பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2012

நித்தியானந்தன் இந்திய சமய அடையளமா ?


நித்தி - ரஞ்சிதா கசமுசா இந்தியர்கள் அறிந்த ஒரு கன்றாவி தகவல், வெ.ஆ மூர்த்தி பாணியில் சொல்லப் போனால் துவண்டு போன செல்வாக்கை தூக்கி நிறுத்த நித்தி எவ்வளவோ முயற்சிக்கிறார், பார்த்து சிரித்து / துப்புவதைத் தவிர நமக்கு அதில் ஒன்றும் இல்லை, தானே புயலுக்கு வாரி வழங்குவதன் மூலம் ஆசிரமத்திற்கு கூட்டம் சேர்க்க முயன்றார் ஒண்ணியும் வேலைக்கு ஆகவில்லை, பின்னர் எதோ ஒரு வெளிநாட்டு அமைப்பு 100 சிறந்த ஆன்மிக திலகங்களில் ஒருவராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாக வெளம்பரம் செய்தார், அதுவும் வேலைக்கு ஆகவில்லை, இறுதி முயற்சியாக மதுரை ஆதினத்திடம் காலில் விழுந்து தன்னை வாரிசாக அறிவிக்கச் சொல்லி மன்றாடி அதன்படி முடிசூட்டிக் கொண்டுள்ளார், இதன் பக்க(வாத) விளைவுகள் இனிமேல் தான் தெரியும். நித்தி மட்டுமல்ல காஞ்சிபுரம் சுப்புணி சாமி உள்ளிட்ட எந்த ஒரு இந்திய சமய புருடாக்களையும் ஒட்டு மொத்த இந்திய சமய வழிகாட்டியாக யாரும் கருதாத நிலையில் எந்த மடத்துக்கு ஆண்டி எவனாக இருந்தால் என்ன என்பது தான் இந்திய சமயங்களைப் பின்பற்றுபவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது, நன்றாக வாசிக்கவும், நான் இந்து மதம் என்று குறிப்பிடவில்லை, எனக்கு அந்தச் சொல்லில் உடன்பாடும் கிடையாது, இந்திய சமயங்கள் பன்முகத் தன்மை கொண்டது அதில் சுடலை மாடனுக்கும், ஜெக்காம்மாவிற்கும் கூட இடம் உண்டு. எனவே நித்தி இந்திய சமயங்களின் ஒரே அடையாளம் போன்று நினைப்பதும், பரப்புவதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது.

தமிழ் நாட்டில் ஆதினங்கள் சில உண்டு, திருவாடுதுறை ஆதினம், மதுரை ஆதினம் இன்னும் வேற என்ன என்ன இருக்கிறதோ தெரியவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதின வாரிசுப் பிரச்சனையில் வெட்டு குத்து கூட நடந்தாகத் தகவல் வந்தது. குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு எந்த ஒரு ஆதினத்திற்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக் கிடையாது, பெரியார் போற்றிய ஆன்மிக வாதிகளில் வள்ளலார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் உண்டு என்பதால் அவர்கள் சமயங்களைக் கடந்த ஆன்மிகத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். நித்திக்கோ, தற்போதைய மதுரை ஆதினத்திற்கோ அப்படியான தகுதி எதுவும் கிடையாது, கோல்கேட் வெளம்பரம் போல் விளம்பரத்தில் பல்லைக் காட்டி, கூட்டம் காட்டி, பெரிய தங்க ஆசனம் போட்டு எங்கள் பராக்கிரமத்தைப் பாரீர் என்று பறைசாற்றுகிறார்கள், பொம்பளப் புள்ளைங்களை பெத்தவன் யாரும் இவர்கள் பக்கம் இனி திரும்புவார்கள் என்பதே ஐயம் தான்.

******

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் இந்து மதத்தின் (அவர்கள் இந்து மதம் என்றே சொல்கிறார்கள்) இழுக்கு பாரீர் என்று நித்தி மதுரை ஆதினமானது இந்து மதத்தின் அவமானம் போன்று எழுத அதற்கு அவருடைய பங்காளிகள் ஆகா இவர்கள் (இந்திய சமயங்களைப் பின்பற்றுவர்கள்) ஏதோ தலை குனிந்து நிற்பது போல் 'இஸ்லாமியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்றெல்லாம் கும்மியடித்துள்ளனர், இஸ்லாமியர் என்ற பெயரில் சாருக்கானும், கமலஹாசனும் கனடா, அமெரிக்காவில் படும் அவமானங்களை அவர்களிடம் கேட்டாதால் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் மீதான கடுமையான குடிநுழைவு சோதனைகளுக்கு இந்திய அரசு சார்பில் கூட கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான தலைகுனிவு அவர்களாகத் தேடிப் பெற்றது இல்லை, அவர்களின் பெயர் இஸ்லாமிய மதம் சார்ந்தவையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைத்த வெகுமதி. அப்துல்கலாமையே அவிழ்த்துப் பார்த்தது தான் அமெரிக்கா, அதற்கு அவர் ஒரு அறிவியலாளர் என்பது போல் அவர் ஒரு முஸ்லிம் என்பதும் காரணம். அவ்வாறு நடந்த விரும்பத்தகாதவைகளுக்கு சுவனப்பிரியன் மற்றும் அவரது நண்பர்கள் பெருமை பட்டிருந்தால், நித்தியின் செயலை இந்து மதத்துடன் முடிச்சுப் போட்டு நாம் சிறுமை அடையளாம், அதற்கும் வாய்ப்பில்லை காரணம் நித்தி இங்கு இந்திய சமயங்களின் முன்னோடியோ, வழிகாட்டியோ இல்லை.

இதெல்லாம் விட நித்தி மீது வைக்கப்படும் 'செக்ஸ்' குற்றச் சாட்டை சுட்டிக் காட்டுகிறார்கள், நித்தி பாலியல் வண்புணர்வில் ஈடுபட்டதாக வழக்குகள் இல்லாத போது அவர் மீதான பாலியல் குற்றச் சாட்டு என்பது புறந்தள்ளக் கூடியதே, வயதுவந்தவர்களின் விரும்பிய பாலியல் ஈடுபாட்டில் மூன்றாம் நபர் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும் கூட நித்தி பிரம்மச்சாரியம் என்ற பெயரில் 1000க் கணக்கான இளைஞர்கள் / இளைஞிகளை வீட்டைவிட்டு ஓடிவரச் செய்து ஆசிரமத்தில் கூட்டம் சேர்ந்தவர் என்பதால், அவர் விளம்பரம் செய்த பிரம்மசாரியத்தை அவர் மீறிவிட்டார், அவருக்கு அது பற்றிப் பேச தகுதி இல்லை, தவிர பாலியல் ஒழுக்கம் என்பதில் அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர் மீதான குற்றச் சாட்டு, காரணம் அதுவும் அவர் தன்னை அவ்வாறு விளம்பரப் படுத்திக் கொண்டதால் மட்டுமே. அதையும் சுட்டிக் காட்டிக் கேள்வி கேட்கவேண்டியவர்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரை நம்பியவர்கள் மட்டுமே, மூன்றாம் நபராக அவனைப் போன்றோர்களை நம்பாதீர்கள் என்று மட்டுமே நம்மால் நித்தி பற்றிய கருத்தை முன்வைக்க முடியும்.

இஸ்லாமும் பாலியலும் நமக்கு தெரிந்த ஒன்று தான், போதிய அளவு செல்வம் உள்ள ஒருவர் தன்னுடைய கட்டுபாடற்ற இச்சைக்காக தொடர்ந்து திருமணங்கள் செய்து மனவிலக்குக்கிற்கு நஷ்ட ஈடு கொடுக்க முடிந்தால் அவர் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இஸ்லாமிய சட்டங்கள் என்பது நமக்குத் தெரியும், ஒருவர் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் நான்கு திருமணங்கள் வரை செய்யலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது, நன்றாக கவனியுங்கள் நான்கு என்பது எண்ணிக்கைத் தடை இல்லை, ஒரே நேரத்தில் நான்கு என்பது தான் இதன் பொருள், ஏற்கனவே 4 மனைவிகள் இருந்து ஐந்தாவது ஒன்றை மணக்க நான்கில் ஒன்றை மனவிலக்கு செய்து நஷ்ட ஈடு கொடுத்துவிட்டால் ஐந்தாம் திருமணத்திற்கு தடை என்பதே கிடையாது. இஸ்லாமைப் பொருத்த அளவில் ஒருவரின் பாலியல் வேட்கை என்பது திருமணம் மூலமாக் தொடரவேண்டும் என்பது தான், ஆனால் நடைமுறையில் பணம் உள்ளவர்கள் யாரும் தற்காலிகமாக ஒரு திருமண பந்ததைத் ஏற்படுத்திவிட்டு நன்றாக அனுபவத்துவிட்டு நஷ்ட ஈடு கொடுத்துவிடலாம். கிட்டதட்ட குறிப்பிட்ட காலத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தம் போன்றவை தான், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பதில் பெண்ணை போதைப் பொருளாக அல்லது போகப் பொருளாகவே நினைக்கும் ஒரு ஆணின் பாலியல் விருப்பம் என்பதைத் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் ? இதையும் ஏன் திருமணம் என்ற சொல்லால் அலங்கரிக்க வேண்டும் என்கிற ஞாயமான என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா ? பணக்கார இஸ்லாமியர்களின் விருப்பம் போல் திருமணமும் மணவிலக்கும் பாதிக்கப்படும் பெண்களும் அவர்கள் வாரிசுகளும் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியாவது தெரியுமா ? Single Mother என்றால் என்ன ?

