பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2009

கண்ணாமூச்சு (சிறுகதை) !

கிண்டி ரயில்வே பாலத்துக்கு முன்பாக ட்டிட்ரு.........ட்டிட்டிட்ரு ஒலியுடன் ஆட்டோவினுள் பயணித்துக் கொண்டிருந்தேன். வேகம் குறைந்தது ஆட்டோ......முன்பாக எட்டும் தொலைவுக்கு வாகனங்கள் நிறைந்து காணப்பட்டது, சாலையின் மறுபுறம் எதிர்திசையில் வாகனங்கள் விரைவாக பயணித்துக் கொண்டிருந்தன.

'என்ன எழவுடா இது.... இந்த கூட்டத்தில் எப்படி நேரத்துக்கு ப்ளைட்டைப் பிடிக்கப் போறோமோ' என்று நினைத்துக் கொண்டே..."கொஞ்சம் வேகமாகப் போப்..ப்பா"

"இன்னா சாரே...நானா போவமாட்டேன்னு சொல்றேன்....இம்மாம் ட்ராபிக் ஆகிப் போயி கிடக்குது...செத்த இரு" என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார் ஆட்டோ ஓட்டுனர்,

இருப்புக் கொள்ளாமல் மணியை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே..நகத்தைக் கடிக்க, சுற்றிலும் ஹாரன் சைரன் ஒலி..... புகை..பெட்ரோல் நாற்றம்.....அனைவர் முகத்திலும் எரிச்சல். திரும்பி வந்த ஆட்டோக்காரர்,

"சார்.....தந்திரன் பட சூட்டிங்காம்......ட்ராபிக் க்ளியர் ஆகாது போலருக்கு.....நான் உன்னை வேளச்சேரி வழியாக இட்னு போறேன்.....கூட ஒரு 200 போட்டுக் கொடுத்துடு"

'இதெல்லாம் கவர்மெண்டுல கேட்கவே மாட்டேங்களா...' தந்திரன் படப்பிடிப்புகாரர்களை சபித்துக் கொண்டே...

"உங்க காட்டுல தான்யா மழை....வேற வழி எப்படியோ சீக்கிரம் கொண்டு போய் விடு" என்றேன்

"இன்னா சார், நான் என்னமோ வேணுகினே ஒன்ணாண்ட துட்டு புடுங்கிற மாதிரி அலட்டிக்கிறே... எனக்கு வோணாம் சார்....எறங்கிப் போ"

'இதப்பாருடா...' என்று நொந்து கொண்டு......"சரி சரி போப்பா" என்றேன்

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து யூ டேர்ன் அடித்தவர் பெரிய சுற்றுக்கு பிறகு விமான நிலையத்தில் விட்டார். என்னைப் போலவே பலரும், பல வழிகளில் நேரம் தாழ்த்தியே வர....முனுகிக் கொண்டே விமான நிலையத்தில் அனுமதித்தார்கள்

*****

அங்கே சூட்டிங் ஸ்பாட்டில், உதவி இயக்குனர் மெதுவாக இயக்குனரிடம்

"டைரக்டர் சார்... ட்ராபிக் ஜாம்....சிஎம் கடுப்படிக்கிறாராம்....."

முகம் கருத்த இயக்குனர்

"யோவ்......இது என் வீட்டு படமாய்யா .... படம் நல்ல வரனுமா ? வேண்டாமா "

"சார் என்ன தான் இருந்தாலும், பொதுமக்கள் அவஸ்தை"

"என்னய்யா பண்ணுறது.....இரண்டு மணி நேரம் பர்மிசன் கேட்டோம்....ஆனால் நடிகை வர லேட் ஆகிவிட்டதேய்யா.....ஹிரோவே கடுப்பாக இருக்கிறார்......அவரிடம் போய் பேசு"

"சார்.....அவரிடமும் சிஎம் சார்ப்பாக பேசி இருக்காங்க போல....உம்முன்னு இருக்கார்"

"சரி சரி....செட்யூல் படி......இன்னும் 3 மணி நேரத்தில முடிஞ்சிடும்....ப்ரொடியூசர் ஆளுங்களிடம் சொல்லி சமாளிக்க சொல்லு"

"சரிங்க.....சார்.....என்னன்னு சொல்றது"

"எல்லாத்தையும் நானே சொல்லனுமாய்யா....நமக்கு காரியம் முடியப் போவுது, இனிமே இன்னொரு படத்துக்கு இங்கே இதே பாலத்தை நான் எந்த படத்திலும் காட்ட மாட்டேன்..."

"புரியுது சார்"

******

மறு நாள் காலை விமான நிலையத்தில் இருந்து திரும்பினேன். அதே பாலம் வழியாக, சீரான போக்குவரத்து, பாலத்தை விட்டு கிழே இறங்கிய ஆட்டோவில் இருந்தே பார்த்தேன்

வலது பக்கச் சுவற்றில்

"பொது இடத்தில் பகலில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்து, மக்கள் குறை போக்கிய மாபெரும் தலைவர் வாழ்க !" என்ற சுவரொட்டி, "இலங்கைத் தமிழர்களுக்கு நாளே நாளில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் வாழ்க !" என்று முன்பு ஒட்டப் பட்டிருந்த அதே இடத்தில் அதே சுவரொட்டி மீது ஓட்டப் பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் வாங்கிய அன்றைய ஆங்கில நாளிதழின் இரண்டாம் பக்கத்தில் இருந்த ஆங்கில செய்தி பாலத்தின் பெயரைக் குறிப்பிட்டு....பாலத்தில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை என்னும் அரசு தகவல்களுடன் நேற்றைய போக்குவரத்து நெரிசல் படத்துடன் செய்தியைப் படித்தேன்.

'அட உண்மையிலேயே நடவெடிக்கை எடுத்து இருக்கிறாங்க இல்லே' என்று நினைத்துக் கொண்டேன்.

பின்குறிப்பு : கதையும், நிகழ்வுகளும் 100 விழுக்காடு கற்பனையே !

புனித (நூற்) போர் !

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்.

தனக்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்போர் அன்றும் இன்றும் என்றும் உள்ளனர். இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத சூழலில், மறுப்பதற்கும் மனமின்றியே 'கடவுள் என்று ஒன்று இருக்கிறது, இருந்தாக வேண்டும்' என்ற நம்பிக்கை வரும் கால சந்ததியினருக்கு (வி)இட்டுச் செல்வர். சந்ததிகள் மூலம் மனித இனம் உயிர்புடன் இருப்பது போலவே நம்பிக்கைகளை (அசையா!) சொத்தாகக் கொடுப்பதால் கடவுள் குறித்த நம்பிக்கைகள் என்றும் உயிர்புடன் இருக்கின்றன. மனித மனங்களினால் ஆன கடவுள் கட்டமைப்பு காலம் தோறும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்வதைப் பார்க்கும் பொழுது, 'கடவுள் இருப்பை நிருப்பிக்கிறேன்... என்று சொல்லப்படுவதும், அப்படி எழுதப்படுவதும்' நிராகரிக்கப்படுவதும் தொடர்கிறது. எந்த ஒரு நிருபனமும் உண்மையாக இருக்கும் பொழுது, அவை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவற்றின் விடைகள் முழுமை பெற்றதாக எண்ணப்படும்.

இயற்பியல் விதிகள் என்பவை அதன் செயல்பாடுகள் குறித்த முந்தைய கேள்விகளின் விடைகள் எனலாம். இயற்பியல் விதிகள் போன்ற தெளிவான ஒரு முடிவை 'கடவுள் இருப்பின் நிருபனங்கள்' இதுவரை செய்துவிட வில்லை, இனியும் செய்துவிடாது என்பது என் திண்ணமான எண்ணம். ஏனெனில் கடவுள் இருப்பு பற்றிய கேள்விகள் தொன்று தொட்டவை. அதாவது 'கடவுள் இருப்பை' எந்த ஒருவரும் நிருபனம் செய்துவிடமுடியாது, அவை தொடரும் ஒரு நம்பிக்கை மட்டுமே. இதன் சாட்சியாக இருப்பதே 'ஒன்றே தேவன்' என்கிற சொல். இந்த சொல்லை ஆய்ந்து நோக்கும் போது, பல்வேறு கடவுள்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு, அனைத்தையும் மறுத்து, எதோ ஒன்று (மட்டும்) இருந்தாகவேண்டும் என்கிற உள்மன ஆசையையும் சேர்த்த ஒற்றை வெளிப்பாடாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதையும் ஏற்க மனமில்லாதோர், நம்பாதவர் ஏற்படுத்திய மற்றொரு கூற்று 'நானே கடவுள், அஹம் ப்ரம்மாஸ்மி' எனும் அத்வைத சித்தாந்தக் கூற்று. அத்வைதிகள் கடவுள் இருப்பை நேரடியாக மறுக்காமல் 'நானே கடவுள்' என்ற சொல்லாடலில் அதைச் செய்கிறார்கள். ஒரு நாத்திகனுக்கும், அத்வைதிக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாத்திகன் கடவுள் இல்லை என்பான், அப்படிச் சொல்லாமல் அத்வைதி 'நானே கடவுள்' என்பான்.

கடவுள் என்ற சொல்லை, கடவுள் என்கிற தனியாக ஒரு இருப்பை மறுத்துப் பேசினால் அத்வைதிக்கு கடவுள் நம்பிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்காது என்கிற கொள்கை தன்நலம் சார்பாக பக்தியாளர்களை ஏமாற்றும் வழியாக 'எல்லாம் மாயை, எல்லாம் ப்ரம்மம்' என்பதன் சுருக்கமே 'அஹம் பிரம்மாஸ்மி என்னும் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்வது. அத்வைதம் எந்த ஒரு புற வழிப்பாட்டையும் தவறென்று சொல்லும், அல்லது அதுவும் பிரம்மத்துக்குள் அடங்கியது என்று சொல்லும். தனிமனித மனம் சார்ந்த நம்பிக்கைகள் தவறு என்று சொல்வதில் நாத்திகமும், அத்வைதமும் வேறு வேறு அல்ல. (நான் சொல்வது தவறு என்போர் விவாதிக்கவும்) அத்வைத சித்தாந்தம் வழியாக எத்தனை சாமியார்கள் முக்தி பெற்றார்கள் என்கிற கணக்கு எதுவும் கிடையாது, ஆனால் 'நான் கடவுள்' என்று கூறிக் கொண்ட போலிச் சாமியார்கள் கூட்டம் புற்றீசல் போன்று தோன்ற அது வழியமைத்துக் கொடுத்தது.

*****

இறைக் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் அவை தொகுப்பாக இல்லாவிடில் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அந்த தொகுப்பை கட்டி வைத்திருப்பவையே புனித நூல்கள் எனப்படும். புனித நூல்களுக்கான புனிதம் எது என்று பார்த்தால் அவை 'அருளப் பட்டவை' என்ற அடைமொழியால் சிறப்பு சேர்க்கப்பட்டு இருப்பதே. இன்றே ஒரு மதம் தோன்றினாலும் அதன் முதற்பணியே தனக்கான புனிதத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கான முதல் முயற்சி என்பதாக இருக்கும். இன்றைய வளர்ந்த கார்ப்ரேட் சாமியார்களின் கொள்கைகள், புனித பேச்சுகள் அருளுரைகள் அனைத்தும் புத்தகமாக வடிவம் பெற்றும் மத வடிவம் பெற முயற்சித்துக் கொண்டு இருப்பதை காட்டும் விதமாக அவை 'இ(ச)யங்கள்' என்ற அடையாளம் எடுத்து இருப்பதைக் காணலாம்.

எழுத வந்தது ஒரு எதிர்வினை, ஆனால் எண்னங்கள் எங்கோ சென்றுவிட்டது,
திண்ணை இணைய பக்கதில் திருகுறளை மேற்கோள் காட்டி, இஸ்லாம் குறித்த சாடல் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது, (கீழ்கண்ட சாய்வெழுத்துகள் எனது எழுத்துகள் அல்ல, திண்ணைக் கட்டுரையின் பகுதி)

எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்

பொய்யாவிளக்கே விளக்கு.

மேற்கூறிய திருக்குறள் செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி, ‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்..............? என கேள்வியும் ஒருங்கே எழுகிறது.
உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில் நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்தறியவும். மேலும் பொய்களும் ஷரியா சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.

இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து, குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க, àதேவைப்பட்டால் அல்லாவின் நாமத்தைச் சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற ’ஜிஹாத் புனித போர் ஒலி’யை உரக்கப் பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!]. முஸ்லிம்களுக்கு, நம் நாடு (patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன் நண்பர்கள் (friends), என்று எவரும் முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் / நமாஸ் - தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும் அல்லாவுக்கே’ என மேற்கே இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே போய் சேர வேண்டும். இக்கட்டுரையில், முகம்மதுவைப் பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

******
மேற்கண்ட திண்ணைக் கட்டுரையின் பகுதியைப் படித்ததும்,

இங்கே குரான், அல்லா என்பதற்கு பதிலாக பகவத் கீதை, கிருஷ்ணன் என்பதைப் போட்டால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பதை பகவத் கீதையை நன்கு படித்தவர் தெரிந்து கொள்ளலாம். "எதிரே இருப்பவர்கள் அனைவருமே என் உறவினர்கள்....இவர்களை எப்படிக் கொல்வது ?" என்று தயங்கிய அர்ஜுனன் போரில் இருந்து பின்வாங்கப் போவதாக சொல்ல,

"கோழைகளைப் போல் சிந்திக்காதே.....போர் புரிவது சத்திரிய தருமம், கோழைகள் சென்று சேரும் இடம் நரகமே...." என்பதாக கண்ணன் போர் புரிய வேண்டியதன் கடமையையும், ஞாயத்தையும் கர்மயோகம் என்ற பகுதியில் பத்தி பத்தியாக உரைப்பான். "எல்லாப் புகழும் (,இகழும் கூட) கிருஷ்ணனுக்கே" என்பதே பகவத் கீதையின் சாரம்.

