பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
கருணாநிதி : வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
*****
இங்கு திருவள்ளுவர் சொல்லுவது பிறவியா பிறவிகளா ? சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் மூவரும் பிறவி என்னும் ஒருமைக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், முவ பற்றி சரியாகத் தெரியவில்லை, முக பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர், சாலமன் பாப்பையா கிறித்துவர் என்பதால் அவரும் பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர். மூவருமே பிறவி என்பதற்கு வாழ்க்கை என்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், இதில் கருணாநிதி தவிர்த்து இருவரும் இறைவன் என்பதற்கு நேரடி பொருளைச் சொல்லி இருக்கிறார்கள், கருணாநிதி இறைவன் என்பதற்கு தலைவன் என்பதாக அவருடைய பொருளைச் சொல்லி இருக்கிறார்.
இதே குறளுக்கு சைவ சித்தாந்தம் மற்றும் ஆத்திகவாதிகள் பிறவி என்பதை பல்வேறு பிறவி அல்லது பிறவிகள் (மறு பிறப்புகள்) என்பதாக சொல்லி பெரும் துன்பத்தைத் தரும் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்க வேண்டுமெனில் பிறவாத் தன்மையைத் தரும் இறைவனின் திருவடிகளைப் பற்ற வேண்டும் என்பதாக விளக்குவர்.
திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்கிற ஆராய்ச்சியில் அவர் சமணர், பெளத்தர், சைவர், வைணவர் மற்றும் கிறித்துவர் என்பது போல் சொல்லும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக சொல்ல முனைகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே இன்னும் அது போல் செய்யவில்லை, திருவள்ளுவர் கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து அவர் இந்த மதத்துக்காரர் என்று சொல்ல முயற்சிக்கும் கொடுமை திருவள்ளுவருக்குத் தான் நடந்திருக்கிறது, இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அவர் தின்றுவிட்டு தூங்கி இருப்பார். :) திருக்குறளில் இடம் பெறும் சில சொற்கள் குறிப்பாக எண் குணத்தான், மலர்மிசை ஏகினான், பகவன் என்ற சொற்கள் சமணம் மற்றும் பெளத்த மதத்தைச் சார்ந்த சொற்கள் என்பர், எனவே திருவள்ளுவர் இந்த இரு மதங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி. மற்றபடி திருவள்ளுவர் சைவரா, வைணவரா, கிறித்துவாரா என்பதற்கு சான்றுகள் குறைவு மற்றும் அவர் காலங்களில் இவை மூன்றும் மதங்களாக/சமயங்களாக அறியப்படாதவை.
சைவம், வைணவத்தின் கூறுகள் பழந்தமிழர் மற்றும் பார்பனர்களின் வேத வழிபாடுகளின் கலவைகளால் ஏற்பட்ட பின்னாளில் சமயங்களாக வளர்ந்தவை, ஆதிசங்கரரை இவ்வாறு சைவம், வைணவம் என்று அடைப்பார்களா ? ஆனாலும் திருவள்ளுவரை ஏன் முயற்சிக்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது, அவ்வாறு முயற்சிப்பது அவரை சிறுமைப் படுத்தும் முயற்சியாகும், நான் திருவள்ளுவரை சமணர் பெளத்தர் என்று நினைக்கவில்லை, இருந்தாலும் அவ்வாறு இருக்க கூறுகள் மிகுதி என்பதை அறிஞர்கள் காட்டும் போது ஒப்புக் கொள்கிறேன்.
*****
சொல்ல வந்தது முக்தி பற்றி அல்லவா ? முக்தி என்பது பிறவி அற்ற நிலையாம். அப்படி என்றால் ஜீவன் முக்தி என்கிறார்களே அது என்ன என்று கேட்டால் ஒருவரும் சரியாகச் சொல்வதில்லை. ஜீவன் என்பதற்கு வாழ்க்கை என்று பொருள், இல்லாவிடில் எல் ஐ சி பாலிசிகளில் 'ஜீவன்' என்கிற சொல் இடம் பெற்றிருக்காது :) ஜீவன், ஜீவ என்பதன் பொருள் உயிரோட்டமுள்ள என்பதாக வடமொழியில் வழங்கப்படும். ஜீவா என்றால் ஜீவித்திருப்பவர், அதாவது வாழ்பவர் என்ற பொருள். ஜீவன் முக்தி என்றால் ? வாழும் நிலையிலேயே முக்தி பெற்றவராம். முக்தி என்பது 'தன்னை' அழிப்பது, பிறவா நிலை என்று விளக்கம் சொல்பவர்கள், ஜீவன் முக்திக்கான விளக்கத்தில் சறுக்குகிறார்கள். இதுவே இப்படி இருக்கையில், முக்திவேண்டுவோர் நாட வேண்டிய இடம் ? கேட்பதற்கு வானொலி விளம்பரம் போன்று இருந்தாலும் இப்போதெல்லாம் ஆத்திகம், உயர்தர ஆன்மிகம் ( உயர்தர சைவ உணவகம் போல்) முக்தி என்பது பற்றி பரவலாகப் பேசப்படுகிறது, பிறவா நிலையை அடைவதே வாழ்வின் உயர்ந்த நோக்க(லட்சிய)மாம். இருந்துவிட்டு போகட்டுமே. என்று நினைக்கும் படி அது போன்ற விளம்பரங்கள் இல்லை,
இந்துத்துவம் சார்ந்த இணைய தளம் ஒன்றில் முக்தி பற்றி படிக்க நேர்ந்தது, மூன்று வழியில் முக்தி அடையலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்,
சிவனையே பரப்பிரம்மமாக வணங்குபவர்களுக்கு முக்தி கிட்டுமாம், நாராயணனை முழுமுதல் கடவுளாகவும், பரப்பிரம்மமாகவும் நினைத்து வழிபடுபவர்களுக்கு முக்தியாம், இவர்களின் வழியாக முக்தி பெற விரும்புபவர்கள் இவர்களைத் தவிர வேறு இறைவனை நினைக்கக் கூடாது, அப்படிச் சொல்வதால் பிற தெய்வங்களை குறைகூறலாம் என்ற பொருள் இல்லையாம். மூன்றாவது சொன்னது தான் சிறப்பே, கிடைப்பதற்கரிய பிராமணப் பிறவி அடைந்து அதன் வழி ஒழுகுவது முக்தியாம், 'பிராமணப் பிறவி பெற்று' என்று நேரடியாக எழுதினால் கண்டனங்கள் வரும் என்பதைத் தவிர்க்க பிரம்ம தேஜஸ் (பிரமண உடல்) பெற்று முக்தி அடைவானாம்.
