பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

23 செப்டம்பர், 2012

நன்றிக் கடன் !


சென்ற திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு சிங்கையை அடுத்துள்ள மலேசியா ஜோகூர்பாருவுற்கு மாத்திரைகள் வாங்கச் சென்றேன், சிங்கையை ஒப்பிட விலை சற்று குறைவு என்பதால் ஜோகூரில் அதே நிறுவனம் தயாரிக்கும் மாத்திரைகளை வாங்குவது வழக்கம், போதிய பணம் கையில் இருக்கும் நினைப்பில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு மருந்து கடைக்குச் சென்று மாத்திரைகள் வாங்கிவிட்டு,  விலை கேட்க, அவர்கள் சொன்னத் தொகைக்கு சற்று குறைவது போல் இருந்தது,  இருந்ததைக் கொடுத்து எண்ணிப் பார்க்கச் சொன்னேன், பணத்தை எண்ணிவிட்டு இன்னும் இரண்டு ரிங்கிடடுகள் வேண்டும் என்றனர் (பில் போடும் இடத்தில் இருவர் இருந்தனர்) சில்லரைகள் தேறுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இடையில் பின்னால் நிற்பவர் காக்க வைக்க வேண்டாம், அவருக்கு பில் போடுங்கள், எனக்கு அப்பறம் போடலாம் என்று சொல்லிவிட்டு சில்லரைகளை துளாவிக் கொண்டு இருந்தேன், , 'பற்றாக் குறைக்கு சிங்கப்பூர் நாணயம் தரட்டுமா ?' என்று கேட்டேன், சிங்கப்பூர் நாணயம் நாங்கள் வாங்குவதில்லை என்றார்கள், சிங்கப்பூர் ஒருவெள்ளிக்கு 2.5 ரிங்கிட்டுகள் மாற்று என்றாலும் அவர்கள் முடியாது என்றார்கள், உடனே எனக்கு பிறகு வாங்கியர் என்றே நினைக்கிறேன், ஒரு மலாய் பெண் (25 வயது இருக்கும், தலை முக்காட்டுடன் முகம் மறைக்காமல் இருந்தவர்,

 'If you don't have enough money, I will give you lah' என்று கூறி 10 ரிங்கிட்டுகளைக் கையில் வைத்துவிட்டு திரும்பி நடந்தார், நான் சற்றும்  இதை எதிர்ப்பார்க்காததால் கையில் இருந்து நழுவி பணம் தரையில் விழுந்தது, குணிந்து எடுத்தேன், நான் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை, 'Why you want to give me ?' நான் கேட்ட பிறகும் காதில் வாங்காதது போல் விரைந்து வெளியே சென்றுவிட்டார், அப்போது நான்  பில் விவகாரத்தை முடிக்காததால் என்னால் பின் தொடர்ந்து சென்று அவரிடம் காரணம் கேட்க முடியவில்லை. பில்போடும் மலாய் பெண்ணிடம் யார் அவர் எனக்கு எதற்கு பணம் தரவேண்டும் ? என்று ஆங்கிலத்திலேயே கேட்டேன்.

உன்கிட்ட இல்லை (You dont have,  so she give you lah), அதான் கொடுத்தார்' என்றார், I never asked her, 'நான் கேட்கவில்லையே'  என்றேன் 'Never Mind, keep quite, take the change' என்று கூறி அந்த பத்து ரிங்கிட்டில் 2 ரிங்கெட் போக மீதம் 8 ரிங்கிட்டுகளை என்னிடம் கொடுத்தார், நான் மீதியை அந்தப் பெண் திரும்ப வந்தால் கொடுத்துவிடுங்களேன், என்றேன், வாங்க மறுத்துவிட்டார்கள். ஆழ்ந்த யோசனைகளுடன் குழப்பங்களுடன் வெளியே வந்தேன், அடுத்து வந்து எனக்கு வந்த ஐயங்கள்.

  •  நாம் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் தேவைப்படும் அளவுக்கு தானே செய்வோம், ஏன் கூடுதலாகக் கொடுத்துவிட்டு உடனடியாக நகரவேண்டும் ?
  • நான் பணமே இல்லாமல் நிற்கவில்லை, அருகில் பணமாற்று இடத்திற்குச் சென்று மாற்றி வந்து கொடுத்திருக்க முடியும், என்னிடம் சிங்கை வெள்ளிகள் இருப்பதையும் நான் பில் போடுவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன், இருந்தும் ஏன் எனக்கு உதவி செய்ய வேண்டும் ?
  • யாருக்காவது மருந்து வாங்கும் இடத்தில் போதிய பணம் இல்லை என்றால் நாம் உடனடியாக உதவ வேண்டுமா (தமிழ் படத்தில் மருந்து வாங்க பணம் இன்றி, கடை கடையாக ஏறி வெறும் கையோடு திரும்பி வரும் காட்சிகள் போன்று அந்த பெண் நிறைய காட்சிகளை பார்த்திருப்பாரா ?
  • ஒருவேளை  அவர் மருந்தகத்தின் பங்குதாரா ?
  • கடைசியாக வந்த ஐயம் நம்மிடம் வரும் பணம்  (வட்டிப் பணமோ, வேறு முறையற்ற பணமோ)  வந்த வழி  நன்கு தெரிந்து பாவங்களை கழுவ பாதிக்கப்படுவருக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக் கொள்வது நமது தவறுகளை ஞாயப்படுத்தும் என்று நம்பி இவ்வாறு செய்வார்களா ? 

இந்த கேள்விகளின் விடைகளாக என்னால் எதையும் உறுதி செய்ய முடியவில்லை, அடுத்த ஒருமணி நேரம் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. யார் அது ? ஏன் எனக்கு உதவ வேண்டும் ?  அந்த இடத்தை விட்டும் அகலும் முன் எடுத்துச் சென்ற உடைமைகள் எல்லாம் சரியாக இருப்பதையும் உறுதி செய்து கொண்டேன். மலேசியாவில் 10 ரிங்கிட்டுகள் என்பது அவ்வளவு எளிதாக ஈட்டக் கூடிய பணமும் இல்லை, 

அந்த பெண் அந்த மருந்தகத்தின் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில் அடுத்த முறை குறிப்பிட்ட மருந்தகத்திற்குச் பில் போடுவரிடம் எனக்கு கிடைத்த 10 ரிங்கிட் பற்றி சொல்லி அதை கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துள்ளேன்.