ஒரு பெண்ணை திருமணம் செய்து பாலியல் மோசடி செய்வதற்கும், திருமணமே செய்யாமல் பாலியல் மோசடி செய்வதற்கும் வேறுபாட்டில் பணவிரயம் மற்றும் ஊர அறிய செய்த மோசடி / மறைவாக செய்த மோசடி என்பது தவிர்த்து வேறு என்ன வேறுபாடு உள்ளது ? இரண்டிலுமே குழந்தை பிறந்து இருந்தால் இவன் தான் அப்பன் என்று தற்காலிக டி என் ஏ சோதனைகள் நிறுபனம் செய்யும், உரிய இழப்பீட்டிற்கு வழக்கு தொடுக்க முடியும்.

முகமது நபியின் திருமணங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் அது அந்த காலம் அப்போது குறிப்பிட்ட சமூகத்துடன் இணைத்துக் கொள்ள அவ்வாறான திருமணங்கள் நடைபெற்றன என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம், ஆனால் ஜைனப் திருமணம் ஒழுக்கமான நிகழ்வா ? வளர்ப்பு மகனுடைய மனைவியின் அழகில் மயங்கி, அவரை வளர்ப்பு மகனிடமிருந்து மணவிலக்கு செய்யச் சொல்லி, பின்னர் மண முடித்துக் கொண்டது உலகினர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வா ? இறைத்தூதருக்கு உறவுகள் பொருளல்ல என்று கூறுவீர்களே என்றால், உடல் இச்சையும், திருமணங்களும் அழகிய முன்மாதிரி இறைத்தூதருக்கான அழகா ? பொருள் பொதிந்ததா என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் வைத்துள்ளீர் ? பின்லேடன் எந்த காலத்தில் இருந்தான் அவன் செய்து கொண்ட திருமணங்கள் எத்தனை ? அவனை இஸ்லாமிய அடையாளமாக ஏற்காவிட்டால் அவனுக்காக சிறப்புத் தொழுகை சென்னை பள்ளிவாசலில் இடம் பெற்றது ஏன் ? முகமது காலத்தில் 6 வயது சிறுமியாக ஆயிஷா அன்னையை முகமது திருமணம் செய்து கொண்டது போன்று இன்று அவ்வளவு சிறுவயது திருமணங்கள் நடக்காவிடினும் இன்றும் கூட 14 - 18 இளம் வயது திருமணங்கள் இஸ்லாமியருக்குள் நடக்கிறது, இதை நினைத்துக் கொண்டு தான், அண்மையில் அறிவிக்கப்பட்ட கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை இஸ்லாமியர்களின் ஒரு பிரிவு கடுமையாக எதிர்த்தது.

இன்றைய தேதிக்கு,

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கும் 'வைத்திருப்பதற்கும்' பெரிய வேறுபாடு இல்லை, ஏனெனில் இரண்டிலுமே பாதிக்கப்படும் பெண்களின் தொடர்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் என்பதே கிடையாது. தங்கள் மதத்தில் சீர்த்திருத்த மாற்றம் கொண்டுவர எவ்வளவோ இருந்தும் பிற மதத்தினரை எள்ளி நகையாடுவதைப் பார்க்க நமக்கும் நகைப்புத்தான் வருகிறது.

இந்திய சமயத்தினரின் ஒட்டு மொத்த அடையாளம் என்று ஒரு சாமியார் பயலும் கிடையாது என்பதை இந்திய சமயத்தினர் நன்கு புரிந்துள்ளனர் என்பதை இஸ்லாமிய சமயவாதிகளுக்கு நான் கூறிக் கொள்கிறேன். உங்களில் பின்லேடனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெரும் விழுக்காட்டினர் என்பது போல் நித்தியை புறம் தள்ளுபவர்கள் ஏராளம். நித்தியால் யாரும் தலை குனியவில்லை, அதற்கு தேவையும் இல்லை, உங்களுக்கு பலதார திருமணங்களில். இளம் வயது திருமணங்களில் உவர்ப்பு இல்லாத போது வன்புணர்ச்சி என்ற அளவுக்கு செல்லாத சாமியார்களின் பாலியல் இச்சைகளை இந்திய சமயவாதிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

மற்ற மதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கவில்லையா ? இளம் வயது திருமணங்கள் நடக்கவில்லையா ? நடக்கிறது, அவை திருட்டுத் தனமாக நடக்கிறது, ஆனால் பிற மதங்களில் பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டப்பட்ட அற்புத வழிகாட்டல் என்று யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. ஏழ்மை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்த ஒரு அப்பனும் தன் மகளை ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பணக்காரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்யலாம் என்பதை நினைத்துப் பார்க்கவே நாணுவான்.

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.

26 ஏப்ரல், 2012

ஆவியில் கோவி ...!

நாளிதழ்களில் பெயர் வருது ஏற்பு (அங்கீகாரம்) என்று நான் வலைப்பதிவில் எழுதும் முன்பு நினைத்திருந்தேன், வலைப்பதிவில் எழுதும் முன்பு சிங்கைத் தமிழ்முரசில் கவிதை, சிறுகதைகள் எழுதியுள்ளேன், வெளி இட்டிருகிறார்கள், வலைப்பதிவில் எழுதத் துவங்கிய பிறகு பதிப்புகளுக்கு (Printed Magazine) எழுதுவதில்லை, காரணங்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் அலுப்பு என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை, தவிர வலைப்பதிவில் எழுதும் போது அதற்கான எதிர்வினைகள், பாராட்டுகள், கருத்துகள், மாற்று கருத்துகள் உடனடியாகக் கிடைக்கிறது என்பதும் தான்.

விகடன் 100 ஆண்டு காலத் தமிழக வார இதழ், ஓரளவு நடுநிலையோடு எழுதுவார்கள், தினமலர், துக்ளக் சார்பு நிலைகளை ஒப்பிட விகடன் குழுமம் ஆயிரம் மடங்கு சிறப்பானது. விகடன் குழும ஆனந்தவிகடனில் சார்பு அரசியல் மிகக் குறைவே, அதனால் தான் அவர்களின் வார இதழ் மற்றும் பிற இதழ்கள் தமிழக இதழ்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.

ஆனந்தவிகடனின் இந்தவாரப் பதிப்பில் எனது வலைப் பதிவு பற்றிய தகவல்கள் வெளி இடப்பட்டுள்ளன. அதில் நான் சர்சைக்கு இடமாக எழுதியுள்ள (இந்தியா மற்றும் திருநங்கைகள் குறித்தவற்றின்) இரண்டு பத்திகளும் உள்ளன. இதே போன்று வலையோசையை தினமலர் திரட்டினால் இது போன்ற தகவல்களை வெளி இடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

விகடனின் வாசகர் வட்டத்தை ஒப்பிட அவர்களுடைய வார இதழில் எனது பதிவைக் குறிப்பிட்டு அறிமுகம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
விகடன் குழுமத்திற்கும், விகடனின் வலையோசையில் எனது பதிவு இடம் பெற்றிருப்பதாகச் சுட்டிக் காட்டி வாழ்த்திய நண்பர்களுக்கு மிக்க நன்றி.




கஞ்சி (Congee) !


