பின்பற்றுபவர்கள்

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 செப்டம்பர், 2014

குழந்தைகள் பெற்றோருடன் உறங்கலமா ? 18+

ஹோம் சிக் எனப்படும் பெற்றோரின் நினைவு நம் தமிழக / இந்தியர்களுக்கு தான் மிகுதி, பருவ அகவையை கடந்தும் பெற்றோரை விட்டு இரண்டு நாள் பிரிவு கூட மன உளைச்சலையும் ஏக்கத்தையும் ஏற்படுத்திவிடுவதால் எதற்கு சென்றோமோ அதை நிறைவாக செய்து திரும்ப மாட்டார்கள்.

கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து நாம் விலகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது, கூட்டுக் குடும்பமாக வசித்த காலங்களில் பெற்றோர்களுடன் குழந்தைகள் உறங்குவது கிடையாது. பால் குடி மறக்கும் வரை பெற்றோருடன் படுத்திருக்கும், பிறகு தத்தா பாட்டியுடன் தான் உறங்குவார்கள், 6 ஆம் அகவைக்கு மேல் வசிக்கும் அறையில் (ஹால்) மற்ற பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து படுத்துக் கொள்வார்கள், 8 ஆம் அகவைக்கு மேல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் தனித் தனியாக குழுவாக உறங்குவார்கள், பருவ வயதை அடைந்ததும் தனி அறை வசதி இருந்தால் அதில் உறங்குவார்கள், பெரும்பாலும் பருவத்தை கடந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணமும் முடிந்துவிடும்.

நம் அப்பா காலத்திலேயே கூட்டு குடும்ப அமைப்பில் இருந்து நாம் விலகியாகிவிட்டது, நடுத்தர வர்கம் என்னும் கோட்டில் ஓரறை வீடுகளில் (ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு ஹால் வசதி கொண்டதில்) வசித்து தான் நம்மில் பெரும்பாலோர் படித்து வளர்ந்திருப்போம், குழந்தைகளை தனித்து படுக்க வைத்தால் இரவில் அச்சமடையலாம் என்பதால் பெற்றோர்களுடன் தான் இரு குழந்தைகளும் உறங்கும் படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள், இதில் இருக்கும் சிக்கல் பெற்றோரான கணவன் - மனைவியுடன் ஆன உறவு சீர்கெடுவதுடன். கணவன் மனைவி இருவருக்குமான பிணைப்பு குறைந்துவிடும்.

திருமணமானவர்களின் படுக்கை அறை என்பது ஓய்வெடுக்கும் அறை மற்றும் பாலியல் தேவைக்கான வடிகால் என்பதைத் தாண்டி கணவன் மனைவி இருவருக்குமிடையேயான பேச்சு வார்த்தைகளும் அதன் மூலம் இருவரின் புரிந்துணர்வை வளர்க்கும் இடம், ஆனால் குழந்தைகளை கூடவே படுக்க வைத்திருப்பதால் பெற்றோர்களின் தனிமையும் அதை சார்ந்த விருப்புகளும் குழந்தைகள் தூங்கினால் இன்றி வாய்பே இருக்காது, குழந்தைகள் உடனேயே தூங்கிவிடாது, 9 மணிக்கு தூங்க வைத்தாலே கொட்ட கொட்ட விழித்திருந்து கதைகளை சொல்லக் கேட்டு 10 மணிக்கு தான் தூங்கும், அதற்குள் அசதியில் கணவனோ, மனைவியோ தூங்கி இருப்பர், 

திருமண மான ஆண்களைப் பொருத்த அளவில் பாலியல் தேவை என்பது அன்றாடம் தேவைப்படும் ஒன்று, அதை ஒரு மனைவியால் புரிந்து கொள்ள முடிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் விடியற்காலையிலோ, வீட்டில் குழந்தைகள் இல்லாத பகல் பொழுதிலோ, எந்த ஒரு தூண்டலும் இல்லாத வேளைகளில் உறவு வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இயல்பான பாலியல் இன்பம் தூய்பதற்கு மாற்றாக, கழிவறையைப் பார்த்ததும் ஏற்படும் சிறு நீருக்கான உந்துதல் போல் நேரம் கிடைக்கும் போது மட்டும் நடந்து முடிந்துவிடுகிறது.

தலையணை மந்திரம் என்று மாமியார்கள் விமர்சனம் செய்யும் காலகட்டங்களில் கூட மண முறிவுகள் மிக அறிதாகவே நடந்தது, தற்காலத்தில் மிகுந்துவிட்டதற்கு காரணமே, கணவன் - மனைவி இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்து போய், பாலியல் தேவையின் தீர்வு, கடமை என்ற நிலைக்கு தள்ளப்படும் பொழுது, தேவையற்ற சிறு சொல்லும் சீண்டலும், கிண்டலாக ஏற்கப்படாமல் வெறுப்பாக மாற்றி நினைக்கப்பட்டு உறவுகள் சீர் குழைகின்றன, திருமணமான ஆண்களின் வெளி நாட்டமும் மிகுந்துவிடுகிறது, திருமணம் ஆன ஆண்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் கள்ளத் தொடர்புகளையோ, பாலியல் தொழிலாளியை நாடுவதையோ ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

