பின்பற்றுபவர்கள்

இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 மார்ச், 2009

சிங்கையில் சைவ சிறுத்தை !

கவிஞர் பாண்டித்துரை மற்றும் ஜோதி.பாரதி ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், ஈழமக்களின் நலன் குறித்து உண்மையான அக்கறை கொண்டுள்ள ஒரே அரசியல் தலைவருமான தொல்.திருமாவளவன் பங்குபெற்று சிறப்புரையாற்றும், இலக்கிய நிகழ்வு பற்றி பதிவின் மூலமாக அறிவிப்பு செய்ததுடன், கலந்து கொள்ள வேண்டுமென்றும் அன்புடன் அழைத்திருந்தனர்.



நேற்று சிங்கை கவிமாலை கவிஞர்கள் சார்பாக, ஈழத்தமிழர்கள் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய மதிய உணவுடன் தொல்.திருமாவுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர், அதற்கும் நண்பரும் பதிவர்களுமான ஜோதிபாரதி மற்றும் பாண்டிதுரை ஆகியோர் அழைத்திருந்தனர் அலுவல் அழுத்தம் காரணமாக செல்ல முடியாமல் போயிற்று.

நேற்று சொல்லமுடியாமல் போனதால் இன்று எப்படியும் திருமாவைக் கண்ணுற வேண்டும், பேச்சை கேட்டுவரவேண்டும் என்று சென்றேன். மாலை 6 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி காலமெடுத்து 7 மணிக்கு துவங்கியது.

இன்றைய நாள் உலக மகளிர் நாளாக இருப்பதால் சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்கள் சார்பாக அறியபெற்ற கவிதாயினி திருமதி மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் நாள் பற்றிய கவியரங்கத்துடன் விழா தொடங்கியது

கவிதாயினிகள் உஷா, சாந்தி, பாரதி மற்றும் இன்பா ஆகியோர்களின் பெண்ணிய கவிதைகள் இன்றைய நன்னாளுக்கு சிறப்பு சேர்க்கும்படி அமைந்தது.

அதன் பிறகு தொல்.திருமா அவர்களின் சிறப்புரை தொடங்கியது. தொடங்கும் முன்பே திருமா அவர்களிடம் சில இளைஞர்கள் தங்களுக்கு தமிழ் பெயர் சூட்டுமாறு வேண்டுகோள் வைத்தனர். (வடமொழி) கடவுள்கள் (இங்கே அந்த பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பெயர் தாங்கி இருந்த இருவருக்கும், முத்தழகன், அறிவழகன் என்று பெயர் சூட்டினார். திருமாவிற்கு ஆவலுடனும் மகிழ்ச்சியுடன் பலர் பொன்னாடை போத்தினார்கள். பிறகு தனது உரையைத் தொடங்கினார் திருமா.


"அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பித்தாக்கு" என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி முழுக்கமாக வைத்திருக்கும் திருமா, வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப் பேசச் சொல்வது அவரது வீர உரையை கேட்கவேண்டும் என்பதற்காக செல்லும் என்போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான், ஆனால் திருமா மிகச் சிறப்பாகவே பேசினார். பெளத்தம், சமணம், வள்ளுவம், வள்ளலார் கொள்கை இவற்றிற்கிடையேயான ஒற்றுமைகள் அவை வழியுறுத்துவது என்ன என்பதை மிகவும் சிறப்பாக பேசினார். எல்லா மதங்களுமே மனிதர்களிடம் அன்பு வைக்கச் சொல்கிறது, ஆனால் புத்தரும், வள்ளலாரும், வள்ளுவரும், பிற உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், வாடிய பயிறை கண்ட வள்ளலாரும், பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்ற திருவள்ளுவரும், அன்னப் பறவையை காப்பாற்றி மருந்திட்ட புத்தரும் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் நாமோ ஒரு மனிதன் விபத்தில் சிக்கினால், அவன் சொந்தக்கரான, சாதிக்காரனா, மதத்தைச் சேர்ந்தவனா, இந்தியனா என்றெல்லாம் பார்த்தே அவர்களுக்காக வருந்துகிறோம்"

