பின்பற்றுபவர்கள்

21 மே, 2008

சென்னை சந்திப்பு சுவையார்வ தகவல்களுடன் சற்றுவிரிவாக.....

மே 18 ஆம் தேதி மாலை 5.10க்கு நான் எனது நண்பரின் காரில் சென்னை மெரீனா கடற்கரையை அடைந்த போது....காந்தி சிலைக்கு சற்று தொலைவில் கானா உலகநாதனின் நேரடியாக கலந்து கொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு கடற்கரை முகாம் நடந்து கொண்டிருந்தது...அதன் அருகில் காரை நிறுத்தினோம். பிறகு காந்தி சிலை நோக்கி வந்தோம்... பாலபாரதியும் லக்கி லுக்கும் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தனர்....அருகில் சென்றதும்....பாசப்பிணைப்பில் கட்டித்தழுவிக் கொள்ள....மெதுவாகக் கேட்டேன்......'என்னய்யா ? மொகமெல்லாம் வெளிறி இருக்கு ....?' 'அண்ணே.... அங்கப்பாருங்கண்ணே போலிஸ் குவிஞ்சு இருக்கு.....நம்மளத்தான் போட்டுத்தள்ள வந்திருங்காங்கப் போல இருக்கு...ஆனா எப்ப அவங்களோட டிரஸ்சை கழட்டுவாங்கன்னு தெரியல'....என்றார். 'அவங்க எதுக்கு டிரஸ்சை கழட்டனும் நம்மைத்தானே கழட்டுவாங்க ...?' வியப்புடன் கேட்டேன். அண்ணே அங்கப்பாருங்க எல்லாம் டிராபிக் போலிஸ் அந்த டிரஸ்ஸில் என்கவுண்டர் பண்ண முடியாதில்லே ? என்றார்....'உனக்கு லொள்ளாப்போச்சுய்யா...' - என்றேன். ஆமாம்...! முதல் நாள் லக்கிப்பதிவில் பின்னூட்டமாக வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொள்பவர்களை போலிஸ் என் கவுண்டரில் சுடப்போவதாக எச்சரிக்கை வந்ததாம். யாரோ கிரைம் ப்ராஞ்சில் வேலைப்பார்க்கும் நல்லுள்ளம் தான் அந்த தகவல் அனுப்பி இருக்கவேண்டும். அடப்பாவிகளா குருவி விமர்சனம் மோசமாக இருந்ததை போட்டுத் தாக்கி எழுதியது தவிர்த்து ஒரு குருவிக்கூட துரோகம் நினச்சதில்லையே.... நமக்கு என்கவுண்டரா ? இது எதோ வெளிநாட்டு சதியாக இருக்கும் மறந்துடுவோம்....என்று சொல்லிவிட்டு காந்தி சிலை அருகில் வந்தோம்....'தல இந்தவாரம் எல்லோரும் ஊருக்கு போய்டாங்க.....அனேகமாக நாம 3 பேர்தான் சந்திப்பு நடத்துவோம் போல இருக்கு.....டோண்டு சார் வந்தால் தான் கே ஆர் அதியமான் வருவாராம்...என்று லக்கி சொல்லிவிட்டு.... போனில் அவர் பெயர் குறிப்பிடாமல் வாழ்த்துச் சொன்னதாக பதிவில் எழுதிடுவோம் என்றார் லக்கி.....அதன் பிறகு லிவிங் ஸ்மைல் வரப்போகும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். நீண்ட நாளாக நான் ஆவலுடன் சந்திக்க நினைத்திருந்தவர்களில் அவரும் ஒருவர் என்பதால் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சந்திப்புக்கு எங்கள் மூவரைத்தவிர்த்து முதலில் வந்தவர் முரளிகண்ணன். அவரவர் (பரஸ்பரம்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே லிவிங் ஸ்மைல் வந்தார். லிவிங் ஸ்மைலை நானும் புன்னகையால் வரவேற்று அவரருகில் அமர்ந்து கொண்டேன்....அன்பாக என்னைப்பற்றி குடும்பம், வேலை எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொண்டார். எங்கள் ஊர் நாகப்பட்டினத்திற்கு வந்திருக்கிறேன் என்றார். ஒரு விழிப்புணர்வு திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றுகிறாராம். ஒரு சமூக போராளியாக இருந்தாலும்...அதற்குரிய எந்த முகபாவமும் இல்லாதாது மிக இயலபாக நம் வீட்டில் இருக்கும் ஒரு தங்கையைப் போலவே இருந்தார்.

அடுத்து நமது இராமகி ஐயா வந்தார்.....அவர் எழுத்துக்களை வாசித்து தான், நான் தூய தமிழில் எழுதுவதற்கான ஆர்வம் கொண்டிருந்தேன் என்பதால்....ஒரு ஆசானை நேரில் சந்தித்த மகிழ்ச்சிகிடைத்தது. அதன் பிறகு டாக்டர் புரூனோ வர, பின்னர் கேஆர் அதியமானும்... அவரைத்தொடர்ந்த சற்றும் எதிர்பாராவிதமாக திரு டோண்டு இராகவனும் வந்தார்கள். திரு டோண்டு இராகவனுக்கு பலரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இவர்தான் கோவி.கண்ணன் என்று பாலபாரதி சொல்ல முகமலர்ச்சியுடன் கட்டியணைத்து நட்பு பாராட்டினார் திரு டோண்டு. 'உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறேன்' என்றார்.

பின்னர் கேஆர் அதியமான் என்னிடம் நேரில் பார்பதற்கு இளமையாக இருக்கீறீர்கள் என்றார். பின்னர் ஜோதிடம் பற்றி பேசினார். எனது பிறந்தநாள் பற்றிக் கேட்டார். சொல்ல அவருக்கு வியப்பு. அவருக்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள், ஆனால் என்னைவிட ஒருவயது சிறியவர். எனது சாதகத்தில் இருந்த கட்டங்களையெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தேன். உங்க சாதப்படி எதோ ஒரு மகாயோக ( புதன்?) படி நான் வெளிநாடு சென்றதாகவும். அது இல்லாதாவர்களுக்கு வாய்ப்புகிடைக்காது என்றார். அந்த காலத்தில் கைதிகளாக பலர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே விடப்பட்டனர். ஆஸ்திரேலியாவே கைதிகளால் உருவாயிற்று...அவர்களுக்கு அந்த யோகமெல்லாம் இருந்திருக்கலாம் ?என்றேன். இருக்கலாம் என்றார். நன்கு அறிமுகமான நண்பரைப் போன்ற உணர்வில் அவருடன் சில மொக்கைகளை போட்டுக் கொண்டிருக்கும் போதே தருமி ஐயா வந்தார். அவரை சென்னையில் சந்திக்க முடியாவிட்டாலும் மதுரை சென்றாவது சந்திக்க நினைத்திருந்தேன். அவர் சென்னையில் இருப்பதை முன்பே தெரிவித்திருந்தார். ஆனாலும் சந்திப்புக்கு வருவார் என்று நினைத்திருக்கவில்லை. அவர் வந்ததும் இராமகி ஐயா வந்ததைப் போலவே இன்ப அதிர்ச்சிதான்

அதன்பிறகு ஜ்யோவ்ராம் சுந்தர்...வளர்மதி ஆகியோர் வந்தார்கள். சற்றும் புரியாதமாதிரி எழுதினாலும் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியவர்களே என்று நேரில் பார்க்கும் போது புரிந்தது. வளர்மதி சிறுவயதுக் காரர். ஜ்யோவ்ராம் சுந்தர் சற்று வயதுக்கு மீறிய தோற்றத்தில் இருந்தார். நேற்றியில் பெரிய குங்குமம் பொட்டு வைத்தால் பக்திப்பழமாக தெரிவது போன்ற தோற்றம். மிகவும் கலகலப்பான மனிதர். இவரும் வளர்மதியும் டிபிசிடிக்கு நண்பர்கள்.

டாக்டர் ப்ரூனோ பார்பதற்கு படு ஸ்மார்ட்...அடுத்து மருத்துவ வேடம் போடப்போகும் நடிகர்கள் இவரை 'இமிடேட்' செய்யலாம். அந்த அளவுக்கு தொழில் சார்ந்த தோற்றம் நடவடிக்கை பொறுமை தெரிந்த்தது. டாக்டர் ப்ரூனோ டோண்டுவிடம் எதோ சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு டோண்டு சமீபத்தில் 1926ல் ஜெர்மனியில் என்று எதோ ஒரு சமீபகதையை சொல்ல...நேரில் சமீபகதை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அதைப்பற்றி டோண்டு அவர் பதிவில் எழுதி இருக்கிறார். நையாண்டி நைனா என்ற எனது பதிவர் நண்பர் டாக்டர் ப்ரூனோவை விசார்த்ததாக சொல்லச் சொன்னதை அவரிடம் சொன்னேன். அதற்கு டோண்டு 'நையாண்டி நைனா' என்ற பதிவர் நிசமாகவே இருக்காரா ? என்று கேட்டார். ஆமாம் இருக்கார்.... எனக்கு நண்பர் தான் என்றேன். 'அப்படியா நான் சும்மா கி.அ.அ.அ அனானி போல சும்மா பின்னூட்டத்துக்காக போட்டுக் கொள்ளும் பெயர் போல நினைத்துவிட்டேன்' என்று கி.அ.அ.அ அனானி ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார். 'நீங்க எதும் தப்பா எடுத்தகலையே...உங்களிடம் எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை' என்றார். 'உங்களிடமும் எனக்கு எதும் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்க எழுதுறிங்க..வெற என்ன விரோதம் இருக்க முடியும் ?' என்றேன். இல்லே ...'உங்களுக்கு பின்னூட்டம் போட்டால் சிலர் என்னை கலாய்கிறாங்க' என்றார். 'உங்க பதிவில் பின்னூட்டத்தில் வராத கலாய்பா...நாங்கெளெல்லாம் பெருசா எடுக்குறோமா ?' லூசில் விடுங்க என்றேன்.

மற்றொமொரு சுந்தர் இன்னும் ஒரு பதிவர் ஆகியோருடன் உரையாடினேன். இடையில் அனைவருக்கும் நா வரட்சி ஏற்பட குளிர்ந்த மினரல் பாட்டில் தண்ணீரை வாங்கிவந்து கொடுத்தேன். பிறகு சிங்கையில் இருந்தே தயாராக வாங்கிவைத்த சாக்லேட்டுகளை கொடுத்தேன். பிறகு விடைபெறும் நேரம். டோண்டு 'எனது கார்' வந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லும் போது என்னைப் பார்த்து 'எனது' என்பதை சற்று அழுத்தம் கொடுத்துச் சொல்லிவிட்டு விடைப்பெற்றார். எனக்கும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்தின் நேரம் நெருங்கவே சுமார் 8 மணி அளவில் விடைபெற்றேன்.