நேற்று இரவு எங்கள் வீட்டு அருகே இருக்கும் பெருங்கடை வளாகத்திற்கு இரவு உணவிற்காகச் சென்றோம், சிங்கப்பூர் கோமளாஸ் அங்கே புதிதாகக் கிளைத் (திறந்)திருந்தார்கள். சிங்கப்பூரில் Food Court எனப்படும் உணவு கடைத் தொகுதிகள் மிகுதி. நாம் தேடும் உணவு இல்லா விட்டாலும், இருப்பதை உண்ணலாம் என்ற அளவில் உணவுக் கடைகளுக்கு சிங்கையில் பஞ்சம் என்பதே இல்லை, இரவு பகல் என்னேரமும் திறந்திருக்கும் உணவுக் கடைகள் ஏராளம் இங்கு உண்டு, சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் இரவு 11 மணிக்கு மேல் கையேந்தி தள்ளுவண்டிக் கடைகள் தவிர்த்து அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் சென்ற முறை சென்னை சென்ற போது நான் உணர்ந்தது அது. சிங்கப்பூரார்கள் வெளி நாட்டிற்குச் சென்றால் அவர்கள் நினைத்துப் பார்த்து ஏங்குவதென்பது சிங்கப்பூர் உணவு வகைகள் குறித்துதான், அந்த அளவுக்கு ஏராளமான உணவுக்கடைகளும் அவற்றில் உணவு வகைகளும் அடக்கம். ஒரு உணவுக் கடைத் தொகுதியில் 10க்கும் மேற்பட்ட உணவு கடைகள் இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் ஏராளமான வகைகள் இருக்கும், நாள் தோறும் இதையே சாப்பிட வேண்டுமா ? என்கிற கேள்வியே இல்லாமல் விருப்பம் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகையை ரசித்து சாப்பிடுவர், இந்தியர்கள் ஒரு நாள் பேசமால் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், சீனர்கள் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், எனவே சீனர்கள் நிறைந்த சிங்கப்பூரில் ஆசியாவின் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும், சைவமோ, அசைவமோ விருப்பம் போல் உண்ணலாம். 

*********

நேற்று சென்ற கோமளாஸ் கடை அருகே ஒரு சீன உணவுக் கடைகளில் 'Congee' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உணவு அறிப்புப் பலகையில் வகை வகையான Congee களின் படங்கள் போடப்பட்டு இருந்தது, பார்க்க நமது வீடுகளில் செய்யப்படும் கஞ்சிக்கும் அதற்கும் வேறுபாடுகள் என்பது அதனோடு அவர்கள் கலந்து தரும் பொருள்கள் (வேக வைத்தக் கோழித் துண்டு, பன்றி இறைச்சி, நெத்திலி கருவாரு, திருக்கை மீன் சதைத் துண்டுகள், வேக வைத்த வேர்கடலை, வேக வைத்த சர்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பிஞ்சு சோளம்) போன்றவை தான். நமது தமிழ் நாட்டுக் கஞ்சி நொய் அல்லது குருணை (பொடித்த பச்சை அரிசி) உடன் சேர்த்த உடைத்தப் பச்சைப் பயிறு சேர்த்து கூழுக்கு முன்பான பதத்தில் உப்பு சிறிதளவு இருக்கும். அத்துடன் தேங்காய் துருவல் கலந்து உண்ண தனிச் சுவை. விரைவிலேயே செரிமானம் ஆகிவிடும். காலை உணவுக்கு ஏற்ற எளிமையான உணவாக இருந்தது. இன்றைக்கு அரசியலுக்காக கஞ்சி காய்ச்சு ஊத்துவதாகவும், கஞ்சித் தொட்டித் திறப்பதாகவும் சொல்லி கஞ்சி என்பதே எதோ பஞ்சம் பட்டினியில் இருக்கும் ஏழைகளின் உணவு என்பதாக நினைக்க வைத்துள்ளனர்.

ஆனால் கஞ்சி ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் காலை உணவில் முதன்மையாகவே இருந்துவருகிறது, அதை ஆங்கிலத்தில் Porridge என்றும் சொல்லுகிறார்கள், பொதுவாக Congee என்று சொன்னாலும் இங்குள்ளவர்களுக்கு விளங்கும், எனவே தான் அறிவிப்பு பலகை மற்றும் உணவுப் பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டும் உள்ளனர். இந்த சொல் எப்படி இங்கு பரவியது, நேற்று நான் பெயர் பலகையில் Congee என்று படித்ததும், 'கஞ்சி' என்ற உணவுச் சொல் ஒரு வேளை தமிழ் தவிர்த்த பிற மொழிச் சொல்லோ என்று நினைக்க வைத்தது.


பிறகு இணையத்தில் தேடிப் பார்க்க கஞ்சி பற்றிய ஏகப் பட்டத் தகவல்கள் கிடைத்தன. 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப் பாட்டு தொகுப்பு, அதில் இடம் பெற்றிருக்கும் பட்டினப் பாலைத் தலைப்பில் காவேரியின் சிறப்புச் சொல்லி பின்னர் சோழ நாட்டின் சிறப்பு கீழ் கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது

பட்டினப்பாலை
புலிப் பொறி போர் கதவின்
திருத் துஞ்சும் திண்காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து  ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும். (40-50)


காவிரிப்பூம்பட்டினத்தின் புகழ் நிலைப்பதற்கும், சோழ நாட்டினைப் பற்றிய புகழ் மொழி எங்கும் பரவி வளர்வதற்கும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு, செல்வம் தங்குகின்ற இரட்டைக் கதவுகளைக் கொண்டதாக வலிமையான பாதுகாவலோடு அகன்ற அட்டிற் சாலைகள் அமைந்திருந்தன. இவ்வுணவுச் சாலைகளில் சோற்றினைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறு போலப் பரந்து காவிரிப்பூம்பட்டனத்துத் தெருக்களில் ஓட, அங்கே காளைகள் ஒன்றொடொன்று சண்டையிட சோற்றுக் கஞ்சி சேறானது- அச்சேற்றின் மீது தேர்கள் ஓட , சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அப்புழுதி படிந்ததால், பல்வேறு வண்ணங்களால் வேலைப்பாடமைய ஓவியம் தீட்டப்பட்டு வெண்ணிறமாக இருந்த அரண்மனை,  புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல் மாசு படிந்து காட்சியளித்தது.

திருஞானசம்பந்தர் எழுதிய திருமுதுகுன்றம் தேவாரத் திருப்பதிகம் (இரண்டாம் திருமுறை 64வது திருப்பதிகம்) 696 ஆம் பாடலில்

கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.

கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.

- இதில் ஞானசம்பந்தனின் சமணர்கள் மீதான எள்ளலை / வெறுப்பைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் சமணர்களின் முதன்மையான உணவாக கஞ்சி இருந்திருக்கிறது என்று அறிய முடிகிறது.

கஞ்சி என்ற சொல் பழந்தமிழ் காலம் தொட்டே வருவதால் அது தமிழ் சொல் தான். இந்த சொல் இந்திய மொழிகளில் பரவலாக சற்று திரிந்தும் ஆசிய மொழிகளில் 'கஞ்சி' என்ற ஒலிக்கப்படுகிறது.

கஞ்சி பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் விக்கிப் பீடியாவில் தொகுக்கப் பட்டுள்ளது. ஆனால் கஞ்சி என்ற சொல் எந்த மொழிச் சொல் என்று அவர்கள் குறிப்பிடவில்லை, 

Congee is a type of rice porridge popular in many Asian countries. It can be eaten alone or served with a side dish. Names for congee are as varied as the style of its preparation. Despite its many variations, it is always a thick porridge or soup of rice which has usually disintegrated after prolonged cooking in copious water.
To prepare the dish, rice is boiled in large amounts of water until it softens significantly. Congee can be made in a pot or in a rice cooker. Some rice cookers have a "congee" setting, allowing it to be cooked overnight. The type of rice used can be either short or long grain, depending on what is available and regional cultural influences. Culture also often dictates the way congee is cooked and eaten.
In other Asian cultures, it is also called kanji (Tamil/Malayalam/Tulu), pakhal bhat (Oriya), ganji (Kannada/Telugu), juk (CantoneseKorean), cháo(Vietnamese), deythuk (Tibetan), chok (Thai), kayu (Japanese), lúgaw (Filipino), "Bubur" (Malay) or jaou (Bengali) which is derived directly from the Chinese character zhou (粥, which means gruel in Mandarin). Zhou is also called xifan in some Chinese provinces.

காய்ச்சு என்று வினைச் சொல்லின் பயன்பாட்டுத் தொடரின் பெயர் சொல் திரிபாக (பஞ்சாக - மென்மையாக, கூழாக காய்ச்சுதல்) கஞ்சி என்று சொல் வந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

மேலே உள்ள அறிவிப்புகள் போல் தமிழகத்தின் உணவு விடுதிகளில் இங்கு கஞ்சி கிடைக்கும் என்று எழுதுவார்களா ? மாட்டார்கள், கஞ்சி என்பது பிச்சைக்காரர் மற்றும் ஏழைகளுக்கான உணவு என்கிற தவறான எண்ணம், கஞ்சி மிகவும் எளிமையான உணவு, விரைவில் செரிக்கக் கூடிய உணவு என்பதே மெய்.

நாம் கைவிட்ட காலைக் கஞ்சி உணவை ஆசியாவின் பெரும்பாலன பகுதிகளில் காலை உணவாகக் கொள்கிறார்கள். நமக்குத்தான் கஞ்சி என்பது ஏழைகளின் உணவு என்று ஒதுக்கி வைக்கிறோம், உடல் நிலையைப் பொறுத்து 60 வயதுக்கு மேல் அது தான் நமது அன்றாட உணவாகும் என்று தெரியாமலேயே.