25 அகவைக்குள் திருமணம் நடந்தால் தம்பதியினரிடையே புரிந்துணர்வு மேம்பட இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட முடியும், ஆனால் இனிமே நமக்கு சந்தை மதிப்பு இல்லை என்னும் நிலையில் ஆண்கள் 30 அகவைக்கு மேலும் பெண்கள் 25 க்கு மேலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் குழந்தைப் பிறப்பு உடனடியாக நிகழவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர், குழந்தை உருவனாதுமே குழந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் தம்பதிகள் தள்ளிப்படுக்க நேர்ந்துவிட இயல்பான நெருக்கம் குறைந்துவிடும், குழந்தை பிறந்து ஒராண்டாகியும் அடுத்து உடனேயே ஏற்பட்டுவிட்டால் ? என்ன செய்வது என்பதில் தம்பதியினரின் நெருக்கம் குறைந்து இடைவெளி மிகுந்து கொண்டே வரும், பின்னர் குழந்தைகள் உறங்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று பாலியல் தேவையின் தீர்வு, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே.

குழந்தைகளை வெளிநாட்டினர் 3 ஆம் திங்களில் (மாதம்) இருந்தே தனித்து படுக்க வைத்துப் பழக்குகின்றனர், இதனால் தம்பதியினரின் நெருக்கம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை, குழந்தைகளின் மீதான அன்பும் குறைவதும் இல்லை, இந்திய பெற்றோர்களும் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கும் வசதியுடன் வீடு இருந்தால் படுக்க வைத்து பழக்கலாம், குழந்ந்தைகளின் நடவடிக்கைக் குறித்து, குழந்தைகளை அருகில் படுக்க வைத்துக் கொண்டு பேசவே முடியாது, ஒன்றாக படுக்கும் குழந்தைகள் பல வேளைகளில் நடு இரவில் கூட விழித்திருக்கும்,  குழந்தைதான் தூங்கி விட்டதே என்று நினைத்து தம்பதிகள் கூடினால், மறுநாள் தன்னுடன் படிக்கும் குழந்தைகளிடம் 'அப்பாவும் அம்மாவும் ராத்திரி கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று வெகுளியாக சொல்லிவிடும், சிறுவயதில் இது போன்ற பேச்சுக்களை நான் என் அகவையை ஒத்தவர் (7, 8 அகவையினர்)  சொல்லக் கேட்டிருக்கின்றேன். எந்த குழந்தையும் பெற்றோர்கள் இருவரும் தன்னிடம் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்பும், இரவில் தப்பித் தவறி அம்மா அப்பா கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களால் அதை ஏற்க இயலாது. 

நடு இரவின் அமைதியில் நாம் பெற்றோர்களுடன் படுத்தகாலங்களில் 'குழந்தைகள் தூங்கட்டும்...' னு அம்மா மெல்லிய குரலில் சொல்லுவதை காது கொடுத்திருப்போம், அதற்கான பொருள் நாம் பெற்றோர் அகவையை அடையும் பொழுது நினைத்தால், மிகவும் தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது, பெற்றோரின் தனிமையும் அதற்கான தேவைகளை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்கிற வெட்கப்பட வைக்கிறது. அதே தாழ்வுணர்வை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டாமே.

குழந்தைகளுக்கு 6 அகவை வரை பாலியல் உறுப்பு பற்றிய விழிப்புணர்வும், அம்மணமாக நிற்பதின் கூச்சமும் தெரியாது, அதுவரை கூட பெற்றோர்களுடன் படுப்பதால் அதற்கு மன அளவில் பாதிப்பு ஏற்படாது, 6 ஆம் அகவைக்கு மேல் சுற்றி நடப்பவற்றை ஆராயும் எண்ணம் ஏற்படும், பெற்றோரின் உறவு காட்சிகளை பார்க்கும் நிலை ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு அடையும். 5 அகவைக்கு மேல் குழந்தைகளை தனித்து படுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு தனிமை குறித்த அச்சம் நீங்கும், தன்னம்பிக்கை வளரும்.

படுக்கை அறையின் தேவை கணவன் மனைவியினரிடையே புரிந்துணர்வை வளர்க்கும் இல்லத்தை மேம்படுத்தும் வீடு வாங்குதல், வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுதல் குறித்த பேச்சுவார்த்தைகான இடம், அதன் பிறகு பால் உணர்வு தீர்வு, அதில் முன் விளையாட்டு, ஒன்று கூடல் என தூங்கும் முன் ஒரு மணி நேரமாவது செலவிட்டு பின்னர் கட்டியணைத்தப்படி தூங்குவதால் இருவருக்குமான நெருக்கம் மேம்படும், அன்றாடம் முடியாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டாலே தேவையற்ற பிணக்குகள் குறைந்து போய்விடும், வேலைக்கு செல்லும் மனைவியரின் நிலையை கணவர்கள் புரிந்து கொள்ள படுக்கை அறையை விட்டால் வேறு நேரமோ இடமோ வாய்காது. 

