பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2008

கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் !

தீவிரவாதம் என்ற தீம்புயல் மதங்களில் மையம் கொண்டிருப்பது ஒப்புக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொள்வது நல்லது. மதத்தை மையப்படுத்தி தீவினையாற்றும் தீவிரவாதிகள் எவரும் சாத்தானின் பிள்ளைகளாக மேலுலகத்தில் இருந்து குதித்து வந்துவிடுவதில்லை. இங்கே பூமியில் தாய்களின் மார்பில் பாலறுந்தியவர்களே. இவர்கள் ஒரே இரவில் மனமாற்றப்பட்டார்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள், மதத்திற்கும் இவர்களுக்கும் தொடர்புகளே இல்லை என்னும் வாதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏற்க்கப்படும், அல்லது சொல்லிக் கொண்டு இருக்கப்படும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.

மதக்கூட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களில், தத்தமது இறை நம்பிக்கையைவிட மாற்று மதத்தினரை எப்படி எதிர்கொள்ளவேண்டு,ம் தூற்றவேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகச் சொல்லிக் கொடுக்கும் மதங்கள் எதுவுமே, தத்தமது மதத்தில் முளைக்கும் தீவிரவாத விதைகளை தீயிலிட்டு பொசுக்காமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிற சாக்கு போக்குகள் வரும் காலத்தில் எள்ளி நகையாடப்படும் மேலும் தூற்றப்படும்.

நாங்கள் உத்தமர்கள் எங்கள் மதமே புனிதமானது என்பதைப் போன்ற வாதமே சகமனிதனை சுட்டுவீழ்த்துவதும், உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்மையைத் தரும் மதத் தீவிரவாதிகளின் மத்தியில் இருக்கும் எதோ ஒரு மதம் சார்ந்த கொள்கையின் இருக்கும் எதோ ஒரு தவறான (புரிதலில்) ஒன்றாகவே இருக்கிறது. இது போர் செய்வது தருமம் என்றும் வலியுருத்துக்கும் கீதையாக இருந்தாலும் சரி, புனித போர் என்று சொல்லப்படும் 'ஜிகாத்' ஆக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே விதமான மனித குல வேரறுப்பு மகாவாக்கியங்கள் தாம்.

எங்கள் மதம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று துன்பவேளையில் யாழிசைப்பவர்களே, தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் ? பிறக்கும் போதே தீவிரவாதிகளாக பிறந்தவர்களா ? நேற்றுவரை நம்முடன் இருந்தவன் ஒருவனே நாளை நம் முன் தீவிரவாதியாக வந்து நம்முன் வந்து நிற்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். நான் சிறுவனாக இருந்த போது என்னுடன் விளையாடிய இரு மத சிறுவர்களும் இன்று மதச்சார்பு என்ற பெயரில் முகங்களையே மாற்றிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் இறைநம்பிக்கை ஊட்டப்படாமல் தீயவர்களின் கூடாரத்திலேயே வளர்ந்தவர்கள் அல்ல.

எங்கள் மதங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பது காலவதியாகிப் போகும் செய்தியாகிக் கொண்டிருப்பதை உணர்பவர் எவரோ அவர்களே மதங்களில் இருக்கும் தீமையை உணர்ந்து அகற்ற முன்வருவர். சீழ்பிடித்த சிரங்கை மருந்திடாமல் மறைப்பது அதை மேலும் பெரிதாக்கி உடலையே இழக்க நேரிடும் என்பதை உணர்க்க.

தீவிரவாதிகள் யார் ? என்ன செய்கிறார்கள் ? என்கிற புரிந்துணர்வு இருந்தால், செத்துப் போவதில் என் மதத்தைச் சேர்ந்தவனும் இருக்கிறான் என்கிற புரிந்துணர்வு இருக்கும். இதோ மதத்தீவிரவாதிகள் முன்பு சமாதானம் பேசும் மதவாதிகள் எவரையும் தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக எவனும் கொல்லாமல் விடுவதில்லை. திரிசூலத்தில் இருக்கும் மூன்று முனைகளில் நடுவில் இருப்பது தன் மதத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பதற்கே என்ற அரைகூவலும், தீவிரவாத வெறியில் தம் மதத்து மசூதிக்குள்ளேயே வெடிகுண்டு வீசுவதும் ஒன்றே. தீவிரவாதத்திற்கான காரணம் மதத்தின் மையமாக இருப்பது கண்கூடாகத் தெரியும் போது, எரிந்து கொண்டிருப்பதை அறிந்தும் உடையில் தீப்பற்றவில்லை என்று சொல்லி ஏமாற்றி தன்னை தீயின் நாக்குக்கு தீக்கிரையாக்கும் செயலுக்கு ஒப்பானது.

மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதை மதவாதிகள் சொல்லக் கூடாது. மதவாதிகள் அவ்வாறு தொடர்ப்புகளை துண்டித்து காட்டும் போது பொதுமக்களே சொல்லுவார்கள். மதத்தீவிரவாதத்தால் சந்தேகத்தின் பெயரால் கைதாகுபவர்கள் அப்பாவி மதப்பற்றாளர்கள் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்களால் கொல்லப்பட்டுள்ளவர்களிலும் அப்பாவி மதப்பாற்றாளர்களும், மதமே வேண்டாம் என்று மண்டியிட்டு கெஞ்சுபவர்களும் உண்டு. இறந்தவர்களுக்கான இரக்கம் சிறிதும் இன்றி மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பே இல்லை என்னும் சீற்றமோ, போலிக் கண்ணீரோ மதத்தைக் காப்பாற்றும் நெடுநாளைய அணைப்பாக இருக்கவே முடியாது.

மதத்தீவிரவாதம் என்ற சொல் மதம் வேண்டாம் என்று சொல்பவர்களைவிட மதப்பற்றாளர்களாலேயே மிகுந்து சொல்லப்படுகிறது என்பதையும் உணர்க. மிகச் சரியான இறைநம்பிக்கை உடையவர் எவருமே மதச் சிந்தனைக்கும், இறை நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று சரியாக புரிந்து கொண்டிருப்பர். மதத்தின் தீவிரவாதத் தன்மைகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களில் ஒருவரும் அதனை இறைவனை பழிப்பதாக எண்ணி மறுக்கவும் மாட்டார்கள்.

******

இறைவன் சாத்தானின் பிடியிலும், மாயையின் பிடியிலும் மனிதன் சிக்கி இருப்பது சொல்வது, மனிதன் மதங்களின் பிடியில் சிக்கி இருப்பது குறித்தான சொல்லே என்பதாகத்தான் எனக்கு புரிகிறது.

29 நவம்பர், 2008

மும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்ளது.

CNN செய்தியின் படி, 30 நிமிடங்களுக்கு முன்பு மும்பையின் அனைத்து இடங்களிலும் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், பிணையாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தகவல் வந்திருக்கிறது.

தாஜ் ஹோட்டல் இன்னும் எரிந்து கொண்டு இருக்கிறது, தீயணைப்பு பணி நடந்துவருகிறது.

தீவிரவாதிகளின் கொடுஞ்செயலால் இறந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் (சுமார் 150 பேர்) ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையும் வேண்டும் என்று வேண்டுவோம், விரும்புவோம்.

மூன்று நாட்களாக நடந்த இந்த மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

******

தீவிரவாதிகள் முற்றிலும் துடைத்து ஒழிக்க பாகிஸ்தான் பகுதியாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்து, அந்த பகுதியை மீட்டெடுத்தால் தான் இந்தியர்கள் ஆறுதல் அடைவார்கள். இதுவே தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள தீவிரவாதத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும். இதைச் செய்ய துணியும் அரசை இந்தியர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

28 நவம்பர், 2008

அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

தீவிரவாதிகளின் பயிற்சிக்களம் என்று கண்டறிந்து தலிபான்களை துடைத்தொழிக்க முடிவெடுத்த பின், அனைத்துலக ஆலோசனைகளோ, ஐநா நைனாக்களையோ கலந்து ஆலோசிக்காமல் 'என் நாட்டு பாதுகாப்பிற்கு...எவரிடம் ஆலோசனை கேட்கவேண்டும் ?' என்று கேள்வியையே முடிவெடுவாக எடுத்து ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சதாம் உசேனை அரசாங்கத்தையும் காலி செய்து ஈராக்கில் தனக்கு ஏதுவான ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்துக் கொண்டது.

உலகில் 5 ஆவது பெரிய இராணுவப் படை உடைய இந்தியா, பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? உண்மையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயறிசிக் களங்களையெல்லாம் இந்திய அரசு வீடியோ ஆவனமாக பதிவு செய்து உலக நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறது, பின்லேடனைக் காட்டும் காட்சிகளின் போது கடுமையாக தீவிரவாதிகள் பயிற்சி பெரும் காட்சிகளைக் காட்டுவார்கள், இவையெல்லாம் இந்திய அரசு உளவு துறை மூலம் பெற்ற படங்கள் தான் என்று சொல்கிறார்கள். அதாவது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயல்படும், பயிற்சி பெரும் இடங்கள் பலவற்றை இந்திய அரசும், இராணுவம் அறிந்தே வைத்திருக்கிறது.

முன்பு மறைமுகமாக இந்தியா மீது பாகிஸ்தான் கார்கில் போரை நுழைத்த போது அதை வெற்றிகரமாக முறியடித்ததைத் தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவிப்பது போல் வாஜ்பாய் அரசு பர்வேஷ் முஷாரப்புக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து என்றாவது இந்திய இறையாண்மைக்கு மதிப்பு கொடுத்து நடந்திருக்கிறதா என்றால் அப்படி நடந்ததே இல்லை.

மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசும் தேசிய வியாதிகள் தாவூத் இப்ராகிமை பிடித்துவருவது பற்றி வாய்த்திறப்பதே இல்லை, அவனை சீண்டாமல் இருப்பதே அரசியல்வாதிகளுக்கும் பெரிய பெரிய இந்தி சினிமா தலைகளுக்கும் நல்லது என்று விட்டு வைத்திருப்பதாகவே தெரிகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தும், உதவியும் வரும் பாகிஸ்தானிடமிருந்து தாவூத் இப்ராஹிமை பிடித்துவருவதோ, தீவீரவாதிகளின் பயிற்சிக் கூடத்தை அழிப்பது இந்தியாவிற்கு மிகவும் கடினமான செயலா ? ஆனால் இதையெல்லாம் முன்றாம் நபர் தெரியாமல் பாகிஸ்தான் செய்து அதில் வெற்றி பெற்றும் வருகிறதே ?

இலங்கையில் விடுதலைபுலிகளை அழிக்க உதவுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழிப்பதற்கு சிங்களர்களுக்கு உதவும் இந்திய அரசு, பாகிஸ்தான் பக்கம் கவனம் செலுத்தாமல் இருக்க என்ன காரணம் ? வழக்கம் போல் அடுத்த குண்டுவெடிப்பிற்கு ஆசிர்வாதமாக கண்டன விழாவைக் கொண்டாடுவதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.

பெரும அளவில் இந்தியர்கள் இந்திய இராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்துவருகிறார்கள், அமைதிப்படையாக அனுப்பப்பட்டவர்கள் அஸ்ஸாமிலும் ஈழத்திலும் பாலியல் வன்முறைகளை நிகழ்த்திய செயல்களைத்தான் பலரும் நினைவு வைத்திருக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு, அணிவகுப்பு நடத்துவதை தற்காலிககமாக நிறுத்துவிட்டு இந்திய இராணுவம் என்றால் பாகிஸ்தான் பயந்து நடுங்கச் செய்ய வேண்டும், நாட்டின் 60 விழுக்காடு வருமானம் இராணுவத்துக்காக செலவிடும் போது, அடிக்கடி நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மூல காரணமான பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயிற்சிக்கூடங்களை அழித்தால் தான், ஏழை எளியோர் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறது என்ற நம்பிக்கையே பிறக்கும்.

மும்பையில் நடந்திருப்பது பொருளாதார சீர்குழைவுக்கான தாக்குதல் என்பதால் இந்தியாவின் அசுரவளர்ச்சியை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளால் நடத்தப்பட்ட சதித்திட்டமா ? என்று ஆராயவேண்டியதன் தேவையும் இருக்கிறது.

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையை உருவாகினால் அந்நிய முதலீடுகள் குறையும், இந்திய பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்ற பொறாமை எண்ணத்தில் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் கூட இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன்.

*****

இது லோக்கல் பாலிடிக்ஸ்.....

இதுதான் சமயம் என்று பொடோ இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று ஒரு கும்பல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறது, பொடா இருந்தால் கடல்வழியாக ஊடுறுவிய தீவிரவாதிகளின் கால் மயிரை பிடித்து இழுத்து நிறுத்திவிடுமா ? பொடா சட்டத்தால் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் யார் தெரியுமா ? வைகோவும், நக்கீரன் கோபாலும், 14 வயது சிறுவனும் தான். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு சிறுவன் விடுதலை செய்யப்பட்டான். பொடோ சட்டம் என்ற பெயரில் அரசியல் வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பிடித்துப் போட்டார்கள், வெறொன்றும் நடக்கவில்லை. தற்கொலை படையாக ஊடுறுவல் செய்பவனை பொடோ என்ன செய்யும் ? அவர்களது கோவணத்தைக் கூட பொடோ தீண்டமுடியாது

தீவிரவாதம் உலகெங்கிலுமே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது, ஆனல் எங்கும், இங்கும் பரப்பப்படுவது 'துலுக்கன் குண்டு வச்சிட்டான், துலக்கனை ஒழித்துவிட்டால் எல்லா சரியாகிடும்' என்பது போல் கிடைக்கும் சந்தில் இந்துத்துவா சிந்து பாடப்படுகிறது. இந்தோனிசியா கூட இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுதான், அங்கு பாலியில் குண்டுவெடித்து 100க் கணக்கானோர் பலியாயினர். இஸ்லாமியர் என்பதற்காக குண்டு வைத்தவனை அந்த அரசு கொஞ்சவில்லை, குற்றத்தில் தொடர்பிருந்த மூவருக்கும் தண்டனையாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

பாகிஸ்தானில் கூட நாள்தோறும் மசூதிகுள்ளேயே குண்டுவெடிக்கிறது, இதற்கும் 'இந்திய துலுக்கன் தான் காரணமா ?' குண்டுவெடிக்கும் போதெல்லாம் 'துலுக்கனை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லும் இந்து அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் 'மலேக்கான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்று அறிந்தும்' போது மல்லாக்க படுத்து இருந்தது ஏன் ?

27 நவம்பர், 2008

தமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் !

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், "ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

"தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்' என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது (தமிழகம் இராஜஜி ஆட்சியிலா இருக்கு ?). கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை (இப்படித்தான் பேசி பேசி சூத்திர பசங்க ஆட்சியை பிடிச்சு நாட்டை கெடுத்துட்டானுங்க) நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.

அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது (அங்கெல்லாம் பிஜேபி, இந்துத்துவாக்களுக்கு அட்வைஸ் செய்யும் கடமை இல்லையா ? ஐயோ பாவம்) . எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் அருள்வாக்கினார்.

- நன்றி தினமலர்
******

தமிழக சு.சாமி இராம கோபல் ஐயா,

அப்படியே மும்பை பக்கம் போய் இப்படி ஒரு அறிவுரையை ராஜ் தாக்ரே ஐயாவிடம் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டு வரலாம். மாராட்டியர் தவிர மாற்றாற்கு இங்கிடமில்லை என்று பல மாநில மக்களின் உடமைகள் உயிர்கள் கூட அங்கு தான் சூறையாடப்படுகிறது. இந்து... இந்து, இந்தியா இந்து நாடு என்று கூவி தேசியவாதம் பேசி இந்து மதம் காப்பதற்கு எடுக்கும் முயற்சியைப் போலவே, நேராக நேபாளத்திற்கு சென்று நீங்களெல்லாம் போராடி இருந்தால், உலகிலேயே 'ஒரே இந்து நாடு' என்று நீங்களெல்லாம் பெருமை பொங்க கூறிய இந்து நேபாளத்தை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்டு இருக்கலாம், செய்தீர்களா ? இனி செய்வீர்களா ?

பாபர் மசூதியை இடிக்க மண்வெட்டியை தூக்கிக் கொண்டு ஓடி மதச்சார்பு பிரிவினை வாதம் பேசும் தாங்களெல்லாம் தமிழரென்று கூறிக் கொண்டு தமிழினத்துக்காக போராடுவதற்கு, ஆதரவாக இருப்பதற்கு எதிராக எச்சில் உமிழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறானே அதுதான் தமிழன். இதே போல் மாநிலத்துக்கு தனிக்கொடி கண்ட கர்நாடகத்தில் இதே சூழல் இருந்திருந்து உங்களைப் போன்றவர்கள் அங்கே அட்வைஸ் மழையும், கண்டன ஆசிட்டும் பொழிந்திருந்தால் உங்களையெல்லாம் அவர்கள் தக்கபடி பாராட்டி இருப்பார்கள். தமிழன் இழிச்ச வாயந்தேன்.

26 நவம்பர், 2008

மூடநம்பிக்கையை விதைக்கும் பேய்கள் வெற்றியடைந்து வருவது எவ்வாறு ?

"எல்லாம் அவன் செயல்" , "எங்கும் நிறைந்திருப்பான் இறைவன்" என்ற இந்த இரு சொற்களும் மூடநம்பிக்கைகளுக்கு எப்போதும் உரம் போட்டு வளர்ப்பதாகும். இதுபோல் வரட்டு வேதாந்தம் பேசுபவர்கள் எவரும் ஏழையின் ஏழ்மையையோ விரட்டியோ, அவர்களுக்கு நல்லறிவோ கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அது எப்போதும் நடந்தது இல்லை. காலம் காலமாக மூடநம்பிக்கைகள் பட்டு போகாமல் இருக்க இந்த இரு வாக்கியங்களே தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.

"எல்லாம் அவன் செயல்" என்று சொல்லிவிட்டு கவுந்து படுத்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் பசிபோய்விடுமா ? "எங்கும் இறைவன் நிறைந்திருக்கிறான்" என்றால் கொலைகாரன் அறிவாளை ஓங்கும் போது எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் தூங்கிக் கொண்டு இருக்கிறானா ? என்றே கேட்கத் தோன்றுகிறது.

மதநம்பிக்கைகளை கேள்வி கேட்காமல் இருப்பதற்காக புகுத்தப்பட்டதே இந்த இருசொற்களும். எல்லாம் அவன் செயலென்றால் ஏழ்மையும் வறுமையுமாக ஒருபக்கம், இன்னொரு பக்கம் உணவு தானியங்கள் மிதமிஞ்சி குப்பையில் கொட்டுவதெல்லாம் அவனுடைய செயலே என்று ஒப்புக் கொள்வீர்களா ? என்று கேட்டால் அதையும் சில மூடர்கள் 'ஆமாம்' என்றே சிலர் துணிந்து சொல்கிறார்கள்' இவற்றில் எள்ளளவும் உண்மை எதேனும் இருக்கிறதா ?

