
நவீன இந்து மதம் என்பது பண்டைய ஆரிய மதத்தின் இன்றைய பெயர் வடிவம். வடமொழி இந்தி வடிவமாக மறைந்திருப்பதைப் போலவே ஆரிய வைதீகம் மதம் இந்து மதம் என்ற பெயரில் மறைந்திருக்கிறது என்பதை அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வழியாக நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்திக்கும் இந்து மதத்திற்கும் அதனால் ஏற்படும் சீர்கேட்டிற்கும் சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. பிற மக்கள் இனங்களை ஒப்பிடும் போது சிறிய அளவிலான மக்கள் தொகை என்றாலும் குயுக்தி அல்லது பஞ்ச தந்திரம் என்பதை அறிவுத்திறனாக கூறிக் கொண்டு ஆளுமைகளைத் தொடர்ந்துவருவதால் அண்ணா யூதர்களையும் பார்பனர்களையும் ஒன்றாகவே பார்த்தார். இன்றும் கூட யூதர்கள் மீது பார்பனர்கள் பலர் பெருமை கொள்வதை பார்க்கலாம். இன்னும் சில பார்பனர்கள் தாங்கள் ஆரியர் எனப்படும் ஹிட்லர் வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதாகவும் பறை சாற்றிக் கொள்கின்றனர். ஏனென்றால் யூதர் மற்றும் செருமானியர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதால் இந்த இரு இனங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றாலும் பார்பனர்களைப் பொருத்த அளவில் இருவரும் பார்பனர்களுக்கு மாமா மச்சான்கள் தான்.
தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரைச் சொல்லாமலோ 'திராவிடம்' என்கிற பெயரைச் சொல்லாமலோ எந்த ஒரு கட்சியும் இன்னும் ஓர் நூற்றாண்டுக்குக் கூட தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலைதான். இந்த இருவர் மீதும் பார்பனர்கள் காண்டு கொண்டிருப்பதற்கு இதற்குமேல் தனிப் பெரும் காரணம் எதுவும் இருக்க முடியாது. பார்பன நலம் விரும்பும் கட்சி எனப்படும் காங்கிரசு கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியதால், பார்பன எதிர்ப்பில் (திராவிட) ஆட்சி அமைத்ததால் பார்பனர்களின் வெறுப்பு அண்ணா மற்றும் பெரியார் மீது தொடர்வதில் வியப்பே இல்லை. மத அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை பிரிக்க இந்து என்ற சொல் மிகவும் வசதியாக இருப்பதால் மதவாத அரசியல் நடத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று பாஜக போன்ற மதவாதக் கட்சிகள் நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை கைப்பெற்றும் நிலைக்குச் சென்று, விழித்துக் கொண்டோர்களின் சகிப்புத்தன்மையால் மீண்டும் இந்தியாவில் காங்கிரசு ஆட்சி என்னும் பேரவலமும் நடந்தேறிவருகிறது என்றாலும் அறுதிப் பெரும்பான்மையை மக்கள் காங்கிரசு வசம் தந்துவிட வில்லை என்பதால் இந்தப் பேய்களில் எந்தப் பேயால் ஆபத்துக் குறைவு என்கிற முடிவாகத்தான் இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்தியாவில் இந்து மதம் சார்ந்த கட்சிகள் வளர்வதற்கு இந்துக்கள் மதவாதிகள் ஆனார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் இஸ்லாமியர்களின் மத ஈடுபாடு , ஊடகங்களின் இந்து சார்பு நிலைகள் அந்தக்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. இந்தியா என்ற நாடு மத அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்தது என்னும் போது எஞ்சி இருப்போரின் மத உணர்வுகள் தாம் இந்து என்ற உணர்வை அவர்கள் பெறவதையும் பிரிந்தவர்கள் மறைமுகமாக அதை விதைத்துச் சென்றிருக்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. இவைதான் இந்தியாவில் மதம் சார்ந்த சக்திகள் தலை எடுப்பதற்கு காரணம். இதைத் தவிர்த்து இந்தியர்கள் மதங்களின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, எல்லாம் சூழலால் ஏற்படும் (எதிர்) வினையே. பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியா என்று சொல்லப்படுவதைப் போலவே பல்வேறு சமய நம்பிக்கைகளை இந்து மதம் என்று சொல்கிறோம் என்பது தவிர்த்து பார்பன இந்து சமய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கை என்பது வெறும் பரப்பல் தான். உண்மையில் சொல்லப் போனால் பார்பன நான்கு வேதங்களில் காணப்படும் நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாம் என்றோ சிதைந்து போய்விட்டன. நிலம் சார்ந்த தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்து புராணம் எழுதி அவற்றை வேதகால தெய்வங்களாகக் காட்டி பார்பனர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர். பார்பனர்களின் முழுமுதல் கடவுளான இந்திரன், சோமன் உள்ளிட்டோர் என்றைக்கோ முதன்மை வழிபாட்டில் இருந்து மறைந்துவிட்டார்கள். நிலம் சார்ந்த தெய்வங்கள், சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவற்றைத்தான் பார்பனர்களும் ஆராதனை செய்துவருகின்றனர்.
பெரியார், அண்ணா இராமனை பழிப்பதைவிட பல மடங்கு இந்திரன் புராணங்களில் பழிக்கப்பட்டு இருகின்றான், உடலெங்கும் பெண் குறி பெறக் கடவது என்பதாக சபிக்கப்பட்டு இருக்கிறான். இந்திரன் ஒரு காம வெறியன் என்பதாகவே புராணங்களில் வழியாக பழிக்கப்பட்டு இருக்கின்றான்.

தமிழ் ஹிந்து கட்டுரைக்கு வரிக்கு வரி மறுப்பு எழுத நான் திராவிடக் கட்சிகளின் தீவிர தொண்டனும் இல்லை. பார்பன ஆதிக்கத்தை ஒழித்தவர்கள், மூட நம்பிக்கைகளை சாடியவர்கள் என்பதால் அண்ணா மற்றும் பெரியார் மீது எனக்கு ஆழ்ந்த பற்றுதல்கள் உண்டு. பெரியாரைப் போல் முற்றிலும் இறைமறுப்புக் கொள்கை என்பதாக இல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே தாக்கியவர் அண்ணா என்பதை நான் அவரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒண்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிற திருமந்திர வரியை அண்ணாவும் பரப்பினார்.

அண்ணா என்ன செய்தார் ? பார்பன தமிழ் இந்துக்கள் பார்பனர்களின் ஒருவரான ஜெயலலிதாவே நன்கு சொல்லி இருக்கிறார்.
கருணாநிதி போல் சொல்ல வேண்டுமென்றால் 'அண்ணா பல்கலைகழகம், அண்ணா சாலை, அண்ணா விமான நிலையம், அண்ணா பொது நூலகம், அண்ணா நகர் என தமிழக எங்கெங்கும் இருக்கும் அண்ணாவின் பெயரை ஒரு கேவலமான திரிப்பு கட்டுரைமூலம் கெடுத்துவிட முடியும், அகற்றிவிட முடியும் என்று நினைக்கும் சிறுமதியர்களின் செயலைக் கண்டு நாமெல்லாம் நகைக்கலாம்'