பின்பற்றுபவர்கள்

தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 அக்டோபர், 2011

தீவாளி !

தீபாவளி என்று எழுத்துக் குறையாமல் (அக்ஷ்ரம் சுத்தமாக..ம்பா) சொல்லிப் பழகி இருக்கவில்லை, நாங்கள் சிறுவயதில் பெற்றோர்களைப் பார்த்து தீவாளி இன்னும் 40 நாளில் 30 நாளில் 20 நாளில் 10 நாளில் வருது என்று நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருப்போம், காரணம் புத்தாடை, பட்டாசு கொஞ்சம் காசு கிடைக்கும், அப்பா வாங்கிவரும் பட்டாசுகளை வயதுக்கேற்ற வகைகளை பங்குபிரித்து தீவாளிக்கு முதல் நாள் இரவில் துவங்கும் வெடிச்சத்தம் மறுநாள் நடு இரவு வரைத் தொடரும், வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி எடுத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து அவற்றின் மருந்துகளை ஒன்றாகக் கொட்டி பத்தவைத்துவிடுவோம், பல தடவை திடிரென்று பற்றிக் கொண்டு கைகளை ஓரளவுக்கு வேகை வைத்திருக்கிறது என்றாலும் அந்த பயமின்றி அதே வேலை மறு ஆண்டுகளிலும் தொடரும்.

முதல் நாள் பின்னிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, முகம் கழுவச் சொல்லி, பல் விளக்கச் சொல்லி சாமி அறைக்கு அழைத்துச் சென்று நிற்கவைப்பார்கள், அதற்கு முன்பே புத்தாடைகளுக்கு சந்தனமும், குங்கமும் இட்டு வைத்து, நல்லெண்ணை, சீயக்காய் வைத்து கொஞ்சம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிடச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் அப்பாதான் தலையில் எண்ணை வைத்து தேய்த்துவிடுவார், தீவாளி லேசான குளிர்காலம் ஆகையால் வெதுவெதுப்பான வெண்ணீர் சுடவைத்து அண்டாவில் கலக்கி வைத்திருப்பார்கள், எண்ணைப் போக சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்.

அம்மா உள்ளிட்ட அனைவரும் குளித்த பின்பு, புத்தாடைகளை அணிந்து, விடிய விடிய செய்த அன்றைய பலகாரங்களான சுழியம், மசால்வடை, மெதுவடை, இட்லி, தோசை ஆகியவற்றுடன் முன்பே செய்த முறுக்கு, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, அதிரசம், சோமாசா உள்ளிட்டவைகளுடன் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து சாமி அறையில் வைத்து படைத்துவிட்டு சூடம் கொளுத்தியதும் கும்பிட்டுவிட்டு, அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் ஆசியுடன் சேர்ந்தே கிடைக்கும், பிறகு அனைவரையும் வரிசையில் அமரச் செய்து உணவு உண்போம், அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களும் சில்லரைகள் மற்றும் பலகாரங்களைக் கொடுப்பார்கள், எண்ணைப் பலகாரங்களைத் தின்று தின்று மதியம் பசியே எடுக்காது.

பின்னர் நண்பர்கள் (10 - 15 வயது) புடைசூழ திரையரங்கிற்குச் செல்வோம், மதியம் சென்றால் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைக்கும், மூன்று மணி நேரம் அடுத்தக் காட்சிக்காக நீள் வரிசையில் நின்றால் தான் அதுவும் கிட்டும், படம் பார்க்க வரும் கிட்டதட்ட 90 விழுக்காட்டினர் புத்தாடை அணிந்திருப்பர். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எஞ்சிய வெடிகளில் கொஞ்சம் கார்திகை மாத சொக்கப்பானையுடன் வெடிக்க எடுத்து வைத்துவிட்டு மீதத்தை கொளுத்துவோம், அப்படியாக ஆண்டு ஆண்டுக்கு தீபாவளி செல்லும். சின்ன வயசில உடம்புல அறுவாள் மனையா இருக்கும் ? ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஆடையும் கிழியாமல் இருந்ததில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு சிறியதாகிவிட்டது என்று பயன்படுத்தாமல் விடுப்பதைத் தவிர்த்து எந்த ஆடைகளும் கிழிவதே இல்லை. பள்ளிச் சீருடைத் தவிர்த்து புத்தாடை வாங்கும் பழக்கம் ஏழ்மையான குடும்பங்களுக்கு தீபாவளி அன்று தான் வாய்ப்பே. அப்படித்தான் எங்களுக்கு புத்தாடை கிடைக்கும் என்பதால் தீபாவளி வருகிறதென்றால் மகிழ்ச்சி பொங்கும்.