நமக்கெல்லாம் ஓரளவு பாத்திரமறிந்து பிச்சை இடு என்று தான் சொல்லி இருக்கிறார்கள், நானும் உதவிகள் செய்வதுண்டு ஆனால் உதவி வேண்டும் என்று கேட்டால் மட்டுமே தவிர எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் அதுவும் என்னால் உடனடியாக முடிந்தால் செய்வேன். அந்த பெண்ணின் செயலை என்னால் எந்த வகைக்குள்ளும் அடக்க முடியவில்லை. ஒரு உதவியைப் போய் இவ்வளவு சிந்தித்துக் கொண்டு இருக்க முடியுமா ? உதவியும், உதவும் குணமும் பெரிது, பாராட்டத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை அதனால் தான் இவ்வளவு சிந்தனைகளும் எழுந்தது.

*****

இந்த தகவலை கூகுள் +ல் பகிரும் பொழுது ஒரு ஆண் இவ்வாறு உதவி இருந்தால் இத்தனை ஐயங்கள் உங்களுக்கு வந்திருக்குமா ? என்றனர் சிலர்.

ஆணோ, பெண்ணோ நான் கேட்காமல் செய்ததால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, உதவியவர் ஒரு தமிழ் பெண்ணாக இருந்தால், எனக்கு வந்த ஐயங்களில் ஒன்றாக ஒருவேளை சக தமிழன் என்பதால் கொடுத்திருப்பாரோ ? என்று கூடுதலாக நினைத்திருப்பேன்.

தேவையற்ற நன்றிக் கடன்கள், வற்புறுத்தல்கள், அன்புத் தொல்லைகள் இவற்றை முடிந்த அளவுக்கு நானும் செய்வதில்லை, என்னை நோக்கி வருவதையும் நான் விரும்பியதில்லை.  அவ்வாறு நடந்தது அதிர்ச்சி, வியப்பு, கேள்விகள் என பல உணர்வுகளை ஏற்படுத்தியது. அவ்வாறு நடந்ததை நான் ரசிக்கவில்லை என்பதும் உண்மை.

நாம ஒருவருக்கு உதவி செய்தால் , குறைந்தபட்சம் சின்ன எதிர்பார்ப்பான 'நன்றி' என்கிற சொல்லுக்கு ஏங்கி ஒரு வினாடி அங்கிருந்து, நாமெல்லாம் வள்ளல் வாரிசுகள் போல் ஒரு பெருமிதத்தில், இதெல்லாம் 'பெரிய விசயமே இல்லைன்னு' ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்வோம், அவர் சற்றும் தாமதிக்கமல் சென்றது எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது

ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))

18 செப்டம்பர், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 7 !


பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.

'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.

'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.

'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்

'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்

'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்

'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி

'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்

'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'

'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'

'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'

'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'

'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'

சொல்லுங்கள் சொல்லுங்கள்

'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.

'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.

'பூனையாரே இன்னொரு ஐயம்.......'

'சும்மா கேளு கேளு 'என்றார்

நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே

'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'

'யார் அவர்கள் ?'

'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'

'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'

இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை,  தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...

'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்

பூனையாரை பிறகு காண முடியவில்லை

17 செப்டம்பர், 2012

சுவன அண்ணன் சொல்லும் பொய்கள் !


தெரிஞ்சோ தெரியாமலோ சுவன அண்ணனை பதிவுல வஹாபிகளின் தலைவர் ஆ(க்)கிவிட்டார்கள், அதனால் வலையுலகில் சுவன அண்ணன் பொன்னான கருத்துகளுக்கு பல முனைகளில் இருந்தும் எதிர்வினைகள் வருது, அண்ணன் சுவனப் பிரியன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வெற்றி வெற்றி என்று கூறிக் கொள்ளலாம். ஆனாலும் சுவன அண்ணன் மற்றும் அவருடைய நான்கு ஆதரவாளர்களும் அவர்களின் பீஜெ டைப் வஹாபிய கொள்கைகளும் தான் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்தவை என்பதை நான் புறக்கணித்தே வருகிறேன், இருந்தாலும் அவர்களுக்கான எதிர்வினைகள் குறித்து அவர்களுடைய கருத்துகள் 'இஸ்லாமை' தாக்குவதாக அவர்கள் புலம்புவதில் இருந்தும் ஏனைய இஸ்லாமியர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாம் பெரிதாக கவலைப்பட கலவரப் பட ஒன்றும் இல்லை. சுவன அண்ணனின் தலைமை பதவிக்கு போட்டி நடக்காமல் இருந்தால் சரி. சுவன அண்ணனுக்கு நான் எதிர்வினை எழுதுகிறேன் என்பதால் எனக்கு அவர் எதிரி என்பதெல்லாம் கிடையாது, அப்படி இருந்தால் 'அண்ணன்' அடைமொழியை அவ்வளவு எளிதாகப் போட்டுவிடுவேனா ?