போர் சூழலில் சொல்லப்பட்டதே கீதை என்று கீதையின் முன்குறிப்பிலும், அர்ஜுனன், கர்ணன் என்கிற பாத்திரங்களின் மூலம் சொல்கிறார்கள், ஆனால் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பும் போது இதற்கு கொடுக்கப்படும் விளக்கம் "அர்ஜுனன் என்பது ஆன்மா, கிருஷ்ணன் பரமாத்மா.....இங்கு குறிப்பிடுவது போர் அல்ல... ஆன்ம விடுதலைக்கான அறிவுரைகள், நடைமுறைகள்....இதைத்தான் போர் என்னும் புனைவில் சொல்லப்பட்டு இருக்கிறது" என்கிறார்கள். ஆனால் இந்த விளக்கம் எவ்வளவு தொலைவு நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது என்று பார்த்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றம் தான். ஏனெனில் இன்றைய இந்தியவில் இந்துத்துவாக்கள் (என்னுடைய தன்நலம் இந்து மதவெறியர்கள் என்று எழுத மனம் இடம் கொடுக்கவில்லை :)) இதே பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பதன் படி தீர்ப்பு எழுதுவதாக நினைக்கிறார்கள்.

இஸ்லாம் போன்று இந்து மதமும் உலகளாவில் இருந்தால் பகவத் கீதையைக் காட்டி இந்துதுவாக்கள் பாத்வா (தீர்ப்பு - கலாச்சார காவல், பிங்க் ஜட்டி, ஆடு கோழி வெட்ட தடை போட்டது நினைவு வருகிறது) கொடுப்பார்களோ என்னவோ, திண்ணையில் இடம் பெற்ற அந்தக் கட்டுரையை படிதத்தும் எனக்கு தோன்றிய வரிகள் 'ஈயத்தைப் பார்த்து இளித்தாம் பித்தளை", திண்ணைக் கட்டுரையாளர் புனித நூலுடன் (குரான்), புனித நூலை (பகவத் கீதை) ஒப்பிட்டு எழுதாமல் தம் வசதிக்கேற்ப திருகுறள் மேற்கோளுடன் எழுதியது எஸ்கேபிசம். :)

29 நவம்பர், 2009

அவன் அவர் அது !

செய்தி ஊடகங்கள் நான்காம் தூண், சமூதாயத்தை, சமுதாய எண்ணங்களைக் கட்டமைப்பதில் அவையே முதல் தூண். அவர்கள் வெளியிடும் தகவல் மக்கள் வெறும் தகவலாக எடுத்துக் கொள்வது இல்லை என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஒரு முறை அமெரிக்காவில் வெள்ளத்தினால் உணவு திண்டாட்டம் ஏற்பட்ட போது அமெரிக்க கடைகள் பல சூறையாடப்பட்டன, பொருள்களை அள்ளிச் சென்றவர்கள் பற்றிய பல்வேறு ஊடக செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தனவாம், அதில் வெள்ளையர்கள் அள்ளிச் சென்றதைப் பற்றிய செய்திகளில் "உணவுக்காக பொருள்களை எடுத்துச் சென்றனர்" என்றும் கருப்பர்கள் அள்ளிச் சென்றது பற்றிய படச் செய்திகளில் "உணவுக்காக பொருள்களைச் திருடிச் சென்றனர்" என்றும் வெளியாகி இருந்தனவாம்.

அவன்:

வடசென்னை பகுதியில், பகல் நேரத்தில் பூட்டப்பட் டிருந்த வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெரம்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவன் சுந்தர் (25). இவன் 2006ம் ஆண்டு செம்பியம் மற்றும் பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

இவன் மீது 12க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த சுந்தர், மளிகைக் கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தான். கடைக்கு வரவேண்டிய பணத்தை, சென்னையில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று காசோலைகளாக பெற்றான். அதை வங்கியில் செலுத்தி, பணமாக மாற்றி கடைக்கு கொண்டு வந்து சேர்த்து வந்தான். பூக்கடை, யானைக்கவுனி, ஏழு கிணறு, கொத்தவால் சாவடி, எஸ்பிளனேடு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிக் கிடக்கும் வீடுகளில் பகல் நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.

அவர்:

காஞ்சிபுரம்:அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கோவில் நிர்வாகிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் மச்சேஸ்வரர் கோவில் உள்ளது. தனியார் கோவில். இக்கோவிலில் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன்(35) அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார்.


இவர் கோவிலுக்கு வந்த பெண்களிடம் கோவில் உள்ளே உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவநாதன் தலைமறைவானார். முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரணடைந்தார். அவரை, ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். நீதிபதி இரண்டு நாட்கள் அனுமதி அளித்தார்.


அது :

இந்த இரு (அவன், அவர்) செய்திக்குரிய அது.... தமிழில் நெ.1 (என்று சொல்லிக் கொள்ளும்) நாளிதழான தினமலர் (தமிழர்கள் தினமலரை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது சொந்த செலவில் சூனியம்)

*****

பார்பனீயம் என்றால் என்ன ? புரியல தயவு செய்து விளக்கவும்.

26 நவம்பர், 2009

தமிழர்களின் தாகம் !

கடமை போல் நடப்பு நிகழ்வுகளை வைத்து எழுதுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை, சில முதன்மை நிகழ்வுகளின் அடைப்படையில் அது போல் எழுதுவதும் மன ஆறுதலைத் தருகிறது.

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுகளில் நடக்கும் பொழுது அதை ஒரு நிகழ்வு என்பதாக ஊடகத் தலைப்புகளைப் படிப்பதுடன் சரி. இன்று இலங்கையின் நிலவரங்கள் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியும், திணித்தும் வைத்திருக்கின்றன. ஈழத் தமிழர் தமிழக "அகதி" முகாம்களைப் படங்களாகவும், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு அவர்கள் படகில் வந்து தஞ்சம் புகும் படங்களே நமக்கு மிகப் பெரிய சோகக் காட்சிகளாக இருந்தது, அதையெலாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலக மதங்கள் காட்டும் நரகக் கூடங்களாக கம்பி வேலிக்குள் லட்சக்கணக்கில் சதையோடும், உடலோடும், உயிர் "சித்திர" வதைகளின் காட்சிகளாக ஈழமக்கள் நிற்கும் படங்களைப் பார்க்கும் போது உணவும், உறக்கமும் வெறுமையாகிப் போகிறது. வசதியான, பாதிப்பு இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அறிவுரை கூறும் ஆளும்வர்க அறிவாளிகள் 'இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம்...' என்ற காலம் கடந்த அறிவுரைகள் நிகழ்கால உண்மைகளை முடிந்த மட்டில் மறைக்கவே முயல்கின்றன.ஈழமண்ணில் போராடி இறந்தவர்களைப் போல் ஈழத்தமிழர்களுக்காக மனதையும் உயிரையும் கொடுத்து தன்னை மாய்த்துக் கொண்ட முத்து குமார் போன்ற மாந்தர்கள் நம் தமிழக மண்ணில் இருந்திருக்கிறார்கள். இன விடுதலைக்காக போராடி வரலாற்றில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் வீர வணக்கம் !

எந்த ஒரு விடுதலையும் ஓர் இரவில், இரத்தம் சிந்தாமல் கிடைத்தது இல்லை என்பதே உலக நாடுகளின் விடுதலை வரலாறு. எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.

உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்

மாவீரர்கள் மரணித்ததே இல்லை !

25 நவம்பர், 2009

ஊருக்குள்ளே என்னைப் பற்றி...

எனது 1000 ஆவது பதிவை பாராட்டி வாழ்த்திய அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !

தலைப்பில் பதிவர் பெயரை வைத்து இடுகைகள் எழுத எதேனும் கும்மி, கேள்வி, எதிர்வினை,பாராட்டு, நற்பெயர், கெட்டப் பெயர் அனைத்துக் காரணங்களும் இருக்கும், பிறப் பதிவரின் இடுகை தலைப்பில் இடம் பெறும் பதிவர்கள் பலர் உண்டு, பல்வேறு பதிவர்களின் இடுகைகளில் என்பெயர் 25க்கும் மேற்கண்ட இடுகைகளில் இடம்பெற்றிருக்கிறது.

பாராட்டு, புகழ்ச்சி...இகழ்ச்சி...எல்லாம் உண்டு, போற்றுவார்கள் போற்றலும் இருக்கிறது, தூற்றுயவர்கள் தூற்றியதும் இருக்கிறது....போகட்டும் கோவி.கண்ணனுக்கே ! :)
கூகுளாண்டவரின் உதவியுடன் முடிந்தவரை தேடிப் பிடித்து இணைத்திருக்கிறேன், முழுப்பட்டியல் இல்லை என்றாலும் கொஞ்சம் நிறைவான பட்டியல் தான்.

என் பெயர் (கோவி,கோவியார்,கோவி.கண்ணன்) தலைப்பில் இடம் பெற்ற பல்வேறு பதிவர்களின் இடுகைகள்:

1. பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?
2. கோவி.கண்ணணுக்கு நடந்தது என்ன?
3. "கோவி.கண்ணன் அவர்களின் பார்வைக்கு... பெரியாரின் விளக்கம்"
4. கோவியார் செய்த மாபெரும் உதவி
5. கோவி கண்ணனும்,பதிவுகளும்
6. இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?
7. கோவியாருக்கு எச்சரிக்கை
8. ஆறு: கோவி கண்ணனுக்காக
9. 75. வீரமணியும் கோவி.கண்ணனும் "நைசாக" பாடிய கண்ணன் பாட்டு!
10. அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு
11. "கோவி”யார்” பற்றி செந்தழலின் அதிரடி வாக்குமூலம்..."
12. காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)
13. கோவி. கண்ணன் அவர்களிடம் நறுக் என நான்கு கேள்வி !
14. அடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்குஞ்சுகள்
15. பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
16. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-1"
17. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-2"
18. Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்
19. BlogOgraphy:கோவி.கண்ணன்
20. கோவி கண்ணனுக்கு கண்டனம்..
21. ”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”
22. கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
23. கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்
24. காணவில்லை! காரணம் என்ன? - கோவியார் பெசல் கும்மி!
25. கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !
26. "டேக் கேர் கோவி!!"
27. இதெல்லாம் ஒரு பிழைப்பா கோவி கண்ணன்?


மேலும்:
28. ஆயிரத்தில் ஒருவன் - கோவியார்.
29.கோவி.கண்ணனின் அட்டகாசங்கள்

24 நவம்பர், 2009

1000ம் - 'காலத்து' பயிர்கள் !

எனது வலைப்பதிவு காலம் - இதில் 1000 இடுகைகள் இன்றோடு முற்றுகிறது. எழுத்து என்பதை தள்ளி நின்று பார்த்தால் மலை போன்றும் அதன் அருகில் சென்றால் அருவியில் நாமும் குளிக்கலாம் எனது துய்ப்பு(அனுபவம்), ஆழ்ந்த கருத்தைத் தொட்டு எழுதுகிறேன் என்று ஒரு சிலர் பின்னூட்டத்தில் பாராட்டினாலும் சரியான புள்ளிவிவர தரவுகளுடன் நான் எழுதுவதில்லை என்கிற குற்றச் சாட்டுகளும், சில எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள் நேர்வதையும் சிலர் சுட்டுவதையும் ஏற்கிறேன்.மிகச் சிறந்த ஆக்கம், கட்டுரை படைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் நான் எதையும் எழுதுவதில்லை, எழுதுபவர்கள் அனைவருமே கற்பனை என்கிற எல்லைக் கோட்டில் நின்று எழுதுவதில்லை. எங்கோ படித்தவற்றின் பகிர்வுகள் அது குறித்த எண்ணங்களை தான் சார்ந்துள்ள பிடித்த கொள்கைகளின் கருத்துகளையும் நுழைத்தே எழுதுகிறார்கள், நேர்மையான விமர்சனப் பகிர்வுகள் வருவது குறைவுதான். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களம் என்பது சிந்தனைக் களம் என்பதைத் தாண்டி சித்தாந்தங்களை முன்னிருத்தும் களமாக நிற்கிறது. அரசியல் சார்பு, தன்னல முன்முடிவுகள் தான் பெரும்பாலும் கருத்துக்களில் முன்னிறுத்தப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல இருந்தாலும் பச்சைப் பொய்களை அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறி கருத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று முயன்றதில்லை, அதற்கான தேவையும் எனக்கு இல்லை என்று உறுதியாக நினைக்கிறேன்.

முதல் பதிவிலிருந்து 999 இடுகை வரை சிந்தனை ஓட்டங்களில் ஒரு சில கருத்துகளில் மாற்றம் இருந்தாலும் முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை என்பதை என் எழுதுக்களில் எனது முந்தைய இன்றைய நிலைப்பாடுகளை ஒப்பிடும் போது எனக்கு தெரிகிறது. நாத்திக நிலைப்பாடு, ஆத்திக நிலைப்பாடு என்ற இருபக்கமும் எதோ ஒன்றை சார்ந்து எழுதியது போல் தெரியவில்லை. மதவேறுபாடுகளால் கூறுபட்டு கிடக்கும் மனித இனங்களை ஒன்றிணைக்க வாழ்வு உண்மையானதே, மனம் முதன்மையானது, தனிமனித உரிமை என மனிதம் பேசும் நாத்திகம் எந்த அளவுக்கு எனக்கு முதன்மையாக தெரிகிறதோ அதே அளவுக்கு அனைவரையும் ஒன்றிணைக்க வாழ்வே நிலையற்றது, உடல் நிலையற்றது, நிறம் நாமே விரும்பிப் பெற்றது அல்ல, இனவேறுபாடுகள் தவிர்த்தால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கூறி அதற்கு இறை நம்பிக்கையை முன்வைத்துப் பேசும் ஆத்திகமும் எனக்கு முக்கியமானதே. எனது வலைப்பக்கத்தில் நான் வள்ளலார், பெரியார் வேறு காலகட்டங்களின் வேறு வேறு தமிழ் துருவங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறேன். தமிழ் சூழலிலேயே அத்தகைய இருதுருவங்கள் நம்மிடையே வாழ்ந்ததும் நம் தமிழர்களின் கொடுப்பினையாக நினைக்கிறேன்.