*****

இன்றும் பழக்க வழக்கங்களாக பண்டிகைகள் தொடரத்தான் செய்கின்றன, இன்றைய தேதிகளில் ஆடை வியாபரங்கள் உள்ளிட்ட தீபாவளி வியாபரங்கள் பெருகி இருக்கும் அளவுக்கு கொண்டாட்டங்கள் பெருகி இருக்கவில்லை என்பதே உண்மை. ஆண்கள் வெள்ளைக்காரன் பேண்டுக்கு மாறிவிட்டு பெண்களை மட்டும் இந்திய ஆடைகளை அணிய பணிக்கிறார்கள், பண்பாடுகளை பெண்கள் மூலம் தான் காக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது, ஆனால் புடவைகள் மற்றும் பஞ்சாபி சல்வார் உடைகளில் இன்றைய வடிவமைப்பு மற்றும் அதன் விலைகளை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் இன்னும் ஆடைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்க ஆண்களின் கட்டுப்பாடு காரணம் அல்ல, அவற்றின் விலைகளும் அவற்றின் பகட்டுமே காரணம் என்று புரிந்தது, 25 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடைவுக்கு கிடைக்கும் மதிப்பு என்ன தான் நவீன நவநாகரக விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தாலும் கிடைப்பதில்லை என்பதால் தான் பெண்கள் இன்னமும் புடவைக்கும் சல்வாருக்கும் விடைச் சொல்லாமல் இருக்கிறார்கள் என்பது தீபாவளி துணிச்சந்தைகளை வைத்து தெரிந்து கொண்டேன்.

பட்டாசுகளுக்கு மவுசு குறைந்துள்ளதை சென்னையில் என்னால் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது, பெரிய அளவு கூட்டமில்லை, விலைகளும் விண்முட்டும் அளவுக்கு இருந்தது, பட்டாசுகளைப் புறக்கணிப்பது நல்லது தான். 'சின்ன சின்ன பிஞ்சு விரல்களாய் தீப்பெட்டிக்குள் தூங்குகிறது தீக்குச்சிகள்' என்று சிறுவர்களை வேலை வாங்கும் தீப்பெட்டித் தொழில் பற்றிய கவிதையை எப்போதோ படித்திருக்கிறேன்,

குழந்தைகளுக்கு தேவையான உடைமைகளை அவ்வப்போது வாங்குவதால் தீபாவளிக்கு வாங்குவது என்பதில் எந்த தனிச்சிறப்போ அவர்களுக்கு எதிர்பார்ப்போ எதுவும் இல்லை, அது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது அவ்வளவே.

இன்றைய தீபாவளிகள் தீவாளி அல்ல, இன்றைய தீபாவெளிகள் பணப்புழக்கம் ஏற்படுத்த மட்டுமே வழி செய்கிறது, துணி உள்ளிட்ட சந்தைகளின் விற்பனையைப் பெருக்குகிறது. அனால் முந்தைய தீவாளிகளில் கொண்டாட்டங்களும் இருந்தன. பண்டிகைகளை மறந்துவிட்டால் பண்பாட்டை தொலைத்துவிடுவோம் என்கிற அச்சத்தில் தான் தீபாவளிகள் ஒப்பேறி வருகின்றன. சிங்கையில் தீபாவளிக்கு விடுமுறை என்பது இங்குள்ள இந்துக்களுக்கு கிடைத்த வரம் தான். சிங்கையில் குட்டி இந்தியா பகுதிகள் களைகட்டி இருக்கும்.

இராவணனைக் கொன்றது தான் தீபாவளி என்று வட இந்தியாவிலும், நரகாசூரனை கிருஷ்ணன் அழித்தான் என தென்னிந்திய தீபாவளி கதைகளின் நதிமூல ரிஷி மூலங்கள் எதுவாக இருந்தாலும் மக்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளைக் கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்,

5 நவம்பர், 2010

குட்டிப் பையனின் முதல் தீபாவளி !