உழைப்பைச் சுரண்டி உண்டு வாழும் மதவாதிகள் பக்தி, இறை நம்பிக்கை என்ற கதையாடலில் இவ்விரு சொற்களை நுழைத்து, கூடவே இறையச்சம் கொள் என்ற பயத்தையும் ஏற்படுத்தி, மூடநம்பிக்கைகள் குறித்து ஏன் என்ற கேள்வியை எழுப்பவிடாமல் செய்வது தான் காலம் தோறும் நடக்கிறது.

'எல்லாம் அவன் செயல்' என்றால் நீதிமன்றம் எதற்கு ? தண்டனைகள் எதற்கு ? கோவிலில் சொத்தை கொள்ளையடிப்பவனும் அவனே ? சிலை திருடனும் அவனே, போலி சாமியாரும் அவனே, உண்டியலை உடைப்பவனும் அவனே ? எங்கும் நிறைந்திருப்பவன் அவன் என்றால் கோவில்கள் எதற்கு ? அப்படியே எழுப்பிய ஆலயங்களிலும் ஒரு சில கோவில்களே சக்தியுடையவையாக பரப்பபட்டு உண்டியலை நிறைய வைப்பது எதற்கு ?

எல்லாம் அவன் செயல் என்ற பின் பகுத்தறிவாதிகளை நொந்து கொள்வதன் காரணம் என்ன ? அதுவும் அவன் செயல் தானே.

ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்று பேர்வழிகள் சொல்வதையெல்லாம் அமோதிக்கும் விதமாக நல்ல ஆன்மிக சிந்தனையாளர்கள் கூட அதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் அவன் செயல் என்றால் 'முயற்சி, பலன்' இவற்றிற்கெல்லாம் பொருளே இல்லை.

இறைவன் என்ற சொல்லில் பயத்தை ஏற்படுத்தி மூட நம்பிக்கை பற்றி கேள்வி எழுப்பாமல் மத அடிப்படை வாதத்தை, மத வெறியை தற்காத்து வைத்திருப்பதைத் தவிர்த்து வேறு எதையுமே போலி ஆன்மிக வாதிகள் செய்தது கிடையாது.

அன்பே கடவுள் என்றோ, கடவுள் தன்மையே அன்பினால் ஆனது என்றோ சொல்லாமல், மூட நம்பிக்கைக்கு எதிராக பேசுபவர்களுக்கு கடவுள் பெயரால் 'கடவுள் மகா கோபக்காரன் உன்னைய தண்டிச்சிடுவான்' என்று கடவுளை கேவலப்படுத்துவர்களெல்லாம் இறைவன் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டி இருப்பதாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை பயமுறுத்த முயற்சிப்பது காமடியோ, காமடி.

இறைவன் வந்து நம் பேசுவது பொய் என்று சொல்லிவிடப் போகிறானா என்கிற நம்பிக்கையிலேயே இத்தகைய போலி ஆன்மிகவாதிகள் மூடநம்பிக்கை வளர்ப்பில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.

******

"எல்லாம் அவன் செயல்" என்பது உனக்கு கிடைத்த புகழினால் கர்வப்படாதே, நாளை நிலைதாழ்ந்தால் கீழே சென்றால் ஏற்படும் உனக்கு மனவருத்தம் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதற்க்காக சொல்லப்பட்ட ஒன்றேயாகும். ஏனென்றால் பதவி,புகழ், இளமை இவையாவும் நிரந்தரம் அன்று.

"எங்கும் இருக்கிறான் இறைவன்" - உன்னை கண்காணிப்பவர் எவருமில்லை என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடாதே என்பற்காக சொல்லி வைக்கப்பட்டது ஆகும்.

பகுத்தறிவாதம் பேசிய அண்ணா அழகாகச் சொன்னார்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்...ஏழையின் சிரிப்பிலும் இறைவனைப் பார்"

25 நவம்பர், 2008

Spontaneous Human Combustion - அடியார்கள் இறைவனுடன் ஜோதியானாது இப்படித்தானாம் !

Spontaneous Human Combustion (SHC) - இதுபற்றி டிஸ்கவரி சேனலில் செய்திப்படங்களை (டாக்குமென்டரி) பார்த்திருப்பீர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் அந்த நிகழ்ச்சியை நானும் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன். திடிரென்று எந்த ஒரு தூண்டுதல், உராய்வு இல்லாமலேயே சிலரின் உடம்பு பற்றி எரிந்து கருகி இறந்துவிடுவார்களாம்.

இதுபற்றிய படங்களைப் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.

அண்மைய காலங்களில் அதனால் இறந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் விபரங்கள் சேகரித்து இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் கூற்றுப்படி அதற்கான மிகச் சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கூறுகளாக சொல்லப்படுபவை, மனித கொழுப்பை உறிஞ்சு உலர்ந்த ஆடைகள் எளிதில் தீப்பற்றும், அல்லது உடைகளில் உள்ள static electricity யால் தீப்பிடித்து இருக்கலாம். மனித கொழுப்பு சட்டையில் எப்படி சேர்ந்து உலர்ந்தது என்று சரியாக விளக்கப்படவில்லை. அதாவது,

"Many theories and hypotheses have attempted to explain how SHC might occur, but those which rely on current scientific understanding say that with instances mistaken for spontaneous combustion, there was actually was a source of ignition. One such hypothesis is the "wick effect", in which the clothing of the victim soaks up melted human fat and acts like the wick of a candle. Another possibility is that the clothing is caused to burn by a discharge of static electricity. The likelihood that truly spontaneous human combustion actually takes place within the body is quite low.[1] மேலும் படிக்க..."

தானாக எரிந்து போகும் எதிர்பாராத இந்த நிகழ்வுகளில் இருந்து சிலர் கால் கருகியதுடன் தப்பி இருக்கிறார்கள்.மேலே இருக்கும் சுட்டியில் அந்த தகவல்களும் இருக்கிறது.

சைவ அடியார்கள் பலரும், வைணவ அடியார்கள் சிலரும் இறைவனடி சேர்ந்ததாக சேக்கிழார் புராணம் உட்பட பல இறை இலக்க்கியங்களில் குறிப்புகள், கதைகள் வருகின்றன. இதுபோன்ற இறைவனடி சேர்ந்ததாக கதைகள் சைவம் மறுமலர்ச்சிக்கு முன்பு ஏற்பட்டதே இல்லை. 13 ஆம் நூற்றாண்டில் நடந்தாக மட்டுமே இவை சொல்லப்படுகின்றன, ஆண்டாள் , திருப்பணந்தாள் ஆழ்வார் ஆகிய வைணவர்களும், சைவத்தில் நந்தனார் மற்றும் ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் சுற்றத்துடன் 'ஜோதி'யில் ஐக்கியமானார்கள் என்பதாக கதைகள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து பகுத்தறிவு பகலவன்கள் இறைவனடி சேர்ந்தார்களா ? புனிதமாக காட்டுவதற்கென்றே எரிக்கப்பட்டார்களா ? என்று அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

இதற்கு விளக்கமாக சைவ அன்பர்கள் சார்பில் சொல்லப்படுவது தான் மேற்கண்ட Spontaneous Human Combustion , அதாவது அவர்களாகே எரிந்து சாம்பலனார்களாம்.

சம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி?

"பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப் போனார், ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன் திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்) ஜோதியில் ஐக்கியமானார்.


மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள் புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும் SPONTANEOUS COMBUSTION என்று கூறலாம்.

தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.
(1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது.
(2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை எரிப்பதில்லை.
(3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன.
மேலும் படிக்க.... (நன்றி ! துவாரகை இணைய இதழ்)"

****

நந்தனார் வரலாற்றில் தெளிவாக தீ புகுந்தார் என்றே குறிப்பிடப்பட்டு ஜோதியில் கலந்தார் என்று சொல்லப்படுகிறது, தானாகவே எரிந்து மறைந்தார் என்று சொல்லப்படவில்லை. மேலும் Spontaneous Human Combustion ஆல் எரிபவர்களின் எலும்புகளும் முற்றிலும் எரிந்துவிடாது கூடவே சாம்பல்கள் தேறும். ஆனால் இறைவனடி சேர்ந்தவர்கள் அனைவருமே கருவறையில் மறைந்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறதா ? இறைவனடி சேர்ந்ததாக சொல்லப்பட்டு நம்ப வைக்கும் நிகழ்வுகளை Spontaneous Human Combustion என்ற எதிர்பாராத நிகழ்வாக சொல்லிவிடமுடியுமா ?

எனெனில் Spontaneous Human Combustion எரிந்த வெளிநாட்டினர் யாருமே சங்கரரை, ஞானசம்பந்தரை, ஆண்டாளைப் போல் ஞானிக்கள் கிடையாது, சாதாரண மனிதர்களே. இவர்கள் கூற்றுப்படி யோக / ஞான சக்திகளால் உயர்ந்த ஆன்மிகவாதிகளுக்கு கிடைக்கும் Spontaneous Human Combustion என்கிற தானாகவே எரிந்து போகும் பேறு / சக்தி, அதாவது இறைவனடி சேறுதல், வெளிநாட்டில் சாதாரண மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறதென்றால் அதில் அற்புதம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு மேலும் விளக்கம் சொல்ல மைக்ரோவேவ் சமையலையெல்லாம் கூடச் சொல்கிறார்கள்.

எனக்கு கேள்வியாக எழுவது ஒன்று தான். வள்ளலாரும் இறைவனடி சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பிறகு நல் ஆன்மிகவாதிகள் இறைவன் அருள் பெற்றவர்கள் எவருமே தோன்றவே இல்லையா ? அவர்களையெல்லாம் இறைவன் ஏன் ஆட்கொள்ளவில்லை, ஆனால் இறைவனருகில் ஆட்(களால்)கொல்லப்பட்டவர் உண்டு .அவர் தான் 'சங்கர ராமன்' வரலாறுகள் சரியாக பதியப்பட்டால், அல்லது பதிந்தது அழிக்கப்பட்டால் காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கூட நாளைக்கு ஆழ்வார் வரிசையில் கடைசியாக இடம் பிடித்து அவருக்கென்றே தனி புராணம் கூட எழுதப்பட்டு இருக்கும்.

*******

இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
:(

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்

திருநங்கைகள் பற்றி பல செய்தி கட்டுரைகள், கதைகள் படித்து இருந்தாலும் பதிவர் நண்பரின் பார்வையில் எழுதப்பட்ட அவன் - அது = அவள் எப்படி இருக்கும் ஆவல் பொங்கும் நீண்ட நாள் விருப்பாக இருந்தது, அன்மையில் தம்பி ஜெகதீசன் சென்னை சென்று திரும்பியதால் நிறைவேறியது, மற்றொரு தம்பி பால்ராஜின் ஏற்பாட்டில் ஜெகதீசன் நண்பர் எஸ்.பாலபாரதியிடம் இருந்து 20 நூல்களை சிங்கைப் பதிவர்களுக்காக பெற்று வந்தார்.

புதினமாக எழுதப்பட்ட திருநங்கைகள் பற்றிய தொகுப்பே அந்த நாவல். 3 மணி நேர தொடர் வண்டி பயணத்தின் போதே படித்து முடித்துவிட்டேன். திருநங்கைகளின் தோற்றமும் வாழ்க்கை முறைகளை பற்றியும், கோபி என்ற கோமதி(ஆகிய) என்கிற திருநங்கையை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார். திருநங்கைகள் பற்றி, இந்தியா தழுவிய ஒரு நாவல் எழுதவேண்டுமென்றால் தமிழ் தவிர்த்து பிற மொழியும் அறிந்திருப்பதன் தேவை கதையின் ஓட்டத்தில் உணரப்படுகிறது. திருநங்கைகள் அனைவருமே ஹிந்தி கலந்து பேசுவதால், அவர்கள் பேசுவது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஹிந்தி வசனங்கள் வந்திருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆண் குழந்தையாக வளர்க்கப்படும் ஒரு குழந்தை பருவ வயதில் எப்படி திருநங்கையாக மாறுகிறது என்பதையும், அதனால் அவர்கள் அந்த வயதில் இல்லத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகுவதும், அதிலிருந்து தப்பித்து ஒரு பெண்ணாக வாழவிரும்பி வீட்டில் இருந்து வெளியேறி...அவர்கள் தங்களைப் போன்ற திருநங்கைகளை சேர்க்கிறார்கள், அதன் பிறகு ஆண் உறுப்பை அகற்றிக் கொண்டு முழுப்பெண்ணாக தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார். திருநங்கைகளுக்கு இடையே புழங்கும் சொற்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கதை ஓட்டத்துடன் அழகாக சேர்த்து இருக்கிறார்.


திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.

கூவாகத்தில் ஆரம்பிக்கும் கதை என்றாலும் கூவாக நிகழ்வுகளை பலரும் எழுதிவிட்டதால் அதை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறார். மற்றபடி எல்லா திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பொய்யா மெய்யா என்பது தெரியாது, திக்கற்ற திருநங்கையாக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவர்களைப் போல் உள்ளவர்களே ஆறுதலாகவும், உறவாகவும் இருக்கிறார்கள் என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார். கதையில் வரும் அனைத்து திருநங்கைகளும் ஒருவரை ஒருவர் பெண் பால் உறவு முறையில் அழைத்துக் கொள்வதும், பெண்ணாகவே உணர்ந்து அவர்களுக்குள் 'டி' போட்டு பேசுவதை பிசிறில்லாமல் எழுதி இருக்கிறார். ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து வேளைகளில் முதலில் உதவுபவர்களாக திருநங்கைகளைச் சொல்லி இருப்பது அவர்களை பெருமை படுத்தும் எழுத்து. அதற்காக (மும்பையில்) தொடர் வெடிகுண்டு விபத்துகளை செல்லி அதனை பதிய வைத்திருக்கிறார்.

திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வாழ்க்கை எத்தகையது என்பது கதையின் முடிவில் உணரப்படுகிறது.*****

இந்த கதையில் சில சொதப்பல்களும் இருக்கிறது, பத்திரிக்கை செய்தியாளராக வரும் அன்பு என்பவர் கதையின் நாயகியான கோமதியை விரும்பும் முன் ஒரு முற்போக்காளராகச் அவரை கதைக்குள் கொண்டு வரும் போது சொல்லி இருப்பார், அன்பு தனது உதவியாளரிடம் திருநங்கை பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவார், அதே அன்பு கோமதியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் தொடங்குவார், தனக்கு ஓரினசேர்க்கை பழக்கம்
இருப்பதையெல்லாம் கோமதியிடம் சொல்லிவிட்டு தான் அவளை காதலிப்பார், ஆனால் முதல் உறவுக்காக இருவரும் கூடும் போது, கோமதி நிர்வாணம் செய்யாமல் (ஆண்குறி அகற்றிக் கொள்ளாமல்) இருப்பதை அறிந்து அதையே, காரணமாகச் சொல்லி, விலகி அவளுடன் அப்போது கூடவில்லை என்பதாக சொல்லி இருவரும் தற்காலிகமாக பிரிவது பொருத்தமாக இல்லை, அந்த ஒரே காரணத்துக்காக கோமதி நிர்வாணத்துக்கு தயாராகுவது போல் சொல்லப்படுகிறது. ஓரின புணர்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.

ஆரம்பம் முதலே கோமதி வளர்ந்த குடும்ப சூழலை வைத்து அவள் கடை கேட்கவே (பிச்சை எடுக்க) தயங்குவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் படிப்பறிவு இல்லாத ஒரு சாராசரி திருநங்கை, தன்னை விரும்பும் ஒரு ஆணை சேர்த்துக் கொண்டு திருப்தி அடைவது போலவே கோமதியும் செய்துவிடுகிறாள். ஆரம்பத்தில் அழகில் மயங்கி, பெண்ணாகவே ஏற்றுக் கொண்ட முற்போக்கு சிந்தனையுடைய அன்பு என்பவன், அவளை சேர்ந்த ஆறுமாதத்தில், அவளை மீண்டும் கடை கேட்க அனுப்புவதாக சொல்வது பொருத்தமாக இல்லை. அவன் திருநங்கையுடன் வெறும் உடல் இன்பத்தைத்தான் நாடுகிறான், குடிகாரனாக முடிவில் புரியவைக்கப் போவதாக இருந்தால் அவனை ஏன் திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாக அறிமுக காட்சிகளில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் தெரியவில்லை. படிப்பு ஆர்வமும், நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவ்வப்போது பேசும் கோமதி கடைசில் பிற திருநங்கைகள் போலவே ஒருவனுக்கு மனைவியாக அடி உதைகளை வாங்கிக் கொண்டு வாழ்வதாகவும், கொடுமை மிகுதியாகும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொல்லி கதையை முடித்து இருப்பது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு அதனை லட்சியமாகக் கொண்டு முன்னேறிய பல திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படி சொல்லிவிட்டால் 'வாடமல்லி' கதை சாயல் வந்துவிடும் என்று நினைத்திருப்பாரோ ?

கதையைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக திருநங்கைகளைப் பற்றிய நல்ல எண்ணம் வரும். ஆனால் ஒரு திருநங்கை அந்த கதையைப் படித்தால் நம் தலையெழுத்து இப்படித்தானோ என்று நினைக்க வைத்துவிடும், அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க லிவிங் ஸ்மைல், ரோஸ் மற்றும் நர்தகி நடராஜ் போன்ற பாத்திரம் ஒன்றை கதையின் இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாம். இவைகளே எனக்கு கதையின் குறையாக தெரிகிறது.


இவைகளைத் தவிர்த்து கதையின் ஓட்டத்திலும், காட்சிகளை கண் முன் விரிப்பதற்கான விவரிப்புகளும் படிக்கும் போது ஒரு கதையாசிரியரின் முதல் நாவல் போன்று சிறிதும் தெரியவில்லை. அந்தவகையில் எஸ்.பா சிறந்த எழுத்தாளராக வியப்பூட்டுகிறார். இந்த கட்டுரை இந்த நூலின் மீதான என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே, இதனை பொதுக்கருத்தாக கொள்ளவேண்டாம்.

24 நவம்பர், 2008

முதியோர் இல்லங்கள் இனி பெருகுமா ?

தன் விருப்பம் போன்ற வாழ்க்கை என்னும் தன்னல வாழ்வின் எச்சமாக திகழ்பவை முதியோர் இல்லங்கள் என்று சொன்னால் அது மிகச் சரிதான் என்றே நினைக்கிறேன். மேலை நாடுகளில் பிள்ளைகளுக்கும் பெற்றேர்களுக்கும் கடமை என்ற ஓர் உணர்வைத் தவிர்த்து எந்த பற்றுதலும் இல்லை. வாரிசுகள் கவனித்துக் கொள்ளும் என்ற நப்பாசையில் வாரிசுகளை உருவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சமூகத் தொடர்ச்சிக்கான ஒரு கடமை என்ற அளவில் பெற்றுக் கொண்டு அந்த குழந்தைக்கு தேவையானதைச் செய்து வயது வந்த பிறகு விருப்படி படிப்பையும் வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ள பெற்றோர்கள் தடையாக நிற்பதில்லை. மாறாக அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிடுவார்கள். பழம் பழுத்துவிட்டால் மரம் அதனை உரிமை கொண்டாடுவதில்லை, கோழிக் குஞ்சு வளர்ந்துவிட்டால் கோழிகள் அதனை அதன் போக்கில் விட்டுவிடும் என்பதாகவே வெளிநாட்டினரின் இல்ல அமைப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் முதியோர் இல்லங்கள் இருக்கின்றன, பெற்றோர்களே நோய்வாய்ப்படும் போது அங்கே சேர்த்துவிட சொல்லுவார்கள். மிகச் சிலரே சொத்துக்களை இழந்து முதியோர் இல்ல அரவணைப்பில் வாழ்வின் கடைசி பகுதியை கழிக்கிறார்கள்.