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வெகுளித்தனமான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை,  இல்லம் என்பதில் பலர் ஒன்றாக இருந்தாலும் தேவைகள் தனித்தனியானவை,  ஒவ்வொருவரின் தேவைகளுமே கவனிக்கத் தக்கத்து, இன்றியமையாதது,  அப்பா என்னும் ஆண்களைப் பொருத்த அளவில் தம் குழந்தைகள் மீது அன்பு இருக்கும் அளவுக்கு, மனைவியுடன் கூட விரும்பும் பாலியல் தேவைக்கான வடிகாலும் தேவைப்படும். மனைவியின் வெறும் முகத்தை மட்டுமே பார்த்து தூங்க ஆண்கள் விரும்புவதில்லை. சூழல்களை ஆண்கள் புரிந்து கொண்டாலும் ஏற்க விரும்புவதுமில்லை, நாளடைவில்  உன் முகத்தை பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள், அதே போன்று எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு அது தான் முக்கியமா ? என்கிற மனைவியின் ஏளனம் / இயலாமை / வெறுப்பு...இதை எதிர் கொள்வதை தவிர்க்க ஆண்களின் வெளி நாட்டம், அதன் பிறகு அவை வெளியே தெரிய மொத்தத்தில் இல்லத்தின் அமைதி குலையும். பொதுவாகவே பெருவாரியான ஆண்களின் அலையும் மனது சந்தர்ப்பத்திற்கும் காரணத்திற்கும் காத்திருக்கும், இதில் இரண்டில் எது வாய்த்தாலும் தவறு செய்துவிடுவார்கள், 

***************

வளர்ந்த குழந்தைகளை தனியாக படுக்க வைத்துப் பழக்கி, அங்கேயே சிறிது நேரம் இருந்து தூங்க வைத்துவிட்டு, தேவை ஏற்பட்டால் நடு இரவில் அவர்கள் நன்றாக உறங்குகிறார்களா, அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று எழுந்து வந்து பார்க்கலாம், ஒற்றைக் குழந்தைகளுக்கு கூடவே ஒரு பொம்மையை படுக்க வைத்தால், மிகவும் பிடித்த பொருள்களை வைத்துவிட்டால் அவர்களுக்கு தனிமை தெரியாது, அவர்களுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்களின் அறையிலேயே அருகில் படுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம்,  விடுமுறை நாட்களில் பகலில் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து குழந்தைகளின் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும், எங்காவது சுற்றுலா சென்றால் ஒன்றாக படுத்து உறங்கலாம், அதைவிடுத்து வீட்டிற்குள் குழந்தை பாசம் என்கிற உணர்வில் தம் உணர்வுகளை அழித்துக் கொள்வதால் தீமையே தவிர்த்து எந்த நன்மையும் இல்லை, கூடவே படுத்து பழகும் குழந்தைகள் ஒரிரு நாட்கள் கூட பெற்றோர் இல்லை என்றால் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்ளத் தெரியாது வளரும். நன்றாக குழந்தைகளை வளர்த்து,  இல்லற இன்பத்தை நீட்டித்து வாழ விரும்புவர்கள் குழந்தைகளை தனியாக படுக்க வைப்பத்தால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை.

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பி, வெளிநாடு சுற்றுலா சென்றால் அவரின் நான்கு குழந்தைகளுக்கும் தனி அறை தான் எடுப்பார், ஏன் என்று கேட்டேன்,  அவர் சொன்னார்,

My Husband also important for me, I have to / like to entertain him in the night, sleeping with children is nothing other than sleepless, So when ever we go for tour, I  always prepare to book 2 bedroom residential apartment type hotel, instead of separate hotel rooms. 

Seems to be valid right ?

19 ஆகஸ்ட், 2014

படகர் மொழியை காப்பாற்றுவது யார் ?

வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.

*****

திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,

வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது,  அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.
The Badaga Script developed by Anandhan Raju

வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.




கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.

இணைப்புகள் :

Badaga language

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

31 மே, 2014

அப்பாவின் நண்பர்கள் !

நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.
(இது என் தம்பி)
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும்,  இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.

அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.

அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், 

அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.

அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ்  இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். 

அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.

இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா'  (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.

இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.

***

இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து  செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.

நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. 

இதை வாசிக்கும்  நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். 

இது நான் தான்

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

19 ஜனவரி, 2014

தேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் !

மொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

இன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.

எந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.

பேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.

'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள், 

ஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் ? பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.

தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை. 

ஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.

ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.

ஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !

28 டிசம்பர், 2013

குட்டி இந்தியா கலவரம் பற்றி ...

சிங்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது, சிங்கையில் இருக்கும் இவரு ஏன் வாயத்திறக்காமல் இருக்காருன்னு பலர் நினைக்கக் கூடும், நேரமின்மைத் தவிர்த்து, இந்தியசார்பு ஊடகங்களில் இவை எவ்வாறெல்லாம் திரித்து எழுதப்பட்டு, உணர்ச்சி தூண்டுதலை உருவாக்குகிறார்கள் என்று கவனித்து வந்தேன்.

சென்ற டிச 9 ஆம் தேதி அலுவலகம் சென்ற பிறகு தான் முதல்நாள் இரவு குட்டி இந்தியாவில் கலவரம் நடந்தது பற்றி தெரியவந்தது. இந்தியர்கள் குறிப்பாக ஒப்பந்த பணிக்கு முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி வந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது, 'உங்காளுங்க ...?' என்பது போல் பிற இனத்தவரும், வட இந்தியர்களும் நம்மைப் பார்த்து பார்வையிலேயே கேட்கும் பொழுது விட்டுக் கொடுக்க முடியாமலும், மென்று விழுங்க முடியாமலும் கொஞ்சம் அவமானமாக கூனிக்குறுகியது உண்மை.

ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அங்கு சென்றிருக்கும் சீனர்களை தாக்கி இருந்தால் நிலமையின் விபரீதம் குறித்து அச்சமுற்றேன். கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது, என்னைக் கேட்டால், எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலர் குடித்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தில் கல் எரியும் போது ஏற்படும் கொந்தளிப்பிற்கு பிறகு அவற்றை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஏற்படும் கோபம் அதனால்  'உணர்ச்சிவசப்படுதல்' என்பது தவிர்த்து பெரிய காரணம் இல்லை. ஒரு விபத்தில் / விபத்தாக ஏற்பட்ட மரணமும், அதில் இரத்த்தை கண்டதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபமும் இந்த  கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருதுகிறேன்.

இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் எதுவும் ஒப்பந்த ஊழியார்களுக்கு சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக சொல்வது கிடையாது, இங்கு எந்த ஒருகாரணத்திற்காகவும் வேலை புறக்கணிப்பு அல்லது எந்த போராட்டமும் செய்வதற்கு அனுமதி இல்லை, குறைகளை மனித வள அமைச்சிடம் தெரிவிக்கலாம். எந்த ஓரு ஆயுதம் ஏந்திய தாக்குதல் என்றாலும் கடுமையான தண்டனைகள் உண்டு இதற்கு சிங்கப்பூர்வாசிகளுக்கும் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் குப்பைப் போடக்கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்று வேலைக்கு எடுப்பவர்களிடம் முகவர்கள் சொல்கிறார்களே அன்றி, வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கலவரம் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து தெளிவாக அறிவுறுத்துவதில்லை, இதற்கு காரணம் இவ்வாறெல்லாம் நடக்காது என்கிற அசட்டுதனமான நம்பிக்கை அல்லது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

சிங்கபூரின் பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், சுற்றுலாத் துறை இவற்றை நம்பியே இருக்கிறது, தவிர தனிமனித பாதுகாப்புக்கும், அவர்களது உடமைகளுக்கும் முதன்மைத்துவம் கொடுப்பதால் பெண்களால் இரவு இரண்டு மணிக்கு மேல் கூட வேலையில் இருந்து வீட்டுக்கு தனியாகவே திரும்ப முடிகிறது, இவை அனைத்தையும் கெடுக்கும் துவக்கமாக கலவரம் நடந்ததுவிட்டதோ என்று நினைக்க சிங்கப்பூரின் எதிர்காலம் / பொருளாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இவற்றை ஒடுக்கவேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தியர்கள் / தமிழர்கள் கூட்டமாக இருந்தாலும் கலவரம் செய்யமாட்டார்கள் என்று நம்பித்தான் அரசு அவர்களை பொது இடத்தில் கூடவும், குடிப்பதைக் கூட கண்டும்காணமால் இருந்தது, இப்படிக் கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள் என்பதே தமிழர்களின் மனநிலையாக உள்ளது, இவர்களால் அந்தப்பகுதி வியாபாரிகளுக்கும் பெருத்த நட்டம், நிலைமை பழையபடிக்கு திரும்ப ஆறுமாதகாலம் கூட ஆகலாம், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவிற்கு செல்வதையே பலர் தவிர்க்கும் பொழுது அந்த எண்ணிக்கையை மேலும் மிகுதியாக்கிவிட்டது இந்த நிகழ்வு.

இந்த பிரச்சனையில் அறிக்கைவிடுகிறேன் என்கிற பெயரில் தமிழக அரசியல்வாதிகளும், சன் தொலைகாட்சியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகம், பொத்தாம் பொதுவாக இனக்கலவரம், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், முடங்கிக்கிடக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள், இந்தியாவில் / தமிழகத்தில் கலவரத்திற்கு பிறகு நடக்கும் 'விசாரணைகளை' ஒப்பிட லிட்டில் இந்தியா பகுதிகளிலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகளிலும் நடந்த விசாரணைகள் மிகவும் கண்ணியமானவை. அமைச்சரே நேரில் சென்று தவறு செய்யாதவர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்று ஆறுதல் கூறிவந்தார்.


அடிப்பட்டு உருக்குலைந்த ஆம்புலென்ஸ் உள்ளிட்டு, அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு என்பதால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்

இந்திய ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சிங்கையில் மத / இனப்பாகுபாடுகள் பார்த்து சிங்கை அரசு செயல்படுவது கிடையாது, திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.

நடந்த கலவரத்தை பெரிதுபடுத்தாமல் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ்தமிழ்மக்களும் மென்மேலும் வளருவார்கள்.

6 டிசம்பர், 2013

சத்தமில்லாமல் பணம் சு(ருட்)டும் பட்ஜெட் விமான சேவைகள் !

கட்டுபடியான கட்டண சேவை என்ற அளவில் பட்ஜெட் விமான சேவைகள் கொடிகட்டி பறக்கின்றன, இதன் மூலம் நடுத்தர வர்கம் விமான சேவையைப் பயன்படுத்தி ஓரளவு பிற நாடுகளையும் பார்த்து உள்நாட்டிலும் பயணிக்க வசதியாக உள்ளது. ஆனால் பட்ஜெட் விமானங்களுக்கு குறைந்த கட்டணம் எப்படி வாய்ப்புக் கூறு ஆகிறது என்று பார்த்தால் மயக்கம் போடும் அளவுக்கு அதன் பின்புலன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. 