*****

அண்ணன் சுவனப்பிரியன் சொல்கிறார், "ஈழத்தமிழர்களைத் தாக்க பிரபாகரனை ஏன் தாக்க வேண்டும் அவர்களின் மதமான இந்துகடவுள்களை அல்லவா தாக்கவேண்டும் ?" என்கிற ஈழப்பதிவர்களின் கூற்று இரு மதங்களுக்கிடையே பிரச்சனைக் கிளப்பும் வகையில் உள்ளதாம்,  சுவனப்பிரியன் அண்ணனுக்கு தெரிந்து இஸ்லாமிய (வஹாபிய) பதிவர்கள் யாரும் பிற மதங்களைத் தாக்கி எழுதியதே கிடையாதாம். அண்ணன் சொல்வதன் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் முழு ஒட்டகத்தையும் குடிசைக்குள் நுழைத்துவிட்டு ஒட்டகமே இந்தப் பக்கம் வரவில்லை என்பது போல் சொல்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் "சிந்திக்க சில உண்மைகள்" என்ற பெயரில் பெரியாரின் படத்தைப் போட்டு கிறித்துவ / இந்து மதங்களைப் பற்றி மிகவும் கிழ்தரமாக பல்வேறு இடங்களில் எழுதப்ப்ட்டவைகளை ஒட்டி வெட்டி பதிவுகள் வெளியானது, பெரியார் ஆட்கள் கிறித்துவ மற்றும் இந்து மதங்களை மட்டுமே தாக்கி எழுத என்ன முகாந்திரம் உள்ளது ? அந்த வலைப்பதிவில் பெரியார் படம் இருப்பது தவிர்த்து பெரியாரின் முக்கிய கொள்கையான கடவுள் மறுப்பு குறித்து எந்த இடுகையும் இல்லை என்பதாலும், அந்த வலைப்பு முக்கியமாக கிறித்துவ / இந்து மதத்தினரை தாக்கி எழுதியதால் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தின் சார்பில் எழுதப்படுவது என்பதை அதனை தொடர்ந்து பார்த்துவரும் எவரும் சொல்லிவிடுவர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவை பின்னர் தமிழ்மணம் திரட்டியும் நீக்கியது. 

இஸ்லாமியர்கள் (வஹாபியர்கள்) அவ்வாறு செய்யக் கூடியவர் இல்லை என்று நம்பும், பரப்பும் சுவன அண்ணனுக்கு குறிப்பிட்ட வலைப்பதிவை நடத்தி வந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருக்க ஞாயமில்லை, இருந்தும் சுவன அண்ணன் இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்யக் கூடியவர்கள் இல்லை என்கிறக் கருத்தை வலைப்பதிவில் எழுதிவருவது போல், சம்பந்தப்ப்ட்ட வலைப்பதிவை எழுதுபவர் ஒரு இஸ்லாமியராக இருக்க தகுதியற்றவர் என்று வெளிபடையாக எழுதி கண்டனம் தெரிவிப்பாரா ? தவிர "UNMAIKAL" என்ற பெயரில் அண்ணனின் பதிவுகளில் பின்னூட்ட வாந்தி எடுப்பவரும் பிற மதங்களை தாக்கிய கருத்துகளைத் தான் அள்ளித் தெளித்துவருகிறார்

தவிர வாஞ்சூர் என்கிற பெரியவர் (இவரு தான் UNMaikal?) நடத்திய வலைப்பதிவில் 'இது தான் இந்தியா' என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெறும் மோசமான செயல்களின், அவல நிலையின் வீடியோ காட்சிகளை இணைத்து வெளியிடுவதே பதிவாக தொடர்ந்து வந்தது, அண்ணன் சுவனப்பிரியன் அவர்களிடம் சொல்லிக் கேட்கும் பொழுது, பெரியவர் வாஞ்சூர் ஐயா இந்தியாவின் மீது அக்கரைக் கொண்டுள்ளதால் தான் மனம் நொந்து இந்தியா திருந்த வேண்டும் என்கிற நோக்கில் அத்தகைய வீடியோ காட்சிகளை வெளி  இடுவதாக இட்டுக் கட்டி பதிலும் சொன்னார், சுவன அண்ணன் எனக்கு இதற்கு மட்டும் பதில் சொன்னால் போதும், இஸ்லாம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று அன்றாடம் எழுதும் தாங்களுக்கோ, பெரியவர் வாஞ்சூருக்கோ இஸ்லாமியர் பெயர்களில் நடைபெறும் வன்முறைகளும் வீடியோ காட்சிகளும் காணக் கிடைக்கவில்லையா ? இந்தியாவின் மீது கொண்ட அக்கரையின் காரணமாக அதன் மீது ஏற்பட்ட ஆற்றாமையினால் வீடியோ காட்சிகளைப் போட்டு இந்தியாவை திருத்த முனையும் தாங்கள், இஸ்லாம் பெயரில் நடக்கும் தீவிரவாதச் செயல்களும், அல்லாஹூ அக்பர் சொல்லி நடைபெறும் கழுத்தறுப்பு காட்சிகளையும் வீடியோ போட்டு வெளிச்சம் காட்டி இஸ்லாமை திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை ?, தான் ஒரு இஸ்லாமியன், பிறகு இந்தியன் என்கிற முன்னெடுப்புகளில் தங்களுக்கும் வாஞ்சூர் ஐயாவிற்கும் இஸ்லாம் மீதான பற்றுதல் தான் கூடுதலாக இருக்க வேண்டும். இது தான் இந்தியா என்ற வீடிய காட்சிகள் கிடைக்கும் உங்களுக்கு இது தான் இஸ்லாம் என்று படம் காட்டுவதற்கு படம் இல்லை என்று வெளிப்படையாக் கூறினால் கூகிளிட்டு தேடித்தர பலர் இருக்கிறார்கள். படம் காட்ட நீங்கள் தயாரா ?

உங்களது இறுதி இறைத் தூதர் மற்றும் இறைத் தூதர்கள் நம்பிக்கைகள் பற்றி எமக்கு எந்தக் கருத்தும் இல்லை, ஆனால் இந்தியாவிற்கான இறைத் தூதர்கள் இவர்களாக இருக்கக் கூடும் என்று திருவள்ளுவர் உள்ளிட்டவர்களை நீங்கள் ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள், மேற்குலக மதங்களில் மட்டும் தான் இறைத் தூதர் சித்தாந்தகள் இருக்கிறது, இந்திய மதங்களில் வழிகாட்டிகளை கடவுளின் அவதாரங்கள் என்று தான் பார்ப்பார்கள், நீங்கள் போகிற போக்கில் இவர் இவர் இறைத்தூதராக இருக்கலாம் என்கிற கூற்று தேவை இல்லாமல் இந்து மதத்தினரை இஸ்லாமுக்குள் அடைக்கும் கூற்றாக இருக்கிறது, உங்களுக்கு உறுதியாக தெரியாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன் ?