ஆனால் இந்திய இல்ல அமைப்பில் அனைத்தும் பெற்றோர்களின் கட்டுப்பாட்டினால் தான் நடக்கிறது, என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இன்றும் 90 விழுக்காடு பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட உலகளாவிய பண்பாட்டின் தாக்கம் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களையும் வாரிசுகளையும் முற்றிலும் விலக்கிவிடுக்கிறது. பெற்றோர்களால் இதை இசைந்து கொள்வது கடினம் என்ற நிலையில், கிட்டதட்ட சமூக மாற்றத்தில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வரும் காலத்தில் பெற்றோர்கள் இந்த அளவுக்கு வாரிசுகளின் மீது பற்றுதல் கொண்டிருந்தால் இதே நிலைதான் தொடர்ந்தும் இருக்கும். ஏனென்றால் ஆண்வாரிசு என்பதே இன்றும் பலரது விருப்பமாக இருக்கிறது. முதியோர் இல்லங்கள் பெருகியதோ இல்லையோ, அதில் சேரும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய தேதியில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகாள் கூட 3 வயதிலிருந்தே பாலர் பள்ளிகளில் முழுநாளும் கழிக்கின்றன. பிள்ளைகளையே அப்படி விடும் போது முதியவர்களை பாதுகாப்பு கருதி முதியோர் இல்லங்களில் விருப்பமின்றி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முதியோர் இல்லங்களுக்குச் செல்லும் எல்லா முதியவர்களும் நிலையும் அப்படி அல்ல சிலர் வலுக்கட்டாயமாகவும், சிலர் வழியின்றியும் அங்கே வருகிறார்கள்

*****

இலவச அன்னச் சத்திரங்களை தொழில் முறை ஹோட்டல்களாக மாற்றிய பெருமை 'சோ' கால்ட் முற்பட்ட வகுப்பினருக்கே உண்டு. வழிப்போக்கர்க்களுக்கு உணவு அளிப்பதற்கென்றே ஒருகாலத்தில் இலவச உணவு சத்திரங்கள் இயங்கிவந்தன. பல்வேறு சாதி அமைப்புகளும் தனித்தனியாக உணவு சத்திரங்கள் வைத்து உணவை இலவசமாக அளித்து இளைப்பாரும் வசதிகளெல்லாம் செய்துவந்தனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு பிறகே இலவச உணவு சத்திரங்கள் மறைய ஆரம்பித்து, வியாபாரமாக நரசூஸ் காஃபியுடன் ஆரிய பவன்கள் தோன்றியது. இன்று எல்லா சமூகத்தினருமே ஓட்டல் தொழில் ஈடு(லாபம்) உள்ளதாக கருதி அதனைச் செய்கின்றனர். எதையும் லாப நோக்காகவும் தொழிலாகவும் கொண்டு செல்லும் போது அதனை நல்ல செயல், சேவை என்றெல்லாம் புனிதம் கற்பித்துவிட முடியாது, வெறும் வயிற்றுப்பாட்டிற்கான பிழைப்பு அவ்வளவுதான்.

லாப நோக்கங்களுக்கு மனதில் முதன்மைத்துவம் கொடுக்க கொடுக்க, நாளடைவில் நம் குடும்பம் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த இல்வாழ்க்கை, என் குடும்பம் என்று சுறுங்கியது, அதில் பெற்றோர்களை மட்டும் சேர்த்துக் கொண்டனர், அதன் பிறகு அதற்கும் பங்கம் ஏற்பட்டு, 'கிழடுகளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதா ? நம் வாழ்க்கை முதியோர்களுக்கு பணிவிடை செய்து கழிந்துவிடக் கூடாது' என்ற மேற்கத்திய சித்தாந்ததில் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு துறத்தப்பட்டனர். அடிப்படைவாதம் தவிர்த்து பிற சமூக மாற்றம் எதையும் ( மன முறிவு, மறுமணம் போன்றவற்றை) வாழ்க்கையில் விரைவாக உள்வாங்கிக் கொள்ளூம் முற்பட்ட சமூகமே குறிப்பாக பார்பன சமூகத்தினரிடையே (எல்லோரும் அல்ல) பிற சமூகத்தினரைவிட இந்த மாற்றம் விரைவாகவே ஏற்பட்டு இருக்கிறது. பார்பன முதியோர்களுக்கென்றே விஷ்ராந்தி என்கிற முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது.

உறவுகளின் துரோகம்: முதியோர் (விஷ்ராந்தி) இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

இராஜம் கிருஷ்ணன் வாரிசுகளால் கொண்டுவந்துவிடப் படவில்லை என்பது ஆறுதலான ஒன்று, காரணம் அவருக்கு வாரிசுகளே இல்லை.

விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன். முதியோர்களாக இருந்தாலும் அங்கும் தீட்டுப்படமால் ஆச்சாரத்துடன் தான் இருப்பதற்கான ஏற்பாடும் போலும். சாகிற வரை சாதியைக் கட்டிக் கொண்டு :(

பிற்காலத்தில் அனைத்து சாதி சமூகங்களும் தங்களின் அன்னச் சத்திரங்களுக்கு மாற்றாக ஓட்டல்கள் தொழில் தொடங்கியது போல் இதனைப் பார்த்து பல்வேறு சாதிகளும் தங்களுக்கான சாதிய அடிப்படையில் முதியோர் இல்லங்களை கட்டிக் கொண்டு அதில் பெற்றோர்களை தள்ளிவிட்டாலும் வியப்பொன்றும் இல்லை.

பிற சமூகத்தினரும் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை தள்ளிவிடுகின்றன என்ற போதிலும் விழுக்காட்டு அளவில் முற்பட்ட சமூகத்தினரை விட அது மிகக் குறைவுதான்.

முதியோர் இல்லங்கள் தவறு அல்ல, சூழ்நிலை எதுவுமே இல்லாமல், வெறும் பெரும் சுமை என்று கொண்டு வந்து தள்ளப்படும் முதியோர் இல்லங்களும், அவற்றை வைத்து பணம் பண்ணுவதும் தவறுதான்.

இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் !

"நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டு உங்களை தலை கவிழ வைக்கிறேன்" பாருங்க என்றான் பதிவர் மற்றும் அன்பு தம்பி விக்னேஷ்வரன் பிள்ளையாண்டான். 'சரி சரி கேளு நானும் சுறுசுறுப்பாக பதிவு எழுதி நாளாச்சு' என்றேன். வலைப்பதிவு எழுதுவதில் எதும் கண்டிப்புகள் இல்லை என்பதால் நாம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் நட்டமில்லை. வார இதழ், மாத இதழ்களில் எழுதுவோருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் எழுத வேண்டிய கண்டிப்புகள் (Conditions) இருக்கும். தம்பி அப்படி என்ன கேட்டுவிட்டான் ? ஒரு தொடர்பதிவில் இணைத்து வைத்திருக்கிறான். அவன் இன்னும் அந்த தொடர் பதிவைப் வெளியிடவில்லை :). 'பத்திரிக்கை வாசிப்பில் சுவாரிசியம்' என்கிற தலைப்பில் தொடர் பதிவு ஓடுகிறது. பத்திரிக்கை என்பதும், சுவாரிசியம் என்பது தமிழ் சொல் அல்ல என்பதால் நான், 'இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம்' என்று தலைப்பை மாற்றி வைத்திருக்கிறேன்.

எளிதில் புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கூட கவனமின்மையால் மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறோம், உபயோகம் என்பதற்கு பதிலாக எளிதாக பயன் என்று எழுதலாம் செய்கிறோமா ? இன்னும் எளிமையான தமிழ் சொற்களெல்லாம் எளிமையாகவே விடுபட்டுப் போகிறது, வருடாவருடம் என்று வருடத்துக்கு வருடுவதைவிட ஆண்டாண்டு அல்லது ஒவ்வொரு ஆண்டும் என்று எழுதலாம், தினம் தினம் என்பதை நாள்தோறும் என்றும் எழுதலாம், செய்தி இதழ் என்ற சொல்லுக்கு சஞ்சிகை என்ற சொல்லே மணிபிரளவ சொல்லாக எழுதப்பட்டு அதன் படியே விவாஹ சுபமூகூர்த்தப் பத்திரிக்கை என்று எழுதி அதனை பரவலான புழக்கத்தில் விட்டு வைத்திருந்தார்கள், காரணம் செய்தி ஊடகங்கள் கையில் இருந்தவர்களுக்கு தமிழின் மீது இருந்த பற்றுதலே(?). தற்போழுது திருமண அழைப்பிதழ் என்ற இருசொல்லில் 'திருமணம்' என்கிற செய்தியை 'அழைப்புடன்' சொல்வது சிறப்பாக இருக்கிறது. சுபமூகூர்த்தம் என்பதற்கு தமிழ் சொல் நல்வேளை, மங்கள வேளை, நற்பொழுது என்று சிறப்பாக தமிழில் எழுத முடியும்

கேள்விகளுக்குச் செல்கிறேன்.

1)முதன் முதலில் எப்போது (இலக்கிய) இதழ்களை படிக்க தொடங்கினீர்கள்?

நான் சிறுவனாக இருந்த பொழுது அக்கம் பக்கத்து பெண்கள் இராணி முத்து என்ற திங்கள் இதழை ( மாதாந்திரி) வாங்கி சுழற்சி முறையில் படிப்பார்கள். எனக்கு ஒன்பது அகவை இருக்கும், தமிழ் நன்றாக வாசிக்க தொடங்கிய அகவை. முதன் முதலில் இராணி முத்துவில் வந்த கவியரசர் கண்ணதாசனின் 'அப்பா தேவை' என்ற நாவலைத்தான் படித்தேன். கதையின் கருவும் முடிவும் நன்றாக நினைவிருக்கிறது. விதவைத் தாய் தன் மகனின் 'அப்பா' குறித்த ஏக்கத்துக்காக தான் விதவை என்று தெரிந்தே விரும்பிய ஒருவருடன் வாழ்கையை தொடர்வது தான் கதை. கதையின் கடைசி வரியாக, இரு தண்டவாளங்களாக இருவரும் கணவன் மனைவியாக நடக்க இடையில் அவளது மகன் இருவரது கைகளைப் பற்றிய மூவரும் நடந்து கொண்டு இருந்தனர். என்பதாக முடியும். அந்த காலத்துச் சிந்தனையில் எழுதப்பட்டது, கணவனை இழந்த பெண் வாழ்க்கைத் துணைக்காக ஆடவன் ஒருவனை ஏற்றுக் கொண்டாலும் உடலால் இருவரும் இணைவதற்கு இசைவதில்லை என்பதாகத் தான் இப்போது அதன் பொருள் புரிகிறது. 'இந்த கதையை முழுவதும் படித்துவிட்டேன்' என்று சொன்னதற்கு, 'இந்த வயசில் இப்படி பட்ட கதையெல்லாம் படிக்கிறாயா ?' என்று முதுகில் பலமாக வாங்கியதை மறக்க முடியாது.

2) அறிமுகமான முதல் புத்தகம்?

10 ஆம் வகுப்பு படிக்கின்ற காலகட்டத்தில் சாண்டில்யணின் வரலாற்று புனைவு கதைகளை படித்து இருக்கிறேன். முதன் முதலில் வாசித்த சிறப்பான கதைகள் என்றால் மேற்சொன்னதைவிட சாண்டில்யன் கதைகளைத் தான் சொல்ல முடியும், வருணனை, திருப்பங்கள், சுவையார்வம் குன்றாமல் கடைசிவரையில் எழுதப்பட்ட சாண்டில்யன் கதைகள் என்றுமே என் நினைவில் நிற்பவை, கடல்புறா, யவன ராணி, கன்னி மாடம் ஆகிய கதைகள் வாசிக்கும் போது அதிலேயே மூழ்கி இருந்தது மறக்க முடியாத வாசிப்பு துய்பு என்று சொல்லலாம். அதன் பிறகு லஷ்மி எழுதிய பல நாவல்களைப் படித்து இருக்கிறேன். லஷ்மி நாவல்கள் அனைத்திலுமே ஒரு ஆரம்பம் அதன் பிறகு பின்னோக்கிய நினைவுகளால் ( ப்ளாஷ் பேக்) கதை நகரும்.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?

பள்ளியில் கதை படிக்கும் அளவுக்கெல்லாம் துணிவு இருந்ததில்லை, பத்தாம் வகுப்பு படிக்கும் போது இராம கிருஷ்ணன் என்கிற மாணவன் காதல் கவிதை எழுதிவிட்டு அறிவியல் ஆசிரியரால் செ(ம்)மையாக கவனிக்கப்பட்டான், 'இந்த வயசில உனக்கு காதல் கவிதை கேட்குதா ?' என்று பின்னி எடுத்துவிட்டார். அந்த அகவையில் பலருக்கும் ஏற்படும் உணர்வு தான் அது என்று அறிவியல் ஆசிரியர் அறியாது இருந்திருக்கிறார் என்று தற்பொழுது நினைக்கையில் அந்த அறிவியல் ஆசியரியரின் 'அறிவியலை' நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய காலகட்டங்களில் படக்கதைகள், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரைக் நாவல்கள் நிறைய படித்து இருக்கிறேன்.

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?

நாவல் படிக்கும் பழக்கமெல்லாம் 19 ஆம் அகவைக்குள் முடிந்துவிட்டது, அதன் பிறகு 200 பக்கம் உள்ள நாவல்கள் கூட படிப்பதற்கு அலுப்பாகிவிட்டது, அதன் பிறகு சிறுகதைகள் விரும்பி படித்து இருக்கிறேன். வாடமல்லி மற்றும் சில தொடர்கதைகளைப் படித்து இருக்கிறேன். நல்ல நாவல்கள் என்று யாரும் சொன்னால் அதை படிபதுடன் சரி. வலைப்பதிவில் வாசிப்பின் நாட்டம் மிகுதியாக இருப்பதால், புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு பொழுது போக்காக இல்லை.

நிறைய வாசித்து இருக்கிறேன். அவ்வளவையும் இங்கே ஒரு பதிவில் அடக்க முடியாது, சரளமாக எழுத முடிவதெல்லாம் நினைவில் இருப்பவை என்பதால் மேற்கண்ட தகவல்கள் என்றுமே நினைவில் இருக்கும் அளவுக்கு பதிந்தவை என்று பொருள் கொள்ளலாம்.

*****

தொடர் தொடர நாலு பேரைக் கூப்பிடனுமாம்,

1. நசரேயன்
2. கே.ஆர்.எஸ்
3. வடுவூர் குமார்
4. வெயிலான் ரமேஷ்

பதிவர் நண்பர்களே உங்கள் மீது உள்ள பேரன்பால் உங்களைக் கேட்காமலேயே உங்கள் பெயரை பரிந்துரைத்துவிட்டேன். மேற்கண்ட நண்பர்களை யாரும் வேறு எவரும் அழைக்கவில்லை என்றால், எழுதும் உந்துதல் இருந்து எழுதினால் மிக்க மகிழ்ச்சிதான்.

22 நவம்பர், 2008

இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை !

இனவெறுப்பு எப்போதும் இருமுனை கத்தி போன்றதே... ஆரிய இனவெறியில் யூதர்களுக்கு எதிராக ரத்த தாண்டவம் ஆடிய ஹிட்லர் அழிந்தது உலக வரலாறு, மக்கள் இனமாக அறியப்பட்ட காலகட்டங்களிலிருந்தே இயற்கை சீரழிவுகள் தவிர்த்து தனி இன வெறுப்புக்கு எந்த இனமும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் அங்கு கூடிய வெள்ளையர்களால் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டு கொன்று குவித்த பிறகும் அந்த இனம் இன்றும் அழியாமல் தான் இருக்கிறது, தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட வெள்ளையின அரசு தற்பொழுது அவர்களை மூத்த குடிகளாக அறிவித்து நல்ல முறையிலேயே நடத்துகிறது.

இந்தியாவில் ஊடுறுவிய ஆரியர்கள் திராவிடர்களிடம் போரிட்டு முற்றிலும் அழிக்க முடியாது என்பதால் தங்களை முற்போக்கு சமூகமாக மாற்றிக் கொண்டது மட்டுமின்றி ஆரிய - திராவிட கலப்பில் பிறந்தவர்களையெல்லால் பார்பனர் ஆக்கிக் கொண்டு இன்றும் பெரும்பாண்மை திராவிடர்களிடையே தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் கொள்ளையடித்துவிட்டு திரும்ப ஓடிக் கொண்டு இருந்த கஜினி முகமது போன்ற இஸ்லாமிய வேற்று நில மன்னர்களுக்கு பிறகு வந்த இப்ராஹிம் லோடி, அவரை வென்ற பாபர் இங்கு கொள்ளையடித்து செல்வதைவிட இந்தியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செலுத்துவது சிறந்ததாகப் பட்டது, ஆரம்பத்தில் இந்தியர்களை இஸ்லாமியர் ஆக்கும் கடும் முயற்சிக்கள் போன்றவை பலனளிக்காமல் போகவே, பேரரசர் ஹுமாயுனின் மகன் அக்பர் அவர் காலத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இருவரை இணைக்கும் தீன் இலாகி என்ற புதிய மதத்தை உருவாக்கினார் ஆனால் அவரது காலத்துக்கு பிறகு அது வெற்றிபெறவில்லை, என்றாலும் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம், வாளால் பரப்பபட்டது என்ற குற்றச் சாட்டுகளெல்லாம் அதன் பிறகு அடங்கியது எனலாம்.

நாடுகளாக அறியப்படாத காலகட்டத்தில் இனக்குழுக்கள் மட்டும் தான் இருந்தது, இன்றைய நாடுகள் அனைத்துமே மொழி வாரி மாநிலங்களைப் போல் தனிமொழியும், தனி இன அடையாளமும் கொண்டவை, குடியேறிய நாடுகளில் மட்டும் தான் பல்வேறு மொழிகளும், பல்வேறு இனங்களும் இருக்கும், அந்த நாடுகள் எந்த ஒரு இனத்துக்கும் சொந்தமான இடமாக இருந்தது இல்லை என்பதால் அங்கு சென்ற இனக்குழுக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்தை அரசியல் கொள்கையாக ஆக்கிக் கொண்டது, அதிலும் ஆதிக்க இனங்களே ஆதிக்கம் செலுத்தியது. எந்த இன வெள்ளையராக இருந்தாலும் தோலை வைத்துதான் அந்த அரசியலும் அதாவது வெள்ளைத் தோல் உள்ளவர் அனைவரும் ஓர் இனம் என்ற உணர்வாக வெள்ளையர்கள் அனைவரும் செயல்பட்டனர். இன்றைக்கும் இந்தியப் பார்பனர்கள் பலர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மகிழ்வதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் இந்த வெள்ளைத் தோல் என்னும் இன அடிப்படையில் தான்.