எங்க வீட்டு தீபாவளியின் கொண்டாட்டமே எங்க குட்டிப் பையன் சிவசெங்கதிர் தான், இன்னிக்கு காலையில் அடம் பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தான். குளிச்சிட்டு, புத்தாடை அணிந்து, மத்தாப்பும் கொளுத்தியாச்சு. அனைவருக்கும், இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.





(மகள் போட்ட மாக்கோலம்)

21 அக்டோபர், 2008

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ?

தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, கிருஷ்ணனின் மகனான நரகா அசுரனை அவன் மனைவி பூமாதேவி அழித்தாள் என்றும் இறக்கும் தருவாயில் மனம் மாறியவன் கொடியவன் ஒருவன் அழிந்தான் என்று நினைத்து அந்த நாளை மகிழ்வு கொண்ட்டாட்மாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான் என்றும் அதனால் தீபாவளிக் கொண்டாடப்படுவதாக தென் இந்திய சமய நம்பிக்கையில் சொல்லப்படும் ஒரு கதை.

தென் இந்தியாவில் தான் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்த கதை சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் இராவணன் அழிந்த பிறகு தசராவிற்கு பிறகு கொண்டாடப் படுவதாகவும், இரவணன் இறப்பைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. பல்வேறு தேவித் திருக்கதைகளில் ஒவ்வொரு தேவியரும் எந்தந்த அரக்கர்களை அழித்தார்கள் என்று சொல்லி, தசரா பண்டிகை கொண்டாடப்படும் போதும் அசுரர் கதைகள் சொல்லப்படுகிறது.

பசு நெய்க்கு மாற்றாக ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் போதிப் பண்டிகைதான் போகிப் பண்டிகையாக பெயர் மாற்றப்பட்டது என்றும் போகி குறித்து மற்றொரு கதையும் சொல்லுவார்கள்.

சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

*****

மதங்களே இல்லாத கால கட்டங்களில் ஐம் பூதவழிபாடுகள் இந்தியாவெங்கிலும் இருந்திருக்கிறது. ஆரியர்கள் அக்னியை வழிபட்டார்கள் என்றும், திராவிடர்களும் தீயை வழிபட்டு இருக்கிறார்கள் என்பதை 'வேள்வி' என்னும் தூய தமிழ்ச்சொல் சங்ககாலம் முற்பட்டே புழக்கத்தில் இருப்பதை வைத்து அறிய முடிகிறது. (தீ > தீபம் > தீபாவளி - தீப ஆவளி அதாவது தீபங்களின் வரிசை என தமிழ் சொல்லுக்கும் தீபாவளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது) ஆரியர் திராவிட வேறுபாடு இன்றி தீபாவளி என்பது பொதுவாகக் கொண்டாடிய ஒரு பண்டிகையாகத் தான் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். சமண மதம் உருவாகியபோது சமணர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு மகாவீரர் முக்தி நாளை காரணமாக்கிக் கொண்டார்கள், பவுத்தர்கள் ஆமணக்கு எண்ணையை காரணமாக்கிக் கொண்டார்கள். ஆரியர்கள் இராமயணக் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென் இந்தியாவில் நரகாசுரன் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென்னிந்தியாவில் இந்த வலிந்த காரணம் கூட சைவம் வைணவம் பரவத் தொடங்கிய போதுதான் காரணமாக்கப்பட்டு இருக்க வேண்டும், அதற்குமுன் வேறு காரணம் இருந்திருக்க வேண்டும்.

*********

இப்போது மற்றவற்றைப் சற்று பார்ப்போம், இந்திய சமய தத்துவங்கள் அனைத்தும் ஆரியர்களுடையது அதனால் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததாகச் சொல்லப்பட்டக் காலத்தில் அவர்களிடம் உருவ வழிபாடு என்று எதுவும் கிடையாது, இந்திரன் என்னும் அரசன் தவிர்த்து ஆரிய வேதங்களில் உருவ வழிபாட்டைப் போற்றியதாகக் தெரியவில்லை. ப்ரம்ம தத்துவமே, பரப் பிரம்மே உயர்ந்தது என்று கூறும் ஆரிய வேள்வி வழிபாட்டு வழியில் உருவவழிபாடு என்பது மிகவும் கீழான வழிபாடு. இந்திய தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டது என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவை அனைத்தும் ஆரியர்களுடையது என்று கூறும் திராவிட(வரட்டு) வாதம் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.

