பின்பற்றுபவர்கள்

புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூலை, 2011

கருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.

அண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதியே அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்டவற்றில் பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.

முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி, தம் மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா ? என்று ஐயம் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்லாம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட ஆறிப்போன வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.

இதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியின் நாளைய பதிப்புக்காக நெகிழ்ச்சி குன்றாமல் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி

'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய தேடி வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........

**********

ஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........

அட விடியற்காலை கனவா ? இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ ? தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்

நக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது

6 ஜூலை, 2011

குறி சாமியார் குப்பு சாமி (வெ.ஆ.மூர்த்தி - ஸ்பெசல் ) !

சாமியார் பிஸ்னஸ் நல்லாப் போகுதுன்னு நல்லாத் தெரிஞ்ச வெண்ணிற ஆடை மூர்த்தி சாமியார் வேசம் கட்டிவிட்டார். குன்றத்தூர் மலையடிவாரத்தில் குத்துக்கல்லாட்டாம் குந்திக்கிண்டு இருக்கும் அவரிடம் மக்கள் குறி கேட்க வர்றாங்க.
பக்கதில் 'குன்றத்தூர் குறிசாமியார் குப்புசாமி' ன்னு பெயர் பலகை இருக்கு.





வெ.ஆ.மூர்த்தி : ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பூ.....ப்ர்ர்ர்ர்ர்ர்பூ.....(உதடால ஊதி .......ஒருபயலையும் காணுமெ.......) என்று சிந்திதபடி இருக்கிறார்

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பையோடு அவரிடம் வருகிறார்

'வணக்கம் சாமி.......நான் புவனகிரி புஷ்பநாதன் மகன் புண்ணிய கோடி'

வெ.ஆ.மூர்த்தி : (ரொம்பவும் தெரிஞ்சவரிடம் பேசுவது போல) வா....புண்ணியக் கோடி..உன்னப் போலா ஆளுக்காகத்தான் ஒத்த குச்சியோட உட்கார்ந்து குறிபார்த்து குறிபார்த்து சொல்லிக்கிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி யாருகூடேயும் ஓடிட்டாளா ?

பு.கோ : ஹிஹி..... அட ஆமாம் சாமி அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?

வெ.ஆ மூர்த்தி : அதான் மூதேவி உன் மூஞ்சப்பார்த்தாலே தெரியுதே......உன்கிட்ட இவ்வளவு நாளு அவ இருந்ததே கஷ்டம்

பு.கோ : ஹி ஹி, இப்ப நான் ஓடிப் போன பொண்டாட்டி திரும்பி வருவாளான்னு கேட்க வரல, அடுத்து எனக்கு கல்யாணம் ஆகுமான்னு பார்த்துச் சொல்லுங்க

வெ.ஆ.மூர்த்தி : டம்பி........நான் சொல்றேன்ன்னு தப்பா நெனச்சுக்காதெ, வெட வெடன்னு ஆடுற ஒன்கிட்ட இன்னொருத்தி வந்தாலும் அவ கட கடன்னு ஓடிப்போவான்னு தான் ஒன் நாடி சொல்லுது......ம்கூம்.....உன் வாயெல்லாம் ஓவரா நாறுது......கொஞ்சம் தள்ளி உட்காரு.

பு.கோ : அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா ?

வெ.ஆ மூர்த்தி : ம்கூம் கல்யாணம் ஆகாது ஆனா இன்னொன்னு சொல்லுவாங்களே... கருமாதி அது ஆகும்...எந்த குறிகாரன் இல்லாட்டி குறிகாரியிட்ட கேட்டாலும், குடிகாரங்கிட்ட கெட்டாலும் அதான் சொல்லுவான், காத்தால எழுந்து நெதம் பல்லு வெளக்கு.......கல்யாணம் ஆகாட்டியும் எவன் கூடவோ ஓடிப் போன ஒம்பொண்டாட்டி திரும்பி வந்தாளும் வருவா ?

பு.கோடி பெருமூச்சு விட்டபடி எஸ்கேப் ஆகிறார்

வெ.ஆ மூர்த்தி : டேய் டேய் குறிக்கேட்டதுக்கு எதாவது கொடுத்துட்டுப் போடா........தொங்க தொங்க நாக்கு வரண்டு போய் குந்திகினு இருக்கேன்......இப்படி ஏமாத்திட்டுப் போறானே பாவி இவன் உறுப்படுவானா ?

