குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம், குழந்தைகளை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு தண்டனைக் கொடுக்கிறோம் என்று அரசு சொல்கிறது. சாதனைக்காக பயற்சி என்ற பெயரில் துன்புறுத்தப்படும் குழந்தைகளின் நிலைகளை கண்டு கொள்பவர்கள் குறைவே, ஏனெனில் இவை பெற்றோர்களின் ஆசியுடன் நடக்கும் சாதனை வன்முறை.
படத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கு பணிரெண்டு வயதிற்குள் தான் இருக்கும், பைக் ஓட்டும் படுபாவியின் கவனம் கொஞ்சம் பிசகினாலும் அவள் வயிற்றிலோ, மார்பிலோ மொத்த பைக் எடையும் இறங்கி அவளது வாழ்க்கையையே முடக்கிவிடும். சாதனைகள் தவிர்த்து, கடுமையான பயிற்சியின் போது காயம்படும் குழந்தைகள், இறக்கும் குழந்தைகள் பற்றிய செய்திகள் வெளியே வருவது கிடையாது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(படம் நன்றி தினமலர்)
குழந்தைகளை அவர்களது மனதுக்கும் வயதுக்கும் மீறிய செயல்களை செய்ய வைப்பதும், அதனை சாதனையாக எண்ணி மகிழ்வதும், பெற்றோர் தம் வீண் பெருமைக்கும் பேராசைக்கும் குழந்தைகளை வற்புறுத்துவதும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக கண்டிக்கப் படவேண்டும், அந்தக் குழந்தையைத் தவிர்த்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.
குழந்தைகளை வேலை வாங்குவது, அடிப்பது, காயப்படுத்துவது போலவே அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுப்பதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன் செயல்கள் (Child Abuse) தான்.