறையில் ஜெமோவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நான் கடவுள் படம் பார்த்த பிறகு, அந்தப் படம் இந்துத்துவாவை முன்னிறுத்துகிறது என்றும் ஜெமோ அவற்றை வலிந்து செய்திருப்பாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருத்தேன். விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றி அழுத்தமாக புரிய வைக்க வேண்டிய சூழலில் அகோரியை இடை நுழைத்து மூலக் கதைச் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்றே தற்போது எனது புரிதலாக இருக்கிறது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் ஜெமோவின் 'ஏழாம் உலகத்திற்கு' உயிர் கொடுத்திருந்தாலும் திரைக்கதைகாக மூலக் கதையில் நடைப் பெற்ற மாற்றங்கள் படைப்பாளி என்ற முறையில் ஜெமோவை வருத்தப்படுத்தி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

ஜெமோவின் மற்ற எழுத்துக்கள் மீது உங்களுக்கு எப்படிப் பட்ட விமர்சனம் இருந்தாலும் அவை எல்லாமும் 'ஏழாம் உலகம்' ஒரு முறை வாசித்துவிட்டால் மறைந்துவிடும்.

13 செப்டம்பர், 2009

35 வயதுக்கு மேற்பட்டவர் இளைஞர் இல்லையா ?

அண்மையில் காங்கிரசு கட்சியின் வருங்கால பிரதமர் திரு ராகுல் காந்தி தமிழகம் வந்த போது அவரை 35 வயதுக்கும் மேற்பட்ட (காங்கிர(சில்)சைச் சேர்ந்த) ஆண்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லையாம். மனமுடைந்து எந்தனை காங்கிரசு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இத தொடர்சியாக் கட்சியில் இணைந்து கொழுத்த பதிவி பெற நினைத்த நடிகர் இளைய தளபதி, டாக்டர் விஜய் (என்ன கொடுமை சாரே) அவர்களுக்கு தமிழக காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் பதிவி கொடுக்கப் படமாட்டாது என்று திரு ராகுல் வெளிப்படையாக தெரிவித்துவிட்டதால் டாக்டர் விஜய் தரப்பு படு அப்சட் என்று தினமலரில் எழுதி இருக்கிறார்கள்.

விஜய் திமுகவில் சேருவது நல்லது திமுகவில் தான் 60 வயது ஆனாலும் திரு ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராக நீடிக்கிறார். திரு ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதால், திமுக இளைஞர் அணிக்கு சரியான தலைவர் ஸ்மார்டான இளைஞராக 35 வயதைக் கடந்த டாக்டர் விஜய் பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இளைஞர் என்றால் 35 வயதுக்குள் இருப்பவர்கள் என்று திரு ராகுல் சொல்லிவிட்டதால், 35 வயதுக்கும் மேற்பட்ட பலர் இளைஞர் 'யங்க்ஸ்டர்' கெட்டப்பை விட்டுவிடலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன், எனக்கும் 35 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது.

இந்தியா இளைஞர்கள் கையில், இளைஞர்கள் இராகுலின் கையில், வாழ்க ஜென நாயகம் ! ராகுல் வயதைக் காரணம் காட்டி டாக்டர் விஜயை ஓரம் கட்டியதற்காக, புறக்கணிததற்காக விஜய் ரசிகர்கள் சத்திய மூர்த்தி பவனில் உண்ணாவிரம் இருப்பார்களா ?

'62 வயது இளைஞனான டோண்டு இராகவன் சொல்கிறான்' என்று சமீபத்தில் 1946ல் பிறந்த திரு டோண்டு அவர்கள் பதிவில் எழுதினால் அதற்கு கோவைப் பதிவர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு சஞ்செய் காந்தி கண்டனம் தெரிவிபாரா ? திரு சஞ்செய், காந்தி திரு இராகுலைச் சென்று சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததா ? என்பதே இப்போது எனது கேள்விகளாக இருக்கிறது.

11 செப்டம்பர், 2009

புதிய தலைமுறை - ஒரு வாசகப் பார்வை !

அச்சு ஊடக இதழ்களை இணைய ஊடகங்கள் தின்று வரும் இன்றைய காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் புதிய வார இதழ்களின் வரவுகள் குறைந்துவிட்டது. அது தவிர ஏற்கனவே இருக்கும் குமுதம், ஆவி, குங்குமம் போன்ற நன்கு அறிமுகமான இதழ்களுடன் பொட்டிக் கடைகளில் தொங்கி வாசகருக்கு முன்னாள் அறிமுகம் ஆக வேண்டுமென்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதுடன் பக்களின் உள்ளடக்கம் மற்றும் பகிர்வின், இலக்கியத்தின் தன்மை தரமெல்லாம் ஏற்கனவே இருக்கும் இதழ்களுக்கு போட்டி போடும் தன்மையில் இருந்தால் தான் ஓரளவு நின்று வளரமுடியும்.

சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது பதிவர் நண்பர் மற்றும் அன்பு தம்பி அதிஷா(வினோத்) அழைப்பின் பேரில் அவர் அலுவலகம் அருகில் சென்றேன். பதிவர் யுவகிருஷ்ணாவும் (லக்கிலுக்) அங்கிருந்தார்.