**********

அடுத்ததாக இன்னொருவர்

கும்பிடுறேன் சாமி, நான் கொருக்குப்பேட்ட கோபாலு

வெ.ஆ.மூர்த்தி : வா கோபாலு உட்காரு கோபாலு, உனக்கு என்ன பிரச்சனை ? நல்லா ஓடிக் கிட்டு இருந்த பிஸ்னஸ் இப்ப சொம்மா ஆடிக்கிட்டு இருக்கா ?

கொ.கோ : ஆமாம் சாமி, பார்டனர் என்னை மோசம் செஞ்சுட்டான், அவனுக்கு செய்வன வெக்கனும்

வெ.ஆ.மூர்த்தி : டம்பி நான் சொல்றேன்ன்னு தப்பா நினக்காதே அதிகமா கைவென வைக்கிறவனும் செய்வென வெக்கிறவனும் அத்தாலாயே சாவான்.

கொ.கோ : செய்வின தெரியும் அது என்ன சாமி கைவின ?

வெ.ஆ.மூர்த்தி : இதெல்லாம் வெவரமா கேளு, அதிகமா கைய நீட்டுறவன் யாராலாவது அடிவாங்கியே சாவான்னேன் நான் சொல்றது சரிதானே ?

கொ.கோ : அப்ப நான் என்ன தான் தொழிலு செய்றது ?

வெ.ஆ.மூர்த்தி : டம்பி கைத் தொழில் சரி இல்லைன்னா கலைத்தொழில் எதாவது செஞ்சுப் பொழச்சிக்கலாம், உன் ரேகைப்படி உனக்கு கூத்து வரும். ஆடிப் பொழச்சுக்கோ..... சினிமாவில் சேரு....நல்லா வருவே

கொ.கோ : அப்ப நான் வாரன் சாமி

வெ.ஆ.மூர்த்தி : நீ வார்றது இருக்கட்டும், காத்தாலேர்ந்து நாஷ்டா இல்லாமல் நட்டுகிட்டு இருக்கேன், துட்டக் கொடுத்து எங்கேயாவது போய் தொல

******

அடுத்து ஒரு 30 வயது தக்க பெண் வருகிறாள்

சாமி வணக்கம்,

வெ.ஆ.மூர்த்தி : நீ ஆதம்பாக்காம் ஆளவந்தான் மக அன்னக்கிளி தானே.........?

'இல்லை அது எங்க அக்கா.......நான் வண்ணக்கிளி'

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா ....அப்ப உங்க அப்பாவுக்கு ஒரு சின்ன வீடும் இருக்கா ?

வ.கிளி : நாசமாப் போச்சு.....போய் வாயைக் கழுவுங்க சாமி......எங்கப்பாவுக்கு இரண்டு வீடு இல்ல ஒரே வீடு தான், அவ என் கூடப் பொறந்த அக்கா

வெ.ஆ.மூர்த்தி : தப்பா நெனச்சுக்காதம்மா....உங்கப்பா அந்தக்காலத்து ஆளேச்சேன்னு கேட்டேன், இப்ப ஒனக்கு என்ன கொற ?

வ.கிளி : அத ஏன் கேட்கிறிங்க....எங்க ஊட்டுக்காரர் இராவைக்கு 12 மணிக்கு மேல பூனை மாதிரி வந்து படுத்துக்கிறார்.....காத்தால அஞ்சுமணிக்கெல்லாம் வெளியே போய்டுறார்......எங்கே என்னை கைவிட்டுவாரோன்னு பயமா இருக்கு ?

வெ.ஆ.மூர்த்தி : அவனுக்கு சின்ன வீடு இருக்கான்னு குறிபார்க்கனும், அதானே ?

வ.கிளி : அந்த கண்றாவி புடிச்சவனுக்கு நான் கிடச்சதே பெருசு, அது மோரக்கட்டைக்கு இன்னொருத்தி சிக்குவாளாக்கும்

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.......தப்பா நெனச்சுக்காதே ஒருவேளை ஒன் மோரக்கட்டையைப் பார்க்க புடிக்காமல் தான் ராவொடு வந்துட்டுப் போறானோ......

வ.கிளி : ம்கும்......இரண்டு புள்ளையை பெத்திருக்கேனாக்கும்.....புடிக்கமாலா இருக்கும்....

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா....உங்க வீட்டுல டிவி ஓடுதா ?