இன்றைக்கும் ஒரிஜினல் ஆரியர்கள் என்று பார்த்தால் இந்தியாவெங்கும் 5 விழுக்காட்டுக்கும் குறைவே, இவர்கள் திராவிடர்களை அழித்தார்கள், திராவிடர்களைத்தான் அசுரர், அரக்கன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், மேலும் அவர்களால் அழிக்கப்பட்டோம் என்று அறிந்தே நம் அதைக் கொண்டாலாமா ? என்றும் கேட்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ?

ஆரியர்கள் திராவிடர்களை அரக்கர் அசுரன் என்று சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஆரிய பெண்கள் போராடி அசுரர்களை அழித்தார்கள் என்று சொன்னால் அது அபத்ததிலும் அபத்தம் தானே. நரகாசுரன் என்பவன் ஆண், அவனை அழித்தாகச் சொல்லப்படுவது பெண் தெய்வம் பூமாதேவி. எந்த காலத்தில் ஆரிய பெண்கள் போர் படையை நடத்திச் சென்றார்கள் ? அது எந்த வேதத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது ? தசரா பண்டிகையின் போதும் பெண் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனை, அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அசுரன், அரக்கன் என்று சொல்வதையெல்லாம் திராவிடர்களைத் தான் என்று சொல்வதை நிராகரிக்கிறேன். அசுரர்களும், இராமயணத்தில் சொல்லப்பட்ட இராவணனும் திராவிடன், தமிழன் என்று நம்பினீர்கள் என்றால் இலங்கைக்கு நடுவே இன்றும் இராமர் பாலம் இருப்பதாக திரிக்கும் கதைகளைக் கூட நிராகரிக்க முடியாது என்பது ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை ?

தீபாவளிக் கொண்டாட்டத்திற்குச் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதும் ஒரு கதைதான். அதை ஆழமாக ஆராய்ந்தது போல் ஆரிய - திராவிட போர் என்றும் திராவிடர்களை வெற்றிக் கொண்ட நாள் தீபாவளி, அதனால் தீபாவளியைக் கொண்டாடுவதை மானமுள்ள தமிழன் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் மிதமிஞ்சிய உணர்வு பூர்வ உரைகளையெல்லாம் நிராகரிக்கிறேன்.

மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி என்று நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை. தமிழர்களும் இந்தியாவில் ஒரு அங்கம் தானே.
இணைந்து, இசைந்து இந்திய சமயத்தினராக இருப்பவர்கள் தானே. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்னைப் பொருத்து தவறே அல்ல. கதைகள் பிடிக்காதவர்கள் கதைகளை நிராகரிக்கலாம். எல்லாமே பார்பன சூழ்ச்சி என்று சொல்லி இந்திய சமய பண்பாடுகளை அனைத்தையும் நிராகரிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

******

வாழ்வில் இருள் சூழ்ந்துள்ள ஈழத் தமிழ்மக்களுக்கும், மன இருள் சூழ்ந்து உள்ளோர்க்கும் இந்த தீபாவளியில் வெளிச்சம் கிடைக்கட்டும் !

அனைருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

7 நவம்பர், 2007

சிங்கப்பூர் தீபாவளி சந்தையில் ரஜினி - 'ச்சும்மா அதிருதில்லே'
















பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், அவர்தம் இல்லத்தினருக்கும், குழந்தைகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கோவி.கண்ணன்

24 அக்டோபர், 2007

தீப ஆவலி - மற்றும் பெரியார் !