பாலபாரதியும் லக்கியும் நிகழ்ச்சி முடியும் வரை சற்று டென்சனாகவே இருந்தார்கள். லக்கி அடிக்கடி கழண்டு விழும் டவுசரை இறுக்கி பிடித்தபடி நின்றார். போலிஸ் பயமா என்று தெரியவில்லை. போலிஸ் டவுசரை கழட்டுவதற்கு வசதியாக பெல்ட் அணியாமல் வந்திருந்தார். :) இடையே இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து நிகழ்ச்சியை பற்றி புகைப்படமும் நேருமுகமும் எடுத்தார்கள். உமா கண்ணன் என்ற இளம் பெண் நிருபர் பேட்டி எடுத்தார். லக்கி பாலபாரதி எனக்கு முன்னமே அறிமுகமானவர்கள் மேலும் நெருங்கியவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு நன்றி சொல்வது கூட அவர்களிடம் என்னை தொலைவாக நினைக்க வைத்துவிடும் என்பதால் தவிர்கிறேன். மற்றபடி சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் சந்தித்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வந்திருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் பல புதியவர்களுடன் சந்திப்போம்.

புகைப்படங்களும் பதிவர்களும்:
தீவிர கலந்துரையாடல்கள்

18 மே, 2008

சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்...

17 மே காலை 11 மணிக்கு சென்னையில் தரை இறங்கினேன், இறங்கியவுடன் சூரிய பகவானின் அரவணைப்பில் (வியர்வையால்) உருகிப்போனேன். அன்றுமுழுவதுமே வெளியில் சென்ற இடங்களிலெல்லாம் அனல் காற்று...கத்திரி வையிலாம்...28 ஆம் தேதி வரை இருக்குமாம்.

மே 18 மாலை ஆறுமணிக்கு பதிவர் சந்திப்புக்கு நண்பர்கள் பாலபாரதியும், லக்கிலுக்கும் அறிவிப்பு விட்டதைத் தொடர்ந்து, சென்னை சென்றதும் நான் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் படி எனது நண்பரின் 'சொந்த' காரை எடுத்துக் கொண்டு மாலை 5 மணி அளவில் மெரீனா கடற்கரையை அடைந்தோம்...போலிஸ் கூட்டம் பீதியை கிளப்பியது, நண்பர் கேட்டார் 'ஏன் டிராபிக் போலிஸ் இவ்வளவு கூட்டமாக நிற்கிறார்கள்....அப்பா டிராபிக் போலிஸ் தானா ?' வேறு ஒன்னும் இல்லையே ... பாலபாரதி காந்தி சிலைக்குப் பின்னால் லக்கியுடன் நிற்பதை தெரிவித்தார். காரை நிறுத்திவிட்டு சென்றோம்..நேர்கொண்டு கட்டித்தழுவினார்கள்... சரியாக மாலை 5.30 மணிக்கு பிறகு முரளி கண்ணன் வந்தார்..

அதன் பிறகு சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யா...இராமகி ஐயா.....திரு டோண்டு இராகவன் ...கேஆர் அதியமான்...தருமி ஐயா... டாக்டர் புரூனோ.....ஜ்யோவ்ராம் சுந்தர்....வளர்மதி...மற்றொமொரு சுந்தர்....இன்னும் சிலர்....வந்து 6 மணிக்கு கலை கட்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் பலபதிவர்களை நேர்முகம் கண்டார்கள்.

எல்லோரையில் நேரில் சந்தித்த புதிய அனுபவம் நெகிழ்சியாக இருந்தது.....நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.


13 மே, 2008

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க, சாரு அதனை மறுத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண் அளவில் ஏமாற்றவது தான். ஆண்களில் பலர் ஒரு மனைவியுடன் திருப்திப் பட்டுக் கொள்வதில்லை. நமது இந்தியாவில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஒரு ஆண் பலரை திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள், தற்பொழுது சமூக சூழலில் பல திருமணங்கள் செய்து கொள்ளாவிட்டாலும், திருமணம் ஆன ஆண்கள் பலர் வேறு பெண்களை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.

அதையே ஜெமீலாவும் ஆமோதித்து, இந்தியாவில் ஒரு காலத்தில் தேவதாசிகள் என (கும்பகோணம்) கோவில்களில் பெண்களை வைத்து பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்த பெண்களை பெரும்பாலும் (பாழாக்கியது) அரசர்கள், அவர்களின் கைக்கூலிகள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவிலைச் சேர்ந்தவர்களே. அவர் மேலும் சொன்னார் 'எனது அனுபவ்தில் திருமணம் ஆன ஆண்களின் பெரும்பகுதியினர் வேற்று பெண்களை நாடுபவர்களாகவே இருக்கின்றன. சுகத்துக்காக அவர்களை நாடுபவர்கள் பலர், ஒரு சிலரே அதிலேயே விழுந்து கிடந்து குடும்பத்தையே மறந்துவிடுவார்கள்' என்றார்

மேலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மீது திணித்தது, கிறித்துவ சமயத்தில் மட்டுமே ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு மனைவியைக் கொண்டிருப்பார், அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்றால் விவகாரத்து செய்துவிட்டு அடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை ஒரே நேரத்தில் கிறித்துவர்கள் மணந்து கொள்ள அவர்களின் சட்டத்தில் இடமில்லை. மேலும் அதை அந்த பெண்களும் சகித்துக் கொண்டு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கு முன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமெல்லாம் இருந்ததே இல்லை. நம் இந்து கடவுள்களுக்கு இருக்கும் மனைவிகளே நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது. என்றெல்லாம் சொன்னார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம்மீது திணிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும், அந்த திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவனாக மன அளவில் இருப்பதாலேயே ஆண் வேலி தாண்டுபவனாக இருக்கிறான் என்று ஒரே போடாக போட்டார்.

சாரு மற்றும் ஜமீலா சொல்வதில் உண்மை இருக்கலாம், பலரின் தாத்தாக்கள் அந்த காலத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டவர்களாகவும், பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

********

தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். அந்த மையக்கருத்து இல்லை என்றால் கம்பராமயணம், வில்லி பாரதம் போல் மற்றொமொரு மொழிப்பெயர் கதையாகவே இருந்திருக்கும். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அவன் மகனுக்கு ஒண்ணே ஒன்ணு என்றாலும், தசரதனுக்கு இருந்த மனைவிகள் வெறும் செய்தி அளவிலும், இராமர் - சீதை பாத்திரம் கதையின் ஓட்டமாக இருப்பதால் தசரதனின் பலதாரம் பேசப்படாமல் இராமனின் ஒரே மனைவியுடன் நின்றான் என்பது உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைப் பாத்திரமே உயர்வென்றால் உண்மையில்யே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்துவந்த கிறித்துவ சமூகமே போற்றத்தக்கது தானே ?

இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. தற்போதைய இந்திய திருமண கட்டுக்கோப்பு கிறித்துவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவையே. பண்டைய காலத்தில் இந்திய ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்திருந்தது இல்லை. ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பே பெண்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்தது, ஆண் வெறும் பொருளியல் உதவி செய்பவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துவந்தான். இது தெரிந்தாலும், இந்திய பெருமை, இந்து பெருமை பறைசாற்றும் நமது இந்துத்துவாக்கள், பல மனைவிகளை உடைய தெய்வங்களை போற்றிக் கொண்டே முகமது நபிக்கு 11 மனைவிகள் இருந்ததைப் பெரிய குறையாகவாகவும் இழிவாகவும் சொல்லி இஸ்லாமியர்களை பழித்துவருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !

12 மே, 2008

சென்னையில் ஒரு நிகழ்(வு) 'காலம்' !

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு எழுதி என்னத்த சாதித்தோம் ? என்று நினைத்துப்பார்த்தால்,

எந்த இலக்கின்றியும், எதைதையோ 600 இடுகைகள் வரை எழுதி கூகுளின் இலவச இடத்தை நிறைத்தாயிற்று. பள்ளிச் சுற்றுலா சென்று வந்ததைப் பற்றி ஒருபக்கக் கட்டுறை எழுதத் திணறிய என்னாலும் எழுத முடிகிறது என்று நினைக்கும் போதே எவராலும் எழுத முடியும் என்றே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட பதிவர்களை சந்தித்திருக்கிறேன். 10 பதிவர்கள் வரை வெகு நெருக்கமாக பழகி இருக்கிறேன். மற்றவர்களிடம் நல் நட்பு தொடர்கிறது. பதிவில் எழுதுவதால் நான் கண்ட பலன், சாதி மதம் , வயது, பாலினம் கடந்து தமிழர்கள் என்ற அடையாளத்துடன் நிறைய தமிழர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. எழுதாமல் இருந்திருந்தால் இவையெல்லாம் கிடைத்திருக்காது. புலம்பல்கள், அழுகாச்சி காவியங்கள், ஆற்றமைகள், பாதித்தது, படித்தது, மகிழ்ந்தது என எல்லாவற்றையும் நாட்குறிப்பேட்டில் எழுதுவது போல் திறந்த புத்தகமாக எழுதுகிறோம். ஒத்த அலைவரிசை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்கிறோம். எதற்கெல்லாம் எதிர்ப்பு, எதெற்கெல்லாம் ஈர்ப்பு இருக்கிறது என்று அறிகிறோம். சமுகத்தின் சவால்கள், திணறல்கள், மாற்றங்கள் குறித்து நம்மால் எந்த மூலையில் இருந்தும் அதுபற்றி சொல்ல முடிகிறது.