மீண்டும் ஒருமுறை,

எங்க ஆட்கள் பிற மதங்களை கொச்சைபடுத்த துணியமாட்டார்கள் என்கிற பச்சை பொய்யை அவிழ்த்துவிடாதீர்கள், அவர்கள் சொந்தமாக எழுதவில்லை கட் & பேஸ்டு தான் செய்தார்கள் என்று சப்பைக்கட்டாதீர்கள், இஸ்லாம் பற்றி ஏனையோர் எழுதும் மாற்றுக்கருத்துகளும் அவர்களே உருவாக்கிக் கொண்டது இல்லை, எங்கெங்கோ படித்தவை தான்.

சுவன அண்ணன், நான் இஸ்லாமை எதிர்த்து எதுவும் எழுதுவதில்லைக் காரணம் உங்களையும் சேர்த்து  நான்கு வகாபிய பதிவர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும் அவர்களின் கருத்துகள் மட்டுமே இஸ்லாமிய கருத்துகள் என்றும் நான் நம்புவதில்லை.

இறை நாடினால் மேலும் தொடரும்....

14 செப்டம்பர், 2012

சர்சையைக் கிளப்பாத ஆபாசப் படம் ! (18+)


இணையத்தில் ஒரு படமும் செய்தியும் (18+) வேகமாக பரவி வருகிறது, இதற்குக் காரணம் அண்மையில் ஒரு திரைப்படக் காட்சி யுட்யூப் முன்னோட்டம்  காரணமாக அமெரிக்க தூதரகங்கள் எரிக்கப்பட்டதும் சில அமெரிக்கர்கள் கொல்லபட்டதும் காரணமாக வைத்து கார்டூன் படத்தை வெளியிட்டுள்ளனர், இருந்தாலும் சம்மந்தப் பட்ட திரைப்படம் எடுத்தவர்களின் எண்ணத்தை நாம் போற்ற ஒன்றும் இல்லை, மாறாக கண்டிக்கத் தக்கது, தடைசெய்யத் தக்கது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை, வேண்டுமென்றே உணர்ச்சி தூண்டுவதற்காக எடுக்கப்பட்டது என்பதை அதில் நடித்தவர்களின் வாக்கு மூல அடிப்படையில் அதாவது 70 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் படத்தில் நடிக்க வைத்து தங்களை ஏமாற்றப்பட்டதாக முறையிட்டுள்ளனர் வழக்கும் தொடர்ந்துள்ளனர், அவர்கள் உயிருக்கு பயந்து அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை, அவர்கள் அந்தப் படத்தில் நடித்தது பெருத்த அவமானம், ஏமாற்றம் என்றே கருதுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாது சம்பந்தப்பட்ட படத்திற்கு முட்டுக் கொடுக்கும் வண்ணம் இந்து கிறித்துவ யூத மற்றும் பவுத்த மதங்களின் குறியீட்டுக் கடவுள்களை ஒன்று சேர்த்து ஓரின சேர்க்கையில் அவர்கள் ஒன்றாக ஈடுபடுவது போல் ஆபாசமாக படம் வரைந்து, அதை தாங்கள் வெளியிட்டதால் தங்களுக்கு எதிர்ப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளனர். 

"இந்தப் படத்திற்காக யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று சொல்லும் கார்டுன் வெளியீட்டாளர்கள் சொல்ல வருவது என்னவென்றால் மற்ற மதத்தினர் இதையெல்லாம் பொருட்படுத்தாத பொழுது குறிப்பிட்டவர்கள் மட்டும் எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை நிகழ்த்தி உயிர்களுக்கு வேட்டு வைப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர. பார்க்க படிக்க அவங்க சொல்வது ஞாயம் தானே என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அதை அவர்கள் ஒன்றாக வரையாமல் தனித் தனியாக வரைந்துவிட்டு அதே கேள்வியை அவர்களால் எழுப்ப முடியுமா ? என்று நினைக்க அவர்களது கோழைத்தனமும் சப்பைக் கட்டுகளாகவும் அவர்களது செயலை நினைக்க முடிகிறது.

புதிய தொழில் நுட்பம் இணையத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதும் எதிர்ப்பார்த்தது போல் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருவதால், இனிமேலாவது மக்கள் இது போன்ற சீண்டல்களுக்கு மதிப்பு கொடுக்காமல் புறம் தள்ளினால் அவர்களின் நோக்கங்கள் அடிப்பட்டுப் போகும், தேவையற்ற உணர்சிவசப்படுவதினால் உயிர்சேதம் பொருள் சேதம் தவிர்த்து, வன்முறையாளர்கள் என்கிற முத்திரையும் உறுதி செய்யபடும் என்பதை போராட்டக்காரர்கள் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். சுமமா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் போராட்டம் எதற்காக என்று தேடிப்பார்க்க குறிப்பிட்ட யுடியூப் படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டி விட்டது தான் நடந்திருக்கிறது.

கடல் நீரில் விழுந்த காக்கையின் எச்சம். கடல் நீருக்கு எந்த  பாதிப்பை ஏற்படுத்தும் ? என்று நினைத்து இவற்றையெல்லாம் புறம் தள்ளிச் செல்லலாம். விமர்சனங்கள் வேறு விஷமத்தனங்கள் வேறு, ஆனால் யாரோ செய்த தவறுக்கு யாரோ பலிகடா ஆகுவதால் எதுவும் சரிசெய்யப்படுவதில்லை எனபது புரிந்தால் விஷமத்தனங்களுக்கு எதிராக விசனப்பட்டால் நட்டம் நமக்கும் சேர்த்தேதான் ஏற்படும். பிறகு எதைச் சொல்லி 'அமைதி' மார்க்கம் என்று மார்த்தட்டிக் கொள்ள முடியும் ?

கார்டூனின் "தரம்" கருதி படத்தை நான் பதிவில் இணைக்க வில்லை. மேலே இணைப்பு மட்டும் கொடுத்துள்ளேன். நான் அறிவுரையோ பரிந்துரையோ இங்கு எழுதவில்லை, எனக்கு தோன்றிய எண்ணங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

10 செப்டம்பர், 2012

வெட்கம் கெட்டவர்களுக்காக !