பொதுவான் பேச்சுகளுக்கு பிறகு விரைவில் மூத்த மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் திரு மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், 'புதிய தலைமுறை' வார இதழை அறிமுகப்படுத்தினார்கள். வாங்கிப் பார்த்தேன். நண்பர்களிடையேயும் கொடுத்து பரவலாக்கம் செய்யச் சொல்லி 20 பிரதிகள் கொடுத்தனர். சிவப்பு எழுத்தில் தலைப்பு 'புதிய தலைமுறை' கம்யூனிச பெயர் போல் இருக்கிறது, புத்தகம் தலைப்பை பார்த்து வாசகர் டரியல் ஆகமாட்டாங்களா ? ன்னு கேட்டேன். சிரித்தார்கள்.

சரி புத்தகம் பற்றி இப்போது, புத்தகத்தில் உள்ள அனைத்துக் பக்கங்களையும் படிக்கவில்லை, ஆனால் அனைத்துத் தலைப்புகளிலும் என்ன பொருளில் எழுதி இருக்கிறார்கள் என்பதை உள்ளிடில் ஒரிரு வரிகள் படிக்கும் ஊகிக்க முடிகிறது.

வடிவமைப்பு :அளவு புதிய ஆனந்த விகடன், மூன்று அட்டைகள் (விளம்பரம்) தவிர்த்து, பளபளப்பான தாளில் வண்ணப் படங்களுடன் வேறு விளம்பரம் இன்றி 48 பக்கங்கள், விலை பற்றிய விவரங்கள் இல்லை.

உள்ளடக்கம் :

முன் அட்டையில் இந்திய இளைஞர்கள் (இரு இளைஞிஞள், இரு இளைஞர்கள், நடுவில் ஒரு சிங் இளைஞன்) , மற்றும் உள்ளிட்டின் குறிப்பு சினிமா, நலம்,விளையாட்டு, சந்திப்பு என இருக்கிறது.

முன் அட்டையின் பின் பக்கம் யுனிவெர்செல் (மொபைல்) விளம்பரம், முதல் பக்கம்
எம்ஜிஆர் படத்தின் தொடக்கத்தில் வருவது போல் 'வெற்றி...வெற்றி' எனத் தலைபிட்ட கட்டுரை தொடக்கமாக இருக்கிறது. கடைகாரர்கள் லாபம் என்று எழுதி பட்டியல் எழுதுவது போல், எதையும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்று முதல் பக்கத்தை தொடங்கியதாக தெரிகிறது. அந்தக் கட்டுரையில் 'சாய்னா நெஹ்வால்' மற்றும் இந்திய பெண் வீராங்கணைகளைப் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு தன்முனைப்பு மற்றும் பாராட்டுக் கட்டுரை.

அடுத்து உடல்குறையுற்றோர் மற்றும் ஏழைகள் கல்வி உதவி பெறுவதற்கான தகவல் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. சிங்கையில் ஊனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை, அதற்கு பதிலாக உடல் குறையுற்றோர் என்று எழுதுவார்கள். ஊனம் என்ற சொல்லுக்கு பதிலாக இந்திய தமிழ் இதழ்கள் உடல் குறையுற்றோர் என்று எழுதினால் அவர்களுடைய தன்னம்பிக்கை மிகுதியாகும், ஊனம் என்ற சொல்வது அவர்களை தனித்துவிட்டுவிடுகிறது. அவர்களைக் குறிக்க ஒரு அடையாளப் பெயர் தேவைதான். இருந்தாலும் அதை புண்படா வண்ணம் குறிப்பிட வேண்டும். அதாவது அடையாளம் தேவை, அடைமொழி தேவையற்றது. குருடர் என்பதை பார்வையற்றோர் என்றும், செவிடர் என்பதை கேளாதோர் என்றும் எழுதிப் பழகிக் கொள்ள வேண்டும். கைகால் நன்கு செயல்படாதவர்களை மாற்றுத் திறனுடையோர் என்று குறிப்பது வழக்காகி இருக்கிறது.

அடுத்ததாக அதிஷா மற்றும் லக்கிலுக், அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியல் கல்லூரி சேர்க்கைக்கு நடைபெற்ற நேர்முகம், சேர்க்கை ஆகிய பற்றி மாணவர்களும் பெற்றோர்களும் அடைந்த துன்பங்களை நேரில் சென்று கண்டு வந்து எழுதி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று 'காலை 7 மணிக்கு நேர்முகம் தொடங்கி விடுவதால் தொலைவில் இருந்து வருபவர்கள் நேரடியாக கோயம்பேட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு குளிக்க பல்விளக்கக் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது, கல்லூரி நிர்வாகம் நேரங்களை மாற்றி அமைத்தால் பெற்றோர்கள் சிரமத்துக்கு உள்ளாக மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.