இதில் எதும் லாபமா ? இந்த காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் இவைபற்றி என்னவிதமாக கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என வருங்காலத்தினர் தெரிந்து கொள்வதற்கான பதிப்பாக நமது எழுத்துக்கள் இருக்கும். மற்றபடி லாபம் நட்டம் பார்க்காது நமக்கு மகிழ்வு தருவதாக நட்புகள் கிடைக்கின்றன், பலவற்றைப் பற்றி கலந்து பேச (விவாதம் செய்ய) முடிகிறது. எழுத்து என்னும் ஊடகத்தில் சார்பு நிலையில் எழுதவில்லை என்று எவருமே சொல்லிக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். அவரவருக்கு ஏற்புள்ள தளங்களில் அவரவரது எழுத்துகள் பயணிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் புலம்பல்களும், அதிகாரவர்கத்தின் ஆளுமையும் என்றுமே இருக்கக் கூடியவை. பொதுத்தளத்தில் இலக்கியம் தவிர்த்து கட்டுரைகளை வைப்பவர்கள் சார்ப்பு, சார்பற்ற இந்த இரண்டில் ஒருவராகவே இருப்பார்கள். இது அவரவரது நிலைப்பாடு இதைத் தவிர்த்து தனிமனிதர்களின் எழுத்தினால், ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் ஆனால் அது அவர்களுக்குள்ளே வளர்த்துக் கொண்ட பகைமையோ, புரிந்துணர்வு இல்லாமையோ அல்லது மனநிலை பிறழ்வதால் ஏற்படுவதாகவேத் தான் இருக்க முடியும்.

ஒரளவு இவ்வகை புரிந்துணர்வு இருப்பதால் பதிவர்கள் எவரையும் தனிப்பட்ட எதிரியாக நான் நினைப்பதில்லை. அறியாமையில் என்னைப்பற்றி அப்படி நினைப்பவர்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. சென்னை பதிவர் சந்திப்புக்கு வருபவர்களை சந்திக்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

வரும் மே 18 ஆம் தேதி மாலை 6.00 - 7.30 சென்னையில் பதிவுலக பரந்தாமன் பாலபாரதி மற்றும் பதிவுலக தன்னிகரில்லா அஞ்சநெஞ்சன், பதிவெழுத்துகளால் முடிசூடா மன்னன் லக்கியாருன் சந்திப்போம்.

என்னிடம் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்னூட்டத்தில் தொலைபேசி எண்களை தெரிவித்தால் தொடர்பு கொள்வேன். தொலைபேசி எண்களை பின்னூட்டத்தில் வெளி இடவேண்டாம் என்றால் அதைக்குறிப்பிடுங்கள்

10 மே, 2008

ரஜினி தன் விருப்பத்தை திரை ரசிகர்களிடம் திணிப்பது சரியா ?

ரசிகர்களின் நாடி பார்த்து படம் எடுக்கிறோம், என்று திரைத்துறையினர் சொன்னாலும், வெற்றி சமன்பாடு(பார்முலா) இல்லாவிட்டாலும் எந்த படமும் ஊத்தல் தான்.

நடிகர்களுக்கான கதை என்று எடுத்து, சரக்கு இல்லாமல் பிரபலமான நடிகரின் முகத்தைக் காட்டினாலே பணத்தை அள்ளிவிடலாம் என்ற நினைப்பெல்லாம் 'பாபா' படத்துடனேயே முதலும் கடைசியுமான முயற்சியாக கோணல் ஆகியது. அதை வைத்துதான் தனது முகத்துக்காக எந்தப் படமும் ஓடவில்லை என்று பிற நடிகர்களும் உணர்ந்து கொண்டு அடக்கிவாசிக்கின்றனர். கூடவே அவரவர்களுக்கான 'ஸ்டைல்' என்ற பெயரில் 10 விரல்களையும், கட்டு தலைமயிரையும் சிலுப்பி சிலுப்பி பஞ்சு வசனம் ( காது அடைக்கிறது என்று ரசிகர்கள் வைத்துக் கொள்வதாலா?) பேசித்தான் படத்தையும் பிழைப்பையும் நடத்துகிறார்கள். 3 படம் தொடர்ந்து வெற்றிபெற்றால் தனுஷ் போல அறிமுக நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளமும், 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ரசிகர்கர் மன்றங்கள் இருப்பதாக அள்ளிவிடுவார்கள். 'உரக்க பேசினால் தான் இருப்பு நிரந்தரம்' என்பதே திரைத்துறையின் 'பார்முலா'. படம் ஓடினால் தன்னுடைய சிறப்பான நடிப்பினாலும், ஓடாவிட்டால் மாறுபட்டக் கதை என்பதால் இது ஒரு மாறுபட்ட முயற்ச்சி என அப்போது நேர்முகம் (பேட்டி) கொடுப்பார்கள். பிறகு தவறான படத்தை யோசனை இல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும், இமயமாக இருந்த இவர்களின் புகழை அந்த படம் கெடுத்துவிட்டது போலவும் ரொம்பவே 'ப்லிம்' காட்டுவார்கள்.

'ஓடக்கூடிய படம் என்று நம்பியதைவிட, ஓடிய படத்தில் நடித்தால் வெற்றி உறுதி' என்று ஓரளவு தீர்மனிப்பதால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அவர் மருமகன் தனுஷ் வரை நன்கு ஓடிய வேற்று மொழிப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் மறுபதிப்பு செய்கிறார்கள்.

இதே வெற்றி நினைப்பில் தான் சரத்குமார், டாக்டர் ராஜசேகர் நடித்து தெலுங்கில் சக்கைப் போடுபோட்ட படத்தில் தமிழில் மறுபதிப்பாக நடிக்க, தமிழ் மக்களால் மறந்து போன ராஜசேகரும், அதே படத்தை தமிழில் மொழி மாற்றி வெளியிட்டால் மீள் அறிமுகம் கிடைக்கலாம் என்ற ஆசையில் வெளியிட்டார். இருகதைகளும் ஒரே கதை என்று தெரிந்து போனதால் இரண்டு படமும் திரையரங்கை விட்டே ஓடியது.

ஜெயம்ரவி, விஜய் மேலும் பல நடிகர்களும் புதிய கதையில் நடிப்பதைவிட மற்றமொழிகளில் ஓடி வெற்றிப்பெற்ற கதைகளிலேயே நடித்து தங்கள் படங்களை ஓட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தரணி கொடுத்த தைரியத்தில் சோதனை முயற்சியாக குருவியில் விஜய் முற்றிலும் தனது ஹீரோயிசத்தைக் காட்ட, தற்போதுதான் அவருடைய இரட்டை வேட இம்சையில் தப்பிவந்த ரசிகர்களுக்கு குருவியில் ஒற்றை வேடமாக அதையே (ஓட்டப்பந்தயம், கார் ரேஸ்) மீண்டும் செய்து காட்ட, படத்தில் எதுவும் இல்லை என்ற சலிப்பில் குருவி 'தூக்கு'னாங்குருவியாக சுருண்டு முடங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இதை ஈடுகட்ட அடுத்தப்படம் ? விஜய் மீண்டும் ரீமேக் படத்தில் நடிப்பார் என்றே நினைக்கிறேன்.

மறுதயாரிப்பு (ரீமேக்) படங்களில் நடிகர்கள் நடிப்பது தவறல்ல, ரீமேக் படங்கள் என்று எந்த ரசிகர்களும் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய கதையாக காட்டவேண்டும் என்றால் நடிகர்கள் / தயாரிப்பாளர்கள் / இயக்குனர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களும் கூடவே வெற்றிபெற்றாகனுமே. ஆனால்...

எந்த நடிகரும் தனக்கு பிடித்த கதை இது என்று என்றோ ஓடிய வேற்று மொழியின் பழைய படங்களை (பில்லா, நான் அவனில்லை பற்றி சொல்லவில்லை - அது மீள்தயாரிப்பு) மறு தயாரிப்பாக ரசிகர்களின் தலையில் கட்டுவதில்லை. அதாவது தனக்கு மிகவும் பிடித்த கதை என்று தனது ரசிகர்களிடம் அதைக் கொண்டு சென்று விற்பனையாக்குவதில்லை. அண்மைய படங்களைத்தான் ரீமேக் செய்கிறார்கள். ரஜினிகாந்த் மட்டுமே தனக்கு பிடித்ததெல்லாம் தன் பாணியில் மாற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அந்த வகையில் சந்திரமுகி தற்போது குசேலன் இரண்டும் முன்பே எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள். இந்த இருபடங்களும் வெகு அண்மையில் வெளியான படங்கள் இல்லை. ரஜினி தனக்கு பிடித்ததாக இருக்கிறது என்ற காரணத்தால் தன் பாணிக்கு கதையை மாற்றி ரசிகர்களுக்கு படைக்கிறார். தனக்கு பொருந்தவேண்டும் என்பதற்காக சந்திரமுகி கதையை கொத்து பராட்டா போட்டதைப் பற்றி நண்பர் ஜமாலன் விரிவாக எழுதி இருக்கிறார். இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இது போன்ற தனக்கு விருப்பமான, பிடித்தமான கதைகளைத்தான் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை ரசிகர்களின் மீது திணித்து கொண்டு சென்று, அதைப் பார்ப்பதுதான் அவர்களின் தலையெழுத்து என மாற்றுவதை ஏற்கமுடிகிறதா ?

இந்த படத்தில் ரஜினி தனது ரஜினி பாத்திரத்திலேயே நடிக்கிறார் வருகிறாராம், அவருக்கு இருக்கிற (மாய) புகழையெல்லாம் காட்டினால் தான் படம் இயல்பாக இருப்பது போன்று தோற்றம் வரும், வழக்கமாக வாரிவளங்கும் பாரிவள்ளல் கதையாக இருப்பதால் ரஜினி இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு இல்லை. தனது செல்வாக்கு எவ்வளவு என்றும் இந்த படத்தில் (காட்சிக்க) காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். பிறந்தநாளன்றாவது பார்க்க முடியுமா ? என வழக்கமாக (அன்பினால்) சென்னை வந்து காத்துக் கிடந்துவிட்டு திரும்பும் கூட்டம் இருக்கவே இருக்கிறது அவர்களுக்காக தாம் தாமாகவே ஒரு படம் முழுவதும் வந்து அருள் தரப்போகிறார். ரஜினிக்கு பிடித்த கதை, ரசிகர்களுக்கும் பிடித்தே ஆகவேண்டும்.

குசேலன் படம், ரஜினி அடுத்த கட்சிக்கு கட்டத்துக்கு செல்வதற்கான முன்னோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

9 மே, 2008

மென்பொருள் வல்லுனர்களின் ஊதியமும், போலியான சமூக வாதிகளும் !

ஒருகாலத்தில் அரைகாசு சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளமே சிறந்ததாக கருதப்பட்டது. காரணம் ஓய்வு பெறும்வரை வேலைக்கு உறுதி உண்டு, வேலையை சரிவர செய்யாவிட்டாலும், தற்காலிக பணிநிறுத்தம், ஊதிய உயர்வு நிறுத்தம், பதவு உயர்வு நிறுத்தம் என சிறு சிறு தண்டனைகளுடன் 58 வயது வரை அரசு மேசையை தேய்த்துவிட்டு ஊதியத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பெண் கிடைப்பதும் கூட எளிது, கூடவே அவர்களுக்கு தங்கள் சொத்துமுழுவதையும் சீராக எழுதிவைக்கத் தயங்காத அப்பாமார்கள். கடைநிலை அரசு ஊழியர்கள் கூட காலரை தூக்கிவிட்டுதான் நடப்பார்கள்.