ஐயோ இது சிங்களன் வரைந்த ஜெ-கார்டூன் பற்றி இல்லை, அந்த இழிபிறவிகளைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை, நாவில் கூடுதலாக எச்சில் இருந்தால் அந்த திசை நோக்கி துப்பலாம், இல்லை என்றால் அந்த பக்கம் திரும்பி ஒண்ணுக்கு அடிக்கலாம், அதுக்கு மேல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை, பெண்ணும் ஆணும் எதோ இந்தியாவில் மட்டும் தான் அரசியல்வாதிகள் என்பது போன்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் அதைவிட கேவலமாகவோ அவர்கள் தலைவர், தலைவிகளை நம்மால் இழிவு சித்திரம் தீட்ட முடியும் என்றாலும் ஒரு ஆணையும் பெண்ணையும் அவ்வாறு வரைவது எண்ணத்தில் கூட நமக்கு ஏற்புடையது இல்லை.

*********

ஹாஜா மைதீன் என்பவர் மலேசியாவில் ஒரு மலாய்காரனால் வெட்கம் அடைந்தாராம், அது தான் இங்கே தலைப்பு, அவரு மட்டுமல்ல அவரு போல் இந்திப் படிக்காததால் வெட்கம் அடைந்து அரசியல் வாதிகளால் கெட்டுவிட்டோம் என்று மனம் புழுங்குபவர்களுக்கும் சேர்த்தே தான் எழுதுகிறேன், இது போல் நான் எழுதுவது இது முதல் முறை இல்லை என்றாலும், இந்திக்கு பந்தி வைக்கவில்லை என்று ஆண்டுக்கு ஒருவராவது இப்படி சமூக அக்கரையுடன் மூக்கு சிந்தும் பொழுது நம்மால் முடிந்த அமிர்தாஞ்சனமாக இதை எழுதத்தான் வேண்டி இருக்கிறது.

"நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன்" - ஹாஜா மைதீன்

அவரு எழுதியதில் முக்கியமான வரிகள் இவை தான், அதாவது ஒரு மலாய்காரனுக்குஇந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிந்துள்ளதும், அதன் முக்கியத்துவமும் இவருக்கு தெரியாமல் போச்சாம். மேலும் இந்தி தெரியாமல் இருப்பதே தமக்கு பெருத்த அவமானம் என்றும் எழுதியுள்ளார், அவர் அவமானப்படுவது கூனிக் குறுகுவதெல்லாம் அவரின் மன நிலைத் தொடர்பானது என்று விட்டுவிடுவோம், ஆனால் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காதவர்கள் அதை தெரியாமல் இருப்பதற்கு எந்த வித அவமானமோ தலைகுனிவே பெறத் தேவை இல்லை.

இங்கே சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மையாகத்தான் வசிக்கின்றனர், சீன மொழி தெரியவில்லையே என்று சீனர்களிலும் கூட சீனர் அல்லாதவர்களிடம் கூட எவரும் வெட்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.  சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்கள் பேசும் மொழி சீன மொழியை எல்லோரும் அறியவில்லை என்பதற்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த விதத்தில் மலேசியாவிற்கு குறைந்து போய்விடவில்லை.  மலேசியாவில் மலேசியர் அல்லாதவர் மலாய் பேசாமல் இருப்பதாலும் எவருக்கும் சங்கடங்கள் இருந்ததும் இல்லை, அவற்றை மீறிக் கற்றுக் கொள்பவர்களுக்கு பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் பொழுது சில்லரை வாங்க பயனாக இருக்கும் என்பது தவிர்த்து மலாய் படங்களைப் பார்க்கலாம் என்பதும் தவிர்த்து தமிழனிடம் ஒரு தமிழன் மலாயிலேயே பேசலாம் என்பதும் தவிர்த்து வேறு பெரிய பலன்கள் இருப்பது போல் தெரியவில்லை, மலேசிய தமிழர்கள் அவர்களுக்குள் மலாயில் பேசிக் கொள்கிறார்கள், காரணம் பெரிதாக இல்லை, நம்மைப் போன்றவர்களுக்கு அவர் பேசினால் புரியக் கூடாது என்பது தவிர்த்து பேச எளிமையாக இருக்கும், 

மலேசியாவில் இரண்டு ஆண்டு வசித்தால் மலாய் சொல்லிக் கொடுக்காமலேயே வந்துவிடும், மலாய்காரர்கள் தவிர்த்து சீனர்கள் மற்ற இனத்தினர் மலாய் பேசுவதற்கு அவர்கள் பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டார்கள் என்பதில்லை, பேசிப் பழக்கம் தான், ஹாஜா மைதீன் எந்த பள்ளியில் சென்று மலாய் படித்திருப்பார். நான் மாதம் ஒருமுறையேனும் முடித்திருத்தம் செய்ய மலேயா ஜோகூர் செல்வதுண்டு, காசு குறைவு என்றாலும் போய் வரும் செலவும், வெட்டுபவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்புத் தொகையும் சேர்த்து ஒப்பிட சிங்கையில் வெட்டுவதை விட கூடுதல் என்றாலும் பொழுது போக்காகச் சென்றுவருவதற்காக மலேசியாவில் தான் முடித்திருத்தம் செய்து கொள்வேன்.

முடித்திருத்தம் செய்பவர்கள் அனைவரும் வேலை அனுமதியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

"தம்பி எந்த ஊரு"

"மன்னர்குடிங்கண்ணே "

"எவ்வளவு நாளாச்சு இங்கே வந்து"

"வர்ற நாலாம் மாசம் வந்தா இரண்டு வருசம் ஆகும்"

"சீனன் கூட இவ்வளவு சூப்பராக மலாய் பேசுறிங்க ?"

"பேச வேண்டியது தானே...சுத்தி அதான் பேசுறாங்க.......கேட்டு கேட்டு நாமும் பேசிட முடியும்"

மலாய் கற்றுக் கொள்ள எடுக்கும் காலம் இவ்வளவு தான். 