ஒரு பட்ஜெட் விமானத்தில் முன்பே திட்டமிருந்தால் ஒரு ஆண்டுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டால் கட்டணம் மிக மிகக் குறைவு.ஆனால் இவ்வாறு திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் மிகக் குறைவே, இதனை தூண்டும் விதமாக 75 வெள்ளிக்கு சென்னை - சிங்கப்பூர் என்று குறிப்பிட்ட தேதிக்கான சிறப்புக் கட்டணம் என்று கூறி ஆறுமாதம் முன்பு விளம்பரம் செய்வார்கள், 75 வெள்ளிகள் என்றால் இந்திய ரூபாய்க்கு 3750. இது ஒருவழிக்கு மட்டுமே திரும்பும் கட்டணம் 75 வெள்ளி ஆக 7500 ரூபாய். பொதுவான விமானக் கட்டணம் 15,000 ரூபாய் என்றால் இது அதில் பாதி அளவே என்பதால் சரி முன்பதிவு செய்வோம் என்று முண்டியடித்து பலர் முன்பதிவு செய்துவிடுவார். விமான சிறப்பு கட்டண விளம்பரத்தில் தெளிவாக தேதி மாற்ற முடியாது மாற்றினால் கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது என்பதையும் குறிப்பிட்டுவிடுவார்கள்.

இவ்வாறு முன்பதிவு செய்தவர்களில் குறிப்பிட்ட தேதியில்  பயணிக்க விடுப்பு மற்றும் உடல் நிலை ஒத்துழைப்பு கிடைப்பவர்கள் சரிபாதியோ அல்லது அதற்கு சற்று மேலும் கூட இருக்கலாம். குறிப்பிட்ட நாளில் விமான சேவைக்கு தடங்கல் ஏற்பட்டால் வேறு தேதிக்கு பயணச் சீட்டு தருவார்கள் என்றாலும் அன்றைக்கும் செல்ல முடிந்தவர்கள் கனிசமாக குறைந்துவிடுவர். முன்பதிவு செய்தவர்களில் 50 விழுக்காட்டினர் வரமுடியாத நிலையில் விமானம் பறக்கும், வரமுடியாதவர்கள் கட்டியப் பணம் அம்பேல் தான். 75 வெள்ளி பயணச் சீட்டில் 25 வெள்ளி இருக்கைக்கும், 50 வெள்ளி அரசாங்க வரிக்கும் செல்லும், பயணி வராத நிலையில் 50 வெள்ளியை அரசாங்கத்திற்கு செலுத்த தேவை இல்லை என்ற விதி இருப்பதால், அவையும் சேர்த்தே விமான நிறுவன பாக்கெட்டிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு பயணிகள் பயணிக்காமல் விமான சேவை அரசு வரியாக பட்ஜெட் விமான நிறுவனங்களுக்கு கிடைக்கும்  பணம் ஆண்டுக்கு பல மில்லியன்கள். எந்த அரசும் பயணிக்காத விமான சீட்டுக்கு வரி வாங்க முடியாது என்பது விதி எனவே பட்ஜேட் விமான நிறுவனங்கள் பணத்தால் நிறம்பியே இருக்கும்.

பயணச் சீட்டுக்கு வரியாக கட்டிய பணத்தை திரும்பப் பெரும் உரிமை முன்பதிவு செய்தவருக்கு உண்டு என்றாலும், அவற்றை தந்திரமாக தன் வசம் வைத்திக் கொள்ளவும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் பல வழிகளை கையாளுக்கின்றன, பயணிக்க இயலாத நிலையில் 50 வெள்ளி வரியாக செலுத்திய பணத்தை திரும்ப பெறலாம் என்று நிறுவனத்தை அழைத்தால், கண்டிப்பாக தருவோம் ஆனால் அதற்கு நடைமுறைக் கட்டணம் (Process / Admin Fee) 100 வெள்ளி ஆகும் என்று கூறுவார்கள், யாராவது 50 வெள்ளியை திரும்ப வாங்க 100 வெள்ளி செலவு செய்ய முன்வருவார்களா ? அவ்வாறு வந்தாலும் அதிலும் பட்ஜெட் விமானங்கள் இன்னும் ஒரு 50 வெள்ளியை கரந்துவிடும்.

இந்த குளறுபடி ஏமாற்று எல்லாம் உலகில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் தெரிந்தாலும் எல்லோருமே ஒட்டுமொத்தமாக மவுனியாகத்தான் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவரால் குறிப்பிட்ட தேதியில் பயணிக்க முடியாமல் போனால் குறிப்பிட்ட விமான பயணச்சீட்டை வேண்டாம் (Cancel) என்று பதிந்துவிட்டால் வரியில் ஒருபகுதி அரசிற்கு செல்லுமாம், இல்லை என்றால் மொத்தமாக அரசுக்கும், பயணிக்கும் பட்டை நாமம்.

இப்ப தான் தெரிகிறது நம்ம தமிழ் நாட்டு சகோதரர்கள் ஏன் பட்ஜெட் விமான நிறுவன சேவையிலும் கால் பதித்தார்கள் என்பதே.

தொடுப்புகள் :

21 அக்டோபர், 2013

சிங்கப்பூர் கோவில்கள் தானே எழுந்தவையா ?

இன்னிக்கு சிங்கப்பூரில் மாரியம்மன் கோவில் தீமிதி, பெருமாள் கோவில் செரங்கூன் சாலையில் இருந்து டாங்க் சாலை வரை கிட்டதட்ட 4 கிமி சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரவுக்கு இடையூரா வண்ணம், தீ மிதிக்கு அன்பர்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து பாதுகாவலர்களையும் அமர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அரசு சார்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு, இது போன்று தைபூசம் காவடிக்கும் அரசு தரப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்களை மதித்து ஏற்பாடுகளை செய்யும், சாலை போக்குவரத்தில் குறிப்பிட்ட மணிகளுக்கு ஒரு சில மாற்றங்களையும் செய்துகொடுப்பார்கள். தமிழர்கள் சிறுபான்மை சமூகமாக வாழும் சூழலில் இத்தகைய ஏற்பாடுகள் (மலேசியா தவிர்த்து) வேறு நாடுகளில் எங்கும் கிடைக்காத ஒன்று. 