அதுபோலவே மருத்துவராக இருக்கும் மாப்பிள்ளைகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. காரணம் மிகுந்த ஊதியம், வசதிகள் எதையும் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு வருமானம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு வேலை நிரந்தரமில்லை என்று பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் அத்தகைய வரன்களை தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டினார்கள். நாளைக்கு வேலை போய்விட்டால், தம் மகளின் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும் என்றெல்லாம் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டு எவ்வளவு சீர் கொடுக்க வேண்டுமானாலும் கடன் வாங்கியாவது கொடுத்து அரசு ஊழியர்களையே மணமகனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்புதான், தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டபிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது, 'எலேய் நம்ம குப்புசாமி மகன் மெட்ராசுல பெரிய ரூபாய் (ஒருலட்சம்) மாச மாசம் சம்பளமாக வாங்குறானாமே ? குப்புசாமியின் மகன் மென்பொருள் வேலையில் லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெருவது வியப்பளித்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சியே அளித்தது. நேற்றுவரை தன்னோடு கடைநிலை ஊழியம் பார்த்த குப்புசாமிக்கு வசதி வாய்ப்புகள் பெருக பெருக, மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமை காரணமாக பொறாமை ஏற்படுவதும், வயிற்றெரிச்சல் ஏற்படுவதும் இயல்புதானே.

மென்பொருள் வல்லுனர்களுக்கும், மற்ற பொறியாளர்கள், அல்லது கலைக்கல்வி பயின்றவர்களுக்கும் உள்ள ஊதிய வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் இருப்பது போல் இருப்பதால் தான் மென்பொருள் வல்லுனர்களின் ஊதியம் பயமுறுத்துகிறது. இந்தியாவில் தான் இத்தகைய நிலமை. மற்ற வெளிநாடுகளில் கணக்கு வழக்கு (அக்வண்ட்) மற்றும் பிற துறைகளில் வேலை செய்பவர்கள், வேறு பொறியாளர்கள் ஆகியோருக்கும் மென்பொருள் வல்லுனர்களுக்கும் ஊதிய அளவில் பெரிய வேறுபாடு இல்லாததால் வெளிநாடுகளில் இத்தகைய பெருமூச்சுகள் ஏற்படுவதே இல்லை.

அப்படி இருந்தாலும் அதுபற்றி பேசும் போதுதான் பேசுவார்கள், எப்போதும் பேசமாட்டார்கள்.
மற்ற நாடுகளில் வேலைக்கு ஏற்ற ஊதியம் என்பது நடைமுறை இருக்கிறது. இந்தியாவில் அப்படி எதுவுமே இல்லாததால் அரசு ஊழியர்கள் தவிர்த்து பிறருக்கு தகுதி அடைப் படையிலேயே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது, பொறியியல் படிப்பை முடித்து உடனே வேலைக்குச் செல்வோர்களுக்கு சிங்கையில் மாதம் 1500 - 2000 வெள்ளிவரை கிடைக்கும், ஆனால் இந்தியாவின் நிலவரப்படி நிறுவனங்களுக்கு ஏற்றவாறு இந்த தொகை 10000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய்வரைதான். சிங்கையில் கொடுக்க முடிகிறது ஏன் இந்தியாவில் கொடுக்க முடியவில்லை ? உற்பத்தி செலவை சொல்கிறார்கள், இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவு என்ற காரணத்தினால் தான் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் இடத்தை
பலநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவுக்கு மாற்றிக் கொண்டன. சிங்கை போன்றே உற்பத்தி செலவு இருந்தால் அவர்கள் இங்கு வந்திருக்க மாட்டார்கள் என்பது ஒரு காரணம். உலகதேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக உற்பத்தி செய்யக் கூடிய மனிதவளம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். ஊதியமாக பொரும் பகுதி சென்றால் லாபத்தின் விழுக்காடு குறையும் என்ற முதலாளிகளின் பேராசையே பிற பொறியியல் வல்லுனர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கும் மென்பொருள் வல்லுனர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கும் உள்ள வேறுபாடு. எல்லாம் நவீனமயமாக வளர்ந்துவிட்டதால் மற்ற பொறியியல் துறையில் உடல் உழைப்பாளிகள் (காசுவல் லேபர்) தவிர்த்து மேலதிகாரிகள், பொறியாளர் என மிகச் சிலரே தேவையாக இருக்கும், இந்த வேலைக்களுக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவில் இருப்பதால், அங்கு ஊதியத்தைக் குறைத்து பேசி தகுதியானவர்களை வேலைக்கு முடிவு செய்வதற்கு அது வாய்ப்பாகவே அமைந்துவிடுகிறது. இந்த வேலை இல்லாவிட்டால் பிழைப்பே இல்லை என்று நிலை இருக்கும் போது ஊதிய குறைவைப்பற்றி கவலைப்படாமல் வேலை கிடைக்கிறதே என்று செல்பவர்கள் தானே மிகுந்தது.

இந்தியாவில் இயங்கும் உலகளாவிய (மல்டிநேசனல்) நிறுவனங்களில் ஊதியம் ஓரளவுக்கு ஞாயமானதாகவே இருக்கிறது, இந்திய நிறுவனங்கள் கிடைக்கும் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக ஊதியத்தை கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் மென்பொருள் துறையில் அவ்வாறு செய்யவே முடியாது. மென்பெருள் வல்லுனர்களின் தேவை நாளுக்கு நாள் மிகுந்து கொண்டே செல்வதால் அவர்களில் திறமையானவர்களாலேயே அந்த வேலையை சிறப்பாக செய்யமுடியும் என்ற அடிப்படை காரணம் இருப்பதால் அந்த வேலையை செய்யும் வல்லுனர்கள் கேட்கும் ஊதியத்தை வேலை முடியவேண்டுமென்றால் கொடுத்தே ஆகவேண்டும். அதுதவிர மென்பொருள் நிறுவனங்களில் 50 விழுக்காடு வெளிநாட்டு நிறுவனங்கள், மீதம் 50 விழுக்காடு இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டின் மென்பொருள் தேவைகளைத்தான் செய்துவருகின்றனர். மென்பொருள் வேலைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை குறைத்தால் எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ, உடனடியாக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவிவிடுவார்கள் என்ற பயமும், எப்படியும் ப்ராஜெக்ட்டை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற காலநிர்ணயமும் இருப்பதால், மென் பொருள் துறையில் வேலை செய்பவர்களின் ஊதியத்தில் கைவைக்கவே முடியாது. அதுமட்டுமல்ல இந்திய மென்பொருள் வல்லுனர்களுக்கு உலக அளவில் எங்கும் வரவேற்பு இருக்கிறது. மற்ற பொறியாளர்கள் வாய்ப்புகளை மிகவும் கடினப்பட்டு தேடித்தான் பிடிக்க முடிகிறது.

மென்பொருள் துறையினருக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றால் இதுதான் காரணம். இதில் மென்பொருள் வல்லுனர்கள் மட்டும் தான் லாபம் அடைகிறார்களா ? விமானங்களை ஆகயத்தில் மட்டுமே பார்த்த அவர்களது பெற்றோர்கள் அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நடுத்தரவர்க்க இல்லங்களில் ஓரளவுக்கு வசதிகள் பெருகி இருக்கிறது, அப்பாக்களின் சுமைகளை குறைக்கப்பட்டுள்ளன. இதைத்தாண்டி மென்பெருள் வல்லுனர்களின்
பெயரைச் சொல்லி கொள்ளை அடிப்பவர்கள் வீட்டுமனை விற்பனையாளர்களே மிகுதி. சென்னையில் ஓர் அறை வீட்டை வாடகைக்கு கேட்டாலும் குறைந்தது 5000, கொஞ்சம் யோசனை செய்து பேரம் பேசினால், சாப்டுவேர்காரர்கள் வந்து பார்த்துட்டுப் போனார்கள் என்று சொனனாலேயே 5000 ரூபாய்க்கு வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ளும் அப்பாவிகள். வாடகையே இப்படி என்றால், சென்னையில் வீட்டுமனைகள் கோடிகளில் பேரம்
பேசப்படுவதற்கும் இதுவே காரணம், சாப்டுவேர்காரர்கள் விலைகொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லியே கொள்ளை அடிக்கின்றனர். தற்போதைய விலைவாசியில் மென்பொருள் வல்லுனர்கள் தவிர்த்து மற்றவர்கள் எவருமே சொந்த வீடு, மனை வாங்கமுடியாமல் செய்ததற்கு மென்பொருள் வல்லுனர்களின் ஊதியத்தால், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளின் எழுந்த பேராசையே. இவர்கள் மட்டுமல்ல முன்பு 5 லட்சத்து வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பை 50 லட்சத்துக்கு பேரம்பேசி விற்கலாம் என்ற பொதுமக்களின் ஞாயமான ஆசையும் சேர்ந்து கொண்டு வீட்டுமனைகளின் விலைகள், வாடகைகள் எட்டமுடியாத உயரத்திற்கு சென்றுவிட்டன. முன்பு சாதரணமாக இயங்கிவந்த முடித்திருத்தும் இடங்கள் குளிர்சாதனம் பொறுத்திவிட்டு 50 ரூபாய்க்கு முடித்திருத்தியவர்கள், 150 வரை வாங்குகிறார்கள், 'என்னப்பா இவ்வளவு கட்டணம் ?' யாராவது கேட்டால், 'சார்...இங்கெல்லாம் சாப்டுவேர் எஞ்ஜினியர்கள் வருவாங்க...உங்களுக்கு கட்டுபடியாகலை என்றால் மரத்தடியில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருப்பவர்களிடம் போங்களேன்' என்று மென்பொருள் வல்லுனர்களின் பெயரைச் சொல்லி தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

இவைதடுக்கப்பட்டு, அனைவரும் வீட்டுமனைகள் வாங்க வேண்டுமென்றால், விலைவாசி உயர்வை சரியாக எதிர்கொள்ள வேண்டுமென்றால் எல்லா நிறுவனங்களும் லாபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊதியத்தையும் உயர்த்த முன்வரவேண்டும். அதுதவிர தனியார் நிறுவனங்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்து அதை கண்காணிக்க வேண்டும் இல்லை என்றால் மென்ப்பொருள் ஊழியர்களின் பெயரைச் சொல்லி சமூகபொருளாதாரத்தை சீரழிப்பவர்களை தடுக்கவே முடியாது.