மலேசியாவில் மலாய் எல்லோரும் படியுங்கள் என்று திணிப்பது கிடையாது, அரசு பள்ளிகளில் பாடமாக உண்டு, மலேசியாவில் அரசு பள்ளியில் படிக்கும் அனைவரும் மலாய் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அது சீனர் என்றாலும் இந்தியர் என்றாலும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மலாய் மொழி சொல்லி க்கொடுக்காத தனியார் பள்ளிகளும் உண்டு, எனக்கு தெரிந்த பல மலேசிய சீனர்களின் குழந்தைகளுக்கு மலாய் தெரியாது. ஆனாலும் அவர்கள் அங்கேயே வளர்ந்தால் இயல்பாக கற்றுக் கொள்வார்கள். மலேசியா நாட்டுக்கு வேலைக்கு வர்றிங்க மலாய் தெரியாமல் வருவதற்கு நீங்க வெட்க்கப்படுங்களேன் என்று யாரும் கூறுவதும் இல்லை,  யாரும் அவ்வாறு கூறித்தான் ஹாஜா மைதீன் மலாய் கற்றுக் கொண்டாரா தெரியவில்லை. கூலி வேலைக்கு வருபவர்கள் ஒராண்டிற்குள் கற்றுக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு மலாய் மொழி எளிமையானது தான், இந்தியும் பள்ளியில் கற்றுக் கொடுத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும் என்ற மொழியும் கிடையாது, வடநாட்டுக்கு கொத்து வேலைக்குச் செல்பவர்களெல்லாம் வரும் பொழுது இந்திப் பேசுகிறார்கள். நான் படிச்சவன் நான் படிச்சவன் என்று படம் காட்டுகிறவர்களுக்குத்தான் துவக்கப் பள்ளியில் இருந்து சொல்லிக் கொடுக்கனுமாம்.

இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் விருப்பத்தின் பேரில் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை, ஆனால் இது தான் தேசியமொழி எல்லோரும் பேசுகிறார்கள், அதனால் எனக்கும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது, தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பிற்காக எல்லோர் மீதும் பாடச் சுமையை ஏற்றுவது அறிவுடைய செயலும் இல்லை, இந்தி படிக்காமல் நொந்து போய்விட்டோம் என்று புலம்பும் மூத்தவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அதை பாடமாக்கி இருக்கிறார்கள் ? ஏற்கனவே இருக்கும் பாடச் சுமையுடன் இவற்றையும் ஏற்ற விரும்பமாட்டார்கள், இந்தியை அல்லது வடமொழியை இரண்டாம் மொழிப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களில் தமிழையும் சேர்த்துப் படிப்பதும் இல்லை, தன் குழந்தைக்கு ஏதோ ஒன்று மட்டும்  இரண்டாம் மொழிப்பாடமாக இருந்தால் போதும், கூடுதல் சுமை தேவை இல்லை என்று கருதுவோரில் பலர் தாம் இந்திப் படிக்காமல் பாழாகிப் போய்விட்டோம் என்று புலம்புவது முரண்பாடாக இருக்கிறது.

மேற்கண்ட ஹாஜா மைதீனிடம் ஒருவர் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார், இந்தியாவில் இருந்து வந்த நீங்கள் இந்து இல்லையா ? அரேபிய மதத்தையா பின்பற்றுகிறீர்கள் ? என்று கேட்டிருந்தால் அதை ஒருவேளை அவர் அவமானம் என்று கருதுவாறாயின் அந்த அவமானத்தைத் துடைக்க அவரால் என்ன பதில் சொல்லி இருக்க முடியுமோ அதையே ஏன் அவர் தாம் இந்தி கற்காமல் போனதற்கும் சொல்ல முடியாமல் போனது ?

* இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல
* இந்தி இந்தியாவில் தோன்றிய மொழியும் அல்ல
* இந்தி இந்தியாவில் ஊடுருவியதற்கும் ஆங்கிலம் ஊடுருவியதற்கும் வெறும் 100 ஆண்டுகளே வேறுபாடு, இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் கிழக்கிந்திய கம்பெனி வருகைப் பற்றிப் படித்தால் இந்தியும்,  ஆங்கிலமும் எப்போது இந்தியாவை விழுங்கின என்று தெரியும்.
* இந்தி ஆங்கிலம் போல் அறிவியல் / இலக்கிய வளங்கள் நிறைந்த மொழியன்று
* ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலக நாடுகளில் சுற்றிவரலாம்,
* இந்தித் தெரிந்தாலும் பாம்பே மிட்டாய் விற்பவருக்கு தொழிலைத் தாண்டிய வருமானத்தை இந்தி மொழித் தரவில்லை
* தமிழகத்தில் இந்தி நுழைந்திருந்தால் கன்னடப்படங்களுக்கு நேர்ந்த கெதி தமிழ் படத்திற்கு எப்போதோ ஏற்பட்டிருக்கும்
*உருதும் இந்தியும் அக்கா  தங்கைகள் தான், ஒரு பேச்சுக்கு உருதை தேசிய மொழி ஆக்கிவிடலாமா ? இந்தியை சமஸ்கிருத 'அம்சமாக' பார்க்கும்  பெருவாரியான பார்பனர்களே  வேண்டாம் வேண்டாம் என்று அலறுவார்கள்.

******

இந்தி படிக்க எழுந்த ஆர்வம் காரணமாக 20 வயதில் சென்னை திநகர் இந்தி பிரச்சார சபாவில் காலை வகுப்பில் சேர்ந்தேன், மொத்தமே மூன்று நாள் வகுப்பு தான் சென்றிருப்பேன், அங்கே இந்தி கற்றுக் கொள்ள வந்த வாண்டுகள் 'அங்கிள்......அங்கிள்' என்று கூப்பிடத் துவங்கியதும், இந்தியும் வேண்டாம், மந்தியும் வேண்டாம் என்று வந்துவிட்டேன், பின்னாளில் என்னுடைய தனி முயற்சியால் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

முன்பு மாதிரி இல்லை தற்பொழுது தமிழக தொலைக்காட்சி இணைப்புகளில் இந்தி சானல்கள் ஒரு 20 - 30 ஆவது இருக்கும், கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்ப்பதைத் தவிர்த்து இந்தி சானல்களைப் பார்த்தால் மூன்றே மாதத்தில் நாம பாம்பே வாலா ஆகிவிட முடியும். எல்லாவற்றிற்கும் உந்துதல் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, எனக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஓரளவு இந்தி கொஞ்சம் சீன மொழி கூடத் தெரியும், இதையெல்லாம் நான் எந்த பள்ளியிலும் படித்து கற்றுக் கொள்ளவில்லை.