"மனித நேயம் மறைந்துவிட்டதாலேயே, துன்பப்படும் மனிதன் நமக்கு வேண்டியவர் என்றால் மட்டுமே அதுபற்றி ஏதேனும் சிந்திக்கிறோம், பிற உயிர்களை நேசிக்கத் தெரிந்தால் தான் சக மனிதனையும் நேசிக்க முடியும், இதைத்தான் வள்ளுவரும், வள்ளலாரும் வழியுறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் ஆன்ம நேயம் என்கிறோம். ஆன்மநேயம் இருந்தால் மனிதன் விடுதலை பெறலாம், மனித விடுதலையே ஆன்மநேயம்" என்று முடித்தார்....ஏறக்குறைய ஒரு மணி நேர சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது, இடையிடையே ஈழத்தமிழர்கள் துயர் குறித்து திருமா அவர்கள் பார்வையாளர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக பேச்சுரையை அமைத்துக் கொண்டார்.

திருமா வள்ளலார், வள்ளுவர் பற்றிப் பேச மிகவும் தகுதி படைத்தவர் ஏனெனில் கொல்லாமை அறத்தை கடைபிடித்து புலால் உணவு மறுத்தவர் என்று பின்னர் அறிந்தேன்.

நிகழ்ச்சியின் நிறைவில் திருமா அருகில் சென்று கைகுலுக்க வாய்ப்புக் கிடைத்தது, அருகில் செல்வோர்கள் அனைவரையுமே மிக தோழமையுடன், கனிவு, அன்புடன் நடத்துகிறார். இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்கள் தமிழர்களுக்கு கிடைப்பது அரிதே என்றுணர்ந்தேன். அரசியல் நோக்கின்றி ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் விடுவதுடன், பல வழிகளில் அவர்களின் துயர் துடைக்கும் போராட்டம் நடத்தும் ஒரே அரசியல் தலைவன் திருமா மட்டுமே.

ஏற்பாடு செய்திருந்த இடம் சிறிய இடம் என்றாலும் சுமார் 500 பேர்களுடன் அரங்கு நிறைந்திருந்தது


நிகழ்ச்சியில் பேசிய சிலர் 'பிரபாகரன்' என்ற பெயரைச் சொல்லியதும் கூட்டத்தினரின் கைதட்டல் ஆரவாரம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பை காற்று அடித்து வெளிக்காட்டியதைப் போன்று உணர்ந்தேன்.

திருமாவை நேரில் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆவல் முழுமையடைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பாண்டித் துரைக்கும், ஜோதிபாரதிக்கும், நிழல்படம் எடுக்க உதவிய முகவை இராம் அவர்களுக்கும் நன்றி.



நிகழ்ச்சிக்கு பதிவர்கள் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.


(முகவை இராம், பாண்டிதுரை, மீனாட்சி சுந்தரம், தமிழ் ஐயா இளங்குமரன்)


நிகழ்ச்சி முடிந்ததும், பிறகு திருமா வசந்தம் தமிழ் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார்.

10 நவம்பர், 2008

மிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல !

தத்துவ நூல்களை வாசிப்பென்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுயநலம் கூட எதாவது ஒரு கோட்பாட்டிற்குள்ளேயே அடங்கும் என்பதால் உலகின் அசைவுகள், செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவம் சார்ந்தவையே என்று என்னால் கூறமுடியும்.