மென்பெருள் வல்லுனர்கள் மீது வைக்கபடும் மற்ற குற்றச் சாட்டுகள் ? குடி கும்மாளம், காசை தண்ணீராக செலவளிப்பது ? இதையெல்லாம் எல்லோரும் செய்வது இல்லை. பொறுப்பானவர்கள் பெற்றோருக்கு களங்கம் வராமல் அளவோடுதான் நடந்து கொள்கிறார்கள். அதே போல் முன்பு பணக்காரர்களால் மட்டுமே செய்ய முடிந்தது என வெளியில் இருந்து ஏங்கியதெல்லம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் போது சிலர் அதையெல்லாம் அனுபவிக்க நினைத்து அதனை செயல்படுத்துவதை குற்றம் செய்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை. இதைப்பற்றி குறை சொல்பவர்கள் 'தகுதி' பற்றி உயர்சாதி மனப்பாண்மையில் தான் பேசுகிறார்கள் என நினைக்க வேண்டி இருக்கிறது. அதாவது இவர்கள் முன்பிருந்த தகுதிக்கு இவர்கள் ஆட்டம் போடலாமா என்று அவர்களின் பழைய தகுதியை ஒப்பிட்டு போலியான அக்கரையில் இவர்களைப் பற்றி குறைசொல்கிறார்கள். எவரோ ஒருசிலர் ஆட்டம் போடுவதை ஒட்டுமொத்த மென்பொருள் வல்லுனர்கள் செய்வதாக கட்டமைப்பது வயிற்றெரிச்சல் என்றே நினைக்க வைக்கிறது. ஊதிய ஏற்ற இரக்கம் சரிசெய்ய எதாவது புரட்சி ஏற்பட்டாலே வழி உண்டு, அதைத் தவிர்த்து மென் பொருள் வல்லுனர்கள் மீது எரிச்சல் அடைவதால் எந்த பயனும் இல்லை.

என் அம்மா முதல் முறை சிங்கை வந்து இறங்கிய போது விமான நிலையத்தில் சொன்னது, 'கண்ணா, சொர்கத்துக்கு வந்தது போல் இருக்குடா, ப்ளைட்டெல்லாம் ஆகாயத்தில் போவதைப் பார்த்து இருக்கிறேன். இங்கெல்லாம் நான் வருவேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...' என்றார்

அரசு ஊழியர்களும், மருத்துவர்களும் அனுபவித்ததை, மிகுந்த ஊதியம் காரணமாக நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த மென்பொருள் வல்லுனர்கள், அவர்கள் குடும்பத்தினர் அனுபவித்தால் ஏன் ஏற்கமுடியவில்லை ? நடுத்தரவர்கத்தினரும் தான் அனுபவிக்கட்டுமே. மென்பொருள் வல்லுனர்கள் அடித்துபிடுங்கவோ, தவறான வழியிலோ பொருள் சேர்க்கவில்லையே ?

பின்குறிப்பு : இது பதிவர் பாமரனின் இந்த பதிவுக்கான எதிர்வினை அல்ல.

உயர்சாதிக்காரர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் அருந்துவது வெறும் தண்ணீர் ?

உத்தபுர தீண்டாமை சுவரை இடித்துவிட்டார்கள் என்பதற்கு பிள்ளைமார் சமூகம் அந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிகமாக எதோ மலைப்பகுதியில் வசிக்கிறார்களாம். இதுபோன்ற சுவர்கள் பிள்ளைமார்களுக்கு இடையேயும், முதலியார்களுக்கு இடையேயும் இருந்தது உடைக்கப்பட்டால் இது போன்றே மலைக்கு குடியேறச் சொல்வார்களா ?

பார்பனீயம், பிள்ளைமார் பித்தளை, வன்னீயம், தேவரீயம், கவுண்டன்செம்பு, நாயுடு அலுமினியம் ( கீழவெண்மணி கொடுமை) போன்ற உயர்சாதி மனப்பான்மை எல்லா சாதிக்காரர்களிடமும் இருக்கிறது, தன்னைவிட உயர்ந்த சாதி என்றால் தான் அடிமைப்படுத்தப்படுவது தவறல்ல என்றே நினைக்கிறான். மலையில் குடியேறிய பிள்ளையாண்டைகளை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது, பலத்த மழை பொழிந்தால் போனவழியே திரும்பி வரத்தான் போகிறார்கள். எதற்க்காக ஆட்சியாளர்களையெல்லாம் அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்ல வேண்டும் ?

ஒரு நாளைக்கு 200 வகையான தாவரங்களை உணவுபொருள்கள், கட்டில், மேசை, நாற்காலி என அதன் வடிவங்களைப் பயன்படுத்துவது போலவே மாற்று சாதிக்காரனின் உதவி இல்லாமல் எவருமே வாழமுடியாது. எந்த உயர்சாதிக்காரனாவது தன் சாதியிலேயே முடித்திருத்தம் செய்துக் கொள்ள ஏற்பாடு தன் சாதி ஆட்களையே ஏற்பாடு செய்து கொள்கிறானா ? பிணத்தை எரிக்க தன் சாதி ஆட்களையே வைத்திருக்கிறானா ?

தாழ்த்தப்பட்டவர்கள் அறுத்து எடுக்காத நெல் மற்றும் தானிய வகைகளை பயன்படுத்தாத உயர்சாதிக்காரன் எவன் இருக்கிறான் ? எல்லோருடைய சிறுநீரும் ஆவியாகி, மலம் எருவாகி மறுசுழற்சியாக எல்லோருக்குமே தண்ணீர், தானியமாக மறுவடிவத்தில் கிடைக்கிறதே ? இது எல்லாம் எவருக்கும் தெரியாத ஒன்றா ? தலித் ஒருவரின் சிறுநீரும், வியர்வையும் ஆவியாக மாறி மழைத்துளிகளின் துகள்களில் ஒன்றாக கலந்து இருப்பதை நாள் தோறும் தண்ணீராக அருந்துகிறோம் என்று எவரும் நினைத்துப் பார்பதே இல்லையா ?

காசுகள் முதல் மற்றதுக்கெல்லாம் தண்ணீர் தெளிச்சு தீட்டு கழிக்கிறார்கள், மழையாக கொட்டி குடிநீராக மாறிய தண்ணீருக்கு எப்படி கழிப்பது ?தீட்டுக்கழிக்க முடியாதற்கெல்லாம் தீட்டு இல்லையாம், தாழ்த்தப்பட்டவர்கள் கறந்து கொடுத்தாலும் பால் தீட்டு இல்லையாம். என் வீட்டு புதுமனை புதுவிழாவிற்கு புரோகிதம் செய்ய வந்தவர் 'பால் மாத்ரம் கொடுங்கோ' என்று வாங்கிக் குடித்தார்.

உயர்சாதிக்காரர்களின் அன்றாட குடிநீரிலும், இயற்கையாக மறுசுழற்சி செய்யப்பட்டு உப்பு நீங்கிய, தூய்மையான தண்ணீர் என்ற வடிவத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் சிறுநீரும், வியர்வையும் கலந்தே இருக்கிறது.

7 மே, 2008

பறக்கும் பெண் சூர்பனகையாக இருக்கலாம் (?) !

15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இராமனால் கட்டப்பட்ட(?) இராமர் பாலம் இன்னும் இராமேஷ்வரத்தில் மூழ்கி இருப்பது வியப்பு(?) தான்.

இராமன் மனித பிறப்பெடுத்ததால் சிலையாக இருந்த அகலிகை மேல் அவன் பாதம் பட்டு மோட்சம் கொடுத்தது, மற்றும் தாடகியை அம்பால் வீழ்த்தியது, எவருமே தூக்க முடியாத வில்லை ஒடித்து சீதா பிராட்டியாரை மணந்தது, அவன் பக்தனாக இருந்த அனுமனே விந்திய மலையை பெயர்த்து எடுத்து பறக்க முடிந்தது என இராமன் தொடர்புடைய தெய்வீகத் தன்மைகளையெல்லாம் மறந்துவிடுவோம். காரணம் இராமன் மனிதனாகப் பிறந்தான் என்று தான் சொல்கிறார்கள். இராமன் மனிதன் என்பதற்கு மற்றொரு சாட்சியாக வனரங்கள் மற்றும் அணில்கள் உதவியுடன் பாலம் அமைத்து இந்து பெருங்கடலை கடந்து இலங்கையை அடைந்தான், தெய்வீக சக்தி இருந்திருந்தால் பாலம் இல்லாமலேயே பறந்து இருப்பான்.

இராமன் பாலம் அமைத்து தான் இலங்கையை கடந்தான், ஆனால் இராவணனோ புஷ்பக விமானத்தில் (நம் இந்து தருமத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வான் வழி விமானம் மூலம் பறப்பதற்கு விமானம் இருந்திருக்கிறது, இந்துக்கள் கண்டுபிடிப்புக்கெல்லாம் முன்னோடி என்று இதன் மூலம் சொல்லிக் 'கொல்வோம்') பறந்து இலங்கையில் இருந்து இராமன் வசித்த காட்டுப் பகுதிக்கு வந்து சீதையை கவர்ந்து சென்றான்.

அவன் மட்டும் தானா ? அதற்கு முன்பே அவன் தங்கை சூர்பனகை அதே காட்டுப்பகுதிக்கு பறந்து வந்து இராமன் மீது மையல் கொண்டு மூக்கறுபட்டாள். இராமர் பாலம் பற்றி மீண்டும் பேச்சு நடப்பதைத் தொடர்ந்து, சூர்பனகையின் ஆவிதான் அங்கும் இங்கும் பறக்கும் பெண்ணாக அலைகிறதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

இராமர் பாலத்தைத் தொடர்ந்து இராமன் தொடர்புடைய(?) சூர்பனகை பறக்கும் அசைபடத்தை (வீடியோ) இந்துக்கள் உரிமை கொண்டாடி, அதை இந்தியாவின் பழஞ்(புராதான) சின்னமாக அறிவிக்க இந்திய அரசு முயற்சி நடத்தவேண்டும். பறக்கும் பெண் சூர்பனகை தான் என்று அமெரிக்க நாசாவும் உறுதிப்படுத்திவிட்டால் எந்த கொம்பனாலும் இராமர் பாலத்தை அசைக்கக் கூட முடியாது.

சிரிப்பான் போட மறந்துவிட்டேன். ஒண்ணும் தப்பு இல்லையே !