தீபம் அல்லது தீப என்ற வடசொல்லின் மூலம் 'தீ' என்ற தனித்தமிழ் சொல். அதாவது தீ > தீப என்று வடமொழியாகி மீண்டும் தமிழ்படுத்த தீபம் என்று திரிந்து வந்திருக்கிறது. விளக்குத் திருவிழா என்பது ஆசீய நாடுகள் அனைத்திலுமே கொண்டாடுகிறார்கள். பசுநெய் விளக்குக்கு மாற்றாக சமணத் துறவிகளால் ஆமணக்கு எண்ணை கண்டுபிடிக்கப்பட்டதன் அடையாளமாக தீபத் திருவிழா தொடங்கியதாக அயோத்திதாசர் தம் ஆராய்ச்சி வழி சொல்லி இருக்கிறார். அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர் மலையாக இருந்ததாகவும் சமண பள்ளிகள் மிக்கவையாக இருந்த இடம் என்று இன்றும் அறியப்படுகிறது. திருவண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்வு (வைபவம்) சமண முனிகளால் தொடங்கப்பட்டதாகவும், சமணம் நலிந்தபிறகு அது கார்த்திகை தீபம் என்னும் இந்து பண்டிகையாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொங்கலுக்கு முன்பு வரும் போகிப் பண்டிகை என்பது பெளத்தர்கள் கொண்டாடிய போதி சாத்துவர் நினைவாக கொண்டாடிய போதி பண்டிகையாம். ஏற்றுக் கொள்ளுதல் மறுத்தல் தாண்டி இதை ஒரு கருத்து என்ற அளவில் தான் கொள்கிறேன். தீபாவளி சமண / பவுத்த சமயங்களுக்கும் தொடர்புடையதாகவே இருக்கிறது.

தற்போதைய தீபாவளியை எடுத்துக் கொள்வோம், தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பழைய கதை (புராண) வேறு வேறாக இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் எப்பொழுதுமே சூரன், அசுரன் கதைகள் மிகவும் அறியப்பட்டவை ( பிரபலம்). முருகன் முதல் ஐயப்பன் வரை எதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூரனை பிளந்து இருப்பார்கள். அதனால் தென்னிந்தியாவில் சூரனை வைத்து...தீபாவளிக்கான கதை நரகாசூரனை மையப்படுத்தி உள்ளது ( நரன் - என்றால் மனிதன் + அசூரன் - சூராபானம் குடிக்காதவன்; அதர்வண வேத விளக்கப்படி சுரர் என்றால் சுராபானம் என்ற பானத்தை குடிப்பவர்கள், அசுரர்கள் அதற்கு மாற்றானவர்கள் அல்லது அது கிடைக்கப் பெறாதவர்கள், கிறித்துவ தேவலயங்களில் அப்பம் கிடைக்காத கிறித்துவரல்லாதவர்கள் போன்றவர்கள், சுராபானம் குடிக்காத மனிதனே அசுரன் எனப்பட்டன் ) . நரகாசூரனை கிருஷ்ணனின் மனைவி கொன்ற நிகழ்ச்சியின் வெற்றியாக தீபாவளி வந்ததாம். ஆனால் வட இந்தியாவில் சூரன் கதைகள் அதிகமாக இருந்ததில்லை. மிகவும் பேசப்பட்டது மகாபாரதமும், இராமயணமும் தான். எனவே இராமயணத்தில் இராமணால் இராவனன் வதம் செய்யப்பட்டதன் நினைவாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். வட இந்தியர்களைப் பொருத்தவரையில் இராவண வதமே தீபாவளி ( இராவண்ண - மனிதர்கள் மனதில் உள்ள இரவின் வண்ணமான கருமை நீங்கி விடியல் தோன்றியதற்காக - என்று சொன்னால் தத்துவ விளக்கமாக இருக்கும்)

தீபாவளி என்ற சொல்லை வைத்துப் பார்க்கும் போது ஒளி ஏற்றும் நாள் அதாவது துன்பம் என்னும் இருளில் இருந்து நீங்கி மகிழ்ச்சி பொங்கவைக்க ஓவ்வொருவரும் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கென ஒரு அடையாள பண்டிகையாக தீபாவளி தோன்றி இருக்கிறது என்று சொன்னால் பொருத்தமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