முடியவில்லை, ஆண்டுக்கு ஒருவரேனும் இது போல் இந்தி தெரியாததால் வெட்கம் அடைந்தோம் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.



இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 

5 செப்டம்பர், 2012

முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!

வாலிப வயோதிக அன்பர்களை துன்புறுத்தும் சுய இன்பம் பற்றிய  'விழிப்புணர்வு' பழனி / சேலம் சித்த வைத்தியர்களைத் தாண்டி பதிவுகளாகவும் வந்து கொண்டி இருக்கிறது, விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவு வெளிச்சத்தை அணைக்கும் செயலாக தன்னின்பம் பற்றிய தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள், வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து காக்க நகைச்சுவையாகக் கூறுவதுண்டு, கோழி எப்படி முட்டும் ? என்று யோசித்துக் கொண்டே வெற்றிலையை மறந்துவிடுவான் சிறுவன், காம்பைக் கிள்ளிக் திண்ணக் கொடுப்பார்கள், வெற்றிலையால் கெடுதல் எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதில் பற்களில் கறை படுவது முகத் தோற்றத்தையும் சிரிப்பழகையும் கெடுத்துவிடும் என்பதால் அவ்வாறு கூறி தடுப்பார்கள். பருவ வயதில் கைப் பழக்கம் எனப்படும் தன்னின்பம் பற்றிய விழிப்புணர்வுகளும் அத்தகையது என்றாலும் அவை எந்த வயதிற்கு ஏற்ற பரிந்துரை அல்லது விழிப்புணர்வு என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுவாக அவை தவறு என்கிற ரீதியில் எழுதப்படுகிறது, தவறுதலாக சித்தரிக்கப்படுகிறது.

பெண் பூப்பெய்தும் பருவம் தான் ஆணின் திருமண வயதையும் முடிவு செய்கிறது என்கிற நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண வயது ஆணுக்கு 15 பெண்ணுக்கு 12 - 13 என்ற நிலையில் இருந்தது. ஆண் பெண்ணைவிட இரண்டு வயதாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற சமூக எண்ணங்களின் செயல்பாடுகளாக ஆணின் திருமண வயது 16 என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆண் உடல் ரீதியாக வளர்சி அடைந்து கிளர்ச்சி அடையும் பருவம் 15 - 16 வயது தான், அந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது, அன்றைய ஆண்களுக்கு பொருளாதார வழிநடத்தல்களாக இல்லம் சார்ந்த தொழில்கள் இருந்ததால் திருமணத்தைத் தள்ளிப் போட வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பருவ வயதில் திருமணம் செய்துவைப்பது நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டுவந்தது.  சேலம் சித்த வைத்தியர்களின் அறிவுறுத்தல்கள் 16 வயதினருக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், காரணம்  சுய இன்ப நாட்டத்திலோ அல்லது பாலியல் தொழிலாளியை நாடும் எண்ணங்களையோ வளர்த்துக் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கைப் பற்றிய எண்ணங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை புறந்தள்ளக் கூடும் என்பதால் விலைமாந்தர்களிடம் செல்வது முறையற்ற உறவு என்ற வகையில் தடுக்கப்படுவது போலவே சுய இன்பப் பழக்கம் உடல் ரீதியாக கேடுவிளைவிக்கக் கூடியவை என்கிற அறிவுறுத்தல்களை செய்வதால் முறையான பாலியல் வடிகாலுக்கு திருமண உறவை நம்பி, விரும்பி செய்து கொள்வார்கள் என்று உளவியல் ரீதியாக கிளப்பிவிடப்பட்டவையே சுய இன்பம் பற்றிய கட்டுக்கதைகள். 

தற்பொழுது வயதும் பருவமும் திருமணத்தை முடிவு செய்ய முடியாத நிலையில் தனிமனித பொருளாதார மையம் பெரும் அறை கூவலாக அமைந்துவிட்டபடியால் கல்லூரிப் படிப்பை முடித்து பின்னர் வேலை தேடி, வேலை வாய்ப்பு பெற்று,  ஓரளவு கால் ஊன்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிலையில் திருமணம் என்கிற முடிவை எடுக்க 25 வயதிற்கு மேல் ஆகிறது. பெற்றோர்களே விரும்பிக் கொடுத்தாலும் 20 வயது பெண்ணை மணந்து கொள்ள 25 வயது இளைஞர்கள் முன்வருவதில்லை. பெண்ணுக்கான திருமண வயது அரசு 18 என்று வழிகாட்டினாலும் 22 வயதிற்கு மேல் தான் திருமணப் பேச்சு துவங்குகிறது.  ஓரளவு நிலையான வருமானம் உள்ள ஆணை பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணின் வயது 28 வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பெண்ணையும் படித்தவளாகவே கொடுப்பது தான் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்ற பிறகே திருமணம் செய்விப்பது வழக்கமாகி இருக்கிறது. முதிர்கன்னி பற்றி கண்ணீர் கவிதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம் சமூகப் புரட்சி நடந்துவிட்டது என்பதல்ல. முதிர்கன்னி என்றால் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்முதிர்கன்னி ? என்கிற வயது பற்றிய முடிவெடுக்கத் திணற வேண்டிய நிலையில் முதிர்கன்னிக் கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன. திருமணம் பற்றிய முடிவுகளுக்கு பருவமும், வயதும் காரணிகள் இல்லை, பொருளாதாரமே முதன்மைக் காரணம்.