வ.கிளி : அதான் என்னேரமும் ஓடுது சாமி, இன்னிக்கு சீரியல் கீரியல் எதுவும் கிடையாது அதான் இந்தப்பக்கமா குறிகேட்க வந்தேன்.....நேத்திக் கூட செல்லம்மா சீரியலில் அஞ்செலி பொண்ணை அரஸ்ட் செஞ்சப்ப எழவெடுத்த கரண்டு பட்டுன்னு போச்சு, அதுக்குப் பெறகு என்ன ஆனதோ மனசு பட்டு....பட்டுன்னு அடிச்சுகுது

வெ.ஆ.முர்த்தி : பாப்பா மறுபடியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, கார்த்தாலேர்ந்து ரா வரைக்கு முழுச்சு முழுச்சு மூதேவியாட்டாம் மெகாசீரீயல் பார்த்துக்கிட்டே இருந்தீன்னா....எப்பேர்பட்ட மவராசனாக இருந்தாலும் வீட்டுப்பக்கமே ஒரு எட்டுக்கூட வந்துட்டுப் போவமாட்டான், டிவிய அணைச்சிட்டீன்னா அவன் வருவான் வந்து அவனே லைட்ட அணைப்பான்

வ.கிளி : போங்க சாமி எனக்கு வெட்கமா இருக்கு

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.....வந்ததே வந்த...... அவுத்துக் கொடுத்துட்டு நல்லா முடிச்சுப் போட்டுட்டு போ.....சுத்திலும் பூறா களவானிப் பசங்க பார்த்துட்டா அப்படியே அமுக்கிடுவானுங்க.

வ.கிளி : ...ங்ஙெ.............!

வெ.ஆ.மூர்த்தி : அட சில்லரையையும் சுறுக்கு பையையும் பத்தரம்னு சொன்னேன்

*******

பின்குறிப்பு : வெண்ணிற ஆடை ரசிகர்களுக்காக இந்த புனைவு நகைச்சுவை. இதை இன்னும் கொஞ்சம் தூக்கலாக எழுத முடியும் ஆனால் சுவை ரசபாசமாகிடும், அதாவது நாரசம்...ஆபாசம்!

5 ஜூலை, 2011

கவுண்டமணி Vs சந்தானம் !

திருவாளர் கவுண்டமணி முதுமை காரணமாக திரையில் இருந்து விலகி இருந்தாலும், அவரில்லாத இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ந்து வரும் ஒருவர் , கவுண்டரை கண்டு பிறந்த நாளுக்கு ஆசி வாங்க அவரைப் போலவே 'நக்கல் எகத்தாள காமடி' செய்துவரும் நடிகர் அதாவது சந்தானம் சந்திக்கிறார்

*********



சந்தானம் : வணக்கம் தலைவரே, எனக்கு பொறந்த நாளு உங்களப் பார்த்து ஆசி வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்

கவுண்டமணி : எலேய் நான் என்ன முற்றும் தொறந்த சாமியாரா ? என்கிட்ட எதுக்குடா ஆசி, நித்தி சாமி, சுத்திசாமின்னு சுத்திக்கிட்டு இருந்தியே அவனுங்க தரமாட்டானுங்களா ?

சந்தானம் : (முனுமுனுப்பாக) எதோ பெருசு யாரும் கண்டுகொள்ளமல் கெடக்குன்னு பார்த்தால் எகத்தாளத்தைப் பாறேன், அது இல்லிங்க கவுந்த சாரே...இல்ல கவுண்டர் சாரே.நீங்க எனக்கு சீனியரு, நான் உங்களுக்கு ஜூனியரு ஒரு மரியாதைக்கு தான்.

கவுண்டமணி : எலே அதெல்லாம் நாலு படத்துல நடிச்சுட்டு வருங்கால மொதலைமச்சருன்னு சொல்றானுங்க பாரு அவங்க கிட்ட சீனியர் ஜூனியர் டயலாக்கெல்லாம் சொல்லு அவனுக்கு அடுத்த முதலமைச்சர் ஆனாலும் ஆவே

சந்தானம் : டேய் டோப்பாத் தலையா......ஐயோ.....நாக்கை கடித்துக் கொண்டு, கவுண்டர் சார் கவுண்டர் சார் நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் ஜெனங்க நான் தான் உங்களுக்கு ஜூனியர்னு சொல்லிக்கிறாங்க

கவுண்டமணி : அப்ப நீயும் என்னைமாதிரி புத்திக் கெட்டுப் போய் கதாநாயகனாக நடிச்சுட்டு, ஒரு நாயும் மதிக்காமல் போய் அப்பறமாக வாய்ப்புக் கெடச்சா ஒரு ரவுண்டு வருவேன்னு சொல்லுறியா ?