அடுத்து வாமனன் திரை விமர்சனம், சீமானுடன் மாணவர்கள் பேட்டி, கடவுள் எங்கே இருக்கிறார் ? ஆன்மிகம் தொடர்புடைய உரையாடல் கதை, சர்கரை நோய் பற்றிய மருத்துவ கட்டுரை, இளைஞர்களுக்காக 'பைக் வாங்குவது எப்படி ?' ங்கிற கட்டுரை.

சரியாக நடுப்பக்கத்துக்கு முன் உமாஷக்தியின் கவிதை.

நடுப்பக்கம் அரசியல், இருபக்கம் சேர்ந்த நடுப்பக்கத்தில் இந்திய அரசியல் மரத்தின் அரசியல் வாதிகளின் கிளைகளும், கிளைக்களுக்கு கிளைகளாக அரசியல் வாதிகளின் வாரிசு பெயர்கள், அவர்களின் சிரிய புகைப்படங்களுடன் படங்களுடன் வாழ்க ஜெனநாயகம் என்று ஒரு பெரிய வண்ண இந்திய வரைபடம்அடுத்து இதழின் பல்சுவைக்காக சேர்க்கப்பட்ட புறநகர் பயணக் கட்டுரை, ஆலம்பரா கோட்டை பற்றிய விவரங்கள் அடங்கி இருந்தது.. அடுத்து இன்றைய திரையில் வெற்றி நடைபோட்டு வரும், சமுத்திரகணி, பாண்டிராஜன் மற்றும் சசிகுமார் ஆகியோர் பற்றிய தகவல்கள், நேர்முகம் இடம் பெற்றிருந்தன.

சன் குழும திரைப்படம் ஒன்றை கிண்டலடித்த 'காசிலா மணி' என்னும் நகைச்சுவை படங்களுடன் சிரிப்பு. வைரமுத்துவின் நடந்து வந்த பாதை, தனது முதல் பேச்சு எங்கே எப்போது என்பதைப் பற்றி எழுதி இருந்தார்.

சிறுகதை இல்லாமல் வார இதழா ? அருணா ஸ்ரீனிவாசன் எழுதிய 'நிறைவு' சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. அடுத்ததாக ஒரு சமூகக் குற்றம் பற்றி, 'தவறு செய்தவர் ஆசிரியர் தண்டனை அனுபவிப்பது மாணவன்!' என்கிற புலனாய்வு செய்திக் கட்டுரை.

தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், இகலப்பை பயன்பாடு தரவிரக்கத் தகவலுடன் கணிணி தொடர்புடைய ஒரு கட்டுரை. நிறைவாக ஒரு புத்தக அறிமுகத்துடன் 46 அவது பக்கத்தில் இதழ் முடிகிறது.

******

வார இதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை திரு மாலன் மிக மிக நன்கு அனுபவமாகவே அறிந்தவர் என்பதால் 'புதிய தலைமுறை' யும் அவ்வாறே பொருளடக்கம் மற்றும் வடிவம் பெற்றிருக்கிறது. அதனால் வார இதழ்களில் மற்றொரு புதிய இதழாகப் பார்க்கிறேன். மற்றபடி வார இதழின் வடிவங்களை, கட்டுமானங்களை கட்டுடைத்து மாறுபட்ட வார இதழாக அமைக்க முயற்சித்தது போல் தெரியவில்லை, எல்லோரும் பயணிக்கும் சாலையில் பயணித்தால் சரி என்று நினைப்பதாக தெரிகிறது. கட்டுரைகளின் எழுத்தில் வழக்கமான ஊடக நீட்டல் முழக்கல், வருணனை சுற்றல், அலங்காரங்கள் போல் எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது பத்திரிக்கைத் தனம் நிறையவே இருந்தது. பத்திரிக்கையில் எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அனுபவம் தானே எழுத்து. எழுதியது தானே அனுபவம்.

குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் வரிசையில் 'புதிய தலைமுறை' மற்றொரு வார இதழாக அமைந்திருகிறது என்று சுறுக்கமாக சொல்லிவிடுகிறேன். எதாவது மாறுதல் இருக்க வேண்டும் என்கிற வம்படியாக கருத்துச் சொல்ல முடியவில்லை. மாறுதல் என்றால் என்ன மாறுதல் வாசகர் எதிர்ப்பார்ப்பு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் இவைகளால் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளதால், புதியமாறுதல்களுடம் ஒரு இதழை முன்மொழிவது, அமைப்பது கடினம் என்பதை நான் இந்த நூலின் அமைப்பையும் பொருளடக்கத்தையும் வைத்துப் புரிந்து கொண்டேன்.

பலசரக்குடன் எத்தனை மளிகைக் கடை திறந்தாலும், தரம், மளிவு மற்றும் அருகில் இருக்கும் கடை எதுவோ அதில் தான் மக்கள் வாங்குவார்கள். வாசகர் நாடிகளை அறிந்து எத்தனை இதழ்கள் வந்தாலும் அவைகள் வெற்றிபெரும். அந்த வகையில் 'புதிய தலைமுறை' வார இதழ் வாசகர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வார இதழ்.

புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமாலன், உதவி ஆசிரியராக ((எடிட்டராக) திரு யுவகிருஷ்ணா, மற்றொரு உதவி ஆசிரியராக திரு அதிஷா ஆகியோரை வாழ்த்துகிறேன். உங்கள் இதழ் பிற பிரபல வார இதழ்கள் போல் வாசகர்களை ஈர்த்து நிலைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

நன்றி மறக்கும் தமிழன் !

ஒரு நிகழ்வு பற்றி ஊடகப் பார்வை, சமூகப் பார்வை, தனிமனிதப் பார்வைன்னு நிறைய இருக்கிறது. ஒரு இடத்தில் கொலை நடந்தால் ஊடகம் அதை ஒரு செய்தித்தகவலாக தொடர்புடையவர்களைப் பற்றி எழுதும், அதைப் படிப்பவர்கள் சம்பவம் என்ற அளவில் உணர்ச்சி காட்டாது படிப்பார்கள், அந்த கொலையை நேரில் பார்த்தவர்களின் உணர்வுகள் வேறு மாதிரியானவை. ஆனால் நிகழ்வு ஒன்று தான்.

முன்பெல்லாம் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவணித்துக் கேட்பது வழக்கம், பேச்சு என்பது ஒரு தகவல் பரிமாற்றம் என்ற அளவில் பேச்சுகள் புரிந்து கொள்வதுண்டு. அண்மையில் சென்னை சென்றிருந்த போது வெறும் தகவலாக பேச்சுக்களை கவணிக்க முடியவில்லை, அதைத் தவிர்த்து எத்தனை ஆங்கிலச் சொற்களை பேசும் போது பயன்படுத்துகிறார்கள் என்றும் கவனித்தேன். மூன்றாம் நபர் என்றால் உடை, வயது, பதவி இவைகள் தொடபில் 'சார்' என்ற சொல் மிகுதியாக பயன்படுத்துகிறார்கள். எவருமே முடிக்கும் போது 'தாங்க்ஸ், தாங்க்யூ' என்றே சொல்லி முடிக்கிறார்கள்.

மொழியைக் கலந்து பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைக்கிறார்கள், நாகரீகம் என்று நினைக்கிறார்கள் என்பதாக புரியவில்லை, ஆனால் அவை இயல்பாகவே கலந்துவிட்டது போல் தெரிகிறது. சார் என்று அழைப்பது மிகவும் மதிப்புக் கொடுக்கக் கூடியது என்று நினைக்கிறார்கள், அலுவலங்களில் பெயருடன் சேர்த்து சார் என்று அழைக்கும் ஒலி எப்போதும் கேட்கிறது, சிலர் பதவியின் பொருட்டு பெயரையும் சொல்லத் தயங்குகிறார்கள். தொழிலுக்காக, வேலைவாய்ப்பு, கல்விக்காக ஆங்கிலம் கற்றோம், அலுவலில் பயன்படுத்துகிறோம் சரி, ஆனால் இயல்பான பேச்சு வழக்கையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கான தேவை தான் என்ன ?

'யூஸ் பண்ணுங்க', யூஸ் பண்ணிக் கொள்கிறேன்' என்பதற்கு பதிலாக பயன்படுத்துங்கள், பயன்படுத்திக் கொள்ளுங்கள், பயன்படுத்திக் கொள்கிறேன் என்று நான் பேசினால் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், நான் தான் இயல்புக்கு மாறாக பேசுகிறேன் என்பது போல் எனக்கு புரிந்தது. யார் வாயிலும் பயன் என்ற சொல்லே வரவில்லை. தாங்க்ஸ் சார், தாங்க்ஸ் சார் என ஒரு அந்நிய மொழி அன்றாடப் பயன்பாடாகப் போனதைப் கேட்கும் போதும் வியப்பாகவே இருக்கிறது.


அழகாக அப்பா அம்மா என்று அழைப்பதை விடுத்து மம்மி, டாடி ன்னு எங்கள் உறவினர்கள் அவர்கள் இல்லத்தில் அவர்களுக்குள் அழைப்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. அவர்களைப் பார்த்து நாமெல்லாம் எப்போது வெள்ளைக்காரனானோம் ? என்று கேட்கத் தோன்றும், அங்கெல்லாம் வழியுறுத்தல் செய்ய முடியாது, ஆனால் பொதுக்கருத்தாக ஊடகங்களில் எழுதும் போது அது சிலரையாவது சென்று அடையும் என்ற நம்பிக்கை கொண்டு பரிந்துரைக்கலாம்.

இன்றைய தேதியில் தமிழில் ஆங்கிலக் கலப்பு மிகுதியாக ஏற்பட்டுக் கொண்டுவருவதற்கு தொலைக்காட்சிகளில் மக்கள் நேரடியாக அழைத்துப் பாடல் கேட்கும் நிகழ்சிகள், திரையுலகினரின் நேர்முகம் ஆகியவை. பாடல் நிகழ்ச்சி நடத்தும் இளைஞர்களுக்கு மொழிப் பற்று பற்றி சிறிதும் கவலை இன்றி சரளமாக ஆங்கிலம் கலந்த தமிழைப் பேசுகிறார்கள். இது தான் இன்றைய நாகரீகம் என்பது போல் நிகழ்ச்சி கேட்கும் அனைவருமே அதனை பின்பற்றி விடுகிறார்கள்.

தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தலாம், ஆனால் இயல்பான பேச்சுகளின் போதும் 50 விழுக்காடு வரை ஆங்கிலம் கலந்து பேசுவது மொழிச் சிதைவையும், சுவையான சொற்களையும் மொழி வழக்கில் இருந்து மறையச் செய்துவிடும். சிங்கையில் பல நண்பர்களை அழைக்கும் போது அவர்கள் 'வணக்கம்' என்று சொல்லியே தொடங்குவார்கள், அது போன்று தமிழகத்திலும் 'ஹலோ' விற்கு பதில் பயன்படுத்தலாம், பேச்சு முடிவின் போது தாங்க்ஸ்க்கு பதிலாக நன்றி என்று சொல்லலாம். நன்றி என்ற சொல்லை நாயுடன் தொடர்பு படுத்துவிட்டதால் அதைச் சொல்லும் போது நம்மை நாயாக நினைத்துக் கொள்கிறோமா என்னவோ, சார் - க்கு பதிலான ஐயா வோ, தாங்க்ஸ் - க்கு பதிலான நன்றியோ தரக் குறைவான சொல்லும் அல்ல. பேசும் போது ஆங்கில்ச் சொற்களைக் குறைத்துக் கொண்டு பேச சிறுது கவனம் எடுத்தால் பிறகு ஆங்கில சொற்கள் இன்றி தமிழர்களிடம் பேசுவது இயல்பாகவே ஆகிவிடும்.

தொடக்கத்தில் கேட்பவர்கள் வியப்புடன் மாறுபட்டு பார்ப்பார்கள். பிறகு பிறரிடம் குறிப்பிட்டுச் சொல்லும் போது நாம் தமிழுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதை குறிப்பிட்டு பாராட்டுவார்கள். தாங்கஸ் மறந்து நன்றியை பயன்படுத்துவோம்.

மிக்க நன்றி !

10 செப்டம்பர், 2009

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் ! கூடவே....

வீட்டைக் கட்டிவிட்டு தான் கல்யாணம் செய்யனும் என்று சொல்லி வைத்தார்களோ, ஆனால் இரண்டுமே மிகவும் கடினமான செயல், ஈடுபடுத்திக் கொள்ளுதல் (கமிட்மெண்ட்) மிகுதி. நடுத்தரவாசிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு திட்டமிட்டெல்லாம் வீடு கட்டுவதையோ, திருமணம் செய்வதையோ செய்துவிட முடியாது. இரண்டுக்குமே கடன் வாங்கனும். அதைத் தவிர்த்து அதற்கான தேவையும் நெருக்குதலும் இருக்கனும், ஆனால் இவை பொதுவாக அனைவருக்குமே ஏற்பட்டுவிடும். வெளிநாட்டில் நீண்ட நாள் வாழ்ந்தாலும் அந்நாட்டின் குடிமகனாக மாறாமல் திரிசங்கு சொர்கமாக நின்று கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு பிறந்த ஊரில், மாநிலத்தில் வீடு ஒன்றை கட்டுவது தவிர்க்க முடியாத செலவினங்களில் ஒன்று. கட்டுவதற்கு நிறைய மெனக்கட வேண்டி இருக்கும், என்பதால் கட்டிய வீட்டை வாங்குவதே சரி எனப்பட்டது. அதுவும் விற்கிற விலையில் நகரத்தினுள் இடம் வாங்கி, ஒரு கட்டிட பொறியாளரிடம் பொறுப்பு கொடுத்து வீடு கட்டி முடிப்பது மிகவும் சிக்கலான ஒன்று, அதற்கு பதிலாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாங்குவது எளிதானது, இடம் வாங்கி வீடு கட்டுவதை விட செலவினம் குறைவானது. பல மனப் போராட்டங்களுக்கு பிறகு கையிருப்பு, கடன் என வாங்கி சென்னை புறநகர் தொடங்கும் முன் போருர் அருகே புதிதாக கட்டப்பட்ட ஆறுவீடுகள் அமைந்த அடுக்கு மாடி குடி இருப்பு ஒன்றில் ஒரு இருபடுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை வாங்கினேன்.