இணைப்புகள் :


23 ஏப்ரல், 2012

பெண்களுக்கு என்ன தெரியும் ?


'வீட்டுக்குள்ள இருக்கிற பொம்பளைங்களுக்கு என்னப்பா கஷ்டம் அவங்கப் பாடு ஜாலி - ன்னு கொஞ்சம் ஆண்டுக்கு முன்னால நினைத்துக் கொண்டு இருந்தோம், இப்போது பரவலாக அவர்களும் வேலைக்கு வந்துவிட்டார்கள், பெண்கள் ஆண்களுடன் போட்டியிடாத துறையே இல்லை என்னும் அளவுக்கு பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர்ந்திருப்பது உலகெங்கிலுமான நடைமுறை, இந்தியாவில் இந்த நிலை வளர்ந்துவருகிறது, நம் கண்ணில் எதிர்படும் மிகப் பெரிய உயரக் கட்டிடங்கள், பூங்காக்கள், கப்பல்கள் ஆகியவற்றில் ஆண்களின் கற்பனைத் திறனும் செயலாற்றலும் அமையப் பெற்றவை என்பதால் ஆண்களுக்கு நிகரான அறிவித்திறனை பெண்கள் பெற்றிருக்கவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை அல்லது அவர்கள் அந்தத் துறைகளில் இன்னும் கால்பதிக்க முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லமுடியுமே அன்றி அவர்களுக்கு அதற்கான திறன் இருக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆண்களால் மட்டுமே செய்யக் கூடியது என்பதாக சவக்கிடங்கிலும், இடுகாடுகளிலும் கூட பெண்கள் பணியாற்றுகின்றனர், மிகப் பெரிய அரசமைப்புகளில் பெண்கள் பிரதமராகவும், அதிபர்களாகவும் இருக்கின்றனர் என்பதால் கட்டுமான வடிவமைப்புத் தொழிலோ, ராக்கெட் தொழில் நுட்பம் முதலான அறைகூவல் நிறைந்த இயந்திரவியல் தொழில் நுட்பமோ அவர்களால் முடியாத ஒன்று என்பதற்கில்லை.

***********

அக்கம் பக்கம் (எங்க ஊரில் Neighborhood என்பதை இப்படித்தன் சொல்லுவாங்க) இந்தியர்கள் ஒண்ணு சேர்ந்து இந்திய புத்தாண்டு விழான்னு ஒன்று நடத்தினார்கள், இந்த நிகழ்ச்சிக்கு முழுக்க முழுக்க சிங்கப்பூர் சமூக நல அமைப்புத்தான் பொருளுதவி மற்றும் பிற. வெறுமன புத்தாண்டு விழான்னு கொண்டாடக் கூடாது என்று பள்ளிகளையும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இந்தியர்களையும் கோலப் போட்டிக்கு அழைத்து இருந்தனர், மாணவர்கள், மாணவிகள் இரண்டு பள்ளியில் இருந்து மட்டும் தான் கலந்து கொண்டனர், அதில் ஒன்று பட்டய கல்லூரி (பாலிடெக்னிக்) மற்றும் 6 குடும்பங்கள் கோலப் போட்டியில் பங்கு பெற்றனர், கோலத்திற்கு 8 பகுதி ஒதுக்கி இருந்தனர், யார் செய்த சதியோ தமிழ் புத்தாண்டுன்னு பலர் கொண்டாடுவதை சாதுர்யமாக 'இந்தியப் புத்தான்டு' என்று பெயர் மாற்றி இருந்தனர், இங்கிட்டும் நிறைய தமிழ் தீவிரவாதிகள் இருக்காங்கப் போலன்னு நினைச்சேன். நிகழ்ச்சி 9 மணிக்கு துவங்கியதாம், என் மகளும் அவளுடைய தோழிகளுடன் கலந்து கொண்டாள், நான் நண்பரை வானூர்தி நிலையத்தில் விட்டுவரச் சென்றிருந்தேன், எனவே கோலத்திற்கு புள்ளி வைப்பதைப் பார்க்க முடியவில்லை.

வீட்டில் இருந்து கூப்பிடும் தொலைவு தான் அந்த சமூகமன்றம், காலை 10 மணிக்கு அங்கு சென்றேன், அதற்குள் மொத்த குடும்பமும் எங்க வீட்டு குட்டிப் பையனும் அங்கு இருந்தான், கோலங்கள் முடிக்கப்பட்டு இருந்தன. ஒரு மணி நேரம் கொடுத்ததிருந்ததில் இவ்வளவு விரைவாக இவ்வளவு அழகாகக் கோலம் போட முடியுமா ? அங்கு தான் பெண்களின் திறமை பளிச்சிடுவதைப் பார்த்தேன், திரும்பவும் ஒரு முறை முதல் பத்தியைப் படிச்சுட்டு வாங்க. நாலு பெண்கள் ஒண்ணு சேர்ந்தால் அங்கு மென்மையாக கலவரம் வெடிக்கும் என்பது தான் நமக்குத் தெரியும், ஆனால் நான்கு நான்கு பேராக இவ்வளவு அழகாக நேர்த்தியாக கோலமிடவும் முடியும் என்பதை அங்கு தான் தெரிந்து கொண்டேன், என்ன ஒரு அழகுணர்ச்சி, அதனுடன் இருந்த திறமை, கற்பனை வளம், வாய்ப்பே இல்லை, இது போல் ஆண்களை ஒன்று சேர்ந்து ஒரு செயல் செய்யச் சொன்னால் பாதி பேர் எழுந்து 'தம்' அடிக்கப் போய்விடுவார்கள், மீதி வேலையில் ஒருவரின் கை ஓங்கி இருக்க மற்றவரெல்லாம் ஒப்புக்குச் சப்பானியாக இருப்பர். தவிர இந்த அளவுக்கெல்லாம் ஆண்களால் பொறுமையாகச் செயல்பட முடியுமா என்பதே எனக்கு ஐயமாக இருந்தது.

போட்டியில் கலந்து கொண்ட கோலங்களில் இரண்டைத் தவிர அனைத்தும் அசத்தலோ அசத்தல், 

மேலே உள்ள கோலம் மகளும் அவள் தோழிகளும் வரைந்தது, இதற்கு முதல் நாளே மூன்று மணி நேரம் மகளுடைய பள்ளித் தோழில் வீட்டில் பயிற்சி வேற நடந்தது, மகளின் தோழியின் அம்மா தான் பயிற்சி, 'ஒரு கோலப் போட்டிக்கே இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் படிப்புக்கு எவ்வளவு பயிற்சிக் கொடுப்பாங்க, நாம அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுவதில்லை, என்று சொல்லி எங்க வீட்டுக்கார அம்மா பெருமூச்சிவிட, ஏற்கனவே பயிற்சி வகுப்பு, வீட்டுப்பாடம் என்று நாக்கு தள்ள பள்ளி பிழிந்து எடுக்க, மகப் படும்பாடு, நமக்கே பரிதாபமாக இருக்கு, இதில வீட்டில் தனியாகப் படிப்பைக் கையில் எடுத்தால், உன் பொண்ணு படிக்கிறதையே வெறுத்துடுவாள்' என்றேன். நிகழ்ச்சிக்கு துணைப்பிரதமர் வருவார் என்று கேள்விப்பட்ட மகள், கோலம் போடும் எங்களுக்கெல்லாம் அவர் கொடுப்பாரா ? என்று கேட்டு ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தாள். ரொம்ப எதிர்பார்க்காதே.......அங்க கோலம்போட வரும் அனைவருக்கும் கைகொடுத்தால் அவர் கையே ஒடுந்துவிடும் என்று கூறினேன். மேலே உள்ள கோலம் மற்ற மூன்று மாணவிகளுடன் சேர்ந்து மகள் வரைந்தது.

அடுத்து பாலிடெக்னிக் மாணவ / மாணவிகள், அவங்க நேரத்திற்கு முடிக்கவில்லை, அவங்க நினைத்தப்படி கோலமும் நேர்த்தியாக வரவில்லை


இருந்தாலும் ஒரு மாணவனும் முயற்சி செய்து கொண்டிருந்தான். 


