நான் செய்தி நிறுவனங்கள் எதையும் முழுதாக நம்புவதில்லை, செய்தி ஊடகங்கள் அனைத்துமே அரசு சார்பு அல்லது எதிர்ப்பு ஊடகங்கள் தான், தாங்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூறிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அல்லது தனக்கு வேண்டிய எதிர்கட்சிக்கு ஆதரவாக, அல்லது தாம் சார்ந்த அமைப்புகளுக்கும், தங்கள் கொள்கைக்கு எதிராகவும் செய்திகளை திரித்து வெளி இடுவது அல்லது தேவையற்ற தகவல்களை திணிப்பது இவை தான் செய்தி இதழ்களின் தலையாயப் பணி, செய்திகளை முந்தித்தருவது என்றெல்லாம் போட்டித் தன்மை சமாளிப்பு என்ற பெயரில் மக்கள் மூளையை கிறங்கச் செய்வதில் செய்தியாளர்களுக்கு நிகர் அவர்களே தான், ஒருவரை உயர்த்திப் பிடிப்பதும், சாதனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து முன்பு தூக்கியவர்களை கீழே போடுவதும் அவர்களின் சர்குலேசனுக்கு ஏற்ற கலை.
செய்தியாளர்கள் பொதுச் சேவையாளர்கள் இல்லை, அவை நிறுவனங்கள் தான், எல்லா தொழில்களிலும் லாபம் ஈட்டும் நோக்கமே முதன்மையானது என்பது போல் தான் செய்தி நிறுவனங்களும், இவர்களின் செய்திகளின் தரம், அதில் நேர்மை இவற்றின் விழுகாட்டு வேறுபாடுகள் தான் ஒரு செய்தி நிறுவனம் மக்கள் இடையே புகழடைந்து விற்பனையில் கூடுகிறதா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்யும், தகவல் என்ற அடிப்படையில் எதையும் நாம் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டாலும் அவர்கள் அதில் விதைத்துள்ள அல்ல மறைத்துள்ள அரசியலையும் சேர்த்தே நுகர்கின்றோம் என்பதே உண்மை. எனவே செய்தி இதழ்களின் எந்த நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு நாம் உணர்ச்சி வசப்படலாம் என்பதையெல்லாம் அவரவர் தெளிந்து முடிவு செய்வதே நன்மை இல்லாவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாமல் இருக்கும், செய்தியாளர்களால் புரட்சி நடந்திருக்கிறது, ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது, ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதெல்லாம் கூட உண்மை தான், ஆனாலும் அவற்றைக் காரணமாக வைத்து அவர்கள் என்னேரமும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்கள், அதுபற்றி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை
கிழே உள்ள இரண்டு செய்திகளை கவனமாக படிக்கவும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
************
சென்ற மாதம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....
ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜார்க்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் மன்சர் இமாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது விவரங்களை அளிக்க இமாம் மறுத்துவிட்டார்.
ஏற்கனவே அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்சர் இமாம் தேடப்பட்டு வந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Read more at: http://dinamani.com/latest_news/article1487767.ece
இன்று ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....
டெல்லி: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கொடுத்த தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் ஒரு அதிகாரி...
இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/india-hyderabad-blasts-nsg-official-facing-probe-170958.html
********
இரண்டு தகவல்களும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த தகவல் தான், முதல் செய்தியில் குற்றவாளி என்று கருதப்படுபவரின் பெயரை வெளி இட்டுள்ளனர், குற்றவாளியின் பெயரை (மன்சர் இமாம்) வைத்து என்ன மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல, ஆனால் இரண்டாம் செய்தியில் இந்திய தேச துரோகம் என்ற அளவுக்கு குற்றம் செய்தவனை ஒரு அதிகாரி, அந்த அதிகாரி என்றெல்லாம் மொட்டையாகவே செய்தி போட்டு இருக்கின்றனர், மேஜர் நிலையில் பணியாற்றிய 'அந்த அதிகாரிக்கு' பெயர் இல்லையா ? பெயரை வெளி இடாமல் இருக்க பாதுகாப்பு காரணம் என்றால் அதை ஏன் செய்தியாளர்களுக்கு தகவலாக தரவேண்டும், உள்ளுக்குள்ளேயே அமுக்கி இருக்கலாமே, எல்லாவற்றையும் நோண்டுவோம், நொங்கெடுப்போம் என்று அறைகூவும் செய்தியாளர்கள் அந்த தேச துரோக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ? ஒருவேளை 'அந்த அதிகாரி' பெயரை வைத்து இந்து என்று கண்டிபிடித்து காரித்துப்பினால் பிறகு இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து செய்திகள் போட முடியாது என்கிற நட்ட நடுசெண்டர் நிலையோ ?
குற்றங்களும் குற்றவாளிகளும் தாங்கள் சார்ந்துள்ள மதங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே வெளிச்சம் போட்டு மற்றதை மறைப்பது நல்லதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்கள் தேவையற்ற வெறுப்புகளையும், அச்சத்தையும் வளரவைக்கும். குற்றங்கள் நிருபனம் செய்யப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்படாதவரை எவருடைய பெயரையும் புகைப்படத்தையும் இன்னார் தான் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார் என்று காட்டுவதை தவிர்கலாம். பிழைப்புவாதிகளான செய்தியாளர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.