வீட்டுக்கு முறைப்படி புது மனை பூசை செய்வது பற்றி பேசி கொண்டிருக்கும் போது 'ஐயர்' வைத்து 'ஹோமம்' வளர்த்து செய்ய வேண்டும் என்று மனைவி மற்றும் பெரியோர்களால்(மனைவி தான் பெரியோரான்னு கேட்டால் பதில் இல்லை) முடிவு செய்யப்பட்டது. எனக்கு பூசை இவற்றில் விருப்பம் இல்லை, ஆனால் புதுமனை புகுவிழாவென்றால் இப்படியெல்லாம் இருந்தால் தான் உறவினர்களை அழைக்க அவர்களும் வந்து வாழ்த்திவிட்டுச் செல்வார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். 'சமஸ்கிர மந்திரத்தால் நல்ல அதிர்வு ஏற்படும்' என்று சொல்லிவிட்டு மனைவி வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை. சரி உன் விருப்பப் படி செய் என்று சொல்ல, ஐயர் ஒருவரை உறவினர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். மாடு மாடி ஏற முடியாதே, நானே ஒரு மந்திரத்தால் (மகி)மை ஊட்டப்பட்ட பொம்மை மாடு ஒன்றை எடுத்துவருவதாக ஐயர் கூறி இருந்தார். வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல மாட்டை ப்ளாட் கார் பார்க்கில் கொண்டு வந்து நிறுத்தி பூசை செய்வோம், என்று சொல்லி அதற்கு 500ரூபாய் ஆகும் என்று சொல்லி அதை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சமஸ்கிரத வழிபாடு, பூசை முடிந்ததும், என் பங்குக்கு தமிழ்வழி பூசைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன், அதிலும் அதிர்வு வருகிறதா ன்னு பாரு என்று சொல்ல, மனைவி மனப்பூர்வமாக சம்மதித்தார். சைவ சமயமன்றம் சார்ந்த ஓதுவார் (சிவாச்சாரியார்) ஒருவரை தமிழ்வழி பூசைக்காக ஏற்பாடு செய்தேன். அதிகாலையை ஐயருக்கும், அதன் பிறகு சிறுது இடைவெளி விட்டு ஓதுவார் (சிவாச்சாரியார்) பூசை செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 5 மணிக்கு ஐயர் வந்தார், ஓம குண்டங்களை அமைத்து பூசை சாமான்களை எடுத்து வைத்து, கலசங்களுக்கு நூல் சுற்றி முடிக்க, மணி 6 ஐ தொட்டது, அதன் பிறகு கோமாதா பூசைக்கு ஆயத்தமானார், சொல்லி இருந்த இடத்தில் இருந்து மாடு வரவில்லை, வேறொருவரிடம் மாடு - கன்று வரவழைத்து பூசையை தொடங்கினார். அவர் மந்திரம் சொல்ல சொல்ல மாட்டுக்கு நானும் மனைவியும் மகளும் பூசை செய்யனும், செய்தோம். அந்த காலத்தில் இருந்தே மாடுகள் பொருளியல் கூறுகளில் ஒன்று என்பதால் மாடு செல்வம், லட்சுமி என்றெல்லாம் சொல்லப்பட்டு அதற்கு பூசை செய்வது முதன்மையாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கோமாதா பூசையில் மாட்டுக்கு முன்பக்கம் இல்லாது பின்பக்கம் தான் பூசை செய்யச் சொல்கிறார்கள். செய்கிறார்கள். செய்தோம். இனவிருத்தி உறுப்புக்கு பூசையாம், அது எனது புரிதல். அவ்வளவு நேரடியாகச் சொல்லாமல், பின்பக்க பூசை என்று ஐயர் கொஞ்சம் டிசண்டாக சொன்னார். அது ஒரு 5 - 10 நிமிடம் இருக்கும், வாழைப்பழம் ஒவ்ஒன்றை கொடுக்க பசுவும், கன்றும் தின்று விட 500 ரூபாயுடன் அழைத்துச் செல்லப்பட்டது, எங்க பக்கத்தில் மாட்டுக்கு 1000 ரூபாய் வரை வாங்குகிறார்கள் என்று ஐயர் சொன்னார்.
அதன் பிறகு சுமார் ஒரு மணிநேரம் சமஸ்கிரத மந்திரத்துடன் வேள்வித் தீ என ஐயரால் நடந்தது. வாங்கம்மா வாங்க ... காலம் மாறிவிட்டது (கைம் பெண்கள் என்று சொல்லாமல்) முன்பு போல் மூத்தவர்கள் மறைவாக நிற்காமல் முன்னுக்கு வந்து தம்பதிகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று ஐயர் அழைத்தார். அந்த ஐயரின் செயல் வரவேற்கத் தக்கது, பாராட்டத் தக்கது.

புது மனை புகுவிழாவுக்கு எனக்கு நன்கு அறிமுகமான பதிவர்கள் சிலரையும் அழைந்திருந்தேன். அன்று திங்கள் கிழமை ஆகையால் பணிக்கு செல்லவேண்டிய கடமை இருப்பதால் அதிலும் சிலர் வர இயலாமல் போனது. துளசி அம்மா தனது கணவர் திரு கோபாலுடன் வந்திருந்தார். துளசி அம்மா வரும் போது சமஸ்கிரத வழிபாடு முடியும் தருவாயில் இருந்தது. அதன் பிறகு ஓதுவார் வந்தார். காலை 7:30 - 9.00 இராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் ஐயர் ஏற்கனவே அமைத்திருந்த அதே ஓமகுண்டத்தில் ஓதுவார் பூசையைத் தொடங்கினார். வடமொழி, தமிழ் முறை வழிபாடு இரண்டுக்கும் பூசை முறைகளில் ஒரு சில வேறுபாடுகளத் தவிர வேறெதுவும் இல்லை, தமிழ் வழி வழிபாட்டில் என்ன சொல்கிறார்கள் என்பது நன்றாக புரிந்தது. 'தமிழில் மந்திரம் சொல்லி வழிபடுவது இழிவு அல்ல, வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது', ஆனால் பலர் ஒரு கண்ணில் சுண்ணாம்பை தடவுகிறார்கள், நீங்கள் இரண்டையுமே செய்ய விரும்பி இருக்கிறீர்கள், ரொம்ப மகிழ்ச்சி' என ஒரு குட்டி பிரசங்கம் செய்தார் ஓதுவார். பதிவர் யுவகிருஷ்ணா வந்திருந்தார். அன்றைக்கு முதல்நாள் முதல் என்னுடன் இருந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் நிழல்படங்கள், அசைபடங்கள் எடுத்து தந்தார்.


