பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2014

மதம் மாறிய மொழி !

மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள். 

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.  துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே. 

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான்  (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால்,  உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.


ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான  தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.

பின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.

இணைப்பு : 

http://en.wikipedia.org/wiki/Ramcharitmanas
http://en.wikipedia.org/wiki/Hindi

Turkey the birthplace of Hindi, English: study

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்