தீவிர இறை மறுப்பு மற்றும் ஏற்பு என்ற இரண்டிற்குள்ளும் நான் பொதுவாக மூக்கு நுழைப்பதில்லை, மதவாதமும், சாதிவேற்றுமையும் கண்டிப்பதில் சார்பு நிலையற்றது என்பதால் நாத்திகவாதமாக எனது கருத்தை பேசுவது எனக்கு வசதியாவே இருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று சொன்னால் அதை நிருபனம் செய்யச் சொல்லி ஆத்திக நண்பர்களே என்னிடம் கேட்கக் கூடிய பேராபத்தும் உண்டு :) என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன். கடவுள் நம்பிக்கை என்பது பெரும்பாலும் ஊட்டப்பட்ட நம்பிக்கையாக இருப்பதால், அதுபற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் எதிர்ப்பதும் தேவையற்றது, இருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படும் கெடுதல்களை நோக்கும் போது அவை விவாதமாக மாறுகிறது. பூசை அறை நம்பிக்கைகளை யார் குறைச் சொல்லப் போகிறார்கள் ?

என் பதிவின் முந்தைய பிந்தைய இடுகைகளிலும் ஒப்பீட்டு அளவில் எனக்கு தெரிந்த நல்ல மாற்றமாக நான் கருதுவது எழுதும் போது வடமொழி உட்பட்ட பிற மொழிச் சொற்களை தெரிந்த மட்டில் தவிர்த்து எழுதுவதுதான்.

புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இங்கு காலத்தில் இருப்பது 1000 இடுகைகள், இவை தவிர்த்து பிறர் மற்றும் எனது பிற வலைப்பக்களிலும் எனது எழுத்துப் பங்களிப்புகள் உண்டு. இதற்கு செலவிட்ட நேரம் பிற நடவடிக்கைகளுக்கான நேர இழப்பு தான் என்றாலும் இந்த நேரப் பங்களிப்பு 200 க்கும் மிகுதியான நண்பர்களைப் பெற்று தந்திருக்கிறது, 100க்கும் மிகுதியானவர்களை நேரடியாக சந்தித்து மகிழவைத்திருக்கிறது, 1000க்கும் மிகுதியானவர்களுக்கு என்னைப் பற்றிய அறிய வைத்ததுடன் எண்ணங்களை வாசிக்க வைத்திருக்கிறது. எழுதுவதன் பிறநோக்கம், ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துகள் ஏற்பட வைக்க வேண்டும், வாசிப்பவர்களை எழுதத் தூண்டவேண்டும் என்பதே எழுத்து குறித்த எனது தனிப்பட்ட எண்ணம்.


1000 இடுகைகளுக்கு 22,103 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது. சராசரியாக இடுகைக்கு 22+ பின்னூட்டங்கள் என வாரிவழங்கியதுடன்,
தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி (காக்டெய்ல் தாங்கஸ்) ! முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் ஜோதிபாரதி, ஸ்டார்ஜன் மற்றும் அக்பருக்கு மிக்க நன்றிகள்,


வருகை அட்டவணைகள் :

ஆகக் கடைசி 20 ஆயிரம் வருகைகள்


90 நாடுகளில் 175 நகரங்கள்


வருகை கணக்கு விவரம்வருகைக்காக பயன்படுத்தியவர்களின் உலவி மற்றும் செயலி

23 நவம்பர், 2009

புனித குற்றங்கள் (Sacred Crime) !

"தவறிழைத்தாலும் அரசன் மன்னிப்பு கேட்பது என்பது அரசனுக்கே இழுக்கு" - இது வெள்ளைக்காரர்களின் பண்பாட்டுக் கூறு. Man in the iron mask என்கிற படம் பார்த்தேன், அதில் இளவரசன் தவறுதலாக ஒரு கண்ணாடி கோப்பையை உடைத்துவிட்டு 'Sorry' சொல்ல, 'A king cannot ask sorry' என்று அவனுக்கு பயிற்சி கொடுப்பவர் அறிவுரை சொல்லுவார். முதலாளிகள், பணக்காரவர்கம், செல்வாக்குப் படைத்தவர்கள் தவறு செய்வது இயல்பு என்பதே அதன் பொருள். அடிமைசாசனத்தின், ஆளுமைகளின் அனைத்து கயவாளித்தனங்களும் அதில் இருந்தே வளர்ச்சி பெருகின்றன. தவறு செய்தவன் தன் னளவில் மன்னனே, மன்னனின் மகனே ஆனாலும் அவனுக்கும் தண்டனை உண்டு என்பதே நமது கோட்பாடு. 'நானே கள்வன்' கண்ணகிக் கதையின் முடிவு கூட இப்படியாகத்தான் அமைந்திருந்தது. நீதி என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும், பிறர் பயன்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இருந்தாலும் பெரிதாக பீற்றிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பது போலவே பார்பனுக்கு ஒரு நீதி.....பறையனுக்கு மறு(!) நீதி என்பதாக சாதிய வருணாசிரம் கோட்பாடுகள் நாக்கை நீட்டி பழிப்பு காட்டுவதையும் நாம் மறந்துவிடலாகாது.

அரசனோ, தலைவனோ குற்றம் செய்வது பற்றிய பெரிய கருத்துகள் விவாதம் சுயநலம், பொதுநலம் என்ற நோக்கில் சொல்லப்படுவது அவரவர் இன வாழ்வியல் முறை என்றாலும், அனைத்தையும் அறிந்தவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லும் இறை பணியாளர்கள், சாமியார்கள் செய்யும் குற்றங்களுக்கும் அவ்வித அளவீடுகள் பொருந்துமா ? காமம் அல்லது பாலியல் மற்றும் உடல்உறவு குறித்து அனைத்து மதங்களுமே கட்டுபாடுகள் கொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். விலை மாந்தர்கள் பற்றிய கருத்துகள் மதவாதிகளினால் மிகவும் தூற்றப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. ஒருவரை புனிதராகக் காட்ட அவர் காமத்தை துறந்தவர் அல்லது காமத்தில் கட்டுபாடு மிக்கவர் என்பதாகச் காட்டுகிறார்கள்.

பொதுவாக மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் வெளியே தெரியாமல் அமுக்கப்படும் அல்லது பிற மதத்தினரால் மிகுதியாகப் பேசப்படும், அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பற்றி விவாதிப்பது குறைவு அல்லது கிடையாது, அவ்வாறு விவாதம் செய்வதும் கூட பிற மதத்தினரால் தூற்றப்படுவோம் என்கிற ஐயம் காரணாமாக விவாதிப்பது இல்லை என்பதைவிட மதப்புனிதம் கெட்டுவிடும் என்பதாகவே அதை மறைத்தே பழகுகிறார்கள். வேதங்களில் பெருமையாகப் பேசப்பட்ட இந்திரன் தற்பொழுது எங்கு சென்றான் என்றே தெரிய்வில்லை, தமிழகத்து முருகனின் மாமனார் என்கிற ஒரு பதவிதவிர்த்து இந்திரன் குறித்து தற்காலத்து இந்து சமயவாதிகளால் பேசப்படுவதில்லை, ஏனெனில் இந்திரன் குறித்துக் கூறப்பட்ட கதைகளில் ஒன்று இந்திரன் காமவயப்பட்டு முனிவர் வேடம் கொண்டு முனிவரின் மனைவியை அடைய முயற்சித்தான், அவளும் அறியாமையால் அதற்கு ஒத்துழைத்ததால் கல்லாக மாறும் படி சாபம் பெற்றாள், இந்திரனும் உடெலெங்கும் பெண் குறிகள் தோன்றக்கடவது என்று சாபம் பெற்றான் என்பதே அந்தக் கதை அந்தக் கதையின் தொடர்ச்சியாக இராமயணத்தில் இராமன் கால்கள் பட்டதும் உயிர்பெற்றாள் என்றும் அவளை இராமன் அன்னையே என்று அழைத்து மகிழ்ந்தான் என்றும் இராமயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அகலிகை (மறு அல்லது மீண்டும்) புனிதம் அடைந்தாளா இல்லையா என்பதைவிட இராமனின் கால் அடிக்கு இருக்கும் புனிதத்துவம் உணர்த்துவதாக அந்தக் கதையின் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணாசை மிக்கவன் என்பதாக கதையில் கூறப்பட்டு கதை பரவலாகப் வழங்கிவருவதால் இந்திரன் வணக்கம் வழிபாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன என்பதாகத்தான் நினைக்கிறேன். மற்றபடி இந்திரன் வணங்கத்தக்கவனா இல்லையா என்கிற புரிதல்களை நான் எழுப்பவில்லை. பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன.

இறை தொண்டாற்றுபவர்கள் காம வயப்பட்டார்கள் என்று கூறுவது கூட மதத்திற்கு இழுக்கு என்பதாகவே அனைத்து கதைகளும் கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய இதிகாச உதாரனங்களைவிட அண்மைய ஆறாம் நூற்றாண்டு கதைகளை குறிப்பாக திருவிளையாடல் புராணம் பெருமையாக பேசும், திருமுறைப் பாடல்கள் பாடியவருமான ஞான சம்பந்தன் திருமணம் முடித்தவுடனேயே அங்கு கலந்துகொண்டவர்களுடன் இறை சோதியில் ஐக்கியம் ஆனதாக கதை சொல்கிறார்கள். ஞானசம்பந்தரை இல்லறவாசியாகக் காட்டவேண்டியதற்கு தேவை அவர் வாழ்வில் முழுமை பெற்றார் என்பதற்கும், அவர் அன்றே சோதியில் ஐக்கியமானார் என்பதை தெய்வீகம் புறக்கணிக்கும் காமத்தை தொடாத, துய்காத புனிதர் அவர் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல:) இவ்வாறெல்லாம் மறைத்து மறைத்து காமம் என்பது ஆன்மிகத்திற்கு மிகத் தொலைவு என்றெல்லாம் கட்டமைத்துவிட்டு ஒரு சாமியார் காம லீலைகள் புரிகிறார் என்று சொன்னால் நடக்கக் கூடாத இழுக்கு நடந்ததாக கூனிக்குறுகிக் கொள்கிறார்கள், அல்லது அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறார்கள். ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :)

சாமியார்களின் புனிதம் குறித்து மிகுந்த கட்டுமானம் செய்திருப்பதால் தான் என்னவோ, அவர்கள் தவறு இழைக்கும் போது ஒன்று அதை ஏற்க அடியார்களுக்கு மனம் வருவதில்லை, அல்லது அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்கிற கருத்தும் வருகிறது. அவன் அங்கு அந்த பதவிக்கு தகுதியற்றவனாகிறான் என்பதை அவனுடைய பதவியில் புனிதம் இருப்பதாக நம்புவர்கள் நினைப்பது குறைவு. ஒரு சாமியார் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அவை மறைக்கப்படுகிறது அல்லது மறைமுகமாக ஏற்கப்படுகிறது கையும் களவுமாக மாட்டுபவர்கள் மிக எளிமையாக தப்பித்துவிடுகிறார்கள் சிங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிறித்துவ பாதிரி பணமோசடி செய்தாதாக கைது செய்யப்பட்டு நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கம்பி எண்ணுகிறார், நேற்று ஒரு புத்தமத சாமியார் பணமோசடியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நம் நாட்டு மதத்தலைவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகுதி.

கருவறையில் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பிடிபட்ட கோவில் குருக்கள் தேவநா(த்)தன் 'பகவான் என்னை ஏற்கனவே தண்டிச்சிட்டான்' என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் தான் பகவானுக்கு அர்சனை செய்வதாகச் சொல்லி பெண்களை ஏமாற்றி வந்தவன், இன்று பகவான் தண்டித்துவிட்டதாகச் சொல்கிறான், இவனை பகவான் தண்டிச்சாரா இல்லையா ? இவனுக்கு எப்படி தெரியும் ? இவனுடன் இரவோடு இரவு பேசி நான் உன்னை தண்டித்துவிட்டேன் என்று சொன்னாரா ? அவன் செய்தது சராசரி மனிதத் தவறே என்றாலும் கூட பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைக்கு உலை வைத்தவன், இன்னும் 'பகவான்' பெயரைச் சொல்ல எதுவும் இருக்கிறதா ? இருந்தாலும் தொடர்ந்து சொல்லுவான் ஏனென்றால் அவன் செய்தது புனித அர்சனைத் தொழிலாம், அவனுடைய முறையற்ற பாலியல் நடவெடிக்கை மட்டும் 'தெரியாமல் நடந்த தவறுகலாம், அதை கடவுள் மன்னிப்பாராம்'. இவன் சிக்கியது, இவனைப் பற்றிய செய்திகள் இவற்றிற்கு கொடுக்கப்படும் முதன்மைத்துவம் மற்றவையாவும் இவன் ஒரு பெரிய மடத்தின் தலைவராக இருந்தால் வெளியே தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவை நம்பட மாட்டாது.

சாதரண மக்கள் தவறிழைத்துவிட்டால் அது அவர்கள் இழிபிறப்பு, அவர்கள் தவறு செய்யவே பிறந்தவர்கள், மோசமானவர்கள் என்பதும், அதுவே சாமியார்கள், புனிதர்கள் தவறு செய்துவிட்டால் மழுப்பலாக 'நேரம் சரி இல்லை தப்பு நடந்துவிட்டது, கிரக நிலை சரி இல்லை, சேருவார் தோசம்' என்றெல்லாம் பழியை பிறர் மீது சொல்வதும் வாடிக்கை தான்.