இன்றைக்கு 4000 ஆண்கள் தீ மிதிக்கிறார்களாம். வெறும் முற்போக்கு சிந்தனை என்றால் 'என்ன கருமாந்திரம், நாடுவிட்டு நாடு வந்து வாழ்ந்தாலும்' தீ மிதி சாமியாடுவது, தீச்சட்டி என்று பழமையிலே வாழ்கிறார்களே என்கிற எண்ணம்  எனக்கு இருந்திருக்கும், ஆனால் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி அதைத் தொடர இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, சிங்கப்பூர் இந்திய சமூகம் என்பவை இன்றைக்கு எங்களைப் போன்று படித்தவர்களாக பாதுக்காப்புடன் குடும்பமாக குடியேறியவர்களும் அல்லர், வெள்ளைக்காரனின் எடுபிடி ஆட்களாக இங்கேயே தங்கும் சூழலில் கலப்பினங்களை மணந்து உறவுகளைப் பெருக்கிக் கொண்டும், தமிழகத்தில் இருந்து உறவுக்காரர்களை மணந்து பெருகிக் கொண்டர்வளாகவும் பெருகியவர்கள் தாம். 

தம்மை பெருளாதாரத்தில் வளர்த்துக் கொள்ளாவிட்டாலும் சமூமாக முன்னேறுவதன் மூலம், வரும்கால வாரிசுகள் சமூகம் ஏற்படுத்தி வைக்கும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு முன்னேறும் என்ற  நம்பிக்கையுடன் தமிழ் சார்ந்த அமைப்புகளையும், கோவில்களையும் ஏற்படுத்து வைத்துள்ளனர், இங்கும் சாதிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் உள்ளன என்றாலும் யார் யார் கோவிலுக்கு வரலாம் என்ற வரையறையெல்லாம் எதுவும் கிடையாது கோவிலுக்கு ஏற்ற உடையுடன் செருப்பு அணியாமல் யார் வேண்டுமானாலும் கோவில்களுக்கு சென்று வரலாம், சிங்கப்பூர் இந்தியர்களில் (தமிழர்களில், இவர்களெல்லாம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே வந்தவர்கள், ஏன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியர்கள் என்கிறார்கள் என்பதற்கு காரணம் பெரிய நிலப்பரப்பை சொல்வது சமூகம் சார்ந்த அடையாளத்தில் கூடுதல் மதிப்பை தரும் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்) இந்துக்கள் மட்டுமின்றி, தமிழ் கிறித்துவர்கள் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் தேவலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.



கடந்த 30 ஆண்டுகளுக்கு எங்களைப் போன்று குடியேறியவர்கள் முன்பு குடியேறியவர்கள் அமைத்துள்ள வசதி வாய்ப்புகளைத் தான் பயன்படுத்திக் கொள்கிறோம், சிங்கப்பூரில் முருங்கைகாயும், பனங்கெழங்கும் கிடைக்கிறதென்றால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவானவைதான், செரங்கூன் சாலைக்கு சென்றால் தமிழகத்தின் பகுதி போல் தோன்றும், மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவையெல்லாம் ஒரே இரவில் உருவானவை அல்ல.  இவற்றை இன்னும் மிகுதிப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவகளில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒருகாலுமாக இங்கே ஈட்டுவதை தமிழத்தில் சொத்துவாங்குவது அங்கு 'சிங்கப்பூர்காரர்' என்ற புகழுடன் வாழ்வதையே விருப்பமாகக் கொண்டு செயல்பட்டதால் சீனர்களைப் போல் மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவோ, சிங்கப்பூரில் சொத்து வைத்திருப்பவர்களாகவோ இந்திய சமூகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை, சீனர்களில் பணக்காரர்கள் 10 விழுக்காடு என்றால் 10 விழுக்காடே வசிக்கும் இந்தியர்களில் பணக்காரர்கள் 1000ல் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே.

முகவரிடம் பணம் கட்டி தனியாக வேலைக்கு வந்தவர்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் குடும்பமாக வசித்தவர்கள் இந்தியாவில் சொத்துவாங்காமல் இங்கேயே முதலீடு செய்திருந்தால் இந்திய சமூகம் தன்னிறைவு அடைந்திருக்கும், ஆனால் எங்கு கடைசிகாலம் என்பதை குழப்பி குழப்பி இந்தியாவில் சொத்து வாங்கி அங்கேயும் சென்று வசிக்காமல், தானும் அனுபிக்காமல் சொந்தக்காரனை சொத்து அனுபவிக்கவிட்டவர்களால் தான் நம்மால் பெரிய அளவில் சமுக உயர்வை பெற முடியவில்லை என்பதை இங்குள்ள பெரிசுகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது, கழிவறையில் வேலைபார்க்கும் சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே, அவற்றிற்கும் கீழே உள்ளவர்களில் படிக்காதவர்கள் ஓட்டுனர் வேலைக்கும், பாதுகாவலர் வேலைக்கும் சென்றுவிடுகிறார்கள், ஆனால் தற்பொழுது 25க்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருமே படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதுடன் நல்ல வேலைக்கும் செல்கிறார்கள்.