மற்ற உருவான நாடுகள், சிங்கப்பூர் போன்று உருவான நாடுகளில் அது இல்லை, பல்வேறு ஆசிய மக்கள் ஒன்று கூடி நீண்ட நாள் வாழ்ந்த இடம் என்பதால் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் அந்த நாட்டையே சொந்த நாடாக ஆக்கிக் கொண்டனர். சீனர்கள் பெரும்பான்மையினர் பவுத்த சமயத்தினராக இருப்பதால் சமய அடிப்படையில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்தால் ஈழத்தமிழர் நிலமை இன்னும் மோசமாகும். நல்லவேளை பார்பன பணியா இந்துத்துவ அரசியல் போல் அதனை மதம் சார்ந்தவையாக சீனர்கள் கொண்டு நினைக்காமல் இருப்பதற்குக் காரணம் மனிதனும் மதமும் ஒன்றல்ல என்று நினைப்பதேயாகும்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறது.....

இன அழிப்புகளால் முற்றிலும் முடியவே முடியாது என்பதால் தான் பல்வேறு நாடுகள், தங்கள் இன நலனுக்கான அரசியலை மதத்துக்கு திருப்பிவிட்டு, மத அரசியலுக்கும் மத வெறியைத் தூண்டுவதில் ஈடுபடுகின்றன.

தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற இலங்கை அரசின் கனவெல்லாம் என்றுமே நிறைவேறாது, ஏனெனில் ஈழத்தமிழர்கள் ஈழத்தைவிட வெளிநாடுகளில் தான் மிகுதியாக இருக்கின்றனர். அண்மையில் உலகம் முழுவதும் ஒலிம்பிகின் போது சீனர்களிடம் திபத்தை மீட்க திபத்தியர்கள் ஆர்பாட்டம் செய்து பல இடங்களில் ஒலிம்பிக் ஜோதியை பறித்து அணைத்து எதிர்ப்பைக் காட்டியது போல், கனன்று கொண்டு இருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலைத் தீ இலங்கையில் அனுமார் வாலினால் தீக்கிரையாக்கிய கதை போல், இலங்கை பூசல்கள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும்...எப்போதும் அமைதியை திரும்பவே விடாது. பேச்சு வார்த்தை அல்லது ஈழவிடுதலை இரண்டில் ஒரு தீர்வுதான் இலங்கையில் அமைதி திரும்ப வழிவகுக்கும். இன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதே இல்லை.

20 நவம்பர், 2008

தேசிய வியாதிகளும் சட்டங்களும் !

மக்கள் ஆட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியைவிடக் கேவலமாகவே சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசியல் கட்சிகளின் ஆட்சி. பிடிக்காதவர்களை 'பிடிப்பதற்கே' இவர்கள் 'புலி வருது' என்று சொல்லி இயற்றும் சட்டங்களெல்லாம் பயன்பட்டது தான் வரலாறாக நிற்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்கப் போகிறோம், பிரிவினை வாதிகளை முடக்கப் போகிறோம் என்று அரைகூவல் விடுத்து பாஜகவின் பொடோ சட்டம், கோபால்களை (வை.கோபால் சாமி, நக்கீரன் கோபால்) பழிவாங்கவே பயன்படுத்தப்பட்டது வரலாறு. இதுமட்டுமா ? வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகாதவனாக மாறிய போது ' மதுரையில் கஞ்சா விற்றான்' என்று கைதுசெய்யப்பட்டு பல்லைப் பிடிங்கியதும், நடராஜனின் நெருக்கமானப் பெண் என்பதால் ஜரீனா என்கிற பெண்ணை கஞ்சா பொட்டலம் விற்றப் போது கைது செய்ததாகவும், அவரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கைப்பெற்றப் பட்டதாகவும் ஜெ ஆட்சி முடியும் வரையிலும் அலைக்கழிக்கப்பட்டார் என்பதெல்லாம் செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சுதந்திரமாக ஆதரவு அளிப்பவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமைச் செய்யும் என்கிறார் தங்கபாலு. தமிழர்கள் 80 விழுக்காட்டினருக்கும் மேல் ஈழவிடுதலை என்பது விடுதலை புலிகளினால் போராட்டத்தினால் தான் அமையும் என்று நம்புகிறார்கள், இவர்கள் அனைவர் மீதும் சட்டம் ஏன் பாயவில்லை ? திருமாவளவன் வெளிப்படையாகவே பேசிவிட்டார் கைது செய்ய வேண்டியதுதானே, மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கானோர் அனைவருமே ஈழ விடுதலைக்கு ஆதரவானாவர்கள் தான். போர் நிறுத்த வேண்டும் என்ற அனைத்து வகைப் போராட்டங்களும் ஈழ மக்கள் நலனை முன்னிறித்தியது, ஈழவிடுதலை ஆதரிப்பதுதான், போராட்டத் தலைவர்களையெல்லாம் (வைகோ, சீமான், அமீர்) ஆகியவர்களை மட்டும் கைது செய்தால் போதுமா ? அவர்கள் பேச்சைக் கேட்டு கை தட்டியவர்களும் ஈழவிடுத்தலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவானவர்கள் தானே, அவர்களையெல்லாம் கைது செய்யவேண்டும் என்று அம்மையாரோ, காங்கிரசாரோ ஏன் சொல்வது இல்லை ?

அரசியல் கட்சிகள் தங்கள் கொள்ளைக்கு பங்கம் விளையாமல் இருக்க, அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இந்திய அரசியல் சட்டம் என்று இயற்றும் அனைத்தும் சட்டமாகிவிடுமா ? பிஜேபிக்கு இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் என்றால் அதற்காக பிஜேபி அரசு போடும் சட்டம் எப்படி இந்திய பொதுச் சட்டமாகிவிடும் ? இது முரணானது என்பதால் தானே அடுத்து வந்த காங்கிரஸ் அரசு அதனை நீக்கியது.

இதுபோல் நூற்றுக்கணக்கான சட்டங்கள் காலத்தால் காலவதியாகி தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டு நீக்கப்பட்டு இருக்கின்றன. ஆடுகோழி பலி இட தடை என்று சட்டம் இயற்றப்பட்டு நாட்டார் தெய்வ வணக்கத்தையே பலிகொடுத்தவை தான் சட்டங்கள், அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் கோழியை அறுத்தால் அவர்களை துறத்திச் சென்று சுடுகாடுவரையில் விட்டு அங்கேயே அவர்களை சமைத்து உண்ணும் படி கேவலப்படுத்தியவைதான் இந்த சட்டங்கள்.

ஒருவேளை பிரபாகரன் இந்துத்துவ ஆதரவாளராகி பிஜேபி வாழ்க என்ற கோசமிட்டால், சாயிபாபா சத்தியசீலர் என்று சொல்லிவிட்டால் அடுத்து ஒருவேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல என்று அறிவித்துவிட்டு தடையை நீக்குவார்கள். ஒரு இயக்கத்தை தடைசெய்வதும், நீக்குவதும் வெறும் அரசியல் நிலைப்பாடு மட்டுமே, அரசியல் கட்சிகளின் இத்தகைய சட்ட உரிமை மீறல், திணித்தல் இவை எதையுமே அறியாது உணர்ச்சிவசப்பட்டு 'இந்திய இறையாண்மை' என்ற பெயரை சட்டங்களுக்கு கொடுப்பது முட்டாள்தனமானது என்றே நினைக்கத் தோன்றுகிறது

இந்திய இறையாண்மை, பாவக்காய் வெங்காயம் என்று பேசுபவர்களெல்லாம் உல்பா, நக்சல் தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்புக் கொடுக்கிறோம் என்று அரசியல் கட்சிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது என்ன செய்து கொண்டிருந்தார்கள், குண்டுவைத்து பொதுமக்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளை ஒருபக்கம் வேட்டையாடிக் கொண்டே மறுபக்கம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடந்தது, அப்போதெல்லாம் இந்திய இறையாண்மையும், சட்டமும் எங்கே சென்றது.

சட்டம் எப்போது கடமையை செய்தது ? மாமுல்களுக்காக பிடிக்கப்படும் போது மட்டுமே கள்ளச் சாராய சில்லரை விற்பனையாளர்கள், பிட்பாக்கெட் திருடன் இவர்களிடம் தான் கடமையைச் செய்தது, அதே சட்டம் பாராளுமன்றத்தில் மன்மோகன் அரசின் பெரும்பான்மை நிருபிக்கும் வேளையில் 3 கோடி ரூபாய் கட்டுகளை கொண்டு வந்து கொட்டிய பிறகு, அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்திய மக்களே வாயடைத்தும் தொடர்புடையவர்களிடம் அதன் கடமையை செய்ததா ?

சட்டமே இந்திய இறையாண்மை என்பதெல்லாம் வெறும் வெற்று கோஷம் தான். ஏனெனில் தடை செய்யும் சட்டங்கள் அனைத்துமே அப்போதைய அரசியல் கட்சிகளின் சொந்த நலன் கருதியே இயற்றப்படுபவை, இவற்றிற்கும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய பெருங்கடல் ஆமைகளுக்கும் கூட தொடர்ப்பு இல்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா, சுட்டுக் கொல்லப்பட்ட பின், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவையே. அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட நபர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் - ராகுல் காந்தி

வன்முறையில் ஈடுபட்டவர்களை யார் கொண்டு வந்து நிறுத்துவது ?

இதே இராகுல் காந்தியோ, அவரது வாரிசுகளோ நாளைக்கு இராஜிவ் படுகொலையைக் காரணமாக வைத்து ஈழ விடுதலையை நீர்த்துப் போக செய்த முயற்சிக்கு வருத்தம் தெரிவிக்கும் காலம் கூட வரலாம்.

19 நவம்பர், 2008

அப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...!

1989ல் ஒரு இரவில் சென்னையில் இருந்து நாகையை நோக்கிய பேருந்து பயணம், முன் இருக்கையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் அப்படியே தூங்கிப் போனேன். திடிரென்று காதைப் பிளக்கும் இடியொலி. தலையெல்லாம் கற்கண்டு அபிஷேகமாக கண்ணாடிச் சிற்கள். பயந்து விழித்துப் பார்த்தால் பெரிய கும்பல் வரிசையாக பேருந்துகளை நிறுத்தி பேருந்து கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் நொறுக்கிக் கொண்டிருந்தது... எங்கும் அலறல் ஒருபக்கம் ...எங்கும் 'அடிங்கடா...நொறுக்குங்கடா... கொலை வெறி கோஷம் இன்னோர் பக்கம்... திண்டிவனம் தாண்டி மேல்மருவத்துத்தூர் அருகில் தான் அந்த இடம்... வன்னியர்களின் போராட்டம் என்றார்கள். ஒரு இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு கண்களை குருடாக (கண்ணாடி இன்றி) பேருந்துகள் புறப்பட்டன. வீட்டிற்குச் சென்று தலையைச் சுரண்டும் போதெல்லாம் இரத்தத் துளிகளுடன் சிறு கண்ணாடி சிற்களை எடுத்துக் காட்டினேன். மேல்சட்டை பாக்கெடிலெல்லாம் கண்ணாடி துண்டுகள், வீட்டில் இருந்த பெற்றோர் பயந்து போனார்கள். கண்ணாடி உடைப்புடன் இல்லாமல் பேருந்தையே எரித்து இருந்தால்...நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும்.

இந்த போராட்டக்காரர்களுக்கெல்லாம் ஏன் அரசு பேருந்தே எதிரியாகத் தெரிகிறது ? ஆத்திரம் அடங்கவில்லை என்றால் பெட்ரோலை வாங்கி தலையில் கொட்டிக் கொண்டு தீக்குளிப்பு போராட்டம் நடத்தலாமே, எவனோ எங்கோ செல்லும் பேருந்தை வழிமறித்து கொளுத்திவிடும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது ? இந்த அறிவீனர்களின், காட்டுமிராண்டிகளின் செயலால் 3 மாணவிகள் உயிருடன் எரிந்தது போதாதா ? இப்பவும் எதாவது சாதிக் கலவரம், கட்சிக் கலவரம் என்றால் உடனடியாக பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி தீ வைக்கிறார்கள். எதையாவது கொளுத்தி தான் போராட்டத்தின் கவனத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் தன்னையே கொளுத்திக் கொள்ள வேண்டியதுதானே.

இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பில் பேருந்து கொளுத்தப்பட்டாலும் இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும். கூடவே கொளுத்தியவர்களுக்கு 4 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை அளிக்கலாம், சாதிக் காரர்களின் போராட்டம் என்றால் அந்தந்த சாதி சங்கத்திடமிருந்து அதே போல் வசூல் செய்யவேண்டும், மீறினால் அந்த சாதி சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் ஆண்டுகள் வரை கடும்காவல் தண்டனையும், 4 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும். பேருந்து எரிப்பின் போது யாராவது உயிரிழக்க நேரிட்டால் போராட்டக் காரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்.

தற்பொழுது முதல்முறையாக பேருந்து எரிப்பில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு வந்திருக்கிறதாம். இடது கையைப் பார்த்து சுடுங்க, காலம் முழுவதும் அவன் ஒரே கையால் தான் கழுவனும், அதே கையால் தான் சாப்பிடனும், அதைவிட பெரிய தண்டனை கொடுக்க முடியாது, உணர்ச்சிவசத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கும், பொதுமக்களின் உயிரையும் உடமையையையும் துறும்பாக நினைக்கும் மடையர்களுக்கு பாடமாக அமையும்.

வேணாம்டானு சொல்லி தலைப்பாடாக ...


(படத்தை பெரிதாகப் பார்க்க அதன் மேல் கிளிக்கவும்)

இந்து மதத்தின் பெயரில் வன்முறை வேணாம்டானு சொல்லி தலைப்பாடாக அடித்துக் கொண்டும் கேட்டார்களா ? இந்துத்துவாக்களினால் இந்துக்களுக்கு ஏற்பட்ட தலை குனிவு.

தீவிரவாத பட்டியலில் சேர்ந்து கொண்ட இந்து மதம் வாழ்க !

18 நவம்பர், 2008

எனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) !

லிவிங்க் ஸ்மைல் வித்யாவை பதிவுகள் வழியாக அறிந்திருக்காவிடில் இந்த 'அரவாணி' என்ற சொல் பலருக்கும் அருவெறுப்பாகவே இருக்கும், தமிழ்மணத்தில் இணைவதற்கான முதல் முயற்சியில் புதிய பதிவர்கள் சேர்க்கைப் பட்டியலில் அவரது பதிவு பற்றிய குறிப்பும், எழுதும் தான் ஒரு அரவாணி என்றும் குறிப்பிட்டு இருந்தார், 'பரவாயில்லையே...இவர்களில் கூட பதிவு எழுதுபவர்கள் இருக்கிறார்களா ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அடுத்த நாட்களில் அந்த பதிவு சேர்க்கைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. பிறகு இருவாரம் கழித்தே அவரது பதிவின் பெயர் சேர்க்கைப் பட்டியலில் மீண்டும் வந்து அதன் பிறகு தமிழ்மணத்தில் பதிவுகள் திரட்டப்பட்டு வந்தது, முதலில் சேர்த்து பிறகு ஏன் திரட்டாமல் விட்டார்கள் என்பதற்கான காரணமாக நான் நினைத்தது, 'போலிப் பெயர்களில்' வரும் வழக்கமான பதிவாக (சோதனை செய்து) இருக்கக் கூடும் என்று நினைத்து பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர் பாலபாரதி போன்றோர் முயற்சியால் சேர்த்திருப்பார்கள் என்றே நினைத்தேன். நிகழ்வை வைத்து இது எனது ஊகம் தான். ஆனால் முதலில் பட்டியலில் வந்து பிறகு திரட்டாமல் போனக் காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

*******

அரவாணிகள் பற்றி முதன் முதலில் அறிந்து கொள்ளும் போது வயது 7 இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கூரிலிருந்து நாகூருக்குச் செல்லும் சந்தனக் கூடு பத்து நாள் திருவிழாவின் போது, நாகையில் இருந்து நாகூருக்கு நடைப் பயணமாக சாலையில் கப்பல்கள் இழுத்துச் செல்லும் மாலை நேர நிகழ்வில், மாறுபட்ட பெண் நிறைய பவுடர் மேக்கப் உடன் ஆடிக் கொண்டே செல்வார், வயசுப் பசங்கள் அவளைச் சீண்டுவார்கள், அதன்பிறகு அருகிலும் வீட்டிலும் பேசிக் கொண்டு இருந்ததை வைத்து அவர் ஆண்தான் பெண்ணாக உடை அணிந்திருக்கிறார், என்று தெரியவந்தது...அந்த பெண்ணை கோஷா என்று சொல்வார்கள். 10 - 15 ஆண்டுகளாக அந்த கோஷாவை ஆண்டு தோறும் முழு மேக்கப்படில் அதே நிகழ்வில் பார்த்து இருக்கிறேன். முதன் முதலில் இளமையாக இருந்தவர் 50 வயது மேல் கன்னங்கள் ஒட்டியபடி இருந்தாலும் முழு மேக்கப் உடன் உற்சாகம் குன்றாமல் ஆண்டு தோறும் பலரை மகிழ்வித்தப்படி ஊர்வலத்தில் செல்வார்.

அதன்பிறகு 7 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியின் (நடராஜன் தமயந்தி மேல் நிலை பள்ளி) அருகே புளியமரம் என்ற இடத்தில் சைக்கிள் சுற்றுதல் என்ற நிகழ்ச்சி நடைபெறும், 10 நாள் ஒருவர் கீழே இறங்காமல் சுற்றிவர மாலை 7 முதல் இரவு 11:30 வரை கலை நிகழ்ச்சிகள், பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஆடுவார்கள், ரெக்கார்ட் டான்ஸ் அளவுக்கு மோசமாக இருக்காது, அதில் பெண்களாக ஆடுபவர்கள் அனைவரும் அரவாணிகளாக இருந்தனர். நிகழ்ச்சியின் போது பெண்களைப் போல் மேக்கப் போட்டு இருப்பார்கள், காலையில் அந்த பகுதிவழியாகச் செல்லும் போது பார்த்தால் கைலி மற்றும் மேலே ஒரு சட்டைப் போட்டு, கொண்டையுடன் இருப்பார்கள், முகத்தில் முடி மழித்த அடையாளம் இருக்கும்.