புனித குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதைவிட அவற்றிக்கு தண்டனையே கிடையாது எனெனில் அவைகள் வெளியே தெரியவும் தெரியாது, தெரிந்தாலும், அவை நம்பப்படவே படாது. மனு நீதியாக மறு(த்துவிடும்) நீதியாக இன்னும் புனித குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

20 நவம்பர், 2009

பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !

திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"
-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்

அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.

1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"

அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.

மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.

"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்

*****

தனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனது கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.

பல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் ? பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா ?

*****

பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.

இடுகை தகவல் : "இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா ?" (பக்கம் 171 - 182)
நூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4

சாதீ...யம் சில எண்ணங்கள் !

இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.

(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.

சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.

அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.

சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.

சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.

‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

19 நவம்பர், 2009

கலவை 19/நவ/2009 !

மாவீரர் நாள் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் குறிப்பாக கருணாநிதியிடம் இருந்து சோக கீதம் எழுகிறது. அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்று அப்துல்கலாம் போன்று கடந்து போனதற்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறார். சண்டை முடிந்ததாக அறிவித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, தமிழர்கள் இன்னும் குடியமர்த்தப்படவில்லை, இலங்கை அதிபருடன் விருந்து சாப்பிட்டு வந்த திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ஏப்பம் விட்டதுடன், இலங்கை அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இருந்துவருவதைப் பார்க்கும் போது, இவர்கள் இலங்கை அரசின் நிலைப்பாடு அந்த நாட்டின் உள்விவாகாரம் என்ற அதே நிலையில் தொடர்கிறார்கள் என்றே நினைக்க வைக்கிறது. இருந்தும் இழவு வீட்டு ஒப்பாறியை காலம் கடந்து வைப்பதால் யாருக்கு பயன் என்று தெரியவில்லை. மாவீரர் நாள் நெருங்குவதை வைத்து அது குறித்து தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கும் மக்கள் குழுக்களின் கவனம் ஈர்க்கும் முதல் துண்டு விரிப்பு என்பதைத் தவிர்த்து இந்திய, தமிழக தலைவர்களின் முகாரி எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்க முடிகிறது. ஈழவரலாறு, ஈரவரலாறு, உறைந்த இரத்தம், இரத்தமும் சகதியும் என்கிற புதிய புதிய தலைப்புகளில் நூல் எழுதி அதை வெளியிட்டு அவ்வப்போது மூக்கு சிந்திக் கொள்வதை பார்ப்பதற்கும் நமக்கும் சகிப்பு தன்மை மிகுதியாகவே இருக்கிறது.

*****

சச்சினும் தேசபக்தியும் பட்டிமன்ற தலைப்புகள் போல் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது, வினவு குழுவினர் சச்சின் பிராண்டிங்க் (Branding) பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் தேசப்பக்திக்கும் பின்னால் இருக்கும் கதைகள் அட போட வைக்கிறது. ஈவேரா சுதந்திர நாளை கருப்பு தினமாக அறிவித்தார், எனவே அவர் தேச தூரோகி என்பது போல் இணையம் இலவசமாக மறைவாகவும் இருக்கிறது என்கிற வசதியில் சிலர் பெரியாரைத் தூற்றி வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்பது போல் அவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறே இல்லை. பெரியார் வாழும் காலத்திலே விமர்சனங்களை விரும்பியவர் தான். அண்மையில் டி.ஞானையா எழுதிய 'இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூலை வாசித்த போது ராஜாஜி, மூதறிஞர் என்றெல்லாம் புகழப்படுகின்ற இராஜகோபால் ஆச்சாரியார் பற்றி எழுதி இருந்தார், காந்தியும், நேருவும் வெள்ளைக்காரர்களை வெளியேற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்து ஆச்சாரியாரிடம் ஆதரவு கேட்ட போது அதற்கு ஆதரவு தர மறுத்தவர் ராஜாஜி என்று குறிப்பிட்டு இருந்தார். ஏடி ஞானையா தரவுகளுடன் தான் அதனை எழுதி இருந்தார்

*****

சீன தயாரிப்புகள் பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்துவரும் வேலையில் 2012 படத்தில் உலக அழிவையே தாங்கும் சக்தி படைத்ததாகவும், அது சீன எல்லையில், சீனத் தயாரிப்பாகவும் மிகப் பெரிய கப்பலைக் இறுதிக்காட்சியில் காட்டுகிறார்கள். சீன அரசு படத்திற்கு பொருளுதவி செய்திருக்கும் என்று மலேசியா குடியுரிமை உள்ள சீன நண்பர் தெரிவித்தார். எங்கும் சீனா எதிலும் சீனா, மலையாளி டீக்கடை போல் உலகமெங்கும் சீன தயாரிப்புகள். மீண்டும் கம்யூனிசம் சீனாவின் மூலம் வலுப்பெறுமோ ? :)

*****

அமெரிக்காவில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா ராணா நடிகைகளுடன் தொடர்பு என்று செய்தி தாள்களில் மிகுதியாக பரப்பரப்பு பரப்பப்படுகிறது. நடிகைகளுடன் தொடர்பை மட்டும் ஏன் செய்தியாக்கவேண்டும், அவனுக்கு அரசியல்வாதிகளிடமும், முறைகேடாக விசா பெற்றது என அரசு அலுவர்களிடமும் கூட நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் செய்திவருகிறதே. நடிகைகளிடம் தொடர்பை ஏன் மற்றவற்றைவிட விளம்பரப்படுத்த வேண்டும் ? முன்பு கூட தாவூத் இப்ராமுடன் நடிகைகள் தொடர்பு என்று பரபரப்பு கிளப்பினார்கள். வசதி மற்றும் அழகாக இருக்கிறார்கள் என்பதால் பெண்களுக்கு எதிராக பரபரப்பு கிளப்புவதால் அவர்களிடம் பணம் பறிக்க முடியும், முடிந்த அளவுக்கு அவர்களை மிரட்டி மிரட்டி பாலியல் இச்சைகளள தீர்த்துக் கொள்ளமுடியும். இதைச் செய்பவன் பத்திரிக்கைகாரனாகவும் இருக்கிறான், அரசு அதிகாரத்திலும் இருக்கிறான். ராணாக்கள் ஒருமுறை தான் நடிகைகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். மற்றவர்கள் ?

*****

இன்று உலக கழிவறைநாள் (டாய்லெட் தினம் என்று தினமலரில் குறிப்பிட்டு இருந்தார்கள், வடமொழியில் சவுச்சாலய திதி ? :). 'இருக்க' இடமும், உடுக்க உடையும் மனிதருக்கும் மிகத் தேவை. இந்தியாவின் வசதிக்குறைவில் நான் முதன்மையாக கருதுவது பொதுக்கழிவறைகள். இருப்பவைகள் அனைத்துமே தூய்மை இன்மை, மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் இல்லா பற்றாக்குறை. பெரிய நகரங்களில் இருக்கும் கழிவறைகளில் கெட்டநாற்றத்தையும் பொருட்படுத்தாத பாலியல் தொழில். கழிவறை பற்றி முன்பு எழுதிய இடுகைகள்
இரட்டை விரல் ...
கலைகளின் உறைவிடம் ...

18 நவம்பர், 2009

என்ன ஒரு வில்லத்தனம் !

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது குறித்து பல்வேறு ஊகங்கள், தகவல்கள் இந்திய ஊடகங்களில் பரப்பப்படுகிறது. உலகப் பகுதிகளில் பொதுவாக வட இந்தியர்களுக்கு எதாவது இடர்கள் என்றால் அதை இந்திய அளவு தேசிய பொது சிக்கலாக காட்டுவதே வடஇந்திய ஊடகங்களின் வேலை. அதுமட்டுமல்ல மைய அரசும் வட இந்தியர்கள் பிரச்சனை என்றால் உடனே நடவெடிக்கை எடுப்பார்கள், அண்மையில் பிரான்சோ இத்தாலியோ எங்கோ ஒரு நாட்டில் சிங்குகளுக்கு முண்டாசு தடை விதிக்கப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் மீசை துடித்தது, உடனே பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பரியம் பழக்கவழக்கம் இதிலெல்லாம் எவரும் தலையிட முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு குடியேரியவர்கள் குறிப்பாக மலேசியாவில் சென்ற ஆண்டு நடந்த பெரும் கலவரங்களில் இந்திய அரசு முதலில் அது மலேசிய நாட்டின் பிரச்சனை என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார்கள். எங்கேயும் போகவேண்டாம் இங்கே தமிழ்நாட்டில் இராமேஷ்வரம் பகுதியில் ஆண்டுக்கு 50 மீனவர்களுக்கும் மேல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுகின்றனர், அவர்கள் பிடித்த மீன்கள், படகுகள் வரை அனைத்தும் பிடுங்கப்பட்டு அவர்களை அம்மண சித்திரவதை செய்து குத்துயிரும் குலை உயிருமாக திருப்பி துரத்திவிடுவது வாடிக்கையாகவே நடக்கிறது, இதைப் பற்றி இந்திய அரசு அலட்டிக் கொண்டதே குறைவு, அப்படியே அலட்டிக் கொண்டாலும் அது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு... கூட்டணி பாதிப்பு என்கிற ரீதியில் கண்தொடைப்பாக விமானம் விடுகிறோம், கப்பல் விடுகிறோம், ஹெலிக்காப்டரில் ரோந்துவருகிறோம், நிலைமையை அணுக்கமாக கண்காணித்து அறிக்கை விடுகிறோம் என்பதாக பேட்டி அளிப்பதுடன் சரி.
மீனவர்கள் தாக்கப்படுவது மாதந்திர வாடிக்கைப் போல் தொடர்ந்து நடந்தேறிவரும்.

இந்திய நிலப்பரப்பில் தென்மாநிலங்களை இணைத்துக் கொள்வதுடன் தென்மாநில வாக்காளரின் வாக்குகள் என்பதைத் தவிர்த்து தென்னக மக்களின் நலன் குறிப்பாக தமிழக மக்களின் நலன் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள், அதே சமயத்தில் ஏஆர்ரஹ்மான் போன்றோர் சொந்த முயற்சியில் புகழடைந்தால் அவர்களை தமிழர் என்று குறுக்காதீர்கள் இந்தியர் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள். வட இந்தியர்கள் தேசியவாதம் தென் இந்திய மக்களின் நலன் குறித்ததே அல்ல, கர்நாடகாவும், தமிழகமும், பிற தென் இந்திய மாநிலங்களும் தண்ணீர் பிரச்சனையில், தெலுங்கானா உட்பட மாநில உரிமை குறித்து உழன்று கொண்டிருந்தால் அவையெல்லாம் மாநிலப் பிரச்சனை என்று கூறி தேசியவாதத்தை தற்காலிகமாக கக்கத்திற்குள் ஒளித்துக் கொள்வார்கள்

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு காரணமாக அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதாக தனது கண்டிபிடிப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர். இதே தினமலர் நேற்று இந்தி எதிர்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி அளிக்கிறார்கள் அவர்கள் தேசவிரோதிகள் போல் காட்டி (தேசத்தின் மொழியைப் புறக்கணிக்கிறவர்கள் தேசவிரோதிகள் தான் என்பது அவர்கள் சித்தாந்தம்) ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது.

இவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்தாமல் குழப்பி அதில் இந்திய தேசியம் என்கிற கருத்து திணிப்பை வைப்பதுடன் அதை வழக்கமான கோணங்கித்தன எழுத்து இட்டுக்கட்டு மூலம் பரப்பிவருகிறார்கள். தேசிய அடையாளம் என்பதே பல்வேறு மொழிகளுக்கான (மொழியால் பழக்கவழங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட) உரிமை என்பதே, அதை ஒரு மொழியைத் திணித்து ஏற்படுத்திவிட முடியாது என்கிற புரிதல் இருந்தும், பெரும்பாண்மை ஆளவேண்டும் என்கிற சிந்தாந்தாத்தில் தேசிய பொது மொழி என்ற சொல்லில் ஹிந்தி வலியுறுத்துபர்களிடம் பேசுபவர்களிடம் நடுநிலைமையோ, நேர்மையான கருத்துகளையோ பெற்றுவிட முடியுமா ?

இந்தியர்கள் வெளி நாடுகளில் அடிவாங்குவது அனைவருக்குமே வருத்தமளிப்பது உண்மைதான் என்றாலும் அது அனைத்து மாநில, இந்திய இன மக்கள் அப்படி அடிவாங்கும் போது இருக்க வேண்டும். முதலை வடிக்கும் கண்ணீருக்கும் இவர்கள் கண்ணீருக்கும் ஒரே வேறுபாடுகளே கிடையாது. 'வட இந்தியர் உயிர்தான் உயிர் தென்னிந்தியர் உயிரெல்லாம் மயிர்' என்பது வட மாநில மக்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இருக்கிறதென்றால் தினமலரும் அதையே பின்பற்றகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்? - இன்றைய தினமலர்

மராத்தி கோஷம் மற்றவர்களுக்கு தான் : அவங்க பிள்ளைகளோ இங்கிலீஷ் மீடியம்

(வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன் வலைப் பக்கத்தில்

டெல்லியில் நீங்கள் இருந்திருந்தால் வட இந்தியர்கள், சீக்கியர்கள் குறிப்பாக, நடந்துகொள்ளும் முறையை அறிந்து மனம் கசந்திருப்பீர்கள். குறிப்பாக தென்னிந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். அவர்களுக்கு விசித்திரமான ஒரு உயர்வு மனப்பான்மை. பெரும்பாலான உயர்வு மனப்பான்மைகள் ஆழமான தாழ்வு மனப்பான்மையில் இருந்து செயற்கையாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவை. தென்னிந்தியர்களை மூளைக்காரர்கள் என்று அவர்கள் சரியாகவோ தப்பாகவோ எண்ணிக்கொண்டு வரும் உயர்வு மனப்பான்மையா இது?
மேலும் வாசிக்க...