சந்தானம் : (குறைவான குரலில்) கெழவனுக்கு கொழுப்பைப்பாரு....., 'கவுண்டர் சார் விவேக் சின்ன கலைவாணர்னு பட்டம் போட்டுக்கிறமாதிரி....நானும் சின்னக் கவுண்டமணி' ன்னு போட்டுக்கவா

கவுண்டமணி : அடேய் ஒரு வூட்டுல ஆயிரத்தெட்டு அண்டாக் குண்டான்னு இருந்தாலும் வீட்டுக்குள்ள ஒரே ஒரு மணி தான் இருக்கும், அதுல சின்ன மணி பெரிய மணியெல்லாம் உண்டாடா ? நீ எங்கேயாவது பார்த்திருக்கியா ? வந்துட்டாரு....... நீ வேணும்னா சின்னக் குஞ்சு மணின்னு போட்டுக்க இல்லாட்டி பெரிய குஞ்சமணின்னு கூட போட்டுக்க.

சந்தானம் : அது இல்லை ஒரு வளரும் கலைஞனுக்கு வளர்ந்த கலைஞன்....

கவுண்டமணி : (கர கர குரலில்) என்னது நீ இன்னும் வளரலையா ஒங்கொம்மாக்கிட்டச் சொல்லி காம்ப்ளானை வாங்கிக் குடிச்சுட்டு மம்மி மம்மின்னு சொல்லி எம்பி எம்பி நல்லா குதி வளர்ந்திடுவ

சந்தானம் : 'அடிங்க்.....பல்லு போன வயசுல லொள்ளைப் பாரு........எகத்தாளத்தைப் பாரு

கவுண்டமணி : எலேய் லொள்ளும் எகத்தாளமும் என்னமோ நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தாப்பல சொல்லிட்டு இருக்க, நான் சப்பிப் போட்ட மாங்கொட்டைய எடுத்து சப்பிக்கிட்டு இருக்கிற பய நீ என்கிட்டேயே எகத்தாளத்தப் பற்றிப் பேசுறியா ?

சந்தானம் : (மெல்லமாக) இந்தாளை ஏன் பீல்ட் அவுட் பண்ணினாங்கன்னு இப்பதான் தெரியுது, யாரு போனாலும் கடிச்சு வச்சிடுறானே, கவுண்டர் அங்கிள் அப்ப நான் வர்றேன் அங்கிள், சிங்கிள் டீ வேணுமா அங்கிள்....?

கவுண்டமணி : ம் எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு யார் யாரையோ நக்கல் அடிச்சிருக்கேன், ஆனால் இப்பதான் நேரில் பார்க்கிறேன். காட்டவெட்டி கழனித் தண்ணிக் குடிச்சாலும் குடிப்பேன் ஒரு பய கையால எச்ச டீ வாங்கிக் குடிக்கமாட்டேன்

சந்தானம் : கையால வேண்டாம்னா கையுல ஒற போட்டு வாங்கித்தரவா கவுண்டர் அங்கிள்.

கவுண்டமணி : ஐயோ அங்கிள்னு சொல்லி உறவுக்காரனாக்கி நெஞ்ச நக்குறானே, இப்ப என்ன செய்யறது.......சரி சரி நீயும் சினிமாகாரனாப் போய்ட்டே உன் ஆசையை நான் ஏன் கெடுப்பானே, நல்லவேளை பொறயோடு வாங்கிதரேன்ன்னு சொல்லி நாயாக்கமல் விட்டியே....நீயாவது நல்லாயிரு...

(மெல்லிய வாய்சில் ....எங்க பய சிங்கிள் டீ கூட வாங்கிக் கொடுக்காமல் நழுவிடுவானோன்னு நினச்சேன் ஒற போட்டு வாங்கித்தரதா அவனே மாத்திச் சொல்லிட்டான், என்ன இருந்தாலும், நம்ம பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.......)

9 ஜூலை, 2010

மூன்று நிமிட சாதனை - கருணாநிதிக்கு பாராட்டுவிழா !

சென்னை ஜூலை 22, தீவுத்திடல் அருகே 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட மேடையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது, விழாவில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவுரவித்தனர்.

முன்னதாக இந்தப் பாராட்டுவிழா ஏன் என்பதை தொடங்கி வைத்த பேசிய கவிஞர் வைரமுத்து,

கட்டுமரம் தராத மீனை, இவர்
காட்டும் வீரம் தருகிறது,
நாங்கள் வலைபோட்டு மீன் பிடிக்கிறோம், இவர்
மத்திய அரசிற்கு தூண்டில் போட்டே அதை பிடித்து தருகிறார் - என்பதாக பல மொக்கைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கினார்.