பின்குறிப்பு : இந்த இடுகையால், ஆதாம் பாலத்தை இராமர் பாலம் என நம்பும் இந்துக்கள் மனம் புண்படும். மன்னிக்கவும், மக்களை மூடர்களாக வைத்திருக்க முயல்வது கூட பலர் மனதை புண்படத்தான் வைக்கிறது என்ன செய்யலாம்?

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு - 2

மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெரிய விசை படகில் ( Ferry) லங்காவி செல்லத் திட்டமிட்ட படி, திரும்பி வர இருநாட்கள் ஆகும் என்பதால் டிபிசிடி வாக்கனத்தை வீட்டின் அருகில் நிறுத்தும் இடத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு எனவே வாடகைக் வாகனத்தில் காலை 7.45 க்கு படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். லங்காவி செல்ல படகு 2:30 மணி நேரம் பயணிக்கும் என்ற தகவல் தெரிந்தது, காலை உணவு செய்து நேரம் வீணாக்க விரும்பாததால் முன்கூட்டியே வாங்கி வைத்த கொரிக்கும் பண்டங்களையும், குளிர் பானங்களையும் நம்பி படகில் காலை 8.15 மணிக்கு ஏறிவிட்டோம். சுமார் 200 பேர் வரை பயணம் செய்யும் படகு, மூன்று அடுக்குகளாக இருந்தது. கீழ் தளத்தில் லங்காவி செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டார்கள், அதன் மேல் தளத்தில் வழியில் இருக்கும் இன்னொரு தீவிற்கு செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டார்கள், மேல் தளத்தில் விஐபி அறைகள் இருந்தன. அதில் ஓரிருவர் தவிர யாரும் இல்லை. பயணச்சீட்டு கூடுதலாக 20 வெள்ளிகள் தான் முன்பே தெரிந்திருந்தால் அதற்கு பயணச்சீட்டு வாங்கி இருப்போம், கீழ் தளத்தில் பயண இடம் அவ்வளவு மோசமில்லை தான். முற்றிலும் குளிர்வசதி பொருத்தப்பட்ட படகாக இருந்தது.

சுமார் 1 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு மேல் தளத்தில் பார்வையாளர்கள் பகுதியை திறந்துவிட்டார்கள். அங்கிருந்து பார்க்க பினாங்கின் உயரக் கட்டிடங்களும், பினாங்கின் ஒருபகுதியும் தெரிந்தது, நேரம் ஆக ஆக அவை மறையத் தொடங்க, அந்த பகுதி கடலின் நீளத்தில் முற்றிலும் மறைந்து தண்ணீர் எல்லையைக் காட்டியது. படகு செல்லும் பகுதியில் இருபுறமும் தீவுகள் அங்கங்கே தெரிய ஆரம்பித்தன. சில இடங்களில் கடல் பறவைகளைப் பார்க்க முடிந்தது. கீழ்தளத்திற்கு சென்றோம், பல்வேறு வெளிநாட்டினரும் அங்கே வந்து நின்று கொண்டு கதைத்துக்கொண்டு இருந்தனர். கீழ்தளத்தில் படகு செல்லும் வேகத்தில் அசைவு நன்றாக உணர முடிந்தது. சிறிது நேரம் கொறித்துவிட்டு கொஞ்சம் தூங்கிப் போனோம். சுமார் 1:30 மணி நேரத்தில் ஒரு மீன்பிடி தீவில் படகு நிற்க, சில வெள்ளைக் காரர்கள் இறங்கிக் கொண்டனர். அங்கு கடல் நீர் தூய்மையாக இருந்தது. படகில் பணியில் உள்ள சிலர் கடலில் உள்ள மீன்களுக்கு உணவு அளித்தனர். திறந்த கடலில் ( open sea) இவ்வளவு கூட்டமாக பலவிதமான மீன்களை நான் முன்பு பார்த்ததே இல்லை. அதை சிறிது நேரம் ரசித்தோம், இடையில் படகில் எதோ கயிறு சிக்கிக் கொள்ள முக்குளிப்பாளர் (ஸ்கூபா டைவர்) ஒருவர் அதை சரி செய்தார்.

10 நிமிடத்திற்கு பிறகு படகு அந்த இடத்தைவிட்டு இரு தீவுகளின் ஊடாக லங்காவியை நோக்கி அடுத்த ஒரு மணி நேர பயணத்தை தொடர்ந்தது. இடையில் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு அலுவலக சர்வர் டவுன் ஆகிவிட்டது எதாவது செய்ய முடியுமா ? கைப்பேசி வழியாகவே ஆலோசனை கூறி மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு, தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது படகு லங்காவியை நெருங்க, லங்காவியின் சின்னமான பெரிய கழுகு சிலை கண்களுக்கு தெரிந்தது.

என்னையும் மற்றவர்களையும் காத்திருக்கச் சொல்லிவிட்டு தங்குமிடம் (ஓட்டலுக்கு) செல்ல வாடகை கார் ஏற்பாடு செய்து வந்தார் டிபிசிடி, வாடகைக் கார் ஓட்டுனர் தமிழர் தான்.

Jetty Point என்னும் லங்காவி தீவின் முகப்பில் இருந்து விடுதிக்குச் செல்ல ஒரு மூன்று நிமிட பயணம் தான், விடுதியில் ஏற்கனவே சொல்லிய படி இரு அறைக்குப் பதில் ஒரு அறைதான் இருப்பதாகவும் மாலை மூன்று மணிக்குத்தான் மற்றொரு அறை கிடைக்கும் என்று சொன்னார்கள். வேறு வழியின்றி ஒரு அறையில் இரு இல்லத்தினரின் பொருள்களை வைத்துவிட்டு சற்று இளப்பாறி விட்டு உடனடியாக தீவைச் சுற்றிப்பார்க்க முடிவெடுத்து வெளியே வந்தோம். அதே வாடகை வண்டி ஓட்டுனர் எங்களுக்காக காத்திருந்தார். மதியம் 1 மணி ஆகிவிட்டதாலும், காலை உணவாக வழக்கமான உணவு எதையும் எடுக்காமல் இருந்ததால் பசி கிள்ள ஆரம்பதுவிட்டது. ஓட்டுனரிடம் சொல்லி இந்திய / தமிழ் சாப்பாட்டுக் கடைக்கு வாகனத்தைச் செலுத்தச் சொன்னோம். ஒரு தமிழ் உணவு கடைக்கு முன்பாக நிறுத்தினார். இது போன்ற சுற்றுலா தீவுகளில் வாகன ஓட்டுனர்களுக்கும் உணவு கடைகளுக்கும் இணக்கம் இருக்கும், அவர்களுக்கு ஒரு பகுதி விடுதியில் நாம் செலவு செய்யும் பணம் போய்ச் சேரும். அதைத் தவிர வாகன ஓட்டுனருக்கும் உணவுக்கு பணம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அங்கு 90 விழுக்காடு அசைவ உணவையே வைத்திருந்தார்கள். சோறு, ரசம் மற்றும் கொஞ்சம் பருப்பு குழம்பும், வேகவைத்த காய்கரிகளும் கிடைத்தது. 5 பேருக்கு 40 மலேசிய வெள்ளிகள் செலவானது, அதே அளவு உணவு வகைகளுக்கு பினாங்கு தீவில் 20 வெள்ளிகள் கூட ஆகாது, சுற்றுலா தளங்களில் அடிக்காமல் பிடுங்குவார்கள்.இங்கும் அப்படித்தான்.

அதன் பிறகு சதுப்பு நிலக்காடுகள், மலைகள், மாங்க்ரோவ் பகுதிக்கு வாகன ஓட்டுனரை விடச் சொன்னோம், போகும் போதே பில்லா படப்பிடிப்பு நடந்த அந்த தீவின் வான் வழி பாலம் (SKY WAY BRIDGE) பற்றிய பேச்சு வந்தது. உடனே வாகன ஓட்டுனர், "சார் நமீதா மேடத்தை நான் தான் பில்லா படப்பிடிப்பின் போது மூன்று நாட்கள் ஓட்டல் அறையில் அழைத்துச் சென்றேன், உங்கள் நண்பர் (டிபிசிடி) உட்கார்ந்திருந்த இடத்தில் தான் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு நாளைக்கு 300 வெள்ளி வரை எனக்கு சம்பளமாக கொடுத்தார்கள். ரொம்ப இயல்பாக நடந்து கொண்டாங்க" என்றார்.

நமீதா உட்கார்ந்த இடம் என்றவுடன் கூட்டமாக டிபிசிடியை கலாய்க்க, அவர் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள காலரைத் தேடினார். அந்த டி-சட்டையில் காலர் இல்லை. :) இந்த பிறவியின் பயன் பெற்றது போன்று அவருக்கு அப்படி ஒரு பெருமிதம். அதே காரில் பலமுறை நாங்கள் ஏறியும் இறங்கினாலும் நமீதா உட்கார்ந்திருந்த இடத்தை அவர் விட்டுத்தரவே இல்லை. அந்த காரை படம் பிடிக்காமல் வந்துவிட்டேன் என்ற வருத்ததில் இருக்கிறார்.

ஒருவழியாக சதுப்புநில காடுகளுக்குள் (Gua Kelawar) அழைத்துச் செல்லும் மற்றொரு படகுதுறைக்கு மாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு மணி நேரப் பயணம் நான்கு முதன்மையான மையங்களைக் காட்டுவதாகச் சொல்லு ஒரு படகுக்கு 250 மலேசிய வெள்ளி கட்டணம் கேட்டார்கள், வாகன ஓட்டுனரை மாலை 4 மணிக்கு வரச் சொல்லிவிட்டு, படகு பயணத்டிற்கு ஆயத்தம் ஆனோம். 10 பேர் பயணம் செய்யக் கூடிய சிறிய படகு, பாதுகாப்பு அங்கி எதும் தேவை இல்லை, நான் நிதானமாக ஓட்டுவேன் என்றார் படகுக்காரர். படகு பயணம் ஆனது.