17 நவம்பர், 2009

நோவா கப்பல் !

தமிழில் 'நாவாய்' என்ற சொல் மிகப் பழங்காலத்தில் கப்பலைக் குறிப்பதாகும், இதற்கும் ஆங்கிலத்தில் இருக்கும் 'Naval' , Navy போன்ற சொற்களுக்கும் அதன் வேர் தொடர்புடைய பிற மொழிச் சொற்களையும் ஆய்ந்தால், கப்பலும் கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்கள் ஈடுபட்டு வந்திருப்பதையும், அந்த சொல்லின் தொடர்பில் பல்வேறு மொழிகளுக்கான கப்பல் பெயரும் இருப்பதை அறியலாம்

Naval

1602, from L. navalis "pertaining to a ship or ships," from navis "ship," from PIE *nau- "boat" (cf. Skt. nauh, acc. navam "ship, boat;" Arm. nav "ship;" Gk. naus "ship," nautes "sailor;" O.Ir. nau "ship;" Welsh noe "a flat vessel;" O.N. nor "ship").

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள். அந்தச் சொல் தமிழ் சொல்லா பிற மொழிச் சொல்ல என்கிற ஆராய்ச்சியைவிட மிகவும் சுவையார்வமானது நோவா என்கிற விவிலியம் (பைபிள்) காட்டும் கப்பல், நாவாய்க்கும் நோவாவிற்கும் சொல்லளவில், பலுக்குதலில் (உச்சரிப்பு) பெரிய வேறுபாடு இல்லை என்பதால் கப்பலின் பழைய பெயரான 'நோவா' என்கிற பெயரிலேயே பைபிளில் சொல்லப்படு்ம் நோவா கப்பல், கிறித்துவுக்கு முன்பே நடந்ததாகச் சொல்லப்படும் யுக மாற்றம் (பிரளயம்) குறித்த கதையில் வழங்கும் பழைய சொல் என்று கருதுகையில் தமிழின் தொன்மையை ஒப்பீடு அளவில் அறிந்து கொள்ள முடியும்.

*****

இந்த நோவா கதையைப் படி நோவா என்பவர் ஆதாமின் எட்டாம் தலைமுறையாம். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டு எட்டு தலைமுறைக் குள்ளாகவே உலகமெங்கும் பல்கி பெருகிவிட்டனரா ? ஏன் ஆண்டவர் உலகத்தை நீரால் அழிக்க முன்வந்தார் என்ற பகுத்தறிவு கேள்விகளெல்லாம் இருந்தால் அந்தக் கதை உங்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கதை போலவே இருக்கும். நோவா என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்றும் கதையில் சொல்கிறார்கள். தொள்ளாயிரம் ஆண்டுக்குள் பூமியை நிரப்பும் அளவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன ? நம்புவோமாக ? ! சரி நம்புவோம் என்று வைத்துக் கொள்வோம். கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம், அதன் பிறகு தண்ணீர் பெருக்கால் அழிந்ததாம். நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும், நூண்ணுயிரிகளையும் கப்பலில் ஏற்றியதாகக் கதையில் கூறப்படவில்லை. கரடிகளில் பல வகை உண்டு, யானைகளில் ஆப்ரிக்க யானை, ஆசிய யானை இரு பிரிவுகள் உண்டு, இதில் எதை ஏற்றினார்கள் என்றே தெரியவில்லை. டைனசர் பற்றி சொல்லப்படவே இல்லை. பாம்பு வகைகளில், பூச்சி இனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உண்டு. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் அதன் வகைகளும் முழுமையாக இன்றும் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கதையை சிறு வயதில் சனிக்கிழமை கிறித்துவ சிறப்பு பள்ளிகளில் கேட்டு இருக்கிறேன்.

கப்பல், நல்லவர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதாக நீதிக் கதைகள் என்ற அளவில் ஏற்றுக் கொண்டாலும், உலகையே ஆறு நாளில் படைத்த ஆண்டவன் இவை அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வேறொரு நல்லப் படைப்பை செய்ய நினைக்காமல் ஏன் நோவிற்கு கட்டளை இட்டு கப்பல் செய்து கெட்டவர்களை அழித்தார் என்று தெரியவில்லை. திரிசங்கு உயிரோடு சொர்கம் செல்ல முயன்ற கதையை ஒப்பிடுக.

நோவா(noah's ark) கப்பல் கதை மட்டுமே ஒரு முடிவின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. இந்து மதத்திலும் கல்கி அவதாரத்திற்கு பிறகு கண்ணன் ஆல் இலையில் குழந்தையாக வந்து மறு உலகை (சுவர்கத்தை அல்ல) படைப்பானாம். ஆக மதங்கள் காட்டும் கதைகள் எதிலுமே உலகம் முற்றிலும் அழிந்து அதன் பிறகு இல்லாமல் போகும் என்று குறிப்பிட வில்லை. படைப்பும், அழிப்பும், படைப்பும் என மாறி மாறி பூமியில் நிகழ்ந்து (நிகழ்த்திக்) கொண்டிருக்க சுவர்க்கமும், நரகமும் எங்கே இருக்கிறது, அங்கு யார் யாரெல்லாம் செல்வார்கள், அழிவுக்கு பிறகு பூமியில் யார் யாரெல்லாம் பிறப்பார்கள் என்றே தெரியவில்லை.

நோவா கப்பலும் கல்கி அவதாரமும் தொடர்புடைய மதக் கதைகளைப் பார்த்தால் நிரந்தர சொர்கம், நரகம் பற்றிய கட்டுமானங்களில் கூறப்படும் மறு உலகம் என்பது பிரளயத்திற்கு பிறகு மறுபடி திருத்தி அமைக்கப்படும் பூமியா ? என்ற கேள்வியும் எழவே செய்கிறது. மறு உலகம் என்பது வேறோர் உலகம் அல்ல, மறுபடியும் உருவாகும் உலகம் என்று புரிந்து கொள்வதில் பிழையேதும் உள்ளதா ? ஆன்மிகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கே வெளிச்சம். 2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.
:)

ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது, காப்பாற்றப்படும் என்கிற அகலமான கற்பனை இருந்தது, கல்கி அவதாரக் கதையில் நாம கண்ணனை குழந்தையாக்கி ஆல் இலையில் அம்மணத்துடன் மிதக்க விடுவதுடன் உலகத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் :)

மேலும் நோவா கப்பல் படங்களுக்கு கூகுள்.

16 நவம்பர், 2009

(அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் !

ஆன்மிகம் என்கிற பெயரில் உளறிக் கொட்டிவரும் ஞானாநந்தம் ( என்று சொல்லிக் கொள்ளும் வைரம் இராசகோபால்) எழுத்துகள் வழி பக்தியை வளர்த்துது லோகத்தை ஷேமமாக வைத்திருக்கிற உதவுகிறது தினமலர், இன்னிக்கு ஒரு கதையைப் படித்துவிட்டு புல்லரித்தது...நைசில் பவுடரைத் தேடினேன்.

எதற்கும் துணிந்தவர்கள்! (ஆன்மிகம்)


உலகில், நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரு வகையினரும் உள்ளனர். பிறருக்கு, நன்மை செய்வதிலேயே நாட்டமுள்ளவர்களாக இருப்பர் நல்லவர்கள்; இவர்கள், பிறருக்கு சிறு உதவியாவது செய்ய விரும்புவர். பிறருக்கு என்ன துன்பம் உண்டாக்கலாம் என்றே தீயவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்; ஒருவர், மற்றொருவருக்கு ஏதாவது நன்மை செய்வதாகத் தெரிந்தாலும், அதை கெடுப்பதற்கே முயற்சி செய்வர். "இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார். இந்த நல்ல காரியம் நடக்கக் கூடாது...' என்று, அவனுடைய தீய புத்திக்குத் தோன்றினால், பணம் செலவழித்தாவது அதை தடுத்து விடுவர். இந்த குணம் இன்று மட்டுமல்ல; அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது!

பரீட்சித்து மகாராஜாவுக்கு, ஒரு முனிவரின் சாபம் ஏற்பட்டது. "இன்று முதல், ஏழாவது நாள் தட்சகன் என்ற நாகம் கடித்து மரணம்!' என்பது சாபம். இதையறிந்த ராஜா, ராஜ்ஜியத்தை விட்டு, கங்கை கரைக்கு வந்து புண்ணியம் சேர்க்க, பாகவத புராணம் கேட்டான்.

சாபத்தின்படி, ராஜாவை கொத்திக் கொல்ல காத்திருந்தது தட்சகன் என்ற நாகம். இந்த விபரமறிந்த காசியபர் என்ற முனிவர், ராஜாவைக் காப்பாற்ற வந்து கொண்டிருந்தார். இவருக்கு எந்தவிதமான விஷத்தையும் இறக்கிவிடக் கூடிய மந்திரம் தெரியும்.அதனால், ராஜாவை காப்பாற்றி விடவேண்டும் என்று வந்து கொண்டிருந்தார்.

இவரை பார்த்து விட்டான் தட்சகன். அவரைப் பின் தொடர்ந்து வந்து, "ஓய்... பிராமணரே! நீர் யார், எங்கே போகிறீர்?' என்று கேட்டான். காசியபரும், "ராஜாவை, தட்சகன் கடிக்கப் போகிறானாம். அப்படி நடந்தால், அந்த விஷத்தை என் மந்திர சக்தியால் முறித்து, ராஜாவை காப்பாற்றப் போகிறேன்...' என்றார்.
உடனே, "ஐயா! நான் தான் அந்த தட்சகன். உமக்கு தெரிந்த அந்த மந்திர சக்தி என் கடுமையான விஷத்தை முறியடிக்குமா?' என்றான் தட்சகன். "முடியும்!' என்றார் காசியபர்.

"அப்படியானால் இதோ இந்த மரத்தை நான் கடிக்கிறேன். என் விஷத்தால் அது பட்டுப் போகும். தங்கள் மந்திர சக்தியால் அதை மீண்டும் துளிர்க்கச் செய்ய முடியுமா?' என்றான்; "முடியும்!' என்றார் முனிவர்.
அந்த மரத்தை, தட்சகன் கடிக்க, மரம் உடன் சாய்ந்து கருகியது. தன் மந்திர சக்தியால் அந்த மரத்தை மீண்டும் துளிர்விட்டுப் பூத்துக் காய்த்து நிற்கச் செய்தார் காசியபர். ஆச்சரியப்பட்டான் தட்சகன். இருந்தாலும், துஷ்ட புத்தி போகவில்லை. "ஓய், பிராமணரே... நீர் ராஜாவின் விஷத்தை இறக்கினால் என்ன கிடைக்கும்?' என்று கேட்டான்.

"நிறைய பொன்னும், பொருளும் கிடைக்கும்!' என்றார் காசியபர். "சரி! அப்படியானால் அதைவிட பத்து மடங்கு அதிகமாக நான் பொன்னும், பொருளும் உம்மால் சுமக்க முடியாத அளவுக்கு தருகிறேன்...' என்றான் தட்சகன்.
அதன்படியே அவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டு, சாபத்தின்படி பரீட்சித்து மன்னனை கடித்து விட்டான் தட்சகன். பரீட்சித்தும் வைகுண்டம் சேர்ந்தார் என்பது சரித்திரம்.

தங்கள் தீய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்வர் துஷ்டர்கள்; எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பர். பிறர் கெட்டுப் போவதில் இவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்! இன்றும் சிலர் அப்படியே இருக்கின் றனர். இது போன்ற துர் குணம் இல்லா மல், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற் குணத்துடன் நாம் இருக்க வேண்டும்.

********

எனது கேள்விகள், ஞானாநந்தம் சுட்டிய இந்தக் கதையின் படி உண்மையிலேயே துஷ்டன் யார் ?

1. தகாத செயல் எதையோ செய்துவிட்டு முனிவரிடம் சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜாவா ?
2. அரசன் தானே போனால் போகட்டம் என்று குடிகளின் நலன் கருதாது சாபம் கொடுத்த முனிவரா ?
3. முனிவரின் சாபத்தை நிறைவேற்ற வந்த (வேலையாளான) தட்சகன் என்கிற நாகமா ?
4. தனக்கு தெரிந்த மந்திர சக்தி மூலம் பரீட்சித்து மகாராஜாவை காப்பாற்ற போகிறேன் என்று கிளம்பி நாகத்திடம் பொன்னுக்கு பொருளுக்கும் பேராசைப் பட்டு அதைப் பெற்றுக் கொண்டு ராஜாவைக் காப்பாற்றாமல் திரும்பி சென்ற காசியபர் என்னும் பார்பனனா ?

*******

இந்த கதையின் கட்டமைப்புகள் :

* எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் கங்கையில் கழுவினால் போய்விடும், இது கிட்டதட்ட ஆப்ரகாமிய மதங்கள் சொல்லும் 'மனம் வருந்தி மன்றாடினால், தொழுதால் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்பது போன்றது.
* எதிரிகளை விட்டுவிட்டு (ராஜா VS முனிவர்) அவர்களின் பகையை செயல்படுத்தவரும் அவர்களின் வேலைக்காரர்களே (தட்சகன் என்ற நாகம்) தீயவர்கள்
* பார்பனர்கள் எந்த சாபத்தையும் அல்லது எந்த தீமையும் மந்திரத்தால் நீர்த்து போகச் செய்யக் கூடியவர்கள் அல்லது மந்திரம் தெரிந்த பார்பனர்களால் எதையும் செய்ய முடியும்
* பார்பனர் அல்லது கதையில் சொல்லப்படும் பிராமணர்களின் தவறுகள் (பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டு பின் வாங்கியது) எப்போதுமே பேசக் கூடாத ஒன்று. எய்தவன் இருக்க, அதைத் தடுப்பவனும் இருக்க... அம்பு (மட்டுமே) தீயது என்றே பேசவேண்டும்.