இந்த உலகத்திலேயே பாராட்டுவிழாக்கள் கண்டதில் வரலாறு படைத்த சாதனையாளர்களைத் தேடினால், அதில் கலைஞர்.மு.கருணாநிதி என்கிற பெயர் தவிர்த்து வெறெதுவும் இடம் பெறாது, கின்னஸும் கின்னஸ் அடித்தது போல் மயங்கும் செய்திக்குச் சொந்தக்காரர் எங்கள் கலைஞர், என்றார்.

மூன்றே நிமிடத்தில் மைய அரசுடன் தொலைபேசி மீனவ பிரச்சனையை முடித்ததைப் பார்த்து ஐஸ்லாந்து எரிமலையும் மூச்சை அடக்கிக் கொள்கிறது, இமயமலையும் உயரத்தைக் குறைத்துக் கூனிக் குறுக் கொள்கிறது. அன்று மூன்றெழுத்தை பேசினாய், இன்று மூன்றே நிமிடத்தில் அனைத்தையும் பேசி முடித்தாய். இந்த ஒரு வீரம் உள்ளவர் நாட்டின் தலைவனாக இருப்பது தெரிந்ததால் நானுறு ஜென்மங்களாகக் கூட நான் இலங்கை இராணவத்திடம் சுடப்பட்டு சாக தாயார் என்கிறாரானே இராம்ஸ்வர மீனவன், அங்கே இருக்கிறதையா உங்கள் வெற்றி. (பலத்தை கைதட்டல்)

****

பின்னர் பேசவந்த தொல்.திருமாவளவன் (மீசையை முறுக்கியபடி)

இராஜபக்சேவையும், ஜெயலலிதாவையும் ஒரு பிடி பிடித்தார், கருணாநிதிக்கு அவப் பெயர் ஏற்படுத்த ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதாகவும், அதைத் சாதுர்யமாக தெரிந்து கொண்ட கருணாநிதி மத்திய அரசிடம் மூன்றே நிமிடத்தில் பிரச்சனைகளை எடுத்துக் கூறி முறியடித்ததாகவும், இந்த அரசும், கலைஞர் அவர்களும் தான், தலித்துகள் மற்றும் மீனவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று கூறிஅமர்ந்தார்

வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது (அதையெல்லாம் நாங்களே செய்துவிடுவோம்). எல்லைப் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு அனுக்கமாக கவனித்து வருகிறது, இவை மேலும் விரைவாக செயல்பட திரு கலைஞர் அவர்களின் தொலைபேசி எங்களுக்கு உற்சாகம் அளித்தது இதோ ஓரிரு ஆண்டுகளில் இராமேஸ்வரம் பகுதியில் கடற்படை தளம் அமைத்து கண்காணிக்க உள்ளோம். மத்தியில் நல்ல அரசும் மாநிலத்தில் பொறுப்பான அரசும் வீற்றிருப்பது தமிழகத்தின் பொற்காலம், மான்புமிகு முதல்வர் அவர்களை நான் மனதாரப்பாராட்டுகிறேன். நான் டெல்லி சென்றதும் அன்னை சோனியாவிடம் ஆலோசித்து டெல்லியிலும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்து தமிழர்களை டெல்லியில் தலை நிமிரச் செய்கிறேன்., தமிழனாகப் பிறந்ததற்கு இதைக் கூட கலைஞருக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் பதவியில் இருப்பது வீன். என்ற போது வின்னதிர கைத்தட்டினர் உடன்பிறப்புகள்.

ஏற்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி,

உடன்பிறப்புகளே, பெரியோர்களே, நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கும் எனது 20 மணி நேர உழைப்பு உங்களுக்குத்தான், கடலில் மீனவன் உழைப்பின் உப்பு வியர்வை நீர் சேரலாம், உவர்ப்புக் குறுதி சேரக்கூடாது என்பதில் உறுதி கொண்டவன் நான். எதிரிகளும் விசமிகளும் இந்த ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது, அன்புள்ளம் கொண்ட மத்திய அரசை நான் அழைத்துப் பேசிய அடுத்த நிமிடமே உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கடிதம் அனுப்பினார்கள், (அனைவரிடமும் கடிதத்தைக் மேலே தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார்). கழக ஆட்சி இருக்கும் வரை கண்கள் கூட பாலைவனம் தான் (ஒரு நிமிடம் கூட்டத்தில் அமைதி), கண்ணீரே வராது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிடேன் (என்றதும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தலைவர் வாழ்க, கலைஞர் வாழ்க என்றனர்)

மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது : முதல்வர் கருணாநிதி ஆவேசம் - தினமலர்

சிங்கள கடற்படை அட்டூழியம் : ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,
ஏ.கே.அந்தோணிக்கும் கலைஞர் கடி
தம் - நக்கீரன்

7 ஆகஸ்ட், 2009

மீன்கொத்தி (சிறுகதை) !