எங்கள் ஊரில் அரவாணிகளை யாரும் கேலி செய்வது கிடையாது. முன்பெல்லாம் நாகூர் / நாகைப் பகுதியில் அரவாணிகள் வீட்டு வேலை செய்வார்கள். பொது இடங்களில் பார்ப்பது அரிதுதான். எனக்கு ஒரு 18 வயது இருக்கும் போது, வீட்டின் அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும், இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும், பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும், பேச்சுக் கொடுத்தால் பேசும். நாங்கள் யாரும் எதிரே கிண்டல் செய்வது கிடையாது, பின்னால் அதன் நடையைப் பார்த்து சிரிப்போம், அது அதை கவனித்துவிட்டால், கட்டைக் குரலில் 'என்னப் பார்க்கிறிங்க...நான் ஒம்போது அப்படித்தான் நடப்பேன்...எங்க கட்டை வேகுற வரைக்கும் இப்படித்தான்...' என்று சொன்னதும் அதுவே தன்னை இப்படிச் சொல்லிக் கொள்கிறதே என்ற திகைப்பும் பரிதாபமும் வந்தது. அதன் பெயர் நடராஜன், ஆனால் அதனை ஒருமுறை பார்ப்பவர்கள் மீண்டும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தனிப்பட்ட கை கால் அமைப்பு இருந்தது, கை, கால்களில் ஆறு ஆறு விரல்கள், இரண்டு கையும் சேர்த்து 12 விரல்கள், அதே போல் கால்களில் மொத்தம் 12 விரல்கள். விரல் அமைப்புகளி பார்ப்பத்தற்கு வேறுபாடு தெரியாது, எண்ணிப் பார்த்தால் மட்டுமே கூடுதலாக இருப்பது தெரியும் அளவுக்கு 6 விரல்களும் வரிசைப்படி இருந்தது. 'பெண்ணாக நடந்து கொள்வதை திருத்துவதற்காக உடலில் சூடுபோட்டாங்க, கட்டி வச்சி உறிச்சாங்க அதான் ஓடிவந்துவிட்டேன்' என்று அதன் கதையைச் சொல்லியது,
('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்) கிட்டதட்ட ஒரு மூன்று மாத காலம் இருக்கும், அதன் பிறகு நடராஜனைக் காணவில்லை. அங்கே உள்ள பசங்களை விசாரித்தால், அதைப் பல இளவட்டங்கள் இரவில் வட்டமிடுவதால் கடைக்காரர் துறத்திவிட்டார் என்று சொன்னார்கள். அதுவும் சில சிலுமிஷங்களைச் செய்ததாக நெருங்கிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.

ஈராண்டுகள் கழித்து சென்னையில் வேலைக்குச் சென்ற பிறகு ஒரு ஞாயிறு மாலை தி.நகரில் நடந்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நிலையம் எதிரே அரவாணிகள் கூட்டம் ஒன்று கடைகடையாக ஏறி இறங்கினார்கள், ஒரு அரவாணியை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று பார்த்தேன்...அட நடராஜன்...கைகால்களில் 12 விரல்கள்...ஆனால் சேலையில் இருந்தது. '....நடராஜன் இங்கே எப்படி ...?' என்று நான் கேட்பதைத் திரும்பிப் பார்த்துவிட்டு .....வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியது...'ஏன் ஓடுரே...நடராஜன் நில்லு ஓடாதே...'. நிற்காமல் வேகமாக ஓடி மற்ற அரவாணிகளையும் இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றுவிட்டது, அதற்கும் மேல் செல்ல எனக்கும் தயக்கம், மூன்று அரவாணிகளும் தவறாக புரிந்து கொண்டு என்னை தாக்கிவிட்டால் அங்கிருந்து கடந்து சென்றேன். எனக்கு சிறுது ஏமற்றம் தான். சும்மா விசாரிக்கலாம் என்று நினைத்தால் 'அது சென்னையில் தான் இருக்கிறது என்று சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும் அதனுடைய ஊர் காரன்' என்று நினைத்து ஓடி இருக்கும் என்றே நினைத்தேன்.

*******

1992 வாக்கில் பெங்களூரில் வேலை செய்தபோது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' தொடர் ஆனந்தவிகடனின் வந்தது, அந்த வாரத்தில் அந்த கிழமை எப்போது வரும் என்று காத்திருந்து ஆவலுடன் படிக்கும் அளவுக்கு அந்த தொடர் அமைந்து இருந்தது, அப்பொழுதுதான் அரவாணியாக (சுயம்பு என்ற பாத்திரம்) மாறும் ஆண் உடலில் ஏற்படும் மாற்றம், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அடைக்கலம் தேடி ஓடுவது, அவர்களின் மும்பய், டெல்லி வாழ்க்கை, ஆண் உறுப்பை அகற்றிக் கொள்ளும் சடங்குகள், அவர்களைப் புரிந்து கொள்ளாத சமூக அவமானத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர நினைத்து துடிப்பது போன்றவற்றையெல்லாம் அந்த நாவல் வழியாகவே அறிந்து கொண்டேன். அந்த தொடர் கதையைப் படித்து முடித்த பிறகு நான் 'அதுவாக' நினைத்துக் கொண்டு இருந்த அரவாணிகளை 'அவளாக' நினைக்க ஆரம்பித்தேன்.

அரவாணி என்ற பெயருக்கு பதிலாக திருநங்கை என்ற சொல் பயன்படுத்துகிறார்கள், அரவாணி என்ற பெயரை விட திருநங்கை என்ற பெயரே பொருத்தமானது, மதச் சார்பற்றது. மூன்றாம் பாலினமாக அவர்கள் கேட்கும் அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வை மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்று சித்தாந்தம் பேசுகிறோம், ஆனால் அப்படி சமமாக இருப்பவர்களை மதிக்கிறோமா என்ற கேள்வியாகவே அரவாணிகள் நிற்கிறார்கள். பிச்சைகாரர்கள் கூட இவர்களை ஏளனமாகப் பார்க்கும் இழிநிலை மாறிவருகிறது என்பது ஆறுதலான ஒன்று.


அரவாணிகள் - உடலியல், மொழியியல், வாழ்வியல் என்ற நூலை தற்பொழுது வாசித்துக் கொண்டு இருக்கிறேன். சகோதரி லிவிங் ஸ்மைலின் கட்டுரைகள் கூட அதில் இருக்கிறது. தொகுப்பாசிரியர் மகாராசன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

முதல்வர் பேச்சு - ஒரே குழப்பமைய்யா !

புறச் சின்னங்கள் அல்ல பிரச்னை!: 'சோ'.அனந்த நாராயணன், தலைமையாசிரியர் (ஓய்வு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: கவிதை எழுதுவது முதல்வரின் பொழுதுபோக்கு. ஆனால், பல சமயங்களில், அவரது கவிதை விவாதப் பொருளாக அமைந்து விடுகிறது. அவரது சமீபத்திய கவிதையொன்று, இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்து விட்டது. "இந்துக்கள் புறச் சின்னங் கள் அணிவதை தவிர்த்துவிட்டால், ஜாதி, சமய வேறுபாடுகள் குறையும்' என்று கூறியுள்ளார். சாமர்த்தியாக, மற்ற மதத் தவரின் புறச் சின்னங்கள், தரிப்புகளை கிண்டலடிப்பதை தவிர்த்து விட்டார். ஏனெனில், இந்துப் பழக்க வழக்கங்களை மட்டும் தானே சாட முடியும். புறச்சின்னங்கள் அணிவதை ஒழிப்பதின் மூலம், மக்கள் குருதியில் பரம்பரையாக ஊறியுள்ள ஜாதிப்பற்று ஒழிந்து விடுமா? இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடு மனதளவில் களையப்பட்டால் தானே, ஜாதி சமய சமரச நோக்கு உருவாகிடும்? மனதிற்கண் மாசு இலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற' என்ற வள்ளுவன் வாக்கும், இதையே வலியுறுத்துகிறது. உண்மையிலேயே ஜாதி சமயங்களிடையே சமரசப் போக்கு உண்டாக வேண்டுமாயின், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமைய வேண்டும்.

*********

முதல்வர் பேச்சுக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்னய்யா தொடர்பு ?

முதல்வர் சாதி, சமய அடையாளமாக சொல்லி இருப்பது இந்து சமயத்தில் புற அடையாளமாக பூணூல், வடகலை நாமம், தென்கலை நாமம், திருநீற்றுப்பட்டை என்பதைக் குறித்ததாகவே நினைக்கிறேன். சாதி மத என்று சொல்லாமால் சாதி சமய வேறுபாடுகள் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார், இதுல இந்து மதத்தை மட்டும் தான் குறைச் சொல்றார், குல்லாவையோ, சிலுவையையோ குறைச் சொல்லவில்லை என்று 'சோ' அனந்த நாரயணன் திருக்குறள் காட்டெல்லாம் சொல்லி என்ன மாதிரி கவலைப்படுகிறார். அச்சச்'சோ'

ஒரே குழப்பமைய்யா, குழப்பம், முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள் !

முடியல்ல........ :)

16 நவம்பர், 2008

வா...ர...ண...ம்........ஆ...யி...ர...ம்...!

சூரியா படம் என்பதற்காக அல்ல கெளதம் மேனனின் படம் என்பதற்காக விமர்சனங்களைப் படிக்காமல் சென்றது முட்டாள் தனமாகியது. நான்கு படங்களை வெற்றிப்படமாக கொடுத்துவிட்டால் 5 ஆவது படம் 'நாம எதை எடுத்தாலும் பார்த்து தொலைப்பாங்க' என்று நினைக்கும் இயக்குனர் வரிசையில் கவுதம் மேனன் சேர்ந்துவிட்டார் என்று படம் முடிந்ததும் தெரிந்தது. ஆமாம் கவுதம் மேனனின் காக்க காக்க, வே.விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களைப் பார்த்த துய்ப்பில் இந்தப்படத்துக்குச் சென்றேன்.

"Life has to go on" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்கும் சம்பவங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல் என்ற ஒற்றைவரிதான் படத்தின் கதை. கதைப்படி அப்பா - மகன் இருவரும் சூர்யாக்கள், அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார், ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிகளில் வரும் வில்லனுக்கு வயதானவர் வேசம் போட்டால் இருப்பது போன்ற தோற்றம், சூர்யா வயதானால் சிவக்குமார் போலத்தானே இருப்பார், அந்தக் உண்மையால் சூர்யாவின் வயதான செயற்கை வேடம் படத்துக்கு ஒட்டவே இல்லை. (கோல்ட் ப்ளேக்) சிகெரெட் பிடிப்பதால் கேன்சர் வந்து செத்துப் போவதாகக் காட்டுவார்கள் (படத்துக்கு அன்பு மணி நிதி உதவி செய்தாரோ ?) மகன் சூர்யாவை நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பான அப்பா வேடம். மகன் அலட்டிக்கொள்ளாத துறுதுறு. கல்லூரி கடைசி ஆண்டில் ஊருக்குத் திரும்பும் போது சவீதா ரெட்டியை சந்தித்து முதல்பார்வையில் காதலிக்கத் தொடங்கி, வாங்கப் பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்று சொன்னதை நம்பி அவரை அமெரிக்காவரை துறத்திச் சென்று காதலிக்கிறார். அவர் விபத்தில் இறக்கவே சென்னைத் திரும்பி, இரண்டாவது காதல் அதாவது தங்கையின் தோழி குத்து ரம்யா மீது காதல் அறும்புகிறது (பசங்களுக்கு மட்டும் தாடியை மழிப்பதற்கு 2 வாது ஒண்ணு சிக்கிடுது பாரேன்...பின் சீட்டில் இருந்த இளைஞர்களின் கமெண்ட் ரசித்தேன்) இடையே காதலியை மறக்க போதையை நாடி...(அந்த காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார்) அதிலிருந்து மீள காஷ்மீர் செல்வது, அங்கே அமெரிக்காவில் சந்தித்த ஒரு பணக்காரரின் மகனை (டெல்லியில்) சிலர் கடத்திவிட அதிரடியாக தனியாக துப்புத் துலக்கி...அந்த சிறுவனை மீட்டுக் கொடுக்கிறார். அங்கு கடத்தல் காரனாக நடித்திருக்கும் பப்லூ அசத்தல் நடிப்பு...அதன் பிறகு ரம்யாவுடன் திருமணம் என்பதாக நீண்டு கொண்டே செல்கிறது.

படம் பார்பவர்கள் சீட்டு நுனிக்கே வந்துவிடுகிறார்கள். ஒண்ணும் இல்லை படம் எப்போ முடியும் எழுந்து போவோம் என்று தான். 70 களின் காட்சிகளாக அப்பா சூர்யா - அம்மா சிம்ரனின் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார்கள், அவர்களின் மகன் சூர்யாவின் 90 களின் காட்சிகள், ஓரளவுக்கு காலக் கட்டத்தை துல்லியமாகக் காட்ட உடை, வாகனம் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். 90 களின் விளம்பரங்களாக Solidair TV விளம்பரமெல்லாம் வைத்திருந்தது நல்ல நேர்த்தி. பாடல்கள் கேட்கும் ரகம் தான். மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாகச் சென்றது, படம் போரடிக்கவில்லை என்றாலும் நீளமானக் திரைக்கதை பார்பவர்களை அலுப்படைய வைக்கிறது.

படத்தில் மொத்தம் மூன்று காதல் காட்சிகள்...இதுவே படத்தின் பின்னடைவு, ஒளிப்பதிவு, பின்னனி இசையும் அருமையாக இருந்தது. படம் ஒரேடியாக டப்பா என்று சொல்ல முடியவில்லை. தீபாவளிக்கு வந்தப் படங்களை ஒப்பிடுகையில் வாஆ பரவாயில்லை. மீசையை எடுத்து இராணுவ மேஜராக வரும் சூர்யா ரியாஸ்கானைப் போன்றே தோற்றமளிக்கிறார். கல்லூரிக்கால சூர்யாவின் தோற்றம் நன்றாக இருக்கிறது. எப்படி இருந்த சிம்ரன் என்று சிம்ரன் ரசிகர்கள் பெருமூச்சு விடுவார்கள்.

அடிச்சு பிடிச்சு உடனே பார்க்கும் அளவுக்கு படம் சூப்பர் என்று சொல்லமுடியவில்லை. கிரைம் சப்ஜெக்ட் வைத்து படம் எடுக்கும் கவுதம் மேனன் காதல்களையும், அப்பா சென்டிமெண்ட் கலந்து வைத்து செய்திருக்கிறார், படம் ஆட்டோகிராப்பை நினைவு படுத்துவதாக பின்சீட்டில் சிலர் கமெண்ட் அடித்தார்கள். கவுதம் மேனன் படம் என்று செல்பவர்களுக்கு படம் ஏமாற்றத்தையே தரும். (வழக்கமாக கவுதம் படத்தில் வரும் 'மாயா' என்ற பெயர் கதை நாயகிக்கு வைக்கவில்லை:)), கஜினிக்கு பிறகு சூர்யா நம்பிக் கொண்டிருந்தப்படம், சூர்யா ரசிகைகளுக்கு பிடிக்கலாம். வ...ரா...ண...ம்........ஆ...யி...ர...ம் இழுவை. படம் பார்த்துவிட்டு யாரும் திட்டக் கூடாது என்பதற்காகவே 'life has to go' என்று முடிவில் சொல்லிவிடுகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு....சரிதான் தலையெழுத்து...ஹூம்....என்ற பெருமூச்சு படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் வருகிறது

15 நவம்பர், 2008

திராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி...

கிறித்துவ இஸ்லாமியர்கள் பிரித்தார்களா ? ஆப்பு வைத்தார்களா ?

உலகை ஆளுமைக்கு உட்படுத்தியவை மூன்று மதங்கள் கிறித்துவம், இஸ்லாம் மற்றும் வருணாசிர கறை படியாத இந்திய சமயமான பெளத்தம்.
மற்றவையெல்லாம் கலாச்சார கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதால் அந்தப் பகுதியை விட்டுத்தாண்டாதவை, உதாரணம் இந்திய சமயப் பிரிவுகளில் உள்ள சநாதனம் (வேதவழிபாடு), சைவம், வைணவம் இவை சேர்ந்துதான் இந்து என்று சொல்லப்படுகிறது. வருணத்தை எதிர்க்காததால் ஜைன மதமான சமணமும் இந்தியாவைக் கடக்கமுடியாமல் ஏன் சேட்டுகளையே கடக்க முடியாமல் முடங்கியது. இந்திய சமயங்கள் அனைத்தும் பெளத்தம் தவிர்த்து உலகத்தாருக்கு பொதுவானவை என்ற ரீதியில் வழியுறுத்தல் செய்ய முடியாமல் போனது அவற்றில் இருந்து வில(க்)க முடியாத உருவவழிபாடே. பிள்ளையாரையும், இந்திய முகங்களை உடைய கடவுளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால் உலகில் உள்ள மற்ற இனங்கள் ஏற்குமா ? ஏற்காது புத்தரை ஜப்பானிய முகத்துடனும், சீன முகத்துடனும் தான் ஜப்பானியர், சீனர் வணங்கி வருகின்றனர். சீனப் பெண் போல் லட்சுமி இருந்தால் இந்தியருக்கு ஐயுறுவாக இருக்குமல்லவா. இந்திய சமயங்கள் உலகிற்கான மதம் என்றோ, உருவ வழிபாடு கோட்பாடுகள், உருவமற்ற வழிபாடான பரப்பிரம்மம் (எல்லாம் மாயை என்கிற மாபெரும் பேரண்டப் பொய்) என்னும் தத்துவங்களெல்லாம் உலகத்தாரால் ஒருகாலமும் ஏற்கப்படாது.

இந்தியாவில் பிரிவினையை விதைத்தது கிறித்துவ / இஸ்லாமியர்களே என்ற கருத்து பலமாக நம்மிடையே வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் ? ஒருபிரிவினர் அடிமையாகவே சுரணையற்று இருப்பதைச் காட்டி விழித்துக் கொள் என்று சுட்டிக் காட்டியது பிரிவினைவாதமா ? ஆனால் நடந்தது இவைதான். இஸ்லாமியர்களின் அரசியல் ரீதியான படையெடுப்புகளைக் சுட்டுகிறார்கள் இவற்றை எல்லோருமே செய்திருக்கிறார்கள், இங்கே நடந்த சைவ / வைணவ சண்டைகள் அனைத்தும் அரசியல் ரீதியானவைதான். வருணாசிரம மரம் செழித்து வளர்ந்து கொண்டிருந்த போது அதன் வேரில் வெண்ணீரைக் கொட்டி பட்டுப் போக வைத்தது கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் பிரச்சாரம் என்றால் அவை உண்மைத்தான்.

இன்றைய புலம்பல்களாக நாம் கேட்பது,

திராவிடன் இல்லை, ஆரியன் இல்லை இவையெல்லாம் கால்டுவெல் என்னும் கிறித்துவ மதவெறியாளனின் சூழ்ச்சி, இப்படி ஒருபக்கம் குறை சொல்லும் கூட்டம் தான். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களது என்றுக் காட்ட குதிரைக்கு கொம்பு வரைந்து முயற்சித்து பார்த்தது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆரியர்களது என்று நிருவுவதன் மூலம் இந்திய நாகரீகம் ஆரியர்களைப் பின்பற்றியது என்று காட்டவே அவ்வாறு முயன்று தோற்றார்கள். ஆரியன் என்ற சொல்லே வெளிநாட்டுக்காரன் சதி என்று ஒருபக்கம் பரப்பிக் கொண்டு, மறுபக்கம் எல்லாம் ஆரிய வழி வந்தது என்று முனைந்துக் காட்டுவது இரட்டை வேசம் தானே ?

இங்கே ஒருவர் எழுதுகிறார்

உங்களுக்கு தெரியுமா?

1. திராவிட இயக்கங்கள் உண்மையிலேயே கால்டுவெல் எனும் கிறிஸ்தவ மதவெறியனால் இந்தியாவை துண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
2. திராவிட இனம் இந்தியர்களே ௮ல்ல எனும் தேசதுரோக கருத்தினை பரப்பியவன் இவன் தான்.