தற்போதைய குடியேறிகளான எங்களுக்கு உறவுக்காரர்கள் கூட இல்லை என்பதைத் தவிர்த்து பெரிதாக குறை எதுவும் இல்லை, அதும் இன்றைய அலைபேசி வசதியிலும் தீர்ந்துவிடுகிறது, பட்ஜெட் விமானத்தில் ரூபாயில் 10,000 நேரடியாக சென்று பார்த்துவிடலாம், இணையத்திலும் வீடியோ வழியாக பார்க்க முடிகிறது, 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் நிலமை ?

வெளிநாடுகளில் எங்கேயாவது நம் பண்பாட்டு சார்ந்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றால் அங்கு உள்ள கடவுளை கும்பிடுவதற்கு முன் இவற்றை நமக்காக ஆக்கி வைத்திருப்பவர்களையும் நன்றியோடு நினையுங்கள். நான் சொல்வது சென்னைக் கூட பொருந்தும், படித்துவிட்டு சென்னைக்கு குடியேறுபவர்கள் சென்னைக்காக எதை கிள்ளிப் போட்டார்கள் ?

8 செப்டம்பர், 2013

மூணு கோடு தெரிஞ்சா ! (சிறுகதை மாதிரி) !

என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருவர், திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகியது, திருமணம் ஆன புதிதில் அரபு நாட்டுக்கு (கணிணி) வேலைக்கு சென்றவர், உடன் மனைவியை அழைத்துச் செல்ல போதிய சூழல் அமையாததால் ஒரு ஆறுமாதம் அவர் மட்டும் வேலை பார்த்துவிட்டு பின்னர் ஒரு முகவர் வழியாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தார், இங்கு சிங்கையில் சுமார் ஒராண்டு வேலை பார்த்துவிட்டு நான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த பிறகு என்னுடன் அறிமுகமானார், வயது வேறுபாட்டால் என்னை அண்ணன் என்று தான் அழைப்பார், பிறகு சிங்கைக்கு மனைவியை அழைத்து வருவதாக சொல்லி அழைத்து வந்து தங்கி இருந்தார். ஓரளவு என்னிடம் தனது சொந்த வாழ்க்கை விவரங்களையும் சொல்லுவார், ஆலோசனை கேட்பார். நம்மீது மதிப்பு மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதால் நானும் ஆலோசனைகளை (இலவசம் என்பதால்) வாரி வழங்குவதுண்டு.

"அண்ணே.....இந்த மாசமும் பெயிலியர் ஆகிப் போச்சுண்ணே......கலியாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு.......எல்லோரும் கேக்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்று தன் மனைவிக்க்கு இன்னும் குழந்தை உருவாகவில்லை என்று வருத்தத்துடன் சொல்லுவார்.

"எல்லாத்துக்கு நேரம் வரனும், ஆரோக்கியமான உடல் இருக்கும் போது  ஏன் கவலைப்படுறிங்க, பதட்டப்படாமல் உங்க வேலையை சரியா பாருங்க.......எல்லாம் நடக்கும் போது நடக்கும்.......இது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை, சாதாரண காம சூத்திரம்... 99 விழுக்காட்டினருக்கு பெரிசா முயற்சி எடுக்கும் படி இயற்கை சோதிக்காது...எல்லாம் நேரக் கணக்கு மட்டும் தான்...இந்த மாசம் சரியா அமையவில்லை என்றால் அடுத்த மாதம்......என்னமோ கலியாணம் ஆகி 10 வருசம் ஆன மாதிரி கவலைப்படுறே.......இப்பதான் நீங்க இரண்டு பேருமே நீண்ட நாள் கூடவே இருப்பது போல் அமைச்சுருக்கு.....வேலையைப் பாரு...நல்லது நடக்கும்' என்று சற்று நகைச்சுவையாக சொன்னேன்.

"உங்க வாக்கு பலிக்குணும்ணே" என்றார்

நானும் அவரும் இணைந்து வேலை பார்த்தது என்னவே வெறும் இரண்டு மாதங்கள் தான், நான் அந்த வேலையை விட்டு வந்த பின்னர், ஒரு நாள் எனக்கு அழைத்துச் சொன்னார்

"அண்ணே......10 நாள் தள்ளிப் போச்சு.......இன்னிக்கு டாக்டரிடம் கூட்டிப் போகிறேன்......எல்லாம் நல்ல செய்தியாக வரும்' னு நினைக்கிறேன்.

"நல்வாழ்த்துகள், இங்கே யாரும் சொந்தக்காரங்க கிடையாது, நீ தான் நல்லா பார்த்துக் கொள்ளனும்" என்றேன்

அடுத்த நாள் அலைபேசியில் அழைத்து

"கன்பார்ம் ஆயிடுச்சிண்ணே, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.......உங்க வாய் முகூர்தம்" என்றார்

"நல்லது, நல்வாழ்த்துகள், சாயங்காலம் தினமும் மாலையில் நடக்க கூட்டிச் செல், சத்தானதெல்லாம் வாங்கிக் கொடு, ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடு..நீயும் கொஞ்ச நாளைக்கு ..........சும்மா இரு"

"புரியுதுண்ணே, தாங்க்ஸ்" என்றார்.