இது தான் முதல் பரிசு பெற்றக் கோலம், அழகாக வரைந்திருந்தனர், நடுவில் குத்துவிளக்கு அலங்காரம், மூலையில் புத்தாண்டு வழிபாட்டுக்கான பொருள்கள், சுற்றிலும் கிட்டதட்ட ஒரே அளவிலான வெற்றிலை, அதில்  தங்க நிற ஜிகானாவில் (confetti) கிழும் மேலுமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தாண்டு வாழ்த்து, சுற்றிலும் உள்ள வெற்றிலைள் ஒவ்வொன்றிலும் வளையல்கள் மற்றும் பெரிய நாணயம் அளவிளாக தங்கத்தால் சுற்றப்பட்ட சாக்லெட், கோலத்தின் வண்ணங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது வண்ணம் பூசப்பட்ட அரிசி. மொத்தமாகப் பார்க்க சிறப்பாக இருந்தது. என்னதான் சிறப்பு என்றிருந்தாலும் திங்கிறப் பொருளை இப்படியா வீணடிப்பது என்று நினைக்கத்தான் செய்த்து, மற்றவர்களுக்கு அப்படித் தோன்றியதா தெரியாது. திரைப்படங்களில் (சண்டை) காட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் பொருள்களை வீணடிப்பதை ஒப்பிட இது மிக மிகக் குறைவானதே 


இது இரண்டாம் பரிசுக்கானது, இவங்க சொன்ன நேரத்தில் முடிக்காமல் இருந்ததால் இரண்டாம் இடத்திற்கு வந்ததே பெரிது. இவங்களுடைய கோலமும் நன்றாக இருந்தது.


இது மூன்றாம் பரிசுக்கான கோலம், இதற்கு இரண்டாம் பரிசு கொடுத்திருக்கலாம். வண்ணங்களைவிட வெள்ளை நிறத்தில் வளைவுகளை ஒன்று போல் வரைந்திருந்தனர், மற்றபடி இதில் வேலைப்பாடுகள், குறைவுதான், இது போன்ற கோலங்கள் கோவிலினுள் மேல் சுவற்றில் போடப்பட்டிருக்கும்.


கீழே உள்ளவகைளும் சிறப்பாக இருந்தாலும் 1,2,3 தரவரிசையில் மேலேவரவில்லை.


சமூக மன்றத்தில் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணைப் பிரதமர் வந்திருந்தார், முதலில் மாணவர்களுக்கான கோலப் போட்டி பரிசளிப்பு விழாவில் என் மகளும் அவள் தோழிகளும் வரைந்த கோலத்திற்கு முதல்பரிசு கிடைத்தது, மகள் எதிர்ப்பார்த்தது போல் தோழிகளுடன் மேடை ஏறி துணைப்பிரதமரின் கைக் குலுக்களைப் பெற்று மகிழ்ந்தாள், நான்கு மாணவிகளும் சேர்ந்து அந்த பரிசை வாங்கி வந்தனர், பின்னர் மேலே கூறியபடி மாணவர்கள் அல்லாதவர்களின் கோலப் போட்டிப் பரிசு 1,2,3 வரிசைப்படிக் கொடுக்கப்பட்டது, பின்னர் கோலப் போட்டியில் வெற்றிபெறாத கோலங்களுக்கும் சிறப்பு பரிசுகளும் கொடுக்கப்பட்டன, போட்டியில் கலந்து கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் என்று கொடுக்கிறார்கள்.

பரிசு கொடுத்து முடிந்துவிட்டு துணைப் பிரதமர் புறப்பட்டார், அதன் பிறகு நிறைய ஆட்டங்கள், கொண்டாட்டங்கள், பாடல்கள் மேடை ரகளை கட்டியது, மலேசியாவில் இருந்து வந்திருந்த வில்லியம் சியா என்கிற சீனன் தமிழ் பாட்டை பட்டைய கிளப்பிப்பாடுகிறான், அவனுடைய 'நேத்தி ராத்திரி அம்மா' பாட்டு தூளோ தூள்.


மணி ஆக பசிக்கு ஜெனங்க பறக்க, ஏற்கனவே விருப்பத்திற்கேற்ற உணவாக சைவம் அசைவம் தனித்தனியாக வைத்திருந்தனர். சைவ சில்லித் சிக்கன், சைவ பெப்பர் மட்டன், கத்திரிக்கா கறி, பிரியாணி சோறு.....இதே போல் அசைவ வகைகளும் இருந்தன. 


பபே சிஸ்டம் என்றாலும் கூட்டத்தைப் பார்த்துட்டு உணவு ஏற்பாட்டாளர்கள் கோவில் பிரசாதம் போல் கரண்டியில் அளந்து அளந்து போட்டனர். நிகழ்ச்சியெல்லாம் முடிஞ்சு பார்த்தா வைத்திருந்த உணவில் பாதிக்கு மேல் குப்பையில் கொட்டிக் கொண்டு இருந்ததனர், 'உணவுப் பொருள் இவ்வளவு வீணாகுதே.........' அன்னிக்கு உற்சாகங்களை மீறி ஏற்பட்டது இரண்டாவதாக அதே உணர்வு.





20 ஏப்ரல், 2012

பேரண்டம் பற்றிய வியப்பான தகவல்கள்


பேரண்டம் பற்றி பல வியப்பான தகவல்களை அறிவியல் உலகம் தந்துள்ளது, அவை ஆய்வுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றை உண்மை என்று அறிவியலாளர்கள் அடித்துக் கூறவில்லை, மாறாக வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்தவை என்றே சொல்கிறார்கள்.

நாம் பெருவெடிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம், பெருவெடிப்பின் மையம் எங்கே ?

பேரண்டத்தில் மையம் என்பதே கிடையாது, பேரண்டத்தில் எல்லை விளிம்புகள் என்றும் எதுவும் இல்லாத நிலையில் பேரண்டத்தின் மையம் என்று இதுவரை எதுவும் இல்லை. விளிம்புகள் அற்ற நிலையில் பேரண்டம் வளைவானது, உதாரணத்திற்கு மில்லியன் ஒளி ஆண்டுகள் நம்மால் பேரண்டத்தின் ஊடாக அதன் வெற்றிடத்தில் பயணம் செய்தால் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர முடியும். பேரண்டத்திற்கு மையமோ, எல்லையோ கிடையாது

பேரண்டத்தில் பெருவெடிப்பு எங்கே நடக்கும் ?

பேரண்டத்தில் பெருவெடிப்பு பேரண்டத்தின் வெற்றிடத்தில் நடந்து, வெற்றிடத்தில் விரியும் என்பது தவறான கூற்று. காலத் துவக்குமும், வெற்றிடமும், வெளித்திரள்களும் (கேலக்ஸிகள்) பெருவெடிப்பினால் நிகழ்ந்தவை. பெருவெடிப்பிற்கு முன்பு அளவிட முடியாத திணிவும், அளவிட முடியாத வெப்பமும் உள்ள பொருளாகத்தான் பேரண்டம் இருந்தது. அதனுள் ஏற்பட்ட அளவிடமுடியாத அழுத்தத்தினால் பின்னர் வெடித்து சிதறி வெளித் திரள்களையும், வின்மீன்களையும் உருவாக்கி இன்றளவும் (வெற்றிடங்களை விரித்து) விரிந்தே வருயுறது.

பூமியும் பேரண்டத்தின் ஊடாக விரிவடைகிறதா ?

வெளித்திரள்களும், வின்மீன்களும் உருவாகியது பெருவெடிப்பின் விளைவிகள், அதன் பிறகு வின்மீன்களோ அல்லது வெளித்திரள்களோ அல்லது நம் பூமியோ விரிவடைவதில்லை, பேரண்டவிரிவாக்கம் என்பதில் வெளித்திரள்களுக்கு இடையேயான இடைவெளிகள் (வெற்றிடங்கள்) விரிவடைகிறது, வெளித்திரள் (உதாரணத்திற்கு நாம் பால்வெளித் திரள் - மில்கிவே) அதனுள் இருக்கும் வின்மீன்களை இழுப்பு விசையால் அதனுள்ளேயே வைத்திருப்பதால் அவற்றினுள் விரிவாக்கம் ஏற்படுவது கிடையாது, இது பூமிக்கும் சூரியனுக்கும் பொருந்தும், சூரியன் எரிபொருள் அனைத்தையும் எரித்து அளவில் பெரிதாகிவருவது வேறு. 

பேரண்டத்தின் வெளியே என்ன இருக்கிறது ?

வெளி அல்லது ஸ்பேஸ் அல்லது வெற்றிடம் என்பவை பெருவெடிப்பினால் ஏற்பட்டவையே, பெருவெடிப்பிற்கு முன்பு வெளி என்பதே இல்லை, எனவே பேரண்டத்திற்கு வெளியே என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அது மற்ற பேரண்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும் (பேரண்டங்களைப் போன்று எல்லையற்ற எண்ணிக்கையில் பேரண்டங்களும் இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்)

பேரண்டத்திற்கு முன்பு என்ன இருந்தது ?