*********

பெரியார் எவ்வளவோ சொல்லியும் தீபாவளி கொண்டாட்டங்களையும், கதைகளையும் அழிக்க முடியவில்லை என்று சில பற்றாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள், எதிர்பாளர்கள் கொக்கறிக்கிறார்கள். நல்லது. தீபாவளி என்பது அடிமைத் திருவிழா அல்ல. அதைக் கொண்டாடுபவர்கள் அதனால் நட்டம் அடைந்தது போல் தெரியவில்லை. கூலி வேலை செய்பவருக்கும் அவரது முதலாளி வேட்டி / புடவை எடுத்துக் கொடுத்து மகிழவைக்கிறார். ஏழைக்கு இதெல்லாம் இலவசமாக கிடைக்கும் போது தீபாவளியை எப்படி துறப்பார்கள் ? அதுபோல் நடுத்தரவர்கம், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி என்றாலே ஊக்க தொகை ( போனஸ்) கிடைப்பது தான் நினைவு வரும். பின்பு எப்படி அவர்கள் தீபாவளியை மறப்பார்கள் ? வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகுகிறது. தீபாவளி மறக்கப்படாமல் இருப்பதற்கு இதெல்லாம் காரணமேயன்றி இராவண வதமா ? இல்லை நரகாசூர வதமா ? என்றெல்லாம் ஆராய்சியில் இவர்கள் யாரும் செல்வது இல்லை. யார் யாரை வதம் செய்தார்கள் என்ற கேள்விக்கெல்லாம் வியாபாரிகளுக்கோ, ஏழைகளுக்கோ எதுவும் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வழக்கமான கொண்டாட்டங்கள் எதுவும் பாதிப்படையப் போவதில்லை. எனவே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டுவதற்கு பெரியாரின் பேச்சு எடுபடவில்லை என்று சொன்னால் அதுசரியல்ல.. திபாவளிக்கான காரணங்களை தெரிந்துதான் திபாவளி கொண்டாடுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அது ஒரு பண்டிகை வரவும், மகிழ்ச்சியும் இருக்கிறது அவ்வளவுதான்.

பொதுவாகவே பெரியாரிசம், மார்கிசம் போன்ற முற்போக்கு கொள்கை எல்லாம் தேவைமிக்கதன் (அத்யாவசிய) காரணமாகவே எழுகிறது அல்லது தோன்றுகிறது என்றும் சொல்லலாம். அதன்பிறகு கொள்கை தாக்கம் என்பது எப்போதும் ஓரளவு மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கில் அதன் வீரியத்துக்கான தேவை இல்லாது போகும் காரணம் அவை பழைய தாழ்வு நிலை உயர்ந்து சமச்சீரடைய உதவுமேயன்றி ஒரேடியாக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடாது. சீனப்புரட்சியில் நடந்த தலைகீழ் மாற்றம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பெரியாரின் தேவை தற்பொழுது கூட தேவையாகத்தான் இருக்கிறது ஆனால் அதே அளவு வீரியத்திற்கு தற்பொழுது காரணங்கள் குறைந்து போய் இருக்கிறது. காரணம் பெரியாரின் தாக்கம் ஏற்கனவே ஓரளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை சமச்சீர் செய்து வெற்றி பெற்றுவிட்டது.


இது போல் பெரியார் எதிர்ப்பு குழு (கோஷ்டி) பெரியாருக்கு பிறகு கோவில்களும், அங்கு வரும் கூட்டம் பெருகிவிட்டதாகவும், பெரியார் கொள்கை நீர்த்துப் போய்விட்டதாகவும் வலிய வலியுருத்து கொக்கறிக்கிறார்கள். ஏன் பெருகிவிட்டது ? காரணத்தை ஆராய்ந்தால் முன்பு கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெரும்பாண்மை சமூகமான தலித் பெருங்குடிமக்கள் இன்று கோவிலுக்குள் உள்ளே சென்று வழிபடும் நிலைக்கு வந்து, வழிபாட்டு உரிமையுடன் சென்றுவருகிறார்கள். அதனால் கோவில்களில் கூட்டம் மிக்கவையாக உள்ளது. அவர்களின் வருகையே புதிய சிறிய கோவில்களின் தேவையாகவும் உள்ளது. அவர்களை கோவிலுக்குள் அனுப்பியது, உரிமையை பெற்றுத்தர அதற்காக போராடி வெற்றிகண்டுள்ளது... எல்லாமே பெரியாரின் அவர் கொள்கையின் வெற்றிதானே ?

தீபாவளி கொண்டாட்டங்களினால் எல்லோருக்கும் மகிழ்வென்றால் புராணங்களை மறந்துவிட்டு கொண்டாடுவதில் தவறே இல்லை.




அன்புடன்,

கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்