முதல் கட்டுரைக்கும் இரண்டாவதிற்கும் உள்ள தலைப்பின் முரண்பாடுகளையே பாருங்கள்.

முதலில் சொல்லவருவது திராவிட / ஆரிய என்ற இனமே இல்லை, எல்லாம் பாதிரியின் கட்டுக்கதை, இரண்டாவதில் உள்ளது அவன் உங்களை (திராவிடர்களை) ஆப்பிரிக்காரன் என்று சொல்கிறான் என்ற தூண்டல்.

ஒருகாலத்தில் கண்டங்கள் இல்லாது ஒரே நிலப்பரப்பாக இருந்தத போது ஆப்ரிக்க என்ற நாடும் இந்தியா என்ற நாடும் இருந்ததா ? இந்தியர்கள் ஆப்பிரிக்கவிலிருந்து வந்திருக்கலாம் என்பது ஊகமே அன்றி அதில் உண்மை என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குறியது மட்டுமே. ஆனால் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததற்கு தெளிவான வரலாறே இருக்கிறது, கைபர், போலன் கனவாய் என்று சொல்லிப் பாருங்கள், எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆங்கிலத்தில் பயன்படுத்தும் (அப்பா, அம்மா) பாதர், மதர் என்ற சொல்லுக்கும் சமஸ்கிரத பித்ரு, மாத்ரூ என்ற சொல்லுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், இவற்றின் வேர் மற்றும் மூலம் ஆராய்ந்தாலே ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்களா என்று தெரிந்துவிடும். எந்த மொழியும் தந்தை / தாய் என்ற சொல்லை பிறமொழிகளில் இருந்து அமைத்துக் கொண்டிருக்கவே இருக்காது.

கிறித்துவ / இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்த அளவுக்கு வெறியோடு நடந்து கொண்டார்கள் அதுவும் கிறித்துவ தேவலயங்களை மதப்பரவல்களைச் சாக்கிட்டு ஏன் தாக்குகிறார்கள் என்பதற்கானக் காரணமே அவர்கள் ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் சொல்லியதே ஆகும். கிறித்துவர்கள் செய்த பிரிவினை என்பது திராவிடம் என்ற இனத்தை பிரித்து அறிந்து அதன் தனித்தன்மையை வெளிச்சமிட்டது ஆகும். அதுவே ஆரியர்களுக்கு ஆப்பாக அமைந்தது.

ஆரியர் இல்லை, திராவிடர் இல்லை, எல்லாம் கிறித்துவ மிசனறிகளின் சதி என்றால், ஆரிய பவனுக்கும், ஆரிய சமாஜிற்கும் பெயர் வைத்தது எந்த பாதிரியின் பிரிவினைவாதச் செயல் ? ஆரிய பவன் என்று பெருமையாகப் போட்டுக் கொள்வதும் கிறித்துவ மிசநெறிகளின் தூண்டுதலால் ?

நரசூஸ் காப்பியுடன் இட்லி வடை சாம்பாருடன் தயார் செய்து விற்கும் உங்கள் உணவகங்களுக்கு இன்று முதல் 'ஆரிய பவன்' என்று பெயர் சூட்டுகிறேன் என்று எந்த இஸ்லாமிய மன்னர் பெயர் வைத்தார் ?

உடம்பிலும் பெயரிலும் சாதீய அடையாளத்தை சுமந்து கொண்டு பிரிவினைவாதம் செய்பவர் யார் ? புலம்பல்களை விட்டுவிட்டு புற அடையாளங்களை நீக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு ஆரிய - திராவிட அடையாளமே காணாமல் போகும்.

14 நவம்பர், 2008

உயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் !

இல்லாத ஒன்று தமிழர்களை / இந்தியர்களைப் பிரித்துப் போட்டு எத்தனை பாடாய் படுத்துகிறது. சாதியைத் தான் சொல்கிறேன். உடலில் எந்த பாகம் சாதியைக் குறிக்கிறது என்று யாரவது சொல்ல முடியுமா ? அப்படி ஒரு பாகம் இல்லாததாலேயே எங்கள் சாதி இதுதான் என்று காட்ட வெளி அடையளமாக 8 ஆம் நம்பர் நூலை வாங்கி குறுக்காகச் சுற்றிக் கொள்கிறது ஒரு கும்பல். பெரியார் ஏன் அவற்றை அறுக்கச் சொன்னார், அறுப்பது தேவைதானா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள், ஊருக்குள் அனைவரும் அமைதியாக வாழ ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் 'என் மனைவி ஒழுக்கமானவள்' என்று எழுதிவைத்தக் கதைதான் சாதி.

பார்பனரை மட்டுமே சாதிவெறியாக சித்தரிக்கும் முற்போக்கு வாதிகள் (வாந்தி முன்னால் வருவதால் முற்போக்கு, பேதி பின்னால் வருவதால் பிற்போக்கு என்று சொல்லலாம் போல) தேவர் சாதி வெறியர்களையும், கவுண்டர் சாதி வெறியர்களையும், வன்னியர் சாதி வெறியர்களையும் எப்போதாவது கண்டிப்பது உண்டா என்று பார்த்தால் மிக மிகக் குறைவுதான். இத்தனைக்கும் வெளிப்படையான கலவரங்களை பார்பனர்கள் நடத்துவது கிடையாது, பஸ் எரிப்புகளை பார்பனர்கள் நடத்துவது கிடையாது. ஆனால் இவையெல்லாம் நடக்கும் போது அதை நேரிடையாக கண்டிக்காமல் 'பார்பனர்களின் வருண அடுக்கு முறைதான்' இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது போலவும் அதுவும் அரை மணி நேரத்திற்கு முன்பு வந்த கடைசி செய்தி வழியாக அறிந்து கொண்டது போலவும் மூன்று பக்கத்திற்கு மனுவிலிருந்து தொடங்கி ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் வரையில் கொண்டு வந்து முடிப்பார்கள். ஐயா இவையெல்லாம் கடைக்கோடி தமிழனுக்கும் தெரிந்து நாறிப் போன வரலாறு, இதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தால் தேவன் திருந்திடுவானா ? நினைத்துப் பாருங்கள்.

இவைதான் காரணம் என்பது ஏற்கனவே தெரிநத்து தானே. கிரிமி எப்படி தோன்றியது என்கிற ஆராய்ச்சியைவிட நோய்கண்டவர்களை குணப்படுத்துங்கள் ஐயா. எய்ட்ஸ் குரங்கிலிருந்து வந்தது என்று சொல்வது எய்ட்ஸ்க்கான தீர்வு அல்ல. மாற்று மருந்து அதுதான் தீர்வு. சமூகம் கெட்டு நாற்றமடிப்பதை இன்னும் எத்தனை காலத்துக்கு பார்பன சதி என்றும்...வருண அடுக்கைச் சுட்டிக் காட்டி பேசுவதையும் வைத்து மறைத்துவிட முடியுமா ? ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களில் பெரிய ஈடுபாடு வைத்து குண்டுவைக்கப் போகும் அளவுக்கு தமிழகத்தில் வெறியுடன் இருப்பவர்களில் பார்பனர்கள் யாரும் இல்லை என்பதை நம்புங்கள்.

சாதி வெறி எடுத்து சமூகத்தை சீர்கெடுக்கும் அனைத்து சாதிகளையும் அதே சாதிப் பெயரை வைத்தே சாடுங்கள். 'பார்பன பண்ணாடையே' என்று எழுதத் துணிபவர்கள் எவருமே 'தேவர் சாதி வெறியர்களே நிறுத்துங்கள், 'வன்னிய சாதிவெறியர்களே நிறுத்துக்கங்க...' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுத முன்வராதை நினைக்கும் போது முற்போக்கு என்ற பேச்செல்லாம் ஒவ்வாமையால் வந்த வாந்தியோ என்றே நினைக்கத்தோன்றுகிறது. சாதி வெறிகளையெல்லாம் 'பார்ப்பனியம்' என்ற சொல்லில் அடக்கியது தவிர்த்து சாதிமறுப்புப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணும்.

இதோ இன்றைக்கு சட்டக்கல்லூரியில் தேவர் சாதி மாணவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் ஆளுக்கு நான்கு கட்டுரைகளை எழுதுவதுடன் இவர்களது சாதிமறுப்பும் முடிந்து போகிறது.

அந்த கொடூர மாணவர்கள் நடத்தியது வெறும் தாக்குதலோ, கொலைவெறி மட்டுமேயன்று, சாதிமேலாண்மையை அழிக்கவே முடியாது என்ற அறைகூவல் தான். மாணவர்கள் இடையேயிலும் இத்தகைய சாதிவெறி அதுவும் சாதிவெறியால் கூனிக் குறுகிமேலெழுந்த அண்ணல் அம்பேத்கார் என்னும் மாமேதையின் பெயரிலான கல்லூரியில் இத்தகைய கொடுமை. இவையெல்லாம் வெறும் மாணவர்களுக்கிடையேயான சண்டை மாட்டும் தானா ? புறையோடிப்போன சாதித் திமிரால் சிலிர்த்த மயிரில் ஒன்று தான் அது. இன்னும் கோரப்பற்களும், கூரிய நகங்களும், ரத்தம் குடிக்கத் துடிக்கும் நாக்கும் கண்டு கொள்ளப்படமலேயே இருக்கிறது. ஆனால் முற்போக்காளர்களின் கண்களில் தெரிவதும் வெறும் உச்சிக் குடுமி மட்டும்தான்.

சாதிப்பெயரை வெளியே சொல்லி அதன் மூலம் பெருமை தேடுபவன் எவனாக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள். சாதிவெறியால் அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்தந்த சாதிசங்களிடம் அதற்குண்டான ஈட்டுத்தொகைகள் வசூலிக்கப்பட்டால் எவனாவது துணிந்து பேருந்தை கொளுத்துவானா ?

13 நவம்பர், 2008

இப்படி யாராவது குப்பைக் கொட்டி இருக்கிறார்களா ?

ரத்னேஷ் பாணிப் பதிவுகளில் இப்படியான தலைப்புகளைப் பார்த்திருப்பீர்கள், டாக்டர் ராஜசேகர் போல் பேச்சு வழக்கை தலைப்பாக வைப்பவர் அவர். பதிவின் தலைப்புகள் தான் வாசிப்பவரை முதலில் தூண்டுகிறது.

ரத்னேஷ் பாணி தலைப்பில் இங்கே ரத்னேஷ் பற்றித்தான் எழுதி இருக்கிறேன். வடநாட்டில் டெல்லி, மும்பை மற்றும் கல்கத்தாவைத் தவிர அனைத்து தலை நகரங்களும் பெயரளவுக்கு நகரங்கள் தான். நம் ஊர் கொட்டாம்பட்டியில் கிடைக்கும் வசதிகள் கூட அங்கே கிடைக்காது. நம் தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக இரவுப் பயணமாக எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் செல்லலாம், கடைசி பேருந்தை விட்டுவிட்டு விடியற்காலை முதல் பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை நம்ம ஊர் நகரங்களில் கண்டிப்பாக இல்லை. தமிழ்நாட்டை தாண்டிவிட்டாலே பொதுப் பேருந்துகளை நம்பி எந்த பயணமும் திட்டமிடாமல் செல்லவே முடியாது.

பதிவர் நண்பர் ரத்னேஷ் வேலைபார்க்கும் அஸ்ஸாம் கூட அப்படித்தானாம், பொதுவசதிகளான மின்சாரம், தொலைபேசி இணைய இணைப்பு அனைத்தையும் மாபெரும் மூன்று - நான்கு மாத தவத்திற்கு பிறகே பெறமுடியுமாம். அப்படி கிடைக்கும் இணைப்பும் மூடு இருந்தால் தான் வேலை செய்யுமாம், அஸ்ஸாம் குண்டுவெடிப்பிற்கு பிறகு தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லையாம். GPRS வழியான இணையத் தொடர்பும் கிடைக்கவில்லையாம். நாளைக்கு ஒரு பதிவாவது எழுதும் ரத்னேஷ் தற்போது எதுவும் எழுதினாலும் வெளி இடமுடியாமல் இருக்கிறார். எனக்கு ஒரு மெயில் அனுப்ப நீண்ட நாளாக முயற்சித்து ... இன்று தான் இணைப்பே கிடைத்ததாக மின் அஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் எழுதிய மின் அஞ்சலில்

"சொந்த உபயோகங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களிலோ கூட அலுவலகக் கணினி மூலம் தொடர்பு சாத்தியமில்லை. வீட்டில் இருந்து மட்டுமே இணைப்பு சாத்தியமாகி இருந்தது. கடந்த சில நாட்களாக என்னுடைய அலைபேசியில் அதுவும் பிரச்னையாகி விட்டது. ஏதோ கோளாறு. இங்கே சரிசெய்ய முடியாது என்று சொல்லி
விட்டார்கள். (ஏற்கெனவே, தொலைக்காட்சியின் பிரச்னைக்கு நான்குமாதங்களும், ரிமோட் பிரச்னைக்கு மூன்று மாதங்களும், வாஷிங் மெஷின் மோட்டார் பிரச்னைக்கு 19 மாதங்களும் எடுத்துக் கொண்டு அரைகுறையாக சரி செய்து தந்த ஊர் இது). ஒன்றரை வருடங்களுக்கு முன், கணினியில் ஏற்பட்டிருந்த பிரச்னையைச் சரிசெய்யக் கொடுக்க, 'சரி செய்து கொண்டிருக்கையில் அதன் HARD DISC புகைந்து விட்டது' என்று
கூசாமல் சொல்லி விட்டார்கள். அதில் நான் எழுதி வைத்திருந்த ஆறுவருட கால தமிழ்ப் படைப்புகள் அனைத்தும் காற்றாய் மறைந்து போனதை ஜீரணிக்க வேண்டி இருந்தது. 'இங்கே கோளாறாகி விடும் எதையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள்' என்பது புழங்கி வரும் அனுபவ அறிவுரை. 'இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பிராந்தியத்தில் பணிக்காலத்தை ஏன் இரண்டு அல்லது மூன்று வருடங்களாக மட்டுமே
வைத்திருக்கிறார்கள்?'; 'அதனையும் கட்டாய தண்டனைக் காலமாக எல்லோரும் கருதுவது ஏன்?' என்கிற கேள்விகளுக்கு அனுபவபூர்வமாக நான் கண்ட விடைகளில் சில மேலே சொல்லி இருப்பவை.

நவம்பர் 4 க்கு பிறகு இணைய இணைப்புகள் முற்றிலுமாக கிடைக்கவில்லை, தேவைப்படுபவர்களுக்கு எனது மின் அஞ்சல் முகவரியைக் கொடுங்கள்

என் மீது அன்பு காட்டிய எனக்கு ஊக்கம் ஊட்டிய அனைவரிடமிருந்தும் தற்காலிகமாக விடைபெற்றுக் கொள்கிறேன்"

*****

பொதுவான அடிப்படை வசதிகளுக்குக் கூட நாள் பட காத்திருந்து.....அதையெல்லாம் பார்க்கும் போது ஊரா அது ? ன்னு கேட்கத் தோன்றுகிறது. இன்னும் ஓராண்டுக்கு குறைவாகத்தான் ரத்னேஷ் அங்கு இருப்பார் என்றே நினைக்கிறேன். இடம் மாற்றம் பெற்றுக் கொண்டு வேறு மாநிலத்திற்குச் சென்றுவிடுவார். "ரத்னேஷ் அஸ்ஸாமில் இருந்து விரைவில் விடுபட வேண்டும்" என்று வாழ்த்துவோம். !

12 நவம்பர், 2008

அறிவியல் (என்ற) மதம் !

ஆன்மீக அபத்தங்களை மறுத்து துவம்சம் செயத்ததில் அறிவியல் துணை மிக முதன்மையானது. உலகம் தட்டை என்பதே பல மதங்களில் நம்பிக்கையாக இருந்தது அல்லவா ? எதையும் நிரூபணம் செய்யும் வகையில் இருந்தால் தான் புலன்களால் கட்டுண்ட மனித மனம் ஏற்றுக் கொள்ளும்.

கண்களால் காண்பது மட்டுமே மெய் என்ற கூற்று எவ்வளவு உண்மை ? நாம் எல்லோரும் மனிதர்கள் தான். விழி உள்ளவர்களையே எடுத்துக் கொள்வோம். எந்தக் குறையில்லாத இரு மனிதர்களுக்குமே பார்வைத் திறனில் சிறு வேறுபாடாவது இருக்கத்தான் செய்யும். ஒரு காட்சி ஒருவருக்கு ஒரு அளவாகவும் மற்றவருக்கு இன்னொரு அளவாகவும் கூடத் தெரிகிறது. எது உண்மை என்பதற்கு கருவிகளின் துணையைத்தான் நாட வேண்டும். ஆக நம் புலன்களின் திறன் என்பது எல்லைக் குட்பட்டது, வேறுபாடு உள்ளது. தற்பொழுதுதான் கண்ணுக்குத் தெரியாத ஒளி அலைகளை அளக்கும் கருவிகள் வந்திருக்கின்றன. ஆனாலும் கருவிகள் எதற்குமே திறன் எல்லைகள் உண்டு. நுண்ணோக்கியின் மூலம் 1 மைக்ரான் அளவுள்ள கிருமிகளைத்தான் கண்டறிய முடியும் என்ற நிலை இருக்கும் போது, 0.1 மைக்ரான் அளவு உள்ள இன்னொருவகை கிருமி இருக்கவே முடியாது என்று சொல்லிவிட முடியாது.

அறிவியல் என்பது பெளதீக பொருள்களின் தன்மை, இயக்கம், மாறுதல் ஆகியவற்றை அறிதல் பற்றிய படிநிலைகளின் வளர்ச்சி. அது மிக நுணுக்கங்களைக் கண்டறிவதிலும் விரைவாக பயணம் செய்வதில் வளர்ச்சியை நோக்கிப் பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனால் முழுமை பெற்றுவிட வில்லை, இலக்கு எது என்றே தெரியாததால் ஆன்மிகத் தேடல்கள் போலவே அறிவியலின் பயணம் என்றுமே முற்றுப்பெறாத பயணம்.

அறிவியல் தரவுகள் தான் எல்லாவற்றிற்கும் தேவை அதுதான் பகுத்தறிவு என்பவர்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அடுத்த ஆண்டில் ஒரு விஞ்ஞானி கடவுள் கோட்பாட்டை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி கடவுள் உண்டு என்று நிரூபணம் செய்தால் பகுத்தறிவாதிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா ? கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் கடவுள் இல்லை என்பது அவர்களின் கோட்பாடாக மாறி இறைமறுப்பு என்பது பெயரில்லாத மதமாக இருக்கிறது. தற்போதைய அறிவியல் துணை மூலம் புலனில் புலப்படாதது என்று ஒன்றுமே இல்லை, எனவே இறைவன் இல்லை என்று வாதிடுபவர்களாக இருப்பவர்கள், கடவுள் இருப்பை ஏற்பது அறிவியலே என்றாலும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். எனவே இறைவன் இருப்பை நிருபிப்பதற்கோ, ஏற்றுக் கொள்ளவைப்பதறோ அறிவியல் வழியான நிரூபணம் பயன்படாது என்றே நினைக்கிறேன்.