"டாக்டர்.... மேடம்... சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுங்க..." சுகாதரத்துறை இயக்குனரான பெண் மருத்துவரிடம் மிரட்டுவது போன்று சொல்லிக் கொண்டு இருந்தார் அமைச்சரின் பிஏ.

"சார்...நீங்க மிரட்டினாலும்.....எங்களுக்குன்னு சில புரோசீஜர்ஸ் இருக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் நாங்க மருந்து வாங்குறோம்..."

"இருக்கட்டம் மேடம்...இப்ப உங்களுக்கு வந்திருக்கிற டெண்டர் எல்லாமே அமைச்சரின் வெவ்வேறு மருந்து கம்பெணிகளின் கொட்டேசன்கள் தான் என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுல ஒரு கம்பெணிக்கு கொடுத்து இருக்கலாம், வந்திருப்பதில் ஒண்ணே ஒண்ணு புதுசா ஒரு கம்பெணி அனுப்பி இருப்பது, இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும், புதுக்கம்பெணி அமைச்சருக்கு போட்டியாக ஒருவன் ஆரம்பிச்சிருக்கான்.....அவனால அமைச்சருக்கு ஏற்கனவே 20 கோடி நட்டம்....அவனுக்கு கொடுத்தீர்கள் என்றால் அமைச்சர் கடுப்பாகிவிடுவார்"

"சார்.....உங்க கம்பெணிகளைவிட அந்த கம்பெணி குறைவாக கோட் பண்ணி இருக்காங்க...அவங்க மருந்துகளும் தரமானது......"

"மேடம் நீங்க தரத்தை பற்றியெல்லாம் பேசி தேவை இல்லாது ரிஸ்க் எடுக்கிறிங்க.....அமைச்சரை பகைச்சிக்காதிங்க.....அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"சார்....எங்களுக்குத் தேவை நல்ல மருந்து......நான் உங்க கம்பெணிக்கு கொடுத்தால்....விவரம் தெரிந்து அந்தக் கம்பெனிக்காரங்க கோர்டுக்குப் போனாலும் எனக்கு பிரச்சனை தான்......என்னால உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது"

"மேடம் என்ன செய்விங்களோ......எனக்கு தெரியாது....நாளைக்கு டெண்டர் எங்களுக்கு கிடைச்சாகனும்"

"சாரி...மிஸ்டர்.....அடுத்த அடுத்த டெண்டர்களில் பார்க்கலாம்....."

"10 கோடி காண்ட்ரேக்ட்....அமைச்சர் எப்படியாவது அவருக்கு கிடைக்கனும் என்று சொல்லிவிட்டார்"

"திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காதிங்க.......எடத்தைக் காலிப்பண்ணுங்க .....இல்லாட்டி...."

அமைச்சரின் பிஏ.......அந்த மருத்துவ இயக்குனரை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார்

***

மறுநாளுக்கு மறுநாள் அங்கே அமைச்சர் வீட்டில், பி.ஏ அமைச்சரிடம்,

"ஐயா.......நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன்......அவ.... அந்த அம்மா பயப்படுவது போல் தெரியல.... நமக்கு ஆர்டர் கிடைக்கல.....அந்த புதுக்கம்பெணிக்கு கிடைத்துவிட்டது... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது"

"எப்ப்டிய்யய எப்பிடிய்யா.....எம்மேல பயமில்லாமல் போச்சு...இரு அவளுக்கு ஆப்பு வைக்கிறேன்......நீ என்ன பண்ணுகிறே....அடுத்த டெண்டர் பிரிக்கும் போது நம்ம ஆளுங்களிடம் ஒரு 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து......அந்த அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்லு... மற்றதையெல்லாம் நான் விஜிலென்ஸ் ஆபிசர்களிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன்"

"அந்த அம்மா லஞ்சம் வாங்குமான்னு தெரியாது.......பின்னே எப்படி......?"

"அதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ... வாங்கியதாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவாங்க...."

****

மூன்று மாதம் கழித்து,

ஒரு நாள் அந்த பெண் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றதை பற்றிய முந்தைய நாள் தொலைக்காட்சிப் படத்துடன், லஞ்சம் வாங்கிய பெண் டாக்டர் சிக்கினார், மருந்து கொள்முதலில் ஊழல் என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது.