தனிமனித பொருளாதார மேம்பாடு திருமணம் எப்போது என்பது பற்றித் தான் முடிவு செய்யும். ஆனால் பருவ வயதை எட்டி ஒரு சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உடல் ரீதியான இச்சைகளுக்கு அவை பொறுப்பேற்றுக் கொள்ளாத போது தனிமனித பாலியல் தேவையின் வடிகாலுக்கு தீர்வு ? அரசுகளைப் பொருத்த அளவில் பாலியல் தொழிலை ஊக்குவிக்க முடியாத நிலைக்குக் காரணம் குடும்ப அமைப்புகள் சீர்கெட்டுவிடும் என்கிற அக்கரை கிடையாது, பாதுகாப்பற்ற உறவினால் நோய் பெருகும் என்பதே காரணம், ஏனெனில் தனிமனித பாலியல் தேவைக்கு வடிகால் இவை என்று திருமண பந்தம் தவிர்த்து வேறெதையும் காட்ட முடியாத நிலையில் ஒருவர் பாலியல் தொழிலாளியை நாடுவதைத் தடுக்கும் உரிமையையும் அரசுகள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் பாலியல் நோய சார்ந்த விழிப்புணர்வுகளை செய்வதை மட்டும் அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

தனிமனித வக்கிரம், மித மிஞ்சிய பாலியல் உணர்வுகள், வண்புணர்வுகள், கள்ள உறவுகள்  என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடிப்படை ரீதியிலான திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. பாலியல் தொழிலாளியை நாடுவதில் உள்ள ஆபத்துகள்  கடுமையான பாலியல் நோய் தொற்றுகள், அதனை பிறருக்கும் பரப்புதல் கூடவே பண விரயம். ஆனால் சுய இன்பம் எந்த ஆபத்தும் அற்றது என்பதால் தனிமனித பாலியல் தேவைக்கு சரியான தீர்வு அது மட்டுமே. 

மதங்கள் அனைத்துமே சுய இன்பத்தை பாவம் என்றும் ......செய்துவிட்டால் நரகம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன, மதங்களின் கோட்பாட்டின் படி சுய இன்பத்திற்கு தண்டனைக் கிடைக்கும் என்றால் 99.9X விழுக்காடு ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. ஒரு நகைச்சுவைக்காக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு கைவெட்டப்படும் என்று வைத்துக் கொண்டால் யாருக்கு கை மிஞ்சும் ? ஒரு வேளை தண்டனை எதுவும் கிடைக்காதவருக்கு ஏற்கனவே கைகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது செயல்படாத உறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும்.  மதங்கள் வேண்டுமென்றால் வேறு பிரச்சாரங்கள் செய்யலாம் அடுத்தவர் உறுப்பை அனுமதியின்றித் தொடுவது பாவம், தண்டனைக்குறியது. இது போன்ற கோட்பாடுகள் இருந்தால் வரவேற்பேன். வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன  ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?

நேற்று சித்த வைத்தியம் என்ற பெயரில் சுய இன்பம் பற்றி உளறி எச்சரித்த பதிவு ஒன்றை படிக்க நேரிட்டதால் தான் இதை எழுதுகின்றேன், மதவாதிகள் இதுபற்றி பெரிதாக எச்சரிக்கைக் கொடுப்பதில்லை, எழுதினால் ஏன் வம்பு என்று நக்கைக் கடித்துக் கொள்வதுடன் தன்கையையே கட்டிப் போட்டுக் கொண்டு தான் எழுத நேரிடும் என்பதால் அவர்கள் சுய இன்பம் பற்றி எழுத வெட்கம் அடைந்துள்ளார்கள் மற்றபடி நாமும் எழுதலாம், கைப் பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கி சொர்கத்திற்கு அனுப்புவோம் என்று கனவு காணுவார்கள் ஆனாலும் அதற்கு அவர்கள் கை அனுமதிக்கனுமே ? காலத்துக்கும் ஏற்றக் கருத்துகள் எங்கள் மதப் புத்தக்கத்தில் முத்துகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன என்று அளந்துவிடும் எவரும் சுய இன்பம் பற்றி எழுதுவதை அடக்கி வாசித்தே வருகின்றனர்.  தனிமனிதன் யாருக்கும் தொல்லை இன்றி தாம் ஈடுபடும் சுய இன்பத்தை எந்த ஒரு அரசும் வெளிப்படையாக தடையாக அறிவிவிக்கவில்லை என்பதிலிருந்தே இது பற்றிய கருத்துகள் காலம் கடந்துவிட்டவை என்பது உறுதியாகின்றது, மதப் புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களை பிய்து எரியுங்கள். கடவுள் மனிதர்களை எல்லை மீறி சோதிப்பது இல்லை, அதனால் தான் மனிதர்களின் உறுப்பை எட்டும் அளவுக்கு நீளமான கைகளையும் விரல்களையும் வழங்கியுள்ளான் - நம்புங்கள். :).  எந்த ஒரு அறிவியல் ஆய்வும் கட்டுப்பாடான சுய இன்பப் பழக்கத்தை தவறு என்று சொல்லவில்லை, மாறாக உடல் ரீதியான நன்மைகள் என்றே பட்டியல் இடுகின்றன. தேவையின் போது நாய் உள்ளிட்ட விலங்கினங்களும்  நாவினால் தனக்கு தானே செய்து கொள்கின்றன.  இணைப்பு

பசி, தூக்கம், உடல் அரிப்பு போன்று தனிமனித பாலியல் வேட்கையும் அதற்கான தீர்வும் தேவையான ஒன்றே, இதற்கு எளிய வழி தன்னின்ப தீர்வு தான்.  தன்னின்ப / கைப்பழக்க செயல்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு ? எந்த வயதினருக்கு தவறு ? என்றெல்லாம் விளக்கிவிட்டு அதன் பிறகு அது பற்றிப் பேசலாம். மொட்டையாக விந்துவிட்டான் நொந்து கெட்டான் இவையெல்லாம் எதுகை மோனையாக எழுதப்பட்டது என்பது தவிர்த்து வேறெதும் அறிவுபூர்வமாக சொல்லவில்லை என்பதே உண்மை.

சுய இன்பம் தவறு என்கிற  முட்டாள்களின் தவறான வழிகாட்டல் மூலம் அரைகுறையாக புரிந்து கொள்ளும் பருவ வயதை எட்டிய ஒருவர் / திருமணம் ஆகாத ஒருவர், ஆண்/பெண் உறவே சரி என்று எண்ணி பாலியல் தொழிலாளியை நாடும் வழிகாட்டலாக எடுத்துக் கொள்வர், அதன் ஆபத்துகள் மிகுதி, கூடவே சிறுவர் / சிறுமியர்களையும் சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள் என்றாவது எழுதும் மடையர்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் அவ்வாறு எழுதமாட்டார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்