********

நாம் வாழும் காலத்திலேயே ஆன்மிகம் என்ற பெயரில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம், இன்னும் புராணங்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் குப்பை மலைகளையே அடையாளம் காண முடியும், பக்தி, கடவுள் நம்பிக்கை என்கிற பெயரில் உளரல்கள் கூட ஆன்மிகம் என்று விளம்பரப்படுத்தப்படுவது காலம் தோறும் நடந்தேறிவருகிறது, இதில் இன, சாதி அரசியலும் மிகுதியாகவே புகுத்தப்படுகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய காட்டுதான். :(

14 நவம்பர், 2009

20...12 சொல்லும் செய்தி !

தீர்ப்பு நாள்... ஏன் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, உலகெங்கிலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களை விட அழியலாம், அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு ஆன்மிகம், மத நம்பிக்கை இவை காரணமென்றாலும், அந்த காரணங்களுக்கு வலு சேர்பதாக உலகெங்கிலும் நடைபெறும் தீவிரவாதம், தன்ன நம்பிக்கை இன்மை, மனித உறவுகளுக்கு இடையே இணக்காமான போக்கு இல்லாமை, மனிதர்களின் பேராசைகள், அரசியல் வாதிகளின் தன்னலம், முதலாளித்துவ நாடுகளின், நிறுவனங்களின் பேராசைகள் இவற்றில் எதோ ஒருவகையில் ஒவ்வொருவரையும் வருத்தியே வருகிறது. இன்றைக்கு உலகம் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைப்போர் விழுக்காட்டு அளவில் மிகுதி. இறப்பு வலியற்றதாக இருந்து மகிழ்ச்சி கொடுப்பதற்கான உறுதி கொடுக்கப்பட்டால் இறப்பதற்கு பலர் ஆயத்தம் என்பது போன்று உலக வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிறது, அதன் காரணமாக உலகம் அழியுமா ? இப்போது தான் உலகம் முற்றிலும் கெட்டுவிட்டதே, ஏசு வருவார், அல்லா சொல்லி இருக்கிறார், கல்கி அவதாராம் ஆலிழை கண்ணன், தீர்ப்பு நாள் அண்மையில் இருக்கிறது.....என்றெல்லாம் மத நம்பிக்கையாளர்கள் சொல்லி வருகின்றார்கள்.

'தீர்ப்பு நாட்களின் அருகாமை' பற்றி சென்ற நூற்றாண்டுகளில் புலம்புயவர்கள் பற்றி நமக்கு பெரிய குறிப்புகள் எதுவும் கிடைக்காததால், அண்மைய புலம்பல்களை வைத்து தற்போது தீர்ப்பு நாள் குறித்த நம்பிக்கை வலுப்பெற்றிருப்பதாக அல்லது விரைவில் நடக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை, 2000 ஆண்டு உலகம் அழியும் என்று பலர் 31.12.1999 வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு கொஞ்ச நாள் அடங்கி இருந்தது. தீர்ப்பு நாள் பற்றிய மத நம்பிக்கைகள் 2000ல் எதுவும் நடக்கவில்லை என்பதால் அது பற்றிப் பேசுவோர், கவலைப்படுவோர், அதை உண்மை என்று நம்பியோர்கள் கேலிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மதநம்பிக்கை முற்றிலும் அறைகூவலாக அமைந்த 'தீர்ப்பு நாள்' பற்றி சிறிது காலம் யாரும் பேசவில்லை, இரட்டை கோபுரங்கள் தகர்ந்த போதும் சுனாமி அலைகள் ஏற்பட்ட போதும் 'தீர்ப்பு நாள்' குறித்த பேச்சுகள் மீண்டும் உயிர் பெற்றன. 2000 ஆண்டு வரை உலகில் மாயன் நாள்காட்டி என்று இருப்பதையோ, அதில் 2012ல் உலகம் அழியும் என்கிற குறிப்பு இருப்பதாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை. 2000 ஆண்டுக்கு பிறகு மாயன் நாட்காட்டி தூசி தட்டி மதநம்பிக்கையாளர்கள் முன்பு மீண்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை விளம்பரப் படுத்த இணைய தளங்கள், 2012 உலகம் எப்படி அழியும் என்பதைப் பற்றிய அசைபடங்கள், அதற்கான ஆதாரங்கள், சூழல்கள் அமைய இருப்பதாக எழுதப்பட்ட கட்டுரைகள் மீண்டும் 'தீர்ப்பு நாள்' பற்றிய நம்பிக்கைக்கு தூபம் போடத் தொடங்கி, 2012ற்கு இன்னும் மூன்றே ஆண்டுகள் இருப்பதால் அது பற்றிய பேச்சும் மிக மிக, சோனி நிறுவனம் அதைப் பற்றிய படமாக்கி தங்கள் நிறுவனத்திற்கு பணமாக்கி இருக்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக சூரியனில் ஏற்படும் பெரிய பெரிய தீப்பிழம்புகள் பூமியின் வெப்பத்தை உயர்த்தி அழிவை தொடங்கி வைப்பதாகவும், வட திசை , தென் திசை ஈர்ப்பு விசையின் நேர் எதிர் நிலைகள் மாறுதல் ஏற்படப் போகிறது என்பதாலும் உலகம் அழிவை நெருங்குகிறது, மாயன்கள் அதை தங்களது நாட்காட்டிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள் என்ற கருத்தை ஒட்டி படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கிறித்துவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளில் இருக்கும் 'நோவா' கப்பல் போல், இறுதிக் கட்சியில் வின்வெளி ஓடம் போன்ற பாதுகாப்புடன் செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் ஜோடி விலங்குகளுடன், சிலர் பிழைத்து புதிய உலகம் காண்கிறார்கள். படத்தில் ஒருவர் 1 பில்லியன் ஈரோ கொடுத்து கப்பலில் இடம் வாங்குவார். உலகமே அழிந்த பிறகு அவரிடம் வாங்கும் ஈரோ செல்லுமா ? அந்தப் பணத்தை வைத்து என்ன வாங்க முடியும் ? ஒரு பணக்காரன் பணபலத்தை வைத்து அந்தக் கப்பலில் பாதுக்காப்பாக இருக்க முயற்சிக்கிறான் என்பதைச் சொல்லுகிறோம் என்கிற பெயரில் ஹாலிவுட்காரர்களும் அபத்தமாக, லாஜிக் இல்லாமல் படம் எடுப்பார்கள் என்பதற்கான காட்டு அது. கணிணி வரைகலையாக (கிராபிக்ஸ்) முழுப்படக் காட்சியும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை, ஒரே ஒரு அரேபிய இஸ்லாமியர் நான்கு பெண்களுடன் அந்த நோவகப்பலில் பயணப்படுவார். 911 க்கு பிறகு ஹாலிவுட்காரர்கள் இஸ்லாமியர் என்றால் வேண்டாம் வீன்வம்பு என்பது போல் ஒதுங்குவது இந்தப் படத்திலும் பின்பற்றப்படுகிறது.

தீர்ப்பு நாளில் காப்பாற்றப்படுபவர்கள், அல்லது புதிய உலகிற்கு செல்வோர் என நல்லவர்களைத் தான் அந்நாளில் காப்பாற்றப்படுவதாக மதக் கதைகள் சொன்னாலும் படத்தில் அப்படியெல்லாம் தேர்வு இல்லை. தீர்ப்பு நாளில் நோவா கப்பலில் பயணம் செய்பவர்களாக யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் என்றால் அறிவாளிகளையும், நாடுகளின் அதிபர்களையும், பணக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதாகக் கதையில் சொல்லி இருக்கிறார்கள், அதில் காப்பாற்றப்படுபவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை, ஆனால் இந்தியாவில் தான் படம் தொடங்குகிறது. ( இந்து மதத்தையே தீர்ப்பு நாள் அழிவின் மூலம் ஒழிச்சிட்டாங்க :).......மிசெனரிகளின் சதி என்கிற கண்டன ஆர்பாட்டங்கள் படத்துக்கு எதிராக இந்தியாவில் நடக்குமா ? ன்னு தெரியவில்லை.

ஆங்கிலப் படங்களில் வேற்றுகிரகவாசிகள் எத்தனையோ முறை உலகை அழிக்க முயற்சித்தாக அமெரிக்க நகரங்களை கிராபிக்ஸ் மூலம் அழித்து அழித்து அசதியாகி ஒட்டு மொத்த உலகை பகுதி பகுதியாக எரிமலை, பெரும் சுனாமி போன்றவற்றால் இந்தப் படத்தில் உலகை அழித்திருக்கிறார்கள். ரொம்ப எதிர்பார்ப்போடு படத்திற்கு சென்றால் படம் ஈர்க்காது.

படம் என்ன செய்தியைச் சொல்லுது ? அறிவாளிகள், நாட்டின் தலைவர்கள், பணக்காரர்கள், அவர்களுக்கு சில வேலைகாரர்கள் இவர்கள் தான் உலக அழிவுக்கு பிறகு தேவைப்படுபவர்களாம், கூடவே கொஞ்சம் விலங்குகள், நாய்குட்டிகள் போன்றவை அவற்றின் தொடர்ச்சிகாக காப்பாற்றப்பட வேண்டியவையாம்.

உலகம் அழிந்தால் மீண்டும் உயிர்பெற, உயிரின தொடர்ச்சிக்கு நோவா கப்பல் தேவை, அதன் வழியே தான் உயிரினம் காப்பாற்றப்படும் என்பது மனிதர்களின், மதங்களின் கற்பனை. என்னமோ போங்க......உலகம் உயிரினம் முற்றிலும் அழிந்ததலும், இதற்கு முன் எப்படி தோன்றியதோ, எப்படி உயிரினங்கள் உருவானதோ, எப்படி மனித நாகரீகம் வளர்ந்ததோ அப்படியே மீண்டும் ஏற்படாதா என்ன ? முன்பும் உயிரினங்கள் தோன்றியதற்கு, ஆயிரம் ஆயிரம் காலங்கள் வாழ்ந்ததற்கு இருந்த அனைத்துக் காரணங்களும் சூழல்களும் உலகம் எத்தனை முறை அழிந்தாலும் அவை மீண்டும் ஏற்படலாம், 2012 இறுதி என்றாலும் அது பற்றி அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.


இணைய தளங்கள் :
http://www.2012warning.com/
http://www.2012officialcountdown.com/?a=essinkf
http://www.endoftheworld2012.net/
http://www.endoftheworld2012.net/

and

http://en.wikipedia.org/wiki/2012_phenomenon

11 நவம்பர், 2009

குலத்தளவே !

மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி முறையில் உலகம் திரும்பி நூற்றாண்டுகள் ஆகின்றன. மன்னர் ஆட்சிமுறைகள் ஒருகாலத்தில் நல்லவையாகவே இருந்திருக்கலாம், ஆனால் இந்தியாவைப் பொருத்த அளவில் சாதிமுறைகள் தோன்றிய பிறகு மன்னர் ஆட்சிமுறைகள் அனைத்துமே சாதிமேலாண்மைக்கும் சாதிய தலைமைத்துவத்திற்குமே பயன்பட்டு வந்திருக்கிறது. மன்னர் ஆட்சி முறை என்பதே வாரிசு முறைதான். பிறர் படையெடுத்து வந்து வீழ்த்தாதவரை அந்த ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். நோஞ்சான் அல்லது கோழை வாரிசுகளை உற்சாகமூட்ட 'உன் குலமென்ன கோத்திரமென்ன்ன' என்கிற தூபம் போட்டு போட்டு அவனை வீரனாக்குவார்கள் அல்லது தோல்வியுற்று ஓடிய ஒளிந்து கொண்டிருக்கும் இளவரசனுக்கு அவனைச் சார்ந்தோர் 'குலம் கோத்திரம் சொல்லி சொல்லி' மீண்டும் இழந்த மண்ணை கைப்பெற்ற நினைப்பார்கள். பரம்பரைத் தன்மை மரப்புக் கூறுகள் என்பது உடல் கடத்தும் நோய்களுக்கும், உடல் தோற்றம் மற்றும் நிற அமைப்புகளில் மட்டுமே ஆளுமை செலுத்துகிறது. மற்றபடி தாத்தாவின் அறிவை பேரன் பெறுவானா என்பது எந்த ஒரு ஆராய்ச்சியாலும் நிருபனம் செய்ய முடியாதது என்பதைவிட குறிப்பிட்ட சூழலில் வளரும் ஒருவர் அந்த சூழலின் அறிவைப் பெறுவான் என்பதைத் தவிர்த்து பரம்பரைத் தன்மை அவன் மீது அறிவு, குணம் சார்ந்த எந்த ஒரு ஆளுமையையும் ஏற்படுத்திவிடாது என்பதே உண்மை.