படித்துவிட்டு கட்சிக்கார பெருசு...இன்னொரு பெருசிடம்,

"ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்லே....மக்களை ஏமாத்துறவங்க ... ஊழல் செய்றவங்க இப்படி சிக்கனும்யா.....பொம்பளைன்னா மட்டும் தப்பு செய்யலாமா ?"

என்று தன் சார்ந்த கட்சியின் ஆட்சிப் பெருமையுடன், பத்திரிக்கையின் மற்ற செய்திகளையும் பற்றி தனது கருத்துகளை உதிர்த்துக் கொண்டு இருந்தார்

*****

பின்குறிப்பு: கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது.

27 ஜூலை, 2009

தீர்ப்பு நாள் !

'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', 'இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்' - இவையெல்லாம் உண்மை தானோ ? என்று நினைக்கும் படி அன்று காலை அலுவலக கணனியில் திடிரென்று தனி திரையாக வெளிப்பட்ட செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது

"நாளை க்ரீன்விச் நேரம் காலை 11.00 மணிக்கு மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியைத் தாக்குகிறது, ஒளியின் வேகத்திற்கு சற்று குறைவாக எரிகல் பூமியை நோக்கி வருவதால் முன்கூட்டியே நாசா விஞ்ஞானிகள் கணிக்க தவறிவிட்டனர்... எரிகல் தாக்கினால் அப்போது பூமியில் ஏற்படும் வெப்பம், பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் பூமியின் உயிரனங்கள் அழிந்துவிடும் என்று ஊகிக்கப்படுகிறது, பொதுமக்கள் உடனடியாக தங்கள் உறவினர்களிடம் சென்று சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்...வீடுகளை விட்டு திறந்த வெளியில் அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

படித்து முடித்ததும் வியர்த்தது, உடலெங்கும் நடுங்கியது,அடுத்த சில வினாடிகளில் அலுவலகம் எங்கும் கூச்சல் குழப்பம், அலுவலகத்துக்கு வெளியே வாகனங்கள் சீறிச் செல்லுகின்ற ஓசை. அலுவலகத்தின் ஒவ்வொருவரும் அழுகை வெடிப்புடன், பயத்துடன், பரபரப்பாக வீட்டுக்குக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

திடிரென்று மின்சாரமும் நின்றுவிட்டது, ஒருவேளை மின்சார ஊழியர்களும் அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார்களோ, ஒருவருக்கு ஒருவர் பேசும் நிலையிலோ, ஆறுதல் கூறும் வழிவகைகளோ இல்லை, 'ஐயோ.....பசங்களை ஸ்கூலில் இருந்து கூட்டிவருனுமே...'......வீட்டுக்கு உடனே போகனுமே' என்பதாக திருமணம் ஆனவர்கள் பரபரத்துக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தனர். நானும் அதே காரணங்களினால் நானும் இறங்கி ஓடினேன். மின்சாரம் இல்லாததால் மின் தூக்கிகள் இயங்கவில்லை, பத்து மாடி இறங்குவதற்குள் மூச்சு வாங்கியது, நான்காவது மாடியில் லிப்டுக்குள் சிக்கியவர்களின் உதவி கேட்கும் பெரும் குரல், யாருக்கும் கேட்டும் கேட்காதது போல் ஓட...நானும் படியில் இறங்கி ஓடிக் கொண்டு இருந்தேன். எப்படி வீட்டுக்குச் செல்வது, வழி தெரியும், தொலைவு 15 கிமீ......ஓடிச் சென்று விட வேண்டியது தான்.

அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பலருடன் ஓடிக் கொண்டு இருந்தேன். அவசரத்தில் அலுவலகத்தில் சாவியை வைத்துவிட்டு வந்துவிட்டேன்......சாப்பிடக் கூட ஒண்ணும் எடுக்க முடியாதே....என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று அழுது கொண்டே ஒருவர் ஓடிக் கொண்டு இருந்தார். மின் சாரம் இல்லாததால் நின்று போன போக்குவரத்து விளக்குகள், அவசரத்தில் கடக்கும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருந்தன. சாலை எங்கும் வாகன இறைச்சல், டமால் டாமல் என்று மோது சத்தம், ரத்த வெள்ளத்தில் பலர். போக்குவரத்து நின்று போனதால் காரில் இருந்து இறங்கி பலர் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

தண்ணீர் தண்ணீர் என்று பலர் கத்திக் கொண்டே ஓடிக் கொண்டும் சிலர் மயங்கி விழுந்து கொண்டும் இருந்தார்கள். விழுபவர்களைப் பார்த்தாலும் யாரும் நின்று உதவுவதற்குத் தயாராக இல்லை, அவர்கள் எண்ணமெல்லாம் வீட்டிற்கு விரைவாகச் சென்று குழந்தைகளை பெரியவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் இறுதி நேரத்தில் அன்புக்குரியவர்களிடம் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.