அதன் பிறகு 10 நாளுக்கு ஒருமுறையாவது பேசுவார், ஐந்து மாதம் ஓடியது, ஒரு நாள் அழைத்து

"அண்ணே.......ஸ்கேனிங்க்ல பொம்பள புள்ளைன்னு சொல்லிட்டாங்க.......என் பொண்டாட்டி அழறா"

(எதிரில் இருந்திருந்தால் கண்டிப்பாக திட்டி இருப்பேன். அவரு கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால்)

"....ம் மூணு கோடு தெரிஞ்சா இது கண்டிப்பாக இராமன் இல்லை......சீதா லட்சுமி  உனக்கு பிறக்கப் போறா ....ஏன் உனக்கு பொம்பள புள்ளை புடிக்காதா ?"



"என் உள் மனது எனக்கு முதலில் ஆம்பள புள்ளை தான் சொன்னது.......ஸ்கேனிங்கில் மூணு கோடு தெரியுது அதனால் பொம்பள புள்ளைன்னு சொல்றாங்க......ஸ்கேனிங்க் தப்பாகாவும் காட்டும் தானே......மாற வாய்ப்பு இருக்கா......உங்களுக்கு சொன்னதெல்லாம் சரியா இருந்துச்சா"

"யோவ்.....எந்த குழந்தையாக இருந்தால் என்ன ? என்னமோ 10 புள்ளை பெத்து அது அத்தனையும் பொட்டப் புள்ளையாக ஆனது போல் புலம்புறே....."

"இல்லண்ணே என் உள் மனசு....."

"இங்கெல்லாம் ஸ்கேனிங் ரிசல்ட் மாற வாய்பே இல்லை, குழந்தை பாக்கியமே இல்லைன்னு 10 - 15 ஆண்டு தவம் இருக்கிறவங்கெல்லாம் இருக்காங்க, உன்னை மாதிரி ஆளுங்க....முதலில் குழந்தை உண்டாகலனு புலம்புவிங்க அப்பறம் நடந்த பிறகு உங்க விருப்பு வெறுப்ப எதிர்ப்பார்ப்புன்னு நிறைய வச்சிக்குவிங்க.....ஊரான் பொம்பள புள்ளை பெத்தா நீங்க கட்டிகுவிங்க...... நீங்க பெத்துகனும்னா....கசக்குதா ?"

"இல்லண்ணே என் மனைவி தான் அழறாங்க...முதலில் ஆண் குழந்தைண்ணா.......அடுத்து ஆணோ பெண்ணோ பிரச்சனை இருக்காதில்லே.......?"

(என்ன கொடுமை சாமி இது ஆண்குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தையே பிறந்தால் பிரச்சனை இல்லையாம், அதாவது இரண்டு குழந்தையும் ஆணாகவே இருந்தால் பிரச்சனை இல்லையாம்....இரண்டும் பெண்ணா பிறந்தால் மட்டும் தான் பிரச்சனையாம்)

"முதலில் நீ அது போல் நினைப்பது தவறு, பசங்க தான் பெற்றவர்களை நட்டாற்றில் விட்டுறானுங்க, இந்தகாலத்து பொம்பளை புள்ளைங்க மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு தன்னோட அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கிறாங்க"

"சரிதான்.......ஆனா என் மனைவி ஆம்பள புள்ளை பிறக்கனும் தான் ஆசை பட்டாங்க"

"நீ அவங்கள என்ன பாடுபடுத்தினியோ இதே மாதிரி தனக்கும் ஒரு பெண் பிறந்து படனுமான்னு அவங்க நினச்சிருக்கலாம்.....இல்லேண்ண ஒரு பெண்ணே தனக்கு பொம்பள புள்ளை பிறக்கக் கூடாதுன்னு நினைப்பாங்களா ?"

"நான் ஒண்ணும் படுத்தல, நான் தான் அவளை சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்"

"ஆம்பள புள்ள தான் வேணுனு நினைக்கிறே......அது பிறந்து ஒரு வேளை உடல் குறைபாட்டோடு பிறந்துட்டா மகிழ்ச்சியாக இருக்குமா ? (சற்று கடுமையாகவே) பிறக்கும் பொழுது சரியாக ஆணாக பிறந்து வளர்ந்த பிறகு இரண்டும் கெட்டானாக போனால் இதுக்கு எனக்கு பொம்பள புள்ளையே பிறந்திருக்கலாம்னனு நினைப்பே இல்லை ?"

"புரியுது......எனக்கு முதலில் பெண் குழந்தைதான், ஸ்கேனிங்கில்  மாறினாலும் மாறும்னு இனி நினைக்க மாட்டேண்ணே......ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்.......அடுத்தது ஆண்குழந்தை பிறக்கும்னு நம்புறேன்"

"அப்பாடா......முதல் குழந்தையை நல்லபடி பெற்றெடுங்க.......ஒரு இரண்டும் மூணு ஆண்டுகள் ஆகட்டும்.....அப்பறம் கேள் ஆண் குழந்தைக்கு பெத்துக்க என்ன செய்யனும்னு.........எனக்கு தெரிஞ்சத விவரமாக சொல்றேன்"

********

பிகு : இத படிச்சுட்டு யாரும் தனி மின்னஞ்சல் அனுப்பி கடைசி பத்திக்கு என்னிடம் யோசனை கேட்க வேண்டாம். :)

2 செப்டம்பர், 2013

செவ்வாயோ வெறும் வாயோ !

மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)


ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.

இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.

அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.

இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள்.  படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?

:)

இணைப்பு:



மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்