வெளியும், காலமும் பெருவெடிப்பின் விளைவுகள் என்றே நம்பப்படுகிறது, அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதற்கு ஏற்கதக்க விடைகள் அற்ற சூழலில் பெருவெடிப்பு - விரிவாக்கம் - சுருக்கம் என்பவை மாற்றி மாறி நிகழ்ந்தவை என்று நம்பப்படுகிறது, அல்லது நமது பேரண்ட பெருவெடிப்பு வேறு பேரண்டங்களின் ஒன்றில் நடந்த பெருவெடிப்பின் விரிவாக்கத்தில் நிகழ்ந்தவையா என்றும் அறிய முடியவில்லை.

இறுதியாக ஒரு நல்ல கேள்வி, பேரண்டம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தவை என்று நம்பம்படும் பொழுது, நமது பேரண்டத்தினுள் இருக்கும் பல்வேறு கேலக்ஸிகளின் இடைவெளிகள் எப்படி 14 பில்லியன் ஒளியாண்டைவிடத் தொலைவானதாக இருக்க முடியும் ? நமக்குத்தான் தெரியுமே ஒளியைவிட வேகமாக பயணிக்கும் பொருள்கள் எதுவும் கிடையாது, பின்னர் எப்படி இந்த கேலக்ஸிகள் ஒளியைவிட வேகமாக நகர்ந்து அல்லது அவற்றின் இடைவெளிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

திரள்களுக்கு இடையேயான வெற்றிட(வெளி) விரிவாக்கம் என்பது ஒளியை விட வேகமாக விரிவடைகிறது எவ்வளவு வேகம் என்பது சரியாக கணக்கிடப்படவில்லை, தவிர பெருவெடிப்பின் முன்பு உள் திணிவுகளின் இடையேயான தொலைவும், பெருவெடிப்பின் முன்பான வடிவமும் நமக்குத் தெரியாத நிலையில், பெருவெடிப்பிற்கும் பின்னர் வெளித் திரள்கள் (கேலகிஸிகளின் இடைவெளி) ஒளியைவிட வேகமாக பயணிக்கக் கூடிய தொலைவை அடைந்திருப்பதாக நாம் ஒளி வேகத்துனுடனும் பெருவெடிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படும் 14 பில்லியன் ஆண்டுகளையும் ஒப்பிட பெருவெடிப்பின் வெற்றிட விரிவாக்க வேகம் ஒளியைவிட விரைவானது என்பது ஒப்புக் கொள்ளத் தக்கதாகும், கேலக்ஸிகளுக்கு இடையேயான இடைவெளி விரிவாக்க விரைவு என்பது அருகில் இருக்கும் கேலக்ஸிகள் நமக்கு மெதுவாக விரிவடைவதாகவும் தொலைவில் இருப்பவை வேகமாக செல்வதாகவும் தெரிவதால் பெருவெடிப்பின் அண்மையில், அதாவது 2 பில்லியன் ஆண்டுகளில் நமது கேலக்ஸி 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவை அடைந்திருந்தால் நமது கேலக்ஸிக்கும் நமது கேலக்ஸியை விட்டு விலகிச் செல்லும் மற்றோரு கேலக்ஸிக்கும் இடையேயான தொலைவு ஏற்கனவே இரு மடங்காகி இருக்கும் நிலையிலும் ( 4 பில்லியன் ஒளி ஆண்டுகாக இருக்க) அடுத்த 12 பில்லியன் ஆண்டுகளில் அவை நகரும் (திசை - நோக்கி அல்லது விலகி) 24 பில்லியன் ஒளி ஆண்டைக்காட்டிலும் தொலைவில் தான் இருக்க வாய்ப்புள்ளது. தவிர இந்த வேகத்தை நம்மால் (நமது கேலக்ஸியால்) உணரமுடியாது, ஏனெனில் அதற்கு வெளியே உள்ள வெற்றிடம் தான் விரிவாக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு ஒரு ஊதாத பலூனில் சுற்றிலும் புள்ளிகள் வைத்து அதை ஊத, பலூன் விரிய விரிய ஒரு பக்கத்தில் உள்ள புள்ளிக்களுக்கு இடையான தொலைவும், நகர்வும் அங்கிருந்து பார்க்க மறுபக்கத்தில் உள்ள புள்ளிகளின் தொலை மிகுதியாகவும், நகர்வும் விரைவாகவே இருக்கும்.

பேரண்ட விரிவாக்கத்தின் வினாடிக்கான அளவு என்ன ?

parsec என்ற வானவியல் அளவீடுகளில் கேலக்ஸிகளின் தொலைவுகள் அளக்கப்படுகிறது, ஒரு parsec =  3.26 ஒளி ஆண்டுகள், அதாவது 31 டிரில்லியன் கிமீ தொலைவு, நமது கேலக்ஸிக்கும் பக்கத்து கேலக்ஸிக்குமான தொலைவு 1 parsec இருந்தால் அவற்றின் இடைவெளி விரிவாக்கம் வினாடிக்கு 74 கிமீ. நமக்கு 2 parsec தொலைவில் இருப்பவை அதே வினாடி நேரத்தில் 144 கிமி தொலைவுக்கு நகர்ந்திருக்கும். இந்த நகர்வுக் கணக்கை வைத்து தான் அவை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அருகில் இருந்ததாகவோ அல்லது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார்கள்.

பேரண்டத்தில் இருக்கும் கேலக்ஸிகள் எத்தனை ?

தற்பொழுது அளவிடப்பட்ட பேரண்டத்தின் விரிவு 93 பில்லியன் ஒளி ஆண்டைக் கொண்டது, இதை அவதனிக்கப்பட்ட பேரண்ட (observable universe). விட்டத் தொலைவு என்கிறார்கள். அதற்கும் கூடுதலாகவே இருக்கலாமாம். நமக்கு தொலை நோக்கியால் பாக்க முடிந்த அளவில் உள்ள பேரண்டத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளவை 80 பில்லியன் கேலக்ஸிகள், ஒவ்வொன்றிலும் 100 - 200 பில்லியன் வின்மீன்கள், ஒவ்வொரு வின்மீனுக்கு குறைந்தது ஒரு கோள், அந்த கோள்களுக்கு துணைக் கோள் என்று மிகப் பெரிய பில்லியன் எண்ணிக்கையினுள் இருக்கிறது

கேலக்ஸிகளுக்கு இடையான தொலைவு எப்படி கணக்கிடப்படுகிறது ?

ஒரு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளதை ஒரு ஒளி ஆண்டு பயணித்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் பலரிடம் உண்டு,  அது தவறு. ஒளி ஆண்டுகளின் கணக்கு ஒரு கேலக்ஸின் உள்ள வின்மீண்களின் ஒளி அடர்த்தியை வைத்தே கணக்கிடப்படுகிறது, ஒளி அடர்வு பயணம் தொலைவுக்கு ஏற்ற பண்புகளைக் கொண்டு இருப்பதால் குறிப்பிட்ட ஒளி அடர்த்தி கொண்டவை குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் என்ற கணக்கில் அவை அளவிடப் படுகிறது, ஒரே ஒளி அளவைக் கொண்ட அருகில் இருக்கும் மெழுகுவர்த்திக்கும் தொலைவில் இருக்கும் மொழுகுவர்த்தியும் நமக்கு ஒரே அளவான வெளிச்சத்தைக் கொடுப்பது இல்லை. அவற்றின் ஒளி ஆண்டு அளவுகள் வின்மீன் அல்லது கேலக்ஸி அவற்றின் தொலைவுகளைச் சொன்னாலும் அவை அங்கேயே தற்போதும் நிலை கொண்டு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இன்று ஒரு கேலக்ஸி 10 பில்லியன் ஒளி ஆண்டுத் தொலைவில் உருவானால் அதன் வெளிச்சம் பூமியை எட்டி நம் கண்டுபிடிப்பிற்குள் அவை வர அதே 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும், எனவே நாம் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கும் கேலஸிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கும் தற்போதைய தொலைவு நமக்கு தெரியாது. நம்மிடம் இருக்கும் ஆகப் பெரிய தொலைவு அளவீடு ஒளி ஆண்டு தான்.


நாம் இருக்கும் மில்கிவே கேலெக்ஸியின் அளவும் பரப்பளவும் என்ன ?

ஸ்பைரல் வட்ட வடிவத்தில் இருக்கும் மில்கிவே கேலக்ஸியின் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவு, அதன் தடிமன் 1000 ஒளி ஆண்டுகள். பேரண்டத்தில் இருக்கும் பெரிய கேலக்ஸிகளில் மில்கிவேயும் உண்டு,  மில்கிவே வினாடிக்கு 552 - 630 கிமீ வேகத்தில் ஒட்டு மொத்தமாக நகர்கிறது.

மில்கிவே கேலக்ஸியின் வயது என்ன ? 