இறை ஏற்பாளர்களின் இறைவன் பற்றிய கட்டுமானங்களே இறை மறுப்பாளர்களுக்கும் மறுப்பிற்கான இலக்கு (முன்பே சொல்லி இருக்கிறேன்). இறைவன் உண்டு என்று நிரூபணம் செய்தால், இறைவன் இவை இவற்றையெல்லாம் ஏன் செய்யவில்லை என்ற அடுத்தக் கேள்வி நோக்கி சென்று, இறைவன் இருப்பின் ஒப்புதல் என்பதிலிருந்து இறைவனின் சக்தி அல்லது புனிதத் தன்மை பற்றிய கேள்விகளை நோக்கி இறை மறுப்பாளர்கள் நகர்வார்கள். காரணம் 'எல்லாம் அவன் செயல்' என்ற அபத்த வேதாந்தமே எல்லா மதங்களின் அடிநாதமாக இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்பதை ஆன்மிகவாதிகள் நம்பினாலும் எல்லாம் அவன் செயல் என்று மன அளவில் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிகழ்வுகள் எதுவுமே இல்லை. நமீதாவின் இடுப்பை ஆட்டுவதும் இறைவனா ?. அது ஒரு சித்தாந்தம் என்ற வகையில் நிறுத்திக் கொள்ளாமல்... ஆன்மிகவாதிகள் எல்லாம் இறை சக்தியின் திருவிளையாடல் என்று சொல்லிவிடுவதன் மூலம் இறை சக்திக்கு எதோ கைமாறு செய்துவிட்டதாகவே நினைத்து தவறுகிறார்கள். அப்படியே இறைவன் ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக காட்சி கொடுத்தாலும் எந்த மதத்தின் கடவுளாக வருவது என்று கடவுளுக்கே குழப்பம் வந்துவிடும். ஏனென்றால் அந்த மத கோட்பாடுபடி இறைவன் இல்லை என்றால் நம்பிக்கை இருக்காது.

தலைப்புக்குப் போவோம்,

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபணம் செய்ய முடியவில்லை அதனால் இருக்க முடியாது என்பதைவிட அறிவியலால் அவற்றை அறிய முடியவில்லை என்பதும், அறிவியலால் அவற்றை என்றுமே நிரூபணம் செய்ய முடியாது என்பதும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது ? அதாவது அறிவியலுக்கு அப்பாற்பட்டு அறிவியலால் என்றுமே கண்டுபிடிக்க முடியாத ஒரு சக்தி ஏன் இருக்க முடியாது ? அது ஏன் அப்படியெல்லாம் ஓளிந்து கொண்டு இருக்கவேண்டுமா ? :) நல்ல கேள்வி ! அன்பு பாசம் நேர்மை மற்றும் பல்வேறு நல்ல உணர்வுகள் அனைத்துமே உணர்வுகளாக மட்டுமே உணரப்படுபவை. இறை சக்தி இவை அனைத்தையும் எல்லையற்றதாக வைத்திருக்கும் ஒரு பெரிய சக்தி என்றே வைத்துக் கொள்ளுங்கள், அதாவது முற்றிலும் உணர்வு சார்ந்த ஒன்று, அதனை புலன்களை வைத்தோ, அறிவியல் கருவிகளை வைத்தோ கண்டுகொள்ளவே முடியாது என்ற ஒரு கூற்று உண்மையாகக் கூட இருக்கலாம்.

பல மதங்களில் அறிவியல் கோட்பாடுகளை மதக் கொள்கைகளுடன் தொடர்பு படுத்தி இரண்டுமே ஒன்றை ஒன்று நிருபிப்பதாக சொல்லி எங்கள் மதம் அறிவியல் கண்ட மதம் என்று சொல்வதைக் கேட்க நகைப்பாக இருக்கிறது.

அறிவியல் கூட நாளடைவில் ஒரு மதமாகவும் மாறி பழைய அறிவியல் கோட்பாடுகளைத் தாங்கிப் பிடிக்கும் அறிவியல் அடிப்படை பழமைவாதிகள் உருவாகலாம், ஏனென்றால் தீவிர நம்பிக்கைகள் தான் மதங்களாக மாறுகிறது. இதுவரையில் நம்பிக்கைகளின் கட்டுமானமும் அதன் வளர்ச்சியுமே மதங்களாக மாறி இருக்கிறது, அறிவியல் மட்டும் தான் உலக மக்களின் நம்பிக்கை எனவே அறிவியலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், அதை எந்த கெடுதலான ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவதும் தவறல்ல என்று அதற்கு முழு ஆதரவு தெரிவிப்பது அறிவியல் வழிபாடு தானே. இன்றைய அதிதீவிர அறிவியல் நம்பிக்கைகளை 'அறிவியல் மதம்' என்று சொன்னால் அதில் தவறு உண்டா ?

11 நவம்பர், 2008

இவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை ?

இஸ்லாம் மதத்தில் ஒரு வாசகம் 'உங்கள் உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டு இருக்கும்' என்பதே, இதே போன்று இந்து மதத்தில் 'உங்களுக்கு படி அளப்பவன் ஆண்டவன் தான்' என்று சொல்லி அதற்காக ஒரு கதையையும் சொல்லுவார்கள்.

சிவனை சோதிக்க பார்வதி தேவியார் ஒரு எறும்பை சிறிய டப்பாவில் அடைத்துவிட்டு,

"எம்பெருமானே...நீங்கள் இன்று அனைத்து உயிர்களுக்கு படி அளந்துவீட்டீர்களா ?" என்று கேட்பார்.

நெற்றிக்கண் சிவக்க (பெண்கள் கேள்விகேட்டாலே கோவத்தில் ஆண்களுக்கு கண் சிவந்துவிடுமோ ?)

"அதெல்லன்ன உனக்கு சந்தேகம் ?"

"சந்தேகம் இருக்கிறது.....இன்று நீங்கள் ஒரு ஜீவனுக்கு உணவு அளிக்கவில்லை"

மீண்டும் கோபமாகி "எப்படிச் சொல்கிறாய் ?" என்று கேட்டாராம் சிவன்

உடனே பார்வதி தேவியார் மறைத்து வைத்திருந்த டப்பாவைக் காட்டி

"இதில் உள்ள எறும்புக்கு நீங்கள் உணவு அளிக்கவில்லை" என்றார்

"திறந்து பார்ர்ர்ர்......." என்று கர்ஜித்தாராம்

பார்வதி திறந்து பார்க்க...எறும்பு இன்னும் சாகாமல் இருந்தது வியப்பு...அதைவிட வியப்பு அந்த எறும்பு ஒரு அரிசியைக் கவ்விக் கொண்டு டப்பாவினுள் சுற்றிவரும்

தன்னால் தானே சோதனை கொடுக்க முடியும், அதற்கான உரிமையும் தனக்குத்தானே இருக்கிறது, எனக்கே சோதனையா (சூப்பர் ஈகோ) என்று சினம் பொங்க பார்வதி தேவியை அனல் கக்கும் பார்வையால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கக் கடவது என்று சாபம் இட்டாராம். பக்திக் கதைகள் என்ற பெயரில் சிவனை ஆணாதிக்கவாதியாக கேவலப்படுத்தியதைத் தவிர வேறெதையும் இறையடியார்கள் செய்ததில்லை என்பதற்கு இது ஒரு காட்டுதான். இது போன்ற கதைகளிளெல்லாம் சிவனுக்கு பொசுக் பொசுக் கென்று கோபம் வந்துவிடும் (ஒரு வார்த்தை அவரிடம் சொல்லிவிட்டு கதை எழுதப்படாதா ?) , அந்தம்மா வேறு வழி இல்லாமல் ஒரு முனிவருக்கு மகளாக பிறந்து சிவனை நினைத்து உருகி, தவறுக்கு வருந்தி தவம் செய்து மீண்டும் கைலாயத்தை அடையுமாம். இதுபோன்ற கதைகளில் பார்வதி தேவியை புத்தி கெட்ட பெண்ணாக அதாவது திரும்ப திரும்ப தவறு செய்பவளாகவே காட்டி, அதை ஞாயப்படுத்த 'பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழியையும் வைத்திருப்பார்கள். இன்று அதற்கு பின்னவினத்துவம் விளக்கம் கொடுக்கிறோம் காரணம் பெண்கள் அமைப்பு. ஆனால் பார்வதி 'பெண் புத்தி பின் புத்தி' என்று வருந்துபவளாக திருவிளையாடல் படத்தில் ஏபிநாகராஜன் தட்சனுக்கு மகளாக பிறந்த காட்சியில் வசனமாக வைத்திருக்கிறார்.

இதுபோன்ற திருவிளையாடல் கதைகளை கதாகலேட்சபமாக சொல்லப்படுவதும் அதை மண்டையை ஆட்டிக் கொண்டு கேட்பவர்களும், கீழே சொல்லப்படுபவைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்து இருக்கிறார்களா ?

******

அரிசியில் பெயர் இருப்பதோ, படி அளப்பதோ....நான் ஆப்ரிக்க நாட்டு மக்களை நினைத்துப் பார்க்கையில் இவையெல்லாம் வெறும் தத்துவ / நம்பிக்கை அளவில் தானே சொல்லப்படுகிறது என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஆப்பிரிக்க தேசத்தில் பிறந்தவர்கள் எவருமே உயிரினமே இல்லையா ? அவர்களுக்கு பசி எடுக்காதா ? அவர்களுக்கான அரிசிகள் எங்கே ? இவர்களுக்கு பெயர் தான் இல்லையா ? தங்கக் கோபுரங்கள் கட்டக் கொடுக்கப்படும் நிதி இவர்களுக்கு கொடுக்கலாகாதா ?

மனித நேயத்தை மறந்த ஆன்மிகம் எந்த வகையில் மனித குலத்துக்கு பயன் தரும் ?

பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான்.

மனிதனுக்கு தன்னிச்சையாக சிந்திக்கும் ஆற்றல் இருப்பதால் அவன் 'தன் இச்சை' படியே நடக்க ஆரம்பித்துவிட்டான் என்றே நினைக்கத் தோன்றுகிறது, அதில் அவன் செய்யும் தவறுகளின் / கொடுமைகளின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீளவே...அனைத்தும் ஆண்டவன் செயல் என்கிற சப்பைக் கட்டும், வறியவர்களின் வறுமைகள் அவர்கள் செய்த பாவம் என்றும் தாங்கள் மட்டுமே ஆண்டவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.

மதங்கள் போற்றுவது மனிதநேயம் என்றால் அது இல்லாத மதங்களினால் என்ன பயன் ?

எல்லோர் பெயரும் அவர் அவர்களின் அரிசியில் எழுதப்பட்டு இருப்பது உண்மை எனில் பசியால் வாடும் ஏழைகளின் அரிசிகளை மூட்டை மூட்டையாக லவட்டியவர்கள் யார் ? லவட்டியவர்கள் அனைவருமே பகுத்தறிவாளார்களா ? எல்லோருக்கும் அரிசியைப் பெற்றுத் தந்துவிட்டு, அதன் பிறகு 'அரிசியில் பெயர் எழுதி இருக்கிறது, ஆண்டவன் படி அளக்கிறான்' என்றெல்லாம் சொன்னால் அவை மிகப் பொருத்தமான சொல்லாக இருக்கும்.

நாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...

மனிதர்களுக்கு மதம் சொல்லாவிடில் சொர்க்கம் / நரகம் பற்றி யாதொரு கனவும் வந்துவிடப் போவதில்லை. முன்பு எதோ ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன், புத்தகத்தின் பெயர் நினைவு இல்லை. நாய் தனக்கு கடவுள் இருப்பதாக நினைத்து நல்ல நாய்களுக்கு சொர்க்கம் கொடுப்பதாகவும், கெட்ட நாய்களுக்கு (அப்படி ஒரு நாய் இருக்கா ?) நரகமும் கொடுப்பதாக இருந்தால், நல்ல நாய் செல்லும் சொர்கத்தில் எலும்புத் துண்டுகளுக்கு பஞ்சமே இருக்காது, முடிவற்ற கார்த்திகை மாதங்களாகவே அதன் சொர்க்கம் நீடித்த சுகம் கொடுப்பவையாக இருக்கும், அது போல் நரகம் செல்லும் நாய்கள் முனிசிபல் காரர்களைப் போல் காக்கி யூனிபாரம் போட்டுக் கொண்டு இருப்பவரால் துறத்தி பிடித்து... கழுத்தில் இரும்புக் கம்பியை சுறுக்காகப் போட்டு தலையில் நச் நச் என்று அடித்துக் இழுத்துச் செல்வார், நாய்க்கு உயிர்போகும் வலி இருக்கும் ஆனால் நாய் சாகாது. இதுவே நாயின் சொர்க்கம் / நரகம் பற்றிய நாய் கடவுள் கோட்பாடாக இருக்கும்.

இதுபோல் ஆடு சொர்கம் செல்வதாக இருந்தால், வேலியே இல்லாத பரந்த வயல்வெளியில் பசுமையான பயிர்களின் நடுவில் தனக்கு மேய்ச்சல் கிடைக்கும், கடிக்க கடிக்க பயிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கும், நரகம் செல்லும் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டு பட்டினிப் போடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் என்று நினைப்பதும் ஞாயம் தானே

அதாவது உடல் சார்ந்த சுகமும், நாவின் சுவையுமே சொர்க்கத்தின் மகிழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது, இதற்காகவா ஆசைப்படுகிறார்கள் ? இவர்கள் மதத்தின் பெயரால் அடித்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் எரிச்சலை மீறிய வியப்பும் புன்னகையுமே மிஞ்சுகிறது.

இந்த மனித சொர்க்கக் கனவுகள் கூட மதத்திற்கு மதம் வேறுபடுவதும் வியப்பளிக்கிறது. இந்து மத சுவர்க்கம் கிட்டதட்ட இந்திர சபையைப் போலவே பெண்களால் இன்பம் கொடுப்பதாகச் சொல்லப்படுவது போலவே இஸ்லாம் / கிறித்துவ மதங்களிலும் அதையே சொல்கிறார்கள், எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. சொர்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் இந்திரனே பெண் பித்தனாகவும் எப்போதும் ரம்பை - ஊர்வசி - மேனகை (ஒரே முகங்களைப் பார்க்க அலுக்காதா ?) ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருப்பவனாகவே கதைகள் சொல்லப்படும் போது அதனை பின்பற்றும் இந்து மதத்தினரின் சொர்க்கக் கனவுகள் இதைத் தாண்டியும் இருக்குமா ? சொர்கத்தில் உறவு முறைகள் இருக்கிறதா ? இந்து மதத்தை பொருத்து அப்படி இல்லை.

இந்திரனுக்கு மகிழ்வு தரும் ரம்பை அங்கு தற்காலிகமாக செல்லும் அவன் மகன் அர்சுனனையும் 'அழைக்கவே' தந்தை தொட்டவளை தனயன் தொடுவதா ? என்ற பூமியில் வாழும் வாழ்க்கை கலாச்சாரம் ஒழுக்கம் தடுக்கவே, அவன் மறுத்துவிடுகிறான் (இத்தனைக்கும் பஞ்சபாண்டவர்கள் ஐவருமே...சரி அதுவேண்டாம்) , 'நாங்கள் வெறும் சேவாதாரிகள், இங்கு வருபவர்களை மகிழ்விக்க வேண்டியது எங்களது கடமை... எங்களை உறவுகளாக கற்பனை செய்து பார்க்கக் முடியாது (பால் உறவு இ(ய)ந்திர) பொம்மைகள்?), அது தெரியாமல் என்னை அவமதித்துவிட்டாய்...இந்த பிடி சாபத்தை...இன்று முதல் நீ பெண்ணாகக் கடவது ...என்று ரம்பை அர்ஜுனனை சபிக்க...அப்பவும் 'தாயே' என்னை மன்னித்துவிடுங்கள்...என்று கெஞ்சினானாம் அர்ஜுனன், மகனின் சாபம் தீர்க்கச் சொல்லி இந்திரனின் வேண்டுகோள் வைக்க... ரம்பை அதற்கு இணங்கி...சாபத்தில் தள்ளுபடி செய்து... கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது ஆனால் சாபம் பலிக்கும் ... நீ விரும்பும் போது ஓர் ஆண்டு பெண்ணாக ஆகுவாய்....என்று சொல்லப்பட்டதாம் (இந்திரன் மகன் என்பதால் சாபத்தில் சலுகை... இந்திரன் மகன் அர்ஜுனன் எப்படி சத்திரியன் ?)

அதன் பிறகு ஒருவருட அஞ்ஞாத வாசத்தில் மறைந்து வாழ வேண்டிய சூழலில் அர்ஜுனன் பிருகுநளை என்ற பெயரில் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்வான்...இவனை பெண் என்று நினைத்து மயங்கும் கீசகனை வதம் செய்வதாக மகாபாரத கதை நீளும்' அனைத்து மதங்களிலுமே சுவர்கம் என்பது காமத்துடன் தொடர்புடையது குறிப்பாக அளவற்ற பெண் சுகம் கண்டிப்பாக உண்டு என்பதே. அனைத்து மதங்களுமே பெண்களின் காம இச்சையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அப்படி காம சுகம் தேவையை வெளிப்படையாக சொன்னப் பெண்களையெல்லாம் 'அரக்கி'கள் ஆக்கிவிட்டனர். அரக்கிகள் பற்றிய 'லட்சனமாக' புராணங்கள் காட்டுவது என்னவென்றால் அரக்கிகள் கட்டற்ற காமசுகம் நாடுபவள் என்பதாகவே...உதாரணம் சூர்பனகை.

பெளத்தர், சமணர், சங்கரர் போன்ற சந்நியாசிகளின் மதக்கோட்பாடுகளில் இத்தகைய சொர்கம் கோட்பாடுகளில் சூனியவாதம், பரம்பிரம்மம் என்று சொல்லப்படுவதால் அதில் இந்த பெண் பித்துகள் சொல்லப்படுவதில்லை. அந்த கோட்பாடுகள் ஆன்மா, பேரான்மா என்ற தத்துவக் கோட்பாடுகளில் சென்றுவிடுவதால் உடல் சார்ந்த சுகமான காம இச்சைகளும் அது திகட்டாமல் கிடைப்பதே சுவர்க்கம் என்றெல்லாம் அவற்றில் சொல்வதில்லை. மாறாக கர்மா, மறுபிறப்பு என்று கொள்கைகளை வைத்திருக்கிறார்கள், செயலுக்கான எதிர்வினையும், நல்வினையும் இருந்தால் அதனை துய்க்க பிறவி எடுக்கவேண்டி இருக்கும், எந்த ஒரு பிறவியில் கர்மம் அற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போது பிரம்மத்துடன் கலந்துவிடுவார்கள், பிரம்மம் ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியுமாக இருக்கும், அதுவே சுவர்கம் என்கிறார்கள்.

சுவர்கம் மண்ணில் இல்லை என்பதே அனைத்து மதங்களின் கோட்பாடாக இருக்கிறது. இதுதவிர எங்களது கொள்கையே உண்மையானது, எங்களது இறைவனே உண்மையானவன் என்கிற அறைகூவலும், மற்றவர்களெல்லாம் பேய் பிசாசுகளை வணங்குபவர்கள், தீவரவாதிகளை உறுவாக்கும் மதம் என்றெல்லாம் தங்களுக்குள் தூற்றிக் கொள்கிறார்கள்.

மதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும். அதுதவிர்த்த கற்பனை சுவர்க்கத்துக்கு, (பிறரின்) வாழும் வாழ்க்கை அழித்துக் கொல்வதும், பிறரின் வழிபாட்டுத் தலங்களையெல்லாம் இடித்துவிட்டு ஆவியாகிப் போனால் என்ன சொர்க்கம் கிடைக்கும் என்றே தெரியவில்லை.

மதங்கள் மனிதர்களை இழுக்க அவர்களுக்கு தூண்டில் இரையாக பயன்படுத்துவது மனிதர்கள் நாட்டம் கொண்டுள்ள காமமும், பொருளாசையும் சுவர்கத்தில் அளவற்ற அளவாக கிடைப்பதாகச் சொல்வதுதான். பெண்ணாசையும், பொருளாசையும் மனிதனுக்கு என்னாளும் தேவையாக இருக்கிறது என்பதையே மதங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன.

இதெல்லாம் சுவர்க்கத்தில் கிடைக்காது என்று மதங்கள் சொல்லட்டுமே... பிறகு 90 விழுக்காடு மனிதர்கள் இறைமறுப்பாளர்கள் ஆகிவிடுவார்கள் :)

மீண்டும் முதல் பத்தியை வாசிக்கவும்.

10 நவம்பர், 2008

மிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல !

தத்துவ நூல்களை வாசிப்பென்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுயநலம் கூட எதாவது ஒரு கோட்பாட்டிற்குள்ளேயே அடங்கும் என்பதால் உலகின் அசைவுகள், செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவம் சார்ந்தவையே என்று என்னால் கூறமுடியும்.

அன்புத் தம்பி ஈப்போ விக்னேஷ்வரன் சிங்கை வருகையின் போது அன்புப் பரிசாக ஒரு நூலை கொடுத்தார். மற்றவர்களுக்கு கொடுத்ததைவிட அளவில் மாறுபட்டு இருந்ததைக் கூட நான் அதைப் பெரும் போது கவனிக்கவில்லை. பரிசு கிடைப்பதே பெருமகிழ்ச்சி என்ற நினைப்பு திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் குறைந்திருந்தது. மேலும் மேலே பரிசுத்தாள் சுற்றப்பட்டு இருந்ததால் வீட்டில் சென்று பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். பெரிய நிகழ்வாக இல்லாமல், நினைவு பரிசாக, பொதுவாக நாம் யாருக்காவது அன்பு பரிசு கொடுத்தால், நாம் அங்கிருக்கும் போதே... அவர்கள் அதைத் திறந்து பார்த்து எதாவது சொல்லவேண்டும் என்றே எதிர்ப் பார்ப்போம். மாறுபட்ட ஒரு நூலைக் கொடுக்கும் விக்கி அதே போன்று நினைத்திருப்பார் போலும், 'அண்ணே பிரிச்சு பார்த்திங்களா' ன்னு கேட்டார். சந்திப்பு கூட்டம் முடியட்டும் வீட்டில் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அதன் பிறகுதான் தெரிந்தது, இவ்வளவு ஆவலாக கேட்பவர், புத்தகத்தை நான் திறந்தாவது பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதே. வீட்டுக்கு திரும்பும் போது பிரித்துப் பார்த்தேன்.

"மிர்தாதின் புத்தகம்" - மூலம் மிகெய்ல் நெய்மி, தமிழில் புவியரசு என்றிருந்தது. அன்றும் இரவு 10 மணி அளவில் பதிவர் நண்பர்களுடன் இருந்ததால் படிக்க முடியவில்லை, மறுநாளும் அலைச்சல், விக்கியை வழியனுப்பும் போது மீண்டும் கேட்டார். புத்தகத்தைப் படிச்சிங்களா ? ... 'இல்லப்பா நேரம் கிடைக்கல' ..படிங்க உங்களுக்கு பிடிக்கலாம், என்று கூறிவிட்டு சிறு முன்விளக்கமும் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் தான் படித்தேன். பின் அட்டையில் ஓசோவின் குறிப்பாக

"உலகின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன, அவையாவும் இதற்கு ஈடாகாது, நைமி எல்லா நூற்றாண்டிற்கும் சேர்த்தே இவரே மாபெரும் எழுத்தாளர்"
- என்பதை வாசித்த போது, நல்ல படைப்பாக இருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இதைத் தமிழில் உருவாக்க எடுத்துக் கொண்ட நல்ல அனுபவ முன்னோட்டத்துடன், புத்தகத்தில் இருக்கும் நாவல் பகுதியின் சிறுகுறிப்புடன் புத்தகம் தொடர... அதன் உள்ளீடை நோக்கி பயணம் செய்தேன்.

ப்ளாட்டோ, சீசர் போன்ற தத்துவ ஞானிகள் மேலை நாடுகளில் தோன்றி இருந்தாலும், இஸ்லாம் / கிறித்துவ மதங்களில் தத்துவங்கள் என்பதைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் இவ்விரு மதங்களில் வரும் நோவாவின் வரலாற்றைத் தொடர்பு படுத்தி முழுக்க முழுக்க தத்துவமாகவே எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நாயகன் 'மிர்தாத்'தின் ஒவ்வொரு உரையாடல் வரிகளும் தேர்ந்தெடுத்த சொற்களான தத்துவங்கள், அவை அறிவுரையா, பேருண்மையா என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னி எழுதப்பட்டு இருக்கிறது.

"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான், கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"

நிழல்கள் அற்றது ஒளிதானே, மனிதனின் நிழல் என்று ஆசிரியர் சொல்வது மனிதனை மூடி இருக்கும் மனத்திரைகளைத்தான்.

"மனிதன் பற்றுகின்ற பொருள்களெல்லாம் அவனை பற்றிப் பிடித்துக் கொள்ளும் பற்றுவதை விட்டுவிட்டாலே பற்றுறற்று போகும்"

(பற்றுக பற்றற்றான் பற்றினை - என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது)

எதை நாம் மிகவும் விரும்புகிறோமோ, அது கிடைக்காமல் போகும் போதும், நம் கைவிட்டு நழுவிச் செல்லும் போது சொல்ல முடியாத சோகத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடும்

"அன்பே வாழ்வின் சாறு, வெறுப்பே மரணத்தின் சீழ், ஆனால் இரத்தம் நரம்புகள் வழியாக தடையற்று பாய்வது போல், அன்பு உடலெங்கும் பாயவேண்டும், இரத்தம் தடைபட்டால் நோய்தான் வரும், வெறுப்பு என்பது தடைபட்ட அன்புதான்...அன்பில் அதிகம் குறைவெல்லாம் கிடையாது, அதை அளக்க முயற்சித்தாலே அது நழுவி சென்றுவிடும்"

நூல் பேசுவது இன்னும் ஏராளம் ஏராளம்...மரணம், பிறப்பு, மறுபிறப்பு...விபத்துகள், அதற்கான காரணங்கள், புலனடக்கம், நாவடக்கம், பேராசை, பற்று அறுத்தல், பிரபஞ்ச சுழற்சி, கடவுள், ஆதாம் ஆப்பிள்...ஆன்மிகம் தொடர்பில் அனைத்தையும் பேசுகிறது.

முப்பரிமாணங்களை ஒருங்கே அமைந்த நூலாகத்தான் இதனை உணர்ந்தேன். அதாவது நாவல் என்று படித்தால் நாவல், தத்துவம் என்று படித்தால் பகவத் கீதையைப் போல் சிறிய அளவிளான தத்துவ நூல், உளவியல் என்று பார்த்தாலும் முழுக்க உளவியல் என்பதாக உணரப்படும் ஒரே நூல். ஒப்பீடு அளவில் சுவாமி விவேகாநந்தரின் ஞானயோகம் போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை வெகு இயல்பான உரையாடல்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.


கதைப்படி நோவா வழி வரும் ஒரு மடலாயத்தின் 8 துறவிகளுக்கு தலைவராகும் மிர்தாதின், ஆன்மா மற்றும் உடல் வாழ்க்கை பற்றிய முழு அறிவை போதனை செய்கிறார், அவரை மதிக்காத முன்னாள் மடாலயத் தலைவரான 8 ஆம் துறவி பின்னர் தவறை உணர்ந்து கொள்ள, 8 ஆம் துறவியைத் தேடிப் போகும் ஒருவர் மூலம் அந்த அறிவுரைகள் வெளி உலகத்துக்கும் தெரியவருகிறது.


இந்நூலை விமர்சனம் செய்வது எளிதல்ல, பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி என தத்துவம் மற்றும் முற்போக்கு, ஆன்மிகம் என எதாவது ஒன்று பேசப்படுக்கிறது, பெருக்கெடுத்த ஆற்றின் நீரை கையளவு நுரையுடன் அள்ளிக் காட்டி இதுதான் அந்த ஆறு என்று சொல்ல முனையும் அளவுக்குத்தான் என்னால் அது பற்றி சொல்ல முடிகிறது.

கவிஞர் புவியரசுவின் மொழிப்பெயர்ப்பு சிக்கல் இருப்பதை அவரே ஒப்புக் கொண்டாலும் நல்ல நேர்த்தியாகவே மொழிப் பெயர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மொழிப்பெயர்ப்பே இப்படி என்றால் மூல நூலை அதன் மூல மொழியிலேயே படித்தால் அதன் கருத்தாழம் இன்னும் மிகுதியாக இருக்குமோ என்று நினைக்க வைத்திருக்கிறார்.புத்தகம் கிடைக்கும் இடம்:
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை
சென்னை 017
தொலைபேசி எண் ; +91 44 2433 2682

இந்நூலை நினைவு பரிசாக எனக்கு வழங்கிய பதிவர் விக்னேஷ்வரன் மற்றும், நூலை பரிந்துரைத்த திரு ஜவகர் ஆகிய இருவருக்கும் நன்றி

தொடர்புடைய மற்றொரு சுட்டி : The Book of Mirdad - துக்ளக் மகேஷ்

9 நவம்பர், 2008

ஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து !

வயது வந்தவர்களின் பாலியல் இச்சை என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பு, அவர்கள் ஒருபால் விருப்பம் உடையவர்களாக இருப்பது மனநோய் என்றெல்லாம் சொல்ல முடியாது, முன்பெல்லாம் அப்படி வலியுறுத்த முயன்றார்கள் அதன் பிறகு அவை தவறான அனுமானம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. அவற்றை மதரீதியாக பார்த்து கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை. ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக மதக்கருத்துக்களைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.

தன்பால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாதவர்கள் அந்த வழியிலேயே செல்வது அவர்களின் விருப்பம் என்றாலும் அவர்கள் 'திருமணம்' செய்து கொள்வதும், அதற்கு சட்ட அங்கீகாரம் கேட்பதும் கேலிக் கூத்துதான். திருமணம் என்ற அமைப்பே சமூகம் தொடர்புடையது, ஆண் / பெண் இருபாலார் திருமணம் செய்து கொள்ளும் போது அவை ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலப் பயனாக சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள், திருமண பந்தம் அவர்களுடைய கடமைகளை வரையறுக்கிறது. மேலும் சட்டப்பாதுகாப்புக் கிடைக்கிறது. இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் பிரியும் போது வாழ்வுதவி (ஜீவனாம்சம்) கிடைக்க சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இவையே திருமணம் என்னும் சடங்கின் வழி ஆண்/பெண் இருபாலரும் அடையும் நன்மை. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திருமணம் என்னும் சடங்கை சமூக அங்கீகாரமாக நினைக்கும் ஓரினபுணர்சியாளர்கள் அவை தங்களுக்கும் கொடுக்கப் பட வேண்டும் என்பது ஏற்கத் தக்கது அல்ல.

ஆண் / பெண் இருபாலரும் மணந்து கொள்வதும் கூட முதல் காரணம் பாலியல் தேவையை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் ஒரு ஒழுக்க நடவடிக்கை, அதற்கு பெற்றோர் முதல் சமூகத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும், அந்த திருமணத்தின் வழி பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது மட்டுமின்றி அதன் பயனாக உலகத்தை உயிரோட்டத்துடன் சுழற்ற வாரிசுகளை பெற்றுத் தருகிறார்கள். இவையெல்லாம் ஓரினபாலினரின் திருமணத்தால் ஏற்பட்டுவிடுமா ?

யாருடைய அங்கீகாரமும் தேவையின்றியே ஓரின பால் விரும்பிகளின் விருப்பப்படி அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்க முடியும். அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இவர்களும் அதை அனுமதிக்கவோ, சகித்துக் கொள்ளவோ மாட்டார்கள், பிறகு ஏன் இவர்கள் திருமணத்தை நாடவேண்டும் என்று தெரியவில்லை. விளங்கவில்லை. ஒருவேளை இவர்களுக்குள் சொத்து முதல் காப்பீடுகள் வரை பகிர்ந்துக் கொள்ளப்படும், அல்லது ஒருவரின் இறப்பிற்கு பிறகு மற்றவர்களுக்கு கிடைக்க ஓரின திருமணம் வழங்கினாலும், திருமணம் என்ற சடங்கே இல்லாமல் ஒருவர் தன் சொத்துக்களை காப்பிடுகளை விரும்பியவர்களுக்கு எழுதி வைக்க முடியும். அதற்காக திருமணம் செய்து கொள்வதெல்லாம் டூ.........மச். இத்தகைய திருமணங்கள் சமூகத்தை, தன்னைப் பெற்றவர்களின் செயலையெல்லாம் பழிப்பது போன்றதே.

ஆண் / பெண் திருமணம் செய்து கொள்ளும் போது உறவு முறைகள் கிடைக்கிறது,ஓரு ஆணும் ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோர்கள், தங்கள் மகன் மணம் முடித்துக் கொண்ட ஆடவனை மருமகன் என்றுச் சொல்லிக் கொள்வார்களா ? பெற்றோர்கள் இவர்களின் இச்சைகளை இயற்கை / இயற்கைக்கு மாற்றானது என்ற புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொண்டாலும், இவர்களின் பெற்றோர்களாலேயே புதிய ஒரு உறவாகவே மதிக்காத இவர்களின் திருமணத்தினால் இவர்களுக்கும் பயன்கிடையாது.

*******

மேலை நாடுகளில் ஒத்தப்பாலின ஈர்ப்பில் நட்பு என்ற ஒன்று இருப்பதே அறியாதவர்களாக இருந்து அவற்றை பாலின தேவையுடன் தொடர்பு படுத்தி ஒருபாலின் நட்பு என்பதே ஓரின சேர்க்கையாகவே புரிந்து கொள்ளப்படுகிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது. நம் இந்தியா போன்ற நாடுகளில் மிக நெருங்கிய நண்பர்கள் கைகோர்த்து நடப்பதும், ஒரே படுக்கையில் படுப்பதெல்லாம் இயல்பு. ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்களாக இருப்பவர்களின் நெருக்கம் ஒரே சிகெரெட்டை இருவரும் புகைப்பது முதல் பலவற்றில் அவர்களின் அன்பின் ஆழம் இருக்கும். மேலை நாடுகளில் இதுபோல் இரு ஆண்கள் நெருக்கமாக இருந்தால் அவர்கள் ஓரின ஈர்பில், ஓரின புணர்ச்சியாளர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்களிடம் இருக்கும் குறையாக நினைப்பது என்னவென்றால், நல்ல நட்பிலும் ஒத்த பாலினரிடம் நெருக்கமாக இருக்க முடியும் என்று அவர்கள் அறிந்ததில்லை.

****

ஓரின புணர்ச்சியாளார்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் இணையர்களின் நம்பிக்கை எதிராக இருக்கமாட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இவர்களின் மனதை வசப்படுத்தும் இன்னொரு கவர்சியான ஆடவன் கிடைத்தால் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை எல்லாம் உடனடியாகவே தொலைந்துவிடும். மேலை நாடுகளில் ஆண்கழிவரைகளில் சில ஆண்கள் மணிக்கணக்காக சிறுநீர் கழிப்பது போல் நின்று கொண்டு வரும் போகும் ஆண்களின் ஆண்குறிகளை வெறித்துப் பார்ப்பார்கள், பார்க்கப்படும் ஆண்கள் இவர்களை பார்த்துவிட்டால் சிரிப்பார்கள், பதிலுக்கு சிரிப்பவர்களை தன்னைப் போன்றவர் என்று அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இவர்களின் ஓர்பாலின விருப்பம் ஒரே ஆணுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. பிறகு ஏன் திருமணம் என்கிற சடங்கெல்லாம் இவர்களுக்கு தேவைப்படுகிறது ?

திருமணம் செய்து கொள்ளும் ஆண்பெண் இருவரும் ஓரின புணர்ச்சியாளர்களைப் போலவே வேறொருவரை நாடுவதில்லையா ? நாடுவார்கள். அது அவர்களின் தனிமனித ஒழுங்கீனம், அப்படி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

********

மனநோய் இல்லை என்றாலும் சுயநலம் என்பதின் உச்சம் தான் ஓரின பால் தொடர்பு, அதாவது தான் விரும்பிய வாழ்கையை மட்டுமே வாழ்வது. அதையேன் சுயநலம் என்று சொல்கிறேன் ? பாலியல் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்வு முறையையே மாற்றி சமூகத்துக்கு பயனளிக்காமல் வாழ்வது சுயநலமின்றி வேறென்ன ? அவர்களால் பிறருக்கு கெடுதல் இல்லை என்றாலும் இவை முழுக்க முழுக்க பாலியல் தேவையை மட்டுமே சார்ந்து, அதன் பிடிப்பில் மையத்தில் வாழ்வதாக மட்டுமே இருக்கிறது.

நட்பையும், பாலியல் தேவையையும் ஒன்றாக குழப்பிக் கொள்வது இவர்களின் குறையாக தெரிகிறது. இந்த ஓரின பாலினருக்கு (அதில் நாட்டமில்லாத) நல்ல நெருங்கிய அதே பாலின நண்பர்(கள்) இருப்பார்களா என்பதும் சந்தேகமே, அப்படி இருந்தாலும் அந்த ஓர் பாலின நாட்டமில்லா நண்பர்கள் இவர்களிடம் (ஓர் பால் ஈர்பாளர்களிடம்) எச்சரிக்கையாகத்தான் நடந்து கொள்வார்.

முடிவாக, ஒரு பாலின ஈர்ப்பு, ஒர் இனக் கவர்ச்சி என்ற எந்த பெயரில் சொன்னாலும் ஓரின சேர்க்கையை முற்றிலும் தவறு, மனநோய் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதெலலம் கேலிக் கூத்துதான். அதன் தேவை இல்லாமலே, எந்தவித சமூக அங்கீகாரமும் இல்லாமல் இவர்களால் அதைத் தொடரமுடியும். ஆண்பெண் இருபாலருக்கான சமூகம் ஆக்கி இருக்கும் திருமணம் என்கிற சடங்கை இவர்களும் செய்து கொள்வோம் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என்கருத்து.

தொடர்புடைய சுட்டி : ஓரின கலப்பு திருமணம் (Gay Marriage)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்