புலிக்கு பிறந்த பூனையாகுமா ? நரியாகுமா ? நாய் ஆகுமா ? என்கிற பழைய பழமொழிகள் மரபுக் கூறுகளின் சித்தாந்தம் என்றாலும் அது வெறும் தோற்றம் குறித்து தான் அன்றி அறிவு சார்ந்த ஒன்றே அல்ல, புலிக்கு பிறந்த புலிக் குட்டி வீட்டில் வளர்க்கப்பட்டால் அதற்கு வேட்டையாடுதலின் நுட்பம் எதுவுமே தெரியாமல் போக வாய்ப்பு உண்டு, அப்போது அது வெறும் (பெரிய)பூனைதான். ஒருவரின் திறமை என்பது கற்றுக் கொள்ளல் அல்லது பயிற்சியினால் வருவாதேயன்றி பிறப்பு அதனை முடிவு செய்துவிட முடியாது. 'குலத் தொழில்' என்று சொல்வழக்கில் குறிப்பிடும் குலம் சார்ந்த தொழில்கள் அனைத்துமே அந்த குலத்தினரால் மட்டுமே அவர்களுக்குள் கற்றுக் கொடுக்ககப்பட்ட ஒன்று தான். எடுத்துக்காட்டிற்கு ஒரு சிற்பி இருக்கிறார் என்றால் அவர் மகன் அவரிடம் கற்றுக் கொண்டால் மட்டுமே அவன் சிற்பி ஆவான், அந்த சிற்பத்தொழிலை வேறொரு சாதியில் உள்ளவர்களால் கற்றுக் கொள்ள முடியாது என்பது பொருளே அல்ல, அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை என்பதே சரி. இவை பார்பனர் செய்யும் புரோகிதம், சோதிடம் போன்ற தொழில்களுக்கும் பொருத்தமானதே.

தந்தை தருமம், தானம் செய்யும் வள்ளத்தன்மை கொண்டவராகவும் நல்ல அறிவாளியாகவும், தொழிலில் முன்னோடியாகவும் இருந்து அவரது மகன் மருத்துவமனையில் அல்லது எதோ சதிகாரர்களின் சூழ்ச்சியினால் ஒரு திருடன் வீட்டில் வளர்க்கப்பெற்றால் ஒருகாலமும் அவனுக்கு தந்தையின் குணங்கள் வந்து சேராது. ஒருவனின் குண நலன்கள் என்பது அவன் வளரும் சூழலால், எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் ஏற்படுவதேயன்றி வெறும் பிறப்பு அதனை முடிவு செய்துவிடாது. எனக்கு தெரிந்து மூன்று மகன்கள் உள்ள பல வீடுகளில் ஒருவர் படிப்பறிவு அற்றவராக படிப்பை விரும்பாதவராகக் கூடப் பார்த்திருக்கிறேன். தந்தை தாய் நன்கு படித்தவர்களாகக் கூட இருப்பார்கள், இருந்தும் அவர்களின் மகன்களில் ஒருவருக்கு படிப்பு ஏறவில்லை என்றால் புலிக்கு பிறந்த பழமொழிகளையெல்லாம் அங்கே எடுபடவே படாது.

பரம்பரைப் பெருமை, குலப் பெருமை இவையாவும் சாதியக் கட்டுமானங்களை தாங்கிப் பிடிக்க சொல்லப்பட்டு வந்த பழ(கிழ) மொழிகள். அவை எந்த காலத்திலும் உண்மை இல்லாத பழைய மொழிகள்.பண்பாட்டுக் கூறுகளும் பரம்பரை குணங்கள் என்று கட்டமைக்கப்படுவது ஒன்று அல்ல. இனம் சார்ந்த செயல் முறைகள், பண்டிகைகள், குல தெய்வம், பழக்க வழக்கங்கள் இவை பண்பாட்டுக் கூறுகள் அவைகள் இனங்கள் கட்டமைத்த ஒன்று, ஆனால் வெறும் பயல்கள் பேசும் குலப்பெருமை என்பது தனிமனிதர்களுக்கு தானாக அமைவது கிடையாது. முன்னோர்களின் புகழில் குளிர்காய நினைப்பவர்கள் தனக்கென தனிப்பெருமை இல்லாத போது அதனை ஒட்டவைத்துக் கொள்வார்கள் அதுவே குலப்பெருமை என்பதாகும்.

எனக்கு தெரிந்து வீட்டில் இருந்த தாய் பசுமாடு எவரையுமே அண்டவிடாது கிட்டே சென்றால் கூட முட்டுவதற்கு முயற்சிக்கும் அதன் கன்று வளர்ந்த பிறகு தாயின் தன்மையான முட்டும் குணம் இல்லாத இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் தாய் வளர்ந்தது மாடுகள் நிறைந்த ஒரு இடத்தில் பிற மாடுகள் தாக்கும் போது பதிலுக்கு தாக்கி தாக்கி அல்லது பயந்து முட்டுவதை தனது பாதுக்காப்பு செயலாக மாற்றிக் கொண்டிருந்தது கன்றுகுட்டி வளர்ந்த சூழல் மிகத் தனியானதும் அச்சுறுத்தல் இல்லாத சூழலும் ஆகும். மாடுகளுக்கே குணங்கள் வளரும் சூழலுக்கு ஏற்றது என்றால் எதையும் பார்த்து விரும்பியதை அல்லது தள்ளப்பட்ட சூழலை ஏற்று வளரும் மனிதர்களுக்கு பரம்பரை குணங்கள் உண்டு என்பவை கூறுகள் அற்றதேயாகும். பார்பனர் வீட்டில் பறையரின் குழந்தை வளர்ந்தாலும் பறையர் வீட்டில் பார்பனர் குழந்தை வளர்ந்தாலும் அதன் உணவு முறை பழக்க வழக்கங்கள் அங்கு ஊட்டப்படும் சூழலால் ஏற்பட்டு அந்த குழந்தையின் குணம் அதற்கேற்றவாறு மாறும்.

திருட்டு என்பது குற்றமாக கருதாமல் தொழிலாகவே அமைந்த இல்லச் சூழலில் வளரும் ஒரு குழந்தை திருட்டு என்பது தொழில் என்ற அளவில் புரிந்து வைத்திருக்கும். நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவர் சோம்பலாக இருந்தால் பிச்சை எடுப்பது அவரது குணமாகவே மாறிவிடும், அங்கே பிச்சை என்பது இயலாமையின் காரணம் அல்ல, அது சோம்பலான ஒருவரின் குணம் என்றாகிவிடும், இந்த குணத்திற்கு உரிமை உடைய எதாவது சாதி இனம், பரம்பரைத் தன்மை என்று எதையும் பொதுப்படுத்த முடியாது, மற்ற நல்ல குணங்களுக்கும், ஒருவரின் தனிச்சிறப்புக்கும் இது பொருந்தும்.

தனது முயற்சியினால் மேலே வந்து புகழடையும் ஒருவரின் தனிச் சிறப்பு போற்றப்பட வேண்டும், ஆனால் அதன் பெருமை அனைத்தும் அவருக்கு மட்டுமே உரிமை உடையது, அது அவருக்குப் பின்னால் அவரது வாரிசுகளுக்கு சூட்டப்பட்டால் அவருக்கு கிடைத்த பெருமையை, தனித்திறமையை அவமானப்படுத்துவதாகும். நடிகர் திலகத்தின் மகன்கள் நடிகர் திலகங்கள் கிடையாது, அவர்கள் நடிகர் திலகத்தின் வாரிசுகள் மட்டுமே. வாரிசுகளுக்கு அவருடைய வாரிசுகள் என்பதற்காக மரியாதை செய்யப்படுமேயன்றி அவர்களையும் நடிகர் திலகங்களாக போற்ற மாட்டார்கர்கள். இது இசையமைப்பாளர்கள் பல்வேறு கலை வித்தகர்கள், அரசியல், அறிவியல் சாதனையாளர்கள் அனைவருக்குமே பொருந்தும். தந்தையையும் மிஞ்சி புகழைடையும் வாரிசுகள் உண்டு அது அவர்களது தனித்திறமை.

தினமலர் வாரமலரில் ஆன்மிகம் என்ற பெயரில் வைரம் இராச கோபால் என்கிற ஆசாமி ஆன்மிகம் என்ற பெயரில் உயர்சாதி மேலாண்மை கருத்துகளையே எழுதிவருகிறார். ஒருவரின் குணம் அவரின் பிறப்பினால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக உளறிக் கொட்டி அதற்கு ஆதரவாக ஒரு அரசியின் நடத்தையை இழிவு படுத்தி ஒரு அரசனின் பிறப்பை கேவலமாக சித்தரித்து அபத்தமாக ஒரு கதையை அதில் சொருகி இருக்கிறார். அந்த அபத்தக் கதைக்கு மாற்றாக 1000க் கணக்கான கதைகள் உண்டு, குறிப்பாக செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் தன் தொழில் செருப்பு தைப்பது என்று மட்டுமே நினைத்திருந்தால் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம்லிங்கன் உயர்ந்திருக்க முடியாது, ஒருவரின் செயல் பிறப்பை ஒட்டியே இருக்கும் என்கிற தகரம் இராசகோபாலின் அபத்தாந்தப்படி திருலிங்கன் அமெரிக்க முழுவதும் செருப்புக் கடைகளை திறந்து வைக்கவில்லை.

தகரம் இராச கோபாலின் ஆன்மிக அபத்தங்களை அடிக்கடி படித்து மனம் நொந்து வரும் ஆன்மிக பதிவர் ஒருவர் தான் மேற்கண்ட தகரம் இராசகோபாலின் சுட்டியை எனக்கு கொடுத்து படிக்கச் சொன்னார்.

ஒளயாரின் பாடல்கள், ஒளயார் வாழ்ந்த சூழல் சாதிமேலாண்மை வளரத் தொடங்கிய காலம், அவருடன் பழகியவர் குறிப்பாக கடையேழு வள்ளல் எனப்படுவோர், ஆகியோரைப் பற்றிப் பாடுகின்ற சூழலில் கொடையை வழியுறுத்தும் விதமாக சாதி மறுப்பு, வள்ளல் தன்மை போற்ற மன்னர்களை ஊக்குவிக்கும் குலப் புகழ்பாடல்கள் நிறைய பாடப்பட்டது. அதில்,

நல்வழி என்ற தலைப்பில்,

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி .


மூதுரையில்

அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று
நுலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.

ஒளயார் சுட்டும் சாதியும் குலமும் ஒன்று அல்ல. அதில் குலம் எனப் பொதுப்படையாக குறிப்பது எந்த ஒரு குலத்தின் தனிப்பெருமை, தனிப்புகழ் குறித்ததும் அல்ல. இவர்கள், இந்த குலத்தினர் அனைவருமே மிகவும் மோசமானவர்கள், கேடுகெட்டவர்கள் என்பது இந்தக்காலத்திற்கு பொருந்தாது, அல்லது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா சாதியினருமே, இனத்தினருமே பிழைப்புவாதிகள், பிழைப்பு தான் முதலில் அதில் நல்ல குணத்தை எங்கே தேடுவது, பிறகு எங்கே, எப்படி பொதுப்படுத்துவது ? ஒருவரின் தந்தை தாயின் நல்ல /கெட்ட குணம் அவர்களை பின்பற்றினால் அன்றி தானாக ஏற்பட்டுவிடாது.

10 நவம்பர், 2009

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

இருமொழி திட்டம் என்ற பெயரில் தேசிய ஒருமைப் பாட்டுக்கு ஏற்ற ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் செய்துவிட்டனர் திராவிட இன வெறியர்கள். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்

ஹிந்தியை பேசவும் எழுதவும் கேட்கவும் முடியாததால் தமிழ்மக்கள் பட்ட துன்பங்களாக சான்றோர்கள் ஆவணப்படுத்துவது,

1. அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களை தமிழக மக்கள் பார்க்க முடியாமல் அவதி உறுகின்றனர்
2. தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமிழக மக்கள் அங்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஹிந்தி அறிவிப்புகளை படிக்க முடியாமல் திணறுகின்றனர்
3. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரும் தேசியத் தலைவர்களால் இந்திய தாய் மொழியான ஹிந்தியால் உரையாற்ற முடியாமல் போவதால் அவர்களால் தமிழக மக்களோடு மக்களாக பழகவோ, அவர்களை உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ளவோ முடியவில்லை
4. பாம்பே மிட்டாய் விற்பவரும், சேட்டுகளும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் தமிழகத்தில் பிழைக்க முடியும் என்கிற துர்பாக்கிய நிலைக்கு இந்தியாவின் பிற பகுதி மக்கள் தமிழகத்திற்கு பிழைக்க வரும் போது அடைய நேரிடுகிறது
5. ஹிந்தியும், இந்துஸ்தானி இசையும் தமிழக மக்களிடம் அன்னியப்பட்டு நிற்பதால் இந்திய தேசியத்தின் பொது அடையாளமான தேசிய உணர்வுகள் அவமானப்பட்டுக் கிடக்கிறது

ஹிந்தியும் ஹிந்தி பேசுவதன் மகத்துவத்தையும் நாம் உணராததால் வட இந்திய மக்களுடன் நம்மால் ஒற்றுமையுடன் இந்தியாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் இனவாத திராவிட சித்தாந்த திராவிட கட்சித் தலைவர்களே.

திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. தேசிய மொழி ஹிந்தியில் பதவி பிராமணம் செய்து கொண்டது தவறாம், மஹாராஷ்டிராவில் நடந்த வன்முறைகளைப் இங்கே பாருங்கள், குறிப்பாக அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினையைப் பாருங்கள். திராவிடக் கலாச்சாரம் இந்தியாவையே கெடுத்துக் கொண்டிருக்கிறது. தேசிய உணர்வாளர்களே விழுமின் எழுமின் :)

டிஸ்கி : இந்தப் பதிவு தற்சிந்தனையில், நல்ல மனநிலையில் எழுதியது. சொல்வதெல்லாம் உண்மை :)

எதற்கும் இதையும் படித்துவிடுங்கள் : (வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன்

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:


அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

9 நவம்பர், 2009

பிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு !

பிடித்தது பிடிக்காது பற்றிய தொடர் பதிவில் வெளிச்சபதிவரும், தம்பி ஸ்டார் ஜானும், அண்ணன் உலகநாதனும் ஒரே நேரத்தில் அழைக்க மகிழ்ச்சியுடன் பிடித்த பிடிக்காத அறியபட்டவர்கள் பற்றிய தகவலாக எழுதுகிறேன்.

