பேரங்காடி ஒன்றின் பின் ஒன்றாக பணம் செலுத்தி பொருள்கள் பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்ட இடத்தில் (Payment Counters) முன்பு நின்றவர் முதலில் இருக்கும் இடத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு மூட்டைக் கட்டுகிறார் என்பதாக நினைத்து நான் அவரைத் தாண்டி அடுத்த இடத்தில் பணம் செலுத்தப் போனேன். பிறகு தான் தெரிந்தது எனக்கு முன்னால் இருந்தவரும் வரிசையில் இருந்தவர் தான் என்பது. ' மன்னிக்கவும் நீங்கள் பொருள் வாங்கிவிட்டீர்கள் என்பதாக நினைத்து முன்னே வந்துவிட்டேன், நீங்க முன்னால் போங்க' என்றேன், நான் கையில் வைத்திருந்தது ஒரே ஒரு பொருள் தான் என்பதாலோ அல்லது அவரின் இயல்பான குணத்தினாலோ சிரித்தபடி 'பரவாயில்லை......நீங்க வாங்கிட்டு போங்க' என்றார், பதிலுக்கு திரும்பவம் நானும் சிரித்துக் கொண்டே 'தவறு நிகழ்ந்துவிட்டது நீங்க போங்க' என்று சொல்ல அவரும் மறுபடியும் சிரித்து கொண்டு 'பரவாயில்லை' என்றார். நான் வாங்கிவிட்டு வந்துவிட்டேன்.

உலகத்தில் 600+ கோடியினர் இருந்தாலும் அதில் நமக்கு தெரிந்தவர் ஒரு 1000 (0.00000016 %) பேர் என்று வைத்துக் கொண்டாலும் கூட நாம் பழக, பேச இவர்கள் மட்டும், இவர்கள் மட்டுமே தான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அதிலும் கூட நமக்கு நெருக்கமானவர் நூறோ இருநூறோ தான். இந்த 1000 தவிர மற்றவர்களை நாம் சந்திக்க நேரிட்டால் கூட அந்த சந்திப்பு எதிர்பாராவிதமானது மற்றும் ஒரே ஒரு முறைதான், அதன் பிறகு நம் வாழ்க்கையில் அவர்கள் வரப் போவதே இல்லை, ஆனால் அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும் ? அதனால் பயன் ஏதும் இல்லை. நன்கு தெரிந்தவர்களிடையே கூட தவறுக்கான மன்னிப்பு என்பது அவரவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரையில் மட்டுமே. நமக்கு தெரிந்த அந்த 1000 பேர்களில் சிலரிடத்தில் அன்பு செலுத்த முயற்சிக்காமல் கசப்பை தொடர்ந்தால், நாமும் ஒரு மனிதனாக பிறந்ததற்காக உலக மக்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று எண்ணுவது வெறும் எண்ணம் தான் செயலில் ஒன்றும் கிடையாது.
பொறுமை என்பதை இளிச்சவாய்த்தனம் என்பதாக பலர் கற்பிதம் செய்தும் கொள்கிறார்கள். 'நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. எந்த ஒரு நிகழ்விற்கும் நாம் காரணம் ஆகவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நம் எண்ணத்தில் தான் உள்ளது.