முதலில் சென்றது அதே சதுப்பு நிலத்திலேயே ( எல்லாம் கடல் தண்ணீர்தான்) அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு மையத்தை ஒரு 20 நிமிட படகு பயணத்திற்கு பிறகு அடைந்தோம். அங்கு வலைகள் சூழப்பட்ட 2 மீட்டர் விட்டக் குழிகளில் பலவிதமான மீன்கள் சுற்றி சுற்றி வந்தன, பெரிய மீன்கள் முதல், திருக்கை மீன்கள் (சிங்ரே), குதிரை காலடி வடிவ நண்டுகளையெல்லாம் ( horse shoe crabe) கையில் எடுத்து ஒரு 15 வயது சிறுவன் ஆங்கிலத்தில் அதைப் பற்றியெல்லாம் சொன்னான். என் கையிலும் ஒரு நண்டை கொடுத்தான். ஒரு கிலோ எடைக் கல்லை தூக்கிவைத்தார் போல் எடை, கூடவே அது வழப்வழப்பான ஆமை ஓடு ஓன்ற அதன் முதுகை சிலிப்பியது. கையில் இருந்து நழுவ முயன்றது, நிழல்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்து படகு சென்ற இடம் முதலை தலை போன்ற குகை, அந்த குகையினுள் படகு செல்லும் போது விசில் அடித்து எதிரொலி வருவதை ரசித்தோம். பிறகு படகு மற்றோரு பாதைவழியாக கழுகுகளுக்கு உணவிடும் இடத்திற்கு வந்தது. படகு ஓட்டுனர் தயாராக எடுத்து வந்த கோழி தோல்களை வீசி எறிந்து ஓசை எழுப்பவும் 15 முதல் 20 வரை கிருஷ்ண பருந்துகள், நீர்மேல் மிதந்த இறைச்சிகளை லாவகமாக கால்களால் கவ்விச் சென்றன.

அதையும் புகைப்படம் எடுத்தோம், அடுத்து திறந்த கடல் பகுதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இதுவரை சென்றதெல்லாம் மாங்க்ரோவ் காடுகளால் சூழப்பட்ட மலைப்பகுதியுன் ஊடுகள்தான். திறந்த கடல் பகுதியை அடைந்ததும், உண்மையிலேயே படகு மிக ஆழமான பகுதியில் நிற்பதை நினைத்து வயிறு கலங்கியது.

அந்த கடலில் ஒருபக்கம் மலைகள், எதிர்புறம் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கடல் தான். ஓட்டுனர் அதோ பாருங்கள் அதுதான் தாய்லாந்து ஆரம்பிக்கும் பகுதி என்று எதிர்திசையில் மலைகள் நிறைந்த தொலைவு பகுதியைக் காட்டினார். நாங்கள் பயணம் செய்த பகுதியில் டால்பின் மீன்கள் அவ்வப்போது வருமாம். நாங்கள் சென்ற போது எதுவும் காட்சி கொடுக்கவில்லை. அந்த பகுதியைக் கடந்து புறப்பட்ட இடத்துக்கு திரும்பும் போது படகு பயணத்தின் 1 1/2 மணி நேரம் கடந்து இருந்தது.

படகு புறப்பட்ட இடத்தின் வழியாகவே வவ்வால்கள் வசிக்கும் குகைபகுதியில் இறக்கிவிட்டு, வவ்வால்களை காணுவதற்காக ஒரு மின் குழல் விளக்கு (டார்ச் லைட்) ஒன்றையும் கொடுத்தார். உள்ளே நல்ல இருட்டு, கூடவே குளிர் கண்ணாடி அணிந்து இருந்ததையே மறந்துவிட்டு ஏன் இந்த இடம் இவ்வளவு இருட்டாக இருக்கிறதென்றார் டிபிசிடி. அந்த குகையில் மேல் பகுதியில் விளக்கின் வெளிச்சத்தை பாய்ச்ச 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்கிக் கொண்டு இருந்தன. அங்கே திரும்பும் வழியில் மேல்பகுதியில் இருட்டுக்குள் ஒரு குகைக்குள் ஏறி சில நிழல் படங்களை எடுத்துக் கொண்டோம்.


அதன் பிறகு மாங்க்ரோவ் காடுகளின் வழியாக நீர் பயணம் மாலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. தயாரக நின்றிருந்த நமீதா புகழ் வாகனத்தில் ஏறி விடுதியை நோக்கி பயணித்தோம். இரண்டாவது அறையை ஒதுக்கி இருந்தார்கள். களைப்பு தீர குளித்துவிட்டு அதே வாகனத்தில் அடுத்த இடம் செல்ல தீர்மானித்தோம். வாகனம் காத்து இருந்தது.

அடுத்து சென்ற இடம் அதே தீவு பகுதியில் அமைந்த கடற்கரை பகுதி (Cenang Beach). அங்கு சென்று சேரும் போது மாலை 5ஐ நெருங்கியது. அம்மணிகளும் டிபிசிடியின் குட்டிக் குழந்தையையும் கடற்கரையில் இருத்திவிட்டு, நானும், டிபிசிடியும் அரைக்கால் சட்டைக்கு மாற, என் மகளும் கடற்கரையில் குளிக்க கிளம்பினால், அந்த கடற்கரையில் விரிகுடை (பாராசூட்) மற்றும் நீர் மோட்டார் விளையாட்டுகளும் இருந்தன எனக்கு ஆர்வம் இல்லை.

கடல் கரையில் பல ஜோடிகள் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள், டிபிசிடி கடலில் இறங்கியதால் தானோ தெரியவில்லை, பெரிய பெரிய அலைகள் வந்து சென்றது. அதில் தாவி தாவி குதித்து ஒரு 30 நிமிடம் கும்மாளமிட்டோம், பிறகு நன்ணீரில் குளித்துவிட்டு உடைமாற்றி கிளம்பவும் சூரியன் மெதுமெதுவாக அருகில் இருந்த தீவின் மலைக்கு பின்னால் சென்று மறைந்தான். வானம் செந்நிறமாக காட்சி அளித்தது.


கடற்கரையிலேயே தின்பண்டங்கள் தீர்ந்துவிட்டது. விடுதிக்கு செல்ல திட்டமிட்டோம், மேலும் மாலை 7.30 நெருங்கி இருந்தது, செல்லும் வழியிலேயே இரவு உணவை முடித்துவிட்டு செல்வதற்காக மற்றொரு தமிழ் கடையில் நிறுத்தச் சொன்னோம், இந்த கடையில் சாப்பாடு பரவாயில்லை. மதியம் கொடுத்ததைவிட பாதிதான் வாங்கிக் கொண்டார்கள். அங்கிருந்து சுமார் இரவு 8:30 மணி அளவில் விடுதிக்கு
திரும்பினோம். அதுவரை வாகனத்துக்கு ஆன செலவு முதலில் 8 வெள்ளி, பிறகு 50 வெள்ளி, கடைசியில் 80 வெள்ளி என மூன்று தவணைகளாக வாங்கிக் கொண்டார். மொத்தம் 130 வெள்ளிக் மேல் ஆகிவிட்டது.

டிபிசிடி யோசனை செய்தார், நாளைச் சுற்றுலாவுக்கு நாமே ஏன் வாடகைக் கார் ஏற்பாடு செய்துக் கொள்ளக் கூடாது ? பிறகு விடுதியாளர்களிடம் பேச அவர்களே ஒரு வாடகை வாகனத்தை 24 மணி நேரக் கணக்கில் 80 வெள்ளிக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். அம்மணிகளை விடுதியில் இருக்கச் சொல்லிவிட்டு வாடகைக் வாகனம் இருக்கும் இடத்திற்கு சென்று அதை எடுத்துக் கொண்டு ஒரு 10 கிலோ மீட்டர் சுற்றி வந்தோம், எரிபொருள் நிறப்பிவிட்டு, இண்டெர் நெட் செண்டர் இருந்தால் கொஞ்ச நேரம் ஆன்லைனில் இருக்கும் பதிவர்களிடம் பேசலாம் என்று தேடினோம். எங்கும் இணைய நிலையம் கிடைக்கவில்லை. விடுத்திக்கு திரும்பினோம், அங்கேயே இணைய இணைப்பு இருப்பதாகச் சொன்னார்கள், விலை பேசிவிட்டு அமர்ந்தால் லினெக்ஸ் சிஸ்டம். தமிழ்மண பக்கம் சென்றால் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை. அதை மூடிவிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு உறங்கச் சென்றோம்

டிபிசிடியின் ஒன்றறை வயது குழந்தை அடம் செய்யாமல், அழுவாமல் எங்களை அவ்வபோது மகிழ்வு கொடுத்துக் கொண்டே வந்தது. எனது மகளும் அவர் குழந்தையும் நன்கு நெருக்கமாகி இருந்தார்கள்.

இந்த சுற்றுலா பயணம் இன்னொமொரு மறக்க முடியாத நினைவுகளில் இருக்கும்.

மே 3, மறுநாள் சென்ற இடங்களைப் பற்றி அவருக்கே உரிய பாணியில் தம்பி டிபிசிடி ஐயர் நாளை எழுதுவார் (எழுதிவிட்டார்).


முதல் பகுதிகளின் சுட்டி 1 சுட்டி 2

6 மே, 2008

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு...1

மே 1 தொழிலாளர் நாள் விடுமுறை, வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் கிடைக்கும், என்ன செய்யலாம் ? டிபிசிடி ஐயர் கேட்டார், "நானு, நீங்க, பாரி அரசு, ஜெகதீசன் லங்காவிக்கு போவோமா ? "திருமணம் ஆன ஆளுங்க கூட வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது, நான் வரவில்லை" என்று சொல்லி கன்னிப் பசங்க கழண்டு கொண்டார்கள். உண்மையிலேயே பாரி.அரசு ஐயர்தான் லங்காவி சுற்றுலா போகலாம் என்று முடிவு செய்து சுழி போட்டவராம், பின்னர் கழண்டு கொண்டார்.