கிறித்துவம், சமணம், பவுத்தம், இஸ்லாம் போன்ற புறச் சமயங்களுக்கு முக்தி கிடைக்காதாம், இதில் பிறந்தவர்கள் வேதம் போற்றும் இந்து மதத்தில் எப்போதாவது மறு பிறவி எடுத்தால் முக்தியை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்பார்களாம்.
ஐயோடா சாமி, தேவ நாதன் (அவர்கள் சொல்லும்) பிரமணாகத்தான் பிறந்தான், இந்த பிறவியில் தப்பு செஞ்சுட்டான், மீண்டும் மீண்டும் பிரமணாகவே பிறந்து முக்தி அடைவானா ? அல்லது கிடைப்பதற்கரிய பிரமணப் பிறவியில் அவன் தப்பே செய்திருந்தாலும் மனு சூத்திரங்களின் மெய்வாக்கின் படி அவை தப்பாக கருதப்படாது அவனுக்கு முக்தி கிடைக்குமா தெரியவில்லை.
முக்தியை நாட விரும்புவரா நீங்கள் ?
மூன்றே வழி உண்டு,
1. சிவனை துதிப்பது
2. நாராயணனை நமஸ்கரிப்பது
3. இறுதி பிறவியான பிரமணாக பிறவி எடுக்க வேண்டிக் கொள்வது.
முக்தியை மூன்று ப்ளாட் போட்ட ரியல் எஸ்டேட் விற்பனை போல் இருக்கிறதா ?
செத்தவன் திரும்ப பிறந்தானா ? முக்தி அடைந்தவன் மீண்டும் பிறக்கவே இல்லையா ? இதற்கெல்லாம் எந்த ஒரு சான்றுகளும் கிடையாது. நம்பிக்கையின் பேரில் தான் விற்பனைகள்.
இதுக்குமேல முக்தி வேண்டும், அடைந்தே தீருவேன் என்று முக்தி மேல் பற்று கொண்டோர் யாராவது உண்டா ? முக்தி விற்பனை மட்டுமல்ல, நிரந்தர சொர்கம் கிடைக்கும் வாருங்கள் என்று கூவும் மதவியாபரங்கள் கூட இப்படித்தான். இவர்களின் விளக்கங்கள் யாவும் மிகவும் தட்டையானது, குறுகியதும், கற்பனையனாதும் பொது அறிவுக்கு ஏற்றவையல்லாததும் ஆகும்.
*****
என்னைக் கேட்டால் 'அறியும்' நிலை தரும் பிறவி எதையும் அறியா நிலை என்னும் முக்தி (எனும் கற்பனை)யைவிட மேலானது. அப்படி ஒன்று இருந்தாலும் கூட அதைப் பிறவியின் வழியாகத்தானே அறிந்து கொள்ள முடியும். இருந்த இடமும் , ஏற்றிய ஏணியும் துன்பம், ஏறிய இடம் தான் உயர்வு என்பதான வாதம் எந்த விதத்தில் சிறந்தது என்று தெரியவில்லை. கருப்பை துன்பம், வாழ்க்கை இனிமை என்று சொன்னால் அது ஞாயமா ? கருப்பை இல்லை என்றால் இருப்பே இல்லே. அது போல் தான் வாழ்க்கை நரகம், துன்பம், பிறவா நிலையே மேலானது என்கிற கூற்றும்.

நம்மால் சொர்கமாக்கக் கூடிய வாழும் பூமியை நரகமாக்கிவிட்டு இல்லாத சொர்கத்துக்கு எண்ணற்ற புனைவுகள். மனிதன் கற்பனைக் கோட்டையே இது போன்ற சொர்க்கம், முக்தி பற்றிய கட்டுமானங்கள். இந்த கோட்டைகள் உடையாது, வெறும் உளவியலுக்காக தமக்கு தாமே எழுப்பிக் கொள்வது, இந்த கனவுக் கோட்டைகள் உடைந்தாலும் நட்டம் யாருக்கும் கிடையாது. இருந்தாலும், வாழும் உலகை இன்பமயமாக்க ஏதாவது செய்துவிட்டு கற்பனைச் சொர்கம், முக்தி பற்றிப் பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.