இருமடங்கு செலவுகள் என்றாலும், இரண்டு வகை பூசைக்கும் ஏறக்குறைய செலவுகள் ஒன்று தான். வந்திருந்தவர்களில் பலர் தமிழ் முறை பூசையும் சிறப்பாகவே அமைந்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.






எதற்காக இந்த பதிவு ? சுயபுராணத்திற்காக அல்ல.

வடமொழி வழியாக நடத்தப்படும் அத்தனை வகை இல்ல நிகழ்ச்சி, கோவில் நிகழ்ச்சி அனைத்தையும் தமிழ் வழியாகவும் நடத்த முடியும், அதற்கான அனைத்து தகுதிகளும் தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் அசை, இசை, ஓசை நயம்பட அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழனே தமிழை புறக்கணித்து மட்டுமின்றி, 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்று தமிழுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தமிழில் பூசை செய்வதால் தவறாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை, வடமொழியால் மட்டுமே வழிபாடு செய்வதால் உழைப்பும் முயற்சியும் இல்லாமல், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேர்ந்துவிடப் போவதில்லை. அவை எல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைகளில் தமிழுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காவிட்டால் தெலுங்கர்களோ, கன்னடர்களோ கொடுப்பார்களா என்ன ? தமிழை முன்னிருத்தும் பொறுப்பு தமிழர்களிடம் மட்டும் தான் இருக்கிறது.

வீட்டைக் கட்டிப்பாருங்கள், (ஒருமுறை) கல்யாணம் செய்து பாருங்கள், அதற்கான வழிபாட்டு முறைகளை தமிழ்மறை வழி செய்தும் பாருங்கள், கொஞ்சம் பேர் முகம் சுளிப்பார்கள் பிறகு தமிழர் வழக்கமாகிவிடும். சென்ற ஆண்டு எங்கள் அக்கா மகளுக்கும் தமிழ்மறை வழி திருமணம் தான் செய்தோம், சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். எல்லோரும் தமிழ்வழியாக செய்தால், பார்பனர்கள் தமிழ் வழியாக நடத்திக் கொடுக்க முன்வருவார்கள். நம்மால் விரும்பி வாங்குகிற பொருள் தான் விற்கப்படனும். வழியில்லாமல் விற்பதைத் தான் நாமெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். நாம் முதலில் மாறுவோம், தமிழர் உலகம் தானாய் மாறும். புதுசாக திருமணம் செய்து கொள்ளப் போகிற அதிசா போன்ற கன்னிப் பசங்க தமிழ்மறை வழி திருமணத்துக்கு மாறனும் :)

9 செப்டம்பர், 2009

சென்னைக்கு வந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் !

2006 மே திங்கள் நான் பதிவுகள் எழுதத் தொடங்கிய அதே நேரத்தில் பதிவு எழுத வந்தவர் என்பதால் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனுடன் பின்னூட்டங்கள், உரையாடி மின் அஞ்சல் வழியாக நல்ல நட்பு ஏற்பட்டது. என்னுடன் சேர்ந்து 'பல்சுவை' பதிவர் மற்றும் 'வகுப்பறை' சுப்பையா அவர்களுக்கு 'வலையுலக வாத்தியார்' பட்டம் கொடுத்தவர். உரிமை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், 'உங்க வயசுக்கு ஏங்க என்னையெல்லம் வாங்கப் போங்கன்னு கூப்பிட்டுக் கிட்டு, வா..போன்னே சொல்லுங்க என்று கூறியவர் விஜய் ஆனந்த், அதை வழிமொழிந்தவர் ஆமத்தூர் ஜெகதீசன். அப்படியாக சில பதிவர்களை நான் ஒருமையில் அவர்களை அழைக்க வேண்டும் என்று அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர். டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா இன்னும் சிலரை நெருக்கம் காரணமாக நான் அவர்களை ஒருமையில் அழைப்பதை அவர்கள் கடிந்து கொண்டதும் கிடையாது. நெருக்கமாக பழகுபவர்களில் காரணங்களுக்கு அப்பாற்பட்டு மிகச் சிலரிடம் மட்டுமே பன்மையில் அழைப்பேன். என்னால் ஒருமையில் அழைக்கப்படுபவர்கள் பலரில் பெ.மகேந்திரனும் ஒருவன்.