12.6 பில்லியன் ஆண்டுகள், இது பெருவெடிப்பு நிகழ்ந்தததாக கணக்கிடப்பட்டுள்ள 13.7 பில்லின் ஆண்டுகளுக்கு பின்னர் 1.1 பில்லியன் ஆண்டுகளில் மில்கிவே உருவாகி இருக்குமாம். அதிலிருக்கும் நம் சூரியன் 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. நமது சூரியனின் எரிபொருள் முழுதும் தீர இன்னும் 5.5 மில்லியன் (55 லட்சம் ) ஆண்டுகள் உள்ளனவாம்

மில்கிவே கேலக்ஸியில் இருக்கும் வின்மீன்களின் எண்ணிக்கை எத்தனை ? 

200 பில்லியன் வின்மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, நமது சூரியனும் ஒரு வின்மீன் தான் அதற்குள் கோள்கள், அந்த கோள்களில் சிலவற்றிற்கு சந்திரனைப் போன்று துணைக் கோள்கள்.

மில்கிவேயில் சூரியன் இருக்கும் இடம் எங்கே ?

மில்கிவேயின் மையத்தில் இருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில். மில்கிவேயின் மேல் எல்லைக்கு கீழே அதன் தடிமனுள் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது

மில்கிவேயில் சூரியனின் நகர்வு வேகம் எவ்வளவு ?

நொடிக்கு 250 கிமீ / நிமிடத்திற்கு 15,000 கிமீ / மணிக்கு 9 லட்சம் கிமீ, மில்கிவேயின் மையத்தை ஒரு முறை வளம் வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் 220 மில்லியன் ஆண்டுகள். 




கூகுள் + ல் தற்பொழுது பேரண்டம், மில்கிவே, சூரியன், நிலவு மற்றும் பிற கோள்களின் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்,

***************

பேரண்டம் பற்றி படிக்க படிக்க வியப்பின் எல்லைக் கடந்து வியப்படைய முடிகிறது, ஆறு நாளில் (பால்வெளித்திரளை ஒப்பிட) தம்மாத்தோண்டு பூமியைப் படைத்தார் கடவுள் என்றால் மற்ற கோள்களையும் சூரியனையும், பால்வெளித்திரளையும் அதில் இருக்கும் வின்மீன்களையும், மற்ற வெளித்திரள்களையும் அதில் இருக்கும் வின்மீன்களையும் படைக்க எத்தனை நாள் எடுத்திருப்பார் ? நாளா ? அவரோட படைப்புகள் துவங்கி எத்தனை பில்லியன் களின் பில்லியன் ஒளி ஆண்டுகளாக நடக்கிறது ? கடவுளுக்கே வெளிச்சம். கடவுளின் 'ஆகுக' என்ற சொல் ஒளி வேகத்தில் பயணித்தாலும் பேரண்டத்தின் அடுத்த பக்க விளிம்பிற்குச் செல்ல எத்தனை ஒளி ஆண்டுகள் எடுக்குமோ ?

பேரண்டம் உருவாகி 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதாமே என்று ஒரு இந்து நண்பரிடம் சொன்னேன், பிரம்மாவின் பகல் என்பது ஆயிரம் சதுர்யுகமாம், கிட்டதட்ட 14 பில்லியன் ஆண்டுக்கு பக்கத்தில் வருது என்றார், பக்கத்துல கருங்கல் எதுவும் இல்லை, இருந்தால் முட்டிக் கொண்டு இருப்பேன்.

பேரண்டம் பற்றி நமக்கு தகவல்கள் தெரிய தெரிய கடவுள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கடவுள் என்கிற ஒரு நம்பிக்கையை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தி, கடவுள் என்பது ஒரு  சூனியக்காரன், கோபக்காரன், மந்திரவாதி, மேஜிக் செய்பவன் என்ற அளவுக்கெல்லாம் மத நம்பிக்கையாக்கி சுறுக்கி  வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்க முடிகிறது 

16 ஏப்ரல், 2012

* கேள்விகளற்ற விடை !


ரண்டாம் முறை தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு என்பது மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு, ஏதாவது மாறுபட்டு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்,  ஓரளவு எழுதிய அனைத்து இடுகைகளும் எனக்கு மன நிறைவைத் தந்தது, மூன்றே மூன்று இடுகைகளுக்கான தகவல்களை மட்டுமே முன்கூட்டித் திரட்டி இருந்தேன், மற்றபடி அனைத்து இடுகைகளும் அன்றன்றே எழுதி வெளியிட்டவையே, இடையில் நான் உணர்ந்த நில அதிர்வு பற்றிய தகவலை என்னுடைய மற்றொரு பதிவில் வெளியிட்டேன், நில அதிர்வு நடந்த ஐந்தாம் நிமிடம் மற்ற ஊடங்களில் வெளிவருவதற்கு முன்பே நில அதிர்வை அறியும் USGS வெப்பதளத்தில் அதிர்வு அளவை மட்டும் சரி பார்த்துவிட்டு உடனேயே நில அதிர்வின் தகவலையும் சுனாமி விழிப்புணர்வு குறித்து பதிவுலகம் அறியச் செய்தது சென்றவாரத்தில் நட்சத்திரப் பதிவுகளைத் தாண்டி எனக்கு மனநிறைவைத் தந்தது, வலைப்பதிவுகளில் பலம் அது தான்,. வெளியே எந்த ஒரு ஊட்கத்திலும் இது போன்ற எச்சரிக்கைக் குறித்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிடமுடியாது, அதை நாம் ஊடகப் பொறுப்புணர்வு என்று வகைப்படுத்தாவிட்டாலும், அவர்கள் கொடுக்கும் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று, நடக்காத ஒன்று என்று தெரியும் பொழுது ஊடகத்தின் பெயர் கெட்டுவிடும், அதனால் இது போன்ற உடனேயே எச்சரிக்கைச் செய்ய வேண்டிய தகவல்களுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கும், மேலிடத்து அனுமதிக்கும் காத்திருப்பர், நமக்கு (வலைப்பதிவர்களுக்கு) அது போன்ற தடைகள் எதுவும் இல்லாததால், நாம் நேரிடையாக அறிந்தத் தகவலை உடனேயே வெளியிட்டுவிட முடியும்.

நட்சத்திர வாரத்தில் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே 'வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகை' யில் வந்து போனது, ஒரே நாளில் எழுதிய மூன்று இடுகைகள் கூட அவ்வாறு அதிகம் பார்வையிடப்பட்ட பட்டியலில் இருந்தாலும், தமிழ்மண திரட்டி வரையறையின் படி ஒருநாளில் ஒருவரின் ஒரு இடுகை மட்டுமே முகப்பில் காட்டப்படும் என்பதால் மற்ற இடுகைகள் முகப்புப் பக்கத்தில் வரவில்லை, ஆனால் தமிழ்மணத்தின் தனிப்பக்கமான மற்றொரு 'இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்' பகுதியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எனது இடுகைத் தலைப்பும் உட்பொருளும் படிப்பவர்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.


மேலும் எழுதிய சில இடுகைகளை, 'திகட்டும்' என்பதால் நான் வெளியிடவில்லை, அதை நான் பிறகு மற்றொரு நாள் வெளியிடுவேன். 

வாழ்த்து மற்றும் கருத்துரை விட்டுச் சென்ற பதிவர் அன்பர்கள்

Robin, புதுகை.அப்துல்லா, kari kalan,பிரியமுடன் பிரபு, ராமலக்ஷ்மி, மோகன் குமார், கபிலன், ரவிச்சந்திரன், என். உலகநாதன், முனைவர் பரமசிவம், துளசி கோபால், T.V.ராதாகிருஷ்ணன், தேவன் மாயம்,தமிழ்சேட்டுபையன், தனிமரம், சேலம் தேவா, அம்பலத்தார், புதுகை.அப்துல்லா, ராஜ நடராஜன், thequickfox, குமரன் (Kumaran), nigalkalathil siva, Amudhavan, ஆ.ஞானசேகரன், நண்டு @நொரண்டு -ஈரோடு, ILA(@)இளா, கிரி, SathyaPriyan, சுவனப்பிரியன், நட்புடன் ஜமால், இராம.கி, தருமி, சிவபாலன்,Vinoth Kumar,  வவ்வால், ராஜ நடராஜன், அறிவன்#11802717200764379909, Vairai Sathish, அன்பை தேடி,,,அன்பு, நம்பள்கி!, கல்வெட்டு, சார்வாகன், தறுதலை, renga, மாதேவி, Jawahar,மௌனகுரு, jaisankar jaganathan,புலவர் சா இராமாநுசம், கிளியனூர் இஸ்மத், அமர பாரதி, renga, அன்பு ஆமீரா, BADRINATH, Krishna Moorthy S, முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ், guna thamizh, கிரி, Karthik Vasudhevan, koodal bala, விழித்துக்கொள், அப்பாதுரை, இராஜராஜேஸ்வரி, வே.சுப்ரமணியன், எல் கே, Ramachandranwrites, பழனி.கந்தசாமி, பனிமலர், O.R.B Raja, ரமேஷ் வெங்கடபதி, மாயன்:அகமும் புறமும், Anonymous, தமிழ் ஓவியா, smart, kamalakkannan, Chilled Beers, Gaana Kabali மற்றும் ganabathy 

- இவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், பெரும்பாலான பதிவுகள் அன்றன்றே எழுதி வெளியிட்டச் சூழலில் பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழிய முடியவில்லை.