இரயில் நிலையத்தை தொடும் தொலைவில் பெரிய தொரு மேம்பாலத்தில் ரயில் பாதியில் நின்று கொண்டிருக்க, ட்ரைவரும் அப்படியே நிறுத்தி விட்டு ஓடி இருக்க வேண்டும் என்று புரிந்தது, பலர் ரயில் டிராக்கில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டுவிட்டு ஓடிக் கொண்டு இருந்தனர். அங்கும் ஒரே ஓலம். சிலர் மேம்பாலத்தில் இருந்து குதித்துக் கொண்டு இருந்தார்கள். 'நாளை காலைதானே பொருமையாக வீட்டுக்குச் சென்றிருக்கலாமே ஏன் எல்லோரும் இப்படி அவரப்பட்டுவிட்டார்கள், கடவுளே இன்னும் எவ்வளவு தூரம் தான் ஓடுவது, தண்ணீர் தாகம், எதிரே கிழே விழுந்து கிடந்தவரின் அருகே பையில் தண்ணீர் பாட்டில் எட்டிப்பார்க்க எடுத்துக் குடித்துக் கொண்டே ஒட்டிக் கொண்டு இருந்தேன். தண்ணீர் தாகம் நிற்கவே இல்லை. சாலை எங்கும் ஓடுபவர்களின் பேரிரைச்சல், கூச்சல், அழுகை, கடவுளைத் திட்டிக் கொண்டும், காப்பாற்றும் படியும் வேண்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தார்கள், அல்லா, ஜீஸஸ், முருகா, பெருமாளே காப்பாற்று காப்பாறு என்ற வேண்டுதல்களுடன் ஓடிக் கொண்டும், முடியாததால் நிற்கவும் முடியாமல் மெதுவாக முகத்தில் அசதி தெரிந்தாலும் முனுகியபடி நடந்து கொண்டிருந்தனர்,

அங்கங்கே எங்கும் வாகனங்கள் உறுமிக் கொண்டு நின்று கொண்டும், ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, அதில் சில எரிந்து கொண்டும் இருந்தன. அங்கங்கே சிதறிக் கிடந்த சில்லரைகளையும், பணத்தையும், இறந்தவர்களின் கழுத்தில் இருக்கும் நகைகளையும் யாரும் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருந்தனர்.

மேலே ஹெலிக்காப்டர் சத்தம், ஒரு சில ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்டபடி துண்டு சீட்டுகளை வீசியது, எடுத்துப் படித்தேன் 'பொதுமக்கள் பீதி அடையாமல் பொறுமையாக செல்லும் படி அறிவிப்பு' இருந்தது, எதும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் மட்டும் எடுத்துப் படித்துவிட்டு வீசி எறிந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு 4 கிலோ மீட்டர் நடந்திருப்பேன், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் பெரிய திடல் ஒன்றில் கூச்சல் குழப்பத்துடன் கூடி இருந்தார்கள். ஐயோ நான் வீட்டுக்குச் செல்ல இன்னும் 9 கிலோ மீட்டர் நடக்கனும், தாங்க முடியாத கால்வலி..........என்னால் முடியல.......நானும் கீழே விழப் போகிறேன். என்னால முடியல...ஒவ்வொரு அடியும் 100 கிலோ எடையை தலையில் ஏற்றியது போன்ற அவஸ்தையுடன் எடுத்து வைப்பதாகவே இருந்தது......'என்னால முடியல.......கால் வலிக்கிறது....முடியல.......எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.......அப்படியே கிழே விழுந்துவிட்டேன்'

முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்தார்கள், வீட்டுக்குப் போகனும்.......நடக்கனும் நடக்கனும்.......என்று எழ முயன்றேன்

*****

"கட்டிலில் இருந்து தவறி விழுந்திட்டிங்க......எழுப்பி எழுப்பிப் பார்தேன்...மயக்கமாக இருந்திங்க......எழுந்திருங்க காலை 7 மணி ஆச்சு ....அலுவலகம் கிளம்புங்க" லேசான பதட்டத்துடன் கவலையுடன், மனைவியின் குரல்.

ஆழப் பெருமூச்சு வந்தது..........அப்படின்னா கண்டதெல்லாம் கனவா ?

(மதவாதிகள் அது பற்றி சிறிதும் கற்பனை இன்றி சொல்லும் உலகம் அழிவு ... என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்....நம்ம கற்பனையைவிட அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் .... அது இன்னும் மோசமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்