என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்) போன்ற பெரியவர்களையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று சந்தித்து இருக்கிறேன். ரத்னேஷ் மற்றும் இளைய பதிவர்கள் பலரை அவர்கள் ஊர்களுக்கே சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.

நேரடியாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதற்கான ஆவல், உந்துதல் அவர்கள் நம்மிடம் பழகும் முறையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நீண்ட நாள் பழகுபவர்களை நிழல்படம் வழியாக அறிந்திருந்தாலும் அவர்களின் அருகாமை இன்னும் பல புரிந்துணர்வையும் நட்பின் மேன்மையையும் பன்படுத்தும் என்பது என் நம்பிக்கையைத் தாண்டிய செயல்பாடாகவே அமைந்திருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்கள் யார் என்பதை நாம் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற நம் உள் மன உந்துதல் முடிவு செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த வகையில் எழுத்தின் வழியாக நான் அடைந்த பயன் என்றால் அது எனக்கு கிடைத்த பதிவர்களின் நட்பு 'மா'வட்டம் தான்.

வளைகுடாவில் வேலை செய்யும் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஆண்டுக்கு இருமுறை தமிழகம் வந்தாலும், அவன் செல்லும் அதே நேரத்தில் நான் தமிழகம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அண்மையில் தனிப்பட்ட அலுவல் (அலுவலக அலுவல் அல்ல, சொந்த வேலை) பொருட்டு (காரணமாக) சென்னை செல்ல வேண்டி இருந்தது, எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஏற்கனவே கிழுமத்தூரிலிருந்து வளைகுடா புறப்பட ஆயத்தமாக இருப்பது தெரியும், அலைபேசியில் அழைத்து சென்னை வருகிற விவரம் சொன்னேன். நான் வளைகுடா செல்வதை இருவாரம் தள்ளிப் போட்டால் உங்களைச் சந்திக்க முடியும், தள்ளிப் போடுகிறேன், உங்களைப் பார்க்கச் சென்னை வருகிறேன் என்றான் மகேந்திரன். அதன் படி கடந்த சனி அன்று காலை 9.00 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இறங்கிய மகேந்திரனை எதிர் கொண்டேன். அன்றும், மறுநாள் மதியம் வரை என்னுடன் நான் செல்லும் இடங்களுக்கு குறிப்பாக கடந்த சனிக்கிழமை பதிவர் பைத்தியக்காரன் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு பதிப்பகம் மேல் மாடியில் உலக திரைப்படம் திரையிட்ட நிகழ்வில் என்னுடன் சேர்ந்து அங்கு வந்திருந்த பதிவர்களைச் சந்தித்தான். அன்று இரவு என்னுடன் தங்கி, மறுநாள் என் இல்ல விழா ஒன்றில் கலந்து கொண்டு விடைபெற்றான். அந்த இல்ல நிகழ்வு பற்றி பிறகு எழுதுகிறேன்.


நண்பர், பதிவர் பெ.மகேந்திரன் வாழும் பெரியார் என்று அழைக்கப்படும் பெரியாரின் நேரடித் தொண்டர், பெரியார் இயக்கத்தில் தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்ட திரு வெ.ஆனைமுத்து அவர்களின் பேரன் என்பது பலருக்கும் தெரியாது. அலுவல் சுமை, வேலைக்காக தங்கும் இடத்தில் இணைய வசதி இன்மை ஆகியவற்றின் பொருட்டு கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் ஆண்டுகள் 2008, 2009 மிகுதியாக எழுதுவதில்லை.

நான் பதிவர் நண்பர்கள் சிலரை முதன் முறை சந்திக்கும் போது, அவர்களிடம் அந்நியர் என்கிற உணர்வே ஏற்படாது. ஆண்டுகள் கணக்கில் நம்மோடு பழகிய நண்பர்களிடம் எப்படிப் பட்ட இயல்புகள், உணர்வுகள் இருக்குமோ அப்படியே இவர்களிடமும் இருக்கும். அப்படிப் பட்டவர்களிடம் தனிப்பட்ட பழக்கம் தாண்டி அவர்கள் இல்லங்களுக்குச் சென்று இல்லத்தின் அனைவரிடமும் இயல்பாக உரையாடுவதும் உண்டு. அப்படி அமையப் பெற்றவர்களில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனும் ஒருவர்.

இணையம் வழி நட்பில் நாம விரும்புவர்களாக இருந்தாலும், நம்மை விரும்புவர்களாக இருந்தாலும் அதில் ஒருவர் மற்றவரை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்தால் என்றாவது ஒரு நாள் அது நடந்துவிடும்.




கிழக்கு பதிப்பகம் வாசலில் 'போலி ......ன் அல்லக்கை மகேந்திரனும், அல்லக்கை லக்கிலுக்கும், அல்லக்கை கோவி.கண்ணனும் ஒண்ணாக வந்திருக்காங்கப்பா' ...அப்படின்னு ஒரு பதிவர் இந்த நிழல்படம் எடுக்கும் போது சொல்ல... இருவரும் சிரித்து வைத்தார்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்