நானும், டிபிசிடி ஐயரும் இல்லச் சுற்றுலாவாக செல்லலாம் என்று முடிவெடுத்தோம். கடந்த ஆறு மாதத்தில் நான்காவது முறையாக அவரை அவரது இல்லத்தினரோடு சந்திக்கும் வாய்ப்பாக அது அமைந்துவிட்டது. ஏப்ரல் 30 இரவில் 10.30 மணிக்கு மலேசியா ஜோகூரில் முன்பதிவு செய்த பேருந்து பயணத்தின் ஊடாக மே 1 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பினாங்கு சென்று சேர்ந்தோம். டிபிசிடி பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு மதியம் 12 மணி அளவில் பினாங்கு மலைக்குச் செல்ல முடிவெடுத்து (அவருடைய 'சொந்த' காரிலேயே) கிளம்பினோம். மலைக்குச் செல்ல இழுவை இரயில் டிக்கெட் மாலை 5 மணி பயணத்துக்கு கிடைத்தது. மறுநாள் வெள்ளிக் கிழமை லங்காவி செல்ல கடல் பயணத்திற்காக பெரும் படகு (பெர்ரி) பயணச்சீட்டை ( ஒரு நபருக்கு சென்று வர 105 மலேசியா வெள்ளிகள்) முன்பதிவு செய்துவிட்டு, மதிய உணவுக்காக ஜார்ஜ் டவுன் என்னும் குட்டி இந்தியா பகுதிக்கு வந்தோம். வெஜிடேரியன் உட்லண்ட்ஸ் ஹோட்டல் இருந்து, அங்கு சென்ற போது பிற்பகல் 3 மணியை தொட்டு இருந்ததால், கிடைத்த உணவை உண்டுவிட்டு, பினாங்கு மலைக்குச் சென்றோம், சென்ற உடனேயே இழுவை இரயில் கிடைத்தது, அது ஒரு 15 நிமிட பயண நேரம், இரண்டு பயணமாக பாதி தொலைவில் மாற்றுகிறார்கள். மலை உச்சிக்குச் சென்றோம். ஏற்கனவே நானும், டிபிசிடியும், மேற்சொன்ன நண்பர்களும் சென்ற இடம் தான், என் மனைவியும், மகளும் பினாங்கு மலையைப் பார்க்கவில்லை, இந்த பயணம் அவர்களுக்கு


புதிய அனுபவமாக இருந்தது. சென்ற போது மாலை 5.30 ஆகி இருந்தது. அங்கு மலையில் மரங்களுக்கு இடையே கயிற்றுப்பாலத்தில் நடக்கும் (கனோப்பி வாக்) ஒரு இடத்திற்கு சென்றோம். சென்ற முறை பயணத்தில் நேரமின்மையால் செல்ல முடியாமல் போன குறை எனக்கு தீர்ந்துவிட்டது.

மலை பள்ளத்தாக்கில் உயரமான மரங்களுக்கு கிடையே சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு கயிறு மற்றும் மரப்பலகையால் குறுகிய தொங்கு பாலம் அமைத்திருந்தார்கள், அதில் ஏறி நடக்க ஆரம்பித்த உடனேயே ஊஞ்சலில் நின்று கொண்டே நடப்பது போன்று இங்கும் அங்கும் அசையும், கீழே பார்த்தால் அடிவயிறு கலங்கும் அளவுக்கு பள்ளம், கூடவே கயிறு அறுந்தால் "அம்புட்டுதான்" என்ற பயமும் சேர பாலத்தை கடந்து மீண்டு வருவது ஒருவகையான சிலிர்ப்பு அனுபவம் என்றே சொல்லலாம், அந்த ஒற்றையடி பாலத்திலும் டிபிசிடி செல்ல மகளை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறு கை பிடிமானத்தில் நடக்க மிகவும் கடினமாக இருந்தது, அதன் பிறகு குழந்தையை கை மாற்றிக் கொண்டோம். என் மகளும், மனைவியும் முதலில் ஏறிச் சென்று விரைவாகவே கடந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கயிற்றுப் பாலம் சம தளத்திலும் இல்லாது மேலும் கீழும் ஏற்ற இரக்கம், பலகை சரியாக பொருத்தியும், இறுக்கம் இல்லாமல் இருந்ததால் கால்களைப் பார்த்து பார்த்தே கடக்க வேண்டி இருந்தது.

ஒருவழியாக 200 மீட்டர் தொலைவை கடந்து வந்ததும். "ஆக என்ன ஒரு அனுபவம்" என்று நினைக்க வைத்தது. "இதுக்கெல்லாம் குடும்பத்தோடு ரிஸ்க் எடுக்கனுமா " என்ற கேள்வியும் மனசுக்குள் இருந்தது. அதன் பிறகு மலை உச்சியிலேயே சிறிது இளைப்பாறிவிட்டு, கிழே இறங்க ரயில் பயணச் சீட்டு இருந்தும், வாடகை ஜீப் ( 80 மலேசிய வெள்ளிகள்) வழியாக இறங்கலாம் என முடியும் செய்தோம், மாலை மணி 7 ஆகி போதிய வெளிச்சமாக இருந்தது.

நல்ல ஒரு வழிகாட்டியாக கிடைத்த சீன ஓட்டுனரின் ஜீப்பில் ஏறி ஒரு அரை மணி நேரப்பயணமாக கீழிறங்கி, இடையில் மூதாதையரின் (குரங்குகள்) தரிசனம் செய்துவிட்டு டிபிசிடியுன் கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வந்து 'சோர்'ந்தோம்.

திரும்பவும் லிட்டில் இந்தியாவில் இரவு சாப்பாடு முடித்துவிட்டு, வீடுவந்து சேர்ந்து மறுநாள் லங்காவி செல்ல எல்லாவற்றையும் எடுத்துவைத்ததுடன் அன்றைய பொழுது முடிந்தது.

இன்னும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கும் டிபிசிடி ஐயரின் இடுகை இங்கே.

கடைசி இரு படங்கள் முன்பு சென்ற போது பினாங் மலை உச்சியில் இருந்து எடுத்தவை.

லங்காவி பயணம் தொடரும்... அதில் நமீதா பற்றிய சுவையார்வமான தகவல்கள் உண்டு .

5 மே, 2008

இந்தியர்கள் வைகோல் சாப்பிடனுமா ?

உயர்சாதி மனப்பான்மை எப்போதும் ஏழை எளியவர்களுக்கு சத்தான உணவு கிடைத்தால் பொறிந்து தள்ளிவிடுவார்கள். மூன்றுவேளையும் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மானியத்தில் தரமான உணவு கிடைத்தால் 'அரசாங்கம் எல்லாவற்றையும் இலவசமாக அறிவித்து மக்களை சோம்பேறி ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புவார்கள். அதே சமயத்தில் அவர்கள் செத்த விலங்கைத் தின்றாலும் 'இவன் இழிபிறவி, தீண்டத்தகாதவன்' என்றெல்லாம் சொல்லி அவன் உணவு முறைகளை வைத்தே அவனை தூற்றுவார்கள்.

அந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை, உண்மை என்றால், அமெரிக்காவைப் பொறுத்து இன்னும் இந்தியா, சீனா ஏழை நாடுகள்தான் போலும், இவர்கள் தரமான, சத்தான உணவு வகைகளை உண்ணக் கூடியவர்கள் அல்ல என்று நினைத்திருப்பார்கள் போலும், கடந்த பத்தாண்டில் இந்தியா, சீனாவில் மென்பொருள் வேலை முதல் இயந்திரவியல் வேலைகள் செய்யும் அனைவருக்கும் கனிசமான ஊதியம் கிடைக்கிறது, நடுத்தர வர்கத்தினரின் தனிமனித வருமானம் உயர்ந்திருக்கிறது.

இத்தகைய பொருளியல் உயர்வால் நல்ல பொருள்களை தேடி வாங்கும் திறனும் மிகுந்திருக்கிறது. முன்பெல்லாம் பெயர் பெற்ற (Branded) பொருள்களை பகட்டுக்காக வாங்குவார்கள், தற்பொழுது தரம் காரணமாக அத்தகைய பொருள்களை நடுத்தர வர்கத்தினரும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள், 100 ரூபாய்க்கு நான்கு பொருள் வாங்கி நான்கு மாதத்தில் அது தரத்தை இழந்து பல் இளிப்பதைப் பார்பதைவிட, 100 ரூபாய்க்கு ஒரு பொருள் கிடைத்தாலும் அது நீண்ட நாட்கள் நிற்கும் என்ற நம்பிக்கையில் தரமான பொருள்களையே விரும்பி வாங்குகிறார்கள், ஏற்றுமதி விற்பனைக்கு என்று பொறிக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவிலேயே நன்றாக விற்பனை ஆகிறது.

முன்பெல்லாம் சீனத்தயாரிப்புகள் தரம் காரணமாக ஐரோப்பிய நாடுகளால் புறக்கணிக்கப்ப்ட்டு வந்தது, தற்பொழுது விலைக் குறைவு என்ற காரணத்தினால் சீனத்தயாரிப்புகளை ஐரோப்பியர்களும் நாட ஆரம்பித்துவிட்டார்கள், அதற்கு காரணம் சீனத்தயாரிப்பு மேம்பட்டு இருக்கிறது என்ற பொருள் அல்ல, மாறாக தரமான பொருள்களின் உலகளாவிய தேவை மிகுந்துவிட்டது. அதற்கு ஈடுகொடுத்து உலக நாடுகளால் தரமிக்க பொருள்களை உற்பத்தி செய்ய முடியாமல் சென்று, அந்த கூடுதல் தயாரிப்புகளையும் சீனா, இந்திய நாடுகளிலேயே உற்பத்தி செலவு குறைவு என்பதால் செய்யும் நிலமை ஏற்பட்டுவிட்டது.

ஆசிய நாடுகள் என்றாலே எதோ காட்டுமிராண்டிகள் என்று நினைத்துவந்த மேற்கத்திய நாடுகளுக்கு, இந்தியாவும் சீனாவும் தரமான பொருள்களை வாங்குவதும் அன்றி உற்பத்தி செய்வதற்கும் இந்த நாடுகளின் தயவு வேண்டி இருப்பது எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் தரமான பொருள்களையும், உணவுகளையும் நாடாமல் தன் போக்கில் தன் உற்பத்தியிலேயே காலம் தள்ளிய இவ்விரு நாடுகளும், தரமான பொருள்களை உலக சந்தையில் பெருவதால், இந்த பொருள்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகவே சென்றுவிட்டது. உலக நாடுகள் எங்கும் உணவு பொருள்களின் விலை ஏற்றம், சிங்கையில் அரிசி விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இருமடங்கு. ஆயத்த (ரெடிமேட்) உணவின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

உலக நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உணவு பொருள் விலை உயர உயர அந்த அரசாங்கங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது, மக்களிடம் மனக்குறையும்(அதிருப்தியும்) ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் சீனாவும், இந்தியாவும் தரமான உணவு பொருள்களை வாங்குவது தான் காரணம் என்று சொல்கிறார்கள். வாங்குவதுதான் காரணமே அன்றி இந்தியர்களும் சீனர்களும் நிறைய சாப்பிடுகிறார்கள் என்று சொல்வது கண்டனத்துக் குரியதுதான். இந்தியர்களும் சீனர்களும் சாப்பிடுவது உலக நாடுகளால் தரப்படும் இலவச உணவு இல்லை.

உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத உயர்சாதி மனப்பான்மைக்கும், மேல்நாட்டு மன்னர்களுக்கும் நடுத்தரவர்கம் நன்றாக சாப்பிட்டால் வயுறு எரியும் போல் தெரிகிறது. இவர்களுக்காக இந்தியர்களும் சீனர்களும் வைக்கோல் சாப்பிட முடியுமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்