பிடித்த கடவுள் : முருகன் தமிழக இந்து ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் அவர் தான் தெய்வம்
பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.

பிடித்த நாவல் ஆசிரியர்கள் : சு.சமுத்திரம், சாண்டில்யன், சுஜாதா, கி.ராஜ்நாராயணன் மற்றும் பலர் ஆனாலும் உயிரோடு இருப்பவர்களில் சுபா மற்றும் இராஜேஸ் குமார் (Mr No கவனிக்கவும்)
பிடிக்காத நாவல் ஆசிரியர் : பலரும் வெறுத்தும் ஒரு சிலர் துதிபாடும் "பாலகுமாரன்" ஒரே ஒரு நாவல் தவிர மற்றதைப் படிக்க விரும்பியதில்லை. உதவி இயக்குனர்களைப் பற்றி இழிவாக பேசு வாங்கிகட்டிக் கொண்டவர் என்கிற கூடுதல் சிறப்பும் அண்ணாருக்கு உண்டு. எழுத்தாளர்களில் ஒரு சு.ஸ்வாமி

பிடித்த பாடகர் : எஸ்பிபி, மனோ, சின்னக் குயில் சித்ரா மற்றும் பலர்
பிடிக்காத பாடகர் : சங்கர் மகாதேவன் ( ஓவர் கத்தல்... அலட்டல் இல்லே ?)

பிடித்த பட்டிமன்ற பேச்சாளர்கள் : சாலமன் பாப்பையா குழுவினர்
பிடிக்காத பட்டிமன்ற பேச்சாளர்கள் : திண்டுக்கல் லியோனி குழுவினர் ( பாட்டுமன்றம், வழக்காடு மன்றம் ஆகியவற்றில் நகைச்சுவை என்கிற பெயரில் பல்வேறு தரப்புகளை கிண்டல் அடிக்கும் விவேக், எஸ்விசேகர் பாணி)

பிடித்த நடிகர் : அஜித், கமல், ரஜினி மற்றும் பலர்
பிடிக்காத நடிகர் : பரத் (இன்னும் வளரவே இல்லை அதுக்குள்ள...பஞ்ச் டயலாக்கெல்லாம் தாங்க முடியல தம்பி)

பிடித்த அரசியல் தலைவர் : திருமா ( ஈழம் மேட்டரில் ஸ்டண்ட் அடித்தாலும், தன் முயற்சியால் வளர்ந்தவர்)
பிடிக்காத அரசியல் தலைவர் : விஜயகாந்த் கொள்கை இருப்பதாகக் கூறிக் கொண்டு எல்லாவற்றிலும் பிறழ்ந்தே பேசுவது. ஓவர் பில்"டப்" வாய்ஸ் கொடுப்பது.

பிடித்த பிரபல பதிவர் : செந்தழல் ரவி (இயல்பான நகைச்சுவை பதிவுகள்)
பிடிக்காத பிரபல பதிவர் : 'அவதூறு ஆறுமுகம்' என்கிற அவருடைய அவதாரம் (எதையும் ஆராயாமல் யார் மீதாவது மன அளவில் ஏற்படும் ஐயங்களையெல்லாம் பதிவில் எழுதி வெளிப்படுத்தி, அவர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது...புழுதிவாரித் தூற்றுவது குறிப்பாக இட்லி வடை பதிவைப் படிப்பவர்களின் கணிணி தகவல்களை குக்கீஸ் வழியாக இட்லி வடை குழுமம் திருடுவதாக கிளப்பி விட முயற்சித்தது உட்பட.....தம்பி திருந்தனும்...... )

நான் யாரையும் நிரந்தர பகைவராகவே நினைக்கக் கூடிய தகுதியை யாருக்கும் கொடுப்பது இல்லை......ஐ மீன் எனக்கு எதிரியாகும் தகுதி யாருக்கும் இல்லை :)

பிடித்த பதிவர்கள் குழு : வினவு. (அருமையான விவாதங்கள், சான்றுகளுடன் தகவல்கள், சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள், பக்க சார்ப்பு என்றாலும் நிற்கும் இடம் ஆளுமைகளுக்கு எதிராக என்பதால்)
பிடிக்காத பதிவர்கள் குழு : இட்லி வடை பல கட்டுரைகள் பக்க சார்ப்போடு எழுதப்படுகிறது, சமய, உயர்சாதி சார்புள்ளது என்கிற குற்றச் சாட்டு உண்டு....மாறனும் .......எல்லாமும் மாறனும் :)

பிடித்த செய்தியாளர்கள் குழு : தட்ஸ் தமிழ் (பின்னூட்டத்தில் பலர் எவ்வளவு திட்டினாலும் தாங்குறாங்க .......ரொம்ப நல்லவங்க)
பிடிக்காத செய்தியாளர்கள் குழு : தினமலர் (சாதி மற்றும் மத பக்க சார்ப்புள்ள செய்தி குழுமம்...முகமது நபி கார்டூன் வெளி இட்டு தனது இந்து வெறியை வெளிச்சப்படுத்திக் கொண்டது)

பிடித்த அரசியல் கட்சிகள் : கொள்கைகளே நீர்த்து போய் இருந்தாலும் அம்மா கட்சி உட்பட திராவிடக் கட்சிகள்
பிடிக்காத அரசியல் கட்சிகள் : போங்...கிரஸ், பிஜே...பி உட்பட தமிழக தேசிய வியாதி கட்சிகள்

தொடரை தொடர அழைக்கும் பிரபல பதிவர்கள்

1. நண்பர் பெரியவ திருவாளர் ஆத்திகம் சங்கர் குமார்
2. நண்பர் ஆன்மிக பதிவர் திருவாளர் கூடல் குமரன்
3. ந்ண்பர் முற்போக்கு பதிவர் திருவாளர் டிபிசிடி (புதசெவி)
4. நண்பர் முற்போக்கு குறள்(ல்) திருவாளர் ஜெகதீசன்

இவர்கள் தற்போது மிகுந்து எழுதுவதில்லை, அதற்காக இவர்களை அழைக்கிறேன்.

*****

தொடரின் விதிமுறை :

1. பிடித்தவர்கள் பிடிக்காத அறியப்பட்டவர்கள் (பிரபலம்) பற்றி ஏன் பிடித்தது, பிடிக்கவில்லை பற்றிய குறிப்புகளுடன் 10 பட்டியல் இட வேண்டும்
2. பிரபலங்கள் தமிழகத்தில் பலரும் அறிந்தவர்களாகவும், உயிருடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
3. நான்கு பதிவரை அழைத்து தங்க சங்கிலி இல்லை இல்லை இணைப்பு சங்கிலி ஏற்படுத்த வேண்டும்

ஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !

ஸ்வாமி ஓம்காரின் 'வேத வாழ்க்கை (8)' தொடரில் வரும் 'பசு' புராணம் அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களை மிகவும் சினம் அடைய வைத்தது, சித்தூர் முருகேசன் ஓம்கார் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓம்கார் பின்னூட்டத்தை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து சினந்த சித்தூர் முருகேசன் ஓம்காருக்கு எதிர்வினைப் பதிவு ஒன்றைப் போட்டார்.


இரு இடுகைகளையும் நான் படித்த வரையில்,

* ஸ்வாமி ஓம்கார் பசு கொல்லப்படுவதைச் சுட்டி சுற்றுச் சூழல் கேடு அல்லது சுற்றுச் சூழலுக்கு பசுவின் பங்கு குறித்து எழுதி இருந்தார்.

அதை சித்தூர் முருகேசன் புரிந்து கொண்ட விதம்

* ஸ்வாமி ஓம்கார் பசு புனிதம் என்கிறார், பசுவை கொல்வது பாவம் என்கிறார், என்கிற ரீதியில் தனது எதிர்ப்புகளை எழுதி இருந்தார்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் சித்தூர் முருகேசன் இருவருமே சோதிடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர்கள், சோதிடம் பற்றிய கருத்தில் ஒருவரை ஒருவர் மறுத்தது இல்லை.

ஸ்வாமி ஓம்கார் பசுவை மட்டுமல்ல, மரங்கள் வெட்டப்படுவது பற்றியும் எழுதி இருந்தார். இருந்தாலும் அந்த தொடரில் மற்றொரு பகுதியில் மரம் குறுந்தகடை (சிடி) படிக்கும் என்று எழுதி இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு எந்த ஒரு சான்றையும் ஸ்வாமி ஓம்கார் தரமுடியாது. சிடியில் டேட்டா பதிவு என்பது பல்வேறு டிகோடிங் முறைகளை அடக்கியது, அதை என்கோட் செய்து படிக்கும் முறைகளும் கணிணியால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று, பச்சை மரத்திற்கு அருகில் சிடியைக் கொண்டு சென்றால் அதில் அடங்கி இருக்கும் தகவலுக்கேற்ற (எம்எஸ்எஸ், இளைய ராஜா, ஏஆர் ரஹ்மான் இசை ?) மரம் உணர்ச்சி வசப்படும் என்பது ஓம்காரின் கூற்றாக இருக்கிறது. இது நம்புவதற்கோ, அறிவியல் மூலம் நிருபணம் செய்யவோ கூறு அற்றதும், ஒட்டுமொத்தமாக அந்த கருத்தே நிராகரிக்கக் கூடியது ஆகும். மரம் உணர்ச்சி வசப்பட இயற்கைச் சூழல் மாறி மாறி அமைந்தால் தான் உண்டு மற்றபடி குயில் என்னதான் இனிமையாக மரத்தின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாலும் மரம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதே எனது கருத்து, தொடு உணர்ச்சி என்பது தவிர்த்து மரம் கேட்கும் திறனற்றது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் அந்த கருத்தில் அழுத்தமாக இருந்தால் அவ்வாறு சொன்னதற்கு வேறெதும் காரணங்கள் இருக்கிறதா என்பதை விளக்கினால் நன்று. ஸ்வாமி ஓம்கார் பசு பற்றிய எழுதிய கட்டுரைகளில் பசுவை புனிதப் படுத்தவில்லை ஆனால் பசு பற்றிய நல்ல கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்

அண்ணன் சித்தூர் முருகேசன் எழுதிய கருத்தில் ஒன்று மனதில் பதிந்தது, "அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான்"

அதாவது,

"பசு புனிதம் என்று சொல்லுபவர்கள், பசு கிழவியானதும் அதாவது கன்று ஈனுவதற்கான வாய்ப்பும், பால் கொடுக்க முடியாத சூழலில் அதை ஏன் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்கள் ? விற்பவனை விட்டுவிட்டு கொல்பவனை மட்டும் குறை சொல்வது ஏன் ?" என்று கேட்டிருந்தார்.

என்னைப் பொருத்த அளவில் இது சிந்தனையைத் தூண்டும் கேள்வி தான். பசுவை தெய்வம், தாய் என்றெல்லாம் ஒப்பிடும் இந்துக்கள், பசுவதை மீளாப் பாவம் என்றெல்லாம் பயமுறுத்தும் இந்துக்கள், இறந்த பசுவை தோல் உறித்துவிட்டு தின்றார்கள் என்று தலித்துகளை சிலர் அடித்து கொன்றதையும் ஞாயம் பேசும் இந்துக்கள் எந்தப் பசுவும் இயற்கை மரணம் அடைந்ததைப் பார்த்திருக்கிறார்களா ? அல்லது இயற்கையாக வயதானதும் வயதின் காரணமாக இந்தியாவில் இறக்கும் பசுக்களின் அதாவது கிழப்பசுக்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு ? ஒருவிழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.

* பால் கரக்கும் வரையில் தான் பசு புனிதமாக பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அடிமாட்டுக்காரணிடம் கிடைத்த விலைக்கு விற்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு வாங்குபவர் அந்த கிழட்டு பசுமாட்டிற்கு வைக்கோலும், புல்லும் போட்டு சாகும் வரை பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்களா ?

* பாலைக் கரந்து... கரந்து குடித்துவிட்டு பசு கிழடு ஆனதும் விற்பது என்பது அந்த மாட்டைக் கொல்வதைவிட பாவம் இல்லையா ?

* பசுவதைப் பற்றிப் பேசுவோர் எத்தனை பேர் தோல் செருப்புகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் ?

**********

ஆட்டுக்குட்டி, ஒட்டகம், பசு இவையெல்லாம் மதங்களில் காட்டப்படும் விலங்குகள் என்பதைத் தவிர்த்து எனக்கு அவற்றின் மீது பெரிய கருத்துகள் இல்லை. வலி உணர்வு கொண்ட எந்த ஒரு உயிரனத்தையும் கொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விலங்குகள் குறித்து புனிதம், அசுத்தம் பேசுப்வர்களின் கொல்லாமை மற்றும் கொள்கை பேசுவோரின் 'விலங்குகள்' பற்றிய கருத்துகளும் ஏற்புடையது அல்ல. தின்பது என்றாகிவிட்டால் நாய்கறி சாப்பிடுவது கூட இழிவானது கிடையாது.

விலங்குகளுக்கு பேசும் திறன் இருந்தால் அதுவும் வாழ்வுரிமைப் பற்றிப் பேசும் அல்லது அப்படி பேசுவதற்கு அதற்கு உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம்.

உயிர்கொலை அல்லது கொல்வதற்கான உணவு சுழற்சி பற்றிய விளக்கங்கள், மனிதனும் ஏதோ ஒரு விலங்குக்கு தன்னை உணவாக்கினால் ஏற்றுக் கொள்வதற்கு நன்றாக இருக்கும். இல்லையா ?

:)


மூப்பு அடிமாடுகள் விற்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பது குறித்து வாய் பேசாமல், அந்த அடிமாடு வெட்டப்படுவதைப் பற்றி பெருமூச்சு விடுவது ஞாயமற்றதும் பக்க சார்பனதும் ஆகும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்