அன்புத் தம்பி ஈப்போ விக்னேஷ்வரன் சிங்கை வருகையின் போது அன்புப் பரிசாக ஒரு நூலை கொடுத்தார். மற்றவர்களுக்கு கொடுத்ததைவிட அளவில் மாறுபட்டு இருந்ததைக் கூட நான் அதைப் பெரும் போது கவனிக்கவில்லை. பரிசு கிடைப்பதே பெருமகிழ்ச்சி என்ற நினைப்பு திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் குறைந்திருந்தது. மேலும் மேலே பரிசுத்தாள் சுற்றப்பட்டு இருந்ததால் வீட்டில் சென்று பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். பெரிய நிகழ்வாக இல்லாமல், நினைவு பரிசாக, பொதுவாக நாம் யாருக்காவது அன்பு பரிசு கொடுத்தால், நாம் அங்கிருக்கும் போதே... அவர்கள் அதைத் திறந்து பார்த்து எதாவது சொல்லவேண்டும் என்றே எதிர்ப் பார்ப்போம். மாறுபட்ட ஒரு நூலைக் கொடுக்கும் விக்கி அதே போன்று நினைத்திருப்பார் போலும், 'அண்ணே பிரிச்சு பார்த்திங்களா' ன்னு கேட்டார். சந்திப்பு கூட்டம் முடியட்டும் வீட்டில் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அதன் பிறகுதான் தெரிந்தது, இவ்வளவு ஆவலாக கேட்பவர், புத்தகத்தை நான் திறந்தாவது பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதே. வீட்டுக்கு திரும்பும் போது பிரித்துப் பார்த்தேன்.

"மிர்தாதின் புத்தகம்" - மூலம் மிகெய்ல் நெய்மி, தமிழில் புவியரசு என்றிருந்தது. அன்றும் இரவு 10 மணி அளவில் பதிவர் நண்பர்களுடன் இருந்ததால் படிக்க முடியவில்லை, மறுநாளும் அலைச்சல், விக்கியை வழியனுப்பும் போது மீண்டும் கேட்டார். புத்தகத்தைப் படிச்சிங்களா ? ... 'இல்லப்பா நேரம் கிடைக்கல' ..படிங்க உங்களுக்கு பிடிக்கலாம், என்று கூறிவிட்டு சிறு முன்விளக்கமும் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் தான் படித்தேன். பின் அட்டையில் ஓசோவின் குறிப்பாக

"உலகின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, அவையாவும் இதற்கு ஈடாகாது, நைமி எல்லா நூற்றாண்டிற்கும் சேர்த்தே இவரே மாபெரும் எழுத்தாளர்"
- என்பதை வாசித்த போது, நல்ல படைப்பாக இருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இதைத் தமிழில் உருவாக்க எடுத்துக் கொண்ட நல்ல அனுபவ முன்னோட்டத்துடன், புத்தகத்தில் இருக்கும் நாவல் பகுதியின் சிறுகுறிப்புடன் புத்தகம் தொடர... அதன் உள்ளீடை நோக்கி பயணம் செய்தேன்.

ப்ளாட்டோ, சீசர் போன்ற தத்துவ ஞானிகள் மேலை நாடுகளில் தோன்றி இருந்தாலும், இஸ்லாம் / கிறித்துவ மதங்களில் தத்துவங்கள் என்பதைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் இவ்விரு மதங்களில் வரும் நோவாவின் வரலாற்றைத் தொடர்பு படுத்தி முழுக்க முழுக்க தத்துவமாகவே எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நாயகன் 'மிர்தாத்'தின் ஒவ்வொரு உரையாடல் வரிகளும் தேர்ந்தெடுத்த சொற்களான தத்துவங்கள், அவை அறிவுரையா, பேருண்மையா என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னி எழுதப்பட்டு இருக்கிறது.

"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான், கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"

நிழல்கள் அற்றது ஒளிதானே, மனிதனின் நிழல் என்று ஆசிரியர் சொல்வது மனிதனை மூடி இருக்கும் மனத்திரைகளைத்தான்.

"மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் பற்றுவதை விட்டுவிட்டாலே பற்றுறற்று போகும்"

(பற்றுக பற்றற்றான் பற்றினை - என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது)

எதை நாம் மிகவும் விரும்புகிறோமோ, அது கிடைக்காமல் போகும் போதும், நம் கைவிட்டு நழுவிச் செல்லும் போது சொல்ல முடியாத சோகத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடும்

"அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பே மரணத்தின் சீழ், ஆனால் இரத்தம் நரம்புகள் வழியாக தடையற்று பாய்வது போல், அன்பு உடலெங்கும் பாயவேண்டும், இரத்தம் தடைபட்டால் நோய்தான் வரும், வெறுப்பு என்பது தடைபட்ட அன்புதான்...அன்பில் அதிகம் குறைவெல்லாம் கிடையாது, அதை அளக்க முயற்சித்தாலே அது நழுவி சென்றுவிடும்"

நூல் பேசுவது இன்னும் ஏராளம் ஏராளம்...மரணம், பிறப்பு, மறுபிறப்பு...விபத்துகள், அதற்கான காரணங்கள், புலனடக்கம், நாவடக்கம், பேராசை, பற்று அறுத்தல், பிரபஞ்ச சுழற்சி, கடவுள், ஆதாம் ஆப்பிள்...ஆன்மிகம் தொடர்பில் அனைத்தையும் பேசுகிறது.

முப்பரிமாணங்களை ஒருங்கே அமைந்த நூலாகத்தான் இதனை உணர்ந்தேன். அதாவது நாவல் என்று படித்தால் நாவல், தத்துவம் என்று படித்தால் பகவத் கீதையைப் போல் சிறிய அளவிளான தத்துவ நூல், உளவியல் என்று பார்த்தாலும் முழுக்க உளவியல் என்பதாக உணரப்படும் ஒரே நூல். ஒப்பீடு அளவில் சுவாமி விவேகாநந்தரின் ஞானயோகம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை வெகு இயல்பான உரையாடல்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.


கதைப்படி நோவா வழி வரும் ஒரு மடலாயத்தின் 8 துறவிகளுக்கு தலைவராகும் மிர்தாதின், ஆன்மா மற்றும் உடல் வாழ்க்கை பற்றிய முழு அறிவை போதனை செய்கிறார், அவரை மதிக்காத முன்னாள் மடாலயத் தலைவரான 8 ஆம் துறவி பின்னர் தவறை உணர்ந்து கொள்ள, 8 ஆம் துறவியைத் தேடிப் போகும் ஒருவர் மூலம் அந்த அறிவுரைகள் வெளி உலகத்துக்கும் தெரியவருகிறது.


இந்நூலை விமர்சனம் செய்வது எளிதல்ல, பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி என தத்துவம் மற்றும் முற்போக்கு, ஆன்மிகம் என எதாவது ஒன்று பேசப்படுக்கிறது, பெருக்கெடுத்த ஆற்றின் நீரை கையளவு நுரையுடன் அள்ளிக் காட்டி இதுதான் அந்த ஆறு என்று சொல்ல முனையும் அளவுக்குத்தான் என்னால் அது பற்றி சொல்ல முடிகிறது.

கவிஞர் புவியரசுவின் மொழிப்பெயர்ப்பு சிக்கல் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டாலும் நல்ல நேர்த்தியாகவே மொழிப் பெயர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மொழிப்பெயர்ப்பே இப்படி என்றால் மூல நூலை அதன் மூல மொழியிலேயே படித்தால் அதன் கருத்தாழம் இன்னும் மிகுதியாக இருக்குமோ என்று நினைக்க வைத்திருக்கிறார்.



புத்தகம் கிடைக்கும் இடம்:
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை
சென்னை 017
தொலைபேசி எண் ; +91 44 2433 2682

இந்நூலை நினைவு பரிசாக எனக்கு வழங்கிய பதிவர் விக்னேஷ்வரன் மற்றும், நூலை பரிந்துரைத்த திரு ஜவகர் ஆகிய இருவருக்கும் நன்றி

தொடர்புடைய மற்றொரு சுட்டி : The Book of Mirdad - துக்ளக் மகேஷ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்