மேலும் எனக்கு அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குறுந்தகவலால் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இடுகைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நட்சத்திர வார இடுகைகளை வாசித்தவர்கள் எண்ணிக்கை : 8,771)

நட்சத்திர பதிவர் வாய்ப்பு நாம் கேட்டுவாங்குவதில்லை, அதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுக்கிறார்கள் என்று பொருளும் இல்லை, நன்றாக எழுதிக் கொண்டு வந்தால் தமிழ்மண நிர்வாகிகளின் கவனத்திற்கு செல்லும், அல்லது தமிழ்மணம் நிர்வாகிகளை அறிந்தவர்கள் நன்றாக எழுதும் பதிவர்களின் பெயர்களை பரிந்துரைப்பார்கள். அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அதை மட்டுமே அல்லது பிரச்சார உத்தியில் எழுதுபவர்களுக்கு அவ்வாய்ப்புக் கிடைக்காது என்றே நினைக்கிறேன், இவை எனது அவதனிப்பின் மூலமாக அறிந்துள்ள தனிப்பட்ட கருத்து,

திரும்பப் படித்துப் பார்க்கும் நேரமின்மையால் நட்சத்திர இடுகைகளாக எழுதியவற்றின் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க முடியவில்லை. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிர்வாகக் குழு மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்துவரும் இந்தவார நட்சத்திரப் பதிவருக்கும் நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்.

15 ஏப்ரல், 2012

* தமிழர்களின் வீண் பெருமை !


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் - மனித இனம் உட்பட ஏனைய உயிர்களும் பிறப்பினால் மேன்மையானவை என்று சொல்லியவன் ஒரு தமிழன், அண்மையில் தான் இந்த கருத்து உலகத்தினரில் சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்பதாக விலங்கு பாதுகாப்பு அமைப்புகளாக 'ப்ளூ க்ராஸ்' அமைப்புகள் தோன்றியுள்ளன, நிற அடிப்படைடில் மனிதனையும், ஏனைய விலங்குகளையும் அடிமையாகவும் அற்பமாகவும் நினைக்கும் புற உலகில் அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் கருதியவன் தமிழன்.

முல்லைக்கு தேர், மானுக்கு போர்வை என்று தாவிரங்களையும், விலங்குகளையும் நேசித்திருகின்றனர் தமிழ் மன்னர்கள், புதுச் சிந்தனை என்ற பெயரில் நம்மவர்களே முல்லைக்குக் கொடுத்தத் தேரை உருவாக்க வெட்டப்பட்ட மரங்கள் எத்தனையோ, எனவே மன்னன் தாவிரங்களிடம் அன்பாக இருந்தால் தேரைக் கூடப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாமே என்பர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வில் நாம் இவ்வாறு சொனனாலும், காடுகள் நிறைந்த அந்த காலத்தில் மரத்தை வெட்டுவது பெரிய இழப்பாக இருந்திருக்கவில்லை, தவிர காடுகளை அழித்து நாடுகளாக்குவது, விரிவாக்கம் செய்வது தான் மன்னர்களின் வேலை, ஆனால் முல்லைக்கான தேர் என்ற தகவலில், முல்லை இயல்பாக கொடியில் படர்ந்து வளர்வது அதற்கு பற்றிக் கொள்ள கொழுக் கொம்பு இல்லாததால் அது தனது இயல்பான வளர்ச்சியை எட்டமுடியாமல் தவிக்கிறதோ என்று வருந்தி மன்னன் தன் தேரைக் கொடுத்தான் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்றார் வள்ளலார், அப்படி என்றால் சைவரான அவர் கீரைக் குழம்பு சாப்பிட்டது இல்லையா ? என்கிற குதர்க்கத்தினால் என்ன பயன் ? பயிர் பலனுக்கானது என்றே விதைக்கப்படுகிறது, அவை பலன் தரும் முன்பே அவற்றை பராமரிக்காமல், கவனிக்கப்படாமல்,நீர் ஊற்றாமல் இருப்பதைப் பார்த்து வள்ளலார் அவ்வாறு குறிப்பிடுகிறார், பருவம் எய்தியவர்கள் பயன்படா வாழ்க்கை என்பதை வைத்து முதிர்கன்னி கவிதைகள் எழுதுவோர் சற்று நினைத்துப் பார்க்கவும், இங்குப் பயிர் வாட்டமும் கன்னிப் பெண்ணின் வாட்டமும் பயனற்ற நிலை என்ற அளவில் பார்க்க, பயன் தருவதால் தனக்கும் பெருமை என்ற நிலையை பயன்பாடற்ற நிலை தருவதில்லை, வீணடிக்கப்படுகிறது, பயனற்றுப் போகிறது தவிர தன்னுடைய தன்மையையும் அது (பசுமைத்) தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறதே என்கிற வாட்டம் தான் வள்ளலாரின் வாட்டம், கீரைக் குழம்பு சாப்பிடுவது பற்றி அல்ல.

கவிஞர் அறிவுமதிப் சிங்கை நிகழ்ச்சியில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு தகவல் சொன்னார், இன்றும் வடவர்கள் இராவணை அழிப்பதாகக் கூறி ஆண்டு தோறும் தெற்கு நோக்கி வில்லில் நாண் தொடுத்து அம்புகளை விடுகின்றனர், ஆனால் கொலைக் கருவியில் ஒன்றான வில்லை கவிழ்த்து வைத்து இசைக்காகப் பயன்படுத்துகிறான் தமிழன், வில்லுப்பாட்டு, உலகிலேயே கொலைக் கருவியையும் இசைக் கருவியாக்கிப் பயன்படுத்தும் பெருமை பெற்றவன் தமிழன் தான்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - அவ்வையார், உலகில் எந்த ஒரு நாட்டிலும் தாய் தந்தையரை கடவுளாகப் போற்றும் வழக்கம் கிடையாது, உலக வழக்கம் பெற்றோர்களிடம் அன்பு செலுத்துவது மற்றும் அவர்களின் பாதுகாப்பில் வளரும் வரை இருப்பது மட்டுமே, தாய் தந்தை தான் முதலில் உனக்கு தெய்வம் மற்றதெல்லாம் பிறகே என்றவன் தமிழன்

யாதும் ஊரே யாவரும் கேளீர் - எல்லா நாடும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று உலகெங்கிலும் பல்வேறு படையெடுப்புகளைத் தான் காலம் தோறும் கடைபிடித்தே வருகின்றனர், ஆனால் உலகத்தில் உள்ள எல்லா ஊரும் ஒன்றே தான், அவற்றில் வேறுபாடுகள் இல்லை, உன் நாட்டை நேசிப்பது போல் பிற நாட்டையும் நேசி என்கிறார் கனியன் பூங்குன்றனார், ஒரு தமிழர்.

எல்லாவற்றிக்கும் மேலாக குற்றம் செய்தவன் கடவுளே ஆனாலும் 'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று எடுத்துரைத்தான் தமிழன், எவருக்கு வரும் இந்தத் துணிவு ? 

தமிழர் தம் தனி இயல்புகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால்

இவற்றையெல்லாம் நினைத்துப் பெருமைபடுங்கள் என்று நான் சொல்லவரவில்லை, பழம்பெருமையில் திளைத்திருங்கள் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை ஆனால் இவை தமிழனின் தனிச் சிறப்பாக இருந்தது, பெருமைக் குரியதாக இருந்தது இலக்கியம், வாழ்வியல், விலங்குகளையும், தாவிரங்களையும் நேசிப்பது இவற்றை நாம் எந்த பிற மொழி/மத. இனத்தினரிடமிருந்தும் கற்றுக் கொள்ளத் தேவை இல்லை, இவற்றையெல்லாம் நான் கற்றுக் கொடுக்கும் நிலையில் தான் நாம் இருந்தோம் தற்போது தன்னிலை மறந்துவிட்டோம். நமது பெருமைகளெல்லாம் வீண் (வீணாகப்) போய்விட்டது

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

என்பதை மட்டும் நாம் நம் பொருளியல் சார்ந்த தன்னல வாழ்கைக்காக பின்பற்றிவருகிறோமோ.

பின்குறிப்பு : தமிழ்மண நட்சத்திர வாரத்தின் இடுகைகள் இத்துடன் முற்றிற்று, திங்கள் கிழமை காலை ஒரு நன்றி நவிழல் இடுகையுடன் என் நட்சத்திர வாரம் நிறைவுறும்.

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்